Jump to content

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன?


Recommended Posts

உட்பூசல்களும் முரண்பாடுகளும் பிளவுகளும்
 
08-02-2016 09:54 AM
Comments - 0       Views - 9

article_1454905669-Maviddapuram.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி- 26)

1968 மாவிட்டபுரம் கோவில் நுழைவுப் போராட்டம்

தமிழர்கள், பெரும்பான்மைச் சிங்களவர்களிடையே தமக்கான உரிமைக்காகப் போராடிய வேளையில், தமிழர்களுக்குள் காலங்காலமாகச் சாதிரீதியில் தாழ்த்தப்பட்ட மக்கள், சாதிரீதியில் உயர்ந்ததாகக் கருதிய மக்களிடம் தம்முடைய உரிமைகளுக்காகப் போராடினர். இந்தப் போராட்டத்துக்கும் ஒரு நீண்ட வரலாறு உண்டு. ஆரம்பத்தில் இடதுசாரிக் கட்சிகளினால் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டங்கள், காலப்போக்கிலே, தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டமாக மாறின. தாழ்த்தப்பட்ட மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றன. இது சார்ந்த வழக்குகளில் வாதாட பெரும்பாலும் உயர்குழாமைச் சேர்ந்தவர்களாக இருந்த தமிழ் வழக்கறிஞர்கள் தயாராக இல்லாத போது, தெற்கிலிருந்து சிங்கள வழக்கறிஞர்கள் வந்து, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வாதாடிய நிலையும் இருந்தது. இது, தமிழ் இனத்தின் அசிங்கமானதொரு குறுக்குவெட்டு முகம். சாதிய ஏற்றத்தாழ்வுகளாலும், பாகுபாட்டினாலும் தமிழினம் இழந்தது அதிகம். இன்றும் தமிழர்கள் ஒன்றுபடுவதற்கு தடையாக இருப்பதில் பிரதேசவாதத்தினதும், சாதியினதும் பங்கு முக்கியமானது.

1968இல் நடந்த மாவிட்டபுரம் கோயில் நுழைவுப் போராட்டமும் இந்த அடிப்படையில் முக்கியம் பெறும் நிகழ்வு ஆகிறது. கோவிலுக்குள் நுழையும் உரிமை மறுக்கப்பட்ட மக்கள், வலிந்து கோவிலுக்குள் செல்லும் போராட்டத்தை நீண்டகாலமாக நடத்தி வந்திருக்கிறார்கள். மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்குள், தாழ்த்தப்பட்ட மக்கள் உள்நுழைவதை ஆலய நிர்வாகமும், ஆதிக்கசாதி மக்களும் தடுத்துக்கொண்டிருந்தனர். குறிப்பாக, 'அடங்காத் தமிழன்' சி.சுந்தரலிங்கம், தாழ்த்தப்பட்ட மக்கள், மாவிட்டபுரம் கோவிலுக்குள் நுழைவதைத் தடுத்தார். சி.சுந்தலிங்கம் தன்னளிவில் ஒரு சாதி வெறியர் அல்ல, ஆனால், தன்னுடைய அரசியலுக்கு சாதகமாகப் பயன்படுத்த முனைந்தார் என்று ஒரு கலந்துரையாடலில் சச்சி ஸ்ரீகாந்தா தன்னுடைய கருத்தைப் பதிவு செய்கிறார். வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த 'கணித மேதை' சி.சுந்தரலிங்கம், மாவிட்டபுர கோவில் நுழைவுப் போராட்டத்தில் தலையிட்டார். ஆனால், இறுதியில் எல்லா மக்களும் ஒன்றிணைந்தே திருவிழா நடந்தது. 1970ஆம் ஆண்டு தேர்தலில் மாவிட்டபுரம் அமைந்த தேர்தல் தொகுதியான காங்கேசன்துறைத் தொகுதியில்

சா.ஜே.வே.செல்வநாயகத்தை எதிர்த்து தேர்தலில் நின்ற 'அடங்காத் தமிழன்' சுந்தரலிங்கம், 'வேலா?, சிலுவையா?' என்ற ரீதியிலான பிரசாரத்தையும் மேற்கொண்டார். இறுதியில் சா.ஜே.வே.செல்வநாயகமே வெற்றிபெற்றார். சாதிரீதியிலான பிரச்சினைகள் தொடர்பில் தமிழரசுக் கட்சி நழுவல் போக்கையே தொடர்ந்தும் கடைப்பிடித்து வந்துள்ளது. சாதிப் பிரிவினையை தாம் எதிர்ப்பதாகக் காட்டிக்கொண்ட போதும், ஆதிக்க சாதி மக்களைப் பகைத்துக்கொள்ள தமிழரசுக்கட்சித் தலைவர்கள் விரும்பியதில்லை.

ஸ்ரீமா - சாஸ்த்ரி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துதல்

பெரும்பான்மைக் கட்சிகளிடையே அரசியல் போட்டி இருந்தாலும், 'சிங்கள-பௌத்தர்களின்' நலன் சார்ந்த விடயங்களில் அவர்கள் தங்கள் போட்டியை ஒதுக்கித்தள்ளிவிட்டு இனரீதியிலான ஒத்திசைந்து இயங்குவதை நாம் வரலாற்று ரீதியில் தொடர்ந்து காணலாம். ஸ்ரீமா - சாஸ்த்ரி ஒப்பந்தம் எனும் குதிரைப் பேரத்தை நடைமுறைப்படுத்த டட்லி சேனநாயக்க அரசு தயாரானது.

அன்று மொத்தமாக, 975,000 அளவிலிருந்த 'நாடற்ற' இந்திய வம்சாவழி மக்களை தமக்கிடையே பிரித்துக்கொள்ள இந்தியா-இலங்கை அரசாங்கங்கள், ஸ்ரீமா-சாஸ்த்திரி ஒப்பந்தத்தில் இணங்கின. இந்த 975,000 பேரில் 300,000 பேருக்கு இலங்கை அரசாங்கம் பிரஜாவுரிமை அளிக்கும் எனவும், 525,000 பேரை இந்திய அரசாங்கம் மீளப்பெற்றுக்கொள்ளும் எனவும், அவர்களுக்கு இந்திய பிரஜாவுரிமையை வழங்கும் எனவும், இந்தச் செயற்பாடானது இந்த ஒப்பந்தம் வலுவுள்ள காலமான 15 வருடங்களுக்கு இடம்பெறும் எனவும், மிகுதி 150,000 பேரினது நிலைபற்றி பின்னொரு காலத்தில் இருநாடுகளிடையேயும் பேசித் தீர்மானிக்கப்படும் எனவும் ஸ்ரீமா-சாஸ்த்ரி ஒப்பந்தத்தில் இணங்கப்பட்டது.

அன்று ஸ்ரீமாவோ இந்த ஒப்பந்தத்தைச் செய்தபோது இதனைக் 'குதிரைப்பேரம்' என்று விமர்சித்த சௌமியமூர்த்தி தொண்டமானும், 'அதிகாரத்தின் விளையாட்டில் அரைமில்லியன் மக்கள் பகடைகளாக்கப்பட்டிருக்கிறார்கள்' என்று விமர்சித்த சா.ஜே.வே.செல்வநாயகமும் இப்போது கூட்டணி அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்தார்கள்.

ஸ்ரீமா-சாஸ்த்ரி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் சட்டமூலம் கபினட்டில் (அமைச்சரவையில்) சமர்ப்பிக்கப்பட்டபோது அதனை எம்.திருச்செல்வம் ஆதரித்திருந்தார் என வி.நவரட்ணம் தன்னுடைய 'தமிழ் தேசத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும் (ஆங்கிலம்)' என்ற நூலில் குறிப்பிடுகிறார். சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது இதனைத் தான் எதிர்க்க வேண்டி வந்ததாகவும், ஏனெனில், இது தமிழ் மக்களின் உரிமையை மீறும் செயல் என்றும், மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டு நாடுகடத்தப்படலாம், இதற்கு சமஷ்டிக் கட்சி (தமிழரசுக் கட்சி)

உடன்படுவது ஏற்புடையதல்ல என்று வி.நவரட்ணம் குறிப்பிடுகிறார். அன்று தமிழரசுக் கட்சியின் ஊர்காவற்றுறைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வி.நவரட்ணத்தினுடைய எதிர்ப்பு தமிழரசுக் கட்சிக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தியது. ஏனென்றால், வி.நவரட்ணம் இதனை எதிர்த்து வாக்களித்தால், ஒன்றில் தமிழரசுக்கட்சி அரசிலிருந்து விலகுவதுடன், எம்.திருச்செல்வமும் அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும், இல்லையென்றால் வி.நவரட்ணத்தை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்.

தமிழரசுக் கட்சி, யாரும் கட்டாயமாக நாடுகடத்தப்படக்கூடாது என்ற கோரிக்கையை பிரதமர் டட்லி சேனநாயக்கவிடம் முன் வைத்தது. பிரதமர் டட்லியும் யாரும் கட்டாயப்படுத்தப்பட்டு, நாடு கடத்தப்பட மாட்டார்கள் என்று உறுதியளித்தார். இந்திய-இலங்கை ஒப்பந்த அமுலாக்கல் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கு முன்பதாக தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமொன்று நடந்தது. இந்தக் கூட்டமே தான் எதிர்த்து வாக்களிப்பதைத் தடுப்பதற்கான முயற்சியே என்று வி.நவரட்ணம் குறிப்பிடுகிறார். அத்தோடு, முன்னர் சா.ஜே.வே.செல்வநாயகம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸில் இருந்தபோது, இதே பிரஜாவுரிமைப் பிரச்சினை தொடர்பில் இந்திய-பாகிஸ்தானியர் பிரஜாவுரிமைச் சட்டமூலத்தை எதிர்த்து வாக்களிக்க விளைந்ததையும் தனது

நூலில் வி.நவரட்ணம் குறிப்பிடுகிறார். ஆனால், அன்று இதனைச் சுட்டிக்காட்டி தான் செல்வநாயகத்தை காயப்படுத்த விரும்பியிருக்கவில்லை என்றும் பதிவு செய்கிறார். இறுதியாக சா.ஜே.வே.செல்வநாயகம், குறைந்தபட்சம் வாக்களிக்காது தவிர்க்குமாறு வி.நவரட்ணத்தைக் கேட்கிறார். தான் வாக்களிப்பைத் தவிர்த்தமை பற்றி ஒரு பகிரங்க அறிக்கை விடுப்பேன் என்ற நிபந்தனையோடு வாக்களிப்பைத் தவிர்க்க வி.நவரட்ணம் உடன்படுகிறார்.

இந்தச் சட்டமூலம், ஸ்ரீமா-சாஸ்த்திரி ஒப்பந்தத்திலிருந்து கொஞ்சம் வேறுபட்டிருந்தது. அதாவது 'நாடற்றவர்களாக' இருந்தவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்குவதற்கு, இந்திய பிரஜாவுரிமை பெற்றவர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்படுவதுவரை காத்திருக்காது, உடனடியாகவே அனைவருக்கும் பிரஜாவுரிமை வழங்கும் ஏற்பாடு இந்தச் சட்டமூலத்தில் இருந்தது. இது நாடாளுமன்றத்தில் பெரும் விவாதத்தைத் தோற்றுவித்திருந்தாலும் சட்டமூலம் நிறைவேறுவதைத் தடுக்கவில்லை.

குறித்த சட்டமூலம் ஏகமனதாக நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலம் நிறைவேறியதும், 'நீண்டகால போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. நாடற்றவர்கள் என்ற பழிச்சொல் விரைவில் இந்திய வம்சாவழித் தமிழர்கள் மேலிருந்து அகற்றப்படும்' என சௌமியமூர்த்தி தொண்டமான் கூறினார்.

அறிமுகமாகியது என்.ஐ.சி

இன்னொரு சட்டம் இந்த இடத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. 1968ஆம் ஆண்டின் 32ஆம் இலக்க ஆட்களைப் பதிவுசெய்யும் சட்டம். இன்று 16 வயதுக்குக் கூடிய இலங்கைப் பிரஜைகள் அனைவரின் கைகளிலும் உள்ள ஐ.சி அல்லது என்.ஐ.சி என்று அனைவராலும் அறியப்படும் தேசிய அடையாள அட்டையின் தோற்றுவாய் இந்தச் சட்டமூலம்தான். டட்லி சேனநாயக்க தலைமையிலான அரசாங்கம் 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கை ஆட்களைப் பதிவு செய்ய ஒரு திணைக்களத்தை உருவாக்கவும், அங்கு 18 வயதுக்குக் கூடிய இலங்கையர்கள் யாவரும் தம்மை பதிவு செய்வதற்கும், பதிவுசெய்தவர்களுக்கு அடையாள அட்டை ஒன்றை வழங்கவும் ஏற்பாடுகள் இருந்தன.

அத்தோடு குறித்த அதிகாரிகளும் கோரும் போது அடையாள அட்டையைக் காண்பிப்பது கட்டாயமாக்கப்பட்டது. அவ்வாறு செய்யாது விடுதல் தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டது. சாதாரணமாக, ஓர் அரசாங்கம் தன் பிரஜைகளைப் பதிவதிலும், அடையாள அட்டை வழங்குவதிலும் என்ன பிரச்சினை இருக்க முடியும் என்று பலரும் யோசிக்க முடியும். அன்றும் பலரும் அப்படியே எண்ணினார்கள். ஆனால், என்.ஐ.சி. தமிழர்களுக்கு என்ன வகையான ஆபத்துக்களைக் கொண்டுவந்தது, அதிலுள்ள பிறந்த இடம், அல்லது பிற்காலத்தில் அச்சிடப்பட்ட மாவட்ட எண் எத்தகைய பாதிப்புக்களை தமிழ் இளைஞர்களுக்கு கொண்டு வந்தது என்பதற்கு வரலாற்றுச் சாட்சியம் ஒன்றே போதும்.

ஆனால், இந்த விடயம் பற்றிய தீர்க்க தரிசனம் ஒருவரிடம் இருந்தது. இந்தச் சட்டமூலத்தை வி.நவரட்ணம் எதிர்த்தார். இந்தச் சட்டமூலமானது தமிழ் பேசும் மக்களை நோக்கி சுடப்படத்தயாராக இருக்கும் ஓர் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று அவர் இதனை வர்ணித்தார்.

டட்லி சேனநாயக்க அரசாங்கம், ஆட்களைப் பதிவுசெய்யும் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. இது பற்றி தமிழரசுக் கட்சியுடன் எந்த கலந்தாய்வும் நடத்தவில்லை. ஆனால், கபினட்டில் எம்.திருச்செல்வம் இருந்ததால், நிச்சயம் அவருக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை.

வி.நவரட்ணம், சா.ஜே.வே.செல்வநாயகத்தை சந்தித்து இந்த சட்டமூலத்தின் ஆபத்து பற்றி விபரித்தார். இது எதிர்காலத்தில் தமிழ்பேசும் மக்களுக்கு ஆபத்தாகவும், அவர்களை துன்புறுத்தவதற்கும் பயன்படலாம். ஆகவே, இதனை தமிழரசுக் கட்சி ஏற்க முடியாது என்று கூறியதாகவும், இறுதியில் எது நடந்தாலும் தான் இதற்கு எதிராக வாக்களிக்கப்போவதாகவும், மனச்சாட்சியை விற்று விபசாரம் செய்வதிலும் அரசியல் அஸ்தமனத்தை தான் ஏற்பதாக தான் கூறியதாகவும் வி.நவரட்ணம் தனது நூலில் பதிவு செய்கிறார்.

குறித்த சட்டமூலம், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது, ஆளுந்தரப்பிலிருந்து எழுந்த வி.நவரட்ணம், சட்டமூலத்தை எதிர்த்துப்பேசினார். இது சபையில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதன் பின் நடந்த வாக்கெடுப்பில் வி.நவரட்ணம் மட்டுமே எதிர்த்து வாக்களித்தார். அவருடைய ஒரேயொரு எதிர்ப்பு வாக்குடன் 1968ஆம் ஆண்டின் 32ஆம் இலக்க ஆட்களைப் பதிவு செய்யும் சட்டம் நிறைவேறியது.

இதற்கு மறுநாள் கொழும்பில் கூடிய தமிழரசுக் கட்சியின் ஆட்சிக் குழு கொரடாவின் அறிவுறுத்தலுக்கு மாறாக, அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்த வி.நவரட்ணத்தை கட்சியிலிருந்து நீக்க முடிவெடுத்தனர். ஒரு தீர்க்கதரிசனம் மிக்க விடயத்துக்காக, கொள்கைப்பிடிப்புடன் நின்றமைக்காக வி.நவரட்ணத்தைத் தமிழரசுக் கட்சியின் அதிகாரபீடம் தூக்கியெறிந்தது.

கட்சிக்குள் உட்பூசல்கள் மட்டுமல்ல. தமிழ் கட்சிகளிடையே முறுகல்களும், ஆட்சி செய்த கூட்டணிக்குள் முரண்பாடுகளும் எட்டிப்பார்க்கத் தொடங்கின. டட்லி சேனநாயக்கவின் 'ஹத் ஹவுள' கவிழத்தொடங்கியது.

(அடுத்தவாரம் தொடரும்...)

- See more at: http://www.tamilmirror.lk/165519/%E0%AE%89%E0%AE%9F-%E0%AE%AA-%E0%AE%9A%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE-%E0%AE%AE-%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%B3%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE-#sthash.DRqWNoQl.dpuf
Link to comment
Share on other sites

  • Replies 196
  • Created
  • Last Reply
கசக்கத் தொடங்கிய தேனிலவு
 
15-02-2016 09:49 AM
Comments - 0       Views - 11

article_1455510019-dc.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன?  (பகுதி 27)

'டட்லிகே படே, மசாலா வடே'

'டட்லிகே படே, மசாலா வடே' ('டட்லியின் வயிற்றில், மாசாலா வடை') என்பது 1965 முதல் 1970 வரையாக டட்லி சேனநாயக்க தலைமையிலான ஏழுதரப்புக் கூட்டணியை விமர்சிக்க, எதிர்க்கட்சிகள் பயன்படுத்திய இனத்துவேசம் மிக்கதொரு சொற்றொடர். 'மசாலா வடை' என்பது தமிழர்களின் உணவுப் பண்டமாகவே பொதுவாகக் கருதப்படுகிறது. தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள், சட்ட ஒழுங்குகள் நிறைவேற்றப்பட்ட பின்னர் இந்த விமர்சனம் கடுமையாக முன்வைக்கப்பட்டது. இதில் உணவுப் பண்டமொன்று குறிப்பிடப்படுவதற்கு இன்னொரு சுவாரஷ்யமான காரணமும் உண்டு. அது டட்லி சேனநாயக்கவின் உணவுக்கான வேட்கை. டட்லி சேனநாயக்க பற்றி எழுதிய பலரும், அவரது போஜனப் பிரியம் பற்றியும் எழுதத் தவறவில்லை. பிரதமர் டட்லியின் உணவுப் பிரியத்தையும், இனத்துவேசத்தையும் ஒன்றுபடுத்தி உருவான சொற்றொடர்தான், 'டட்லிகே படே, மசாலா வடே'.

இந்தத் தொடர் விமர்சனங்கள், பிரதமர் டட்லி சேனநாயக்கவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்துக்கும் கடுஞ்சவாலாக இருந்தது. இலங்கை தமிழரசுக் கட்சியுடனான கூட்டும், கொஞ்சம் கசக்கத் தொடங்கியது. இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் முரண்பாடுகள் உருவாகத் தொடங்கியிருந்தன. ஆளுநர் வில்லியம் கொபல்லாவவின் பதவிக்காலம் முடிவை எட்டியிருந்தது. அவர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்டவர். இப்போது, ஆளுநர் நியமனம் தொடர்பில் பரிந்துரை செய்யும் வாய்ப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பிரதமருமான டட்லி சேனநாயக்கவுக்கு இருந்தது. நிச்சயமாக ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த ஒருவர் நியமிக்கப்படுவார் என்றே எண்ணப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் சிலர் ஆளுநர் பதவியை எதிர்பார்த்திருந்தனர். இதில் குறிப்பிடத்தக்க ஒருவர் முன்னாள் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல. ஆனால், பிரதமர் டட்லி சேனநாயக்க என்ன காரணத்தினாலோ ஆளுநர் பதவியை சேர் ஜோன் கொத்தலாவலவுக்கு வழங்குவதற்கு பரிந்துரை செய்ய முன்வரவில்லை. வேறு எந்தத் தெரிவுகளையும் மேற்கொள்ள முடியாத நிலையில், அன்று ஆளுநராக இருந்த வில்லியம் கொபல்லாவவுக்கு இன்னொரு பதவிக்காலத்தை வழங்க டட்லி சேனநாயக்க முடிவெடுத்தார்.

ஜே. ஆர். ஜெயவர்த்தன - டட்லி சேனநாயக்க ஆகியோருக்கிடையான உறவும் விரிசலடைந்திருந்தது. தனது பிரதமர் பதவிக்கு ஆபத்து இருப்பதாக டட்லி சேனநாயக்க உணர்ந்தார். தனது பிரதமர் பதவிக்கு சவாலாக இருக்கக்கூடிய ஒருவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன மட்டும்தான் என அவர் நினைத்திருக்கலாம், ஆகவே ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை கொஞ்சம் தூரமாகவே வைத்திருந்தார். பிரதமர் டட்லியின் சந்தேகக்கண் எஸ்மண்ட் விக்கிரமசிங்கவின் பக்கமும் திரும்பியது. தன்னுடைய பிரதமர் பதவியை ஜே.ஆர்.ஜெயவர்த்தன அடைய வேண்டுமெனில் அது எஸ்மண்ட் விக்கிரமசிங்கவின் உதவியின்றி நடக்க முடியாது என்று டட்லி நினைத்தார். 'ஏழுதரப்புக் கூட்டணியின்' பத்துப்பேர் கொண்ட உயர்குழாமில் எஸ்மண்ட் விக்கிரமசிங்கவும் ஓர் அங்கத்தவர், அந்த குழாமும் கலைக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான சிறில் மத்தியூஸுடனான

டட்லி சேனநாயக்கவின் உறவும் பலவீனமடைந்திருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சி, 1965இல் ஏழுதரப்பு கூட்டணி அமைத்தாலும், அது ஆட்சிக்கு வருவதற்கு பௌத்த பிக்குகளின் ஆதரவைத் திரட்டிய பெருமை முன்னாள் பிரதம நீதியரசர் ஹேம பஸ்நாயக்கவையே சாரும். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்கெதிராக பௌத்த பிக்குகளை ஒன்றிணைத்து, ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கச் செய்தவர் அவர். டட்லி சேனநாயக்க-ஹேம பஸ்நாயக்க ஆகியோருக்கிடையான உறவும் விரிசலடைந்திருந்தது.

இத்தகைய உட்கட்சிப் பூசல்களும், முரண்பாடுகளும் மிக்கதொரு சூழலில் தன்கட்சியையும், எழுதரப்புக் கூட்டணியையும் நிர்வகிக்கும் பெருஞ்சவால் பிரதமர் டட்லி சேனநாயக்க முன்பு இருந்தது. இதில் குறிப்பான தமிழரசுக் கட்சியுடனான தேனிலவுக் கூட்டணி, பிரதமர் டட்லிக்கு பெருஞ்சவாலைத் தந்தது. ஐக்கிய தேசியக் கட்சிக்கும், தமிழரசுக் கட்சிக்குமான சந்திப்பொன்றின் போது ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும், அமைச்சர் திருச்செல்வத்துக்கும் கடும் முரண்பாடொன்றும் ஏற்பட்டது. ஆனால், ஐக்கிய தேசியக் கட்சித் தலைமை இதைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

'இராணி அப்புக்காத்துக்கும், இராணி அப்புக்காத்துக்கும் சண்டை'

தமிழ்க் கட்சிகளிடையேயான உறவும் சுமுகமாக இருக்கவில்லை. குறிப்பாக இருபெரும் தமிழ் கட்சிகளான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி (சமஷ்டிக் கட்சி) என்ற இரண்டுக்குமிடையிலான பாரம்பரிய மோதல் தொடர்ந்துகொண்டு இருந்தது. இவ்விரு கட்சிகளும் டட்லியின் ஏழுதரப்புக் கூட்டணியில் அங்கம் வகித்திருந்தாலும், ஒன்றையொன்று தாக்கும் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் பயன்படுத்திக்கொண்டன. இந்த முறுகல் நிலையை அமைச்சர் திருச்செல்வத்தின் கனிஷ்ட அமைச்சராக இருந்த ரணசிங்க பிரேமதாஸ, நாடாளுமன்றில் உரையாற்றும் போது, இலங்கையின் புகழ்பூத்த ஓர் இராணி அப்புக்காத்துவுக்கு (அமைச்சர் திருச்செல்வத்துக்கு) சார்பாக, இன்னொரு புகழ்பூத்த இராணி அப்புக்காத்துவிடம் (ஜீ.ஜீ.பொன்னம்பலம்) வாதிட வேண்டிய சூழலில் தானிருப்பதாகச் சொல்லியதன் மூலம் சுட்டிக்காட்டினார்.

'மாவட்ட சபைகள்'

மாவட்ட சபைகள் உருவாக்கப்படும் என்ற 'டட்லி-செல்வா' உடன்பாட்டை நிறைவேற்றவேண்டும் என தமிழரசுக் கட்சி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. தமிழரசுக் கட்சி சார்பில் சா.ஜே.வே.செல்வநாயகம், டொக்டர். ஈ.எம்.வி.நாகநாதன், எம்.திருச்செல்வம், அ.அமிர்தலிங்கம் மற்றும் இராசமாணிக்கம் ஆகியோரைக் கொண்ட ஐவர் குழு மாவட்ட சபைகள் பற்றி பிரதமர் டட்லியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையின் போது பிரதமர் டட்லி 'சில மாதங்கள் கழிந்துவிட்டால், நீங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அழுத்தம் கொடுக்க மாட்டீர்கள் என்று நான் நினைத்தேன்' என்று சொன்னார், அதற்கு செல்வநாயகம் 'நாங்கள் மக்களாணையின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறோம். தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்பதே அந்த மக்களாணையாகும். அந்த வாக்குறுதியை நாம் எப்படி மீறுவது? என்று கேட்டார். டட்லி சேனநாயக்கவின் கேள்வி தமிழரசுக் கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்காமல் இல்லை. ஏனென்றால் டட்லி சேனநாயக்க 'கனவான்தன்மைமிகு அரசியல்வாதியாகவே' அறியப்பட்டார். 'டட்லி-செல்வா' ஒப்பந்தம் கையெழுத்தானபோது இருதலைவர்களும் கைலாகு கொடுத்துக்கொண்டனர், அப்போது செல்வநாயகம் டட்லியிடம் 'நான் உங்களை நம்புகிறேன்' என்று சொன்னார், அதற்கு டட்லி 'நான் முப்பது வருடமாக அரசியலில் இருக்கிறேன். ஒருபோதும் கொடுத்த சத்தியவாக்கிலிருந்து பின்வாங்கியதில்லை' என்று பதிலிறுத்தார். இது நடந்து சில மாதங்களிலேயே 'நீங்கள் கோரிக்கையை நிறைவேற்ற அழுத்தம் கொடுக்க மாட்டீர்கள்' என்று சொன்ன பிரதமர் டட்லியின் நிலைப்பாடு நிச்சயம் யாரையும் அதிர்ச்சிக்குள்ளாகக்கூடியதொன்று தான்.

ஆனால், பிரதமர் டட்லி ஏமாற்றத்தை உடனடியாகவே வழங்கவில்லை. ஜூலை 8, 1966ஆம் ஆண்டு சிம்மாசன உரையில் மாவட்ட சபைகள் ஸ்தாபிப்பது தொடர்பான அரசாங்கத்தின் எண்ணம் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சி, மாவட்ட சபைகளை ஸ்தாபிப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தையை நடத்தத் தொடங்கியது. இதன்போது ஜே.ஆர்.ஜெயவர்த்தன மாவட்ட சபைகளுக்கான சட்டமூல வரைவொன்றை வழங்குமாறு தமிழரசுக் கட்சியைக் கேட்டுக்கொண்டார். இதன்படி அமைச்சர் முருகேசன் திருச்செல்வத்தினால் மாவட்ட சபைகள் தொடர்பான சட்ட வரைவு ஒன்று தயாரிக்கப்பட்டது. பின்வரும் முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

01. மாவட்ட சபைகள் குறித்த மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைத் தலைவர்கள் ஆகியவர்களையும், மேலும் உள்ளூராட்சி அமைச்சரால் நியமிக்கப்படும் மூவரையும் கொண்டமையும்.

02. சபை நியமிக்கு ஏழு பேருக்கு அதிகமில்லாத ஒரு நிர்வாகக் குழுவினைக் கொண்டமையும்.

03. மாவட்ட சபையான குறித்த மாவட்டத்துக்கான அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்குவதுடன் அதனை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும்.

04. நிதி அமைச்சரின் அனுமதியுடன், கடன் திரட்டும் அதிகாரம் கொண்டிருக்கும்.

05. அத்தோடு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் பொறுப்பு மற்றும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கொண்டிருக்கும். குறித்த விடயங்கள் விவசாயம், உணவு, கால்நடை, தொழிற்றுறை, மீன்பிடி, கிராமிய அபிவிருத்தி, பிராந்திய திட்டமிடல், கல்வி (குறிப்பிட்ட), கலாசார அலுவல்கள், பாரம்பரிய மருத்துவம், சமூக நலன்புரி மற்றும் சுகாதார சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும்.

06. மத்திய அமைச்சர்களுக்கு மாவட்ட சபைகளை இயக்கும், கட்டுப்படுத்தும் அதிகாரங்கள் இருக்கும். அரசாங்க அதிபர் மாவட்ட சபையின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக இருப்பார்.

07. ஒரு மாவட்ட சபைக்கு மற்றொரு மாவட்ட சபையுடன் ஒன்றிணையும் அதிகாரம் இல்லை.

இவ்வாறாக மாவட்ட சபைகள் பற்றிய சட்ட மூலம் வரையப்பட்ட பொழுது, எதிர்க்கட்சிகள் இதுபற்றிய கடுமையாக எதிர்ப்பை பதிவு செய்தன. டட்லி சேனநாயக்க எமது தாய்நாட்டை தமிழரசுக் கட்சியிடம் அடகு வைத்துவிட்டார் என்ற பிரசாரங்கள் எதிர்க்கட்சிகளினால் முன்னெடுக்கப்பட்டன. ஒக்டோபர் 17, 1966இல் உரையாற்றிய டட்லி சேனநாயக்க: 'எனது எதிரிகள் நான் சமஷ்டிக் கட்சியினருடன் (தமிழரசுக் கட்சி) ஒப்பந்தமொன்று செய்துவிட்டதாக அண்மைக்காலத்தில் பிரசாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். நான் செய்ததெல்லாம் சமஷ்டிக் கட்சியினரின் ஆதரவுடன் அரசாங்கம் ஒன்றை அமைத்ததுதான். இது தேசிய அரசாங்கம். இந்நாட்டின் பல்லின, பல்மத மக்களின் ஆதரவுடன், ஒத்துழைப்புடன் உருவான தேசிய அரசாங்கம். இந்த அரசாங்கத்தின் நோக்கம் கடந்த 9 வருடங்களான இந்நாட்டுக்கு மறுக்கப்பட்ட பொருளாதாரச் சுதந்திரத்தை மீட்டெடுப்பதாகும்' என்று பேசினார்.

1966 நவம்பரில் மன்னாரில் தமிழரசுக் கட்சிக் கூட்டமொன்றில் உரையாற்றிய அமைச்சர் திருச்செல்வம், தான் சமஷ்டித் தீர்வையே விரும்புவதாகவும், அந்நிலைப்பாடில் தான் உறுதியாக இருப்பதாகவும் உரையாற்றினார். இந்தப் பேச்சு டெய்லி நியூஸ் பத்திரிகையில் 'சமஷ்டியே சிறந்ததொரு அரசாங்க முறை என்கிறார் திரு' என்ற தலைப்பில் வெளியானது. இது அரசாங்கத்திற்குள் கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதன் பின் நடந்த அரசாங்க தரப்புப் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் இது விவாதப் பொருளானது. பிரதமர் டட்லி சேனநாயக்க, அமைச்சர் திருச்செல்வத்தின் கருத்தைக் கண்டித்தார். அமைச்சரான அவர் ஒரு கருத்தைச் சொல்லும் போது, அது அரசாங்கத்தின் கொள்கையாகவே பார்க்கப்படும் எனவும் ஆகவே, கூட்டுப்பொறுப்பு நிமித்தம் இதுபோன்ற கருத்துச் சொல்வதை அவர் தவிர்க்க வேண்டும் எனவும் கண்டிப்புடன் கூறினார். இந்த நிலையில் திருச்செல்வம் பதவி விலகுவதை சா.ஜே.வே.செல்வநாயகம் மற்றும் அமிர்தலிங்கம் ஆகியோர் தடுத்துவிட்டாலும், இங்கு ஆரம்பித்த விரிசல், ஐக்கிய தேசியக் கட்சி-தமிழரசுக் கட்சியின் தேனிலவுக் கூட்டணியை முடிவினை நோக்கி அழைத்துச் சென்றது.

(அடுத்தவாரம் தொடரும்...)

- See more at: http://www.tamilmirror.lk/166064/%E0%AE%95%E0%AE%9A%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%AF-%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%B2%E0%AE%B5-#sthash.LnqdlhPO.dpuf
Link to comment
Share on other sites

மீண்டும் ஏமாற்றம்
 
23-02-2016 09:44 AM
Comments - 0       Views - 4

article_1456201262-sx.jpgஎன்.கே.அஷோக்பரன் (LLB Hons)

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 28)

'மாவட்ட சபைகள் வரைவு'

மாவட்ட சபைகள் பற்றிய சட்ட வரைவு, அமைச்சர் திருச்செல்வத்தால் உருவாக்கப்பட்டிருப்பினும், தமிழ் மக்கள் எதிர்பார்த்த அல்லது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யக்கூடியதொன்றாக அது இருக்கவில்லை. ஓர் உள்ளூராட்சி அமைப்பின் வடிவத்தை ஒத்ததாக அமைந்த அது, மத்திய அமைச்சர்களினால் கட்டுப்படுத்தக்கூடியதாக இருந்தது. இது நிச்சயம், தமிழ் மக்கள் எதிர்பார்த்த அதிகாரப்பகிர்வு அல்ல. அன்றைய தமிழ் ஊடகப்பரப்பில் இது 'மா-வட்ட-சபை' அதாவது பெரிய வட்டம், அதாவது சூனியம் - தமிழ் மக்களுக்கு ஒன்றுமே தராத சூனிய சபை என்று விமர்சிக்கப்பட்டது. இந்த வரைவுபற்றிய தகவல் வெளியே கசிந்தபோது, அது தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களிடம் கூட கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

இலங்கை தமிழரசுக் கட்சியானது, டட்லி சேனநாயக்க ஆட்சி அமைப்பதற்கான ஆதரவினை 'டட்லி-செல்வா' ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே வழங்கியது, அதில் மாவட்ட சபைகளூடான அதிகாரப் பகிர்வு முக்கியம் வாய்ந்ததொன்று. மாவட்ட சபைகளூடான அதிகாரப்பகிர்வு நடைமுறைப்படுத்தப்படாவிடின் தமிழரசுக் கட்சி, அரசாங்கத்துக்கு ஆதரவளித்தமையே அர்த்தமற்றதொன்றாகிவிடும்.

பத்திரிகைகளில் இந்த வரைவு பற்றிய தகவல் கசிந்ததும், டட்லியின் ஆட்சி அமைய உறுதுணையாகவிருந்த முன்னாள் பிரதம நீதியரசர் ஹேம பஸ்நாயக்க, குறித்த மாவட்ட சபைகள் வரைவின் பிரதியொன்றைத் தனக்குத் தர வேண்டும் என பிரதமர் டட்லி சேனநாயக்கவை கேட்டுக்கொண்டார். இக்காலப்பகுதியில் ஹேம பஸ்நாயக்கவுடனான டட்லி சேனநாயக்கவின் உறவு விரிசலடைந்திருந்தது.

பத்திரிகையாளர் சந்திப்பொன்றைக் கூட்டிய பிரதமர் டட்லி சேனநாயக்க, தன்னிடம் முன்னாள் பிரதம நீதியரசர் ஹேம பஸ்நாயக்க, மாவட்ட சபைகள் சட்ட வரைவின் பிரதியைக் கேட்டிருந்ததாகவும் ஆனால், மாவட்ட சபைகள் பற்றி எந்த சட்ட வரைவும் உருவாக்கப்படவில்லை எனவும். தான் தன்னுடைய அமைச்சர்களுடன் மாவட்ட சபைகள் பற்றி கலந்துரையாடியதாகவும் அத்துடன் சமஷ்டிக் கட்சியினருடன் (தமிழரசுக் கட்சியினர்) அமைச்சர் திருச்செல்வத்தின் முன்மொழிவுகள் பற்றிக் கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்டார். பிரதமர் டட்லியின் இக்கருத்து பற்றி அமைச்சர் திருச்செல்வத்திடம் கேட்கப்பட்டபோது, அவர் கருத்துக்கூற மறுத்ததுடன், தேவையான பதிலைப் பிரதமர் ஏற்கெனவே வழங்கிவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.

1965 முதல் 1970 வரையான டட்லி சேனநாயக்க தலைமையிலான எழுதரப்புக் கூட்டணி ஆட்சியில், மொத்தமாக 15 இடைத்தேர்தல்கள் இடம்பெற்றன. இதில் அநேகமானவற்றில் அரசாங்கம் சார்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் தோல்வியையே சந்திக்க வேண்டியதாகவிருந்தது. இதில் குறிப்பிடத்தக்க இடைத் தேர்தல் கல்முனைத் தொகுதிக்கான இடைத் தேர்தலாகும். 1968 பெப்ரவரி 18 அன்று இடம்பெற்ற கல்முனை தேர்தல் தொகுதிக்கான இடைத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக (அரசாங்கம் சார்பாக) மசூர் மௌலானா வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக எம்.ஸி.அஹமட் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

இந்த இடைத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார். கல்முனை இடைதேர்தல் தோல்விக்கு பின்பு 'மாவட்ட சபைகள் சட்டமூலத்தை' ஒத்தி வைக்குமாறு அரசாங்கத்தரப்பிலிருந்த பிரதான கட்சியினரிடமிருந்து பிரதமர் டட்லிக்கு அழுத்தம் தரப்பட்டது. அதேவேளை, தமிழரசுக் கட்சி மாவட்ட சபைகள் உருவாக்கப்பட வேண்டும் என அழுத்தம் தந்தது. பிரதமர் டட்லி சேனநாயக்க, அமைச்சர் திருச்செல்வத்தின் மாவட்ட சபைகள் சட்ட வரைவை கலந்துரையாடலுக்குப் பின் ஏற்றுக்கொண்டு அவ்வரைவைத் தனது 'தேசிய அரசாங்கத்தின்' கட்சித் தலைவர்கள் முன்பு சமர்ப்பித்தார்.

1968 ஏப்ரல் 22ஆம் திகதி குறித்த சட்டமூலமானது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. அமைச்சரவை குறித்த சட்டமூலத்தை ஒவ்வொரு சரத்தாக கவனமாகவும், விரிவாகவும் பரிசீலித்தது. அதன் பின் குறித்த சட்டமூலமானது ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு மற்றும் நாடாளுமன்றக்குழு முன்பு, 1968 மே 21ஆம் திகதி முன்வைக்கப்பட்டது.

'மாவட்ட சபைகள் பற்றிய வெள்ளை அறிக்கை'

1968 மே 22ஆம் திகதி, சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சியின் குழுவொன்று, பிரதமர் டட்லி சேனநாயக்கவைச் சந்தித்து தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுவதற்கு முன்பதாக மாவட்ட சபைகள் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டது.

தான் இப்போது அதனைச் செய்யும் நிலையில் இல்லை என்று கூறிய பிரதமர் டட்லி சேனநாயக்க, இதைச் செய்ய முடியாமைக்காக தான் பதவி விலகத்தயார் என்று தமிழரசுக் கட்சி குழுவினரிடம் கூறினார். நீங்கள் பதவி விலகுவதால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் விளையப் போவதில்லை என்று செல்வநாயகம், பிரதமர் டட்லியிடம் தெரிவித்தார். கலந்துரையாடல்களுக்கு பின்பு, மாவட்ட சபைகள் பற்றிய அரசாங்கத்தின் கொள்கையைப் பிரகடனம் செய்யும் ஒரு 'வெள்ளை அறிக்கையை' (அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க பிரதமர் டட்லி சேனநாயக்க இணக்கம் தெரிவித்தார்.

1968 ஜூன் 7ஆம் திகதி மாவட்ட சபைகள் குறித்த வெள்ளை அறிக்கையானது, அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மாவட்டத்துக்கு ஒன்று என்ற ரீதியில் 22 மாவட்ட சபைகள் அமைக்கப்படும் எனவும், குறித்த சபைகள் அரசாங்கத்தின் நெறிப்படுத்தலின் கீழும், கட்டுப்பாட்டின் கீழும் செயற்படும் எனவும், காலத்துக்குக் காலம் மாவட்ட சபைகளுக்கு பொதுவான அல்லது குறிப்பிட்ட நெறிப்படுத்தல்களை வழங்கும் அதிகாரம் அமைச்சர்களுக்கு உண்டு எனவும், அந்நெறிப்படுத்தல்களின்படி ஒழுகுதல் மாவட்டசபைகளின் கடமை எனவும் குறித்த வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தமிழ் மக்கள் விரும்பிய அதிகாரப்பகிர்வே அல்ல. இது அதிகாரப்பரவலாக்கலும் அல்ல. குறிப்பாக, தமிழ் மக்களை இது எந்த வகையிலும் திருப்திப்படுத்தப்படவில்லை. ஆனால், இதைக்கூட எதிர்த்தரப்பிலிருந்து சிங்களக் கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. இதை நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான சதி என எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்தன. எழுதரப்புக் கூட்டணி அரசாங்கமானது, மாவட்ட சபைகளை அமைப்பதன் ஊடாக சிங்கள மக்களை, தமிழர்களிடம் விற்கப்பார்க்கிறது என இனவாதத்தைத் தூண்டும் விசமப் பிரசாரத்தை எதிர்க்கட்சிகள் முன்னெடுத்தன.

இலங்கை அரசியல் வரலாற்றில், ஒரு 'கிளிஷே'-வான இந்தப் பிரசாரம் மாறிப்போனது. எப்போதெல்லாம் அதிகாரத்திலுள்ள அரசாங்கம் (அது எந்தக் கட்சியாக இருப்பினும்) இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான எந்தவொரு தீர்வை முன்வைக்கும் போதும் எதிர்க்கட்சிகள் (அது எந்தக் கட்சியாக இருப்பினும்) 'நாட்டைத் துண்டாடுகிறார்கள், சிங்கள மக்களைத் தமிழ் மக்களிடம் விற்றுவிடுகிறார்கள், சிங்கள மக்களை இல்லாதொழிக்க முயல்கிறார்கள்' என்ற ரீதியிலான பிரசாரத்தை முன்னெடுத்தன, முன்னெடுக்கின்றன.

குறிப்பிட்ட அந்த தீர்வு முன்மொழிவானது, தமிழ் மக்களுக்கு எந்தவொரு அதிகாரத்தையும் தராது, சூனியமான, அர்த்தமற்றதொரு முன்மொழிவாக இருப்பினும் கூட, அதனைப் பூதாகரப்படுத்தி நாட்டைத் துண்டாடும், சிங்கள மக்களை இல்லாதொழிக்கும் சதி என்பது போலான பிரசார யுக்தியை எதிர்க்கட்சிகள் முன்னெடுப்பது இந்நாட்டின் 'பழக்கவழக்கமாகவே' மாறிவிட்டது. இதனை ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஏனைய அனைத்து பேரினவாதக் கட்சிகளும் செய்திருக்கின்றன.

மாவட்ட சபைகள் பற்றிய வெள்ளை அறிக்கை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தவர்களில் வி.நவரட்ணம் மற்றும் ஆர்.ஜி.சேனநாயக்க ஆகியோர் தவிர்ந்த ஏனைய அனைவரும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையில் வெள்ளை அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.

ஹபராதுவவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ப்றின்ஸ் குணசேகர குறித்த வெள்ளை அறிக்கையின் பிரதியொன்றை தீயிட்டுகொழுத்தி அவையின் மையத்தில் வீசியெறிந்தார். இந்த தீயிட்டுக் கொழுத்தும் 'பழக்கமும்' இலங்கை அரசியலில் பிரிக்கப்படமுடியாத ஒன்றாகிவிட்டது.

எதிர்கட்சிகள் ஹைட் பார்க் கோனரில் எதிர்ப்புக் கூட்டமொன்றை நடத்தின, அங்கும் மாவட்ட சபைகள் பற்றிய வெள்ளை அறிக்கையின் பல பிரதிகள் கொழுத்தப்பட்டன. கொழும்பு நகர மண்டபத்தில் கூட்டமொன்றை நடத்திய பௌத்த மகா சங்கமும், மாவட்ட சபைகளுக்கு தமது எதிர்ப்பைப் பதிவு செய்தன.

எதிர்க்கட்சி வரிசையில் வெளிநடப்பு செய்யாது இருந்த இருவரில் ஒருவரான வி.நரவட்ணம் (தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்திய ஆட்பதிவு சட்டமூலத்தை எதிர்த்து, அரசாங்கத்துக்கெதிராக வாக்களித்ததால், தமிழரசுக் கட்சியிலிருந்து, தமிழரசுக் கட்சியினரால் நீக்கப்பட்டவர்) 'தமிழ் மக்களின் பார்வையைப் பதிவு செய்வதற்காகவே தான் அவையில் இருந்ததாக' தனது நூலில் பதிவு செய்கிறார். 'சிங்கள அரசாங்கங்களும், சிங்கள அரசியல் தலைவர்களும் தமது வாக்கைக் காப்பாற்றுவார்கள் என இதற்கு மேலும் நம்பப்படமுடியாது.

சிங்களவர்களும், தமிழர்களும் பிரிந்து செல்லும் நிலையை அடைந்து விட்டோம். வரலாற்றில் ஒப்பந்தங்கள் எல்லாம் தோற்றுவிட்டன. இதற்குப் பிறகும் தமிழர்கள் ஒப்பந்தங்கள் போடத் தயாராக இல்லை. 'டட்லி-செல்வா' ஒப்பந்தமே தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கடைசி நம்பிக்கைத் துரோகமாக இருக்கட்டும்.

தமிழ் மக்கள் ஆதிகாலத்திலிருந்ததைப் போன்றதொரு தமிழ் அரசை தமிழர்களின் தாயக பூமியான வடக்கிலும் கிழக்கிலும் அமைப்பது ஒன்றே தமிழ் மக்கள் சமத்துவத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதற்குரிய ஒரே வழி' என வி.நவரட்ணம் பேசினார்.

அவரது உரையின் போது பிரதமர் டட்லியும், ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் குறுக்கீடு செய்ததாகவும், அவர்களது குறுக்கீட்டின் இயல்பத்தன்மையை தன்னால் புரிந்துகொள்ள முடிந்தது எனினும், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் குறுக்கீடு செய்ததைத்தான் தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என வி.நவரட்ணம் குறிப்பிடுகிறார். அத்தோடு மாவட்ட சபைகளைக் கைவிடுமாறும், 'தனிச் சிங்களச்' சட்டத்தை தமிழ் மாகாணங்களில் அமுல்ப்படுத்தும் நடவடிக்கைக்குத் துணைபோக வேண்டாம் என்று தமிழரசுக் கட்சியினரிடம் தான் கேட்டுக்கொண்டதாகவும் வி.நவரட்ணம் பதிவு செய்கிறார்.

தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் பின்பு, தமிழரசுக் கட்சியின் குழுவொன்று 1968 ஜூன் 30 அன்று, பிரதமர் டட்லி சேனநாயக்கவைச் சந்தித்து மாவட்ட சபைகள் பற்றிய வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதையொட்டி நடந்த நிகழ்வுகள் பற்றிய தமது விசனத்தைப் பதிவு செய்தனர். பிரதமரின் சந்திப்பின் பின்பான பத்திரிகையாளர் சந்திப்பில், அது ஒரு வெளிப்படையானதும், நேரடியானதுமான கூட்டமாக அமைந்தது என்றும் 'திரு.பண்டாரநாயக்க எங்களைக் கைவிட்டார்;. திருமதி. பண்டாரநாயக்கவும் எங்களைக் கைவிட்டார்;. இப்போது நீங்களும் எங்களைக் கைவிட்டு விட்டீர்கள்' என்று தான் பிரதமர் டட்லியிடம் சொன்னதாகவும் சா.ஜே.வே.செல்வநாயகம் கூறினார்.

இந்தக் காலப்பகுதியில்தான், தமிழ் அரசாங்க உத்தியோகத்தர்கள், சிங்களம் கற்பதற்கு வழங்கப்பட்டிருந்த காலவரையறை நிறைவை நெருங்கியது. காலவரையறை நீட்டிக்கப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சி கோரிக்கை விடுத்தது. பிரதமர் டட்லி சேனநாயக்க இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டிருந்தாலும், மொழித் திணைக்களம் பத்மநாதன், சுரேந்திரநாதன், குலமணி என்ற மூன்று தமிழ் அரசாங்க உத்தியோகத்தர்களை உத்தியோகபூர்வ மொழி அறிவின்மையைக் காரணம் காட்டி, அதாவது சிங்களமொழி அறிவின்மையைக் காரணம் காட்டி சேவையிலிருந்து நீக்கியது. தமிழரசுக் கட்சி அரசாங்கத்தின் பங்காளியாக இருந்தபோதே இந்த வேலை நீக்கம் நடந்தது.

(அடுத்தவாரம் தொடரும்...)

- See more at: http://www.tamilmirror.lk/166669/%E0%AE%AE-%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%8F%E0%AE%AE-%E0%AE%B1-%E0%AE%B1%E0%AE%AE-#sthash.VkahkOwa.dpuf
Link to comment
Share on other sites

தோல்வியடைந்தது 'டட்லி-செல்வா' ஒப்பந்தம்
 
29-02-2016 10:24 AM
Comments - 0       Views - 10

article_1456721935-fv.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 29)

 'வெறுங்கனவாகிப் போன மாவட்ட சபைகள்'

மாவட்ட சபைகள் பற்றிய வெள்ளை அறிக்கையும், அது பற்றிய சிங்களத் தலைமைகளின் அணுகுமுறையும் தமிழரசுக் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியது. மீண்டுமொருமுறை இந்த நாட்டின் அரசாங்கத்தினால் தாம் ஏமாற்றப்படுகிறோம் என்ற எண்ணம் தமிழரசுக் கட்சியினரிடையே ஏற்பட்டது. தமிழரசுக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான எழுதரப்புக் கூட்டணியில் தொடர்வதற்கான எதிர்ப்பு தமிழரசுக் கட்சியினுள் உருவானது. தமிழரசுக் கட்சியின் செயற்குழு மற்றும் நாடாளுமன்றக் குழு ஆகியவற்றின் இணைந்த கூட்டத்தில் தமிழரசுக் கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என்ற அழுத்தம் தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு வழங்கப்பட்டது.

1968 ஜூலை 18ஆம் திகதி இடம்பெற்ற சிம்மாசன உரையில் 'மத்திய அரசாங்கத்தின் நெறிப்படுத்தலுக்கும், கட்டுப்பாட்டுக்கும் உட்பட்ட மாவட்ட சபைகளை ஸ்தாபித்தல் பற்றியதொரு வெள்ளை அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதுபற்றிச் சொல்லப்பட்ட விமர்சனங்கள், கருத்துக்கள் கவனத்திற்கொள்ளப்பட்ட பின்னரே அதுபற்றிய சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும்' எனக் குறிப்பிடப்பட்டது.

1968 ஓகஸ்ட் 12ஆம் திகதி, சிம்மாசன உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணையின் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்தபோது அதில் உரையாற்றிய இலங்கை தமிழரசுக் கட்சியின் அன்றைய செயலாளரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 'நாங்கள் தொடர்ந்தும் அரசாங்கத்துக்கும், பிரதமருக்கும் ஆதரவளிப்போம்' என்று குறிப்பிட்டார். கட்சியின் அழுத்தத்தைத் தொடர்ந்து, பிரதமர் டட்லியுடன் பேச்சுவார்த்தையொன்றை தமிழரசுக் கட்சியின் தலைமைகள் நடாத்தின.

குறித்த  பேச்சுவார்த்தையில் முருகேசன் திருச்செல்வம் அமைச்சராகத் தொடர்வார் எனவும், அத்தோடு தமிழரசுக் கட்சி அரசாங்கத்துக்கு முழுமையான ஆதரவு அளிப்பதற்குப் பதிலாக தகுதிப்படியான ஆதரவளிக்கும் எனவும் முடிவானது. 'மாவட்ட சபைகள்' என்ற 'டட்லி-செல்வா' ஒப்பந்தத்தின் மூலக்கூறு வெறுங்கனவாகியே போனது. இதனை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தயாராக இருக்கவில்லை.

இந்த அரசாங்கத்தின் ஆயுள் இன்னும்  ஏறத்தாழ ஒன்றரை வருடங்களே இருந்த நிலையில், 'சிங்கள-பௌத்த' பேரினவாதத்தின் பலத்தைச் சவாலுக்குட்படுத்த அன்றைய அரசாங்கம் தயாராக இருக்கவில்லை. மீண்டும் ஒருமுறை தமிழ் மக்கள் அரசியல் ரீதியில் ஏமாற்றப்பட்டார்கள் என்பதுதான் நிதர்சனம். ஆனாலும் தமிழரசுக் கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேறவில்லை மாறாக தகுதிப்படியான ஆதரவு வழங்குவதாகக் கூறியது. தமிழரசுக் கட்சியின் சார்பில் அமைச்சரான முருகேசன் திருச்செல்வமும் பதவி விலகவில்லை.

இந்த நம்பிக்கைத் துரோகத்துக்குப் பின்னும் டட்லி தலைமையிலான அரசாங்கம் தனக்கு மிகுதியுள்ள ஏறத்தாழ ஒன்றரை வருடகால ஆயுளைப் பூர்த்தி செய்ய தகுதிப்படியான ஆதரவை வழங்க தமிழரசுக் கட்சி முன்வந்தமையும், அமைச்சரான திருச்செல்வம் பதவி விலகாமையும், தமிழரசுக் கட்சித்தொண்டர்களிடையே விசனத்தை ஏற்படுத்தியது. குறிப்பான இளைஞர்கள்

மத்தியில் இது கடும் அதிருப்தியை உருவாக்கியது. ஆனால், தமிழரசுக் கட்சியின் தலைமை வடக்கு - கிழக்கில் இன்னும் செய்யக் கூடிய அபிவிருத்தித் திட்டங்கள் சிலதைச் செய்து முடிக்க இயலுமா எனச் சிந்தித்தது. திருகோணமலையில் ஒரு தமிழ்ப் பல்கலைக்கழகம், திருக்கோணேஸ்வரர் ஆலய வளாகத்தைப் புனித பிரதேசமாகப் பிரகடனஞ்செய்தல் உள்ளிட்ட மேலும் சில அபிவிருத்தித் திட்டங்களைச் செய்விக்க தமிழரசுக் கட்சி முனைந்தது.

