Jump to content

தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்


Recommended Posts

சீமைக் கிழுவை மரம் இலை தெரியாது நாவல் நிறப்பூக்கள் நிறைந்து குலுங்கியது, காட்டுப் பெண்ணைப் பிடித்து வந்து 'ஆஸ்கார் டி ல றென்ற்றா' ஆடை அணிவித்து நியூயோர்க்கின் தெருவில் விட்டதுபோல் அவ்வீட்டின் வேலி போகன் விலாவுடன் சேர்த்துச் சீமைக் கிழுவையினை நகர்ப்புறப்படுத்திவிட முயன்று தோற்றிருந்தது. காட்டுமரத்தின் பூவின் நறுமணத்தில் கள்ளிருந்தது. கண்கள் சொருகிச் சிருங்காரம் நிறைந்து கள்ளுண்ட மந்தியாய் காட்டுச் சிறுக்கியின் நறுமணத்தில் திழைத்து நின்றிருந்தேன். கோடன் சேட்டும், சாரமும் கட்டி, ஏசியா துவிச்சக்கர வண்டியில் ஒருவர் மிதிக்க மற்றவர் உரப்பையிற்குள் உலோகத்தை மறைத்து வைத்து அமர்ந்திருக்க அந்த இருவர் சென்றனர். 

இயக்கம் நிறுவனமயப்பட்டு வரிக்குள் சிக்குவதற்கு முந்தைய காலங்கள் சீமைக்கிழுவைப் பூவின் நறுமணமாய் இன்னமும் மனதில். தென்னங்கீற்றில் தென்றல் வந்து பாடும் பாடலினை இன்று கேட்கினும் நேரக்கடத்தி ஒன்று எங்கிருந்தோ தோன்றி அன்றைக்குள் இழுத்துச் சென்றுவிடுகின்றது. 'தென்றல் வந்து தொட்டு என்னைக் கேலி செய்தது, நீ சென்ற இடம் சொன்ன போது வேலி போட்டது' என்ற அந்தக் காதலியின் வரிகள் அன்றைய உணர்வற்குப் பொழிப்புரை. இன்னுமொரு தாலாட்டுப் பாடலில் 'உன் அப்பன் தமிழ்க்கவி வாணனடா உன் அண்ணன் ஒரு புலி வீரனடா' வரிகள் அண்ணன் இல்லாத பையனிற்கும் துணிவு துளிர்ப்பிக்கும் குளிசை. இசங்களிற்கூடாகவும் அரசியல் வகுப்பறைகள் கற்பிக்கும் வழிமுறைகளிற்கூடாகவும் மட்டும் அன்றைய காலத்தைப் பார்க்கத் தலைப்படும் எவரிற்கும் சீமைக் கிழுவைப்பூவின் நறுமணம் நாசியேறுவது சாத்தியமிலை.

நான்கு மணியாகியும் வெயில் சென்றபாடில்லை. வாகனங்கள் ஏ-9ல் திடீரென்று காணாது போயிருந்தன. காற்று மண்ணை அள்ளி எறிந்து முற்றத்தைக் கரடுமுரடாக்கியிருந்தது. பனையில் காவோலை உரஞ்சி அன்றைய கச்சேரிக்குத் தம்புராவாய் சுதி பார்த்துக்கொண்டிருந்தது. ஒரே ஒரு மாட்டு வண்டி வெளியே சொல்லக் கூடாத எதையோ கண்டுவிட்ட உத்தரிப்பில் கமுக்கமாய்ப் போய்க்கொண்டிருந்தது. காட்டுக்குள் தண்ணீர் தேடி நகரும் தாவர உண்ணிகளைப் போல், திடீரென ஏ-9 ஓர வீடுகளின் பெரியவர்கள் குடும்பங்களை அழைத்துக்கொண்டு கிராமத்தின் உள்ளுக்குள் செல்லத் தொடங்கியிருந்தனர். ஏ-9 ஓர வீடுகளில் அப்போது இத்தகைய தற்காலிக இடப்பெயர்வுகள் வழமையாய் இருந்தன. பாதுகாப்பான இடம் என்று உணரப்பட்ட இடம் வந்ததும் கதைகள் சற்றுச் சகஜமாகின. எழும்ப இருக்கும் வெடியோசை ஏறத்தாளப் பரகசியமாகியிருந்தது. 

சேர்ந்திருந்த சிறுவர்கள் ஆபத்து நெருங்க முடியாத் தூரத்தில் நின்ற துணிவில் விளையாடிக்கொண்டிருந்தனர். திடீரென ஒரு சிறுமியின் ஓலம். பனையில் இருந்து கருங்குளவி ஒன்று அவள் தலையில் கொட்டிவிட்டிருந்தது. ஊரே கூடிக் கைவைத்தியம் பார்த்தது. ஏழு கருங்குளவி சேர்ந்து கொட்டின் மரணம் நிச்சயம் என ஒரு குளவியோடு கடந்து போயிருந்த ஆபத்தினை மூதாட்டி ஒருத்தி விபரித்தாள். கருங்குளவிகள் அளவில் தோட்டாக்கள் காவிய சுடுகலன்களோடு எதிரியினை எதிர்பார்த்துக் காத்திருந்த குழந்தைகள் சார்ந்து எந்த உயிர்ப்பயமும் எழுப்பப்படவில்லை. கோடன் சேட்டும் சாரமும் கட்டி உரப்பையோடு ஏசியா சைக்கிளில் செல்பவர்கள் ஏழு கடல் நாலு மலை தாண்டிச் சென்று பூதத்தின் குகையிருந்து மாந்திரீகத் தாயத்தை எடுத்து வந்தவர்களாக மக்கள் மனதில் உயர்ந்து நின்றார்கள்.

