Jump to content

யுத்த களத்திலிருந்து ஒரு சமையல் புத்தகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த களத்திலிருந்து ஒரு சமையல் புத்தகம்
கீதா சுகுமாரன்

 

HANDMADE-Cover-Page.jpg

https://www.facebook.com/palmeraprojects/

https://www.palmera.org/handmade/


அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட 
காழ்போ னல்விளர் நறுநெய் தீண்டாது
அடைஇடைலக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட
வேளை வெந்தை வல்சி யாகப்
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம்

போர்க்களத்தில் கணவனை இழந்தபின் விதவை வாழ்நிலையைப் பற்றிய இப் புறநாநூற்று வரிகள் (புறம் 246) பெரிதும் அறிந்ததுதான். இங்கே நெய் தீண்டாமல், நீரிலிருந்து பிழிந்தெடுத்த சோறும் எள்ளின் விழுதும் கலந்த உணவே அந்தப் பெண்ணின் நலிவுற்ற வாழ்முறையின் உடலாகச் செயல்படுகிறது. தனக்குக் கிடைக்காத அல்லது தான் உண்ண இயலாத உணவு தன் வாழ்வின் மாற்றம் அவளுடைய மனத்தில் ஏற்படுத்தும் மனக்காயத்தையும் வாழ்வின் வெறுமையையும் உணர்த்தும் உருவாக ஆகிறது. அதாவது உண்ண இயலாத உணவே போரினால் ஏற்பட்ட அவளுடைய மன அவலத்தின்குறியீடாக அமைகிறது. ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிவந்திருக்கின்ற Handmade-Stories of Strength Shared Through Recipes From the Women of Sri Lanka’ என்ற நூலும் இவ்வகையில் உணவின் வழிப்பட்ட கதை சொல்லுதல்தான். இந்த நூல் ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட முப்பத்துநான்கு பெண்களின் எடுத் துரைப்புகளுடனும் பாரம்பரிய ஈழச்சமையல் குறிப்புகளுடனும் வெளிவந்துள்ளது.