'திருக்கோணேஸ்வர புனித பூமி விவகாரம்'

இந்து முக்கியஸ்தர்களும், இந்து அமைப்புக்களும் திருக்கோணேஸ்வரக் கோவில் அமைந்துள்ள ‡பிரட்றிக் கோட்டை வளாகத்தை இந்துக்களுக்குரிய புனித பிரதேசமாக அறிவிக்கப்பட வேண்டும் என வேண்டுகோளொன்றை பிரதமர் டட்லி சேனநாயக்கவிடம் முன்வைத்தனர். சமயக்குரவராகக் கருதப்படும் நாயன்மார்களினால் பாடல்பெற்ற கீர்த்தியும் அருளும் மிகுந்த பழம்பெருங் கோவிலான திருக்கோணேஸ்வரம், இந்துக்களின் புனித பிரதேசமாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் நியாயமானதே. அந்நியர் ஆட்சிக்காலத்தில் அவர்களால் கடும் அழிவினைச் சந்தித்த கோவில். ஆகவே, புனித பிரதேசம் என்ற பாதுகாப்பை சுதந்திர இலங்கையில் இந்துக்கள் எதிர்பார்த்ததில் தவறேதும் இல்லை. அநுராதபுரம் உள்ளிட்ட இலங்கையின் பல பாகங்களிலும் பௌத்த புனித பிரதேசங்கள் இருக்கும் போது, அவ்வுரிமையையும், பாதுகாப்பையும் இந்துக்களும் எதிர்பார்த்தமை நியாயமே. பிரதமர் டட்லி சேனநாயக்கவும் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் திருச்செல்வத்துக்கு கூறினார்.

உள்ளூராட்சி அமைச்சராக இருந்த திருச்செல்வம், இவ்விடயம் பற்றி ஆராய குழு ஒன்றை நியமித்தார். இந்நியமனமானது 1968 ஓகஸ்ட் 27 வர்த்தமானி அறிவித்தலில் வெளியானது. இது நடந்து சில நாட்களுக்குள்ளாகவே தம்மங்கடுவ நாயக்க தேரரான மங்கலே தர்மகீர்த்தி ஸ்ரீ தமஸ்கஸாரே

ஸ்ரீ சுமேதங்கார என்ற பௌத்த பிக்கு இவ்விடயம் தொடர்பிலான தனது கடும் எதிர்ப்பை பிரதமர் டட்லி சேனநாயக்கவின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

'சிங்கள-பௌத்த' பேரினவாதிகளை எதிர்க்கமுடியாதவராக டட்லி சேனநாயக்க இருந்தார். அதனால்தான் அவரால் 'டட்லி-செல்வா' ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாது போனது. குறிப்பாக பௌத்த பிக்குகளை அதிருப்திப்படுத்த அவர் தயாராக இருக்கவில்லை. அமைச்சர் திருச்செல்வத்தின் குறித்த நடவடிக்கை முற்கொண்டு செல்லப்பட்டால் குறித்த பிரதேசமானது 'சிங்களம்' மற்றும் 'பௌத்தர்' அல்லாதவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும் என்ற காரணத்தைக் கூறி உடனடியாக அமைச்சர் திருச்செல்வத்துக்கு, குறித்த நடவடிக்கையை ஒத்திவைக்குமாறு பிரதமர் டட்லி உத்தரவிட்டார்.

'பதவி விலகினார் அமைச்சர் திருச்செல்வம்'

திருக்கோணேஸ்வர புனித பூமி விவகாரத்தைப் பிரதமர் டட்லி கையாண்ட விதம், தமிழ் மக்களிடமும் தமிழரசுக் கட்சியினரிடையேயும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. குறிப்பாக, அமைச்சர் திருச்செல்வம் இதனால் கடும் அதிருப்தியடைந்தார். 'மாவட்ட சபைகள்' விடயத்திலேயே கடும் நம்பிக்கைத் துரோகத்தை சந்தித்திருந்த தமிழரசுக்கட்சி, அதன் பின்னரும் அரசாங்கத்தில் தொடர்ந்தமைக்கு காரணம், தமிழர் பிரதேசங்களில் செய்ய்பபட வேண்டிய வேறேதும் காரியங்களைச் செய்வதற்காகவே. ஆனால், பிரதமர் டட்லியின் அணுகுமுறை அதனைச் சாதிப்பதற்கு இடமளிக்கவில்லை. 1968 நவம்பரில், கடும் அதிருப்திக்குப் பின், முருகேசன் திருச்செல்வம் அமைச்சுப் பதவியிலிருந்து விலகினார். அமைச்சுப் பதவியிலிருந்து விலகிய திருச்செல்வம் செனட் சபையில் உரையாற்றிய போது, 'பௌத்த பிக்குவொருவரின் எதிர்ப்பின் பேரில் நடவடிக்கை எடுத்த பிரதமர், இந்நாட்டின் இந்துக்களின் ஒட்டுமொத்த வேண்டுகோளை உதாசீனம் செய்துவிட்டார்' என்று குறிப்பிட்டார்.

'தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறியது தமிழரசுக்கட்சி'

பிரதமர் டட்லி சேனநாயக்கவுக்கு கடிதம் எழுதிய தமிழரசுக்கட்சியின் சா.ஜே.வே.செல்வநாயகம், தமிழரசுக் கட்சியானது டட்லி சேனநாயக்க தலைமையிலான 'தேசிய அரசாங்கத்திலிருந்து' வெளியேறுவதாகக் கூறினார். தமிழரசுக் கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவளிக்காவிட்டால், இயங்கத்தகு பெரும்பான்மையொன்று இல்லாது போகும் என்று டட்லி சேனநாயக்க அறிந்திருந்தார்.

அவர், செல்வநாயகத்திடம் நீங்கள் ஆதரவை வாபஸ் பெற்றால் 'இலங்கையில் ஜனநாயகத்தின் நிலை என்னவாகும்?' என்று கேட்டதாக செல்வநாயகத்தின் வாழ்க்கைச் சரித நூலில், அதனை எழுதிய அவரது மருமகனான பேராசிரியர் ஏ.ஜே.வில்ஸன் குறிப்பிடுகிறார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், அதனுடைய மாக்ஸிஸத் 'தோழர்களும்' ஆட்சிக்கு வருவது ஜனநாயகத்தை இல்லாதொழிக்கும் என்பதையே பிரதமர் டட்லி சேனநாயக்க அந்தக் கேள்வியினூடாக முன்வைத்தார். அந்த ஆபத்தை செல்வநாயகம் உணர்ந்திருந்ததால் அரசாங்கத்துக்கான ஆதரவை தமிழரசுக் கட்சி தொடர்ந்து வழங்கச் சம்மதித்தது என ஏ.ஜே.வில்ஸன் குறிப்பிடுகிறார்.

எந்தச் சிங்களத் தலைமையையும் நம்பமுடியாது என்ற நிலையிலேயே தமிழ் மக்கள் இருந்தார்கள். சிங்களத் தலைமைகளோ ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டு 'சிங்கள-பௌத்த' பேரினவாதததுக்;கு சாமரம் வீசும் நிலையே காணப்பட்டது. 1969 ஏப்ரலில் நாடாளுமன்றத்தின் ஆளுங்கட்சி வரிசையிலிருந்து மாறி, எதிர்க்கட்சி வரிசையில் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றமர்ந்தார்கள்.

ஆனால், தமிழரசுக் கட்சி டட்லி சேனநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு அதன் ஆயுட்காலம் முடிவடிடையும் 1970 மார்ச் வரை 'விமர்சனத்துக்குட்பட்ட ஆதரவை' வழங்கியது. அதாவது ஆளுந்தரப்பையோ, எதிர்த்தரப்பையோ சாராத, எதிரணி வரிசையில் அமர்ந்துள்ள ஒரு சுதந்திரக் குழுவாக, டட்லி தலைமையிலான அரசாங்கத்துக்கு 'விமர்சனத்துக்குட்பட்ட ஆதரவை' தமிழரசுக் கட்சி வழங்கியது.

இதன்மூலம், திருகோணமலையில் தமிழ்ப் பல்கலைக்கழகம், காங்கேசன்துறையில் ஒரு துறைமுகம், தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்ட ஒழுங்குகளின் முழுமையான அமுலாக்கம் எனச் சிலவற்றையாவது சாதிக்க முடியுமா என்ற நப்பாசை தமிழரசுக் கட்சிக்கு இருந்தது. காங்கேசன்துறை துறைமுகத்துக்கான அடிக்கல்லை பிரதமர் நட்டதோடு சரி, அதற்கு மேல் அந்தத் திட்டம் நகரவில்லை. தமிழ் மக்களின் எந்தவோரு எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை.

தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டை விமர்சித்தவர்கள், தமிழரசுக் கட்சி அரசாங்கத்திலிருந்து விலகியதாகக் காட்டிக்கொண்டது ஒரு தேர்தலை முன்னிறுத்திய நாடகம் என்றனர். அரசாங்கத்தில் தொடர்ந்து அங்கம் வகிப்பதை தமிழரசுக் கட்சியின் தொண்டர்கள் கூட விரும்பியிராத நிலையில், தமிழ் மக்கள் நிச்சயம் அதனை ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார்கள். ஆகவே தமிழரசுக் கட்சியானது அரசாங்கத்திலிருந்து விலகியதாகக் காட்டிக் கொண்டதோடு, 'விமர்சிக்கப்பட்ட ஆதரவு' என்ற பெயரில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த, தமிழ் மக்களை ஏமாற்றிய டட்லி சேனநாயக்க அரசாங்கம் தனது முழுப் பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்ய ஆதரவளித்தது.

இதன் மூலம் தமிழரசுக் கட்சி தமிழ் மக்களை ஏமாற்றியது என விமர்சகர்கள் சிலர் கருத்துரைத்தனர். செல்வநாயகமோ ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவை விட, டட்லி சேனநாயக்க மேல் என்ற எண்ணங்கொண்டிருந்தார்.

ஸ்ரீமா மற்றும் அவரது 'தோழர்களிடமிருந்து' எமக்கு எதுவித திருப்திகரமான நன்மையும் கிடைக்குமென்ற நம்பிக்கை எனக்குத் துளியேனும் இல்லை என சா.ஜே.வே.செல்வநாயகம் கூறினார். இந்தக் காலப்பகுதியில் செல்வநாயகத்தின் உடல்நிலையும் மிகமோசமடைந்திருந்தது, ஆனாலும் அரசியல் செயற்பாடுகளிலிருந்து அவர் பின்வாங்கவில்லை என ஏ.ஜே.வில்ஸன் குறிப்பிடுகிறார்.

இத்தோடு 'டட்லி-செல்வா' என்ற வரலாற்று முக்கியத்துவம் மிக்க உடன்படிக்கையும் தோல்வி கண்டது. 'பண்டா-செல்வா', 'டட்லி-செல்வா' ஆகியவற்றின் தோல்வி தமிழ் மக்களுக்கு ஒரு முக்கிய விடயத்தை உணர்த்தியது. சிங்களத் தலைமைகள் ஒரு போதும் 'சிங்கள-பௌத்த' பேரினவாதிகளை அதிருப்திப்படுத்தும் எந்தவோரு தீர்வையும் தமிழ் மக்களுக்குத் தரப்போவதில்லை.

இந்தக் காலப்பகுதியில் தமிழ் மக்கள் தனி நாடு கேட்கவில்லை, சமஷ்டி ஆட்சியைக் கூடக் கோரவில்லை மாறாக தமிழ் மொழிக்கான சம அந்தஸ்தையும், ஆகக் குறைந்ததொரு அதிகாரப் பரவலாக்கலையுமே வேண்டினர். அதனைக் கூடச் செய்வதற்கு சிங்களத் தலைமைகள் தயாராக இருக்கவில்லை. 1970 மார்ச் 25 நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. டட்லி சேனநாயக்க தலைமையிலான அரசாங்கம் வெற்றிகரமாக தனது முழு ஆயுளையும் பூர்த்தி செய்தது. ஆனால், ஏமாற்றமடைந்தது என்னவோ தமிழ் மக்கள்தான்.

வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான இறுதித் திகதி ஏப்ரல் 23 ஆகவும், தேர்தல் திகதியாக மே 27ஆம் அறிவிக்கப்பட்டது. புதிய நாடாளுமன்றம் 1970 ஜூன் 7ஆம் திகதி அன்று கூடும் என அறிவிக்கப்பட்டது. அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகின.

தமிழ் மக்கள் மிக மோசமானதொரு காலப்பகுதிக்குள் தாம் நுழையப் போகிறோம் என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

(அடுத்தவாரம் தொடரும்...)

- See more at: http://www.tamilmirror.lk/167107/%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%AF%E0%AE%9F-%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%B2-%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%92%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%AE-#sthash.MW1cDwgA.dpuf
Link to comment
Share on other sites

ஸ்ரீமாவின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பமானது
 
 

article_1457326207-Old.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 30)

'1970ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்'

'டட்லி-செல்வா' ஒப்பந்தத்தின் தோல்வியைத் தொடர்ந்து, தமிழ் மக்கள் என்ன செய்வது என்ற நிலையறியாது நிற்கும் சூழல் காணப்பட்டது. 'கனவான்' அரசியல்வாதி என்று பரவலாக அறியப்பட்ட டட்லி சேனநாயக்கவே நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்ட பின், இனி எந்த சிங்களத் தலைமையைத்தான் தமிழர்கள் நம்புவது என்ற நிர்க்கதி நிலையைத் தமிழ்த் தலைமைகள் எதிர்கொண்டன.

1970ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது. மே 27ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என முடிவானது. அன்று, பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் 5,505,028பேர் இருந்தனர். 151 ஆசனங்களுக்காக 441 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். இத்தேர்தலைப் பொறுத்தவரை, ஸ்ரீமாவோ தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சியும், லங்கா சம சமாஜக் கட்சியும் 'கூட்டணியாகக்' களமிறங்கின. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனான இடதுசாரிக் கட்சிகளின் முன்னைய 'தேர்தல் கூட்டானது' பெருமளவுக்கு போட்டியின்மை ஒப்பந்தங்களாகவே இருந்தன, அதாவது ஒரு தொகுதியில் ஒன்றை எதிர்த்து மற்றொன்று போட்டியிடாது என்ற ஒப்பந்தம், ஆனால், இம்முறை அதனையுந்தாண்டி, இக்கட்சிகள் ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்திருந்தன.

'ஐக்கிய முன்னணி' என்றறியப்பட்ட பதாகையின் கீழ், இக்கூட்டணி அமைந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 108 வேட்பாளர்களையும், லங்கா சம சமாஜக் கட்சி 23 வேட்பாளர்களையும், கம்யூனிஸ்ட் கட்சி 9 வேட்பாளர்களையும் களமிறக்கின. மொத்தமாக ஐக்கிய முன்னணி சார்பில் 140 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். ஐக்கிய தேசியக் கட்சி 130 வேட்பாளர்களையும், மஹஜன எக்ஸத் பெரமுண 4 வேட்பாளர்களையும் களமிறக்கினர்.

ஆர்.ஜி.சேனநாயக்க, சிங்ஹல மஹஜன பக்ஷய (சிங்கள மக்கள் கட்சி) என்ற அமைப்பை உருவாக்கி, அதன் சார்பில் 51 வேட்பாளர்களைக் களமிறக்கினார். இவ்வமைப்பானது அவர் 1960களின் மத்தியில் ஆரம்பித்த சிங்கள பேரினவாத அமைப்பான 'அபி சிங்ஹலே' (நாம் சிங்களவர்) அமைப்பின் தொடர்ச்சியாக அமைந்தது. தனது அரசியல் காலம் முழுவதும் சிங்கள பேரினவாத, சிங்கள தேசியவாத அரசியலை முன்னெடுத்தவர் ஆர்.ஜி.சேனநாயக்க.

தமிழ் கட்சிகளைப் பொறுத்தவரையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 12 வேட்பாளர்களையும், சமஷ்டிக் கட்சி (இலங்கை தமிழரசுக் கட்சி) 19 வேட்பாளர்களையும் களமிறக்கியது. தமிழரசுக் கட்சியிலிருந்து தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்தி சட்டமூலத்தை எதிர்த்தமைக்காக விலக்கப்பட்ட வி.நவரட்ணம் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற அமைப்பை உருவாக்கியிருந்தார்.

சுதந்திரமும் தன்னாட்சியுமுடைய தமிழரசு ஒன்றை இலங்கையில் ஸ்தாபித்தல் என்ற நோக்கத்துடன் அவ்வமைப்பை அவர் 1969இல் ஆரம்பித்திருந்தார். தமிழர் சுயாட்சிக் கழகம் சார்பில் ஊர்காவற்றுறை தொகுதியில் வி.நவரட்ணம் போட்டியிட்டார்.

'தேர்தல் விஞ்ஞாபனங்கள்'

ஐக்கிய முன்னணியின் (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் லங்கா சம சமாஜக் கட்சியின் கூட்டணியின்) தேர்தல் விஞ்ஞாபனம் பல குறிப்பிடத்தக்க விடயங்களைக் கொண்டமைந்தது. இலங்கையில் வரலாற்றில் புதிய அத்தியாயம் ஒன்றை எழுதுவதற்கான முன்மொழிவுகளைச் செய்தது. 1948 முதல் பிரித்தானிய முடியின் கீழான டொமினியன் நாடாக இருந்த இலங்கையை, குடியரசாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல காலமாக இருந்து வந்தது. இதனைச் செய்வதற்கான முயற்சி எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவினால் அவரது ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்டாலும், பல்வேறு காரணங்களினால் அது வெற்றியளிக்கவில்லை.

ஐக்கிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் பின்வருமாறு குறிப்பிட்டது: 'இலங்கையை சோசலிச ஜனநாயகம் என்ற நோக்கை அடையப்பெறுவதற்கான இறைமையும் சுதந்திரமுள்ள குடியரசாகப் பிரகடனம் செய்யவும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கவும் ஏதுவகை செய்யும் புதிய அரசியலமைப்பொன்றை அமைப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை ஏககாலத்தில் புதிய அரசியலமைப்பொன்றை வரைவதற்கும், ஏற்பதற்கும், அமுல்படுத்துவதற்கும் என அரசியலமைப்பு நிர்ணய சபையாக செயற்படுவதற்கான மக்களாணையைக் கோருகிறோம்'.

அத்துடன் பின்வரும் விடயங்களும் ஐக்கிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் காணப்பட்டன: 1956ஆம் ஆண்டின் உத்தியோகபூர்வ மொழிச் சட்டத்தை (தனிச் சிங்களச் சட்டத்தை) அமுல்படுத்துதல்; உத்தியோகபூர்வ மொழியினை நீதிமன்றத்துக்கும் அமுல்படுத்துதல், பெரும்பான்மை மக்களின் மதமான பௌத்த மதத்துக்கு அதற்குரிய இடத்தினை வழங்குதல்;, 1964இல் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவினால் கைச்சாத்திடப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துதல்;, அத்தோடு வணிக, வர்த்தக மற்றும் பொருளாதாரத்துறையில் அரசின் பங்கை விரிவாக்கி, தனியாரின் செயற்பாடுகளை நசுக்கத்தக்கதொரு சோசலிச பொருளாதார முறையினைக் கொண்டுவரும் முன்மொழிவையும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

ஐக்கிய முன்னணிக்கு முன்னாள் பிரதம நீதியரசரான ஹேம பஸ்நாயக்கவின் ஆதரவு இம்முறை இருந்தது. சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் மதிப்பு மிக்க ஆளுமையாக இருந்த ஹேம பஸ்நாயக்க 1965 தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்திருந்தார். எந்த ஸ்ரீமாவோவின் ஆட்சியை வீழ்த்தை அவர், 1965இல் ஆதரவளித்தாரோ, இன்று அதே ஸ்ரீமாவோ ஆட்சியைப் பிடிப்பதற்காக ஆதரவளிக்கிறார். முன்னணி பத்திரிகைகளின் ஆதரவும் இம்முறை ஸ்ரீமாவோவுக்கு சாதகமாக இருந்தது.

ஐக்கிய முன்னணி தனது பிரசாரத்தை பாரியளவில் முன்னெடுத்தது. 'அரசாங்கம் அள்ளி 'இலவசமாக' வழங்கும்' என்ற வகையிலான 'சோசலிச' வகையறாப் பிரசாரங்கள் மக்கள் மத்தியில் உடனடிப் பிரபல்யம் பெற்றது. ஸ்ரீமாவின் பிரசாரக் கூட்டங்களில் 'அபே அம்மா மக எனவா, ஹால் சேரு தெகக் தெனவா' (எங்கள் அம்மா வந்துகொண்டிருக்கிறார், இரண்டு 'சேரு' (அளவீடு) அரிசி தரப்போகிறார்) என்ற கோசம் எழுந்தது. மேடையில் பேசிய ஸ்ரீமாவோவும் 'நாம் ஆட்சிக்கு வந்ததும், உங்களுக்கு இரண்டு 'சேரு' (அளவீடு) அரசி தரப்படும், அதை சந்திரனில் இருந்தென்றாலும் கொண்டுவருவோம்' என்று உணர்ச்சி பொங்கப் பேசினார். அந்தப் பேச்சுக்கு கரவொலி விண்ணைப்பிளந்தது. அரசியல் அறிவற்ற, பொருளாதாரம் இயங்கும் முறைபற்றிய தெளிவற்ற மக்களை எவ்வாறு ஏமாற்றி வாக்குகளைப் பெறமுடியுமோ, அதற்கான சகல சூத்திரங்களையும் ஐக்கிய முன்னணி கையாண்டது.

இலசவங்கள் வழங்குவதை ஏற்கும் மக்கள், அந்த இலவசங்கள் எங்கிருந்து வருகின்றன என்று சிந்திப்பதில்லை. அப்படிச் சிந்திக்கும் மக்களைக் கூட 'சந்திரனிலிருந்தாவது கொண்டு வருவோம்' என்ற சொல்லாட்சிப் பேச்சுக்களால் (rhetoric) மயக்கிவிடுகிறார்கள். உண்மையில் 1965 முதல் 1970 வரை டட்லி சேனநாயக்கவின் ஆட்சிக் காலத்தை விவசாயத்துறையின் மறுமலர்ச்சிக்கு பிரதமர் டட்லி சேனநாயக்க செய்த பணிகள் ஏராளம். விவசாயத்துறை அபிவிருத்தியை தனது ஆட்சிக்காலம் முழுவதும் ஒரு வெறித்தனமான ஆர்வத்துடன் டட்லி சேனநாயக்க முன்னெடுத்ததாக ப்ரட்மன் வீரக்கோன் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

அதன் முத்தாய்ப்பாக அமைந்த டட்லியின் கனவுத் திட்டம்தான் 'மஹாவலி அபிவிருத்தித் திட்டம்'. 1969ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்ட இந்த நீண்டகாலத்திட்டத்துக்கான அடிக்கல்லானது, 1970 பெப்ரவரி 28ஆம் திகதி பிரதமர் டட்லி சேனநாயக்கவினால் நாட்டப்பட்டது. ஆனால், டட்லியின் இத்தனை அபிவிருத்தியும். நீண்டகாலத் தொலைநோக்குத் திட்டங்களும். ஸ்ரீமாவோ அவரது 'தோழர்களும்' வழங்குவதாகச் சொன்ன 'சோசலிச சொர்க்கத்தின்' முன்னால் எடுபடவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் உணர்த்தின.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தனது பிரசாரங்கள் மூலம் இன்னும் பலவழிகளிலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 'செக்' வைத்தார். டட்லி சேனநாயக்கவினால் செய்யப்பட்ட முட்டாள்தனமான காரியங்களில் ஒன்று, ஞாயிறு விடுமுறையை இல்லாதொழித்தமை. ஸ்ரீமாவோ கிறிஸ்தவர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் முகமாக, தாம் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் சனி, ஞாயிறு விடுமுறை தினங்களாகப் பிரகடனப்படுத்தப்படும் எனக் கூறினார்.

மறுபுறத்தில், இலங்கை தமிழரசுக் கட்சி தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை 1970 ஏப்ரல் 4 அன்று வெளியிட்டது. தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனமானத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது: 'தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக கீழே தள்ளப்பட்டு அதன்மூலம் அவர்களது தனித்துவமும், அடையாளமும் அழிக்கப்படும் நிலைக்கு இன்றைய அரசியலமைப்பே வழிவகுத்தது.

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எதிர்த்தரப்பில் இருந்தாலென்ன, ஆளுங்கட்சியோடு பங்காளிகளாக இருந்தாலென்ன நிலை இதுதான்.' 'தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக அழிந்துபோவதிலிருந்து அவர்களைக் காக்கக்கூடியது அவர்களது விவகாரங்களை அவர்களே கவனிக்கத்தக்க சமஷ்டி முறையிலான அரசியல் யாப்பு ஒன்றுதான் என்று இலங்கை தமிழ் பேசும் மக்கள் நம்புகிறார்கள்.

இந்த நிலையின் கீழ் மட்டுமே இந்த நாட்டின் தமிழ் பேசும் மக்கள் சுயமரியாதையுடனும், அவர்களது பிறப்புரிமையான சுதந்திரத்துடனும், சிங்கள சகோதரர்களுடன் சமத்துவத்துடன் வாழ முடியும்.' 'ஒரு சமஷ்டி அரசியலமைப்புக்கு முன்னோட்டமாக நாம் பிராந்திய சுயாட்சியை வேண்டினோம். 'பண்டா-செல்வா... ஒப்பந்தத்தினூடாக நாங்கள் அடையப்பெற எண்ணியது அதிகாரப் பரவலாக்கத்தின் மூலம் பிராந்திய தன்னாட்சி கொண்ட மாவட்ட சபைகளையே ஆகும், ஆயினும் சமஷ்டிக்கு குறைவான வேறு ஒரு தீர்வும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது. எமக்கு எந்தத் துன்பம் ஏற்படினும் நாம் எமது விடுதலைக்கான போராட்டத்தை முற்கொண்டு செல்வோம், எமது மக்களையும் அந்த இலக்கை நோக்கி தலைமையேற்று நடத்திச் செல்வோம் என உறுதியளிக்கிறோம்.

' இவ்வாறாக தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் கூறியது. தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் தொடர்ந்தும் இதுபோன்ற 'சொல்லாட்சிகளை' (rhetoric) கொண்டமைவதை நாம் அவதானிக்கலாம் ஆனால் அவர்களது செயற்பாடுகள் அதற்கொப்ப இருந்தனவா என்பது பற்றிய பல விமர்சனங்கள் உண்டு. உதாரணமாக, தாம் மாவட்ட சபைகள் ஊடாக பிராந்திய தன்னாட்சி வேண்டியதாக தமிழரசுக் கட்சி குறிப்பிடுகிறது. ஆனால் தமிழரசுக் கட்சியின் சார்பில் அமைச்சரான முருகேசன் திருச்செல்வம் வரைந்த மாவட்ட சபைகள் சட்டவரைவில் கூட 'பிராந்திய தன்னாட்சி' என்பதை வழங்கத்தக்க அம்சங்கள் ஏதுமில்லை என்பதை நாம் அவதானிக்கலாம். மாறாக, மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட ஓர் உள்ளூராட்சி அமைப்பே அந்த முன்மொழிவுகளின் காணலாம். இது எவ்வகையிலும் 'பிராந்திய தன்னாட்சி' என்பதற்குள் அடங்காது.

இதனை தமிழரசுக் கட்சி தமிழ் மக்களை ஏமாற்றுகிறது என்ற விமர்சனப் பார்வையிலும் பார்க்க முடியும், அல்லது தமிழரசுக் கட்சி முடிந்தவரையிலான ஒரு சமரசத்தை செய்து, ஒன்றுமில்லாது இருப்பதற்கு பதில், அந்த சமரசத்தினுடாக ஏதாவதொன்றைப் பெற்றுக்கொள்ளவேனும் முயற்சிக்கிறது என்ற பார்வையிலும் அணுக முடியும்.  தேர்தல் முடிவு ஐக்கிய தேசியக் கட்சிக்கு கடும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் தந்தது. ஐக்கிய முன்னணிக்கோ மாபெரும் வெற்றியைப் பரிசளித்தது. இலங்கை தனது அரசியல் வரலாற்றில் இன்னொரு அத்தியாயத்தில் காலடி எடுத்து வைத்தது. தமிழ் மக்களுக்குத்தான் பெரும் அதிர்ச்சிகள் காத்திருந்தன.

(அடுத்தவாரம் தொடரும்...)

- See more at: http://www.tamilmirror.lk/167581/%E0%AE%B8-%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%99-%E0%AE%B8-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%AE-%E0%AE%A9%E0%AE%A4-#sthash.fhXdpDwY.dpuf
Link to comment
Share on other sites

மீண்டும் பிரதமரானார் ஸ்ரீமாவோ
 
14-03-2016 09:18 AM
Comments - 0       Views - 11

article_1457927875-sd.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB(Hons)

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 31)

1970ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்

பொதுத் தேர்தலில், ஸ்ரீமாவோ, ரத்வத்தை, டயஸ் பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் கூட்டணியான ஐக்கிய முன்னணி பெரும் வெற்றி பெற்றது. 85.2 சதவீத வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களித்திருந்தனர்.

இது, ஒப்பீட்டளவில் மிக உயர்ந்த வாக்களிப்பு வீதமாகும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 91 ஆசனங்களையும் லங்கா சமசமாஜக் கட்சி 19 ஆசனங்களையும் கம்யூனிஸ்ட் கட்சி 6 ஆசனங்களையும் வென்றது. லங்கா சமசமாஜக் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும், அவற்றின் வரலாற்றில் தேர்தலொன்றில் வென்ற அதிகபட்ச ஆசனங்களாக இது அமைந்தது. ஐக்கிய தேசியக் கட்சி, 130 வேட்பாளர்களைக் களமிறக்கியிருந்த போதும், வெறும் 17 ஆசனங்களையே வென்று, 1970ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தது.

ஆனால், தனி ஒரு கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியே அதிகளவான வாக்கு வீதத்தைப் பெற்றிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சி, 37.9 சதவீத வாக்குகளையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 36.9 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தது. இலங்கைத் தமிழரசுக் கட்சி 13 ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 3 ஆசனங்களையும் வென்றன. 1965 தேர்தலோடு ஒப்பிடுகையில், தமிழரசுக் கட்சியின் ஆதரவு வீழ்ச்சியடைந்திருந்தது.

சா.ஜே.வே.செல்வநாயகமும் பின்னடைவைச் சந்திந்திருந்தார். தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவர்களான எஸ்.எம்.இராசமாணிக்கம் மற்றும் டொக்டர் ஈ.எம்.வி.நாகநாதன் ஆகிய இருவரும் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது. தமிழ் காங்கிரஸ் 3 ஆசனங்களைத் தக்கவைத்துக் கொண்ட பொழுதும், அதன் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம், யாழ்ப்பாணத் தொகுதியில் சிறியதோர் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தார்.

மிகப்பெரும் பெரும்பான்மைப் பலத்தோடு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவும் அவரது 'தோழர்களும்' ஆட்சிப்படியேறினார்கள். ஆனால், இம்முறை பெற்ற இந்தத் தேர்தல் வெற்றியானது, வெறும் அதிகாரம் சார்ந்ததொன்றாக இருக்கவில்லை, ஐக்கிய முன்னணி மக்களுக்கு முன் சமர்ப்பித்த புதிய அரசியல்யாப்பொன்றை இயற்றல், பௌத்த மதத்துக்கு அதற்குரிய இடத்தை வழங்குதல், ஜனநாயக-சோசலிஸ கட்டமைப்பொன்றை உருவாக்குதல், 'தனிச்சிங்கள' சட்டத்தை அமுல்படுத்துதல், 'ஸ்ரீமா-சாஸ்த்ரி' ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பல வாக்குறுதிகளுக்கான மக்களாணையாகவும் இத்தேர்தல் வெற்றி அமைந்தது.

பிரதமரானார் ஸ்ரீமாவோ

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமராகப் பதவியேற்றதும், 1970 ஜூன் 14ஆம் திகதியை 'மக்களின் வெற்றி தினம்' எனப் பிரகடனப்படுத்தினார். அந்தநாள், விடுமுறை தினமாகவும் அறிவிக்கப்பட்டது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து கலாநிதி என்.எம்.பெரேராவை நிதி அமைச்சராகவும் கலாநிதி.கொல்வின் ஆர்.டி.சில்வாவை பெருந்தோட்டத்துறை அமைச்சராகவும் பின்னர் கூடுதலாக அரசியலமைப்புக்கான அமைச்சராகவும், லெஸ்லி குணவர்தனவை தொடர்பாடல் அமைச்சராகவும் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பீற்றர் கெனமனை வீடமைப்பு அமைச்சராகவும் நியமித்தார்.

தனிச்சிங்கள அமைச்சரவையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்ரீமாவோ, தமிழர் ஒருவரை அமைச்சராக்க எண்ணினார். செல்லையா குமாரசூரியர் என்ற பட்டய பொறியியலாளரை செனட் சபைக்கு நியமித்ததுடன், தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராக நியமித்தார். பதியுதீன் முஹம்மட் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

தமிழ் அமைச்சர் ஒருவரை நியமித்தல் என்பதற்கு பின்னால் தேசியக் கட்சிகளின் ஓர் இராஜதந்திரம் இருந்தது. தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் பேசுவதற்குப் பதிலாக, தம்முடைய கட்சியிலேயே தமிழ்ப் பிரதிநிதிகளை உருவாக்குவது, அதனூடாக, தமிழ்க் கட்சிகளின் செல்வாக்கைக் குறைக்க முயற்சிப்பது. இந்த இராஜதந்திரத்தை ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் கையாண்டிருக்கிறார். தொடர்ச்சியாக வந்த பல அரசாங்கங்களும் கையாண்டிருக்கின்றன. தாம், தமிழ் மக்களையும் அரவணைத்துப் போகிறோம் என்பதற்கான ஓர் அடையாளமாக இதைக் காட்ட விரும்பியது. அத்தோடு, தமிழ் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளைத் தம்பக்கம் இழுப்பதற்கான முயற்சிகளும் நடந்தன.

தமிழ் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவான எஸ்.தியாகராஜா மற்றும் அ.அருளம்பலம் ஆகியோரின் ஆதரவு பெறப்பட்டது. இவற்றைவிட, யாழ்ப்பாணத்தில் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்த அல்‡பிரட் துரையப்பா, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளராக நியமிக்கப்பட்டதுடன், அரசாங்கத்தின் முழுமையான அரசியல் பின்புலத்துடன் செயற்படும் அரசியல் தலைவராக யாழ்ப்பாணத்தில் முன்னிறுத்தப்பட்டார்.

இதே தந்திரோபாயத்தை 1978இல் ஜே.ஆர்.ஜெயவர்தனவும் கையாண்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தினுடைய இந்த முயற்சிகள், அரசாங்கத்துக்கு ஆரம்பத்தில் பலனளித்தன. ஆனால், நீண்ட காலத்தில் இவை தோல்வியடைந்தன. டட்லி சேனநாயக்க, சௌமியமூர்த்தி தொண்டமானை நியமன நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்திருந்தார். அதையொப்பவே, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவும் இந்திய வம்சாவளி மக்களின் இன்னொரு முக்கிய பிரதிநிதியாக இருந்த அப்துல் அஸீஸை நியமன நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தார்.

இந்தத் தந்திரோபயத்தின் அடிப்படை இதுதான்: அனைத்துத் தரப்பும் எமக்கு ஆதரவாக இருக்கின்றன. அனைத்துத் தரப்பும் எமது கொள்கைளை ஏற்கின்றன. ஸ்ரீமாவோ அரசாங்கம், தமிழ் பேசும் மக்கள் உள்ளிட்ட இந்நாட்டின் சிறுபான்மை மக்களுக்கெதிராகச் செய்த அத்தனை அநீதிகளும், சிறுபான்மையோரின் ஆதரவோடுதான் நடந்தன என்பதைக் காட்டுவதற்கான தந்திரோபாயம் இது.

எதிர்க்கட்சியைப் பொறுத்தவரையில், கட்சித் தலைவரான டட்லி சேனநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்தனவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்தார். இதன் மூலம், அடுத்த தலைவர் ஜே.ஆர் தான் என்பது தெளிவானது. ஜே.ஆர், அதிகாரப் போட்டிக்கான தன்னுடைய பயணத்தை இங்கிருந்து ஆரம்பித்தார். படுதோல்வியைச் சந்தித்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பை ஜே.ஆர், தானாக ஏற்றுக்கொண்டார். தன்னுடைய தந்திரோபாயத்தைத் தீர்மானிக்கும் வரை எதிர்ப்பரசியலை அவர் தவிர்க்க விரும்பியிருக்கலாம், அதனால்தான் சிம்மாசன உரையில் ஒரு திருத்தத்தைக் கூட எதிர்க்கட்சித்தலைவராக அவர் முன்மொழியவில்லை.

இஸ்ரேல் தூதுவராலயம் மூடப்பட்டது

1969ஆம் ஆண்டு ஓகஸ்ட் 21ஆம் திகதி, ஜெருசலேமிலுள்ள அல்-அக்ஸா பள்ளிவாசல் தீக்கிரையாக்கப்பட்டது. இது, உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உலக முஸ்லிம்கள் இதனை இஸ்ரேலின் கொடுஞ்செயலாகவே பார்த்தனர். இஸ்ரேலோ, இதனை டெனிஸ் மைக்கிள் றோஹன் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட அவுஸ்திரேலியரே செய்தார் என்றது. அவர் கைது செய்யப்பட்டு, மனநல காப்பகத்துக்;கு அனுப்பப்பட்டார்.

இந்த பள்ளிவாசல் அமைந்துள்ள இடம் யூதர்களால் 'மலைக்கோயில்' (Temple of Mount) என்று விசுவாசிக்கப்படும் இடத்தில் அமைந்துள்ளமையாலும், அங்கு மீண்டும் 'மலைக்கோயில்' அமைக்கப்பட வேண்டும் என யூதர்களில் ஒரு பகுதியினரின் கோரிக்கை இருந்ததாலும், இப்பள்ளிவாசல் எரிக்கப்பட்டதன் பின்புலத்தில் இஸ்ரேல் இருக்கும் என்று நம்பப்பட்டது. இதன் விளைவாக, இஸ்ரேலுக்கெதிராக இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் எதிர்ப்பு வலுத்தது. இந்தியா உள்ளிட்ட தென்னாசிய நாடுகளில் இஸ்ரேலிய தூதரகங்கள் மூடப்பட்டன.

ஆனால், டட்லி சேனநாயக்கவின் அரசாங்கம் அதனைச் செய்வதற்குத் தயாராக இருக்கவில்லை. கல்முனைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஸி.அஹமட் மற்றும் மூதூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான அப்துல் மஜீத் ஆகியோர் பிரதமர் டட்லியுடன் இதுபற்றிப் பேசியதுடன் இஸ்ரேலிய தூதுவராலயம் மூடப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மருதானை சாஹிரா கல்லூரிக்கு முன்பதாக முஸ்லிம் மக்கள் பெருமளவில் கூடி, இஸ்ரேல் தூதுவராலயம் மூடப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால், பிரதமர் டட்லி சேனநாயக்க அசைந்து கொடுப்பதாக இல்லை. தன்னுடைய நிலைப்பாட்டில் அவர் உறுதியாக நின்றார்.

அனைத்து வாய்ப்புக்களையும் தனது தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்திய ஸ்ரீமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணி, இந்த வாய்ப்பையும் பயன்படுத்திக்கொண்டது. தாம் ஆட்சிக்கு வந்தால், இஸ்ரேலிய தூதுவராலயத்தை மூடுவோம் என்று ஸ்ரீமாவோ வாக்களித்தார். அதன்படி புதிய நாடாளுமன்றம் சுதந்திர சதுக்கத்தில் கூடி, சிம்மாசன உரை நிகழ்ந்த போதே இஸ்ரேலிய தூதுவராலயத்தை மூடுவது பற்றியும் அறிவிக்கப்பட்டது.

அன்று சுதந்திர சதுக்கத்தில் கூடியிருந்து முஸ்லிம் மக்கள் 'அல்லா ஹூ அக்பர்' என்று கூறி அம்முடிவை வரவேற்றனர். அதுமட்டுமல்லாது ஸ்ரீமாவோ அரசாங்கமானது அமெரிக்க சமாதானப் படையணி (Peace Corps) மற்றும் ஆசிய மன்றம் (Asia Foundation) ஆகிய அமைப்புக்களையும் நாட்டிலிருந்து வெளியேறப்பணித்தது.

சர்வதேச அரசியலைப் பொறுத்தவரை மேற்குடன் இலங்கை கொண்டிருந்து உறவு குறுகலடைந்து, கிழக்குடனான உறவு விரிவடையத்தொடங்கியது. ஸ்ரீமாவோ தலைமையிலான அரசாங்கம் வட கொரியா, ஜேர்மனிய ஜனநாயகக் குடியரசு (கிழக்கு ஜேர்மனி அல்லது சோவியத் ஜேர்மனி), தென் வியட்நாமிய தேசிய விடுதலை முன்னணியின் இடைக்கால அரசு ஆகியவற்றுக்கு இராஜதந்திர அங்கிகாரத்தை வழங்கியது. அதன்படி, வட கொரிய மற்றும் கிழக்கு ஜேர்மனி தூதுவராலயங்கள் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டன.

ஜே.வி.பி என்ற மக்கள் விடுதலை முன்னணி

டட்லி சேனநாயக்க அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த ரோஹண விஜேவீர உள்ளிட்ட ஜே.வி.பியினரை ஸ்ரீமாவோ தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்ததும் 1970 ஜூலையில் விடுதலை செய்தது. படபண்டிகே டொன் நந்தசிறி விஜேவீர என்ற இயற்பெயரைக் கொண்ட ரோஹண விஜேவீர, தங்காலையில் பிறந்தவர். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளராக அவரது தந்தை இருந்ததனால், அவரும் கம்யூனிஸ்ட் கட்சியோடு இணைந்து செயற்பட்டார். 1960ஆம் ஆண்டு ரஷ்ய புலமைப்பரிசிலொன்றைப் பெற்று மருத்துவம் கற்க மொஸ்கோ சென்றார். 1962இல் ரஷ்ய-சீன பிரிவினை ஏற்பட்டபோது, சீனாவை வெளிப்படையாகவே ஆதரித்தார்.

1964ஆம் ஆண்டு விஜேவீர விடுமுறைக்கு இலங்கை வந்தார். அவரது சீன ஆதரவின் விளைவாக, மீண்டும் ரஷ்யா செல்வதற்கா விசாவினை இலங்கையிலுள்ள ரஷ்ய தூதரகம் தரமறுத்துவிட்டது. செய்வதற்கேதுமின்றியிருந்த விஜேவீர, அன்று பிரிவடைந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சியின், சண்முகதாசன் தலைமையிலான பீகிங் பிரிவில் சேர்ந்துகொண்டார்.

அங்கு தலைவராக இருந்த சண்முகதாசன் மீது அதிருப்திகொண்ட குழுவினருடன் நெருக்கம் கொள்ளத்தொடங்கினார். கட்சியின் சில உத்தரவுகளை நிறைவேற்றத் தவறியதன் காரணத்தால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட விஜேவீர, அடுத்தது என்ன என்று அறியாத நிலையில் இருந்தார்.

இந்நிலையில்தான் அன்று பதவியிலிருந்த டட்லி அரசாங்கத்தை வீழ்த்தத் திட்டமிட்டுக்கொண்டிருந்த சில நபர்களின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது, அவர்களுடன் தன்னை டொக்டர் திஸ்ஸ என்ற பெயருடன் அறிமுகப்படுத்திக்கொண்டு பேச்சு நடத்தத்தொடங்கினார். அது அன்று வெற்றியளிக்கவில்லை. 1966இன் மையப்பகுதியில் தன்னுடைய தோழர்கள் சிலருடன் இணைந்து ஜனதா விமுக்தி பெரமுண (ஜே.வி.பி) என்ற சிங்கள இளைஞர்களைக் கொண்ட தீவிர

மாக்ஸிஸவாத அமைப்பைத் தோற்றுவித்தார். பேச்சுகள், வகுப்புகள், கலந்துரையாடல்கள் என்பன மூலம் இளைஞர்களைத் திரட்டும் பணி முன்னெடுக்கப்பட்டது. இது பற்றி குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கும் தகவல்கள் கிடைத்தன. 1970 மார்ச் 16ஆம் திகதி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஜூல்கம பிரதேசத்தில் வைத்து

பொலிஸாரினால் ரோஹண விஜேவீர உட்பட 12 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ரோஹண விஜேவீர கையில் துப்பாக்கி ஒன்றுடன் கைது செய்யப்பட்டார். பாதாள உலகக் குழு ஒன்றை நடத்தியமை, அரசுக்கெதிரான சதி, ஆயுதங்கொண்டு அரசாங்கத்தை வீழ்த்த சதி செய்தமை ஆகிய குற்றங்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். 1970 தேர்தலில் போது ரோஹண விஜேவீர சிறையிலேயே இருந்தார்.

ஆனால், ஜே.வி.பி அமைப்பும் அதன் இளைஞர்களும் ஸ்ரீமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணிக்கு ஆதரவளித்தனர். அவர்களது சோசலிஸத் திட்டத்தை தாம் ஆதரிப்பதாக அறிவித்தனர். ஸ்ரீமாவோ அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் ரோஹண விஜேவீரவும் ஏனைய 11 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், அன்று ஸ்ரீமாவுக்கோ, அவரது அரசாங்கத்துக்கோ தெரியவில்லை, இது மிகப்பெரும் இரத்தக்களரிக்கும் பல இளைஞர்களின் மரணத்துக்கும் வழிசமைக்கப்போகிறதென்று.

(அடுத்த வாரம் தொடரும்...)

- See more at: http://www.tamilmirror.lk/168086/%E0%AE%AE-%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%A9-%E0%AE%B0-%E0%AE%B8-%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%B5-#sthash.OOc0HzC0.dpuf
Link to comment
Share on other sites

ஜே.வி.பியின் 1971 ஆயுதப்புரட்சி
 
21-03-2016 09:57 AM
Comments - 0       Views - 8

article_1458534670-sxc.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 32)

ரோஹண விஜேவீரவின் விடுதலையும் ஜே.வி.பியும் வளர்ச்சியும்

ஸ்ரீமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம், ரோஹண விஜேவீரவையும் ஜனதா விமுக்தி பெரமுணவின் (ஜே.வி.பி) ஏனைய இளைஞர்கள் 12 பேரையும் விடுதலை செய்தது. இதனைத் தொடர்ந்து ஜே.வி.பியினர் தமது அரசியலில் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கியதுடன், தமது பத்திரிகையான 'ஜனதா விமுக்தி'யை (மக்கள் விடுதலை) பிரசுரிக்கவும் தொடங்கினர். ஸ்ரீமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம், தாம் வழங்கிய தேர்தல்கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஜே.வி.பி தொடர்ந்து அழுத்தம் தந்தது.

குறிப்பாக வங்கிகளை தேசியமயமாக்கல், பெருந்தோட்டங்களை அரசுடமையாக்கல், காணிச்சீர்திருத்தச் சட்டத்தைக் கொண்டுவருதல் மற்றும் ஏனைய சோசலிச திட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஜே.வி.பி. அழுத்தம் தந்தது. இலங்கையை அடக்குமுறையிலிருந்தும், சுரண்டலிலிருந்தும் மீட்டெடுப்பதுடன், இலங்கை இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மையைத் தீர்ப்பதும் தமது நோக்கம் என ஜே.வி.பி கூறியது. பிரித்தானிய காலனித்துவம் இந்திய விரிவாக்கம் முதலாளித்துவத்தின் கொடுங்கரங்கள் என்பவற்றை தாம் அழித்தொழிக்க விரும்புவதாக ஜே.வி.பி கோசமிட்டது.

ஆனால், ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினுடைய சோசலிச திட்டங்களை நிறைவேற்றத் தாம் ஆதரவளிப்பதாகவும் குறிப்பிட்டது. 1970 ஓகஸ்ட் 10ஆம் திகதி கூட்டமொன்றில் உரையாற்றிய ரோஹண விஜேவீர, 'இந்த அரசாங்கம் தான் வாக்குறுதியளித்த சோசலிசத் திட்டங்களை நிறைவேற்ற நாம் முழுமையான ஆதரவளிப்போம், ஆனால், அதனை அது செய்யத் தவறுமாயின், நாம் அதனைச் செய்வோம்' என்று பேசினார். ஜே.வி.பி கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தத் தொடங்கியது. குறிப்பாக பின்தங்கிய பிரதேச இளைஞர்கள் ஜே.வி.பியினரின் ஆவேசப் பேச்சுக்களின்பால் ஈர்க்கப்பட்டு அவ்வமைப்பில் சேரத் தொடங்கினர்.

குறிப்பாக, 25 வயதுக்குட்பட்ட வேலைவாய்ப்பற்றிருந்த இளைஞர்கள் பெருமளவில் ஜே.வி.பியுடன் இணைந்து கொண்டனர். வேலையின்மை, அதிகரித்துவந்த பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பன இந்த இளைஞர்களை ஜே.வி.பியின் 'சோசலிச சொர்க்கம்' பற்றிய பேச்சுக்கள் மீது ஈர்ப்படையச் செய்தது. பொதுவாக 'ஐந்து பேருரைகளை' கொண்ட நிகழ்ச்சித் திட்டம் ஜே.வி.பி.யினால் இளைஞர்களுக்கு நடத்தப்பட்டது. இதனால் நாளுக்கு நாள் ஜே.வி.பி பிரபலமடைந்து கொண்டு வந்தது.

இதேவேளை, பொலிஸ் உளவுப்பிரிவும் ஜே.வி.பி.யின் நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கியது. ரோஹண விஜேவீரவையும் ஏனைய 12 இளைஞர்களையும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் கைது செய்தது என்ற காரணமே, ஸ்ரீமாவோ அரசாங்கம் அவர்களை விடுதலை செய்யக் காரணம். ஆனால், தன்னுடைய அரசாங்கத்தையே ரோஹண விஜேவீர ஆட்டம் காணச் செய்வார் என்று அன்று ஸ்ரீமாவோவோ அவருடைய தோழர்களோ எண்ணியிருக்க வாய்ப்பில்லை!

1970லிருந்து 1971க்குள் ஜே.வி.பி. பெரும் வளர்ச்சியைக் கண்டிருந்தது. குறிப்பாக தென்னிலங்கையில் பெருமளவு இளைஞர்களைக் கொண்டதொரு சக்தியாக அது வளந்திருந்தது. நாட்டின் தென் மற்றும் தென்மேற்கு பிராந்தியங்களின் பின்தங்கிய பிரதேச இளைஞர்களிடையே 'கல்விப் பாசறை' என்ற பெயரில் மார்க்ஸிஸ-லெனினிஸ சித்தாந்தங்களும் அடிப்படைப் போர் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. இந்தக் காலப்பகுதியில் 'சே குவேரா க்ளிக்' என்றொரு குழு உருவாகியிருந்தது, இதனை புலனாய்வுத்துறையும் தீவிரமாகக் கண்காணித்து வந்தது.  1970களில்,

ஜே.வி.பி.யில் ஏறத்தாழ 10,000 இளைஞர்கள் அளவில் இணைந்திருந்தனர். எந்நேரமும் புரட்சி ஒன்றை ஏற்படுத்த ரோஹண விஜேவீர தலைமையில் ஜே.வி.பி தயாராக இருந்தது. ஜே.வி.பியினர், துப்பாக்கிகளையும் நாட்டு வெடிகுண்டுகளையும் வைத்திருந்ததுடன், சீருடை தரித்த படையணியாக உருவாகினர். அத்தோடு பல கொள்ளைகளிலும் இக்குழுவினர் ஈடுபட்டனர். ஒக்கம்பிட்டிய வங்கிக் கொள்ளை, அம்பலங்கொட வங்கிக்கொள்ளை, யோர்க் வீதி கொள்ளை என்பன குறிப்பிடத்தக்கவை.

இந்நிலையில், 1971ஆம் ஆண்டு பெப்ரவரி 27இல், ஜே.வி.பி. கொழும்பில் மிகப்பெரியதொரு பேரணியை நடத்தியிருந்தது. அங்கு கணிசமான அளவில் மக்கள் கலந்துகொண்டிருந்தனர். பேரணியின் முடிவில் ஹைட் பார்க் மூலையில் நடந்த கூட்டத்தில் பேசிய ரோஹண விஜேவீர, 'தீர்ப்பு நாளை அதிகார வர்க்கமே தீர்மானிக்கும் எப்போது அரசாங்கமானது எம்மைத் தாக்க நினைக்கிறதோ, அன்றுதான் புரட்சி வெடிக்கும்' என சூடு பறக்கப் பேசினார். இறுதியில் 'நாங்கள் கொல்லப்படலாம் ஆனால், ஓங்கி ஒலிக்கும் எங்கள் குரல் மௌனிக்காது' என்று முழங்கினார்.

ஜே.வி.பியின் 1971 ஆயுதப்புரட்சி

1971 மார்ச் 5ஆம் திகதி கேகாலை மாவட்டத்தின், நெலுந்தெனியவிலுள்ள ஜே.வி.பியின் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில் வெடிவிபத்தொன்று நடைபெற்றது. அதில் 5 ஜே.வி.பி உறுப்பினர்கள் பலியானார்கள். அங்கு சென்ற பொலிஸாரால் பெருமளவு நாட்டு வெடிகுண்டுகள் கைப்பெற்றப்பட்டன. 1971 மார்ச் 13ஆம் திகதி பொலிஸ் விசேட படையொன்றினால் கைது செய்யப்பட்ட ரோஹண விஜேவீர, யாழ். காரைநகர் கடற்படை முகாமில் தடுத்துவைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மார்ச் 16ஆம் திகதி கூடிய அமைச்சரவை, அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு ஜே.வி.பி திட்டமிட்டிருக்கிறது என்று அறிவித்ததுடன், உடனடியாக அவசரகாலநிலையும் பிரகடனம் செய்யப்பட்டது. இதன் விளைவாக பொலிஸாருக்கும் ஆயுதப்படையினருக்கும் குழப்பம் விளைவிக்கும் எவரையும் கைதாணையின்றி கைது செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டது.

மார்ச் 17ஆம் திகதி மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் ஸ்ரீமாவோ அவசரகாலநிலைக்கு காரணம் 'சே குவேரா கிளிக்' என்று பிரபலமாக அறியப்பட்ட ஜே.வி.பியினர் அரசாங்கத்தைக் கவிழ்க்க திட்டமிட்டமிட்டிருப்பதே எனக்கூறி, அவர்கள் ஈடுபட்டிருந்த வன்முறைச் செயல்களையும் பட்டியலிட்டார். அத்தோடு 'ஒரு தாயாக, எல்லா பெற்றோர்களிடமும் நான் கேட்க விரும்புகிறேன், இப்படியொரு எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொள்ளவா நீங்கள் உங்கள் பிள்ளைகளை அன்போடும் அக்கறையோடும் பல தியாகங்களைச் செய்தும் வளர்த்தீர்கள்? நான் உங்களை தயவுகூர்ந்து கேட்டுக்கொள்கிறேன், உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகள் மீது அக்கறை கொள்ளுங்கள், அவர்கள் அனைவரையும் அழித்தொழிக்கும் வழியில் செல்லாதவாறு கண்காணியுங்கள்' என்று கேட்டுக்கொண்டார்.

ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்களில் ஜே.வி.பியினர் ஈடுபட்டுவந்த வேளையில், ஏப்ரல் 2ஆம் திகதி சந்தித்த ஜே.வி.பி தலைவர்கள் ஆயுதப் புரட்சியொன்றை முன்னெடுக்கத் திட்டமிட்டு, அதன் ஆரம்பமாக ஏப்ரல் 5ஆம் திகதி நாட்டின் பலபகுதிகளிலுமுள்ள பொலிஸ் நிலையங்களைத் தாக்க தீர்மானித்தார்கள். ஏப்ரல் 5ஆம் திகதி அதிகாலை 5.20க்கு வெல்லவாய பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டதிலிருந்து, ஜே.வி.பியின் 1971ஆம் ஆண்டு ஆயுதப்புரட்சி உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது எனலாம். 92 பொலிஸ் நிலையங்கள் ஒரே நேரத்தில் தாக்கப்பட்டன. இதில் பல பொலிஸ் நிலையங்களிலிருந்து தந்திரோபாய நடவடிக்கையாக பொலிஸார் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 10ஆம் திகதியளவில் தென்மாகாணத்தின் பல பகுதிகள் ஜே.வி.பியின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தது.

