Jump to content

கறுப்பு ஜூலையின் 30ம் ஆண்டு நினைவேந்தல்


Recommended Posts

black_july-600x197.jpg

தமிழர் இனவழிப்பு  கறுப்பு ஜூலையின் 30ம் ஆண்டு நினைவில் தமிழீழ தேசம்

 

தமிழர் தாயகத்திலும் – தன் தேசத்திலும் வாழ்ந்த தமிழர்கள் மீது  1983ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் திகதி சிங்கள பேரினாவாத அரசினால்  தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவாய் தமிழர்களில் நெஞ்சங்களில் ஆறாத துயராமாய் உறவுகளின் மீள்நினைவுகளுடன் நெஞ்சம் உறைந்து உயிர் கரைகிறது.

 

இலங்கைத்தீவில் இரு இனங்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்று இந்த உலகம் புரிந்திராத, அறிந்திராத காலத்தே பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால், தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தி முடிக்கப்பட்ட கொடூரமான காட்டுமிராண்டித்தனமான இனச்சங்காரமே கறுப்பு யூலை.

சிங்கள ஆட்சிபீடத்தின், நன்கு திட்டமிட்ட நடவடிக்கையாக, அரங்கேற்றப்பட்ட இந்தக் கொடுமைக்கு பல்லாயிரம் தமிழர்கள் பலியாக்கப்பட்டனர்.

 

கறுப்பு ஜூலை நினைவில்….

 

தமது கடுமையான உழைப்பால் தமிழர்கள் சேர்த்துவைத்த வளங்களை, செல்வங்களை, சொத்துக்களை, சிங்களக் காடையர்கள் கொள்ளையிட்டனர். தீவைத்து மகிழ்ந்தனர். தமிழ்மக்களின் பொருளாதார வளம் முற்றாக அழிக்கப்பட்டது.

 

சொத்துக்களையும் சொந்தங்களையும் இழந்து, தென்பகுதியில் இருந்தும், மலையகப் பகுதிகளில் இருந்தும் தமிழர்கள், தமது தாயகம் நோக்கி அகதிகளாக விரட்டப்பட்டனர்.

 

எமக்கென்றோர் தாயகம் உண்டென்ற உண்மை வெளிப்பட்ட தருணம் அது. துன்பதுயரங்களுடன், உடல்காயங்களுடனும் மனக்காயங்களுடனும் வந்த தனது மக்களை, தமிழர் தாயகம், வரவேற்று மருந்திட்டது, உணவிட்டது. ஆதரவாய்த் தாங்கியது.

 

பல்லாயிரக்கணக்கானோர், இலங்கைத் தீவைவிட்டு, இந்தியாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் அகதிகளாக வெளியேறினர்.

 

வெலிக்கடைச் சிறையில் சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் ஐம்பத்திமூன்று பேர், சிறைச்சாலைக்குள் வைத்து இரண்டு கட்டங்களாக, மிருகத்தனமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டனர்.

 

தமிழ் மக்களுக்கெதிரான இந்த வன்முறை வெறியாட்டத்திற்கு வித்திட்டுவிட்டு, வேடிக்கை பார்த்த சிங்கள அரசு, சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களின் சுயாதீனமான நீதி விசாரணைக் கோரிக்கைகளை முற்றாக நிராகரித்தது.

மாறாக, வெலிக்கடைச் சிறையிலும், ஏனைய பகுதிகளிலும், இனப்படுகொலையை முன்னின்று நடத்திய சிங்களக் காடையர்களுக்கு, வீடுகள், வசதிகள் வழங்கி, தமிழர் தாயகப் பகுதியில் குடியேற்றியது சிங்கள அரசு.

 

இருபத்தெட்டு ஆண்டுகளுக்குமுன், தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கறுப்பு யூலைக் கொடுமைகளை தட்டிக்கேட்க மறந்த, சர்வதேச சமூகத்தின் பொறுப்பற்ற போக்கே, இன்று பன்மடங்கு கொடூரத்தை, கொடுமையை எம்மினம் முள்ளிவாய்க்காலில் அனுபவிக்க நேர்ந்தது.