காவோலை மட்டும் தம்புரா இசைத்திருந்த மேடையில் நாய்களின் குரைப்புக் கீபோட் ஆகி; தோற்கருவி இசையாக வேட்டொலிகள் எழும்பின. ஒவ்வொரு வெடியினையும் தத்தமது மனங்களில் இனம்பிரித்து, நம்மவர் வெடிகளின் நாயகர்கள் முகங்கள் அவரரவர் கற்பனைக்கேற்ப பேச்சின்றி மனங்களுள் விரிந்துகொண்டிருந்தது. திரையில் டூப் போட்டு சண்டை செய்யும் கதாநாயகனிற்கு விசிலடிக்கும் ரசிகர்கள் சண்டை முடிவில் தமது நாயகன் காதலியினைப் பார்க்கப் போவான் என்று தெரிந்திருந்தும் நுனிக்கதிரையில் இருக்கையில், நிஜக் களத்தில் நாயகர்கள் வேட்டொலி எழுப்பிக் கொண்டிருக்கையில் கைநோட்டு மனிதனிற்குள்ளும் காப்பியங்கள் வாசிக்கப்படும்.

நாலு மணி. கனேடிய வசந்தத்தின் இதனமான வெயில் பிரகாசித்து எறித்துக்கொண்டிருக்கிறது. குளிருக்குள் தூங்கிய தாவரங்களும் புல்லும் படிப்படியாய் விளித்துக்கொண்டிருக்கிறன. பட்சிகளின் ஒலி மெதுவாகக் கேட்க ஆரம்பித்திருக்கிறது. வீட்டிற்குள் நிசப்த்தம். பனையில் உரஞ்சுவதற்குக் காவோலை இல்லை என்ற போதும், ஏறத்தாள இந்த மாலையின் சுதி அவ்வாறுதானிருக்கிறது. 'தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்' பாடலினை காதிற்குள் ஒலிக்க விடுகிறேன். நாயகர்கள் அணி வகுக்கிறார்கள். ஏழு கடல் நாலு மலை தாண்டி மாந்திரீகத் தாயத்தை எடுத்துவந்து எம்முன்னால் நடந்தவர்கள் இன்னமும் உயரமாய் அணிவகுக்கிறார்கள். எதுவும் மிஞ்சவில்லை என்று என்னால் சொல்ல முடியவில்லை. அரசியல் மற்றும் எல்லைக் கோடுகள் என்பன தாண்டி தனிமனித ஆழுமையின் வீச்சை, சுதந்திரம் என்ற சொல்லின் முழுப் பரிமாணத்தை இறுக்கமான எனது சமூகத்திற்கு வகுப்பெடுத்துக் காட்டியவர்களின் சகாப்த்தம் எம்மனைவருள்ளும் பதிந்தே இருக்கிறது.

காட்டெருமையெனத் திமிர்த்துத் தெறித்து ஓடிக்கொண்டிருக்கும் முதலாளித்துவ வாழ்வின் உச்ச ஸ்த்தாயியில், காட்டெருமையின் கொம்பைப் பிடித்தபடி அதன் முதுகில் அமர்ந்திருந்து வெற்றியோட்டம் ஓடுதற்கும் உத்வேகம் அவர்கள் வாழ்விருந்து பெறக்கூடியதாகவே இருக்கிறது. சுதந்திரம் என்பதன் முழுப்பரிமாணம் சார்ந்து பாடம் புரிகிறது.

நாயகர்கள் நடந்த காட்சிகள் காற்றில் மட்டுமே உறைந்திருக்கின்றன என்ற நினைப்பு நெஞ்சை அழுத்தவே செய்கிறது. அதிலிருந்து விடுபடுவதற்காய் மனதில் ஆழமாய்ப் பதிந்திருக்கும் சீமைக்கிழுவைக் காட்டுச் சிறுக்கி தனது நறுமணத்தின் வாயிலாய் எனைக் கள்ளுண்ட மந்தியாக்க அனுமதித்துக் கண்களை மூடிக்கொள்கிறேன். சிலிர்ப்புப் பற்றிக் கொள்கின்றது...
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவனின் பழைய நினைவுகளின் ஏக்கத்தில் (nostalgia) இருந்து கதை பிறந்துள்ளதாகத் தெரிகின்றது. தென்னங் கீற்றில் தென்றல் வந்து மோதும் என்ற பாடல் களத்தில் கேட்கும் கானங்கள் என்ற இசைநாடாவில் வந்தது. ஆபிரிக்காவில் இடைநடுவே நின்ற இடத்தில் இருந்த ஒரேயொரு இசைநாடா. இதனையே பல வாரங்கள் தொடர்ந்து திருப்பித் திருப்பிக் கேட்டதனால், சிந்தனை இல்லாத வேளைகளில் வாய் தன்பாட்டில் இப்பாடலையும், பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே பாடலையும் இப்போதும் முணுமுணுக்கும். 

