• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
karu

அடிமைகளாக்கிய சுதந்திரம்.

Recommended Posts

அடிமைகளாக்கிய சுதந்திரம்.

இன்று இலங்கையின் சுதந்திர தினம்.

1948 பெப்ரவரி 4 இல் இலங்கை தனது சுதந்திரத்தை பிரிட்டிஷ் சாம்ராச்சியத்திடமிருந்து பெற்றுக்கொண்டது. எங்கள் சாம்ராச்சியத்தில் சூரியனே அஸ்தமிப்பதில்லையென்று பெருமயடித்துக்கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், இரண்டாவது உலகமகா யுத்தத்தின் முடிவோடு இனிமேல் உலகைக் கட்டியாள முடியாது. அதற்குரிய ஆட்பலமும் பொருளாதார வலுவும் நம்மிடமில்லையென்ற முடிவுக்கு வந்தது. அக்காலத்தில் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் அந்த நாடுகளின் சனத்தொகைகளோடு ஒப்பிடுகையில் விரல்விட்டு எண்ணத்தக்க ஆங்கிலேய அதிகாரிகளே இருந்தனர். இருந்தும் பிரட்டிஷ் ஏகாதிபத்தியம் தனது சாமர்த்தியமான நிர்வாகத் திறமையால் லண்டனிலிருந்துகொண்டே தனது ஆட்சியதிகாரத்தை உலகெங்கிலும் செலுத்தியது. ஆனால் இரண்டாம் உலமகா யுத்தத்தின்போது பெரிய பிரித்தானியாவுக்கு ஏற்பட்ட தாங்கிக்கொள்ள முடியாத தகைப்பின் பெறுபேறாக, தான் தனது காலனியாதிக்கத்தால் அடிமைப்படுத்தி வைத்திருந்த தூரத்து நாடுகளைக் கைவிடவேண்டிய கட்டாய நிலைதோன்ற, இந்தியா பாகிஸ்தான், இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளும் மற்றும் பர்மா போன்ற கிழக்காசிய நாடுகளும் தங்களுக்கென்று தம்மைத்தாமே ஆளும் சுதந்திர அரசுகளை அமைத்துக் கொண்டன. இந்தியா தனது முழுமையான சுதந்திரத்தை 15 ஆகஸ்டு 1947 இல் பெற்றுக்கொள்ள; பிரிட்;டிஷ் ஏகாதிபத்தியம், தனது பிடியை விடாமல் வைத்துக்கொண்டு, அடுத்தவருடம் பெப்ரவரியில் இலங்கைக்கும் சுதந்திரத்தைத் தந்தது. 
மொத்தத்தில் இலங்கைக்குக் கிடைத்த சுதந்திரம்:

“பாரதம் தனைவிடுத்தே வௌ்ளைப் பரங்கியர் அகன்றிடும் போதினிலே யாரிதைக்கணக்கெடுப்பார் என நமதிலங்கையினையும் விட்டகன்றார்…”

என்றவாறாகவேயமைந்தது.

ஆனால் இலங்கை பெற்ற சுதந்திரம் பாதிச் சுதந்திரமே. சுதந்திரம் வழங்கப்பட்டபோது பிரிட்டிஸ் அரசு, இந்தியா போன்ற பெரிய நாடுகளின் ஆக்கிரமிப்பிலிருந்து இலங்கையைக் காப்பாற்ற சிறதளவு தனது ஆதிக்கத்தை இலங்கையில் விட்டுச் சென்றது. இலங்கையிலிருந்த கடற்படை அப்போது றோயல் சிலோன் நேவி என்றே அழைக்கப்பட்டது. காசிலும் முத்திரைகளிலுமிருந்த பிரித்தானிய அடையாளங்கள் (எலிசபெத் அரசியின் முகம் உட்பட) நீக்கப்படவில்லை. அரசசேவையிலான கடிதங்களை ஒன் ஹெர் மஜெஸ்ரி சேவிஸ் (ஒன் எச் எம் எஸ்) என்ற பெயரிலேயெ தபாற் திணைக்களம் ஏற்றுக்கொண்டு அனுப்பியது.