ஜே.வி.பியினரால் இத்தகைய அளவிலானதொரு ஆயுதப் புரட்சி நடத்தப்படும் என அரசாங்கமோ, புலனாய்வுத்துறையோ ஒரு போதும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஸ்ரீமாவோ அரசாங்கம் கதிகலங்கிப்போய் இருந்தது. அவரின் ஆளும் கூட்டணியின் இடதுசாரித் தோழர்கள்கூட இதனை எதிர்பார்த்திருக்கவில்லை.

ஆரம்பத்தில் அரசாங்கம் பின்வாங்கியிருந்ததால், உடனடி பதில் நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் இருந்தது. உடனடியாக முன்னாள் பொலிஸ்மா அதிபரான எஸ்.ஏ.திஸாநாயக்க பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டு, ஆயுதப் புரட்சியாளர்களுக்கெதிரான நடடிக்கையில் இணைப்பாளராக இயங்கத்தொடங்கினார். இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் டி.எஸ்.ஆர்ட்டிகல தலைமையில், அலரி மாளிகை உள்ளிட்ட கொழும்பின் முக்கிய ஸ்தலங்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதுடன், பதில் நடவடிக்கையும் ஆரம்பமானது. ஸ்ரீமாவோ தலைமையிலான அரசாங்கம் உடனடியாக வெளிநாடுகளின் உதவியைக் கோரியது. இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி உடனடியாக இராணுவ உதவி வழங்கச் சம்மதித்தார்.

அன்று கிழக்கு பாகிஸ்தான் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. இந்திய வான்பரப்பின் மேலாக பாகிஸ்தானிய விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டிருந்ததால், இலங்கைதான் மேற்கு மற்றும் கிழக்கு பாகிஸ்தானுக்கிடையே ஆகாயப் போக்குவரத்துக்கான மையப்பாதையாக இருந்தது. இந்த நன்றிக்கடன் கருதி அன்றைய பாகிஸ்தான் ஆட்சியாளர் யஹியா கான் உடனடியாக சில இராணுவ உதவிகளைச் செய்தார். பாகிஸ்தானும் இந்தியாவும் மட்டுமல்லாது ரஷ்யாவும் இராணுவ ரீதியாக உதவிகளை உடனடியாகச் செய்தது.

1971ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நீடித்த ஜே.வி.பியனரின் ஆயுதப் புரட்சி, பல்லாயிரம் இளைஞர்களின் மரணத்துடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. உத்தியோகபூர்வமாக ஏறத்தாழ 1,200 பேர் உயிரிழந்ததாகச் சொல்லப்பட்டாலும் ஏறத்தாழ 5,000 பேர் இந்த இரண்டரை மாதகாலத்துக்குள் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால், இதன் பின்னரும் அவசரகால நிலை நீடித்தது, நாடு முழுக்க ஜே.வி.பியை வேரறுக்கும் பணி அரசாங்கத்தினால் முடுக்கிவிடப்பட்டது. பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர், பலர் கொல்லப்பட்டனர். ஆனால் அரசாங்கம் இதனையெல்லாம் மறுத்தது.

தமிழர்களின் நிலை

இலங்கையில் அன்றிருந்த இனப்பிரச்சினை பற்றி ஜே.வி.பி பேசவில்லை. இனப்பிரச்சினை பற்றி அதற்கு எவ்விதமான அக்கறையும் இருக்கவில்லை. மாறாக அது, வர்க்கப் பிரச்சினை பற்றி மட்டுமே பேசியது. அதிலும் குறிப்பாக சிங்கள இளைஞர்களே அதன் குறியாக இருந்தது. சிங்கள இளைஞர்களின் மார்க்ஸிஸ-லெனினிஸ புரட்சி அமைப்பாகவே ஜே.வி.பி இருந்தது. ஆனால், ஜே.வி.பியின் ஆயுதப் புரட்சியினால் தமிழ் மக்கள் கண்ட பாதிப்பு அதிகம். அன்று முன்னணி தொழில் முயற்சியாளர்களாக நிறைய தமிழர்கள் இருந்தார்கள். கொழும்பில் பல வணிக நிறுவனங்களும் வர்த்தக ஸ்தாபனங்களும் தமிழர்களால் நடத்தப்பட்டு வந்தன. ஜே.வி.பியினால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையின் விளைவாக இந்த வணிக, வர்த்தக நிறுவனங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்தன. மக்கள் புரட்சி என்றும் வர்க்கப் புரட்சி என்றும் ஜே.வி.பினரால் 1971ஆம் ஆண்டு ஆயுதப் புரட்சி கொண்டாடப்பட்டாலும் அது சிங்கள இளைஞர்களின் புரட்சியாக இருந்ததேயன்றி, மக்கள் புரட்சியாகவோ அல்லது வர்க்கப் புரட்சியாகவோ கூட அது இருக்கவில்லை என்பதுதான் நிதர்சனம். ஜே.வி.பி.யின் புரட்சி பற்றி குறிப்பிடும் கே.எம்.டி.சில்வாவும், ஹொவர்ட் றிகிங்ஸூம் 'ஆயுதப்புரட்சியானது தோல்வி கண்டமைக்கு அது மக்களாதரவைப் பெறமையே காரணமாகும். புரட்சியாளர்கள் சரியானதொரு மாற்று அரசியல் திட்டத்தை மக்கள் முன் வைக்கவில்லை' என்று குறிப்பிடுகிறார்கள்.

ஜே.வி.பியின் 1971ஆம் ஆண்டு ஆயுதப் புரட்சி இன்னொரு விடயத்தை உணர்த்துவதிலும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நாட்டில் முதன் முதலில் ஆயுதம் ஏந்தி அரசைக் கவிழ்க்கப் போராடியவர்கள் சிங்கள இளைஞர்கள். பௌத்தம் போதிக்கும் அஹிம்சைத் தேசத்தில், ஆயுதக் கலாசாரத்தை தமிழ் இளைஞர்களே அறிமுகப்படுத்தினார்கள் என்ற போலி இனவெறி இதிகாசங்கள் பரப்பப்பட்டுக்கொண்டிருக்கும் காலத்தில், வரலாற்றின் உண்மையான பக்கங்களை ஞாபகப்படுத்துதல் அவசியமாகிறது.

(அடுத்தவாரம் தொடரும்...)

- See more at: http://www.tamilmirror.lk/168518/%E0%AE%9C-%E0%AE%B5-%E0%AE%AA-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%9F-%E0%AE%9A-#sthash.aHupmfUf.dpuf
Link to comment
Share on other sites

 
ஸ்ரீமாவின் ஆட்சியில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட ஜே.வி.பியின் ஆயுதப் புரட்சி
 
 

article_1459142461-Old.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 33)

ஸ்ரீமாவோ அரசாங்கம், இராணுவத்தின் இரும்புக்கரம் கொண்டு, சர்வதேச நாடுகளின் உதவியுடன் ஜே.வி.பியின் ஆயுதப் புரட்சியை முடிவுக்குக் கொண்டுவந்ததது. ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் உயிரிழந்திருந்தார்கள். ஏறத்தாழ 18,000 இளைஞர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். 1971 ஜூலையில் 14,000 வழக்குகளை வகைப்படுத்தவும் விசாரிக்கவுமென விசேட விசாரணைப் பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்படுவதாக, பிரதமர் ஸ்ரீமாவோ அறிவித்தார். இராணுவத்தின் வன்முறைகளுக்கெதிராகக் குரல்கள் எழுந்தபோது, இடதுசாரி மாக்ஸிஸத் தலைவர்களான கலாநிதி.என்.எம்.பெரேரா (நிதி அமைச்சர்), கலாநிதி.கொல்வின் ஆர்.டி.சில்வா (பெருந்தோட்ட மற்றும் அரசியலமைப்பு அமைச்சர்) ஆகியோர் இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்தினார்கள். கலாநிதி.என்.எம்.பெரேரா 'சில ஆயிரம் இளைஞர்கள் எமது நாட்டை பிணைக்கைதியாகப் பிடித்து வைத்திருக்க அனுமதிக்க முடியாது' என்றார்.

1972 ஏப்ரலில், அரசாங்கமானது,ஆயுதப் புரட்சியில் ஈடுபட்டவர்களுக்கெதிரான நீதி நடவடிக்கைகள் எடுப்பதற்காக குற்றவியல் நீதி ஆணைக்குழு ஒன்றை ஸ்தாபிக்கும் நோக்குடன் குற்றவியல் நீதி ஆணைக்குழு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. நாடாளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதிகள் சபையில் 109 வாக்குகள் ஆதரவாகும், 24 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டு குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. ஆளும் ஐக்கிய முன்னணியின் அங்கத்துவக் கட்சியிலொன்றான கம்யூனிஸ்ட் கட்சியின் 4 உறுப்பினர்கள் (எஸ்.ஏ.விக்கிரமசிங்க, சரத் முத்தேட்துவகம, ஏலியன் நாணயக்கார, எம்.ஜி.மென்டிஸ்) ஆகியோர் இந்த சட்டமூலத்தை எதிர்த்து வாக்களித்திருந்தனர்.

இதன் விளைவாக, ஐக்கிய முன்னணியிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சி விலக்கப்பட்டது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அமைச்சராக இருந்த பீட்டர் கெனமன், வாக்களிப்பு நடந்த போது நாட்டில் இருக்கவில்லை. அவர் நாடு திரும்பியதும் தொடர்ந்து அமைச்சராகப் பதவி வகித்தார், அதுபோலவே கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரதி அமைச்சராக இருந்த பி.வை.துடாவ, அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்ததுடன், தொடர்ந்தும் பிரதி அமைச்சராக இருந்தார். 1972 டிசம்பரில், மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சி ஐக்கிய முன்னணியில் சேர்த்தக்கொள்ளப்பட்டது.

1972இல், குற்றவியல் நீதி ஆணைக்குழு எட்டு வருடகாலத்துக்கு வலுவுள்ளதாகவும் (பின்னர் ஒரு ஐந்து வருட காலத்துக்கு நீட்டிப்பு செய்யக்கூடியதாகவும்) ஸ்தாபிக்கப்பட்டது. ஆயுதப்புரட்சிசார்ந்த குற்றங்கள் மட்டுமல்லாது, பெரியளவிலான நாணயம்சார் குற்றங்கள் மற்றும் பரந்தளவிலான சொத்து அழிப்புக் குற்றங்கள் ஆகியவற்றையும் விசாரித்து, நீதி செய்யும் அதிகாரம் கொண்டிருந்தது. ஆணைக்குழுவானது ஒருவரைக் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்குமாயின், அவரைத் தண்டிக்கும் அதிகாரம் கொண்டிருந்தது.

ஆனால் ஆணைக்குழுவானது ஒருவரை குற்றமற்றவர் என்று தீர்ப்பளிக்குமாயின் அவரை விடுதலை செய்யும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு இருக்கவில்லை. இதனால் அத்தகைய தீர்ப்புக்குப் பின்னும் அத்தகைய நபரைத் தடுப்பில் வைக்கக்கூடியதாக இருந்தது. அதுபோலவே சான்றுச் சட்டம் வழங்கிய சில சட்டப் பாதுகாப்புக்களையும் இது தளர்த்தியது. உதாரணமாக சித்திரவதையினூடாகப் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலச் சான்றை அனுமதிக்கக்கூடிய அதிகாரத்தை வழங்கியது.

ஏறத்தாழ 18,000 இளைஞர்கள், சிறைகளில் அடைக்கப்பட்டாலும் ஏறத்தாழ 16,000 பேர் விடுதலைசெய்யப்பட்டார்கள், 2,919 பேருக்கு எதிராக குற்றவியல் நீதி ஆணைக்குழுவில், அரசாங்கத்தைக் கவிழ்க்க சூழ்ச்சி செய்தல், போரில் ஈடுபட சூழ்ச்சி செய்தல் மற்றும் மகாராணியாருக்கு எதிராக போர் செய்தல் ஆகிய குற்றங்கள் சாட்டப்பட்டன. 2,506 பேர் குற்றங்களை ஒப்புக்கொண்டார்கள்.

அவர்களில் ஆயுதப்புரட்சியில் நேரடியாகப் பெரும்பங்கு வகிக்காத பெரும்பான்மையானவர்கள், இரண்டுவருட ஒத்திவைக்கப்பட்ட தண்டனையுடன் விடுதலை செய்யப்பட்டார்கள். குற்றவியல் நீதி ஆணைக்குழு முன்பதான விசாரணைகள் 1972 ஜூன் 12ஆம் திகதி பிரதம நீதியரசர் எச்.என்.ஜி.பெர்ணான்டோ, நீதியரசர் ஏ.ஸி. அலஸ், நீதியரசர் வி.ரி. தாமோதரம், நீதியரசர் எச். தெரகொட, நீதியரசர் ரி.டபிள்யூ. ராஜரட்ணம் ஆகியோர் முன்னிலையில் ஆரம்பமாகின.

ஜே.வி.பியின் ஆயுதப் புரட்சி தொடர்பில் ரோஹண விஜேவீர, லயனல் போபகே, சுனந்த தேசப்ரிய, விக்டர் ஐவன், எஸ்.டி. பண்டாரநாயக்க (ஸ்ரீமாவோவின் உறவினர்) உள்ளிட்ட 41 பேருக்கெதிரான வழக்கு முக்கியம் பெற்றது. இவர்களே 1971ஆம் ஆண்டு ஆயுதப் புரட்சியின் காரணகர்த்தாக்களாகக் கருதப்பட்டனர். இதில் 32 பேர் குற்றவியல் நீதி ஆணைக்குழுவினால் குற்றவாளிகளாகக் காணப்பட்டார்கள். ரோஹண விஜேவீரவுக்;கு, முதலில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு, பின்னர் அது 20 வருட சிறைத் தண்டனையாக திருத்தப்பட்டது. அரசாங்கம் முன்னெடுத்த இராணுவ மற்றும் நீதி நடவடிக்கைகளின் பின்னர், ஜே.வி.பியின் இன்னொரு ஆயுதப் புரட்சிக்கான வாய்ப்பு இல்லை என்றே கருதப்பட்டது. ஆனால், ஸ்ரீமாவோ அரசாங்கம் விட்ட அதே பிழையை அடுத்து வந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும் விட்டதன் விளைவாக, இலங்கை பிற்காலத்தில் மீண்டும் ஒரு ஜே.வி.பியின் ஆயுதப் புரட்சியை எதிர்கொள்ள வேண்டி வந்தது.

செனட் சபை இல்லாதொழிக்கப்பட்டது

பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் நாடாளுமன்ற முறையிலேயே, இலங்கையில் சோல்பரி அரசியல் யாப்பின் கீழ் இலங்கையின் நாடாளுமன்றம் இரு அவைகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்ட மக்கள் பிரதிநிதிகள் சபை கீழவையாகவும் நியமன உறுப்பினர்களைக் கொண்ட செனட் சபை மேலவையாகவும் தொழிற்பட்டது. நடைமுறையில் செனட் சபையானது கீழவையின் 'இறப்பர் முத்திரையாக' செயற்படுகிறது என்ற விமர்சனம் வெஸ்ட்மினிஸ்டர் மாதிரியிலான செனட் சபைகள் தொடர்பில் பரவலாக அரசறிவியலாளர்களால் முன்வைக்கப்படுகிறது.

இது ஓரளவுக்கு உண்மையும் கூட. அமெரிக்காவின் செனட்டர்கள் நேரடியாக மக்களால் தேர்தெடுக்கப்படுவதினாலும் அமெரிக்காவின் நிர்வாகத்துறையான ஜனாதிபதியைக் கட்டுப்படுத்தும் பல அதிகாரங்களைக் கொண்டிருப்பதனாலும் அமெரிக்க செனட் பலமானதொரு அமைப்பாகும் ஆனால், வெஸ்ட்மினிஸ்டர் செனட் அவ்வகைப் பலம் பொருந்தியதொன்றல்ல.

புலமையாளர்களையும் துறைசார் விற்பன்னர்களையும் பிரதிநிதிகள் சபையில் பிரதிநிதித்துவம் இல்லாத அல்லது குறைந்த இனக்கூட்டத்தைச் சேர்ந்தவர்களையும் செனட் சபை நியமன உறுப்பினர்களாகக் கொண்டிருப்பினும் அதன் அதிகாரங்கள் மட்டுப்பட்டதாகவே இருந்தன. 30 உறுப்பினர்களைக் கொண்டிருந்த இலங்கை நாடாளுமன்றத்தின் செனட் சபையில், 15 உறுப்பினர்கள் கீழவையினால் விகிதாசார அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர். மீதி 15 பேர், பிரதமரின் மதியுரையின் பேரில் ஆளுநரால் நியமிக்கப்பட்டனர்.

குறைந்தது 35 வயதுடையவர்களாக செனட்டர்கள் இருக்க வேண்டும். செனட்டர்கள் ஆறு வருடங்கள் பதவிக்காலத்தைக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு 2 வருடமும் மூன்றிலொரு பங்கினர் பதவிதுறந்து புதிய நியமனம் நடைபெறும். பதவி துறந்தவர்கள் மீண்டும் புதிதாக நியமிக்கப்பட முடியும்.

1971இல், இலங்கை நாடாளுமன்றத்தின் செனட் சபையில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சி சார்பானவர்களாகவே இருந்தார்கள். செனட் சபை ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதிக்கம் செனட் சபையில் இருந்தது. இது கீழவையில் பெரும்பான்மையைக் கொண்ட ஸ்ரீமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியது.

எனவே செனட் சபையை இல்லாதொழிக்க ஸ்ரீமாவோ அரசாங்கம் தீர்மானித்தது. குறிப்பாக ஸ்ரீமாவின் இடதுசாரித் தோழர்கள் இதில் அக்கறையோடு செயற்பட்டனர். செனட் இல்லாதொழிப்புக்கான திருத்தச் சட்டமூலமானது, அடுத்தடுத்து இரண்டு நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களில் கீழவையில் நிறைவேற்றப்பட்டதன்படி, 1971 ஒக்டோபர் 2ஆம் திகதி முடியின் அனுமதியுடன் சட்டமானது. அத்தோடு இலங்கையில் ஏறத்தாழ 24 வருடங்கள் வலுவிலிருந்து செனட் சபை இல்லாதொழிக்கப்பட்டது.

சீ.குமாரசுவாமி, சேர். கந்தையா வைத்தியநாதன், சேர்.சிற்றம்பலம் ஏப்ரஹாம் கார்டினர், எஸ்.ஆர்.கனகநாயகம், முத்தையா மாணிக்கம், எஸ்.நடராஜா, சோமசுந்தரம் நடேசன், சுப்பையா நடேசன், பொன்னம்பலம் நாகலிங்கம், டொக்டர்.ஈ.எம்.வி.நாகநாதன், சங்கரப்பிள்ளை பரராஜசிங்கம், முதலியார் ஏ.பி.ராஜேந்திரா, பெரி சுந்தரம், முருகேசன் திருச்செல்வம் போன்ற தமிழர்களும், சேர். ரஸீக் பரீட், ஐ.ஏ.காதர், சேர்.மொஹமட் மகன் மார்க்கார், மசூர் மொளலானா போன்ற முஸ்லிம்களும் செனட்டகளாக இருந்திருக்கிறார்கள். இதைவிடவும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க முதல் முறையாக பிரதமரானபோது, அவர் செனட்டராக நியமிக்கப்பட்டே பிரதமரானார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பிரிவி கவுன்ஸிலுக்கு முறையிடும் உரிமை இல்லாதொழிக்கப்பட்டது

பிரிவி கவுன்ஸில் என்பது பிரித்தானியாவின் மீயுயர் நீதிமன்றமாகும். இலங்கை ஒரு டொமினியன் நாடாக இருந்ததனால், சட்டப் பிரபுக்களைக் கொண்ட பிரித்தானியாவின் பிரிவி கவுன்ஸிலுக்கு மேன்முறையீடு செய்யும் உரிமை, சோல்பரி அரசியல் யாப்பின் கீழ் இலங்கையருக்கு வழங்கப்பட்டிருந்தது. இலங்கையின் பல முக்கிய வழக்குகளும் பிரிவி கவுன்ஸிலுக்கு மேன்முறையீடு செய்யப்பட்டன. ஸ்ரீPமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கமானது, 1971ஆம் ஆண்டின் 44ஆம் இலக்கச் சட்டத்தினூடாக ப்ரிவி கவுன்ஸிலுக்கு மேன்முறையீடு செய்யும் முறையை இல்லாதொழித்தது. அதற்குப்பதிலான இலங்கையின் மீயுயர் நீதிமன்றமாக மேன்முறையீட்டு நீதிமன்றம் 1971 நவம்பர் 15ம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது.

பிரிவி கவுன்ஸிலுக்கு மேன்முறையீடு செய்யும் உரிமையை இல்லாதொழித்தமைக்கு கோடீஸ்வரன் வழக்கும் ஒரு முக்கிய காரணம் என்று சில அறிஞர்கள் கருத்துரைத்திருக்கிறார்கள். கோடீஸ்வரன் வழக்கில், பிரிவி கவுன்ஸில் அளித்த தீர்ப்பில் அரசாங்க சேவையாளளொருவன் தனது சம்பளத்தொகைக்காக, முடிக்கெதிராக வழக்குத்தாக்கல் செய்ய முடியாது என்ற இலங்கை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிரான கோடீஸ்வரனின் மேன்முறையீடு ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், அரசியலமைப்பு விடயம் பற்றி உயர்நீதிமன்றம் ஆராய வேண்டும் எனக் கூறப்பட்டது. இந்தத் தீர்ப்பு 1969இல் வழங்கப்பட்டது.

அப்போது டட்லி சேனநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சியில் இருந்தது. எந்த அரசியல் அமைப்பு சார்ந்த பிரச்சினையை இந்த வழக்கில் ஆராய்வது தேவையற்றது என உயர்நீதிமன்றம் கருதியதோ, அது ஆராயப்பட வேண்டும் என பிரிவி கவுன்ஸில் தீர்ப்பளித்தது.

இப்போது அதனை மீண்டும் விசாரித்து, 'தனிச்சிங்கள' சட்டம் அரசியலமைப்பின் 29(2) சரத்துடன் பொருந்திப்போகிறதா, அல்லதா அதற்கு முரணாக அமைகிறதா என்று ஆராய வேண்டிய கடப்பாடு உயர்நீதிமன்றத்துக்கு ஏற்பட்டது. சட்டவியல் நிபுணர்களின் கருத்துப்படி, அன்று இந்த அரசியலமைப்பு விடயம் பற்றி உயர்நீதிமன்றம் எந்த நிலைப்பாட்டை எடுத்திருப்பினும் அது மீண்டும் பிரிவி கவுன்ஸிலுக்கு மேன்முறையீடு செய்யப்பட்டால் 'தனிச்சிங்கள' சட்டம் அரசியலமைப்பின் 29(2) சரத்துக்கு முரணானது ஆதலால், அச்சட்டம் வலுவற்றது என்ற தீர்ப்பே ப்ரிவி கவுன்ஸிலால் வழங்கப்பட்டிருக்கும்.

இது நடந்தால் 'தனிச்சிங்கள' சட்டம் இல்லாதொழியும் நிலை ஏற்படும். இந்நிலையில், மீண்டும் இவ்வழக்கை உயர்நீதிமன்றம் விசாரணைக்கெடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. பிரிவி கவுன்ஸிலுக்கு மேன்முறையீடு செய்யும் உரிமை உள்ளவரைதான் இதுபோன்ற சவால்கள் ஏற்படும் ஆகவே, அடுத்ததாக ஆட்சிக்கு வந்த ஸ்ரீமாவோ அரசாங்கம் அவ்வுரிமையை ஒட்டுமொத்தமாக இல்லாதொழித்தது. இனியும் எவ்வகையிலும் நாம் இங்கிலாந்துக்கு அடிமையாக இருக்கக்கூடாது என்ற 'தேசியவாத' கருத்தை முன்வைத்து இக்கைங்கரியத்தை ஸ்ரீமாவோ அரசாங்கம் செய்து முடித்தது.

ஆனால், இத்தோடு ஸ்ரீமாவோ அரசாங்கம் நின்று விடவில்லை. புதியதொரு அரசியலமைப்பை உருவாக்குவோம் என்ற தன்னுடைய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றத் தலைப்பட்டது. தமிழ் மக்கள் தலையின் மெத்தப்பெரியதொரு இடி விழக் காத்திருந்தது.

(அடுத்த வாரம் தொடரும்...)

- See more at: http://www.tamilmirror.lk/168931/%E0%AE%B8-%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%9C-%E0%AE%B5-%E0%AE%AA-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%9F-%E0%AE%9A-#sthash.laAUpI1g.dpuf
Link to comment
Share on other sites

இலங்கைக்கென்றொரு புதிய அரசியல் யாப்பு
 
04-04-2016 10:10 AM
Comments - 0       Views - 7

article_1459745058-bn.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 34)

பின்புலம்

1947ஆம் ஆண்டின் சுதந்திர அரசியல்யாப்பு, (சோல்பரி அரசியல்யாப்பு) இலங்கைக்கு டொமினியன் அந்தஸ்த்தை வழங்கியது. சோல்பரி யாப்பின் கீழ், பிரித்தானிய முடியினால், ஆளுநர் நியமிக்கப்பட்டார். (நடைமுறையில் பிரதமரின் விதந்துரைப்பின்பேரில் இது நடந்தது) அத்துடன், நிர்வாகத்துறையின் தலைவராக, பிரித்தானிய முடியே அமைந்தது. இலங்கைக்கென சட்டங்களியற்ற வெஸ்மினிஸ்டர் பாணியிலான நாடாளுமன்றமொன்று ஸ்தாபிக்கப்பட்டது. பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட்டர்கள், அரச உயரதிகாரிகள் உட்பட்ட அனைவரும் பிரித்தானிய முடிக்கு விசுவாசமாக இருப்பதாக சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டியதாகவிருந்தது.

டொமினியன் அந்தஸ்துள்ள (பிரித்தானிய முடிக்கு கீழான) நாடாக இருந்த இலங்கையை குடியரசாக மாற்றும் முயற்சிகள், 1970களுக்கு முன்பதாக 1956இல் அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்கவினால் முன்னெடுக்கப்பட்டன. இலங்கையை பிரித்தானிய பொதுநலவாயத்தில் அங்கம் வகிக்கின்ற ஒரு குடியரசாகப் பிரகடனப்படுத்தத்தக்கதாக ஓர் அரசியல்யாப்பை உருவாக்க, நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டன. அத்தோடு, நாடாளுமன்ற முறையிலான அரசாங்கம் தொடரும் எனவும் நாட்டின் அரசியலமைப்பு ரீதியிலான தலைவராக ஜனாதிபதி இருப்பார் எனவும் ஜனாதிபதியும் உப ஜனாதிபதியும் நாடாளுமன்றத்தால் தெரிவு செய்யப்படுவர் எனவும் அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பில் அங்கிகரிக்கப்படும் எனவும் இணங்கப்பட்டது. அத்தோடு, பிரித்தானிய பிரிவி கவுன்ஸலுக்கு

மேன்முறையீடு செய்யும் உரிமையை இல்லாதொழிப்பதுடன், இலங்கையில் உச்ச நீதித்துறை நிறுவனமாக உயர் நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் எனவும் அது மேன்முறையீடுகளையும் அரசியல்யாப்பு விடயங்களையும் விசாரிக்கும் எனவும் கூறப்பட்டது.

ஆனால், பிரித்தானிய முடியின் இறைமையை இல்லாதொழித்து, 1947இன் சோல்பரி அரசியல்யாப்பை இல்லாதொழித்து, புதியதொரு அரசியல்யாப்பை உருவாக்கும் அதிகாரம் 1947இன் சோல்பரி யாப்பின் கீழ் அமைந்த நாடாளுமன்றத்துக்கு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது. குறிப்பாக, இப்ராலெப்பே எதிர் முடி மற்றும் இலஞ்ச ஆணையாளர் எதிர் ரணசிங்க ஆகிய வழக்குகளில் தீர்ப்பளித்த பிரித்தானிய பிரிவி கவுன்ஸில், முறையே சோல்பரி யாப்பின் 29ஆம் சரத்து அடிப்படையானது எனவும், 29(2) சரத்து மாற்றப்பட முடியாதது எனவும் குறிப்பிட்டிருந்தது.

ஆகவே, நாடாளுமன்றத்தினூடாக புதியதொரு அரசியல் யாப்பொன்று உருவாக்கப்பட வேண்டுமென்றால், அது 29(2) சரத்தைக் கொண்டிருக்க வேண்டியதாகவே இருந்தது. 29(2)(உ) சரத்தானது சிறுபான்மையினருக்கான பாதுகாப்பை வழங்கியிருந்தது. ஏனையவர்களுக்கு இல்லாத ஒரு முன்னுரிமையை அல்லது நன்மையை ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு அல்லது மதத்துக்கு மட்டும் வழங்குவதை இந்த சரத்து தடை செய்தது. ஆகவே, 29ஆம் சரத்து இல்லாதவாறு புதியதொரு அரசியல்யாப்பை உருவாக்கும் வழிவகைகள் பற்றி சிந்திக்க வேண்டியிருந்தது.

அன்றைய காலத்தில் காலனித்துவத்திலிருந்து விடுதலைபெற்ற நாடுகள், உண்ணாட்டிலிருந்து உதித்த சுயமான அரசியல் யாப்புக்களை (autonomous constitution) உருவாக்கத்தொடங்கின. இத்தகைய உள்நாட்டிலே உதிக்கின்ற தன்னாட்சி, தன்னிறைவு கொண்ட அரசியல்யாப்புக்கள் சட்டத்தின் தொடர்ச்சியில் ஒரு தடையை உண்டாக்கிறது. இந்த சிந்தாந்தத்தின் மூலத்தை முன்னிறுத்தியவர்களுள் பேராசிரியர்.கே.ஸி.வெயார் முக்கியம் வாய்ந்தவர்.

அதாவது, ஏலவேயுள்ள காலனித்துவ அரசியல்யாப்பிலே புதியதொரு அரசியலமைப்பை உருவாக்குதற்கான வழிமுறைகளைப் பின்பற்றாது, அதற்கு வெளியிலாக உள்நாட்டிலிருந்து பிறக்கும் மக்களின் அதிகாரத்திலிருந்து புதியதொரு அரசியலமைப்பை ஸ்தாபிக்கும் முறையாகும்.

தனியாக, சட்டரீதியில் மட்டும் பார்த்தால், இவ்வகையானதொரு அரசியலமைப்பை உருவாக்குதல் சட்டவிரோதனமானதாகும். அதனால்தான் இன்றுவரையும் இலங்கையினுடைய அரசியல்யாப்பு சட்டத்துக்குப் புறம்பானது என்ற வாதம் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. அதாவது 1972ஆம் ஆண்டு அரசியல்யாப்பு, 1947ஆம் ஆண்டு அரசியல்யாப்புக்கு முரணாக உருவாக்கப்பட்டமையினால், அது சட்டவலுவற்றது என்ற வாதமும், அதனைத்தொடர்ந்து வந்த 1978ஆம் ஆண்டு அரசியல்யாப்பும் சட்டவலுவற்றது என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

1972ஆம் ஆண்டின் அரசியலமைப்பை நியாயப்படுத்துவபர்கள், autonomous constitution (உண்ணாட்டிலிருந்து உதித்த சுயமான அரசியலமைப்பு) என்ற சித்தாந்தத்தை முன்வைத்து அதனை நியாயப்படுத்துகிறார்கள். இத்தகைய நடவடிக்கையை கலாநிதி கொல்வின்.ஆர்.டீ.சில்வா 'ஒரு சட்டப் புரட்சி' என்று வர்ணித்தார். இது பற்றி சட்டவியல் ரீதியில் அலசுவதற்கு நிறைய உண்டெனினும், இக்கட்டுரைத்தொடருக்கு அது பெரிதும் அவசியம் அற்றது என்பதால் அது தவிர்க்கப்படுகிறது.

1965ல் பிரதமர் டட்லி சேனநாயக்க அரசியலமைப்பு மறுசீரமைப்பு முயற்சிகளை முன்னெடுத்தார் இதற்கான இணைந்த குழுவில் பங்கேற்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன மறுத்துவிட்டன. அரசியலமைப்பு மறுசீரமைப்புக்குப் பதிலாக, புதியதொரு உண்ணாட்டிலிருந்து உதித்த சுயமான அரசியலமைப்பொன்றை உருவாக்குவதே இவர்களுடைய எண்ணமாக இருந்தது.

இந்த நிலைப்பாட்டுக்கமைய, 1970 தேர்தலில் ஐக்கிய முன்னணி என்ற கூட்டணியாக இணைந்த இம்மூன்று கட்சிகளும் தம்முடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் இறைமையுள்ள, சுதந்திரமான, அடிப்படை மனித உரிமைகளை அங்கிகரிக்கின்ற சோசலிஸ ஜனநாயக அரசொன்றை ஸ்தாபிப்பதற்கான புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கான மக்களாணையைக் கோரியதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பு அவையாக அமர்ந்து புதியதொரு அரசியலமைப்பொன்றை வரைந்து, ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தவதற்கான மக்களாணையையும் கோரியது.

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகள் ஆரம்பமாகின

1970ஆம் ஆண்டு தேர்தலில் பெரு வெற்றியொன்றை ஐக்கிய முன்னணி பெற்றுக்கொண்டதன் வாயிலாக, புதியதொரு அரசியலமைப்பை நாடாளுமன்றத்துக்குப் புறம்பாக அரசியலமைப்பு அவையாக அமர்ந்து உருவாக்குவதற்கான மக்களாணையையும் பெற்றுக்கொண்டனர். நாடாளுமன்றம் கூடியபோது சிம்மாசன உரையிலும் மக்களாணைக்கேற்ப நாடாளுமன்றத்துக்கு புறம்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பு அவையாக அமர்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது.

1970ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் திகதி பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, நாடாளுமன்றத்தின் கீழவை (மக்கள் பிரதிநிதிகள் சபை) உறுப்பினர்கள் யாவருக்கும் 19ஆம் திகதி நடைபெறத் திட்டமிட்டிருந்த அரசியலமைப்பு அவையாக இயங்குவது தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பது தொடர்பிலான கூட்டமொன்றுக்கு சமுகந்தருமாறு அழைப்புவிடுத்திருந்தார். குறித்த கூட்டமானது நாடாளுமன்றத்திலன்றி, நாடாளுமன்றத்துக்கு வெளியிலாக கொழும்பு றோயல் கல்லூரியின் 'நவரங்கஹலவில்' (புதிய மண்டபத்தில்) இடம்பெறவிருந்தது.

நாடாளுமன்றத்துக்கு வெளியே இக்கூட்டத்தைக் கூட்டியமையானது, சட்டத்தொடர்ச்சியில் ஒரு தடையை உருவாக்கும் விதமாக உண்ணாட்டிலிருந்து உதித்த சுயமான அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குதற்கான சமிக்ஞையாக அமைந்தது. அன்று அரசியலமைப்பு அமைச்சராக இருந்த கலாநிதி.கொல்வின்.ஆர்.டீ.சில்வா 'இது பழைய அஸ்திவாரத்தின் மேல், புதிய கட்டடத்தைக் கட்டும் முயற்சியல்ல' என்றும் குறிப்பிட்டார்.

1970ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் திகதியன்று பலத்த ஆரவாரத்துடன் நடந்த கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவமுள்ள சகல கட்சிகளும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்தக் கூட்டத்தின் பின்னர், நாடாளுமன்றத்துக்கு வெளியிலாக அரசியலமைப்பு அவையாக அமர்வதற்கான தீர்மானம் மீது, நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெற்றபோது அங்கு உரையாற்றிய பிரதமர் ஸ்ரீமாவோ புதிய அரசியலமைப்பானது எம்மை ஒரு தேசமாக பலப்படுத்தப்படவேண்டும். எம்முள் பல இனங்கள் உண்டு, பல மதங்கள் உண்டு. ஆனால், நாங்கள் ஒரு தேசமாவோம், ஒரு தேசமாகவே நாம் இயங்கவும் வேண்டும் என்றார்.

அன்றிலிருந்தே இலங்கையின் அரசியல் தலைவர்களுக்கு இலங்கையை 'ஒரு நாடாக அல்லாது' 'ஒரு தேசமாக' மீள மீளப் பிரகடனப்படுத்துவதில் அலாதிப்பிரியம் இருந்தது. இதற்குள் அரசியல் சூட்சுமங்கள் நிறைய உண்டு. அதைப்பற்றி பிறகு பார்ப்போம். அத்தீர்மானத்தின் மீது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்தன நாட்டிலுள்ள மக்களில் 50 சதவீதத்தினருக்கு குறைவானவர்களே ஐக்கிய முன்னணிக்கு வாக்களித்திருக்கிறார்கள். ஆகவே, அவர்களுக்கு இந்நாட்டு மக்களின் மக்களாணை உண்டு என்று சொல்லிக்கொள்ள முடியாது, ஆனாலும் நாடாளுமன்றத்தின் இரண்டு பக்கத்தவர்களும் இணங்கத்தக்க புதிய அரசியலமைப்பு ஒன்றை சட்டப் புரட்சி ஒன்றினூடாக செய்வதற்கு அவர் ஆதரவளிப்பதாகச் சொன்னார்.

தமிழ்த் தலைமைகளின் அபிப்ராயம்

சமஷ்டிக் கட்சி (இலங்கை தமிழரசுக் கட்சி) சார்பில், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வி.தர்மலிங்கம் உரையாற்றுகையில், 1956ஆம் ஆண்டிலிருந்து, தமிழ் மக்களுக்கு இன்னல்களை மட்டுமே தந்துகொண்டிருக்கும் இந்த அரசியல் யாப்பை மாற்றுவதற்கு தமிழ் மக்கள் தமக்குத் தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலிலும் மக்களாணை தந்திருக்கிறார்கள் என்றார். அவர், தமிழ் மக்களுக்கும் ஏற்புடையதான புதிய அரசியல்யாப்பொன்றை உருவாக்குவது பற்றியே எதிர்பார்த்தார். ஆனால், 1972ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த அரசியலமைப்பு, தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாது, சிங்கள-பௌத்தர் அல்லாத சகலரையும் இரண்டாம் நிலைக்குத்தள்ளத் தக்கதொன்றாகவே அமைந்தது என்பதே நிதர்சனம். சமஷ்டிக்கட்சியைச் சேர்ந்த

எஸ்.கதிரவேற்பிள்ளை உரையாற்றுகையில், தமது கட்சியானது நாட்டைப் பிரிப்பதை எதிர்ப்பதாகவும் ஒரு சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றார். நாடாளுமன்றத்தில் பேசிய

சா.ஜே.வே.செல்வநாயகம், ஜவஹர்லால் நேருவை மேற்கோள்காட்டி முரண்பாடான விடயங்கள் தொடர்பில், இணக்கப்பாட்டினை ஏற்படுத்துவதற்கான பொது அடிப்படைகளை அறியும் நிரந்தர உறுதிப்பாட்டுடன், அரசியலமைப்பு அவைக்குச் செல்ல வேண்டும் என்றார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் உரையாற்றிய வீ.ஆனந்தசங்கரி, தமிழ் காங்கிரஸ் புதிய அரசியலமைப்பொன்றை இயற்றும் இம்முயற்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்க விரும்பவில்லை எனவும் ஆனால், அரசாங்கம் நியாயமாக நடப்பதுடன், புதிய அரசியலமைப்பை ஏகமனதாக நிறைவேற்றும் வழியினை ஏற்படுத்த வேண்டும் எனவும் பேசினார்.

நாடாளுமன்றத்தில், அனைத்துக்கட்சிகளும் அரசியலமைப்பு அவையை அமைப்பதற்கு இணங்கியிருந்தது. 1970 ஜூலை 21ஆம் திகதி அரசியலமைப்பு அவையை உருவாக்குவதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றத்திலிருந்த எந்தவொரு தமிழ் கட்சியும் இதற்கான எதிர்ப்பைப் பதிவுசெய்யவில்லை.

தமிழ் தரப்பிலிருந்து முதல் எதிர்ப்பு 'அடங்காத் தமிழன்' சீ.சுந்தரலிங்கத்திடமிருந்து வந்தது. அரசியலமைப்பு அவை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கெதிரான தடையுத்தரவொன்றை வேண்டி சீ.சுந்தரலிங்கம், உயர்நீதிமன்றுக்கு மனுச்செய்தார். பிரதம நீதியரசர் எச்.என்.ஜீ.பெனான்டோ மற்றும் நீதியரசர் விஜேதிலக்க ஆகியோரைக் கொண்ட அமர்வின்முன் குறித்த மனு விசாரணைக்கு வந்தது. சட்டவிரோதமானதொரு காரியம் நிகழ்ந்தாலன்றி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடுவதை, அது எந்தப் பெயரின் கீழா இருப்பினும், தடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லை எனக்கூறிய உயர்நீதிமன்றம், 1971 பெப்ரவரி 13 உயர்நீதிமன்றம் சீ.சுந்தரலிங்கத்தினுடைய மனுவை நிராகரித்தது.

(அடுத்த வாரம் தொடரும்...)

- See more at: http://www.tamilmirror.lk/169419/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%AA-%E0%AE%AA-#sthash.etUM9ZEi.dpuf
Link to comment
Share on other sites

சிறுபான்மையினரைக் கருத்திற்கொள்ளாத அரசியலமைப்புப் பேரவை
 
11-04-2016 09:32 AM
Comments - 0       Views - 20

article_1460347665-ask.jpgதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 35)

என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

புதிய அரசியலமைப்பொன்றை ஸ்தாபிப்பதற்கான அரசியலமைப்புப் பேரவையை உருவாக்கியதில், தனக்கு தனிப்பட்ட சந்தோஷமொன்று இருப்பதாக, நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க கூறினார். இலங்கையை சுதந்திர சோசலிசக் குடியரசாக்கும், தன்னுடைய கணவரான மறைந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்கவின் கனவினை நிறைவேற்ற தனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளதை எண்ணி தான் மகிழ்வதாக தனது உரையில் குறிப்பிட்டார்.

புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படுவதற்கான முயற்சிகள் தொடங்கிய போது, அதனைப் பிரதான தமிழ்க் கட்சிகள் எதுவுமே எதிர்க்கவில்லை. மாறாக, அவை புதிய அரசியலமைப்பானது சமஷ்டி வகையிலானதொன்றாக இருக்க வேண்டும் என வேண்டின. இந்த நிலைப்பாடு இன்று வரை மாற்றமடையவில்லை என்பதை நாம் காணலாம்.

இன்றும் கூட புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்காக அரசியலமைப்புப் பேரவை உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், பிரதான தமிழ்க் கட்சிகள், அரசியலமைப்பு மாற்றத்தை நிராகரிக்கப்போவதில்லை. மாறாக, சமஷ்டி அரசியல் யாப்பொன்றையோ அல்லது குறைந்தபட்சம் தமிழர் பிரதேசங்களுக்கு கூடிய அதிகாரப் பகிர்வை அளிக்கத்தக்க அரசியல் யாப்பொன்றையே வேண்டுவர்.

ஆனால், அன்று 'அடங்காத் தமிழன்' சீ.சுந்தரலிங்கம், இந்தப் புதிய அரசியல் யாப்பு மாற்றத்தை ஆரம்பத்திலேயே எதிர்த்தற்கு முக்கிய காரணமொன்று உண்டு. சோல்பரி அரசியல் யாப்பின் 29(2)(உ) சரத்தானது, சிறுபான்மையினருக்குரிய பாதுகாப்பொன்றை வழங்கியிருந்தது. சோல்பரி அரசியல் யாப்பின் கீழான இந்தப் பாதுகாப்பு, எக்காலத்திலும் நீக்கப்பட முடியாததொன்றாக இருந்தது. ஆகவேதான் அன்று ஆட்சியிலிருந்த அரசாங்கம் நாடாளுமன்றத்துக்;கு வெளியிலாக, autochthonous constitution என்ற சித்தாந்தத்தின் வாயிலாக 'அரசியலமைப்பு புரட்சி' ஒன்றினூடாக புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க விளைந்தது.

இந்த சித்தாந்தத்தின் மூலம், நாடாளுமன்றத்துக்கு வெளியிலாக ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயலை நியாயப்படுத்தியவர், அன்றைய அரசியலமைப்பு அமைச்சரும், இலங்கையின் மிகச்சிறந்த சட்டத்தரணிகளில் ஒருவருமான கலாநிதி.கொல்வின்.ஆர்.டீ.சில்வா. அந்தக் காலத்தில் constituional autochthony என்ற பதத்தையும், அது சுட்டும் சித்தாந்தத்தையும் அவர் அதிகமாகப் பாவித்தார்.

அந்த சித்தாந்தத்துக்கு அப்பால் நின்று சிந்தித்தால், இது சட்ட விரோதமான ஒரு காரியமாகத் தெரியலாம். சோல்பரி அரசியல் யாப்பிலேயே அந்த யாப்பை திருத்துவதற்கோ, மாற்றுவதற்கோ ஒரு நடைமுறையிருந்தது, அதைப் பின்பற்றி புதியதொரு யாப்பை உருவாக்குவதே சட்டத்திற்கேற்பான முறை. ஆனால், அப்படிச் செய்யும்போது புதிய அரசியல் யாப்பிலும் சிறுபான்மையிருக்கு பாதுகாப்புதரும் 29(2)(உ) இடம்பெறும்.

ஏனெனில், அது மாற்றப்படவோ, நீக்கப்படவோ முடியாத ஒரு சரத்தாகிறது. 29ஆம் சரத்துக்கு முரணான சட்டமொன்று நிறைவேற்றப்படும் போது நீதித்துறைக்கு அச்சட்டத்தை மீளாய்வு செய்யும் அதிகாரம் இருந்தது. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டவாக்கத்துறையின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் செயல் என்று அன்றைய அரசியலமைப்பு அமைச்சர் கலாநிதி.கொல்வின்.ஆர்.டீ.சில்வா கருதினார்.

ஆகவே, சோல்பரி அரசியல்யாப்புக்கு முற்றுமுழுதாக வேறுபட்டதோர் அரசியல் யாப்பை ஸ்தாபிக்க, autochthonous constitution என்ற சித்தாந்தத்தின் வாயிலாக, நாடாளுமன்றத்துக்கு வெளியிலாக அரசியலமைப்புப் பேரவையொன்றினூடாக 'அரசியலமைப்புப் புரட்சியொன்றை' நடத்துவதுவதே அன்றைய அரசாங்கத்தின் எண்ணம். இதையே சட்டவிரோதமானது என சீ.சுந்தரலிங்கம் எதிர்த்தார். 29(2)(உ) நடைமுறையில் இருந்தபோதே அதற்கு முரணான 'தனிச்சிங்கள'சட்டம் இயற்றப்பட்டு, நிறைவேற்றப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், அதை இல்லாதொழித்தால் சிறுபான்மை மக்கள் இதைவிடப் பாரிய அடக்குமுறைக்கு ஆளாகக் கூடிய நிலை உருவாகலாம் என அவர் எண்ணியிருக்கலாம். ஆனால், பிரதான தமிழ்க் கட்சிகள், அரசாங்கமானது, தங்களுடைய முன்மொழிவுகளையும் கருத்திலெடுக்கக்கூடும் என எண்ணியிருக்கலாம். ஆனால், இத்தனை ஏமாற்றங்களுக்குப் பின்னும் அந்த நம்பிக்கையோடு அந்தத் தலைவர்கள் இருந்தமை நிச்சயம் ஆச்சரியமானதுதான்.

அரசியலமைப்பு பேரவையில்

ஐக்கிய முன்னணி அரசாங்கமானது, அரசியலமைப்புப் பேரவையின் கூட்டத்தை நாடாளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதிகள் சபையின் உத்தியோகபூர்வ கூட்டமொன்று அல்ல, மாறாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளின் கூட்டம் என்றே சொன்னது. அதனால்தான் அதனை நாடாளுமன்றத்துக்கு வெளியிலாக கொழும்பு றோயல் கல்லூரியின் 'நவரங்கஹல மண்டபத்தில்' கூட்டியது. நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவமுள்ள எல்லாக் கட்சிகளினதும் ஏகமனதான ஆதரவுடனேயே அரசியலமைப்பு பேரவை கூடியது.

அரசியலமைப்புப் பேரவையினால், அடிப்படைத் தீர்மானங்களை நிறைவேற்றவென ஒரு குழு (ளுவநநசiபெ யனெ ளுரடிதநஉவள ஊழஅஅவைவந) 1970 ஓகஸ்ட் 12ஆம் திகதி அமைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்த அனைத்துக் கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருப்பினும் ஆளுங்கட்சியே ஏகோபித்த பெரும்பான்மையை அக்குழுவில் கொண்டிருந்தது.

ஜே.ஆர்.ஜெயவர்த்தன, டட்லி சேனநாயக்க மற்றும் சா.ஜே.வே.செல்வநாயகம் ஆகியோரே எதிர்த்தரப்பைச் சார்ந்த உறுப்பினர்களாகக் குழுவில் அங்கத்துவம் வகித்தனர். தமிழ் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் வெற்றிபெற்றிருப்பினும் பின்பு சிறிமாவோ அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய அருளம்பலம் அரசதரப்பு சார்பில் அக்குழுவில் அங்கம் வகித்தார். தமிழரசுக் கட்சியின் சீ.எக்ஸ்.மாட்டீனும் அக்குழுவில் அங்கம் வகித்தார். ஆனால், 1971ஆம் ஆண்டு ஜூலையில் அவர் கட்சியின் தீர்மானத்துக்கெதிராக புதிய அரசியலமைப்பை ஆதரித்ததற்காக தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்தக் குழுவின் பிரதிநிதித்துவம் பற்றி தன்னுடைய கட்டுரையொன்றில் விமர்சனம் செய்யும் நிஹால் ஜயவிக்ரம, இக்குழு அனைத்து மக்களுக்கும் சம பிரதிநிதித்துவத்தை வழங்கவில்லை என்கிறார்.

இக்குழுவின் பதினேழ்வரில் பன்னிரண்டு பேர் அமைச்சர்கள்; இக்குழுவில் சிங்கள பௌத்த 'கொவிகம' சாதியைச் சார்ந்தவர்களே அதிகம். பதினேழ்வரில் பத்துபேர் இந்த ஆதிக்கக்குழுவினைச் சார்ந்தவர்கள்;. கீழ் நாட்டுச் சிங்களவரை விட, கண்டியச் சிங்களவரே இந்தக் குழுவில் பெரும்பான்மையாக இருந்தார்கள்;. சிங்களச் சாதிகளில் 'கொவிகம' மற்றும் 'சலகம' ஆகிய இரு சாதிகளைக் கொண்டவர்கள் மட்டுமே, இந்தக் குழுவில் அங்கம் வகித்தனர்; இந்திய வம்சாவளி மக்களின் பிரதிநிதி ஒருவர் இருக்கவேயில்லை என நிஹால் ஜயவிக்ரம தன்னுடைய விமர்சனத்தை முன்வைக்கிறார். இந்திய வம்சாவளி மக்கள் சார்பில் அ.அஸீஸ்

நியமன உறுப்பினராக நாடாளுமன்றத்தில் இருந்தும் அவரை இக்குழுவுக்கு நியமிக்காதமை இலங்கையில் ஒரு தரப்பு மக்களை முற்றாகவே புறக்கணிக்கும் செயலாகும்.

அரசியலமைப்புப் பேரவைக்கு அனைத்துக் கட்சிகளும் தமது புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தன. இலங்கை தமிழரசுக் கட்சியும் தனது முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தது. அரசியலமைப்புப் பேரவை அமைத்த குழுவின் முதலாவது அடிப்படைத் தீர்மானமாக, 'சிலோன்' என்றமைந்த இலங்கையின் பெயரை 'ஸ்ரீ லங்கா' என்று மாற்றத் தீர்மானிக்கப்பட்டது. இந்த பெயர் மாற்றத்தை தமிழரசுக் கட்சியும் ஏற்றுக்கொண்டது. தொடர்ந்து நடந்துவந்த குழுக்கூட்டத்தில் பல்வேறு முன்மொழிவுகளும், அவற்றுக்கான திருத்தங்களும் முன்வைக்கப்பட்டன. தமிழரசுக் கட்சியானது, இலங்கை ஐந்து சுயாட்சி அரசுகளைக்கொண்ட சமஷ்டி அரசாக இருக்க வேண்டும் என்ற முன்மொழிவைச் செய்தது. ஒரு தமிழ் சுயாட்சி அரசு, ஒரு முஸ்லிம் சுயாட்சி அரசு, மூன்று சிங்கள சுயாட்சி அரசுகள் என ஐந்து சுயாட்சி அரசுகளைக் கொண்ட சமஷ்டியாக இலங்கை அமைய வேண்டும் என்றனர். ஐந்து சுயாட்சி அரசுகளைக் கொண்ட சமஷ்டியை வேண்டியபோதும் அவை எப்படி அமைய வேண்டும் என்பது பற்றியோ, அந்நத அரசுகளின் புவியியல் எல்லைகள் பற்றியோ தமிழரசுக்கட்சிக்கு ஓர் எண்ணப்பாடும் இருக்கவில்லை என தனது நூலில் சச்சி பொன்னம்பலம் விமர்சனமொன்றை முன்வைக்கிறார்.

இந்த முன்மொழிவு, அரசியலமைப்பு பேரவையால் முற்றுமுழுதாக நிராகரிக்கப்பட்டது. வேறும் சில முன்மொழிவுகளும் நிராகரிக்கப்பட்டன. இதன் பின், 1971ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கூடிய தமிழரசுக் கட்சி, தொடர்ந்தும் அரசியலமைப்பு பேரவையில் பங்குபற்றத் தீர்மானித்தது.

டட்லி சேனநாயக்க தலைமையிலான ஆட்சியின் போது 1966ஆம் ஆண்டின் தமிழ்மொழி சட்ட ஒழுங்குகள் உருவாக்கப்பட்டிருந்தன. அச்சட்ட ஒழுங்குகள் அரசியலமைப்பில் இடம்பெற வேண்டும் என தமிழரசுக் கட்சி கோரியது. இக்கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. கலாநிதி.கொல்வின்.ஆர்.டீ.சில்வாவும் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவும் 1966ஆம் ஆண்டின் தமிழ்மொழி சட்ட ஒழுங்குகள் சட்டவிரோதமானது. எனவே, அதனைக் கருத்திற்கொள்ள முடியாது என்றனர்.

இக்கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டதன் பின்னர், 1971ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் திகதி தமிழரசுக் கட்சி அரசியலமைப்பு பேரவையில் இனியும் பங்குபற்றுவதில்லை என்ற முடிவுக்கு வந்தது. ஆனால், தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான சீ.எக்ஸ்.மாட்டீன் கட்சித் தீர்மானத்திற்கெதிராகச் செயற்பட்டதன் விளைவாக 1971 ஜூலையில் தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

அரசியலமைப்புப் பேரவவையிலிருந்து தமிழரசுக் கட்சியின் வெளியேற்றமானது, புதிய அரசியல்யாப்பின் உருவாக்கத்தை தமிழ் மக்களில் பெரும்பான்மையானோர் நிராகரித்ததைச் சுட்டியது. ஏற்கெனவே, அடிப்படைத் தீர்மானங்கள் எடுக்கும் குழுவில் அனைத்துதரப்பு மக்களுக்கும் போதிய பிரதிநிதித்துவத்தை வழங்காத நிலையில், தமிழ்ப் பிரதிநிதிகளினது முன்மொழிவுகளும் நிராகரிக்கப்பட்டு அவர்கள் வெளிநடப்புச் செய்தபின்னர் உருவாகும் இந்த அரசியலமைப்பானது, இலங்கையின் ஆதிக்க சக்திகளால் உருவாக்கப்படும் ஓர் அரசியலமைப்பாகவே இருக்குமேயன்றி, 'autochthonous constitution' சித்தாந்தம் சொல்வதுபோல உண்ணாட்டு மக்களால், மக்களதிகாரத்தினூடாக ஸ்தாபிக்கப்படும் சுயமானதொரு அரசியலமைப்பாக அது இருக்காது, இருக்கவும் முடியாது.