 

எண்பத்தி மூன்றாம் ஆண்டு, ஆடிக் கொடுமையைத் தொடர்ந்து, சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இலங்கையில் இதுபோன்ற காட்டு மிராண்டிச் செயல்கள் மீண்டும் ஏற்படாதிருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.

 

ஆனால், இன்று, முள்ளிவாய்க்காலை வெறிகொண்டு நடத்திமுடித்திருக்கும் சிங்கள இனவெறி அரசு, இந்தியாவின் யுத்தத்தையே தாம் நடத்திமுடித்திருப்பதாக உரிமையோடு பெருமை பேசுகின்றது.

கறுப்பு யூலையுடன் சிங்களப் பேரினவாதக் கொடுமைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளியை சர்சதேச சமூகம் இட்டிருந்தால், தமிழர்களுக்கு எதிரான கட்டற்ற வெறித்தனத்தை சிங்களம் முள்ளிவாய்க்கால்வரை தொடர்ந்திருக்காது.

 

இன்று சிங்கள அரசு, தனது திட்டத்தின் அடுத்த கட்டம் நோக்கி நகர ஆரம்பித்திருக்கின்றது. தமிழர் தாயகத்தை முற்றாக ஆக்கிரமித்து, தமிழ் இனத்தை முற்றாக, சிங்களத்துள் கரையவைக்கின்ற திட்டத்துடன் அது தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

 

இராணுவ முற்றுகைக்குள் தமிழர் தாயகத்தை வைத்தபடி, தமிழ் மக்களின் மொழி, கலை, பண்பாட்டு விழுமியங்களில் கைவைத்துள்ளது சிங்களஅரசு. பௌத்த மதத்திணிப்பை தீவிரமாய் மேற்கொண்டுள்ளது. சிங்களக் குடியேற்றங்களைத் தாராளமாய் மேற்கொண்டுவருகின்றது.

 

கறுப்பு யூலைகள் மீண்டும் இடம்பெறாமலும், முள்ளிவாய்க்கால்கள் தொடராமலும், தமிழர் தாயகத்தில், தமிழினம், தன் அடையாளங்களுடன், சுதந்திரமாக வாழுகின்ற ஒரு நிலைமையை உருவாக்கின்ற ஒரு காலமாக இக்காலம் அமைய புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் தீவிரமாய் உழைக்கவேண்டிய காலம் இது.

 

தமிழ்மக்கள் மீதான இனஅழிப்புக்கொடுமைகள், சர்வதேச சமூகத்தால், இயல்பாகத் தட்டிக்கேட்கப்படமாட்டாது என்பதும், தடுத்துநிறுத்தப்படமாட்டாது என்பதும் கசப்பான வரலாற்று உண்மையாகும்.

 

சர்வதேச சமூகத்தை எம்பால் திரும்பிப்பார்க்கவைப்பதும், செயற்பாடுகள் நோக்கி அதனை நகரவைப்பதும் புலம் பெயர்ந்துவாழும் தமிழ் மக்களின் தலையாய கடமையாகும்.

 

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள், தமிழர் அமைப்புக்களின் முழுமையான கவனமும், செயற்பாடுகளும் தாயக மக்களின் பால் திரும்பட்டும்.

 

ஒற்றுமையுடன் பரஸ்பர ஒத்துழைப்புடன், எங்கள் தாயக மக்களுக்களின் விடுதலை வாழ்விற்காக பணியாற்றுவதென்ற உள்ளார்ந்த உறுதிமொழிகளை, கறுப்பு யூலைக் கனத்த நினைவுகளுடன் மனங்களில் ஏற்றுக்கொள்வோம்.

