Sign in to follow this  
நவீனன்

சினிமா எடுத்துப் பார்

Recommended Posts

சினிமா எடுத்துப் பார் 1 - திட்டமிடல் அறிவு

 

 
 
‘மயங்குகிறாள் ஒரு மாது’ பட வெற்றி விழாவின்போது கண்ணதாசனிடம் விருது பெறும் எஸ்பி. முத்துராமன்.
‘மயங்குகிறாள் ஒரு மாது’ பட வெற்றி விழாவின்போது கண்ணதாசனிடம் விருது பெறும் எஸ்பி. முத்துராமன்.

நான் பார்த்து, ரசித்து, பாராட்டி, விமர்சித்த சினிமாவுக்குப் பின்பக்கம் இருந்த முயற்சி, உழைப்பு, மகிழ்ச்சி இப்படி பலவிதமான அனுபவங்களை… என் மூலம் இந்தத் தொடர் வழியே நீங்களும் பெறப் போகிறீர்கள். வாருங்கள் ‘தொடர்’வோம்…

என் இளமைப் பருவத்திலேயே சினிமாவின் மீது ஒரு விதமான பாசம் படர ஆரம்பித்துவிட்டது. பள்ளியிறுதி வகுப்புத் தேர்வெழுதி முடித்தேன். மேற்கொண்டு என்னை வீட்டினர் பி.ஏ படிக்க வைக்க வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்பட்டார்கள்.

அவர்கள் தங்கள் ஆசையை என்னிடம் சொல்லும்போதெல்லாம் ‘அந்தப் பட்டப் படிப்பெல்லாம் ரெண்டே ரெண்டு எழுத்து தான். இப்போ நான் படிச்சிருக்கிறது எஸ்.எஸ்.எல்.சி. இது நாலு எழுத்து. நான் சினிமா எடுத்து அப்புறமா ஏகப்பட்ட பட்டம் வாங்கிக்கிறேன்… அதுதான் என்னோட ஆசை’ என்று கூறிவிட்டு ஓடிவிடுவேன்.

‘‘டேய் ஒவ்வொருத்தரும் என்ன ஆக ணும்னு ஆசைப்படறீங்கன்னு வகுப் பறையில் வாத்தியார் கேட்கும்போது, சக மாணவர்கள் ஒவ்வொருத்தரும் ‘மருத்துவர், கலெக்டர், இன்ஜினீயர்…’ என்று தங்களின் எதிர்கால ஆசையை சொல்வார்கள். நான் எழுந்து ‘சினிமா எடுக்கப் போகிறேன்…’ என்று உரக்கக் கத்துவேன். வாத்தியாரும் சக மாணவர் களும் என்னை வித்தியாசமாக பார்ப் பார்கள்.

சினிமா உலகத்துக்குள் நுழைய வேண்டும் என்கிற ஆசை விதையை, என் மனசைக் கீறி ஊன்றியது… அந்த நாட்களில் எங்கள் ஊரில் நடைபெற்ற நாடகங்கள்தான். காரைக்குடி பகுதி களில் அப்போது தொடர்ச்சியாக நாடகங் கள் நடந்துகொண்டே இருக்கும். குறிப் பாக, டி.கே.எஸ். சகோதரர்கள் எங்கள் பகுதியில் மூன்று, நான்கு மாதங்கள் தங்கியிருந்து பிரமாதமான நாடகங்களை நடத்துவார்கள். நாடகம் என்றால் சாப்பாடு கூட எனக்குத் தேவைப்படாது.

திசையெங்கும் புராண நாடகங்கள் மட்டுமே கொடிகட்டிப் பறந்த அந்தக் காலகட்டத்தில், டி.கே.எஸ்.சகோதரர்களின் நாடக கம்பெனி சமூக நாடகங்களை நடத்தினார்கள். ‘பில்ஹனன், ‘மனிதன்’ இன்னும் பெயர் நினைவில்லாத பல நாடகங்களை அந்த நாட்களில் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

என்னைப் போன்ற பல இளைஞர் களை அந்த நேரத்தில் சினிமா மீது மோகம் ஏற்பட வைத்த படம் ‘பராசக்தி’. கருணாநிதியின் வசனமும், சிவாஜிகணே சனின் நடிப்பும் வெள்ளித்திரை மீதான என் கனவுக்கு வண்ணமடித்து மேலும் மேலும் சிறகடிக்க வைத்தது.

‘பையனுக்கு மேல்படிப்பு மீது ஆர்வம் இல்லை. சினிமா ஆசையோடு திரிகிறான்…’ என்று என் தந்தை, கவியரசு கண்ணதாசனிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்த அந்த நாள்… இன்றைக்கும் என் மனதில் பச்சை யத்தை இழக்காமல் பசுமையாக நிற்கிறது. ‘என்னடா இவன் சினிமா கினிமா என்று சுத்துகிட்டிருக்கானே’ என்று, அருகில் இருந்த அழகப்பா கல்லூரியில் படிக்கச் சொல்லி சேர்த்து விட்டுவிடுவாரோ என்று பதற்றத்தோடு நான் திரிந்த நேரத்தில், கண்ணதாசனிடம் அழைத்துப் போய் இப்படி ஒரு வார்த்தையை சொன்னால் உள்ளுக்குள் கொஞ்சமா மகிழ்ச்சி இருக்கும்!

என் தந்தையும் கண்ணதாசனும் நண்பர்களாக அறிமுகமாகி நட்புடன் பழகிவந்தாலும், ஒரு காலகட்டத்தில் இன் பம், துன்பம், குடும்பம் என்று எல்லா வற்றையும் பகிர்ந்துகொள்கிற மிக நெருங்கிய உறவினர்களாகவே மாறியவர்கள்.

‘‘இப்போதானே படிப்பை முடிச்சிருக் கான். நான் ‘தென்றல்’னு ஒரு பத்திரிகை ஆரம்பிக்கப் போறேன். அதில் கொஞ்ச நாள் வேலை செய்யட்டும். போகப் போக மத்ததையெல்லாம் பார்த்துக்கலாம்’ என்று கவிஞர் சொன்னபோது, அப்பா எதுவும் மறுத்துப் பேசவில்லை.

வீட்டிலேயே சாப்பாடு போட்டு, தங்க இடமும் கொடுத்து, வேலையும் கொடுத்தார் கண்ணதாசன். சினிமா பற்றிய மத்தாப்பூ கனவுகளை சுமந்த அந்த வயதில் அழகான ஓர் அனுபவம் அது.

1954-ம் ஆண்டுவாக்கில் ‘தென்றல்’ பத்திரிகை வேலைக்காகத்தான் முதன் முதலில் சென்னைக்கு வந்தேன். ‘எல்லா வேலைகளையும் கற்றுக்கொள்..’ என்று கண்ணதாசன் பல பொறுப்புகளை என்னிடம் தந்து ‘தென்றல்’ பத்திரிகை யின் ‘ஆல் இன் ஒன்’ மனிதனாகவே என்னை மாற்றினார். போகும் எல்லா இடங்களிலும் ‘இவன் என்னோட தம்பி. அலுவலகத்தைக் கவனிச்சிக்கிறான்’ என்று அன்பு ததும்பக் கூறுவார்.

இரண்டு ஆண்டுகள் அங்கே வேலை பார்த்தேன். எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்வேன். பொது வாக என்னிடம் ஒரு வேலை கொடுத்து விட்டால், அதை சரியாக இவன் முடித்துவிடுவான் என்கிற நம்பிக்கை கவியரசருக்கு வந்துவிட்டது. அவருக்கு என்னை ரொம்பவும் பிடித்துப்போயிற்று. தமிழும், கவிதையுமாகவே வாழ்ந்த கவியரசரின் ஆலோசனைகளைக் கேட்டு வளர்ந்த பிள்ளை என்பதில் எனக்கு எப்போதும் பெருமை!

இருந்தபோதிலும் எனக்குள் இருந்த சினிமா ஆர்வம் என்னை மற்ற வேலை களைத் தொடர்ந்து செய்யவிடுவதாக இல்லை. ‘சினிமாவுக்குப் போகிறேன்’ என்று ஒருநாள் கவியரசரிடம் சொன்ன போது என்னுடைய சுறுசுறுப்பு, உழைப்பு, என் மீதான பாசம் இவையெல்லாம், என்னை வெளியே அனுப்ப அவருக்கு விருப்பமில்லாமல் ஆக்கியது.

‘ஓர் இரவு’ நாடகம் சினிமாவாக உருமாறியது ஒரே இரவில். ‘கணக்குபிள்ளை வைத்து எழுதும் ஒரு சிறிய மேஜை, பேப்பர், வெத்திலை- பாக்குப் பெட்டி… இது போதும். காலையில் வாங்க…’ என்று சொல்லி ஏவிஎம் ஸ்டுடியோவில் இருந்த ஒரு குடிசை அறையில் அமர்ந்து, ஒரே இரவில் அந்தப் படத்துக்கு திரைக்கதையும், வசனமும் எழுதி முடித்தார் அண்ணா.

இது நடப்பதற்கு முன் ‘ஓர் இரவு’ நாடகத்தைத் திரைப்படமாக எடுக்க ஏவி.மெய்யப்ப செட்டியார், அறிஞர் அண்ணாவைச் சந்திக்கத் திட்ட மிட்டிருந்தார். அது தொடர்பான ஏற்பாடுகள் மற்றும் சந்திப்புகளில் என் தந்தை இராம.சுப்பையா, ஏவி.மெய்யப்ப செட்டியாருடன் நெருங்கி பழகும் வாய்ப்பைப் பெற்றார்.

‘சினிமா எடுக்க ஆசைப்படுறான். கண்ணதாசனிடம் ரெண்டு வருஷம் அவரோட பத்திரிகையில வேலை பார்த் திருக்கான்…’ என்று என்னுடைய அப்பா, மெய்யப்ப செட்டியாரிடம் கூறியபோது, ‘அடடே, பத்திரிகை அனுபவம் எல்லாம் இருக்கா. சினிமாவில் அடிப்படை விஷயமே எடிட்டிங்தான். பத்திரிகையில் எழுதும்போது, வடிவமைக்கும்போது எது தேவையோ, அதை மட்டும் வைத்து மற்ற வரிகளை எல்லாம் எடிட் செய்த அனுபவம் இருந்திருக்குமே. அந்த வேலை மாதிரி, இங்கே சினிமாவிலும் படம் பிடிக்கும் காட்சிகளை எல்லாம் கொண்டுவந்து ஒரு மேஜையின் மீது வைத்து… தேவையானதை எடுத்துக் கோக்கும் வேலையை செய்வார்கள். அந்த அறையில் அமர்ந்து மேற்கொள்ளும் திட்டமிடல் அறிவு ஒரு நல்ல சினிமாக்காரனை உருவாக்கும். முதலில் நீ அதை கற்றுக்கொள்’ என்று எடிட்டிங் துறையைச் சேர்ந்தவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார் ஏவி.மெய்யப்பச் செட்டியார்.

- படம் பார்ப்போம்…

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-1-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/article7031347.ece

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 2 - எடிட்டிங் அறிவு

 

எவ்வளவு நுட்பமான காட்சி யையும் சரியான எடிட்டிங் அறிவால் இலகுவாக அணுகி, காட்சியின் தேவையை ஒரு நேர்க்கோட்டில் பிரதி பலிக்கச் செய்துவிட முடியும். சினிமாவில் சாதித்த இயக்குநர் ஒவ்வொரு வருமே எடிட்டிங் துறையில் திறம்பட்ட வர்களாகவே இருந்தனர். அந்த எடிட்டிங் அறிவு இளமைப் பருவத்திலேயே எனக்குக் கிடைக்கச் செய்த இடம் ஏவி.எம் ஸ்டுடியோ.

சினிமாவில் தொழில்நுட்பரீதியாக மார்க்கெட்டில் ஒரு கருவி வந்திருக்கிறது என்றால், அன்று மாலையே அதை தன்னுடைய ஸ்டுடியோவுக்குக் கொண்டு வந்து சேர்த்துவிடுவார் மெய்யப்ப செட்டியார். அதனால்தான் எல்லா வகையிலும் அந்த இடம் பல்கலைக் கழகம் போன்றுள்ளது என்பேன்.

அப்போது இருந்த விஜயா - வாஹினி ஸ்டுடியோவைப் போல இரவு, நண்பகல், பண்டிகை நாட்கள் என்று எல்லாப் பொழுதுகளும் பரபரப்பான சூழலுக்கு ஏவி.எம் ஸ்டுடியோவும் மாறியது. எம்.ஜி.ஆர், சிவாஜி, ராம ராவ், நாகேஸ்வர ராவ், ராஜ்குமார் என்று தென்னிந்திய சினிமாவில் பரபரப்பாக இருந்த நாயகர்கள் எல் லோரும் ஸ்டுடியோவில் எதிர் எதிரே சந்தித்துக்கொள்வார்கள்.

எடிட்டிங் வேலையைப் பொறுத்தவரைக்கும் இத்தனை மணி நேரம் என்று பார்த்துப் பார்த்து வேலை செய்ய முடியாது. சாப்பாடு, காபி, டீ எல்லாம் சரியான நேரத்துக்கு டேபிள் மீது இருக்கும். ஆனால், சாப்பிடத்தான் நேரமே இருக்காது. இருந்தாலும் அந்த ஆரம்ப நாட்களில் நான் பெற்ற மாதம் 60 ரூபாய் சம்பளமும், நேரத்துக்கு இல்லையென்றாலும், வேலைச் சூழலுக்கு இடையே சுவையாக இருந் தும், ருசி பார்க்க முடியாமல் சாப்பிட்டுக் கழித்த காலமும் வாழ்க்கையை நிறைவாகவே நகர்த்திச் சென்றது.

அசிஸ்டெண்ட் எடிட்டராக வேலைக் குச் சேர்ந்த நாட்களில் சீனிவாசன், கணேசன், வி.ஆர்.ராமசாமி நாங்கள் நால்வரும்தான் அறை நண்பர்கள். பேச்சுலர்ஸ் ஆக சுற்றித் திரிந்த அப்போது வடபழனியில் அறை எடுத்துத் தங்கினோம். திருமணத்துக்குப் பிறகு எங்கள் நட்பில் விரிசல் விழுந்துவிடக்கூடாது என்பதற்காகவே, அப்போது ‘ஸ்டோர் வீடு’என்று சொல்லப் பட்ட நாலைந்து வீடுகள் கொண்ட, ஒரு அடுக்கக வீட்டில் குடியமர்ந்தோம். அந்த நாட்களில் கிடைத்த நல்ல நண்பர்களின் உறவு கனவு பாதையை நோக்கி ஓடிக்கொண்டே இருக்க ஒரு பாலமாகவே இருந்தது.

‘ஜகதலப் பிராதபன்’ உள்ளிட்ட முக்கிய படங்களில் எடிட்டராக பணியாற்றியவர், சூர்யா. அப்போது அவர் ஜூபிடர் பிக்சர்ஸில் பணியாற்றி வந்தார். ஏவி.எம். ஸ்டுடியோவில் பணியாற்றிய எடிட்டர் கே.ஷங்கர், ஏவி.எம் நிறுவனப் படங்களின் முக்கியமான தொழில்நுட்ப வேலைக்காக எடிட்டர் சூர்யாவை சந்திக்கச் செல்வார். ஒரு கட்டத்தில் இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள்.

எடிட்டர் கே.ஷங்கர், பின்னாளில் இயக்குநராக மாறியதும் எடிட்டர் சூர்யாவை ஏவி.எம் ஸ்டுடியோவுக்கு அழைத்து வந்து, இங்கே எடிட்டிங் பிரிவுக்குத் தலை வராக்கினார். அந்த நாட்களில்தான் நான் அவர்களின் குழுவுக்குள் நுழைகிறேன். அங்கேதான் நாராயணன், பாஸ்கர், பின்னாளில் நான் இயக்கிய எல்லாப் படங்களுக்கும் எடிட்டிங் செய்த விட்டல் ஆகியோரின் நட்பும் கிடைத்தது.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு என்று பரபரப்பாக எடிட்டிங் அறையில் பட வேலைகள் நடந்துகொண்டிருக்கும். அப்படித்தான் ஒருமுறை படத்தை சென்சாருக்கு அனுப்புவதற்காக தீவிர இரவுப் பணியில் ஈடுபட்டுக்கொண்டி ருந்தோம். அதிகாலை 3 மணி வரைக்கும் எடிட்டிங் அறையில் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. ‘இப்போதே மணி 3 ஆச்சு. திரும்பவும் நீங்க 7 மணிக்கு எப்படி வர முடியும்? மயிலாப்பூர், சாந்தோம் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்துக்குச் சென்றுத் திரும்ப வேண்டுமே…’ என்று யோசித்தார் ஏவி.எம்.செட்டியார்.

இனிமேல் ஒரு படத்தின் இறுதிகட்ட எடிட்டிங் வேலைகள் முடியும் நாட்களில் அங்கேயே தங்கிக்கொள்ளும்படி ஒரு விசாலமான அறையை ஏற்பாடு செய்து அமைத்து கொடுத்தார். உழைப்பவர்களுக்கு எந்தப் புள்ளியிலும் இடையூறு இருக்கக்கூடாது என்பதை உணர்ந்தவராக அவர் இருந்தார் என்பதனால் இங்கே இதை நினைவூட்டுகிறேன்.

எடிட்டிங் துறையில் சேர்ந்தபோது ‘பாய் பாய்’ என்ற ஹிந்திப் படத்தின் பணிகள் ஸ்டுடியோவில் நடந்துகொண்டி ருந்தன. இது தமிழில் ‘ரத்த பாசம்’ என்ற பெயரில் வெளியான படம். தமிழில் ஒரு படம் வெற்றி அடைந்தால் அதை தெலுங்கு, ஹிந்தியில் டப்பிங் செய்வதையும், சமயத்தில் ரீமேக் படமாக்குவதிலும் அதிக கவனத்தை செலுத்துவார், செட்டியார். அந்தக் கால கட்டத்தில் ஸ்டுடியோவை வாட கைக்குக் கொடுத்ததே இல்லை. இரவும், பகலும் ஏவி.எம் படங்களே தொடர்ந்து வேலைகள் நடந்துகொண்டிருக்கும்.

தமிழில் ‘அன்பே வா’, ‘உயர்ந்த மனிதன்’, ஹிந்தியில் ‘சாயா’, ‘ஜோரி ஜோரி’ என்று பல படங்களின் எடிட்டிங் வேலைகளில் நான் பணியாற்றி யிருக்கிறேன். நான் அங்கே பணியாற்றிய நாட்களில் ‘சகோதரி’ படம் எடிட்டிங் வேலைகள் நடந்துகொண்டிருந்தது. அந்தப் படத்தில் நடித்த முத்துராமன் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு போய் இரவு உணவை முடித்துவிட்டு, மீண்டும் ஸ்டுடியோவுக்கு சைக்கிளை எடுத்துக்கொண்டு வந்துவிடுவார்.

‘‘நடித்த காட்சி எல்லாம் சிறப்பாக வந்திருக்கிறதா? நன்றாக நடித்திருக் கிறேனா?’’ அவ்வளவு ஈடுபாட்டோடு கேட்பார். வேலையின் மீது அப்படி ஒரு பற்று. அந்த ஈடுபாடு இன்றைக்கு எப்படி இருக்கிறது என்கிற விவாதத்துக்குள் நாம் செல்ல வேண்டாம்.

மெய்யப்ப செட்டியாருக்கு காட்சி கொஞ்சம் சுமாராக இருக்கிறது என்று மனதில் பட்டால் உடனே ரீடேக் எடுத்தே தீர வேண்டும். நானெல்லாம் படித்து இயக்குநர் ஆனவன் இல்லை. மீண்டும் மீண்டும் காட்சிகளை எடுத்து எடுத்து இயக்குநர் ஆனவன். அந்த அனுபவத்தை கொடுத்ததில் செட்டியாரின் பங்கு அதிகம். அவருக்கு எண்ணிக்கை முக்கியம் அல்ல; தரம்தான் முக்கியம்!

‘உயர்ந்த மனிதன்’ படத்தில் இடம்பெற் றுள்ள ‘அந்த நாள் ஞாபகம் வந்ததே…’ பாடல் சற்று வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்டிருக்கும். அந்தப் பாடலை டி.எம்.சவுந்தரராஜன் பாடியிருப்பார். ஒரு பாடலைப் பாடுவதற்கு முன் அது இடம்பெறும் சூழலின் தன்மையை உள்வாங்கிக்கொண்டு வெளிப்படுத்து வதில் டி.எம்.எஸ் பெரிய திறமைசாலி.

அவருடைய குரல் பதிவை படத்தில் சிவாஜிகணேசன் உச்சரிக்கும் உதடு களின் அசைவோடு இணைப்பது எடிட்டிங்கில் அந்த நாட்களில் சுவாரஸ் யமான அனுபவமாக இருந்தது. அன்று அந்த எடிட்டிங் அறையில் இருந்தபோதுதான், எம்.ஜி.ஆருக்கும். சிவாஜிக்கும் குரலை மாற்றி மாற்றிக் குரல் கொடுக்கும் டி.எம்.எஸ்ஸின் அபார திறமையை உணர முடிந்தது.

இப்படி பல அனுபவங்களோடு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் எடிட்டிங் துறையில் இருந்த நான், உதவி இயக்குநராக ஆன பிறகும் எடிட்டிங் துறையின் மீது கவனத்தை கொஞ்சமும் குறைத்துக்கொண்டதில்லை.

- படம் பார்ப்போம்…

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/article7056685.ece

Share this post


Link to post
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 3 - எடிட்டிங் அறை

 

 • படம் உதவி: ஞானம்
  படம் உதவி: ஞானம்
 • எடிட்டர் சூர்யா, ஆர்.ஜி.கோப், கே.நாராயணன் உள்ளிட்ட எடிட்டிங் குழுவினருடன் எஸ்பி.முத்துராமன். (வலமிருந்து இரண்டாவதாக இருப்பவர்).
  எடிட்டர் சூர்யா, ஆர்.ஜி.கோப், கே.நாராயணன் உள்ளிட்ட எடிட்டிங் குழுவினருடன் எஸ்பி.முத்துராமன். (வலமிருந்து இரண்டாவதாக இருப்பவர்).

நீங்கள் பார்க்கிற ஒரு சினிமா… பல கட்டங்களைத் தாண்டி வந்துதான் உங்கள் விழிகளின் முன்னால் விரி கிறது. அப்படி சினிமாவை அணு அணுவாக செதுக்கும் ஓரிடம்தான் எடிட்டிங் அறை. ஒரு காட்சி அவுட்டோர், மறு காட்சி செட் என்று அடுத்தடுத்த ஜம்ப் கட்டிங் இருப்பதில் அதிகம் விருப்பம் காட்டாத காலகட்டத்தில் வேலை பார்த்தவர்கள், நாங்கள். போட்டோகிராஃபியும், லைட்டிங்கும் கூட ஒரே மூடில் இருக்க வேண்டும். கண்ணுக்கு உறுத்தல் இல்லாமல் காட்சிகள் அப்படியே மெல்ல நகர வேண்டும் என்பதற்காகவே பார்த்துப் பார்த்து கவனித்து செய்வோம்.

‘சதாரம்’ என்று ஒரு கன்னடப் படம். சென்சாருக்கு அனுப்ப நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. ஒரு பாடல் மட்டும் வெளிப்புறக் காட்சியில் படமாக்க வேண்டும். மழை தொடர்ந்து பெய்துகொண்டே இருந்தது. வேறு வழியே இல்லாமல் செட் போட்டு பாடல் காட்சியைப் படமாக்கி முடித்து, இரவோடு இரவாக எடிட்டிங் வேலை களையும் முடித்து சென்சாருக்கு அனுப்பி வைத்தோம்.

அடுத்தடுத்த காட்சிகளாக ஜம்ப் கட்டிங் இருக்கக் கூடாது என்று நினைக்கும் மெய்யப்ப செட்டியாரிடம், பாதி பாடலையே வேறொரு கலரில் எடுத்தால் எப்படி தப்பிக்க முடியும்? திரும்பவும் படப் பிடிப்பை நடத்தி சென்சாருக்கு அனுப்பினோம். அப்போது சென்சார் அலுவலகத்தில் சாஸ்திரி என்றொரு அலுவலர் இருந்தார். விறுவிறுவென அறைக்குச் சென்று ஒரு குறிப்பேட்டை எடுத்து வந்து காட்டினார்.

‘‘ஏவி.எம்மில் இப்படி ஒரு பாடலைப் படம்பிடித்து வந்து காட்டிவிட்டுப் போகிறார்கள். கண்டிப்பாக இந்தப் பாடலை மீண்டும் படம்பிடித்துக்கொண்டு திரும்பி வருவார்கள்’’ என்று நீங்கள் இந்தப் படத்தோடு வந்த அன்றைக்கே நான் குறித்துவைத்துவிட்டேன்!’’ என்றார். அப்படி ஒரு நம்பிக்கைகள் பதிந் திருந்த காலகட்டத்தில், திறன் படைத்தவர்களிடத்தில் எல்லாம் வேலை பழகியதை இப்போது நினைத்தாலும் மகிழ்ச்சி ஒட்டிக்கொள்ளும்.

ஏவி.எம் ஸ்டுடியோ தேவகோட்டை யில் இருந்து சென்னைக்கு மாற்றப் பட்டு எடுக்கப்பட்ட முதல் படம் ‘வாழ்க்கை’. அதற்கு முன் ஏவி.எம் தேவ கோட்டையில்தான் இயங்கியது. ‘நாம் இருவர்’, ‘வேதாள உலகம்’ போன்ற சில படங்களுக்கு அங்கேதான் எடிட்டிங் வேலைகள் நடந்தன. படப்பிடிப்பும் அங்குதான் நடக்கும். நடிகர், நடிகைகள் எல்லோரும் அங்கே உள்ள குடிசையில் தங்கியிருந்து நடிப்பார்களாம்.

ஒருமுறை ‘வேதாள உலகம்’ படத்தின் நெகட்டிவ் பெட்டி இருந்த அறைக்குப் பக்கத்து அறையில் திடீரெனெ தீ பற்றியதாம். அடுத்த அறையில் இருக்கும் நெகட்டிவ் எல்லாம் தீயில் கருகினால், மீண்டும் படப்பிடிப்பு நடத்தி மொத்த படத்தையும் எடுக்க வேண்டும். கொஞ்சமும் யோசிக்காமல் எடிட்டர் சங்கர் அந்த அறைக்குள் புகுந்து, எல்லாப் பெட்டிகளையும் வெளியே எடுத்து, அருகில் நின்ற செட்டியாரின் ஆஸ்டின் காருக்குள் பாதுகாப்பாக வைத்து காரை நண்பர்களோடு சேர்ந்து தள்ளிக்கொண்டே வீட்டுக்குக் கொண்டுபோய் சேர்த்தாராம்.

அப்போதும் ‘ஆள் யாருக்கும் எதுவும் பிரச்சினை இல்லையே?’ என்றுதான் செட்டியார் கேட்டுள்ளார். லைட் பாய் தொடங்கி, செட் அஸிஸ்டெண்ட், தயாரிப்பாளர் வரைக்கும் எல்லோரும் ஒற்றுமையோடு வேலை பார்த்து குடிசையில் தங்கி படம் எடுத்தாலும் வெற்றி பெறும் என்பதற்கு உதாரணம் தான் ‘நாம் இருவர்’ போன்ற படங்கள்.

இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வருகிறது. அந்த நாட்களில் தேவ கோட்டை ரயில் நிலையத்தில் இரண்டு நிமிடம்தான் ரயில் நிற்கும். அதற்குள் நெகட்டிவ், பாசிட்டிவ் பெட்டி உள்ளிட்ட அனைத்து படப்பிடிப்பு உபகரணங்களையும் ஏற்றி வைக்க முடியாது. அதற்காகவே ரயில்வே சிக்னல் கொடுக்கும் கார்டுவிடம் சினி மாவைப் பற்றி நிறைய பேச்சுக் கொடுத்து, அவரை ஐந்து நிமிடம் வரைக் கும் ரயிலை நிற்க வைத்து அனைத்து பொருட்களையும் ஏற்றிவிடுவோம்.

பெரும்பாலும் நடன அசைவுகளை விளக்குவதோடு டான்ஸ் மாஸ்டரின் பணி முடிந்துவிடும். நடன கோணங்களையும், சார்ட் மூவ்மெண்ட்ஸையும் இயக்கு நரும் ஒளிப்பதிவாளரும் சேர்ந்து திட்டமிடுவார்கள். இப்போதெல்லாம் மொத்த பாடலையும் படமாக்கி, எடிட்டிங் செய்து வந்து நடன இயக்கு நரே கொடுத்துவிடுகிறார்கள். அப்போது மூவியாலா மெஷின் கொண்டு பாடல்களின் அசைவுகளை இணைப்பது ஒருவித சிறப்பு.

அந்த மெஷின் மூலம் முன், பின் இரண்டு கோணங்களிலும் ஒரு படத்தை ஓட்டி பார்க்க முடியும். உதட்டு அசைவையும் வார்த்தையையும் இணைக்கும் வேலையை இந்த மூவியாலா உதவியோடு செய்வோம். அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு காட்சியையும் எடிட்டிங் செய்து மூவியாலாவில் போட்டுப் பார்ப்போம். இன்றைக்கு அந்தத் தொழில்நுட்பம் வேறு ஒரு பரிணாமத்தில் வளர்ந்து விட்டது.

நடன இயக்குநர் ஹீராலால் பாடலில் ஜம்ப் ஷூட் இருப்பதை அதிகம் விரும் புவார். அந்த நேரத்தில் அது புது டிரெண்ட் ஆக இருந்தது. ஆனால், ‘இதெல்லாம் கண்களுக்கு உறுத்தலாக இருக்கிறது’என்று செட்டியார் கூறுவார். எடிட்டர் ஆர்.ஜி.கோப் மட்டும் தைரி யமாக ’இதெல்லாம் புது டிரெண்ட். நாளைய சினிமாவில் இப்படித்தான் ஜம் சார்ட்ஸ் நிறைய காட்சிகளில் பிரதிபலிக்கப் போகிறது’ என்று வாதாடுவார்.

‘என்னமோ போங்கப்பா…’ என்று மனம் ஏற்றுக்கொள்ளாமலேயே ஒரு கட்டத்தில் மாற்றங்களை ஒப்புக் கொள்ளவும் செய்வார் செட்டியார். இன்றைக்கு சவுண்ட் எபெக்ட் என்று புதிய நுட்பங்கள் வடிவம் எடுத்து வருகிறதே, இதை 40 ஆண்டுகளுக்கு முன்பே முயற்சி செய்து பார்த்தவர், எடிட்டர் ஆர்.ஜி.கோப். அதேபோல, இன்றைக்கு எடிட்டிங் துறையில் பல புதிய உத்திகளை செய்து அசத்தி வருகிறாரே எடிட்டர் ஆண்டனி, அவர்கூட ஏவி.எம் பள்ளியில் தயாரான பிள்ளைதான்.

எடிட்டிங் அறையை பூஜை அறையை போல அவ்வளவு சுத்தமாக வைத்திருப்போம். நெகட்டிவில் ஒரு சின்ன கீறலோ, புள்ளியோ விழுந்துவிடக் கூடாது என்பதற்காகவே வெல்வெட் துணியை விரித்து வைத்துப் பாதுகாத்து பணியாற்றிய அந்தக் காலம், வாழ்க்கைக்கான நெறிமுறைகளையும் நிறைய கற்றுக்கொடுத்தது.

