Jump to content

சனல் – 4


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சனல் – 4

 வெற்றிச்செ்ல்வி (”காணாமல் போனவனின் மனைவி” சிறுகதை தொகுப்பு, சோழன் படைப்பகம், 2012, இந்தியா)

சனல்-4 கானொளியை பார்க்க வேண்டும் என்ற ஆவல் முகுந்தாவிடம் கொஞ்சம்கூட இருக்கவில்லை. அவள், அறியாத, காணாத, கேள்விப்படாத மரணங்களா அதில் புதிதாக இருந்துவிடப் போகின்றன? யுத்தம் முடிந்ததாகச் சொல்லி மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டாலும்; அவள் கண்ட பிணங்களின் கோலங்கள் மட்டும் நினைவில் நின்ற இடத்திலேயே நிற்கின்றன. அழிக்க முடியாத பதிவுகளாய் மூளையில் பதிந்துவிட்ட அவை  மரணம் தாண்டியும் அந்த ஆத்மாவை அமைதியாக வாழ விடுமா தெரியவில்லை; மறந்துவிட வேண்டும். கொஞ்ச நாட்களுக்காகவாவது மனதை அலட்டிக்கொள்ளாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதுதான் அவளின் விருப்பம். முடிகிறதா?

இதோ நிமலன் தொலைபேசியில் குமுறுகிறான். ‘முகுந், ஒருக்கா அதப்பார். நம்மட அருணாவின்ர தமையன் இருக்கிறான். அதப்பாக்க உனக்கு விருப்பமிருக்காதெண்டு எனக்குத் தெரியம். எண்டாலும் அவளுக்காக அருணாவுக்காக ஒருக்கா பார்’.

அருணா பெற்றோரின் நான்கு பெண் பிள்ளைகளில் ஒருத்தி. அவளுக்கு நேர்மூத்தவனான அருளன்தான் போராட்டத்தில் இணைந்திருந்தான். அதன் பின்பு இறுதிப்போரில் காணாமல் போனவர் பட்டியலில் அவன் இருந்தான். இப்போது இறந்தவர் பட்டியலுக்கு இடம்பெயர்ந்திருக்கிறான் போலும். இந்த உண்மையை அருளனின் குடும்பம் தாங்குமா? அது ஏற்றுக்கொள்ளாது. அதை ஏற்க மறுத்துக் குமுறிவெடித்துவிடும். அந்தக் குடும்பம் அருளனின் வருகைக்காக இல்லாவிட்டாலும் அவனின் இருத்தலுக்காக நாளாந்தம் மன்றாடிக் கொண்டிருக்கும் குடும்பம். தங்களின் முன் வாழாவிட்டாலும் எங்கேயோ ஒரு மூலையில் அவன் உயிருடன் இருப்பான் என்ற நம்பிக்கை அவர்களுக்குண்டு. இப்படியான நம்பிக்கைகள் தான் இவ்வாறான எத்தனையோ பேரின் கவலைகளை கொஞ்சமாவது போக்கிக்கொண்டிருக்கிறது.

முகுந்தா தோள்ப்பையை எடுத்து மாட்டிக்கொண்டு வீட்டுக்கு அருகிருந்த இன்ரநெற் கபேக்கு ஓடினாள். சனல்-4ஐ தான் பார்க்க மாட்டேன் என்று நினைத்துக்கொண்டிருந்த முடிவை மறந்துவிட்டாள். விசைப்பலகையில் அவளது விரல்கள் தட்ட சனல்-4 பக்கங்கள் திறந்து விடப்பட்டது. விரிந்த படங்களின் காட்சி… அவளின் நாசியில் மீண்டும் ரத்த வாடை விசுக்கியடித்தது. மனதில் ஆயிரம் முட்களாய் குத்தியது வலி;. நினைக்கக்கூடத் தயங்கிய நினைவுகள் ரத்தமும் தசையுமாய் கண்முன் காட்சித்திரையில் விரிந்தன. தலையை ஒரு உள்ளங்கையால் தாங்கிக்கொண்டு அருளனைத் தேடினாள். அருளனை மட்டும் தான் தேடினாள்.

இதோ அருளன் கிடைத்துவிட்டான். அருளனேதான். அவளின் உயிர்ச்சிநேகிதி அருணாவின் தமையனேதான். அவன் இறந்துவிட்டான் என்பதை மட்டுமல்ல எப்படி சாகடிக்கப்பட்டான் என்பதையும் சொல்லிக் கொண்டிருந்தது அந்த வீடியோ காட்சி.