கதை சொல்லிகளில் ஒருவரான அயினி, ஈழத்தைச் சேர்ந்த பலரைப்போல தொடர் இடப்பெயர்வுகளையும் பதுங்குகுழிகளையும் அகால இறப்புக்களையும் - இழப்புக்களையும் அகதி முகாம் வாழ்க்கையையும் சந்தித்த ஒருவர். முள்ளிவாய்க்காலுக்குப் பின்னும்கூட முகாம்களில் வதைபட்டுக் கொண்டிருந்த பலரில் ஒருவரான அவர் பூண்டு சேர்த்துச் செய்யப்படும் உணவில், பூண்டு இன்மையால் ஏற்பட்ட உணவின் வேறுபட்ட புதிய சுவையை, மீதமாயிருந்த அப்பத்தைப் பார்க்கையில் எழுந்த மகனின் நினைவை, உணவால் தன் குடும்பத்தோடு முதன்முதலாக இணைந்துகொண்ட ஒரு சிறு உயிரை என தானுற்ற உளவடுவினை உணவு பற்றிய கதைகளால் உருவாக்குகிறார். போரில் ஏற்பட்ட மன உலைச்சல், இழப்புகள், வன்முறை என்பவற்றால் இப்பெண்களிடம் ஏற்பட்ட மனவடு மற்றும் அன்றாட வாழ்வில் இப்பெண்கள் எதிர்கொண்ட நெருக்கீடுகள் யாவற்றையும் உணவின் மூலம் அவர்களுடைய மொழியால் அவர்கள் இந்நூலில் பதிவு செய்துள்ளனர்; அத்துடன், இந்த நூல் எவ்வாறு யுத்தம் நடைபெற்ற நாடுகளில் அந்த நினைவுகளைப் பற்றிய பெண்களின் எடுத்துரைப்புகள், அவர்களது மனக்காயங்களையும் அச்சத்தையும் கொடுமைகளின் மௌனங்களையும் மீறி அவற்றிலிருந்து மீளும் மாற்றுப்பார்வையையும் ஆன்மபலத்தையும் முன்வைக்கின்றன என்பதற்கான சான்றாயும் உள்ளது. “நமக்குப் பழக்கப்பட்ட, நம்மை மூளைச்சலவை செய்யும் போர்க்கதைகளிலிருந்து மாறுபட்ட கதைகளைக் கூறுவது அவசியம்” என அருந்ததி ராய் தன்னுடைய கட்டுரையொன்றில் வலியுறுத்தியிருப்பதை இவ்விடத்தில் நினைவுகூரலாம்.1 அவ்வகையான மாறுபட்ட குரல்கள் பெண்களின் வாய்மொழிக் கதைகளினூடாக மிகுதியாக வெளிப்படுகின்றன. போரின் பேரழிவும் வன்முறையும் பெண்கள்மீது மிகுந்த தாக்கத்தை உருவாக்குவதால் அவர்களின் எடுத்துரைப்புகள் பெரும்பான்மையாக வழங்கும் சொல்லாடல்களிலிருந்தும் உருவங்களிலிருந்தும் கருத்துருவாக்கங்களிலிருந்தும் வேறுபட்டு, பெண்களின் அன்றாட வாழ்வில் ஏற்படும் துயரங்களைப் பல பரிமாணங்களில் விளக்க முயற்சிக்கின்றன. இரண்டாம் உலகப்போரில் ரஷிய நாட்டின் எதிர்ப்புக் குழுவில் இயங்கிய பெண்களும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த பெண்களும் தங்கள் நினைவுகளை அன்றாட வாழ்வியல் சிக்கல்களின் மூலமே வெளிப்படுத்தியுள்ளனர். தான் வழக்கமாகச் செய்யும் ‘சூப்’பை செய்ய இயலாததையும், சமைக்கும் பாதிரங்களும் கரண்டிகளும் இல்லாது போனதால் ஆண் போராளிகளுக்கு உணவு சமைப்பதில் தோன்றிய சிரமங்களையும் ஒரு பெண் தன் குறிப்பில் எழுதியுள்ளார். மேலோட்டமாக நோக்கும்போது இவையெல்லாம் முக்கியத்துவமற்ற செய்திகளாகத் தோன்றினாலும் பெண்களின் எடுத்துரைப்புகள் மிகச்சோதனையான காலகட்டத்திலும் அதற்கேற்றவாறு தன்னை மாற்றியமைக்கும் பெண்களின் ஆன்ம பலத்தை முதன்மைப்படுத்துகின்றன; போரின் மத்தியிலும் அன்றாட வாழ்நிலையின் யதார்த்தங்களைச் சொல்லுகின்றன; இவையே பெண்களின் வரலாறாக உருவாகின்றன.

Abarna-Raj.jpg

 

போரின் எடுத்துரைப்புகளில் பெண்களின் எடுத்துரைப்புகள் முக்கியமானவை. ஏனென்றால் பாலினம், போர், உளவடு ஆகியவற்றுடன் அவை நெருங்கிய தொடர்புடையன. அதனால் எவரும் எண்ணிப் பார்க்காத கோணங்களிலிருந்து போரின் அவலத்தை அவை முன்வைக்கின்றன. எளிதில் அவை கிட்டுவதில்லை. ஆண்களின் நினைவுப்பதிவுகள் பொதுவாக மெய்மை (யீணீநீtuணீறீ) சார்ந்து நேர்மொழியில் இயங்கும். பெண்களின் நினைவுக்குறிப்புகள் படிமங்களாலும் குறியீடுகளாலும் நிறைந்திருக்கும். அவற்றின் மூலம் அன்றாட சூழலில் எதிர்பாராமல் தாக்கும் வன்முறையை அல்லது வன்முறையே வாழ்வாகிப்போன காலத்தில் அன்றாட சிரமங்களையும் அவற்றை எதிர்கொண்ட மனத்தையும் நுண்மையான உணர்வோடு கலந்து அவை வெளியிடுகின்றன. எல்லைப் பிரிவினை பற்றிய தங்கள் நினைவுகளைப் பல இந்திய, பாகிஸ்தானியப் பெண்கள் ரொட்டி செய்கையில் எதிர்பாராமல் ஓட நேர்ந்ததையும், அடுப்பை அணைக்காமல் வீட்டை விட்டு வெளியேறியதையும் உணவு, சமையலறை, சப்பாத்து போன்ற அன்றாட வாழ்வின் காட்சிகளைக் கொண்டு நினைவுபடுத்துவதை இங்கு ஒப்பு நோக்கலாம்.2