 

|| தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ||

Link to comment
Share on other sites

கறுப்பு ஜூலை: காய்ந்து போன ரத்தம் _ ரவிக்குமார்

 
july+1.jpg

( 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஜூனியர் விகடனில் நான் எழுதிய கட்டுரை இது. கறுப்பு ஜூலையின் நினைவாக இங்கே வெளியிடுகிறேன். ஈழத்தில் நடந்த கொடுமைகளின் வரலாறு மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தப்பட வேண்டும். அப்போதுதான் அந்த மக்களின் போராட்டங்கள் சரியாக நமக்குப் புரியும் )

இருபத்தைந்து ஆண்டுகள் முடிந்து விட்டன. இதற்கிடையே பூமிப்பந்தில் எவ்வளவோ மாற்றங்கள். ஆட்சிகளில் மாற்றம், நாடுகளின் எல்கைளில் மாற்றம், உணவில், உடையில், பண்பாட்டில் மாற்றம்... ஆனால் மாறாமல் தொடர்கிறது அந்தக் கதறலும், கண்ணீரும். இலங்கை வீதிகளை நிரைத்த அந்த ஓலக்குரல்கள் நமது காற்றில் கலந்து பேரோசையாய்ப் பெருகுகிறது. இருபத்தைந்து ஆண்டுகள். கறுப்பு ஜூலை என வர்ணிக்கப்படும் அந்த இனப்படுகொலை நடந்து இருபத்தைந்து ஆண்டுகள்.

வாகனங்களில் சென்ற தமிழர்களை வழிமறித்து உயிரோடு எரித்துக் கொன்று நடனமாடிய சம்பவங்கள் நடந்து இருபத்தைந்து ஆண்டுகள். வாக்காளர் பட்டியலை வைத்து தமிழர்களை அடையாளம் கண்டு வீடுகளிலிருந்து இழுத்தெறிந்து வெட்டித் துண்டாடிய காட்சிகள் நிகழ்ந்து இருபத்தைந்து ஆண்டுகள். கடைகளில் தமிழனின் கறி கிடைக்கும் என பலகையில் எழுதி வைத்து எக்காளமிட்ட கோரங்கள் நிகழ்ந்து இருபத்தைந்து ஆண்டுகள். எல்லாவற்றுக்கும் விழா எடுத்துக் கொண்டாடும் தமிழர்கள் இதையும் கூட வெள்ளி விழாவாகக் கொண்டாடி மகிழலாம்.

உள்ளூர் களேபரத்தில் நாம் கொஞ்ச காலமாக இலங்கையை மறந்து விட்டோம். சிங்களக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர்களை எண்ணிக் கசிந்து கண்ணீர் விட்ட நேரத்திலும் கூட தமிழர்களைப் பற்றிப் பேசாமல் தவிர்த்துவிட்டோம். ‘முன் ஜாக்கிரதை முத்தண்ணாக்களான’ நாம் ஈழப்பிரச்சனையில் எளிதில் சிக்கிக் கொள்வோமா என்ன?

‘‘சார்க்’’ மாநாட்டுக்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறது இலங்கை. ‘‘உலக நாடுகளுடனும் எமது பிராந்திய அயல் நாடுகளுடனும் நட்புறவை வளர்த்துக் கொள்ளவே நாம் என்றும் விரும்புகின்றாம். இதற்கான புறநிலைகளை உருவாக்கி ஒரு நட்புறவுப் பாலத்தை கட்டியெழுப்புவதிலும் இதய சுத்தியோடு இருக்கின்றோம். தமிழீழ தேசத்தினதும், தமிழீழ மக்களினதும் நலலெண்ணத்தை வெளிப்படுத்தி பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துவிட விரும்புகின்றோம். இந்த நல்லெண்ண நடவடிக்கையாக சார்க் மாநாடு நடைபெறுவதையிட்டு ஜூலை 26 முதல் ஆகஸ்டு 4 வரையான காலப்பகுதியை இராணுவ நடவடிக்கைகள் அற்ற அமைதி நாட்களாகக் காத்து, ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்தத்தைக் கடைப்படித்து, மாநாடு வெற்றி பெற ஒத்துழைப்போம்’’ என புலிகள் இயக்கம் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்தச் சூழலில் தான் இலங்கையில் 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதி நடைபெற்ற இனப்படுகொலையை நாம் நினைவு கூர்கிறோம். ‘‘நெருப்பையும், குருதியையும், அவலக் குரலையும் ஒன்றாகக் கேட்கும்போது வன்முறையின் சித்திரம் அல்லது கலவரம் ஒன்றின் தோற்றம் எப்போதும் மனதில் விரிகிறது... எரிந்து கொண்டிருக்கும் இந்த நெருப்பு எப்போதுதான் அணையப்போகிறது?’’ என்ற ஈழத்து எழுத்தாளர் கருணாகரனின் கேள்வியை நாமும் பகிர்ந்து கொள்கிறோம்.