விரிந்திருந்த திரையின் பக்கத்தைச் சட்டென்று மூடிவிட்டு எழுந்தாள். தலைச்சுற்றியது. மீண்டும் கதிரையில் அமர்ந்து இரண்டு கைகளாலும் தலையைத் தாங்கிக்கொண்டாள். மனசு அருணாவிடம் ஓடியது. தோள்களில் விழுந்து அவளோடு சேர்ந்து கதறியது. அருளனின் அம்மாவுக்கு ஆறுதல் சொல்லியது. அவர்களின் வீட்டில் அவர்களுக்காக பூசைபோட்டு எல்லோரும் அழுது தீர்த்துவிட்டு ஊருக்கெல்லாம் ஒருமுறைசாப்பாடு போடச் சொன்னது. அவனின் மரணத்தை உறுதிப்படுத்தி அம்மாவின் தேடலை நிறுத்திவிடச் சொன்னது.

மீண்டும் எழுந்த முகுந்தா கவுண்டரில் காசைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தாள். நிமலனுக்கு அழைப்பெடுத்தாள்.

‘அது அருள்தானடா’

‘பாத்தியா நான் சொன்னன். அருணாவ மாதிரியே இருக்கிறான். அந்த முகச்சாயலாலதான் கண்டனான் முகுந். இத எப்படி அவங்களிட்ட சொல்லப்போறாய்?’

‘சொல்லத்தானேடா வேணும். நான் இண்டைக்கே அவங்க வீட்ட போறேன். உன்னோட பிறகு கதைக்கட்டுமா?’

‘சரிடி. எனக்கு ஏலுமெண்டா உன்னோட வந்திருவன்.’

‘சரி. சரி. எனக்குத் தெரியுந்தானே. நான் போட்டு வாறன் ஓ.கே.’

‘ஓ.கே வைக்கிறன்’ என்று தொலைபேசி அழைப்பை துண்டித்த நிமலனின் உணர்வுத்துடிப்பை நினைக்கவும் வேதனையாகத்தான் இருந்தது. அவனுக்கு உடலில் இல்லாமல்போன உணர்ச்சி முழுவதும் மனதிற்குள் வாழ்கிறது போலும். மனதில் துடிப்பும் துள்ளலுமாய் சுறுசுறுப்பாயிருக்கின்ற, பிறர் நலனில் அதிக அக்கறை காட்டுகின்ற அவனுக்கு, நடக்கவே முடியாதளவுக்கு அமைந்துவிட்ட வாழ்க்கையை நினைத்து வேதனைப்பட்டுக் கொள்வதைவிட வேறு என்னதான் செய்ய இயலும்.

முகுந்தாவின் கால்கள் வீட்டுக்கு வந்தன. மனம் அருணாவின் வீட்டிலேயே நிற்கிறது. கைகள் ஒரு சோடி  உடையை பையொன்றுக்குள் திணித்தன.

‘அக்கா நான் அருள் வீட்ட போயிட்டு வாறன். நாளைக்குத்தான் வருவன்’ என்று வாய் சொன்னது. அக்கா எப்போதும் போல பதிலொன்றும் சொல்லாமல் இருந்தாள். கொஞ்ச நேரத்தின்பின் புறுபுறுப்பாள் என்பதைப் பற்றி முகுந்தா கவலைப்படவில்லை. அவள் பெற்றோரையும் உறவினரையும் இழந்து தனிக்கட்டையான பிறகு இந்த ஒன்றுவிட்ட அக்காதான் எல்லாம் என்று நினைத்திருந்தாள். ஆனால் அக்கா எப்போது இவள் வீட்டை விட்டே தொலைவாள் என்று இருக்கிறாள்.

வீதிக்கு விரைந்த முகுந்தா கிளிநொச்சிப் பேருந்தில் ஏறி அமர்ந்தபோது நெற்றியிலிருந்து வழிந்த வியர்வைத்துளிகள் அவள் கைக்குட்டையை எடுக்கவில்லை என்பதை ஞாபகப்படுத்தியது. வியர்வையை புறங்கையால் துடைத்துவிட்டு அமைதியாக இருக்க முயன்றாள். மனதென்னவோ ஆர்ப்பரிப்பை நிறுத்தவில்லை.

பலமணிநேரப் பயணத்தின்பின் கிளிநகரில் இறங்கினாள். உடனேயே ஆட்டோ ஒன்றைப் பிடித்துக்கொண்டு அருளின் வீட்டுக்குச் சென்றபோது அங்கு அவளுக்கு அமோகமான வரவேற்பு.

‘ஹேய்! என்னடி? சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கிறாய்? ஒரு கோல்பண்ணக்கூடாதோ?’ என்று அருணா அவளின் கையைப்பிடித்துக்கொண்டு கோபித்தாள். கையை முஷ்டியாக்கி அவளின் தோளில் குத்தினாள். ஹேய் என்று அவள் போட்ட கூச்சலில் குசினிக்குள் இருந்த அம்மா வெளியே வந்தார்.

