• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
Athavan CH

வீட்டை அலங்கரிக்க எளிய வழிகள்

Recommended Posts

வீட்டை அழகாக்கும் கண்ணாடிகள்

kannadi_3054249f.jpg

வீடு என்பது அழகும் வசதியும் நிறைந்ததாக இருக்க வேண்டும். இன்றைய நாகரிக வீட்டை அழகாக, பயன்பாடு மிக்கதாக மாற்றக் கடல் போல் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றில் சரியான பொருட்களைத் தேர்வு செய்வது முக்கியம். அப்படியான பொருள்களில் முக்கியமானது கண்ணாடி.

கண்ணாடி ஒன்றும் புதுமையான பொருள் அல்ல. அதை ஏற்கனவே பல இடங்களில் பயன்படுத்தி வருகிறோம். என்றாலும் முழுக்க முழுக்கக் கண்ணாடியால் கட்டிடங்களை அமைப்பது இன்றைய புதுப்பாணி. அலுவலங்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் என்று அனைத்துமே கண்ணாடியால் வடிவமைக்கப்படுகின்றன. அழகிய தோற்றம் மற்றும் பராமரிக்க எளிதாய் இருப்பதால் பெரிதும் வரவேற்கப்படுகிறது. மேலும் கண்ணாடியின் சிறப்பு என்னவென்றால், அது எந்தப் பொருளோடும் தன்னை இணைத்துக் கொள்ளும். உதாரணமாக மரம், அலுமினியம், இரும்பு போன்ற உலோகங்கள், தோல் மற்றும் பிற துணி வகைகள் என்று எதனுடன் இணைந்தாலும் அழகிய தோற்றத்தைத் தரும்.

கண்ணாடி பல வகைப்படும் என்றாலும் கட்டிட வடிவமைப்புக்கு என்று சில வகைகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர். அவை ஒளிபுகா கண்ணாடி, உறுதியாக்கப்பட்ட கண்ணாடி, தகடாக்கப்பட்ட கண்ணாடி, வளைவுக் கண்ணாடி என்பன. அதிக சூட்டுக்குப் பின் உடனடியாகக் குளிவிக்கப்படுவதால் கண்ணாடி உறுதியாக்கப்படுகிறது. நீண்ட நாள் உழைக்க வைக்கிறது. தெறித்துச் சிதறும் அபாயம் இல்லாமல் பாதுகாப்பானதகிறது.

kannadi_3_3054250a.jpg

வீடுகளுக்கு ஒரு நாகரிகத் தோற்றத்தைத் தருவதில் கண்ணாடி பால்கனி முக்கியப் பங்கு வகிக்கிறது. கண்ணாடி ஒளியை நன்றாகப் பிரதிபலிப்பதால் வீட்டினுள் நல்ல வெளிச்சம் கிடைக்கிறது. ஒய்யாரமான, ஒரு சொகுசான தோற்றத்தைத் தருவதுடன் அனைவரும் பார்த்து வியக்கும் வண்ணம் அமைகிறது. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வெளியுலகைத் தரிசிக்கும் ஒரே வழி பால்கனிதான். அதைக் கண்ணாடியில் அமைத்தால் எத்துணை அழகாயிருக்கும். வெளியிலிருந்து பார்ப்பதற்கு மட்டுமல்லாது வீட்டின் உள்ளிருந்தும் பார்ப்பதற்கும் அழகாகத் திகழ்கிறது. கண்ணாடி என்பதால் அதன் பாதுகாப்புத்தன்மை பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. அதிக எடையைத் தாங்கும் வண்ணமும் எவ்வித சீதோஷ்ணத்தையும் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் உருவாக்கப்படுகிறது.

மாடிப்படிகள் என்பது இரு தளங்களை இணைக்கிற ஒரு இணைப்பாக மட்டும் திகழாமல் வடிவமைப்புக் கலையின் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. மாடிப்படிகள் வீட்டின் சொந்தக்காரரின் ரசனை மற்றும் ஆடம்பரத்தைப் பறைசாற்றுவதாக அமைகிறது. கண்ணாடியிலான மாடிப்படிகள் என்பது ஆடம்பரமான கட்டிடக்கலை சார்ந்த விஷயம் என்று பலர் நினைக்கலாம். ஆனால் இன்றைய நாகரிக நுகர்வோர் உலகில் அது பட்ஜெட்டுக்குள் சாத்தியமே. கண்ணாடி என்றவுடன் அதன் பாதுகாப்புத்தன்மை பெரிதும் விவாதிக்கப்படுகிறது.

ஆனால் கண்ணாடிகள் மிகவும் பாதுகாப்பானவை. ஏனெனில் அவை ரசயான முறைகளில் பதனிடப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்டு மென்தகடுகளாக்கப்பட்டுள்ளன. படிகள் மட்டுமல்லாது அதன் அருகே அமைக்கப்படும் கைப்பிடித் தடுப்பான்களும் கண்ணாடியிலேயே, அமைக்கப்படுகின்றன. கண்ணாடி மாடிப்படிகள் அமைக்கப்படும்போது வடிவமைப்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்: கண்ணாடியின் அளவு மற்றும் தடிமன், தோற்றம், சிராய்ப்பு ஏற்படுத்தாத கூர் பகுதிகள் அற்ற முனைப் பகுதிகள், வளைவுகள், வழுக்குத்தன்மையைக் குறைக்கும் முறைகள். கண்ணாடியும் ஒளியும் எவ்வாறு இணைந்து விளங்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

படிக்கட்டுகளைக் கண்ணாடியில் அமைத்துவிட்டுப் பின் முறையாக விளக்குகள் அமைக்காவிடில் அதன் அழகு கெட்டுவிடும். அலுவலகங்களில் கண்ணாடியினால் கதவுகளும், பிரிவினைக் கதவுகளும் அமைக்கப்படுகின்றன. பல இடங்களில் தானியங்கிக் கதவுகளும் அமைக்கப்படுகின்றன. கதவுகளுக்கான கைப்பிடிகளும் ஆணிகளும் கீல்களும் பிரத்யேகமாகக் கடைகளில் கிடைக்கின்றன. விற்பனை அங்காடிகளில் கண்ணாடி அலமாரித் தட்டுகள் அமைக்கப்படுகின்றன. இவை தவிர ஷவர் உறை கண்ணாடியில் அமைக்கப்படுகின்றன. குளியலறையில் காய்ந்த மற்றும் ஈரப்பகுதிகளைப் பிரிப்பதற்கும் இவை பயன்படுகின்றன.

kannadi_2_3054251a.jpg

வெளிப்புறத் தோற்றத்தை மேம்படுத்தவும் கண்ணாடி பயன்படுகிறது. கட்டிடக்கலை வல்லுநர்களுக்கு இது போன்ற கடினமாக்கப்பட்ட கண்ணாடி கொண்டு வடிவமைப்பது பெரும் வரப் பிரசாதமாகும். தற்போது இது போன்ற கடினமாக்கப்பட்ட கண்ணாடி பழுப்பு, பச்சை, சாம்பல் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. உட்புறங்களில் அமைக்கப்பட்டால் 20 முதல் 30 வருடங்கள் வரை நீடித்து உழைக்கும். வெளிப்புறங்களில் எனில் 10 முதல் 15 வருடங்கள் வரை உழைக்கும்.

கண்ணாடி, அது உருவாக்கப்பட்ட கி.மு 500 முதல், மனிதர்களால் பெரிதும் விரும்பப்படும் பொருளாகத் திகழ்கிறது. கட்டிடக்கலையில் எளிமையாகத் தன்னுடைய பயணத்தைத் தொடங்கிய அது இன்று அலங்காரமாகப் பல நவநாகரிகக் கட்டிடங்களில் ராஜாங்கம் நடத்துகிறது.

http://tamil.thehindu.com/society/real-estate/வீட்டை-அழகாக்கும்-கண்ணாடிகள்/article9255144.ece

 

Share this post


Link to post
Share on other sites

வீட்டுக்கு வெளியே ஓர் அழகான அறை

room_3061532f.jpg

அறை என்பது நான்கு சுவர்களுக்கு உள்ளேதான் இருக்க வேண்டுமா? ஒன்றிரண்டு பக்கச் சுவர்களைத் தவிர்த்துவிட்டு, பாதி கூரை மீதி வானம் எனப் பூச்செடிகளுக்கு மத்தியில், சிலுசிலு காற்றுடன் உங்கள் வீட்டிலேயே ஒரு திறந்த அறையினை அமைக்கலாம் வாருங்கள்.

