Jump to content

இடைவெளி


Recommended Posts

விலை மதிக்க முடியாத நினைவுப் பரிசு வேண்டுமா?

இன்னும் சிறிது நேரத்தில் மணிவாசகன் (அட நான் தான்) இப்பகுதியில் ஒரு சிறுகதையைப் பிரசுரிக்க இருக்கிறார். அது சற்றுச் சர்ச்சைக்குரிய கருத்தான். இதன் முடிவு சரியானதா தவறானதா என்று எனக்குமே சரியான தெளிவில்லை.

எனவே இந்தக் கதை தொடர்பான உங்களுடைய கருத்துக்கள் , விமர்சனங்கள் என்பவற்றைக் கட்டாயமாய் எதிர்பாhக்கிறேன்.

மிகச் சிறந்த விமர்சனத்திற்கு வெகுவிரைவில் அறுபட இருக்கும் ஆதிவாசியின் வால் நினைவுப்பரிசாக அளிக்கப்படும்.

பேனையும் கையுமாக சீச்சீ விசைப்பலகையும் விரலுமாகத் தயாராயிருங்கள்.

அன்புடன்

மணிவாசகன்.

Link to comment
Share on other sites

இடைவெளி என்ற சிறுகதையையா பிரசுரிக்கப்போறீங்கள்?

ஆமாம் சிநேகிதி,

உங்களுடைய கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்

Link to comment
Share on other sites

இடைவெளி

"எவ்வளவு இலகுவாக வார்த்தைகளைக் கொட்டிவிட்டார்கள். பெற்றவரை, உற்றவரைப் பிரிந்து பல்லாயிரம் மைல்களைக் கடந்து, புரியாத தேசத்தில் கால் வைத்தபோது மொழி, இடம், கலாச்சாரம், காலநிலை, தனிமை என்று எத்தனையோ சவால்கள் தலைகாட்ட அத்தனை இடர்களுக்கும் முகங்கொடுக்க அல்லது சகித்தக்கொள்ளத் துணையாக இருந்தவர்களிடமிருந்தா அந்த வார்த்தைகள் வரவேண்டும்?

இயந்திரமயமான இந்த வெளிநாடுகளில் சொந்தங்களும் பந்தங்களும் வைபவங்களில் வந்து தலைகாட்டுவதற்கும் விமர்சனம் செய்வதற்கும் மட்டும் தான் என்று சொல்வார்களே. ஆனால் இந்த ஐந்து ஆண்டுகளில் இவர்கள் எப்பொழுதாவது என்னை ஒரு 'பிறத்தியானாக' நடத்தியிருப்பார்களா? மாமாவும் மாமியும் ஒரு பிள்ளையைப் போலல்லவா பார்த்துக் கொண்டார்கள்.

நிஷாவும் றாகுலும் தங்களுள் ஒருவனாக எண்ணிச் சுற்றிச் சுற்றி வருவார்களே. அத்தனையும் இன்று ஒரு சில நிமிடங்களில் தலைகீழாகிவிட்டதே. நான் அப்படிப் பேசியது தப்பா? யதார்த்தத்தை, என்னுடைய மனதிற்குச் சரியெனப் பட்டதைத் தானே சொன்னேன்.

கடவுளே! நல்ல உள்ளங்களைக் காட்டுவதும் இடையில் தட்டிப் பறிப்பதுமான இந்த விளையாட்டை இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தான் என்னுடன் விளையாடப் போகிறாய்?"

வெறுப்பா, விரக்தியா, கோபமா, கவலையா அல்லது இவற்றின் சேர்க்கையா என்று தெரியாத உணர்வு சீலனை அலைக்களித்துக் கொண்டிருக்கிறது.

சற்றுமுன் வரை முதியவர்கள், குழந்தைகள், காதலர்கள் எனப் பல்வேறு வயது, இன, மதக் கூட்டத்தினரையும் தன்பால் அணைத்து வைத்திருந்த 'தேம்ஸ்' ஆற்றங்கரை இப்பொழுது பிள்ளைகளை ஒவ்வொருவராகக் 'கரையேற்றி' வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு வீடுகளிலே அல்பங்களைப் புரட்டிக் கொண்டிருக்கின்ற வயது முதிர்ந்த பெற்றோரைப் போலத் தனித்து விடப்பட்டிருக்கிறது.

அதன் தனிமையைப் போக்குவதற்கு இப்பொழுது சீலன் மட்டுமே அங்கேயிருக்கிறான்.

சலசலவென எந்தக் கவலையுமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் 'தேம்ஸ்' ஆற்றையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்களில் நீர் திரையிட்டிருந்தது. அவனது மனம் இன்று பகல் நடந்த அந்த உரையாடலையே அசைபோட்டுக் கொண்டிருக்கிறது.

பகற் போசனத்தை முடித்துக் கொண்டு குட்டித் தூக்கம் போடக் கிளம்பியவனை

"என்ன தம்பி வேலை ஏதாவது கிடக்குதோ? கொஞ்ச நேரங் கதைக்கலாமோ"

என்று மாமனார் அழைக்கிறார்.

அவர் இப்படித்தான். சனி ஞாயிற்றுக் கிழமைகளில் கடைக்குப் போகாமல் ஓய்வாக இருக்கும்போது அரசியல், இலக்கியம், விளையாட்டு எனப் பல விடயங்களையும் அலசுவதற்குச் சீலனைத் தான் தேடுவார்.இன்றும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவனாய் வந்து கதிரையில் அமர்கிறான்.

என்றுமில்லாதவாறு அவரருகில் மாமியும் உட்கார்ந்திருந்ததை அவதானித்தாலும் அதைப் பெரிதாக எடுக்கவில்லை.