பல்லினங்கள் வாழும் நாடொன்றில், பெரும்பான்மை ஆதிக்கம் கொண்ட மக்களின் பிரதிநிதிகளால், சிறுபான்மை இனங்களின் விருப்பினை கருத்திற்கொள்ளாது உருவாக்கப்படும் அரசியலமைப்பானது எப்படி அந்நாட்டிலுள்ள சகல மக்களினதும் அரசியலமைப்பாக முடியும்? பெரும்பான்மை முடிவுதான் ஜனநாயகம் என்றால், அது ஜனநாயகம் அல்ல மாறாக பெரும்பான்மையின் வல்லாட்சியாகும். ஜனநாயகம் என்பது வெறுமனே பெரும்பான்மையின் முடிவாக இருக்க முடியாது, அப்படி ஜனநாயகம் வரையறுக்கப்படுமாயின், அது ஜனநாயகத்தின் வீச்சை குறுகச்செய்வதுடன், ஜனநாயகம் என்ற உன்னத பொருளுக்கு இழுக்கையே ஏற்படுத்தும்.

இதுவரை காலமும் தமிழரசுக் கட்சி, ஆகக்குறைந்தது அதன் தலைமை மிக உச்ச அளவிலான விட்டுக்கொடுப்பு அரசியலைச் செய்திருந்தது என்பதை மறுக்கமுடியாது. 1956இல் பண்டாரநாயக்க முதல் 1970இல் சிறிமாவோ வரை பிரிவடையாத ஒருநாட்டுக்குள் தமிழ் மக்களுக்கு சமத்துவத்தை பெற்றுக்கொடுக்கக்கூடிய தீர்வொன்றையே தமிழரசுக் கட்சி எதிர்பார்த்தது. சமஷ்டி அதன் இலட்சியத் தீர்வாக இருப்பினும், குறைந்தபட்ச அதிகாரப் பகிர்வையே தொடர்ந்து வந்த அரசாங்கங்களிடம் தமிழரசுக் கட்சி வேண்டியது.

கட்சியிலிருந்த பலர் பிரிவினைவாதக் கோரிக்கைகளை எப்போதோ முன்வைக்கத் தொடங்கிவிட்டாலும், அவர்களைப் புறந்தள்ளி பிரிவடையாத ஓர் இலங்கைக்குள் தீர்வு என்பதில் தமிழரசுக் கட்சியின் தலைமை ஏறத்தாழ ஒன்றரை தசாப்தங்களாகத் தெளிவாக இருந்தது. ஆனால், தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் அந்த நல்லெண்ணத்தை விளங்கிக்கொள்ளவோ. பயன்படுத்திக்கொள்ளவோ தவறிவிட்டன என்பது தான் நிதர்சனம்.

1971க்குப் பிற்பட்ட காலப்பகுதிதான் இலங்கை வாழ் தமிழ் மக்களின் தலையெழுத்தையே மாற்றியமைக்கப்போகும் காலப்பகுதியாக அமைந்தது. தமிழ் இளைஞர்கள் தம் இனத்தின் அரசியல் விமோசனத்திற்காக ஆயுதங்களை நம்பத் தொடங்கிய காலம் உருவாக்கப்பட்டது.

(அடுத்தவாரம் தொடரும்...)

- See more at: http://www.tamilmirror.lk/169989#sthash.prRE8W47.dpuf
Link to comment
Share on other sites

தமிழர் ஐக்கிய முன்னணி உருவானது
 
18-04-2016 10:38 AM
Comments - 0       Views - 4

article_1460956263-LEAD.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 36)

அரசியலமைப்புப் பேரவையில், இனியும் பங்குபற்றுவதில்லை என்ற தமிழரசுக் கட்சித் தலைமையின் முடிவு, கட்சியின் இளைஞர்களுக்கு மிகுந்த மகிழ்வைத் தந்தது. கட்சித் தலைமையின் விட்டுக்கொடுப்புப் போக்கானது, இளையோருக்குப் பெரிதும் மகிழ்வைத் தந்திருக்கவில்லை.

1971 காலப்பகுதியிலேதான், தமிழர் பிரதேசங்களில் இளைஞர்களின் ஆயுதக் குழுக்கள் பிரசவிக்கத் தொடங்கின. அன்று நடந்துகொண்டிருந்த கிழக்கு - மேற்கு பாகிஸ்தான் யுத்தமும் கிழக்குப் பாகிஸ்தான் 'பங்களாதேஷ்' என்ற சுதந்திர நாடாகப் பிரபடனப்படுத்தப்பட்டமையும் அதற்கு கெரில்லா யுத்தம் உதவியமையும், தமிழ் இளைஞர்களுக்குப் புதியதோர் ஆதர்சத்தை வழங்கியிருக்கலாம்.

காந்தி, காந்தியம், அஹிம்சை என்ற பாதையினால் ஒன்றரைத் தசாப்தத்துக்கும் மேலாக எப்பயனும் விளையாததன் காரணத்தால், ஆயுதம் கொண்டு விடுதலையைப் பெறும் ஆர்வம், இளைஞர்களிடையே முளைவிட்டிருக்கலாம். அன்றைய இளைஞர்களான மாவை சேனாதிராஜா, காசி ஆனந்தன், கோவை மகேசன், வேலுப்பிள்ளை பிரபாகரன், உமா மகேஸ்வரன், செட்டி தனபாலசிங்கம், குட்டிமணி போன்றவர்கள், இந்த விடுதலை உணர்வுக்கு உயிர்கொடுக்கத் தொடங்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

சமஷ்டி என்ற எண்ணக்கருவிலிருந்து தமிழ் மக்களினுடைய அரசியலை, பிரிவினை என்ற நிலைக்கு இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்றார்கள். வடபுலமெங்கும் ஆங்காங்கே இளைஞர்களால் நடத்தப்பட்ட கூட்டங்களிலும், கலந்துரையாடல்களிலும் விடுதலை வேட்கை கொழுந்துவிட்டெரியத் தொடங்கியது. தமிழர்களின் நலன்களைக் கருத்திற்கொள்ளாத அரசியலமைப்பை, அவர்கள் கடுமையாக எதிர்த்ததுடன், பிரிவினையே இனித் தீர்வாக முடியும் என்ற ரீதியில் கருத்துக்களை முன்வைத்தனர்.

அடங்காத தமிழன் அடங்காத் தமிழன்

இந்நிலையில், 'அடங்காத் தமிழன்' சி.சுந்தரலிங்கம், தனது அடங்காத முயற்சியின் அடுத்தபடியாக மீண்டும் உயர் நீதிமன்றத்தில் அப்போது நடைமுறையிலிருந்து 'சோல்பரி' அரசியலமைப்புக்குப் பதிலாக புதியதொரு அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதற்கெதிரான தடையுத்தரவொன்றைப் பெறுவதற்காக, வழக்குத்தாக்கல் செய்திருந்தார். பிரதம நீதியரசர் எச்.என்.ஜி.பெர்ணான்டோ, நீதியரசர் ஜி.பி.ஏ.சில்வா, நீதியரசர் அலஸ் ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்பட்ட குறித்த மனுவானது, தள்ளுபடிசெய்யப்பட்டது. 'அடங்காத் தமிழன்' சி.சுந்தரலிங்கத்தினது முயற்சி பற்றி தனது நூலில் கருத்துரைத்த வி.நவரட்ணம், 'ஒரு தனி நபராக, சி.சுந்தலிங்கம் போராடியதைப் போல, நாடாளுமன்றத்திலுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாவரும் உயர் நீதிமன்றத்தின் முன் சென்று, இந்த அரசாங்கம், நாடாளுமன்றத்துக்கும் அரசியலமைப்புக்கும் வெளியிலாகச் செயற்படுவதற்கெதிராக தடையுத்தரவைக் கோரியிருக்கலாம். அது, இன்னும் வலுவானதொன்றாக அமைந்திருக்கும், அதைச் செய்யும் வல்லமையும் அவர்களிடமிருந்தது. ஆனால், அவர்கள் செய்யவில்லை' என்றார்.

அரசியலமைப்புப் பேரவையில் ஐக்கிய தேசியக் கட்சி

அரசியலமைப்புப் பேரவையில், ஐக்கிய தேசியக் கட்சி, சில முன்மொழிவுகளைச் செய்தது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்துமாறு முன்மொழிந்தார். இந்த முன்மொழிவு, அவரது கட்சியின் முக்கியஸ்தராக அன்றிருந்த ரணசிங்க பிரேமதாசவினால் வழிமொழியப்பட்டது. ஆனால், ஆளும் ஐக்கிய முன்னணியோ நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை நிராகரித்தது. தனது கனவை நிறைவேற்றிக் கொள்ள ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கு இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாக இருந்தது.

இதேவேளை, அரசியலமைப்புப் பேரவையானது, புதிய அரசியலமைப்பின் கீழான சட்டவாக்க சபையான தேசிய அரச சபையின் பதவிக்காலமானது, ஆறு வருடங்களையுடையது எனத் தீர்மானித்தது. இதன் விளைவாக, 1972இல் புதிய யாப்பு நடைமுறைக்கு வருமாயின், ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினால் 1978 வரை பதவி வகிக்கத்தக்கதாக இருக்கும், இது, 1970இல் பதவிக்கு வந்த ஐக்கிய முன்னணி அரசாங்கத்துக்கு 8 ஆண்டுகள் ஆட்சியதிகாரத்தை வழங்கும். எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக எதிர்த்தன. இதன் விளைவாக, முதலாவது தேசிய அரச சபையின் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. இதன் விளைவாக, 1977ஆம் ஆண்டு வரை ஐக்கிய முன்னணி ஆட்சியதிகாரத்தை தக்க வைத்துக்கொண்டது. இது, ஐக்கிய தேசியக் கட்சிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதுடன் குறித்த அரசியலமைப்புக்கெதிரான அரசியலமைப்புப் பேரவையில் ஐக்கிய தேசியக் கட்சியினர் எதிர்த்து வாக்களிக்கவும் முக்கிய காரணமானது.

தமிழர் ஐக்கிய முன்னணி உருவானது

தமிழ் மக்களின் எந்தவொரு கருத்துக்களும் உள்ளடக்கப்படாமலும் தமிழ் மக்களின் பங்களிப்பு இல்லாமலும், அதைவிடவும் இந்திய வம்சாவளி மக்களின் பிரதிநிதிகள் இல்லாமலும் உருவாகிய இந்த புதிய அரசியலமைப்பை சிறுபான்மையினர் மீதான பெரும்பான்மை அதிகாரத்தின் திணிப்பு அல்லது அடக்குமுறை எனக் கருதாமல் வேறு எப்படிக் கருத முடியும்?

இந்நிலையில், தமிழ்க் கட்சிகளிடையே ஒற்றுமைக்கான தேவை, தமிழ் அரசியல் தலைகளால் தீவிரமாக உணரப்பட்டது. தாம் பிரிந்து நிற்பது, தமது நலன்களுக்கே கேடாக அமைகிறது என்பதை தமிழ்த் தலைமைகள் காலங்கடந்தேனும் உணர்ந்து கொண்டன. அதன் விளைவாக தமக்கிடையேயான ஐக்கிய மேடையொன்றை உருவாக்கத் துணிந்தன. 1972 மே 14ஆம் திகதி ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சி, சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், 'அடங்காத் தமிழன்' சி.சுந்தரலிங்கத்தின் ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி மற்றும் சில தமிழ் அமைப்புக்கள் இணைந்து, தமிழர் ஐக்கிய முன்னணியை (TUF) உருவாக்கின. இதன் தலைவராக சா.ஜே.வே.செல்வநாயகம் தெரிவு செய்யப்பட்டார்.

வடக்கு - கிழக்கு மற்றும் மலையக மக்கள், இதுவரைகாலமும் முதலும் கடைசியுமாக ஏற்படுத்திய அரசியல் கூட்டணி இதுமட்டுமேயாகும். இந்தத் தலைவர்களிடையே நிறைய வித்தியாசங்கள் இருந்தன. அவர்களது சித்தாந்தம், இலட்சியம், அணுகுமுறை என்பவை நிறையவே வேறுபட்டிருந்தன. ஆனால், தமிழ் மக்கள் அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்பட்டபோது இந்த ஒற்றுமை அவசியமானதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். அதனாலேயே இந்தக் கூட்டணி உருவாகியது. 1976இல், தமிழர் ஐக்கிய முன்னணி, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியாக (தமிழர் விடுதலைக் கூட்டணி) தனித் தமிழீழக் கொள்கையை முன்னெடுத்தபோது, சௌமியமூர்த்தி தொண்டமான் இந்தக் கூட்டணியிலிருந்து விலகினார். தமிழீழமானது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினையைத் தீர்க்காது என்று அவர் கருதினார். அத்தோடு, இலங்கைத் தமிழர்களின் முரண்பாட்டு அரசியலை அவர் விமர்சித்தார். தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தும் கலை தெரியாது என்று அவர் சொன்னார்.

'பேச்சுவார்த்தைக் கலையானது, ஐந்து கோரிக்கைகளை முன்வைத்தல், அதில் ஒன்றை முழுமையாக வெற்றி கொள்ளுதல், இரண்டைப் பகுதியளவில் வெற்றி கொள்ளுதல், இரண்டைத் தற்காலிகமாக வேறொருநாளுக்குக் கிடப்பில் வைத்தல்' என்று தொண்டமான் சொன்னார். தாங்கள் தொழிற்சங்கவாதிகள், ஆதலால் தமக்கு இந்தப் பேச்சுவார்த்தைக் கலை தெரியும் என்றும், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களில் பெரும்பாலானோர் சட்டத்தரணிகள் என்றும் தங்களது வழக்கை மிகச் சிறப்பாக வாதாடத் தெரியுமே அன்றி சலுகைகளைப் பெற்றுக்கொள்ளத் தெரியாது என்றும் சொன்னார்.

1972ஆம் ஆண்டு மே 14ஆம் திகதி, திருகோணமலையில் தமிழர் ஐக்கிய முன்னணி உதயமானது. இக்கூட்டத்திலேயே, 1972ஆம் ஆண்டு மே 22ஆம் திகதி நடைபெறவிருந்த புதிய அரசியலமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வை தமிழ் மக்கள் பகிஷ்கரிப்பதெனவும் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகளை உள்ளீர்க்க இந்த புதிய அரசியலமைப்பு தவறிவிட்டது.

தமிழ் மொழிக்கு சம அந்தஸ்தோ, குறைந்த பட்சம் கல்வி, நிர்வாகம், நீதி ஆகியன தொடர்பில் அரசியலமைப்பு அந்தஸ்தோ வழங்காதுவிட்டதனூடாக, தமிழ் மக்களை தமது நாட்டிலேயே இரண்டாந்தரப் பிரஜைகள் போல ஆக்கிவிட்டதே இந்தப் பகிஷ்கரிப்புக்கு காரணம் என தமிழர் ஐக்கிய முன்னணி சொன்னது. அத்தோடு, இன்னும் சில தீர்மானங்களையும் தமிழர் ஐக்கிய முன்னணி இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றியது.

அவற்றுள் இலங்கை மக்களில் ஏறத்தாழ 10 இலட்சம் அளவினரான பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான பிரதிநிதித்துவத்தை அரசியலமைப்பு பேரவையில் வழங்காததால், இந்த அரசியலமைப்பு இலங்கை மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்ற தீர்மானமும், 35 இலட்சம் அளவிலான தமிழ் பேசும் மக்களின் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் கோரிக்கைகளை நிராகரித்ததுடன், அவர்களது பங்களிப்பின்றியே இந்த அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.

ஆகவே, ஜனநாயக மரபுகளைக் காப்பாற்ற இந்த அரசாங்கம் தவறிவிட்டது என்ற தீர்மானமும் குறிப்பிடத்தக்கவை. இந்தத் தீர்மானங்களுடன் இந்நாட்டின் தமிழ் மக்கள் சார்பில் 6 கோரிக்கைள் முன்வைக்கப்பட்டன. இவை புதிய அரசியலமைப்பினுள் உள்ளடக்கப்பட வேண்டும் என்று தமிழர் ஐக்கிய முன்னணி கோரியது.

01. தமிழ் மொழிக்கு சிங்கள மொழிக்கு சமனான அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.

02. இலங்கையை தமது வாழ்விடமாகக் கொண்டுள்ள அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும், எந்தவித பாகுபாடுமற்ற குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதுடன் எந்தக் குடிமகனதும் குடியுரிமையைப் பறிக்கும் அதிகாரம் அரசுக்கு இருக்கக்கூடாது.

03. அரசானது, மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும் என்பதுடன், எல்லா மதங்களுக்கு சம அளவில் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

04. சகல மக்களுடையதும், இனத்தவர்களுடையதுமான அடிப்படை உரிமைகள் அங்கிகரிக்கப்படுவதுடன் பாதுகாக்கப்பட வேண்டும்.

05. சாதீயம், தீண்டாக்கெதிராக அரசியலமைப்பு பாதுகாப்பொன்றை ஏற்படுத்த வேண்டும்.

06. ஜனநாயக சோசலிஸ சமூகமொன்றில் அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட்ட அரசாங்கக் கட்டமைப்புத்தான் மக்களதிகாரம் கொண்ட பங்குபற்றல்மிகு ஜனநாயகத்தைக் கட்டியெழுப்பும் என்ற ஆறு கோரிக்கைகளை தமிழர் ஐக்கிய முன்னணி முன்வைத்தது.

முதலாவது குடியரசு யாப்புக்கான எதிர்ப்பு

1972 மே 22ஆம் திகதி முதலாவது குடியரசு அரசியல்யாப்பு அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட போது, மொத்தமாக இருந்த 20 தமிழ் பிரதிநிதிகளில் 15 பேர் குறித்த நிகழ்வைப் புறக்கணித்திருந்தனர். சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் தமிழ்

காங்கிரஸிலிருந்து அதிகார ஆசை காட்டி பிரித்தெடுக்கப்பட்ட நல்லூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சி.அருளம்பலம், வட்டுக்கோட்டை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ தியாகராஜா ஆகியோரும், தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சி.எக்ஸ்.மாட்டீனும் நியமன உறுப்பினர்களான எம்.சி.சுப்ரமணியமும் சி.குமாரசூரியரும் (செனட் சபை இல்லாதொழிக்கப்பட்ட பின்பு, நாடாளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதிகள் சபை நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டார்) ஆகிய ஐவருமே, 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசியல் யாப்புக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். தமிழ்ப் பிரதிநிதிகள், மொத்தமாக இதனைப் புறக்கணிக்கவில்லை.

தமிழர்களிடையேயும் மாற்றுக்கருத்துண்டு என்று அரசாங்கம் சுட்டிக்காட்ட இது வாய்ப்பாக அமைந்தது. வடக்கு - கிழக்கு எங்கு புதிய அரசியலமைப்பு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட நாள் துக்க நாளாக அனுஷ்டிக்கப்பட்டது. ஹர்த்தால் போராட்டம் வெற்றிகராமாக நடைபெற்றது. ஊர்வலங்களுக்கும் பொதுக்கூட்டத்துக்கும் அரசாங்கம் தடை விதித்துள்ள நிலையில், தமிழ் தலைவர்களினால் எதிர்ப்புக் கூட்டமொன்று யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை நாவலர் ஆச்சிரமத்தில் நடத்தப்பட்டது. தமிழ் இளைஞர்கள், புதிய அரசியலமைப்பின் பிரதிகளை தீயிட்டுக் கொழுத்தி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். ஆங்காங்கே கறுப்புக் கொடிகள் பறந்தன. வடக்கு கிழக்கில் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றன.

தமிழ் மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பு வலுவுக்கு கொண்டுவரப்பட்டது. அந்த யாப்பின் உள்ளடக்கம் எவ்வாறானதாக இருந்தது?

(அடுத்த வாரம் தொடரும்...)

- See more at: http://www.tamilmirror.lk/170181/%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B4%E0%AE%B0-%E0%AE%90%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AF-%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%A9%E0%AE%A3-%E0%AE%89%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%A9%E0%AE%A4-#sthash.ohyIuVq0.dpuf
Link to comment
Share on other sites

1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசியல் யாப்பு
 
25-04-2016 09:33 AM
Comments - 0       Views - 1

article_1461557372-Buildin.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

 

 

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 37)

1972 மே 22ஆம் திகதியன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட இலங்கையின் முதலாவது குடியரசு யாப்பினது முன்னுரை, 'We the People of Sri Lanka' (இலங்கை குடிமக்களாகிய நாம்) என்று ஆரம்பிக்கிறது. இவ்வரசியல் யாப்பை, இலங்கைக் குடிமக்கள், தமக்காக தாம் நிறைவேற்றிக்கொண்டதாக அது குறிப்பிடுகிறது. சிறுபான்மையின மக்களின் அபிலாஷைகளை, விருப்பங்களைக் கருத்திற்கொள்ளாது, அவர்களின் பிரதிநிதிகள் புறக்கணிப்புக்கு மத்தியில், பெரும்பான்மையின் பிரதிநிதிகளால் நிறைவேற்றப்பட்ட ஓர் அரசயில்யாப்பு, இலங்கைக் குடிமக்கள் யாவரையும் எப்படிப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும்? இதுதான் ஜனநாயகத்தில் இருக்கின்ற சிக்கல் நிலை. ஜனநாயகம் என்பதை விட 'பெரும்பான்மையோர் ஆட்சி' என்பதுதான் இத்தகைய அரசியல்முறைமைக்குச் சாலப் பொருத்தமானதொரு பெயராக அமையும். நடைமுறையில், பெரும்பான்மைப் பலமொன்றின் மூலம் தான் ஜனநாயகம் இயங்க முடியும்.

ஆனால், சிறப்பான ஜனநாயகக் கட்டமைப்பொன்று, அதன் கீழ் வாழும் மக்கள் அனைவரது அடிப்படை உரிமைகளையும் அடிப்படை அபிலாஷைகளையும் பாதுகாக்கவல்லதாக இருக்கவேண்டும். அந்த அடிப்படைக் கட்டுமானத்தின் மீதுதான் பெரும்பான்மையோர் விரும்பும் ஆட்சி அமைய வேண்டும். ஜனநாயகம் என்பது சிறுபான்மையோரின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்கவல்லதொன்றாக இருந்தால் மட்டுமே அது ஜனநாயகமாக ஏற்றுக்கொள்ளப்பட முடியும்.

ஒற்றையாட்சிக் 'குடியரசு'

1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பின் முக்கிய உள்ளடக்கங்கள் பற்றி ஆராய்வதும் அது இலங்கை மீதும் தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதும் ஏற்படுத்திய பாதிப்புக்களை ஆராய்வதும் அவசியமாகிறது. 1972ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் முதலாவது சரத்து, இலங்கையை இறைமையுள்ள, சுதந்திரக் குடியரசாகப் பிரகடனப்படுத்தியது.

1948 முதல் இதுவரை காலமும் பிரித்தானிய முடிக்கு கீழான டொமினியன் நாடாக இருந்த இலங்கை, காலனித்துவத்திலிருந்து முழுமையாக விடுதலை பெற்று, ஒரு குடியரசாக மாறியது. இந்த யாப்பின் இரண்டாம் சரத்து இலங்கைக் குடியரசை ஒற்றையாட்சி அரசாகப் பிரகடனப்படுத்தியது. இதுபற்றி இந்த அரசியல் யாப்பு உருவாக்கத்தில் முக்கிய பங்குவகித்த அன்றைய நீதி அமைச்சின் செயலாளர் கலாநிதி நிஹால் ஜயவிக்ரம தனது கட்டுரையொன்றில், 'அரசியலமைப்பு அமைச்சர் கலாநிதி.கொல்வின் ஆர்.டி.சில்வாவின் வழிகாட்டுதலில் உருவான இந்த யாப்பின் முதலாவது வரைவில் 'ஒற்றையாட்சி' என்பது பற்றி எந்தவிதக் குறிப்பும் இருக்கவில்லை.

அமைச்சரவைக் கூட்டத்தில், சிரேஷ்ட அமைச்சர் ஒருவரினால் 'இலங்கை ஓர் ஒற்றையாட்சி அரசு' என்ற சரத்து சேர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இத்தகைய சரத்து தேவையில்லை என்றே அரசியலமைப்பு அமைச்சர் கருதினார். ஒற்றையாட்சி என்று சொல்லாவிட்டாலும் ஒற்றையாட்சிக் கட்டமைப்பிலேயே இந்த அரசியலமைப்பு அமைந்துள்ளது என்ற தன்னுடைய கருத்தையும் முன்வைத்தார்' என்று குறிப்பிடுகிறார்.

இந்தச் சரத்து பற்றி அதே கட்டுரையில் கருத்துரைத்த கலாநிதி. நிஹால் ஜயவிக்ரம, 'இந்த அவசரகதியிலான, பல்வேறு விடயங்களையும் கருத்திற்கொள்ளாத, தேவையற்ற அலங்கார சரத்தானது, அடுத்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இனமுரண்பாட்டுக்கு சமாதான வழியில் தீர்வு காணும் முயற்சிகளைக் கெடுப்பதாக அமைந்தது' என்கிறார். அது உண்மையும் கூட.

பிரித்தானியா ஓர் ஒற்றையாட்சி நாடு, ஆனால், அது ஓர் ஒற்றையாட்சி நாடு என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. அவர்களுடைய மக்களின் தேவைக்கேற்ப ஸ்கொட்லாந்து, வட-அயர்லாந்து, வேல்ஸ் என்பனவற்றுக்கு அதிகாரப்பகிர்வை அளித்துள்ளது. மேலும் இலங்கையை ஒற்றையாட்சி நாடு என்று பிரகடனப்படுத்தியதனூடாக, சிறிமாவோ தலைமையிலான அரசாங்கம் இலங்கை தமிழரசுக் கட்சி வேண்டிய சமஷ்டித் தீர்வை நிராகரித்ததுடன், எதிர்காலத்தில் ஒரு தீர்வு எட்டப்படுவதற்கான இயலுமையையும் கடினமாக்கியது.

பௌத்தத்துக்கு 'முதன்மை இடம்'

1972ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் 6ஆம் சரத்து, இலங்கைக் குடியரசு, பௌத்தத்துக்கு முதன்மை இடத்தை வழங்கும் எனவும், அதன்படி பௌத்தத்தை பாதுகாப்பதும் வளர்ப்பதும் அரசின் கடமை எனவும் அதேவேளை, 18(1)(d) (அடிப்படை உரிமைகள்) சரத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள சிந்தனை மற்றும் மதச்சுதந்திரத்தையும், தான் விரும்பிய மதத்தை பின்பற்றும், தனியாகவோ கூட்டாகவோ தன்னுடைய மதத்தையோ, நம்பிக்கையையோ பின்பற்றும் வழிபடும் போதிக்கும் உரிமையை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறுகிறது. இது பற்றி தனது கட்டுரையில் எழுதும் கலாநிதி. நிஹால் ஜயவிக்ரம, 'ஆரம்பத்தில், சகலரது மதச் சுதந்திரத்தை அடிப்படை உரிமைகளினூடாக உறுதிப்படுத்துவதே அரசியலமைப்பு பேரவையில் வைக்கப்பட்ட முன்மொழிவாக இருந்தது.

ஆனால் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க பௌத்த நிறுவனங்களையும் பாரம்பரிய வழிபாட்டுத்தலங்களையும் பாதுகாப்பது பற்றிய ஒரு சரத்து அவசியம் சேர்க்கப்பட வேண்டும் என்றார். அதன் பின்னர் பௌத்தத்துக்கு 'உரிய இடம்' வழங்கப்பட வேண்டும் என்ற சரத்தே முன்மொழியப்பட்டது, ஆனால், இறுதி வரைவு உருவானபோது, அது பௌத்தத்துக்கு 'முதன்மை இடம்' வழங்கப்பட வேண்டும் என மாற்றமாகியிருந்தது' என்று குறிப்பிடுகிறார்.

இது பற்றி தனது கருத்தைப் பதிவு செய்த கலாநிதி நிஹால் ஜயவிக்ரம, 'ஐந்து நூற்றாண்டுகள் அந்நியர் ஆதிக்கத்தை தாண்டியும் மக்களின் இதயங்களிலும் சிந்தனையிலும் தப்பிப்பிழைத்திருக்கிறதென்றால், அதை ஓர் அரசியல் யாப்பு சரத்துக் கொண்டு பாதுகாக்க வேண்டிய தேவை இப்பொழுது ஏன் ஏற்பட்டது?' என்று கேள்வியெழுப்புகிறார்.

பல்லினங்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில், ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு அரசியல் யாப்பினூடாக முன்னுரிமை வழங்குதல் எவ்வகையில் நியாயமானது, பொருத்தமானது. பௌத்தத்துக்கு முன்னுரிமை கொடுத்தமை பற்றி பின்னொரு நாளில் கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வாவிடம் கேட்கப்பட்டபோது, 'நான் மதச்சார்பற்ற அரசு மீதுதான் நம்பிக்கை வைத்துள்ளேன். ஆனால் அரசியல்யாப்புக்கள், அரசியலமைப்பு பேரவையாலேயே உருவாக்கப்படுகின்றன, அரசியலமைப்பு அமைச்சரால் அல்ல.

நான் தனிப்பட்ட வகையில் அனைத்து மக்களது மத சுதந்திரத்தையும் பாதுகாக்கும் சரத்தையே விரும்பினேன். ஆனால், 6ஆம் சரத்திலுள்ள எதுவும் நான் மீண்டும் சொல்கிறேன் எதுவும் மற்ற மதத்தவரது சுதந்திரத்தை பாதிக்கவில்லை' என்று சொன்னார். மார்க்ஸியம் பேசிய இந்த சட்ட அறிஞர், 'மதம் என்பது மக்களுக்கான ஒபியம்' என்று சொன்ன கார்ள் மாக்ஸைப் பின்பற்றிய இந்த அரசியல்வாதி, பௌத்தத்துக்கு 'முதன்மை இடமும்' அதனைப் பாதுகாக்கும் கடமையை அரசுக்கும் வழங்கிய இந்த சரத்துக்கும், இந்த அரசியல் யாப்புக்கும் ஆதரவளித்தார் என்பதுதான் நிதர்சனம். இதையேதான் இன்னொரு 'தோழரான' கலாநிதி என்.எம்.பெரேராவும் செய்தார். இதையேதான், நாடாளுமன்றத்திலிருந்த மற்ற 'தோழர்களும்' செய்தார்கள.!

'தனிச்சிங்கள'ச் சட்டத்துக்கு அரசியலமைப்பு அங்கிகாரம்

1972ஆம் ஆண்டின் அரசியல் யாப்பின் அரசியல் முக்கியத்துவம் மிக்க விடயங்களுள் ஒன்றாக, மொழி பற்றிய சரத்துக்கள் அமைந்தன. 7ஆம் சரத்து 'தனிச்சிங்கள'ச் சட்டத்தின் அடிப்படையில், சிங்களமே இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக இருக்கும் எனப் பிரகடனப்படுத்தியது.

8ஆம் சரத்தின் 1ஆவது உப பிரிவு, தமிழ் மொழியின் பயன்பாடானது, 1958ஆம் ஆண்டின் தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் படி அமையும் எனச் சொன்ன அதேவேளை, 8ஆம் சரத்தின் 2வது உப பிரிவு டட்லி-செல்வா ஒப்பந்தத்தின் விளைவாக டட்லி சேனநாயக்க ஆட்சியின் நிறைவேற்றப்பட்ட தமிழ் மொழி சட்ட ஒழுங்குகளுக்கு அரசியலமைப்பு அங்கிகாரம் கிடைப்பதைத் தடுத்தது. தமிழரசுக் கட்சி வேண்டிய தமிழ்மொழிக்கான சம அந்தஸ்த்தை நிராகரித்த சிறிமாவோ தலைமையிலான அரசாங்கம், 'தனிச்சிங்கள'ச் சட்டத்துக்கு அரசியல் யாப்பில் அங்கிகாரமளித்தது. இதனை தமிழ்மக்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்துவதாகவன்றி, வேறு என்னவாகக் கருதமுடியும்?

இதிலே ஒரு முக்கியமான முரண்நகை யாதெனில், 'திணிப்பை விரும்பாத சிறுபான்மையினர் மீது சிங்கள மொழியினைத் திணிப்பதானது, ஆபத்தான விளைவுகளைக் கொண்டுவரக்கூடும். தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக சிறுபான்மையினர் ஆழமாக எண்ணுவார்களெனின், அது எதிர்ப்பையும் போராட்டத்தையும் விளைவிக்கும். நான், இனக் கலவரம் எனும் ஆபத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை, அதைவிடப் பாரதூரமான

ஆபத்தாக இந்நாடு பிரிவினையை எதிர்கொள்ள வேண்டி வரலாம். இந்நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களே பெரும்பான்மையினர், அம்மக்கள் தமக்கு மாற்றமுடியாத அநீதி இழைக்கப்படுவதாக உணர்ந்தால், அவர்கள் இந்நாட்டிலிருந்து பிரிந்து செல்லும் முடிவை எடுக்கும் சாத்தியம் இருக்கிறது' என்று 1956ஆம் ஆண்டு 'தனிச்சிங்கள'ச் சட்டமூத்தின் மீதான விவாதத்தில் பேசிய 'தோழர்' லெஸ்லி குணவர்த்தனவும் அதே விவாதத்தில், 'உங்களுக்கு இருமொழிகள் - ஒரு நாடு வேண்டுமா, இல்லை ஒரு மொழி - இரு நாடு வேண்டுமா' என்றும் 'சமத்துவம்தான் எமது நாட்டின் சுதந்திரத்துக்கான பாதை, அதுவே ஒற்றுமையை ஏற்படுத்தும். எங்களுக்கு ஓர் அரசு வேண்டுமா, இல்லை இரண்டா, எமக்கு ஓர் இலங்கை வேண்டுமா, இல்லை இரண்டா, மொழிப்பிரச்சினை என்ற வெளிதோற்றத்துக்குள் நாம் இந்தக் கேள்விகள் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம்.

நீங்கள் தமிழர்களைப் பிழையாக நடத்தினால், நீங்கள் தமிழர்களை துன்புறச்செய்தால், நீங்கள் தமிழர்களை அடக்கி ஆண்டால், நீங்கள் அடக்கியாளும் இனத்தவர்கள் வேறானதொரு தேசமாக உருவாகி இப்போதுள்ளதை விட அதிகமாக அவர்கள் கேட்கும் நிலை உருவாகும். நாம் சமத்துவத்தை மறந்து தமிழர்களை அடக்கியாண்டால், பிரிவினையே உருவாகும்' என்றும் 'மார்க்ஸிஸவாதி' கலாநிதி கொல்வின் ஆர்.டீ.சில்வாவும், அதே விவாதத்தில் 'பெரும்பான்மையினர் என்ற அடிப்படையில், இந்நாட்டிலுள்ள மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்க முடியாது. 50 சதவீதம் அல்லது 60 சதவீதம் என்ற எண்ணிக்கையைக் காட்டுவதனூடாக, ஒரு மனிதனின் அடிப்படை உரிமையை மீற முடியாது. இந்த சறுக்கும் பலகையில் நீங்கள் கால்வைத்தால், நீங்கள் கீழே விழுந்துகொண்டேயிருப்பீர்கள். அடிவரை விழுவதைத் தவிர வேறு முடிவில்லை.

அந்த முடிவானது சிங்கள 'கொவிகம' தலைமையிலான பாஸிஸ சர்வாதிகார ஆட்சியாகவே இருக்கும். இந்தத் திணிப்பை சிறுபான்மையினர் ஏற்றுக்கொண்டால் பரவாயில்லை, ஆனால் அவர்கள் இதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால் இதனைச் செய்யும் உரிமை உங்களுக்கு இருக்கிறதா, அவர்கள் மீது இதனைத் திணிக்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறதா? நீங்கள் என்னைக் கொல்லலாம், எம் தோழர்களைக் கொல்லலாம். ஆனால், அதன் மூலம் நீங்கள் பிரச்சினையைத் தீர்க்கவில்லை. நான் உங்களிடம் மன்றாடுகிறேன், தயவுசெய்து நீங்கள் செய்யும் இந்தக் காரியத்தினது (சிங்களத்தை மட்டும் உத்தியோகபூர்வமொழி ஆக்குதல்) பாராதூரதன்மையை உணருங்கள். நீங்கள் இந்த நாட்டை பல தலைமுறைகள் பின்கொண்டு செல்கிறீர்கள்.

இனி வரும் சந்ததி இந்த நாட்டைப் பாழாக்கியதற்காக எம் அனைவரையும் சபிக்கப்போகிறது' என்று உணர்ச்சி பொங்கப் பேசிய 'பெரும் மார்க்ஸீயவாதி' என்.எம்.பெரோராவும் அதே 'தனிச்சிங்கள'ச் சட்டத்துக்கு அரசியலமைப்பு அங்கிகாரம் வழங்கிய சிறிமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர்கள். அதிலும் கலாநிதி கொல்வின் ஆர்.டீ.சில்வா அரசியலமைப்பு அமைச்சர். என்னே இந்த முரண்நகை 1956ஆம் ஆண்டு எதிர்க்கட்சியிலிருந்து 'தனிச்சிங்கள'ச் சட்டத்தை எதிர்த்த இந்த இடதுசாரித் தலைவர்கள் இன்று ஆளுங்கட்சியில் அமைச்சர்களாக வீற்றிருக்கும் போது அன்று அவர்கள் எதிர்த்த அதே 'தனிச்சிங்கள'ச் சட்டத்துக்கு அரசியலமைப்பு அங்கிகாரம் வழங்கினார்கள். கலாநிதி கொல்வின் ஆர்.டீ.சில்வா,' 'தனிச்சிங்களச்' சட்டத்தை இப்போது இல்லாமல் செய்வதானது, 1956ஆம் ஆண்டு முதல் நடந்துவந்த முக்கிய பணியொன்றை இல்லாது செய்யவேண்டிய வேலையாகும். இது உடைத்து, அடித்துச் சமைத்த ஒம்லெட்டிலிருந்து மீண்டும் முட்டையை உருவாக்குவது போன்றது' என்று சாக்குப்போக்குச்சொன்னார்.

தமிழ்மொழி, இரண்டாந்தர நிலைகூட இன்றி அநாதரவாக நின்றது. கூடவே தமிழர்களும்.

(அடுத்தவாரம் தொடரும்...)

- See more at: http://www.tamilmirror.lk/170600/-%E0%AE%86%E0%AE%AE-%E0%AE%86%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%AA-%E0%AE%AA-#sthash.3hibrKMS.dpuf
Link to comment
Share on other sites

1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசியல் யாப்பு
 
02-05-2016 09:28 AM
Comments - 0       Views - 3

article_1462161984-lees.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 38)

எங்கும் சிங்களம் எதிலும் சிங்களம்

1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசியல் யாப்பானது, 'தனிச்சிங்கள'ச் சட்டத்துக்கு அரசியலமைப்பு அங்கிகாரம் வழங்கியதன் மூலம், நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாக, நிர்வாக மொழியாக சிங்கள மொழி மட்டும் என்பது அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டது. முதலாவது குடியரசு யாப்பின் 9ஆவது சரத்தானது, சட்டவாக்க மொழியாக சிங்களம் இருக்கும் என்று கூறியது. அத்தோடு, அனைத்து சட்டங்களுக்கும் தமிழில் ஒரு மொழிபெயர்ப்பு இருக்கும் எனவும் கூறியது. 10ஆவது சரத்தானது, ஏலவே நடைமுறையிலுள்ள சட்டங்கள் சிங்களத்திலும் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்படும் என்றும், சட்டத்தின் ஆங்கில வாசகங்களுக்கும் சிங்கள வாசகங்களுக்குமிடையே முரண்பாடு ஏற்படுமெனின், சிங்களவாசகங்களே ஆங்கிலவாசகங்களின் மேல் நிலவும் என்றும் கூறியது. இவ்வாறு அரசின் சட்டவாக்கத்துறையும் சட்ட நிர்வாகத்துறையும் சிங்களமயமாக்கப்பட்டது. தமிழின் நிலைமை மொழிபெயர்ப்பு என்ற அளவுக்குள் சுருங்கிவிட்டது.

அடுத்ததாக, முதலாவது அரசியல் யாப்பின் 11ஆவது சரத்தானது, இலங்கை முழுவதும் நீதிமன்றங்களினதும், நீதி வழங்கும் மன்றுகள், சபைகள் மற்றும் அமைப்புக்களின் மொழியாக சிங்களம் இருக்கும் என்று கூறியதுடன், பதிவுகள், வாதங்கள், நடைமுறைகள், தீர்ப்புகள், உத்தரவுகள் யாவும் சிங்களத்திலேயே அமைய வேண்டும் என்றது. ஆயினும், வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் தேசிய அரசு சபையினால் ஜமுதலாவது குடியரசு அரசியலமைப்பின் கீழ் சட்டவாக்கத்துறை (நாடாளுமன்றம்) தேசிய அரசு சபை என்றழைக்கப்பட்டதுஸ சட்டவாக்கத்தினூடாக

வேறு ஏற்பாடுகள் செய்ய முடியும் என்று கூறியதுடன், ஆனால் அத்தகையவிடயத்தில் கட்டாயம் சிங்கள மொழிபெயர்ப்பு ஒன்று அவசியம் என்றும் கூறியது. அத்தோடு, தமிழில் அல்லது சிங்களத்தில் நபரொருவர் சட்ட நடவடிக்கையை முன்னெடுக்க அரசு மொழிபெயர்ப்பு உதவிகளைச் செய்யும் என்றும் கூறியது. நீதித்துறையிலும் தமிழின் நிலைமை மொழிபெயர்ப்பு என்ற அளவுக்குக் கொண்டுவரப்பட்டது.

தமிழ் பேசும் மக்கள், மொழிப் பிரச்சினை பற்றி பேசியபோதெல்லாம், தமிழ் மொழிக்கு விசேட ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளனவே என்று தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் சாக்குப் போக்குச் சொல்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. இந்நாட்டின் குடிமகனான ஒரு சிங்களவரால், தன் தாய்மொழியிலேயே அரசின் மூன்று கரங்களான சட்டவாக்கம், நிர்வாகம், நீதி ஆகியவற்றை அணுகும் போது, இந்நாட்டின் குடிமகனான ஒரு தமிழரால், தன்தாய்மொழியில் அதனைச் செய்வதற்கான வாய்ப்பு தட்டிப் பறிக்கப்படுவதேன்?

ஒரு நாட்டின் சனத்தொகையில், ஏறத்தாழ 23 சதவீத மக்கள் பேசுகின்ற ஒரு மொழிக்கு, பெரும்பான்மை மொழிக்கு நிகரான சம அந்தஸ்து கொடுக்க முடியாது என வாதிடுபவர்கள், தம்மைச்சுற்றி பரந்து விரிந்துள்ள நாகரிகமடைந்த நாடுகளை உற்றுப் பார்ப்பது அவசியமாகும்.  கனடாவில் வெறும் 21.3 சதவீத மக்கள் பேசுகின்ற ‡ப்ரெஞ்ச் மொழியானது, பெரும்பான்மை ஆங்கிலமொழிக்கு நிகராக, உத்தியோகபூர்வமொழியாக, கனடாவின் 1969 உத்தியோகபூர்வ மொழிகள் சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. சுவிட்ஸர்லாந்தில் வெறும் 0.5 சதவீத மக்கள் பேசுகிற றொமான்ஷ் மொழியும் வெறும் 8 சதவீத மக்கள் பேசுகிற இத்தாலிய மொழியும் வெறும் 22.5 சதவீத மக்கள் பேசுகிற ‡ப்ரெஞ்ச் மொழியும் அந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் (64 சதவீதம்) பேசுகின்ற ஜேர்மன் மொழிக்கு நிகராக, அந்நாட்டின் உத்தியோகபூர்வ மொழிகளாக இருக்கின்றன. சிங்கப்பூரில் வெறும் 3.3 சதவீத மக்கள் பேசுகின்ற தமிழ் மொழி, அந்நாட்டின் நான்கு உத்தியோகபூர்வ மொழிகளுள் ஒன்றாகும். ஆகவே, உண்மையில் தனது மக்கள் மீது அக்கறை கொண்ட நாடொன்று நிச்சயமாக தமது சிறுபான்மை இனக்குழுக்களினது உரிமைகளுக்கும் அபிலாஷைகளுக்கும் மதிப்பளிப்பதுடன், அவற்றுக்கும் சமவுரிமை வழங்கும். ஆனால், இனவாத அரசுகள் இதனைச் செய்வதில்லை.

சிங்கப்பூரின் சிற்பி என்று புகழப்படுகின்ற லீ க்வான் யூ, சிங்கப்பூர் என்ற தேசத்தைக் கட்டியெழுப்பியமை பற்றிக் குறிப்பிடுகையில்: 'மலேசிய அரசின் இனவாதப் போக்கு, எம்மை தனிவழி போகச் செய்தது. நாங்கள் தீர்மானித்தோம், நாங்கள் சிறுபான்மையை நசுக்கிப்பிழியும் பெரும்பான்மையாக இருக்கமாட்டோம், நீங்கள் எந்த இனத்தவராக இருப்பினும் எந்த மொழி பேசுபவராக இருப்பினும் எந்த மதத்தவராக இருப்பினும், நீங்களும் சமத்துவம் மிக்கதொரு குடிமகன், இதை நாம் சகல மக்களிடமும் பறையறைந்தோம்' 'நீங்கள் வாக்குகளை இலகுவாகப் பெற இனவாத அல்லது மதவாத அரசியல் செய்தால் இந்த சமூகம் அழிந்துவிடும். இனவாதம் வாக்குகளைப் பெறுவதற்கு இலகுவான வழியாகும், நான் சீனன், அவர்கள் மலாயர்கள், அவர்கள் இந்தியர்கள் என்று இனவெறி அரசியல் செய்தால் எங்கள் சமூகம் கிழித்தெறியப்பட்டுவிடும். நீங்கள் ஒன்றுபட்ட சமூகத்தை கொண்டிராவிட்டால், முன்னேற்றம் என்பது இருக்காது' என்று சொல்கிறார்.

நீங்கள் சீன மொழியை இயங்கும் மொழியாக வைக்காது, ஆங்கில மொழியைப் பயன்படுத்துவது ஏன் என்று கேட்டபோது, 'அப்படி நடந்திருந்தால், அது எமது மக்களைத் துண்டாடியிருக்கும்' என்று சொன்னார். 'ஆங்கிலம் அந்நிய மொழி, அது அனைவருக்கும் சமனானது, அது எமக்கு முன்னேற்றத்தையும் தந்திருக்கிறது, எம்மை உலகுடன் இணைத்திருக்கிறது. நீங்கள் உங்கள் மொழியை விரும்பினால், அதனை இரண்டாம் மொழியாக வைத்திருங்கள், அது உங்களைப் பொறுத்தது' என்றார். '1965இல், 20 வருடங்களாக தோல்வியடைந்த அரசுகளைக் கண்ட அனுபவத்தினை நாம் கொண்டிருந்தோம். ஆகவே, நாம் எதனைத் தவிர்க்க வேண்டும் என அறிந்திருந்தோம். இனப்பிரச்சினை, மொழி முரண்பாடு. மதப் பிரச்சினை என்பவை தவிர்க்கப்பட வேண்டும். இலங்கையில் இதுதான் நடந்தது' என்று, மற்றொரு நேர்காணலில் லீ க்வான் யூ குறிப்பிடுகிறார்.

லீ க்வான் யூ, உலகின் மிகச்சிறந்த தலைவராக இல்லாமல் இருக்கலாம். மனித உரிமைகள் தொடர்பிலும் அடக்குமுறை, ஊழல், குடும்ப ஆட்சி என்று, அவர் மீது நிறையக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், எந்த வளமுமற்ற பல்லினங்கள் வாழும், புதிதாகப் பிறந்த ஒரு குட்டித் தேசத்தை, வளர்ச்சியடைந்த நாடாகக் குறுகிய காலத்தினுள் கட்டியெழுப்பியதில் இன, மத, மொழி அரசியலை ஒதுக்கி வைத்த அவரது சித்தாந்தம் வெற்றிகண்டுள்ளது. இதனை இலங்கை புரிந்துகொண்டிருந்தால், இன்று இலங்கையின் நிலை வேறானதாக இருந்திருக்கும். ஆனால், இலங்கை குறுகிய இனவாத, மொழிவாத, மதவாத அரசியலினுள் சிக்குண்டு, சின்னாபின்னமாகிப் போனது, அந்த இரத்தக்கறை படிந்த வரலாற்றை எழுதியதில் 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்புக்கும் அதனைத் தந்த சிறிமாவோவின் ஆட்சிக்கும் முக்கிய பங்கு இருக்கிறது.

அடிப்படை உரிமைகள்

இலங்கையின் முதலாவது குடியரசு யாப்பின் ஏனைய சில முக்கிய அம்சங்களையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இந்த அரசியல் யாப்பு, அரச கொள்கைத் தத்துவங்கள் என்ற ஓர் அம்சத்தையும் கொண்டிருந்தது. அதாவது, அரசு இயங்கவேண்டிய வழிமுறையைக் காட்டும் வழிகாட்டிகளாக இந்த அரச கொள்கைத் தத்துவங்கள் அமைந்தன. ஆனால், இவை எந்தவொரு சட்டரீதியான உரிமைகளையும் வழங்கவில்லை என்பதால், இவற்றினடிப்படையில் எந்தவொரு நீதி வழங்கும் மன்றின் முன்பும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாததாக இருந்தது.

ஆகவே, இவை வெற்று அலங்கார வார்த்தைகளாகவே இருந்தன என்பதுதான் யதார்த்தம். அத்தோடு, இந்த அரசியல் யாப்பினூடாகவே முதன்முறையாக அடிப்படை உரிமைகளுக்கு அரசியல் யாப்பில் அங்கிகாரம் வழங்கப்பட்டது. 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பில், பெரும்பாலும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கே அங்கிகாரம் வழங்கப்பட்டது.

சமத்துவம், சம பாதுகாப்பு, சிந்தனைக்கான, நம்பிக்கைக்கான, மதத்துக்கான சுதந்திரம், தனிமனிதச் சுதந்திரம், தனிமனித பாதுகாப்பு, தமது கலாசாரத்தைக் கடைப்பிடிக்கவும் ஊக்குவிப்பதற்குமான சுதந்திரம், ஒன்றுகூடலுக்கான, பேச்சுக்கான மற்றும் வெளிப்பாட்டுக்கான சுதந்திரம், நடமாட்டத்துக்கான சுதந்திரம், பொதுத்துறை நியமனங்களில் பாகுபாடின்மைக்கான சுதந்திரம் போன்றவற்றுக்கு அரசியலமைப்பில் அங்கிகாரம் வழங்கப்பட்டது. ஆனாலும் இவை மட்டுப்பாடுகளற்ற சுதந்திரமாக இருக்கவில்லை.

தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு, தேசிய பாதுகாப்பு, தேசிய பொருளாதாரம், பொது மக்களின் பாதுகாப்பு, பொது ஒழுங்கு, பொது சுகாதாரத்தையும் பொது ஒழுக்கத்தையும் பாதுகாத்தல், மற்றவர்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாத்தல், அரச கொள்கைத் தத்துவங்களை நடைமுறைப்படுத்தல் போன்ற காரணங்களுக்காக சட்டரீதியாக அடிப்படை உரிமைகளை மட்டுப்படுத்தமுடியும் என்றும் முதலாவது குடியரசு அரசியல் யாப்பு கூறியது. ஆகவே, இந்த குறித்த காரணங்களுக்காக பேச்சுச் சுதந்திரம், மதச் சுதந்திரம், தனிமனிதச் சுதந்திரம் என்பவற்றைக் கூட மட்டுப்படுத்தக்கூடியதாக இருந்தது.

அடிப்படை உரிமைகள் மீதான மட்டுப்பாடானது, அடிப்படை உரிமைகள் வழங்கிய பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் ஒன்றாக இருந்தது. அரசாங்கம் அறிமுகப்படுத்திய சில சட்டமூலங்கள், அரசியல் யாப்பு வழங்கிய அடிப்படை உரிமைகளின் அடிப்படையில் எதிர்க்கப்பட்டபோது, அரசியலமைப்பு நீதிமன்றம் குறித்த சட்டமூலம் அடிப்படை உரிமைகளுக்கு குந்தகமானது எனினும் அரச கொள்கைத் தத்துவங்களை நடைமுறைப்படுத்த அது அவசியமானது என்று சொன்னது.

இந்த அடிப்படை உரிமைகளுக்கான அரசியலமைப்பு அங்கிகாரம் என்பது, வெறும் கண்துடைப்பாகவே தோன்றுகிறது. ஏனெனில், சோல்பரி யாப்பின் 29(2) சிறுபான்மை மக்களுக்கு பெரும் பாதுகாப்பை அரசியலமைப்பு அளவிலேனும் வழங்கியிருந்தது. அதையொத்த பாதுகாப்பை அடிப்படை உரிமைகள் சரத்து வழங்கும் என்றே அன்றைய அரசியலமைப்பு அமைச்சர் கலாநிதி கொல்வின் ஆர்.டீ.சில்வா உள்ளிட்ட அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்டு வந்தனர். ஆனால், சோல்பரி யாப்பின் 29(2) சரத்தானது எந்தவித மட்டுப்பாடுகளும் அற்றதொன்றாகும். மாறாக முதலாவது குடியரசு யாப்பில் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளானவை பெருத்த மட்டுப்பாடுகளுக்குட்டவையாகும்.

மேலும், முதலாவது குடியரசு யாப்பின் 18(3) சரத்தானது, ஏலவே நடைமுறையிலுள்ள சட்டங்கள், அவை அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமைகளுக்கு முரணானவை எனினும் கூட, அச்சட்டங்கள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று கூறியது. இது அடிப்படை உரிமைகள் சரத்தையே கேலிக்குள்ளாக்கும் ஒரு செயலாகும். இந்தியாவின் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது, அதில் அடிப்படை உரிமைகள் முக்கிய இடம் பிடித்திருந்தன. இந்திய அரசியலமைப்பின் 13(1) சரத்தானது, ஏலவே நடைமுறையிலுள்ள சட்டங்கள், அடிப்படை உரிமைகளுக்கு முரணானது எனின், அத்தகைய முரண்பாடுகள் உடைய அம்சங்கள் செல்லுபடியற்றதாகும் என்று கூறுகிறது. இந்த இரண்டு நாடுகளின் அரசியலமைப்புகளில் அடிப்படை உரிமைகள் பற்றிய நிலைப்பாடானது, எதிரெதிர் துருவமாக இருப்பதைக் காணலாம்.

ஒன்றில், அடிப்படை உரிமைகள் பாதுகாகக்கப்பட வேண்டும் என்ற எண்ணப்பாடு மேலோங்கி நிற்கிறது. மற்றையதில், அடிப்படை உரிமைகள் வெறும் அலங்கார வார்த்தைகளாக இடம்பெற்றிருக்கிறது. அதுமட்டுமின்றி, அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் நீதிப்பொறிமுறையொன்றை முதலாவது குடியரசு அரசியல் யாப்பு குறிப்பிடவில்லை. அரசின் நிர்வாகக் கரத்தினால் அடிப்படை உரிமைகள் மீறப்படும்போது, அதன்பால் நீதிக்கரத்தை அணுகுவதற்கான பொறிமுறையொன்று இருக்கவில்லை.

ஆயினும், ரிட் மனு ஒன்றிம் மூலமோ, நட்டஈட்டு நடவடிக்கையொன்றின் மூலமோ, அறிவிப்பு நடவடிக்கையொன்றின் மூலமோ, தடையுத்தரவு மனு ஒன்றின் மூலமோ அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட நீதிமன்றை அணுக முடியும் என்பதே சட்டவியலாளர்களின் கருத்து. 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசியலமைப்பு நடைமுறையிலிருந்த ஏறத்தாழ ஐந்து வருட காலத்தில், குணரத்ன எதிர் மக்கள் வங்கி என்ற ஒரேயோர் அடிப்படை உரிமை வழக்கு மட்டுமே இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

(அடுத்தவாரம் தொடரும்...)