வீட்டின் அமைப்பையே மாற்றும் அறை

பாரம்பரிய வீடுகளின் புழக்கடை, முகப்புத் திண்ணை, வெளி முற்றம் எனக் காற்றாட மேற்கொள்ளப்பட்ட சில ஏற்பாடுகளின் நவீன நீட்சிதான் இந்தத் திறந்த அறை. அளவில் சிறிய வீடானாலும், அறைகளில் ஒன்றைத் திறந்த முறையில் அமைப்பது வீட்டு அமைப்பை அடியோடு மாற்றிப் பிரம்மாண்டம் தரும். வீட்டின் தொடர்ச்சியாக அதன் ஒன்றிரண்டு பக்கச் சுவர்களைப் பயன்படுத்தியோ, அல்லது தனியாக வீட்டுத் தோட்டத்தின் மத்தியில் சுவர்கள் இல்லாமலோ திறந்த அறை அமைக்கலாம்.

மனசைத் திறக்கும் அறை

வீடென்பதைப் பெரும்பாலும் நம்மை நாமே அடைத்துக்கொள்ளும் விருப்பச் சிறையாக வைத்திருக்கிறோம். வெளியே வெயில் குறைந்து இதமான காற்று வீசுவதுகூடத் தெரியாது. நான்கு சுவர்களுக்குள் தொலைக்காட்சியில் முடங்கிக் கிடப்போம். மாறாக அமர்ந்து வாசிக்க, இசை கேட்க, காற்றாடக் குடும்பத்தினருடன் உரையாட, நண்பர்களைச் சந்திக்க எனப் பல வகையிலும் வீட்டுக்கு வெளியே கிடைக்கும் உணர்வை வீட்டிலேயே பெற திறந்த அறையின் கட்டுமானம் கைகொடுக்கும். அன்றாட மன அழுத்தத்திலிருந்து விடுதலைத் தரும் வகையில், திறந்த அறை வீட்டு உறுப்பினர்களின் விருப்ப அறையாக விரைவிலேயே மாறிப்போகும்.

வீடு கட்டத் திட்டமிடும்போதே திறந்த அறைக்கும் சேர்த்து வடிவமைப்புகளை மேற்கொள்வது சிறப்பு. தனி வீடுகள் இதற்கு உகந்தவை. வீட்டின் பக்கவாட்டில் அல்லது பின்பகுதியில், உரிய அமைப்புகளைத் திட்டமிடலாம். வீட்டின் தொடர்ச்சியாக, ஒரு கதவு அமைத்துத் திறந்த அறையை அமைப்பது ஒரு பாணி. வீட்டுக்கு அருகிலேயே, அதன் சுவர்களில் இருந்து துண்டித்துக்கொண்டதாக திறந்த அறையை அமைப்பது மற்றொரு பாணி. மேலும் திறந்த அறையை மையப்படுத்தி வீட்டுத் தோட்டத்தினைத் திட்டமிடுவது வீட்டின் அமைப்பிற்குக் கூடுதல் பொலிவினைத் தரும்.

room1_3061533a.jpg

வீட்டினுள் அறை அமைப்பதற்கான ஏற்பாடுகளில், பெரும்பாலானவை இந்தத் திறந்த அறையை அமைப்பதிலும் தேவைப்படும். அதே சமயம் அந்த ஏற்பாடுகளைச் சற்றே ரசனையுடன் பாதியில் நிறுத்தியது போன்ற தோற்றம் தருவது மொத்த வீட்டையும் வேறுபடுத்திக்காட்டும். திறந்த அறையை அமைக்கும் முன்னர், அதற்கு ஒதுக்கும் பரப்பைத் தீர்மானித்துக் கொள்ளலாம். இருக்கும் உபரி இடம் முழுக்க வளைத்துப் போட்டு அறையை அமைக்கக் கூடாது. சுற்றிலும் தோட்டம், புல்வெளிப் பரப்பு, தனித்துவ அழகுச் செடிகள் எனப் போதிய இடத்தை ஒதுக்கி, திறந்த அறையை நிர்மாணிப்பது நல்லது.

திறந்த அறையைக் காற்றோட்டத்துக்குத் தோதாகத் தீர்மானிக்க வேண்டும். நமது வீட்டின் சுவர்கள், சுற்றுச்சுவர், பக்கத்து வீட்டின் சுவர்கள் எனக் காற்றோட்டத்தைத் தடுக்கும் அம்சங்களை முன்பே கணக்கிட்டுத் திறந்த அறையைத் திட்டமிடலாம். இருக்கும் வீட்டின் சுவரை ஒட்டியே திறந்த அறையைத் தீர்மானிப்பது, செலவைக் குறைக்கும். பாதுகாப்பு, தனிமை, வீட்டுடனான போக்குவரத்து போன்றவற்றுக்கும் இது உதவியாக இருக்கும். மேலும் வீட்டை அடைத்துக்கொண்டிருக்கும், வாஷிங் மெஷின் போன்றவற்றின் உபயோகத்தையும் திறந்த அறையை ஒட்டித் தீர்மானிக்கலாம்.

கூரை இல்லாத அறை எனில் மழை, வெயில் காலத்துக்கு ஈடுகொடுக்க நீளக் கருங்கல் முதல் கிரானைட் வரையிலானவற்றைக் கொண்டு இருக்கை மேசைகளை வடிவமைக்கலாம். பகுதி கூரை எனில் மர இருக்கைகளுக்கு போதிய வார்னிஷ் பாதுகாப்பு தருவது அவசியம். பிளாஸ்டிக் இருக்கைகள் பட்ஜெட்டுக்கு உகந்தது என்றபோதும், சூழலுக்குப் பொருத்தமாகத் தேர்வு செய்யத் தவறினால் பார்வைக்கும் பயன்பாட்டுக்கும் உறுத்தல் தரும். கூரை அவசியம் எனில் குடில்கள் அமைப்பதற்கான இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தலாம். குறுக்கும் நெடுக்குமாகச் சாரங்கள் அமைத்து அதில் தேவையானபோது தார்ப்பாய் மாதிரியிலான தற்காலிகக் கூரைகள் அல்லது ஒளி ஊடுருவும் செயற்கைக் கூரைகளை அமைத்துக்கொள்ளலாம். வெறுமனே சாரங்களின் மேலாகப் பசுமையான கொடிகளைப் படரச் செய்து, கூரையாக்குவதும் ரசனையானது.

சொகுசு தரும் நகாசு வேலைகள்

திறந்த அறையைச் சுற்றி வளைத்துத் தோட்டம் அமைக்கப் போதிய இடமில்லாதவர்கள், அறையின் உட்புறம், வெளிப்புறம் இருக்கும் சுவர்களில் செங்குத்து வாக்கில் பூச்சட்டிகளை அமைத்துத் தொங்கும் தோட்டம் அமைக்கலாம். இருக்கைகளின் அருகிலும், மேசையின் மத்தியிலும், கூரையின் சாரத்திலிருந்து தொங்கும் வகையிலும் பூச்செடிகள், அழகுத் தாவரங்கள் அமைப்பது பார்வைக்குப் பசுமையான அழகைச் சேர்க்கும். அதற்காக, அடர்த்தியாகச் செடிகள் சேர்ப்பது கொசு மற்றும் பூச்சித் தொல்லைக்கு வழி வகுத்துவிடும். அறைக்குள் ஒன்றிரண்டு பளிச் விளக்குகள் தவிர்த்து ஏனைய விளக்குகளை மங்கலான வெளிச்சத்தில் அமைப்பது இரவு நேரத்தில் ரம்யம் தரும். கூழாங்கல் பாதையில் வழிந்தோடும் சிறிய நீருற்று அமைப்பது பார்வைக்கு மட்டுமல்ல அதன் சலசலப்பு சூழலுக்கு ஏகாந்தம் தரும்.

room11_3061534a.jpg

வெளியே இடம் இல்லையா?