ஆனால் புலம் பெயர் வாழ்விலே தான் உறவுகளாய் மதித்த, அகதியாய் வந்தவனை அணைத்து, தம்முடைய கடையிலேயே வேலை கொடுத்து, வியாபார நுணுக்கங்களைப் பழக்கி, இன்றைக்குச் சொந்தக் காலிலே வியாபாரம் ஒன்றைச் செய்யுமளவிற்குக் கைதூக்கி விட்டவர்களுக்கும் தனக்குமிடையில் பெரும் விரிசலை ஏற்படுத்தப் போகும் உரையாடலைத் தான் அவர் ஆரம்பிக்கப் போகிறார் என்பது அவனுக்கு அப்பொழுது தெரிந்திருக்கவில்லை.

மெல்லச் செருமித் தொண்டையைச் சரிப்படுத்திக் கொண்டு மாமனார்தான் பிள்ளையார் சுழி போடுகிறார்.

"தம்பி, நீரும் வந்து அஞ்சு வரிசமாப் போச்சுது. என்ன பிளான் வைச்சிருக்கிறீர்?"

"இப்போதைக்கு கடையைக் கவனமாச் செய்து கொஞ்சக் காசு சேக்க வேணும். வேறை ஒண்டும் பெரிசா இல்லை"

தூண்டிலின் கனம் தெரியாமல் மீன் வாயைத் திறக்கிறது.

"அப்படிச் சொல்லிக் கொண்டு நெடுக இருக்கேலாதப்பு. உமக்கும் வயது இருபத்தெட்டாப் போச்சுது. ஒரு கலியாணத்தைக் கிலியாணத்தைக் கட்ட வேண்டியது தானே."

மாமாவும் சீலனும் நண்பர்களைப் போல உரையாடிக் கொள்பவர்கள் தான். ஆனால் மாமியும் அருகில் இருக்க தன்னுடைய திருமணப்பேச்சு எடுபட்டதுமே சீலனுக்குச் சங்கடமாய்ப் போய்விட்டது.

"நான் இன்னும் அதைப் பற்றியொண்டும் யோசிக்கேல்லை. ஆறுதலாப் பாப்பம்.."

"அதென்ன ஆறுதலாப் பாக்கிறது. ஆரையாவது மனசிலை நினைச்சு வைச்சிருக்கிறீரோ?"

மாமியார் இடையில் புகுந்து கொள்கிறார்.

"சீச்சீ.. மூஞ்சுறு தான் போகக் காணேல்லை. விளக்குமாத்தையும் இழுத்து கொண்டு போன கதை தெரியுந்தானே?"

தன்னுடைய பகிடியை மாமாவோ மாமியோ ரசிக்காதது சீலனுக்கு என்னவோ போலிருந்தது.

"தம்பி, நான் சுத்திவளைக்கேல்லை. நேரா விசயத்துக்கு வாறன். எங்கடை நிஷாவைக் கலியாணங் கட்டிறதுக்கு உமக்கு விருப்பமோ?"

மாமி இப்படியொரு குண்டைத் தூக்கித் தலையிலே போடுவார் என்று சீலன் கனவிலும் நினைத்திருக்கவில்லை. அவனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. அதிர்ச்சியிலே உறைந்து போயிருந்தவனின் மௌனத்தை அவர்கள் வேறுவிதமாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

"எங்களுக்கெண்டு இருக்கிறது ஒரேயொரு பொம்பிளைப் பிள்ளை. இந்த வீட்டுக்கு mortage எல்லாம் கட்டி முடிஞ்சுது. கடையும் அவவின்ரை பேரிலை தான் இருக்குது. அதைவிட நகைநட்டு எண்டு ஒரு நூறு பவுணுக்கு மேலை தேறும்.. . . ."

மாமனார் பட்டியல் வாசிக்கிறார். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. புலம்பெயர்ந்து வந்தபின்பும் எங்கள் இளைஞர்களில் பலர் இந்தப் பட்டியலைப் பார்த்துத் தானே தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறார்கள்.

"இல்லை, இல்லை.. . நான் அதுக்கு யோசிக்கேல்லை. நிஷாவுக்கும் எனக்கும் பொருத்தம் வராது மாமா. நாங்கள் ரெண்டு பேரும் கலியாணம் முடிச்சால் சந்தோசமாக் குடும்பம் நடத்தலாம் எண்டு நான் நினைக்கேல்லை. . ."

சீலன் பேசி முடிக்கவில்லை. அதற்குள் மாமிக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.

"ஏன்? எங்கடை நிஷாவுக்கு என்ன குறை? அழகில்லையா? படிப்பில்லையா? பணமில்லையா? அல்லது பழக்கவழக்கம் சரியில்லையா? எதிலை குறை கண்டனீர்?"

கோபம் குமுறிக் கொண்டு வரும் பொழுது பகுத்தறிவு எங்கோ ஒரு மூலையில் போய் ஒளித்துக் கொண்டுவிடுகிறதோ?

அவன் நிஷாவைப் பற்றி என்ன குறைவாகச் சொல்லிவிட்டான்? தனக்கும் நிஷாவிற்கும் பொருந்தி வராது என்பதற்கு அவள் கூடாதவள் என்பது தான் பொருளா? அவளுக்குத் தான் பொருத்தமற்றவன் அல்லது இருவருக்கும் இடையிலான வேறுபாடு அதிகம் என்ற பொருளில் கூடச் சொல்லியிருக்கலாம் என்று ஏன் அவர்களால் சிந்திக் முடியாமல் போனது?

நேரம் நிசப்தத்தில் கரைந்து கொண்டிருக்கிறது. மாமனார்தான் அந்த அமைதியைக் கலைக்கிறார்.