இலங்கையின் மீது பிரிட்டிஸார் விட்டுச் சென்ற அரைகுறை ஆதிக்கத்தினால் சிறுபான்மையினருக்கு இருந்த ஒரேயொரு சலுகை: “பெரும்பான்மையரசினால் ஏற்படுத்தப்படக்கூடிய யாதாவது நீதிக்குப் புறம்பான நடவடிக்கைகளை பிரிவி கவுன்சில் என்னும் பிரித்தானிய உயர் சபையில் முறையிட்டு நீதி கோரலாமென்பதுதான். அந்த சலுகையைப் பாவித்து முன்னர் கோடீஸ்வரன் என்னும் தமிழ் அரச ஊழியர் சிங்களம் மட்டும் சட்டத்திற்கெதிராக வழக்கொன்றைத் தொடுத்து வெற்றியும் பெற்றார். ஆனால் பின்னர், இடது சாரிகளின் துணையோடு பதவிக்கு வந்த சிறீமாவோ அரசு, இடது சாரிகளின் முக்கிய தலைவரான கொல்வின் ஆர் டி சில்வா என்பவரின் சட்ட மூளையைப் பாவித்து, இலங்கையை முழுச்சுதந்திரம் பெற்ற குடியரசாக்கி, சிறுபான்மையினருக்கிருந்த கடைசி ஆயுதமான பிரிவி கவுண்சிலையும் பறித்தெடுத்துவிட்டது.

பிரிட்டிஸாரின் ஆதிக்கத்தின் கீழ் வரும்வரை வரை ஓர் தனிராச்சியமாக இருந்த யாழ்ப்பாண தமிழ் இராச்சியமும், மற்றும் கண்டியின் கடைசித் தமிழ் மன்னனான ஸ்ரீவிக்கிரம இராசசிங்கனின் கீழிருந்த மட்டக்களப்புப் பிரதேசங்களும் எண்பது வீத சிங்கள சிறுபான்மையினரின் கைகளில் கொடுக்கப்பட்டதுதான் மிகக் கொடுமையான விடயமாகும். அதனால், சுதந்திரமென்னும் பெயரில் பிரிட்டிசாராரால் போடப்பட்ட பிச்சையில் ஒரு சிறு பருக்கைதானும் நமது நாவுக்கு எட்டவில்லை. அக்காலத்தில் சோல்பரியென்னும் பிரபுவே எமது அரசியல் வாழ்வை நிர்ணயித்தார்.

சுதந்திரம் எனச்சொல்லி - அந்தச்
சோல்பரி வெகு ஜன வாக்களிப்பை
விதந்துரை செய்ததனால் - என்றும்
மேவிய திரு நிறை பொலிவுடையாள்
அருந்தமிழ் ஈழமதை - எம(து)
அயலவர் சிங்களப் பெரும்பான்மைக் 
கரந்தனில் ஒப்புவித்தார் - அந்தக்
கணமதில் சகலதும் போயினவே!

அமைக்கப்பட்ட பாராளுமன்றத்தில், மிகச் சிறுபான்மையினராகப் போய்விட்ட நாம் கிடைத்த சுதந்திரத்தினால் எங்களுக்கிருந்திருக்க வேண்டிய அனைத்து அரசியல், நிர்வாக அதிகாரங்களையும், அதாவது ஒரு மொழிவாரி தேசிய இனத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டிய அவர்களது ஆட்புல அடையாளங்கள், சுயாதீனமான நிதி, பாதுகாப்பு நிர்வாகம் உட்பட கல்வி, மொழி, கலை, கலாச்சார அபிவிருத்தி ஆகிய சகல விடயங்களையும் சிங்களவர்களின் கையில் ஒப்புக்கொடுத்துவிட்டு,

‘அணிலேற விட்ட நாய்களைப் போல‘ 
வாயைப் பிளந்து கொண்டு நிற்க வேண்டியதாயிற்று. இன்றுவரை எமக்கேற்பட்டுவிட்ட இந்த அவலநிலையிலிருந்து நாம் மீட்சியடையவில்லை.

நாம் யாருக்காகவும் இலங்கை சுதந்திரமடைந்தபோது எமக்குக் கட்டாயம் கிடைத்திருக்க வேண்டிய தேசிய இன உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது. தற்போதுள்ள அரசு தமிழ் மக்களுக்கு இதுவரை காலமும் இருந்த இராணுவ நெருக்குவாரங்களைச் சற்றுத் தளர்த்திவிட்டுள்ளது என்பதற்காகவோ, அவர்களுடன் ஒரு இணக்கமான அரசியலை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்பதற்காகவோ:

“முகத்துக்கஞ்சி வேசித்தனம் பண்ண ஒருப்படுவது போல” தமிழர் தரப்பு செயற்படமுடியாது..