- See more at: http://www.tamilmirror.lk/171171/-%E0%AE%86%E0%AE%AE-%E0%AE%86%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%AA-%E0%AE%AA-#sthash.O5cz6nkc.dpuf
Link to comment
Share on other sites

முதலாவது குடியரசு அரசியல் யாப்பும் சிறுபான்மையினரும்
 
09-05-2016 09:26 AM
Comments - 0       Views - 0

article_1462766512-Oldp.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 39)

முதலாவது குடியரசு யாப்பின் கீழ் நீதித்துறை

சோல்பரி அரசியல் யாப்பின் கீழ், பிரதம நீதியரசர் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், பிரதமரின் ஆலோசனையின் பேரில் அரச தலைவரினால் நியமிக்கப்படுவர் என்ற விடயத்தில், 1972ஆம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்பு எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. 1946ஆம் ஆண்டு முதல், பிரதம நீதியரசர் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அல்லாத ஏனைய நீதித்துறை உத்தியோகத்தர்களின் நியமனம், இடமாற்றம், பதவிநீக்கம், ஒழுக்காற்று நடவடிக்கைகள் என்பன, நீதிச்சேவை ஆணைக்குழு வசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த விடயத்தில் முதலாவது குடியரசு யாப்பு மாற்றமொன்றை ஏற்படுத்தியது. நீதிச் சேவை ஆணைக்குழுவுக்குப் பதிலாக, ஐந்து பேரடங்கிய நீதிச் சேவை ஆலோசனைச் சபை ஒன்றையும், மூன்று பேர் கொண்ட நீதிச் சேவை ஒழுக்காற்றுச் சபையொன்றையும் ஸ்தாபித்தது. இரண்டுக்கும் பிரதம நீதியரசர் தலைமைதாங்கினார்.

நீதிச்சேவை உத்தியோகத்தர்களின் நியமனம் பற்றிய பரிந்துரைகளை, நீதிச் சேவை ஆலோசனைச் சபை அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கும், நீதிச் சேவை உத்தியோகத்தர்களை நியமிக்கும் அதிகாரம் அமைச்சரவைக்கு வழங்கப்பட்டது. நீதிச் சேவை ஆலோசனைச் சபை பரிந்துரைகளை மீறி, அது பரிந்துரைக்காத நபர்களைக் கூட நியமிக்கும் அதிகாரம் அமைச்சரவைக்கு இருந்தது. அத்தகைய சந்தர்ப்பங்களில் அதற்கான காரணத்தை தேசிய அரச சபையில் (முதலாவது குடியரசு யாப்பின் கீழ் சட்டவாக்கத் துறையான நாடாளுமன்றம், தேசிய அரச சபை என்றழைக்கப்பட்டது) சமர்ப்பித்தல் வேண்டும். நீதித்துறை உத்தியோகத்தர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கு அதிகாரம் நீதிச் சேவை ஒழுக்காற்று சபைக்கு இருந்ததுடன், தேசிய அரச சபையின் தீர்மானத்தின்படி, நீதிச் சேவை உத்தியோகத்தர் ஒருவரை பதவிநீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தது.

ஆகவே, 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பின் கீழ் நீதித்துறையின் மீது, சட்டவாக்க மற்றும் நிர்வாகத் துறையின் ஆதிக்கம் திணிக்கப்பட்டது. இது பற்றி, 'இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் நிர்வாகச் சட்டம் (ஆங்கிலம்)' என்ற தனது நூலில் கருத்துரைத்த ஜே.ஏ.எல்.குரே: '1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பினால் ஏற்படுத்தப்பட்ட மாற்றமானது, சுதந்திரமான நீதித்துறைச் செயற்பாட்டுடன் இயைபுறுவதாக அமையவில்லை' என்கிறார். நீதித்துறையின் சுதந்திரத்தை இல்லாதொழித்து, அதனுள் அரசியல் தலையீட்டை முதலாவது குடியரசு யாப்பு ஏற்படுத்தியது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

முதலாவது குடியரசு யாப்புச் சட்டம் தொடர்பிலான நீதி மறு ஆய்வு அதிகாரம் தொடர்பிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. குறித்தவொரு சட்டமானது, அரசியலமைப்புக்கு முரணானது எனின் அதனை மறு ஆய்வு செய்யும் அதிகாரம் நீதித்துறைக்கு இருந்தது. முதலாவது குடியரசு யாப்பானது இது தொடர்பில் சில மட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது. சட்டம் தொடர்பிலான நீதி மறு ஆய்வு அதிகாரத்தை அரசியலமைப்பு நீதிமன்றத்துக்கு வழங்கியதுடன், சட்ட மூலமொன்று தேசிய அரச சபையில் நிறைவேற்றப்பட முன்பதாக, அச்சட்டமூலம் தேசிய அரச சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, ஒரு வார காலத்துக்குள் மட்டுமே அதனை நீதி மறு ஆய்வு செய்ய முடியும் என்றும் தேசிய அரச சபையினால் நிறைவேற்றப்பட்டு, சட்டமானதன் பின்னர் அதனை நீதி மறு ஆய்வு செய்யும் அதிகாரம் நீதித்துறைக்கு இல்லை என்றும் கூறியது.

அது மட்டுமல்லாது, தேசிய நன்மை கருதிய அவசரச் சட்டமூலம் என்று அமைச்சரவையால் தீர்மானிக்கப்படும் சட்டமூலங்கள் மீதான அரசியலமைப்பு நீதிமன்றின் கருத்தை, நீதிமன்றம் கூடிய இருபத்து நான்கு மணிநேரத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, 55ஆவது சரத்து கூறியது. இந்த நடைமுறை பொதுவாக துஷ்பிரயோகம் செய்யப்படுவதை, இது நடைமுறையிலுள்ள நாடுகளில் நாம் காணலாம்.

இந்த ஏற்பாடுகள் தேசிய அரசு சபைக்கு மிகப் பலம்வாய்ந்த அதிகாரங்களை வழங்கியதுடன், நீதித்துறையின் அதிகாரங்களைப் பெருமளவு மட்டுப்படுத்தியது. எந்தவொரு அரசியலமைப்பு ஜனநாயகத்திலும் நீதித்துறைக்கு சட்டங்களின் நீதி மறு ஆய்வு அதிகாரம் என்பது அவசியம் இருக்க வேண்டும். சட்டவாக்கத்துறையின் வல்லாதிக்கத்தை தடுக்கவும், அரசியலமைப்பைப் பாதுகாக்கவும் இது அவசியமாகும். முதலாவது குடியரசு யாப்பு இந்த அதிகாரத்தையும் அர்த்தமற்றதொன்றாக்கியது.

முதலாவது குடியரசு யாப்பின் கீழ் பொதுச் சேவை

1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்புக்கு முன்பதாக, பொதுச் சேவை உத்தியோகத்தர்களின் நியமனம், இடமாற்றம், பதவிநீக்கம், ஒழுக்காற்று நடவடிக்கைகள் என்பன ஆளுநரினால் (அரச தலைவரினால்) நியமிக்கப்படும் பொதுச் சேவை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டது. ஆனால், முதலாவது குடியரசு யாப்பில் இந்நிலைமை மாற்றியமைக்கப்பட்டது. பொதுச் சேவை ஆலோசனைச் சபை மற்றும் பொதுச் சேவை ஒழுக்காற்றுச் சபை என இரண்டு சபைகள் நியமிக்கப்பட்டன.

பொதுச் சேவை ஆலோசனைச் சபையின் பரிந்துரையின் பெயரில் பொதுச் சேவைக்கான நியமன அதிகாரம் உரிய அமைச்சருக்கு வழங்கப்பட்டது. உரிய அமைச்சர், அவ்வதிகாரத்தை தமக்குக் கீழான அரச உத்தியோகத்தருக்கு வழங்கத்தக்கதாக இருந்தது. ஒழுக்காற்று நடவடிக்கைகள் பொதுச் சேவை ஒழுக்காற்றுச் சபையின் பரிந்துரையின் பெயரில் செய்யப்பட்டது. ஆகவே, பொதுச் சேவையின் மொத்தமும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இது சுதந்திரப் பொதுச் சேவை என்பதை இல்லாதொழித்து, அரசியல்மயப்படுத்தப்பட்ட பொதுச் சேவையின் உருவாக்கத்துக்கு வழிவகுத்தது. உயர் மதிப்புமிகு சேவையாக இருந்த பொதுச் சேவை, அரசியல்மயமாக்கத்தின் பின்னர், அரசியல்வாதிகளின் ஆளுகைக்குட்பட்ட கூடாரமாக மாறியது என்பதுதான் நிதர்சனம்.

இது பற்றி தனது பொதுச் சேவை பற்றி அனுபவத்தை பகிர்ந்த கலாநிதி சுதத் குணசேகர 'இன்று அரசியல்வாதிகளும் பொதுச் சேவை உத்தியோகத்தர்களும், பொதுமக்களின் சேவகர்களாக இருப்பதை நிறுத்திக் கொண்டுவிட்டார்கள். அரசியலும் பொதுச் சேவையும் தனிப்பட்ட நலன்களுக்காக பொதுமக்களைச் சுரண்டும், கொள்ளையடிக்கும் விடயமாக மாறிவிட்டது. பொதுச் சேவையென்பது முழுநேரமாக அரசியல்வாதிகளுக்கு சேவை புரியும் ஒன்றாக மாறிவிட்டது, அது பொது மக்களுக்காக சேவையாற்றும் சுதந்திர பொதுச் சேவை அல்ல. அதனால் தனிப்பட்ட நலன்களுக்காக அதிகார துஷ்பிரயோகம் செய்தலே நடைமுறையாகிவிட்டது' என, தனது 35 வருட கால பொதுச் சேவை அனுபவத்தின் அடிப்படையில் பதிவு செய்கிறார்.

சிறுபான்மை மக்களின் நிலை

1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பானது, இந்நாட்டின் மக்கள் மீது, குறிப்பாக தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது ஏற்படுத்திய தாக்கத்தைப் புரிந்துகொள்வதற்கு அதன் உள்ளடக்கத்தின் முக்கிய அம்சங்களை அலசிப்பார்த்தல் அவசியமாகியது. எந்தவொரு பிரகடனமும் அவசியப்பட்டு இருக்காத நிலையில், இலங்கையை ஒற்றையாட்சி நாடாகப் பிரகடனப் படுத்தியது முதல், பல மதங்களும் நம்பிக்கைகளும் உள்ள ஒரு நாட்டில், பெரும்பான்மையினர் பின்பற்றும் மதத்துக்கு முன்னுரிமை கொடுத்தமையும் பிரதானமாக இருமொழிகள் பேசும் மக்களைக் கொண்ட நாட்டில், ஒரு மொழிக்கு மட்டும் உத்தியோகபூர்வ மொழியாக அங்கிகாரம் கொடுத்தமையும், சிறுபான்மை மக்கள் பேசும் மொழியை இரண்டாந்தர நிலையில் வைத்தமையும், சிறுபான்மை மக்களுக்கு சோல்பரி அரசியல்யாப்பின் 29(2) பெயரளவிலேனும் வழங்கிய பாதுகாப்பை இல்லாதொழித்தமையும், எந்நிலையிலும் பாதுகாக்கப்பட வேண்டிய மனித உரிமைகளை வெறும் அலங்காரமாக உருவாக்கியமையும், எந்தவொரு ஜனநாயக நாட்டுக்கும் தேவையான அதிலும் குறிப்பாக பல்லின மக்கள் வாழும் ஜனநாயக நாடுகளுக்கு அவசியமான நீதித்துறையின் சுதந்திரத்தைக் குறைத்தமையும், நீதி மறு ஆய்வு அதிகாரத்தை மட்டுப்படுத்தியமையும், சமத்துவமிக்க நாட்டுக்கு தேவையான சுதந்திரப் பொதுச் சேவையை இல்லாது செய்தமையும் என ஒட்டுமொத்தத்தில் இந்நாட்டு மக்களை, சிறுபான்மையினரை, குறிப்பாக தமிழர்களை வஞ்சித்த ஓர் அரசியலமைப்பாகவே 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பு அமைந்தது என்பதுதான் நிதர்சனம். நாட்டின் பெரும்பான்மையினரான சிங்கள-பௌத்த வாக்கு வங்கியைக் கையகப்படுத்துவதற்கான போராட்டத்தில் பெரும்பான்மைக் கட்சிகள் ஆளுக்காள் போட்டியிட்டு, பேரினவாதத்தின் நலன்களை முன்னிறுத்தின என்பதுதான் சுதந்திர இலங்கையின் உண்மை நிலைவரம்.

சிங்களத்துடன் தமிழும் சேர்த்து உத்தியோகபூர்வமொழியாக்கப்பட்டிருந்தால் மொழிப்பிரச்சினை எழுந்திருக்காது. பௌத்தத்துக்கு மட்டும் முன்னுரிமையளிக்காது, இலங்கையை மதச்சார்பற்ற அரசாக தொடர்ந்து வைத்திருப்பின் நிலைமைகள் வேறாக இருந்திருக்கலாம். சுதந்திர நீதித்துறை இருந்திருந்தால், இந்நாட்டின் சிறுபான்மை மக்கள் தங்கள் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை ஏற்படாது இருந்திருக்கலாம்.

சுதந்திர பொதுச் சேவை இருந்திருந்தால், அரசியல் தொடர்பு அல்லது அரசியல்வாதிகளின் விருப்பு அல்லது தேவை என்ற அடிப்படைகளிலன்றி, தகுதி அடிப்படையில் பொதுச் சேவை நியமனங்கள் நடந்திருக்கலாம். ஆனால் இவை நடக்கவில்லை. பேரினவாத வாக்கு வங்கி அரசியலுக்கான போட்டியில் நாட்டு மக்கள் பகடைக்காய்களாக்கப்பட்டனர். சிங்கள அரசியலில் சாதியும் குடும்பமும் (ஆங்கிலம்) என்ற தன்னுடைய நூலில் ஜனிஸ் ஜிகின்ஸ்,'1956 முதல் அடுத்த 20 வருடங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது செயற்பாட்டை முழுமையாக அல்லது பெருமளவுக்கு தமது ஆதரவாளர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையிலும் அரசியல் தலையீடுகள் மூலம் தமது வாக்கு வங்கிக்கு இலாபங்கள் கிடைக்குமாறும் மேற்கொண்டனர்' என்று குறிப்பிடுகிறார்.

நாடு, நாட்டு மக்கள், நாட்டின் நலன் என்பதைத் தாண்டி, வாக்கு வங்கி என்பதற்குள் அதுவும் இனவாரி, மதவாரி, பிரதேசவாரி, சாதிவாரி வாக்கு வங்கிகளுக்குள், இலங்கையின் அரசியல் அடைபட்டுப்போனது. இதன் விளைவாக, பெரும்பான்மை மக்களான சிங்கள பௌத்தர்கள் நன்மைகளை அனுபவிக்க, சிறுபான்மையினர் பெரும் பாதிப்புக்களை சந்திக்க வேண்டியதாக இருந்தது. 'தனிச்சிங்கள'ச் சட்டம் வந்ததால்தான், கிராமத்திலிருந்த சிங்கள இளைஞனுக்கும் அரச வேலை கிடைத்தது என சிங்கள அரசியல் தலைவர்கள் 'தனிச் சிங்கள'ச் சட்டத்தின் புகழ் பாடுவதைக் காணலாம்.

அது உண்மை. அனைவருக்கு தமது தாய்மொழியில் கல்வி கற்கும், தொழில் செய்யும், அன்றாட வாழ்க்கையின் பல்வேறு விடயங்களிலும் தொடர்பாடல் செய்யும் உரிமை அவனுடைய தாய்நாட்டில் இருக்கவேண்டும். ஆனால், சிங்கள இளைஞனுக்கு இருக்கும் அதே உரிமை, இந்நாட்டின் தமிழ் பேசும் இளைஞனுக்கும் வேண்டும் அல்லவா, இலங்கையிலுள்ள சிங்கள பௌத்தன் ஒருவனுக்குள்ள அதேயுரிமை, இலங்கையிலுள்ள சிங்களக் கத்தோலிக்கனுக்கும் தமிழ் இந்துவுக்கும் தமிழ் இஸ்லாமியனுக்கும் தமிழ் பௌத்தனுக்கும் தமிழ் கத்தோலிக்கனுக்கும் பறங்கியனுக்கும் மற்றும் எல்லாத்தரப்பினருக்கும் இருக்க வேண்டும் அல்லவா, இதை 1956 முதல் பதவிக்கு வந்த எல்லா அரசாங்கங்களும் உணரத் தவறியதன் விளைவுதான் இலங்கையின் வரலாறு இரத்தக்கறையில் எழுதப்படவேண்டியதாக மாறியது.

சிறுபான்மை மக்கள், குறிப்பாக தமிழ் மக்கள் மீதான வஞ்சனைப்போக்கு, 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசியலமைப்புடன் நின்று விடவில்லை. அதனைத் தொடர்ந்தும் இடம்பெற்ற பல விடயங்கள்தான் இந்நாட்டின் வரலாற்றின் கறுப்புப் பக்கங ;களை இரத்தக் கறைகொண்டு எழுதக் காரணமானது.

(அடுத்தவாரம் தொடரும்...)

- See more at: http://www.tamilmirror.lk/171753/%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%AF-%E0%AE%A9%E0%AE%B0-%E0%AE%AE-#sthash.6XUG2gNc.dpuf
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

'தரப்படுத்தல்' எனும் ஓரவஞ்சனை
 
16-05-2016 10:01 AM
Comments - 0       Views - 180

article_1463373428-Old.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 40)

தமிழ் மக்களின் நிலை

1972ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி, சிறிமாவோ தலைமையிலான அரசாங்கம் அமைத்த அரசியலமைப்புப் பேரவையினால் உயிர்கொடுக்கப்பட்டு, முதலாவது குடியரசு யாப்பு அமுலுக்கு வந்தது. தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் அறிமுகமாகிய இந்தப் புதிய அரசியலமைப்பு, அதன் சட்டவாக்கத்துறையிடம் அதிகாரங்களைக் குவித்தது. முதலாவது குடியரசு யாப்பின் கீழான சட்டவாக்க சபையான 'தேசிய அரசு சபைக்கு' எத்தகைய சட்டத்தையும் உருவாக்கத்தக்க வலு இருந்ததுடன், நீதித்துறையின் நீதி மறு ஆய்வு அதிகாரமும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. தமிழ் மக்களின் பிரதிநிதிகள், அரசியலமைப்புப் பேரவையைப் புறக்கணித்திருந்தனர், இந்திய வம்சாவளி மக்களுக்கு அரசியலமைப்புப் பேரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டேயிருக்கவில்லை. ஆகவே, தமிழர்களைப் புறக்கணித்த, தமிழர்களால் புறக்கணிக்கப்பட்ட அரசியலமைப்பாகவும், சிங்கள மொழிக்கும் பௌத்த மதத்துக்கும் முன்னுரிமையளிக்கும் அரசியலமைப்பாகவுமே முதலாவது குடியரசு அரசியலமைப்பு அமைந்தது. தமிழ் ஐக்கிய முன்னணி, தமது ஆறு அம்சக்கோரிக்கைகளான:

01. தமிழ் மொழிக்கு, சிங்கள மொழிக்குச் சமனான அந்ஸ்து வழங்கப்பட வேண்டும்.

02. இலங்கையை தமது வாழ்விடமாகக் கொண்டுள்ள அனைத்துத் தமிழ் பேசும் மக்களுக்கும் எந்தவித பாகுபாடுமற்ற குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதுடன் எந்தக் குடிமகனதும் குடியுரிமையைப் பறிக்கும் அதிகாரம் அரசுக்கு இருக்கக்கூடாது.

03. அரசானது மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும் என்பதுடன், எல்லா மதங்களுக்கு சம அளவில் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

04. சகல மக்களுடையதும், இனத்தவர்களுடையதுமான அடிப்படை உரிமைகள் அங்கிகரிக்கப்படுவதுடன் பாதுகாக்கப்பட வேண்டும்.

05. சாதீயம், தீண்டாக்கெதிராக அரசியலமைப்பு பாதுகாப்பொன்றை ஏற்படுத்த வேண்டும்.

06. ஜனநாயக சோசலிஸ சமூகமொன்றில், அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட்ட அரசாங்கக் கட்டமைப்புத்தான் மக்களதிகாரம் கொண்ட பங்குபற்றல்மிகு ஜனநாயகத்தைக் கட்டியெழுப்பும்.

என்பவற்றை பிரதமரிடம் சமர்ப்பித்தும் அதனால் ஒரு பயனும் இருக்கவில்லை.

பதவி விலகினார் செல்வா

இந்நிலையில், புதிய அரசியலமைப்பின் கீழ் சத்தியப்பிரமாணம் எடுக்க வேண்டிய கட்டாயம் அமைச்சர்கள், தேசிய அரசு சபை உறுப்பினர்கள் (நாடாளுமன்றத்தின் கீழவை உறுப்பினர்கள்), நீதிபதிகள் போன்றோருக்கு இருந்தது. 1972ஆம் ஆண்டு அரசியலமைப்பை எதிர்த்த தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு, இதுவொரு சிக்கல் நிலையைத் தோற்றுவித்தது. 'இலங்கைக் குடியரசுக்கு விசுவாசமாக இருக்கவும், இலங்கைக் குடியரசின் அரசியலமைப்பின்படி ஒழுகவும் சத்தியப்பிரமாணம் செய்கிறேன்' என்ற வகையிலமைந்த சத்தியப்பிரமாணம் எடுக்க வேண்டியிருந்தது.

குறித்த அரசியலமைப்பை எதிர்த்தவர்கள், புறக்கணித்தவர்கள் அதே 'அரசியலமைப்பின்படி ஒழுகுவதற்கு' சத்தியப்பிரமாணம் செய்வது ஏற்புடையதா, என்பதே சிக்கல் நிலைக்குக் காரணம். இலங்கைத் தமிழரசுக் கட்சி, இளைஞர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், தமது சட்டவாக்கத்துறை பிரதிநிதிகள் குறித்த சத்தியப்பிரமாணத்தை எடுத்து, தேசிய அரசு சபைக்குச் செல்ல அனுமதியளிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி, 1972ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் திகதி, தமிழரசுக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகளும் தேசிய அரசு சபையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

தமிழரசுக் கட்சியினரின் இந்தச் செயல், இளைஞர்களிடையே கடும் அதிருப்தியையும் விசனத்தையும் உருவாக்கியது. தமிழர்களின் பிரதிநிதிகளும் முதலாவது குடியரசு அரசியல் யாப்பின் கீழ் சத்தியப்பிரமாணம் செய்தமையானது, தமிழ் மக்கள் அதனை ஏற்றுக்கொண்டார்கள் என்ற பிம்பத்தை தோற்றுவிப்பதாக அமையும் என்பது, இளையோர் தரப்பின் வாதமாக இருந்தது. தமிழ் மக்களின் எந்தவொரு அபிலாஷைகளுக்கும் இடமளிக்காத, அதேவேளையில், எல்லாச் சமரச முயற்சிகளுக்கான வாயில்களையும் அடைத்துவிட்டுள்ள இந்தப் புதிய அரசியலமைப்பை, தமிழ் மக்கள் எந்தவகையிலும் ஆதரிக்க முடியாது என்பதே அவர்களது நிலைப்பாடாக இருந்தது.

சட்டவாக்க சபையிலிருந்து வெளியேறி, வெகுஜனப் போராட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும் என இளைஞர்கள் தமது பிரதிநிதிகளுக்கு அழுத்தம் தந்தனர். இந்த நிலையில், தமிழ் பிரதிநிதிகளும் சத்தியப்பிரமாணம் செய்தமையை அரசாங்கம் தமக்குச் சாதகமானதொன்றாகவும், தமிழ் மக்கள் புதிய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதாகவும் காட்டிக்கொண்டது.

இந்நிலையில், இளைஞர்களது எதிர்ப்பு, தமிழரசுக்கட்சிக்குள் அதிகமாகத் தொடங்கிய வேளையில், தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவரான சா.ஜே.வே.செல்வநாயகம், 1972 ஒக்டோபர் 3ஆம் திகதி தன்னுடைய தேசிய அரசு சபை உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்தார். தமிழ் மக்களின் அபிலாஷைகளை அரசாங்கம் தெரிந்துகொள்ள வேண்டுமானால் இடைத்தேர்தல் நடத்தட்டும், அதில் தமிழ் மக்கள், புதிய அரசியலமைப்பு தொடர்பான தமது நிலைப்பாடு என்னவென்பதைப் புரியவைப்பார்கள் என்று சொன்னார் செல்வநாயகம்.

தனது இராஜினாமாத் தொடர்பில், தேசிய அரசு சபையில் உரையாற்றிய சா.ஜே.வே.செல்வநாயகம், 'முடிவு தமிழ் மக்களுடையதாகும். நடைபெற்ற விடயங்களைக் கருத்தில்கொள்ளும் போது, என்னுடைய கொள்கையானது, இலங்கை தமிழர்களுக்கு தாம் அடிமை இனமாக இருக்கப் போகிறார்களா, சுதந்திர மக்களாக இருக்கப் போகிறார்களா என அவர்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை இருக்கிறது.

இந்த நிலைப்பாடு தொடர்பில் அரசாங்கம், என்னோடு மோதட்டும். நான் தோற்றால், என்னுடைய கொள்கையை நான் கைவிட்டுவிடுகிறேன். அரசாங்கம் தோற்குமானால், அது தன்னுடைய கொள்கையையும், அரசியலமைப்பையும் தமிழ் மக்கள் ஆதரிக்கிறார்கள் என்று சொல்லுவதை நிறுத்த வேண்டும்' என்று குறிப்பிட்டார். செல்வநாயகத்தின் இந்த இராஜினாமாவானது, தமிழ் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. தமிழ் இளைஞர்கள், காந்திய வழியினை விட, சேர்ச்சிலின் 'இரத்தம், வேதனை, கண்ணீர், வியர்வை' என்ற வழியை விரும்பினார்கள். ஏனெனில், சிங்கள-பௌத்த தலைமைகள், பிரித்தானியரைப்போல நாகரிகமடைந்தவர்களாக இல்லை என்று அவர்கள் கருதினார்கள் என பேராசிரியர்.ஏ.ஜே.வில்சன் குறிப்பிடுகிறார். இந்தப் பதவி விலகல் அறிவிப்பை யாழ்ப்பாணத்தில் செல்வநாயகம் செய்தபோது, ஓர் இளைஞன் அவருக்கு இரத்தத் திலகமிட்டான்.

'நாம் இந்த நாட்டிலே மரியாதையோடு வாழ வேண்டுமென்றால், நாம் இந்த அரசியலமைப்பை எதிர்க்க வேண்டும், இல்லையென்றால், நாம் அடிமைகளாக வாழவேண்டியதுதான்' என்று அந்தக் கூட்டத்தில் செல்வநாயகம் பேசினார். செல்வநாயகம் பதவி விலகியவுடன் இடைத் தேர்தல் நடத்துவதை அரசாங்கம் விரும்பவில்லை. அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்ததால், 1975ஆம் ஆண்டுவரை காங்கேசன்துறை இடைத் தேர்தலை அரசாங்கம் நடத்தவேயில்லை.

பல்கலைக்கழக அனுமதியில் 'தரப்படுத்தல்'

இலங்கைத் தமிழ்ச் சமூகமானது, அதிலும் குறிப்பாக, யாழ்ப்பாணத் தமிழ் சமூகமானது காலனித்துவக் காலகட்டத்திலிருந்து கல்விச் சமூகமாக தன்னை வடிவமைத்திருந்தது. தன்னுடைய பிரதான வாழ்வாதாரமாக கல்வியினாலும் விளையும் தொழில்வாய்ப்பை, குறிப்பாக அரசதுறை வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டது. குறிப்பாக, ஆங்கில வழிக் கல்வியில் உயர் தேர்ச்சி பெற்றிருந்தது. அதனால்தான் இலங்கையின் காலனித்துவ வரலாற்றிலும், சுதந்திரத்தின் பின்னரும் கூட, மிக முக்கிய பதவிகளிலும் மருத்துவம், பொறியியல், சட்டம் மற்றும் சிவில் உத்தியோகத்திலும் தமிழர்கள் குறிப்பிடத்தக்க நிலையிலிருந்தனர்.

சிறிமாவோ தலைமையிலான அரசாங்கத்தினால் 1971இலும், 1972இலும் பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் அறிமுகப்படுத்தப்பட்ட 'தரப்படுத்தலானது' தமிழ் மக்களின் அடிமடியிலேயே கைவைப்பதாக அமைந்தது. 'தரப்படுத்தலின்' மூலம் பல்கலைக்கழக அனுமதிகள் தொடர்பில், வெளிப்படையாக இன ரீதியாக ஓரவஞ்சனையை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது. இதுவே தமிழ் இளைஞர்கள் கிளர்ந்தெழ முக்கிய காரணமாகவும் அமைந்தது. ஏனெனில், கல்வி என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் வாழ்வின் உயிர்நாடியாக இருந்தது, 'தாம் திட்டமிட்டமுறையில் உயர் கல்வியிலிருந்து ஒதுக்கித்தள்ளப்படுகிறோம் என்பதைவிடக் கொடும் வேதனை தமிழர்களுக்கு இருக்கமுடியாது' என வோல்டர் ஷ்வாஸ் குறிப்பிடுகிறார்.

1956ஆம் ஆண்டு 'தனிச்சிங்கள'ச் சட்டத்தின் அறிமுகத்தோடு, தமிழ் மக்களின் வேலைவாய்ப்புகள் பெரும் பின்னடைவைச் சந்தித்திருந்தன. 1956இல் இலங்கை நிர்வாகச் சேவையில் 30 சதவீதமாக இருந்த தமிழர்கள், 1970இல் 5 சதவீதமானார்கள். 1956இல் மருத்துவம், பொறியியல், விரிவுரை போன்ற துறைகளில் அரசபணியில் 60 சதவீதமாக இருந்த தமிழர்கள், 1970இல் 10 சதவீதமாக ஆனார்கள்;. 1956இல் எழுதுவினைஞர் சேவையில் 50 சதவீதம் இருந்த தமிழர்கள், 1970இல் 5 சதவீதமாக ஆனார்கள். 1956இல் ஆயுதப் படையில் 40 சதவீதம் இருந்த தமிழர்கள், 1970இல் 1 சதவீதம் ஆனார்கள். தமிழ்ப் புலமையாளர்கள், தொழில்நிபுணர்கள் என பலரும் புலம்பெயர்ந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே தமிழ் மக்கள், அரச சேவையில் வஞ்சிக்கப்பட்டிருந்த நிலையில், சிறிமாவோ தலைமையிலான அரசாங்கம், தமிழ் மக்களின் உயர் கல்விக்கும் குந்தகம் விளைவிக்கும் 'தரப்படுத்தல்' நடைமுறையை அறிமுகப்படுத்தியது.

அன்றைய பல்கலைக்கழக அனுமதிகள், தகுதி அடிப்படையிலேயே அமைந்தன. அதிக புள்ளிகள் பெறுபவர்களுக்கு முன்னுரிமை. இதனால் அதிக போட்டி நிறைந்த மருத்துவம், பொறியியல் ஆகிய துறைகளுக்கு பெருமளவு மாணவர்கள், வடக்கு-கிழக்கிலிருந்தும் கொழும்பிலிருந்துமே தெரிவாகினர். 1970இல், பொறியியல்துறைக்கு ஏறத்தாழ 40 சதவீதமும், மருத்துவத்துறைக்கு ஏறத்தாழ 50 சதவீதமும், விஞ்ஞானத்துறைக்கு ஏறத்தாழ 35 சதவீதமும் தமிழ் மாணவர்கள் தகுதியடிப்படையில் அனுமதி பெற்றனர். இந்த நிலையை மாற்றவேண்டும் இனவாரிஃமதவாரி ஒதுக்கீட்டு முறை வேண்டும் என சிங்கள-பௌத்த அமைப்புக்கள் குரல் கொடுக்கத் தொடங்கின.

1971ஆம் ஆண்டு பல்கலைக்கழக அனுமதி தொடர்பில், 'இனவாரி' தரப்படுத்தல் முறையை சிறிமாவோ அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. அதாவது, குறித்த துறைக்கு பல்கலைக்கழக அனுமதி பெறுவதற்கு சிங்கள மாணவர்கள் பெற வேண்டிய புள்ளிகளைவிட, தமிழ் மாணவர்கள் பெற வேண்டிய புள்ளிகள் அதிகமாக இருந்தன. இரு இன மாணவர்களும், பரீட்சையை ஒரே மொழியில் (ஆங்கிலத்தில்) எழுதியிருப்பினும் இருவருக்குமான வெட்டுப்புள்ளிகளில் அதே வேறுபாடு இருந்தது. மருத்துவத்துறைக்கு அனுமதி பெற தமிழ் மாணவர்களுக்கு 250 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டபோது, சிங்கள மாணவர்களுக்கு வெறும் 229 புள்ளிகளே தேவை என நிர்ணயிக்கப்பட்டது. பௌதீகவியல் விஞ்ஞானத்துக்கு, தமிழ் மாணவர்களுக்கு 204 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டபோது, சிங்கள மாணவர்களுக்கு வெறும் 183 புள்ளிகளே வேண்டப்பட்டது. பொறியியலில், தமிழ் மாணவர்களுக்கு 250 புள்ளிகள் தேவை என நிர்ணயிக்கப்பட்ட போது, சிங்களவர்களுக்கு அது வெறும் 227 ஆக அமைந்தது. இந்தத் 'தரப்படுத்தல்' முறையை விமர்சித்த தேவநேசன் நேசையா, இதனை 'பாரதூரமான இனவெறி நடவடிக்கை' என்று குறிப்பிடுகிறார். இந்த நடவடிக்கை பற்றி குறிப்பிட்ட கே.எம்.டீ சில்வா, இது ஐக்கிய முன்னணி அரசு, இலங்கையின் இன-உறவுக்கு ஏற்படுத்திய பெருந்தீங்கு என்கிறார்.

1971ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த 'இனவெறி' 'தரப்படுத்தல்' முறை கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானதால், அடுத்தடுத்த வருடங்களில் அதில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதன் விளைவாக நான்கு வருடங்களில், 'மாவட்ட ஒதுக்கீட்டு முறையின்' அடிப்படையில், நான்கு வேறுபட்ட திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. வெளிப்படையான இனவாரி ஒதுக்கீட்டு முறைக்கு பதிலாக, மறைமுகமாக அதனைச் சாத்தியமாக்குவதாகவே 'மாவட்ட ஒதுக்கீட்டு முறை' அமைந்தது. தகுதி அடிப்படையில் அதிக புள்ளிகள் பெற்று வந்த தமிழ் மாணவர்கள், பல்கலைக்கழகம் செல்வதை மட்டுப்படுத்துபவையாகவே, இந்த ஒவ்வொரு முறைகளும் இருந்தன. இது பற்றி குறிப்பிடும் பேராசிரியர்.சீ.ஆர்.டீ சில்வா 'அடுத்தடுத்து வந்த ஒவ்வொரு மாற்றமும் சிங்களவர்களுக்கு நன்மை பயப்பனவாக இருந்தன, இது சிங்கள மக்களிடையே பெரும் ஆதரவு பெற்ற ஒன்றாக மாறியது. மருத்துவம், பொறியியல் ஆகிய துறைகளில் சிங்கள மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர, தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவு வீழ்ச்சி கண்டது' என்கிறார்.

இந்த இனவாரி ஒதுக்கீட்டு முறை, பல தகுதிவாய்ந்த தமிழ் இளைஞர்கள் பல்கலைக்கழகம் செல்வதைத் தடுத்தமை, தமிழ் இளைஞர்கள் கிளர்ந்தெழ முக்கிய காரணம் என, தனது இலங்கை இன முரண்பாடு பற்றிய அறிக்கையொன்றில் வேர்ஜீனியா லியரி குறிப்பிடுகிறார். இதையே பேராசிரியர் சீ.ஆர்.டீ.சில்வாவும் 'பல்கலைகழக அனுமதியில் பாகுபாடு என்ற விடயமே, யாழ்ப்பாண இளைஞர்களை களத்திலிறங்கிப் போராடச் செய்தது. அதுவே, தமிழ் ஐக்கிய முன்னணி தனிநாடு பிரிவினையைக் கோரவும் செய்தது' என்கிறார்.

ஆனால், இலங்கை அரசாங்கம் 'தரப்படுத்தலுக்கு' வேறு நியாயங்களைச் சொன்னது.

(அடுத்தவாரம் தொடரும்...)

- See more at: http://www.tamilmirror.lk/172313#sthash.EtCdnxoP.dpuf
Link to comment
Share on other sites


'தரப்படுத்தல்' தந்த விளைவு
 
23-05-2016 09:47 AM
Comments - 0       Views - 31

article_1463977408-Unive.jpgஎன்.கே.அஷோக்பரன்  LLB (Hons)

 

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 41)

பிரிவினைக்கு வித்திட்ட 'தரப்படுத்தல்'

'ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது, தொடக்க அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமானதாயிருத்தல் வேண்டும். தொடக்கக் கல்வி கட்டாயமாக்கப்படுதல் வேண்டும். தொழில்நுட்பக் கல்வியும் உயர் தொழிற்கல்வியும் பொதுவாகப் பெறப்படத்தக்கனவாயிருத்தல் வேண்டும். உயர் கல்வியானது, யாவருக்கும் திறமையடிப்படையின் மீது சமமான முறையில் கிடைக்கக் கூடியதாக்கப்படுதலும் வேண்டும்' - சரத்து 26 (1) - மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம்.

பல்கலைக்கழக அனுமதி தொடர்பில், சிறிமாவோ அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட 'தரப்படுத்தல்' கொள்கை, தமிழ் மக்களை, குறிப்பாக தமிழ் இளைஞர்களைக் கடுமையாகப் பாதித்தது. ஏற்கெனவே மொழியுரிமை பறிக்கப்பட்ட நிலையில், தமக்கான அரசாங்க வேலைவாய்ப்பு கேள்விக்குட்படுத்தப்பட்ட நிலையில், விரக்தியடைந்திருந்த தமிழ் இளைஞர்களுக்கு, இந்தத் 'தரப்படுத்தல்' நடவடிக்கையானது கடுஞ்சினத்தை ஏற்படுத்தியது.

தமிழ் இளைஞர்கள் இந்நாட்டில் தமிழர்களுக்கான பிரிவினை அரசியலை முன்னெடுக்க இதுவோர் ஆரம்பப்புள்ளியாக அமைந்தது எனலாம். இதுபற்றிக் கருத்துரைத்த சீ.ஆர்.டீ.சில்வா, 'தமிழ் இளைஞர்கள், தமக்கெதிரான இந்த ஓரவஞ்சனை பற்றி கசப்படைந்திருந்தனர். இவர்களின் உந்துதலால் தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி (தமிழர் விடுதலைக் கூட்டணி) உருவானது. பலரும் தனித் தமிழீழம் உருவாக்கப்படுதற்காக வன்முறையைக் கையிலெடுக்க சித்தம் கொண்டனர். முறையற்ற கொள்ளை முன்னெடுப்புக்களும். சிறுபான்மையினரின் நலனைக் கருத்திற்கொள்ளாத நடவடிக்கைகளும் இனமுரண்பாட்டை எத்தனை தூரம் அதிகரிக்கும் என்பதற்கு இது மிகச்சிறந்த எடுத்துக்காட்டு' என்கிறார்.

'தரப்படுத்தல்' - விவாதங்களும் விதண்டாவாதங்களும்

மறுபுறத்தில் அரசாங்கம் சார்பிலும், சிங்கள இனவாத சக்திகள் சார்பிலும் 'தரப்படுத்தலுக்கு' ஆதரவாக பிரசாரங்களும் வாதங்களும் வதந்திகளும் முன்வைக்கப்பட்டன. அன்றைய காலப்பகுதியில், தமிழ்மொழி மூலமான பரீட்சகர்கள், தமிழ்மொழி மூலமான மாணவர்களுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றனர், அவர்களுக்கு நிறையப் புள்ளிகளை வழங்குகின்றனர் என்ற வதந்தி தீயாகப் பரப்பப்பட்டது. ஆனால், இது உண்மையல்ல. ஆங்கில மொழிமூலத்தில் கல்வி இருந்தபோதே, மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட துறைகளுக்கு தமிழ் மாணவர்கள் தமது திறமையினடிப்படையில் அதிகளவில் அனுமதி பெற்றிருந்தனர். 1872இல் கொழும்பு மருத்துவக் கல்லூரி

ஸ்தாபிக்கப்பட்டபோது, அதில் ஏறத்தாழ பாதியளவு மாணவர்கள், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். தமிழர்கள் மத்தியில் நிபுணத்துவத் தொழில்சார் கல்விக் கலாசாரமொன்று உருவாகியிருந்தது. அது, 2-3 தலைமுறைகளாக முன்னெடுக்கப்பட்டதன் விளைவுதான், தமிழ் மாணவர்கள் பரீட்சைகளில் உயர் சித்தி பெறுதல், அதனூடாக அதிகளவில் பல்கலைக்கழக அனுமதி பெறுதல் என்ற நிலையை உருவாக்கியிருந்தது.

'தரப்படுத்தல்' அறிமுகப்படுத்தப்பட முன்பு திறமையடிப்படையில் மட்டுமே பல்கலைக்கழக அனுமதி அமைந்திருந்தது. 1964ஆம் ஆண்டு, இலங்கையின் இரண்டு பிரதமர்களின் மகளாக இருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கு திறமையடிப்படையில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை. அவர். தன்னுடைய உயர் கல்வியை அக்வைனாஸ் பல்கலைக்கழக கல்லூரியிலும், பின்னர் ‡பிரான்ஸ் நாட்டுப் பல்கலைக்கழகமொன்றில் புலமைப்பரிசில் பெற்று கல்வி கற்கச் சென்றார்.

சிங்களவர்களுக்கு, கலைப்பீடம் தவிர்ந்த ஏனைய துறைகளில் பல்கலைக்கழக அனுமதி போதவில்லை என்ற ஆதங்கம், பல்வேறு சிங்கள இனவாத அமைப்புக்களினால் நீண்டகாலமாகவே முன்வைக்கப்பட்டு வந்தது. குறிப்பாக மருத்துவம், பொறியியல் ஆகிய துறைகளில் தமிழ் மாணவர்கள் அதிகளவு அனுமதி பெற்றமையானது, சிங்களவர்களின் வாய்ப்பினைத் தட்டிப்பறிப்பதாக அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அம்மாணவர்கள் திறன், தகுதி அடிப்படையில்தான் அனுமதி பெற்றார்கள் என்பதை அவர்கள் கருத்திற்கொள்ள மறந்துவிட்டார்கள்.

மொழிவாரி ஒதுக்கீட்டில் ஆரம்பித்து, பல மாற்றங்களுக்குள்ளாக்கப்பட்டு, கடைசியில் மாவட்ட ஒதுக்கீட்டு முறையை அறிமுகப்படுத்தினார்கள். ஒதுக்கீட்டு முறைகள் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் நிறையவே இருக்கின்றன. காலங்காலமாக அடக்குமுறைக்குட்படுத்தப்பட்ட ஒரு சமூகம், அந்த அடக்குமுறையிலிருந்து வெளிவருவதற்கு ஒதுக்கீட்டு முறை தேவை. ஆனால், இங்கு அதற்காகவா ஒதுக்கீட்டுமுறை கொண்டுவரப்பட்டது. இந்தியாவிலே பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, பட்டியலிடப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு உண்டு. அமெரிக்காவில் கூட தொல்குடி அமெரிக்கர் மற்றும் கறுப்பின மக்களுக்கு இடஒதுக்கீடு உண்டு. இவர்கள் யாவரும் சிறுபான்மையினர். காலங்காலமாக அடக்கியொடுக்கப்பட்டவர்கள்.

ஆனால், இலங்கையில் இந்த ஒதுக்கீட்டு முறையானது, பெரும்பான்மைச் சிங்களவர்களுக்கே சாதகமாக அமைந்தது. அது, ஏலவே திறனடிப்படையில் முன்னிலையிலிருந்த சிறுபான்மையினரை பின்தள்ளுவதாக அமைந்தது. இதுதான் இந்த 'தரப்படுத்தலில்' இருந்த பிரச்சினை.

மாவட்ட ஒதுக்கீட்டு முறை கூட, தமிழர்களைப் பெருமளவு பாதித்தது. தமிழர்கள், வடக்கு-கிழக்கு மாகாணங்களிலும் மலையகத்திலும் கொழும்பிலுமே கணிசமானளவில் வசித்தனர். ஆகவே, மாவட்ட ஒதுக்கீடு என்பது கூட பெரும்பான்மைச் சிங்களவர்களுக்கே சாதகமாக அமைந்தது. ஆனால், சிங்கள அரசியல் சக்திகள் மாவட்ட ஒதுக்கீடு பற்றி வேறோர் வாதத்தை முன்வைக்கிறார்கள். இந்த மாவட்ட ஒதுக்கீட்டு முறை ஏற்பட்டதனால்தான் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மலையகம் என பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல முடிந்தது. இல்லையென்றால், தமிழ் மாணவர்கள் என்ற பெயரில் யாழ்ப்பாண மாணவர்களும் கொழும்பு மாணவர்களும் மட்டுமே பல்கலைக்கழகம் சென்றார்கள் என்று வாதிட்டனர். இதில் நிச்சயமாக கொஞ்சம் உண்மை இருக்கிறது. மாவட்டவாரி ஒதுக்கீட்டு முறையினால், தமிழர் பிரதேசங்களில் பின்தங்கிய மாவட்டங்களிலிருந்து மாணவர்கள், பல்கலைக்கழகம் ஏகியது உண்மை. ஆனால், இந்த விடயத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு 'தரப்படுத்தலை' நியாயப்படுத்திவிட முடியாது. ஏனென்றால், தரப்படுத்தலின் பின் ஒட்டுமொத்தமாக தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெறும் அளவு பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

இலங்கையின் 'சிங்கள-பௌத்த' அரசியல் பற்றி கருத்துரைப்பவர்கள் பொதுவாகச் சுட்டிக்காட்டுகின்ற ஒரு விடயம், இலங்கையின் 'சிங்கள-பௌத்த' பெரும்பான்மை என்பது, சிறுபான்மை மனப்பான்மையைக் கொண்டது என்று (A majority with a minority complex). அதாவது, சிறுபான்மையினருக்கு தமது இருப்பு, நிலைப்பு தொடர்பாக இருக்கக்கூடிய அச்சம், சந்தேகம் எல்லாம், இங்கே பெரும்பான்மையினருக்கு இருக்கிறது. அதனால்தான் என்னவோ உலகம் முழுவதும் சிறுபான்மையினர், அடக்கியொடுக்கப்பட்டவர்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும் ஒதுக்கீட்டு முறையை, 'தரப்படுத்தல்' என்ற முகமூடிக்குள் பெரும்பான்மையினருக்குச் சாதகமாகப் பயன்படுத்தினர்.

'தரப்படுத்தலினால்' உயர் கல்வி வாய்ப்பு தட்டிப்பறிக்கப்பட்ட தமிழ் மாணவர்களுக்கு இருந்த ஒரே மாற்றுவழி, வெளிநாட்டில் கல்வியைத் தொடர்தல். ஆனால், சிறிமாவோ அரசாங்கத்தின் மூடிய பொருளாதாரக் கொள்கையின் கீழ், கல்விக்கான அந்நிய செலவாணி கொடுக்கல் வாங்கல் அளவு மட்டுப்படுத்தப்பட்டது. அதனால் கல்விக்காக வெளிநாடு செல்வதும் இயலாததாகியது.

அஹிம்சையிலிருந்து ஆயுதத்துக்கு

சா.ஜே.வே.செல்வநாயகம் இந்த 'தரப்படுத்தல்' முறையை முற்றிலும் கண்டித்து அறிக்கையொன்றை விடுத்தார். இந்த அடக்குமுறை தமிழ் இளைஞர்களிடையே கோபக்கனலைத் தோற்றுவித்தது. அந்த கோபக்கனல் விடுதலையை வேண்டி, தமிழ் இளைஞர்களை நகரச் செய்தது. தமிழ் இளைஞர் பேரவைக் கூட்டமொன்றில் உரையாற்றிய சத்தியசீலன், 'தரப்படுத்தலானது தமிழினத்தின் இருண்டகாலத்தைச் சுட்டும் சமிஞ்ஞையாகும். அது, உயர்தரத்தில் சித்தியடைந்த பல தமிழ் இளைஞர்களுக்கு உயர்கல்வி மற்றும் தொழில் வாய்ப்பை இல்லாது செய்துள்ளது. தரப்படுத்தல் தமிழ் மக்களுக்கிருந்த கடைசி வாய்ப்பையும் தட்டிப்பறித்துவிட்டது' என்றார்.

தரப்படுத்தல் எனும் ஓரவஞ்சனையின் விளைவாக, தமிழ் இளைஞர்கள் அரசியலில் நேரடித்தாக்கம் செலுத்த ஆரம்பித்தார்கள். தமிழ் இளைஞர்கள் பிரிவினை தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு கடுமையான அழுத்தம் தரத்தொடங்கினார்கள். தரப்படுத்தல் பற்றிய கட்டுரையொன்றில், 1973ஆம் ஆண்டு சா.ஜே.வே.செல்வநாயகம் சொன்ன விடயமொன்றை, ரீ.டி.எஸ்.ஏ.திஸாநாயக்க குறிப்பிடுகிறார்.

'சமஷ்டிக்கான எனது போராட்டத்தில், நான் தோல்வியடைகிறேன். இதற்கு காரணம் பண்டாரநாயக்க, அவரது பாரியார் மற்றும் ஜே.ஆர்.ஜெயவர்த்தன. நான் எப்போதும் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன், சமஷ்டிக்கான எனது போராட்டத்தில் நான் தோல்வியடைந்தால், அதன் பின் தமிழ் மக்கள் சமஷ்டியைக் கோர மாட்டார்கள். மாறாக தனிநாட்டைத்தான் கோருவார்கள். ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கிறீர்கள்தானே, நான் அஹிம்சையையும், சத்தியாக்கிரகத்தையும், ஹர்த்தாலையும் முன்வைத்தேன், அவர்கள் வன்முறையை முன்வைக்கிறார்கள்'

உங்கள் பிரச்சினைக்கு ஆயுதம் தாங்கிய வன்முறைதான் தீர்வா என்ற கேள்வி, ஈழத் தமிழர்களை நோக்கி பல தளங்களிலும் வீசப்படுவதுண்டு. சர்வநிச்சயமாக ஆயுதம் தாங்கிய வன்முறை தீர்வில்லை. தமிழ் அரசியல் தலைமைகளும் ஒருபோதும் அதனை விரும்பியதும் இல்லை.

சுதந்திர காலத்திலிருந்து இலங்கையின் அரசியல் வரலாற்றைப் பார்த்தோமானால், தமிழ் மக்கள் மீது வன்முறை வெறித்தனமாகக் கட்டவிழ்த்து விடப்பட்ட போதிலும், கலவரங்களில் தமிழர்கள் நசுக்கப்பட்டபோதிலும் கூட, தமிழ் மக்கள் ஆயுதங்களையோ, வன்முறையையோ கையிலெடுக்கவில்லை. தமது மொழியுரிமை மறுக்கப்பட்டு, அதன் விளைவாக தமது வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட போது கூட அஹிம்சையையும் சத்தியாக்கிரகத்தையும் ஹர்த்தாலையும் பேச்சுவார்த்தைகளையும், ஒப்பந்தங்களையுமே தங்கள் அரசியல் ஆயுதங்களாக தமிழ் மக்கள் கைக்கொண்டார்கள். 1956லிருந்து ஒன்றரைத் தசாப்தகாலத்துக்கு தமிழ் மக்கள் மிகுந்த பொறுமையுடனும், எதிர்பார்ப்புடனும் நியாயமான தமது அரசியல் அபிலாஷைகளைப் பெற்றுக்கொள்வதற்கான நியாயமான தீர்வொன்றை எதிர்பார்த்தார்கள்.

ஜனாதிபதி வழக்குரைஞர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண 26.04.2014 அன்று ஆற்றிய 'செல்வநாயகம் நினைவுரை'யில் குறிப்பிட்டது போலவும், அவரது சில கட்டுரைகளில் குறிப்பிட்டது போலவும் இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்க்க, 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பு ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக இருந்தது. ஆனால், சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் அந்த வாய்ப்பைத் தவறவிட்டு விட்டது. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக மேலும் சிக்கல் நிலையையும், முரண்பாட்டையுமே 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பு உருவாக்கியது.

'பண்டா-செல்வா' கிழித்தெறியப்பட்டு, 'டட்லி-செல்வா' உடைக்கப்பட்டு, முதலாவது குடியரசு யாப்பில் மொழியுரிமை இல்லாது போய், மதத்தில் பௌத்தம் முதன்மை பெற்று தமிழர் இரண்டாந்தரப் பிரஜைகளாக்கப்பட்ட வரலாற்றுப் பின்புலத்தில் 'தரப்படுத்தல்' எனும் ஓரவஞ்சனையானது சத்தியசீலன் தன்னுடைய உரையில் குறிப்பிட்டது போல தமிழ் மக்களின் கடைசி வாய்ப்பும், நம்பிக்கையும் தட்டிப் பறிக்கப்பட்டதாகவே தமிழ் மக்கள், குறிப்பாக தமிழ் இளைஞர்கள் உணர்ந்தார்கள்.

கல்விச் சமூகமொன்றில் உயர் கல்வி வாய்ப்பு தட்டிப் பறிக்கப்படும்போது அந்த இளைஞர்கள் தங்கள் எதிர்காலமே இருண்டதாக, சூனியமானதாக உணர்வது யதார்த்தமானதே. பிரிவினைக்கான கோசத்தையும், ஆயுதமேந்தலின் ஆரம்பத்தையும் இந்தப் பின்புலத்தையும் கருத்திற் கொண்டுதான் நாம் பார்க்க வேண்டும்.

(அடுத்தவாரம் தொடரும்...)

- See more at: http://www.tamilmirror.lk/172833/-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%B5-#sthash.cu8vnvFE.dpuf
Link to comment
Share on other sites

தமிழாராய்ச்சி மாநாட்டில் விழுந்த அடி
 
30-05-2016 09:58 AM
Comments - 0       Views - 3

article_1464582709-ask.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 42)

இளைஞர்களும் ஆயுதக்குழுக்களும்

1969ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே, இளைஞர்களைக் கொண்ட சிறு சிறு விடுதலைக் குழுக்கள் ஆங்காங்கே உருவாகியிருந்தன. சிறிமாவோவின் ஆட்சியின் கீழ் முதலாவது குடியரசு யாப்பு, தரப்படுத்தல் என்பவற்றின் பின், தமிழ் இளைஞர்களிடையே ஏற்பட்ட எழுச்சியும், எதிர்ப்புணர்வும் இந்த விடுதலைக் குழுக்களுக்கு வலுச் சேர்த்தன. 1972ஆம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்புக்கு, சில தமிழ்த் தலைவர்கள் ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அந்தத் தலைவர்களின் சிலரைக் கொல்லும் முயற்சிகள் சில ஆயுதக் குழுக்களால் முன்னெடுக்கப்பட்டு தோல்வி கண்டதாக சில பதிவுகள் உண்டு.

தமிழ் இளைஞர்களிடையே தோன்றிய, இந்த விடுதலை வேண்டும் ஆயுதக் குழுக்கள், ஒரு திட்டமிட்ட வகையில் உருவாகியிருக்கவில்லை. ஆங்காங்கே வேறுபட்ட குழுக்கள் வௌ;வேறு காலகட்டங்களில் தோன்றியிருந்தன. இந்த கட்டுரைத் தொடரின் நோக்கம் தமிழர்தம் ஆயுதப் போராட்டத்தின் வரலாற்றை ஆராய்வது அல்ல, மாறாக தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை அடைவதற்கான அரசியல் வரலாற்றை மீட்டிப்பார்ப்பதாகும். ஆனால் அந்த அரசியல் வரவாற்றில் ஆயுதப் போராட்டத்தின் பங்களிப்பை நாம் கருத்திற்கொள்வது அவசியம்.

