Jump to content

இப்படி ஒரு வாழ்க்கை முறையா? - மினிமலிஸம்


Recommended Posts

மனிதர்களுக்குத் தர வேண்டிய மதிப்பை பொருட்களுக்கும், பொருட்களிடம் வைக்க வேண்டிய தூரத்தை மனிதர்களிடம் காண்பிப்பதும் தான் இன்றைய காலகட்டத்தின் சோகம். நம்மைச் சுற்றி குவிந்து கிடக்கும் பொருட்களின் இடையே பரிதாபகரமாகச் சிக்கியிருக்கிறோம் என்பதை தெரியாதவர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதும் துயரம். ஒரு பொருள் அவசியமா இல்லையோ பக்கத்து வீட்டுக்காரர் வைத்துள்ளார் என்பதற்காகவே தானும் எல்.ஈ.டி டீவியை வாங்கி வீட்டின் வரவேற்பறையில் மாட்டும்வரை சிந்தனை முழுவதும் அதைச் சுற்றித் தானே ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும்? தப்பித் தவறி நாமே மறந்தாலும், விளம்பரங்களின் வேலை என்ன? நொடிக்கொரு தடவை ஆசைக் கதவுகளைத் தட்ட வைக்கும். நம்முடைய பலவீனங்களை பலூனாக மாற்றி ஊதச் செய்து கடைசியில் வெடிக்கச் செய்துவிடும்.

சரி ஒரு மனிதனுக்குத் தேவையான அத்தனை பொருட்களையும் வாங்கி வீடு முழுவதும் நிரப்பியாகிவிட்டது. அதன் பிறகாவது சந்தோஷமாக இருக்கிறானா என்ன? நிச்சயம் இல்லை. காரணம் பொருட்களில் ஜீவன் இருக்காது. நல்லிணக்கத்துடன் பேணப்படும் உறவுகளைத் தவிர்த்து இரவும் பகலும் பொருள் வேட்டையில் திரிந்து விட்டு இறுதியில் திரும்பிப் பார்க்கையில் வெறுமை தான் பெரும்பாலும் மிஞ்சும். மகிழ்ச்சியை யாரும் கடைகளில் விற்பதில்லை.  அது மன நிறைவால் வருவது. பொருள்களை வாங்கிக் குவிக்கும் மனோபாவத்தால் தொல்லைகள் பல ஏற்படுமேயன்றி ஏற்றங்கள் ஒருபோதும் இருக்காது. மினிமலிஸம் எனும் கோட்பாடு சமீப காலமாக மேலை நாடுகளில் பரவி வருகிறது; இது நம்மிடம் ஏற்கனவே நம்முடைய பண்டைய வாழ்முறையாக இருந்து வந்ததுதான். அதாவது தேவைகளைச் சுருக்கி போதுமெனம் மனமே பொன் செய்யும் மருந்து என்று உணர்ந்து வாழ்வது. நாகரிக வாழ்க்கை நம் சிந்தனையை திசை திருப்பி மேலை நாட்டவர் போல திருப்தி தராத பொருள் சார்ந்த வாழ்க்கையில் நம்மைத் தொலைத்துவிடுகிறோம். அதற்கான விழிப்புணர்வாக இக்கட்டுரை இருக்குமெனில் மகிழ்ச்சி.