எப்படி நடந்தது இந்த வன்முறை? 1983 ஜூலை 23ஆம் தேதி மாலை யாழ்பாணத்துக்கு வெளியே நாணுவ ஜீப் ஒன்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. அந்த ஜீப்புக்கு பின்னால் வந்த ராணுவ டிரக்கிலிருந்து வீரர்கள் இறங்கி ஓடி வருகிறார்கள். நாலாபுறமிருந்தும் அவர்கள் தாக்கப்படுகிறார்கள். எந்திரத் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள். தாக்குதலின் முடிவில் பதினைந்து சிப்பாய்களின் சடலங்கள் இரைந்து கிடக்கின்றன. கொல்லப்பட்ட சிப்பாய்கள் அனைவரும் சிங்களவர்கள். அவர்களைக் கொன்றதோ தமிழர்களின் விடுதலைப்புலிகள்.

கொல்லப்பட்ட சிப்பாய்களின் உடல்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பினால் கலவரம் வெடிக்கக்கூடும் என அஞ்சிய இலங்கை அரசாங்கம் அவர்கள் எல்லோரது உடல்களையும் கொழும்புவில் அடக்கம் செய்வதென்று முடிவு செய்தது. ஜூலை 24ஆம் தேதி கொழும்புவில் சிப்பாய்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படும்போது அங்கே கூடிய சிங்களவர்களின் கும்பல் கொழும்பு நகருக்குள் புகுந்து தமிழர்களின் வீடுகளைத் தேடி கண்டுபிடித்துத் தாக்கத் தொடங்கியது. தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானார்கள். வீட்டிலிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. வீடுகள் எரிக்கப்பட்டன. தமிழ் மக்களில் பலர் தப்பித்து ஓடி இரக்கமுள்ள சிங்களவர்கள் சிலரின் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தைப் பிறப்பித்தபோதிலும் கலவரம் அடங்குவதாக இல்லை.

july+2.jpg

கொழும்புவில் ஆரம்பித்த கலவரம் தமிழர்கள் வசித்த கண்டி, மாத்தளை, நாவல்பிட்டியா, பாதுல்லா, நுவாரா எலியா முதலான பகுதிகளுக்கும் பரவியது. சிங்களவர்கள் வாழ்ந்த பகுதிகளில் குடியிருந்த தமிழர்களே அதிகம் பாதிப்புக்கு ஆளானார்கள். இதுகுறித்து ஆர்.சம்பந்தன் எழுதியிருப்பது நமக்கு நல்ல விளக்கமாக இருக்கிறது. ‘‘இந்த வன்முறையின் போது குறிப்பிட்ட ஒரு தந்திரத்தை சிங்களவர்கள் கையாண்டார்கள். முதலில் இலங்கை ராணுவத்தினர் தமிழர் வாழும் பகுதிக்குள் வருவார்கள். அங்கே ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தங்களுக்கு தகவல் கிடைத்திருப்பதாகச் சொல்லி தேடுதல் வேட்டையில் ஈடுபடுவார்கள். தமிழர்களை ஆபாசமாகப் பேசி அச்சுறுத்தி களேபரம் செய்வார்கள். அங்கிருக்கும் இளைஞர்களை விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பிடித்துப் போவார்கள். அவர்கள் போன சிறிது நேரத்தில் அங்கே சிங்களவர்களின் கும்பல் நுழையும். தமிழர்களின் வீடுகளைக் கொள்ளையடிக்கும். அதன்பிறகு வீடுகளுக்கு தீ மூட்டும். ராணுவத்தினரின் தேடுதல் வேட்டையும், தமிழ் இளைஞர்களை அவர்கள் பிடித்துச் செல்வதும் அதன்பிறகு வருகின்ற சிங்களவர்களின் கும்பலுக்கு உதவத்தான்.’’ தங்களை தற்காத்துக்கொள்ள எதுவுமற்ற நிலையில் தமிழர்கள் சிங்களவர்களிடம் சிக்கிக் கொண்டு உயிரிழந்தனர் என்று அதை வர்ணிக்கிறார் சம்பந்தன்.