தனி வீடுகள் வாய்க்கப்பெற்றவர்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களும் திறந்த அறைக்கான அமைப்பை ஓரளவு உருவாக்கிக்கொள்ளலாம். வீட்டின் தரைப்பகுதியில் இடம் இல்லாதவர்கள் மொட்டை மாடியில், வீட்டுத் தோட்டத்தின் மத்தியில் இந்த திறந்த அறையை அமைக்கலாம். அடுக்கங்களில் வசிப்பவர்கள் சற்றே அகலமான பால்கனி இருப்பின், அங்கு இந்த அமைப்பை உருவாக்கிக் கொள்ளலாம்.

http://tamil.thehindu.com/society/real-estate/வீட்டுக்கு-வெளியே-ஓர்-அழகான-அறை/article9281073.ece?widget-art=four-all

 

Share this post


Link to post
Share on other sites

குட்டி குட்டி உலகம்

children_3078183f.jpg
 

குழந்தைகளே வீட்டின் உண்மையான உரிமையாளர்கள். அவர்களே பெரியவர்களின் விலை மதிக்க முடியாத சொத்து. பெரியவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வீட்டை வாங்குவதே குழந்தைகளின் சந்தோஷத்துக்காகத்தான்; அவர்களின் எதிர்கால வாழ்வுக்காகத தான்.

அதே வேளையில் வீட்டைக் கலகலப்பாக்குபவர்கள் குழந்தைகள். அவர்களின் சிரிப்புச் சத்தமும் துள்ளலோட்டமும் வீட்டைப் புத்துணர்வுடன் இருக்கச் செய்யும். அப்படிப்பட்ட குழந்தைகளுக்காகவே ஒவ்வொரு வீட்டிலும் ஓர் அறையை ஒதுக்குவது அவர்களை மிகவும் உற்சாகப்படுத்தும். அந்த அறையில் அவர்களுக்குப் பிடித்தமான விஷயங்களால் அதை நிறைத்து அழகுபடுத்தலாம்.
இயல்பாகவே குழந்தைகளுக்கு வண்ணங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே குழந்தைகளின் அறையை வசீகர வண்ணங்கள் பூசி மெருகேற்றலாம்.

அந்த அறையில் வெறுமனே ஒரு வண்ணத்தைப் பூசுவதைவிட, அறையின் சுவரில் பசுங்கொடிகள், செடிகள், பூக்கள் ஆகியவற்றை வரைந்து அழகான தோற்றம் தரலாம். சில குழந்தைகளுக்கு ஓவியம் வரைவதில் மிகவும் ஆர்வமிருக்கும். அப்படிப்பட்ட குழந்தைகள் உள்ள வீட்டில் குழந்தைகளின் அறையை அழகிய ஓவியங்களால் நிறைக்கலாம். அறையின் சுவரில் அழகான ஓவியங்களை வரைந்துவிடலாம். இல்லையெனில் வசீகர ஓவியங்களை மாட்டி அழகூட்டலாம்.

தினந்தோறும் அறைகளில் எதிர்ப்படும் அருமையான ஓவியங்களைப் பார்த்துக்கொண்டே இருப்பதால் குழந்தைகளின் படைப்புத் திறன் வளரும்.
குழந்தைகளுக்கான அறையின் சுவர்களை அலங்காரப்படுத்துவதில் ஒரு விஷயத்தை மட்டும் கவனத்தில் வைக்க வேண்டும். குழந்தைகளுக்குப் புதிது புதிதான விஷயங்கள் மீதே நாட்டம் இருக்கும். ஆகவே அவர்களின் அறையில் அடிக்கடி மாற்றும் வகையிலான பூச்சையே மேற்கொள்ள வேண்டும். வீட்டின் பிற அறைகளைப் போல் ஒரே பூச்சு என்பது அவர்களுக்கு அலுப்பூட்டி விடும். சிரமத்தைப் பாராது இதைப் பராமரித்தால் குழந்தைகளின் மனம் பூரிப்படையும்.

அவர்களது பிற செயல்பாடுகளிலும் ஆரோக்கியமான முன்னேற்றம் தென்படும்.
குழந்தைகளின் அறையில் போடப்படும் அறைக்கலன்களிலும் தனிக் கவனம் செலுத்த வேண்டும். அவையும் வசீகரமானதாக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு வகையில் அவர்களை உற்சாகப்படுத்தும் வடிவம், நிறம் கொண்டவையாக அவை அமைய வேண்டும். குழந்தைகள் பள்ளிப் பாடங்களை செய்வதற்குரிய மேசை நாற்காலி போன்றவையும் பிரத்தியேகமாக வடிவமைத்துப் போடலாம்.

கடைகளில் ரெடிமேடாகக் கிடைக்கும் அறைக்கலன்களைவிட பிரத்தியேகமாக வடிவமைக்கும் போது, ஒரு தனித்துவம் கிடைத்துவிடும். அதுவே குழந்தைகளைக் குதூகலப்படுத்தும். குழந்தைகளின் மகிழ்ச்சியே வீட்டின் மகிழ்ச்சி என்பதை மறந்துவிடாதீர்கள்.

http://tamil.thehindu.com/society/real-estate/குட்டி-குட்டி-உலகம்/article9335870.ece?widget-art=four-all

Share this post


Link to post
Share on other sites

 

அசத்தும் வரவேற்பறை

வரவேற்பறை எப்போதும் பளிச்சென்று அழகாக இருந்தால்தான் வருபவர்களை வரவேற்கும் அறையாக இருக்கும். நம் நெருங்கிய சொந்தம் அல்லது நட்பைத் தவிர வேற யாரும் படுக்கை மற்றும் மற்ற அறைகளுக்கு அவ்வளவு சீக்கிரம் உள்ளே வரமாட்டார்கள். அனைவரும் பார்க்கும் அறையாக இருப்பதால் வரவேற்பறையை அழகாக வைத்திருக்க வேண்டும். இதற்காக நிபுணர்களைஅழைத்தெல்லாம் அழகுபடுத்தத் தேவையில்லை

30.jpg

நாமே எளியமுறையில் வரவேற்பறையை அழகாக வைப்பது குறித்து விவரிக்கிறார் வீட்டு உள் அலங்கார நிபுணர் சரஸ்வதி ஸ்ரீனிவாசன். வரவேற்பறை அழகாக இருந்தால்தான் நம் வீட்டின் மீது மரியாதை கூடும். அதற்கு விலையுயர்ந்த பொருட்கள் தேவையில்லை. இருக்கும் பொருட்களை வைத்தே அழகு படுத்தலாம். எளிமையான சிலவிஷயங்களை கையாண்டால் போதும்.

* சுவரின் நிறம்

நாம் அடிக்கும் பெயின்ட் கலருக்கு அறையின் அழகை தீர்மானிப்பதில் பெருமளவு பங்குண்டு. அழுத்தமான நிறங்கள் அறையில் வெளிச்சம் குறைவாக இருப்பது போல் காட்டும். வெளிர் நிறங்களை பயன்படுத்தினால் குளிர்ச்சித் தன்மையை வழங்குவதோடு வரவேற்பறையை பெரிதாக காட்டும்;  வெளிச்சம் இருப்பது போல் காண்பிக்கும். அடுக்குமாடிக் குடியிருப்புகளில் நிறங்களை கட்டுமான நிறுவனமே தீர்மானிப்பதால் நாம் சுவற்றின் நிறத்தை தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால், மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தலாம். 

30a.jpg

* தரை

வீட்டின் தரைக்கு பயன்படுத்தப்படும் டைல்ஸ் போன்றவையும் வெளிர் நிறத்தில் இருக்க வேண்டும். வெளிர் நிற ஃப்ளோரிங் இடத்தைச் சற்றுப் பெரிதாகக் காட்டும். குறிப்பாக வெள்ளை அல்லது அரை வெள்ளை நிறத்தில் தரை இருத்தல் சிறப்பு. 