minimal.jpg


 
பொருள் உள்ளோருக்கும் இவ்வுலகம் இல்லை

உங்களுடைய சந்தோஷத்தின் சாவி உங்களிடம் தான் உள்ளது. விற்பனையாளர்கள் திணிக்கும் பொருட்களில் நிச்சயம் கிடையாது. பொருட்கள் அதிகரிக்க அதிகரிக்க நமக்கான வாழ்விடம் குறைந்து கொண்டு வருவதை யாரும் உணர்வதில்லை. ஒரு நிறுவனத்தின் பெரிய தலைவரோ, தொழில் அதிபரோ வேலையில் வெற்றிகரமாக இருந்தாலும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பது கேள்விக் குறிதான். இடைவிடாத மன அழுத்தம், சொத்துப் பிரச்னை, மேலும் அதிகப் பணம் சம்பாதிக்க ஓட்டம் என்று அவர்கள் ஒரு குறுகிய வட்டத்தில் உழன்று கொண்டிருப்பார்கள். இதிலிருந்து நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் பொருட்களோ மேலதிகமான பண வசதியோ சந்தோஷங்களை அள்ளித் தராது. அது உங்களை சிக்க வைக்கும் கண்ணி. பொருள் இல்லாதவர்களுக்கு இவ்வுலகம் இல்லை, அருள் இல்லாதவர்களுக்கு அவ்வுலகம் இல்லை என்று திருவள்ளுவரே சொல்லியிருக்கிறாரே என்று வாதம் செய்ய வேண்டாம். இந்த காலக்கட்டத்தில் பொருள் குறைவாக வைத்திருப்பவர்கள் தான் மகிழ்ச்சியுடன் இருப்பதைக் காணலாம். மடியில கனமில்லை எனில் வழியில் பயம் இல்லை என்பது மகாவாக்கியம். உயிர் வாழ பணம் தேவை தான். ஆனால் அது எந்த அளவுக்கு என்பதை நீங்கள் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். இல்லை எனில் அது ஒரு புதைச் சேற்றில் உங்களைத் தள்ளிவிட்டு மூழ்கும் வரை வேடிக்கைப் பார்க்கும்.

அதென்ன மினிமலிஸம்?

பொருட்களை வாங்குவதன் மூலம் சந்தோஷத்தை வாங்கிவிடலாம் என்று நினைப்பது சரியில்லை. அதற்கு நேர்மாறாக அவதி தான் படுவார்கள். காரணம் பொருட்களின் மீதான ஆசைகளுக்கு அளவில்லை. முடிவற்ற ஒற்றையடிப் பாதை அது. அதன் மூலம் கிடைக்கும் சந்தோஷம் சில நாட்களுக்குள் வடிந்து விடும். மீண்டும் பொருள் வேட்டை, செயற்கை சந்தோஷம். இந்த அலுப்பான வாழ்க்கை முறையிலிருந்து விடுபட நினைக்கும் சிலர் கண்டைந்த உண்மை தான் மினிமலிஸம். பொருள்களிடையே சிக்கி வாழ்க்கை முறையே சீரற்றுப் போன மேற்கத்திய மக்களின் ஒரு தலைகீழ் திருப்பம் தான் மினிமலிஸம். அதாவது பொருட்களை குறைக்கும் வாழ்வியல். குறைவான பொருட்கள், குறைவான பராமரிப்புப் பணிகள். அழகான சுத்தமான வீடு. இதுதான் மினிமலிஸத்தைப் பின்பற்றுபவர்களின் வாழ்க்கை முறை. தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து, இருப்பதை வைத்து திருப்தியுடன் வாழ்வது தான் அது. வாழ்க்கையின் பொருள் உணர்ந்து, உண்மையான உறவுகள் தரும் ஆத்மார்த்தமான அனுபவங்களை உள்வாங்கி வாழும் எளிய வாழ்க்கை முறை மனிமலிஸம். கேட்கவே நன்றாக இருக்கிறது அல்லவா?

இனி நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும். நினைத்து நினைத்து மகிழக் கூடிய எந்த சம்பவங்களும் வாழ்க்கையில் இல்லாமல் உங்களைச் சுற்றி நிறைய பொருட்களை மட்டும் குவித்து வைத்திருக்கப் போகிறீர்களா?  அல்லது வாழ்க்கையின் தீவிரத்தன்மையுடன் ஒத்திசைந்து உங்கள் விருப்பத்துக்கும் ரசனைக்கும் ஏற்றபடியான ஒரு வாழ்க்கையை கட்டமைத்துக் கொள்ளப் போகிறீர்களா? நீங்கள் இரண்டாவதைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்திருந்தால் இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்கலாம். சரி செய்யவே முடியாத அளவிற்கு உங்கள் வாழ்க்கை சீர் குலைந்து கிடக்கிறதா? கவலை வேண்டாம். பின் வரும் ஐந்து விஷயங்களை கடைபிடியுங்கள்.  

அதிகப்படியான கவலைக்கு காரணம் என்ன?

