Jump to content

அந்தக் கிழவனைக் காணவில்லை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் கிழவனைக் காணவில்லை

நாங்கள் இருக்கும் குடியிருப்பிற்கு சற்றுத் தொலைவில் ஓர் ஆறு ஓடிக்கொண்டிருக்கின்றது. அது தன்னுடைய ரகசியங்களைப் பொத்திக் கொண்டே ஓடிக் கொண்டிருக்கின்றது. ஒரு மாலை நேரச் சூரியனும் ஆறும். ஒரு கிறோந்தல் பட்சியும் ஆறும். ஆறும் கிழவனுமாக பல நாட்கள் பேசிக்கொண்டிருந்திருக்கிறா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இரவு நாள், வந்தாரை வரவேற்கும் வண்ணமாய் எந்தநேரமும் திறந்தே கிடக்கும் குடியிருப்பின் மரப் பலகைப் படிகளால் ஏறி நடந்து கொண்டிருக்கும் பொழுது ஒப்பாரி வைக்கும் ஓசை காதுகளைக் குடைந்தது. 'அம்மா" என்று மனதில் செல்லிக் கொண்டேன்.

'நீல நிறச்சாரத்தையும் பையில போட்டுக் கொண்டேல்லோ போயிருக்கிறார். நான் விசரியல்லோ - நான் எங்க எதைப் பார்த்தன். ஐயாட செருப்பு அறுந்து ஆற்றங்கரையில் கிடக்கையிலையே மனசுக்குள் வருத்தம் இருந்தது. இனிக் காண்பேனோ நான் அவரை. ஆற்றில் போயிறங்கி எந்த ஊருக்குப் பயணமானாரோ? எந்த மீன் குத்தி எப்படிச் செத்தாரோ. குளிரால் சொருகியல்லோ குற்றுயிராய் கிடந்தல்லோ. ஆவி துடித்தழுது அவர் போனாரோ? உன்னை நான் போ என்று தானே சொன்னேன் ஐயா!"

ஆற்றின் கரையோரமாக ஒதுங்கிய சாரத்துண்டொன்றைக் கண்டெடுத்து வந்து அவள் அழுது ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தாள்.

அவர் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனும் ஊகம் பெரிதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆயினும் மகள்காரி அதை மறுத்தாள் 'அவர் என்னுடைய அப்பா" அவரை எனக்குத் தெரியும். அவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ளக் கூடியவரல்ல. எனது அப்பா எனக்கு அப்படி ஒரு துரோகத்தை செய்யமாட்டார். அவரை எனக்குத் தெரியும் ஒரு சிறு கண்ணீர் துளியையும் என்ர கண்களில் காணச் சகியாதவர். எனது வாழ்வில் எப்போதும் அக்கறை கொண்டிருக்கின்றவர். அப்பா என்னை மிகவும் செல்லமாக 'என்னுடைய ராசாத்தி" எனக் கூப்பிடுவார். அவர் எங்காவது போயிருப்பார். ஏதாவது ஒரு றெயினில் ஏறி எங்காவது போயிருப்பார். ஏதாவது ஒரு றெயினில் ஏறி சென்றடையும் தூரம் வரை போகட்டும் என இருந்திருப்பார். எந்தத் தரிப்பிடங்களிலும் இறங்காமல் அது சுழன்று கொண்டிருக்கும் பாதைகளில் தன்னிச்சையாகப் பயணம் செய்து கொண்டிருக்கக் கூடும். அவர் கண்ணாடிப் பக்ககமாக என்னை அணைத்து வைத்துக் கொண்டு மரம் செடிகொடிகள் ஓடுவதை ரசித்துக் கொண்டிருந்ததைப்போன்றதொரு பயண நினைவில் தன்னைமறந்து இருந்திருக்கலாம்.

தான் கனவில் காணுகின்ற ஒரு கிராமத்திற்கு அவர் போய்க் கொண்டிருக்கக் கூடும். அவர் ஆற்றுக்குள் இறங்கி இருக்க மாட்டார். அப்படி ஆற்றுள் இறங்கி எங்க போவது

'இங்கிருந்து என்ன பயன்" என்று தொலைந்து போவதற்கு சில நாட்களுக்கு முன் என்னைக் கேட்டாரே தாய் முகத்தை சேலை தலைப்பால் துடைத்தவாறு கேட்டாள்.

