• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

சினிமா எடுத்துப் பார்

Recommended Posts

சினிமா எடுத்துப் பார் 95: போலியோ பிளஸ் குறும்படம்

 
 
சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் கண் வங்கி அறிமுக விழாவில் ரஜினிகாந்த், இயக்குநர் எஸ்பி.முத்துராமன், எழுத்தாளர் சிவசங்கரி, டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத், டாக்டர் சுரேந்தர், டாக்டர் பிரேமா உள்ளிட்ட மருத்துவக் குழுவினர்.
சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் கண் வங்கி அறிமுக விழாவில் ரஜினிகாந்த், இயக்குநர் எஸ்பி.முத்துராமன், எழுத்தாளர் சிவசங்கரி, டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத், டாக்டர் சுரேந்தர், டாக்டர் பிரேமா உள்ளிட்ட மருத்துவக் குழுவினர்.
 
 

காலத்தின் வேகத்தில் சின்னத் திரை தொடரை ஒரு நாளைக்கு ஒரு எபிசோட் என்கிற கணக்கைக் கடந்து இரண்டு, மூன்று எபிசோடுகள் எடுக்க வேண்டும் என்கிற சூழ்நிலை உருவானது. அப்படி எடுத்தால்தான் லாபம் வரும். இல்லையென்றால் கட்டுப்படியாகாது என்று வேகமாக எடுக்க ஆரம்பித்தனர். சுருக்கமாகச் சொன்னால் சுத்த ஆரம்பித்தார்கள். எதையும் தரமாகக் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம்கொண்ட எங்களால் அந்த அளவுக்கு வேகமாகச் சுழல முடியவில்லை.

சில நடிகர், நடிகைகளும் ஒரு நாளில் இரண்டு, மூன்று தொடர்களில் நடித்து, நன்றாக நடிப்பதில் கவனம் செலுத்தாமல் மீட்டர் போடுவதில் கவனமாக இருந்தனர். ஷாட்டுக்கு ரெடியாகும் வரை செல்போனில் பேசிக் கொண்டிருப்பார்கள். கேமராவுக்கு முன் வந்து நடிக்கும்போது உதவி இயக்குநர் சொல்லச் சொல்லக் கேட்டு வசனம் பேசி நடிக்கத் தொடங்கினர். இதனால் காட்சிகள் முக பாவத்தோடும், ஏற்ற இறக்கங்களோடும் இல்லாமல் போனது. படப்பிடிப்புத் தளத்தை கோயிலாக நினைத்துக்கொண்டு வேலை பார்த்த எங்களுக்கு இதெல்லாம் புதிதாகவே இருந்தன.

அண்ணன் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் செட்டில் இருந்தால் நடிப்பைத் தவிர வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்க மாட்டார்கள். அவருடைய நடிப்பில் வசனங்கள் அடி வயிற்றில் இருந்து வரும். முக பாவங்கள் முதிர்ச்சியாக இருக்கும். அப்படிப்பட்ட வர்களோடு பணிபுரிந்துவிட்டு இந்தக் காலத்தில் இந்த மாற்றங்களை எங்கள் மனம் தாங்கிக்கொள்ளவில்லை. அதனால் சின்னத்திரை தொடர்கள் இயக்குவதை நிறுத்திக் கொண்டேன்.

அடுத்து கண்தானம் பற்றிய ஒரு குறும்படத்தை சங்கர நேத்ராலயாவுக் காக எடுத்தோம். இதைப் பற்றி நான் முன்பே சில நிகழ்வுகளில் சொல்லியிருக் கிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜயா புரொடக்‌ஷனின் ‘உழைப்பாளி’ படத்தின் படப்பிடிப்பில் இருந்த நாட் களில்தான் இதை ஷூட் செய்தோம். லட்சுமி என்ற பார்வை உள்ள குழந் தைக்கு, கண் பூத்ததுபோல டாக்டர் சுரேந்தர் அவர்கள் கான்ட்ராக்ட் லென்ஸ் செய்துகொடுக்க, அதை லட்சுமி அணிந்து கொள்ள பட்டப்பாடு பெரும்பாடு. அதை அணிந்ததும் கண் தெரியாத குழந்தைபோல் தெரிந்தது. அந்தக் குழந்தையை வைத்துக்கொண்டு ரஜினிகாந்த் ‘இந்தக் குழந்தைக்கு கண் வர நீங்கள் எல்லாம் கண் தானம் செய்ய வேண்டும். தானத்தில் சிறந்த தானம் கண் தானம்!’ என்று மக்களிடம் கூறுவார். அது மக்களிடத்தில் விழிப்புணர்வை உண்டாக்கியது.

1990-ல் 130 கண்கள் தானமாக கிடைத்தன. இந்தக் குறும்படம் வெளியான பிறகு 2016 வரை 1,128 பேர் கண் தானம் செய்திருக்கிறார்கள். இதற்கு ஏவிஎம்.சரவணன் சார் அவர்களின் முயற்சியும், ரஜினிகாந்த் அவர்களின் ஒத்துழைப்பும், டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத், டாக்டர் சுரேந்தர், டாக்டர் பிரேமா பத்பநாபன் போன்ற மருத்துவர்களும்தான் காரணம்.

இது மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட தால் சங்கர நேத்ராலயா கண் மருத்துவ மனையின் வரலாறையும் அப்படி எடுக்க வேண்டும் என்று டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் அவர்கள் ஏவி.எம்.சரவணன் சாரிடம் கேட்டார்கள். அதன்படி மருத்துவ மனையில் இருக்கும் எல்லா துறை களிலும் படம் எடுத்து விரிவாக அந்த நோய்களைப் பற்றியும், மருத்துவத்தைப் பற்றியும் எடுத்துக் காட்டினோம். இந்தக் குறும்படம் வாயிலாக சங்கர நேத்ராலா யாவுக்கு ஒரு தனி வெளிச்சம் கிடைத்தது. இந்தக் குறும்படத்தை அமெரிக்காவில் போட்டுக் காண்பித்து அதன் மூலம் நிதி திரட்டி மேலும் பல தொண்டுகள் செய்வதில் கவனம் செலுத்துகிறார்கள்.

1_3136333a.png

‘கண் தானம்’ குறும்படத்தில் குழந்தை லட்சுமியுடன் ரஜினிகாந்த், ‘நிம்மதி உங்கள் ஜாய்ஸ்’ தொடரில் ஜெயபாரதி, சரத்பாபு

இதை அடுத்து போலியோ சொட்டு மருந்து குறித்த விழிப்புணர்வை உண் டாக்க, ரோட்டரி கிளப்புடன் இணைந்து ‘போலியோ பிளஸ்’ குறும்படம் எடுக்கும் வேலையில் இறங்கினோம். ஏவிஎம்.சரவணன்அவர்களும் அபிராமி ராமநாதன் அவர்களும் எங்களுக்கு துணையாக இருக்க, சினிமாவில் பெயர் பெற்ற நடிகர்கள் பலரும் நடிக்க சம்மதித்தனர். பார்த்திபன், குஷ்பு, பிரபு, பானுப்ரியா, லலிதகுமாரி, ரேவதி, மனோரமா, ரஜினிகாந்த் ஆகியோர் இதில் நடித்தார்கள். மக்களுக்கு ‘போலியோ’ சொட்டு போட்டால் குழந்தை களுக்கு இளம்பிள்ளை வாதம் வராது என்ற கருத்தை உரிய முறையில் மக்க ளிடத்தில் கொண்டுபோய் சேர்த்தார்கள். சுகாதார நிலையத்துக்கு வந்த தாய்மார்கள், ‘‘குழந்தைக்கு மனோரமா சொன்ன சொட்டு மருந்து போடுங்க’’, ‘‘ரஜினி சார் சொன்ன சொட்டு மருந்து போடுங்க’’ என்று ஆர்வமாக தங்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட் டார்கள். இன்றைக்கு அது வளர்ந்து மக்களிடம் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டு 99 சதவீதம் போலியோ இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் போலியோ இல்லாத புதியதோர் இந்தியா உருவாகப்போகிறது.

rt_3136335a.png

‘நிம்மதி உங்கள் ஜாய்ஸ்’ தொடரில் அஸ்வினி, விஜய் ஆதிராஜ்

கல்வியில் தனித்துவத்தோடு, திறமை யான பல மாணவ - மாணவிகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கும் பணியை பத்மா சேஷாத்ரி பள்ளி நிறுவனம் செய்துவருகிறது. இதை திருமதி ராஜலட்சுமி பார்த்தசாரதி (திருமதி ஒய்.ஜி.பி) அவர்கள்தான் நிறுவினார்கள். மகளிர் சங்கப் பணிகளில் ஆர்வம் செலுத்திக்கொண்டிருந்த 10 பெண்கள் சேர்ந்து முடிவு செய்து ஒரு குடிசையில் தொடங்கியப் பள்ளிதான் பிஎஸ்பிபி. இன்றைக்கு கிளைகள் படர்ந்து சென்னையில் மட்டுமே நான்கு, ஐந்து பள்ளிகள் என்று பெரிய ஆலமரமாக வளர்ந்து நிற்கின்றன. அப்படிப்பட்ட பள்ளி நிறுவனத்தின் செயல்பாடுகள், குறிக்கோள், லட்சியம் ஆகியவற்றை மையமாக வைத்து ‘பத்மா சேஷாத்ரி பள்ளி வரலாறு’ என்ற ஒரு குறும்படத்தை மிஸ்ஸஸ் ஒய்.ஜி.பி அவர்களின் 80-ம் ஆண்டு விழாவுக்காகத் தயாரித்தோம். இந்தக் குறும்படம் உருவாகும்போது அந்தப் பள்ளியின் திறமை மிகுந்த ஆசிரியர்களும், சுறுசுறுப்பான மாணவ- மாணவிகளும் எங்களுக்கு உதவியாக இருந்தார்கள். எங்களுக்குத் தேவை யான படங்களை எல்லாம் அவர்கள் ஓவியமாக உடனுக்குடன் வரைந்து கொடுத்தார்கள். அந்த மாணவர்கள் பேசும்போது ஒரு தனித்தன்மையும், ஆளுமையும் கண்டோம். அதனால் தான் அந்த மாணவர்கள் இன்று உலகம் முழுதும் சிறந்த முறையில் பணியாற்றுகிறார்கள். அந்தப் பள்ளி யில்தான் என் மகனும், பேரன், பேத்தி களும் படித்தார்கள் என்பதை பெருமை யாகச் சொல்லிக்கொள்கிறேன்.

mam_3136336a.png

ராஜலட்சுமி பார்த்தசாரதி

இப்படிப்பட்ட சிறப்பான பள்ளியை நடத்தும் மிஸ்ஸஸ் ஒய்.ஜி.பி-யின் கணவர் ஒய்.ஜி. பார்த்தசாரதி ஒரு நாடகக் காதலர். அவர் ஆரம்பித்த நாடகக் குழுதான் ‘யுனைடெட் ஆர்ட்ஸ். அந்த நாடகக் குழுவில் பணியாற்றி புகழ்பெற்றவர்கள் பலர். அதில் சமீபத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சோ அவர்களும், இப்போதும் புகழுடன் விளங்கும் விசு, மவுலி, வெங்கட், ஏ.ஆர்.எஸ், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோரும் அடங்கு வர். இன்றைக்கும் இந்த நாடகக் குழுவை ஒய்.ஜி.மகேந்திரன், அவரது மனைவி சுதா மகேந்திரன், அவர்களின் மகள் மதுவந்தி, மகன் ஹர்ஸ் ஆகியோர் சிறப்பாக நடத்தி வருகிறார்கள். ஹர்ஸ் தான் நான் எடுத்த அந்தப் பள்ளியின் குறும்படத்துக்கு குரல் கொடுத்தவர். இவர்களோடு கல்விக் கூடங்களை ராஜேந்திரன், ஷீலா ராஜேந்திரன் நிர்வ கிக்கிறார்கள். நான்கு தலைமுறைகளாக கல்வியையும், கலையையும் வளர்த்து வருகிறார்கள்.