அதிகமான பொருட்களுக்கு நீங்கள் அதிபதி எனும் போதே அதற்கு நீங்கள் அடிமையாகிவிடுவது உண்மை. எல்லாவற்றையும் எல்லோரும் வாங்கிவிட முடியாது. கூடுமானவரை வாங்க நினைக்கலாம். நிச்சயம் எதாவது ஒரு கட்டத்தில் தவணையோ கடனோ வாங்க நேரலாம். கடனைத் திருப்பிக் கட்டும் வரை உங்களுக்கு அது நிச்சயம் மனத்தளவில் பாரம். தவிர நீங்கள் வாங்கிய பொருட்களைத் தகுந்த முறையில் பாதுகாக்க வேண்டும். அதற்கென பல செலவு செய்ய வேண்டிவரும். புலி வாலை பிடித்த கதை தான் அது. அல்லது புதைகுழிக்குள் கண்களைத் திறந்து விழுவதற்கும் சமம் எனலாம். உதாரணமாக துணி துவைக்க ஒரு குளிர்சாதனம் வாங்கினால். அதற்கு ஒரு ஸ்டாண்ட மற்றும் ஸ்டெபிலைசர் வாங்க வேண்டும். அதன் உத்தரவாத காலம் முடிந்துவிடும். ஒரு கட்டத்தில் அது முற்றிலும் பழுதடைந்துவிட இன்னொன்று வாங்க வேண்டியிருக்கும். அல்லது நீங்கள் வைத்திருக்கும் மாடலை விட சிறப்பான அம்சங்களுடன் புதிதாக ஒன்று சந்தையில் வந்திருக்கும் இதை விற்றுவிட்டு அதை வாங்க நீங்கள் ஆசைப்படலாம். இந்த ஆசை எனும் மாய வலை ஆட்டிவைக்க, பொருட்கள் மீதான மோகம் காலைக் கட்டிய சங்கிலியாக உயிர் வரை இறுக்கிப் பிணைந்திருக்கும்.  அதனால் ஏற்படும் மன உளைச்சல், சலிப்பு, நேர விரயம், ஓய்வின்மை போன்றவை நிம்மதியை கெடுத்துவிடும்.

முன்பெல்லாம் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். இப்போது எலெக்ட்ரானிக் பொருட்கள் அமைவதெல்லாம் தான் பெரிய வரம். அத்தனை விலை கொடுத்து வாங்கிய பொருட்கள் எல்லாம் சீக்கிரம் பிரச்னையைக் கொடுப்பதால் அதனால் கிடைக்கக் கூடிய செளகரியங்கள் ஒரு கட்டத்தில் எரிச்சலாகிவிடும். தவிர கடன் வாங்கி பொருளை வாங்கியிருந்தால் அந்த கடன் சுமை வேறு மனத்தை அரித்துக் கொண்டிருக்கும். இவ்வளவு தலைவலிகளுடன் வேலைக்கும் சென்று சம்பாதித்து அந்தக் கடனை அடைத்து மீண்டும் புதிய கடன் புதிய பொருள் புதிய டென்ஷன்….திரும்பிப் பார்ப்பதற்குள் கவலைப்பட்டும் கடன்பட்டுமே மொத்த வாழ்க்கையும் முடிந்துவிடும். இந்நிலை தேவையா? யோசியுங்கள்!

உண்மையில் எல்லா பிரச்னைகளைவிட முக்கியமான பிரச்னை பணப் பிரச்னை. அதை சரிப்படுத்தினால் மற்றவை எளிதில் தீரும். முதல் கட்டமாக, தேவையற்ற பொருட்களை வாங்கவே வாங்காதீர்கள். உங்கள் வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களையும் தூர எறியுங்கள். உங்களுக்கு மிகவும் தேவையான அத்தியாவசியமான பொருட்களை மட்டும் காசு கொடுத்து வாங்குங்கள். கடன் வாங்க வேண்டியதன் நோக்கம் என்ன என்று ஒருமுறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுங்கள். நின்று, நிதானித்து யோசித்துப் பார்த்தால் இந்த பொருட்களுக்கான வேட்கை நம்மை எங்கே கொண்டு போய் விடுகிறது என்று புரியும். ஒன்று மனம் அல்லது உடல் பிரச்னைகள் ஏற்பட்டு மருத்துவமனைக்கு, அல்லது கல்லறைக்கு. வாங்கிய பொருட்களையும் அனுபவிக்காமல் ஒரேடியாக போய்ச் சேர்வது எவ்வளவு கொடுமை? இந்தத் தொல்லைகளிலிருந்து விடுபட அனாவசியமான செலவு செய்து தேவையில்லாத எந்தப் பொருளையும் வாங்காதீர்கள்.

2. தம்பட்டம் அடிக்க பொருட்களை வாங்காதீர்கள்!