முதலில் அரசாங்க அலுவலகங்களைக் குறி வைத்துத்தான் வன்முறை ஏவப்பட்டது. அதன்பிறகு தான் அது தமிழர்களுக்கு எதிரானதாக மாறியது. தெருச்சந்திகளில் கையில் பெட்ரோல் கேன்களோடு வாகனங்களை வழி மறித்த கும்பல் டிரைவரும், வாகனத்தில் பயணம் செய்பவரும் தமிழரா என்று விசாரித்து அவர்கள் தமிழர்கள் எனத் தெரிந்தால் பெட்ரோலை ஊற்றி உயிரோடு கொளுத்தியது. அப்படியொரு சம்பவத்தை சிங்களக் கவிஞர் பாஸில் ஃபெர்னாண்டோ கவிதையொன்றில் இப்படி விவரிக்கிறார்.

Black_July_3.jpg

ஜூலை 1983: மேலும் ஒரு சம்பவம்

இறந்தவர்களைப் புதைப்பது

ஒரு கலையாகவே வளர்ந்திருந்த எமது காலத்தில்

இந்த நிகழ்வு மட்டும் அழிய மறுத்து எஞ்சியிருப்பதற்குக்

காரணம் ஏதுமில்லை

சத்தியமாகச் சொல்கிறேன்:

நான் உணர்ச்சிபூர்வமானவன் அல்லன்

சித்தம் குழம்பியவனாகவும் ஒதுபோதும் இருந்ததில்லை

உங்களைப் போலவே

நானும் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தயங்குபவன்

அன்றாட வாழ்க்கையிலும்

நான் ஒரு யதார்த்தவாதி

எச்சரிக்கை உணர்வுள்ளவனும்கூட

மறந்துவிடு என்று அரசு ஆணையிட்டால்

உடனடியாக மறந்து விடுகிறேன்

மறப்பதில் எனக்கிருக்கும் திறமை பற்றி எவருக்குமே ஐயமிருந்ததில்லை

என்னை ஒருவரும் குறை சொன்னதும் கிடையாது

எனினும் அந்தக் கும்பல் அந்தக் காரை

எப்படித் தடுத்து நிறுத்தியது என்பதை

இப்போதும் நான் நினைத்துப் பார்க்கிறேன்

காருக்குள் நாலுபேர்

பெற்றோர், நாலு அல்லது ஐந்து வயதில்

ஆணும் பெண்ணுமாய் இரு குழந்தைகள்

ஏனைய கார்களை எப்படி தடுத்து நிறுத்தினரோ

அப்படித்தான் அந்தக் காரையும் தடுத்து நிறுத்தினார்கள்

எந்த வேறுபாடும் இல்லை.

குதூகலம் கொப்பளிக்கின்ற மனநிலையில்

ஒரு சில கேள்விகள்

செய்வதைப் பிழையறச் செய்யவிரும்பும் கவனமாய் இருக்கலாம்

பிறகு செயலில் இறங்கினர் வழமைபோல

பெட்ரோல் ஊற்றுவது, பற்ற வைப்பது போன்ற விஷயங்கள்

ஆனால், திடீரென்று யாரோ ஒருவன்

கதவுகளைத் திறந்தான்.