திருமதி ஒய்.ஜி.பி அவர்கள் தன் 80 வயதில் வைணவம் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்கள். இன்று 85 வயதிலும் பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பாராட்டி மகிழ்கிறார்கள்.

நாங்கள் தயாரித்த குறும்படம் பற்றி அடுத்து சொல்கிறேனே!

- இன்னும் படம் பார்ப்போம்…

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-95-போலியோ-பிளஸ்-குறும்படம்/article9554734.ece

Share this post


Link to post
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 96: என்றும் சினிமா

 

 
‘பாண்டியன்' பட பூஜையில் எஸ்பி.முத்துராமனுடன் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, குஷ்பு உள்ளிட்டவர்கள்
‘பாண்டியன்' பட பூஜையில் எஸ்பி.முத்துராமனுடன் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, குஷ்பு உள்ளிட்டவர்கள்
 
 

அடுத்து நாங்கள் எடுத்த குறும் படம், சென்னை மயிலாப்பூரில் உள்ள சில்ரன் கார்டன் பள்ளியின் வரலாற்றைக் கூறும் படம். அதன் நிறு வனர் வி.என்.சர்மா. இவர் ஜெர்மனியைச் சேர்ந்த எலன் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் சேர்ந்து குழந்தைகளுக்கான நர்சரி பள்ளியாக அதைத் தொடங்கினர். 1937-ல் வெறும் 7 பேருடன் ஆரம்பித்த பள்ளியில் இன்று 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படிக்கின்றனர். கல்வி யோடு சேர்ந்து தமிழ் கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கத்தை விதைக்கும் பணியையும் செய்துவருகின்றனர்.

வகுப்புக்குள் யாரும் காலணி அணிந்துகொண்டு போகமாட்டார்கள். வகுப்பறை சரஸ்வதி வாழ்கிற இடம் என்று காலணிகளை வெளியில் வரிசை யாக அடுக்கி வைத்துவிட்டு உள்ளே போவார்கள். மாணவர்களின் ஒழுக்கம் எங்கிருந்து தொடங்குகிறது என்பதைப் பாருங்கள். இந்தப் பள்ளியில் பணி யாற்றும் ஆசிரியர்களின் குழந்தை களுக்காக காப்பகம் அமைத்தனர். மாண வர்களின் பற்களைப் பரிசோதிப்பதற்காக பல் மருத்துவமனை. அதற்கு மருத்துவ ராக பிரபல பல் மருத்துவர் ஜே.ஜே.கண்ணப்பன். அவருக்குத் துணையாக வாசுகி கண்ணப்பன். பல் மருத்துவத்தை பள்ளிக்கு கொண்டுவந்த முதல் பள்ளி சில்ரன் கார்டன் பள்ளி.

spm_3138878a.jpg
‘என்றும் சினிமா’ குறும்படத்துக்கான பேட்டியில் கருணாநிதி, சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் ஆகியோருடன் எஸ்பி.முத்துராமன்

நாங்கள் நடத்தும் கவியரசர் கண்ணதாசன் போட்டிக்கான தேர்வுகளை முனைவர் விஜய லட்சுமி ராமசாமியும், முனைவர் வாசுகி கண்ணப்பனும் இப்பள்ளியில்தான் நடத்துகின்றனர். ‘இடம்’ தரும் அவர்களுக்கு எங்கள் மனதில் எப்போதுமே ‘இடம்’ உண்டு!

அப்பள்ளி நிறுவனர் வி.என்.சர்மா - எலன் சர்மா தம்பதிக்கு கீதா, ருக்மணி பப்பு, சகுந்தலா சர்மா என 3 மகள்கள். அதில் கீதா, சகுந்தலா திருமணம் செய்துகொள்ளவில்லை. சகுந்தலா தற்போது தாளாளராக இருந்து சில்ரன் கார்டன் பள்ளியை நிர்வகிக்கிறார். ஆங்கிலப் பள்ளியின் நிர்வாகி ருக்மணி. அந்தப் பள்ளியில் படித்து பட்டை தீட்டப்பட்ட பலரும் இன்று பெரும்புள்ளிகள்.

ஏவி.எம் நிறுவனத்தின் 60 ஆண்டு காலப் பணியை மையமாக வைத்து ஒரு குறும்படம் எடுத்தோம். இதில் ஏவி.மெய்யப்ப செட்டியாரின் சிறு வயது முதல் சினிமா வாழ்க்கைப் பயணம் வரை பதிவு செய்தோம். காரைக்குடியில் உள்ள அவரது வீடு, அவரது அப்பா, அம்மா, ஏவி.எம் அண்ட் சன்ஸ் என்ற பல்பொருள் அங்காடி, தேவகோட்டையில் ஏவி.எம் ஸ்டுடியோ இயங்கிய வரலாறு, சென்னையில் உள்ள ஏவி.எம் ஸ்டுடியோ, அங்கு எடுக்கப்பட்ட படங்கள் ஆகிய பல விஷயங்களை காட்சிப்படுத்தினோம். இதை ரேவதி சங்கரன் செட்டிநாட்டு மொழியில் தொகுத்து வழங்கினார். அவர் ‘சகலகலா வல்லி’. இந்தக் குறும்படத்தின் சாரத்தை புத்தகமாகவும் வெளியிட்டோம். அந்தப் புத்தகத்தில் ஒரு குறுந்தகட்டையும் இணைத்துக் கொடுத்தோம். படிப்பதோடு, பார்க்கவும் முடிந்ததால் மக்களை இது நன்கு சென்றடைந்தது.

sharm_3138879a.jpg

அதேபோல, ஏவி.மெய்யப்ப செட்டி யார் குறித்து 200 பிரபலங்களிடம் நேர் காணல் எடுத்து, குறும்படமாக்கினோம். தமிழகத்தின் 5 முதல்வர்கள் பணியாற்றிய நிறுவனம் ஏவி.எம் ஸ்டுடியோ. அதை நிறுவிய ஏவி.எம் பற்றிய குறும்படப் பதிவு என்றதும் பல பிரபலங்களும் தாமாக முன்வந்து நேர்காணல் கொடுத்தனர். அவர்கள் வழங்கிய கருத்துகள், ஏவி.எம்மின் பெருமைக்குப் பெருமை சேர்த்தன. இது பொதிகை தொலைக்காட்சியில் ‘என்றும் சினிமா’ என்ற பெயரில் 26 வாரம் தொடராக ஒளிபரப்பானது. இந்தக் குறும்படம் ஏவி.எம்முக்கு ஒரு ‘களஞ்சியம்’. இந்த இரு குறும்படங்களையும் எடுப்பதற்கு சரவணன் சார், குகன் ஆகிய இருவரும் எனக்கு வாய்ப்பு கொடுத்தது எனக்கு கிடைத்த பெரிய பாக்கியம். இது என் தாய் வீட்டுக்கு நான் தந்த சீதனம்!

எல்லா படங்களையும் ஒரு குழுவாக இணைந்துதான் இயக்கினேன். படத் துக்கு என்னை ஒப்பந்தம் செய்யும்போதே என் குழுவையும் சேர்த்துதான் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று கூறிவிடுவேன். அதனால் நான் இயக்கிய 70 படங் களுக்கும் இந்தக் குழுவினர்தான் என் னுடன் பணியாற்றினர். நான் பெற்ற வெற்றிகளுக்கு இவர்கள்தான் பலம். ‘வெட்டி வா என்றால், கட்டிக்கொண்டு வருகிற திறமைசாலிகள்!’ அந்தந்தத் துறையில் அவர்கள் சிறந்த கலைஞர் களாக இருந்தார்கள். சுமார் 20 ஆண்டு காலம் என்னோடு இரவு, பகலாக கடுமையாக உழைத்தனர்.

சினிமா துறையில் ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியமோ, ஊக்கத்தொகையோ, வருங்கால வைப்புநிதியோ தரப்படுவ தில்லை. அதனால் என் குழுவினருக்கு உரிய காலத்தில் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இதை ரஜினியிடம் கூறி, யூனிட்டுக்காக ஒரு படம் நடித்துக் கொடுக்கவேண்டும் என்று கேட்டேன். அவர் மகிழ்ச்சியோடு, ‘நிச்ச யம் செய்து கொடுக்கிறேன்’ என்று உறுதி கொடுத்தார். இதை சரவணன் சாரிடம் கூறி, ‘‘வியாபாரங்களை எல்லாம் நீங் களும், குகனும் பார்த்துக்கொள்ள வேண் டும்’’ என்று வேண்டினேன். அவரும் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டார்.