சிலர் தங்களுக்கு பிடிக்காதவர்களிடம் கூட பெருமை அடிக்க, நவீன பொருட்களை வாங்குவது உண்டு. இதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கு தங்கள் மீதே சுய மதிப்பு இல்லாததுதான். மற்றவர்கள் தங்களை மதிக்க வேண்டும் என்பதற்காக ஐஃபோன் வாங்குவார்கள். ’வாழ்றான்யா’ என்று மற்றவர்கள் சொல்வதை ரசிக்கவே சக்திக்கு அதிகமாக செலவு செய்வார்கள். ஆனால் இவ்வழியில் கிடைக்கும் மதிப்பு மரியாதை எல்லாம் நீடிக்காது. சுய மதிப்பீடு இல்லாமல் வாழ்வதும், தனக்கு பயன்படாத பொருட்களை அடுத்தவர்களின் மதிப்பைப் பெற வாங்கிக் குவிப்பதும் ஒருநாளும் நிறைவைத் தராது. நீங்கள் அப்படிப்பட்டவராக இருந்தால் உடனடியாக உங்கள் எண்ணங்களை சரி செய்து கொள்ளுங்கள்.

உங்களுடைய வங்கிக் கணக்கு ஒரு கோடி அல்லது நூறு கோடி இருக்கலாம். உங்களால் என்ன வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள முடியலாம். ஆனால் அதற்காக தம்பட்டம் அடித்து அடுத்தவர்களை கவர வேண்டும் என்ற எண்ணத்தில் உங்கள் செயல்பாடுகள் இருக்கக்கூடாது. உங்களுக்கு உண்மையில் தேவைப்படும் விஷயங்களில் ஆர்வமாக இருப்பது தான் வாழ்க்கையை மேம்படுத்தும். உங்கள் மதிப்பு உயர வேண்டும் எனில் அதற்கேற்ற நல்ல குணங்களுடன் இருக்க வேண்டும்.

3. உங்களை சந்தோஷப்படுத்தும் பொருட்களை வாங்காதீர்கள்

பொருட்களை எண்ணிக்கையாக நினைத்து வாங்கிக் குவிப்பவர்களை விட அதை அனுபவமாகவும் தேவைக்கெனவும் வாங்குபவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. மினிமலிஸ்டுகள் நவீன பொருட்களால் கவரப்படுவதில்லை. காரணம் புதிய மொபைல், அல்லது உடை போன்றவை எதுவும் சந்தோஷங்களை நீட்டிக்கப் போவதில்லை. உண்மையான மகிழ்ச்சி என்பது அன்பில், நட்பில், மனிதத்தில். வாழ்க்கையுடன் நேரடி தொடர்பு கொள்ளுதலில், புரிதலில் உள்ளது. எல்லோருடைய ஆசையும் வாழ்வது தான், ஆனால் உயிரோடு இருப்பது என்பது ஒருபோதும் வாழ்தல் ஆகாது. புது பொம்மை, புது கார், புது ஃபோன் இவற்றையெல்லாம் உடமையாகப் பெறுவது வாழ்தல் இல்லை. உங்களை உயிர்ப்புள்ளதாக்கும் பொருட்களை வாங்குவது தான் நிஜமான சந்தோஷங்களை அள்ளித் தரும். ஒரு முழம் பூ கூட பல சமயம் பரவசம் தரும். உங்களுக்கு இத்தகைய மகிழ்ச்சியைத் தராத எந்தப் பொருளை வாங்குவதும் வீண் தான்.  

 4. தெளிவாக சிந்திக்க முடியாது

பொருள் சார்ந்த வாழ்க்கை எப்போதுமே மேலோட்டமானது. அதி விரைவில் நீர்த்துப் போகக் கூடியது. மின்னலாக மின்னி சாம்பலாக மறைந்துவிடும். சுயநலமியாக உங்களை மாற்றிவிடும். இதிலிருந்து நீங்கள் விடுபட்டால்தான் உங்களால் தெளிவாக சிந்திக்க முடியும். இல்லையெனில் வாழ்க்கை முழுவதும் ஒரே குழப்படியாகிவிடும். உங்களுக்கு உண்மையில் என்ன தேவை என்று உங்களுக்கே தெரியாமல் போகும். தேவைகளைப் பட்டியல் இட்டு அதற்கேற்ற வகையில் பொருள்களை வாங்கினால் சுய திருப்தி கிடைக்கும். அகங்காரத்துக்காகவோ பணத் திமிரைக் காட்டவோ அப்படிச் செய்யும் போது அது உங்களுடைய ஈகோவை வளர்த்தெடுக்குமே தவிர ஒன்றுக்கும் பயன்படாது. சுற்றியிருப்பவர்கள் ‘அவன் அப்படித்தான், பெருமைக்கு பன்னி மேய்க்கறவன்’, ‘அவனா பணம் மட்டும் இல்லைன்னா அவனை நாய் கூட சீந்தாது’ போன்ற பேச்சுக்களை எல்லாம் பின்னால் கேட்க நேரிடும்.