"தம்பி நீர் பாத்திருப்பீர் தானே? நான் என்ரை பிள்ளைகளை மற்ற ஆக்களை மாதிரி வளக்கேல்லை. எங்கடை பண்பாடு, கலாச்சாரத்தை ஊட்டித்தான் வளத்திருக்கிறன். இங்கை சிலதுகளைப் போலை என்ரை பிள்ளை கிளப்பெண்டும் பப்பெண்டும் சுத்துறவளில்லை. அவளுக்குத் தாய்நாட்டைப் பற்றின நல்ல அறிவும் பாசமும் இருக்குது. கடைசியாச் சுனாமி அடிச்சபோது கூட சினேகிதிகளோடை சேந்து வீடுவீடாப் போய்க் காசு சேத்துக் குடுத்தவள். அந்தப் படங்களை ரிவியிலை பாத்துப் போட்டு ரெண்டு நாளாச் சரியாச் சாப்பிடவும் இல்லை. அவளைப் போய் ஏன் தவறா நினைக்கிறீர்?"

மாமா சொல்வது உண்மைதான். நிஷா அவர் சொல்வதைப் போலத் தான் வளர்கிறாள். தான் பறவையா விலங்கா என்று தெரியாமல் இரண்டும் கெட்டான் நிலையில் தவிக்கின்ற வெளவாலைப் போல எங்களுடைய பிள்ளைகள் சிலர் தாங்கள் ஆங்கிலேயாரா அல்லது தமிழரா என்று தெரியாமல் இரவு விடுதிகளென்றும் மதுபானச் சாலைகளென்றும் சுற்றிக் கொண்டிருக்க நிஷாவோ வீணையை முறையாகப் பயின்று சிறுகுழந்தைகளுக்கு இலவசமாகச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் அவள் நல்லவள் என்பதற்காக அவளைத் திருமணம் செய்து விட்டால் இருவரும் சந்தோசமாக இருந்துவிட முடியுமா?

தலைமுறை இடைவெளி என்பது போல, புலம்பெயர்ந்து வந்த சீலனைப் போன்றவர்களுக்கும் இங்கே பிறந்து வளர்கின்ற நிஷா போன்றவர்களுக்கும் இடையில் எவ்வளவு வேறுபாடுகள் இருக்கின்றன? இருதுருவங்கள் போலிருக்கின்ற அவர்கள் இருவரும் இணைந்து வாழ்க்கை வண்டியை எப்படி ஒரு சீராகத் தள்ளிக் கொண்டு போக முடியும் என்று அவர்கள் சிந்தித்ததாகத் தெரியவில்லை.

"நீங்கள் என்னைத் தவறா விளங்கீட்டீங்கள். எனக்கும் நிஷாவைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இருக்குது. ஆனால் என்னைப் போலவே அவவுக்கும் தன்ரை எதிர்காலம் பற்றி நிறையக் கற்பனைகள் இருக்கும். அவவின்ரை எதிர்பார்ப்புகளுக்கும் விருப்பங்களுக்கும் ஏற்ற ஒரு ஆளா நான் இல்லை. அதைத் தான் நான் சொன்னனான்."

மாமனார் தன்னுடைய கண்ணாடியைக் கழற்றி கண்களை அழுந்தத் துடைத்தவாறே ஆரம்பிக்கிறார்.

"தம்பி, நீர் இஞ்சை வந்ததிலிருந்தே நாங்கள் உம்மைப் பாத்துக் கொண்டுதானிருக்கிறம். வீண் சோலிகளுக்குப் போகாமல் நீரும் உம்மடை பாடுமாய் இருக்கிறீர். உழைச்சு முன்னுக்கு வரவேணும் எண்ட விருப்பம் இருக்குது. குடி கிடி இல்லை. சுருக்கமாச் சொன்னால் எங்கடை நிஷாவுக்கு வரவேண்டிய மாப்பிள்ளை எப்படி இருக்கவேணும் எண்டு எனக்கும் மாமிக்கும் இருந்த அத்தனை எதிர்பார்ப்புகளுக்கும் விருப்பங்களுக்கும் ஏற்ற மாதிரித் தான் நீர் இருக்கிறீர். அதாலை நீர் அதுகளைப் பற்றியொண்டும் யோசிக்கத் தேவையில்லை."

மாமா 'பப்பாவில்' ஏற்றும் தந்திரத்தைக் கையாள்கிறாரோ?

"மாமா உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கலாம். நீங்கள் எதிர்பாக்கிற மாதிரி நானிருக்கலாம். ஆனா சேந்து வாழப் போற நிஷாவின்ரை எதிர்பார்ப்புகளுக்கும் உங்கடை எதிர்பார்ப்புகளுக்கும் இடையிலை நிறைய வித்தியாசம் இருக்குது. .."

மாமிக்குப் பொறுமையில்லை. இடையில் புகுந்து கொள்கிறார்.

"உவர் மனசுக்குள்ளை எதையோ வைச்சிருக்கிறார். நீங்கள் இப்ப என்ன கதைச்சாலும் குதர்க்கமாத் தான் கதைப்பார். மூக்கைப் பிடிச்சால் ஆவெண்ணத் தெரியாமல் வந்தவரைப் பிள்ளையை மாதிரிப் பாத்து எல்லாத்தையும் பழக்கி ஒரு மனிசனாக்கி விட்டதுக்கு எங்களுக்கு இதுகும் வேணும் இன்னமும் வேணும். நீங்கள் உந்தக் கதையை விட்டுப் போட்டு வேறை வேலையைப் பாருங்கோ"

மாமி விறுக்கென்று எழுந்து மேலே போய்விட்டார்.

சீலனுக்கு மாமாவின் முகத்தை நிமிர்ந்து பார்ப்பதற்கே தைரியமில்லை. மெல்ல எழுந்து வந்து இந்த நதிக்கரையில் அமர்ந்தவன்தான். அப்படியே சிலைபோல உட்கார்ந்திருக்கிறான்.

அருகிலே வந்து நின்ற மோட்டார் காரின் வெளிச்சத்திலே சுயநினைவுக்கு வந்தவனாய் நிமிர்ந்து பார்க்கிறான். அங்கே நிஷா நின்றுகொண்டிருக்கிறாள்.