* சோபா

வரவேற்பறை பெரியதாக இருந்தால், நடப்பதற்கு இடைஞ்சல் இல்லாமல் அறையின் மூலையில் சுவற்றை ஒட்டி எல் வடிவத்தில் சோபா போடலாம். எதிரில் டிவி கேபினட்டை வைக்கலாம். எல்இடி டிவியாக இருந்தாலும் எதிர்பக்கம் மாட்டி வைக்கலாம். அறை சிறியதாக இருந்தால் சோபாவை நடுவிலே போடலாம். சின்ன அறைக்கு பெரிய சோபாக்கள் வாங்கக் கூடாது. சோபா அகலம் குறைவானதாகவும் உயரம் அதிகம் உள்ளதாகவும் வாங்க வேண்டும். கைப்பிடிகள் சின்னதாக இருக்க வேண்டும். முதுகுப்பக்கம் அழகிய வேலைப்பாடுகள் அமைந்த சோபாக்களை சின்ன அறையில் போடலாம். 

* சென்டர் டேபிள்

சோபாவிற்கு டீப்பாய் எனப்படும் சென்டர் டேபிள் போடும்போது அது சோபாவை விட உயரமாக இருக்கக்கூடாது. சோபாவின் உயரம்தான் இருக்க வேண்டும் அல்லது அதைவிட குறைவாக இருந்தாலும் நல்லது. டீப்பாய் சோபாவின் நிறத்திற்குத் தகுந்தாற்போல இருக்க வேண்டும். டீப்பாய்களின் மீது அழகிய வேலைப்பாடுகள் செய்யப்பட்ட நாப்கின்களை போட்டு வைக்கலாம். தொலைபேசி மீதும் எம்ப்ராய்டரி டிசைன் அல்லது கட் டிசைன் செய்யப்பட்ட துணிகளை போட்டு வைக்கலாம். 

* உயரமான பொருட்கள்

பெரிய பெரிய  செதுக்கப்பட்ட வேலைப்பாடுகளுடன் உள்ள மரங்கள், மீன்தொட்டி, ஸ்டாண்டுடன்  உள்ள உயரமான விளக்குகளை போன்ற உயரமான பொருட்களை அறையின் மூலையில் வைத்தால்  எடுப்பாக இருக்கும். 

* செடிகள்

சிலர் வரவேற்பறையில் அழகுக்காக செடிகளை வைத்திருப்பார்கள். அதில் இலைகள் அதிகம் இருக்காது. ஆனால் செடிகள் உயரமாக இருக்கும். அப்படி இருந்தால் அது அழகாக இருக்காது. அதற்குப் பதிலாக உயரம் குறைவாக இருந்தாலும் அடர்த்தியாக உள்ள செடிகளை வைக்க வேண்டும். நல்லச் செடிகளாக இருக்க வேண்டும். அதை அடிக்கடி ட்ரிம் பண்ணி வைக்க வேண்டும். அப்போதுதான் நன்றாக இருக்கும். செடிகளை அறையில் வைப்பதால் வீட்டின் அழகு கூடுவதில் இன்னொரு ரகசியமும் உண்டு. அதில் உள்ள அந்தப் பசுமை வீட்டில் உள்ள மற்ற பொருட்களின் நிறத்தோடு ஒத்துப்போய் அறையின் அழகை மேலும் கூட்டும். 

செடிகள் வைக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயம், செடிகளை சுவரை ஒட்டினாற் போல வைக்கக்கூடாது. சுவரில் கறை படியும். சுவரிலிருந்து கொஞ்சம் தள்ளி வைக்கவும். செடி வைத்திருப்பவர்கள் 2 செட் செடிகளை கைவசம் வைத்துக்கொண்டு ஒன்றை சூரிய வெளிச்சத்தில் வைத்துவிட்டு மற்றொன்றை வீட்டினுள் வைக்கலாம். இயற்கைச் செடிகளுக்கு சூரிய வெளிச்சம் அவசியம். அப்போதுதான் அந்தச் செடிகள் நன்றாக இருக்கும். செடிகளை சோபாவை ஒட்டியும் வைக்கக்கூடாது. சோபாவில் கறைபட வாய்ப்புண்டு. சோபாவின் உயரத்திற்கு செடிகள் வைக்கலாம். 

* கார்ப்பெட்

வரவேற்பறைக்கு கார்ப்பெட் போடும்போது நடக்கும் வழியை விட்டுத் தள்ளி நடுவில் போட வேண்டும். வழியில் போட்டால் மிதியடி போல ஆகிவிடும். சோபா நிறம், சுவரின் நிறம் இவற்றிற்கு தகுந்தாற்போல போட வேண்டும். இப்போது மெரூன், ப்ரவுன், பீச் என பல வண்ணங்களில் கார்ப்பெட் கிடைக்கிறது. பொதுவாக பல வீடுகளில் ப்ரவுன் கலர் கார்ப்பெட் போடுவார்கள். அது நமது நாட்டு கலாசாரத்தைப் பிரதிபலிக்கும். ஃபர்னிச்சர்களும் அப்படித்தான். 
 
* திரைச்சீலைகள்

திரைச்சீலைகள் பந்தாவாக போடுவதற்கு நம் பட்ஜெட் இடித்தால் கூடுமானவரை ஹால் வரைக்குமாவது நல்ல திரைச்சீலைகளை போட வேண்டும். கிராண்ட் லுக் டிசைனர் கர்ட்டன்களை போடலாம். நிறைய சுருக்கங்கள் வைத்த கர்ட்டனாக இருப்பது நல்லது. ஜன்னலுக்கு மேலே ஆர்ச் மாதிரி போட்டு அலங்காரம் கூட செய்யலாம். வெர்டிக்கல் பிளைன்ட்ஸ் (ரிப்பன் பட்டைகள் போல் இருக்கும்) கர்ட்டன்களை போடலாம். சுவரின் நிறத்திற்கு தகுந்தாற்போல் போடலாம். சோபா, சுவர், கர்ட்டன் அனைத்தும் மேட்சிங்காக இருந்தால் அழகாக இருக்கும்.   

* ஷோகேஸ்

அடுத்து வரவேற்பறையில், வரும் மக்களின் முக்கிய கவனத்தை ஈர்ப்பது ஷோகேஸ். ஹாலின் அழகைக் கூட்டுவதற்காக வைக்கப்பட்ட விஷயம் இப்போது குப்பைகளை சேர்த்து வைக்கும் இடம் போல்  பல வீடுகளில் இருக்கிறது. தேவையற்றப் பொருட்களை ஷோகேஸில் வைக்காதீர்கள். முக்கியமான மற்றும் அழகான பொருட்களை மட்டும் ஷோகேஸில் வையுங்கள். 

அதன் உள்ளே உள்ள பொருட்களை கொசகொசவென்று நெருக்க நெருக்கமாக அடுக்கி வைக்காமல் போதிய இடைவெளி விட்டு வைக்கவேண்டும். ஷோகேஸில் வைத்திருக்கும் செயற்கையான செடிகளை அடிக்கடி எடுத்து சோப் தண்ணீரால் கழுவி துடைத்து நிழலில் காய வைத்த பின் எடுத்து வைக்கவும். வெயிலில் வைத்தால் அவை நிறமிழந்து போகக்கூடும். 
  
* டெரகோட்டா

டெரகோட்டா பொருட்களைக் கொண்டும் ஹாலை அழகுப்படுத்தலாம். அவற்றை தேவைப்படும்போது தண்ணீரைக்கொண்டு சுத்தப்படுத்தி வைக்கலாம்.

* விளக்குகள்

மேற்கூரையின் உயரம் குறைவாக இருந்தால் இரவு விளக்கு அல்லது அழகுக்காக வைக்கும் விளக்குகளை மேல் நோக்கிப் பார்த்தாற் போல் அமைக்கலாம். மேற்கூரை உயரமாக இருந்தால் கீழ்நோக்கி இருக்கும் டூம் விளக்குகளை பயன்படுத்தலாம். ஹால் பெரிதாக இருக்கும் பட்சத்தில் 4 அல்லது 5 டூம் லைட்டுகளைக் கூட பயன்படுத்தலாம். சாண்ட்லியர் எனப்படும் பெரிய பெரிய சர
விளக்குகள் போடலாம். பார்க்க மிகவும் பிரமாண்டமாக இருக்கும். 
 
