Jump to content

கரும்புலி லெப்.கேணல் போர்க் உட்பட போராளிகளின் வீரவணக்கநாள்.


Recommended Posts

கரும்புலி லெப்.கேணல் போர்க் உட்பட போராளிகளின் வீரவணக்கநாள்.

நவம்பர் 23, 2013 | வீரவணக்க நாள்.   

Karumpuli-Lep.Kenal-Pork-600x337.jpg

கரும்புலி லெப்.கேணல் போர்க் மற்றும் லெப் கேணல் மாறன், கப்டன் கஜன் உட்பட 54 போராளிகளின் வீரவணக்கக் நாள் இன்றாகும்.

|| தாய்மண்ணின் விடியலுக்காக புயலான தேசத்தின்புயல்…

மாங்குளத்தில் 23.11.1990 அன்று சிறிலங்கா இராணுவப் படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் முகாமை தகர்த்து வெற்றிக்கு வித்திட்டு புயலான கரும்புலி லெப்.கேணல் போர்க்கின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

Karumpuli-Lep.Kenal-Por-600x849.jpg

கரும்புலி லெப் கேணல் போர்க் அவர்களின் தாக்குதல் திட்டம் பற்றி பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் ….

Karumpuli-Lep-Kenal-Pork-600x401.jpg

தாய்மண்ணின் விடியலுக்காக புயலான தேசத்தின்புயல் நினைவாக அதே தாக்குதல் நடந்த திடலில்  மாமனிதர் நாவண்ணனால் வடிக்கப்பட்ட கரும்புலி லெப். கேணல் போர் அவர்களின் நினைவுத் தூபம் நிறுவப்பட்டது தற்சமய சிங்கள ஆக்கிரமிப்பால் அடித்து உடைத்து அழிக்கப்பட்டு உள்ளது.

http://thesakkaatu.com/doc12046.html

கரும்புலி லெப் கேணல் போர்க்

நவம்பர் 23, 2013 | உயிராயுதங்கள்.   

Karumpuli-Lep.Kenal-Pork-600x337.jpg

“நான் புறப்படுகின்றேன்….  இதோட மாங்குளம் முகாம் முடிஞ்சுது ” : கரும்புலி லெப் கேணல் போர்க்

வன்னிப் பிராந்தியத்தின் மையத்தில் அதன் இருதயத்தில் மாங்குளம் சிங்களப்படை முகாம் இருந்தது. அது அங்கு பல அட்டூழியங்களைச் செய்து வந்தது.

இரண்டாவது ஈழப்போர் தொடங்கிய நாட்களிலிருந்து இம்முகாம் விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டிருந்தது. எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ள இப்படை முகாம் மீது தாக்குவதற்கான திட்டம் தயாரிக்கப்படுகிறது. அப்படை முகாம்மீது கரும்புலித் தாக்குதல் நடத்தி அம்முகாமைக் கைப்பற்றுவது என்று தீர்மானிக்கப்படுகிறது. இத்தாக்குதலை தலைமைதங்கி வழிநடத்திய தளபதி பால்ராஜ் சொல்லும்போது. “நாங்கள் இம்முகாம் தாக்குதலுக்கான திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருந்தோம். அப்பொழுது மாங்குளம் முகாமைப்பற்றி எனக்குத்தான் அதிகம் தெரியும். எனவே நான்தான் சக்கை லொறி கொண்டு போகவேணும் என போர்க் சொன்னான்.

Karumpuli-Lep-Kenal-Pork-600x401.jpg

அந்தக் குரலில் உறுதி தெரிந்தது”போர்க் போராட்டத்திற்குப் புதியவரல்ல. அவர் மாவட்டப் பொறுப்பாளராக இருந்தவர். பல தாக்குதல்களை முன் நின்று வழிநடத்தியவர்”. தளபதி பால்ராஜ் மேலும் தொடர்கையில் “1990ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் நாள் அண்டைக்குத்தான் போர்க் கரும்புலியாய்ப் போனவர். புறப்படமுன் கடைசியாக என்னைக் கட்டியணைச்சு, “நான் புறப்படுறன் இதோட மாங்குளம் முகாம் முடிஞ்சுது” என்று சொல்லிப்போட்டு, வெடிமருந்து வாகனத்தை ஓட்டிச் சென்றார். கொஞ்ச நேரத்தில் பெரிய வெடிச்சத்தம் கேட்டுது. முகாம் தகர்ந்தது பிறகு சில மணி நேரத்தில்”முகாம் கைப்பற்றப்பட்டது” என்றார்.