யுத்த அவலத்தைச் சொல்லும் வழமையான இலக்கியங்களிலிருந்து வேறுபட்ட கோணத்தை ‘கைவினை’ நூலில் பதியப்பட்ட அனுபவங்கள் முன்னெடுக்கின்றன. பெண்களின் அனுபவங்களோடு போரின் ஆறாத காயத்தின் நினைவுகளும் அவற்றிலிருந்து பிறந்த உறுதியும் இணைந்த ஒரு மனநிலை நூல் முழுவதும் பயணம் செய்கிறது. மேலெழுந்தவாரியாகப் பார்க்கையில் அழகான படங்களுடன் கூடிய சமையற் குறிப்புத் தொகுப்பாக தோன்றும் இந்நூல், உண்மையில் போர் பால்நிலை உளவடு வரலாறு முதலான பல தளங்களை அதனூடு திறக்கிறது. அதேநேரம் உளவடுவை ஆற்றுப்படுத்தும் செயற்பாடாகவும் அமையும் இக்கதைசொல்லும் நூல், தமிழ்ப் பண்பாட்டில் உடல், உணவு, மனநலம் என்பவற்றையெல்லாம் தொடர்புபடுத்தும் களமாகவும் அமைகிறது. முக்கியமாக சமையற்கலை மன அவலத்தைப் போக்கும் சடங்காகவும் காணப்படுவதை இந்தப் பதிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. எனவே யுத்தம், அதன் விளைவான உளவடு, அதனை ஆற்றுப்படுத்தும் முறைகள்/ கோட்பாடுகள் இவற்றைப் பற்றிச் சுருக்கமான பார்வையை முன்வைத்து அதனூடு இந்தப் புத்தகம் விரிக்கும் வெளிகளையும் சொல்ல முற்படுகிறேன்.

போரின் கொடுமைகளுக்கு ஆட்படும் சமூகம் இலக்கியத்தையும் கலை வடிவங்களையும் அதற்குச் சான்றாகவும், அதன் ஒடுக்குமுறைகளுக்கு எதிர்ப்பான வடிவமாகவும் பயன்படுத்துவது என்பது புதிதல்ல. அதுபோலவே ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு, வன்முறையும் அதன் அவலங்களும் வாழ்வின் பெரும்பகுதியாகிப் போன வாழ்க்கையைப் பல ஆண்டுகளாக அனுபவிக்கும் சமூகம் மிகுந்த மன உலைச்சலுக்கும் மனவடுவுக்கும் உள்ளாவதென்பதும் துயரமான யதார்த்தம் தான். இவ்வாறான மனக்காயங்களை இலக்கியத்தில் வெளிப்படுத்தும்போது உளவடு சார்ந்த இலக்கியங்கள் (trauma literature) உருவாகின்றன. இந்த இலக்கியங்களையும் கலை வடிவங்களையும் மனவடுவின் உளவியல் சார்ந்து அணுகும் முறையே மனவடு இலக்கியக்கோட்பாடாகும். மேற்கின் பல்கலைக்கழகங்களின் இலக்கியத் திறனாய்வுகளிலும், சமூக அரசியற் பண்பாடு சார்ந்த ஆய்வுகளிலும் மனவடு குறித்த ஆய்வுகள் தற்போது மிகுந்திருக்கின்றன. Holocaust இலக்கியத்தை அடிப் படையாகக் கொண்டு உருவான இக்களம் சிறிதுசிறிதாய் விரிவடைந்து தென்அமெரிக்க, வட அமெரிக்கப் பழங்குடி, வளைகுடாப் பகுதி ஆப்பிரிக்க நாடுகளின் இலக்கிய ஆற்றுகைக் கலை வடிவங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளும் அளவுக்கு விரிவடைந்திருக்கிறது. அதுபோலவே பின்காலனித்துவக் கோட்பாட்டுடன் இணைந்து எல்லைப் பிரிவினை, வங்க தேசத்தின் இனஅழிப்பு, தலித் இலக்கியம் குறித்த ஆய்வுகளும் இதை அடியொற்றி இன்று வெளிவருகின்றன. இதன்மூலம் பல்வேறு சமூகங்கள் ஏதேனும் ஒரு கட்டத்தில் உளவடுக்கு உட்படுவதும் அதை அவை எதிர்கொள்ளும் பல்வேறு வகைகளும் முறைமைகளும் அவற்றை முன்னெடுக்கும் கலை இலக்கிய வடிவங்களும் நமக்குக் கிடைத்துள்ளன. ஈழ இலக்கியத்திலும் கலை வடிவங்களிலும் இவ்வகையான ஆய்வுகளுக்கான பின்புலம் பேரளவிற் காணப்படுகின்றன.