"Hello Seelan, என்ரை guessing சரி. வீட்டிலை mummy உங்களை ஏசிக் கொண்டிருக்கிறா. என்ன விஸயம் எண்டு கேட்டதுக்கு ஒண்டும் சொல்லேல்லை. உங்களையும் room பக்கம் காணேல்லை. So உங்களுக்கும் mummmyக்கும் ஏதோ பிரச்சினை எண்டு guess பண்ணினன். நீங்கள் problem எண்டால் இங்கைதான் வருவீங்கள் எண்டு எனக்குத் தெரியும் அதுதான் வெளிக்கிட்டு வந்தனான். நீங்களாவது என்ன matter எண்டு சொல்லுங்களன்"

தன்னுடைய கொஞ்சு தமிழில் கெஞ்சுகிறாள்.

சீலனுக்கும் தன்னுடைய மனஅழுத்தங்களை யாருடனாவது பகிர்ந்து கொள்ள வேணடும் போலிருக்கிறது.

"நான் அப்படி ஒரு விஸயம் நடக்குமெண்டு கனவிலையும் நினைக்கேல்லை. மாமாவிலையும் மாமியிலையும் எவ்வளவு பாசம் வைச்சிருந்தன். எல்லாம் இப்படிப் போச்சுது"

நிஷாவிற்கு எரிச்சலாயிருக்கிறது.

"சும்மா றப்பர் மாதிரி இழுக்காமல் what is the matter?"

"உங்களைக் கலியாணம் முடிக்க விருப்பமா எண்டு கேட்டினம். நான் உங்கடை எதிர்பார்ப்புகளுக்கும் என்ரை எதிர்பார்ப்புகளுக்கும் இடையிலை நிறைய வித்தியாசம் இருக்குது எண்டு சொல்லி மாட்டன் எண்டிட்டன். அதுதான் மாமிக்குக் கோவம்."

"Seelan, if you don't mind நான் இங்கிலிஸில் கதைக்கட்டா?"

சீலனின் தமிழருடன் தமிழில் கதைக்கும் கொள்கை நிஷாவிற்குத் தெரியும். அவனுடன் முடிந்தவரையில் தமிழிலேயே பேசுவாள். ஆனால் இப்பொழுது எதையோ விரிவாகக் கதைக்க விரும்புகிறாள். அந்த அளவிற்குத் தமிழில் பேச முடியாது என்பதால் அவனிடம் அனுமதி கேட்கிறாள்.

சீலனின் தலையசைப்பை சம்மதமாக எடுத்துக் கொண்டு தொடர்கிறாள்.

"சீலா, நிங்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறீங்களோ தெரியாது. ஆனால் உங்களிட்டை நல்ல குணமிருக்குது, அழகிருக்குது, நிறையப் பணமிருக்குது. இதைவிட என்ன வேணும். ஆக எனக்கு உங்களைக் கலியாணம் முடிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை"

ஆங்கிலத்திலேயே சொல்லி முடிக்கிறாள்.

வழமையான வெளிப்படையான பேச்சு. பத்தொன்பதே வயதான உலக வாழ்க்கையைச் சரியாகப் புரிந்து கொள்ளாத சிறு பெண்ணிடமிருந்து இதைவிட வேறு எதனைத் தான் எதிர்பார்க்க முடியும்? பணமும் வெளிப்புற அழகும் மட்டும் சந்தோசமான திருமணவாழ்க்கைக்குப் போதுமானது என்ற குழந்தைத்தனமான எண்ணத்திற்கு எப்படி விளக்கமளிப்பது?

"நிஷா நான் சொல்லுறதைக் கொஞ்சம் கேளுங்க. சந்தோசமான குடும்ப வாழ்க்கைக்கு பணத்தையும் அழகையும் தவிர நிறைய முக்கியமான விஸயங்கள் தேவை. எங்கள் ரெண்டு பேற்றை விருப்பங்கள், ரசனைகள், பழக்கவழக்கங்களுக்குள்ளை எவ்வளவு வித்தியாசம் இருக்குது எண்டு யோசிச்சுப் பாருங்கோ. சாப்பாடு, உடுப்பு, இசை, பொழுதுபோக்கு எண்டு ஒவ்வொண்டா யோசிச்சுப் பாருங்கோ

எனக்கு ஒருநாளைக்கு ஒருக்கா எண்டாலும் சோறு சாப்பிட வேணும். நீங்கள் crisps வோடையும் coke ஓடையும் காலத்தைத் தள்ளுறனீங்கள். எனக்கு மனசிலை சந்தோசமில்லாட்டி யேசுதாஸின்ரை பாட்டைக் கேட்டுக் கொண்டு கிடக்கவேணும். உங்களுக்கு rap song தான் சொர்க்கம். அது எனக்குக் காட்டுக் கத்து மாதிரி இருக்கும்.

தமிழ்ப் படம் எண்டாலே boring எண்டு சொல்லிப் போட்டு நீங்கள் எழும்பிப் போயிடுவீங்கள். எனக்கு english படம் எண்டாலே அலர்ஜி. உங்களுக்கு football match பாத்திட்டு அதைபற்றிக் கதைக்கப் பிடிக்கும். நான் ஒரு பந்துக்கு ஏன் இத்தனை பெர் சண்டை பிடிக்கிறாங்கள் எண்டு கேக்கிற சாதி. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

நாங்கள் ரெண்டு பேரும் free கதைச்சு விவாதிச்சு செல்லமாச் சண்டை போடுறதுக்கு ஏதாவது ஒரு விஸயத்திலை எண்டாலும் எங்களுக்குள்ளை ஒத்த ரசனை இருக்குதா? சரி அப்படிக் கதைக்கிறது எண்டாலும் எனக்கு இங்கிலீஸ் திக்கித் திக்கித் தான் வரும் உங்களுக்குத் 'தமில்' தடுமாறித் தடுமாறித் தான் வரும்.