அது உன்னோட விளையாட்டுக்குச் சொல்லியிருப்பார்.

ஊரில் இராணுவ நடவடிக்கையின் போது அப்பாவினுடைய படங்களில் கம்பீரமானதும், அழகானதுமான ஒரு புகைப்படம். நான் அவரோடு நிற்கிறதுமான ஒரு அழகிய புகைப்படம் சுவரில் இருந்தது.

அதனை ஆமிக்காரன் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினான்.

நான் பயத்தில் கிணற்றுள் குதித்து மறைந்து கொண்டேன்.

அந்தப் படத்தில் இருந்த அப்பாவா இப்ப எங்கட அப்பா? எப்படி உருக்குலைந்து போனார் தெரியுமா? அவர் அப்படி உருக்குலைந்து போவதற்கு என்ன காரணம் என்று ஒரு நாசமறுப்பும் தெரியுதில்லை நீ அப்பாவை அவதானித்திருக்கிறாயா?

உனக்கு எங்க புள்ள நேரம் இருந்தது. நீ தான் இராப்பகலா அடிச்சுக் கொண்டு திரியுற, ஓய்வொடிச்சலில்லாமல் உழைச்சு என்னத்தைக் கண்ட, எல்லாம் இருண்டு போய் கிடக்கு.

'நீ அழுது வடிக்காத. வீடு வாசல்ல இருந்து அழுதாக்கூடாது" என்றவாறு சன்னலைத் திறந்து வைத்தாள்.

மாலை நேரச் சூரியன் குளிரில் நடுங்கிக் கொண்டே வந்த திசையும் தெரியாமல் போன திசையும் தெரியாமல் போய் மறைந்தான். கட்டிடத்தின் உச்சியில் இருந்து ஒரு குரல் 'புள்ளை என்ன அப்பா கிடைச்சிட்டாரா எனக் கேட்டது."

ஓம் கிடைக்கும் என்றவாறே அவள் சன்னலைச் சாத்திக் கொண்டுவிட்டாள்.

---------------------------

ஆற்றங்கரையில் குடித்து விட்டு வெறியில் தள்ளாடி விழுந்து எழும்பியதை அயலவர்கள் சிலர் தாம் கண்டதாக கதைத்துக் கொண்டு ரயிலை விட்டு இறங்கி வந்துகொண்டிருந்தார்கள்.

அவர்களில் ஒருவன் 'ஆள் பெரிய தண்ணி சாமி அடப்பா."

மற்றவனோ 'இல்லையடாப்பா, அது ஒரு லூஸ் கேஸ். அதுக்கு மண்டையில தட்டிப் போட்டுது."

நவம் 'இல்லையடாப்பா அந்த மனுசனுக்கு ஊரை விட்டிற்று வந்தது கவலையாம்." மற்றவனோ 'அதுக்கு திரும்பிப் போறதுதானே"

நவம் 'அது தான் இவ்வளவு காசைச் செலவழிச்சுக் கூப்பிட்டதுகள் ஓமாமே."

வழியில் அவரது மனைவி எதிர்ப்பட்டதை கண்டவர்கள் கதையை நிறுத்திக் கொண்டார்கள். அவர்களின் கேலி நிறைந்த பேச்சுக்களுக்கும் சிரிப்புக்களுக்கும் இடையால் அவள் அவர்களை கடந்து கொண்டிருந்தாள்.

---------------------------

அறைக்குள் சன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு தனது இளமைக் காலங்கள் பற்றி பெருமையாக அளந்து கொண்டிருந்தார்.

அந்த தவிப்பை உண்மையில் ஒருவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் தன்னுடைய மீன் பிடிப்பைப் பற்றியும், தான்

வெய்யிலுக்கு ஒதுங்கியிருந்த மர நிழல்களின் சுகங்கள் பற்றியும், உடலை ஒரு இசைக்கருவியாக மீட்டிச் செல்கிற கடல் காற்றுப் பற்றியும் பெருமையடிக்கிறார் என்பது மட்டும் தெரிந்திருந்தது.