கரும்புலி லெப் கேணல் போர்க் அவர்களின் தாக்குதல் திட்டம் பற்றி பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் ….

இந்தத் தாக்குதலுக்குச் சில நாட்களுக்கு முன்பு, போர்க் அண்ணை விடுமுறையில் வீட்டுக்குச் சென்றார்.

அவரது கிராமம் சிங்கள எல்லையில் அமைந்துள்ளது. அது வன்னியிலுள்ள சேமமடு. சிறு வயது தொட்டு நடந்து திரிந்த, அக்கிராமத்தில் குளம், வயல், காடு என்று ஒவ்வொன்றையும் சுற்றி ரசித்தார். இல்லை அவற்றிடமிருந்து விடைபெற்றார். அந்த நாட்களில் ஒரு நாள் பக்கத்து வீட்டுச் சிறுவர்கள் மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவ்விடத்திற்குச் சென்று ஓர் மரக்குற்றியில் அமர்ந்தவாறு போர்க் அண்ணை கேட்டார்.

“தம்பியவை, மாவீரர்நாள் வருதெல்லோ? தற்செயலா நான் செத்துப்போனா அண்டைக்கு என்ன செய்வியள்?” ‘ஏன் சாகப் போறியளோ’ பதில் கூறினர் பிள்ளைகள். போர்க் அண்ணையும் சிரித்தபடி “தப்பித்தவறி நான் செத்துப்போனா என்ர நினைவா ஆளுக்கொரு மரம் நட்டு வளவுங்கோ என்ன”

அவர்கள் சிரித்தனர், போர்க் அண்ணையும் சேர்ந்து சிரித்தார். வீட்டிலிருந்து புறப்படும் இறுதி நாள் வந்தது. மதியம் உணவருந்திவிட்டு விறாந்தையில் பாயைப் போட்டுப்படுத்தார். சற்றுத்தள்ளி போர்க் அண்ணையின் அம்மாவும் படுப்பதற்காக, தரையில் பாயைப் போட்டார். “அம்மா இதில வந்து, எனக்குப் பக்கத்தில பாயைப் போடணை” போர்க்கண்ணை கேட்டார். அம்மாவும் வந்து அவரின் தலையை வருடியவாறு இருந்தார்.

அன்று பின்னேரம் அப்பா, அண்ணன்மார், தம்பிமார், அன்புத் தங்கை என்று எல்லோரிடமும் விடைபெறுகிறார்.

கடைசியாக தாயாரிடம் வந்து, “அம்மா எனக்கு உங்கட கையால ஒரு பொட்டு வைச்சுவிடுங்கோவன் ஆசையாயிருக்கு” என சாதாரணமாகக் கேட்டார். ஏதுமறியாத தாயுள்ளம் பிள்ளையின் விருப்பப்படி பொட்டிட்டு மகிழ்ந்தது. இவ்விதம் சிறுபிள்ளை போல் அவர் நடப்பது வழக்கம் எனத் தாயாரும் கூறினார்.

சிரித்தபடியே விடைபெற்றவர், வீட்டுப் படலையில் நின்று ஒரு கணம் திரும்பிப் பார்த்தார். பின் போய்விட்டார்.

சிறிது நேரத்தின் பின்

தம்பி சாரத்தையும் ரீசேட்டையும் விட்டுட்டுப் போட்டானணை” என்று போர்க் அண்ணையின் சகோதரன் அவசரமாகக் குரல் கொடுத்தார்.

Karumpuli-Lep.Kenal-Por-600x849.jpg

பழசாக்கும், அதுதான் விட்டிட்டுப் போட்டான் போலக்கிடக்கு என்றார் அம்மா. இன்று போர்க் அண்ணையின் அம்மா சொல்கின்றார். “தம்பி அவன் அண்டைக்கு வித்தியாசமா நடந்ததை என்னால புரிஞ்சுகொள்ள முடியேல்லை. ஆனால் கரும்புலியாச் செத்த பிறகுதான், அவன் தன் பக்கத்தில படுக்கச்சொன்னது பொட்டு வைக்கச் சொன்னது உடுப்புகளை விட்டிட்டுப் போனது ஏனெண்டு விளங்குது” போர்க் அண்ணனின் அம்மாவின் நா தழு தழுத்தது.

- உயிராயுததிலிருந்து ….

 

http://thesakkaatu.com/doc1628.html

” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.