இவர் தான் என்ரை husband எண்டு உம்மடை friendsகு அறிமுகப்படுத்திறதிலை இருக்கிற சங்கடங்களை யோசிச்சுப் பாத்தீங்களா? அவையளோடை party ஒண்டுக்குப் போனாக் கூட எனக்கு கறண்டி பிடிக்கிறதெண்டாலே கையெல்லாம் நடுங்கும். அப்ப நாகரீகம் தெரியாதவன் எண்டு அவையள் கேலிசெய்யேக்கை நீங்கள் சங்கடப் பட மாட்டீங்களா?

ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்து வித்தியாசங்களைச் சரிப்படுத்திக் கொண்டு போறது தான் வாழ்க்கை. அந்த விட்டுக்குடுப்பிலையும் ஒரு சந்தோசமிருக்கெண்டது எனக்கும் தெரியும். ஆனால் மலையும் மடுவும் மாதிரி இருக்கிற எங்கடை இடைவெளியை நிரப்பிறது எவ்வளவு கஸ்ரம் எண்டு யோசிச்சுப் பாருங்கோ.

கலியாணம் எண்டுறது விசாப் பிரச்சினை தீருறதுக்காகவோ அல்லது வெளிப்புற அழகிலை மயங்கியோ செய்யிற விசயமில்லை. அது ஒரே வண்டியிலை புூட்டின இரட்டை மாடுகள் மாதிரி ஒத்த திசையிலை ஒண்டாக் காலம் முழுக்க நடைபோட வேண்டிய நீண்ட பாதை. அவசரத்திலை பணத்தையும் அழகையும் பாத்து முடிச்சால் ஆரம்பத்திலை எல்லாம் சரி மாதிரித் தான் விளங்கும். ஆனால் காலம் போகப்போகத்தான் இந்த இடைவெளி விளங்கும். அப்ப வெள்ளைக்காரர் போலை செருப்பைக் கழட்டிற மாதிரி புரசனையொ பெண்சாதியையோ கழட்டி விடுறதுக்கு எங்கடை பண்பாடு கலாச்சாரம் இடங்குடுக்காது எண்டதாலை சும்மா போலியா ஒரு வாழ்க்கை வாழ வேணும். இதெல்லாம் தேவையா?

சீலனின் 'பிரசங்கத்தையே' உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தவள்

"Seelan you are fantastic. நீங்கள் ஒரு Philosopher மாதிரிக் கதைக்கிறீங்கள். நான் ஒருநாளும் இந்த angleஇலை யோசிக்கேல்லை. உங்களுடைய advice நான் எனக்குப் பொருத்தமான ஒருத்தரை select பண்ணுறதுக்கு நிச்சயம் help பண்ணும். நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்க வேண்டாம். I can understand you. இப்ப என்னோடை வீட்டுக்கு வாறீங்களா?"

பரிவுடன் கேட்கிறாள் நிஷா.

சீலனின் மௌனம் அவளுக்குப் புரிந்திருக்க வேண்டும்.

"எனக்கு உங்கடை நிலமை விளங்குது. இப்போதைக்கு உங்களுக்கு எங்கடை வீட்டிலை இருக்கிறது சங்கடமா இருக்கும். கொஞ்ச நாளைக்கு வெளியிலை எங்கையாவது தங்குங்கோ. நான் mummyக்கு உங்கடை position ஐ விளங்கப்படுத்திறன். அவையளும் கட்டாயம் உங்களைப் புரிஞ்சுகொள்ளுவினம். இப்ப நான் பொயிட்டு வாறன் bye..".

நிஷா விடைபெற்றுச் செல்கிறாள்.

கூடவே தன்னுடைய மனப் பாரத்தையும் தூக்கிச் செல்வது போலச் சீலனுக்குப் பட்டது. மெல்ல எழுந்து காற்சட்டையில் ஒட்டிக் கொண்டிருந்த புற்களைத் தட்டிவிட்டு நடக்கிறான். மெல்லத் தழுவிச் சென்ற தென்றலை நீண்ட நேரதிற்குப் பிறகு ரசிக்கக் கூடியதாக இருக்கிறது.

************************************************************************

Link to comment
Share on other sites

கதை எதிர்காலப் பயத்தால் உருவானதென நினைக்கிறேன். ஆனால்... திருமணத்துக்கு மனப் பொருத்தம்தான் முக்கியம். விட்டுக் கொடுத்து வாழும் மனம் இருந்தால் மற்ற எத்தகைய குறைகளும் பெரிய விடயமல்ல.

மொழியால் பண்பாட்டால் பழக்க வழக்கத்தால் எவ்வித சம்பந்தமுமில்லாத இரு வேறு நாட்டவர்கள் பலர் திருமணமாகி மகிழ்ச்சியுடன் வாழ்வதை கண்முன்னே பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

ஆக,விட்டுக் கொடுத்து வாழும் மனப் பொருத்தம் இருக்கும் வரையில் எதனாலும் எவரையும் பிரிக்க முடியாது. :P

Link to comment
Share on other sites

விட்டுக்கொடுப்புடன் வாழலாம் தான். ஒரே பண்பாடு,கலாச்சாரம் இருந்தால் வேறு விசயங்களில் விட்டுக்கொடுப்புடன் வாழலாம்.

ஆனால் வேறு வேறு பண்பாடுகள் , கலாச்சாரத்துடன் வாழும் போது தமிழ் பேசுவதினை, இசையினை, பண்பாட்டினை, கலாச்சாரத்தினை, உணர்வினை விட்டு செத்த பாம்பு போல எவ்வாறு வாழ்வது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மணிவாசன் உங்கள் கதை நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

கதை எதிர்காலப் பயத்தால் உருவானதென நினைக்கிறேன். ஆனால்... திருமணத்துக்கு மனப் பொருத்தம்தான் முக்கியம். விட்டுக் கொடுத்து வாழும் மனம் இருந்தால் மற்ற எத்தகைய குறைகளும் பெரிய விடயமல்ல.