கக்களம் கொட்டி சிரிக்கிறார்.

பிறகு, கதவிற்கு அருகில் நின்று தாறுமாறாகப் பேசினார். அப்பொழுது தான் எங்களுக்கே தெரியும். மிகப் பெரிய போராட்டத்தின் மத்தியில் அந்த மனுசி படுகிற பாடு. வேளா வேளைக்குச் சாப்பாட்டை சமைத்து எடுத்துக் கொண்டு பூட்டிக்கிடக்கும் கதவைத்திறந்து அவருக்கு சாப்பாடு, தேனீர் கொடுத்துச் செல்வதற்காக வந்து கொண்டிருந்த ஒரு நாள். கோப ஆவேசம் கொண்ட அவர்

'என்னை ஒண்டும் பண்ணேலாது" என்று அடம்பிடித்துக் கொண்டு இறங்கி தெருவில் நடந்து கொண்டு போகத்தொடங்கினார். மனுசி

அவர் பின்னால் ஓடிக் களைத்து திரும்பி ஓடி வந்து வீட்டுக் கதவை

தட்டியது.

நாங்கள் இறங்கி அவர் பின்னால் ஓடினோம்.

'நீங்கள் நடந்து கொள்வது சரியா?"

'சரி, பிழை தீர்மானிக்கிற நிலையில நான் இல்லை, கை நீட்டி முகத்தில அடித்தபிறகு எனக்கென்னடா சீவியம் வேண்டிக்கிடக்கு? நீயும் ஒரு ஆள்தானே. அப்ப ஒரு நீதி கேட்காதவன், இப்ப ஏன் வாற? நான் எங்கையாவது போவன், எங்கையாவது வருவன்."

'சரி, வாங்க றோட்டில வேணாம், ஆட்கள் பார்க்கினம் எங்கட மானம் மரியாதை...."

'மானம் மரியாதையெல்லாம் அண்டைக்கே போயிற்று"

'அழாதேங்க வீட்டில போய் கதைப்பம்"

'உன்னோட ஒரு கதையும் இல்ல் நான் போகப் போறன்; அதை யார் தடுக்கிறது."

கதவை பலமாக அடித்து சாத்திக் கொண்டார்.

---------------------------

அன்றிலிருந்து நாங்களும் பேச்சு வைத்து கொள்வதில்லை. பல்வேறு பிரச்சனைகள் ஒன்றாகச் சேர்ந்து கொண்டிருந்தன. தனித்த ஒரு காரணங்களுக்காக என்றில்லாமல் அது பலதும் பத்துமாய் கிளைவிட்டுக் கொண்டே போனது.

உடுப்பில் ஆரம்பித்த அவரது பிரச்சினை பிறகு மொழியில் என மாறி

உணவில் என்று போய் சுற்றிச் சுழன்று வளர்ந்து கொண்டே இருந்தது.

மருத்துவரிடம் கூட்டிச் சென்று காண்பிப்பதற்காக ஒரு நாள் அவர் புறப்பட்டு சென்று கொண்டிருந்த பொழுது இறுதியாக கண்ட ஞாபகம்.

மருத்துவர் மனோவியல் நிபுணராக இருக்க வேண்டும். அவர் இவருடைய நோய்கள் பற்றி முழுமையாக இல்லாவிட்டாலும் அவரால் சில விடயங்களை குறிப்பிட்டு கூறக்கூடியதாக இருந்தது. 'மதுப்பாவனையை உடனடியாக நிறுத்த வேண்டும்; எக்காரணம் கொண்டும் மது பாவிக்க வேண்டாம்." எனக் கேட்டுக் கொண்டிருந்தார்.

அவர் 'ஓம்"எனத் தலையாட்டினார்.

'அவரை கிராமப்புறங்களுக்கு கூட்டிச் சென்று வாருங்கள்" என மருத்துவர் சொன்னார். அதற்கு அவர்களுடைய உறவினர் ஒருவர் 'அப்படியெல்லாம் கூட்டிக் கொண்டு திரிய இஞ்ச எங்களொருத்தருக்கும் வேலையில்லாம் இல்லை; எல்லாரும் வேலையும் வெட்டியுமா இருக்கிறம்." என்று முகத்தில் அடித்தது மாதிரி பதில் சொன்னார்.