1972இன் பின், தமிழ் இளைஞர்கள், கிராம மட்டத்திலான சிறு கூட்டங்களை நடாத்தத் தொடங்கினர். இந்தக் கூட்டங்களில் விடுதலை வேட்கைக்கான குரல் முன்னிறுத்தப்பட்டது. அத்தகைய கூட்டங்களில் காசி ஆனந்தன் போன்ற உணர்ச்சிமிகு பேச்சாளர்கள், அன்று சிறிமாவோவின் ஆதரவாளராக இருந்த அல்ப்ரட் துரையப்பா, அருளம்பலம், சுப்ரமணியம் ஆகியோரைத் தமிழினத் துரோகிகள் என பகிரங்கமாக முத்திரைகுத்தியதுடன், அவர்கள் இயற்கையாகவோ, விபத்தொன்றின் மூலமோ மரணமடையத் தகுதியற்றவர்கள்.

அவர்கள் எப்படி மரணிக்க வேண்டும் என்பதை தமிழ் இளைஞர்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்ற பாணியில் பேசினார்கள். இது அன்றைய தமிழ் அரசியல் பரப்பில் புதிய பாணி. 'துரோகி' முத்திரைக் கலாசாரம் தமிழர் அரசியலுக்கு புதியதல்ல ஆனால் 'துரோகிகள் கொல்லப்பட வேண்டும்' என்ற வன்முறைச்சிந்தனை தமிழர் அரசியலுள் புதிதாக நுழைந்திருந்தது. இதற்கு தமிழரசுக் கட்சியும் தமிழர் ஐக்கிய முன்னணியும் முக்கிய காரணம். இவை தமது அரசியல் மேடைகளில் மாற்றுக் கருத்துடையவர்களை 'தமிழினத் துரோகிகளாக', 'தமிழ்த் தேசியத்தின் எதிரிகளாக' சித்திரித்தன. இதுவும் தமிழ் இளைஞர்களிடையே குறித்த நபர்கள் மீது அதீத வெறுப்புத் தோன்ற முக்கிய காரணமாகும்.

ஆனால், தமிழ் இளைஞர்கள் ஆயுதப் பாதையைத் தேடியமைக்குத் தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்களும் முக்கிய காரணமாகும். ஜீ.ஜீ.பொன்னம்பலம், சா.ஜே.வே.செல்வநாயகம் போன்ற தலைவர்களின் தீர்வு முயற்சிகள் தோல்வி கண்டதன் அல்லது அரசாங்கத்தால் தோற்கடிக்கப்பட்டதன் விளைவுதான், இன்று தமிழ் இளைஞர்களை, மற்றவரையும் அதனுடன் சேர்த்து தம்மையும் அழிக்கவல்ல வன்முறைப் பாதையொன்றை நோக்கி அழைத்து வந்தது. அடுத்த மூன்று தசாப்தங்களில் இலங்கையில் பாய்ந்த இரத்த வெள்ளத்துக்கு இலங்கையிலுள்ள அனைத்து அரசியல் தலைமைகளுமேதான் பொறுப்பாளிகள்.

இந்த இளைஞர்கள் கூட்டங்கள் அதிகளவில் நடைபெறத் தொடங்கின. இது இலங்கை அரசாங்கத்துக்கு அச்ச உணர்வுமிக்க ஒரு சவாலாக இருந்தது. ஜே.வி.பி-யின் புரட்சியிலிருந்து, இளைஞர்களின் ஆயுதப் புரட்சி பற்றிய அனுபவப் பாடமொன்றை அரசாங்கம் பெற்றிருந்தது. ஆகவே, தமிழ் இளைஞர்களின் எழுச்சியை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டிய தேவை அரசாங்கத்துக்கிருந்தது. 1973 முதல் 1976க்குள், ஏறத்தாழ 50க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டார்கள். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் அன்றைய தமிழ் இளைஞர் முன்னணியின் செயலாளரான சோமசுந்தரம் 'மாவை' சேனாதிராஜா, காசி ஆனந்தன், ஈ.எஸ். 'பேபி' சுப்ரமணியம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

1960களின் பிற்பகுதியிலிருந்து குட்டிமணி எனப்பட்ட செல்வராஜா யோகச்சந்திரன், நடராஜா தங்கதுரை, கண்ணாடி எனப்பட்ட செல்லையா பத்மநாதன், செட்டி எனப்பட்ட செல்லையா தனபாலசிங்கம், பெரிய சோதி, வேலுப்பிள்ளை பிரபாகரன், ஸ்ரீ சபாரட்ணம், பொன்னுத்துரை சிவகுமாரன் போன்ற இளைஞர்கள் ஆயுதக்குழுக்களாக உருவாகத்தொடங்கியிருந்தனர். இந்த இளைஞர்கள்தான், தமிழர்களின் எதிர்கால அரசியலின் கொண்டு நடத்துபவர்களாக இருப்பார்கள் என்பதை அன்று யாரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.

நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு

முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1966இல் மலேசியாவின் கோலாலம்பூரில் இடம்பெற்றது. அன்றைய மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் ஆரம்பித்து வைத்த மாநாட்டில் உலகெங்கிலுமிருந்து தமிழறிஞர்களும், அதிதிகளும் கலந்துகொண்டனர். உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை உருவாக்கியதில் முன்னின்று உழைத்தவர், இலங்கையின் புகழ்பூத்த தமிழ் அறிஞர் வண. சேவியர் தனிநாயகம் ஆவார். இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1968ஆம் ஆண்டு ஜனவரியில் மதராஸ் (சென்னை), இந்தியாவில் இடம்பெற்றது. இந்நிகழ்வு அன்றைய இந்திய குடியரசுத் தலைவர்

ஸாகிர் ஹுசைனினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மூன்றாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1970இல் பரிஸ், ‡பிரான்ஸில் இடம்பெற்றது. அம்மாநாட்டின் நிறைவில், நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, இலங்கையில் நடத்தப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது. இலங்கையில் வண. சேவியர் தனிநாயகம்; உள்ளிட்ட ஒழுங்கமைப்புக் குழுவினர், மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதெனத் தீர்மானித்தனர்.

இலங்கையின் தலைநகர் கொழும்பில் மாநாட்டை நடத்துவதை விட தமிழர்கள் நிறைந்த மண்ணான யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்தவதுதான் சாலப்பொருத்தமானது என அவர்கள் எண்ணியிருக்கலாம். ஆனால் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு இம்முடிவு மகிழ்ச்சியைத் தரவில்லை. சிறிமாவோ அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஒரேயொரு தமிழ் அமைச்சரான செல்லையா குமாரசூரியர், உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுவதைக் கடுமையாக எதிர்த்தார். ஆனால், ஒழுங்கமைப்புக்குழுவினர் இதனை கருத்திற்கொள்ளாது, தமது திட்டத்தின் படி உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்த நடடிவடிக்கைகளை மேற்கொண்டனர். இதற்காக இலங்கை அரசாங்கத்தின் எந்தவொரு உதவியையும், ஆதரவையும் அவர்கள் பெற்றுக்கொள்ளவுமில்லை, எதிர்பார்க்கவுமில்லை.

நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் அமர்வுகள், 1974 ஜனவரி 3ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக ஆரம்பமாகி, ஜனவரி மாதம் 9ஆம் திகதி நிறைவுற்றன. அறிஞர் பெருமக்களின் கருத்துக்களை வெகுஜனங்களுக்கும் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்காக ஜனவரி மாதம் 10ஆம் திகதி பொது நிகழ்வொன்று ஒழுங்கு செய்யப்பட்டது. அந்நிகழ்வில், தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு வந்திருந்த பல அறிஞர்களும் பேசுவதாக இருந்தது. அந்த நிகழ்வு வீரசிங்கம் மண்டபத்தில் நடப்பதாக இருந்தது.

நிகழ்வினைக் காண பெருந்தொகையான தமிழ் மக்கள் திரண்டிருந்தார்கள். மக்களின் அளவு அதிகரித்தமையால், ஏற்பாட்டுக் குழுவினர் நிகழ்விளை, வீரசிங்கம் மண்டபத்துக்கு வெளியில், மண்டப வளாகத்தில் திறந்தவெளி நிகழ்வாக நடத்தினர். தமிழகத்திலிருந்து வந்திருந்த அறிஞர்களின் உரைகளும் அங்கு இடம்பெறவிருந்தது. குறித்த நிகழ்வினை 10ஆம் திகதி நடத்துவதற்கான அனுமதியை மாநாட்டு ஒழுங்கமைப்புக்குழுவின் பிரதானி கலாநிதி மகாதேவா, யாழ். மாவட்ட உதவி பொலிஸ் அத்யட்சகர் சந்திரசேகரவிடம் பெற்றுக்கொண்டிருந்தார். ஆனால், இந்தியாவிலிருந்து வந்த அரசியல் பிரமுகர் ஜனார்த்தனன் நிகழ்வில் பேசமுடியாது என்ற நிபந்தனை இருந்தது. ஏற்கெனவே, சிறிமாவோ அரசாங்கம், தமிழாராய்ச்சி மாநாட்டுக்கென தமிழ்நாட்டிலிருந்து வந்த நான்கு பிரமுகர்களை நாட்டினுள் அனுமதிக்காது திருப்பியனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வை யாழ். மாநகரசபைக்குச் சொந்தமான திறந்தவெளி அரங்கில் நடத்தவே ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், 9ஆம் திகதி மழை பெய்தமையால், நிகழ்வை 10ஆம் திகதி, வீரசிங்கம் மண்டபத்தில் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியதாலும் மழை பெய்யாததாலும் ஒழுங்கமைப்புக் குழுவினர் நிகழ்வை திறந்தவெளி அரங்குக்கு மாற்ற முடிவெடுத்தனர். அதற்கான அனுமதியைப் பெற அன்றைய நகரபிதாவான அல்‡ப்றட் துரையப்பாவை தொடர்புகொள்ள முயன்ற போது அது சாத்தியப்படவில்லை. அதனால் உடனடியாக வீரசிங்கம் மண்டபத்துக்கு வெளியில் ஒரு தற்காலிக மேடை அமைக்கப்பட்டு திறந்தவெளி நிகழ்வாக குறித்த நாள் நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

ஏறத்தாழ 50,000 பேரளவில் வீதியெங்கும் அமர்ந்து நிகழ்வுகளைக் கண்டதாக கலாநிதி ராஜன் ஹூல் தன்னுடைய 'இலங்கை: அதிகாரத்தின் திமிர்' (ஆங்கிலம்) என்ற நூலில் குறிப்பிடுகிறார். நிகழ்வு குறித்த நாளில் இரவு 8 மணியளவில் ஆரம்பமாகியது. தமிழகத்திலிருந்து வந்திருந்த பேராசிரியர் நைனா முகமதுவின் உரையை மக்கள் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போதுதான் பொலிஸாரின் அதிரடி ஆரம்பிக்கத் தொடங்கியது. சனத்திரளை நோக்கி வந்த பொலிஸார், மக்களை அடித்துக் கூட்டத்தைக் கலைக்கத் தொடங்கினர்.

கலவரத் தடுப்புப் பொலிஸாரினால் கலவரம் ஒன்று அங்கு உண்டாக்கப்பட்டது. மக்கள் அடித்துவிரட்டப்பட்டனர். கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. தடியடிகள் நடத்தப்பட்டன. வான் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. பொலிஸாரின் வன்முறையில் அப்பாவி மக்கள் 9 பேர் உயிரிழந்தனர். ஏறத்தாழ 50 பேர் படுகாயமடைந்தனர். இத்தனை அராஜகமும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தமிழ் அறிஞர்கள் முன்னிலையில் நடந்தேறியது. பொலிஸ் தாக்குதலின் விளைவாக கூட்டம் கலைந்தோடியது. தமிழர் மண்ணில் தமிழர்கள் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் இது.

இது ஏன் நடந்தது என்ற கேள்விக்குத் தெளிவான பதிலில்லை. ஏனென்றால், அன்றை சிறிமாவோ அரசாங்கம் உண்மையைக் கண்டறிய நாட்டங்கொண்டிருக்கவில்லை. தமிழர் ஐக்கிய முன்னணியினர் (தமிழர் விடுதலைக் கூட்டணி) இந்த கலவரத்துக்குக் காரணம் அல்‡ப்றட் துரையப்பா என்று கூறினர். அதேநாள் இரவு, யாழ்ப்பாணம் பிரதான வீதியிலிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது. அல்ப்றட் துரையப்பா சிறிமாவோ அரசாங்கத்தின் ஆதரவாளராக இருந்தமை, அவர் மீது இந்தப் பழி விழ முக்கிய காரணங்களில் ஒன்று. தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்வுக்கு, யாழ். நகரபிதா அல்‡ப்றட் துரையாப்பா அழைக்கப்படவில்லை. அதனாலேயே, அவர், பொலிஸாரை ஏவி வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டார் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவலும் தீயாகப் பரவியது. தமிழர் ஐக்கிய முன்னணி இந்தச் சம்பவத்தைக் கண்டித்ததுடன், இதற்கு அல்‡ப்றட் துரையாப்பாவும் உதவி பொலிஸ் அத்யட்சகர் சந்திரசேகரவுமே காரணம் என்றது. அத்தோடு, இதனை மையப்படுத்தி ஹர்த்தால் போராட்டங்களையும் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்தது. கலாநிதி ராஜன் ஹூல் இதனை மக்களின் இறப்பை தமது அரசியலுக்காகப் பயன்படுத்தும் 'பிண அரசியல்' என வர்ணிக்கிறார்.

ஆனால், தமிழ் மக்களின் தாயகத்தின் மத்தியிலே இந்தக் கொடும் வன்முறைச் செயல் இடம்பெற்றதை தமிழ்க் கட்சிகள் கண்டிக்காது விட்டால்தான் அது பிழையாகும். உண்மையில் சிறிமாவோ அரசாங்கம் நியாயமாக நடந்திருந்தால் உடனடியாக ஒரு விசாரணை ஆணைக்குழுவை அமைத்து உண்மையைக் கண்டறிந்து இருக்கலாம், ஆனால், சிறிமாவோ அரசாங்கமோ இந்த விடயத்தில் மெத்தனப்போக்கைக் கையாண்டது. அது மட்டுமல்லாது, குறித்த வன்முறையில் ஈடுபட்ட பொலிஸார், சில காலத்திலேயே, தண்டனை பெறுவதற்குப் பதிலாக பதவியுயர்வு பெற்றனர். இப்படிச் செய்ததனூடாக தமிழ் மக்களுக்கு தாம் வழங்கும் இரண்டாந்தர நிலையை சிறிமாவோ அரசாங்கம் சொல்லாமல் சொல்லியது. இது ஏற்கெனவே பிரிவினையையும் ஆயுத வன்முறையையும் வேண்டிய தமிழ் இளைஞர்களுக்கும் மேலும் சினத்தை உருவாக்கியிருக்கும் என்பதே யதார்த்தம். அல்ப்றட் துரையப்பாவுக்கும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் நடந்த வன்முறைக்கும் எந்தச் சம்மந்தமுமில்லை, சம்மந்தமிரப்பதற்கான எந்த ஆதாரமுமில்லை என கலாநிதி ராஜன் ஹூல் வாதிடுகிறார். ஆனால், இதற்கு அல்ப்றட் துரையப்பாதான் காரணம் என்ற பிரசாரத்தினதும் வதந்தியினதும் கனதி, உண்மையை மறைத்துவிட்டது என்கிறார் அவர். இதன் விளைவாக தமிழ் இளைஞர்கள் மத்தியில் அல்‡ப்றட் துரையப்பா மீது கடும் வெறுப்பு உருவாகியிருந்தது.

அடுத்து வரும் வருடங்களில் தமிழ் மக்கள் நிறைய கலவரங்களைச் சந்திக்கவும் நிறைய அடிகளை வாங்கவும் நிறைய இழப்புகளுக்கு ஆளாவதற்கும், இதுவோர் ஆரம்பமாக இருந்தது.

(அடுத்தவாரம் தொடரும்...)

- See more at: http://www.tamilmirror.lk/173315/தம-ழ-ர-ய-ச-ச-ம-ந-ட-ட-ல-வ-ழ-ந-த-அட-#sthash.q6A4sfqS.dpuf
Link to comment
Share on other sites

தமிழாராய்ச்சி மாநாட்டுத் தாக்குதலுக்கு பழிவாங்கும் படலம்
 
06-06-2016 09:14 AM
Comments - 0       Views - 5

article_1465185145-vbgh.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 43)

பழிக்குப் பழிவாங்கும் எண்ணம்

தமிழ் ஆயுதக் குழுக்களின் வரலாறு, தனித்து ஆராயப்பட வேண்டிய ஒரு பரப்பு. இதுபற்றிக் குறிப்பிடத்தக்க சுதந்திர ஆய்வுகள் ஏதும் இல்லை. ஒரு புறத்தில், ஆயுதக்குழுவுக்குச் சார்பான பிரசாரங்களும், மறுபுறத்தில் ஆயுதக்குழுக்களுக்கு எதிரான பிரசாரங்களுமே அதிகளவில் காணப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான தமிழ் ஆயுதக் குழுக்களின் உருவாக்கம்,

டட்லி-செல்வாவின் தோல்வியின் பின்னரான காலப்பகுதியிலேயே இடம்பெற்றது. சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் அவரது 'தோழர்களின்' அரசாங்கம், தமிழர்கள் மீது காட்டிய மெத்தனப்போக்கு, இந்தத் தமிழ் ஆயுதக் குழுக்களின் எழுச்சிக்கு உரமிட்டது. விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலான உறுப்பினர்களைக் கொண்ட இந்தச் சிறு குழுக்கள், சிறியளவிலான வன்முறைச் சம்பவங்கள் மூலம் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்தன. பஸ்களை எரித்தல், வங்கிக்கொள்ளை, நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்தல் என, வன்முறைப் பாதையைத் தேடிச் சில தமிழ் இளைஞர்கள் பயணித்துக்கொண்டிருந்தனர். இதை அரசாங்கமும் நிச்சயம் அறிந்திருந்தது. தமிழ்த் தலைமைகளும் அறிந்திருந்தன. வன்முறை நிறைந்த விடுதலைப் போரொன்றின் பின்னர், கிழக்கு பாகிஸ்தானாக இருந்து, அன்று பங்களாதேஷ் என்ற சுதந்திர நாடு பிறந்திருந்தமை இந்த இளைஞர்களையும் அதே பாதையில் செல்லத் தூண்டியது.

விசாரிக்க மறுத்த அரசாங்கம்

1974 ஜனவரி 10ஆம் திகதி, தமிழாராய்ச்சி மாநாட்டில் விழுந்த அடி, தமிழ் மக்களுக்கு இடியாக இருந்தது. அந்தத் தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது என்று விசாரிக்கக்கூட அரசாங்கம் முன்வராதது, தமிழ் மக்களிடையே அதிருப்தியையும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் கடும் சினத்தையும் உருவாக்கியது. ஆயுதக்குழு இளைஞர்களிடையேயும் குறித்த தாக்குதலுக்கு பழிவாங்கும் எண்ணம் வேரூன்றியது. இந்த இடத்தில்தான் குறித்த தாக்குதலுக்கு சிறிமாவோ அரசாங்கத்தையும், சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். அமைப்பாளரும் யாழ்ப்பாண நகரபிதாவுமான அல்ஃப்றட் துரையப்பாவையும் காரணமாக்கிய பிரசாரம், தமிழர்தரப்பில் பரவத் தொடங்கியது. நிச்சயமாக, தமிழாராய்ச்சி மாநாட்டில் பொலிஸாரால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சிறிமாவோ தலைமையிலான அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும், இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், இதற்கு அல்ஃப்றட் துரையப்பாவைப் பலிக்கடாவாக்கியமை தொடர்பில் பல அரசியல் ஆய்வாளர்களும் வேறுபட்ட அபிப்பிராயங்களை முன்வைக்கின்றனர். இந்தத் தாக்குதலுக்குப் பின்னணி அல்ஃப்றட் துரையப்பாதான் என்று, தமிழ் ஐக்கிய முன்னணியினரின் பிரசாரம் ஒரு புறத்திலிருக்க, மறுபுறத்தில் தமிழரசுக் கட்சிக்குப் போட்டியாக இருந்த தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சியுடன் தமிழ் ஐக்கிய முன்னணியாகச் சங்கமித்துவிட, அன்று யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சிக்கு சிம்மசொப்பனமாக அல்ஃப்றட் துரையப்பாவே இருந்தார்.

ஆகவே, அவரை அரசியல் ரீதியாக வீழ்த்துவதற்காகவே தமிழ் ஐக்கிய முன்னணி, தமிழாராய்ச்சி மாநாட்டில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு அல்ஃப்றட் துரையப்பா மீது பழியைச் சுமத்துகிறது என சில விமர்சகர்கள் தமது கருத்தை முன்வைக்கின்றார்கள். இந்த விடயத்தில், இந்தப் புரியாச்சிக்கல் ஏற்பட சிறிமாவோ அரசாங்கமும் ஒரு முக்கியகாரணம். ஒழுங்கான முறையில் விசாரணை ஆணைக்குழு ஒன்று அமைத்து சுதந்திரமான ஒரு விசாரணையை சிறிமாவோ அரசாங்கம் நடத்தியிருந்தால், நிச்சயமாக குறித்த சம்பவத்துக்கான காரணங்கள் ஓரளவேனும் புலப்பட்டிருக்கும், ஓரளவேனும் வெளிவந்திருக்கும். எந்த விசாரணையையும் நடத்தாதுவிட்டதன் ஊடாக சிறிமாவோ அரசாங்கம், தன்னுடைய பிரதிநிதியான அல்ஃப்றட் துரையப்பாவை பலிக்கடாவாக்கிவிட்டது என்றும் சொல்லலாம். எந்தவொரு குற்றச் சம்பவத்திலும் இடம்பெறும் நீதவான் விசாரணை மட்டுமே இங்கும் இடம்பெற்றது. மின்சாரம் தாக்கி மக்கள் மரணமானார்கள் என்பதற்கு, உரிய மின்பிறப்பாக்கி உரிமையாளரை விசாரிக்க நீதவான் உத்தவிட்டார். பொலிஸார் ஏன் அப்பாவி மக்கள் மீது வன்முறையில் ஈடுபட்டார்கள், இதன் பின்னாலிருந்த அரசியல்கரம் யாருடையது போன்ற கேள்விகள் இன்றுவரை தொக்கி நிற்கின்றன.

அரசுசாரா அமைப்பு நடத்திய சுதந்திர விசாரணை

அரசாங்கம் நடத்தியிருக்க வேண்டிய சுதந்திர விசாரணையை, யாழ்ப்பாணக் குடிமகன் குழு என்ற அரசசார்பற்ற அமைப்பு நடத்த விழைந்தது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளான ஓ.எல். டீ க்றெஸ்டர், வி.மாணிக்கவாசகர் மற்றும் முன்னாள் ஆயர் வண.சபாபதி குலேந்திரன் ஆகியோர் சுதந்திர விசாரணையை மேற்கொள்ள அழைக்கப்பட்டனர். அவர்கள் 1974 மார்ச் மாதத்தில் தங்களுடைய அறிக்கையை வெளியிட்டனர். அந்த அறிக்கை, குறித்த சம்பவத்துக்கான காரணமாக பொலிஸாரைச் சுட்டியது. ஓர் அரசுசாரா விசாரணைக்குழுவுக்கு இருக்கக்கூடிய வரையறைகளுக்குள்ளாகவே விசாரணைகள் நடத்தப்பட்டன, ஒருவேளை இதுபோன்ற சுதந்திரமானதொரு விசாரணைக் குழுவினை அரசாங்கம் அமைத்திருக்குமானால், இன்னும் நிறைய உண்மைகள் வெளிவந்திருக்கக்கூடும். சிறிமாவோ அரசாங்கம் கள்ளமௌனம் சாதித்தது. சிறிமாவோ அரசாங்கத்தில் ஒரேயொரு தமிழ் அமைச்சராக இருந்த செல்லையா குமாரசூரியர் கூட, தமிழாராய்ச்சி மாநாட்டில் தமிழ் மக்கள் மீது பொலி ஸாரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையைக் கண்டிக்கவில்லை. இந்த மௌனமும், மெத்தனப் போக்கும் தமிழ் மக்களின் சினத்தை அதிகப்படுத்தியது.

அல்ஃப்றட் துரையப்பா குறிவைக்கப்படுகிறார்

'அஹிம்சாவாதி' என்றும் 'ஈழத்துக் காந்தி' என்றும் புகழப்படும் சா.ஜே.வே.செல்வநாயகம் இருந்த அதே மேடைகளிலேயே, தமிழ் ஐக்கிய முன்னணிக்கு எதிரான அரசியல் தலைவர்கள் தமிழனத் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டார்கள். அவர்களது மரணம் எப்படி இருக்கவேண்டும் என இளைஞர்களே தீர்மானிக்க வேண்டும் என்று ஆவேசமான வன்முறைப் பேச்சுக்கள் முன்வைக்கப்பட்டன. இந்த வன்முறையைத் தூண்டும் பேச்சுக்களை செல்வநாயகம் மறுத்துப் பேசியது பற்றி எந்தப் பதிவுகளும் இல்லை. செல்வநாயகம் 'பாகின்ஸன்ஸ் நோயினால்' பாதிக்கப்பட்டிருந்த காரணத்தினால், தனது செவிப்புலனை பெருமளவு இழந்திருந்தார். ஆகவே இந்தப் பேச்சினைக் கேட்டிருக்க வாய்ப்பில்லை என்று சிலர் சொல்வதுமுண்டு. ஆனால் செல்வநாயகத்தை 'தந்தை' என வியந்தழைக்கும் எந்தத் 'தனயர்களும்' கூட, இந்த வன்முறையைத்

தூண்டும் ஆவேசப் பேச்சைக் கடிந்துகொள்ளவில்லை. அடுத்த நிலைத் தலைவராக இருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் அணுகுமுறை இளைஞர்களைத் திருப்திப்படுத்துவதாக இருந்ததேயன்றி, உணர்ச்சிமிக்க இளைஞர்களோடு முரண்பட அன்று அவர் தயாராக இருக்கவில்லை.

இதற்கு முன்பே அல்ஃப்றட் துரையப்பா, பிரதி அமைச்சர் சந்திரசிரி போன்ற ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மீது தாக்குதுல் முயற்சிகள் இந்த ஆயுதக் குழுக்களைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டிருக்கின்றன. தமிழ் ஆயுதக் குழுக்களின் வரலாற்றில் அல்லது தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் தனது கொள்ளைக்காக முதலில் உயிர் நீத்ததாகக் கருதப்படும் பொன்னுத்துரை சிவகுமாரன், 1972லேயே அல்ஃப்றட் துரையப்பாவின் காருக்குக் கீழ் குண்டினைப் பொருத்தி, அல்‡ப்றட் துரையப்பாவைக் கொல்ல முயற்சிசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தமிழாராய்ச்சி மாநாட்டு வன்முறைக்குப் பின்பு, அல்ஃப்றட் துரையப்பா கொல்லப்பட வேண்டும் என சிவகுமாரன் உறுதியாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், ஜூன் மாதம் பொலி ஸாரால் சுற்றிவளைக்கப்பட்ட சிவகுமாரன், சயனைட் விழுங்கித் தற்கொலை செய்துகொள்கின்றார்.

1974 ஜூன் மாதம் 5ஆம் திகதி, மக்கள் வங்கியைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டுச் செயற்படுகையில், தம்மால் சுற்றிவளைக்கப்பட்டபோது சிவகுமாரன், சயனைட் விழுங்கித் தற்கொலை செய்ததாக சிவகுமாரனைச் சுற்றிவளைத்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாகவிருந்த உதவி ஆய்வாளர் விஜேசுந்தர குறிப்பிடுகிறார். தமிழ் அரசியல் வரலாற்றில், ஆயுதக்குழு இளைஞன் ஒருவன், சயனைட் அருந்தித் தற்கொலை செய்துகொண்ட முதல் சம்பவம் இது. எதிர்காலத்தில் தமிழ்ப் போராளிகள் பலரினது கழுத்தில் சயனைட் குப்பி தொங்கியதற்கும், பல போராளிகள் சயனைட் விழுங்கித் தற்கொலை செய்துகொண்டமைக்கும் இதுதான் ஆரம்ப, ஆதர்ஷ புள்ளி.

அல்ஃப்றட் துரையப்பாவுக்கு சிவகுமாரன் மட்டும் குறிவைக்கவில்லை. இன்னோர் இளைஞனும் அல்ஃப்றட் துரையப்பாவைக் குறிவைத்திருந்தான். அந்த இளைஞனின் பெயர் வேலுப்பிள்ளை பிரபாகரன். தமிழ்நாட்டில் தலைமறைவாக இருந்த பிரபாகரன், அங்கு செட்டியுடன் மீண்டும் கைகோர்த்த பிரபாகரன், 1974 ஜூலையில் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து, தனது தலைமறைவு வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

யாழ்ப்பாணத்தில் ஆயுதந்தாங்கிய இளைஞர்களை வேட்டையாடிக் கைதுசெய்யும் படலம் வேகமடையத் தொடங்கியிருந்தது. பொலிஸ் ஆய்வாளர்களான பஸ்தியாம்பிள்ளை, பத்மநாதன் மற்றும் தாமோதரம்பிள்ளை ஆகியோர் ஆயுதக் குழுக்களைச் சேர்ந்த இளைஞர்களைக் கைது செய்யத் தேடி அலைந்து கொண்டிருந்தனர். அமைச்சர் செல்லையா குமாரசூரியர், தமிழ் ஆயுதக் குழுக்களை முளையிலேயே கிள்ளியெறியத் திண்ணம் கொண்டு அதற்கான அழுத்தத்தை பொலிஸாருக்கு வழங்கினார்.

அவசரத்தில் உருவான யாழ். பல்கலைக்கழக வளாகம்

இந்தநிலையில், அரசியல் பரப்பில் தமிழர்களைச் சாந்திப்படுத்த வேண்டிய ஒரு கட்டாயத் தேவையிருப்பதை உணர்ந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க, ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தமிழ் மக்கள் வேண்டியதன் அடிப்படையில், யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக வளாகம் ஒன்றை ஆரம்பிக்கும் அரசாங்கத்தின் முடிவை அவர் அறிவித்தார். தமிழர் மண்ணில் பல்கலைக்கழக வளாகம் அமைத்தல் என்பது வரவேற்கத்தக்கது. எனினும், இதற்குள் ஓர் அரசியல் சூழ்ச்சியும் இருந்ததைக் கவனிக்க வேண்டும். தமிழரசுக் கட்சி, திருகோணமலையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்று நீண்டகாலமாகக் கோரிவந்தது. சிங்களமயமாகிக் கொண்டிருந்த திருகோணமலையில், தமிழர் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள இது உதவும் என தமிழரசுக் கட்சி கருதியிருக்கலாம். ஆனால், சிறிமாவோ பண்டாரநாயக்க, பல்கலைக்கழக வளாகம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைக்கத் திட்டமிட்டமையானது, தமிழர்களைப் பிரித்தாளும் தந்திரமாகும். தமிழ் மக்களிடையே உள்ள பிரதேசவாரி, சாதிவாரிப் பிரிவினைகள் பற்றிச் சிங்களத் தலைவர்கள் நன்றாக அறிந்துவைத்திருந்தனர். அதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதில் அவர்கள் பலமுறை வெற்றியும் கண்டிருக்கின்றார்கள். பிரித்தானியர், இலங்கையர் மீது கையாண்ட பிரித்தாளும் தந்திரத்தை, சிங்களத் தலைவர்கள், தமிழ் மக்கள் மீது கையாண்டனர். எமது வரலாற்றை உற்றுக் கவனித்தால் இந்த பிரித்தாளும் தந்திரம் அவர்களுக்கு நிறைய வெற்றியைத் தந்திருக்கிறது. திருகோணமலையில் அமைக்க வேண்டும் என தமிழரசுக் கட்சி வேண்டியதை, யாழ்ப்பாணத்தில் அமைக்க முடிவெடுத்ததனூடாக, சிறிமாவோ அரசாங்கம், தமிழர்களைப் பிரித்தாளும் தந்திரத்தை நடைமுறைப்படுத்தும் தனது பகடைக்காய்களை உருட்டத்தொடங்கியது என சில அரசியல் ஆய்வாளர்கள் கருத்துரைக்கிறார்கள்.

பிரதமர் சிறிமாவின் அறிவிப்பைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக வளாகமொன்றை ஆரம்பிக்கும் பணிகள் மிகத்துரித கதியில் இடம்பெறத் தொடங்கின. யாழ்ப்பாண வளாகத்துக்கு பேராசிரியர் கனகசபாபதி கைலாசபதி தலைவராக நியமிக்கப்பட்டார்.

சேர். பொன்னம்பலம் இராமநாதனால் அவருடைய சொந்தக் காணியில் ஆரம்பிக்கப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரி, யாழ். வளாகம் அமைவதற்கான இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தை திறந்து வைக்க, தான் நேரில் செல்ல பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க முடிவெடுத்தார். யாழ். பல்கலைக்கழக வளாகம் 1974 ஒக்டோபர் 6ஆம் திகதி, பிரதமர் சிறிமாவோ றத்வத்தை டயஸ் பண்டாரநாயக்கவினால் திறந்து வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆயுதக் குழுக்களும் தமிழ் இளைஞர்களும், குறித்த நிகழ்வையும் பிரதமர் கலந்துகொள்ளும் ஏனைய நிகழ்வுகளையும் புறக்கணிக்கவும், அதேவேளையில் சிறிமாவோ தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கு தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவும் அழைப்பு விடுத்தனர். தமிழ் அரசியல் தலைமைகள் இந்த இளைஞர்களின் கட்டளைக்கு அடிபணிய வேண்டிய சூழலில் இருந்தனர்.

இந்த இளைஞர்களின் விருப்பத்துக்கு மாறாகச் செயற்படக்கூடிய வல்லமை அவர்களுக்கு இருக்கவில்லை எனச் சில அரசியல் விமர்சகர்கள் கருத்துரைக்கும் அதேவேளை, சிலரோ அவர்கள் தம்மால் செய்ய இயலாத சிலதைச் செய்வதற்கு, தாம் அமைதியாக இருந்துகொண்டு இந்த இளைஞர்களைப் பயன்படுத்திக் கொண்டார்கள் என விமர்சிக்கின்றனர். எது எவ்வாறு இருப்பினும், அன்று இந்த இளைஞர்களின் குரல் ஓங்கி ஒலித்தது. அதேவேளை ஆயுதக்குழு இளைஞர்களில் சிலர் பிரதமரின் வருகையின்போது தாக்குதல்களை நடத்தவும் திட்டமிட்டிருந்தனர்.

(அடுத்தவாரம் தொடரும்...)

- See more at: http://www.tamilmirror.lk/173993/தம-ழ-ர-ய-ச-ச-ம-ந-ட-ட-த-த-க-க-தல-க-க-பழ-வ-ங-க-ம-படலம-#sthash.vsbF9dU7.dpuf
Link to comment
Share on other sites

தமிழ் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் மிக்கதாக அமைந்த காங்கேசன்துறை இடைத்தேர்தல்
 
13-06-2016 09:20 AM
Comments - 0       Views - 14

article_1465790153-Unt.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 44)

யாழ். பல்கலைக்கழக வளாகத்தைத் திறந்து வைத்த சிறிமாவோ

அரசாங்கத்தின், தமக்கெதிரான திட்டமிட்ட தொடர் அநீதிகளாலும் ஓரவஞ்சனையினாலும் கொதித்தெழுந்த தமிழர்களை ஆற்றுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம், பிரதமர் சிறிமாவுக்கு ஏற்பட்டிருந்தது. தெற்கிலும் சிறிமாவோ அரசாங்கத்தின் பிரபல்யம் குறைவடைந்து கொண்டே வந்ததுடன், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, டட்லி சேனநாயக்கவின் மரணத்தின் பின்னர் அதன் புதிய தலைவராகப் பொறுப்பேற்றிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் கீழ் மிகச் சிறப்பாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தது.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக வளாகமொன்றை உருவாக்குவது தமிழ் மக்களை ஆற்றுப்படுத்தும் என, சிறிமாவோ அரசாங்கம் எண்ணியிருக்கலாம். அதிரடி வேகத்தில் சேர்.பொன்னம்பலம் இராமநாதன் அமைத்த பரமேஸ்வராக் கல்லூரி, யாழ். பல்கலைக்கழக வளாகமாக மாற்றியமைக்கப்பட்டு, 1974 ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் இயங்கத் தொடங்கியது. அதனை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்க 1974 ஒக்டோபர் 6ஆம் திகதி, பிரதமர் சிறிமாவோ, யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.

சிவகுமாரனின் மரணம், சத்தியசீலனின் கைது, குட்டிமணி மற்றும் தங்கதுரை ஆகியோர் தமிழ்நாட்டுக்குத் தலைமறைவாகியமை என்பவற்றைத் தொடர்ந்து, தமிழ் இளைஞர்களின் ஆயுதக்குழுக்களில் பெரும்பாலானவை செயற்படாத சூழல் காணப்பட்டது. இச்சூழலில், வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான டி.என்.டி என்றழைக்கப்பட்ட தமிழ் புதிய புலிகள் அமைப்பு மட்டுமே இயங்கிக்கொண்டிருந்தது. இக்குழு 'பிரபாகரனின் குழு' என்றறியப்பட்டது. இக்குழு, பிரதமர் சிறிமாவோவின் யாழ்ப்பாண வருகையின் போது எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடத் தீர்மானித்தது. கறுப்புக் கொடிப் போராட்டத்தை முன்னெடுக்க அழைப்பு விடுத்ததுடன், அதிரடியான குண்டுத்தாக்குதல்களையும் நடத்தி, தமது எதிர்ப்பைக் காட்டத் தீர்மானித்தது.

'ஈழத்துக் காந்தி' என்று, அவரது ஆதரவாளர்களால் புகழப்பட்ட செல்வநாயகம் தலைமையிலான தமிழ் ஐக்கிய முன்ணியிடமிருந்து இவற்றுக்கு எந்த நேரடி எதிர்ப்பும் வரவில்லை. மாறாக, இந்த அழைப்புக்கு இசைவாகவே தமிழ் ஐக்கிய முன்னணியும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயற்பட்டனர். தமிழ் புதிய புலிகள் அமைப்பின் மறைமுக இயக்கு கரமாக, தமிழ் ஐக்கிய முன்னணியின் சில தலைவர்கள் இருந்தார்கள் எனக்குறிப்பிடுவோரும் உள்ளனர். எது எவ்வாறாயினும், இக்காலப்பகுதியில் தமிழ் ஐக்கிய முன்னணித் தலைவர்கள் இந்த ஆயுதக்குழு இளைஞர்களுடன் முரண்படவில்லை அல்லது முரண்பாட்டைக் காட்டிக்கொள்ளவில்லை என்பது நிதர்சனம்.

பிரதமர் சிறிமாவோவுக்கு அதிரடியான வரவேற்பை, தமிழ் புதிய புலிகள் அமைப்பினர் வழங்கினார்கள். யாழ்ப்பாணச் சந்தை, ரயில் நிலையம், காங்கேசன்துறை பொலிஸ் நிலையம், அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியற்குழு உறுப்பினர் வி.பொன்னம்பலத்தின் இல்லம் (இவரே பிரதமரின் மொழிபெயர்ப்பாளராகச் செயற்பட்டார்) உட்பட, யாழெங்கும் ஏறத்தாழ ஆறு இடங்களில் குண்டு வெடிப்புக்கள் நடத்தப்பட்டன. இக்குண்டு வெடிப்புக்களால் உயிரிழப்போ, பெருஞ்சேதங்களோ விளையவில்லை. எனினும், இவை கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமது எதிர்ப்பை வெளிக்காட்டும் கறுப்புக் கொடி போராட்டங்களும் நிகழ்த்தப்பட்டது. ஆங்காங்கே பஸ்களுக்குக் கல்லெறிவும் இடம்பெற்றது. பிரதமர் சிறிமாவோவுக்கு வரவேற்பளிக்க, பெருந்தொகை மக்கள் திரளவில்லை. தமிழ் மக்களும் பிரதமரின் வருகையைப் புறக்கணிக்கும் அழைப்பை ஏற்றுக்கொண்டதன் வெளிப்பாடாக இது இருக்கலாம். முன்பு டட்லி சேனநாயக்க, யாழ்ப்பாண வருகை தந்தபோது அவருக்கு அமோக வரவேற்பினை தமிழ்த் தலைமைகளும், தமிழ் மக்களும் வழங்கியிருந்தனர்.

ஆனால், தற்போது நிலைமை வேறாக இருந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாணக் காரியாலயத்தில் பிரதமர் சிறிமாவோவுக்கு வரவேற்பளிப்பதற்கு ஆட்சேர்க்க அமைச்சர் குமாரசூரியரும், அல்‡ப்றட் துரையப்பாவும் பகீரதப் பிரயத்தனம் செய்தும் பெருமளவு வெற்றி கிட்டவில்லை. சுருக்கமாகச் சொன்னால், பிரதமர் சிறிமாவோவின் யாழ். விஜயம் வெற்றியளிக்கவில்லை. தமிழ் மக்களின் எதிர்ப்பு ஆணித்தரமாகப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், இதேவேளை ஆங்காங்கே நடந்த சிறு குண்டுவெடிப்புக்கள் தமிழ் இளைஞர்கள் செல்லத் தயாராக இருந்த வன்முறையும் அழிவும் நிறைந்த பாதையை உணர்த்துவதாக இருந்தது. 'தனிச்சிங்கள'ச் சட்டம் முதல் ஏறத்தாழ இரண்டு தசாப்தகாலமாக தமிழ்த் தலைமைகளின் அஹிம்சை வழிப் பயணத்தை அலட்சியம் செய்ததன் விளைவை எதிர்நோக்க வேண்டிய சூழலில் அரசாங்கம் இருந்தது.

எது எவ்வாறாயினும், தமிழ் மக்கள் நீண்டகாலமாக வேண்டிய தமிழர் பிரதேசத்தில், ஒரு பல்கலைக்கழக வளாகம் கிடைத்தமை குறிப்பிடத்தக்கதொரு விடயம். இந்த யாழ். பல்கலைகழக வளாகமானது, 1979இல் தன்னாட்சிகொண்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. 

காங்கேசன்துறை இடைத்தேர்தல்

முதலாவது குடியரசு அரசியலமைப்புக்கு தமது எதிர்ப்பை பதிவு செய்வதற்காகவும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், புதிய அரசியலமைப்பின் கீழ் சத்தயிப்பிரமாணம் செய்து தேசிய அரசு சபையின் உறுப்பினர்களானமை தொடர்பில் தமிழ் இளைஞர்களிடையே ஏற்பட்ட கொந்தளிப்பினைச் சமாளிக்கும் வகையிலும் சா.ஜே.வே.செல்வநாயகம் 1972ஆம் ஆண்டு ஒக்டோபர் 6ஆம் திகதி. தனது தேசிய அரசு சபை உறுப்பினர் பதவியை (நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை) இராஜினாமாச் செய்திருந்தார்.

அன்றைய தேர்தல் நடைமுறைகளின் கீழ், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகுமிடத்து, அந்த குறித்த தொகுதியிலே இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், சிறிமாவோ அரசாங்கம் செல்வநாயகத்தின் பதவி விலகலால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் இடைத் தேர்தலை நடத்துவதைத் தாமதித்தது. ஏறத்தாழ இரண்டரை வருடங்களின் பின்னர் காங்கேசன்துறைத் தொகுதியில் 1975 பெப்ரவரி 6ஆம் திகதி இடைத்தேர்தலை நடத்த சிறிமாவோ அரசாங்கம் முடிவெடுத்தது.

இதற்கிடையில், தமிழ் மக்களிடையே தமது அரசாங்கத்துக்கெதிராக ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பலையைச் சாந்திப்படுத்த வேறும் சில நடவடிக்கைகளை சிறிமாவோ முன்னெடுக்கத் தலைப்பட்டார். அப்போது பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் நடைமுறையிலிருந்த 'தரப்படுத்தல்' முறையை ஆராய்ந்து மாற்றியமைக்க பீற்றர் கெனமன் தலைமையிலான குழுவினர் முன்மொழிந்திருந்த 'மாவட்ட ஒதுக்கீடு' அடிப்படையிலான 'தரப்படுத்தல்' முறையை சிறிமாவோ அறிமுகப்படுத்தியது. இதன் விளைவாக, யாழ்ப்பாணத்திலிருந்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவர் தொகை பாதிப்படைந்தாலும், தமிழ் பேசும் ஏனைய மாவட்டங்களிலிருந்து மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் அளவு அதிகரித்திருந்தது. ஆயினும், ஒட்டுமொத்தமாகப் பார்ப்பின் 'தரப்படுத்தலுக்கு' முன் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்ற அளவை விட, 'தரப்படுத்தலுக்கு'ப் பின், தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்ற அளவு பெரிதளவு குறைந்திருந்தது.

ஆனால், தமிழர் பிரதேசத்தில், யாழ்ப்பாணத்தைத் தாண்டி ஏனைய மாவட்ட மாணவர்களும் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை தாம் அதிகப்படுத்தினோம் என சிறிமாவோ அரசாங்கம் சார்பில் கூறப்பட்டது. மேலும், தமிழ் பரீட்சகர்கள், தமிழ் மாணவர்களுக்கு அதிக புள்ளிகள் வழங்குகின்றனர் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் பதிலளித்த கெனமன் குழு, தனது அறிக்கையில் 'பித்தலாட்ட வகையில் திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட மொழிப்பிரிவு முழுவதற்கும் புள்ளிகளைத் திரிபுபடுத்தி வழங்குதல் என்பது சாத்தியமானதோ, நடைறைச்சாதகமானதோ இல்லை' என்று குறிப்பிட்டதுடன் 'மொழிவாரித் தரப்படுத்தலானது, சமூகங்களிடையே பொதுப்பரீட்சையின் நேர்மை, நம்பிக்கை பற்றி ஐயத்தையும், நம்பிக்கையீனத்தையும் ஆழப்படுத்திவிட்டது' என்றும் குறிப்பிட்டது.

தனி அரசுக்கான மக்களாணையை வேண்டுதல்

காங்கேசன்துறைத் தொகுதி இடைத் தேர்தலில், தமிழ் ஐக்கிய முன்னணியின் வேட்பாளராக 'வீட்டுச் சின்னத்தில்' சா.ஜே.வே.செல்வநாயகம் தேர்தலில் போட்டியிட்டார். இந்தத் தேர்தலை செல்வநாயகமும், தமிழ் ஐக்கிய முன்னணியும் தமிழ் மக்கள் தம் மக்களாணையை முழுநாட்டுக்கும், முழு உலகுக்கும் சொல்லத்தக்கதொரு சந்தர்ப்பமாகக் கருதினர். இரண்டு முக்கிய விடயங்களை முன்னிறுத்தி, தமிழ் மக்களின் ஆணையை செல்வநாயகம் வேண்டினார். முதலாவது, தமிழ் மக்கள் 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பினை முற்றாக நிராகரிக்கின்றனர் என்பது. இரண்டாவது, தமிழ் மக்கள் தமக்கான தனி அரசு ஒன்றை ஸ்தாபிக்கத் தீர்மானித்திருக்கின்றார்கள் என்பது. ஏறத்தாழ இரண்டு தசாப்தங்களாக ஒற்றையாட்சிக்குள் குறைந்தபட்ச அதிகாரப்பகிர்வுக்காக ஹர்த்தால் நடத்தி, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் என அஹிம்சை வழியில் போரிட்டு, பேச்சுவார்த்தைகள் நடத்தி, ஒப்பந்தங்கள் போட்டு, எல்லாம் தோல்வியடைந்து தமிழ்மொழியும், தமிழ் மக்களும் கையறு நிலையில் இருந்த பொழுதில், தமிழ் இளைஞர்கள் இந்த பிரச்சினையை தம் கையில் எடுத்துக்கொள்ளத் தொடங்கிய பொழுதில் சா.ஜே.வே.செல்வநாயகம், 'பிரிவினை' அதனால் வரும் 'தனியரசு' என்ற விடயத்தை மக்களாணைக்காக முன்வைக்கிறார்.

செல்வநாயகம் 'பிரிவினை' கோரியது தவறு என்றால், 'பண்டா-செல்வா' ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தது யார் தவறு, 'டட்லி-செல்வா' ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாது ஏமாற்றியது யார் தவறு, பெரும்பான்மைத் தமிழர்களின் பிரதிநிதிகளோடு பேச்சுவார்த்தை கூட நடத்தாது சிறிமாவோ அரசாங்கம் எதேச்சாதிகரமாக நடந்தது யார் தவறு, தமிழ்மொழிக்கு எந்தவித அந்தஸ்தும் அளிக்காத, 'தனிச்சிங்களச்' சட்டத்தில் சொன்னவற்றுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கியது யார் தவறு, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முற்றாக நிராகரித்த, புறக்கணித்த முதலாவது அரசியல் யாப்பை, தமிழ் மக்களின் எந்தவொரு கோரிக்கையையும் மதிக்காது நிறைவேற்றியமை யார் தவறு, பல இனக்கலவரங்களை தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்தது யார் தவறு, தரப்படுத்தல் மூலம் தமிழ் மக்களின் உயர் கல்வி வாய்ப்பைத் தட்டிப் பறித்தது யார் தவறு, இத்தனையும் தவறு என்றால், செல்வநாயகம் 'பிரிவினை' கோரியது தவறு எனலாம். இத்தனை தவறுகளுக்கும் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் பொறுப்பேற்குமென்றால், 'பிரிவினை' என்ற தவறுக்கும் செல்வநாயகம் பொறுப்பெடுக்கலாம். இங்கு ஒரு விடயம் சுட்டிக் காட்டப்பட்டே ஆக வேண்டும், 'பிரிவினையோ', 'தனியரசோ' (அல்லது 'தனிநாடோ') இதுநாள் வரை தமிழ் மக்களின் கோரிக்கையாக இருக்கவில்லை.

'அடங்காத் தமிழன்' சி.சுந்தரலிங்கம் உட்பட சில தரப்பினர் தனிநாட்டுக்கான கோரிக்கையை பலமுறை வைத்தும் தமிழ் மக்கள் அதன்பால் ஈர்ப்புக்கொள்ளவில்லை. ஒருநாட்டுக்குள் சுயமரியாதையுடன், சமவுரிமைகளுடன் வாழவே தமிழ் மக்கள் விரும்பினார்கள், இன்றும் விரும்புகின்றார்கள். அதனைச் செய்வதற்கு எந்த சமரசத்துக்கும் தமிழ்த் தலைமைகள் தயாராகவே இருந்தார்கள். 'பண்டா-செல்வா', 'டட்லி-செல்வா' ஒப்பந்தங்கள் எல்லாம் தனிநாடு கேட்பதற்கான அல்லது சமஷ்டியைக் கேட்பதற்கான ஒப்பந்தங்கள் அல்ல, மாறாக மிகக்குறைந்தபட்ச தீர்வுகளையே அவை வேண்டின. அந்த அற்புதமான சந்தர்ப்பங்கள் அரசாங்கத்தால் கிழித்தெறியவும், தூக்கியெறியவும் பட்டபின்னர். தமிழ் மக்களின் நிலைப்பாட்டைக் கேட்கக்கூட சிறிமாவோ அரசாங்கம் தயாராக இல்லாத நிலையில், 'பிரிவினையை' செல்வநாயகம் முன்வைக்க வேண்டி ஏற்படுகிறது.

செல்வநாயகத்துக்கு மாற்றாக ஒரு பலமான போட்டியாளரை தேர்தல் களத்தில் இறக்க வேண்டிய தேவை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தோழமைக் கட்சிகளைக் கொண்ட ஐக்கிய முன்னணி அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியில் வி.பொன்னம்பலத்தை களமிறக்க ஐக்கிய முன்னணி தீர்மானித்தது. ஆனால் 'தனியரசு' கோரி களமிறங்கியிருக்கும் செல்வநாயகத்துக்கு மாற்றாக இறங்குவதாயின் நியாயமான தீர்வொன்றையாவது மக்கள் முன்னிலையில் வைக்கவேண்டும் என வி.பொன்னம்பலம் கருதினார். பிராந்திய தன்னாட்சி என்ற மாற்றை வழங்கவேண்டும் என்பதே வி.பொன்னம்பலத்தின் கோரிக்கை.

இது நியாயமானதும் கூட. 'பண்டா-செல்வா'-விலும், 'டட்லி-செல்வா'-விலும் தமிழரசுக்கட்சி கோரியதும் பிராந்திய தன்னாட்சி அடிப்படையிலான தீர்வொன்றைத்தான். வி.பொன்னம்பலத்தின் அழுத்தமான கோரிக்கையைத் தொடர்ந்து, அவரது கட்சியின் அரசியற்குழு உத்தியோகபூர்வமற்றமுறையில் பிராந்திய தன்னாட்சி என்பதை மக்கள் முன்னிலையில் சமர்ப்பிக்க அனுமதி தந்தது. அதைக்கூட உத்தியோகபூர்வமற்றவகையிலேயே செய்ய வேண்டியதாக இருந்தது.

இதிலிருந்து ஒன்று மிகத் தெளிவாகப் புலப்படுகிறது. தமிழரசுக் கட்சி 'பிராந்தியத் தன்னாட்சி' அடிப்படையிலான தீர்வொன்றைக் கோரியபோது, அதனை வழங்கத் தயாரில்லாதவர்கள், தமிழ் ஐக்கிய முன்னணி 'தனியரசு' கோரும் போது 'பிராந்தியத் தன்னாட்சியை' தாம் பரிசீலிக்கத் தயார் எனும் நிலைக்கு வந்திருந்தார்கள். இலங்கை இனப்பிரச்சினை வரலாறு முழுவதும் இந்த பேரம் பேசும் பலப்பரீட்சை நடந்துகொண்டே இருந்தது. ஆனால், அதில் கொடுமையான விடயம், இருதரப்பும் தக்க சமயத்தில் சாணக்கியமாகச் செயற்பட்டு சாத்தியமான ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்ளத் தவறிவிட்டது. அந்த தவறின் விளைவை அப்பாவி மக்களின் உயிரையும், உதிரத்தையும் காவுகொண்டது.

(அடுத்தவாரம் தொடரும்... )

- See more at: http://www.tamilmirror.lk/174530/தம-ழ-அரச-யல-வரல-ற-ற-ல-ம-க-க-யத-த-வம-ம-க-கத-க-அம-ந-த-க-ங-க-சன-த-ற-இட-த-த-ர-தல-#sthash.UNdLPvp0.dpuf
Link to comment
Share on other sites

தமிழர் விடுதலைப் போராட்டத்தின் முதல் அரசியல் படுகொலை
 
20-06-2016 09:23 AM
Comments - 0       Views - 125

article_1466395163-Un.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 45)

காங்கேசன்துறை இடைத்தேர்தல் முடிவுகள்

சா.ஜே.வே.செல்வநாயகம் 'தனியரசுக்கான' மக்களாணையைக் கோரியமையானது, அன்று பிரிவினையை வேண்டிய இளைஞர்களுக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்தது. அவர்கள், செல்வநாயகத்தின் வெற்றிக்காக, குறித்த இடைத்தேர்தலில் கடுமையாக உழைத்தனர். இந்த இளைஞர்கள், தமது சுதந்திர தமிழீழக் கனவை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க அருமையாக சந்தர்ப்பமாக இதைக்கருதினர். மறுபுறத்தில் ஐக்கிய முன்னணி அரசாங்கம் சார்பில் களமிறங்கியிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் வி.பொன்னம்பலம், பிராந்திய தன்னாட்சி என்ற விடயத்தைப் பற்றிப் பேசினார். ஆனால், அரசாங்கம் இதனை ஏற்கவோ, மறுக்கவோ இல்லை.