ஒரு படத்துக்கு உயிரான நெகட்டிவ் மூலம் எடிட்டிங் அறையில் பெரும் மாயங்களை எல்லாம் நிகழ்த்திய பருவமாக சினிமாவில் என் தொடக்க காலம் இருந்தது. எடிட்டிங் அறைக்குள் நுழைந்தால் உலகத்தையே மறக்கடிக் கச் செய்துவிடும். அந்த எடிட்டிங் அறைதான் பின்னாளில் நான் சிறகை விரித்துப் பறக்கக் கற்றும் கொடுத்தது.

- இன்னும் பார்ப்போம்…

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88/article7080417.ece

Share this post


Link to post
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 4 - எடிட்டிங் அனுபவங்கள்!

 

cinima_2374445f.jpg
 

எவ்வளவு கடின உழைப்பை செலுத்தி படப்பிடிப்பை நடத்தினா லும், தேர்வுக்குத் தயாராகிற மாணவனைப் போல சென்சாருக்கு முதல் நாள் இரவுதான் அந்தப் படத்தின் இறுதிக்கட்ட எடிட்டிங் வேலைகள் நடக்கும்.

அப்போது வடசென்னையில் இருந்த மினர்வா தியேட்டரில்தான் சென்சார் பிரி வினர் அமர்ந்து படம் பார்ப்பார்கள். காலை 11 மணிக்குப் படத்தைத் திரையிட்டுக் காட்டும் பணி தொடங்கும். மொத்தமுள்ள 16 ரீல்களில் இரண்டிரண்டு ரீல்களாக ஸ்டுடியோவில் இருந்து காரில் எடுத்துச் செல்வோம்.

அன்று எப்போதும்போல படத்தைத் திரையிடத் தொடங்கியாச்சு. அடுத்தடுத்த ரீல்கள் முறையாக குறித்த நேரத்துக்குள் முழுமை பெற்று ஸ்டுடியோவில் இருந்து காரில் போக வேண்டும். எதிர்பாராத விதமாக அந்த நேரம் ரயில்வே கேட்டில் டிராஃபிக் ஜாம். சென்சார் அதிகாரிகள் பார்க்க வேண்டிய கடைசி இரண்டு ரீல்கள் காரில் இருந்தன. எப்படி முயற்சித்தும் குறித்த நேரத்துக்குள் ரீல் பெட்டியைக் கொண்டுச் செல்ல முடியவில்லை. ஆர்வத்தோடு படம் பார்த்துக்கொண்டிருந்த சென்சார் பிரிவினர், ‘என்னாச்சு படத்தை ஏன் தொடரவில்லை…?’ என்றனர். கடைசியில் விஷயம் அவர்களுக்குத் தெரிய வர, ‘ஒவ்வொரு முறையும் இப்படித்தான் படம் ஓடுதா?’ என்றவர்கள், எப்படி கோபப் பட்டிருப்பார்கள் என்பது உங்களுக்கே புரியும்.

‘இனி முழுப் படமும் தயார் ஆகி வந்தால்தான் சென்சார் குழு பார்வையிட ஆரம்பிக்க வேண்டும்’ என்று அப்போது உத்தரவே போடப்பட்டது.

எம்.ஜி.ஆர், சரோஜாதேவி நடித்த ‘அன்பே வா’படத்தின் ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ பாடல், அப்போது ஹாலிவுட் படங்களுக்கு இணையாக படம்பிடித்த பாடல். குதிரை சாரட்டில் நிஜத்தில் ஒரு ராஜா, ராணியைப் போல எம்.ஜி.ஆரும், சரோஜாதேவி இருவரும் அமர்ந்திருப்பார்கள்.

அப்படி ஒரு சூழ லின் பின்னணியில் விண்வெளியில் சாரட் ஓடுவதைப் போல காட்சியாக்கப் பட்டிருக்கும். தியேட்டரில் அனைவராலும் ‘ஒன்ஸ்மோர்’ கேட்கப்பட்ட பாடல் அது. ஒரு படத்தின் திரைக்கதை விவாதம் மாதிரி அந்த நாட்களில் எடிட்டிங் அறையில் ஒட்டுமொத்தப் படக் குழுவினரும் விவாதித்து மெருகூட்டப்பட்ட பாடல் அது. இந்த அனுபவம் எல்லாம் பிற்காலத்தில் நான், சினிமா எடுத்தபோது எனக்குப் பெரிய உதவியாக இருந்தது.

ஒருமுறை சவுண்ட் மிக்ஸிங்காக எடிட்டர் கோபு மும்பை புறப்பட்டபோது என்னையும் உடன் அழைத்துச் சென்றார். ஹிந்தி பட உலகில் பெரிய அளவில் பேசப்பட்டவர், சவுண்ட் இன்ஜினீயர் முகுல் போஸ். அங்கே அவரைப் போய் சந்தித்தோம். அப்போது இருந்த ஒலிப்பதிவு சாதனத்தின் மூலம் குறைந்த டிராக்குகளைத்தான் மிக்ஸ் பண்ண முடியும். ‘முதலில் மிக்ஸ் செய்த நான்கு டிராக்குகள் பிரின்ட் போடப்படும்.

அந்தப் பிரின்டைப் பார்த்துவிட்டுத்தான் அடுத்த நான்கு டிராக்குகளை மிக்ஸிங் செய்ய முடியும்’ என்று முகுல் போஸ் திட்டவட்டமாக கூறிவிட்டார். மிக்ஸ் செய்த நான்கு டிராக் சவுண்ட் நெகட்டிங் மும்பையில் இருந்தது. பிக்சர் நெகட்டிவ் சென்னையில் இருந்தது. இரவோடு இரவாக பிரின்ட் செய்ய பிக்சர் நெகட்டிவை மும்பைக்குக் கொண்டு வர முடியாது. என்ன செய்வதென்று கோபு சாரிடம் கேட்டேன்.

‘லேப் போகலாம் வா’ என்று என்னை அழைத்தார் கோபு. கையில் இருந்த நான்கு டிராக் சவுண்ட் மிக்ஸிங் நெகட் டிவையும், பிக்சர் பாசிட்டிவையும் வைத்து பிரின்ட் எடுக்க சொன்னார். அந்த பிரின்ட் சவுண்ட் நெகட்டிவ்வாக வந்தது. ‘முகுல் போஸுக்கு படம்தானே வேண்டும். இந்த நெகட்டிவ்வில் படம் வெள்ளையாக இருக்கும் இடம் கருப்பாக இருக்கும். கருப்பான இடம் வெள்ளையாக இருக்கும். மற்றபடி கார், பஸ் போவது எல்லாம் தெரியும். இந்தப் படத்தைப் பார்த்துக்கொண்டு மற்ற நான்கு டிராக்குகளையும் மிக்ஸ் பண்ணட்டும்’ என்றார்.

கண்டிப்பாக படம் தயாராக வாய்ப்பே இல்லை என்ற மனநிலையோடு ஸ்டுடியோவுக்கு வந்தார் முகுல் போஸ். வந்தவரிடம் கோபு நெகட்டிவ் பிரின்ட்டைப் போட்டு காட்டினார். முகுல் போஸ் அதைப் பார்த்து அசந்துபோய், கோபுவை கட்டிப் பிடித்துக்கொண்டார். ‘இப்படி பாசிட்டிவ்ல ப்ரின்ட் எடுப்பாய் என்று நான் நினைக்கவே இல்லை. உன் தொழில் திறமைக்கு என் பாராட்டுகள்’ என்று வாழ்த்தினார். வடநாட்டுக் கலைஞர்கள், அவ்வளவு எளிதில் நம்மை பாராட்ட மாட்டார்கள். அப்படி ஆச்சர்யத்தை அந்த நேரத்தில் எடிட்டர் கோபு செயல்படுத்தினார்.

இயக்குநர்களைவிட அதிவேகமாக சிந்தித்து செயல்பட வேண்டியவர் படத்தின் எடிட்டர்தான். அந்த நாட்களில் அப்படித்தான் எடிட்டர்கள் இருந்தார்கள். அப்போதெல்லாம் ஒரு திரைப்படம் முழு மையான மன நிறைவைத் தராத வரையில் ரிலீஸ் தேதியை அறிவிப்பதில்லை.

‘சோரி சோரி’ என்று ஒரு ஹிந்தி படம். ராஜ்கபூர் ஹீரோ. ஒருநாள் ராஜ்கபூர் இயக்குநர் அனந்த் தாக்கூரிடம், தான் வெளிப்படுத்திய எக்ஸ்பிரஷன் ஒன்று எடிட்டிங்கில் கட் ஆகியுள்ளது என்றார். கோபு எடிட்டராகவும், சூர்யா சீஃப் எடிட்டராகவும் இருந்தனர். ‘கண்டிப்பாக அப்படி நடந்திருக்க வாய்ப்பு இல்லை’ என்று இயக்குநர் கூறியும் ராஜ்கபூர் மறுத் தார். உடனடியாக எடிட்டர் அறைக்கு வந்து, சம்பந்தப்பட்ட காட்சியின் நெகட் டிவை எடுத்து பார்த்தபோது அப்படி ஒரு காட்சியே இல்லை.

நடிக்கும்போது இப்படி ஒரு முகபாவனையை வெளிப் படுத்தினால் நன்றாக இருக்கும் என்று நடிகர்கள் மனதில் நினைப்பது இயல்பு தான். சில நேரத்தில் அது வெளிப்படும். அடுத்தடுத்து காட்சி குறித்த பரபரப்பால் சமயத்தில் அதை மறந்துவிடவும் செய் வார்கள். அதையும் அப்போது எடிட்டிங் அறையில் எளிதாக புரிய வைக்கும் சூழல் இருந்தது. பின்னர், ராஜ்கபூர், ‘ஏதோ ஒரு நினைவில் அப்படிச் சொல்லிவிட்டேன்’ என்று இயக்குநரிடம் மன்னிப்பு கேட்டார்.

இப்படி நாளும் பொழுதும் விதவித மான அனுபவங்கள் சூழ்ந்துதான் திரைக் கல்வியைப் பயின்றோம்.

 

- இன்னும் படம் பார்ப்போம்…

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-4-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7104898.ece

Share this post


Link to post
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 5- எடிட்டிங் அனுபவங்கள்!

 

 
‘சர்வர் சுந்தரம்’ படப்பிடிப்பில் கிளாப் போர்டு அடிக்கும் காட்சியில் நாகேஷ் மற்றும் படக் குழுவினர்.
‘சர்வர் சுந்தரம்’ படப்பிடிப்பில் கிளாப் போர்டு அடிக்கும் காட்சியில் நாகேஷ் மற்றும் படக் குழுவினர்.

இயக்குநர்கள் கிருஷ்ணன்- பஞ்சு இருவருமே நான் எடிட்டிங் பிரிவில் பணிக்கு வந்த காலத்தில் புகழுடன் இருந்தார்கள். இவர்களில் பஞ்சு முதலில் எடிட்டர் ஆனவர். அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அமைந்தது. பிற்காலத்தில் ‘தெய்வப் பிறவி’, ‘அன்னை’, ‘சர்வர் சுந்தரம்’, ‘குழந்தையும் தெய்வமும்’ என்று திரைப்படங்களை இயக்குவதில் அவர்கள் பரபரப்பானார்கள்.

அந்தக் காலகட்டத்தில் அவர்களுடன் நான் வெவ்வேறு சூழலில் பணிபுரிந்தாலும், அவர்கள் இயக்கிய படங்கள் சென்சாருக்குப் போகும் நேரத்தில் என்னை அழைத்து எடிட்டிங் வேலைகளைக் கவனித்துக்கொள்ள சொல்வார்கள். அப்படி ஓர் ஒற்றுமை உணர்வும், புரிதல் மனமும் மலர்ந்திருந்த காலம் அது.

எடிட்டர் பஞ்சுவுக்கு உதவியாளர் விட்டல். இவரிடம்தான் நான், எடிட்டிங் குறித்த பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். அவருடன் இருந்த நல்ல புரிதலால்தான் பிற்காலத்தில் நான் இயக்கிய 70 படங்களுக்கும் ஒரே எடிட்டருடன் என்னால் பணிபுரிய முடிந்தது. தமிழ் பட உலகில் இது ஒரு சாதனை என்பதை பெருமையாக தெரிவித்துக்கொள்கிறேன்!

எடிட்டிங் பிரிவில் பணியாற்றிய போதுதான் சங்குண்ணி எனக்கு அறிமுகமானார். எடிட்டிங் துறையில் அவர் பணியாளராக வேலை பார்த்தார். யார் எந்த வேலை, உதவி என்றாலும் முகம் சுளிக்காமல் செய்து முடிக்கும் கடுமையான உழைப்பாளி. மாதந்தோறும் சம்பளம் வாங்கியதும் என்னிடம் வந்து மணியார்டர் விண்ணப்பத்தை பூர்த்திசெய்யச் சொல்லி, ஊரில் இருக்கும் குடும்பத்தினருக்கு பணத்தை அனுப்பி வைத்துவிட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்ப்பார்.

அப்படி ஒரு பொறுப்பாளர். ‘உன் செலவுக்குப் பணம் வேண்டாமா?’ என்று கேட்டால் ‘எனக்கு என்னப் பெரிதாக செலவு ஆகப் போகிறது. வேலை முடிந்ததும் சாப்பிட்டுவிட்டு, நான்தான் அலுவலகத்திலேயே படுத்துக் கொள்கிறேனே’ என்பார்.

பிற்காலத்தில் மலையாளத் திரையுலகில் புகழ்பெற்ற எடிட்டராக வலம் வந்தார் சங்குண்ணி. அங்கே ஐ.வி.சசி இயக்கிய பெரும்பாலான படங் களுக்கு இவர்தான் எடிட்டர். எடிட்டிங் துறையில் பணியாளராக இருந்த ஒருவர், தனது மதிநுட்பத்தால் பின்னாளில் மிகச்சிறந்த எடிட்டராக முடியும் என்பதற்கு சங்குண்ணி நல்ல சாட்சி!

ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்து பிக்சர் நெகட்டிவ், சவுண்ட் நெகட்டிவ் இரண்டும் டெவலப் ஆகி எடிட்டிங் அறைக்கு வரும். எந்தக் காட்சி, எந்த ஷாட், எந்த டேக்? அதில் சரியான (ஓ.கே) டேக் எது? இதையெல்லாம் கிளாப் போர்டில் எழுதி காட்டுவார்கள். அதில் சரியான டேக்கை எடுத்து பிரிப்போம். இதைத் தொடர்ந்து இன்னும் பல நிலைகளில் பணிகள் தொடரும்.

காட்சிகள் படம்பிடித்து வரவர அதை ஒரு ஆர்டராக சேர்த்து ரீல்களாக ஆக்குவோம். அந்த ரீல்களில் டப்பிங், ரீ- ரெக்கார்டிங், மிக்ஸிங் எல்லாம் செய்து முதல் பிரதி எடுப்போம். அதுதான் சென்சாருக்குப் போகும். சென்சாரில் சொல்கிற காட்சியை எல்லாம் தவிர்த்த பிறகு, எடுக்கப்படுவதுதான் ஃபைனல் பிரின்ட். இதற்கு அந்தப் படத்தின் இயக்குநர், உதவி இயக்குநர்கள், எடிட்டர், உதவி எடிட்டர்கள் எல்லோருமே இரவு, பகலாக உழைக்க வேண்டியிருக்கும்.

டப்பிங் பணியும் படத்தின் முக்கியமான துறையாகும். ஒரு படத்தில் நடிப்பவர்கள் டப்பிங் பேசும்போது அது சிறப்பாக அமைந்துவிடுவது இயல்பு. மற்ற மொழி நடிகர், நடிகைகள் நடிக்கும்போது அதற்கு நம் டப்பிங் கலைஞர் சரியான உதட்டு அசைவு கொடுத்து அதன் பாவனை, உச்சரிப்பு போன்ற உணர்ச்சிகளை முறையே வெளிப்படுத்த வேண்டும். அப்படி குரல் கொடுப்பதில்தான் உரிய நடிகர், நடிகையின் நடிப்பு மேன்மை பெறுவதும், சிறப்பு பெறுவதும் இருக்கிறது. டப்பிங் பேசுவதை முறையே இணைக்கும் பொறுப்பு எடிட்டருக்கும் உண்டு.

server1_2381755a.jpg

டப்பிங் முறையை முதன்முதலில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்தது மெய்யப்ப செட்டியார்தான். அவர் கன்னடத்தில் எடுத்த ‘சத்ய ஹரிச்சந்திரா’ படம்தான் தமிழில் ‘ஹரிச்சந்திரா’ என்ற பெயரில் வெளிவந்த முதல் டப்பிங் படம். இதற்கு மரியாதை செய்யும் விதமாகத்தான் ஒவ்வொரு புத்தாண்டின் முதல் நாள் சென்னை ஏவி.எம் - ஆவிச்சி பள்ளியில் உள்ள ஏவி.மெய்யப்ப செட்டியாரின் சிலைக்கு டப்பிங் யூனியன் சார்பில் மாலை அணிவித்து சிறப்பும், நன்றியும் அளிக்கப்பட்டு வருகிறது.

‘நாகுல சாவிதி’ (Nagula Chavithi) ஏவி.எம் தயாரித்த தெலுங்குப் படம். இது ஒரு புராணக் கதை. அந்தக் காலகட்டத்தில் அதே மாதிரி கதைக் களத்தோடு ‘நாக பஞ்சமி’ என்ற பெயரில் ஜெமினி நிறுவனம் ஒரு படத்தைத் தமிழில் வெளியிடும் பணியில் தீவிரமாக இருந்தது. அதை அறிந்த மெய்யப்ப செட்டியார், உடனடியாக ஏவி.எம் தயாரித்த ‘நாகுல சாவிதி’ படத்தைத் தமிழில் ‘நாக தேவதை’ என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிட முடிவு செய்தார். அதன் வேலைகள் விரைவுபடுத்தப்பட்டு 15 நாட்களுக்குள் டப்பிங், எடிட்டிங் பணிகள் எல்லாம் முடிக்கப்பட்டன.

படம் நாளை ரிலீஸ் என்றால் இன்று மாலை வரை சென்சார் சான்றிதழ் கைக்கு வரவில்லை. படத்தின் பிரிண்ட்கள் அந் தந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. சென்சார் சான்றிதழ் இல்லாமல் படத்தை ரிலீஸ் செய்வது குற்றம். முடி வில் படம் வெளியாக வேண்டிய அன்று காலை சென்சார் சான்றிதழ் கைக்கு கிடைத் தது. உடனடியாக குறித்த நேரத்தில் படத்தை வெளியிட்டாக வேண்டுமே என்று முடிவெடுத்த செட்டியார், சென்சார் சான்றிதழை ஷூட் செய்து பிரதியெடுத்து படத்தைத் திரையிட உள்ள ஒவ்வோர் இடத்துக்கும் 15 அடியாக கட் செய்து, பணியாளர்களின் அருகிலேயே இருந்து அதை காய வைத்துக் கொடுத்தார்.

அந்தச் சான்றிதழ் உடனடியாக தமிழ்நாடு முழுவதும் உள்ள திரை அரங்கு களுக்குச் சென்றாக வேண்டுமே? சற்றும் யோசிக்காமல் தனி விமானம் ஒன்றை வாடகைக்கு எடுத்து திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களுக்கு குறித்த நேரத்துக்குள் சென்சார் சான்றிதழ் பிரதி எடுத்துச்செல்லப்பட்டது. அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வேலைகள் நடந்த காலம் அது.

 

- இன்னும் படம் பார்ப்போம்…

Share this post


Link to post
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 6- பட நீளம்!

 
 
‘சகோதரி’ படத்தில் சந்திரபாபு உள்ளிட்ட நடிகர்கள் படங்கள் உதவி: ஞானம்
‘சகோதரி’ படத்தில் சந்திரபாபு உள்ளிட்ட நடிகர்கள் படங்கள் உதவி: ஞானம்

‘சினிமா எடுத்துப் பார்’ தொடரை எழுதத் தொடங்கியதில் இருந்து வாரா வாரம் அலைபேசி அழைப்பு களோடுதான் என் புதன்கிழமை அதிகாலை விடிகிறது. கடந்த புதன்கிழமை அலைபேசியின் முதல் அழைப்பு எடிட்டிங் அசோஸியேஷன் தலைவர் கே.ஆர்.ராமலிங்கத்திடம் இருந்து வந்தது.

‘எடிட்டிங் துறைச் சார்ந்த நிறைய தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த வாரப் பதிவில் எடிட்டர் சங் குண்ணி அதிக படங்கள் பணிபுரிந்தது மலையாள இயக்குநர் ஐ.வி.சசி என்று கூறியிருந்தீர்கள். இயக்குநர் ஜோஷி யிடம் 64 படங்களும், இயக்குநர் சசி குமாரிடம் 80-க்கும் மேற்பட்ட படங்களி லும் பணிபுரிந்தவர் அவர்’ என்றார். எடிட்டர்கள் இந்தத் தொடரின் பதிவு களைக் கூர்ந்து கவனித்துவருவதும், சரியான தகவலோடு அழைத்து பாராட்டியதும் பெருமைக்குரிய விஷயமே!

பீம்சிங் இயக்கிய ‘சகோதரி’ திரைப் படம் முழு வேலைகளும் முடிந்து தயாரானது. எல்லோருடனும் சேர்ந்து மெய்யப்ப செட்டியாரும் படத்தைப் பார்த்தார். முடிந்ததும் ‘ஒரு நாள் டைம் கொடுங்க’ என்று கூறிவிட்டு புறப்பட்டார். அடுத்த நாள், ‘‘ஏதோ ஒன்று தேவையாக இருக்கிறதே. படத்தில் எமோஷ்னல் சரியாக வந்திருக்கிறது.

சென்டிமெண்ட் கலந்த அந்த எமோஷ்னல் படத்தை இறுக்கமாக கொண்டுபோகும். இதற்கு சில இடங்களில் நகைச்சுவை இருந்தால் தான் சரியாக இருக்கும். இல்லையென் றால் அழுகை படமாக மாறிவிடும்’’ என்றவர், ‘‘சந்திரபாபுவை வைத்து ஒரு காமெடி டிராக் படத்தின் நடுநடுவே சேர்த்தால் நன்றாக இருக்கும்’’ என்றார்.

நம்மை வைத்துதான் அந்தக் காட்சி களை எடுக்கப் போகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்ட சந்திரபாபு, ஒரு பெரிய தொகையை சம்பளமாகக் கேட்டார். அதற்கும் செட்டியார் மறுப்பில்லாமல் ஒப்புக்கொண்டார். ‘நான் ஒரு முட்டா ளுங்க...’ பாடல் அந்தப் படத்தில்தான் இடம்பெற்றிருக்கும். ஒரு படம் முடிந்து விட்டது என்று முற்றுப்புள்ளி வைக்கா மல், அதை இன்னும் எப்படி செதுக்கலாம் என்கிற கவனம் மெய்யப்ப செட்டியா ருக்கு எப்போதுமே இருந்தது. அந்தப் படத்தில் எமோஷனலோடு, காமெடியும் சேர்ந்ததால் அது பெரிய வெற்றிப்படமாக ஆனது.

வேலையைப் பங்குப் போட்டுக் கொண்டு தூங்குகிற சூழல் எடிட்டிங் பிரிவில் பணியாற்றிய நாட்களில்தான் பிரதானமாக அமையும். ‘நீ கொஞ்ச நேரம் தூங்குப்பா. நான் கொஞ்ச நேரம் வேலையைக் கவனிக்கிறேன்’ என்று சக எடிட்டிங் பணியாளர்களுக்குள் பிரித்துக் கொண்டு, மாறி மாறி தூங்கச் செல்வதும், வேலை பார்க்கச் செல்வதுமாக இருந்த காலம் அது. அப்படி தூங்கச் செல்லும் போது எடிட்டிங் அறையில் ஃபிலிம் வேஸ்ட் துணி கவர் இருக்கும். அந்தக் கவரை எடுத்து உதறிவிட்டுத் தரையில் விரித்து, ஃபிலிம் கேனை (கேன்) தலைக்கு தலையணையாக வைத்துக்கொண்டு தூங்குவோம்.

இயக்குநரும், இசையமைப்பாளரும் அமர்ந்து எந்த இடத்தில், என்ன மாதிரி இசை வேண்டும் என்று பில்டப் செய்கிற விஷயம் ரீ-ரெக்கார்டிங். படத்தின் வேகத் தையும், உணர்ச்சிகளையும் மேலும் செப்பனிடுகிற வேலை பின்னணி இசை யில்தான் அமையும். ஒரு படம் மக்களை கவர்கிற வாய்ப்பு அதிகம் உள்ள இடம் பின்னணி இசை சரியாக பிரதிபலிக்கிற இடம் என்றே சொல்லலாம். வசனம், எஃபெக்ட், பின்னணி இசை இவற்றை இணைத்து எடுப்பதுதான் படத்தின் முதல் பிரதி. இதில் எல்லாவற்றிலுமே எடிட்டருடைய பங்களிப்பு இருக்கிறது. இது எல்லாவற்றையும் எடிட்டர் சரியாக செய்தால்தான் முதல் பிரதியைச் சரியாக பார்க்க முடியும்.

‘களத்தூர் கண்ணமா’ படத்தை ‘மவூரி அம்மாயி’ என்ற பெயரில் தெலுங்கில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்த நேரம். அந்தப் படத்தைப் பற்றி ஆந்திரா முழுக்க நல்ல பேச்சு. ‘ஏம்பா… இந்தப் படத்தை நேரடியாக தெலுங்கில் எடுத்தால் என்ன?’ என்று செட்டியார் கேட்டார். ‘டப்பிங் படம் ஓடிக்கொண்டிருக்கும் போது எப்படி சரியாக வரும்?’ என்று சுற்றி நின்றுகொண்டிருந்த எல்லோரும் கூறினோம். ‘நல்ல கதை என்றால் மக்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளத்தான் செய் வார்கள். ‘ராமாயணம்’, ‘மகா பாரதம்’ நல்ல கதை என்பதால்தானே, பல தடவை ஈர்ப்போடு ரசிக்கிறோம்’ என்றார்.

நாகேஷ்வர ராவ். ஜமுனா, ரங்கா ராவ் உள்ளிட்ட தெலுங்கு நட்சத் திரங்களை வைத்து ‘மோக நோமு’ என்ற பெயரில் ‘களத்தூர் கண்ணம்மா’ படத் தைத் தெலுங்கில் ரீமேக் செய்யும் வேலை கள் தொடங்கி, விறுவிறுவென படமாக் கப்பட்டு முடிந்தது. அப்போது தெலுங்கில் பிரபலமாக இருந்த பத்மநாபம், கீதாஞ் சலி ஜோடியை வைத்து ஒரு பாட்டு எடுத் துச் சேர்த்தால் படம் சூப்பர் ஹிட் ஆகி விடும் என்று, தெலுங்குப் பட விநியோக தஸ்தர்கள் யோசனை சொன்னார்கள். உடனே, செட்டியார் இந்த யோசனையை படத்தின் இயக்குநர் யோகானந்திடம் சொல்லும்படி கூறினார்.

அந்த நாட்களில் காலையில் ஒரு படத்தை ஒரு ஸ்டுடியோவிலும், மதியம் மற்றொரு ஸ்டுடியோவில் வேறொரு படத்தையும் இயக்கிக் கொண்டிருந்த பரபரப்பான இயக்குநர் யோனாந்த். அவர் மூலம் பத்மநாபம், கீதாஞ்சலி இருவரையும் அணுகி, கால்ஷீட் பெற்று காமெடி கலந்த அந்தப் பாட்டு ஒரே நாளில் படமாக்கப்பட்டு, எடிட்டிங் செய்து காட்சி ஆர்டரில் போடப்பட்டது. அதை உடனே, திரையரங்கில் செட்டியார், யோகானந்த், எடிட்டர் விட்டல் ஆகிய மூன்று பேரும் அமர்ந்து பார்த் தார்கள். படம் பார்த்து முடித்ததும், ‘‘இந்தப் பாடல் கிளைமாக்ஸுக்கு முன் னால் வருகிறது. கிளைமாக்ஸ் வேகத்தை இது குறைக்கும். படத்துக்கு இடையே வேறு எந்த இடத்திலும் இணைப்பதற்கும் வாய்ப்பு இல்லை. அப்படியே இந்தப் பாட்டை தூக்கி வெச் சிடுங்க’’ என்றார் செட்டியார். அவ்வளவு செலவு செய்து, குறித்த நேரத்தில் விறுவிறுவென எடுக்கப்பட்ட பாடல், படத்தின் வேகம் கருதி வேண்டாம் என்று அப்படியே தூக்கி வைக்கப்பட்டது.

படம் நீளமாக இருந்தால் கதை வேகம் குறையும். படத்தின் நீளம் குறைவாக இருந்தால்தான் கதை விறுவிறுப்பாக போகும். இப்படியான அனுபவம் எல்லாம் எடிட்டிங் அறையில் சுவாசித்ததில்தான் எனக்குக் கிடைத்தது.

 

இன்னும் படம் பார்ப்போம்

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-6-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/article7153759.ece

Share this post


Link to post
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 7- தயாரிப்பாளரும், கதையும்!

எஸ்.பி.முத்துராமன்

 
 
 • ஏவிஎம் ஸ்டுடியோவில் எடிட்டிங் பிரிவில் பணியாற்றும் எஸ்பி.முத்துராமன்.
  ஏவிஎம் ஸ்டுடியோவில் எடிட்டிங் பிரிவில் பணியாற்றும் எஸ்பி.முத்துராமன்.
 • editors_2396611g.jpg
   

ஒரு படம் எடுக்க தயாரிப்பாளரும், கதையும்தான் இரண்டு கண்கள். தயாரிப்பாளர் பணம் போடா விட்டால் படம் எடுப்பது எப்படி? அடுத்து முக்கியமானது கதை. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.

முதலில் கதை தேர்ந்தெடுக்கப்படும். அந்தக் கதையைத் திரைக்கதை ஆசிரியர் திரைக் கதையாக எழுதி காட்சியாகப் பிரிப்பார். ஒரு படத்துக்கு சுமார் 95 காட்சிகள் இருக்கும். 95 காட்சிகளுக்கும் வசனங்கள் எழுதப்படும். இதில், வசனக் காட்சிகள், பாடல் காட்சிகள், சண்டைக் காட்சிகள், நகைச்சுவை காட்சிகள் உள்ளிட்ட பல காட்சிகளும் வரிசைப்படுத்தப்பட்டு இருக்கும். இப்படி எழுதப்பட்ட முழு ஸ்கிரிப்ட்டில் இருந்து ஒவ்வொரு காட்சியும் ஒரு வரியில் கதைச் சுருக்கமாக எடுத்து எழுதி, அந்த பக்கங்களை சுருக்கு முடிச்சு போடக்கூடிய கயிறால் கோக்கப்பட்ட ஒரு கோப்பில் (ஃபைல்) கோத்து வைப்போம்.

அவசரத்துக்குப் பார்க்கும்போது அந்த முழு ஸ்கிரிப்ட்டையும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த கோப்பினைப் பார்த்தாலே போதும். செட்டியார், ஓய்வு நேரத்தில் அந்த கோப்பினை வைத்து ஆர்டரை பார்ப்பார். பாடல்கள் பக்கத்து, பக்கத்தில் வருகிறது.