'சோசல் உதவியோட போய் வரலாம்"என மருத்துவர் ஆலோசனை சொன்னார்.

'அவருக்கு பாசை தெரியாது; அதனால் அவரை அவர்களுடனும் அனுப்ப முடியாது. இவரை கட்டி அவிழ்க்கிறது கஸ்டம்' என அவர்கள் மறுத்துவிட்டார்கள்.

முடிவில் மருத்துவர் சில மருந்துகளை எழுதிக் கொடுத்து விட்டிருந்தார்.

அவராலும் நோயாளியுடன் மனம் விட்டுப் பேசக் கூடியதான ஒரு சூழலை உருவாக்கி விட முடியவில்லை இறுதியில் அவர்களும் கைவிட்டதான ஒரு நிலையிலேயே அவர் அன்று வந்து சேர்ந்திருக்க வேண்டும். அன்று இரவு உரத்த குரலில் எழுந்த சத்தத்திற்கு பிறகு அது போன்றதொரு குரல் எழும்பியிருக்கவில்லை; எதையோ தேடுகின்ற

அவலத்தோடு கூடிய குரலை நாங்கள் கேட்கவே இல்லை.

அவருடைய எந்தத் துயரத்தையும் அவருடைய மொழியில் ஆற அமர இருந்து நாங்கள் கேட்டிருக்கவில்லை அவர் எதை பலமாகத் தேடிக்கொண்டு திரிந்தார். அதனுடைய மகிமை என்ன? அதனுடைய இசையென்ன? அது எப்படி ஈர்க்கிறது. அது எப்படி மனிதனுடனான தொடர்பை வைத்திருக்கிறது. அது தோற்றுப் போகும் போது

மனிதனுடைய உடல் எவ்வாறு உடைந்து நொறுங்குகிறது.

அப்போது அவனுடைய கண்கள் எவ்வாறு சக்தியை இழந்திருக்கும்?

என்பது பற்றி அறிகின்ற ஒரு சந்தர்ப்பத்தை அதை ஒரு நாடகமாகவும்

வேசமிடலாகவும் கூத்தாகவும் பம்மாத்தாகவும் கருதியதனால் அவற்றை உணரும் வாய்ப்பை இழந்து விட்டவனாக நின்று கொண்டிருந்தேன்.

---------------------------

பொலிஸ் நிலையத்திற்கருகிலுள்ள ஆற்றங்கரையில் தனது செருப்பை

கழற்றி வைத்து விட்டு அவர் ஆற்றில் குதித்திருக்கிறார். கரையில் கடல் காகங்கள் கலைந்து பறந்திருக்கின்றன. சூரியன் மிகவும் சோகத்தோடு ஒட்டகங்களைப் போல் படுத்திருக்கும் மலைகளுடாக

கடந்துகொண்டு போனான்;. ஆற்றில் குதித்த அன்றைய நாள் மிகவும்

குளிராக இருந்தது. உடல் சில்லிடும் குளிர் அவர் விறைத்துப் போய் உயிரை மாய்த்திருக்கிறார்.

பொலிசார் தேடிக்கொண்டு திரிகிறார்கள்.

பொது நிறமும், கறுப்பு நிறத் தலை முடியும் பின்னால் சற்று வழுக்கையும் கண்டிருந்தார். அவர் அன்று ரௌசரும் சேட்டும் போட்டுக் கொண்டு கோட்டும் அணிந்து கொண்டு மிக எடுப்பாக நடந்து கொண்டு போனதைப் பலர் கண்டிருக்கிறார்கள்.

'ஆளுக்கு ஸ்ரையில் பிடிபட்டிற்று" யாரோ சொல்லிச் சிரித்துக்கொண்டு போயிருக்கிறார்கள்.

அவர் எதையும் காதில் வாங்காது போனதாகவும் பேசிக்கொண்டார்கள்.