நாயகர்களாக வந்தவர்கள் எல்லாரும் வரலாறாகிவிட்டார்கள். இவர்கள் காலத்தில் வாழ்ந்தோம் என்ற நினைப்பே இப்போது நம்பமுடியாமல் உள்ளது. 

Link to comment
Share on other sites

நன்றி அனைவரிற்கும்.

கிருபன்,
இந்த 7 ஆண்டுகளில் அதற்கு முந்திய 30 ஆண்டுகளில் நடந்தது அத்தனையும் முற்றுமுழுதான முட்டாள்த்தனம் என்று அரசியல் வகுப்பறைகளும் புத்தகங்களும் வாயிலாக மட்டும் நிறுவிவிட முயலும் ஒரு போக்குச் சார்ந்து நிறையவே ஆதங்கம் இருக்கிறது. அவ்வாறு பலவற்றை நினைத்துப் பார்க்கையில் சில சமயங்களில் ஞாபகவீதிக்குள் சிக்கிக்கொள்வது தவிர்க்கமுடியாததாகிப் போகிறது. அப்படி ஒரு மனநிலையில் எழுதியது தான்--சீமைக்கிழுவைப் பூ சார்ந்த குறியீட்டின் ஊடு ஒரு பரீட்சார்த்த முயற்சி.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவலங்கள் நிகழ்ந்த சம காலத்தில் வாழ்ந்த ஒருவரின் அனுபவம் அழகாகவே விபரிக்கப்பட்டிருக்கின்றது!

பயங்கள், எதிர்பார்ப்புக்கள், என்றோ ஒருநாள் விடியும் என்ற நம்பிக்கை அனைத்துமே நிறைந்திருந்த கால கட்டம்!

ஊரின் அந்தக்காலச் சூழலை விபரிக்க...சீமைக்கிழுவை மரங்களை விடவும் வேறு நல்ல உதாரணங்களைத் தேடிப்பார்க்க முடியாது!

சீமைக்கிழுவை என்று நீங்கள் குறிப்பிடுவது  கிலிசீரியா என்று நினைக்கிறேன்!

நாங்கள் ஊரில் சீமைக்கதியால் என்று கூறுவதுண்டு!

கொத்துகொத்தாக அவை பூத்துக்குலுங்கும் அழகு...மனதிலும் ஒரு குதூகலத்தை ஏற்படுத்தும்!

 

இந்த ஏழு பெருங்குளவிகள் கதை எங்கிருந்து உருவாகியதோ தெரியாது!

சில வாரங்களுக்கு முன்னர் வீட்டின் முன்னர் நின்ற மரங்களின் கொப்புக்களை வெட்டி ஒழுங்குபடுத்தும் படி மேலிடத்து உத்தரவு!

இனிமேலும் சாக்குப் போக்குச் சொல்லமுடியாத கட்டம்!

ஏணியில் ஏறி நின்று வெட்டிக்கொண்டிருக்கும் போது வலது கையில் ஒரு சுரீர்! ஏதோ நெருப்புப் பட்டது மாதிரி இருந்தது!

ஏணியில் இருந்து இறங்குவதற்குள் ஒரு பத்துக் குளவிகளாவது பூந்து விளையாடியிருக்க வேண்டும் என்பது எனது அனுமானம்!

முதலில் இந்த ஏழு என்ற இலக்கம் தான் நினைவுக்கு வந்தது!

பின்னர் குளவி... பெரிசா... அல்லது சின்னனா என்ற கேள்வி...!

அட...அவுஸ்திரேலியாவுக்குப் பெருங்குளவி வந்திருக்காது...என்று மனம் ஒரு பக்கம் சமாதானம் சொன்னது!   

இவ்வளவுக்கும் காரணம் அந்தக் குளவிக் கூடு...வழக்கத்தை விடவும் பெரிதாக இருந்ததும்..குளவிகளும் வழக்கத்துக்கு மாறாகக் கொஞ்சம் கருமை நிறம் கொண்டிருந்ததும் தான்!

மனுசி..ஒரு பக்கம் நிண்டு ...வாங்கப்பா..ஆஸ்பத்திருக்குக் கொண்டு போய்க் காட்டுவம் எண்ட படி.....!

நமக்கோ ஆஸ்பத்திரிக்கு போறதோ..எண்ட கௌரவப் பிரச்சனை ஒரு பக்கம்...! மற்றும் படி...ஏழு என்ற இலக்கம் கொஞ்சம் ஆதாரம் இல்லாத ஒரு இலக்கமாயிருக்கும் என்று ஒரு ஆறுதல்....!

தாயக நினைவுகளைத் தடவிப்பார்க்க வைத்த பகிர்வு..!

 

நன்றி...இன்னுமொருவன்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.