ஒரு பாட்டு 5 காட்சிகளுக்கு முன்னும், இன்னொரு பாட்டு 7 காட்சிகளுக்குப் பின்னாலும் வந்தால் இரண்டு பாடல்களும் ரசிக்கப்படும், என்று அந்த கோப்பில் இரண்டு பாடல் காட்சியின் பேப்பரையும் உருவி, முதல் பாடல் காட்சியை 5 காட்சிகளுக்கு முன்னால் மாற்றி, இரண்டாவது பாடல் காட்சியை 7 காட்சிக்குப் பின்னால் மாற்றி, எடிட்டரை கூப்பிட்டு ‘இதுபோல மாற்றியிருக்கிறேன்.

அதை ஃபிலிம்மில் மாற்றி எனக்கும் இயக்குநருக்கும் போட்டுக் காட்டுங்கள். எங்களுக்கு பிடித்திருந்தால், பாடல்களை இந்தப் புது ஆர்டரிலேயே வைத்துக்கொள்ளலாம்’ என்பார். அதன்படி ஃபிலிமில் ஆர்டர் செய்து போட்டுக் காண்பிப்போம். இந்த மாதிரி ஒவ்வொரு விஷயத்திலும் எடிட்டிங்கில் படம் செதுக்கப்படும்.

எடிட்டிங் அறையில் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடக்கும்போது எல்லோரிடமும் அந்தப் பரபரப்பு பற்றிக்கொள்ளும். நாங்கள் கொடுக்கும் நெகடிவ்வை உடனுக்குடன் பிரின்ட் பண்ணிக் கொடுப்பதும், சவுண்ட் பிரின்ட் போன்றவற்றை சரியாக எடுத்துக் கொடுப்பதும் லேபரட்டரியின் வேலை. அப்போது அந்தத் துறைக்குத் தலைவர் சதூர் சிங் சேத்தி. அவருடன் அப்போது வள்ளிநாயகம், ராமசாமி ஐயங்கார், பரமசிவம், கண்ணப்பன் போன்றோரும் பணியாற்றினார்கள்.

சில நேரங்களில் வேலை பளு அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் ராமசாமி ஐயங்காரை பிடித்து, ‘அண்ணே, உங்க சுறுசுறுப்பு டானிக் ஆன கும்பகோணம் கொழுந்து வெத்தல, பாக்கு, புகையிலயெல்லாம் டிராயர்ல வெச்சிருக்கோம்’ என்று சொல்வோம். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் எல்லாப் பிரின்ட்டும் வந்து சேர்ந்துவிடும்.

சதூர் சிங் சேத்தி சேவை மனம் கொண்டவர். உடன் வேலை செய்பவர் களின் நல்லது, கெட்டது எல்லாவற்றுக் கும் போய் நிற்பார். ஒரு முறை ஸ்டுடியோ வில் வேலை குறைந்து போனதால், ஒவ்வொரு துறையிலும் 5 நபர்களை ஆள் குறைப்பு செய்யவேண்டியிருந்தது. லேபரட்டரி துறையில் ஆள் குறைப்பு செய்ய வேண்டிய 5 பேரின் பெயர்கள் சதூர் சிங் சேத்தி கைக்கு போனது.

‘இந்த 5 பேரையும் வேலையை விட்டு நீக்கிவிட்டால் இவர்களுக்கு வேறு வாழ்க்கை இல்லை. நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால் என் சம்பளத்தில் இருந்து இந்த 5 பேருக்கும் ஊதியம் கொடுத்து வைத்துக் கொள்கிறேன்’ என்று செட்டியாரிடம் கூற, அதற்கு அவர் ‘சரி சரி போய் வேலையைக் கவனிங்கப்பா… அவங்கள நீக்கல’ என்றார். அப்படி ஒரு உள்ளம் கொண்ட சதூர் சிங் சேத்தி, பணி ஓய்வுக்குப் பின் பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டார்.

ஒரு நாள் காவல்துறையினர் ஏவிஎம் சரவணன் சாரை பார்க்க வந்தார்கள். ’’ராயப்பேட்டையில் ஒருத்தர் லாரியில் அடிபட்டு இறந்துவிட்டார். அவரைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ஆனால், அவர் சட்டை பையில் உங்கள் விசிட்டிங் கார்டு இருந்தது’’ என்றனர். போய் பார்த்தால் இறந்தவர், சதூர் சிங் சேத்தி. சரவணன் சாருடைய விசிட்டிங் கார்டு மட்டும் இல்லாமல் போயிருந்தால், அவரை அநாதை உடல் என்று முடிவெடுத்திருப்பார்கள். மனிதநேயமிக்க ஒரு மனிதருக்கு ஏன் இந்த முடிவு? இந்தக் கேள்வி இப்போதும் என் நெஞ்சை உறுத்திக்கொண்டே இருக்கிறது!

எடிட்டிங் பிரிவில் சூர்யா, கே.சங்கர், நாராயணன், ஆர்.ஜி.கோப், பாஸ்கர், விட்டல், ராமலிங்கம், முத்து, நரசிம்மன், சங்குண்ணி, துரை போன்ற பலரோடும் பணியாற்றி எடிட்டிங் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். ‘சினிமா எடுத்துப் பார்’ என்ற இந்தக் கட்டுரையில் ‘எடிட்டிங் பண்ணிப் பார்’ என்று உங்களோடு பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். இதற்கு ஒரு திருப்பம் வேண்டுமல்லவா?

ஏவி.எம் அவர்களின் மகன் குமரன் சாரும் எடிட்டிங் பிரிவில் பயிற்சி பெற எடிட்டிங் துறைக்கு வந்தார். செட்டியார் நினைத்திருந்தால் தன் மகனை நேரடியாக இயக்குநர் ஆக்கி யிருக்கலாம். அடிப்படை வேலைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக எங்களோடு சக ஊழியராக பணியாற்ற அனுப்பி வைத்தார். இதெல்லாம் முதலாளி, தொழிலாளி என்ற வேற்றுமை எதுவும் இல்லை என்பதற்காக இங்கே சொல்ல விரும்புகிறேன். அந்த நாட்களில் குமரன் சாரிடம் நெருங்கி பழகும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.

அப்போது செட்டியாரின் மகன்கள் முருகன், குமரன், சரவணன் மற்றும் அவரது மாப்பிள்ளை வீரப்பன் ஆகிய நால்வரின் நிர்வாகத்தில் ஒரு படம் தயாரிக்க திட்டமிடப்பட்டது. பட வேலைகள் ஆரம்பித்த சமயத்தில் குமரன் சார் என்னை உதவி இயக்குநராக பணிபுரிய அழைத்தார். அதற்கு எடிட்டர் சூர்யா, ‘முத்துராமன் ரொம்ப மென்மையானவர். ஷூட்டிங் செட் பரபரப்பு அவருக்கு செட் ஆகாது. இங்கே எடிட்டிங்லயே இருக்கட்டும்’ என்றார்.

குமரன் அவர்களுக்கு என்னை விட மனமில்லை. ஆகவே, அப்பச்சியிடம் சொன்னார். அப்போது எடிட்டர் சூர்யா அவர்களை அப்பச்சி அழைத்து ‘முத்துராமன் எடிட்டிங்லேயும் வேலை செய்யட்டும். செட்லேயும் போய் வேலை செய்யட்டும்’என்று கூறினார். அதற்கு பிறகுதான் நான் உதவி இயக்குநராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இன்றைக்கு நான் இயக்குநராக பணியாற்றுகிறேன் என்றால், அதற்கு ‘முதல்படி’ அமைத்துக் கொடுத்தவர், குமரன் சார்தான் என்பதை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் உதவி இயக்குநராக பணியாற்றத் தொடங்கிய படம் எது தெரியுமா? அதை இப்போதே சொன்னால் சுவை போய்விடும். அடுத்த வாரம் சொல்கிறேனே!

 

- இன்னும் படம் பார்க்கலாம்…

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article7175906.ece

Share this post


Link to post
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 8- திரைக்கதை ஜாம்பவான் டி. பிரகாஷ் ராவ்!

 

 
 • sp_2404460g.jpg
   
 • sp1_2404458g.jpg
   

‘உலக நாயகன்' என்று இன்றைக்கு எல்லோராலும் அறியப்படுகிற கமல்ஹாசன் அரைக்கால் சட்டை அணிந்துகொண்டு காதில் பூ வைத்தவாறு, ‘அம்மாவும் நீயே அப்பா வும் நீயே’ என்று பாடி சிறுபையனாக அறிமுகமான ‘களத்தூர் கண் ணம்மா’ படத்தில்தான் நானும் உதவி இயக்குநராக காலடி எடுத்து வைத்தேன்.

எடிட்டிங் அறையில் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் பணியாற்றி எடிட்டிங் குறித்த நுணுக்கங்களைக் கற்றுக்கொண் டாலும், முதன்முதலாகப் படப்பிடிப்பு தளத்துக்கு போனபோது என்னை அறியாமலேயே ஒருவித பயம் தொற் றிக்கொள்ளவே செய்தது.

பிறந்த வீட்டில் 20 ஆண்டுகளாக ஓடி ஆடித் திரிந்த ஓர் இளம்பெண், திருமணமாகி புகுந்த வீட்டுக்குச் செல்லும்போது அங்கே பார்க்கும் பலரும் புதிய நபர்களாகத் தென்படுவார்கள். அப்படித்தான் எடிட்டிங் துறையில் இருந்து உதவி இயக்குநர் பொறுப்பேற்று, படப்பிடிப்பு தளத்துக்குப் போனபோது பிறந்த வீட்டில் இருந்து, புகுந்த வீட்டுக்குள் நுழைவதைப் போன்ற ஓர் உணர்வுதான் எனக்கும் இருந்தது.

‘களத்தூர் கண்ணம்மா’ படத்தை இயக்குவதற்கு டி. பிரகாஷ் ராவ் அவர்கள் ஒப்பந்தமாகி இருந்தார். எல்லோ ராலும் அறியப்பட்ட இயக்குநர் மேதை எல்.வி.பிரசாத் அவர்களிடம் உதவி இயக்குநராக இருந்தவர், டி.பிரகாஷ் ராவ். எம்.ஜி.ஆர் நடித்த ‘படகோட்டி’ படத்தை இயக்கியவர்.

சிறந்த இயக்குநரான அவரிடம் வேலை கற்றவர்தான் மரியாதைக்குரிய இயக்குநர் ஸ்ரீதர். படப்பிடிப்புக்குத் தயாராக வேண்டிய அனைத்து வேலை களையும் முறையே திட்டமிடுவதில் கெட்டிக்காரர். அதே போல, படப் பிடிப்புக்கான விஷயங்கள் முழுமையாக தயாரான பிறகுதான் டி.பிரகாஷ் ராவ் செட்டுக்குள்ளேயே நுழைவார். அப்படி ஒரு ஃபர்பெக்ட் மனிதர். ஒரு உதவி இயக்குநராக அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தன. நானும் அவரிடம் நிறைய வேலைகளைக் கற்றுக்கொண்டேன்.

ஏவி.எமில் எந்த ஒரு படம் எடுக்கத் தொடங்கும் முன்பும் அந்த படத்துக்கான முழு திரைக்கதையும் தயாராக இருக்க வேண்டும். முதலில் கதையைப் படித்து இறுதி செய்தபிறகு பூஜை போடலாம் என்பதில் உறுதியாக இருப்பார், செட்டியார். அந்த நாட்களில் சிறப்பாக திரைக்கதை எழுது வதில் அபாரமான கெட்டிக்காரர் ஜாவர் சீதாராமன். இவர்தான், ‘அந்த நாள்’, ‘செல்லப்பிள்ளை’, ‘களத்தூர் கண்ணம்மா’, ‘ராமு’, ‘குழந்தையும் தெய்வமும்’, ‘உயர்ந்த மனிதன்’ உள்ளிட்ட ஏவி.எமின் பல படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியவர்.

நல்ல எழுத்தாளர், நிறையப் புத்தகங்கள் வாசிப்பவர். நல்ல நடிகரும் கூட. அவர் திரைக்கதை, வசனம் எழுதி வரிசைப்படுத்தி இருப்பதை படிக்கும் போது அதில் அவ்வளவு நேர்த்தி தெரியும். அந்த ஸ்கிரிப்ட்டை திறமை யோடு இயக்கினாலே படம் வெற்றிதான். இன்றைய இளைஞர்களுக்கு இதை அறிவுரையாக சொல்லாமல் அனுப வமாக சொல்கிறேன். முழு ஸ்கிரிப்ட்டும் தயாரான பிறகு படப்பிடிப்புக்குப் போனால், பெரிதாக குழப்பம் இருக் காது. விரைந்து படமாக்கவும் முடியும். கட்டடம் கட்டுவதற்கு முன் கட்டட பிளானை சரியாகப் போடுவது மாதிரிதான் இதுவும்.

‘களத்தூர் கண்ணம்மா’ படத்தின் கதை, திரைக்கதை, வசனம், ஸ்கிரிப்ட் தயாரானது. செட்டியார், அவருடைய பிள்ளைகள், இயக்குநர், உதவி இயக்குநர் எல்லோரும் சுற்றிலும் இருக்க, நடுவில் ஜாவர் சீதாராமன் அமர்ந்து கதை படிப்பதைக் கேட்டுக் கொண்டிருந்தோம். அந்தக் காலத்தில் டி.கே.சண்முகம், நவாப் ராஜ மாணிக்கம் ஆகியோர் தங்களது நாடகக் கம்பெனிகளில் நாடகம் அரங்கேற்றுவதற்கு முன், இப்படித்தான் நாடகக் குழுவினரைச் சுற்றி அமர வைத்துக்கொண்டு கதையையும், காட்சி களையும் விளக்குவார்கள்.

அதே மாதிரியான சூழலில் அமர்ந்து கதை கேட்போம். ஜாவர் சார் கதை சொல்ல சொல்ல… செட்டியார் தலை யாட்டிக்கொண்டே இருப்பார். தலை ஆட்டுவதை நிறுத்தினால் ஏதோ பிரச்சினை என்று எங்களுக்குப் புரிந்து விடும். ‘மீண்டும் இரண்டு சீன் முன்னாடி படிங்க, ஜாவர் ’ என்பார். படித்ததும், ‘கதைப்படி பம்பாயில் இருப்பவன், அடுத்து உடனே சென்னையில் இருப்பது போல் இருக்கிறது. இது ஜெர்க்காக இருக்கிறதே. இதுக்கு ஒரு லீட் தேவைப்படுகிறது’ என்பார். அப்படி கதை முழுமையாக தயாராகும்போது கதையில் இப்படிப்பட்ட விஷயங்கள் முறையாக சரி செய்யப்படும்.

இறுதி யான திரைக்கதை வடிவம் தயாரானதும் முழுவதும் டைப் செய்து, பைண்ட் செய்யப்பட்டு உதவி இயக்குநர் முதல் எடிட்டிங் அறை வரைக்கும் ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு பிரதி இருக்கும். அந்தப் படம் முடியும் வரை எந்த நேரத்திலும் எந்த காட்சி பற்றி விளக்கவும் தயாராக இருக்க வேண்டும். அப்போது நாங்கள் தயாராகவே இருப்போம். சீன் நம்பரைச் சொன்னால் ஸ்கிரிப்ட்டை பார்க் காமலேயே காட்சியைக் கூறுவோம். அந்த அளவுக்கு மனப்பாடம் செய்து வைத்திருப்போம்.

‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் நான் நான்காவது உதவி இயக்குநர். முதன்முதலில் செட்டுக்கு போனதும் கிளாப் அடிக்கிற வேலை எனக்குக் கொடுக்கப்பட்டது. எடிட்டிங் அறையில் அமர்ந்து கிளாப் போர்டு இணைக்கும் வேலைகளை செய்தாலும் முதன் முதலில் படப்பிடிப்பு தளத்தில் கிளாப் அடிக்கும்போது கைகள் நடுக்கத்தோடு ஒருவித பதற்றம் ஒட்டிக்கொள்ளவே செய்தது. ஓர் அறைக்குள் அமர்ந்து டேபிளில் வேலை பார்ப்பது வேறு. அதே மாதிரி வேலையை படப்பிடிப்பு தளத்தில் எல்லோர் முன்னாலும் நின்று பார்ப்பது வேறு என்பதை உணர்ந்தேன்.

படத்தின் ஒரு வசனக் காட்சி படமாகிக் கொண்டிருந்தது. ஒரு ஷாட் எடுத்ததும், நான் கிளாப் அடிக்காமல் யோசித்தவாறே உட்கார்ந்திருந்தேன். உடனே, பிரகாஷ் ராவ், ‘முத்துராமன்... என்னாச்சு?’ என்று கேட்டார்.

நான் சுதாரித்துக்கொண்டு ‘‘சார், வரிசையாக குளோஸ்-அப் ஷாட்டாக எடுக்குறீங்க. அதை எடிட் செய்யும்போது ஜம்ப்பாக இருக்குமே’’ என்று எடிட்டிங் அறையில் பணிபுரிந்த அனுபவத்தை வைத்து அவரிடம் கேட்டேன். ‘‘நீங்க கேட்பது சரிதான். இடையே இன்டர் கட் காட்சியாக கிராமத்து காட்சி ஒன்று போடப்போகிறேன். அதற்காகத்தான் இந்த குளோஸ்-அப் காட்சியைத் தொடர்ந்து எடுக்குறேன். அதைப் போட்டால் ஜம்ப் வராது’’ என்று ஷுட்டிங்கை நிறுத்திவிட்டு எனக்கு சொல்லிக் கொடுத்தார்.

உதவி இயக்குநர்களுக்கு ‘வேலை யில் முழு ஈடுபாடு’ என்ற கருவி தான் பெரிய பக்கபலமாக இருக்கும். எந்த சந்தேகம் என்றாலும் உடனே கேட்டுத் தெளிவு பெற வேண்டும். சினிமாவின் 23 துறைகளுக்கும் தனித் தனிப் பிரிவு, தனித் தனி பொறுப்பாளர் என்று இருந்தாலும் ஒட்டுமொத்த துறையையும் சேர்த்து பார்க்கும்போது அந்தப் படத்தின் இயக்குநர்தான் தலைவர். அவரைத்தான் ‘கேப்டன் ஆஃப் தி ஷிப்’ என்று சொல்வோம். இயக்குநர் பணிபுரிவதைப் பார்த்து பல விஷயங்களை கற்றுக்கொள்வதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். அப்படி கற்றுக்கொண்ட பல விஷயங் கள் பின்னாளில் நான் இயக்குநராவதற்கு ஏணியாக இருந்தன.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-8-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D/article7200895.ece

Share this post


Link to post
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 9- ‘களத்தூர் கண்ணம்மா’ படத்துக்குள் கமல்ஹாசன் வந்த கதை!

எஸ்.பி.முத்துராமன்

 
 • ‘களத்தூர் கண்ணம்மா’ படப்பிடிப்பில் ஜெமினி கணேசன், கமல்ஹாசன்
  ‘களத்தூர் கண்ணம்மா’ படப்பிடிப்பில் ஜெமினி கணேசன், கமல்ஹாசன்
 • ‘நாம் இருவர்’ படத்தில் குமாரி கமலா
  ‘நாம் இருவர்’ படத்தில் குமாரி கமலா
 • spm2_2411589g.jpg
   

கதைக்காக நடிகர்களா? நடிகர் களுக்காக கதையா என்பது பற்றி என்றைக்குமே பட்டிமன்றம் நடந்துகொண்டேதான் இருக்கிறது. ஒரு படத்தின் கதை தயாரானதும், அடுத்த முக்கிய நகர்வு நடிகர், நடிகைகள் தேர்வுதான். ஓர் இலக்கணமாக சொல்லவேண்டும் என்றால், கதைக்கு நடிகர்களைத் தேர்வு செய்வதுதான் சரியாக இருக்கும். நடிகர்களுக்காகவே கதை உருவாக்கப்பட்டு அவையும் வெற்றிபெற்றிருக்கின்றன. (உ-ம்) ‘முரட்டுக்காளை’, ‘சகலகலா வல்லவன்’.

‘களத்தூர் கண்ணம்மா’ சமூகம் மற்றும் காதலை மையமாகக் கொண்ட களம். காதல் என்றால் ‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசன்தானே நினைவுக்கு வருவார். அவருக்கு ஜோடி நடிகையர் திலகம் சாவித்திரி.

ஜெமினி கணேசனின் அப்பா ஜமீன்தாரராக டி.எஸ்.பாலையா, சாவித்திரியின் அப்பா விவசாயியாக எஸ்.வி.சுப்பையா, படத்தில் காமெடிக்கு மனோரமா, ‘குலதெய்வம்’ராஜகோபால் என்று கதைக்குப் பொருத்தமானவர் கள் ஒவ்வொருவராக தேர்ந்தெடுக் கப்பட்டார்கள். இவர்களோடு விஷேச மான ஒருவரும் இணைந்தார். அவர்தான், இன்றைக்கு ‘உலக நாயகன்’ என்று கொண்டாடப்படுகிற கமல்ஹாசன்!

‘களத்தூர் கண்ணம்மா’படத்துக்குள் கமல்ஹாசன் வந்த கதை எப்படித் தெரியுமா?

ஒருமுறை செட்டியார் வீட்டுக்கு, ஏவி.எம் குடும்ப டாக்டர் சாரா ராமச்சந்திரன் தன்னுடன் 4 வயது சிறுவன் ஒருவனையும் அழைத்து வந்தார்.

ஏவி.எம் ராஜேஸ்வரி அம்மையாரும், சரவணன் சாரும் டாக்டரிடம், ‘‘யார் இந்தப் பையன்?’’ என்று கேட்டார்கள். ‘‘எனக்கு நடிக்கணும்னு ஆசையா இருக்கு. என்னை ஏவி.எம் ஸ்டுடி யோவுக்குக் கூட்டிட்டு போங்கன்னு கேட்டுட்டே இருந்தான். அதான் கூட்டிட்டு வந்தேன்’’ என்றார் டாக்டர்.

அருகில் இருந்த ராஜேஸ்வரி அம்மா, ‘‘சரவணா, அப்பச்சிகிட்ட இந்தப் பையனைக் கூட்டிட்டுப் போய் காட்டு’’ என்றார். சரவணன் சார் அப்பச்சியிடம் கூட்டிச் சென்று அந்தப் பையனின் நடிப்பு ஆசையைச் சொன்னார். செட்டியார் தன் பின்னால் இருந்த போகஸ் லைட் வெளிச்சத்தை, கமல் முகத் தில் போட்டு ‘எங்கே நடிச்சு காட் டுப்பா’என்றார்.

கமல் பலவிதமாக வசனம் பேசி, ஆடிப் பாடி, நடித்துக் காட்டினார். செட்டியாருக்கு அந்தப் பையனின் நடிப்பு பிடித்துப்போனது. ‘‘சரவணா, பையனை இயக்குநர் பிரகாஷ் ராவ்கிட்ட காட்டு’’ என்றார். அதற்கு சரவணன் சார் ‘‘ ‘களத்தூர் கண்ணம்மா’ சிறுவன் பாத்திரத்துக்கு டெய்சி ராணி என்ற குழந்தையைத் தேர்வு செய்துள்ளோமே’’ என்று சொன்னார். உடனே செட்டியார், ‘‘அந்தக் குழந் தையைவிட இவன் பிரஷ்ஷாக இருக்கிறான். இவனை இயக்குநரிடம் காட்டு’’ என்றார்.

ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு சரவணன் சார், கமலை கூட்டிவந்து விவரம் சொன்னார். அப்போது ஜெமினி கணேசன் அந்தப் பையனை தூக்கி ஒரு சுற்றுச் சுற்றி, ‘‘எனக்கு ஒரு ஜூனியர் வந்துட்டான்’’ என்று மகிழ்ந் தார். சாவித்திரி முத்தம் கொடுத்தார். இயக்குநர் பிரகாஷ் ராவ் அவன் நடிப் பைப் பார்த்துவிட்டு ‘டபுள் ஓ.கே’ சொன்னார். கமல் ‘களத்தூர் கண் ணம்மா’ படத்தில் குட்டி கதாநாயகன் ஆனார். முதன்முதலில் கமல் முகத்தில் செட்டியார் போட்ட வெளிச்சம், இன்னும் உலகநாயகனாக ஒளி வீசிக்கொண்டே இருக்கிறது. ஆம்! அது செட்டியாரின் கைராசி; கமலின் முகராசி!

‘களத்தூர் கண்ணம்மா’ படத்தின் கலை இயக்குநர் சாந்தாராம். செட் போடுவதில் கைதேர்ந்தவர். அவர் செட்டை ஸ்கெட்ச் போட்டுக் கொடுத் தால் போதும், அதை அப்படியே கார்பெண்டர் பிரிவு பணியாளர்கள் ஆறுமுக ஆசாரி, நாகன் ஆசாரி, மூக்கையா ஆசாரி ஆகியோர் சிறப்பாக அமைத்துவிடுவார்கள். அவர் கள் அத்தனை பேரும் கலை ஆர்வம் கொண்ட செட்டிநாட்டின் காரைக்குடியைச் சேர்ந்தவர்கள். ஏவி.எம் அமைக்கும் செட் என்றால் ‘பிரமாதம்’ என்ற பெயர் ரசிகர்களிடம் என்றும் உண்டு.

‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் பணக்கார வீடு, விவசாய வீடு, அநாதை இல்லம் என்று செட்டுக்கு கதையில் நிறைய இடம் இருந்தது. எது முதல் கட்டப் படப்பிடிப்புக்கு வேண்டும்? எது கடைசி செட்யூலுக்கு வேண் டும் என்று இயக்குநர் பிரித்துக் கொடுத்தப்படி வேலையைத் தொடங் கினோம்.

ஒரு இயக்குநருக்கு ஒளிப்பதி வாளர்தான் கண். இயக்குநர் என்ன நினைக்கிறாரோ, அதை துல்லியமாகக் கணித்து படத்தில் கொண்டுவருவது ஒளிப்பதிவாளருடைய கடமை. ‘களத் தூர் கண்ணம்மா’ படத்துக்கு ஒளிப் பதிவாளர் டி.முத்துச்சாமி. ஏவி.எம் ஸ்டுடியோ தேவகோட்டை ரஸ்தாவில் இருந்த காலகட்டத்தில் வெளிவந்த ‘வேதாள உலகம்’, ‘நாம் இருவர்’ போன்ற வெற்றிப் படங்களின் ஒளிப்பதிவாளர் இவர்.

‘நாம் இருவர்’ படத்தில் ஒரு பாடலில் ஒரே காட்சியில் நான்கு குமாரி கமலா நடனம் ஆடுகிற மாதிரி எடுத்திருப்பார். அது அந்த நாட்களில் ஆச்சரியமான தொழில் நுணுக்கமாக வும், புதுமையாகவும் கருதப்பட்டது. அதைப் போல் ‘வேதாள உலகம்’ படத்தில் தந்திரக் காட்சிகள் அவ்வளவு சிறப்பாக அமைந்திருந்தன. மிக்சல் கேமராவில் மேனுவலாக படம் பிடிக்கக் கூடிய சாதுர்யம் அவரிடம் இருந்தது.

‘களத்தூர் கண்ணம்மா’ படப்பிடிப்பு செட்டில் என்னை பார்த்ததும் ஒளிப் பதிவாளர் முத்துச்சாமி ‘‘என்ன முத்து ராமா, செட்டுக்கு வந்துட்டியா? செட்ல ஒரு படத்தில் வேலை செய்தால் 4 படங்களோட அனுபவம் கிடைக்கும் வா..வா’’ என்று வரவேற்றார்.

ஒரு விபத்தில் சிக்கி அவருக்கு ஒரு கால் கொஞ்சம் பாதிப்படைந்திருந்தது. ஒரு காட்சியில் டாப் ஷாட் வைக்க இயக்குநர் விரும்பினார். கொஞ்சம் கூட யோசிக்காமல் லைட் பாய்ஸ் ஏறும் மர ஏணியில் ஏறி, லைட் பிளாங்கில் டாப் ஆங்கிளில் கேமராவை வைத்தார். என்னை பார்த்து ‘‘ஏன் கீழே நிக்கிறே மேல வா. எப்படி டாப் ஷாட் வைக்கிறோம்னு பார்’’ என்றார். நான் மேலே ஏறிப்போய் பார்த்தேன். எனக்கு கிடைத்த புது அனுபவங்களில் அதுவும் ஒன்று.

இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான ஜித்தன் பேனர்ஜி, சரவணன் சாரிடம் கூறியது இந்த விஷயம்: ‘‘நல்ல திடகாத்திரமான ஒருவன் விறகு வெட்டிக்கொண்டிருந்தான். நான் உபயோகப்படுத்தும் பளுவான மிக்சல் கேமராவைத் தூக்கவும் டிராலியில் வைத்துத் தள்ளவும் பலசாலியான ஓர் ஆள் தேவைப்பட்டது.

அந்த விறகுவெட்டியை கூப்பிட்டு என்னோடு வைத்துக்கொண்டேன். அவன் கேமரா சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் என்னிடம் இருந்து கற்றுக்கொண்டான். அவன் யார் தெரியுமா? உங்கள் படங்களில் ஒளிப்பதிவாளராக பணி செய்கிற டி.முத்துச்சாமி’’என்றார். சரவணன் சார் அசந்துபோனார்.

முறையாக ஒரு தொழிலைக் கற்றுக் கொண்டால் விறகுவெட்டியும் சிறந்த ஒளிப்பதிவாளராக முடியும் என்பதற்கு டி.முத்துச்சாமி நல்ல சாட்சி.

 

- இன்னும் படம் பார்ப்போம்…

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-9-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/article7226503.ece

Share this post


Link to post
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 10- களத்தூர் கண்ணம்மா: பெருமையோ பெருமை!

எஸ்.பி.முத்துராமன்

 
 
 
 
 • ‘களத்தூர் கண்ணம்மா’ படப்பிடிப்பில் கமல்ஹாசனை தூக்கி வைத்திருக்கும் எஸ்பி.முத்துராமன், அருகில் கமலின் அண்ணன் சந்திரஹாசன்.
  ‘களத்தூர் கண்ணம்மா’ படப்பிடிப்பில் கமல்ஹாசனை தூக்கி வைத்திருக்கும் எஸ்பி.முத்துராமன், அருகில் கமலின் அண்ணன் சந்திரஹாசன்.
 • spm1_2418755g.jpg
   

இந்தத் தொடர் மூலம் கடந்த வாரம் பகிர்ந்துகொண்ட அனுபவங்களுக்கு நிறைய பாராட்டுகள் குவிந்தன. சில பேர் விமர்சனமும் செய்தனர். ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தை இயக்கியவர் பீம்சிங். நீங்கள் பிரகாஷ் ராவ் என்று எழுதியிருந்தீர்கள். படத்தில் பணிபுரிந்த நீங்களே இப்படி எழுதலாமா?’ என்று கேட்டிருந்தனர். வாசகர்கள் கேள்வி கேட்பதில் மகிழ்ச்சி. பதிலை எழுதி விடுகிறேன்.