ஏவி.எம். தயாரிக்கும் ‘எஜமான்’ படத் துக்கு ஆர்.வி.உதயகுமாரை இயக்குந ராக நியமிக்க முடிவானதும், சரவணன் சார் ரஜினியிடம், ‘‘முத்துராமனுக்காக ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக் கிறீர்கள்? அதை செய்துகொடுத்தால் இந்த இயக்குநர் மாற்றத்தை முத்து ராமன் ஏற்றுக்கொள்வார்’’ என்று கூற அதன்படி ரஜினி எங்களுக்கு தேதி கொடுத்தார். அந்தப் படத்துக்காக கதையைத் தேடினோம்.

geetha_3138881a.jpg

‘பாம்பே தாதா’ என்ற கன்னடப் படத்தை ரஜினி எங்களுக்கு போட்டுக் காட்டினார். ரஜினிக்கு பொருந்தக்கூடிய படம். ரஜினி என்னிடம், ‘‘இப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகரு மான பிரபாகரன் என் நண்பர். நான் அவரிடம் பேசி உரிமையை வாங்கித் தருகிறேன். அந்த வில்லன் ரோலுக்கு அவரையே நடிக்க வைக்கலாம்’’ என்று கூறி அந்த உரிமையை வாங்கித் தந்தார். அந்தப் படம்தான் ‘பாண்டியன்’. ஆக மொத்தம், அந்தப் படத்தில் ரஜினி நடிகராக மட்டுமல்லாமல் எங்களுக்கு எல்லா வகையிலும் உதவியாகவும் இருந்தார்.

கம்பெனிக்கு என்ன பெயர் வைப் பது என்று பேசும்போது, ‘‘உங்கள் தாயார் பெயர் என்ன?’’ என்று என்னிடம் கேட்டார் ரஜினி. ‘‘விசாலாட்சி’’ என்றேன். உடனே, ‘விசாலம் புரொடக்‌ஷன்ஸ்’ என்று பெயர் வைத்தார்.

‘பாண்டியன்’ படத்துக்கு திரைக் கதை, வசனம் எங்கள் பஞ்சு அருணா சலம். அவர், திரைக்கதை, வசனம் எழுதி முடித்ததும் 25.10.1992 ல் ‘பாண்டியன்’ படத்தின் தொடக்கவிழா. தமிழ் திரையுலகமே ஒட்டுமொத்தமாக வந்திருந்து எங்களை வாழ்த்தியது. அந்தக் கூட்டத்தைப் பார்த்த ரஜினி, ‘‘நீங்கள் எவ்வளவு நண்பர்களைச் சேர்த்து வைத்திருக்கிறீர்கள் என்று புரிந்துவிட்டது. இந்தப் படத்தின் வெற்றி விழாவுக்கு இத்தனை பேரும் வந்து வாழ்த்தணும். அதுதான் என் ஆசை!’’ என்றார். அந்தப் படத்தின் தொடக்க விழாவுக்குத்தான் என் தந்தையார் ராம.சுப்பையா உட்பட என் குடும்பமே முதன் முதலாக வந்து சிறப்பித்தது.

படத்துக்கு கதாநாயகி யார்? குஷ்புவை கதாநாயகியாக்க முடிவு செய்தோம். ‘‘இந்தப் படத்தில் நடிக்க எவ்வளவு பணம்?’’ என்று அவரிடம் கேட்டபோது சொல்ல மறுத்துவிட்டார். ஏன் மறுத்தார்?

- இன்னும் படம் பார்ப்போம்…

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-96-என்றும்-சினிமா/article9564687.ece

Share this post


Link to post
Share on other sites

ஏன் மறுத்தார் என்று எனக்குத் தெரியும் , அடுத்த தொடரில் சொல்லுவேன்...!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 97: பாண்டியனின் ராஜ்ஜியத்தில்

 

 
 
 
 
‘பாண்டியன்’ (1992) படத்தில் ரஜினிகாந்த், குஷ்பு
‘பாண்டியன்’ (1992) படத்தில் ரஜினிகாந்த், குஷ்பு
 
 

‘பாண்டியன்’படத்தின் நாயகியாக குஷ்புவை ஒப்பந்தம் செய்தோம். அவரும், ‘கால்ஷீட் தேதிகளில் ஒண்ணும் பிரச்சினை இல்லை. கண்டிப்பா நடிக்கிறேன் சார்’ என்று முழு மனதோடு சம்மதித்தார். ‘என்ன சம்பளம்?’ என்று கேட்டபோது சொல்ல மறுத்துவிட்டார். அவர் அப்படி சொன்னதுக்குக் காரணம்,‘தர்மத்தின் தலைவன்’படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக அவரை தமிழில் அறிமுகப்படுத்தியது நாங்கள்தான்.

அந்தச் சமயத்தில் சுத்தமாக தமிழ் பேசத் தெரியாத அவருக்கு, வகுப்பெடுத்து நடிக்க வைத்தோம். அந்த நன்றியை மனதில் வைத்துக்கொண்டுதான் அவர் அப்படி சொன்னார். இன்றைக்கும் எந்த விழாவுக்கு நான் சென்றாலும், என் காலில் விழுந்து வணங்கி வாழ்த்து பெறுவார்.

சம்பள விஷயத்தில் குஷ்பு இப்படி சொல்கிறார் என்ற விஷயத்தை ஏவி.எம்.சரவணன் சார் அவர்களிடம் போய் சொன்னேன். அவர், ‘‘இப்போ வெளியான படத்தில் என்ன சம்பளம் வாங்கியிருக்கார்னு விசாரிச்சு, அதுக்கு மேல ஒரு தொகையை வைத்துக் கொடுக்கலாம்’’ என்றார். அதேபோல விசாரித்து அவருக்கு சம்பளம் கொடுக்கப்பட்டது.

இசைஞானி இளையராஜாதான் படத்துக்கு இசை. ரஜினி, கமல் இருவருக்கும் அதிக படங்கள் இயக்கியுள்ளேன் என்பதைப் போல், நான் இயக்கிய 70 படங் களில் 40 படங்களுக்கு இசைஞானிதான் இசை என்பது எனக்குக் கிடைத்த பெருமைகளில் ஒன்று!

‘பாண்டியன்’ படத்துக்கான பாடல் இசைப் பணியில் இருந்த இளையராஜா அவர்களைப் பார்க்கச் சென்றேன். ஸ்டுடியோவில் எப்போதும் ரொம்ப கவனமாக பாடல் உருவாக்கும் பணியில் இருப்பவர், என்னிடம் ஒரு பாடலின் டியூனை வாசித்துக் காட்டினார். ‘‘ரொம்ப அருமையா இருக்கு ராஜா. பாடல் எழுதி ரெக்கார்டிங் போயிடலாமே’’ என்று சொன்னேன். அப்போது இளையராஜா அவர்கள், ‘‘இந்தப் பாடலை நான் அமைக்கவில்லை. என்னோட மகன் கார்த்திக் ராஜா உருவாக்கினான்’’ன்னு சொன்னார். எனக்கு சந்தோஷமாக இருந்தது. இளையராஜாவின் இசை தரத்துக்கு இணையாக அவரது மகன் கார்த்திக் ராஜா இப்படி ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறாரே என்று மேலும் சந்தோஷப்பட்டேன்.

இந்தப் பாடலை ரெக்கார்டிங் செய்து முடித்ததும் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து, கார்த்திக் ராஜாவை திரையுலகத்துக்கு அறிமுகப்படுத்தினோம். ராஜாவுக்கு ரொம்பவும் சந்தோஷம். அப்படி உருவான அந்தப் பாட்டுத்தான், ‘பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா…’ என்ற பாடல்.

‘பாண்டியன்’ பாடல்களைப் போல படத்துக்குப் பின்னணி இசையும் மிக முக்கிய பங்களிப்பாக தேவைப்பட்டது. என்ன தேவை என்ற விஷயத்தை ராஜாவிடம் சொல்லிவிட்டால் போதும், கேட்டதைவிட 200 மடங்கு அதிக மாகவே கொடுத்துவிடுவார். ‘பாண்டியன்’ படத்தோட வெற்றிக்கு இளையராஜாவின் இசை பெரிய பலம். ராஜா மட்டுமின்றி அவர் மகன் கார்த்திக் ராஜாவும் துணை இருந்தார் என்பதை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

Rajas_3141088a.jpg

ஹீரோ ரஜினியும், வில்லன் பிரபாகரனும் கலந்துகொள்ளும் ஒரு காட்சியை அகலமான ஒரு சாலையில் எடுக்க எண்ணினோம். அதுவும் துப்பாக்கி ஏந்திய பூனைப் படைகள் சூழ ரஜினியை வில்லன் கைது செய்து அழைத்துப் போவது போலவும், அதே மாதிரி வில்லனை ரஜினி கைது செய்து அழைத்துச் செல்வதைப் போலவும் படமாக்க வேண்டும். சென்னை மெரினா கடற்கரைச் சாலை சரியாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால், அங்கே அனுமதி கிடைக்கவில்லை.

இதே மாதிரி பாண்டிச்சேரி கடற்கரையில் அகலமான சாலை இருக்கிறது. அங்கே ஒப்புதல் பெற்றுவிட்டால் படப்பிடிப்பை நடந்தலாம் என்று முடிவு செய்தோம். பாண்டிச்சேரியில் அரசு அதிகாரியாக இருந்த நண்பர் ராமதாஸ் அவர்களைத் தொடர்புகொண்டு விஷ யத்தை சொன்னேன். அப்போது அங்கே முதலமைச்சராக வைத்தியலிங்கம் அவர்கள் இருந்தார். அவரிடம் விஷயத்தைக் கூற, அவர் காவல்துறை உள்ளிட்ட சில அதிகாரிகளை அழைத்துப் பேசி, அனுமதி கொடுத்தார். அதுவும் அரை மணி நேரம், ஒரு மணி நேரம் அல்ல. 4 மணி நேரம் சாலை போக்குவரத்தை நிறுத்தி எங்கள் படப்பிடிப்பு நடந்தது. முதலமைச்சரும், அதிகாரிகளும் எங் களுக்கு பக்கபலமாக இருந்ததே அதற்குக் காரணம். ஒருங்கிணைப்பாளராக இருந்த ராமதாஸ் அவர்கள் என்றும் எங்களுக்கு இணைபிரியாத நண்பர்.

‘பாண்டியன்’ படப்பிடிப்பில் இருந்த நாட்களில்தான் ஏவி.எம் கொடுத்த நிலத்தில் புது வீடு கட்டி, ஏவி.எம் நகருக்குக் குடி போனோம். அந்தப் புது வீட்டுக்குப் போன 10 நாட்களுக்கு பிறகு, ஒருநாள் என் சின்ன மகள் சாலா அழுதுகொண்டே வந்து, ‘‘அப்பா… உங்களப் பார்த்தே பத்து நாளாச்சுப்பா… வாடகை வீட்டுல இருந்தப்ப நீங்கள் காலையில தோட்டத்து பக்கம் வருவீங்க… போவீங்க. இப்ப உங்க அறையிலயே அட்டாச்டு பாத்ரூம். எப்போ வர்றீங்க? போறீங்கன்னே எங்களுக்குத் தெரியல?’’ என்று அழுதார். அந்த அழுகை என் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துச்சு.