மொழியால் பண்பாட்டால் பழக்க வழக்கத்தால் எவ்வித சம்பந்தமுமில்லாத இரு வேறு நாட்டவர்கள் பலர் திருமணமாகி மகிழ்ச்சியுடன் வாழ்வதை கண்முன்னே பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

ஆக,விட்டுக் கொடுத்து வாழும் மனப் பொருத்தம் இருக்கும் வரையில் எதனாலும் எவரையும் பிரிக்க முடியாது. :P

இக்கதை எதிர்காலப் பயத்தில் உருவாகி இருந்தாலும் எமது அன்றாட வாழ்க்கையில் காணப்படும் பயம். திருமணத்திற்கு மனப்பொருத்தம் மிக முக்கியம்; அது மிக முக்கியம் எனப் பெரியோர் கருதாது, பிள்ளைகளைத் தமக்குப் பிடித்தவரிடம் தள்ளிவிட்டால் சரி என்று எண்ணுகிறார்கள். அதன் பிரதிபலிப்பாகவே இக்கதை இருக்கின்றது.

பலர் திருமணம் செய்கிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது கொஞ்சம் கேள்விக்குறி. சிலர் மகிழ்ச்சியாக இருக்கலாம், அனைவரும் என்பது??? குறிப்பாக மொழியால் வேறுபட்டவர்கள்.

விட்டுக்கொடுத்து வாழலாம். ஆனால் அதற்கும் ஓர் எல்லை உண்டு. அனைத்தையும் விட்டுக்கொடுத்து வாழமுடியாது. அவ்வாறு எதிர்பார்ப்பதும் தவறானது. :wink:

Link to comment
Share on other sites

சிலர் தமிழ் தெரியாத தமிழ் பெண்ணை/ஆணை மணந்து வாழ்கிறார்கள். எதுக்கெடுத்தாலும் Please, Thank you என்று சொல்லி வாழ்கிறார்கள். எதோ வேலைத்தளத்தில் வெள்ளைக்காரர்களுடன் கதைப்பது போலத்தான் தோன்றும்.

Link to comment
Share on other sites

கதையின் கரு.. அதை எழுதிய விதம் அருமை.

பெற்றோர்கள் குணத்தை மட்டும் அல்லது இருவரின் மனங்களையும் நன்றாக அறிந்து திருமண பந்தத்தில் இணைக்க வேண்டும் என்பதை அழகாக சொல்லியிருக்கின்றீர்கள். பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

கருத்துக்களைத் தந்த அனைவருக்கும் மிகவும் நன்றி.

இரு வேறுகோணத்தில் கருத்துக்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இதனைத் தான் நான் எதிர்பார்த்தேன். இங்கே வைக்கப்பட்ட சில விடயங்கள் தொடர்பான எனது கருத்தை பின்னர் எழுதுகிறேன்.

ஏனையவாகளின் கருத்துக்களையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

அன்புடன்

மணிவாசகன்

Link to comment
Share on other sites

விட்டுக்கொடுப்புடன் வாழலாம் தான். ஒரே பண்பாடு,கலாச்சாரம் இருந்தால் வேறு விசயங்களில் விட்டுக்கொடுப்புடன் வாழலாம்.

ஆனால் வேறு வேறு பண்பாடுகள் , கலாச்சாரத்துடன் வாழும் போது தமிழ் பேசுவதினை, இசையினை, பண்பாட்டினை, கலாச்சாரத்தினை, உணர்வினை விட்டு செத்த பாம்பு போல எவ்வாறு வாழ்வது.

சரியோ தவறோ தெரியவில்லை.. எனினும் மதியுரைஞர் கலாநிதி அன்டன் பாலசிங்கத்தை இங்கே உதாரணம் காட்ட விரும்புகிறேன். அவர் இப்போது எதை விட்டுவிட்டார்.. எதையும் இல்லையே! நோயுற்ற நிலையிலும் அவர் நம்மினத்துக்காக பாடுபடுவதை யாபேரும் அறிவார்கள்தானே.. அவருக்கு துணையாக திருமதி அடேல் அவர்கள் இணைந்திருப்பதையும் அறிவார்கள்தானே.. ஆக, வாழ்விற்கு இனம் முக்கியமல்ல. மனம்தான் முக்கியம்.

Link to comment
Share on other sites

மணிவாசன் உங்கள் கதை நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

இக்கதை எதிர்காலப் பயத்தில் உருவாகி இருந்தாலும் எமது அன்றாட வாழ்க்கையில் காணப்படும் பயம். திருமணத்திற்கு மனப்பொருத்தம் மிக முக்கியம்; அது மிக முக்கியம் எனப் பெரியோர் கருதாது, பிள்ளைகளைத் தமக்குப் பிடித்தவரிடம் தள்ளிவிட்டால் சரி என்று எண்ணுகிறார்கள். அதன் பிரதிபலிப்பாகவே இக்கதை இருக்கின்றது.

பலர் திருமணம் செய்கிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது கொஞ்சம் கேள்விக்குறி. சிலர் மகிழ்ச்சியாக இருக்கலாம், அனைவரும் என்பது??? குறிப்பாக மொழியால் வேறுபட்டவர்கள்.

விட்டுக்கொடுத்து வாழலாம். ஆனால் அதற்கும் ஓர் எல்லை உண்டு. அனைத்தையும் விட்டுக்கொடுத்து வாழமுடியாது. அவ்வாறு எதிர்பார்ப்பதும் தவறானது. :wink:

அனைத்தையும் ஒருவருக்காக ஒருவர் விட்டுக் கொடுப்பதுதான் சார் இல்வாழ்க்கை.