‘வாம்மா வா. என்ன ஒரு அறிவித்தலும் இல்லாம வந்திருக்கிறாய்?’ என்றவாறு அருணாவின் அம்மா முகுந்தாவை உச்சிமுகர்ந்தார்.

‘வரோணும் போல இருந்திச்சம்மா. வந்திட்டன். ஏன் சொல்லாம வரக்கூடாதா?’ என்று சிரிக்க முயன்றாள் முகுந்தா. அவளுக்குள் இருந்த துயரம் கண்ணீராயும் குமுறலாயும் வெடித்துவிடத் தயாராக இருந்தது.

‘என்னடி ஒரு மாதிரியாய் இருக்கிறாய்? என்ன நடந்தது. வீட்டில அக்காவோட ஏதும் பிரச்சனையா?’ என்று அக்கறையோடு கேட்ட தோழியில் கோபம் வந்தது.

‘இல்லடி கொஞ்சம் சும்மா இருக்கிறியா?’ என்று சினந்தாள் முகுந்தா.

‘என்னம்மா ஏதும் பிரச்சினையாம்மா’ என்று தாயாரும் அக்கறையோடு வினவ அவளுக்கு கவலையாகிவிட்டது. எனினும் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டாள்.

‘சீச்சி. அப்பிடியெல்லாம் ஒண்டுமில்லை. கனதூரம் பஸ்ஸில வந்தது. தலையிடிக்குது’ என்றாள் நெற்றிப்பொட்டை அழுத்தி.

அருளனின் மரணச்செய்தியை சொல்லத்தான் வந்திருக்கிறேன். அதைச் சொல்லவா சொல்லாமல் விடவா என்று புரியாத திண்டாட்டம்தான் இப்போது என்னை படாய்படுத்துகிறது என்பதை அவளால் சொல்லமுடியவில்லை. இயல்பான கலகலப்பில் தற்போதிருக்கும் அந்தக் குடும்பத்தில் மீண்டும் கண்ணீரையும் கதறலையும் காண அவளுக்கு மனசில்லாமல் இருந்தது.

‘எழும்பு. முதல்ல போய் முகத்த கழுவிட்டு வா’ என்று அவளை இழுத்தாள் அருணா.

‘அம்மா முகுந்துக்கு சுடச்சுட ஒரு தேத்தண்ணி ஆத்துங்கம்மா’ என்றாள். அருணாவின் கையை முகுந்தா இறுகப்பிடித்தாள்.

‘என்னடி? உனக்கென்னமோ நடந்திட்டுது. என்னெண்டு சொல்லு’ என்று அக்கறையோடு கேட்டாள் தோழி. எனினும் அவளது புன்னகையில் குறும்பு தெரிந்தது. தமையனின் தொலைவுக்காக அவள் விம்மியழுத நாட்கள் இப்போது கொஞ்சக் காலமாகத்தான் காணாமல் போய், மீண்டும் அவளிடம் இந்த புன்னகை முகம் வந்திருக்கிறது. இந்தப் புன்னகை மீண்டும் தொலையத்தான் வேண்டுமா? முகுந்தாவின் மனதில் ஒருநூறு கேள்வி ஒன்றாய்.

வேதனையோடு புன்னகைத்த முகுந்தா, ‘ஏலாம இருக்கடி’ என்றாள்.

‘அஞ்சு ஆமைய யாருக்கும் குடுத்திடு. ஒரு ஆமைய என்னட்டத் தா. ஏழையும் வச்சிருந்தா கஸ்ரமாத்தான் இருக்கும்’ என்று கிண்டல் செய்து குலுங்கிச்சிரித்த அருணாவின் சிரிப்பில் அழுகையை வீச முகுந்தாவால் முடியவில்லை.

‘என்னய கிணத்தடிக்கு தூக்கிக்கொண்டு போ’ என்று சிணுங்கியபடி கைகளை விரித்தாள் போலியாக. அவளுக்கு ஒன்றுமேயில்லை என்பதை அவர்கள் நம்ப வேண்டாமா?

அருணா உண்மையாகவே அவளை வாரியள்ளி தூக்கிக்கொண்டு போய் தொப்பென்று கிணற்றடியில் இறக்கினாள். புத்தகமும் கையுமாக கிணற்றடி வாழையடியிலிருந்த தங்கைகள் இருவரும் தோழியரின் அன்பைப் பார்த்து கெக்கட்டம்போட்டுச் சிரித்தார்கள்.

இந்தச் சிரிப்பலையில் அவளேன் மீண்டுமொரு நெருப்பு மூட்ட வேண்டும்?

 

http://tamiltigerwomen.com/category/short-stories-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/channel-4/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.