குப்பை லொறி ஏற்றிக் கொண்டு போகையில் அவர் அவர்களை கண்கொண்டு பார்க்க விரும்பாதவராக கடந்து போனதற்குள் இவ்வளவு மர்மமும் சூழ்ச்சியும் நிறைந்திருக்கும் என தங்களுக்கு தெரிந்திருக்கவே இல்லை. என அவர்கள் கவலைப்பட்டுக்கொண்டார்கள்.

அவருக்கு தாங்கள் ஒரு வேலை மேரியில் கதைத்து ஒழுங்கு செய்திருந்ததாகவும் அதற்குள் அவர் ஆற்றில் விழுந்து தொலைந்து போனதாகவும் வருத்தப்பட்டார்கள். ஆற்றில் விழுந்து தொலைந்து போன நாளிலேயே அவருக்கு வேலை வழங்குவதற்கான ஒப்புதல் கிடைத்திருந்ததென்றும், அது அவருக்கு ஒரு சிறு நம்பிக்கையை கொடுத்திருக்கக் கூடும் எனவும் நம்பியிருந்ததாகச் சொன்னார்கள்.

ழூ

அன்று காலை எல்லோரும் விசாரனைக்காக அழைக்கப்பட்டிருந்தார்கள்.

தனித்தனியாக விசாரனைகள் மேற்கொள்ளப் பட்டுக்கொண்டிருந்தது.

அமைதியும் சாந்தமும் நிறைந்திருந்த அறையொன்றில் விசாரனை நடந்து கொண்டிருந்தது. ஆற்றங்கரையை அண்டியிருந்த அந்த அறையில் எல்லோரும் வெறித்தபடி இருந்தார்கள். ஆற்றங்கரையின் மரங்கள் காற்றுக்கு ஆடி அசைந்து கொண்டிருந்தன.

கப்பல்கள் பிரயாணிகளை ஏற்றிக்கொண்டு கடந்து கொண்டு போவதை சன்னலூடாக பார்த்துக் கொண்டிருந்தாள் அவருடைய மனைவி.

மகள்மாரும், பேரப்பிள்ளைகளும் உறவினர்களும். அந்த மண்டபத்தில் விசேட பகுதியொன்றில் இருந்தார்கள்.

ஒரு முதிய தாய் தனது பேரப்பிள்ளைகளுக்கு கதை சொல்லிக் கொண்டிருப்பதான பெரிய ஒளிப்படம் அவர்களை பார்த்துக்கொண்டிருந்தது.

பேரப்பிள்ளை

'தாத்தா இருந்திருந்தா"

பேரப்பிள்ளை 1

'தாத்தா, கக்கா"

பேரப்பிள்ளை 2

"தாத்தா இருந்திருந்தா கதை சொல்லுவார்'

பேரப்பிள்ளை

'நாட்டுக்கு என்னை அனுப்பு! எண்டு கத்துவார்"

பேரப்பிள்ளை 2

'பாவம் தாத்தா"

பேரப்பிள்ளை

'தாத்தா இருந்திருந்தால்"

பேரப்பிள்ளை 1

'யானையில போயிருப்பம்"

தாத்தாவின் நினைவும், தகப்பனின் நினைவும் அவர்களைச் சூழ்கிறது.

மீண்டும் வாழ்வின் சின்னச் சின்ன அற்புதமான கனவுகள்

ஓடங்களாக மிதந்தன. விசாரணை அதிகாரியின் முன்னிருந்த மனைவியின் முன்னால் எழுப்பப்பட்ட கேள்விகள் அனைத்தும்

ஒரு மொழிபெயர்ப்பாளன் மூலமாக மொழிபெயர்க்கப் படுகிறது.

விசாரனை அதிகாரி: எத்தனை மணிக்கு வீட்டிலிருந்து இறங்கினார்?

மனைவி: சரியாகச் சொல்ல முடியவில்லை, அவருக்கு மிகவும் பிடித்ததும் ஒரு கிழமைக்கு முதல் அதன் சுவை பற்றியும் வாசனை பற்றியுமாக அவர் நினைவு படுத்தியதுமான கூழ்

அன்று அவருக்காக செய்து கொண்டு நான் எடுத்துச்செல்வதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டிருந்தேன்.