ஒரு ஆணும் பெண்ணும் சங்கமமாகும் நிலையில் உடையில் இருந்து எல்லாவற்றையும்தானே விட்டுக் கொடுக்கிறார்கள். அதுதானே சங்கமம். அப்படி புறத்தால் விட்டுக் கொடுப்பதைப்போல அகத்தாலும் எல்லாவற்றையும் விட்டுக் கொடுப்பதுதான் வாழ்க்கை. ஒருவருக்கொருவர் அகத்தாலும் புறத்தாலும் நிர்வாணமாயிருப்பதுதான் அர்த்தமுள்ள வாழ்விற்கு வழிகோலும். :)

Link to comment
Share on other sites

வணக்கம் மணிவாசன் அண்ணா

நல்ல சிறுகதையொன்றை மீண்டும்மொருமுறை தந்திருக்கின்றீர்கள். அதற்குப் பாராட்டுக்கள். திருமணத்திற்கு மனப் பொருத்தம் முக்கியம் என்பதை நானும் ஒத்துக்கொள்கின்றேன். ஆனால் இந்தக் கதையில் சீலன் என்ற கதாபாத்திரம் எடுத்த முடிவு மிகச்சரியானதே. ஏனெனில் 19 வயதை நிரம்பிய அந்தப்பெண்ணால் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே சிந்திக்கமுடியும். ஆனால் அந்தப்பெண்ணின் மனதிலுள்ள வட்டத்திற்குள் உள்ளவற்றைவிடப் பெரிய ஒரு வட்டம் இருப்பதையும் அதற்குள் பல்வேறு விடயங்களையும் இருப்பதையும் சீலன் அறிவான். அதனால் அவன் தயக்கம் காட்டினான். இந்தத் தயக்கம் மிகவும் நியாயமாதென்பதை உங்கள் முடிவே சுட்டிக்காட்டுகின்றது. அந்தப்பெண்ணின் வட்டத்திற்கு வெளியே உள்ளவற்றை சீலன் சுட்டிக்காட்டியதும் அவள் உடனே அது சரியென்று ஒத்துக்கொண்டு இந்தத் திருமணம் பொருந்தி வராதென்பதை அவளும் உணர்ந்துகொண்டாள். ஆனால் ஒருவேளை அவள் அவனின் விளக்கத்திற்குப் பிறகும் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டிருந்தால் எல்லாவற்றையும் விட மனப்பொருத்தமே முக்கியம் என்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அதையும் தாண்டி வாழ்க்கைக்கு வேறு விடயங்களும் தேவை என்பதை உங்கள் கதை சுட்டிநிற்கின்றது. அதை நானும் ஒத்துக்கொள்கிறேன். இதைப்பற்றி வைரமுத்துவின் கவிதை ஒன்று உள்ளது. ஆனால் வடிவாகத் தெரியாது.

" மனம்மட்டுமே போதுமென்றால் ஒரு நாய்க்குட்டி போதும்"

உங்கள் விளக்கத்தையும் எதிர்பார்க்கின்றேன். :)

Link to comment
Share on other sites

வணக்கம் அங்கிள் அருமையான கதை. பாராட்டுக்கள்.

ம்ம் சீலனின் முடிவு சரியே. திருமணத்திற்கு என்னன்னவோ பொருத்தம் எல்லாம் பார்க்கிறார்கள்.

மனப் பொருத்ததை பார்க்க தவறுகிறார்களே பெற்றோர்கள் தாங்கள் நினைப்பதே

சரி என்று நினைத்து அதனிலே பிடிவாதமாக இருக்கிறார்கள் அதனை அழகாக உங்கள்

கதை மூலம் சொல்லி இருக்கிறீர்கள். ம்ம் விட்டுக் கொடுத்து வாழலாம்தான் இருந்தாலும்

எல்லா விடயத்தையும் விட்டுக் கொடுத்து வாழ ஏலாதுதானே ஆகவே சீலன் எடுத்த முடிவு சரியானதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாத்தான் இருக்கு.ஆனால் மணிக்கும் சீ சீலனுக்கும் அந்த பெண்னுக்கும் இடையில் உள்ளது ஒரு பெரிய கருத்து வேறுபாடு இல்லை என்பதே எனது எண்ணம். பாட்டு கேப்பது கறன்டி பிடிப்பது எல்லாம் ஒரு (பெரிய)பிரச்சனையா?இரன்டு பேருக்கும் விடையங்களை புரிந்து கொள்ளும் பக்குவம் உன்டு.அது கானாதோ புரிந்து கொன்டு வாழ :?: :P

Link to comment
Share on other sites

கதையில்...பல நிஜங்கள்...

பாராட்டுக்கள்...கதைஅருமை

Link to comment
Share on other sites

கருத்துச்சொன்ன 'குஞ்சுகள்" எல்லாருக்கும் நன்றி. உங்கள் கருத்துக்கள் தொடர்பாய் நிறைய எழுத வேண்டும். வார இறுதியில் முயற்சிக்கிறேன்.

அன்புடன்

மணிவாசகன்

Link to comment
Share on other sites

சோலியன், அரவிந்தன், பிறேம், கந்தப்பு, ரமா, சுஜீந்தன், இரசிகை,

அருவி, சஜீவன், தூயா...... ஆக ஆதியின் வாலை அறுத்துப்

பரிசாகப் பெற இவ்வளவு ஆசையா?...

யோவ் மணிக்ஸ்....ஆதியின் வாலை அரிந்து களைத்து எல்லாளன்

சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று காணாமல்ப் போயாச்சு.....

ஆடுகளத்தில் எல்ஸிற்குப் பதில் மணிக்ஸ்...?

சுயத்தை இழந்த விட்டுக்கொடுப்புகள் வேதனைகளை அதிகரிக்கும்.

உயிர்ப்பைத் தொலைத்துவிட்டு உணர்வுகளை இரசிக்கமுடியாது..

மனதின் ஆழத்தில் பதியமிட்டிருக்கும் சின்னச் சின்ன எதிர்பார்ப்புகள்

பார்ப்பவருக்கோஇ கேட்பவருக்கோ புரியாது...

புறநிலை நோக்கில் அநாவசியமாகக் கூடத்தோன்றும்...ஆனால்

அகத்திற்குள் முளைவிட்ட எதிர்பார்ப்புகள் உறங்காது...