‘களத்தூர் கண்ணம்மா’ படத்தை பாதி இயக்கியவர், பிரகாஷ் ராவ். ஆனால், படத்தை முடித்தது பீம்சிங். திருப்தியாக வராத காட்சியை ஏவி.எம் செட்டியார் திரும்பவும் எடுக்கச் சொன்னபோது பிரகாஷ் ராவ், ‘படமாக்கி முடித்த காட்சியை மீண்டும் படமாக்குவதற்கு எனக்கு மனம் ஒப்பவில்லை. பாதி படத்திலேயே இப்படி சொன்னால், மீதமுள்ள காட்சிகளில் என்ன சொல்வீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

அதனால் இந்தப் படத்திலிருந்து நான் விலகிக்கொள்கிறேன். நீங்கள் வேறு யாரை வேண்டுமானாலும் வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று தன் எண்ணத்தை செட்டியாரிடம் தெரிவித்தார். செட்டியாரும் ‘இனி அவர் எப்படி எடுத்தாலும் அது நமக்கு விருப்பமில்லாத மாதிரியே தெரியும். அவர் விருப்பப்படியே விட்டுவிடலாம்’என்று அவர் வேண்டு கோளை ஏற்றுக்கொண்டார்.

ஒரு இயக்குநருக்கும், தயாரிப் பாளருக்கும் இடையே பிரச்சினை; கருத்து வேறுபாடு… என்று எதுவுமே இல்லாமல் காதும் காதும் வைத்தது மாதிரி, ஒரு டேபிள் முன் இருவரும் உட்கார்ந்து பேசி, சுமூகமாக தீர்த்துக்கொண்டனர்.

சினிமாவாகட்டும், கணவன்- மனைவி வாழ்க்கையாகட்டும், குடும்பப் பிரச்சினையாகட்டும் நேரில் அமர்ந்து, மனம்விட்டுப் பிரச்சினை களை பேசினாலே எல்லாவற்றுக்கும் சுமூகத் தீர்வு காண முடியும் என்பதற்கு, இதெல்லாம் எங்களுக்கு ஒரு பாடம்!

‘நாம் இருவர்’ படத்தில் பாரதியார் பாடல்களுக்கு இசை கொடுத்து, பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கச் செய்த இசையமைப்பாளர் சுதர்சனம் தான் ‘களத்தூர் கண்ணம்மா’ படத்துக்கும் இசையமைத்தவர். ஏவி.எம்மில் மாதச் சம்பளத்துக்கு வேலை செய்த அவருக்கு உதவியாளர்களாக கோவர்த்தனம், செங்கன் போன்றோர் இருந்தனர்.

இசைக் கோப்பின்போது சுதர்சனத் துடன் ஏவி.எம்.குமரன் சாரும் அருகில் வந்தமர்வார். இசையின் மீது அலாதி யான ஆர்வமும், திறனும்கொண்ட அவர், சில சமயங்களில் விசில் அடித்தே சில டியூன்களை ஒலித்துக் காட்டுவார். அந்த அளவுக்கு இசை ஞானம் உடையவர். ஏவி.எம் படங் களின் பாடல்களுக்கு பக்கபலமாக இருந்தவர் குமரன்.

‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் சூப்பர் ஹிட் பாடல்களைத் தந்த சுதர்சனம்தான் பிரபல பின்னணிப் பாடகிகள் பி.சுசிலா, எஸ்.ஜானகி ஆகியோரை தமிழில் அறிமுகப் படுத்தியவர். எஸ்.ஜானகி சினிமாவுக்கு வந்தது ஒரு சுவையான நிகழ்ச்சி. ஏவி.எம் ஸ்டுடியோவுக்கு அஞ்சலில் ஒரு கார்டு வந்தது.

அதில், எஸ்.ஜானகி யின் அப்பா, ‘என் மகள் நன்றாகப் பாடுவாள். அவளுக்கு சினிமாவில் பாட வாய்ப்பு கொடுக்க வேண்டுகி றேன்’என்று எழுதியிருந்தார். அதைப் பார்த்த ஏவி.எம் ‘புதியவர்களிடம் திறமைகள் இருக்கும்’ என்று ஜானகியை வரவழைத்து வாய்ப்பு கொடுத்தார். ஒரே ஒரு கார்டிலேயே மிகப் பெரிய பின்னணிப் பாடகி யாகிவிட்டார் அவர்.

‘களத்தூர் கண்ணம்மா’படத்தில், ஆசிரமத்தில் வளரும் கமல்ஹாசன் பள்ளியில் படிப்பார். அங்கு ஆசிரியையாக வேலைக்கு சேரும் சாவித்திரி, அநாதை பையனான கமல் மதியவேளை சாப்பாடு இல்லாமல் தண்ணீர் குடிப்பதைக் கவனிப்பார். அப்போது இந்தப் பையன் தன்னுடைய மகன் என்பது சாவித்திரிக்குத் தெரியாது. கமலுக்கு அங்கே காலை, மாலை மட்டும்தான் சாப்பாடு என்கிற விஷயம் சாவித்திரிக்குத் தெரிய வர, ‘‘இனிமே நான் உனக்குச் சாப்பாடு கொடுக்கிறேன்’’ என்று தான் கொண்டுவந்த உப்புமாவை கமலுக்கு ஊட்டிவிட போகிற மாதிரி ஒரு காட்சி.

அந்தக் காட்சியை படமாக்கும் போது எவ்வளவோ சொல்லியும் கமல்ஹாசன் அந்த உப்புமாவை சாப்பிட மறுத்தார். கமலுடைய அண்ணன் சந்திரஹாசன் சொல்லிப் பார்த்தார். கேட்கவில்லை. செட்டுக்கு வெளியே தூக்கிக்கொண்டுபோய் ‘ஏன், சாப்பிட மாட்டேங்குறே’ என்று கேட்டால், ‘இதுக்கு முன்னால மாந்தோப்புல நடிச்சேன். அந்தத் தோப்புல தொங்கிய மாங்காயெல்லாம் பேப்பர் மாங்காய். இங்கே சுத்தி இருக்குற சுவரெல்லாம் அட்டை சுவர். இந்த உப்புமாவும் மண்ணாத்தான் இருக்கும். சினிமாவே பொய்; உப்புமாவும் பொய்’ என்றார்(ன்).

நான், சாவித்திரி, இயக்குநர், சந்திர ஹாசன் எல்லோரும் கமல் முன்னே அந்த உப்புமாவை சாப்பிட்டுக் காட்டி னோம். அதன் பிறகே கமல் அதை சாப்பிட்டார். அந்த வயதில் கமலுக்கு அப்படி ஒரு கேள்வி ஞானம்!

படப்பிடிப்புக்கு இடையே கொஞ்சம் பிரேக் கிடைத்தாலும் மற்ற குழந்தைகள் செட்டுக்கு வெளியே விளையாட ஓடிவிடுவார்கள். கமல் மட்டும் ஸ்டுடியோவுக்குள் உள்ள பிரிவியூ தியேட்டரில் படம் பார்க்க சென்றுவிடுவார். படம் பார்ப்பதோடு நின்றுவிடாமல், அங்கே பார்த்த காட்சிகளை செட்டுக்கு வந்து எங்களிடம் நடித்தும் காட்டுவார்.

‘களத்தூர் கண்ணம்மா’ படம் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்ட நாட்களில், தமிழ்நாட்டின் ஒவ்வொரு தியேட்டருக்கும் சென்று மக்கள் முன் ஆட்டம் பாட்டம் என்று தனியாளாக நடத்திக் காட்டி மக்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்த பெருமை கமலுக்கு உண்டு. நட்சத்திர அந்தஸ்தை குழந்தையிலேயே பெற்றவர் கமல்!

‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் கமலை அறிமுகப்படுத்தியதில் ஏவி.எம்முக்குப் பெருமை.

கமலை தூக்கி வளர்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது பெருமையிலும் பெருமை.

‘களத்தூர் கண்ணம்மா’ படப்பிடிப்பில் கமலை நான் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் புகைப் படத்தை கமல், பல ஆண்டுகள் பாதுகாத்து எனக்குப் பரிசாகக் கொடுத்தது பெருமையோ பெருமை!

- இன்னும் படம் பார்ப்போம்...

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-10-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/article7250459.ece

Share this post


Link to post
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 11 - "பீம்சிங் அல்ல 'பா'ம்சிங்"

எஸ்.பி.முத்துராமன்

 
 
 • ‘களத்தூர் கண்ணம்மா’ (தமிழ்)
  ‘களத்தூர் கண்ணம்மா’ (தமிழ்)
 • மோக நூமு (தெலுங்கு)
  மோக நூமு (தெலுங்கு)

‘களத்தூர் கண்ணம்மா’ படத்தை பிரகாஷ்ராவை அடுத்து இயக்குநர் பீம்சிங் தொடர்ந்து இயக்குவதற்கான வேலைகள் ஏவி.எம். ஸ்டுடியோவில் தொடங்கின. இதற்கு முன் எடுத்த காட்சிகளை வைத்துக்கொண்டு மேலும் படத்தை எப்படி நகர்த்தலாம் என்று படக் குழுவினருடன் பீம்சிங் கலந்தாலோசித்து எடுத்த அந்தப் படம், மிகப் பெரிய வெற்றி பெற்றது.

பீம்சிங் முதன்முதலில் இயக்கிய ‘செந்தாமரை’ வெளிவர தாமதமானதால், ‘அம்மையப்பன்’ என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். அந்தப் படம் தோல்வியைத் தழுவியது. அதற்காக பீம்சிங் துவண்டுவிடாமல் அடுத்தடுத்த வெற்றியை நோக்கி பயணப்பட்டு, ‘பா’ வரிசைப் படங்களை வெற்றிகரமாகக் கொடுத்துக்கொண்டிருந்தார். ‘பதிபக்தி’, ‘பாலும் பழமும்’, ‘பாவ மன்னிப்பு’, ‘பாசமலர்’, பார்த்தால் பசி தீரும்’, ‘பார் மகளே பார்’ உள்ளிட்ட அவரது ‘பா’ வரிசைப் படங்களில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கும். ஏவி.எம். சரவணன் சார் ‘இவர் பீம்சிங் இல்லப்பா… பாம்சிங்’ என்பார். இந்த ‘பா’ வரிசைப் படங்களுக்கு பீம்சிங்குக்குப் பக்கபலமாக இருந்தவர் எடிட்டர் ஏ.பால்துரைசிங்கம்.

தமிழகத்தின் சிறந்த எடிட்டர்களில் ஒருவரான எடிட்டரும், இயக்குநருமான பி.லெனின், பாரதிராஜா படங்களின் ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் இருவரும் பீம்சிங்கின் மகன்கள். அவரைப் போலவே இவர்களும் திரையில் முத்திரை பதித்து வருகிறார்கள்.

‘களத்தூர் கண்ணம்மா’ தெலுங்கில் ‘மோக நூமு’ என்கிற பெயரில் டி.யோகானந்த் இயக்கத்தில் ரீமேக் செய்யப்பட்டது. படத்தில் விவசாயி எஸ்.வி.சுப்பையாவின் மகள் சாவித்திரி கர்ப்பமானதற்குக் காரணம் தன் மகன் என்று டி.எஸ்.பாலையாவுக்குத் தெரியவரும். மகள் இப்படி நிலைகுலைந்து நிற்கிறாளே என்கிற கோபத்தில் ‘அவன் யாரு… சொல்லு? சொல்லுலேன்னா உன்னைக் கொன்னுடுவேன்’ என்று எஸ்.வி. சுப்பையா கோபத்தில் கையைத் தூக்குவார். அந்த சமயம் அங்கு வரும் பாலையா ‘அந்தப் பொண்ண கொன்னுட்டா, நீ கொலையாளி ஆகிடுவே. பொண்ணுக்கு மானம் போயிடும். இதுக்கு ஒரே வழி. பேசாமல் அவளை கூட்டிட்டு வெளியூருக்குப் போயிடு’ என்று தன் மகன் செய்த தவறை மறைத்து, எஸ்.வி. சுப்பையாவுக்கு உதவுவதைப் போல சாதூர்யமாகப் பேசி, வெளியூருக்கு அனுப்பி வைப்பார். பாலையாவின் நடிப்பில் மிளிர்ந்த சிறந்த காட்சி அது.

இதே காட்சியைத் தெலுங்கில் எடுக்கும்போது சாவித்திரி நடித்த ரோலில் ஜமுனாவும், எஸ்.வி.சுப்பையாவுக்கு பதில் வி.நாகையாவும், பாலையாவுக்கு பதில் எஸ்.வி.ரங்கா ராவும் நடித்தார்கள். மெய்யப்ப செட்டியார் என்னை அழைத்து, ‘அந்தக் காட்சியைப் படமாக்குவதற்கு முன் ரங்காராவ்கிட்ட தமிழில் பாலையா நடித்த காட்சியை போட்டுக் காட்டு. அதைப் பார்த்துவிட்டு நடிக்கட்டும்’ என்றார். ரங்கா ராவிடம் சென்று ‘‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் இடம்பெற்ற காட்சியை ஒரு தடவை பார்த்துவிட்டு செட்டியார் உங்களை நடிக்கச் சொன்னார்’’ என்று சொன்னேன். ‘‘வேண்டாம். அதைப் பார்த்தால் பாலையா நடிப்போட பாதிப்பு வந்துடும்’ என்றார் ரங்கா ராவ். ‘‘செட்டியார் கோபப்படுவாரே…’’ என்ற என்னிடம் ‘‘நான் செட்டியார்கிட்ட சொல்லிக்கிறேன்…’’ என்று சொல்லி விட்டு அந்தக் காட்சியில் நடித்தார்.

படப்பிடிப்பு முடிந்ததும் செட்டியார் அந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு என்னை அழைத்து, ‘‘ஏம்பா… முத்துராமா. தமிழ்ல பாலையா நடிச்சதை ரங்கா ராவ் பார்த்தாரா?’’ என்று கேட்டார். நான் ரங்கா ராவ் சொன்னதை அவரிடம் சொன்னேன். ‘‘மக்கு மக்கு… நீயெல்லாம் 100 சதவீதம் யூஸ்லெஸ்’’ என்று என்னைத் திட்டிவிட்டு, ‘‘ரங்காராவை என்னிடம் போனில் பேசச் சொல்லு’’ என்றார். உடனே அவர் செட்டியாரிடம் பேசினார். அவரிடம் செட்டியார் ‘‘எனக்காக ஒருமுறை தமிழில் எடுத்திருக்கும் காட்சியைப் பாருங்க’’ என்று சொல்ல, ரங்கா ராவ் செட்டியாருடன் அமர்ந்து படத்தை பார்த்தார்.

எஸ்.வி.சுப்பையாவுக்கு சப்போர்ட் பண்ணுகிற மாதிரி பாலையா சாதூர்யமாகப் பேசி, அவர்களை வெளியூருக்கு அனுப்பும் காட்சியை பார்த்த ரங்கா ராவ், ‘‘பாலையா தந்திரமா, அருமையா நடிச்சிருக்கார். இந்த நடிப்பை நான் மிஸ் பண்ணிட்டேன். ஸாரி சார். அந்தக் காட்சியைத் திரும்ப எடுத்துவிடலாம்’’ என்றார். திரும்பவும் அதை எடுத்தப் பிறகு காட்சி மேலும் பிரமாதமாக வந்திருந்தது.

அன்று என்னை செட்டியார் ‘மக்கு மக்கு 100 சதவீதம் யூஸ்லெஸ்’ என்று திட்டியதால்தான் இன்றைக்கு 100 சதவீதம் யூஸ்ஃபுல்லாக இருப்பதாக நினைக்கிறேன். மேல்அதிகாரிகள் திட்டும்போது, அவர்கள் ஏன் திட்டுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டால், தவறைத் திருத்திக் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பதை இன்றைய தலை முறைக்கு சொல்லிக்கொள்ள ஆசைப் படுகிறேன்.

old_2426114a.jpg

‘பாவமன்னிப்பு’ சிவாஜி - பீம்சிங் - சந்திரபாபு

‘சகோதரி’ படத்தை பீம்சிங் இயக்கிக்கொண்டிருந்த நேரத்தில் சந்திரபாபுவின் கதை ‘அப்துல்லா’வை படமாக்க நினைத்தார் பீம்சிங். நாயகன் இந்துவாகப் பிறந்து, முஸ்லிமாக வளர்ந்து, கிறிஸ்துவப் பெண்ணை மணம் முடித்துக்கொள்வது போன்ற கதை. இதை ஏவி.எம்.சரவணன் சாரிடம் பீம்சிங் சொன்னதும், அவருக்கும் பிடித்து, அவர் செட்டியாரிடம் சொல்ல பாட்னர்ஷிப்பில் படத்தை எடுக்கலாம் என்று முடிவானது.

வலம்புரி சோமநாதன், சோலை மலை, இறைமுடி மணி, கு.மா.பால சுப்ரமணியம், பாசுமணி ஆகியோர் கொண்ட ஒரு கதைக் குழுவை பீம்சிங் வைத்திருந்தார். குழு விவாதம் என்று அமர்ந்துவிட்டால் விவாதங்களில் சூடு பறக்கும். பீம்சிங்குக்கு இணை இயக்குநர்களாக இருந்த திருமலை, மகாலிங்கம், ராமநாதன் மூவருமே யார், யார் என்னென்ன பேசினார்கள் என்பதை குறிப்பெடுத்து வைத்துக்கொள்வார்கள். பின்னர், அவர்கள் மீண்டும் ஒரு விவாதத்தில் அமர்ந்து முன்பு பேசப்பட்டதில் சுவாரஸ்யமான நல்ல விஷயங்களைத் தனியே எடுத்துக் கொண்டு, வைரத்தை பட்டைத் தீட்டுவது மாதிரி கதையின் தன்மையை மிகச் சிறப்பாக வடிவமைப்பார்கள்.

இப்படி சிறந்த முறையில் வடிவமைத்த பிறகு சரவணன் சாரிடம் ‘‘அப்துல்லா கதையை டெவலப் செய்ததில் ரொம்ப நல்லா வந்துள்ளது. ஆனால், இந்தக் கதைக்கு சந்திரபாபு நாயகனாக நடிக்க முடியாது. கதாபாத்திரம் மிக உணர்ச்சிகரமாக அமைவதால் சிவாஜிதான் அந்த பாத்திரத்தில் ஜொலிக்க முடியும்’ என்றார் பீம்சிங். ‘‘கதை சந்திரபாபுவுடையது. அவர் ஹீரோ இல்லேன்னா எப்படி சார்?’’ என்று சரவணன் சார் தயங்கினார். ‘‘ நான் சந்திரபாபுகிட்ட பேசி ஒப்புதல் வாங்கிவிட்டேன்’’ என்று கூறி, பீம்சிங் பெரிய பெரிய நட்சத்திரங்களை நடிக்க வைத்து, பெரிய பட்ஜெட்டில் எடுத்த படம்தான் ‘பாவமன்னிப்பு’.

பீம்சிங் படங்களுக்கு பெரும்பாலும் கவியரசர் கண்ணதாசன்தான் பாடல்கள் எழுதுவார். மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்திதான் இசையமைப்பாளர்கள். அந்த இசைக் கோர்வையில் (மியூசிக் கம்போஸிங்) அப்படி ஓர் இனிமை, குளுமை, ஒருங்கிணைப்பு இருக்கும்.

அப்படி ஓர் இசைக் கோர்வை நிகழும் இடத்துக்கு கவியரசர் கண்ணதாசன் வந்தார். எம்.எஸ்.வியைப் பார்த்து ‘‘விசு.. இன்னைக்கு மெட்டுக்குப் பாட்டா… பாட்டுக்கு மெட்டா?’’ என்று கேட்டார். அது என்ன கேள்வி? அதற்கு என்ன பதில்..?

- இன்னும் படம் பார்ப்போம்...

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-11-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/article7275649.ece

Share this post


Link to post
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 12 - மெட்டுக்குப் பாட்டா? பாட்டுக்கு மெட்டா

எஸ்பி.முத்துராமன்

 
 • sp_2433973g.jpg
   
 • spm_2433972g.jpg
   

மெட்டுக்குப் பாட்டா? பாட்டுக்கு மெட்டா என்ற கேள்விக்குறியோடு சென்ற வாரம் முடித்திருந்தேன். மெட்டுக்குப் பாட்டு எனும்போது பொதுவாக ஒரு கிளப் டான்ஸ் என்றால் இயக்குநரோடு கலந்து பேசி, இசையமைப்பாளர் மெட்டுப் போட்டு வைத்திருப்பார். கவிஞரிடம் விவரத்தைக் கூறி, அந்த மெட்டை இசைத்துக் காட்டுவார்கள். அந்தத் தத்தகாரத்துக்கு ஏற்ற வார்த்தைகள் துல்லியமாக கவிஞரிடம் இருந்து வந்து விழும். இதுதான் மெட்டுக்குப் பாட்டு!

பாட்டுக்கு மெட்டு என்றால் படத்தின் திரைக்கதையில் வரும் சூழலுக்கு ஏற்ற பாடல். இயக்குநர் கதைக் களத்தின் காட்சியை கவிஞரிடம் கூறி, படத்தில் இந்தச் சூழல் ரசிகனுக்கு உணர்த்தப்படும் வகையில் பாடல் வேண்டும் என்று கேட்பார். கதையின் காட்சியை உள்வாங்கிக்கொண்ட கவிஞர், அதனை மையமாக வைத்து முழு சுதந்திரத்துடன் பாடலை எழுதிக்கொடுப்பார். அந்தப் பாட்டுக்கு இசையமைப்பாளர்கள் இசையமைப்பார்கள். இதுதான் பாட்டுக்கு மெட்டு!

கவியரசரின் பாடலைக் கேட்டாலே கதையின் ஆழமும், காட்சியின் நேர்த்தி யும் தெரிய வந்துவிடும். பாட்டு கதையோடு இணைந்து வருவதால் மக்கள் மனதில் பதிந்துவிடும். உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். ‘பாசமலர்’ படத்தில் அண்ணன் சிவாஜிகணேசன் நடிப்பில் மலரும் பாட்டு,

‘மலர்களைப் போல்

தங்கை உறங்குகிறாள்

அண்ணன் வாழ வைப்பான்

என்று அமைதி கொண்டாள்

கலைந்திடும் கனவுகள்

அவள் படைத்தாள்

அண்ணன் கற்பனைத் தேரினில்

பறந்து சென்றான்…’

- என்ற பாடல் காட்சி. எத்தனையோ ஆண்டுகள் கடந்து சென்றாலும் இந்தப் பாட்டு பசுமரத்தாணிபோல் மக்கள் மனதில் பதிந்துவிட்டது. இதுபோலத்தான் கவியரசு கண்ணதாசனின் பல ஆயிரம் பாட்டுகளும் கதையோடு சேர்ந்து வந்ததாகும். அவருடைய பாட்டில் இலக்கியமும், வாழ்வியலும், தத்துவங்களும் தமிழாக வந்து கொட்டும்.

குற்றால அருவியில் சீசனில்தான் நீர் கொட்டும். ‘கவிஞரின் தமிழ் அருவி 365 நாட்களும் கொட்டும்’. சில காட்சிகளுக்குக் கடகடவென்று மூன்று, நான்கு பல்லவிகளை சொல்லிவிடுவார். ஒன்றுக்கு ஒன்று சிறப்பாக இருக்கும். அதில் எதைத் தெரிவுசெய்வது என்பதே இயக்குநர்களுக்குப் பெரிய வேலையாகிவிடும்.

கவியரசர் எழுதிய பாட்டை வாங்கி எம்.எஸ்.வி படித்தவுடனேயே அதற்கு சரியான ஒரு ராகத்தில் இசையமைப்பார். ‘‘இந்தப் பாட்டுக்கு இந்த ராகத்தை எப்படிண்ணே தேர்ந்தெடுத்தீங்க?’’ என்று எம்.எஸ்.வியிடம் கேட்டால், ‘‘கவிஞரின் பாடலிலேயே ராகம் இருக்கிறது’’ என்பார் சிரித்துக்கொண்டே.

ஒரு சில நேரங்களில் கவிஞர் பாடலைச் சொல்லச் சொல்ல, அதனை இராம.கண்ணப்பன் எழுதிக் கொடுப்பார். எம்.எஸ்.வி. படித்துவிட்டுத் தயக்கம் காட்டுவார். அதில் கவிதை நயம் இல்லாமல் இருக்கும். பக்கத்தில் இருக்கும் மூத்த தபேலா கலைஞர் அனுமந்த், ‘‘இதை எழுதுறதுக்கு கவிஞர் வேணுமா? புதுசா வந்திருக்கிறவங்களே எழுதுவாங்களே’’ என்று சூடு ஏற்றிவிடுவார்.

அதைத் தவறாக எடுத்துக்கொள்ளாமல் ‘‘அனுமந்த்… இப்போ பாரு…’’ என்று வேறு வரிகளைச் சொல்வார் கவிஞர். அனுமந்த் கைதட்டி ‘‘இதுதான் கவிஞர் முத்திரை…’’ என்பார். அங்கே நல்லதொரு மெல்லிசையும் பிறந்துவிடும்.

இந்த இடத்தில் இராம.கண்ணப்பனைச் பற்றிச் சொல்ல வேண்டும். பஞ்சு அருணாச்சலத்துக்குப் பிறகு கவிஞருக்கு உதவியாளராக வந்தவர்தான் இவர். கவிஞரோடு கனிவுடன் மிகுந்த ஈடுபாட்டோடு பணிபுரிந்தவர். கவிஞரின் படைப்புகளை, எழுத்துகளைப் பத்திரமாக பாதுகாத்து வைத்து, அவையெல்லாம் நூல் வடிவம் பெறுவதற்குக் காரணமாக இருந்தவர். நன்றியோடு இவரைப் பாராட்டலாம்.

ஒருமுறை, ஒரு பாட்டை எழுதி வாங்குவதற்காக கவிதா ஓட்டலுக்கு நான் சென்றிருந்தேன். அங்கே கவிஞர் அங்கும் இங்கும் நடந்துகொண்டு இருந்தார். அவரது முகத்தில் ஏதோ ஒரு பரபரப்பு. பத்திரிகை, படத் தயாரிப்பு, பல இதழ்களுக்குக் கட்டுரை எழுத வேண்டிய சூழல்... குடும்பம், அதிகமான பிள்ளைகள், வரவுக்கு மேல் செலவு, அரசியல் குழப்பங்கள் இத்தனைக்கும் இடையில் அவர் பாட்டு எழுத வேண்டும். கவிதா ஓட்டல் நிர்வாகி மக்களன்பனிடம் ‘‘கவிஞர் இன்று இந்தப் பாட்டை எழுதிவிடுவாரா?’’ என்று நான் கேட்டேன்.

‘‘நிச்சயம் எழுதிவிடுவார்…’’ என்றார் அவர். அவர் சொன்னபடியே அந்தப் பாட்டை நன்றாகவே எழுதிக் கொடுத்தார். மக்களன்பனிடன் ‘‘எழுதிடுவார்னு எப்படி உறுதியா சொன்னீங்க’’ என்றேன். ‘‘இங்கே கடன்காரர் ஒருவர் காத்துக் கொண்டிருந்தார்.

அங்கே பாருங்கள் கம்பெனி கொடுக்குற பணத்தை அந்தக் கடன்காரருக்குக் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்’’ என்றார். கவிஞரைப் போல் சம்பாதித்தவரும் இல்லை. கடன்பட்டவரும் இல்லை. முதலுக்கு மேல் வட்டிக் கட்டியவரும் இல்லை. உழைக்கத் தெரிந்த கவிஞருக்கு கடைசி வரை பிழைக்கவே தெரியவில்லை. கவிஞரை முழுதுமாக அறிந்துகொள்ள வேண்டுமென்றால், அவர் எழுதிய ‘வனவாசம்’, ‘மனவாசம்’ புத்தகங்களைப் படிக்க வேண்டும்.

ஏவி.எம் ஸ்டுடியோவில் ஒரு பாடலை ஒலிப்பதிவு செய்வதற்காக எம்.எஸ்.வி. இசை ஒத்திகை பார்த்துக்கொண்டிருந் தார். இயக்குநரும், ஏவி.எம் செட்டியாரும் கவிஞர் எழுதிய பாடலைப் படித்துவிட்டு, ‘‘சரணத்தில் வந்துள்ள கருத்து ரொம்ப நல்லா இருக்கு. ஆனா, இந்தக் கருத்தை பல்லவியில் கொண்டுவந்தா திரும்பத் திரும்ப அது வரும்.

ஆகவே சரணத்தைப் பல்லவியாக்கி, பல்லவியை சரணமாக்கினா நல்லா இருக்குமே’’ என்று கருதினார்கள். செட்டியார் என்னை அழைத்து ‘‘முத்துராமா நீயே போய் கவிஞரிடம் விவரத்தைக் கூறி, பாட்டை மாற்றி எழுதி வாங்கிட்டு வா. பின்னணிப் பாடகர்கள் வருவதற்குள் பாட்டெழுதிக் கொண்டு வந்துவிட வேண்டும்’’ என்று சொன்னார். சரி என்று சொல்லிவிட்டு காரை எடுத்துக்கொண்டு நான் புறப்பட்டேன்.

கவிஞர் வீட்டிலும் இல்லை. அலுவல கத்திலும் இல்லை. சினிமா கம்பெனிகளில் போய் பார்த்தால் அங்கேயும் இல்லை. என்ன செய்வதென்று புரியாமல் குழப்பத்தோடு காரில் நான் வந்துகொண்டிருந்தேன். அப்போது ஜெமினி அருகே காரில் கவிஞர் போய்க் கொண்டிருப்பது தெரிந்தது. என் கார் டிரைவரிடம், ‘‘கவிஞருடைய காரை மடக்கு’’ என்று கூறினேன். டிரைவர் காரை வேகமாகக் செலுத்தினார். சினிமா சேஸைப் போல கவிஞருடைய காரை எங்கள் கார் துரத்தியது.

நான் கவிஞரை மடக்கினேனா? பாட்டை மாற்றி எழுதி வாங்கினேனா..?

 

- இன்னும் படம் பார்ப்போம்...

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-12-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/article7301643.ece

Share this post


Link to post
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 13- சினிமாவுக்குள் நுழைந்த எம்.எஸ்.வி!

 

 • பாடல் ஒலிப்பதிவில் பீம்சிங், முகுல் போஸ், விஸ்வநாதன்-ராமமூர்த்தி.
  பாடல் ஒலிப்பதிவில் பீம்சிங், முகுல் போஸ், விஸ்வநாதன்-ராமமூர்த்தி.
 • ‘தெய்வப் பிறவி’ படத்தில் அங்கமுத்து, சுந்தரிபாய், எஸ்பி.முத்துராமன்.
  ‘தெய்வப் பிறவி’ படத்தில் அங்கமுத்து, சுந்தரிபாய், எஸ்பி.முத்துராமன்.
 • spm_2441611g.jpg
   

கவிஞர் கண்ணதாசனின் காரைப் பின்தொடர்ந்து சென்று, ஒருவழி யாக அவரது காரை சேஸ் செய்து நிறுத்தினோம். கவிஞர் என்னை பார்த்துவிட்டு, ‘‘ஏன் இந்த பதற்றம்?’’ என்று கேட்டார்.

ஸ்டுடியோவில் பாடல் ஒலிப்பதிவு நடந்துகொண்டிருப் பதையும், செட்டியார் சொன்ன செய்தியை யும் அவரிடம் சொன்னேன். காரில் இருந்தபடியே சரணத்தை பல்லவியாக வும், பல்லவியை சரணமாகவும் மாற்றிக் கொடுத்தார் கவிஞர். வாங்கிக்கொண்டு ஸ்டுடியோவுக்குப் பறந்தேன்.