* மிதியடிகள்

நாம் பயன்படுத்தும் மிதியடியில் கூட நம் கலைநயத்தைக் காட்டலாம். சின்னச் சின்ன அர்த்தமுள்ள வார்த்தைகள் போடப்பட்ட, அதாவது வெல்கம், நன்றி போன்ற வார்த்தைகள் அமைந்த மிதியடிகளை பயன்படுத்தலாம். பொருட்களை விட, அவற்றை நாம் தேர்ந்தெடுக்கும் விதமும், நமது கிரியேட்டிவிட்டியைப் பயன்படுத்தி அவற்றை நாம் அமைக்கும் விதமும் தான் நமது வீட்டின் அழகை தீர்மானிக்கும். 

சின்னச் சின்னப் பொருட்களாக இருந்தாலும் விலை குறைவான பொருட்களாக இருந்தாலும் அவற்றை தேர்ந்தெடுத்துப் பார்த்து வாங்குங்கள். அதை எந்த இடத்தில் வைத்தால் நன்றாக இருக்கும் என ஒன்றுக்கு இரண்டு முறையாக சிந்தித்து வையுங்கள். உங்கள் வீட்டின் வரவேற்பறையும் வருபவர்களை கட்டாயம் கவரக்கூடியதாய் இருக்கும். 

- ஸ்ரீதேவிமோகன்

http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=3573&id1=79&issue=20161116


 

Edited by Athavan CH

Share this post


Link to post
Share on other sites

அளவெடுத்து அழகாக்கலாம்!

Desktop_3098055f.jpg
 
 
 

அறையின் அளவுக்குப் பொருந்தும்படி பொருட்களைத் தேர்ந்தெடுப்பதைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அறையை வடிவமைக்கப் பயன்படுத்தும் பொருட்களைக் கச்சிதமாக அளவெடுத்து வாங்கி அலங்கரிப்பதைப் பற்றித் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். ஆனால், வீட்டின் வடிவமைப்பாளர்கள் பொருட்களை அளவெடுத்து வாங்குவதும், அடுக்கி வைப்பதும் மிக முக்கியமான அலங்கார உத்தி என்று தெரிவிக்கின்றனர். இப்படிக் குறிப்பிட்ட அளவில் அறைக்கலன்களைத் தேர்ந்தெடுத்து அடுக்கிவைத்தால் வீட்டின் தோற்றம் கூடுதல் அழகாக விளங்கும். அதற்கான சில வழிமுறைகள்...

‘குஷன்’ விதி

சோஃபாவின் மூலையில் குஷன்களைக் குறிப்பிட்ட அளவில் அடுக்கிவைக்கும்போது வரவேற்பறை தோற்றம் கூடுதல் அழகுடன் மாறும். பளிச்சென்று வடிவமைக்கப்பட்டிருக்கும் 20 அங்குல அளவில் இரண்டு சதுர குஷன்களைத் தேர்ந்தெடுக்கவும். அவற்றின்மீது 16 அங்குலமுள்ள இரண்டு அடர்நிற குஷன்களைச் சேர்த்து சோஃபாவின் மூலையில் வைக்கவும். அத்துடன், மிதமான வடிவமைப்பில் இருக்கும் ஒரு கீழ்முதுகு (Lumbar) தலையணையையும் சேர்த்து அடுக்கிவைக்கவும். இந்த வடிவமைப்பு அறைக்கு ஒரு சமநிலையான தோற்றத்தைக் கொடுக்கும்.

புத்தகங்களை மாற்றி அடுக்குவோம்

உங்களுடைய புத்தக அலமாரியில் அறுபது சதவீதப் புத்தகங்களைச் செங்குத்தாக அடுக்கவும். மீதமிருக்கும் நாற்பது சதவீதப் புத்தகங்களைக் கிடைமட்டமாக அடுக்கிவையுங்கள். இப்படி அடுக்குவதால் புத்தக அலமாரி சமநிலையான வடிவமைப்புடன் காணப்படும். செங்குத்தாக அடுக்கிவைத்திருக்கும் புத்தகங்களுக்குக் கீழே கிடைமட்டமான புத்தகங்களை வைக்கவும். செங்குத்தாக அடுக்கிவைத்திருக்கும் புத்தகங்கள் பன்னிரண்டு அங்குல உயரமிருந்தால் அவற்றுக்குமேலே நான்கு அங்குல உயரமிருக்கும் புத்தங்களைக் கிடைமட்டமாக அடுக்கவும். புத்தக அலமாரியில் பூக்கள் இல்லாத சிறிய செடிகளை அடுக்கிவைக்கவும். இது புத்தக அலமாரிக்கு மென்மையான தோற்றத்தைக்கொடுக்கும்.

எது சரியான உயரம்?

பெரும்பாலானவர்கள் கலைப் பொருட்களை அறையில் உயரமான இடத்தில் மாட்டிவைப்பார்கள். இப்படி மாட்டிவைப்பதால் எந்தப் பயனும் இல்லை. உங்கள் அறைக்கலனில் இருந்து மூன்றிலிருந்து எட்டு அங்குலம் வரையுள்ள உயரத்தில் கலைப் பொருட்களை மாட்டிவைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், அறைக்கலனுக்கும், ஓவியத்துக்கும் இடையே உயரம் அதிகமாக இருந்தால் அதைக் கண்களால் ரசிக்க முடியாது. அதனால் இந்த அளவில் ஓவியங்கள், ஒளிப்படங்கள் போன்றவற்றை மாட்டிவைப்பதுதான் சரியானதாக இருக்கும்.

தரைவிரிப்பின் அளவு

காபி மேசைக்குக் கீழே போடப்படும் தரைவிரிப்புதான் உங்களுடைய சோஃபாவை எப்படி வடிவமைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும். அதனால், எட்டுக்குப் பத்து அடியிருக்கும் தரைவிரிப்பைப் பயன்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும். இந்த அளவில் சோஃபா மற்றும் நாற்காலிகளின் முன்னங்கால்கள் தரைவிரிப்புக்குள் இருக்கும். பின்னங்கால்கள் தரைவிரிப்புக்கு வெளியே இருக்கும். ஐந்துக்கு எட்டு அடியிருக்கும் தரைவிரிப்பைப் பயன்படுத்தினாலும் இந்த முறையில்தான் வைக்கமுடியும். பெரிய வரவேற்பறையாக இருந்தால் இரண்டு தரைவிரிப்புகளுடன் இரண்டு அமரும் இடத்தை தனித்தனியாக உருவாக்கலாம்.

கண்ணாடியை எப்படி வைப்பது?

சுவரில் மையத்தில் 57 அங்குல உயரத்துடன் இருக்கும் கண்ணாடியை மாட்டுவதுதான் சரியானதாக இருக்கும் என்று தெரிவிக்கின்றனர் நிபுணர்கள். இதுதான் எல்லோருடைய பார்வை மட்டத்துக்கும் பொருந்தக்கூடிய அளவு. அறைப் பெரிதாகத் தெரிய வேண்டுமென்றால் ஜன்னலுக்கு எதிரில் கண்ணாடியைப் பொருத்துங்கள்.

சாப்பாட்டு மேசையின் அளவு

சாப்பாட்டு மேசை புதிதாக வாங்கப்போகிறீர்களா? 36 அங்குல அகலத்துக்குமேல் இருக்கும்படி வாங்குங்கள். இந்த அளவில் வாங்குவதால் அறையில் கூடுதலான இடமிருக்கும் தோற்றத்தைக் கொடுக்கும். ஒருவேளை, அறை சிறியதாக இருந்தால் வட்டமான சாப்பாட்டு மேசையை வாங்குவது பொருத்துமாக இருக்கும்.