1975ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி, காங்கேசன்துறை இடைத் தேர்தல் நடந்தது. பதிவு செய்யப்பட்ட 41,227 வாக்காளர்களில் 35,737 வாக்காளர்கள், தமது வாக்கினை அளித்திருந்தார்கள். அதாவது 86.68 சதவீத வாக்களிப்பு வீதம் பதிவாகியிருந்தது. இவற்றில் வெறும் 168 வாக்குகள் செல்லுபடியற்றதாக நிராகரிக்கப்பட, 35,569 வாக்குகள் செல்லுபடியான வாக்குகளாக தேர்தல் முடிவுகளைத் தீர்மானித்தன. தமிழ் ஐக்கிய முன்னணி சார்பில் 'வீட்டுச் சின்னத்தில்' போட்டியிட்ட செல்வநாயகம் 25,927 (72.55 சதவீதம்) வாக்குகளைப் பெற்றிருந்தார். ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், நட்சத்திரச் சின்னத்தில் வி.பொன்னம்பலம் போட்டியிட்டு 9,457 (26.46 சதவீதம்) வாக்குகளைப் பெற்றிருந்தார். கப்பல் சின்னத்தில் போட்டியிட்ட எம்.அம்பலவாணர் 185 (0.52 சதவீதம்) வாக்குகளைப் பெற்றிருந்தார். 16,470 வாக்குகள் பெரும்பான்மையாகப் பெற்ற சா.ஜே.வே.செல்வநாயகம், காங்கேசன்துறை இடைத் தேர்தலில் வெற்றிபெற்றார்.

காங்கேசன்துறைத் தொகுதியில் கிடைத்த மிகப்பெரிய பெரும்பான்மை இதுவாகவே இருந்தது. ஆனால், இந்த வெற்றி செல்வநாயகத்தின் வெற்றியோ, தமிழ் ஐக்கிய முன்னணியின் வெற்றியோ மட்டும் அல்ல. இது தமிழ் மக்கள் 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பை நிராகரித்ததற்கும், தனிநாடொன்றை வேண்டியமைக்குமான மக்களாணையும் கூட. தமிழ் மக்களின் அரசியல் பயணத்தை மாற்றியமைத்த தேர்தல் இது. இந்தத் தேர்தல் தொடங்கி இன்று வரை, தமிழர் தாயகப் பிரதேசத்தில் மக்கள் பிரதான தமிழ்க்கட்சி அல்லது கூட்டணி முன்வைத்த கோரிக்கையான தனிநாட்டுக்கோ, சமஷ்டிக்கோ அல்லது அதிகாரப் பகிர்வுக்கோ தொடர்ந்து தமது மக்களாணையை வழங்கி வருகிறார்கள்.

இந்த இடைத்தேர்தல் வெற்றிக்குப் பின் பேசிய செல்வநாயகம் 'வரலாற்றுக் காலம் முதல் அந்நியர் ஆதிக்கம் ஏற்படுத்தப்படும் வரை இந்நாட்டில் தமிழர்களும் சிங்களவர்களும் வேறுபட்ட இறைமை கொண்ட மக்களாகவே வாழ்ந்துவந்திருக்கின்றனர். கடந்த 25 வருடகாலமாக, ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கைக்குள் சிங்கள மக்களுடன் சமத்துவமாக வாழ்வதற்காக எமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க, நாம் எம்மாலான சகல முயற்சிகளையும் முன்னெடுத்தோம். ஆனால், சுதந்திரம் பெற்றது முதல் வந்த ஒவ்வொரு சிங்கள அரசாங்கமும் தமது அதிகாரத்தை எமது அடிப்படை உரிமைகளை நசுக்கவும் அதன்மூலம் எம்மை இரண்டாந்தரப் பிரஜைகளாக ஆக்கவும் பயன்படுத்தின என்பது மிகுந்த வேதனையளிக்கும் விடயமாகும். தமிழ் மக்களுக்கெதிராக பாரபட்சமாகச் செயற்பட்டே இந்த அரசாங்கங்கள் எம்மை இந்தநிலைக்கு கொண்டுவந்தன.

இந்த தேர்தல் முடிவுமூலம் நான் ஒன்றை எனது மக்களுக்கும், இந்த நாட்டுக்கும் சொல்ல விரும்புகிறேன். நான் இந்தத் தேர்தல் தந்த தீர்ப்பை, தமிழீழ தேசம் ஏலவே தமிழ் மக்களிடம் பொதிந்துள்ள இறைமையைக்கொண்டு விடுதலைபெற வேண்டும் என்பதற்கான மக்களாணையாகவே கருதுகிறேன். தமிழ் ஐக்கிய முன்னணி சார்பாக நான் ஓர் உறுதிமொழியைத் தருகிறேன். இந்த மக்களாணையை நாங்கள் நிச்சயம் முன்கொண்டு செல்வோம்' என்று குறிப்பிட்டார். இந்தப் பேச்சைக் கேட்ட மக்கள் கூட்டம், தமிழீழம் எங்கள் தாய்மண்;, தமிழீழம் எங்கள் அபிலாஷை என்ற வகையிலான கோஷங்களை எழுப்பியது. உணர்ச்சி வசப்பட்ட சிலர் தமது விரல்களைக் கீறி அதில் வழிந்த இரத்தத்தின் மூலம் செல்வநாயகத்துக்கு 'இரத்தத்திலகம்' இட்டனர். இந்த 'இரத்தத்திலகம்' இடும் கலாசாரம் பின்னர் அமிர்தலிங்கம் காலத்திலும் தொடர்ந்தது.

ஆனால், இந்த உணர்ச்சிப்பெருக்குக்கும். பிரிவினைக் கோசத்துக்குமான விலை அதிகமாகவே இருந்தது. அதனை தமிழ் மக்கள், குறிப்பாக தமிழ் இளைஞர்கள் கொடுக்க வேண்டிவந்தது. காங்கேசன்துறை இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து தமிழ் பிரதேசங்கள் எங்கிலும் தமிழீழக் கோசம் சூடு பிடிக்கத் தொடங்கியது. இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கமும் அவசரகாலச்சட்டம் எனும் இரும்புக்கரம் கொண்டு தமிழ் இளைஞர்களைக் கைதுசெய்து தடுத்துவைக்கத் தொடங்கியது. தமிழ் தலைமைகள் மிரட்டப்பட்டனர். உயிர்க்கொலைகளும் ஆங்காங்கே நிகழ்ந்தன. கோயில் திருவிழாவுக்கு சென்று திரும்பிய பரராசா என்ற ஒரு வங்கி எழுதுவினைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார். தமிழ் மக்களுக்கெதிரான வன்முறை மலையக பெருந்தோட்டங்களிலும் பரவியது.

சிறிமாவோ அரசாங்கம், பெருந்தோட்டங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருந்தது. சிங்கள மக்கள் பெருந்தோட்டங்கள் மீண்டும் தமக்கு சொந்தமாக்கப்படும் எனும் எண்ணம் கொண்டிருந்தார்கள். ஏற்கனவே, 'அந்நியர்கள்' என்றும் 'கள்ளத்தோணிகள்' என்று முத்திரைகுத்தப்பட்டிருந்த அப்பாவி தோட்டத்தொழிலாளர்களின் மேல் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அவர்களைத் தோட்டங்களை விட்டு வெளியேற்றுவதற்காக தொழிலாளர்களின் வசிப்பிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது. லெட்சுமணன் என்ற இளைஞன் பொலிஸாரினால்

சுட்டுக்கொல்லப்பட்டிருந்தான். பெருந்தோட்டப் பகுதி தமிழ் மக்களின் ஐக்கிய தேசியக் கட்சி சார்பு நிலை காரணமாகவே அரசாங்கம் இந்த வன்முறைகளை நிகழ்த்தியது என ஒரு சாரார் குற்றம் சுமத்தினர். எது எவ்வாறாயினும் தமிழ் மக்களுக்கு நாடு முழுவதும் பாதுகாப்பற்ற சூழல் உருவாகியிருந்தது.

ஆனால், செல்வநாயகம் உறுதியாக இருந்தார். 1975 மே மாதம் கொக்குவில்லில் நடந்த கூட்டமொன்றில் உரையாற்றிய செல்வநாயகம், தமிழ் மக்கள் கோரியுள்ள தமிழீழத்தை விட மிகச்சிறிய அளவிலான, மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்டுள்ள நாடுகள் பலவும் சுதந்திர அரசுகளாக இருக்கின்றன. அப்படி இருக்கையிலே, இலங்கை வாழ் தமிழ் மக்கள் மட்டும் தம்மைத்தாமே ஆள்வதற்கான ஒரு தனிநாட்டைக் கோருவதில் என்ன தவறு இருக்கிறது என்றார்.

அல்ஃப்றட் துரையப்பா படுகொலை

தமிழர் நலன்களுக்கு எதிரான சிறிமாவோ அரசாங்கத்தை, தமிழ் ஆயுதக்குழு இளைஞர்கள் எதிரியாகவே கண்டனர். எதிரிகளோடு கூட்டுச்சேர்ந்த தமிழர்களை 'துரோகிகள்' என்று முத்திரை குத்தினர். ஏற்கெனவே, காசி ஆனந்தன் போன்றவர்கள் இந்தத் 'துரோகிகளுக்கு' தமிழ் இளைஞர்கள் முடிவு கட்ட வேண்டும் என்ற பாணியிலான பேச்சுக்களை மேடைகளில் பேசி வந்தனர். ஏலவே, பொன்னுத்துரை சிவகுமாரன் 'துரோகி' என முத்திரை குத்தப்பட்ட அல்ப்றட் துரையப்பாவைக் கொல்ல எடுத்த முயற்சி தோல்விகண்டிருந்தது. சிவகுமாரன் முன்னெடுத்த கருமத்தை, தான் முடித்துவைக்க, 'புதிய தமிழ்ப் புலிகள்' என்ற அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற 20 வயது இளைஞன் தயாரானான்.

யாழ்ப்பாண மேயராக இருந்த அல்ப்றட் துரையப்பா கொல்லப்பட பல காரணங்களை தமிழ் ஆயுதக்குழுக்கள் முன்வைத்தன. இதில் தமிழாராய்ச்சி மாநாட்டு கலவரமும் உயிரிழப்பும் முக்கிய காரணங்களாக முன்னிறுத்தப்பட்டன. ஆனால், தமிழாராய்ச்சி மாநாட்டு கலவரத்துக்கும் அல்ப்றட் துரையப்பாவுக்கும் நேரடிச் சம்மந்தம் இருப்பதற்கான நேரடி ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது ஒரு சாராரின் கருத்து. தமிழ் ஐக்கிய முன்னணியின் பிரசாரம் தான் அல்ப்றட் துரையப்பாவைப் பலிகடாவாக்கியது என்கிறார்கள் சில விமர்சகர்கள். 'தமிழின எதிரிகள்' என முத்திரை குத்தப்பட்ட சிறிமாவோ அரசாங்கத்தை தமிழர் பிரதேசத்தில் அல்ப்றட் துரையப்பா பிரதிநிதத்துவம் செய்வதோடு அதனை பிரபலப்படுத்த முயற்சிப்பதும் இன்னொரு முக்கிய காரணமாகச் சொல்லப்பட்டது.

பிரபாகரனும் தோழர்களும், அல்ப்றட் துரையப்பாவை குறிவைத்ததும் தமிழர் ஆயுதப் போராட்டத்தின் அரசியல் படுகொலை வரலாறு எழுதப்படத் தொடங்கியது. அல்ப்றட் துரையப்பா கிறிஸ்தவராக இருந்தாலும் வாரம் தோறும் பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆள் நடமாட்டம் குறைந்த அந்தக் கோவிலின் அழகும், நிசப்தமும் தனது மனதுக்கு நிறைந்த அமைதியைத் தருவதாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். நகர அமைப்பாளராக இருந்த ராஜசூரியரிடம் அல்ப்றட் துரையப்பா பகிர்ந்து கொண்டதாக, தனது கட்டுரையொன்றில் ரீ.சபாரட்ணம் குறிப்பிடுகிறார்.

1975 ஜூலை 27ஆம் திகதி அல்ப்றட் துரையப்பா, தனது பேஜோ 404 காரிலே பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலுக்குச் சென்றார். கோவில் வாயிலைத் தாண்டி சில மீற்றர்கள் தொலைவில் அவரது கார் நின்றது. துரையப்பா தனது காரிலே இருந்து இறங்கியதும், சில இளைஞர்கள் 'வணக்கம் ஐயா' என்றனர். துரையப்பாவும் பதிலக்கு 'வணக்கம் தம்பிகள்' என்றார். பிரபாகரன், தனது துப்பாக்கியை எடுத்து அல்ப்றட் துரையப்பாவின் நெஞ்சிலே சுட்டார். சுருண்டு விழுந்த அல்ப்றட் துரையப்பாவின் உயிர் அவ்விடத்திலேயே பிரிந்தது. பிரபாகரனும் இளைஞர்களும், துரையப்பாவின் கார் சாரதியை விரட்டிவிட்டு, அதே காரிலே ஏறித் தலைமறைவானார்கள். தமிழ் ஆயுதப்போராட்ட வரலாற்றின் முதலாவது அரசியல் படுகொலை இவ்வாறுதான் நடத்தப்பட்டது எனப்பதிவு செய்கிறார் ரீ.சபாரட்ணம்.

இந்த அரசியல் படுகொலை தமிழ் மக்களிடம் மட்டுமல்ல, இலங்கை முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இலங்கை அரசாங்கம் அதிர்ந்து போனது. சிறிமாவோ பண்டாரநாயக்கவும் அதிர்ந்து போனார். ஓர் ஆயுதப் புரட்சி அல்லது அதற்கான அறிகுறி என்பது எந்தவோர் அரசாங்கத்துக்கும் அச்சந்தரக்கூடிய சவாலாகும். தமிழ் மக்களிடம், குறிப்பாக யாழ் மக்கள் அதிர்ந்து போனார்கள்.

அல்ப்றட் துரையப்பா, சிறிமாவோ அரசாங்கத்தின் ஆளாக இருந்தாலும், அரசாங்கத்தை ஆதரித்தாலும் தனிப்பட்ட ரீதியில் மக்கள் விரும்பும் மிக நல்ல மனிதராகவே இருந்தார் என்பது பல விமர்சகர்களினதும் கருத்தாகும். அவர், யாழ். நகரபிதாவாக (மேயராக) இருந்தபோது யாழ். நகரம் பெருமளவுக்கு அழகுபடுத்தப்பட்டதோடு, நிறைய புதிய வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. எல்லாவற்றையும் விட அரசியல் எதிரியை அல்லது மாற்றுக்கருத்துடையவனின் உயிரைக் கொல்லுதல் என்பது அன்றைய சூழலில் புதியதொரு விடயமாகவும், அதிர்ச்சிதரக் கூடிய ஒன்றாகவே இருந்தது.

அல்ப்றட் துரையப்பா கொல்லப்பட்டதும், இந்தக் கொலைக்குப் பின்னால் இருப்பது அவரது உட்கட்சிப் போட்டியாளரான அமைச்சர் செல்லையா குமாரசூரியர் தான் என்ற பேச்சும் எழுந்தது. அதேவேளை, பிரபாகரன் தலைமையிலான புலிகள் குழுவினர்தான் இக்கொலையைச் செய்தார்கள் என்ற கருத்தம் பரவியது. ஆனால், உடனடியாக புலிகளோ வேறு அமைப்பினரோ இந்தப் படுகொலைக்குப் பொறுப்பேற்கவில்லை. 1978 ஏப்ரல் 25ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வெளியிட்ட திறந்த கடிதத்தில் அவ்வமைப்பு அல்ப்றட் துரையப்பா படுகொலை உட்பட பதினொருவரின் படுகொலைகளுக்கு பொறுப்பேற்றிருந்தது.

அல்ப்றட் துரையப்பாவின் இறுதிச் சடங்குகள் மிகப்பெரியளவில் யாழ். நகர மண்டபத்தில் இடம்பெற்றன. பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க, அமைச்சர்களான மைத்திரிபால சேனநாயக்க, ‡பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க, ரீ.பி.இலங்கரட்ண, பீ.பீ.ஜீ.களுகள்ல உட்பட்ட மொத்த அமைச்சரவையும் அல்ப்றட் துரையப்பாவின் இறுதிச் சடங்குகளில் பிரசன்னமாயிருந்தனர்.

தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ள அச்சம் கொள்ளவில்லை. அவர்கள், தாம் கலந்துகொண்டால், தாம் தாக்குதலுக்குள்ளாகலாம் என அச்சம்கொண்டுள்ளதாக அன்றைய குற்றப்பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ராமச்சந்திரா சுந்தரலிங்கத்திடம் குறிப்பிட்டிருந்ததாக ஜானக பெரேரா தன்னுடைய கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார். தமிழரசுக் கட்சியிலிருந்து பின்னர் சிறிமாவோ அரசாங்கத்துக்கு ஆதரவு தந்த சீ.எக்ஸ்.மாட்டீன், அல்ப்றட் துரையப்பாவின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொண்டார்.

இந்தக் கொலை தொடர்பிலும், ஆயுதக்குழுக்களுடனான தொடர்புகள் தொடர்பிலும் நூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அல்ப்றட் துரையப்பாவின் கொலையை தமிழரசுக் கட்சித் தலைவர்களோ, தமிழ் ஐக்கிய முன்னணித் தலைவர்களோ குறிப்பிடப்படும்படி கண்டித்ததாகப் பதிவுகள் இல்லை. இந்த அமைதிக்குக் காரணம் இந்தத் தலைவர்கள் இந்தப் படுகொலையை ஆதரித்தார்கள் என்பதா, அல்லது இந்த ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளோடு உடன்பட்டார்கள் என்பதா, அல்லது இந்த ஆயுதக்குழுக்களை எதிர்க்கும் வலு அவர்களிடம் இல்லை என்பதா அல்லது இந்த ஆயுதக் குழுக்களை எதிர்க்க அவர்கள் விரும்பவில்லை என்பதா?

(அடுத்தவாரம் தொடரும்...)

- See more at: http://www.tamilmirror.lk/175090/தம-ழர-வ-ட-தல-ப-ப-ர-ட-டத-த-ன-ம-தல-அரச-யல-பட-க-ல-#sthash.hMh4fcld.dpuf
Link to comment
Share on other sites


'கச்சதீவு': சிறிமாவோவின் இராஜதந்திர வெற்றி
 
27-06-2016 09:26 AM
Comments - 0       Views - 12

article_1466999999-Un.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 46)

உணர்ச்சி அரசியல்

அல்ஃப்றட் துரையப்பாவின் படுகொலைக்குக் கண்டனம் கூடத் தெரிவிக்காத தமிழரசுக் கட்சித் தலைமைகள், தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்களின் நடவடிக்கைகளை மறைமுகமாக ஆதரித்ததாகவே பலரும் கருதினர். குறிப்பாக, தமிழரசுக் கட்சியின் 'தளபதி' என்றறியப்பட்ட அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், இந்த ஆயுதக் குழு இளைஞர்களோடு நெருங்கிய தொடர்புகொண்டிருந்தார் என்று, அக்காலத்தில் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், எந்த ஆயுதக்குழுவோடு அவர் தொடர்புபட்டார் எனப் பேசப்பட்டதோ, அதே குழுவினரால் 1989ஆம் ஆண்டு அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதுதான் வரலாறு. அல்ஃப்றட் துரையப்பாவில் தொடங்கிய தமிழர் அரசியல் படுகொலை வரலாறு, பின்னர் நீண்டு விரிந்தது. இந்த அனைத்துப் படுகொலைகளுக்குப் பின்னும் சில பல நியாயங்கள் சொல்லப்பட்டன. இவற்றை ஏற்போரும் உள்ளனர், மறுப்போரும் உள்ளனர். இந்த நியாய அநியாயங்களை ஆராய்வது இந்தக் கட்டுரைத் தொடரின் நோக்கமல்ல, மாறாக இந்த ஒவ்வொரு சம்பவங்களும் தமிழ் மக்கள், தமது அபிலாஷைகளை நோக்கிய அரசியல் பயணத்தில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தின என்பதை மட்டும் நாம் கருத்திற்கொள்வோம்.

அல்ஃப்றட் துரையப்பா, தமிழினத் துரோகியா என்ற கேள்விக்கு பதிலளிக்க முயலும் பல விமர்சகர்களும் அதற்கான எந்த உறுதியான ஆதாரங்களும் இல்லை என்றே கருதுகின்றனர். தமிழரசுக் கட்சியினுடைய வெறுப்புப் பிரசாரத்தின் பலிகடாவாகவே, அல்‡ப்றட் துரையப்பா ஆக்கப்பட்டார். ஒவ்வொரு காலத்திலும், தமக்கான வெறுப்புப் பிரசார பலிகடாக்களாக சிலரை தமிழரசுக்கட்சி பயன்படுத்தியிருக்கிறது. ஆரம்பகாலத்தில்,

ஜீ.ஜீ.பொன்னம்பலம் மீது கடும் வெறுப்புப் பிரசாரத்தை தமிழரசுக்கட்சி கட்டவிழ்த்துவிட்டிருந்தது. அதன் பின்னர், அல்‡ப்றட் துரையப்பா, செல்லையா குமாரசூரியர் ஆகியோர் மீது இந்த வெறுப்புப் பிரசாரம் திருப்பிவிடப்பட்டது. 'தமிழினத்துரோகி' முத்திரைகுத்தி, கடுமையான வெறுப்புப் பிரசாரத்தை கட்டவிழ்த்துவிடும், இந்தத் தந்திரோபாயம் அவர்கள் கொண்டிருந்த திறமையான பேச்சாளர்களின் உணர்ச்சிமிகு பேச்சுக்களால் சாத்தியமாக்கப்பட்டது. உணர்ச்சி நரம்புகளைக் கிளர்ச்சிபெறச் செய்யும் பேச்சுக்கள் இளைஞர்களை அவர்கள்பால் ஈர்த்தது. தனித் 'தமிழீழம்' சாத்தியம் என்ற எண்ணத்தை, இளைஞர்களிடையே தமது மெய்கூச்செறியும் பேச்சுக்களால் விதைத்தார்கள், விதைத்துக்கொண்டிருந்தார்கள்.

கச்சதீவு விவகாரம்

இன்றுவரை, இந்தியாவின் தமிழகத்தில் சர்ச்சைக்குள்ளாகிக்கொண்டிருக்கும் 'கச்சதீவு', சிறிமாவோவின் காலத்திலேயே இலங்கைக்குச் சொந்தமானது என இந்திரா காந்தியால் ஒப்பந்தம் மூலம் அங்கிகரிக்கப்பட்டது. சிறிமாவோ பண்டாரநாயக்க உள்நாட்டு நிர்வாகத்தில், அதிலும் குறிப்பாக இனங்களுக்கிடையேயான உறவுகளில் மாபெரும் தவறுகளை இழைத்திருப்பினும், சர்வதேச அரசியலில் அவரது செயற்பாடுகள் வித்தியாசமானதாக இருந்தன. சிறிமாவோ பற்றிக் குறிப்பிடும் ப்ரட்மன் வீரக்கோன், சிறிமாவோ- சர்வதேச விவகாரங்களில், இராஜதந்திர நடவடிக்கைகளில் மிகுந்த ஆர்வத்துடன் செயற்பட்டதாகக் கூறுகிறார். முன்னிருந்த பிரதமர்கள் எவரையும்விட சிறிமாவோ, சர்வதேச உறவுகளில் அதிலும் குறிப்பாக அணிசேரா நாடுகள், சீனா, ரஷ்யா ஆகியவற்றுடன் நெருக்கமான இராஜதந்திர உறவுகளைக்கொண்டிருந்ததாக ப்ரட்மன் வீரக்கோன் குறிப்பிடுகிறார்.

கச்சதீவு என்பது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் நடுவே உள்ள ஏறக்குறைய, 285 ஏக்கர் பரப்பளவுகொண்ட ஒரு தீவாகும். அந்நியர் ஆட்சிக்கு முன்பதான காலப்பகுதியில் கச்சதீவானது, இராமநாதபுர அரசுரக்குச் சொந்தமானதாக இருந்தது என்று இந்திய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஜமீன்கள் ஒழிக்கப்பட்ட பின்னர், அது மதராஸ் ப்ரெஸிடென்ஸியின் ஓர் அங்கமாகியது என்பது அவர்களது கருத்து. இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு கச்சதீவானது ஒரு கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக இருந்தது. மீனவர்கள் ஓய்வெடுக்கவும், தமது வலைகளைக் காயவிடவும் கச்சதீவைப் பயன்படுத்தியதாக வரலாற்றுத் தகவல்கள் உள்ளன. அத்தோடு, இத்தீவிலே ஒரு கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இலங்கை, இந்தியா ஆகிய இருநாடுகளிலுமிருந்தும் இந்த அந்தோனியார் தேவாலய உற்சவத்துக்கு ஆட்கள் சென்று வருதல், நூறாண்டுகளுக்கும் மேலான பாரம்பரியமாக இருக்கிறது. இங்கு செல்வதற்கு இலங்கை கடவுச்சீட்டோ, இந்தியக் கடவுச்சீட்டோ, எவ்விதமான அனுமதியோ இரு நாட்டினருக்கும் தேவையில்லை. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இலங்கை, இந்தியா ஆகிய இருநாடுகளாலும் கச்சதீவு நிர்வகிக்கப்பட்டாலும், இரண்டுமே பிரித்தானியரின் ஆளுகைக்குட்பட்டிருந்தமையினால் பெரும்சிக்கல்கள் எதுவும் எழவில்லை. ஆயினும், 1921ஆம் ஆண்டு முதலே இலங்கை கச்சதீவுமீதான உரிமையைக் கோரி வந்திருக்கிறது.

இந்நிலையில், ஜூன் 1974லே இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க, இந்தியத் தலைநகர் டெல்லிக்கு விஜயம் செய்து, பாரதப் பிரதமர் இந்திரா காந்தியோடு பேச்சுவார்த்தை நடத்தினார். ஏற்கெனவே, ஜனவரி 1974லே டெல்லி சென்ற பிரதமர் சிறிமாவோ, இலங்கைவாழ் இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை தொடர்பாக தனது முன்னைய ஆட்சிக்காலத்தின் போது, அன்றைய இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்த்ரியுடன் செய்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இணக்கம் பெற்று வந்திருந்தார். மீண்டும் 1974 ஜூனிலே டெல்லிக்கு விஜயம் செய்த பிரதமர் சிறிமாவோ, பாரதப் பிரதமர் இந்திரா காந்தியோடு பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக, நீண்டகாலமாக இருநாடுகளும் உரிமைகோரிவந்த கச்சதீவானது இலங்கைக்குச் சொந்தமானது என்பதை நிபந்தனையுடன் இந்திராகாந்தி ஏற்றுக்கொண்டு, ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டார்.

இந்த 28 ஜூன் 1974 அன்று கைச்சாத்திடப்பட்ட இருநாடுகளுக்குமிடையிலான கடல் எல்லை பற்றிய ஒப்பந்தத்தின் படி, கச்சதீவில் தங்கும், அப்பகுதியில் மீன்பிடிக்கும் உரிமை இந்திய மீனவர்களுக்கு உண்டு என்ற நிபந்தனையின் பெயரில், கச்சதீவு மீதான இலங்கையின் உரிமையை பாரதப் பிரதமர் இந்திரா காந்தி ஏற்றுக்கொண்டார். இலங்கையைப் பொறுத்தவரை, இது மாபெரும் இராஜதந்திர வெற்றியாகும். இதனைச் சாதிக்க சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் இந்திரா காந்தி ஆகியோரிடையே இருந்த நட்பு ஒரு முக்கிய காரணம் என்கிறார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சூரியநாரணயணன். அவர் மேலும் கூறுகையில், இது ஒரு சட்டரீதியான ஒப்பந்தம் அல்ல மாறாக நட்பினால் விளைந்த அரசியல் ஒப்பந்தம் என்கிறார்.

மீண்டும், 23 மார்ச் 1976இல் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான கடல் எல்லையைத் தீர்மானிக்கும் இன்னொரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. பாக்கு நீரிணை, மன்னார் வளைகுடா மற்றும் வங்கப் பெருங்கடல் ஆகியவற்றில், இரு நாடுகளுக்குமிடையிலான கடல் எல்லைகளைத் தீர்மானித்த இந்த ஒப்பந்தத்தின்படி, கச்சதீவு முழுமையாக இலங்கைக்குச் சொந்தமான பிரதேசமாகியது.

இந்திய மீனவர்களுக்கு இருந்த பாரம்பரிய உரிமைகள் கூட இந்த கடல் எல்லைத் தீர்மானத்தின் பின் இல்லாமற்போனது. ஏனெனில், இந்த ஒப்பந்தத்தின்படி, இருநாட்டு மீனவர்களும் தத்தமது எல்லைகளுக்குள் மீன்பிடிக்க வேண்டும் என்று இணங்கப்பட்டதோடு, கச்சதீவானது இலங்கைக்குரித்தான கடல் எல்லைக்குட்பட்டது என இணங்கப்பட்டது. 1974 மற்றும் 1976 ஒப்பந்தங்களின் படி, சிறிமாவோவின் ஆட்சிக் காலத்தில் கச்சதீவானது இந்தியாவின் இணக்கப்பாட்டோடு இலங்கைக்குச் சொந்தமானதாக அங்கிகரிக்கப்பட்டது. ஆனால், இது சட்ட விரோதமானது, பிரதமர் இந்திரா காந்தியால் ஒப்பந்தம் செய்து இந்தியாவின் நிலப்பரப்பை இலங்கைக்கு விட்டுக்கொடுக்க முடியாது என இந்திய சட்டவல்லுனர்கள் கருத்துத்தெரிவிக்கின்றனர். 1974 மற்றும் 1976 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டபோது, அன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி, இதற்கெதிராக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2008ஆம் ஆண்டிலே அன்றைய தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும் இன்றைய தமிழ்நாட்டு முதல்வருமான ஜெயலலிதா இந்திய உச்சநீதிமன்றத்திலே கச்சதீவு பற்றி, பிரதமர் இந்திராகாந்தி செய்த 1974 மற்றும் 1976 ஒப்பந்தங்கள் செல்லுபடியாகாது என்று அறிவிக்க வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு இன்னும் நிலுவையிலுள்ளது.

அதாவது இந்தியாவுக்குச் சொந்தமான நிலப்பரப்பு ஒன்றை இன்னொரு நாட்டுக்கு வழங்குவதாயின், அல்லது விட்டுக்கொடுப்பதாயின் இந்திய அரசியலமைப்பில் மாற்றம் வேண்டும், அதாவது இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அதனை அங்கிகரிக்கவேண்டும். இதனைத் தவிர்க்கும் முகமாக, இந்திராகாந்தி தலைமையிலான அரசாங்கம், கச்சதீவை இந்தியாவுக்குரிய பிரதேசம் என்று கருதாது 'சர்ச்சைக்குரிய பிரதேசம்' என்று கருதியது. அந்த 'சர்ச்சைக்குரிய பிரதேசம்' இலங்கைக்குரியது என இணங்கப்பட்டது என்பதே அவர்களுடைய நிலைப்பாடு. ஆனால், இதனை எதிர்ப்பவர்களது நிலைப்பாடானது கச்சதீவானது இந்தியாவுக்குரிய நிலப்பரப்பாகவே எப்போதும் இருந்து வந்திருக்கிறது. அதனை இலங்கைக்கு ஒப்பந்தம் போட்டு விட்டுக் கொடுத்தமையானது சட்டவிரோதம் என்பதாகும். இன்றுவரை இந்த சர்ச்சை, குறிப்பாக தமிழ்நாட்டரசியலில் முக்கியத்துவம் பெற்று தொடர்ந்துகொண்டிருக்கிறது.

முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள்

சிறிமாவோ பண்டாராநாயக்கவின் ஆட்சிக்காலத்தில், சிறுபான்மையினருக்கெதிரான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டது தமிழர்கள் மட்டுமல்ல. இலங்கையின் இன்னொரு முக்கிய சிறுபான்மை இனமான முஸ்லிம் மக்களும் இன்னல்களை எதிர்கொண்டனர். 1972லேயே, கொம்பனித்தெரு பள்ளிவாசல், காடையர்களின் தாக்குதலுக்குள்ளானது. 1975ஆம் ஆண்டு மஹியங்கனைக்கு அருகிலிருந்த பண்டாரகம என்ற கிராமத்தில் முஸ்லிம் மக்களின் 61 வீடுகளும், 7 கடைகளும் காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்டன. 1976இன் ஆரம்பப் பகுதியில், கம்பளை, பாணந்துறை, நிக்கவெரட்டிய உட்பட முஸ்லிம்கள் பெருமளவில் வாழ்ந்த ஏறத்தாழ 40 கிராமங்கள் தாக்குதலுக்கு உள்ளாயின. 1976 பெப்ரவரி மாதம், புத்தளத்தில் பொலிஸாரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையில், முஸ்லிம்களுக்குச் சொந்தமான 200 வீடுகள், 50 கடைகள், இரண்டு தென்னந்தும்புத் தொழிற்சாலைகள் என்பன தீக்கிரையாக்கப்பட்டன. அத்தோடு, இரண்டு பள்ளிவாசல்களும் தீக்கிரையாக்கப்பட்டன. எப்படி தமிழாராய்ச்சி மாநாட்டில் பொலிஸார்

கட்டவிழ்த்து விட்ட வன்முறை தொடர்பில், சிறிமாவோ அரசாங்கம் விசாரணை செய்ய மறுத்ததோ, அதே போன்று 1976 புத்தளம் பொலிஸ் வன்முறைகள் பற்றியும் சிறிமாவோ அரசாங்கம் விசாரணையொன்றை மேற்கொள்ளாது, மெத்தனப்போக்கைக் கையாண்டது. அன்றைய நிலையில் இலங்கைப் பொலிஸ் சேவையைப் பொறுத்தவரை ஏறத்தாழ 90 சதவீதமானவர்கள் சிங்களவர்களாகவே இருந்தனர். முப்படைகளிலும் இதுவே நிலைமை.

தெற்கிலே மாறிக்கொண்டிருந்த களநிலமைகள்

வடக்கு - கிழக்கிலே தமிழரசுக்கட்சியும் பின்னர் தமிழர் ஐக்கிய முன்னணியும், சிறிமாவோ அரசாங்கத்துக்குப் பெரும்சவாலாக விளங்கிய நிலையில், தெற்கிலே டட்லி சேனநாயக்கவின் மறைவுக்கு பின், 1973 ஏப்ரலில், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவராக பதவியேற்றிருந்த ஜே.ஆர் என்றறியப்பட்ட ஜூனியஸ் ரிச்சர்ட் ஜயவர்தன, சிறிமாவோ அரசாங்கத்துக்குக் கடும் சவாலைத் தரத் தொடங்கினார். டட்லி சேனநாயக்கவைப் போன்று அடக்கிவாசிக்கும் தலைவராக ஜே.ஆர் இருக்கவில்லை. ஜே.ஆரிடம் எப்போதும் ஒரு தீவிரத்தன்மை இருந்தது. பதவியை அடைவதற்கான தாகம் இருந்தது. அந்தப் பதவியை அடைவதற்காக எதையும் செய்யக்கூடிய துணிவும் இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகப் பதவியேற்றதிலிருந்து, சிறிமாவோ அரசாங்கம் மீது கடும் விமர்சனங்களை ஜே.ஆர். முன்வைத்தார். அன்றைய சிறிமாவோ அரசாங்கத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் பெருமளவில் இருந்தது. சிறிமாவின் மூத்த மகளான சுனேத்ரா பண்டாரநாயக்க, பிரதமர் சிறிமாவின் இணைப்புச் செயலாளராக இருந்தார். அவருடைய அன்றைய கணவரான குமார் ரூபசிங்க, தேசிய இளைஞர் பேரவையில் இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் 'ஜயவேகய' என்ற வாரப் பத்திரிகையையும் நடத்தினார்.

சிறிமாவோவின் மற்றொரு மகளான சந்திரிகா பண்டாரநாயக்க, காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவில் இயக்குநராக நியமிக்கப்பட்டார். சிறிமாவின் மகனான அநுர பண்டாரநாயக்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞரணித் தலைவராக இருந்ததுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பத்திரிகையான 'சிங்ஹலே' அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. 1974 மார்ச்சிலே நாடாளுமன்றத்தில் பேசிய ஜே.ஆர்.ஜெயவர்தன 'இந்தநாட்டின் உண்மையான அரசாங்கமானது, பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவையும் அவரது மகள் மற்றும் மருமகனையும் அவர்களது வால்களையும் கொண்டமைந்துள்ளது' என சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடும்பத்தினர் பதவிகளில் நியமிக்கப்பட்டு அரச இயந்திரத்தை தமது கரங்களில் வைத்திருக்கும் குடும்ப ஆட்சியைத் தாக்கிப் பேசினார். எப்பாடு பட்டேனும் 1977ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில் ஜே.ஆர் உத்வேகத்துடன் செயற்பட்டுக்கொண்டிருந்தார்.

(அடுத்தவாரம் தொடரும்... )

- See more at: http://www.tamilmirror.lk/175648/-கச-சத-வ-ச-ற-ம-வ-வ-ன-இர-ஜதந-த-ர-வ-ற-ற-#sthash.KH4938V3.dpuf
Link to comment
Share on other sites

வெற்றிக்காக காய் நகர்த்த தொடங்கிய ஜே.ஆர்
 
04-07-2016 09:29 AM
Comments - 0       Views - 151

article_1467605038-JR.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 46)

பதவி விலகிய ஜே.ஆர்

ஜே.ஆர் என்று பிரசித்தமாக விளிக்கப்படும் ஜூனியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தன, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவிக்கு வந்ததிலிருந்து, சிறிமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கடும் சவாலைக் கொடுக்கத் தொடங்கியது. 1977இல் ஆட்சியைப் பிடிப்பதற்கு பகீரதப் பிரயத்தனம் புரிந்துகொண்டிருந்த ஜே.ஆர், 1975ஆம் ஆண்டு மே மாதம் தேசிய அரசுப் பேரவையிலிருந்து (சட்டவாக்கசபை) பதவி விலகினார். கொழும்பு தெற்கு தேர்தல் தொகுதியிலிருந்து தேசிய அரசுக் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஜே.ஆர் பதவி விலகியதன் காரணமாக, இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய தேவை உண்டானது. அன்றிருந்த சூழலில் இடைத்தேர்தல்கள், அரசாங்கத்துக்குச் சாதகமாக இருக்கவில்லை. இடைத்தேர்தல் தோல்விகள் அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் குரலாகப் பார்க்கப்பட்டன. இதுபோன்ற மக்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் நோக்கில்தான் ஜே.ஆரும் பதவி விலகியிருந்தார்.

ஜே.ஆர் பதவி விலகலின் காரணத்தை உணர்ந்திருந்த சிறிமாவோ அரசாங்கம், அதனையோர் அரசியல் நாடகம் என்று கூறியது. ஆனால், ஜே.ஆர் தன்னுடைய கொழும்பு தெற்கு தொகுதி மக்களுக்கு தான் பதவி விலகியமைக்கான காரணம் பற்றி விரிவானதொரு விளக்கத்தை வழங்கினார். அதில் அவர் 'ஒரு ஜனநாயக நாடொன்றில் மக்களே உயர்வானவர்கள். மக்கள் தம்மில் பொதிந்துள்ள இறைமையினூடாக தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து குறிப்பிட்ட காலத்துக்கு தம்மை ஆள்வதற்கு ஆட்சியில் அமர்த்துகிறார்கள். மக்கள் சில புரிந்துணர்வுகளின் அடிப்படையிலேயே வாக்களிக்கிறார்கள். 17 மே 1970இல் மக்கள் வாக்களித்தபோது, மக்கள் தமது மக்களாணையை குறிப்பிட்ட காலத்துக்கு, அதாவது அடுத்த ஐந்து வருடத்துக்கு ஐக்கிய முன்னணிக்கு வழங்கினார்கள். ஐந்து வருடம் அவர்கள் ஆள்வது என்பதே அந்தப் புரிந்துணர்வு. மீண்டும், 1975இல் அல்லது அதற்கு முதல் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே அந்தப் புரிந்துணர்வு.  ஏனெனில், மக்கள் 1970இல் ஐந்து வருடங்களுக்கே ஆளும் வாய்ப்பை ஐக்கிய முன்னணிக்கு வழங்கியிருந்தனர். ஐக்கிய முன்னணியின் நிலைப்பாடு எதுவாக இருந்தது? அவர்களது புரிதல் சிம்மாசன உரையிலேயே தெளிவாகத் தெரிந்திருந்தது. சிம்மாசன உரையில் 'அடுத்த ஐந்து வருடங்களில் குறித்த நடவடிக்கைகளை எடுக்க முனைகிறோம்' என்று குறிப்பிட்டார்கள். இங்கு 'அடுத்த ஐந்து வருடம்' என்பதை நான் அழுத்திக்கூற விரும்புகிறேன். ஏனெனில், 1970ஆம் ஆண்டில் மக்களுக்கும் மக்கள் வாக்களித்த அரசாங்கத்துக்குமிடையிலான புரிந்துணர்வும் மக்களாணையும் இந்தக் காலவரைக்குட்பட்டது. பிரதமரும், சிம்மாசன உரை மீதான விவாதத்தில் நாம் ஐந்து வருடகாலத்தில் இந்நாட்டை மாற்றியமைக்க முயல்வோம் என்று குறிப்பிட்டிருந்தார். ஆகவே, ஐக்கிய முன்னணி அரசாங்கமும் மக்களிடமிருந்து பெற்ற மக்களாணையை நன்கறிந்திருந்தது. அதன்படி பார்த்தால், இந்த நாடாளுமன்றம் ஐந்து வருட நிறைவில் 1975ஆம் ஆண்டு கலைக்கப்பட்டு, மக்களுக்கு மீண்டும் புதிதாக தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பயன்படுத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். இது மக்கள் தீர்மானித்த காலத்தின்படி நடக்கவேண்டுமேயன்றி ஆட்சியிலுள்ளவர்கள் தாமாகத் தீர்மானித்துக்கொண்ட காலத்தின்படி நடக்க முடியாது. ஜனநாயகத்தை பாதுகாக்கவும், ஜனநாயக விழுமியங்களை விரிவாக்கவும், அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கவும் புதிய அரசியல் யாப்பொன்றை இயற்ற மக்களாணையை ஐக்கிய முன்னணி அரசாங்கம் பெற்றிருந்தது. ஆனால், நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை தாம் விரும்பியபடி நீட்டிப்பது ஜனநாயகத்துக்கு இயைபான செயலா, இது ஜனநாயகவிரோதமானது என்பதுடன் மக்களாணைக்கும் விரோதமானது. புதிய குடியரசு யாப்புருவாக்கத்தின் போது நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீட்டிப்பது பற்றிய தீர்மானம் அரசியலமைப்புப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட போது, அதனை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்தது. புதிய அரசியலமைப்பை இயற்ற ஐக்கிய முன்னணி அரசாங்கத்துக்கிருந்த மக்களாணையை நாம் ஏற்றுக்கொண்டோம், அந்த யாப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் மாற்றப்பட முடியும். ஆனால், நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை ஐந்து வருடத்திலிருந்து ஏழு வருடமாக்கியமை மக்களின் நம்பிக்கைக்கு விரோதமான செயலாகும். இது சட்டப்பிரச்சினை அல்ல, இது மக்களின் உரிமை மற்றும் நம்பிக்கை சார்ந்த பிரச்சினை. மே 27 1975க்குப் பின்னர், தேசிய அரசுப் பேரவை உறுப்பினர்கள் மக்களாணைப்படி பதவியிலிருக்க மாட்டார்கள். மாறாக, தமக்காக தாம் உருவாக்கிய சட்டங்களின்படியே பதவியில் நீடிப்பார்கள். ஒரு பொதுத்தேர்தலில் மக்களாணையைப் பெற்றதனடிப்படையிலோ அல்லது சர்வஜனவாக்கெடுப்பினடிப்படையிலோ அல்லது யுத்தகாலத்திலேயோ அல்லது தேசிய அவசரகாலநிலையொன்றிலோதான் அதுவும் எதிர்க்கட்சிகளோடு கலந்தாலோசித்தே நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீட்டிக்க முடியும். இந்நாட்டின் குடிமகனின் பிறப்புரிமையில் தலையிட எந்தச் சுதந்திர ஜனநாயக நாடாளுமன்றத்துக்கும் உரிமை இல்லை. இது இங்கே நடக்கிறது. என்னால் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையில் ஒரு பங்காளியாக முடியாது. எனது கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் ஜனநாயகத்தின் அடிப்படை விழுமியமொன்றை நான் மீளுணர்த்த விரும்புகிறேன், மக்களே இறைமையுடையவர்கள். அந்த இறைமை அவர்களது வாக்களிக்கும் உரிமையினூடாகவே இயக்கம்பெறுகிறது. அந்த உரிமை மறுக்கப்படுதல், இறைமையைப் பாதிக்கும் செயலாகும். இதற்கு எந்தச் சட்ட வியாக்கியானம் சொன்னாலும் அது அர்த்தமற்றதாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றமானது மூன்றிலிரெண்டு பெரும்பான்மையால் மக்களின் இறைமையை இல்லாது செய்யுமானால் அது வல்லாட்சியாகும். இது நெப்போலியன் உயர் அதிகாரம் பெற்றதை அல்லது அடல்‡ப் ஹிட்லர் சர்வாதிகாரியானதைப் போன்றது. நான், எனது பதவியிலிருந்து விலகுவதன் மூலம் ஐந்து வருடங்களில் 1975ஆம் ஆண்டு மீண்டும் தமக்குரிய பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் ஜனநாயக உரிமையை எனது தொகுதி மக்களுக்கு வழங்குகிறேன். எனது பதவி விலகலானது, மக்கள் இறைமையின் உயர்வைச் சுட்டிக்காட்ட அவசியமானதாகும். ஆகவே, நான் மீண்டும் மக்களின் ஆணையைக் கோருகிறேன்' என்று குறிப்பிட்டார்.

ஜே.ஆர் எனும் அரசியல் தந்திரி

இந்தச் சூழ்ச்சியும் தந்திரமும் தான் ஜே.ஆர். இதனை சிலர் நரித்தனம் என்பதுமுண்டு. ஜே.ஆரின் அரசியல் ஒரு குறித்ததொரு தத்துவத்தின் அல்லது கொள்கையின்பாற்பட்டதல்ல. அது அதிகாரத்தைக் கைப்பற்றும் அதிகார அரசியலின் பாற்பட்டது. முதன்முதலாக சிங்கள மொழியை மட்டும் உத்தியோகபூர்வ மொழியாக்க வேண்டும் என்று சொன்னதே ஜே.ஆர்-தான். எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்க 'தனிச்சிங்கள' சட்டத்தின் மீதேறி அரசியலதிகாரத்தைக் கைப்பற்ற முதலே, அன்றைய காலகட்டத்தில் அதிகாரத்தைக் கைப்பற்ற இதுதான் வழி என்பதை ஜே.ஆர் அறிந்திருந்தார்.

ஆனால், அன்று கட்சியின் அதிகாரம் ஜே.ஆரிடம் இருக்கவில்லை. சிங்களத்தை ஆட்சி மொழியாக்க ஜே.ஆர் முன்மொழிந்தமைக்கு அர்த்தம் ஜே.ஆர் 'சுதேசிய' அல்லது 'தனிச்சிங்கள' கொள்கையுடையவர் என்பதல்ல. ஜே.ஆரைப் பொறுத்தவரையில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற அது இலகுவான, பலமான வழி. 'அதிகார' அரசியலே ஜே.ஆரின் பாதையாக இருந்தது, அதன் விளைவாகத்தான் ஜே.ஆர் 1978லே சர்வ வல்லமைமிக்க, அதிகாரக் குவியமாக நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதி முறையை கொண்டுவருகிறார். இதனாலேயே சில அரசியல் அறிஞர்கள் ஜே.ஆரை 'மாக்கியாவலியன்' என்று குறிப்பிடுவதுமுண்டு, அதாவது மாக்கியாவலியின் 'இளவரசன்' என்ற நூலில் வரும் சர்வ வல்லமை பொருந்திய இளவரசனாக ஜே.ஆர் நடந்துகொண்டார் என்பதே அந்த விமர்சனமாகும்.

ஜே.ஆரைப் பொறுத்தவரை 1973வரை அவருக்கிருந்த சவால், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியைக் கைப்பற்றுவது, 1973இலிருந்து அது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதை நோக்கி மாறியது. அதற்காக மக்களைத் தயார்ப்படுத்தவும், சிறிமாவோ ஆட்சிக்கெதிரான மக்களலையொன்றை உருவாக்கும் முயற்சியில் அவர் இருந்தார். ஒரு சாதாரண வெற்றி அவருக்குப் போதுமான அதிகாரத்தை பெற்றுத்தராது, ஆகவே, பிரமாண்டமான வெற்றியொன்றுக்காக தனது காய்களை நகர்த்தத் தொடங்கியிருந்தார்.

1975 ஜூலை 18ஆம் திகதி, கொழும்பு தெற்கு இடைத்தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் சிறிமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் போட்டியிடாது புறக்கணித்தது. ஏனெனில், இதில் போட்டியிட்டு தோல்வியடைந்தால், அது அரசாங்கத்தின் மீதாக அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் என்று அவர்கள் உணர்ந்தார்கள். அத்தோடு, ஜே.ஆரின் அரசியல் நாடகத்தில் தாம் பங்குபற்ற விரும்பவில்லை என்ற நிலைப்பாட்டை உடையவர்களாக இருந்தார்கள். ஜே.ஆரை எதிர்த்து சில சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தார்கள். 50,264 பேர் வாக்களித்திருந்த தேர்தலில் 36,919 வாக்குகள் பெற்று 25,801 பெரும்பான்மை வாக்குகளில் ஜே.ஆர் வெற்றி பெற்றிருந்தார். இதனை தனது கொள்கைக்கு கிடைத்த வெற்றியாக மட்டுமல்லாது, அரசாங்கத்துக்கு எதிரான மக்களாணையாக ஜே.ஆர் காட்டினார். இடைத்தேர்தல்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கத்துக்குச் சாதகமாக இருக்கவேயில்லை.

ஐக்கிய முன்னணி ஆட்சியில் நடந்த 13 இடைத் தேர்தல்களில் 10இல் ஐக்கிய தேசியக் கட்சியும் 1இல் தமிழ் ஐக்கிய முன்னணியும் (தமிழரசுக் கட்சி) வெற்றியீட்டியிருந்தது. ஐக்கிய முன்னணி அரசாங்கம் வெறும் 2 இடைத் தேர்தல்களையே வென்றிருந்தது. 1977 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வருவதற்கான சமிஞ்ஞைகள் பிரகாரசமாக இருந்தன. ஆனால், அந்தப் பிரகாசம் தமிழர்களைப் பொறுத்தவரையில் தீச்சுவாலையாக மாறியமைதான் கொடுமையான வரலாறு. தந்திரத்தில் மட்டும் ஜே.ஆர் 'மாக்கியாவல்லியனல்ல', ஈவிரக்கமற்ற கொடுங்கோல் தன்மையிலும் மாக்கியாவல்லியன் தான் என்பது நிரூபணமாக அதிக காலம் தேவைப்பட்டிருக்கவில்லை. சிறிமாவோவின் காலத்தில் தமிழ் மக்களின் உரிமைகள் பறிபோயின, ஜே.ஆரின் காலத்தில் உரிமைகள் மட்டுமல்ல, உயிர்களும் உடமைகளும் பறிபோயின. அந்த வரலாற்றை புரிந்துகொள்ள ஜே.ஆரையும், ஜே.ஆரின் அரசியலையும் புரிந்துகொள்ளுதல் அவசியமாகும். ஏனென்றால், மேசைக்கு மேலே கைகொடுத்துக்கொண்டு, மேசைக்குக் கீழே காலைவாரும் தந்திரக்கலையில் ஜே.ஆர் ஒரு சாணக்கியன்.

ஐக்கிய முன்னணியின் ஐக்கியம் குலைந்தது

ஐக்கிய தேசியக் கட்சியின் எழுச்சி ஏற்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் சிறிமாவோவுக்கும் அவரது 'தோழர்களுக்குமிடையிலான' உறவு விரிசலடையத் தொடங்கியிருந்தது. 1975 ஓகஸ்ட்டிலே கலாநிதி என்.எம்.பெரேரா, கொழும்பிலே அவரது கட்சியால் நடத்தப்பட்ட கூட்டமொன்றில் பேசிய விடயமொன்று தொடர்பில் ஐக்கிய முன்னணி தலைவர் சிறிமாவோவால் விளக்கம் கோரப்பட்டிருந்தது. அதாவது வெளிநாட்டவருக்குச் சொந்தமான பெருந்தோட்டங்கள் அனைத்தும் முழுமையாகத் தேசியமயமாக்கப்படாவிட்டால், அரசாங்கத்திலிருந்து லங்கா சமசமாஜக் கட்சி விலகும் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் நாங்கள் தனிப்பட்ட நலனுக்காக பதவிகள் பெறவில்லை. சோசலிஸக்

கொள்ளைகளை முன்னிறுத்தவும் அதன்வாயிலாக நாட்டை அபிவிருத்தி செய்யவுமே நாம் பதவிகள் பெற்றுள்ளோம் அது நடக்காவிட்டால், நாம் பதவி விலகுவதோடு அரசாங்கத்திலிருந்தும் விலகுவோம் என்று பேசியிருந்தார். இது பற்றி கேட்கப்பட்ட விளக்கத்துக்கு பதிலளித்த அன்றைய நிதியமைச்சரான கலாநிதி என்.எம்.பெரேரா 'நான் சொன்னவற்றிலேதும் உங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் அதற்கு வருந்துகிறேன். நான், வாயாடி அரசியல் செய்வதில்லை. கட்சிகளிடையோன ஒற்றுமையைப் பாதுகாக்க நானும் எனது கட்சியும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். ஐக்கிய முன்னணியினூடாக நாங்கள் நிறையவே சாதித்துள்ளோம்' என்று கூறியிருந்தார். ஆனால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் 'தோழர்களுக்கு' எதிரான நிலைப்பாடு வலுவடையத் தொடங்கியதுடன் 'தோழர்களை' கழற்றிவிடுவதென்ற முடிவுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் வந்திருந்தனர். இதன் முதல் நடவடிக்கையாக பிரதமர், லங்கா சமசமாஜக் கட்சி அமைச்சர்களை பதவி விலகக் கோரியிருந்தார். அதனை அவர்கள் நிராகரித்ததன் பின் பிரதமரின் பரிந்துரையின்பேரில் 1975 செப்டெம்பர் 2ஆம் திகதி ஜனாதிபதி, லங்கா சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களான கலாநிதி என்.எம்.பெரேராவையும் கலாநிதி கொல்வின் ஆர்.டீ.சில்வாவையும் லெஸ்லி குணவர்த்தனவையும் பதவியிலிருந்து நீக்கினார். இதற்கான பதிலடியை கொடுக்க லங்கா சமசமாஜக் கட்சி தயாரானது.

(அடுத்த வாரம் தொடரும்...)

- See more at: http://www.tamilmirror.lk/176130/வ-ற-ற-க-க-க-க-ய-நகர-த-த-த-டங-க-ய-ஜ-ஆர-#sthash.ubWQxCr1.dpuf
Link to comment
Share on other sites


இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகள்
 
11-07-2016 09:21 AM
Comments - 0       Views - 18

 

article_1468209250-Untitled.jpgஎன். கே. அஷோக்பரன் LLB (Hons)

 

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-48)

லங்கா சமசமாஜக் கட்சியின் பதிலடி

லங்கா சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களான கலாநிதி என்.எம்.பெரேரா, கலாநிதி கொல்வின் ஆர். டீ. சில்வா, லெஸ்லி குணவர்த்தன ஆகியோர் பிரதமர் சிறிமாவோவின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதியால் பதவி நீக்கப்பட்டனர். ஆரம்ப காலங்களிலிருந்தே இடதுசாரிகள் இருபெருங்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றின் மீது நம்பிக்கையற்றே இருந்தனர்.