இந்த நேரத்தில் கவிஞரின் ஓட்டுநர் சிட்டிபாபுவைப் பற்றி சொல்ல வேண்டும். அவர் சென்னைத் தமிழ்தான் பேசுவார். அதில் பாசம் இருக்கும். கவிஞர் இரவில் கூட்டங்கள் முடிந்து களைப்புடன் காரில் வருவார். சிட்டிபாபு, ‘‘கவிஞா அந்த டீக் கடையில் மசாலா டீயும், மசாலா வடையும் மஜாவா இருக்கும். துண்றியா?’’ என்று கேட்பார். கவிஞர் சிரித்துக்கொண்டே வாங்கி வரச் சொல் வார். மசால் வடையை செய்தித்தாளில் மடித்து கொண்டுவந்து கொடுப்பார்.

அப்படித்தான் ஒரு தடவை சிட்டிபாபு வாங்கி வந்து கொடுத்த மசால் வடையை ரசித்து சாப்பிட்டப் பிறகு, வடை இருந்த செய்தித்தாளில் கையைத் துடைக்கப் போனவர், அதில் அச்சாகியிருந்த பட்டினத்தார் பாட்டை படித்தார்.

அந்தப் பாட்டில் சாறு எடுத்ததுதான் ‘வீடு வரை மனைவி, வீதி வரை உறவு, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ’ பாடலாகும். அர்ச்சுனனுக்கு தேரோட்டி கண்ணன் என்றால் கண்ணதாசனுக்கு காரோட்டி சிட்டிபாபு!

ஸ்டுடியோவுக்கு வந்து செட்டியாரிடம் பாடல் வரிகளைக் கொடுத்ததும், அதை வாங்கி பார்த்துவிட்டு, ‘இதுக்குத்தான் உன்னை அனுப்பினேன்’ என்று பாராட்டி னார். மகிழ்ச்சியாகவும், பெருமையாக வும் இருந்தது. கவியரசரிடம் இருந்து மாற்றி எழுதி கொண்டுவந்த பாடலை வைத்து எம்.எஸ்.விஸ்வநாதன் இசை ஒத்திகை பார்க்கத் தொடங்கினார்.

அப்போது செட்டியார் அவர்கள் எம்.எஸ்.வி-யை அழைத்து, ‘‘பேக்ரவுண்ட் மியூசிக் அதிகமாக வேண்டுமானாலும் இருக்கட்டும். பாட்டில் வார்த்தை தெளிவாக புரிய வேண்டும். வார்த்தை வரும் இடத்தில் இசையைக் குறைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார். ஏவி.எம் படப் பாடல்களை எல்லாம் கேட்கும்போது வார்த்தைகள் நன்றாக புரிவதற்கு இதுதான் காரணம்.

இந்திய அளவில் சிறந்த ஒலிப்பதிவாளராக (சவுண்ட் இன்ஜினீயர்) திகழ்ந்தவர் முகுல் போஸ். மும்பையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அவர் சென்னை ஏவி.எம் ஸ்டுடியோவில் வேலைக்குச் சேர்ந்தார். அவரிடம் பயிற்சி பெற்று எஸ்.பி.ராமநாதன், ஜே.ஜே. மாணிக்கம், சி.டி. விஸ்வநாதன், சம்பத் ஆகியோர் சிறந்த சவுண்ட் இன்ஜினீயர்களாக உருவானார்கள்.

இவர்களில் எஸ்.பி.ராமநாதன் பல தேசிய விருதுகளை பெற்றார். ஜே.ஜே.மாணிக்கமும், சம்பத்தும் தென்னக மொழி களில் அதிக படங்களுக்கு சவுண்ட் இன்ஜினீயர்களாக பணியாற்றி சாதனை படைத்தார்கள். இவர்கள் அத்தனை பேரின் ஒலிப்பதிவிலும் இசையும், பாடல்களும் மிகத் தெளிவாக இருக்கும்.

எம்.எஸ்.வி சினிமாவுக்குள் நுழைந்ததே ஒரு நெகிழ்வான நிகழ்ச்சி. எம்.எஸ்.வி பள்ளிக்கு போகும் வழியில் நீலகண்ட சாஸ்திரி என்ற வித்வான் தனது வீட்டில் சிறுவர்களுக்கு பாட்டுச் சொல்லிக்கொடுப்பதைப் பார்த்திருக் கிறார். பள்ளிக்கூடம் போகும்போதெல் லாம் வித்வான் பாட்டு கற்றுக் கொடுப்பதை உள்வாங்கியிருக்கிறார். ஒருநாள் வித்வான், சொல்லிக்கொடுத்த பாட்டை பாடும்படி கூறியபோது எந்த மாணவர்களும் பாடவில்லை.

வாசலில் நின்ற எம்.எஸ்.வி அந்தப் பாட்டை பாடியிருக்கிறார். வித்வான் இவரைப் பார்த்து ‘‘யாரப்பா நீ? பணம் கொடுத்து பாட்டு கற்றுக்கொள்ளும் இவர்களுக்கு பாட்டு வரவில்லை. நீ அழகாக பாடுகிறாயே!’’ என்று எம்.எஸ்.வியை வீட்டுக்குள் அழைத்து, அவருக்குத் தொடர்ந்து பாட்டுச் சொல்லிக் கொடுத்ததுடன், விஸ்வநாதன் மேடை ஏறி அரங்கேற்றம் செய்யவும் ஏற்பாடு செய்திருக்கிறார்.

அதன் பிறகு எம்.எஸ்.விக்கு இசை யமைக்க வேண்டும், நடிக்க வேண்டும் என்கிற ஆசைகள் மலர்ந்துள்ளன. ஊரில் இருந்து கிளம்பி கோவை ஜூபிடர் பிக்சர் நிறுவனத்தில் ஒரு எடுபிடியாக வேலைக்கு சேர்ந்து, அதன் பிறகு அங்கே இருந்த இசையமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடுவிடம் ஏகலைவன் நிலையில் இருந்து திரை இசை நுணுக் கங்களைக் கற்றுக்கொண்டுள்ளார்.

ஒருமுறை சுப்பையா நாயுடு ஒரு மெட்டு அமைப்பதற்கான முயற்சியில் இருந்த போது, அதை கவனித்த எம்.எஸ்.வி அந்தச் சூழலுக்கு ஒரு மெட்டை அமைத்து சுப்பையா நாயுடுவிடம் வாசித்துக் காட்டியுள்ளார். சுப்பையா நாயுடு தயாரிப்பாளருக்கு அந்த மெட்டை வாசித்துக் காட்ட, அவருக்கும் அது பிடித்துபோய்விட்டது. எம்.எஸ்.வியின் மெட்டு என்று சொல்லப்படாமலேயே பாட்டு ஒலிப்பதிவானது. அந்த சமயத்தில் ஜூபிடர் பிக்சர்ஸை கோவையில் இருந்து சென்னைக்கு மாற்ற ஏற்பாடானது.

அப்போது, எஸ்.எம்.சுப்பையா நாயுடு ‘‘ஒலிப்பதிவான அந்தப் பாட்டை நான் இசையமைக்கவில்லை. எம்.எஸ்.விஸ்வநாதன்தான் இசையமைத்தான்’’ என்கிற உண்மையை கூறி ‘‘அவனையும் சென்னைக்கு அழைத்துப் போங்க. அவன் பெரிய ஆளா வருவான்’’ என்று கூறியிருக்கிறார். அந்த வார்த்தைதான் எம்.எஸ்.வியின் இசைப் பயணத்துக்குப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பின்னாளில் பொருளாதாரரீதியில் ரொம்ப வும் கஷ்டப்பட்ட எஸ்.எம்.சுப்பையா நாயுடுவை தன் வீட்டுக்கு அழைத்து வந்து தன் வீட்டிலேயே வைத்துக்கொண்டார் எம்.எஸ்.வி.

அவர் இறந்தபோது ஒரு மகனைப் போல அவரது இறுதிச் சடங்கை முன்நின்று நடத்தி, தன் குருவுக்கு கொள்ளி வைத்தார். இதுதான் குரு பக்தி. மெல்லிசை மன்னர்களைத் தேடி வெற்றிகள் வந்ததற்குக் காரணம் ஈடுபாடு, திறமை, தன்னம்பிக்கை, கடுமையான உழைப்பு, குருபக்தி ஆகியவைதான்! இளைஞர்கள் இவர்களை உதாரண மனிதர்களாக (ரோல் மாடல்) எடுத்துக்கொண்டு வாழ்க்கையில் அவர்களைப் போல முன்னேற வேண்டும்; வெற்றி அடைய வேண்டும்.

கிருஷ்ணன் - பஞ்சு ஏவி.எம் ஸ்டுடியோவின் சமஸ்தான இயக்குநர் கள். 20 ஆண்டுகளில் 11 தமிழ் படங்கள், 7 ஹிந்திப் படங்கள், 4 தெலுங்குப் படங்களை இயக்கியவர்கள். ‘பராசக்தி’ படத்தை பார்த்ததால்தான் எனக்கு சினிமா ஆசையே வந்தது என்று முன்பே கூறியிருந்தேன். அந்தப் படத்தை இயக்கியவர்கள் கிருஷ்ணன் - பஞ்சு. பகுத்தறிவு கருத்துகளையும், சமூக கருத்துகளையும் திரைப்படங்களில் ஆழமாக பதிய வைத்தவர்கள்.

பெரியவர் கிருஷ்ணன் கதை, பாடல் களில் கவனம் செலுத்துவார். சின்னவர் பஞ்சு படப்பிடிப்பு, எடிட்டிங்கில் கவனம் செலுத்தினார். எடிட்டிங் ‘பஞ்சாபி’ என்று பெயர் வரும். பஞ்சு எடிட்டிங் செய்யும்போது அவருக்கு ஆர்.விட்டல் தான் பிரதான உதவியாளர். விட்டல் சாருக்கு நான் உதவி செய்வேன். அதனால் பஞ்சு சாருக்கு என்னைப் பிடிக்கும். விட்டல் சாரையும் என்னையும் ஷூட்டிங் சமயத்தில் துணை இயக்குநர் பட்டு சாருக்கு உதவியாக வந்து வேலை செய்ய சொல்வார்.

இயக்குநர்களுக்கு எப்பவுமே நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கும். விளையாட்டாக ஒருமுறை ‘நடிக்க வேண்டும்’ என்ற என் ஆசையை என்னோடு பணிபுரிந்தவர்களிடம் கூறியிருந்தேன். இந்த விஷயம் பஞ்சு அவர்களின் காதுக்கு போய்விட்டது. சிவாஜிகணேசன் நடித்த ‘தெய்வப் பிறவி’ படத்தில் அங்கமுத்துவின் மகனாக என்னை நடிக்க வைத்துவிட்டார். அதுவும் நடிகர் திலகத்தோடு என்னை நடிக்க வைத்து என் ஆசையை நிறைவேற்றி வைத்தவர் பஞ்சு. என் நடிப்பு ஆசைக்கு அத்தோடு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது.

இப்படி எடிட்டிங், ஷூட்டிங் என்று மாறி மாறி வேலை பார்த்துக் கொண்டிருந்த போது ஒருநாள் ஏவி.எம்.சரவணன் சார் என்னை கூப்பிட்டு, ‘‘முத்துராமன், இப்படி ஒவ்வொருத்தர்கிட்டேயும் வேலை பார்த்துக்கிட்டிருக்கீங்க. இனி, புதிய இயக்குநர் ஒருத்தரிடம் வேலை பாருங்க’’ என்றார். என் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்துக்கான விதை விழுந்தது. யார் அந்த இயக்குநர்?

- இன்னும் படம் பார்ப்போம்...

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-13-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/article7325166.ece

Share this post


Link to post
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 14- உதாரண மனிதர் ஏ.வி.எம்.சரவணன்!

எஸ்பி.முத்துராமன்

 
 
 
 • avm_2449440g.jpg
   
 • ‘வீரத்திருமகன்’ படத்தில் ‘விஜயபுரி’ ஆனந்தன், ‘குமாரி’ சச்சு.
  ‘வீரத்திருமகன்’ படத்தில் ‘விஜயபுரி’ ஆனந்தன், ‘குமாரி’ சச்சு.

ஏவி.எம்.சரவணன் அறிமுகப்படுத்திய அந்த இயக்குநர் யார் என்று சொல்வதற்கு முன்பு, சரவணன் சாரைப் பற்றி இங்கே சொல்லியாக வேண்டும். முதலாளி என்பதைவிட என் வாழ்க்கையின் உதாரண மனிதர் அவர்தான்! மனிதநேயமிக்க மாமனித ராகத்தான் அவரைப் பார்க்கிறேன். வெள்ளை உடை, நெற்றியில் குங்குமம், எப்போதும் மனம்திறந்த புன்னகை, இன்முகம்.

தொழிலபதிபர், ஸ்டுடியோ அதிபர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்டவராக இருந்தாலும் ஸ்டுடியோவில் வேலை பார்த்த எல்லோருடனும் தானும் ஒரு தொழிலாளி என்கிற நினைவோடுதான் பணிபுரிவார். எங்களை ஒரு சகோதரராகத்தான் நினைத்து அனைத்து உதவிகளையும் செய்வார்.

திருமண நிகழ்ச்சி முதல் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அழைப்பு வந்துவிட்டால் தவறாமல் போய் வாழ்த்துவார். அப்படி வாழ்த்துவதுதான் அழைப்பு கொடுப்பவர்களுக்கு காட்டும் மரியாதை என்பார். ஒருநாளில் பல விசேஷங்கள் என்றாலும் அதில் பெரிய ஆட்கள் வீட்டுக்குப் போவதை விட, ஏழைத் தொழிலாளியின் வீட்டு நிகழ்ச்சிக்குப் போவதை விரும்புவார். ‘அந்தத் தொழிலாளி, நான் நிச்சயம் விசேஷத்துக்கு வருவேன் என்று எதிர்பார்த்துக்கொண்டே இருப்பார். அவரையும், அவர் குடும்பத்தையும் ஏமாற்றக் கூடாது’ என்பார்.

கார் கோடம்பாக்கம் வழியே செல்லும்போது, கோடம்பாக்கம் பாலத் துக்கு முன் இடதுபக்கம் இருக்கும் இந்து கோயிலை கும்பிடுவார். கார் பாலத்தின் மீது ஏறும்போது அதே இடதுபக்கம் தெரியும் மசூதியைப் பார்த்து வணங்குவார். அடுத்து கார் மேலே ஏறும்போது லயோலா கல்லூரி வளாகத்தில் இருக்கும் சர்ச்சைப் பார்த்து கும்பிடுவார். ஆக மொத்தத்தில் ‘எம்மதமும் சம்மதம்’ என்ற கொள்கையைக் கொண்டவர்.

அரசியலைப் பொறுத்தவரைக்கும் காமராஜர், கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெய லலிதா, சோனியா காந்தி இப்படி எல் லோருடனும் ஒரே மாதிரி பழகு வார். எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார். எல்லா அரசியல் தலை வர்களிடமும் தொடர்பு உண்டு. ஆனால், அரசியலில் தொடர்பு இல்லை. ‘வியாபாரிகளுக்கு அரசியல் வேண்டாம்’ என்ற செட்டியாரின் கொள்கையை ஏற்று வாழ்பவர்.

பத்திரிகை துறையிலும், ஊடகங் களிலும் இவருக்கு எல்லோரும் நண் பர்கள். இவரைப் பற்றிய செய்திகள் வரும்போது உடனே நன்றிக் கடிதம் எழுதுவார். அது நல்ல உறவை ஏற்படுத் தும். எல்லா நிகழ்ச்சிகளிலும் கையைக் கட்டிக்கொண்டு நிற்கும் இவரது ‘பணிவு’ எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.

பெங்களூரில் இருந்து வாங்கி வந்த ‘முயற்சி திருவினையாக்கும்’ என்ற வாசகம் பொறித்த பலகையை தன் மேசையின் மீது வைத்தார். திடீரென ஒருநாள் இந்த வாசகத்தில் ஒரு சக்தி இருக்கிறது. எல்லா விஷயங்களிலும் இதைப் பயன்படுத்துவோமே’ என்று பயன்படுத்தத் தொடங்கினார். அதுவே இன்று ஏவி.எம்மின் லட்சியக் குரலாக ஒலிக்கிறது!

அவருடைய பல நல்ல பழக்கங்களை இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். அந்த நல்ல மனிதர் அறிமுகப்படுத்திய ‘உயர்ந்த மனிதர்’ இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர்! அவரை சரவணன் சாருக்கு அறிமுகப்படுத்தியவர் நடிகர் அசோகன். குழந்தை மனம் கொண்ட வில்லன். நடிப்பில் மட்டும்தான் வில்லன். வாழ்வில் மற்றவர்களுக்கு உதவுவதே அசோகனின் லட்சியம்.

திருலோகசந்தர்

இரண்டு கதைகளோடு வந்து சரவணன் சாரை சந்தித்தார். இரண்டுமே சரவணன் சாருக்குப் பிடித்து விட்டது. அதில் ஒன்று பீம்சிங் இயக் கத்தில் வெளிவந்த ‘பார்த்தால் பசி தீரும்’ படம். இரண்டாவது ‘வீரத்திருமகன்’. அந்தக் கதையை அவரையே இயக்கச் சொன்னார்கள்.

avm1_2449439a.jpg

‘வீரத்திருமகன்’ பட வேலைகள் ஆரம்பித்தபோது சரவணன் சார் திருலோகசந்தரிடம் ‘‘முத்துராமன் எங்கள் ஸ்டுடியோவில் வேலை பார்ப் பவர். அவர் உங்களுக்கு உதவியாக இருப்பார்’’ என்று என் கையைப் பிடித்து திருலோகசந்தரிடம் ஒப்படைத்தார். எனது குருவை எனக்கு அடையாளம் காட்டியவர் சரவணன் சார் என்று சொல்லும்போது பெருமையாக இருக்கிறது.

‘வீரத்திருமகன்’ படத்துக்கு வசனம் எழுத ஒப்பந்தமானார் ஆரூர் தாஸ். அவர் வசனம் எழுதுவதற்காக நட்சத்திர ஹோட்டல்களுக்கோ, வெளி நாட்டுக்கோ போகவில்லை. சென்னை செம்பரப்பாக்கம் ஏரிக் கரையில் இருந்த பொதுப்பணித்துறை விடுதியில் தங்கித்தான் வசனம் எழுதினார். அங்கே இருந்த இரண்டு அறைகளில் ஓர் அறையில் ஆரூர்தாஸும். மற்றொரு அறையில் நான், உதவி இயக்குநர் ராஜேந்திரன், கார் ஓட்டுநராகவும் புரொ டெக்‌ஷன் உதவியாளராகவும் இருந்த மலையப்பனும் இருப்போம்.

ஆருர் தாஸுக்கு மிகவும் பிடித்த விஷயம் சாப்பாடு. உணவு முதல் பீடா வரைக்கும் ‘இந்த இடத்தில், இந்தக் கடையில்தான் வாங்க வேண்டும்’ என்று லிஸ்ட் போட்டு மலையப்பனை அனுப்புவார். ஒரே வாரத்தில் படத்தின் முழு வசனத்தையும் எழுதிவிடுவார். எவ்வளவு கவனமாக ஒரு தொழிலை செய்ய வேண்டும் என்கிற கடமை உணர்வை அவரிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

வசனம் தயாரானதும் படப்பிடிப்பு ஏற்பாடுகள் தொடங்கின. நடிப்பு, நடனம், சண்டை எல்லாவற்றிலும் சிறந்து விளங்கிய ஆனந்தன்தான் ‘வீரத்திரு மகன்’ படத்தின் கதாநாயகன். ‘விஜயபுரி’ ஆனந்தன் என்றும் அவரை அழைப் பார்கள். அன்றும் இன்றும் ‘குமாரி சச்சு’ என்று அழைக்கப்படும் சச்சுதான் படத்தின் கதாநாயகி. மழலைப் பருவத்தில் இருந்தே சச்சுவுக்கு நடிப்பு கை வந்தக் கலை. அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ரோஜா மலரே ராஜகுமாரி’ என்கிற பாடல் காட்சியை ஒகேனக்கல்லில் எடுக்க முடிவு செய்யப்பட்டது.

சச்சு ரெஃப்ளெக்டர் வெளிச்சத்தில் கண்ணை மூடாமல் இருக்க ஒத்திகை பார்க்கப்பட்டது. ரெஃப்ளெக்டர் வெளிச்சத்தை அவர் முகத்தில் போட்டு, பாடலையும் ஓடவிட்டு சச்சு கண்களை மூடாமல் நடிக்க அவருக்குப் பயிற்சி அளித்தோம். இப்படி எல்லா விஷயங்களிலும் கவனம் செலுத்தப்பட்டது. இந்தப் படத்தில் மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் தங்களுடைய இசை ஆற்றல் மூலம் கவியரசு கண்ணதாசனின் வரிகளுக்கு உயிர் தந்திருப்பார்கள்.

‘வீரத்திருமகன்’ ராஜா ராணி கதை என்பதால் செட், உடை, மேக்கப் எல்லாம் உரிய வகையில் இருக்க வேண்டும் என ஒவ்வொரு விஷயத் திலும் திருலோகசந்தர் திட்டமிட்டு, தரமாக படத்தை எடுத்தார்.

சரவணன் சார் இப்போதும் ‘முத்துராமன் இவ்வளவு ஃபர்பெக்டா ஒவ்வொரு விஷயத்தையும் பார்க்கிறார் என்றால் அது திருலோகசந்தரிடம் அவர் கற்றுக் கொண்ட பாடம்தான் காரணம்’ என்பார். இப்படி பல படங்களில் நான் கற்றுக்கொண்ட பாடங்கள் இன்னும் இருக்கின்றன.

- இன்னும் பார்ப்போம்…

Share this post


Link to post
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 15- நீலப்பட்டாடை கட்டி!

எஸ்.பி.முத்துராமன்

 
spm_2457774f.jpg
 

‘வீரத்திருமகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்குத் தயாராகிக் கொண் டிருந்தோம். ராஜா ராணி கதை என்பதால் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான உடைகள், விக், அணிகலன்களைத் தேர்வு செய்வது முக்கியமானதாக இருந்தது.

கதாபாத்திரங்களின் தோற்றம், அங்க பாவனைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை இயக்குநர் திருலோகசந்தர் கலை இயக்குநர் சாந்தாராம் அவர்களிடம் கூறிவிடுவார். அவர் அதை உள்வாங்கிக்கொண்டு ஓவியமாக வரைந்து கொடுப்பார். அந்த மாதிரியை வைத்துக்கொண்டு நடிகர், நடிகைகளுக்குத் தேவையானவற்றைத் தயார் செய்து மேக்கப் டெஸ்ட் எடுப்போம். அந்தப் புகைப்படங்களை வைத்துக்கொண்டு, எது சரியாக இருக்கிறதோ அதைத் தேர்வு செய் வோம்.

ஒகனேக்கலில் ‘வீரத்திருமகன்’ படப்பிடிப்பு. அனைவரும் அங்குபோய் சேர்ந்தோம். பலரும் பல அறைகளில் தங்க வைக்கப்பட்டார்கள். காட்டுக்குள் இருந்த ஒரு ஸ்பெஷல் அறையில் இயக்குநர், நடன ஆசிரியர் கே.என்.தண்டாயுதபாணி பிள்ளை, நான், உதவி இயக்குநர் ராஜேந்திரன் ஆகி யோர் தங்கினோம். இரவு நெருங்க நெருங்க ஒரே இருட்டு.

மிருகங்களின் சத்தமும், வண்டுகளின் ரீங்காரமும், போகிறபோக்கில் வாட்ச்மேன், ‘இங்கே பேய் நடமாட்டம் இருக்கு சார்’ என்று சொல்லிவிட்டு போனதும் சிறிது பயத்தைத் தந்தன. இரவு 12 மணி. ‘‘பேய்… பேய்…’’ என்று ஒரு புரொடக்‌ ஷன் பாய் கத்த, அனைவரும் ஓடிப் போய் பார்த்தோம். உதவி இயக்குநர் ராஜேந்திரன் சட்டை இல்லாமல் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு உருட்டுக்கட்டையோடு நின்றார். ‘‘என்ன ராஜேந்திரன், என்ன பண்றீங்க?’’ என்று கேட்டால், ‘‘எனக்கு மாந்தரீகம் தெரியும். பேயை விரட்ட நிற்கிறேன்’’ என்றார். அனைவரும் சிரித்துக்கொண்டே படுக்கச் சென்றோம்.

ஒருநாள் படப்பிடிப்பு சீக்கிரம் முடிந்துவிட்டது. பக்கத்தில் இருக்கும் தருமபுரியில் எம்.ஜி.ஆர் படம் ரிலீஸ் ஆகியிருந்தது. பார்த்துவிட்டு வரலாம் என்று புறப்பட்டோம். அப்போது நடிகர் ‘விஜயபுரி’ ஆனந்தன், ‘‘எல்லாரும் முதலாளி கார்லேயே ஏறப் போறீங்களே, என் காருக்கும் வாங்கப்பா’’ என்று கூப்பிட, நானும் ராஜேந்திரனும் அவர் காரில் ஏறிக்கொண்டோம். இயக்குநர் திருலோகசந்தரும் குமரன் சாரும், தயாரிப்பு நிர்வாகி மொய்தீனும் ஒரு காரில் புறப்பட்டார்கள். அவர்கள் கார் சென்றுவிட்டது. நாங்கள் பின் தொடர்ந்தோம். சாலையில் ஒரே கூட்டம்.

இறங்கி என்னவென்று பார்த்தால், இயக்குநர் சென்ற கார் தலைகுப்புறக் கவிழ்ந்து கிடந்தது. நாங்கள் பதறிப் போய் அந்த கார் அருகே போய் பார்த் தோம். கையில் அடிப்பட்டு ரத்தம் சொட்ட நின்றுகொண்டிருந்தார் திருலோக சந்தர். அவரை பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச்சென் றோம். கை முறிந்திருக்கிறது என்று கட்டுப்போட்டார்கள். குமரன் சார் ஷூட்டிங்கை தள்ளி வைத்துவிடலாம் என்று சொன்னார். ‘‘கையில்தானே அடிபட்டிருக்கு. இதுக்காக படப் பிடிப்பை ஒத்திப்போட வேணாம்’’ என்று இயக்குநர் கடமை உணர்வோடு சொன்னார்.

மறுநாள் காலையில் இயக்குநர் குளிப்பதற்கும், உடைகள் அணிவதற்கும் உடன் இருந்து நான் குருசேவை செய்தேன். பேண்ட் போட முடியவில்லை அவரால். எனவே அவருக்கு வெள்ளை கைலியைக் கட்டிவிட்டேன். கைலி அணிந்த நிலையில் ‘ரோஜா மலரே ராஜகுமாரி…’ பாடலைப் படமாக்கத் தொடங்கினார் இயக்குநர். மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

ஒவ்வொரு ஷாட்டாக பாட்டை எடுப்பதற்காக இயக்குநர் ‘கட்… கட்’ என்று சொல்லி பாட்டை நிறுத்தினார். படப்பிடிப்பைப் பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவர், ‘‘யாருய்யா அந்த கைலி கட்டின ஆளு? பாட்டை கேட்கவிடாம கட்… கட்னு சொல்லிட்டே இருக்காரு’’ என்று குரல் கொடுத்தார். அதைக் கேட்ட இயக்குநர் சிரித்துக்கொண்டே, ‘‘முத்துராமன் அந்தப் பாட்டை ஒரு தடவை முழுசா போடச் சொல்லுங்க…’’ என்றார். முழுவதுமாக அந்தப் பாட்டு ஒலிபரப்பப்பட்டது. அதைக் கேட்ட மக்கள் கைதட்டி ரசித்தார்கள். அந்தப் பாட்டு நிச்சயம் ஹிட் ஆகும் என்று அப்போதே எங்களுக்குத் தெரிந்து விட்டது.

ஒருநாள் செட்டியாரிடம் இயக்குநர் திருலோகசந்தர், ‘‘தண்ணீருக்கு நடுவே தாமரைப் பூவில் நாயகியும், அவரைச் சுற்றி 24 தாமரை இலைகளில் நடன மங்கைகளும் நின்று நடனமாடினால் வித்தியாசமாக பாடல் காட்சி அமையும் என்று நினைக்கிறேன்’’ என்று கூறினார். செட்டியார், கலை இயக்குநரிடம் இந்த விஷயத்தைக் கூற, அவர் ‘‘ரொம்ப சிரமம். இது சரியா வராது’’ என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார். ஆனால், செட்டியாருக்கு அந்த ஐடியாவை கைவிட மனமில்லை.

என்னிடத்தில் ‘ ‘முத்துராமா… ஆறுமுக ஆசாரியைக் கூப்பிட்டு வா’’ என்றார். அவர் வந்ததும், இயக்குநர் சொன்ன ‘தாமரை பூ ஐடியா’வை அவரிடம் சொல்லி, ‘‘இப்படி அமைக்க முடியுமா?’’ என்று கேட்டார். ஆறுமுக ஆசாரி வழக்கம் போல, ‘‘அஞ்சு நிமிஷத்துல பண்ணிடலாம் அப்புச்சி’’ என்றார். ‘‘இங்கே எல்லாரும் முடியாதுன்னு சொல்றாங்களே… எப்படி முடியும்னு சரியா சொல்லுப்பா’’ என்று செட்டியார் மீண்டும் கேட்டார்.

‘‘நம்ம ஊர்ல திருவிழா சமயத்துல தெப்பம் விடு றோம்ல. அப்படித்தான். நாலு பீப்பாய் களை ஒண்ணுசேர்த்து கட்டி, அதுமேல பலகையை அடிச்சா, தெப்பம் போல மிதக்கும். ஒரு பலகை மேல தாமரை பூ. அதைச் சுற்றி 24 பலகைகள்ல தனித் தனியா தாமரை இலைகளை அமைச்சா, டைரக்டர் கேட்ட தாமரை குளம் வந்துடும்’’ என்றார் ஆறுமுக ஆசாரி. அவரது தொழில் திறமையைப் பாராட்டிவிட்டு, வேலைகளை ஆரம் பிக்கச் சொன்னார் செட்டியார்.

இதையடுத்து, செட்டியாரே காரில் போய் தண்ணீர் சூழ்ந்திருக்கும் இடத்தைத் தேடத் தொடங்கினார். ஒருநாள் துரைப்பாக்கம் பேக்வாட்டர் ஏரியாவைப் பார்த்தவருக்கு, அந்த இடம் பிடித்துப் போனது. டைரக்டரையும், ஆறுமுக ஆசாரியையும் அழைத்துக் கொண்டுபோய் அந்த இடத்தைக் காட்டி னார். செட்டியார் காட்டிய இடத்தில் இயக்குநர் விரும்பிய தாமரைக் குளம் உருவானது.

இயக்குநர் திருலோகசந்தரும், ஒளிப்பதிவாளர் முத்துச்சாமியும், ஆறுமுக ஆசாரியிடம், ‘‘இந்தத் தாமரைக்குளத்தைப் படம் பிடிக்க ஒரு உயரமான ‘கோடா’ (பரண்) போட்டுக் கொடுங்கள்’’ என்று கூறியிருந்தார். படப்பிடிப்புக்கு போனபோது அந்த பேக்வாட்டர் பகுதியில் இருந்த பாலத்தையொட்டி 80 அடி உயரத்தில் ஒரு ‘கோடா’ போடப்பட்டிருந்தது. அதில் கேமரா வைப்பதற்காக 30 அடியில் ஒரு பலகை, 60 அடியில் ஒரு பலகை, 80 அடியில் ஒரு பலகை இருந்தது. எந்த உயரத்தில் வைத்து வேண்டுமானாலும் படம் பிடிக்கலாம். அந்த உயரத்தில் வைத்து டாப் ஷாட் எடுத்ததனால்தான் அந்தப் பாடல் காட்சி முழுமையாக வந்திருந்தது.