 

Palmera_.jpg

 

மேற்கின் மனவடுக் கோட்பாடுகள் பெரும்பான்மையாக மனதையும் நினைவுகளையும் மையமாகக் கொண்டு மூளையின் செயற்பாட்டின் அடிப்படையிலேயே முறைப்படுத்தப்படுகின்றன. அதனால் மனவடு இலக்கிய ஆய்வுகளும் இதனடிப்படையிலேயே அமைகின்றன. உடல் மீது இயக்கப்படும் வன்முறையும் உளவடுவின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்ற நிலை பின்னுக்குத் தள்ளப்பட்டு, நினைவின் செயல்களே முன்னிறுத்தப்படுகின்றன. ஆனால் உளவடுவை வெளிப்படுத்தும் இலக்கியங்களும் கலை வடிவங்களும் உடல் சார்ந்தே இயங்குகின்றன; சிதைக்கப்பட்ட உடலைக் காட்சிப்படுத்துவதன் மூலம் உளவடுவைக் காணவைக்கின்றன. தமிழ்ப் பண்பாட்டில் உடலைப் பேணுவதன் மூலமே மனமுற்ற நோயைத் தீர்க்கும் முறை ஆரம்பமாகிறது, மனம் நலமடைய உடலே கருவியாக மாறுகிறது. சங்ககால இலக்கியங்களும் சித்தர் இலக்கியங்களும் இதையே வலியுறுத்துகின்றன. நமது சடங்குகள், குறிப்பாக மரணச்சடங்குகள், உடலையே அல்லது உடலைக் குறிக்கும் பிண்டங்கள், உடலின் அடையாளமாகக் கொள்ளப்படும் கற்கள் இவற்றைக் கொண்டே மனத்தினை ஆற்றுப்படுத்துகின்றன. அதுபோலவே சடங்குகளும் ஆற்றுகைக் கலைகளும் உடல்சார்ந்து உடலிலிருந்து தொடங்குகின்றன. அதனால் உடல் என்பது நமது பண்பாட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இதனடிப்படையில் நோக்கினால் ஈழத்திலிருந்து வரும் இலக்கியங்கள் மீண்டும்மீண்டும் உடல் மீதான வன்முறையைத் தொடர்ந்து வலியுறுத்துவதன் அடிப்படையைப் புரிந்துகொள்ள முடியும். சித்திரவதைப்பட்ட உடல் உளவடுவின் தோற்றுவாயாகவும் சாட்சியாகவும் இயங்குகையில் உடலிலிருந்து உளவடுவை ஆற்றும் முறைகளும் நமது பண்பாட்டின் அடையாளமாகிறது. இதுபற்றிய கருத்தாடல்களைத் தயா சோமசுந்தரத்தின் ‘உளவடுவுற்ற சமூகம்’ என்ற நூலிற் பெரிதும் காணலாம். அதில் அவர் தமிழர்ப் பண்பாட்டில் குழுவாக மக்கள் சேர்ந்து செய்யும் மரணச்சடங்குகள், கோயில் சடங்குகள், கூத்துக்கள் முதலியனவெல்லாம் உளவடுவை ஆற்றுப்படுத்த உதவும் என வாதிக்கிறார். அதனால் தமிழர்ப் பண்பாட்டில் கலந்திருக்கும் உடல் தொடர்பான சிந்தனைகள் அவர்களது உளவடுவைப் போக்குவது மட்டுமின்றி, உளவடு குறித்த மேற்கின் கோட்பாடுகளின் மாற்றோடியாகவும் இருக்கின்றன.