எதை விட்டுக்கொடுக்கிறோமோ அதுவே அதிகமாக வாட்டும்...

இது மனித இயல்பு...

விட்டுக்கொடுப்பு இல்லாவிட்டால் வாழ்க்கை இல்லை......

ஆனால் விட்டுக்கொடுப்புகளே வாழ்க்கையாகிவிடக் கூடாது.

வாழ்வின் ஆரம்பத்திலேயே சரியான திக்கில் நகர்ந்தால் எவ்வளவோ இன்னல்களைத் தடுக்கலாம்.

விட்டுக்கொடுப்புகள்... அவள் சுயத்தை அவளும்...இவன் சுயத்தை இவனும் தொலைத்துவிட்டு

இருவருக்குமே உயிர்ப்பில்லா வாழ்வு........

மணிவாசகன் அருமையான கதை வாழ்க்கையென்னும் படகினில் பயணிக்க

ஆரம்பிக்கும் பெண்ணுக்கும்,ஆணுக்கும் வாசிக்கக் கொடுக்கவேண்டிய கதை.....

8) 8) 8)

அலசல் ஆதிவாசி

Link to comment
Share on other sites

ஹாய் ஆதி,

எப்படி இருக்கிறீங்கள்

பறவாயில்லையே, வால் திரும்பி உங்கடை கைக்கே வந்திடும் போலை இருக்கு.

அவ்வளவு அழகாய் கருத்தச் சொல்லியிருக்கிறீங்கள்.

காட்டில் வாழ்ந்தாலும் கருத்துச் செறிவான ஆதியை மெச்சும் மணிவாசகன்

Link to comment
Share on other sites

விட்டுக்கொடுப்பு என்பதை எப்படியான விட்டுக்கொடுப்பு என வரையறுக்க முடியாது.

பிள்ளை பெறஇறோருக்காக சிலதை விட்டுக் கொடுக்கிறது. ஆதுபோல பெற்றோர் பிள்ளைகளுக்காக சிலதையோ பலதையோ விட்டுக் கொடுக்கிறார்கள். அதேபோல சொந்தங்களுக்கான விட்டுக் கொடுப்பு.. இனத்துக்கானவிட்டுக் கொடுப்பு.. நாட்டுக்கான விட்டுக்கொடுப்பு.. இப்படி ஒவ்வொரு நிலைக்கேற்றவாறு விட்டுக்கொடுப்புகளும் மனித வாழ்வுடன் கலந்துதான் வருகின்றன. ஆக, விட்டுக்கொடுப்புகள் இன்றி மனிதனால் வாழ முடியாது.

அதேபோல, கணவன் என்ற நிலையில் மனைவிக்காகவும், மனைனவி என்ற நிலையில் கணவனுக்காகவும் விட்டுக்கொடுப்புகள் நிச்சயமாகத் தேவை. அது எவ்வளவு தூரம் தேவை என்பது அவரவர்களுடைய அறிவைப் பொறுத்த விடயம்.

அதுக்காக விட்டுக்கொடுப்பது தம்மைத் தாமே தாழ்த்திக் கொள்வது என்ற கருத்தை நிச்சயமாக ஏற்க முடியாது. :P

Link to comment
Share on other sites

சோலியன் உங்கள் கருத்தை ஆதிவாசி மறுக்கவில்லை.

விட்டுக்கொடுப்பு இல்லாவிட்டால் வாழ்க்கை இல்லை......

ஆனால் விட்டுக்கொடுப்புகளே வாழ்க்கையாகிவிடக் கூடாது.

மணிக்ஸின் சிறுகதை மணம்முடிக்குமுன் ஒரு இளைஞனும், யுவதியும் தீர்மானிக்கக்கூடிய

அவர்களின் எதிர்காலத்தைச் சுற்றியே அமைந்திருக்கிறது. ஆதலால் மணவாழ்வு என்ற

பந்தத்தினுள் நுழையுமுன் ஒருவர எதிர்பார்ப்புக்கிணங்க

மற்றவர் எதுவரை தன் சுயவிருப்பங்களை ஒதுக்கிவைக்கமுடியும்

என்று தீர்மானிக்கலாம் என்று நினைக்கிறேன்.

பெற்றோரின் மனத்திருப்திக்காக ஒவ்வாத உறவென்று தெரிந்தும் எதிர்காலத்தை

எதிர்ப்பாலரிடம் ஒப்படைப்பதால் வாழ்நாள் முழுக்க சுயத்தைத் தொலைத்த நிலையில் வாழநேரிடும்.

ஆக விட்டுக்கொடுப்பு என்பதும் ஒரு வரையரைக்குள்தான்....

சோலியன் விவாதத்திற்கு வரவில்லை. திருமணம் செய்யுமுன் எதனையும் தீர்மானிக்கலாம்

பிற்பாடு முடியாது.

விட்டுக் கொடுப்பு என்பது ஒருவரை ஒருவர் தாழ்த்திக் கொள்வது

என்று அர்த்தப்படுத்திவிட முடியாது.

அதைப் பெருந்தன்மை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் பெருந்தன்மை

அளவுக்கதிமாகப் போனாலும் இந்தச் சமுதாயத்தில் செயிக்க முடியாது.

Link to comment
Share on other sites

எனக்கு ஒரு சின்ன சந்தேகம் மணிவாசகன். இது உங்களின் கதையா?

தங்களின் சந்தேகம் ஓரளவிற்கு நியாயமானது தான். இந்தக் கதையை எழுதுவதற்கு ஒரு காரணம் இருந்தது.

ஆனால் கதை முழுக்க முழுக்கக் கற்பனையானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை கொந்தய் கியல வடக் நா.

இடைவெளி இருந்தாலும் இடைவெளியை குறைபது தான் புரிந்துணர்வு......

இது எப்படி இருக்கு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.