அழுது அடம்பிடித்துப் பெற்றோரை விட்டு விலக மறுத்த

இரண்டு குழந்தைகளையும் வெளியே இழுத்தெடுத்தான்

குழந்தைகளின் உணர்வுகளைக் கவனத்தில் கொள்ளாமல் இருப்பது

சில சமயங்களில் குழந்தைகளுக்கு நல்லது என

அவன் எண்ணியிருக்கக் கூடும்

துரிதமாக செயல்பட்ட இன்னொருவனோ தீக்குச்சியைக் கிழித்தான்

சுற்றிலும் எரிந்து கொண்டிருந்த பலவற்றோடு

இந்த நெருப்பும் சேர்ந்து கொண்டது

அருகே நின்று தமது சாகசங்களைப் பற்றிப்

பேச ஆரம்பித்தனர் கொஞ்சம் பேர்

கலைந்து போனார்கள் ஒருசிலர்

காருக்குள் இருந்த இருவரும் என்ன எண்ணியிருப்பார்கள்

என்பதைப் பற்றி யார் கவலைப்பட்டார்கள்

சமாதான விரும்பிகளாக மக்கள்

தமது வீடுகளுக்குத் திரும்ப ஆரம்பித்தனர்

அப்போதுதான் திடீரென உள்ளேயிருந்தவர்

கார் கதவை உடைத்து வெளியே பாய்ந்தார்

சட்டையிலும் தலைமயிரிலும் ஏற்கனவே தீப்பற்றி விட்டிருந்தது

குனிந்தவர் தனது இரண்டு குழந்தைகளையும் வாரி எடுத்தார்

எங்கும் பார்க்காமல் கவனமாகத் திட்டமிட்டு எடுத்த முடிவை

செயல்படுத்துவது போல உறுதியுடன் காருக்குள் திரும்பி ஏறினார்

கதவை மூடினார்

தனித்துவமான அந்த சப்தத்தை நான் கேட்டேன்

எரிந்தழிந்த கார் இப்போதும் தெருவோரம் கிடக்கிறது

ஏனையவற்றோடு இன்னும் சில நாட்களில்

மாநகராட்சி அதனை அகற்றக்கூடும்

தலைநகரின் தூய்மையே ஆட்சியாளரின் தலையாய பணி’’

ஒரு சிங்களவரே அளித்த ஒப்புதல் வாக்குமூலமாக இருக்கிறது இந்தக் கவிதை. வீதிகளிலும், வீடுகளிலும் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது மட்டுமின்றி சிறையில் இருந்தவர்களும் குரூரமாக கொல்லப்பட்டனர். வெலிக்கடை சிறையில் ஜூலை 25ஆம் தேதி முப்பத்தேழு தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர். மூன்று நாள் கழித்து மீண்டும் பதினைந்து பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்காகப் பழிவாங்கவே இந்தக் கலவரம் நடத்தப்பட்டதென்று சிலர் கூறுகின்றனர். அது உண்மையல்ல. தமிழர்கள் மீதான ஒடுக்குமுறை பல ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பமாகி விட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்தது முதலே இனவொதுக்கல் கொள்கையும் தீவிரமடைய ஆரம்பித்து விட்டது. 1983ல் ª-ஜயவர்த்தனே ஆட்சிக் காலத்தில் அது புதிய பரிமாணத்தை எட்டியது. அந்த ஆண்டு ஏப்ரல் பத்தாம் தேதி திரிக்கோணமலை காவல் நிலையத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் இறந்தார். எந்தவித விசாரணையுமின்றி அடைத்து வைக்கப்பட்டிருந்த அவர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை அவரது உடம்பிலிருந்த காயங்கள் காட்டின. அது தமிழ் மக்களிடம் கொந்தளிப்பை கூட்டியது. 1983 ஜூன் மாதம் 3ஆம் தேதி அரசாங்கம் ஆணையொன்றைப் பிறப்பித்தது. அந்த அவசர ஆணையின்படி போலீஸார் எவ்வித விசாரணையோ, போஸ்ட்மார்ட்டமோ இன்றி எந்தவொரு சடலத்தையும் புதைக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பே தமிழர்களின் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் தொடங்கி விட்டன. இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே ‘‘இனிமேல் நான் தமிழர்களின் அபிப்ராயம் பற்றி கவலைப்படப் போவதில்லை. அவர்களது உயிர்களோ, கருத்துகளோ எங்களுக்கு பொருட்டல்ல. தமிழர்களைப் பட்டினி போட்டால் சிங்களவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்’’ என லண்டனிலிருந்து வெளியான பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்தார். ஆக, ஜூலை கலவரத்துக்கான தயாரிப்பை நீண்ட நெடுங்காலமாகவே சிங்களவர்கள் செய்து கொண்டிருந்தார்கள் என்பதுதான் உண்மை. 1977ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கலவரமும், 1981ஆம் ஆண்டு யாழ் நூலகம் எரிக்கப்பட்டதும் இந்தத் தயாரிப்பில் சில மைல் கற்கள்.

இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்டதை இனப்படுகொலை (Genocide) எனச் சொல்வது சரியா? என்று சிலர் கேட்கலாம். இனப்படுகொலை என்பதற்கான வரையறை என்ன என்பதை பவுல் ஆர்.ப்ராஸ் என்ற அமெரிக்க சிந்தனையாளர் தனது நூலொன்றில் (Forms of Collective Violence) விளக்கியிருக்கிறார். ‘‘மக்களில் ஒரு பிரிவினரை ஒரு குறிப்பிட்ட அடையாளத்துக்குள் அடக்கி அவர்களை ஆதிக்கம் செய்வது; அதற்கு வன்முறையை கருவியாகப் பயன்படுத்துவது; அரசியலை இனவாதத்தின் ªச்வாக்குக்குள் கொண்டு வருவது; சிறுபான்மை இனத்துக்கு எதிராக வன்முறையை ஏவுகிறவர் அரசியலில் தலைமை ஏற்பது; தங்களது சந்தோஷத்துக்காகவும், கேளிக்கைக்காகவும் எதிராளிகள் மீது வன்முறையை ஏவுவது; மக்கள் பெருமளவில் இடம் பெயர்ந்து செல்ல நிர்ப்பந்தப்படுத்தும் விதமாகத் தாக்குதல் தொடுப்பது; இன சுத்திகரிப்புக்கு வன்முறையை வழியாகக் கொள்வது; காவல்துறை, ராணுவம் முதலானவற்றின் ஒரு சார்பான அணுகுமுறை’’ - இப்படி இனஅழித்தொழிப்பு மனோபாவத்தின் அம்சங்களை அவர் பட்டியலிடுகிறார். இவை எல்லாமே 1983 ஜூலை கலவரத்துக்குப் பொருந்துகின்றன.

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத் தொடரும் யுத்தத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் விரும்பியும், விரும்பாமலும் அங்கு பலியாகியுள்ளனர். ஈழத் தமிழர்கள் உலகமெங்கும் அகதிகளாக விரட்டப்பட்டிருக்கிறார்கள். இப்போதும் தமிழர்களின் வீடுகளின் மீது குண்டுகள் வீழ்ந்து கொண்டிருக்கின்றன. சின்னஞ்சிறு குழந்தைகள் புன்னகை மாறாமல் புதை குழிகளுக்குள் போய்க் கொண்டிருக்கின்றனர். இதை ஐ.நா. சபை வேடிக்கை பார்க்கிறது. இதை உலக நாடுகள் வேடிக்கை பார்க்கின்றன. இதை இந்தியா வேடிக்கை பார்க்கிறது. இதைத் தமிழகமும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. ‘மௌனம் என்பது காய்ந்து போன ரத்தம்’ என்று சொன்னான் ஒரு கவிஞன். காய்ந்து போனாலும் கவிச்சி மாறாத ரத்தம் அது. உணர்வுள்ளவர்களுக்கு குமட்டலை ஏற்படுத்தும் ரத்தம்.

கொழும்பு நகரில் சார்க் நாடுகளின் தலைவர்கள் இப்போது சந்தித்துப் பேசவுள்ளனர். நமது பிரதமர் மன்மோகன் சிங் அவர்களும் அங்கு செல்கிறார். நம்பிக்கை வாக்கெடுப்பில் பெற்ற வெற்றியை அங்கு வரும் தலைவர்களோடு அவர் பகிர்ந்து கொள்ளலாம். அவர்களுக்குப் பிரத்யேகமாக விருந்து கூட கொடுக்கலாம். மாநாடு நடக்கும் இடத்திலிருந்து சில மைல் தொலைவில் உயிரைக் கையில் பிடித்தபடி தவித்துக் கொண்டிருக்கும் தமிழர்களின் ஞாபகம் அவருக்கு வருமென்று சொல்ல முடியாது. ஏனென்றால் பாவம் அவர்கள் தமிழர்கள்.

24.07.2008 ஜுனியர் விகடன்

 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.