இப்போது இருக்கிற ‘அகேலா கிரேன்’ வசதியெல்லாம் அப்போது கிடையாது. மதிய சூரிய வெளிச்சத்தில் மட்டுமே அந்தப் பாடல் காட்சியைப் படமாக்கினார் ஒளிப்பதிவாளர் முத்துச்சாமி. இப்படி ஒரு வாரம் படமாக்கப்பட்ட ‘வீரத் திருமகன்’ படத்தில் இடம்பெற்ற ‘நீலப் பட்டாடைக் கட்டி’ என்ற அந்தப் பாடல் ரசிகர்களிடத்தில் ஏக வரவேற்பைப் பெற்றது.

பாடலைப் பற்றிச் சொன்னேன். சண்டைப் போடும் வீரனைப் பற்றி சொல்ல வேண்டாமா?

- இன்னும் படம் பார்ப்போம்...

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-15-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/article7373857.ece

Share this post


Link to post
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 16- மனிதநேயமுள்ள மங்கை: மனோரமா!

எஸ்.பி.முத்துராமன்

 
 • நடிகர் அசோகனுக்கு சண்டைக் காட்சியை விளக்கும் இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர்.
  நடிகர் அசோகனுக்கு சண்டைக் காட்சியை விளக்கும் இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர்.
 • ’வீரத்திருமகன்’ படத்தில் வாள் சண்டை போடும் நடிகர் ‘விஜயபுரி’ ஆனந்தன் மற்றும் நடிகர் ராம்தாஸ்
  ’வீரத்திருமகன்’ படத்தில் வாள் சண்டை போடும் நடிகர் ‘விஜயபுரி’ ஆனந்தன் மற்றும் நடிகர் ராம்தாஸ்
 • 3_2465698g.jpg
   

‘விஜயபுரி வீரன்’ படத்தில் நடித்து, நிஜத்திலும் வீரன் என்று பெயர் எடுத்த ஆனந்தனின் திறமையும், சுறுசுறுப்பும்தான் ‘வீரத்திரு மகன்’ படத்திலும் அவரை வீரன் அவ தாரம் எடுக்க வைத்தது. நடக்கச் சொன் னால் ஓடுவார். அப்படி ஒரு சுறுசுறுப்பு. குத்துச் சண்டை முதல் குதிரைச் சவாரி வரைக்கும் பிரமாதமாக செய்வார். இயக் குநர் திருலோகசந்தருக்கு ஆனந்தனை ரொம்ப பிடித்துப்போய் அவருக்கு இரண்டாவது படமும் கிடைத்தது.

அப்போது சண்டைக் காட்சிகளை சிறப்பாக இயக்குவதில் புகழ்பெற்றிருந் தவர் ஸ்டெண்ட் இயக்குநர் சுவாமிநாதன். ‘வீரத்திருமகன்’ படத்தின் ஸ்டெண்ட் மாஸ்டர் அவர்தான். திரைப்பட ‘பெப்சி’ அமைப்பின் தலைவராக இருந்து சிறந்த ஸ்டெண்ட் மாஸ்டர், இயக்குநர், தயாரிப் பாளர் என்று பெயர் பெற்றிருக்கும் ‘பெப்சி’ விஜயனின் தந்தைதான் சுவாமி நாதன். குத்துச் சண்டையைப் பொறுத்த வரைக்கும் திருலோகசந்தர் ‘பாக்ஸர்’ பட்டம் வென்றவர். சண்டைக் காட்சி களைப் படமாக்கும்போது அவரே முன் னின்று முக்கிய ஆலோசனைகளைக் கூறுவார். நடித்துக் காட்டுவதைப் போல ‘குத்து’ம் கொடுத்துக் காட்டுவார்.

குத்துச் சண்டையைப் படமாக்கும் போது டைமிங் ரொம்ப முக்கியம். டைமிங் கொஞ்சம் மிஸ் ஆனாலும் குத்து முகத் தில் விழுந்துவிடும். ஆனந்தன் சண்டைக் காட்சிகளை சரியாக எதிர்கொள்வார். திவானாக நடித்த ராமதாஸ் டைமிங் மிஸ் ஆகி முகத்தில் குத்து வாங்குவார். அதேபோல குதிரைச் சவாரியிலும் ராம தாஸின் வேகம் குறைவானது. முன்னால் குதிரையில் செல்லும் ராமதாஸை, ஆனந் தன் குதிரையில் துரத்திச் சென்று பிடிக்க வேண்டும்.

ஆனந்தன் வேகமாக செல்வ தால் ராமதாஸுக்கு முன்னால் சென்று விடும் நிலை ஏற்படும். அப்போது ஆனந் தன், ‘ராமதாஸ் குதிரையை விரட்டுங்க, விரட்டுங்க’ என்று கத்திக்கொண்டே பின்னால் போவார். ராமதாஸ் விரட்ட முயற்சிக்க, ராமதாஸ் சேனத்தோடு குதிரையில் இருந்து விழும் நிலை ஏற்பட்டுவிடும். சேஸ் காட்சி காமெடி காட்சிப் போல் ஆகிவிடும். இந்த சேஸை திருலோகசந்தர் எடிட்டிங்கில் சரிசெய்து பரபரப்பாக்குவார்.

படங்களில் முரட்டுத்தனமான நடிகர் என்று பெயர் வாங்கிய அசோகன் சண்டை யிட்டு நடிக்கும் காட்சிகளைப் படமாக் கும்போது பெரும்பாலும் உண்மையா கவே அடித்துவிடுவார். எதிரில் நின்று அவருடன் மோதுபவர் ரொம்பவே ஜாக்கிரதையாக நடிக்க வேண்டும்.

அட்டை கத்தியால்தான் வாள் சண்டை போடுகிறார்கள் என்பதை அந்தக் கால கட்டத்தில் மக்கள் கண்டுபிடித்துவிட்ட னர். அதன் பிறகு நிஜக் கத்தியை வைத்து வாள் சண்டையைப் படமாக்கத் தொடங் கினார்கள். ‘விஜயபுரி வீரன்’ படத்தி லேயே வாள் சண்டையை நேர்த்தியாக எடுத்து பெயர் வாங்கிய இயக்குநர் திருலோகசந்தர், இந்தப் படத்தில் மட்டும் குறைத்து எடுத்துவிடுவாரா என்ன? இப்படி எடுக்கப்பட்ட வாள் சண்டை, குதிரை சேஸ், குத்துச் சண்டை எல்லாவற்றையுமே ஒளிப்பதிவாளர் முத்துச்சாமி மிகத் திறமையுடன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘கப்ப லோட்டிய தமிழன்’ போன்ற படங்களைத் தயாரித்து இயக்கிய பி.ஆர்.பந்துலு வின் மனைவி எம்.வி.ராஜம்மாள், ‘வீரத்திருமகன்’ படத்தில் முக்கிய ரோலில் நடித்தார். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்ட பி.ஆர்.பந்துலு, தேவகோட்டை ரஸ்தா வில் ஏவி.எம் ஸ்டுடியோ இயங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் எடுக்கப் பட்ட ‘நாம் இருவர்’ படத்தில் சோக பாத்திரத்தில் நடித்தவர்.

அவரை சந்தித்து, ‘5-ம் தேதி படப்பிடிப்பு. நீங்கள் 4-ம் தேதி இரவு தனுஷ்கோடி எக்ஸ்பிரஸில் தேவகோட்டை ரஸ்தா வந்துடுங்க. இந்தாங்க டிரெயின் டிக்கெட்’ என்று டிக்கெட்டை கொடுக்கும்போதே, படத் தில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமோ, அந்தப் பாத்திரமாகவே சோகமாக மாறிவிடுவார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் மீண்டும் பழைய பந்துலுவாக அவரைப் பார்க்க முடியும்.

கிட்டத்தட்ட பந்துலுவைப் போலத் தான் அவரது மனைவி எம்.வி.ராஜம் மாளும். ‘வீரத்திருமகன்’ படப்பிடிப்பில் மேக்கப் அறைக்குள் வந்து நடிக்க வேண்டிய காட்சியை விவரமாக கேட்பார். அந்த சீனை கேட்டு முடித்த அடுத்த விநாடியே மேக்கப் அறையிலேயே அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். நாம் வேறு எதைப் பற்றி பேசினாலும் ராஜம்மாள் அந்த கதாபாத்திர பாணியி லேயே பதில் சொல்வார்.

ஆனந்தனின் மகள்களைப் பற்றி சொல்லியாக வேண்டும். நான் இயக்கிய பல படங்களில் நடித்த ’டிஸ்கோ’ சாந்தி யும், லலிதகுமாரியும் ஆனந்தனின் மகள் கள். என் படங்களில் இடம்பெற்ற நடனங்களில் அதிக பாடல்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடனம் ஆடி யவர் டிஸ்கோ சாந்தி. இந்த இரண்டு பேருக்குமே என்னிடம் அவ்வளவு மரியாதை!

‘வீரத்திருமகன்’ படத்தின் ஒரு பாடல் காட்சியைப் படமாக்க தலக்காடு என்ற இடத்துக்குச் சென்றோம். படத்தின் நாயகி சச்சு. படப்பிடிப்புத் தொடங்கியது. சச்சு காதில் மாட்டியிருந்த கொக்கித் தோடு கீழே விழுந்துவிட்டது. மணல் பகுதியில் தேடுவது கஷ்டமாக இருந்தது. மேக்கப் மேன் சூளைமேடு ‘இன்னொரு தோடு இருக்கு?’ என்று ஓடிவந்தார். அதை மாட்டி சில காட்சிகளை எடுத்தோம். அந்தத் தோடும் கீழே விழுந்து மண்ணுக்குள் புதைந்துவிட்டது.

‘இனி அட்டையில் கல்லை ஒட்டி சச்சு காதில் வைத்து தைக்க வேண்டியதுதான்’ என்று கேமரா மேன் சூளைமேடு சொன்னதும் எல்லோரும் பதறிவிட்டோம். ‘ஏம்பா புதுப் பொண்ணு அவங்களை இப்படியா கஷ்டப்படுத்துவது?’ என்று கூறி, கல் மாதிரி இருந்த ஜிகினாவை அட்டையில் ஒட்டி பின்னர் அதை சச்சுவின் காதில் ஒட்டி அந்த கன்டினியூடியை சரிசெய்து படமாக்கினோம். இப்படி சின்ன சின்ன விஷயத்துக்குக் கூட பெரிய கவனம் எடுத்துதான் ஷூட்டிங் செய்ய வேண்டியிருந்தது.

மைசூர் பிருந்தாவனம் கார்டனில் இருந்த கோட்டையில் சில காட்சிகளை எடுக்க முடிவு செய்தோம். திடீரென அங்கே படப்பிடிப்பு நடத்த அனுமதி இல்லை என்றார்கள். ‘அந்த இடத்தில் எடுக்க வேண்டிய காட்சிகளை எல்லாம் சென்னையில் எடுத்துக்கொள்ளலாம். படப்பிடிப்புக்கு வர வேண்டிய ஆச்சி மனோரமாவை இங்கு வர வேண்டாம் என்று தந்தி கொடுங்கள். டிரங்காலில் கூப்பிட்டும் செய்தியை சொல்லிடுங்க’ என்று ஏவி.எம். சரவணன் சார் புரொடக்‌ ஷன் மேனேஜரிடம் கூறினார்.

அங்கே எடுக்க வேண்டிய பாடல் காட்சிகளைப் படமாக்கும் வேலையில் இறங்கிவிட் டோம். இரண்டு நாட்களுக்குப் பிறகு கால்ஷீட் கொடுத்த சரியான தேதிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு இரவோடு இரவாக காரில் வந்து நின்றார் ஆச்சி மனோரமா. எங்களுக்கெல்லாம் அதிர்ச்சி. சரவணன் சார் புரொடக்‌ஷன் மேனேஜரை அழைத்து ‘என்னப்பா தந்தி கொடுங்கன்னு சொன்னேனே?’ என்று சத்தம் போட்டார். புரொடக்‌ஷன் மேனேஜரோ ‘வேலை பிஸியில் மறந்துட் டேன்’ என்றார்.

‘ஏதோ மறதியில் தப்பு நடந்து போச்சு. பெரிசு படுத்த வேண்டாம். அவரை வேலையில் இருந்து நீக்கிடா தீங்க. அவர் குடும்பம் கஷ்டப்படும்’ என்று புரொடக்‌ஷன் நிர்வாகிக்காக ஆச்சி மனோரமா, சரவணன் சாரிடம் வேண்டிக்கொண்டார். தான் ஒரு நல்ல நடிகை மட்டுமல்ல; மனித நேயமுள்ள மங்கை என்பதையும் நிரூபித்தார் ஆச்சி.

பெண் அழகா இருந்தா அனைவரும் விரும்புவார்கள். அழகில்லாமல் இருந்தால்? அது பற்றி அடுத்த வாரம்!

- இன்னும் படம் பார்ப்போம்…

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-16-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE/article7398491.ece

Share this post


Link to post
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 17- கண்களைத் துடைத்துக் கொள்ளுங்கள்!

எஸ்.பி.முத்துராமன்

 
 
 • spm1_2473748g.jpg
   
 • spm_2473749g.jpg
   
 • spm2_2473747g.jpg
   

‘அழகான பெண்ணை எல்லோ ருக்கும் பிடிக்கும். கருப்பு நிறப் பெண்ணை எல்லோருக் கும் பிடிக்குமா’ என்று சென்ற வாரம் முடித்திருந்தோம். நம் ஊரில் கருப் பாக இருப்பவர்களை ஏதோ பாவம் செய்தவர்களைப் போல பார்க்கிறார்கள். அந்த மாதிரி ஒரு பெண்ணை மையமாக வைத்து எடுத்ததுதான் ஏவி.எம்மின் ‘நானும் ஒரு பெண்’ திரைப்படம்.

‘கருப்பாக பிறந்தது அந்தப் பெண்ணின் குற்றமா’ என்கிற கோணத்தில் அந்தப் பெண் வருத்தத்தை சுமக்கிற பின்னணியில் கதை நகரும். இயக்கம் ஏ.சி.திருலோகசந்தர். ‘நானும் ஒரு பெண்’ படத்துக்கு எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி நடிக்க ஒப்பந்தமானார்கள்.

லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் நாடகத்தில் இருந்து வந்தவர். அவரது நடிப்பு, வசன உச்சரிப்புப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. நாயகி விஜயகுமாரி, கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக வெளிப்படுத்தும் நடிகை. இவர்களோடு எம்.ஆர்.ராதா, எஸ்.வி.ரங்காராவ், எஸ்.வி.சுப்பையா, நாகேஷ், சி.கே.சரஸ்வதி, அறிமுகம் ஏவி.எம்.ராஜன், புஷ்பலதா என்று திறமையான நடிகர், நடிகைகள் இணைந்தனர். அந்தக் கதையும், கதாபாத்திரங்களும் சிறந்த முறையில் அமைந்ததால் மிகப் பெரிய வெற்றி பெற்று, மத்திய அரசின் விருதும் கிடைத்தது.

எஸ்.வி.ரங்காராவ் ஒரு ஜமீன்தார். இறந்து போன மனைவியின் புகைப் படத்துக்கு முன் நின்று ஒவ்வொரு விஷ யத்தையும் அவரிடம் கேட்டுவிட்டுத்தான் செய்யத் தொடங்குவார். அந்தக் காட்சிக்காக ஓர் அழகான பெண்ணை வைத்து போட்டோ எடுக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.. ‘அவ்வை யார்’ படத்தின் மூலம் புகழ்பெற்றிருந்த கலை இயக்குநர் ஏ.கே.சேகரை அணுகி, ‘இப்படி ஒரு புகைப்படம் வேண்டும்’ என்று கதையின் சூழலை விளக்கினார் திருலோகசந்தர்.

சேகர் என்னிடம் ‘நம்ம குரூப் டான்ஸர்களில் அழகான ஒரு பெண்ணைப் பார்த்திருக்கிறேன்’ என் றார். ‘குரூப்ல நிறையப் பேர் இருப் பாங்களே, கண்டுபிடிப்பது சிரமாச்சே’ என்றேன். ‘ஜெமினியில் ஆடும் குரூப் டான்ஸர் லிஸ்ட் பார்த்து அவர்களை கூட்டிட்டு வரச் சொல்லுங்க. நான் கண்டு பிடித்துவிடுவேன்’ என்றார். எல்லோரை யும் வரச் சொன்னோம்.

பலரையும் பார்த்து ‘இவர் இல்லை, இவர் இல்லை’ என்று கூறிக்கொண்டே வந்தார். கடைசி யில் ‘இந்தப் பெண்தான்’ என்று அடை யாளம் காட்டினார். தேவதையைப் போல் அப்படி ஒரு லட்சணமான பெண். அந்தப் பெண் பெயர் ராஜேஷ் வரி. அவரை வைத்து சேகர் சார் முன் னிலையில் பலவிதமாக போட்டோ எடுத்தோம். அந்தப் பெண் புகைப் படத்தில் வாழும் மனைவியானார்.

‘நானும் ஒரு பெண்’ படத்தில் எஸ்.எஸ்.ஆர் பெண் பார்க்க வரும்போது புஷ்பலதாவை காட்டிவிட்டு, மணமேடை யில் விஜயகுமாரியை அமர வைப்பது போல காட்சி. பெண் மாறிப் போனதை எம்.ஆர்.ராதா மனைவி சி.கே.சரஸ்வதி கண்டுபிடித்துவிடுவார். ‘கண்ணுல மண்ணை அள்ளிப்போட்டு நம்மள ஏமாத்த பார்க்குறாங்களே’ என்று கோபத்தோடு சி.கே.சரஸ்வதி வசனம் பேச வேண்டும். அந்த நேரத்தில் எஸ்.எஸ்.ஆர் அவர் அருகில் சென்று, ‘சி.கே.எஸ் டயலாக்கை மாத்தி பேசிடா தீங்க’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

கடைசி நேரத்தில் சொன்னாலே ஆர்டிஸ் டுக்கு ஒருவித படபடப்பு ஒட்டிக்கொள் ளும். இயக்குநர் ஸ்டார்ட் சொன்னதும் சி.கே. சரஸ்வதி, ‘மண்ணுல கண்ணை அள்ளிப் போட்டு நம்மள ஏமாத்த பார்க்கு றாங்களே’ என்று சத்தம் போட்டார். சுற்றி நின்றுகொண்டிருந்த யூனிட்டே சிரித்தது. ‘என்ன ஆச்சு’ என்று பரபரப் பாக சரஸ்வதி கேட்டதும், அவர் பேசிய வசனத்தை போட்டுக் காண்பித்தோம். ‘ஐய்யோ… ஐய்யோ’ என்று தலையில் அடித்துக்கொண்டு ‘எல்லாம் ராஜு (எஸ்.எஸ்.ஆர்) செய்த வேலை’ என்று கூறினார். மீண்டும் சரியாக எடுத்து ஓ.கே செய்தோம்.

புகுந்தவீட்டில் கருப்பாக இருக்கும் விஜயகுமாரியை ஜமீன்தாருக்குப் பிடிக்காது. ஒரு காட்சியில் மாமியாரின் மெட்டியை விஜயகுமாரி தனது காலில் போட்டுக்கொள்வதைப் பார்க்கிற ஜமீன்தார் திட்டுவார். மெட்டியை கழற்றி ஜமீன்தாரின் அறை வாசலில் வைத்துவிட்டு அழுதபடி ஓடும் விஜயகுமாரி, தோட்டத்தில் இருக்கும் கண்ணன், ராதை சிலையிடம் போய், ‘கண்ணா கருமை நிறக் கண்ணா’ என்ற பாடலை பாடுவார்.

எம்.எஸ்.வி இசையில், கருப்பு நிறத்தில் இருக்கும் விஜயகுமாரியுடன் கண்ணனை ஒப்பிட்டு கண்ணதாசன் எழுதிய பாடல் அது. விஜயகுமாரி கண் களங்கிப் பாடுவார். இந்த உணர்ச்சிபூர்வமான காட்சிக்கு பின்னணிப் பாடிய பி.சுசீலா பாட வந்ததும், கதையையும், காட்சியையும் சொல்லி பாட்டைக் கொடுத்து எப்படி பாட வேண்டுமென்று எம்.எஸ்.விஸ்வ நாதன் பாடிக் காட்டுவார். சுசீலா புரிந்து கொண்டு உணர்ச்சியோடு பாடினார். அதனால்தான் அந்தக் காட்சி அன்றும், இன்றும் மனதில் நிற்கிறது. இதற்கெல் லாம் காரணம், இதன் படைப்பாளி இசை மேதை எம்.எஸ்.விஸ்வநாதன்தான்!

இந்த வார கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அந்த இசை மேதை இயற்கை எய்திவிட்ட செய்தி வந்து என்னை கண்ணீர் மல்க வைத்தது. என்னை மட்டுமா? இசை உலகத்தையே கலங்க வைத்துவிட்டது.

50 ஆண்டு காலம் தமிழ் திரை இசை உலகத்தை ஆட்சி செய்தவர். இசையில் பல புதுமைகளை புகுத்தியவர். இந்தப் பாடலுக்கு இதுதான் ராகம் என்று தீர் மானித்து, எந்த இடத்தில் எந்த இசைக் கருவி முக்கியம்? எந்த இசையோடு, எந்த இசையை இணைப்பது என்பது அவ ருக்கு கை வந்தக் கலை. பாடல் வரிகள் இசையால் பாதிக்காமல் பார்த்துக் கொண்டவர். தயாரிப்பாளர்கள், இயக்கு நர்களுக்காக மெட்டுகளை போட்டுக் கொண்டே இருந்தவர்.

இவர் இசைக் குழுவை ஒரு குடும்பமாகவே கொண்டாடியவர். இவர் குழுவில் பணியாற்றியவர்கள் இசை ஞானி இளையராஜாவும், ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானும் என்பதை மகிழ்வுடன் பதிவு செய்கிறேன். கவியரசருக்கு சிலை வைத்தவர் இந்த இசை அரசர். கண்ணதாசன் விஸ்வநாதன் அறக்கட்டளையைத் தொடங்கி செயலாளர் ஏவி.எம்.சரவணன் சாருடன் சேர்ந்து 12 ஆண்டுகளாக நன்றியோடு நடத்தியவர், நட்புக்கு இலக்கணமானவர்.

கி.மு; கி.பி என்பதைப் போல் தமிழ் திரை இசையை பொறுத்தவரை விஸ்வநாதனுக்கு முன், விஸ்வநாத னுக்கு பின் என்றுதான் வரலாறு சுற்றிக் காட்டும். அவர் மூச்சுவிட போராடிக் கொண்டிருந்தபோது அவரைப் போய் பார்த்தேன். ‘முத்துராமண்ணா’ என்று என்னைப் பார்த்ததும் பாசத்தோடும் புன்னகையோடும் எழுந்திருக்க முயன் றார்.

அவர் எனக்கு மூத்தவர். எப்போ தும் என்னை ‘அண்ணே’ என்றுதான் அழைப்பார். அதற்கு காரணம் அவர் இயக்குநர்களுக்குத் தந்த மரியாதை. ‘நீங்கள் மீண்டு வந்து மீண்டும் பாட்டமைப்பீர்கள்’ என்று சொல்லிவிட்டு வந்தேன். அந்தச் சந்திப்பே கடைசி சந்திப்பாகும் என்று நினைக்கவில்லை. அவர் நம்மை விட்டுப் போகவில்லை. கண்ணீரைத் துடைத்துக்கொள்ளுங்கள். அவர் பாடலையும், இசையையும் நினைத்துக்கொள்ளுங்கள். அவர் நம்மோடு இருக்கிறார் என்பது தெரியும்.

- இன்னும் படம் பார்ப்போம்…

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-17-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7424430.ece

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 18- நாகேஷின் அழுகை!

எஸ்பி.முத்துராமன்

 
 
spm_2482060f.jpg
 

‘நானும் ஒரு பெண்’ படத்தில் நாயகி விஜயகுமாரிக்கு ஒப்பனை செய்வது சவாலான விஷயமாக இருந்தது. கதாபாத்திரப்படி அவர் கருப்பாக இருக்க வேண்டும். திறமை மிகுந்த கினி என்பவர் அந்தப் படத்துக்கு ஒப்பனைக் கலைஞராக வேலை பார்த்தார்.

இவர்தான் ‘பராசக்தி’ படத்தில் சிவாஜிகணேசனுக்கு முதன் முதலாக பொட்டுவைத்து மேக்கப் போட் டவர். விஜயகுமாரியின் கருப்பு தோற்றம் தான் படத்தில் பிரதானம் என்பதால், மேக்கப்புக்காக பயன்படுத்தும் ‘பேன் கேக்’கில் இரண்டு மூன்று கலர்களை மிக்ஸ் செய்து புதுவிதமான ஒரு கருப்பு நிறத்தைக் கொண்டுவந்தார் கினி. அந்த வண்ணம் விஜயகுமாரிக்கு ரொம்ப பொருத்தமாக இருந்தது.

இப்படத்தில் நடிகவேள் எம்.ஆர்.ராதா முக்கிய பாத்திரத்தில் நடித்தார். குணச்சித்திர நடிகர் எஸ்.வி.ரங்காராவ் எப்போதும் படப்பிடிப்புக்கு காலை 11 மணிக்குத்தான் வருவார். இதைக் கவனித்துவந்த எம்.ஆர்.ராதா ஒருநாள், ‘‘ரங்காராவ், உங்க வருகைக்காகத்தான் நாங்க முதலாளி செலவில் டிபன், காபி எல்லாம் சாப்பிட்டுட்டு காத்திருக்கோம். நீங்க 11 மணிக்குத்தான் வர முடியும்னா, ஷூட்டிங்கையும் 11 மணிக்கு மாத் திடலாமே?’’ என்று அவரது பாணி யில் ரங்காராவிடம் கேட்டார். அப்போது ஏதோ சொல்லி அவர் சமாளித்தாலும், எம்.ஆர்.ராதா அப்படி கேட்டது ரங்காராவைக் கொஞ்சம் சங்கடப்படவே வைத்தது.

அந்தப் படத்துக்காக ஏவி.எம்.ராஜ னும், புஷ்பலதாவும் மாணவர்களுக்கான என்.சி.சி உடையில் நடனமாடி ‘ஏமாறச் சொன்னது நானோ’ என்று பாடும் டூயட் பாடல் பெங்களூரில் படமாக்கப்பட்டது. முழுப் படமும் முடிந்து சென்சாருக்கு அனுப்பப்பட்டது. சாஸ்திரி என்ற சென்சார் அதிகாரி, படத்தைப் பார்த்து விட்டு செட்டியாரை நேரில் வருமாறு அழைத்தார். செட்டியார் சாஸ்திரியைப் போய் பார்த்ததும், ‘டூயட் பாட்டில் என்.சி.சி உடையைப் பயன்படுத்தலாமா? அதுவும் உங்கள் படத்தில்?’ என்று கேட்டார்.

செட்டியாரும், இயக்குநரும் அந்த உடையை மாற்றி பாடல் காட்சியை வேறு எடுப்பதாக உறுதியளித்தனர். பெங்களூரில் இயற்கை காட்சிகளோடு அழகாக எடுக்கப்பட்ட அந்தப் பாட்டுக் காட்சியை, மறுபடியும் சென்னை விஜயா கார்டனில் ஒரே நாளில் எடுத்து சாஸ்திரி யிடம் காட்டப்பட்டது.

ஏவி.எம் தயாரிப்பில் நாகேஷ் நடித்த முதல் படம் ‘நானும் ஒரு பெண். நாகேஷை படத்தில் ஒப்பந்தம் செய்வதற்கு ஏவி.எம்.சரவணன் சார் சம்பளம் பேசினார்கள். ‘‘ஐயாயிரம் வைத்துக்கொள்ளலாமே’’ என்று நாகேஷிடம் கேட்க, அதற்கு நாகேஷ் ‘‘ஏழாயிரமாக இருக்கட்டுமே’’ என்றார். ‘‘உங்களுக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம். ஆறாயிரம் ரூபாய்’’ என்று பேசி முடித்தார்.

அப்போது நாகேஷ், ‘‘சரவணன் சார், இதை நான் திமிரோடு சொல்லலே. என் மீதுள்ள நம்பிக்கையால சொல்றேன். நான் கேட்குற சம்பளத்தை பேரம் பேசாம நீங்க கொடுக்கும் காலம் ஒருநாள் வரும்’’ என்றார். அதற்கு சரவணன் சார் ‘‘அந்த நாட்களில் நிச்சயம் நானும் உங்களுக்கு நிச்சயம் கொடுப்பேன்’ என்றார். அதைப் போல நாகேஷ் கேட்ட சம்பளம் கொடுக்கப்பட்டு அவர் கால்ஷீட்டுக்காக காத்திருந்த காலமும் வந்தது. அதற்கு காரணம் நாகேஷின் நடிப்பு… நடிப்பு… நடிப்பு!

படத்தில் விஜயகுமாரிக்கு சகோதர னாக நாகேஷ் நடித்தார். சகோதரி யின் துயரத்தை பார்த்து நாகேஷ் அழு வதுபோல ஒரு காட்சி. திருலோகசந்த ரிடம் ஓடிவந்த நாகேஷ், ‘‘நான் காமெடி யன். எனக்கு அழற சீன் செட் ஆகுமா?’’ என்றார். ‘‘கண்டிப்பா பொருந்தும். டயலாக்கை சரியா உள்வாங்கிட்டு, உங்க ஸ்டைல்ல உணர்வுபூர்வமா இயற்கையா பேசி நடிங்க’’ என்று சொன்னார். இயக்குநர் சொல்லியதைப் போலவே நாகேஷ் உணர்ச்சிபூர்வமாக நடித்தார்.

நாகேஷ் அழுது நடிப்பது சரி யாக இருக்குமா? மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற பேச்சு எழுந்த தைக் கேட்ட செட்டியார், இயக்குநர் திருலோகசந்தரிடம் ‘‘இந்தக் காட்சியை வைத்துக்கொள்வது சரியாக இருக் குமா?’’ என்று கேட்டார். ‘‘மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும். நாகேஷுக் கும் இது ஒரு திருப்புமுனை யாக அமையும்’’ என்றார் திருலோக சந்தர். ‘‘இயக்குநரின் முடிவே முடிவு’’ என்று கூறிவிட்டார் செட்டியார். ஒரு தயாரிப்பாளருக்கு இயக்குநர் மீதிருந்த நம்பிக்கைக்கு இது ஒரு சிறந்த உதா ரணம். இந்தக் காட்சியைப் பார்த்துதான், இயக்குநர் பாலசந்தருக்கு நாகேஷைக் கதாநாயகனாக போட்டு ‘சர்வர் சுந்தரம்’ படம் எடுக்கலாம் என்ற எண்ணமே வந்தது என்பார்கள்.

‘நானும் ஒரு பெண்’ தமிழில் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடியது. எப்போதுமே ஏவி.எம் தயாரிப்பில் ஒரு படம் வெளிவரும்போது அந்தப் படக்குழுவினர் தமிழகம் முழுக்க ரிலீஸான தியேட்டர்களுக்குச் சென்று, படம் பார்க்கும் மக்களின் விமர்சனங் களை சேகரித்து வருவார்கள். பத்திரிகை களின் விமர்சனங்களையும் சேகரித்து வைத்துக்கொள்வார்கள். பிறமொழி களில் அந்தப் படத்தை எடுக்கும் போது அந்தத் தவறுகள் திருத்தப் பட்டு புதிய திரைக்கதையை உருவாக் கிக்கொள்வார்கள்.