‘‘இந்த ‘பாண்டியன்’ படத்தை என்னோட யூனிட்டுக்காக எடுக்குறேன். இந்த வேலை முடிந்ததும் குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்குறேன். அதில் முதல் வேலையா நாம் எல்லாரும் சிங்கப்பூர், மலேசியா டூர் போய்ட்டு வருவோம். இனிமே, நான் ஒரு குடும்பத் தலைவனா இருப்பேன்’’னு சொன்னேன். அதைக் கேட்டதும் என் மனைவி, மக்களுக்கு பயங்கர சந்தோஷம்!

‘பாண்டியன்’ படத்தின் ஒரு சண்டைக் காட்சியை சென்னை துறைமுகத்தில் ஒரு கப்பலில் எடுக்க ஆரம்பித்தோம். படப்பிடிப்பு தொடங்கிய கொஞ்ச நேரத்தில் ஒருவர் ஓடி வந்து, ‘‘முத்துராமன் சார்… உங்களை உடனே வீட்டுக்கு வரச் சொல்றாங்க?’’ என்று கூறினார். சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னத்திடமும், கேமரா மேன் டி.எஸ்.விநாயகத்திடமும் ‘‘நீங்க சண்டை காட்சியை எடுத்துவிடுங்கள்?’’ என்று கூறிவிட்டு புறப்பட்டேன். பதற்றத்தோடு வீட்டுக்குப் போய் பார்த்தால்… அங்கே என் மனைவி கமலா மாரடைப்பால் காலமாகியிருந்தார்.

உயிரோடு பார்த்த ‘என் கமலா’வை சடலமாக என்னால் பார்க்க முடியவில்லை. கத்தினேன், கதறினேன். நான் குடும்பத்துக்கு செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் இழுத்துபோட் டுக்கொண்டு கமலாதான் செய்தார். என் பாரத்தையும் சேர்த்துக்கொண்டு உழைத்ததால்தான் இவ்வளவு சீக்கிரம் போய்விட்டார். அவர் சாவுக்கு நான் தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சி எனக்குள் இருந்துகொண்டே இருக் கிறது.

கமலாவின் இறுதிச் சடங்கில் சரவணன் சார், அவரது மனைவி முத்துலட்சுமி அவர்கள், டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத், எழுத்தாளர் சிவசங்கரி போன்ற பெருமக்களும் நடிகர், நடிகைகளும் கலந்துகொண்டு எனக்கு ஆறுதல் சொன்னார்கள். சிங்கப்பூரில் படப்பிடிப்பில் இருந்த ரஜினிகாந்த், தன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டு, ‘‘இந்த மாதிரி நேரத்தில் நீங்க ஷூட்டிங் வெச்சிக்க வேண்டாம். படத்தை தீபாவளிக்குப் பிறகு ரிலீஸ் பண்ணிக்கலாம்!’’னு சொன்னார்.

சரவணன் சார்கிட்டப் போய், ‘‘ரஜினி இப்படி சொல்றார்’’னு சொன்னேன். அதற்கு சரவணன் சார் அவர்கள், ‘‘விநியோகஸ்தர்கள் என்கிட்ட பேசினாங்க. படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணினாத்தான் லாபம் கிடைக்கும். தள்ளிப்போச்சுன்னா நஷ்டம் வரும்னு புள்ளி விவரத்தோட சொல்றாங்க. இதுவரைக்கும் சொன்ன தேதிக்கு நீங்க படங்களை ரிலீஸ் பண்ணியிருக்கீங்க. விநியோகஸ்தர்களோட எண்ணத்தை பார்க்கும்போது தீபாவளிக்கு ரிலீஸ் பண்றதுதான் சரின்னு தோணுது. நான் உங்களைக் கட்டாயப்படுத்த மாட்டேன். நீங்களே முடிவு செய்யுங்க’’ என்றார். எனக்கு ஒரே குழப்பம். மனைவியின் துக்கமா? படம் ரிலீஸா? நான் என்ன முடிவு எடுத்தேன்?

 

spm_3141087a.jpg
மனைவி கமலாவுடன் எஸ்பி.முத்துராமன்

- இன்னும் படம் பார்ப்போம்…

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-97-பாண்டியனின்-ராஜ்ஜியத்தில்/article9575182.ece

Share this post


Link to post
Share on other sites

பகிர்வுக்கு நன்றி நவீனன்....! tw_blush:

Share this post


Link to post
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 98: எஸ்பி.முத்துராமன் எங்கே?

எஸ்பி. முத்துராமன்

 

 
 
'பாண்டியன்' படபூஜையில் கலந்துகொண்ட எஸ்பி.முத்துராமனின் தந்தை இராம.சுப்பையா மற்றும் குடும்பத்தினர். வலது ஓரத்தில் இருப்பவர் எஸ்பி.எம்மின் மனைவி கமலா.
'பாண்டியன்' படபூஜையில் கலந்துகொண்ட எஸ்பி.முத்துராமனின் தந்தை இராம.சுப்பையா மற்றும் குடும்பத்தினர். வலது ஓரத்தில் இருப்பவர் எஸ்பி.எம்மின் மனைவி கமலா.
 
 

‘பாண்டியன்’ படத்தை எப்போது ரிலீஸ் செய்வது என்ற முடிவை என்னிடம் விட்ட ஏவி.எம்.சரவ ணன் சார் அவர்களிடம், ‘‘திட்டமிட்ட படியே படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணுவோம். நான் நாளை மறுநாள் படப்பிடிப்புக்கு வந்துவிடுகிறேன்!’’ என் றேன். மனைவி இறந்த துக்கத்தில் இருந்து மீள முடியாத சூழ்நிலையில் இருந்த நான், மூன்றாவது நாளே படப்பிடிப்பு போகும் மனநிலை வந்ததற்குக் காரணம் என் பள்ளி ஆசிரியர் நல்லமுத்து சார்தான்.

ஒரு நாள்கூட விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வந்து ஒவ்வோர் ஆண்டும் பாராட்டையும், பரிசையும் பெறுபவர், நல்லமுத்து சார். ஒருநாள் மாலை 3 மணியளவில் அவரது மனைவி இறந்து விட்டார் என்று செய்தி வந்தது. பள்ளியில் இருந்து எல்லோரும் சென்று அடக்கம் செய்துவிட்டு வந்தோம். அடுத்த நாள் பள்ளிக்கு வந்த மாணவர்கள், ‘‘இன் னைக்கு நல்லமுத்து சார் பள்ளிக்கு வர மாட்டார். விடுமுறையே எடுக்காத அவருக்கு இந்த ஆண்டு பரிசு கிடைக்காது!’’ என்று பேசிக் கொண்டோம்.

அடுத்த சில நிமிடங்களில், ஆசிரியர் நல்லமுத்து அவர்கள் பள்ளிக்கு வந்து விட்டார். அதனைப் பார்த்த ஆசிரியர்கள், ‘‘மனைவி இறந்துட் டாங்க? இந்த மாதிரி சூழ்நிலையில இன்னைக்கு பள்ளிக்கு வர ணுமா?’’ என்று கேட்டார்கள். அதுக்கு அவர், ‘‘இறுதி சடங்குகள் எல்லாம் நேற்றே முடிந்துவிட்டன. இன்றைய வேலைகளைக் கவனிக்க உறவுக்காரங்க இருக்காங்க. நான் இன்னைக்கு என் கடமையை செய்ய பள்ளிக்கு வந்து விட்டேன்!’’ என்றார்.

அவருடைய கடமை உணர்ச்சிதான் என் மனைவி இறந்த மூன் றாவது நாளே படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் மன நிலையை உருவாக் கியது. படப்பிடிப்பு வேலைகளை முடித்து குறிப்பிட்டபடி தீபாவளிக்குப் படத்தை ரிலீஸ் செய்தோம்.

‘பாண்டியன்’ படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் வியாபாரம் தொடர்பான விஷயங்களை சரவணன் சார் அவர்களும், குகன் அவர்களும் பார்த்துக்கொண்டனர். ‘பாண்டியன்’ படத்தில் கிடைத்த லாபத்தை யூனிட்டுக்கு சரிசமமாக பங்கிட்டு கொடுத்தேன். அப்போது சிலர், ‘‘ரஜினிகாந்த் உங்களுக்காகத்தான் இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தார். லாபத்தில் சரி பாதியை நீங்கள் எடுத்துக்கொண்டு மீதமுள்ள தொகை யைக் குழுவுக்கு பங்கிட்டு கொடுத் திருக்கலாம்!’’ என்றனர். அப்படி செய்வது சரியாக இருக்காது என்று நான் அதற்கு சம்மதிக்கவில்லை.

படத்தில் கிடைத்த லாபத்தின் தொகை யால் இன்றைக்கு எங்கள் யூனிட்டில் உள்ளவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடத்துக்கு கஷ்டம் இல்லை. நான் நினைத்த மாதிரியே என் குழுவுக்கு ஒரு பாதுகாப்பு ஏற்பட்டது எனக்கு முழு மன திருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு முக்கிய காரணமாக இருந்த ரஜினிக்கும், சரவணன் சார் அவர்களுக்கும், குகனுக் கும் எங்கள் உளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த மாதிரி ஒரு படத்தில் வருகிற லாபத்தை பெரிய சம்பளம் வாங்கும் நடிகர்களும், லாபம் ஈட்டும் தயாரிப் பாளர்களும், இயக்குநர்களும் தங் களோடு பணியாற்றும் கலைஞர்களுக்கு ஒரு கணிசமான தொகையைக் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் கலைஞர் களும், தொழிலாளர்களும், அவர் கள் குடும்பங்களும் பயன்பெறுவார் கள். உங்களை மனமார வாழ்த்து வார்கள்.

என் யூனிட்டின் கவலை தீர்ந்தது. ஆனால், என் வாழ்க்கையில் ஏற்பட்ட கவலை மனதை விட்டு போகவில்லை. மனைவிக்கு உதவி செய்ய கணவன் தேவைப்பட்டபோது நான் மனைவிக்கு உதவவில்லை. இன்றைக்கு கண வனுக்கு மனைவி தேவைப்படும்போது என்னுடன் என் மனைவி இல்லை. இதுதான் என் வாழ்க்கையில் ஏற்பட்ட நெருடல்.