உடலை முன்னிறுத்தும்போது உணவு மிக முக்கிய இடம் பெறுகிறது. ஆனால் உணவை, அதை ஆக்கும் முறையை முன்னிறுத்தி நிகழ்த்தப்படும் போர்க்கால ஆய்வுகள் மிகக் குறைவாகவே உள்ளன. போர்க்கால இலக்கியங்களும் ஆவணங்களும் எடுத்துரைப்புகளும் உணவு சார்ந்து இயங்குவது அரிதாகும். இலக்கியத்துடனும் கலை வெளிப்பாட்டுடனும் தொடர்பற்ற பெண்கள், குடும்பப் பராமரிப்பை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளும் பெண்கள் போரின் அவலத்தை, அதன் வன்முறையை, அதனடியில் உருவான இழப்புகளை, உளவடுவை உணவாலும் சமையற்கலையாலும் இந்த நூலில் வெளிப்படுத்துகின்றனர். முள்ளிவாய்க்காலின் இறுதிநாட்களில் அவர்கள் தொடர்ந்து இடம் பெயரும்போதும் உயிரிழப்புகளுக்கு இரையாகும்போதும் பல காலம் உணவில்லாமல் கழிந்தது நாம் அறிந்ததே, ஆனால் அதை அவர்கள் எவ்வாறு எதிர்கொண்டு, எப்படி இயங்கித் தங்கள் குடும்பங்களைக் காத்தனர்? போரின் கோர முகங்களை வெளிப்படுத்தும் இலக்கியங்களைவிட இந்தப் பெண்கள் பகிரும் அனுபவங்கள் அவர்களின் போரைக் கடந்து இயங்கும் மனவெழுச்சியையும் அவல நிலையிலிருந்து மேலெழும் நம்பிக்கையையும் அதில் தொக்கி நிற்கும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்துகிறது. பலநாட்கள் தொடர் பட்டினியில் உயிரின் அச்சத்தில் ஓடிக்கொண்டிருக்கையில், இடையில் உணவு சமைக்க ஒரு சந்தர்ப்பம் அரிதாய் அவர்களுக்கு வாய்க்கிறது. ஒவ்வொரு இடப்பெயர்விலும் தன்னிடம் மிகுதியாக இருக்கும் பொருள்களைப் பிறரிடம் பண்டமாற்றம் செய்து கிடைத்தவற்றை வைத்துச் சடுதியில் சமைக்கும் அனுபவத்தைச் சொற்களில் எளிதில் வடிக்க இயலாது: அக்கொடுமையான நினைவுகளை இப்பெண்கள் பகிர்ந்துகொள்கிறார்கள். பல சமயங்களில் பொருட்கள் இருந்தும் சமைக்க மனம் விரும்புவதில்லை என்றும் வேறு சமயங்களில் ஒரு பருக்கைகூட இல்லாமல் பல நாட்களாய் ஓட நேர்ந்தது என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவர்களுடைய கதைகள் துயரக்குரலில் கண்ணீரோடு வெளிப்பட்டாலும் போரில் சிதைந்த சமூகத்தை அமைதியின், இயல்பான வாழ்வின் பக்கம் திருப்பும் முயற்சியையும் வெளிப்படுத்துகின்றன. மரத்தடியில், பதுங்குகுழிகளில், வெட்டவெளிகளில், குண்டுப் பொழிவிலிருந்து கிடைக்கும் சிறு ஓய்வில் உணவு சமைப்பது என்பது அசாதாரண / பயங்கரமான சூழலையும் சாதாரணமாக்கும் மந்திரமாக இருக்க முயல்கிறது. அது மிகக்குறுகிய காலம்தான் என்றாலும். அச்சமயங்களில் உணவு தயாரித்தலும் உண்பதும் கூட ஒருவகை எதிர்ப்புச் செயல்தான்.