அவர் அதை விரும்பிச் சுவைப்பார் என நான் திடமாக நம்பியிருந்தேன். ஏற்கனவே சாப்பாடுகளின் மீதான ஆர்வமும் ஈடுபாடும் அவருக்கு குறைந்து விட்டிருந்தது. அவர் ஒரு உண்ணாவிரதியைப் போலவும் நடந்து கொண்டிருந்தார் அதனால் கூழ் அவருக்கு மீளவும் உணவின் மீதான விருப்பத்தை ஏற்படுத்தக் கூடும் என விரும்பி

வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அவருக்கு விரும்பிய முருக்கமிலை, வீட்டிற்கு முன்னுக்கு நிற்கிற பனையிலிருந்து போட்ட ஒடியல், தேங்காச் சொட்டு,

குஞ்சு மீன்கள், நண்டு, றால், கணவாய், கலவாய், பயத்தங்காய்,

மீன் எல்லாம் போட்டு புளியும் விட்டும் ஒடியல்மா அளவாக கரைத்து கடல்உப்பு வாங்கி வந்து போட்டு ஆக்கின கூழையும் எடுத்துக் கொண்டு போக கதவு ஓவென்று திறந்து கிடந்தது. அறைக்குள் சென்று பார்த்தேன், அவரைக் காணவில்லை அப்படியே கூழை வைத்து விட்டு எல்லா இடமும் தேடத் தொடங்கினேன்.

விசாரணை அதிகாரி: வீட்டில் அவருக்கும் உங்களுக்கு மிடையில் ஏதாவது தகராறு ஏதும் ஏற்பட்டதுண்டா?

இது நல்ல கேள்வி, அவருக்கும் எனக்கும் என்னைய்யா தகராறு. இல்லை, நீங்கள் என்னைச் சந்தேகப்படுவது போன்றதொரு கேள்வியை எழுப்புவதுதான் எனக்கு மனதில் சங்கடத்தையும் கஸ்டத்தையும் தருகிறது.

இந்த நிலமைக்கு நாம் ஏன் வந்திருக்கிறோம் என்பதை

ஐயா! நீங்கள் அறியமாட்டீர்களா? எனது கணவருக்கும்

எனக்கும் என்னைய்யா தகராறு? ஆசை அருமையாக நான்கு பெண் குழந்தைகளை பெற்றெடுத்து வளர்த்தோம்.

எங்கட நிலத்தில் பயிர் செய்து எங்கட வாழ்க்கையை ஓட்டினோம். அந்த நிலத்தில வாழ முடியாமல் விரட்டப்பட்ட

நாளிலிருந்து அவர் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை.

அவர் ஒரு குழந்தையைப் போல அழுதார். அவர் கடல் குமுறினாப் போல உள்ளத்துக்குள் குமுறினார். காசை காசெண்டு பார்க்காமல் கூப்பிட்ட பிள்ளையள் எங்கள கொல்லுறதுக்கெண்டா? அப்படி ஒரு தகராறும் எங்களுக்கு கிடையாது.

விசாரணை அதிகாரி: அவரின் உடம்பில் அடிபட்ட காயங்கள் இருக்கிறதே?

அது அவர் எங்கையாவது அடிபட விழுந்திருப்பார். எனி

ஊரில ஆமிக்காரன் அடித்த காயத்தழும்புகளும் இருக்கும்.

அவர் ஏற்கனவே பல உள் காயங்களோட திரிஞ்ச மனிதர் தானே ஐயா

விசாரணை அதிகாரி: வேறு யாருடனாவது அவருக்கு பிணக்குகள் இருந்திருக்க வாய்ப்புகள் இருந்திருக்கிறதா?

சந்திரிகா அம்மையார் தான் அவாட படையள வீடு வாசலுக்கு அனுப்பி எங்களை இந்த நிலமைக்கு கொண்டு வந்தவா

அவர் தான் அதுக்கு பிறகு நான்கு சுவருக்குள்ள அடங்கிப் போனவரா இருந்தார். அந்தச் சுவர்களுக்கும் அவருக்கும் இடையில் தான் ஏதாவது பிணக்கு இருந்திருக்கக் கூடும்.