குடிக்கு, ரேஸுக்கு அடிமை என்று சொல்வோமே அதே மாதிரி வேலை.. வேலை என்று வேலைக்கு அடிமை ஆகிவிட்டேன். குடும்பத்தைக் கவனிக்க வில்லை. இந்த வேதனையை எல்லோ ரிடமும் கூறி, ‘‘மனைவி, குழந்தைகளுக்கு என்று நேரம் ஒதுக்குங்கள்!’’ என்று வேண் டிக் கொள்கிறேன். நேரம் கிடைக்கும் போது வெளியே கூட்டிச் செல்லுங்கள். வசதி இருக்கும்போது வெளியூர் களுக்குக் கூட்டிச் செல்லுங்கள். அப்படி முடியவில்லையானால், தினமும் ஒரு வேளையாவது எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து ரசித்து, ருசித்து சாப்பிடுங்கள். அந்த நேரத்திலாவது குடும்பத்தின் நல்லது, கெட்டது எல்லாவற்றையும் பேசிக் கொள்ளுங்கள்.

இப்படி நான் சொன்னதைக் கேட்டு பலரும் பின்பற்றி வருகிறார்கள். ‘‘நீங்க சொன்ன பிறகு என் கணவர் தினமும் எங்களுக்காக நேரம் செலவிடுகிறார்!’’ என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார்கள். அதைக் கேட்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இதைப் படிப்பவர்களும் பின்பற்றலாம். பின் பற்ற வேண்டும்.

spm1_3143776a.jpg

என் மனைவியின் பிரிவுக்குப் பின்னால் எனக்குள் ஒருவித மன இறுக்கம் இருக்கவே செய்தது. ‘என்னால் தொடர்ந்து வேலை செய்ய முடியுமா?’ என்ற மனநிலைக்கு வந்தேன். ஒரு நாள் சரவணன் சார் அவர்களை சந்தித்து, ‘‘இனிமேல் தொடர்ந்து என்னால் பணியாற்ற முடியுமா என்று குழப்பமாக இருக்கிறது. என் சொந்த ஊரான காரைக்குடிக்கே போய்விடுகிறேன்!’’ என்று சொன்னேன்.

அதற்கு அவர், ‘‘நீங்கள் ஏதோ ஓர் உணர்வில் இப்படி சொல்கிறீர்கள். தினமும் 18-ல் இருந்து 20 மணி நேரம் தொடர்ச்சியாக 20 ஆண்டு காலம் உழைத்திருக்கிறீர்கள். அப்படி இருந்தவர் எப்படி காரைக்குடியில் போய் தனிமையாக இருக்க முடியும்? பைத்தியம்தான் பிடிக்கும். ஒரு சேஞ்சுக்கு வேண்டுமென்றால் 10 நாட்கள் ஊருக்குப் போய்ட்டு வாங்க. வந்த பிறகு தினமும் ஸ்டுடியோ வந்துடுங்க. உங்களுக்கு இங்கே ஒரு அறை கொடுக்கிறேன். அடுத்தடுத்து நாம் செய்ய வேண்டிய வேலைகளைப் பார்ப்போம்.

நீங்க என் கூடவே இருக்கணும். உங்களை இழக்க நான் தயாராக இல்லை. நான் இறக்கும் வரைக்குமோ, நீங்கள் இறக்கும் வரைக்குமோ தினமும் ஒரு முறையாவது நாம் சந்திக்க வேண்டும்!’’ என்றார். இருவர் கண்களிலும் கண்ணீர். இதில் சகோதர பாசம் இல்லை. அதற்கும் மேலே!

அதே மாதிரி ஏவி.எம் ஸ்டுடியோவில் எல்லா வசதிகளுடன் ஒரு அறையை எனக்கு ஒதுக்கிக் கொடுத்தார்.

‘‘எஸ்பி.முத்துராமன் எங்கே?’’ என்பவர்களுக்கு… என் முகவரி ‘ஏவி.எம் ஸ்டுடியோ. கேர் ஆஃப் ஏவி.எம்.சரவணன் சார்’ என்று பெருமை யுடன் சொல்லிக்கொண்டு இயங்கி வருகிறேன்.

இப்படியே நாட்கள் ஓடிக்கொண்டே இருந்தன. என் பிள்ளைகள் மட்டும் நம் அப்பா இன்னும் இயல்பான நிலைக்கு வரவில்லை என்பதை உணர்ந்தார்கள். எல்லோரும் பேசி என்னை சில நாட்கள் சுற்றுலா அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். கோயம்புத்தூர், பொள் ளாச்சி, டாப் சிலிப் என்று பல இடங்களுக் குச் சென்றோம். அப்படிச் சென்றபோது ஆழியார் அணைக்கு சென்றோம். அந்த இடத்துக்குச் சென்றதும் என் வாழ்க்கையில் ஒரு மாற்றம். அப்படி என்ன மாற்றம் நடந்தது?

- இன்னும் படம் பார்ப்போம்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-98-எஸ்பிமுத்துராமன்-எங்கே/article9584801.ece

Share this post


Link to post
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 99: ‘ஏவி.எம்’ நிறுவனம் படங்களை எடுக்காதது ஏன்?

எஸ்பி.முத்துராமன்

 

 
அருணா, அபர்ணா ஆகியோருடன் எஸ்பி.முத்துராமன்
அருணா, அபர்ணா ஆகியோருடன் எஸ்பி.முத்துராமன்
 
 

ஆழியார் அணைக்குச் சென்றதும் ஒரு மாற்றம் ஏற்பட வழி பிறந் தது. ஆழியாரில் வள்ளலார் நகரில் அறிவுத் திருக்கோயில் என்ற இடம் இருக்கிறது. அதன் நிறுவனர் தலைவர் தவத்திரு வேதாத்திரி மகரிஷி அவர்கள். அழகான பசுமையான ஒரு பள்ளத்தாக்கு. கிட்டத்தட்ட 11 ஏக்கர் நிலம். எங்கு பார்த்தாலும் மலைகளும், மரங்களுமாக இருந்தன. அந்த இடத்தை அறிவுத் திருக்கோயிலுக்கு கொடுத்தவர், பொள்ளாச்சி அருட்செல்வர் என்.மகா லிங்கம் ஐயா அவர்கள்.

அங்கு போய் விசாரித்தோம். மன வளக் கலை மன்றம் என்ற பெயரில் உடற்பயிற்சி, மன வளப் பயிற்சி, தவம், காயகல்பம் போன்றவைகளை கற்றுத் தருகிறார்கள். அதன் கிளைகள் தமிழகத் திலும், உலகின் பல பகுதிகளிலும் இருக் கின்றன என்று கூறினார்கள். சென்னை யில் கே.கே. நகரில் இருப்பதாக கூறினார் கள். நான் கே.கே.நகரில் மரியாதைக் குரிய ஆறுமுகம் ஐயா அவர்களிடம் இந்தப் பயிற்சியை பெற்றேன்.

அதன்பிறகு ஆழியார் சென்று வேதாத் திரி மகரிஷி அவர்களிடமே இறுதிப் பயிற்சி பெற்று ‘அருள்நிதி’ ஆனேன். ‘‘மனதை அடக்கினால் அலையும், மனதை அறிந்தால் அடங்கும்’’ என்பது ‘வேதாத்திரியம்’. குழப்பத்தில் இருந்த என் மனம் அடங்கியது. மகரிஷி மறைந்த பிறகும் உயர்திரு. எஸ்.கே.மயிலானந்தம் அவர்களும் உயர்திரு. சின்னச்சாமி மனோரமா அவர்களும் பல பிரமுகர்களும், பேராசிரியர்களும், நிர்வாகிகளும் மன்றத்தைச் சிறப்பாக நடத்தி வருகிறார்கள்.

ஏவி.எம் எனக்கு ‘தாய்வீடு'. எடிட்டிங் கில் வேலை பழகுபவனாக சேர்ந்து உதவி எடிட்டர், எடிட்டர், உதவி இயக்கு நர், துணை இயக்குநர் என்று படிப்படி யாக வளர்க்கப்பட்டேன். ஏவி.எம் பிள்ளைகள் ஸ்டுடியோவை பிரித்துக் கொண்டாலும் ஏவி.எம் லோகோவை செட்டியாரின் உயிராக காத்து வரு கிறார்கள். சரவணன் சாரும், குகனும், ரஜினிகாந்த் நடித்து ஷங்கர் இயக்கிய ‘சிவாஜி’ போன்ற பிரம்மாண்டமான படங்களைத் தயாரித்தார்கள்.

குகன் நித்யா சிறப்பான தம்பதிகள். நித்யா குகன் அவர்கள் ஏவி.மெய்யப்பன் மெட்ரிகுலேஷன் பள்ளியை சீரும் சிறப்புமாக நடத்தி வருகிறார்கள். அரசுத் தேர்வுகளில் இப்பள்ளி தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெறுகிறது என்பது இவர்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. குகன் நித்யாவின் மகள்கள் இரட்டையர். அருணா குகனும், அபர்ணா குகனும் ‘இதுவும் கடந்து போகும்’ என்ற டெலிஃபிலிமை தயாரித்தார்கள். இப்போது டியாரா ஹேமோஃபிலியா அன்ட் கேன்சர் பவுண்டேஷன் (Tiara Haemophilia & cancer foundation) என்ற டிரஸ்ட்டை ஆரம்பித்து, ஏழை குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார்கள். அந்த டிரெஸ்டிகளில் ஒருவனாக நான் இருக்கிறேன். ஏவி.எம்மின் நான்காவது தலைமுறையோடு நான் வேலை செய்கிறேன் என்பதில் எனக்குப் பெருமை.

spm1_3146140a.jpg

ஏவி.எம்மில் நான் இணைந்து 60 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. மணிவிழா கொண்டாடிவிட்டேன்.

நான் ஏவி.எம் நகரில் வாழும் நிலம் ஏவி.எம் தந்தது. நான் வீடு கட்ட, வாழ்க்கையை நடத்த, பிள்ளைகள் படிக்க, அவர்களுக்கு திருமணம் செய்ய, கார் வாங்க ஆகமொத்தம் நாங்கள் நலமாக, வளமாக வாழ ஏவி.எம் தந்த செல்வமே காரணம்.

என் காரில் பொருத்தப்பட்டுள்ள டிவிடியை கொடுத்ததே குகன் அவர்கள்தான். நான் எடிட்டிங்கில் வேலை செய்தேன் என்பதற்காக புதிய எடிட்டிங் ரூமுக்கு ‘எஸ்பி.எம் எடிட்டிங் ஷூட்’ என்று பெயர் வைத்தார்கள். பிரம்மாண்டமாக தயாரித்த ‘சிவாஜி’ படத்தில் ‘துணைத் தயாரிப்பு எஸ்பி.முத்துராமன்’ என்று டைட்டில் போட்டு என்னைக் கவுரவித் தார்கள்.