காபி மேசை வாங்கப் போகிறீர்களா?

ஒரு சரியான காபி மேசையின் அளவு பதினைந்து அங்குலத்திலிருந்து இருபது அங்குல உயரத்தில்தான் இருக்க வேண்டும். சோஃபாவில் இருந்து பதினெட்டு அங்குலம் இடைவெளி இருக்கும்படி காபி மேசையைப் போடவேண்டும். இந்த இடைவெளி ஒருவர் அமர்ந்து காபி குடிப்பதற்கும், நடப்பதற்கும் சரியானதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. சோஃபாவைவிட மூன்றில்இரண்டு பங்கு அகலத்தில் இருக்கும்படி வாங்கவும்.

வண்ணங்களின் விதி

அறைக்கான வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கும்போது ஆதிக்கம் செலுத்தும் வண்ணத்தை அறுபது சதவீதம் பயன்படுத்துங்கள். இடைநிலை வண்ணத்தை முப்பது சதவீதம் அறையில் பயன்படுத்துங்கள். பத்து சதவீதம் ‘ஆக்சன்ட்’(Accent) வண்ணங்களைப் பயன்படுத்துங்கள். ஒரு பாரம்பரிய அறையில், ஆதிக்க நிறத்தைச் சுவர்களுக்கும், இடைநிலை நிறத்தை மெத்தை விரிப்புகள், திரைச்சீலைகள் போன்றவற்றுக்கும், ‘ஆக்சன்ட்’ நிறத்தைப் பூக்களுக்கும், குஷன்களுக்கும் பயன்படுத்தலாம். உங்களுடைய ஜன்னலுக்கு வெளியே அழகான இயற்கை காட்சிகள் இருந்தால், உட்புற ஜன்னலுக்கும் சுவருக்கு அடித்திருக்கும் ஆதிக்க நிறத்தை அடிக்கலாம்.

 

http://tamil.thehindu.com/society/real-estate/அளவெடுத்து-அழகாக்கலாம்/article9407060.ece

Share this post


Link to post
Share on other sites

புத்தகங்களை அடுக்கும் கலை!

book_shelf_3101863f.jpg
 
 
 

புத்தக அலமாரிகளில் புத்தகங்களை அடுக்குவதும் ஒரு கலைதான். சரியான முறையில் புத்தகங்களை அடுக்கிவைத்தால் அதுவே வீட்டுக்கு ஒரு ரம்மியமான அழகைக் கொடுக்கும். புத்தக அலமாரிகளில் புத்தகங்களை மட்டும் அடுக்கும் வழக்கம் இப்போது மாறிவிட்டது. புத்தகங்களுக்கிடையில் உங்களுடைய வாழ்க்கையின் அழகான தருணங்களை நினைவுபடுத்தும் பொருட்கள், ஒளிப்படங்கள் போன்ற அம்சங்களை இணைத்துதான் நவீன புத்தக அலமாரி வடிவமைக்கப்படுகிறது. புத்தக அலமாரியை வடிவமைப்பதற்கான சில ஆலோசனைகள்...

அளவு முக்கியம்

புத்தக அலமாரிகளைத் தேர்வு செய்யும் அளவையும், பொருட்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். மெலிதான அலமாரிகளுடன் வெளிப்படையான வடிவமைப்புடன் இருக்கும் புத்தக அலமாரிகள் சிறந்த தேர்வாக இருக்கும். மரம், பித்தளை என்ற இரண்டு கலவையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் புத்தக அலமாரிகள் அறைக்குப் பிரம்மாண்ட தோற்றத்தைக் கொடுக்க உதவும். மிதக்கும் புத்தக அலமாரியாக இருந்தால் தரைமட்டத்திலிருந்து எட்டு அங்குல உயரத்தில் பொருத்தினால் சரியாக இருக்கும்.

பழமையைக் கொண்டாடலாம்

பழமையான பொருட்களை அடுக்குவதற்குத் தனியாக ஓர் இடம் தேட வேண்டிய அவசியமில்லை. அவற்றைப் புத்தக அலமாரிகளில் புத்தகங்களுக்கு மத்தியில் அடுக்கிவைக்கலாம். அத்துடன், சிறியளவிலான கலை பொருட்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

பின்னணி வண்ணங்கள்

புத்தக அலமாரியின் பின்னணியை வண்ணமடித்தோ, சுவரொட்டிகளை ஒட்டியோ அலங்கரிக்கலாம். இது புத்தக அலமாரிக்கு ஆழமான தோற்றத்தைக் கொடுக்கும். புத்தக அலமாரியின் நிறத்தின் அடர்நிறத்தைப் பின்னணியாக வைப்பது பொருத்தமானதாக இருக்கும்.

பெரிய பொருட்களுக்கு முதலிடம்

புத்தக அலமாரியில் அடுக்க நினைக்கும் பொருட்களில் பெரிய பொருட்களை முதலில் அடுக்கவும். அலமாரியின் மேல் அடுக்கின் இடதுபுற ஓரத்தில் நீங்கள் அடுக்க நினைக்கும்பொருட்களை அடுக்கலாம். இந்தப் பொருட்களுடன் புத்தகங்களைக் குறுக்கும் நெடுக்குமாக (Zig - Zag) அடுக்கலாம். வட்ட முனைகளைக் கொண்ட பொருட்களைப் புத்தகங்களுடன் அடுக்குவது பொருத்தமாக இருக்கும். இதேமாதிரி, அலமாரியின் மேல் அடுக்கின் வலதுபுற ஓரத்தில் பொருட்களை அடுக்கவும். கீழே அலமாரிகளில் குறுக்கும் நெடுக்குமான முறையில் புத்தகங்களை அடுக்கவும்.

சிறிய புத்தகங்களும் பெரிய புத்தகங்களும்

பெரிய புத்தகங்களை அலமாரியின் கீழ் அடுக்குகளிலும், சிறிய புத்தகங்களை மேல் அடுக்குகளிலும் அடுக்குங்கள். இந்தப் புத்தக வரிசை ஓரே சீரான வரிசையாக இல்லாமல் செங்குத்தாகவும், கிடைமட்டமாகவும் மாற்றி அடுக்கவும். புத்தகங்களை இரண்டு வரிசையாக அடுக்கும்போது, பெரிய புத்தகங்களை வெளியில் தெரியும்படியும், சிறிய புத்தகங்களை உள்ளேயும் அடுக்கலாம்.

அதிகமான பொருட்கள் தேவையில்லை

புத்தக அலமாரியை அடுக்கும்போது பின்பற்ற வேண்டிய முக்கியமான விதி, புத்தகங்கள், பொருட்கள், காலியிடம் என்ற மூன்று அம்சங்களும் மூன்றில் ஒரு பங்குதான் இருக்க வேண்டும். ஒருவேளை, அடுக்குவதற்குப் பொருட்கள் இல்லையென்றால் புத்தக அலமாரியின் கடைசி வரிசையில் ஒரே மாதிரியாகப் பெட்டிகளையோ, கூடைகளையோ அடுக்கலாம்.

வித்தியாசமாக அடுக்கலாம்

புத்தகங்களைச் செங்குத்தாகவும் கிடைமட்டமாகவும் மட்டும் அடுக்காமல் பிரமிடு வடிவம் போன்ற வித்தியாசமான தோற்றங்களிலும் அடுக்கலாம். உலோகம், பீங்கான், தோல், கிளிஞ்சல்கள் மாதிரியான பொருட்களை இணைத்துப் புதுமையாக அடுக்கலாம். அத்துடன், புத்தக அலமாரியில் சிறிய விளக்குளைப் பொருத்தினால், அந்த அறையில் அறைக்கலன்களை வைத்துக்கொள்ளவும் பயன்படுத்திகொள்ளலாம்.