மாலதி எனும் பெண்மணி தொடர்ந்து இடம் பெயர்ந்துகொண்டிருந்த அந்த நேரங்களில் இடையிடையே வடைகள் சுட்டு விற்றுக்கொண்டிருந்ததிலிருந்து தன் கதையைத் துவங்குகிறார். ஒருமுறை வடை செய்து முடிக்கவும் குண்டுகள் விழவும் சரியாக இருக்க, அவர் வடைகளை விட்டுவிட்டுப் பதுங்குகுழிக்கு ஓடினார். மீண்டும் வந்து பார்க்கையில் அத்தனை வடைகளிலும் குண்டுகளின் உலோகத்துண்டங்களும் மண்ணும் அப்பிக்கிடந்தன. அடுத்த நாள் அவர் வடையும் அதனுடன் சட்டினியும் செய்து விற்றார். அடுத்த வேளை யார் எங்கு உயிரோடிருப்பார் என்பதுகூட அறியாத நிலையில் உணவு தயாரித்தல் என்பது தன்னை, தன் உடலை, குடும்பத்தினரின் உடலை அழிக்க நினைக்கும் சக்திகளுக்கு உணவின், அது அளிக்கும் ஊட்டத்தின் மூலம் தெரிவிக்கப்படும் எதிர்ப்பு. ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னியின் யூத இன அருங்காட்சியகத்தில் கையால் எழுதப்பட்டு உருவாக்கப்பட்ட சமையற் குறிப்பு புத்தகம் ஒன்றுள்ளது. அது எடித் பியர் என்னும் பொஸ்னிய யூத இனப்பெண் வதை முகாமில் இருந்தபோது எழுதப்பட்டது. அந்த நூலைக் குறித்து அருங்காட்சிய பொறுப்பாளர் ‘அதுஒரு வகையில் வாழ்வதன் பொருட்டாக அமைந்த மனத்திட்பம் மற்றும் ஆன்மீக எதிர்ப்பு’ என்று வர்ணிக்கிறார்.

ஈழப்போராட்டத்தில் ஈடுபட்ட முதன்மையானவர்களில் ஒருவரான புஷ்பராணி தன் நினைவுக்குறிப்புகளில் சிறையின் தொடர் சித்திரவதைகளை விவரிக்கையில் சிறை உணவைப் பற்றி விளக்கமாக எழுதிவிட்டு “சிறையில் உணவு என்பது வெறுமனே வயிற்றோடு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. அது எப்போது கிடைக்கும், எவ்வளவு கிடைக்கும் என நிச்சயமற்ற நிலையில், அடியும் உதையும் வாங்கி மரத்துக்கிடந்த உடலுக்குச் சற்றே ருசியை அனுபவிக்கும் மகிழ்ச்சி, சாப்பிட்டவுடன் உடல் தெம்பாகிவிட்டது என்னும் கற்பனை என்று சிறையில் ஒரு கவளம் சோற்றுக்கு ஏகப்பட்ட அர்த்தங்களிருந்தன” என்கிறார்.3 உணவின் இயக்கம் வயிற்றுப்பசியை மீறி மனத்தோடு மிகவும் நெருங்கிய ஒன்றாகும். அவரது கூற்று சிறை வாழ்வுக்கு மட்டுமல்ல - அசாதாரண சூழலில், மரணபயத்துடன் யுத்தத்தில் சிக்குண்ட அனைவருக்கும் பொருந்தும். உணவின் முக்கியத்துவம், அது அளிக்கும் ஊட்டம், மகிழ்வு இவையெல்லாம் பெண்களின் உணர்வுக்குள் கலந்துவிட்ட உண்மைகள். இந்த உண்மைகளே சவால் நிறைந்த வாழ்வைச் சமையல் மணத்தால் போக்கும் மாயத்தையும் அதனால் உருவாகும் நம்பிக்கையையும் அவர்களுக்குக் கற்றுத் தந்துள்ளது. அதில் உருவான உந்துசக்தி பிறரையும் துயரங்களைக் கடக்கும் பாதைக்கு இட்டுச்செல்கிறது. பொதுவாக, போரினால் உருவான உளக்காயம் இருண்மை சார்ந்த இலக்கியமாகவே வடிவெடுக்கிறது. ஆனால் பெண்களின் உளவியலின் ஒரு கூறாக அமையும் உந்துசக்தியும் நம்பிக்கையும் அவர்களின் பகிர்வுகளில் இருண்மையிலிருந்து மீண்டும் பிறக்கும் ஒளியைப் பாய்ச்சுகின்றன.