எனக்கும், என் குடும்பத் தாருக்கும் இதயங்கள் ‘லப் டப்.. லப் டப்’ என்று அடிக்கவில்லை.‘ஏவி.எம்.. ஏவி.எம்’ என்று நன்றியோடு கூறு கின்றன. அப்பச்சி ஏவி.எம் அவர் களையும், அம்மா ராஜேஸ்வரி அம்மை யாரையும் வாழையடி வாழையாக வந்துகொண்டிருக்கும் அவர்கள் வாரிசு களையும் இருகரம் கூப்பி வணங்கி எங்கள் நன்றியைக் காணிக்கை யாக்குகிறோம்.

அப்பச்சி அவர்கள் ஒருமுறை, ‘எனக்கு அசையா சொத்து அசையும் சொத்து என நிறைய சொத்துகள் இருக்கின்றன. ஆனால். இதுக்கெல்லாம் மேலே எனக்கு கிடைத்த பெரிய சொத்து என்னிடம் பணியாற்றும் உண்மையான பணியார் கள்தான்’ என்றார்கள். அப்படிப்பட்ட சிறந்த பணியாளர்களோடு நான் பணி யாற்றியிருக்கிறேன்.

முக்கியமாக எம்.ஜி.ஆர், ஆர்.ஆர்.எஸ், லேனா, எஸ்.பி.அர்ச்சுனன், ‘லேப்’ சேத்திசிங், எடிட்டிங் சூர்யா, இயக்குநர் கே.ஷங்கர். எடிட்டர்கள் கே.நாராயணன், ஆர்.ஜி. கோப், ஆர்.விட்டல், பாஸ்கர், சங்குன்னி, புரொடக்‌ஷன் மொய்தின், எம்.எஸ். மணி, அலுவலகத்தில் எம்.டி.எஸ், கண்ணன், விஸ்வநாதன், வீரப்பன், சுவாமிநாதன், சண்முகம், ஐஸ்வர்யா, எடிட்டர் சேகர், தாமஸ், முருகன், ரம்யா இப்படி பல ஊழியர்கள் எனக்கு எல்லா வகையிலும் உதவியாக இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு என் பாசம் நிறைந்த வணக்கங்கள்.

ஏவி.எம் ஸ்டுடியோவை 71 ஆண்டு களாக சிறப்போடு நடத்துகிறார்கள். பணப் பெட்டியோடு வந்தால், படப் பெட்டியோடு போகலாம். அவ்வளவு வசதிகளும் இங்கே இருக்கின்றன. ஏவி.எம் புரொடக்‌ஷன்ஸ் இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிகளில் சுமார் 175 படங்களை எடுத்திருக்கிறார்கள். சிவாஜி, கமல், வைஜெயந்தி மாலா, வி.கே.ராமசாமி போன்ற சிறந்த நடிகர்களை திரைக்கு அறிமுகப்படுத்தினார்கள். எம்.வி.ராமன், பா.நீலகண்டன், கே.சங்கர், ஏ.சி.திருலோகசந்தர் போன்ற புகழ் பெற்ற இயக்குநர்களை உலகத் துக்கு தந்ததும் ஏவி.எம்தான். என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள். பல கலை ஞர்களுக்கும் ஏவி.எம்தான் பல்கலைக் கழகம்.

spm11_3146139a.jpg

மாண்புமிகு அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், ஜெயலலிதா ஆகிய ஐந்து முதலமைச்சர்க்ள் பணி யாற்றிய இடம் ஏவி.எம். பல தங்கப்பதக் கங்களையும், மாநில, தேசிய விருது களையும் வாங்கிக் குவித்த கலைக்கூடம். உலக திரையுலக சரித்திரத்தில் ஏவி.எம்முக்கு என்று சிறப்பான இடம் உண்டு.

அப்படிப்பட்ட ஏவி.எம் நிறுவனத்தில் இப்போது படங்கள் எடுப்பதில்லை. அதற்கு காரணம் அளவுக்கு மிஞ்சிய செலவுகள். லட்சங்கள் இல்லை. பலப் பல கோடிகளில் படத் தயாரிப்பு. படத்துக்கு என்ன செலவாகும்? எவ்வளவு வியாபாரம் ஆகும்? என்ற திட்டமிடல் இல்லை.

வரவுக்கு மேல் மிக மிக அதிகமாக செலவு செய்துவிட்டு, நட்டம் நட்டம் என்றால் எப்படி? படத்தைக்கூட தயாரித்து விடலாம். வெளியிட முடியவில்லை. எல்லாப் பாரங்களையும் தயாரிப்பாளரே தலையில் சுமக்க வேண்டியிருக்கிறது. அப்போது பாரத்தை தயாரிப்பாளர் விநியோகஸ்தர் தியேட்டர் உரிமை யாளர் என்று பங்குப் போட்டுக்கொள் வார்கள். இன்று 100-க்கு 10 சதவீத படங்கள்தான் லாபக்கோட்டை தொடு கின்றன. 90 சதவீதப் படங்கள் பெரிய தோல்வியை தழுவுகின்றன.

இந்த நிலையில் யாருக்கு படம் எடுக்க தைரியம் வரும்? இதற்கு எடுத்துக்காட்டுதான் அனுபவம் மிகுந்த ‘ஏவி.எம்’ நிறுவனம் படங்களை எடுக் காதது. ஆக மொத்தத்தில் சினிமா தயா ரிப்பு பாதுகாப்பற்ற சூழலுக்குப் போய் விட்டது. அதனை காப்பாற்ற அனைவரும் ஒன்றுகூடி உரிய நேரத்தில் உரிய முறையில் முடிவெடுக்க வேண்டும்.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வரு கிறது. பலக் குழுக்கள் போட்டியிடு கின்றன. ஒவ்வொரு குழுவிலும் திறமை சாலிகள் இருக்கிறார்கள். திறமைசாலி கள் சண்டைப் போட்டுக்கொள் ளாமல் இணைந்தால்தானே நல்ல செயல்களைச் செய்ய முடியும். ஓட்டுப்போடுகிறவர்கள் திறமையான திரையுலகுக்காக செயல்படுபவர் களைத் தேர்ந்தெடுங்கள்.

‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்’ - என்ற குறளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

தேர்தலில் வெற்றி பெறுகிறவர்கள், தேர்தல் முடிந்ததும் போட்டிகளை மறந்து விட்டு, சினிமா தேரும் வகையில் செயல் படுங்கள். செயல்படவில்லை யானால் மீதமுள்ள தயாரிப்பாளர்களும் துண் டைக் காணோம், துணியைக் காணோம் என இந்த தொழிலை விட்டு ஓடிவிடு வார்கள். தயாரிப்பாளர் இல்லாமல் படமா? வேர்கள் இல்லாமல் மரமா?

- இன்னும் படம் பார்ப்போம்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-99-ஏவிஎம்-நிறுவனம்-படங்களை-எடுக்காதது-ஏன்/article9595660.ece

Share this post


Link to post
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 100: நல்லதொரு குடும்பம்!

எஸ்பி.முத்துராமன்

 
2_3148596f.jpg
 
 
 

திரைப்பட தயாரிப்பாளர்கள் இல்லா மல் படமா? வேர்கள் இல்லாமல் மரமா என்று கடந்த வாரம் கேள்வி யோடு முடித்திருந்தேன். தயாரிப்பாளர் கள் சங்கத் தேர்தல் சூடு பறக்கிறது. அடுத்த வாரத்தில் முடிவு தெரியும். புதி தாக தேர்வாகும் வெற்றியாளர்கள் திரைப் படத்துறை ஆரோக்கியமாக இருக்க, என்னென்ன தேவையோ அதை நிறை வேற்ற வேண்டும் என்று எல்லோரது சார்பிலும் கேட்டுக்கொள்கிறேன்.

இத்தனை வாரங்களாக பல விஷயங் களை உங்களோடு பகிர்ந்திருக்கிறேன். இந்த வாரம் 100-வது வாரம். முழுக்க என் குடும்பத்தை பற்றி எழுதப் போகி றேன். குடும்பம் என்ற வேர் சரியாக இருந்தால்தான் அந்த மரம், அதன் கிளைகள், விழுதுகள் எல்லாம் சரியாக இருக்கும். அதற்கு எங்கள் குடும்பமே ஒரு எடுத்துக்காட்டு!

என் பெற்றோர் இராம.சுப்பையா விசாலாட்சி தம்பதியினர் தந்தை பெரியார் உள்ளிட்ட திராவிட இயக்கத் தினரோடு இணைந்து பொதுச் சேவை யில் ஈடுபட்டவர்கள். அவர்களது அந்த குணங்களையும், செயல்களையும் பார்த்து வளர்ந்ததால் எங்களுக்கும் அந்த நல்ல பழக்க வழக்கங்கள் வந்தன. பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரி யர் அன்பழகன், எம்.ஜி.ஆர், வீரமணி போன்ற தலைவர்களோடு நெருங்கி பழகும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. இந்த வாய்ப்பு அமைந்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறோம்.

எங்கள் குடும்பத்தில் என்னுடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். சகோதரர்கள் நான்கு. சகோதரிகள் இருவர். அவர்களில் என் சகோதரி கனகலட்சுமி, அவரது இராம சிதம்பரம் காரைக்குடியில் மெட்ராஸ் ஸ்டோர் என்ற பெயரில் கடை வைத்திருந்தார்கள். அதோடு பல மாவட் டங்களுக்கு ‘ப்ரில் இங்க்’ விநியோகஸ்தர்.

ஒரு சைக்கிளை வைத்துக்கொண்டு அதில் சுற்றியே தன் நான்கு ஆண் குழந்தைகளையும், மூன்று பெண் குழந்தைகளையும் படிக்க வைத்து ஆளாக்கினார். இன்றைக்கு பிள்ளை கள் எல்லோரும் காரில் செல்லும் அளவுக்கு வாழ்கிறார்கள். பெற்றோர் கள் கஷ்டப்பட்டால் எத்தனை குழந்தை களையும் காப்பாற்ற முடியும் என்பதற்கு இந்தக் குடும்பம் சாட்சி. இந்தக் குடும் பத்துக்கு ‘கடுமையான உழைப்பாளிகள்’ என்று பெயர்!