 

http://tamil.thehindu.com/society/real-estate/புத்தகங்களை-அடுக்கும்-கலை/article9421261.ece?widget-art=four-all

Share this post


Link to post
Share on other sites

எதை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும்?

sofaa_3105059f.jpg
 
 
 

வீட்டை வடிவமைக்கும்போது எதை முதலில் தேர்ந்தெடுக்கிறோம், அதை எப்படித் தேர்ந்தெடுக்கிறோம் என்பதில்தான் வடிவமைப்பு உத்திகள் அடங்கியிருக்கின்றன. வடிவமைப்பில் செய்யப்படும் பொதுவான சில தவறுகள் இருக்கின்றன. அவற்றைத் தவிர்த்துவிட்டால் வீட்டை வடிவமைத்த பிறகு எந்த மாற்றமும் செய்ய வேண்டிய தேவையிருக்காது. வடிவமைக்கும்போது தவிர்க்கவேண்டிய சில விஷயங்கள்...

வண்ணமா, அறைக்கலன்களா?

நம்மில் பலரும் வடிவமைப்பில் முதலில் தேர்ந்தெடுப்பது வண்ணமாகத்தான் இருக்கும். வீட்டின் தோற்றத்தைத் தீர்மானிப்பதில் சுவர் நிறத்துக்குப் பெரிய பங்கிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், அதற்காக வண்ணத்தைத்தான் முதலில் தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற அவசியமில்லை. மாறாக, வீட்டின் அறைக்கலன்களும், அதற்கான அலங்காரப் பொருட்களையும் (தரை விரிப்புகள், குஷன்கள், திரைச்சீலைகள், அறைக்கலன்களுக்கான துணிவிரிப்புகள்) முதலில் தேர்ந்தெடுத்துவிட்டால் சுவர் வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பது இன்னும் எளிதாகிவிடும். வீட்டுக்கு வண்ணத்தை முதலில் தேர்ந்தெடுத்துவிட்டால், அதே வண்ணத்தில்தான் அறைக்கலன்களையும் தேர்தெடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தை இதன் மூலம் தவிர்க்கலாம்.

அறைக்கலன்களின் அளவு

கடையில் ஓர் அறைக்கலனைப் பார்க்கும்போது அதன் அளவைக் கச்சிதமாகக் கணிப்பது என்பதென்பது இயலாத காரியம். அதனால்தான் வீட்டில் அவற்றைப் பொருத்தியவுடன் அதன் அளவைப் பார்த்து நம்மில் பலரும் அதிர்ச்சியடைகிறோம். அறையின் மொத்த இடத்தையும் அறைக்கலன்களே எடுத்துக்கொண்டன என்று புலம்பாமல் இருக்கவேண்டுமென்றால் அளவெடுத்து வாங்குவதுதான் சரியான தீர்வாக இருக்கும். அதற்காக அளவெடுக்கும் ‘டேப்’புடன் கடைக்குச் செல்ல முடியுமா என்று யோசிக்கிறீர்களா? ஆனால், அப்படிச்செய்வதில் தவறில்லை என்று சொல்கிறார்கள் உள்அலங்கார வடிவமைப்பாளர்கள். வீட்டில் அறைக்கலனுக்கு ஒதுக்கியிருக்கும் இடத்தை அளவெடுத்துச் சென்று, அதற்குப் பொருந்தக்கூடிய அறைக்கலனைத் தேர்ந்தெடுப்பதால் வீட்டில் இடப்பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

ஒரே கடை வேண்டாம்!

வீட்டுக்குத் தேவையான அறைக்கலன்கள் எல்லாவற்றையும் ஒரே கடையில் வாங்குவது இப்போது எளிமையான விஷயமாக இருக்கிறது. ஆனால், இப்படி ஒரே கடையில் வாங்குவதால் சுவாரஸ்யமான அறைக்கலன் வகைகளைப் பலரும் தவறவிட்டுவிடுகிறோம். அதனால், அறைக்கலனை வாங்குவதற்குமுன் குறைந்தபட்சம் இரண்டு கடைகளுக்காவது சென்று பாருங்கள். அத்துடன், இப்போது நவீன வடிவமைப்பிலான அறைக்கலன்கள் ‘ஆன்லைன் ஸ்டோர்’களிலும் கிடைக்கின்றன. அவற்றையும் ஒருமுறை பார்த்துவிட்டுக் கடைக்குச் செல்வது கூடுதல் உதவியாக இருக்கும்.

மொத்தமாக வாங்கலாமா?

ஒரு சோஃபாவை வாங்கும்போது அதனுடன் இருக்கும் நாற்காலிகளையும் சேர்த்து மொத்தமாக வாங்கத் தேவையில்லை. சோஃபாவை வாங்கிவிட்டு அதற்குப் பொருந்தக்கூடிய நாற்காலிகளைத் தனியாக வாங்கலாம். சோஃபா, மேசை, படுக்கை என எல்லாமே ஒரே மாதிரியான வடிவமைப்பில் இருப்பது வீட்டுக்கு ஓர் அயர்ச்சியான தோற்றத்தைக் கொடுப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. அத்துடன், அறைக்கலன்களில் ‘மிக்ஸ் அண்ட் மேட்ச்’(Mix and Match) செய்வதுதான் அப்போதைய போக்கு. இதை நடைமுறைப்படுத்தும்போது ஏதாவது ஓர் இணைப்பு அம்சம் மட்டும் இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது. அது வண்ணம், வடிவமைப்பு என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

துணிச்சலான தேர்வுகள்

வடிவமைப்பு என்று வரும்போது முற்றிலும் புதுமையான அலங்காரங்களைத் தேர்வுசெய்வதில் சிலருக்குத் தயக்கம் இருக்கலாம். உண்மையில், இப்படிப்பட்ட புதுமையான, துணிச்சலான அலங்காரத்தைத் தேர்ந்தெடுக்கும்போது வீட்டை அது உயிர்ப்புடன் மாற்றிவிடுகிறது. உதாரணத்துக்கு, ஒரு துணிச்சலான (கண்ணைக் கவரும் வண்ணங்கள்) சுவர் அலங்காரத்தைச் செய்யும்போது அதை மட்டுப்படுத்த நினைத்தால் அறைக்கலன்களை மென்மையான நிறங்களில் தேர்ந்தெடுக்கலாம்.

 

http://tamil.thehindu.com/society/real-estate/எதை-முதலில்-தேர்ந்தெடுக்க-வேண்டும்/article9432248.ece?widget-art=four-all

Share this post


Link to post
Share on other sites

புகழ் பெற்ற அறைக்கலன் மாதிரிகள்

table_3111294f.jpg

வீட்டுக்கு அழகு சேர்ப்பதில் அறைக்கலன்களுக்கு (Furnitures) முக்கியப் பங்குண்டு. ஆரம்ப காலத்தில் அறைக்கலன்கள் என்பது செல்வந்தர்கள் வீடுகளை மட்டுமே அலங்கரித்து வந்தன. இன்று பரவலாக எல்லாத் தரப்பு மக்களும் அறைக்கலன்களைப் பயன்படுத்திவருகிறார்கள். இதற்குக் காரணம் புதிய தொழில்நுட்பம். மரத்தைக் கொண்டு மட்டும்தான் முதலில் அறைக்கலன்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. புதிய அறிவியல் வளர்ச்சியால் இன்றைக்கு பிளாஸ்டிக், இரும்பு போன்ற பொருள்களைக் கொண்டும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த அறைக்கலன்கள் வடிவமைப்பில் புதுமையை உண்டாக்கிய உலக முன்னோடிகள் குறித்து அவர்கள் கண்டுபிடித்த மாதிரி அறைக்கலனுடன் சிறு அறிமுகம்:

edward_3111302a.jpg

எட்வார்ட் வாம்லி (1907-1995), அமெரிக்காவைச் சேர்ந்த இவர், உலகின் மிகப் பிரபலமான உள் அலங்கார வடிவமைப்பாளராகத் திகழ்ந்துள்ளார். இவர் அறைக்கலன்கள் வடிவமைப்பிலும் பல புதுமைகளைக் கொண்டுவந்தார். டன்பார் என்னும் அறைக்கலன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இது இவர் வடிவமைத்த அறைக்கலன் மாதிரி.