1962 இல் நாடாளுமன்ற உரையொன்றில் ஐக்கிய தேசியக் கட்சியையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியையும் பற்றிக் குறிப்பிட்ட கலாநிதி கொல்வின் ஆர். டீ. சில்வா, 'அழுக்குகளில் தரம் கூடிய அழுக்கு, தரம் குறைந்த அழுக்கு என பிரித்துப் பார்க்கும் வல்லமை எனக்கில்லை' என இருபெரும் கட்சிகளையும் „அழுக்குகள்... எனச் சாடிப் பேசியிருந்தார்.

ஆனாலும் ஆட்சி அதிகாரத்தை தாம் கைப்பற்ற வேண்டுமானால் அது இருபெரும் கட்சிகளிலொன்றுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் மட்டுமே சாத்தியம் என்பதனை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். இந்த விசயத்தில் இடதுசாரிகளுக்கு முன்னோடி „மாக்ஸியப் புரட்சியாளன்... பிலிப் குணவர்த்தனவையே சாரும்.  வெறும் மாக்ஸியமும் இடதுசாரித்துவமும் மட்டும் ஆட்சிப் பதவி பெறப்போதாது, அதனுடன் பேரினவாதமும் இணையும்போதுதான் அது வலுப்பெறும் என்பதை முதலில் உணர்ந்து, பெருங்கட்சிகளுடன் கூட்டணியமைத்தவர் பிலிப்குணவர்த்தனவே.

இதேவழியைப் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியும் லங்கா சமசமாஜக் கட்சியும் தேர்ந்தெடுத்தன. அதன் விளைவாகத் தாம் முன்னர் தூக்கி நிறுத்திய கொள்கைகளையே அவர்கள் கைவிடவேண்டிய நிலைவந்தது. எந்தத் தனிச்சிங்களச் சட்டத்திற்கெதிராக கலாநிதி கொல்வின் ஆர். டீ. சில்வாவும் கலாநிதி என். எம். பெரேராவும் லெஸ்லிகுணவர்த்தனவும் உணர்ச்சி பொங்கப் பேசியிருந்தார்களோ, அவர்களே சிங்களம் மட்டுமே உத்தியோகபூர்வ மொழி என்று கூறிய 1972 ஆம ;ஆண்டு முதலாம் குடியரசு யாப்பை எழுதினார்கள். 'மதம் என்பது வெகுஜனங்களின் ஒபியம்' என்று சொன்ன கார்ள்மாக்ஸின் சீடர்கள் பௌத்தத்தை அரச மதமாக்கிய அரசியல் யாப்பை உருவாக்கினார்கள். எதனை அவர்கள் அழுக்கு என்று கருதினார்களோ, அந்த அழுக்குடன் கட்டிப்புரண்டு, உருண்டு தம்மையும் அழுக்காக்கிக் கொண்டார்கள். கடைசியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அவர்களை தூக்கியெறிந்தது. தம்மை கழற்றி விட்ட சிறிமாவோ அரசாங்கத்திற்கு தகுந்த பதிலடி கொடுக்க எண்ணிய லங்கா சமசமாஜக் கட்சியினர் 1975 டிசம்பர் 23 ஆம் திகதி பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கும் அவரது அரசாங்கத்துக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை தேசிய அரசுப் பேரவையில் (நாடாளுமன்றத்தில்) கொண்டு வந்தனர்.

சிறிமாவோ மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் நடிவடிக்கைகள், முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகங்கள் பற்றியே இருந்தது. லங்கா சமசமாஜக் கட்சியைப் பொறுத்தவரை அதன் தலைவர்கள் மிகச் சிறந்த கல்விமான்களாக மட்டுமல்லாது, திறமையான பேச்சாளர்களாகவும் இருந்தார்கள். அதிலும் கலாநிதி கொல்வின் ஆர். டீ. சில்வா இலங்கையின் புகழ்பூத்த சட்டத்தரணிகளில் ஒருவர். ஆகவே பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை மிகக்காத்திரமாக முன்வைத்தார். இந்தக் குற்றச்சாட்டுக்களில் பிரதானமானது பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவும் அவரது பிள்ளைகளும் காணி சீர்திருத்தச் சட்டத்திற்கு விரோதமாக நடந்தமையும் (குறித்த சட்டத்தின் கீழ்காணிகளை விற்க முடியாத காலப்பகுதியில் கூடிய விலைக்கு ஒரு விற்பனையைச் செய்தமை) மற்றும் காணி தொடர்பான இன்னும் சில குற்றச்சாட்டக்களுமாகும்.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் விவரமான உரையொன்றை ஆற்றிய கலாநிதி கொல்வின் ஆர். டீ. சில்வா 'ஒரு நாட்டின் பிரதமரானவர் எந்த ஐயங்களுக்கும் இடந்தராத நிலையில் இருக்க வேண்டும். நாம் இங்கு குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் பிரதமர் ஐயமிக்க வகையில் நடந்திருக்கிறார். அத்தகைய நடவடிக்கையினால் அவர் மீதான நம்பிக்கையை துஷ்பிரயோகம் செய்திருப்பதனால் நம்பிக்கைத்துரோகம் இழைத்து விட்டார்' என்று பேசினார். 

இதற்குப் பதிலளித்துப் பேசிய விவசாய அமைச்சர் ஹெக்டர் கொப்பேகடுவ 'பிரதமர் சிறிமாவோ மீது குற்றம் சுமத்த முன், அவர்கள்தமது பரம்பரைச் சொத்தான 2,000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணியை காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு வழங்கியவர்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். 2,000 ஏக்கர்கள் கொடுத்தவர்கள் வெறும் 82 ஏக்கர் காணியிலா முறைகேடு செய்திருப்பார்கள்?' என்று கேள்வியெழுப்பியதுடன் 'பிரதமர் சிறிமாவோவும் அவரது கணவரும் அரசியலுக்காக நிறையத் தியாகம் செய்திருக்கிறார்கள். தங்கள் சொந்த சொத்துக்களை தாமாக முன்வந்து இந்த நாட்டுக்குக் கொடுத்திருக்கிறார்கள். அவரது கணவர் தன்னுயிரையே தனது கொள்கைக்காக தியாகம் செய்திருக்கிறார். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையானது பிரதமர் சிறிமாவோ மீது அவதூறு சொல்லும், அவரது அரசியல் மதிப்பைக் கெடுக்கும் கேவலமான செயல்' என்றும் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய கலாநிதி கொல்வின் ஆர். டீ. சில்வா 'உணர்ச்சி மிகுவார்த்தைகளால் உண்மையை மாற்றியமைத்துவிட முடியாது. 2,000 ஏக்கர் தாமாக முன்வந்து விட்டுக் கொடுத்ததாக பேசினார்கள். இது எனக்கு ஆச்சரியத்தை தருகிறது. காணி சீர்திருத்தச் சட்டத்தின் விளைவாக காணியுரிமையை இழந்த எவரும் தாமாக முன்வந்து காணிகளைவிட்டுத் தரவில்லை. அரசாங்கத்தின் கொள்கையடிப்படையிலான சட்டமொன்றின் விளைவாகவே அவர்கள் காணியுரிமையை இழந்தார்கள். அந்தச் சட்டத்தின்படி காணிகள் அரசுடமையாக்கப்பட்டது. இங்கு யாரும் தாமாக முன்வந்து காணிகளை விட்டுத் தரவில்லை' என்று பேசினார்.

இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் சகலரும் எதிர்பார்த்தது போலவே தோல்வியடைந்தது. வெறும் 43 பேர் ஆதரவாகவும் 100 பேர் எதிராகவும் வாக்களித்ததன் மூலம் லங்கா சமசமாஜக் கட்சியினர் கொண்டு வந்த இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. ஆனால் இந்தப் பிரேரணை மீதான வாதப்பிரதிவாதங்களில் வெளிவந்த விடயங்களினால் பிரதமரினதும் அவரது அரசாங்கத்தினதும் பெயர் களங்கமடைந்தது. அத்துடன் பிற்காலத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்க மீது முறைகேட்டு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவும்,  அதன்படி அவரது குடியுரிமை பறிக்கப்படவும் லங்கா சமசமாஜக் கட்சி இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது வைத்த குற்றச்சாட்டுக்கள் அடிப்படையாக அமைந்தன. அந்த வகையில் தம்மை தூக்கி எறிந்த பிரதமர் சிறிமாவுக்;கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கும் தக்க பதிலடியை லங்கா சமசமாஜக் கட்சி வழங்கியது எனலாம். ஆனால் இதன் பின்னர் ஒருபோதும் லங்கா சமசமாஜக் கட்சியினாலோ, கம்யூனிஸ்ட் கட்சியினாலோ 1970 இல் சிறிமாவுடனான கூட்டணியில் பெற்றதைப் போன்றதொரு ஆட்சிப் பலத்தினை இதுவரை பெறமுடியவில்லை என்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டியது.

பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை

ஆனால் இந்தப் பிரச்சினை இத்தோடு நின்று விடவில்லை. 1976 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி எதிர்க்கட்சியின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் ஜே. ஆர். ஜெயவர்த்தனவினால் அன்றைய நிதியமைச்சரும் நீதியமைச்சரும் பிரதமர் சிறிமாவின் இயக்குகரம் என்று அறியப்பட்டவருமான பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க மீது நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்று தேசிய அரசுப் பேரவையில் (நாடாளுமன்றத்தில்) சமர்ப்பிக்கப்பட்டது. ஜே. ஆர்.  ஜெயவர்த்தனவுக்கு எதிராக போலி ஆதாரங்களை தமது நீதியமைச்சர் என்ற அதிகாரத்தை அரசியல் இலாபங்களுக்காக துஷ்பிரயோகம் செய்து உருவாக்கியமை; தனது உறவினரை அரச கருவூலத்தின் செயலாளராக நியமித்ததுடன் அவரினூடாக தானும் மனைவியும் தங்கையும் இரத்தினக்கல் வியாபாரம் தொடர்பான இரகசிய தகவல்களை அறிந்து கொண்டு தமது இலாபத்துக்குப் பயன்படுத்தியமை; வேண்டுமென்றே தவறான தகவல்களை சபைக்களித்து தேசிய அரசுப் பேரவையை தவறாக வழிநடத்தியமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுக்கள் அமைச்சர்  பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க மீது முன்வைக்கப்பட்டது. லங்கா சமசமாஜக் கட்சியை அரசாங்கத்திலிருந்து வெளியேற்றியது பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவின் கைங்கரியமே என்ற பரவலான பேச்சு இருந்தது. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் ஐக்கிய முன்னணி (தமிழரசுக் கட்சி),  லங்கா சமசமாஜக் கட்சி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவளித்தன. இதன் மீதான விவாதம் நீண்டு அமைந்ததுடன் அன்றைய தினம் நள்ளிரவு வரை நீடித்தது. இறுதியில் சில நுட்பவியல் காரணங்களினால் வாக்கெடுப்பு நடத்தப்படாது போனதில் ஐக்கிய தேசியக் கட்சியும் எதிர்க் கட்சிகளும் கடும் விசனமடைந்தன. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி இத்தோடு இதனை விட்டுவிடவில்லை. பிற்காலத்தில் சிறிமாவோவுக்கு மட்டுமல்லாது, பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவிற்கும் எதிராக முறைகேட்டுக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அவை ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரிக்கப்பட்டன.

தெற்கின் அமைதியும் வடக்கின் விரக்தியும்

தெற்கில் இரு பெருங்கட்சிகளிடையேயான அரசியல் போட்டி கொதித்துக் கொண்டிருந்த நிலையில் தமிழ் மக்களின் அரசியல் பற்றி சிந்திக்க தெற்கிற்கு நேரமிருக்கவில்லை. இது தமிழ் மக்களையும் அரசியல் தலைமைகளை சினத்தினதும் விரக்தியினதும் விளிம்புக்குக் கொண்டு சென்றது. ஏற்கெனவே தனிநாட்டுக்கான மக்களாணையை காங்கேசன்துறை இடைத்தேர்தலில் செல்வநாயகம் பெற்றிருந்தார். ஆனால் அது ஒரு தொகுதி மட்டுமே என்பதும்,  செல்வநாயகத்தை எதிர்த்து போட்டியிட்ட வி. பொன்னம்பலம் 9,457 (26.46%) வாக்குகளைப் பெற்றமையும் தமிழ் மக்கள் முழுமையாக „தனிநாடு... என்ற கொள்கையுடன் ஒன்றுபடவில்லையோ என்ற எண்ணத்தை உருவாக்கியது. இதற்கு வியாக்கியானம் தரும் சில அரசியல் விமர்சகர்கள் வி. பொன்னம்பலம் பெற்ற வாக்குகளின் பெரும் பகுதி

வி. பொன்னம்பலம் என்ற தனிமனிதன் மீதான அபிமானத்தில் வழங்கப்பட்டது என்பார்கள். எது எவ்வாறாயினும் தனிநாடு என்பதுதான் தமிழ் மக்களின் அபிலாஷை என்றால் அதற்கான வலுவானதொரு மக்களாணையைப் பெறவேண்டிய கடமை தமிழ் ஐக்கிய முன்னணிக்கு இருந்தது.

வட்டுக்கோட்டைத் தீர்மானம்

இந்த நிலையில்தான் தமிழர் அரசியல் வரலாற்றின் மிகமுக்கியமான நிகழ்வு, தமிழரின் அரசியல் தலையெழுத்தையும் எதிர்கால அரசியலையும் வரையறுத்த நிகழ்வு இடம்பெற்றது. 1976 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி தமிழ் ஐக்கிய முன்னணியின் தேசிய மாநாடு வட்டுக்கோட்டையிலுள்ள பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயத்தில ;அதன் தவிசாளர் சா. ஜே. வே. செல்வநாயகம் தலைமையில் நடைபெற்றது. பண்ணாகம் தமிழரசுக் கட்சியின் அன்றைய „தளபதியான... அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் பிறந்த ஊராகும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டில் தமிழ் ஐக்கிய முன்னணியானது தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி (TULF)  என்று பெயர் மாற்றம் பெற்றதுடன் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளராக அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தெரிவு செய்யப்பட்டார்.  தமிழரின் தனிவழி அரசியலின் உத்தியோகபூர்வ பிரகடனமாக அறியப்படுகின்ற „வட்டுக்கோட்டைத் தீர்மானம்... சா. ஜே. வே. செல்வநாயகத்தினால் முன்மொழியப்பட்டு, மு. சிவசிதம்பரத்தினால் வழிமொழியப்பட்டு அங்கு கூடியிருந்த மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

„ஒவ்வொரு தேசிய இனத்தினதும் உள்ளியல்பான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமை பொருந்திய, சமயச் சார்பற்ற,  சமதர்மத் தமிழீழ அரசை மீட்டளித்தலும் மீளஉருவாக்குதலும் இந்நாட்டில் தமிழ்த் தேசிய இனம் உளதாயிருத்தலைப் பாதுகாக்கும் பொருட்டுத் தவிர்க்க முடியாததாகியுள்ளதென இம்மாநாடு தீர்மானிக்கின்றது... என்று பிரகடனம் செய்த வட்டுக்கோட்டைத் தீர்மானம் தமிழ் மக்கள் தனியரசு கோருவதற்கான வரலாற்றுப் பின்னணியினையும் அதற்கான நியாயங்கள் மற்றும் காரணங்களையும் அப்படி அமைகின்ற தனியரசின் இயல்புகளையும் அத்தகைய தனியரசை பெறுவதற்கான வழிமுறையையும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் தெளிவாக எடுத்துரைத்தது. இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை எதிர்வரும் தேர்தலில் மக்கள முன்சமர்ப்பித்து இதற்கான மக்களாணையைப் பெறத்தமிழரசுக்கட்சி எண்ணம் கொண்டிருந்தது.

(அடுத்த வாரம் தொடரும்... )

- See more at: http://www.tamilmirror.lk/176706/இரண-ட-நம-ப-க-க-ய-ல-ல-ப-ர-ரண-கள-#sthash.FJFRUP5r.dpuf
Link to comment
Share on other sites


வட்டுக்கோட்டைத் தீர்மானம்
 
18-07-2016 09:28 AM
Comments - 0       Views - 2

 

article_1468814917-Unt.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 49)

திருப்புமுனை

இலங்கைத் தமிழ் அரசியல் வரலாற்றின் 1976 மே 14 ஆம் திகதி முக்கியமான நாள். யாழ். வட்டுக்கோட்டை, பண்ணாகம் மெய்கண்டான் வித்தியாலயத்தில் நடைபெற்ற தமிழ் ஐக்கிய முன்னணியின் தேசிய மாநாட்டில் தமிழ் ஐக்கிய முன்னணி, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியாக (TULF) பெயர் மாற்றம் பெற்றதோடு, தனிநாட்டுக்கான 'வட்டுக்கோட்டைத் தீர்மானமும்' இங்குதான் நிறைவேற்றப்பட்டது. இது நடந்து நாற்பது ஆண்டுகள் கடந்த நிலையில் இன்று நாம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும் அதன் வழியில் அமைந்த தமிழர் அரசியலையும் திரும்பிப் பார்க்கையிலே தமிழர்களின் அரசியலில் 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' என்பது பெரும் திருப்பு முனையாக அமைந்தது என்பதில் எதுவித ஐயமும் இல்லை. சில விமர்சகர்கள் இது திருப்புமுனையல்ல‚ மாறாக தமிழ் அரசியல் தலைமைகளின் இயலாமையின் வெளிப்பாடு என்பார்கள். இதனை விரிவாக ஆராய முன்பதாக வட்டுக்கோட்டை தீர்மானத்தின் முக்கிய பகுதிகளை பார்ப்பது அவசியமாகிறது.

வட்டுக்கோட்டைத் தீர்மானம்

சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையிலமைந்த குறித்த மாநாட்டில் செல்வநாயகத்தால் முன்மொழியப்பட்டு, மு.சிவசிதம்பரத்தினால் வழிமொழியப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் முக்கிய பகுதிகள் இப்படி அமைந்தன:

'இலங்கைத் தமிழர்கள் தங்களின் தொன்மைவாய்ந்த மொழியினாலும் மதங்களினாலும் வேறான கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றினாலும் ஐரோப்பிய படையெடுப்பாளர்களின் ஆயுதப்பலத்தினால் அவர்கள் வெற்றி கொள்ளும்; வரை பல

நூற்றாண்டுகளாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தனிவேறான அரசாகச் சுதந்திரமாக இயங்கிய வரலாற்றின் காரணமாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக தமது சொந்தப் பிரதேசத்தில் தம்மைத்தாமே ஆண்டுகொண்டு தனித்துவமாகத் தொடர்ந்திருக்கும் விருப்பம் காரணமாகவும் சிங்களவர்களிலிருந்து வேறுபட்ட தனித் தேசிய இனமாகவுள்ளனரென, இத்தால் பிரகடனப்படுத்துகின்றது.

மேலும், 1972 இன் குடியரசு அரசியலமைப்பு தமிழ் மக்களைப் புதிய காலனித்துவ எசமானர்களான சிங்களவர்களால் ஆளப்படும் ஓர் அடிமைத் தேசிய இனமாக ஆக்கியுள்ளதென்றும் தமிழ்த் தேசிய இனத்தின் ஆட்சிப்பிரதேசம், மொழி, பிரசாவுரிமை, பொருளாதார வாழ்க்கை, தொழில் மற்றும் கல்வி வாய்ப்புக்கள் ஆகியவற்றை இழக்கச்செய்வதற்கு சிங்களவர்கள் தாம் முறைகேடாகப் பறித்துக் கொண்ட அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றனரென்றும் அதன்மூலம் தமிழ் மக்களின் தேசியத்துக்கான இயற்பண்புகள் யாவும் அழிக்கப்படுகின்றனவென்றும் இம்மாநாடு உலகுக்கு அறிவிக்கின்றது.

மேலும், தமிழ் ஈழம் என்ற தனிவேறான அரசொன்றைத் தாபிப்பதற்கான அதன் ஈடுபாட்டுக்கடப்பாடு தொடர்பில், வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களுக்கு வெளியே வாழ்கின்றவர்களும் வேலை செய்கின்றவர்களுமான பெரும்பான்மையான பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒரு தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெளிப்படுத்திய அதன் ஒவ்வாமைகளைக் கருத்தில் கொள்கின்ற அதேவேளையில், ஒவ்வொரு தேசிய இனத்தினதும் உள்ளியல்பான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமை பொருந்திய, சமயச் சார்பற்ற, சமதர்மத் தமிழீழ அரசை மீட்டளித்தலும் மீள உருவாக்குதலும் இந்நாட்டில் தமிழ்த் தேசிய இனம் உளதாயிருத்தலைப் பாதுகாக்கும் பொருட்டுத் தவிர்க்க முடியாததாகி உள்ளதென இம்மாநாடு தீர்மானிக்கின்றது.

இம்மாநாடு மேலும் பிரகடனப்படுத்துவதாவது:

(அ) தமிழ் ஈழ அரசு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களைக் கொண்டதாக இருக்கவேண்டுமென்பதுடன் இலங்கையின் எந்தப்பகுதியிலும் வசிக்கின்ற தமிழ் பேசுகின்ற மக்களுக்கும் தமிழ் ஈழத்தின் பிரசாவுரிமையை விரும்பித் தெரிகின்ற உலகின் எப்பகுதியிலும் வசிக்கின்ற ஈழ வம்சாவழித் தமிழர்களுக்கும் முழுமையான, சமமான பிரசாவுரிமைகளை உறுதிப்படுத்தவும் வேண்டும். தமிழ் ஈழத்தின் ஏதேனும் சமயத்தைச் சேர்ந்த அல்லது ஆட்சிப்பிரதேசத்தைச் சேர்ந்த சமூகமொன்று வேறு ஏதேனும் பிரிவினரின் மேலாதிக்கத்திற்கு உட்படாதிருத்தலை உறுதிப்படுத்தும் பொருட்டு தமிழ் ஈழத்தின் அரசியலமைப்பு சனநாயகப் பன்முகப்படுத்தற் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

(ஆ) தமிழ் ஈழ அரசில் சாதி ஒழிக்கப்பட வேண்டுமென்பதுடன், பிறப்பின் அடிப்படையில் பின்பற்றப்படும் பெருங்கேடான பழக்கமான தீண்டாமை அல்லது ஏற்றதாழ்வு முற்றாக ஒழித்துக் கட்டப்படவும் எவ்வகையிலேனும் அதனைக் கடைப்பிடித்தல் சட்டத்தால் தண்டிக்கப்படவும் வேண்டும்.

(இ) தமிழ் ஈழம் அவ்வரசிலுள்ள மக்கள் சார்ந்திருக்கக்கூடிய எல்லாச் சமயங்களுக்கும் சமமான பாதுகாப்பும் உதவியும் வழங்குகின்ற சமயச்சார்பற்ற ஓர் அரசாக இருக்க வேண்டும்.

(ஈ) தமிழ் அரச மொழியாக இருக்க வேண்டும். எனினும் தமிழ் ஈழத்தில் சிங்களம் பேசுகின்ற சிறுபான்மைகள் அவர்களின் மொழியில் கல்வியையும் அலுவல்களையும் தொடர்வதற்கான உரிமைகள் சிங்கள அரசிலுள்ள தமிழ் பேசும் சிறுபான்மைகள் பாதுகாக்கப்படும் சரி எதிரிடையான அடிப்படையில் பாதுகாக்கப்பட வேண்டும்.

(உ) தமிழ் ஈழத்தில் மனிதனால் மனிதன் சுரண்டப்படுதல் தடை செய்யப்படும். உழைப்பின் மகத்துவம் பாதுகாக்கப்படும். சட்டத்தினால் அனுமதிக்கப்படும் எல்லைகளுக்குள் தனியார் துறையின் இருப்புக்கு அனுமதி வழங்கப்படுகின்ற அதே வேளையில், பண்டங்களின் உற்பத்தி மற்றும் விநியோகம் என்பன அரச உரிமையின் கீழ் அல்லது அரச கட்டுப்பாட்டுடன் மேற்கொள்ளப்படும். பொருளாதார அபிவிருத்தி சோசலிசத் திட்டமொன்றின் அடிப்படையில் ஏற்படுத்தப்படும். ஒரு தனிநபரின் அல்லது குடும்பத்தின் செல்வம் தொடர்பில் உச்சவரம்பு விதிக்கப்படும். இவ்வகையில் தமிழ் ஈழம் ஒரு சமதர்ம அரசாக இருக்க வேண்டும்.

தமிழ்த் தேசிய இனத்தின் இறைமையையும் சுதந்திரத்தையும் வென்றெடுப்பதற்கான போராட்டத்துக்கான செயற்றிட்டமொன்றை மிதமிஞ்சிய தாமதமின்றி வகுத்தமைத்து அதனைத் தொடங்கவேண்டுமென தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயற்குழுவை இம்மாநாடு பணிக்கின்றது. மேலும் இம்மாநாடு, சுதந்திரத்துக்கான இப்புனிதப்போரில் தம்மை முழுமையாக அர்ப்பணிக்க முன்வரும்படியும் இறைமையுள்ள தமிழ் ஈழ அரசென்ற இலக்கு எட்டப்படும்வரை அஞ்சாது போரிடும் படியும் பொதுவில் தமிழ்த் தேசிய இனத்துக்கும் குறிப்பாக தமிழ் இளைஞர்களுக்கும் அறைகூவல் விடுக்கின்றது'.

வட்டுக்கோட்டைத் தீர்மானமானது இந்த நாட்டில் காணப்படும் இனப்பிரச்சினைக்கு தீர்வாக தமிழீழத் தனியரசை முன்வைத்ததோடு அதனை அடையப்பெறுவதற்கு தமிழ் இளைஞர்களை 'புனிதப் போருக்கு' அழைக்கும் அறைகூவலாகவும் அமைந்தது. இந்த அறைகூவலை 'ஈழத்துக் காந்தி' என்று அழைக்கப்பட்ட சா.ஜே.வே.செல்வநாயகம் விடுத்திருந்தார். இதன் பின்புலத்தில் ஏறத்தாழ 20 வருடங்களாகத் தோல்வி கண்ட பேச்சுவார்த்தைகளும் ஒப்பந்தங்களும் சமரசமுயற்சிகளும் இருக்கின்றன.

தமிழர் உரிமைகள் காவுகொள்ளப்பட்ட ஒரே இரவில் அந்த அநீதிக்கு தீர்வு தனியரசுதான் என்ற முடிவுக்கு தமிழ்த்தலைமைகள் வரவில்லை. மாறாக 20 வருடகாலமாக இலங்கையின் இரு பெரும் கட்சிகள் மாறி மாறி அரசாங்கக் கட்டிலில் வந்தபோது அவற்றுடன் பல்வேறு வகையான சமரச முயற்சிகளை மேற்கொண்டு, அவை தோற்கடிக்கப்பட்ட பின்னரே, அரசாங்கத்துடனான இணக்கப்பாட்டு முயற்சிகள் மீது நம்பிக்கையிழந்த பின்னரே, 'தனியரசு'என்பதே தமிழ் மக்களுக்கான தீர்வு என்ற முடிவுக்கு தமிழ்த்தலைமைகள் வந்தன. இதிலே ஒரு முக்கிய தற்செயல் நிகழ்வும் நடந்தது. வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கும் தமிழ் ஐக்கிய முன்னணி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி என்று பெயர் மாற்றப்படுவதற்கும் ஒன்பது நாட்களுக்கு முன்பாக 'தமிழ் புதிய புலிகள்' என்ற ஆயுதம் தாங்கிய தமிழ் இளைஞர்களின் இயக்கம் தன்னை 'தமிழீழ விடுதலைப் புலிகள்' என்று பெயர் மாற்றிக் கொண்டது. இது தற்செயலா, இல்லை இரண்டும் ஒரே திட்டத்தின்படி நிகழ்ந்தனவா என்பது பற்றிய ஆதாரங்கள் எதுவுமில்லை. எது எவ்வாறாயினும் 1976 மே 14 ஆம் திகதி செல்வநாயகம் விடுத்த அறைகூவல் காட்டிய பாதையில், அது காட்டிய இலட்சியத்திற்காக அடுத்த 33 வருடங்களுக்கு பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தார்கள்.

வரலாற்றின் முக்கியத்துவம்

'வரலாறு, எத்தனை வலிமிக்கதாக இருப்பினும், அதனை எம்மால் மாற்றிவிட முடியாது. ஆனால் அதனை தைரியத்துடன் எதிர்கொண்டால், அதனை மீண்டும் அனுபவிக்கத் தேவையில்லை' என்று மாயா அஞ்சலூ ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். வரலாறு என்பது பொற்காலங்களையும் இருள்சூழ் காலங்களையும் கொண்டது. பல சரிகளும் பல தவறுகளும் நிறைந்தது. நாம் பூரிப்படையத்தக்க பெருமைகளையும் வெட்கப்படத்தக்க சிறுமைகளையும் வேதனையளிக்கும் கொடுமைகளையும் கொண்டது. எது எவ்வாறு அமையினும் அன்று நடந்தவற்றை இன்று நாம் மாற்றிவிட முடியாது. ஆனால் அந்த வரலாற்றை தைரியத்துடன் எதிர்கொள்வதன் மூலம், அதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் மீண்டுமொருமுறை அதுபோன்றதொரு நிலை ஏற்படாது பாதுகாத்துக்கொள்ள முடியும். வரலாற்றை அறிவதன் பயன் அதுவாகத்தான் இருக்க முடியும்.

'வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை' சரி, பிழை என்று இருநிலைகளில் ஒன்றில் நின்று ஆராய்வது பொருத்தமற்றது என்று கருதுகிறேன். மேலும் எந்தவொரு விடயத்தையும் அது நடந்ததன் பின்நின்று தீர்மானிப்பதன் (judging in hindsight) பொருத்தப்பாடு பற்றிய கேள்விகள் நிறையவே உண்டு. உதாரணமாக 1976 இன் பிற்பகுதியில் இலண்டன் பி.பி.சிற்கு பேட்டியளித்த சா.ஜே.வே.செல்வநாயகம் 'நாங்கள் ஒரு தமிழ் 'ஜின்னா'வை உருவாக்கத் தவறிவிட்டோம்' என்றார். இந்தக் கூற்றின் அர்த்தம், எப்படி இந்திய சுதந்திரத்தின் முன்பதாக முஹமட் அலி ஜின்னாஹ் முஸ்லிம்களுக்காக பாகிஸ்தான் என்ற தனிநாட்டை பெற்றுக்கொண்டாரோ, அதுபோல தமிழர்களுக்காக தமிழ்த் தலைமைகள் தனிநாடொன்றைப் பெற்றுக்கொள்ளத் தவறிவிட்டன என்பதே. ஆனால் இதே செல்வநாயகமும் 'தனிச்சிங்களச் சட்டம்' பிறந்த 1956 முதல் 1976 வரை இரண்டு தசாப்தங்களாக தனிநாடு கேட்கவில்லை. மாறாக ஒன்றுபட்ட இலங்கையினுள் அதிகாரப் பகிர்வையே கோரினார். ஆகவேதான் இரண்டு தசாப்தங்களாகச் செய்ய விளையாத ஒன்று தனக்கு முற்பட்டோர் செய்யவில்லை என்று குறைபட்டுக் கொள்வது எத்தனை தூரம் பொருத்தமானது என்ற கேள்வி இவ்விடத்தில் நிச்சயம் எழுகிறது. இதுதான் எந்தவிடயம் பற்றியும் அது நடந்தேறியதன் பின்நின்று தீர்மானிப்பதில் உள்ள சிக்கல்.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றிய விமர்சனம்

'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' என்பது மேற்குறிப்பிட்டது போல இரண்டு தசாப்தகால ஏமாற்றங்களின் பின்னர் தமிழர்களுக்கு வேறுவழியின்றிப் பிரிவினையைத் தேடவேண்டிய நிலை ஏற்பட்டது என்று நியாயம் சொல்லும் ஒரு தரப்பினர் உள்ள அதேவேளையில், வட்டுக்கோட்டைத் தீர்மானமென்பது தமது அரசியல் வாழ்வைத் தக்கவைத்துக்கொள்ள தமிழரசுக் கட்சியினரால் தமிழ் மக்களின் உணர்வைத் தூண்டுவதற்காக கட்டவிழ்த்து விடப்பட்ட தீர்க்கதரிசனமற்ற பிரச்சாரமேயன்றி வேறில்லை என விமர்சிக்கும் ஒரு தரப்பும் உண்டு. 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' எடுக்கப்பட்ட காலத்தில் சா.ஜே.வே. செல்வநாயகத்தின் உடல்நிலை சிறப்பாக இருக்கவில்லை. அவரது செவிப்புலனும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. கட்சியின் அடுத்த தலைமைக்கான போட்டியும் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கட்சியின் 'தளபதியாக' அறியப்பட்ட அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் இளைஞர்களிடையே தனக்கான ஆதரவினைப் பெருக்கிக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். 1970 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான வட்டுக்கோட்டைத் தொகுதியில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கிய அ.தியாகராஜாவிடம் 725 வாக்குகளால் தோல்வி கண்டிருந்த அமிர்தலிங்கத்துக்கு எப்பாடுபட்டேனும் அடுத்த தேர்தலில் வெற்றியீட்டிவிட வேண்டிய தேவையிருந்தது. மேலும் 1965 - 1970 வரை டட்லி அரசாங்கத்திற்கு ஆதரவளித்ததன் பின்னர் தமிழரசுக் கட்சியின் பிரபல்யம் வீழ்ச்சி கண்டிருந்தது. ஆகவே இவை எல்லாவற்றையும் சரிசெய்யத்தக்க அரசியல் தந்திரோபாயமாகவும் இளைஞர்களை ஒன்றுபடுத்தி அணிதிரட்டவல்ல வியூகமாகவுமே 'தனிநாட்டுக் கோரிக்கை' பயன்படுத்தப்பட்டது என இமயவரம்பன் தனது 'தந்தையும் மைந்தரும்' என்ற நூலில் கடும் விமர்சனமொன்றை முன்வைக்கிறார்.

தனியரசுக் கோரிக்கையை ஏற்காத தொண்டமான்

தமிழ் ஐக்கிய முன்னணியின் முக்கிய மூன்று தலைவர்களில் ஒருவரான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரான சௌமியமூர்த்தி தொண்டமான் தமிழ் ஐக்கிய முன்னணி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியாக மாற்றப்பட்டு, தனியரசுப் பிரகடனத்தை முன்வைத்ததும் அந்தக் கூட்டணியிலிருந்து விலகினார். அவரைப் பொறுத்தவரையில் தமிழீழம் என்பது தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வல்ல என்ற நிலைப்பாடே காணப்பட்டது. ஆகவே தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு அவர் 1977 தேர்தலில் ஆதரவளித்திருந்தாலும், மலையகத்தில் தன்னுடைய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் சேவல் சின்னத்திலேயே தேர்தலை எதிர்கொண்டார். 'வடக்கு கிழக்கில் உதயசூரியன் மலரும் வேளையில், மலையகத்தில் சேவல் கூவும்' என்பதே அன்றைய மகுடவாசகமாக இருந்தது. இலங்கையின் அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்கதாக அமைந்த இந்த வடக்கு கிழக்கு மற்றும் மலையகக் கூட்டு, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தோடு நடைமுறை ரீதியில் முடிவுக்கு வந்தது எனலாம்.

1977இல் தொடர்ந்த இருதரப்பு ஆதரவுநிலை அரசியலும் காலப்போக்கில் இல்லாது போய்விட்டது. விடுதலைப் போராட்டம் பற்றிய தொண்டமானின் பார்வை வேறாக இருந்தது என்பதை அவரது கூற்றுக்களிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். 'தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்களுக்கு பேச்சுவார்த்தைக் கலை தெரியாது. அவர்கள் சட்டத்தரணிகள்; அவர்களுக்கு தமது வழக்கை சிறப்பாக எடுத்துரைக்கத் தெரியுமேயன்றி, எதிர்த்தரப்பிலிருந்து தமக்கான சலுகைகளை இலாவகமாகப் பெற்றுக்கொள்ளும் பேச்சுவார்த்தைக்கலை அவர்களுக்குத் தெரியாது' என்று சௌமியமூர்த்தி தொண்டமான் கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மக்களாணையைப் பெறும் முயற்சி

இந்நிலையில், இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு மக்கள் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள, 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இந்தத் தீர்மானத்தை தமது விஞ்ஞாபனமாக மக்கள் முன் சமர்ப்பித்து தனியரசுக்கான மக்களாணையைப் பெற தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி தீர்மானித்தது.

(தொடரும்...)

- See more at: http://www.tamilmirror.lk/177293/வட-ட-க-க-ட-ட-த-த-ர-ம-னம-#sthash.XgzvPiAq.dpuf
Link to comment
Share on other sites

தமிழ் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் மிக்க 'ட்ரையல்-அட்-பார்' வழக்கு
 
25-07-2016 09:28 AM
Comments - 0       Views - 1

என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-50)

தமிழ்த் தலைவர்கள் கைது

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி (TULF) மாநாட்டில், 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' நிறைவேற்றப்பட்ட பின்னர், அதனை மக்களிடையே கொண்டுபோய்ச் சேர்க்கும் பணியில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் மும்முரமாக இருந்தார்கள். தமிழர்களுக்கு தனியரசு கோரும் 'வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்' பிரதிகள் துண்டுப்பிரசுரமாக மக்களுக்கு வழங்கப்பட்டன.

இந்நிலையில் 1976 மே 21 ஆம் திகதி தேசத்துரோகத் துண்டுப்பிரசுரங்களை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் விநியோகித்தமை என்ற குற்றங்களின் பேரில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்களான அதன் பொதுச் செயலாளர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், சாவகச்சேரித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வி.என்.நவரட்ணம், ஊர்காவற்றுறைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.ரட்ணம், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் பொதுச் செயலாளரான மு.சிவசிதம்பரம், பருத்தித்துறைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணம் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள். மறுதினம் மு.சிவசிதம்பரம் விடுதலை செய்யப்பட்டாலும் மற்றைய நால்வரும் விமானம் மூலம் கொழும்பிற்குக் கொண்டுவரப்பட்டு பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவில் தேசத்துரோகக் குற்றத்துக்காக 10 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டார்கள்.

'வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்' பிரதிகளை சா.ஜே.வே.செல்வநாயகம் உட்பட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முக்கிய தலைவர்கள் பலரும் தம்வசம் வைத்திருந்தாலும், அதனை விநியோகித்திருந்தாலும், இந்த நான்கு தலைவர்களும், அதிலும் குறிப்பாக அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தனித்துக் குறிவைக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்டு, பின்னர் அவருக்கெதிராக குற்றவியல் வழக்கும் பதிவுசெய்யப்பட்டமையானது, அமிர்தலிங்கத்தை அரசியலிலிருந்து அகற்றுவதற்கான திட்டமாக இருக்கலாம் என பேராசிரியர் ஏ.ஜே.வில்சன் 'சா.ஜே.வே.செல்வநாயகமும் இலங்கைத் தமிழ்த் தேசியமும் (ஆங்கிலம்)' என்ற தனது நூலில் கருத்துரைக்கிறார்.

ட்ரையல்-அட்-பார்

குறித்த தலைவர்களுக்கெதிராக குற்றவியல் வழக்கொன்றை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கும் நோக்கில், அரசாங்கமானது அவசரகாலச் சட்டவொழுங்குகளில் திருத்தமொன்றைச் செய்ததனூடாக நடைமுறையிலிருந்த அறங்கூறும் அவயத்து (ஜூரி) விசாரணை முறைக்குப் பதிலாக  யாதாயினுமொரு முக்கியத்துவம்மிக்க குற்றவியல் வழக்கை தான் நியமிக்கும் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்டமைந்த 'ட்ரையல்-அட்-பார்' முறையில் விசாரிக்கச் செய்யும் அதிகாரத்தை பிரதம நீதியரசருக்;கு வழங்கியது.  இதன்படி அன்றைய சட்டமா அதிபர் சிவா பசுபதியினால் அவசரகாலச் சட்டவொழுங்குகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, குறித்த வழக்கை 'ட்ரையல்-அட்-பார்' முறையில் விசாரிக்க மேல் நீதிமன்ற நீதிபதிகளான ஜே.எப்.ஏ.

சோஸா, ஏ.ஜீ.டி சில்வா, சிவா செல்லையா ஆகியோர் பிரதம நீதியரசரினால் நியமிக்கப்பட்டனர். வழக்கு விசாரணை குறித்த நீதிபதிகள் முன்பு 1976 ஜூன் 18 ஆம் திகதி விசாரணைக்கு வந்தது.

ஒன்றுபட்ட தமிழ்ச் சட்டத்தரணிகள்

இந்தச் சந்தர்ப்பத்தில் சா.ஜே.வே.செல்வநாயகம், ஜீ.ஜீ.பொன்னம்பலம், மு.திருச்செல்வம் மற்றும் கொழும்பிலுள்ள தமிழ்ச் சட்டத்தரணிகள் ஒன்றுபட்டு ஏறத்தாழ 61 சட்டத்தரணிகள் குற்றம் சாட்டப்பட்டவருக்காக ஆஜராகினர். இதில் குறிப்பிடத்தக்க விடயம் ராஜா அப்புக்காத்துவான சா.ஜே.வே.செல்வநாயகமும், ராணி அப்புக்காத்துவான ஜீ.ஜீ.பொன்னம்பலமும் இணைந்து வழக்காடியமையாகும். ராஜா அப்புக்காத்து (King’s Counsel - KC) அல்லது ராணி அப்புக்காத்து (Queen’s Counsel - QC) என்பது இலங்கை பிரித்தானிய முடியின் கீழிருந்த காலத்தில் ஒரு வழக்குரைஞருக்கு (Counsel) கிடைக்கத்தக்க உயர் கௌரவமாகும். இந்தக் கௌரவத்தினைப் பெற்றவர்களே பட்டுத்துணியாலான வழக்கறிஞர் துகிலை அணியும் அந்தஸ்தைப் பெற்றவர்களாவர்.

பிரித்தானிய முடியாக ராஜா ஒருவர் இருக்கும் போது இந்த அந்தஸ்தைப் பெற்றவர் ராஜா அப்புக்காத்து என்றும், பிரித்தானிய முடியாக ராணி ஒருவர் இருக்கும் போது இந்த அந்தஸ்தைப் பெற்றவர் ராணி அப்புக்காத்து என்றும் அறியப்படுவார்.  இந்த விடயம் பற்றிய குறிப்பொன்றை தான் 2012 இல் ஆற்றிய மு.சிவசிதம்பரம் நினைவுப்பேருரையிலும் 2013 இல் ஆற்றிய செல்வநாயகம் நினைவுப்பேருரையிலும் அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், சட்டத்தரணியுமான ரவூப் ஹக்கீம் பின்வருமாறு பதிவு செய்திருந்தார். 'தந்தை செல்வா கிங்ஸ் கவுன்சல் அதாவது மன்னர் அப்புக்காத்து ஆவார்.

ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்கள் குவின்ஸ் கவுன்சல் அதாவது ராணி அப்புக்காத்து ஆவார். தந்தை செல்வா மன்னர் அப்புக்காத்து என்றவகையில் சிரேஷ்டர் (மூத்தவர்) என்பதால் அவருக்கு கனிஷ்டராக ஜீ.ஜீ.பொன்னம்பலம் இந்த வழக்கைப் பேசுவாரா என்ற சந்தேகம் நிலவியது. ஜீ.ஜீ.பொன்னம்பலம் இந்த வழக்கில் அண்ணன் அமிர்தலிங்கத்துக்காக ஆஜரானது ஒரு பெரிய சாதனை. அவர்கள் சித்தாந்த ரீதியில் வேறுபட்டவர்கள். மு.திருச்செல்வம் (ராணி அப்புக்காத்து) மற்றும் அண்ணன் சிவா (மு.சிவசிதம்பரம்) ஆகியோரின் முயற்சியின் வெற்றியே இதனைச் சாத்தியமாக்கியது.'

ஒரு குற்றம் சாட்டப்பட்டவருக்காக பல வழக்கறிஞர்கள் ஆஜராகும்போது மூப்பு நிலை முக்கியம் பெறும். சிரேஷ்ட வழக்குரைஞராக ஒருவரும், ஏனையவர்கள் அவருக்கு கனிஷ்டராகவும் ஆஜராவார்கள். இந்நிலையில் இவர்களுள் தொழில்நிலையில் சா.ஜே.வே.செல்வநாயகம் மூத்தவர். ஆதலால், அவரின் கனிஷ்டராக ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஆஜராவாரா என்ற ஐயம் பலருக்கும் அன்றிருந்தது. இது ஒரு குற்றவியல் வழக்கு. சா.ஜே.வே.செல்வநாயகம் திறமைமிக்க ஒரு சிவில் வழக்குரைஞர். ஆனால் ஜீ.ஜீ.பொன்னம்பலம்தான் மிகச்சிறந்த குற்றவியல் வழக்குரைஞர். ஆகவே ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஆஜராவது மிக முக்கியமானதொன்றாக இருந்தது. இந்த எல்லா கரிசனங்களைக் கடந்து ஜீ.ஜீ.பொன்னம்பலம் இந்த வழக்கில் ஆஜரானார்.

ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் வாதம்

வழக்கில் ஆஜரான ராணி அப்புக்காத்துவான ஜீ.ஜீ.பொன்னம்பலம் குற்றம் சாட்டப்பட்டவர் இந்நீதிமன்றுக்கு இவ்வழக்கினை விசாரிக்கும் அதிகாரமில்லையென்ற நிலைப்பாட்டினை எடுப்பார் என்று நீதிமன்றத்துக்கு அறிவித்தார். ஆயினும், நீதிமன்றத்துக்குரிய மரியாதையினை வழங்கும் முகமாக குற்றப்பத்திரிகையை ஏற்பதாகச் சொன்னார். அதனைத் தொடர்ந்து குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டு, குற்றச்சாட்டுக்களை குற்றம் சாட்டப்பட்டவர் ஒப்புக்கொள்கிறாரா இல்லையா என்று கேட்கப்பட்டபோது, சில முக்கிய விடயங்களை வாதிடப்பட இருப்பதால், குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவோ, மறுக்கவோ போவதில்லை என்று குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த சட்ட மாஅதிபர் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது குற்றச்சாட்டுக்களை மறுக்க வேண்டும் என்றார். இதற்குப் பதிலளித்த ஜீ.ஜீ.பொன்னம்பலம், குற்றம் சாட்டப்பட்டவர் இந்த நீதிமன்றம் உருவாவதற்கு அடிப்படையான அவசரகாலச் சட்டவொழுங்குகளின் செல்லுபடித்தன்மையை கேள்விக்குட்படுத்துவதனால் அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவோ, மறுக்கவோ தேவையில்லை என்றார். இதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவரான அமிர்தலிங்கம் ஏன் குற்றத்தை ஒப்புக்கொள்ளவோ, மறுக்கவோ இல்லை என்ற காரணத்தை நீதிமன்றத்துக்குச் சொல்வதற்கு ஜீ.ஜீ.பொன்னம்பலம் நீதிமன்றின் அனுமதியைப் பெற்றார்.

அதன்படி அமிர்தலிங்கம் 'இந்நீதிமன்றமானது செல்லுபடியற்ற அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டதனால் நான் என்மீதான குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொள்ளவோ அல்லது மறுக்கவோ போவதில்லை' என்று நீதிமன்றத்திலுரைத்தார். இதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிணை வேண்டினார்கள். சட்ட மாஅதிபர் நீதிமன்றம் பிணை வழங்குவதை எதிர்க்கவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியதுடன், வழக்கு விசாரணை ஜூலை 12 ஆம் திகதி இடம்பெறும் என்று முடிவானது.

வழக்கு விசாரணை ஆரம்பமானபோது ஜீ.ஜீ.பொன்னம்பலம் இரண்டு பூர்வாங்க ஆட்சேபனைகளை முன்வைத்தார். முதலாவதாக, குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு அடிப்படையானதும், குறித்த நீதிமன்றம் அமைவதற்கு அடிப்படையானதுமான அவசரகாலச் சட்டவொழுங்குகள் செல்லுபடியற்றவை என்றும், இரண்டாவதாக, 1972 ஆம் ஆண்டின் முதலாம் குடியரசு அரசியலமைப்புச் சட்டம் செல்லுபடியற்றது என்றும் தனது பூர்வாங்க ஆட்சேபனைகளை முன்வைத்தார்.

முதலாவது பூர்வாங்க ஆட்சேபனை தொடர்பிலான வாதங்களை ஜீ.ஜீ.பொன்னம்பலம் முன்வைத்தார். தற்போது நடைமுறையிலிருக்கும் அவசரகால நிலையானது 1972 மே 15 ஆம் திகதி ஆளுநரின் ஆணைக்பேற்ப நடைமுறைக்கு வந்தது. அன்று 1947 ஆம் ஆண்டின் 'சோல்பரி' அரசியலமைப்பே நடைமுறையிலிருந்தது. அதன் கீழ் அவசரகால நிலையை பிரகடனம் செய்வது பற்றி முடிவெடுக்கும் மற்றும் பிரகடனம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கே இருந்தது. ஆனால் 1972 ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பு இந்நிலையை மாற்றிவிட்டது. 1972 ஆம் ஆண்டின் முதலாம் குடியரசு யாப்பின் கீழ் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்வது பற்றி தீர்மானிக்கும் அதிகாரம் பிரதமருக்கே இருக்கிறது. பிரதமரின் ஆலோசனையின் பேரிலேயே ஜனாதிபதி அவசரகால நிலையைப் பிரகடனம் செய்யலாம்.

1972 மே 15 அன்று செய்யப்பட்ட அவசரகாலப் பிரகடனமானது ஆளுநரால் செய்யப்பட்டது, அது பிரதமரின் ஆலோசனையின்படி செய்யப்படவில்லை. ஆகவே, புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்ததும் மீண்டும் புதிதாக பிரதமரின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி அவசரகாலநிலையைப் பிரகடனம் செய்திருக்க வேண்டும். அது செய்யப்படவில்லை என்பதால் தற்போது நடைமுறையிலுள்ள அவசரகால நிலை செல்லுபடியற்றதாகும். ஆகவே, அவசரகால நிலையின் கீழ் உருவாக்கப்பட்ட சகல சட்டவொழுங்குகளும் செல்லுபடியற்றது என்பதுடன் எவ்வித சட்டவலிதும் அற்றதாகும் என்று தனது வாதத்தை ஜீ.ஜீ.பொன்னம்பலம் முன்வைத்தார். மேலும் இந்நீதிமன்றமும் அவசரகாலச் சட்டவொழுங்குகளின் கீழ் உருவானதால், இந்நீதிமன்றும் வலிதற்றது என்றும், அவசரகாலச் சட்டவொழுங்குகளின் கீழ் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எல்லாம் சட்டவிரோதமானவை என்றும் வாதிட்டார்.

மு.திருச்செல்வத்தின் வாதம்

இரண்டாவது பூர்வாங்க ஆட்சேபனை தொடர்பிலான வாதங்களை மு.திருச்செல்வம் முன்வைத்தார். 1972 ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பினை இயற்றுவதற்கு ஐக்கிய முன்னணிக்கு போதிய மக்களாணை இருந்ததா என்பது ஐயத்துக்குரியது. ஒருவேளை சிங்கள மக்களின் ஆணை இருந்தது என்று கருதினாலும், இந்நாட்டின் தமிழ் மக்கள் அவர்களை ஆதரித்திருக்கவில்லை. மாறாக தமிழரசுக் கட்சிக்கே தமது மக்களாணையை வழங்கினர். ஆகவே 1972 ஆம் ஆண்டின் முதலாம் குடியரசு யாப்பை இயற்றுவதற்கான மக்களாணை ஐக்கிய முன்னணிக்கு இருக்கவில்லை என்று வாதாடினார். தொடர்ந்தும் 1972 ஆம் ஆண்டின் முதலாம் குடியரசு அரசியலமைப்பு செல்லுபடியற்றதற்கான சோல்பரி அரசியலமைப்பின் 49 சரத்து உட்பட பல்வேறுபட்ட காரணங்களையும் முன்வைத்து வாதிட்டார். (இவை பற்றி முன்னைய அத்தியாயங்களில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது).

மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பு

வழக்கு விசாரணை முடிவடைந்து, 1976 செப்டம்பர் 19 திகதி நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டது. 67 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பிலே, குற்றம் சாட்டப்பட்டவர் சார்பிலே எழுப்பப்பட்ட முதலாவது பூர்வாங்க ஆட்சேபனையை நீதிமன்று ஏற்றுக்கொண்டது. அதன்படி அவசரகாலநிலை முறையாகப் பிரகடனம் செய்யப்படாமையினால், அதன்கீழ் உருவான சட்டவொழுங்குகள் செல்லபடியற்றவை.

அதனால் அச்சட்டவொழுங்குகளின் கீழ் அமைக்கப்பட்ட இந்நீதிமன்றம் முறையாக அமைக்கப்படவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன். இதன் நிமித்தம் குற்றம்சாட்டப்பட்டவர்களை குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவித்தது. இரண்டாவது பூர்வாங்க ஆட்சேபனை பற்றிக் குறிப்பிட்ட நீதிமன்று, முதலாவது குடியரசு அரசியலமைப்பின் செல்லுபடித்தன்மை பற்றி ஆராயும் அதிகாரம் இந்நீதிமன்றுக்கு இல்லை எனத் தீர்ப்பளித்தது.

மேன்முறையீடு

அவசரகால நிலை செல்லுபடியாகாது என்ற தீர்ப்பு அரசாங்கத்துக்கு பேரிடியாக வந்தது. ஏற்கெனவே அவசரகால சட்டவொழுங்குகளின் கீழ் பல வழக்குகள் நிலுவையிலிருந்த நிலையில், அவசரகால நிலை செல்லுபடியற்றது அந்த வழக்குகளும் கைவிடப்பட வேண்டி வரலாம். இது அரசாங்கத்துக்கு பெரும் சிக்கலைத் தோற்றுவித்தது. இந்தத் தீர்ப்பை மாற்றியமைப்பதற்கான மேன்முறையீட்டை சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்தார்.

பிரதம நீதியரசர் விக்டர் தென்னக்கோன், நீதியரசர் ஜீ.ரீ.சமரவிக்ரம, நீதியரசர் வீ.ரீ.தாமோதரம், நீதியரசர் நொயெல் தித்தவல, நீதியரசர் டபிள்யூ.டீ.குணசேகர ஆகிய ஐவரைக் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வானது குறித்த மேன்முறையீட்டை விசாரித்து, அவசரகாலநிலை முறையாகப் பிரகடனம் செய்யப்பட்டது என்றும், அது செல்லுபடியானது என்றும் தீர்ப்பளித்ததுடன், மேல் நீதிமன்றமானது குறித்த வழக்கை தொடர்ந்து விசாரிக்கப் பணித்தது.

வழக்கைக் கைவிட முடிவு

இதன் பின்னர் சட்ட மாஅதிபர் தாம் அந்த நால்வர் மீதான வழக்கை தொடர்ந்து நடத்தாதிருக்க தீர்மானித்திருப்பதாக நீதிமன்றுக்கு அறிவித்ததுடன், இதனை தான் முறையாக மேல் நீதிமன்றத்தில் அறிவிப்பதாகவும் கூறினார். அதன்படி இந்த வழக்கு விசாரணைக்காக மேல் நீதிமன்றத்தில் 1977 பெப்ரவரி 10 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த வழக்கை தாம் மேற்கொண்டு நடத்தப்போவதில்லை என்று சட்ட மாஅதிபர் நீதிமன்றிற்கு அறிவித்தார். அதன்படி அமிர்தலிங்கம் உட்பட நான்கு தலைவர்களும் நீதிமன்றத்தால் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்.

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கு இந்த வழக்கு சோதனைக்காலமாக இருந்தாலும், இதுவும் அடுத்த தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் சாதனைக்கும் காரணமானது.

(அடுத்தவாரம் தொடரும்...)

- See more at: http://www.tamilmirror.lk/177843/தம-ழ-அரச-யல-வரல-ற-ற-ல-ம-க-க-யத-த-வம-ம-க-க-ட-ர-யல-அட-ப-ர-வழக-க-#sthash.IiTP9SLm.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.