அடுத்து, என் தம்பி எஸ்பி.செல்வமணி. பொதுப்பணித்துறையில் சிறப்பாக பணியாற்றியவர். பதவி உயர்வு வந்தபோது. ‘இந்தப் பதவி உயர்வு தேவையில்லாத சில தவறுகளில் என்னைக் கொண்டு போய் விட்டுவிடும். நான் இப்படியே இருந்துவிடுகிறேன்!’ என்று அதை தவிர்த்து வாழ்ந்தவர். அன்றன்றைக்கு நடக்கும் செலவை எழுதி வைக்கும் பழக்கம் அவருக்கு உண்டு. அவரது மனைவி சரோஜா நல்லாசிரியர் விருது பெற்ற தமிழ் ஆசிரியை. இப்படிப்பட்ட தம்பதிகளுக்கு மூன்று மகன்கள். ஒரு மகள். அவர்களை நன்கு படிக்க வைத்ததால் இன்றைக்கு வாழ்க்கையில் உயரத்தில் இருக்கிறார்கள். சமீபத்தில் எஸ்பி.செல்வமணி இறந்துவிட்டார். இந்த இழப்பு அவரது மனைவி சரோஜாவுக்கு பேரிழப்பாகும்.

என்னுடைய இன்னொரு சகோதரி இந்திரா. இவர் கு.மா.வெங்கடாசலம் அவர்களுடைய மனைவி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இந்திரா இளம் வயதிலேயே இறந்துவிட்டார்.

ஏவி.எம் நிறுவனத்தின் கிளைக் கம்பெனியான ஆரோ (Orwo) பிலிம்ஸில் எல்.வெங்கடாசலம் அவர்களிடம் இரு பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர் என் சகோதரர் எஸ்பி.சுவாமிநாதன். எந்த வேலை கொடுத்தாலும், அதை அமெரிக்கா சென்று முடிக்க வேண்டும் என்றாலும் வெற்றியோடு திரும்பி வரும் திறமை கொண்டவர். அவர் மனைவி நாகரத் தினம். கணவரின் பக்கபலம். அவர் களுக்கு மூன்று பெண்கள். ஒரு ஆண். எல்லோரும் நல்ல நிலையில் இருக் கிறார்கள்.

1_3148597a.jpg

என் இளைய தம்பி பற்றி அறிமுகம் தேவையில்லை. அவர்தான் பேராசிரியர் சுப.வீரபாண்டியன். உலகம் முழுக்க பயணித்து உரையாற்றி சிறந்த பேச் சாளராக விளங்குகிறார். இலக்கிய விழாக்களுக்குச் சென்றால் சுப.வீ அண் ணன் எஸ்பி.முத்துராமன் என்றும், திரைப் பட விழாக்களுக்குச் சென்றால் எஸ்பி.எம் தம்பி சுப.வீ என்றும் பார்க்கப்படுகிறோம்.

அவர் கருப்புச் சட்டை. நான் வெள்ளைச் சட்டை. கண் விழிகளில் இருக்கும் கருப்பு-வெள்ளை போல் இணைந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அவர் மனைவி வசந்தி முழுக்க முழுக்க ஒரு குடும்பத்தலைவி. சுப.வீ பேச்சுக்கும், அவருக்கும் சம்பந்தம் இல்லை. ‘சிந்து பைரவி’ படத்தில் சுலக் ஷனாவின் கதாபாத்திரம்தான் வசந்தி. இவர்களுக்கு இரண்டு பையன்கள். ஒரு பெண். மூவரும் வெளிநாட்டில் சிறப்போடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். சுப.வீக்கும், வசந்திக்கும் குழந்தைகள் இருந்தும் தனிமை.

எல்லோரையும் பற்றி சொன்னேன். என் குடும்பம் பற்றியும் சொல்ல வேண்டும் இல்லையா? என் மனைவி கமலா. சீர்திருத்தவாதியான கானாடுகாத்தான் வை.சு.சண்முகம் அவர்களின் பேத்தி யும், சோலைஅழகம்மை அவர்களின் மக ளும் ஆவார். காரைக்குடியில் நடந்த ‘கம்பன் கழகம்’ விழாவில்தான் கம லாவை பெண் பார்த்தேன். அவரை சுயமரியாதை திருமணம் செய்து கொண்டேன்.

வை.சு.சண்முகம் செட்டியார் வீட்டில் பிள்ளைகள் காலையில் திருக்குறள், திருவாசகமும் கூறினால்தான் சாப்பாடே கிடைக்கும். இந்த மாதிரி வளர்ந்தவர், கமலா. அதனால் எல்லாவிதமான நற்குணங்களும் அவரிடம் இருந்தன. என் கோபத்தை குறைத்து என்னை முழு மனிதனாக உருவாக்கியவர், கமலாதான்.

வீட்டில் பொங்கல் பண்டிகை மட்டும் தான் கொண்டாடுவோம். அப்போதும் எல்லோருக்கும் புத்தாடைகள் எடுத்து விட்டு கடைசியாக மீதமுள்ள பணத் துக்கு ஏற்றாற்போல் ஒரு காட்டன் புடவையை எடுத்துக்கொள்வார். அதில் திருப்தி பெறுவார். கமலா வரவுக்கு ஏற்ற செலவு செய்ததால்தான் எங்கள் வாழ்க்கை நன்றாக இருந்தது. எல்லா இல்லத்தரசிகளும் வரவு பத்தணா, செலவு எட்டணா, சேமிப்பு ரெண்டணா என்று வாழ்ந்தால் வாழ்க்கை நிச்சயம் சிறப்பாக இருக்கும்.

ஒரு நாள்கூட தான் ஒரு இயக்குநர் மனைவி என்று காட்டிக்கொண்டதே இல்லை. என் பிள்ளைகளை சினிமாத் தனம் இல்லாதவர்களாக வளர்த்தார். “சினிமா ஒரு நிரந்தர தொழிலாக இல்லை. எப்போது முன்னுக்கு வருவோம் என்பதை திட்டமிட்டு கூறமுடியாது. இரவு, பகலாக ஸ்டுடியோவிலேயே இருக்க வேண்டும். குடும்பத்தை கவனிக்க முடி யாது. அதனால் நீங்கள் சினிமா தொழி லுக்கு போக வேண்டாம். சினிமாவுக்கு அப்பா ஒருவரே போதும்!’’ என்று கூறி விட்டார். குழந்தைகளை ஷூட்டிங் பார்க் கக்கூட அனுமதிக்கவில்லை.

எனக்குப் பிறகு என் குடும்பத்தில் ஏன் யாரும் சினிமாவுக்கு வர வில்லை என்பதற்கு கமலாதான் மூலக் காரணம். மற்றவர்களும் இதை புரிந்துகொண்டு, சினிமா தொழிலுக்கு வர வேண்டும் என்பது என் வேண்டு கோள்.

நாங்கள் வளர்த்த பிள்ளைகள் எப்படி இருப்பார்கள். அடுத்த வாரம் சொல்கிறேன்.

- இன்னும் படம் பார்ப்போம்

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-100-நல்லதொரு-குடும்பம்/article9605590.ece

Share this post


Link to post
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 101: வாழ்ந்து காட்டுங்கள்!

எஸ்பி.முத்துராமன்

 

 
  • எஸ்பி.முத்துராமன் குடும்பத்தினர்.
    எஸ்பி.முத்துராமன் குடும்பத்தினர்.
  • spm1_3151086g.jpg
     
 

நானும் என் மனைவி கமலாவும் பெற்ற பிள்ளைகள் பெற்றோரின் புகழை ‘உயர்த்தும்’ பிள்ளைகள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் முன்னிலையில் இருக்கிறார்கள். என் மூத்த மகள் மீனாள். என் மீது அன்பு செலுத்தி வளர்த்த என் ஆயாவின் பெயர் மீனாட்சியை அவருக்கு வைத்தோம். மீனா, என் மனைவி போலவே பொறுமை யானவர். கடுமையான உழைப்பாளி. திட்டமிட்டு குடும்பத்தை நடத்துபவர். அவரது கணவர் நாச்சியப்பன், இந்தியன் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நல்ல கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர். சமூக ஊடகங்களில் தொடர்ந்து பங்குபெற்று வருகிறார்.

இவர்களுக்கு மாதவி, கனகா என்ற 2 மகள்கள். இவர்களில் மாதவி, வள்ளி யப்பனை திருமணம் செய்துகொண்டு சிங்கப்பூரில் வாழ்கிறார். இருவரும் வேலைக்கு போகிறார்கள். இவர்கள் கருத்தொருமித்த தம்பதிகள். இவர் களுக்கு ரதி, கவின் ஆகிய இரண்டு குழந் தைகள். இருவரையும் தமிழ்ப் பள்ளியில் படிக்க வைக்கிறார்கள். ரதி நாட்டியத் தில் புகழ்பெற்று விளங்குகிறார். கவின் நடிப்பில் புகழ்பெற்று விளங்குகிறார். தாத்தாவின் ரத்தம் கொள்ளுப் பேரனுக்கும் பேத்திக்கும் வந்திருக்கிறது.

நாச்சியப்பன் - மீனாள் தம்பதியின் இன்னொரு மகள் கனகா. எப்போதும் துறுதுறு என்று இருக்கிற பெண். பேச்சும் அப்படியே. அவரை தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் படிக்க வைத்தோம். படிப்போடு சேர்ந்து காதலும் வந்துவிட்டது. அங்கே தங்க வேலுவை காதலித்து பெற்றோர் அனுமதி யோடு ‘ஜாதி மறுப்பு திருமணம்’ செய்து கொண்டார். இரு ஜாதிகளும் கரைந்துவிட்டன. தங்கவேலு சவுத் இந்தியன் வங்கியில் நிர்வாகியாக பணியாற்றுகிறார். கனகா, வெங்கடேஸ்வரா இன்ஜினீ யரிங் கல்லூரியில் உதவி பேராசிரியர். இவர்களுக்கு கவிமொழி, கயல்மொழி என்று இரு மகள்கள். ஒன்று ‘அடம்’. ஒன்று ‘ஆழம்’.

என் மகன் சுப்பையாவுக்கு என் தந்தை யின் பெயரை வைத்தோம். எம்.காம் படித்துவிட்டு, ‘வேலைக்கு போக மாட் டேன். சொந்த தொழில்தான் செய்வேன்!’ என்று கூறினார். திருச்சியில் வி.கண்ணப் பன் (வி.கே.என்) அவர்களிடம் தொழில் பயிற்சி பெற்றுக்கொண்டு சென்னை யில் ஆணி, கம்பி தயாரிக்கும் தொழிற் சாலையை நிறுவி நல்ல முறையில் நடத்தி வருகிறார்.