“A troubled relation to food is one of the principle ways the problems of female being come to expression in women’s lives” என்றார் கிம் செர்னின் (Kim Chernin).4 அதாவது, பெண்களின் வாழ்வில் தம் இருப்பிற்கான பிரச்சினைகளை மொழியும் அடிப்படை வழிகளில் ஒன்றே உணவுடன் அவர்களுக்கு ஏற்படும் சிக்கலான உறவு. ‘ஒருகூர்வாளின் நிழலில்’ என்ற நினைவுக்குறிப்பில் தமிழினி தான் சுமந்த வடு மண்டிய நினைவுகளுடன் மன அழுத்தத்துடன் போராட இயலாமல் வெலிக்கடைச் சிறையில் பல நாட்கள் உணவை முற்றிலும் மறுத்து ஒதுக்கி இருந்தது மட்டுமல்லாமல், அவ்வாறு இருக்கையில் பசித்திருக்கும் தேகம் மனக்காயங்களை மழுங்கடிக்கச் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.5 ஆக, உணவு என்பது பெண்களுக்குத் தங்கள் சவால்களை துயரங்களை ஆற்றுப்படுத்தவும், ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு வித்திடவும், உடல் மற்றும் மனத்தினைப் பிணியின்றிப் பேணும் மருந்தாகவும் அமைகிறது. பெண்கள் போரில் மிகுதியான பாதிப்புறுபவர்கள் மட்டுமல்ல, அவர்களின் அவலங்களை மாற்றியமைக்கவும் எதிர்க்கவும் அதிலிருந்து மேம்படவும் அந்த அவலங்களின் மூலம் கற்றுக்கொள்கிறார்கள். உணவு ஆக்குதல் எனும் அன்றாடச் செயலைக்கொண்டு தன்னோடிருக்கும் துயருற்ற உயிர்களுக்கு ஊட்டமும் பராமரிப்பும் அதன்மூலம் வாழ்வின் மீது மீள்பிடிப்பையும் ஏற்படுத்துபவர்களாக அவர்கள் உள்ளார்கள். இவர்களது இந்த அனுபவப்பகிர்வுகள் உளவடுவை நாம் அணுகும் முறைகளை மாற்றியமைக்கின்றன. முகாம்களில் இருந்தபடி கூழ் காய்ச்சுவதும் மல்லித்தண்ணி கொதிக்க வைப்பதும் மா அரைப்பதும் ஒருவகையில் மனக்காயங்களை ஆற்றுவிக்கும் செயல்களாக மாறுகின்றன. இப்பெண்கள் இப்போது சிறிதளவே வழமையான, நிரந்தரமான வாழ்வைத் துவங்கியிருந்தாலும் அவர்களது தினப்படி செயல்களான தேங்காய் துருவுதல், இடியப்பம் பிழிதல், புட்டு அவித்தல் போன்றவற்றிலுள்ள உடலின் ஒத்திசைவும் மெல்லிய சந்தமும் போர்க்காலத் துயர நினைவுகளிலிருந்து விடுபடும் மருந்தாகின்றன. நடனம், கூத்து போன்ற கலைவடிவங்களின் ஆற்றுப்படுத்தும் தன்மையைப் போலவே உடல்சார்ந்த இந்த உழைப்பும் இயங்குகிறது. அதுமட்டுமல்ல பசித்த வயிற்றுக்கு உணவளிப்பது என்பதே அவலமுற்ற மனத்திற்கும் உடலுக்குமான சிகிச்சையாகிறது.

‘கைவினை’ நூலில் இடம்பெற்றுள்ள முப்பத்து நான்கு பெண்களின் கதைகளில் லீலாவின் கதையும் ஒன்று. உண்ண உணவில்லாது வெறும் மல்லித்தண்ணியைக் குடித்தே முகாமில் குழந்தை பெற்ற லீலா கண்கள் மினுங்க அந்த நாட்களை மல்லித்தண்ணியின் நினைவுகளால் நகர்த்துகிறார். உளவடுவை ஆற்றுப்படுத்தும் கலை இலக்கிய வெளிப்பாடுகள், சடங்குகள் இவையெல்லாம் முன்னெடுத்து ஆய்வுகள் வெளிவரும் வேளையில், எவருமே கவனம் எடுக்காத குடும்பப் பெண்களின் சமையலிலிருந்து, சமையல் மூலமாகப் பிறக்கும் நினைவுகளும் மொழியும் எதிர்ப்பும் நம்பிக்கையும் உளவடுவைப் போக்கும் இலக்கியம் மற்றும் உளவியல் கோட்பாடுகளை, அதன் அணுகுமுறைகளை, கட்டுமானங்களை உடைத்தெறிகின்றன.

