Sign in to follow this  
Athavan CH

செஞ்சோலை நினைவு: என்ர பிள்ளைக்காக ஒரு கல்லறை வேணும் மகன்

Recommended Posts

IMG_0049

இன்று, செஞ்சோலை நினைவு பிரபலமான ஒன்று. நாளை வேறொன்று வரும். வன்னியில் வாழ்ந்த தமிழர்களால் மறக்கமுடியாததாக இருக்கும் பேரவலங்களுல் செஞ்சோலை வளாகம் மீதான விமானத் தாக்குதலும் முதன்மையானது. அதுபோலவே வருடந்தோறும் நினைவுகூர்வதிலும் செஞ்சோலை படுகொலைக்குத் தனியிடம் கொடுக்கப்படும். ஆனால் செஞ்சோலை படுகொலையில் தன் மகளை இழந்த யாராவது ஒரு தாய் இப்போது எப்படியிருப்பார் என்று சிந்தித்துப் பார்த்ததுண்டா?

அப்படியான ஓருவர்தான், சாரதா அம்மா. புதுக்குடியிருப்பின், புதியகுடியிருப்பு என அறியப்படும் பகுதியில் இப்போது வாழ்கிறார் அவர். குறுக்குமறுக்கு சந்துகள், நாயுண்ணிப் பற்றைகளுக்குள்ளால் நுழைந்து போனால், புதுக்குடியிருப்பின் தென் எல்லையில் அமைந்திருக்கிறது அவரின் வீடு. ஆனால் இது அவரின் சொந்த இடமல்ல.
‘என்ர சொந்த இடம் நெல்லியடி தம்பி. பாதை (யு9) பூட்டுறத்துக்கு முதல் வன்னிக்கு சொந்தக்காரர் வீட்ட வந்தனாங்கள். வந்து ஒரு கிழமையால பாதையப் பூட்டிப்போட்டினம். திருப்பி ஊருக்குப் போக முடியேல்ல. இங்கயே இருந்திற்றம். இங்க இருந்ததாலதான் என்ர பிள்ளையளப் பறிகொடுத்தன்’ அவர் அழக்கூடாது என எனக்குத் தெரிந்த கடவுளர்களிடம் வேண்டிக்கொள்கிறேன்.

பிறகு எப்பிடியம்மா, பிள்ளையள் புதுக்குடியிருப்பிலயோ படிச்சவயள்.
ஓம். எனக்கு 6 பிள்ளையள். என்ர மூத்தமகள் துதர்சினி நல்ல கெட்டிக்காரி. ஏ.எல் படிக்கிறத்துக்காக புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில சேர்த்துவிட்டனான். கெம்பசுக்குப் போய் படிச்சி அம்மாவ பாக்கிறதுதான் தன்ர லட்சியம் எண்டு சொல்லி படிச்சவள். காலுக்க தண்ணி வாளிய வச்சிற்று, அதுக்க கால வச்சிக்கொண்டிருந்து இரவிரவா படிக்கிறவள். நானும் கொஞ்சம் நித்திர கொள்ளு பிள்ள எண்டால் கேட்கமாட்டாள். இப்பிடி படிக்கேக்கத்தான், மருத்துவ பயிற்சிக்கு கூப்பிடுகினம். எல்லா பிள்ளையளும் போகினம். நானும் போகவோ எண்டு என்னட்ட கேட்டாள். முதல் மறுத்திற்றன். பிறகு அழுவாரப் போல கேட்டாள். நானும் என்ர பிள்ளைய ரூருக்கு எங்கயும் கூட்டிக்கொண்டு போனதில்ல. சரி போய் வரட்டும் எண்டு ஒத்துக்கொண்டன். புதுசா உடுப்பு, சோப் கேஸ், சோப்பு, ப்ரஸ், கிறீம் எல்லாம் வாங்கிக் குடுத்து என்ர பிள்ளையையும் அனுப்பினன்.
இந்தா இந்த பாலமரத்துக்குக் கீழதான் கடைசியா நிண்டு கதைச்சது என்று சொல்லியடி அந்த மரத்தைக் காட்டுகிறார். அது பல வருடங்களுக்கு முன்னர் முறிந்து விழுந்து அழிந்திருக்க வேண்டும். மரத்தின் அடி மட்டும் இருக்கிறது.

மகள் மருத்துவ பயிற்சிக்குப் போய் 5 ஆம் நாள் எண்டு நினைக்கிறன். நான் அஞ்சரைக்கு எழும்பீடுவன். அண்டைக்கு இரவிரவா வண்டு சுத்தினம். மகள் பற்றின பயம் வந்தது. ஆனாலும் பள்ளிக்கூட பிள்ளையள்தானே, பாதுகாப்பா இருப்பினம் என்று யோசிச்சிக்கொண்டு எழும்பினன். தேத்தண்ணி வச்சிற்று வெளியில வந்தால் 2 கிபீர் இந்தப் பக்கத்துக்கு நேர வானத்தில நிண்டபடி குண்டுகள கொட்டுது.
அவர் இருக்கும் இடத்திலிருந்து வள்ளிபுனம் பக்கத்தைக் காட்டுகிறார்.
‘நானும் அவரும் என்ன காரணத்துக்காக எண்டு தெரியேல்ல, கிபீர் குண்டுபோட்ட பக்கத்தபாத்து ஓடத் தொடங்கீற்றம். புதுக்குடியிருப்பு சந்தி கடந்து, பரந்தன் றோட்டால, கைவேலிக்குக் கிட்ட போகேக்க, ஒரே வாகனங்கள் பறந்து வருகுது. காயப்பட்ட பிள்ளையயும், செத்த பிள்ளையளையும் அள்ளிக்கொண்டு ஓடி வருகினம். அப்பதான் தெரியும், மகள் பயிற்சிக்குப் போன இடத்துக்குத்தான் குண்டு போட்டது எண்டு.

புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரிக்கு ஓடினன். மகள ஒருபக்கம் கிடத்தி வச்சிருக்கினம். தலையில ஒரு பக்கம் குண்டு பீஸ் பட்டு மற்ற பக்கத்தால வந்திட்டு. தலைக்காயம் தங்களால பாக்கேலாது, பொன்னம்பலம் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போங்கோ எண்டுட்டினம். அங்க தூக்கிக்கொண்டு ஓடினம். மத்தியானம் வரைக்கும் வச்சிருந்திற்று, முடியாதெண்டு முல்லைத்தீவு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகச் சொல்லிச்சினம். தலையில காயம், காப்பாத்த முடியதம்மா எண்டு, அங்க கையவிரிச்சிற்றினம். 4 மணிபோல என்ர மகள் இறந்திற்றா.
கண்ணீர் ததும்பவும் கதைத்துக்கொண்டேயிருந்தார் சாரதா அம்மா.

பிறகு பொடிய பொடியா கொண்டு வந்து இந்தப் பால மரத்துக்குக் கீழ தான் வச்சவ. இயக்கம், பள்ளிக்கூட பிள்ளையள், ரீச்சர்மார் எல்லாரும் வந்தவ. பள்ளிக்கூடத்தில பொடிய வச்சி அஞ்சலி செய்தவ.
பொடிய புதுக்குடியிருப்பு மயானத்திலதான் தாட்டம். என்ர மகள தாட்ட கல்லரையின்ர தலைமாட்டில ஒரு தேமா கெட்ட நட்டிட்டு வந்தன். அது இண்டைக்கு வளர்ந்து பெரிசா ஆக்கி நிக்குது.
தம்பி, யாரிட்டயும் சொல்லி, என்ர மகளுக்காக ஒரு கல்லறை கட்டித் தரச் சொல்லுவியாடா மகன்?
திடுக்கிட்டேன். என் அம்மா ஏதோ ஓர் உதவியைக் கெஞ்சிக் கேட்டதுபோல இருந்தது.
துதர்சினியின் அம்மாவுக்காக, செஞ்சோலையில் படுகொலைசெய்யப்பட்ட பிள்ளைகளுக்காக யாராவது கல்லறை கட்டிக்கொடுக்க முடியுமா? என்று எழுதலாம் என்ற முடிவோடு அவரைப் பிரிய எழும்பினேன்.
புகைப்படம் தேவையே, போரில் அனைத்தும் கைவிடப்பட்டிருக்கும், ஆயினும் கேட்டுப்பார்க்கலாம் என்ற முடிவோடு, படம் ஏதும் இருக்கோ என்றேன்.

அல்பத்தைத் தூக்கி வந்தார். அல்பம் முழுவதும் துதரிசினியின் பாடசாலைக்கால புகைப்படங்கள். சண்டையில் இது எப்பிடி மிஞ்சியது என்றேன்.
நான் சண்ட நேரம் எதையும் எடுத்துப் போகேல்ல தம்பி, என்ர பிள்ளை பொடியா வரேக்க கடைசியா போட்டிருந்த சட்டை, சோப் கேஸ், சோப், ப்ரஸ் மற்றது இந்த அல்பம் இவ்வளத்தையும்தான் கொண்டு போனன். வவுனியா முகாமுக்கு கொண்டு போய், அங்கயிருந்து திருப்பி நெல்லியடிக்குப் போகேக்க, அங்க சொல்லிச்சினம் செத்த ஆக்களின்ர உடுப்புகள கொண்டு திரயக் கூடாதெண்டு. மற்றப் பிள்ளையளுக்குக் கூடாதாம். ஏரிக்கோணும் எண்டிச்சினம். வேற வழி தெரியேல்ல, எரிச்சிற்றன்.
பிறகு நெல்லியடியில இருக்கப் பிடிக்கேல்ல. என்ர பிள்ளையள பறிகொடுத்த இடத்திலேயே வாழும்வரைக்கும் வாழ்ந்திற்று இங்கேயே செத்துப்போக வேணும் எண்டு வந்திற்றன். அவரும், பிள்ளையளும் வரமாட்டம் எண்டுட்டினம். நான் தனிய சின்ன மகளக் கூட்டிக்கொண்டு இங்க வந்திருந்தன். பிறகு அவையளும் வந்திற்றினம்.
சரி அம்மா மகளின்ர படம் ஒன்றை எடுத்துப் பிடியுங்கோ போட்டோ எடுப்பம் என்றேன். தட்டுத்தடுமாறி இரண்டு படங்களை எடுத்துப் பிடித்தார். ஒன்றைப் பிடியுங்கோ என்றேன். இல்ல தம்பி இது என்ர மகன். இவனும் இப்பிடித்தான்…..