உங்கள் வீட்டில் மட்டுமல்ல மனத்திலும் விலாசமான இடம் தேவை. அவை இரண்டும் பளிச்சென்று இருந்தால் தான் வாழ்க்கைப் பயணம் இனிமையாக இருக்கும். எண்ணங்கள் மேம்பட்டு மனது தூய்மையாகவும் தெளிவாகவும் இருக்கும்.

5. வசிப்பிடமா, பொருட்கள் நிறைந்த கூடாரமா?

உங்கள் வீடு வசிக்க லாயக்கற்ற ஒரு சந்தைக் கடை போல மாறிவிட்டால் அங்கு தங்கும் நீங்கள் மன சஞ்சலத்துடன் வலம் வருவீர்கள். உங்கள் வாழ்க்கை சீரற்றுப் போகும். மினிமலிஸத்தைப் பொருத்தவரை உங்கள் வீட்டை சுத்தமாக அழகாக பராமரிக்கும் போது தான் உங்கள் ஆன்மா அழகுறும். தேவையற்ற எண்ணங்கள், கற்பனைகள் நீங்கி அமைதியும் ஆனந்தமும் நிலைக்கும். உங்களைப் பற்றிய மதிப்பீடுகள் உயரும். உங்களுடைய பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்ள முடியும். எல்லாவற்றையும் விட சரி தவறுகளை அலசி ஆராய்ந்து சமன் நிலையில் மனத்தை வைத்திருக்கவும் உதவும். பொருட்களின் பின்னால் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தால் இவை எல்லாம் சாத்தியப்படாது. கூடுமானவரையில் எளிமையான வாழ்க்கையும் நேர்மையான வழிமுறைகளையும் பின்பற்றினால் போதும், வாழ்க்கை இன்பமயமாகும். மினிமலிஸம் ஒரு புத்தம் புதிய சிலேட்டாக உங்களை மாற்றும், அதன் பின் உங்கள் ஒட்டு மொத்த வாழ்க்கையும் நறுமணமாகிவிடும்.

இறுதியாக...

தேவையில்லாத பொருட்களைத் தூற எறிவதன் மூலம் பொருள்முகமான உலகிலிருந்து நீங்கள் விடுதலை அடைகிறீர்கள். என் வீடு, என் சொத்து, என் சுகம் என்று சுருங்கிப் போய், வாழவும் தெரியாமல் சாகவும் பயப்பட்டு  தத்தளிப்பது சரியல்ல. நாம் பிறக்கும் போது எப்படி வந்தோமோ அப்படித்தான் இறக்கும் போதும் வெறும் காலுடன் கிளம்பிச் செல்ல வேண்டும். இடைப்பட்ட காலத்தில் இங்க என்ன செய்கிறோம், அதை எவ்வாறு செய்கிறோம் என்பது தான் வாழ்க்கைத் தத்துவம். வாழ்தல் இனிது. எனவே நம்முடைய வாழ்க்கையை நாமே வடிவமைத்துக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். அமைதியை வெளியில் தேட வேண்டாம். சற்று உள்முகமாகத் திரும்பிப்பாருங்கள். மினிமலிஸ்டாக வாழ ஆரம்பத்தில் கசக்கும். முடியவே முடியாது என்று மனம் முரண்டு பிடிக்கும். ஆனால் அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை முறையை நீங்கள் தேர்ந்தெடுத்து விட்டீர்கள் எனில் அதன்பின்னான உங்கள் வாழ்க்கை நம்ப முடியாத ஆச்சரியங்களின் மொத்த தொகுப்பாக மாறும்.நம்புங்கள்! வாழ்க வளமுடன். இன்பமே சூழ்க!

http://www.dinamani.com/lifestyle/2016/07/19/இப்படி-ஒரு-வாழ்க்கை-முறையா---ம/article3537112.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.