அதன் அடிப்படை யில் ‘நானும் ஒரு பெண்’படம் தெலுங்கில் என்.டி.ராமாராவ், சாவித்திரி நடிப்பில் ‘நாடி ஆடஜென்மே’ என்ற பெயரில் வந்தது. ஹிந்தியில் மீனாகுமாரி, தர்மேந்திரா நடிக்க ‘மைன் பி லடிகி ஹூன்’ என்ற பெயரில் வெளியானது. தமிழைப் போலவே தெலுங்கு, ஹிந்தியிலும் படம் வெற்றிகரமாக ஓடியது.

அடுத்து ஏவி.எம் நிறுவனத் தயா ரிப்பில் திருலோகசந்தர் இயக்க, ‘காக்கும் கரங்கள்’ படத்தின் வேலைகள் தொடங்கியது. இந்தப் படத்தில் ‘நானும் ஒரு பெண்’படத்தின் வெற்றி ஜோடி எஸ்.எஸ்.ஆரும் விஜயகுமாரியும் நடித் தார்கள். படத்தில் எஸ்.எஸ்.ஆர் கடமை தவறாத ஒரு டாக்டராக நடித்தார். எப் போதும் ஏழையாக நடிக்கும் எஸ்.வி.சுப்பையா இதில் பெரும் பணக்காரர். இந்தப் படத்தில் ஒரு நடிகர் அறிமுகமானார்.

அவர் நடித்த முதல் நாள் படப்பிடிப்பில் நாயகியின் கையைப் பிடித்து நடிக்க வேண்டும். நாயகியின் கைகளைப் பிடிக்கும்போது நடிகரின் கைகள் நடுங்கத் தொடங்கின. இயக்கு நர் திருலோகசந்தர் நாயகியிடம் ‘‘அவரது கைகளை நீ கெட்டியாக பிடித்துக் கொள்’’ என்று கூற, நாயகி அவர் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். நாயகி அவரது கையைப் பிடித்ததும் அவருடைய கைகள் இன்னும் நடுங்க ஆரம்பித்துவிட்டது. நாயகி தொட்டதும் கைகள் நடுங்கிய அந்த நடிகர் யார்? அடுத்த வாரம் சொல்கிறேன்.

- இன்னும் படம் பார்ப்போம்…

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-18-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88/article7451007.ece

Share this post


Link to post
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 19- சிவகுமாரின் மேன்மை!

எஸ்பி.முத்துராமன்

 
 • முதல் படம்: ‘அல்லித் தண்டு காலெடுத்து’ பாடல் காட்சி, அடுத்த படம்: ‘காக்கும் கரங்கள்’ படத்தில் சிவகுமார் - ரேவதி (1965) .
  முதல் படம்: ‘அல்லித் தண்டு காலெடுத்து’ பாடல் காட்சி, அடுத்த படம்: ‘காக்கும் கரங்கள்’ படத்தில் சிவகுமார் - ரேவதி (1965) .
 • sivakumar_family_2490242g.jpg
   

சென்ற வார கட்டுரையின் இறுதியில், ‘நாயகி கெட்டியாக கைகளைப் பிடித்ததும் நடிகரின் கைகள் நடுங்கின. அந்த நடிகர் யார்?’ என்று ஒரு கேள்வி கேட்டு முடித்திருந்தேன். தமிழ் சினிமாவில் ‘என்றும் 16’ என்று பெயர் வாங்கிய சிறந்த நடிகர் சிவகுமார்தான் அவர். ஆரம்பத்தில் இவர் கொங்கு தமிழில்தான் வசனம் பேசுவார். நாங்கள் எல்லோரும் ‘கொங்குக் காரரே’என்று செல்லமாக கிண்டல் செய்வோம்.

பின்னர் மேஜர் சுந்தரராஜன் நடத்திய நாடகக் குழுவில் நடிகராகச் சேர்ந்து தமிழை பலவிதமாக பேசி நடிக்கக் கற்றுக்கொண்டார்.

சிவகுமார் ஏற்று நடிக்காத பாத்திரங்களே இல்லை. அவர் அறிமுகமான ‘காக்கும் கரங்கள்’ திரைப்படம் 1965-ல் வெளியானது. இது அந்தத் திரைப்படத்துக்கு பொன்விழா ஆண்டு. இந்த நேரத்தில் அவருக்கு அனைவரது சார்பிலும் பொன்விழா வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவருடைய பிள்ளைகள் சூர்யா, கார்த்திக் இரண்டு பேரும் சிறந்த நடிகர்களாக இருப்பதோடு, ஒழுக்கமான பிள்ளைகளாகவும் இருக்கிறார்கள். ஒரு பேட்டியில், ‘‘உங்க பிள்ளைகளை நல்ல பிள்ளைகளாக வளர்த்திருக்கிறீர்களே... அவர்களை அதட்டி வளர்த்திர்களா, அடித்து வளர்த்தீர்களா?’’ என்று கேட்டதற்கு சிவகுமார் சொன்னார்:

‘‘நான் அதட்டியும் வளர்க்க வில்லை; அடித்தும் வளர்க்க வில்லை. நானும் என் மனைவி லட்சுமியும் ஒழுக்கத்துடன் வாழ்ந்து காட்டினோம். அந்த வாழ்க்கையை எங்கள் பிள்ளைகள் பின்பற்றுகிறார்கள்’’ என்றார். புலமைப் பித்தன், ‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே/ அவர் நல்லவ ராவதும் தீயவராவதும்/அன்னை வளர்ப்பினிலே’ என்று எழுதியிருப்பார். பிள்ளைகள் நல்லவர்களாக வளர பெற்றோர் தான் முக்கிய காரணம் என்பதை சிவகுமார் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

‘காக்கும் கரங்கள்’ படத்தில் எஸ்.வி.சுப்பையா பணக்கார வேடத்தில் வித்தியாசமாக நடித்திருப்பார். படப்பிடிப்புக்கு வரும்போது கூழ் எடுத்து வந்து எல்லோரையும் குடிக்க வைப்பார். இயக்குநர் தொடங்கி லைட் மேன் வரைக்கும் குடித்தே தீர வேண்டும். அவர் மாலை 6 மணிக்கு மேல் வேலை செய்ய மாட்டார்.

படத்தில் ஒரு இரவுக் காட்சி. எஸ்.வி.சுப்பையா நடித்தே ஆக வேண்டும். ஏவி.எம்.சரவணன் விவரத்தை சொல்லி இரவு நடிக்கச் சொன்னார். அதற்கு எஸ்.வி.சுப்பையா, ‘‘இந்தக் கூழை உங்கள் தந்தையார் ஏவி.எம் குடித்தால் நான் இரவு நடிக்கிறேன்’’ என்றார். அப்பச்சி அதைக் குடித்துவிட்டு, ‘‘நல்லா இருக்கு, இன்னொரு டம்பளர் கொடு’’ என்று வாங்கிக் குடித்தார். இதனை ஏவி.எம்.சரவணன் எஸ்.வி.சுப்பையாவிடம் சொன்னதும், ‘‘இரண்டு டம்பளர் கூழுக்கு… இரண்டு இரவுகள் நடிக்கிறேன்’’ என்று ஒப்புக்கொண்டார்.

‘காக்கும் கரங்கள்’ படத்தின் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன். இசையில் பல புதுமை செய்தவர். அவரிடம் புகழேந்தி என்ற ஓர் உதவியாளர் பணியாற்றினார். இந்த ராகம் என்று கே.வி.மகாதேவன் ஆரம்பித்தவுடனே அதை அவர் அப்படியே பாடிக் காட்டுவார். இப்படத்தில் இடம்பெற்ற ‘ஞாயிறு என்பது கண்ணாக’ பாடலை இப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

‘அல்லித் தண்டு காலெடுத்து’ என்ற பாடலுக்கு படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தோம். ‘அல்லித் தண்டு காலெடுத்து’ என்ற வார்த்தைக்கு குழந்தை நடப்பதைப் போல படமாக்க வேண்டும். அந்தக் குழந்தை நடப்பதை படமாக்க ஆயத்தமானால் அந்தக் குழந்தை ‘நடக்க மாட்டேன்’ என்று அடம்பிடித்தது. எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. முடிவாக இயக்குநர் திருலோக சந்தர், ‘பையனை தனியாக வைத்து எடுத்துக்கலாம்’ என்று சொல்லிவிட்டு மற்ற காட்சிகளை எடுத்து முடித்தார்.

அதன்பிறகு நானும் கேமராமேன் முத்துசாமியும் தனியே அந்தக் குழந்தையை அழைத்துச் சென்று சாக்லேட் கொடுத்து, விளையாட்டு பொம்மைகள் கொடுத்து நடக்க வைக்க முயற்சித்தோம். தோல்வி தான். முத்துசாமி சோர்ந்துபோய் ஒரு சிகரெட்டை எடுத்து புகைக்கத் தொடங்கினார்.

திடீரென முத்துச்சாமி கையில் இருந்த சிகரெட்டை விளையாட்டாக அந்தக் குழந்தையின் முன் நீட்டி ‘வாப்பா… வா’ என்றார். சிகரெட்டை வாங்க விறுவிறுவென நடக்க ஆரம்பித் தான். இதுபோதாதா? திருப்தியாக அந்தக் காட்சியை எடுத்தோம். அப்படி எங்களை வேலை வாங்கிய சிறுவன் இன்று எங்கு இருக்கிறானோ தெரியவில்லை.

- இன்னும் படம் பார்ப்போம்.

http://tamil.thehindu.com/cinema/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-19-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/article7476868.ece

Share this post


Link to post
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 20- பரவிய தீ!

எஸ்பி.முத்துராமன்

 
spm_2498751f.jpg
 

ஏவி.எம்.சரவணன் சார் ஒருமுறை மும்பை சென்றபோது கிஷோர்குமா ரும், ஒரு சிறு பையனும் இருந்த ஒரு படத்தின் போஸ்ட்டரைப் பார்த்தார். அந்தப் படத்தைப் பற்றி நிர்வாகி சின்னா மேனனிடம் கேட்க, ‘‘அந்தப் படம் சுமா ராக ஓடுது” என்று கூறினார். அதற்கு சரவணன் சார், ‘‘அந்த சிறுவனைப் பார்த்தால் படம் நன்றாக இருக்கும் என்றே தோன்றுகிறது. அந்தப் படத்தை பார்க்க ஏற்பாடு செய்யுங்கள்” என்றார். ஆனால் பார்க்க இயலவில்லை. இதை கேள்விப்பட்ட சென்னை வீனஸ் பிக்சர்ஸ் புரொடக்‌ஷன் மேனேஜர் சுப்ர மணியன், சரவணன் சாரை வந்து பார்த்து ‘‘கிஷோர்குமார் படத்தை பார்க்க விரும்புனீங்கன்னு கேள்விப்பட்டேன். அதோட உரிமை எங்கிட்டத்தான் இருக்கு. அதை விநியோகஸ்தர்களிடம் போட்டுக் காண்பித்தேன். இந்தப் படத் தில், எம்ஜிஆர் நடித்தாலும் ஓடாதுன்னு சொல்லிட்டாங்க. இவ்வளவுக்குப் பிற கும் நீங்க படத்தைப் பார்க்கணும்னா போட்டுக் காண்பிக்கிறேன்’’ என்றார்.

சரவணன் சார் படத்தைப் பார்த்தார். படம் அவருக்குப் பிடித்திருந்தது. ஒரு தொகையை கொடுத்து உரி மையை வாங்கிக் கொண்டார். அந்தப் படத்தை திருலோகசந்தர், கிருஷ்ணன்- பஞ்சு, ஜாவர் சீதாராமனை பார்க்க வைத்தார். அவர்கள் ‘‘திருப்தியாக இல்லையே”என்றனர். அதற்கு சரவணன் சார் ‘‘அந்தச் சிறுவனை படம் முழுக்க பேச இயலாதவனாக் காட்டிட்டாங்க. அந்தப் பையன் பேசுற மாதிரி கதையை உருவாக்கி, பின்னால அவனை பேச முடியாதவனா மாத்தினா மனசில் பதியும்” என்றார். ‘‘நீங்க சொன்னது மாதிரி கதையை மாத்தி தர்றேன்” என்றார் ஜாவர் சீதாராமன். இந்தி கதையை வைத்துக்கொண்டு தமிழில் புதிய திரைக்கதை உருவானது.

அந்த இந்திப் படப் பெயர் ‘‘தூர் கஹான் கி ஜாவோன். தமிழில் ‘ராமு’. ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார். படம் ராமு என்கிற பையனை மையமாக வைத்தே சுழலும். அந்தப் பையனின் பெற் றோராக ஜெமினிகணேசன் - புஷ்பலதா நடித்தார்கள். ராமு ‘‘பச்சை மரம் ஒன்று… இச்சைக் கிளி ரெண்டு” என்று பாடி ஆடும் பாட்டு இன்றும் பலரது மனதில் பசுமையாக இருக்கும்.

படத்தில் ஜெமினி ஒரு ராணுவ வீரர். விடுமுறையில் வந்த அவர் ராணுவத்துக்குத் திரும்பிய பிறகு கொள்ளைக்காரர்கள் அந்த ஊருக்குள் வந்து கொள்ளை அடிப்பதுடன், ஜெமினி வீட்டுக்கும் தீ வைப்பார்கள். அப்போது ராமுவும், அம்மா புஷ்பலதாவும் நெருப் பில் மாட்டிக் கொள்வார்கள். நெருப்பு பிடித்த ஒரு உத்தரம் அம்மாவின் மேல் விழும். அதைப் பார்த்து ராமு ‘அம்மா’ என்று உரக்கக் கத்துவான். அப்போது அவன் பேசும் திறனை இழந்துவிடுவான். அவன் அம்மாவும் இறந்துவிடுவார். ஊர் திரும்பிய ஜெமினி விவரம் அறிந்து துக்கப்படுவார். ராமுவை பேச வைக்க ஜெமினி எடுக்கும் முயற்சிகள் தோல்வி அடைகின்றன.

ஒருமுறை ஜெமினி கோபமாக பையனை ‘‘செத்துப் போ” என்று அடிப்பார். பையன் அழுது கொண்டே ‘‘எனக்கு சாகத் தெரிய லையே அப்பா” என பீச் மணலில் எழுதி வைத்துவிட்டு ஜெமினி பார்க்காத நேரத்தில் கடலில் போய் இறங்குவான். மகன் அலைகளில் முழுகும் சமயத்தில் ஜெமினி பார்த்துவிடுவார். ஓடிப் போய் அவனை காப்பாற்றி, மகனை கட்டிப் பிடித்துக்கொண்டு கதறி அழுவார். அந்த நேரத்தில் அசரீரி போல் ஒரு பாடல்.

அந்தப் பாடலைக் கேட்டுக்கொண்டே கோயிலை நோக்கிப் போவார்கள். அங்கு நடிகர் நாகையா பாடிக்கொண்டிருப்பார். சீர்காழி கோவிந்தராஜனும், டி.எம்.சௌந்தரராஜனும் உணர்வுபூர்வமாக பாடிய அந்தப் பாட்டுதான் ‘கண்ணன் வந்தான்.. அங்கே கண்ணன் வந்தான்… ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்’. கவியரசு கண்ணதாசனின் ஆழமான வரிகள். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி-யின் அழுத்தமான இசை. கதையோடு கலந்தப் பாட்டு பார்ப்பவர் களிடத்தில் கண்ணீரை வரவழைத்தது.

இப்படியான சூழலில் ஜெமினியும் ராமுவும் கே.ஆர்.விஜயாவை சந்திக் கிறார்கள். ராமு மீது கே.ஆர்.விஜயா வுக்கு அதிக பாசம். ஜெமினியின் கதையைக் கேட்டு அவர் மீதும் ஒரு பரிவு. இதனை புரிந்துகொண்ட ஜெமினி ஒரு பாடலை பாடுகிறார். அந்தப் பாடல்தான் ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ பாடல். அதாவது கே.ஆர்.விஜயாவை தன்னிடம் நெருங்க வேண்டாம் என்ற பொருள்படப் பாடுவார்.

அந்தப் பாட்டை பாடியவர், பி.பி.னிவாஸ். மிக அற்புதமாக அவர் பாடியிருப்பார். வாழுங்காலத்தில் அவரை ஓய்வு நேரங்களில் டிரைவ் இன் ஹோட்டலில் பார்க்கலாம். சட்டைப் பை முழுக்க பேனாக்களை வைத்துக்கொண்டு, கை நிறையப் புத்தகங்களுடன் படித்துக்கொண்டே இருப்பார். அல்லது எழுதிக்கொண்டே இருப்பார். நல்ல குரல் மட்டுமல்ல... நல்ல மனிதநேயமுள்ள மனிதர்.

‘ராமு’ படத்தின் இறுதிக் காட்சியில் வில்லன் ஆட்கள் வந்து ராமுவை கல் உரலில் கட்டிப் போட , கே.ஆர்.விஜயா வுக்கு அசோகன் பாலியல் தொந்தரவு கொடுப்பார். அப்போது ஜெமினி வந்து கே.ஆர்.விஜயாவைக் காப்பாற்றுவார். அசோகன் தீ பந்தத்தோடு வந்து சண்டை போடுவார். அப்போது அந்த அறை தீ பிடித்துக்கொள்ளும். அங்கே மயங்கிக் கிடக்கும் கே.ஆர்.விஜயா பக்கத்திலும் கல் உரலில் கட்டப்பட்டுள்ள ராமுவின் பக்கத்திலும் தீ பரவும்.

திடீரென கே.ஆர்.விஜயா மீது ஒரு எரியும் உத்தரம் விழப் போவதைப் பார்த்த ராமு, அவரைக் காப்பாற்ற ‘அம்மா’ என்று உணர்ச்சியில் கத்திவிடுகிறான். முன்பு தாய்மீது எரிந்த உத்தரம் விழுந்தபோது ‘அம்மா’ என்று கத்தியபடி பேசும் திறனை இழந்தான். இப்போது கே.ஆர்.விஜயா மீது எரியும் உத்தரம் விழப் போவதைப் பார்த்து உணர்ச்சிகரமாக ‘அம்மா’ என்று கத்த அவனுக்கு பேச்சு வந்துவிடுகிறது. இதுதான் காட்சி.

இந்தக் காட்சியை திருலோகசந்தர் பரபரப்பாக படமாக்கினார். மயங்கிக் கிடக்கும் கே.ஆர்.விஜயாவை நோக்கி தீ பரவ, கல் உரலில் கட்டிப் போட்டி ருக்கும் ராமுவின் அருகிலும் தீ பரவு கிறது. இந்தக் காட்சி எடுக்கும்போது நெருப்பு குறைய, அங்கிருந்த உதவி யாளர்களிடம், ‘‘கொஞ்சம் மண்ணெண் ணெயை ஊத்துங்க” என்று சொன் னதும், அவர்கள் ஆர்வக் கோளாறி னால் மண்ணெண்ணெயை அதிகம் ஊற்றிவிட்டார்கள். மொத்த அறையும் தீப்பிடித்துக்கொண்டது. நாங்கள் பயந்துவிட்டோம். கே.ஆர்.விஜயாவை நெருப்புக்குள் இருந்து பத்திரமாக வெளியில் கூட்டிவந்தோம்.

ஆனால், கல் உரலில் கட்டப் பட்டிருந்த ராமுவின் கட்டுகளை அவிழ்க்க முடியவில்லை. தீ வேகமாக பரவிக்கொண்டிருந்தது. ராமு கத்த … நாங்கள் கத்த… அங்கே என்ன நடந்தது? அடுத்த வாரம் பார்ப்போமா?

- இன்னும் படம் பார்ப்போம்...

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-20-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%80/article7502306.ece

Share this post


Link to post
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 21- அந்த புகழ்பெற்ற நடிகர்!

எஸ்பி.முத்துராமன்

 
 
spm_2507090f.jpg
 

சென்ற கட்டுரையில் ‘ராமு’ படத் தின் இறுதிக் காட்சியில் ராமுவை உரலில் கட்டிப் போட்டிருந்தார்கள். அந்த அறையில் தீ பரவியது… என முடித்திருந்தேன். அதன் தொடர்ச்சி…

தீ அதிகமாக அறையில் பரவத் தொடங்கியது. ராமு பலமாக கத்த, கொஞ்சமும் யோசிக்காமல் இயக்குநர் திருலோகசந்தர் ஓடிப் போய் பையனை கல் உரலோடு சேர்த்து தூக்கிக்கொண்டு வெளியே வந்தார். அவர் ஒரு பாக்ஸர் என்று முன்பே சொல்லியிருக்கிறேன். மனத் திறமையைப் போல உடல் பலமும் மிக்கவர் திருலோகசந்தர். இயக்குநர் படத்தை இயக்கும்போது அந்தக் காட்சிகளில் சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி செயல்பட வேண்டுமென்பதற்கு இந்தக் காட்சி ஒரு சாட்சி.

அன்றைக்கு உடல் கருகி சாக இருந்த அந்த ராமுவின் உண்மை யானப் பெயர் ராஜ்குமார். அந்தப் பையனுடைய அப்பா பெயர் அனுமந் தாச்சார். அவர் யுனிவாக்ஸ் வாசிப் பவர். ராஜ்குமார் ராமுவாக நடிக்கும் போது வயது 8. இன்றைக்கு வயது 57. அக்கார்டிங் வாசிக்கும் இசைக் கலைஞராக இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு மனைவி வினதாவும், பணிபுரியும் இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். 8 வயது ராஜ்குமாரையும் 57 வயது ராஜ்குமாரையும் புகைப்படங்களில் ஒப்பிட்டுப் பாருங்கள். காலச் சுழற்சியில் தான் எவ்வளவு மாற்றங்கள்!

கே.ஆர்.விஜயா, ஏவி.எம்மில் பணியாற்றிய நடராஜன் நடத்திய அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தவர். ஏவி.எம். தயாரிக்கும் படத்தில் நடிக்க வைக்க நடராஜன்தான் ‘‘நல்லா நடிக்கிற பொண்ணு’’ என்று கே.ஆர்.விஜயாவுக்கு சிபாரிசு செய்தார். அவருக்கு ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்துப் பார்த்தோம். அந்த நேரத்தில் ஒல்லியாக அவர் இருந்ததால் தேர்வாக வில்லை. அதன் பிறகு கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தயாரித்து, இயக் கிய ‘கற்பகம்’ படத்தில் நடித்துப் புகழ்பெற்றார். அதைப் பார்த்துவிட்டு நாங்கள் அவரை ‘ராமு’ படத்தில் நடிக்க வைத்தோம்.

காதல் மன்னன் ஜெமினி கணேசன் எப்போதுமே ஜாலி பேர்வழி. ஷூட்டிங் சமயத்தில் ஷாட் எடுக்கும்போது காணா மல் போய்விடுவார். தேடிப் பார்த்தால் படப்பிடிப்பு நடக்கும் செட்டை தாண்டி ஒரு ஃப்ளோரின் வராண்டாவில் இருக்கும் லான்ட்லைன் போனில் பேசிக் கொண்டிருப்பார். எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரும் கொடி கட்டிப் பறந்த காலத்தில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டவர் ஜெமினி கணேசன். அவரது மகள்கள் டாக்டர் கமலா செல்வராஜ், வட இந்தியாவில் பெரும் பெயரை பெற்றுள்ள நடிகை ரேகா ஆகியோர் இன்றைக்கும் ஜெமினியின் பெயருக்கு கூடுதல் புகழையும் பெருமையையும் சேர்த்து வருகிறார்கள்.

‘ராமு’ தமிழில் வெற்றி பெற்றதும் அந்தப் படத்தை வழக்கம் போல ஏவி.எம் தெலுங்கில் எடுத்தார்கள். அங்கு என்.டி. ராமராவும், ஜமுனாவும், ராமுவாக தமிழில் நடித்த அதே ராஜ்குமாரும் நடித்தார்கள். ஏ.சி.திருலோகசந்தர்தான் தெலுங்குப் படத்துக்கும் இயக்குநர். நரசிம்ம ராஜு என்ற சிறந்த எழுத்தாளர் வசனம் எழுதினார். என்.டி.ராமராவ் எப்போதும் உணர்ச்சிகரமாக நடிக்கக் கூடியவர். படத்தில் ஒரு காட்சியில் வாய் பேச முடியாத ராமுவை, தன் மனைவியின் கல்லறைக்கு அழைத்துச் சென்று அவனை ‘அம்மா’ என்று பேச வைக்க முயற்சிப்பார். அவனும் ‘அ… அ… அ…’ என்று பேச முயற்சிப்பான். அவனால் பேச முடியாது. என்.டி. ராமராவ் உணர்ச்சிகரமாக ‘அம்மா பிலுவு... அம்மா பிலுவு…’ என்று வற்புறுத்தி கெஞ்சுவார்.

இந்தக் காட்சியை தியேட்டரில் பார்த்துக் கொண்டிருந்த பெண்கள், ‘‘சின்னா… அம்மான்னு பிலுவு, நானா... அம்மான்னு பிலுவு” என்று என்.டி.ஆரோடு சேர்ந்து கெஞ்சினார்கள். கதையோடு பெண்கள் ஒன்றிப்போய் உணர்ச்சி வசப்பட்டார்கள். இதுதான் வெற்றியின் அடையாளம். தெலுங்கிலும் படம் 100 நாட்கள் ஓடியது.

ஏவி.எம் நிறுவனத்தில் அப்போது ஒரு பிரம்மாண்டமான படம் எடுக்க முடிவு செய்யப்பட்டது. பிரம்மாண்ட மான படத்துக்குப் பெரும் புகழ்பெற்ற நடிகரைத்தானே ஒப்பந்தம் செய்வார்கள். அந்தப் புகழ்பெற்ற நடிகர் யார்?

- இன்னும் படம் பார்ப்போம்...

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-21-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/article7529432.ece

Share this post


Link to post
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 22- எம்.ஜி.ஆரின் விருந்தோம்பல்!

எஸ்பி.முத்துராமன

 
 
spm_2515721f.jpg
 

ஏவி.எம் எடுக்கத் திட்டமிட்ட அந்த பிரம்மாண்டமான படம் ‘அன்பே வா’. அந்தப் படத்தில் நடித்த பிரபல கதாநாயகர் என்றும் புரட்சி தலைவராக திகழும் எம்.ஜி.ஆர் அவர்கள். திரை உலகம் மட்டுமல்லாமல் அரசியல் வாழ்க்கையிலும் புகழோங்கி முதலமைச் சராக அரசாண்டவர். திரைப்படங்களில் கதையிலும், காட்சியிலும், பாடல்களிலும் மக்களுக்கு நல்ல கருத்துகளை சொன் னவர். பிறருக்கு உதவிகளைச் செய்து மனித நேயத்தோடு வாழ்ந்து காட்டியவர்.

இப்படி படங்களில் நடித்ததோடு வாழ்க்கையிலும் வாழ்ந்து காட்டியவர். அதனால் மக்களுக்கு குறிப்பாக பெண் களுக்கு அவர் மீது அன்பும், பாசமும் ஏற்பட்டது. உண்மையாக வாழ்ந்து மக் களின் உள்ளங்களில் இடம் பிடித்தவர். அவர் நம்மை விட்டுச் சென்று பல ஆண்டு கள் ஆனாலும், அவர் பெயரைச் சொல் லித்தான் இன்னும் ஓட்டுக் கேட்கிறார் கள். ஏவி.எம் நிறுவனத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் நடிக்க ஒப்பந்தமானது எல்லோ ருக்கும் மிக மகிழ்ச்சியைத் தந்தது.

எம்.ஜிஆரின் சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் திரு லோகசந்தர். ‘அன்பே வா’ திரைக் கதையை எம்.ஜி.ஆரை மனதில் வைத்து திருலோகசந்தர் எழுதியிருந்தார். திரைத் துறைக்குப் பெருமை சேர்த்த பல படங் களுக்கு வசனம் எழுதிய ஆரூர்தாஸ் இந்தப் படத்தின் வசனகர்த்தா. கதையை எம்.ஜி.ஆரிடம் சொல்வதற்காக அவரு டைய ராமாவரம் தோட்டத்துக்கு ஏவி.எம். சரவணன் சார் தலைமையில் இயக்குநர் திருலோகசந்தரோடு புறப்பட்டோம்.

எங்களைப் பார்த்ததும் எம்.ஜி.ஆர் அவர்கள், ‘‘முதலில் சாப்பிட்டுட்டு வாங்க பேசலாம்’’ என்றார். அது அவரின் விருந் தோம்பல். உணவு உபசரிப்புக்குப் பிறகு, திருலோகசந்தர் திரைக்கதையைக் கூற எம்.ஜி.ஆர் அவர்கள் ஆர்வமாகக் கேட்டார். ‘‘இதுவரை நான் நடித்து வந்த பார்முலாவுக்குள் இந்தக் கதையை அடக்க முடியாது. வித்தியாசமாக இருக் கிறது. மாறுபட்ட கதைக் களம்.

என்னை யூத்ஃபுல் கதாபாத்திரமாக உருவாக்கி இருக்கிறீர்கள். இது வழக்கமான எம்.ஜி.ஆர் படம் அல்ல; இயக்குநர் திருலோகசந்தர் படம்’’ பெருமையோடு சொன்ன எம்.ஜி.ஆர், ’’படத்தை திரு லோகசந்தர் இயக்கும் விதத்தில்தான் இந்தப் படத்தின் வெற்றி அமையும். ஏவி.எம்மின் ‘அன்பே வா’படத்தில் நடிப் பதைப் பெருமையாக கருதுகிறேன்’’ என்று முழு மனதுடன் ஒப்புக்கொண்டார்.

படத்தின் ஒருங்கிணைப்பு வேலை களை ஏவி.எம்.சரவணன் சார் கவனித்துக்கொண்டார். சரவணன் சார் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அவர் நடிக்கும் படப்பிடிப்புகளுக்குப் போய் எம்.ஜி.ஆரை சந்தித்துப் பேசுவது அவர் பழக்கம். சரவணன் சாரை அவரது வீட்டில் சரவன் என்றே அழைப்பார்கள். எம்.ஜி.ஆரும் சரவன் என்றே அழைப் பார். ‘அன்பே வா’ படத்தில் நடிக்க வந்ததும் சரவணன் சாரை எம்.ஜி.ஆர் செல்லமாக ‘முதலாளி’ என்றழைக்க ஆரம்பித்தார்.

‘அன்பே வா’ படத்துக்குத் தொடக்க விழா செப்டம்பர் மாதத்தில் நடந்தது. சரவணன் சார் படத்தை பொங்கல் பண்டிகை அன்று வெளியிட வேண்டும் என ஆசைப்பட்டார். இதை இயக்குநர் திருலோகசந்தரிடம் கூறியதும், ‘‘கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் முழு ஸ்கிரிப்டாக தயாராக இருக்கிறது. அத னால் படப்பிடிப்பை விரைவாக முடிக் கலாம்’’ என்று நம்பிக்கைக் கொடுத்தார். சரவணன் சார் தன் விருப்பத்தை அப்புச்சியிடம் சொன்னதும் அவருக்கும் ஆர்வம் அதிகமானது. ‘‘ஆனால் எம்.ஜி.ஆர் கால்ஷீட்டை எப்படி நமக்கு மொத்தமாக ஒதுக்கித் தருவார்?’’ என்று கேட்டார். சரவணன் சார், ‘‘எம்.ஜி.ஆர் அவர்களிடமே கேட்டுப் பார்த்துவிடுகிறேன்’’ என்று கூறினார்.