 

greatta_3111299a.jpg

கிரெட்டா கிராஸ்மேன் (1906-1999), சுவீடனைச் சேர்ந்த இவர், இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் சுவீடனிலிருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் நகருக்கு இடம்பெயர்ந்தார். சுவீடனில் இருக்கும்போதே அறைக்கலன் வடிவமைப்பில் பயிற்சி பெற்றிருந்தார். சிறந்த அறைக்கலன் வடிவமைப்புக்கான விருதுகளும் பெற்றிருந்தார். அதனால் அமெரிக்காவில் லாஸேஞ்சல் நகரத்தில் அறைக்கலன் வடிவமைப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். அவர் அறைக்கலன் மட்டுமல்லாது விளக்குகள் வடிவமைப்பிலும் கவனம் செலுத்தினார். அவர் வடிவமைத்த விளக்கு மாதிரிகள் இன்று உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

 

forge_3111301a.jpg

போர்ஜ் மோஜென்சன் (1914-1972), டென்மார்க்கைச் சேர்ந்த வடிவமைப்பாளரான இவர், அந்நாட்டின் தனித்துவமான கலாச்சாரத்தைத் தனது அறைக்கலன் வடிவமைப்பில் செலுத்தினார். தான் வடிவமைத்த அறைக்கலன்களுக்கான கண்காட்சியை இங்கிலாந்து, ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்டப் பல நாடுகளில் நடத்தியுள்ளார். இவர் வடிவமைத்த ஸ்பானிய இருக்கை உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் அறைக்கலன் மாதிரி.

 

arn_3111303a.jpg

ஆர்ன் ஜேக்கப்சன் (1902-1971), டென்மார்க்கைச் சேர்ந்த இவர், இருக்கை வடிவமைப்பில் உலகப் புகழ் பெற்றவர். முட்டை வடிவ இருக்கை, அன்னப் பறவை இருக்கை இவ்விரண்டு இருக்கை மாதிரிகளின் அவருக்கு மிகப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தன.

 

isamu_3111298a.jpg

இசமூ நொகுச்சி (1904-1988), அமெரிக்க வாழ் ஜப்பானியரான இவர் அமெரிக்காவின் நவீன அறைக்கலன் வடிவமைப்பாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர். இவரது தந்தை ஜப்பானியக் கவிஞர். இவர் ஒரு சிற்பியும்கூட. இது இவர் வடிவமைத்த அறைக்கலன் மாதிரி.

 

olver_3111296a.jpg

ஆல்வர் ஆல்டோ (1898-1976), பின்லாந்தைச் சேர்ந்த இவர், மிகப் புகழ்பெற்ற கட்டிட வடிவமைப்பாளரும்கூட. அமெரிக்க ராயல் இன்ஸ்டியூட், இங்கிலாந்து ராயல் இன்ஸ்டியூட் ஆகிய அமைப்புகளிடமிருந்து கட்டிட வடிவமைப்புக்காக விருதுகள் பெற்றுள்ளார்.

 

marsel_3111297a.jpg

மார்செல் ப்ரூயர் (1902-1981), ஹங்கேரியைச் சேர்ந்த கட்டிட, அறைக்கலன் வடிவமைப்பாளர். இரும்புக் கம்பிகளையும் துணியையும் கொண்டு இவர் உருவாக்கி வாசிலி இருக்கை மாதிரி உலகப் புகழ்பெற்றது. அமெரிக்காவின் புரூக்ளின் அருங்காட்சியகத்தில் இவர் வடிவமைத்த அறைக்கலன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

 

george_3111300a.jpg

ஜார்ஜ் நகஷிமா (1905-1990), அமெரிக்க வாழ் சீனரான இவர் கட்டிடவியலில் பட்டம் பெற்றவர். பாண்டிச்சேரி ஆஸ்ரமத்தில் குடில் கட்டும் ஆணை அவருக்குக் கிடைத்தது. அங்குதான் நகஷிமா முதன் முதலாக அறைக்கலன் ஒன்றை வடிவமைத்தார். அதற்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து அமெரிக்கா திரும்பியவர், அறைக்கலன்கள் வடிவமைப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

 

sam_3111295a.jpg

சாம் மலூஃப் (1916-2009), அமெரிக்காவைச் சேர்ந்த அறைக்கலன் வடிவமைப்பாளர். படைப்புத் திறனுக்காக வழங்கப்படும் மேக் ஆர்தர் ஃபெல்லோஷ்பை தனது அறைக்கலனுக்காகப் பெற்றுள்ளார். இவரது வடிவமைத்த அறைக்கலன்கள் அமெரிக்காவின் கண்காட்சியகங்கள் பலவற்றிலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

 

http://tamil.thehindu.com/society/real-estate/புகழ்-பெற்ற-அறைக்கலன்-மாதிரிகள்/article9452878.ece?widget-art=four-all

Share this post


Link to post
Share on other sites

நாற்காலிகளில் பல வகை

stool_3111307f.jpg
 
 
 

ஒரு நபர் அமரக் கூடிய வகையிலான இருக்கை ஆங்கிலத்தில் ஸ்டூல் என அழைக்கப்படுகிறது. இந்தப் பெயரில்தான் தமிழ்நாட்டிலும் புழக்கத்தில் உள்ளது. மரத்தால் ஆன அறைக்கலன்களில் இதுதான் மிகப் பழமையானது எனச் சொல்லப்படுகிறது. இது நான்கு கால்களாகவும் தயாரிக்கப்படுகிறது. மூன்று கால்களிலும் தயாரிக்கப்படுகிறது. மேலும் மரம் மட்டுமல்லாது, பிளாஸ்டிக், இரும்பு, அக்ரலிக் போன்று பல பொருள்களைக் கொண்டு இன்று ஸ்டூல் தயாரிக்கப்படுகிறது. அவற்றின் வடிவமைப்பு, மூலப் பொருள், பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையிலான சில ஸ்டூல் வகைகள்:

 

கருப்பொருள் ஸ்டூல்

karu_stool_3111310a.jpg

இந்த வகை ஒரு கருப்பொருள் அடிப்படையில் தயாரிக்கப்படும் ஸ்டூல். உதாரணமாக மரத்தின் உடல், மிக்கி மவுஸ், ஆமை போன்ற உருவமைப்பை ஒத்து இந்த ஸ்டூல் வடிவமைப்பட்டிருக்கும்..

 

மோடா ஸ்டூல்

mota_3111308a.jpg

மூங்கில் கம்புகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் ஸ்டூல் இது. இது பெரும்பாலும் வரவேற்பறை அல்லது பால்கனிக்கு ஏற்றது.

 

மதுபான விடுதி ஸ்டூல்

bar_3111312a.jpg

மதுபான விடுதிகளில் பயன்படும் இந்த ஸ்டூல் வகை பெரும்பாலும் இரும்பால் செய்யப்படுகிறது. ஒரே கால் கொண்டு உருவாக்கப்படும் இந்த ஸ்டூல் சுழலக்கூடிய தன்மை கொண்டது. மருத்துவமனைகளில் நோயாளிகளின் இருக்கையாகவும் இது பயன்படுகிறது.

 

மடிக்கக்கூடிய ஸ்டூல்

foldable_3111311a.jpg

இந்த வகை ஸ்டூல் மரம், இரும்பு போன்ற பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. வரவேற்பறைக்கு ஏற்றது சிறிய இடமுள்ள வீடுகளுக்கு இந்த வகை ஸ்டூல் ஏதுவாக இருக்கும்.

 

காலில்லா ஸ்டூல்

legless_3111309a.jpg

முழுவதும் செவ்வக வடிவில் கால்கள் இல்லாமல் வடிவமைக்கப்பட்டிருக்கும் இது மரம், இரும்பு, தோள் எனப் பல வகைப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

 

மரபான ஸ்டூல்

wood_3111306a.jpg

இது மரத்தால் நான் கால்களால் தயாரிக்கப்படும் ஸ்டூல் வகை. இந்த வகை உலகம் முழுவதும் பரவலான பயன்பாட்டில் உள்ளது.

 

http://tamil.thehindu.com/society/real-estate/நாற்காலிகளில்-பல-வகை/article9452895.ece?widget-art=four-all

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this