இளைஞனாக இருந்தபோது என் காரை எடுத்துக்கொண்டுபோய் ஓட்டப் பழகும்போது விபத்துக்குள்ளாகி கார் பழுதுபட்டது. அவரைக் கூப்பிட்டு, ‘என் அனுமதியில்லாமல் காரை எடுத்து ஓட்டக்கூடாது’ என்று கண்டித்தேன். அவர் என் மனைவி கமலாவிடம் போய், ‘இனிமேல் அப்பா காரை எடுக்க மாட்டேன். நானே சம்பாதித்து கார் வாங்கி ஓட்டுவேன்!’ என்று சபதம் செய்தார். அதன்படியே சம்பாதித்து கார் வாங்கி இப்போது ஓட்டிக்கொண்டிருக்கிறார். வாழ்க்கையில் என் மகனின் ‘வைராக் கியம்’ எல்லோருக்கும் வேண்டும்.

சுப்பையாவின் மனைவி வசந்தி, எல்.ஐ.சி. முகவராக பணியாற்றுகிறார். பொறுப்பான குடும்பத் தலைவி. அவர் உண்டு, அவர் வேலை உண்டு என்று இருப்பவர். அவர் கடுமையானவர் அல்ல. கடமை ஆற்றுபவர். அவர்களுக்கு ஒரு பெண். அவருக்கு கமலா என்று என் மனைவியின் பெயரை வைத்தோம். அவர் படித்து பட்டம் பெற்று பணியாற்றி வருகிறார். விரைவில் அவரின் திருமண செய்தியை சொல்வோம். என்னோடு என் மகன் குடும்பம் இருக்கிறது என்று சொல்வதைவிட என் மகன் குடும்பத்தோடு நான் இருக்கிறேன் என்று சொல்வதே உண்மை.

எங்கள் சின்ன மகள் விசாலாட்சி, ஆரம்பத்திலிருந்தே ‘நான் டாக்டருக் குத்தான் படிப்பேன்’ என்று பிடிவாதமாக இருந்து டாக்டரானார். அவருடைய கணவர் டாக்டர் என்.எஸ்.முத்தையா, என் குழுவில் தயாரிப்பு நிர்வாகியான கே.எஸ்.நாகப்பன் அவர்களின் தம்பி.

டாக்டர் முத்தையாவும், டாக்டர் விசா லாட்சியும் சேர்ந்து நடேசன் நகரில் ஒரு கிளினிக் வைத்திருக்கிறார்கள். அந்த கிளினிக்கில் கூடும் கூட்டமே அவர்கள் நல்ல டாக்டர்கள் என்பதைக் கூறும். நோயாளிகளோடு டாக்டராக பழகாமல் குடும்பத்தில் ஒருவராக பழகுவார்கள். அறக்கட்டளைகளை ஏற்படுத்தி பல வித மான உதவிகளை செய்து வருகிறார்கள். நான் உடல்நலத்தோடு இருப்பதற்கு இவர்களின் மருத்துவத்தை நான் முழுமையாகப் பின்பற்றுகிறேன்.

இவர்களுக்கு அழகுசுந்தரம் என்ற மகன். படித்து பட்டம் பெற்று பெரிய ஐ.டி கம்பெனியில் பதவி வகிக்கிறார். சென்னைக்கும், அமெரிக்காவுக்கும் பறந்துகொண்டிருக்கிறார். அவர் மனைவி பிரியா. அவரும் கம்ப்யூட்டர் பொறியாளர். வேலைக்கு போய்க் கொண்டிருந்தார். மகன் ருத்ரா பிறந்த தும் வேலையை விட்டுவிட்டு ருத்ராவை கவனிப்பதையே வேலையாக ஆக்கிக் கொண்டார்.

கொள்ளுப் பேரன் ருத்ரா எனக்கு வைத்திருக்கும் பெயர் ‘சாக்கையா’. நான் எப்போது அவனை பார்க்கச் சென் றாலும் சாக்லேட் வாங்கிக்கொண்டு போவேன். அதற்காக எனக்கு ‘சாக்கையா’ என்று பெயர் வைத்துவிட்டான். அவ னிடம், ‘உன் மடியில் படுத்து தூங் கட்டுமா?’ என்று அவன் மடியில் தலைசாய்த்து படுத்துக்கொள்வேன். அவன் எனக்கு தாலாட்டு பாடி என்னை தூங்க வைப்பான். எத்தனை கோடிகள் கொடுத்தாலும் இந்த சுகத்துக்கு ஈடு இணையே இல்லை.

டாக்டர் முத்தையா விசாலாட்சி மகள் முத்துலட்சுமி. பெற்றோர் வழியில் எம்.பி.பி.எஸ் படித்து டாக்டராகியுள் ளார். இப்போது எம்.டி படித்துக் கொண் டிருக்கிறார். வருங்காலத்தில் மருத்துவ துறையில் தன் பெற்றோரை மிஞ்சுவார். இவருடைய கணவர் முத்துக்குமார். ஐ.டி துறையில் பணியாற்றி வருகிறார். நல்லவர், வல்லவர்.

என் மனைவி கமலா இல்லாத குறையைப் போக்கும்வகையில் என் பிள்ளைகள் துணையாக இருந்து என்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறார்கள். நான் ஒரு குடும்பத் தலைவனாக வாழ்கிறேன்.

என் தம்பி சுப.வீரபாண்டியன் ஒரு முறை சொன்னார். ‘எங்கள் அண்ணன் கோடு போட்டால் நாங்கள் தாண்ட மாட்டோம். நாங்கள் தாண்டுவோம் என்று தெரிந்தால் எங்கள் அண்ணன் கோடு போட மாட்டார்’. அந்த மன ஒற்றுமைதான் எங்களை ஒற்றுமையாக வாழ வைக்கிறது.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒவ்வொருவர் வீட்டில் ‘குடும்ப ஒன்று கூடல்’ என்ற பெயரில் கூடி மகிழ்கிறோம். அதேபோல் ஆண்டுக்கொரு முறை சுற்றுலா செல்கிறோம். இதனால் குடும்ப உறவுகளும், பாசமும் வளர்கின்றன. ‘குடும்பம் ஒன்று கூடலை’ எல்லா குடும்பத்திலும் நடத்தி ‘கூட்டுக் குடும்ப வாழ்க்கையை’ ருசிக்கலாம்.

spm11_3151087a.jpg

‘குடும்ப ஒன்றுகூடல்’ நிகழ்வில்... | நாச்சியப்பன் - மீனாள் குடும்பத்தினர்

சுமந்து வரும் நன்றியினை சொல்லிவிட முடியுமா?

நான் வாழ்க்கையில் முன்னேறு வதற்குப் காரணமாக இருந்தவர்கள் என்று ஒரு பட்டியல் போட்டால் அதில் பல ஆயிரம் பேரை சொல்ல வேண்டியிருக்கும். அவர்கள் அத்தனை பேருக்கும் நன்றி... நன்றி!

குறிப்பாக, என் பெற்றோர் ராம.சுப்பையா, விசாலாட்சி, குடும்பத்தினர், தே.பிரித்தோ மேல்நிலைப் பள்ளி, மச் சாடோ சுவாமி மற்றும் ஆசிரியர்கள், ‘தென்றல்’ இதழ், கவியரசர் கண்ணதாசன் அவர்கள், ஏவி.எம்.பல்கலைக்கழகத் தின் வேந்தர் ஏவி.மெய்யப்பன் அவர் கள், துணைவேந்தர்கள் முருகன், குமரன், சரவணன், பாலசுப்ரமணியன், மாப் பிள்ளை வீரப்பன், மீனா, திரைப்பட இயக் குநர்கள், நிர்வாகிகள், பணியாளர்கள், ஊழியர்கள். என்னை உதவி இயக்கு நராக ‘செட்’டுக்கு அழைத்துச்சென்ற ஏவி.எம்.குமரன் அவர்கள், எனக்கு குருவை அடையாளம் காட்டிய ஏவி.எம்.சரவணன் அவர்கள், என் குரு ஏ.சி.திருலோகசந்தர் அவர்கள், ‘கனிமுத்து பாப்பா’ படத்தின் மூலம் என்னை இயக்குநராக்கிய வி.சி.குகநாதன் அவர்கள்.

என் பக்கபலமான என் குழுவினர், தயாரிப்பாளர்கள், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களோடு மற்ற நடிகர், நடிகைகள், தொழில் நுணுக்க கலை ஞர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகங்களை சார்ந்தவர்கள், குறிப்பாக ரசிகர்கள் அத்தனை பேருக்கும் என் உளம் நிறைந்த நன்றியை, வணக் கத்தை, வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘தி இந்து’ தமிழ் நாளிதழில் 101 வாரங்களாக ‘சினிமா எடுத்துப் பார்’ என்ற தலைப்பில் எழுதி வருகிறேன். இதற்கு துணையாக இருந்த ‘தி இந்து’ நாளிதழ் ஆசிரியர் குழுவினருக்கும், புகைப்படங்களை கொடுத்து உதவிய ஞானம் அவர்களுக்கும், பல வகை யிலும் துணையாக இருந்த ஏவி.எம். கண்ணன், எஸ்.பி.அர்ஜூனன், எடிட்டர் சேகர், பப்ளிசிட்டி சண்முகம், ரம்யா ஆகியோருக்கும், படித்து பாராட்டிய வாசகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

வருகிற ஏப்ரல் 7-ம் தேதி எனக்கு 82 வயது பிறக்கிறது. என் மனைவி கமலா இறந்தபிறகு என் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை. அன்றைக்கு ஆழியார் அறிவுத் திருக்கோயில் சென்று விடுவேன். உடலையும், மனதையும் புதுப்பித்துக்கொண்டு வருவேன். எல்லா விதமான விழாக்களிலும், நிகழ்ச்சிகளி லும் கலந்துகொண்டு உயிர்ப்புடன் இருக்கிறேன்.

ஒவ்வொருவரும் லட்சியத்தோடு வாழுங்கள். சரித்திரத்தில் இடம்பெறுங் கள். லட்சியத்தில் உறுதியாக இருந்து உழைத்தால் வெற்றி நிச்சயம். இது சத்தியம்!

‘சினிமா எடுத்துப் பார்’ என்ற இத் தொடரை நிறைவு செய்கிறேன். ‘வாழ்க் கையை வாழ்ந்து பார்’ என்று வாழ்ந்து காட்டுங்கள்.

வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்!

- நிறைந்தது. |

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-101-வாழ்ந்து-காட்டுங்கள்/article9616605.ece

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

அழகான ஒரு தொடர்..... அருமையாக எழுதி இருக்கின்றார்......நன்றி ஐயா.....!!!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this