அதாவது சுதந்திரத்தைச் சுகிக்காதவர்கள் சுதந்திர தினத்தைக் கொள்கையளவிலேனும் தமது கொண்டாட்டத்திற்குரிய நாளாகக் கருதமுடியாது, அதைத் தமிழர் பிரதேசங்களில் கொண்டாட அனுமதிக்கவும் முடியாது. சுதந்திரத்திற்கு முன்னர், அதாவது காலனித்துவ காலத்திற்கு முன்னர் நாம் எமது இராச்சியங்களில் எவ்வளவு சுதந்திரததோடு வாழ்ந்தோமோ அதேயளவு சுதந்திரத்தைப் பெற்றுச் சுவைக்கும் நிலை தோன்று மட்டும் நாம் சுதந்திரம் பெற்றவர்களாக எம்மைக் கருதமுடியாது. அப்படிக் கருதுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயலாகவே இருக்கும்.

“சிங்கமொன்று வாளைக்காட்டி முன்னேயிருக்கும் இரண்டு சிறுபான்மையினங்களையும் (பச்சையும், ஓரேஞ்சும்) மிரட்டுகிறது.” இதுதான் நமது தேசியக்கொடி சொல்லும் செய்தி. இதற்கு ஆயிரம் அர்த்தங்களைப் புதிது புதிதாகப் பலர் கூறலாம். ஆனால் உண்மையில் அக்கொடி வடிவமைக்கப்பட்டது அச்செய்தியைக் கூறத்தான். இதனைத் தூக்கிப் பிடித்துக்கொண்டுதான் நாம் எமது சுத்திரதினத்தைக் கொண்டாட வேண்டுமென்றால் அதனைவிட வெட்கக்கேடான செயல் வேறு என்ன இருக்க முடியும்?

எமது சுதந்திரத்திற்குப் பெருமை இப்படித்தான் வரமுடியும். அது இதோ:

சுதந்திரப் பெருமை

ஈழ சுதந்திரம் வேண்டி நின்றார் - வே(று)
எதையும் விரும்புவாரோ
இனிய நறுந்தேன் இருக்கையில் வேம்பின(து)
எண்ணெயைக் குடிப்பாரோ
வாழ்வினில் ஓர் கணமேனும் விடுதலை 
மகிழ்வினை உணர்வாரேல்
வண்டமிழ் ஈழ நன் மண்ணினிற் தம்முயிர்
மாய்ந்திடல் விரும்பாரோ

தாயவள் ஈழநந் நாடதன் மேலுள
தாகத்தில் துடிப்பாரேல்
நோயினும் பிணியினும் அன்னைமண் விடுதலை
நோக்கினில் பிறழ்வாரோ
ஆயிரம் கோடி பணமிருந்தாலும் எம்
அன்னையின் மடி மீதில்
போயுயிர் நீத்து இப் பொய்யுடல் அழிவதில்
புளகமதடையாரோ

அவனியில் நாடொன்று அற்று அலைந்திடும்
அகதியென்றிழிவோடு
பவனிகள் செய்திடும் பகட்டினில் யாது
பயனென உணர்வாரேல்
யமனிடமும் தமதின்னுயிர் போகையில்
யாசகம் புரியாரோ
எமதுயிர்த் தாயகம் தனிலெனைக் கொல்லென
இரந்திட முனையாரோ

அன்னை மண் தந்திடு கூழதுவாயினும்
அருமையை மறவாரேல்
அன்னியன் பிச்சையில் அமிழ்தமருந்தினும்
அக மகிழ்ந்திடுவாரோ
பின்னமிலா எமதீழ சுதந்திரப் 
பேற்றினை நினைவாரேல்
பேதையராய் அயல் நாட்டிலுழல்வதைப்
பெருமையென்றுணர்வாரோ

விந்தைகள் செய்தெம(து) இன் தமிழீழத்தை
வீழ்த்திட முனைவாரேல் - அந்த
வித்தகர் யாரெனினும் பகை கூட்டியே
வீழ்ந்திடல் நிஜமாமே
செந்தமிழ் ஈழத்திற் செங்களமாடிய
எங்களின் மறவீரம்- இன்று
நிந்தை பட்டாலும் சுதந்திர ஈழத்தை
நிறுவுதல் நிஜமாமே

Edited by karu
edited the tag

Share this post


Link to post
Share on other sites