என்னிடம் ராமாவரம் தோட்டத்துக்கு போன் போட்டு, எம்.ஜி.ஆர் அவர் களிடம் ‘தான் அவரை நேரில் சந்திக்க விரும்புவதாகவும் எப்போது வரலாம்' என்றும் கேட்கச் சொன்னார் சரவணன் சார். நான் கேட்டேன். அதற்கு எம்.ஜி.ஆர் அவர்கள் ‘‘கால்ஷீட் தேதி விஷயங்கள் என்றால் நீங்கள் மட்டும் வாங்க. வேறு முக்கியமான விஷயம் என்றால் முதலாளியைக் கூட்டிட்டு வாங்க’’ என்றார். தோட்டத்துக்குப் புறப் பட்டோம். சரவணன் சார், எம்.ஜி.ஆரிடம் ‘‘ஒரு முக்கியமான விஷயம். நீங்கள்தான் முடிவு சொல்ல வேண்டும். அது முடிந் தால் சந்தோஷம். உங்களுக்கு சிரமமாக இருந்தாலும் வருத்தப்பட மாட்டோம்’’ என்றார்.

‘‘பில்டப் எதுக்கு முதலாளி. என்ன விஷயம்னு சொல்லுங்க’’ என்றார் எம்.ஜி.ஆர்.

‘‘அன்பே வா படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யலாம்னு ஒரு ஆசை.’’

‘‘அப்படி ஒரு ஆசையா? சத்யா மூவிஸ்ல சாணக்கியா இயக்கத்தில் ‘நான் ஆணையிட்டால்’ படத்தின் வேலைகள் நடந்துட்டிருக்கு. அதைப் பொங்கலுக்கு வெளியிடலாம்னு திட்டமிட்டிருக்காங்க’’ என்று சொல்லிவிட்டு, ஆர்.எம்.வீரப்பன் அவர்களை அழைத்து சரவணன் சாருடைய விருப்பத்தைக் கூறினார். ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் செட்டியார் மீதும், சரவணன் சார் மீதும் தனி பிரியம் கொண்டவர். அதனால் அவருடைய படத்தை தள்ளி வைத்துக்கொள்ள சம் மதித்தார். சரவணன் சார் மகிழ்ச்சியோடு அவர்களுக்கு நன்றி கூறினார்.

சரவணன் சார் என்னிடம் ‘‘முத்துராமன் மொத்தமா எவ்வளவு நாட்கள் கால்ஷீட் தேவைப்படும்னு சொல்லுங்க?’’ என்றார். நான் ‘’70 முதல் 80 நாட்கள் தேவைப்படும்’’ என்றேன். உடனே எம்.ஜி.ஆர் அவர்கள், ‘‘முதலாளி அதெல்லாம் விடுங்க. உங்க ஆசைப்படி ‘அன்பே வா’ பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும்’’ என்றார். அப்படி சொன்னதோடு மட்டுமின்றி விரைந்து படத்தை முடிக்க பேருதவியாக இருந்தார். எங்கள் பணிகளையும் வேகப்படுத்தினார். இரவு, பகலாக வேலை பார்த்து படத்தின் நிர்வாக இயக்குநராகவே எம்.ஜி.ஆர். மாறிவிட்டார். பட வேலைகளில் அப்படி ஓர் ஈடுபாட்டுடன் உழைத்தார்.

‘அன்பே வா’ படத்தில் எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி, அசோகன், நாகேஷ், மனோரமா டி.ஆர்.ராமசந்திரன், முத்துலட்சுமி, இப்படி ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே பணிபுரிந்தது. ஏவி.எம் ஸ்டுடியோவில் எல்லா அரங்குகளிலும் பெரிய பெரிய செட்டுகள் போடப்பட்டன. அவுட்டோர் ஷூட்டிங் ஊட்டி, சிம்லா என முடிவானது. ஆகமொத்தத்தில் ‘அன்பே வா’ படத்தின் படப்பிடிப்பு நிகழ்வுகள் அனைத்தும் தமிழ் சினிமாவில் ஒரு தனி வரலாறு.

- இன்னும் படம் பார்ப்போம்...

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-22-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D/article7557098.ece

 

Share this post


Link to post
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 23- எம்.ஜி.ஆருக்கு அப்படி ஒரு செல்வாக்கு!

எஸ்பி.முத்துராமன்

 
 • ‘அன்பே வா’ படப்பிடிப்புக் குழுவில் முதலில் உட்கார்ந்திருப்பது எஸ்.பி.முத்துராமன்
  ‘அன்பே வா’ படப்பிடிப்புக் குழுவில் முதலில் உட்கார்ந்திருப்பது எஸ்.பி.முத்துராமன்
 • spm1_2524201g.jpg
   

‘அன்பே வா’ படத்தின் வேலைகள் தொடங்கும்போதே இந்தப் படம் மிக பிரம்மாண்டமாக வரும் என்பது தெரிந்தது. இயக்குநர் திருலோகசந்தர் எல்லா வேலைகளையும் நேர்த்தியாக திட்டமிட்டார். குமரன் சார் முன்னிலையில் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் வித்தியாசமான மெட்டுகளை அமைக்க, அதற்கு கவிஞர் வாலி புதுமையான வார்த்தைகளை புரட்சி தலைவருக்காகவே எழுதினார். ஒளிப்பதிவாளர் மாருதிராவ் ஏவி.எம்மின் முதல் கலர் படத்தை வண்ணக் கோலமாக்க நவீன உத்திகளை கையாண்டார். ஆர்ட் டைரக்டர் ஏ.கே.சேகர் பெரிய மாளிகைகளை செட் போடுவதற்காக ஸ்கெட்ச் வரைய ஆரம்பித்தார்.

எம்.ஜி.ஆர் அவர் களுக்கான காஸ்ட்யூம்களை எம்.ஜி.நாயு டும், சரோஜாதேவிக்கான மாடர்ன் உடை களைத் தைப்பதற்காக காஸ்ட்யூம் டிசைனர் கே.ஏ.ரஹ்மானும் பொறுப் பேற்றனர். இதற்காக சென்னை மவுண்ட் ரோட்டில் இருந்த இந்தியா சில்க்ஸ் கடையைத் தேர்ந்தெடுத்தோம். வார நாட்களில் கூட்டமாக இருக்குமென்ப தால் ஞாயிறன்று கடையை திறக்கச் சொல்லி விலையுயர்ந்த, வண்ணமிகு துணிகளைத் தேர்தெடுத்தோம். ஒவ்வொரு காட்சிக்கும் இரண்டு மூன்று உடைகள் விதவிதமாக தைக்கப்பட்டன. அதிலிருந்து எம்.ஜி.ஆரும், சரோஜா தேவியும் ஒரு உடையை விருப்பத்துடன் தெரிவு செய்வார்கள். இப்படி ‘அன்பே வா’ படத்தின் முதல்கட்ட வேலைகள் தொடங்கின.

படப்பிடிப்புக்காக எல்லோரும் ஊட்டிக்குப் புறப்பட்டோம். அங்கே போனதும், எம்.ஜி.ஆர் என்னை அழைத் தார். ‘‘நம்ம யூனிட்ல எத்தனை பேர் இருக்கிறோம் என்ற லிஸ்ட் கொடுங்க’’ என்றார். எதற்காக என்று தெரியாததால், ஒரு வார்த்தை சரவணன் சாரிடமும், திருலோகசந்தர் சாரிடமும் கேட்டுவிட லாம் என்று அவர்களிடம் கேட்டேன். ‘‘எங்களோட பெயர்களை விட்டுட்டு மத்தவங்க பெயர்களைக் கொடுங்க’’ என்றார்கள். அது மாதிரியே எம்.ஜி.ஆர் அவர்களிடம் லிஸ்ட் கொடுத்தேன். அந்த லிஸ்ட்டை வாங்கி பார்த்த எம்.ஜி.ஆர் அவர்கள், ‘‘முதலாளி, இயக்குநர் பெயர்கள் இல்லையே. இது எப்படி முழு லிஸ்ட்?’’ என்றார். முதலாளி, இயக்குநர் உட்பட யூனிட்டில் இருந்த அத்தனை பேருக்கும் ஸ்வெட்டர், மப்ளர் வாங்கி அன்புடன் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.

அதை நான் அணிந்துகொண்டு நிற்கும் காட்சியை இங்கே புகைப்படத் தில் பார்க்கலாம். உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எம்.ஜி.ஆர் மனதில் இயல்பாகவே ஊறிப்போன ஒன்று என்பதற்கு இது ஓர் உதாரணம்.

நல்ல வெயில் இருந்தால்தான் கலர் படத்தை சிறப்பாக ஷூட் செய்ய முடியும். அப்போது ஸ்டீட் (Steed) பிலிம் எல்லாம் இல்லை. நாங்கள் சென்ற நேரம் ஊட்டியில் ஒரே மேக மூட்டம். இரண்டு நாட்கள் படப்பிடிப்பு இல்லை. தயாரிப்பாளர்களுக்கு முகத் தில் வாட்டம். அடுத்த நாட்களில் வெயில் வந்தது. இரண்டு நாட்கள் வேலையே இல்லாமல் இருந்ததால் அந்தக் காட்சிகளையும் சேர்த்து படமாக்கும் முயற்சியில் யூனிட் முழு கவனத்தையும் செலுத்தியது. தயாரிப்பாளரின் முக வாட்டம் நீங்கியது. எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் பாடி ஆடும் ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் அழகி என்பேன்’ என்ற பாடலை படமாக்கினோம். ஊட்டி குளிரைப் போல பாட்டும் ஆடலும் குளுகுளுவென்று இருந்தது.

ஊட்டியில் எங்கு படப்பிடிப்பு நடத்தினாலும் பெரும் கூட்டம் கூடியது. அப்போது முருகன் சார், ‘‘ஊட்டியில் இருந்து மைசூர் போகும் வழியில் ஒரு லொக்கேஷன் மஞ்சள் பூக்களோடு வண்ணமயமாக இருக்கிறது. மக்கள் நடமாட்டமே இல்லை. அந்த இடத்தில் படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம்’’ என்றார். எம்.ஜி.ஆர் அவர்கள் நமட்டுச் சிரிப்போடு ‘‘ஓ.கே. போகலாம்’’ என்று சொல்லி புறப்பட்டார். அங்கு போய் படப்பிடிப்பை ஆரம்பித்தோம். நடமாட் டமே இல்லாத இடத்தில் முதலில் ஒரு தலை தெரிந்தது. அடுத்த சில நிமிடங்களில் நான்கு தலைகள் தெரிந்தன. அடுத்த நிமிடங்களில் அதுவே பத்தாகி, நூறாகி பின்னர் ஆயிரத்துக்கும் மேல் தலைகளாகிவிட்டன.

முருகன் சாரை எம்.ஜி.ஆர் திரும்பிப் பார்க்க, அவர் ஓடியே போய்ட்டார். அந்த அடர்ந்த காட்டுப் பகுதியிலும் எம்.ஜி.ஆருக்கு அப்படி ஒரு செல்வாக்கு. நாங்கள் கூட்டத்தை ஒதுக்கி அவரை வெளியில் கொண்டுவர முயற்சிக்க… எம்.ஜி.ஆர் எங்களிடம், ‘‘நீங்கள் கஷ்டப்பட்டுவிடுவீர்கள். ரசிகர்களை என்னிடம் விட்டுவிடுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன்’’ என்று ரசிகர்கள் தன்னை நெருங்காமலும், தள்ளாமலும், தழுவாமலும் சாதூர்யமாக மக்களை சமாளித்து வெளியே வந்து காரில் ஏறி பறந்தார்.

சிம்லா படப்பிடிப்புக்குப் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தோம். மறுநாள் காலை 6 மணிக்கு விமானம். திடீரென கேமராமேன் மாருதிராவுக்கு குளிர் ஜுரம். அவரால் புறப்பட முடியாத நிலை. வேறு எந்த ஒளிப்பதிவாளரை அழைத்துச் செல்லலாம் என்று யோசித்தோம். அப்போது பிரபலமாக இருந்த ஒளிப்பதிவாளர்கள் வின்சென்ட் - சுந்தரம் நினைவுக்கு வந்தார்கள். அவர்களில் பி.என்.சுந்தரத்தை சிம்லாவுக்கு அழைத்துச் செல்லலாம் என முடிவெடுத்தோம். அதை எம்.ஜி.ஆர் அவர்களிடத்தில் சொன்னபோது அவரும் ஏற்றுக்கொண்டார். சுந்தரத்தை ஒரு படப்பிடிப்பில் சந்தித்து விஷயத்தை சொன்னதும் அவர் பதறிவிட்டார். படத்தின் டைரக்டரிடம் போய் விவரங்களைச் சொல்லி வின்சென்ட் குழுவில் இருந்த ஒரு ஒளிப்பதிவாளரை தனக்கு பதில், தொடர்ந்து பணியாற்றும் பொறுப்பை ஒப்படைத்தார். எங்களிடம் வந்து,

‘‘வீட்டுக்கு போய் துணிமணிகளை எடுத்துக்கொண்டு, மனைவியிடம் சொல்லாவிட்டால் கூட தப்பித்துக் கொள்வேன். என் தாயிடம் சொல்லாமல் வரமுடியாது’’ என்று ஓடினார். இந்த ஏற்பாடுகளை செய்ய காலை 3 மணி ஆகிவிட்டது.

இந்த நிகழ்வு பி.என்.சுந்தரத்துக்கு திரில். அவரை விட எங்களுக்கு திரில்லோ திரில். இதெல்லாம் சினிமா எடுத்துப் பார்த்தால்தான் தெரியும்.

- இன்னும் படம் பார்ப்போம்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-23-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/article7582110.ece

Share this post


Link to post
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 24- உதய சூரியனின் பார்வையிலே எம்.ஜி.ஆர்!

எஸ்பி.முத்துராமன்

 
 
 • mgr_jpg1_2532501g.jpg
   
 • ‘அன்பே வா’ படத்தில் குன்றின் உச்சியில் எம்.ஜி.ஆர்.
  ‘அன்பே வா’ படத்தில் குன்றின் உச்சியில் எம்.ஜி.ஆர்.

‘அன்பே வா’ படத் தில் எம்.ஜி.ஆர் பெரிய பணக் காரர். வெவ்வேறு நாடு களுக்குப் பயணித்துக் கொண்டே இருப்பது என்று பிஸியாகவே இருப்பார். தொடர்ந்து வேலை செய்து களைத்துப்போனதால் சிம்லாவில் ஜே.பி. பங்களா என்கிற பெயரில் இருக்கும் தனது பங்களாவுக்கு ஓய்வு எடுக்கச் செல்வார். அந்த பங்களாவில் வேலை பார்க்கும் நாகேஷ், அவரது மனைவி மனோரமா, மாமனார் பி.டி.சம்பந்தத்துடன் சேர்ந்து அந்த பங்களாவை டி.ஆர்.ராமசந்திரன், முத்துலட்சுமி, சரோஜாதேவிக்கு வாடகைக்கு விட்டிருப்பார்கள்.

இந்த விஷயம் எம்.ஜிஆருக்குத் தெரிய வரும். எம்.ஜி.ஆரின் காலில் மனோரமா விழுந்து, ‘‘முதலாளி மன்னிச்சிருங்க’’ என்று மன்னிப்பு கேட்பார். ‘‘சரி, நான்தான் இந்த பங்களாவுக்கு முதலாளி என்று யாரிடமும் சொல்லக் கூடாது’’ என்று மனோரமாவிடம் சத்தியம் வாங்கிக்கொள்வதுடன், நாகேஷிடம் பணத்தைக் கொடுத்து தானும் அங்கே தங்குவதற்கு சம்மதம் வாங்கியிருப்பார் எம்.ஜி.ஆர். சரோஜா தேவி மேல் எம்.ஜி.ஆருக்கு ஒரு கண் விழுந்ததுதான் இதற்குக் காரணம். எம்.ஜி.ஆரும் நாகேஷும் சந்தித்துப் பேசும்போதெல்லாம் மனோரமா பதறு வார். அந்தப் படத்தில் நகைச்சுவை காட்சி அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கும்.

படத்தில் எம்.ஜி.ஆருக்கும் சரோஜாதேவிக்கும் இடையில் ‘சண்டையில்தான்’ காதல் பூக்கும். ‘லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்’ பாடலின்போது மூன்று, நான்கு லவ் பேர்ட்ஸ் களைக் கூண்டில் வைத்து ஷூட் செய்தோம். அந்தப் பாட்டுக்கு சரோஜாதேவி ஆடும்போது எம்.ஜி.ஆர் மறைந்திருந்து கேலி செய்து அபிநயித்து ஆடுவார். அந்த ஷூட்டிங் சமயத்தில் மூர் மார்க்கெட்டுக்குச் சென்று லவ் பேர்ட்ஸ் வாங்கி வருவதற்கு அண்ணாமலை என்ற உதவியாளரை நியமித்திருந்தோம். அவருடைய வேலையே லவ் பேர்ட்ஸ் வாங்கி வருவதுதான். அதனால் அவர் பெயரே ‘லவ் பேர்ட்ஸ்’ அண்ணாமலை என்றாகிவிட்டது.

சரோஜாதேவிக்கு அப்பாவாக நடித்த டி.ஆர்.ராமசந்திரன் நிஜத்தில் சைவக் காரர். ஒரு காட்சியில் சிக்கன் ரோஸ்ட் சாப்பிடுவதுபோல காட்சி எடுக்க வேண் டும். சிக்கனை பார்த்தாலே அவருக்கு வாந்தி வந்தது. இந்த செய்தி ஏவி.எம் செட்டியாருடைய காதுக்குப் போயிற்று. அதற்கு அவர் ‘‘பேக்கரியில் சிக்கன் மாதிரி கேக் செய்யச் சொல்லி, அதை சாப்பிட வைத்து எடுக்கலாமே?’’ என்றார். சிக்கன்ரோஸ்ட் போலவே கேக் செய்து அவரை சாப்பிட வைத்தோம்.

எம்.ஜி.ஆர். அவர்கள் சிம்லாவைப் பார்த்து ரசித்து பாடும் விதமாக உரு வானதுதான் ‘புதிய வானம் புதிய பூமி’ பாடல். இந்தப் பாட்டில் கவிஞர் வாலி, ‘உதய சூரியனின் பார்வையிலே…’ என்று ஒரு இடத்தில் எழுதியிருந்தார். அதை பார்த்த செட்டியார், ‘‘சென்சாரில் வெட்டி விடுவார்களே?’’ என்றார். எம்.ஜி.ஆர் அவர்கள் இப்படி பாடினால்தான் கைதட் டல் விழும்’’ என்று சமாதானம் செய்தார் வாலி. அப்படியே படமாக்கப்பட்டது.

ஆனால். செட்டியார் சொன்னது போலவே சென்சாரில் அந்த வரியை நீக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள். அதன் பிறகு ‘உதய சூரியனின் பார்வை யிலே’ என்ற வார்த்தைக்கு பதிலாக ‘புதிய சூரியனின் பார்வையிலே’ என்று வார்த்தையை மாற்றினோம். படத்தில் மட்டும் ‘புதிய சூரியனின் பார்வையிலே’ என்றுதான் இருக்கும். ஆடியோவில்தான் ‘உதய சூரியனின் பார்வையிலே’ என்று இருக்கும். இதெல்லாம் சென்சார் லீலைகள்.

‘‘உதய சூரியன் என்று வரும் இடத்தில் எம்.ஜி.ஆரை குன்றின் உச்சியில் ஏறி நிற்க வைத்து சூரியனையும் எம்.ஜி.ஆரை யும் இணைத்து ஷாட் எடுத்தால் நன்றாக இருக்கும்’’ என்று இயக்குநர் திருலோக சந்தர், பி.என்.சுந்தரத்திடம் சொல்ல, ‘‘எம்.ஜி.ஆரால் ஏற முடியுமா?’’ என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள்.

கொஞ்ச நேரத்தில் ‘‘டைரக்டர் சார்..!’’ என்று எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது. எல்லோரும் குரல் வந்த திசையில் பார்த்தோம். குன்று உச்சியில் எம்.ஜி.ஆர் அவர்கள் நின்றுகொண்டிருந்தார். படக் குழுவே அவரைப் பார்த்து திகைக்க ‘‘மலை மேல என்னால ஏற முடியுமான்னு நீங்க பேசிட்டிருந்தீங்க… நான் ஏறியே வந்துட்டேன்’’ என்றார் எம்.ஜி.ஆர் புன் சிரிப்போடு. அதுதான் எம்.ஜி.ஆர்!

இயக்குநர் நினைத்தது போலவே அந்தக் காட்சியை படமாக்கினோம். துள்ளல் இசையாக அமைந்த அந்தப் பாடல் முழுக்க எம்.ஜி.ஆர் அவர்கள் ஓடிக் கொண்டே இருப்பார். டி.என்.சுந்தரத்தின் ஒளிப்பதிவில் சிம்லாவின் அந்த அழகும், அந்த மனிதர்களும், அந்தக் குழந்தைகளும் அந்த பாட்டில் வலம் வருவார்கள்.

‘புதிய வானம் புதிய பூமி…. எங்கும் பனி மழை பொழிகிறது’என்ற வரிகள் வரும் இடத்தில் பனி மழையோடு காட்சி எடுக்க வேண்டும் என்று விரும்பினோம். அப்படி ஒரு தருணம் வாய்க்க இரண்டு நாட்கள் காத்திருந்தோம். பனி மழை பெய்யவே இல்லை. சிம்லாவில் இருந்து டெல்லி வந்து விமானத்தில் சென்னைக் குப் புறப்பட்டோம்.

விமானம் பறந்தது. எம்.ஜி.ஆர் அவர்கள் அங்கு கொடுக்கப் பட்ட ஆங்கில செய்தித்தாளை படித்து விட்டு, ‘‘மிஸ் பண்ணிட்டோம். ஸ்நோ பால்ஸ் இன் சிம்லானு செய்தி வந் திருக்கு’’ என்று பத்திரிகையைக் காட்டி யவர், ‘‘டெல்லியில் விமானம் ஏறுவதற்கு முன்பு இந்த நாளிதழ் கையில் கிடைத் திருந்தால், சிம்லாவுக்குத் திரும்பிப் போய் பனி மழையில் அந்தப் பாட்டை எடுத்திருக்கலாம்’’ என்றார். எம்.ஜி.ஆரின் ஆர்வமும், ஆதங்கமும் அதில் தெரிந்தது.

படத்தில் எம்.ஜி.ஆர்- சரோஜாதேவி ‘காதல் சண்டை’ உச்ச கட்டத்தை எட்டும். சரோஜாதேவி அங்கு வந்த கல்லூரி மாணவ-மாணவிகளுடன் சேர்ந்துக் கொண்டு எம்.ஜி.ஆரை கேலி செய்து நடனம் ஆடுவார். அதற்கு எம்.ஜி.ஆர் அவர்கள் சரியான பதிலடி கொடுக்க வேண்டும். சரோஜாதேவியின் மாணவக் குழுவுக்குத் தலைமை வகித்தவர் நடன இயக்குநர் சோப்ராவின் உதவியாளர் ரத்தன்குமார். அவர் நடனம் ஆடுவதில் புலி. அந்த ‘புலி’ ஆட்டத்துக்கு சவால்விட்டு எம்.ஜி.ஆரால் எப்படி ஆட முடிந்தது?

- இன்னும் படம் பார்ப்போம்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-24-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D/article7607092.ece

Share this post


Link to post
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 25- அந்த நாட்கள்!

 
spm_2540866f.jpg
 

‘அன்பே வா’ படத்தில் சரோஜாதேவி கல்லூரி மாணவர் களுடன் சேர்ந்து எம்.ஜி.ஆரைக் கேலி செய்து நடனம் ஆடுவது போல் ஒரு காட்சி. உதவி நடன இயக்குநர் ரத்தன்குமார் தலைமையில் மாணவர் குழு நடனமாட இருந்தனர். ரத்தன்குமாருக்கு இணையாக எம்.ஜி.ஆரால் ஆட முடியுமா என்று படக்குழு எதிர்பார்ப்பில் இருந்தது.

போட்டி என்றாலே விறுவிறுப்புத் தானே. படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர். அவர்கள் வெகு இலகுவாக ட்விஸ்ட் நடனம் ஆடியபோது கைதட்டல் ஷூட்டிங் அரங்கத்தை அதிர வைத்தது. படம் வெளியானதும் தியேட்டர்களில் ரசிகர்கள் அந்தப் பாடலைத் திரும்பத் திரும்பப் பார்த்து ரசித்தனர்.

சிம்லாவுக்குப் படப்பிடிப்புக்காக போயிருந்தோம். சிம்லாவின் மேல்பகுதி முழுதும் பனி படர்ந்த மலைச் சிகரங்கள். அங்குதான் சீனாவின் எல்லைக் கோடு இருந்தது. அந்தப் பகுதியில் நமது ராணுவ வீரர்கள் நம் நாட்டை பாதுகாப்பதற்காக காவல் இருந்தார்கள். அங்கிருந்த பனியும் மிகையான குளிரும் நம் ராணுவ வீரர்களை பாதித்து, அவர்களில் சிலருக்கு கால்கள் மிகவும் மோசமான நிலையில் சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் இருந்தார்கள்.

அத்தகைய ராணுவ வீர்ர்களைப் பார்க்க எம்.ஜி.ஆர் தலைமையில் சரவணன் சார், திருலோகசந்தர் சார் மற்றும் சிலரும் புறப்பட்டோம். அந்த வீரர்களைப் பார்த்து எம்.ஜி.ஆர் கண் கலங்கினார். ‘‘நாட்டில் உள்ள எங்கள் உயிரைக் காக்க, உங்கள் உயிரைப் பணயம் வைக்கும் உங்களைப் பார்க்க வந்திருக்கிறோம்’’ என்று இரு கை தூக்கி அவர்களை வணங்கினார் எம்.ஜி.ஆர். அந்த வீரர்களுக்கு ஹார்லிக்ஸ், ரொட்டி, பழங்கள் எல்லாம் கொடுத்து அவர்களுடைய கைகளைப் பிடித்துக்கொண்டு வாழ்த்தினார்.

எப்போதுமே எம்.ஜிஆருக்கு ஏவி.எம்.சரவணன் சார் மீது தனிப்பட்ட பிரியம் உண்டு. அந்தப் பிரியத்தின் வெளிப்பாடுதான் 86 மற்றும் 87-ம் ஆண்டுகளில் ‘சென்னை செரிஃப்’ஆக சரவணன் சாரை நியமித்து பெருமைப் படுத்தினார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர் மிகுந்த பொருட்செலவில் தயாரித்து, இயக்கிய படம் ‘நாடோடி மன்னன்’. இந்தப் படத்தைப் பற்றி எம்.ஜி.ஆரிடம் பத்திரிகையாளர் கள் கேட்டபோது, ‘‘இந்தப் படம் ஓடினால் நான் மன்னன். ஓடாவிட்டால் நாடோடி’’ என்றார். அந்தச் சூழ்நிலையில் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் ஏவி.எம்.செட்டியாரைப் பார்க்க வந்தார். ‘‘நாடோடி மன்னன் படத்தின் இறுதிகட்ட வேலைகளை முடிக்க கொஞ்சம் பணம் வேண்டும்’’ என்றார். செட்டியாருடைய சட்ட ஆலோசகர் எம்.கே.எஸ், ‘‘பணம் கொடுப்பதாக இருந்தால் எம்.ஜி.ஆரின் கையெழுத்து வேண்டுமே’’ என்றார்.

அதற்கு ‘‘நான் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸின் நிர்வாகி. நான் கையெழுத்துப் போடுகிறேன். என் மேல் நம்பிக்கை வைத்துக் கொடுங்கள்’’ என்றார் ஆர்.எம்.வீரப்பன். அவருடைய அணுகுமுறை செட்டியாருக்கு பிடித்துவிட்டது. கேட்ட பணத்தைக் கொடுத்தார். படம் ரிலீஸான உடனேயே வாங்கிய பணத்தைத் திரும்பக் கொண்டுவந்து கொடுத்தார் ஆர்,எம்.வீ. அவருடைய நாணயம் செட்டியாருக்குப் பிடித்துப்போய் ‘‘நீங்கள் படம் எடுத்தால், நான் பண உதவி செய்கிறேன்’’ என்றார். ஆர்.எம்.வீ ‘தெய்வத்தாய்’படத்தை சொந்தமாக தயாரித்தபோது, தான் சொன்னதைப் போலவே ஆர்.எம்.வீ அவர்களுக்கு செட்டியார் பணம் கொடுத்தார்.

என்னுடைய தந்தை காரைக்குடி இராம.சுப்பையாவிடம் சுயமரியாதை கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட ஓர் இளைஞராக அந்நாட்களில் அறிமுகமானார் ஆர்.எம்.வீ. தந்தை பெரியார் ஒருமுறை காரைக்குடி பகுதிக்கு சுற்றுப்பயணம் வந்தபோது, பெரியாருக்கு துணையாக ஆர்.எம்.வீ அவர்களைத்தான் என் தந்தை அனுப்பி வைத்தார். 4 நாட்கள் பெரியாருக்கு எல்லா உதவிகளையும் செய்தார் ஆர்.எம்.வீ. திருச்சியில் பெரியாரை ரயில் ஏற்றிவிடும்போது 4 நாட்களுக்கான செலவு கணக்கை எழுதி, மீதி பணத்தையும் அவரிடம் கொடுத்திருக்கிறார்.

ஆர்.எம்.வீயின் பொறுப்புணர்ச்சியையும், நேர்மையையும் கண்ட பெரியார் ‘‘குடியரசு பத்திரிகையில் வேலை செய்ய வர்றீயா?’’ என்று கேட்டிருக்கிறார். உடனே ஆர்.எம்.வி. சம்மதம் என்று கூறியிருக்கிறார். இதுதான் ஆர்.எம்.வீ அவர்கள் அரசியலுக்கு வருவதற்கான முதல் படி. அதன் பிறகு அரசியல் தலைவர்களின் பழக்கம், நாடக கம்பெனி நிர்வாகி, சத்யா பிலிம்ஸ் நிர்வாகி, எம்.ஜி.ஆரின் வலது கரம், அமைச்சர் என வளர்ந்தார். இன்று அருளாளர் ஆர்.எம்.வீ அவர்கள் கம்பன் கழகத்தின் தலைவர்.

ஆர்.எம்.வீ அவர்களுக்கு இன்று 90-வது பிறந்த நாள். இலக்கிய மங்கள விழாவாக கொண்டாடப்படும் இந்த இனிய விழாவில் என் தந்தை இராம.சுப்பையா அவர்களின் பெயரில் ஒரு விருதினை உருவாக்கியிருக்கிறார். அந்த விருதை அவர் மகனான எனக்கு வழங்குகிறார். இதில் ஆர்.எம்.வீ அவர்களின் நன்றி உணர்வு தெரிகிறது.

அந்த நன்றிக்கு என் தந்தை இராம.சுப்பையா குடும்பத்தின் சார்பில் உளம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஆர்.எம்.வீ அவர்கள் எனக்கு அண்ணன் மட்டுமல்ல; எனது தயாரிப்பாளரும்கூட. ஆம், அவர் தயாரிப்பில் நான் இயக்கிய அந்தப் படத்தில் ரஜினிகாந்த் நடித்தார். என்ன படம் அது?

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-25-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7632543.ece

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this