இயக்கத்தில வேலை செய்தவன். கடைசி நேரத்தில சுதந்திர புரத்தில அவன் வீட்ட விட்டுப் பிரிஞ்சிற்றான். பிள்ளைய நாங்களும், எங்கள மகனும் தேடித் திரிஞ்சிருக்கிறம். நாங்கள் தேவிபுரத்தில இருந்தம். அது அவனுக்கு தெரியாமல் போயிற்று. சுதந்திரபுரத்தில எங்கள எங்கை எண்டு விசாரிக்க, நாங்கள் இருட்டுமடுவுக்குள்ளால ஆமிற்ற போயிற்றம் எண்டு சனம் சொல்லியிருக்கு. அதைக் கேட்டிற்று, அங்கால போன மகன் கொத்துக்குண்டு விழுந்து இறந்திற்றார்.

எட்டு நாள் கழிச்சி, பெரிய ஒரு பொடிய கொண்டு வந்து தந்தவ. சீல் பண்ணீற்றினம். திறக்க வேணும் எண்டு கேட்டம். சண்ட பிடிச்சம். அந்த நேரம் பாத்து மல்ரிபரல் அடிச்சிற்றாங்கள். கூடியிருந்த சனம் எல்லாம் ஓடிற்று. பொடியோட நான் மட்டும்தான் நிண்டன். உடன அந்த இடத்திலயே தாட்டிற்று ஓடிற்றம்.
ஆனா எனக்குத் தெரியும் என்ர மகன் சாகேல்ல. எங்கயோ இருக்கிறான். கனவில நெடுகலும் வாறான். ஏன்ர கால்மாட்டில இருந்துகொண்டு, தன்னை ஏன் பாக்க வறேல்ல எண்டு கேட்கிறான். எல்லாற்ற அப்பா அம்மாவும் வருகினம். எனக்கு இடியப்பம் அவிச்சி எடுத்துக்கொண்டு வாங்கோ எண்டு கனவில கேட்கிறான். வெள்ளை ரீசேட்டும், ஒரு பழைய காற்சட்டையும், மொட்டை தலையுமாயும் இருக்கிறான். பக்கத்த இருக்கிற ஆக்கள் சொல்லுகினம் அவனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருக்கு எண்டு. இப்பிடியேதான் நெடுகலும் கனவு வருதடா மகன்.
என்ர மகன் சாகேல்ல. எங்கயோ இருக்கிறான்.

அந்த நம்பிக்கை அவநம்பிக்கையாக்கவோ, அதற்கு உரம்கொடுக்கவோ என்னிடம் வார்த்தைகள் இல்லை. அப்படி அவர் கோரமுதல் வேறு ஒரு கதையை நான் தொடவேண்டும். அப்போதூன் இந்த உரையாடல் முற்றுப்பெறும்.
வாழ்க்கைய எப்படி சமாளிக்கிறீங்கள் அம்மா?
ஒரு உதவியும் இல்ல. பெடியள் கலியாணங்கட்டி போயிற்றாங்கள். நானும் சின்ன மகளும், மகனும் இருக்கிறம். படிக்கினம். அவரும் பிள்ளையள் செத்ததில இருந்து ஒரே குடி. ஆவர வேணாம் எண்டு விட்டிட்டன். ஒரு உதவியும் இல்ல. இந்த வீட்டுத்திட்டம் மட்டும் தந்தவ. அதுவும் அறையுங்குறையுமா நிக்குது. எல்லாருக்கும் கோழி, ஆடு எண்டு குடுத்தவ. எனக்கு எதுவுமில்ல.
சரியம்மா நான் வெளிக்கிடுறன்,
புறப்பட்டேன், என்ர மகன் போல இருக்கிறாய் தம்பி, உனக்கு சொல்லனும்போல இருக்கு, இண்டைக்கு மத்தியானம் சமைக்கேல்ல. வீட்டில ஒண்டுமில்லடா. குறைநினைக்காத உனக்கு ஒரு தேத்தண்ணி கூட தர முடியேல்ல…

IMG_0051

********
செஞ்சோலை படுகொலையில் மரணித்த பிள்ளைகளின் குடும்பங்களுக்கு எந்தவித நட்டஈடுகளோ, ஆறுதல் கொடுப்பனவுகளோ வழங்கப்படவில்லை. மரணித்த அனேக பிள்ளைகளின் குடும்பங்களின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது. ஏதாவது வழியில் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதும், செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கான பொதுத் தூபி ஒன்றை அமைத்தலும், என்பது குறித்து எழுத வேண்டும் என்ற முடிவோடு அறைவந்து சேர்ந்தேன். இரவு. 10 மணி.

http://www.colombomirror.com/tamil/?p=5410

 

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this