இச்சிறு தொகுப்பு இந்தக் கதைகளால் மட்டும் உருவாகாமல் ஈழத்தின் பண்பாட்டு மணம் மிகுந்த சமையல் குறிப்புகளையும் தன்னுள் அடக்கியுள்ளது. அவ்வகையில் இந்த நூல் ‘வீட்டின் மூலையிலிருக்கும் சமையலறை’யிலிருந்து போர்க்கால ஆவணமாகவும், பெண்களின் நம்பிக்கை, எதிர்ப்பு மற்றும் நினைவுகளின் பெட்டகமாகவும் உளவடுவின் மாற்றுப்பார்வையாகவும் ஒரே நேரத்தில் விரிவடைந்துள்ளது. தங்கள் மீது சுமத்தப்பட்ட வன்முறையையும் வன்புணர்வையும் யூகொஸ்லாவியப் பெண்களும் ருவாண்டாவின் பெண்களும் வெளிப்படுத்திய பின்னரே வன்புணர்வைப் போர்க்குற்றமாக ஐ.நா. 1994இல் அறிவித்தது. அந்தப் பெண்கள் நிச்சயமாய் அதை எதிர்பார்த்துத் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளவில்லை. அதுபோலவே இந்த நூலிலுள்ள பெண்களும் தங்களுடைய செயற்பாடுகளை மிகச்சாதாரணமாகவே எண்ணுகின்றனர்; தங்களுக்குள் இருக்கும் ஆற்றலைக் குறித்த அவர்களுடைய பார்வையும் எந்தவித எதிர்பார்ப்புமற்று எளிமையாக இருக்கிறது. ஆனால் உணவு தயாரித்தல் என்ற அன்றாட செயலின் மூலம் அவர்கள் திறந்திருக்கும் பாதை பல திக்குகளில் அதிர்வுகளை உருவாக்கும் விசாலமான பரப்பாகும்.

இறுதியாக, இந்த நூல் ஆஸ்திரேலியாவில் இயங்கும் Palmera எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் இயக்குனரான அபர்ணா சுதந்திரராஜ் முன்னெடுத்த செயற்பாட்டின் விளைவாகும். அவரோடு இணைந்து இப்பெண்களைச் சந்தித்தல், அவர்களுடைய பகிர்வுகளைப் பதிவு செய்தல், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல், சமையற் குறிப்புகளைச் சரி பார்த்தல் என ஒரு பெரிய குழுவே இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ‘கைவினை’யின் விற்பனையில் கிடைக்கப்பெறும் நிதி ஈழத்துப் பெண்களின் வாழ்க்கை மேம்பாட்டுத் திட்டங்களுக்கே மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. Palmera நிறுவனத்தினர் இது போன்ற பல திட்டங்களை போரில் பாதிப்புற்ற ஈழப் பெண்களுக்காகச் செயல்படுத்துகிறது. அதன் பயனாக அங்கு பல பெண்கள் விவசாயம் உட்பட பல சிறுதொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.

நூலைப் பெற விரும்புவோர் அல்லது அதை வெளியீடு செய்து நிதி திரட்ட விரும்புவோர் கீழே உள்ள மின் அஞ்சல் அல்லது தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொள்ளலாம்:

Abhi Pathak, abhi.p@palmeraprojects.org, 44 7437467457

https://www.palmera.org/handmade/

 

1. Arundati Roy, War Talk, South End Press, Cambridge, 2003, p. 112

2. Veena Das. Composition of the Personal Voice: Violence and Migration. Studies in History. 1991

3. புஷ்பராணி, அகாலம், கருப்புப் பிரதிகள், சென்னை, 2012, ப. 112,

4. Kim Chernin, The Hungry Self: Women, Eating and Identity, Harper Colins, 1994, p xix

5. தமிழினி, ஒரு கூர்வாளின் நிழலில், காலச்சுவடு, 2016, ப.238

 

http://www.kalachuvadu.com/issue-197/page42.asp

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.