சில வேளை யன்னல்களை திறந்து வைத்துக் கொண்டு

யாரையோ பேசுவார். அல்லது திட்டுவார். அவர்களோடு

சிரித்ததாக எனக்குச் சொல்லத்தெரியவில்லை அவர்கள் யார் என்றும் எனக்குச் சொல்லத் தெரியவில்லை

விசாரணை அதிகாரி: அவர் இறுதி நாட்களின் போது தீவிரமாகக் கேட்டுக்கொண்டிருந்த பேசிய விடயங்கள் என்ன?

அது தான், என்னுடைய வீட்டிற்கு என்னை அனுப்பி வையுங்கள் என்பது தான்

விசாரணை அதிகாரி: ஏன் அதற்கான முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ளவில்லை?

மனைவி: இது ஞாயம் தான் 1994ம் ஆண்டு இடம் பெயர்ந்த நாங்கள் திரும்பி போக முடியவில்லை. அப்படித் திரும்பிச் சென்று வாழ்வதற்கான எந்த வழியும் எமக்கில்லை.

ஆமி எங்கட வீடுகளப் பிடித்து முகாமாக்கி வைத்திருக்கிறான்.

குடி நீர் கிணறுகளுக்குள் எலும்புக்கூடுகள் அகற்றப்படாமல் கிடக்கின்றன. தோட்டக்காணிகளுக்குள்ளும் புல் வெளிகளிலும்

மிதி வெடிகள் விதைக்கப்பட்டிருக்கிறது. ஆமிக்காரங்கள் எந்த நேரத்தில் எப்ப எங்க என்ன செய்வாங்கள் என்று தெரியாமலிருக்கு. உயிருக்கு பயந்து ஓடி வந்த நாங்கள்

என்னெண்டு திரும்பிப் போகிறது. இப்படி இருதலைக் கொள்ளி எறும்பாய் துடிப்பமெண்டு யாருக்குத் தெரியும் ஐய்யா!

விசாரணை அதிகாரி: சரி நீங்கள் அவரது சடலத்தைப் போய் பார்க்கலாம்.

----

வானம் தூறிக்கொண்டிருந்தது, ஆற்றங்கரையில் அவள் நின்றிருந்தாள்

'நீ ஆற்றில போகவேண்டும் என்று சொன்ன உன்னை ஐயா ஆற்றிலேயே கரைத்து விடுகிறேன்." கைகளிலிருந்த மலர்களை

தூவி ஆற்றில் விட்டாள்.

ஆறு தன் மர்மங்களையும் மறைத்துக்கொண்டு நளினமாக ஓடிக்கொண்டிருந்தது. 'ஆறே, நீ காலமா, காலத்தின் தோழியா?" என வினாவினாள். 'நீ எவ்வளவு காலமாக ஓடிக்கொண்டிருக்கிறாய், நீ உலகமெல்லாம் இருந்து தவிக்கும் மனிதர்களுடன் பேச்சு வைத்திருப்பாய். அவர்கள் எல்லோரும் சிந்தும் கண்ணீரால் தான், நீ உயர்ந்து செல்கிறாயா? எனது வயதான அந்தக் கிழவன் உன் மீது விழுந்து உயிரை மாய்த்துக் கொள்ளுமுன் சொன்ன வரிகளையாவது, இங்கு உனக்கு முன்னுக்கு அவருடைய பேரன் நிக்கிறான், அவனுக்காவது சொல்லமாட்டாயா?"

ஆறு எழில் மிக்க தன் கோலங்களுடன் மெல்ல ஓடிக் கொண்டே இருந்தது.

தா. பாலகணேசன்

எரிமலை - யூன்

Link to comment
Share on other sites

உயிர் பாதுக்காக்க எங்கு சென்றாலும் தாயக நினைவுகள் எல்லோரையும் கொஞ்சம் கொஞ்சமாக சாகடிக்கும் என்பதை அழகாக சொல்லியிருக்கின்றார் எழுத்தளார். பாராட்டுக்கள்.

இணைப்புக்கு நன்றி கந்தப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனைப்புக்கு நன்றி கந்தப்ஸ்........

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதை கண்களில் நீரை வரவைத்துவிட்டது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.