Jump to content

சுப. உதயகுமாரனின் முகப்பக்கத்திலிருந்து... ..


Recommended Posts

http://www.facebook.com/spudayakumar1

 

எங்கேப் போகிறோம், மாணவர்களே?

கனவா, கற்பனையா, காட்சிப்பிழையா என்று நம்மை கிள்ளிப்பார்க்கச் செய்கிறது தமிழத்தில் தற்போது நடந்துவரும் மாணவர் புரட்சி. நீண்ட காலமாக எல்லோராலும் வஞ்சிக்கப்பட்டிருக்கும் தமிழினம், ‘பொறுத்தது போதும்’ எனப் பொங்கி எழுந்து கொண்டிருக்கிறது. இந்த எழுச்சி 2009-ம் ஆண்டே முழு வீச்சில் வரவேண்டியது. ஆனால் சில சுயநலவாத இனத்துரோகிகளால் அது மழுங்கடிக்கப்பட்டு, முடக்கப்பட்டது. தொடங்கிவிட்ட மாணவர்கள் எப்படித் தொடரலாம் என்பது பற்றி எனக்குத் தெரிந்த சில கருத்துக்களை இங்கேப் பதிவிடுகிறேன். ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் உங்கள் விருப்பம், தெரிவு, உரிமை.

[1] களத்தில் நிற்கும் கல்லூரிகள், மாணவர்கள் அனைவரும் அவரவர் கல்லூரியில் ஓர் ஒருங்கிணைப்புக் குழு உடனடியாக ஏற்படுத்தியாக வேண்டும். இறுதியாண்டில் இருக்கும் மாணவர்கள் ஓரிரு மாதங்களில் வெளியேப் போய்விடுவார்கள் என்பதால் அவர்களைத் தவிர்க்கலாம். பெண்கள், சிறுபான்மையினர், தலித் போன்ற அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய 10 பேர் ஒருங்கிணைப்புக் குழுவை ஏற்படுத்தி, பொறுப்புக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். தலைவர், செயலாளர் எனும் அடுக்கதிகார முறை (hierarchy) வேண்டாம். பொது நிர்வாகம், மேடை நிர்வாகம், நிதி நிர்வாகம், தகவல் தொடர்பு, வெளியுறவு, சுகாதார வசதி என ஒவ்வொரு ஒருங்கிணைப்பாளருக்கும் ஒரு பொறுப்பைக் கொடுத்துவிட்டு, அனைவருமாகக் கூடி ஒருமித்த முடிவுகளை (consensual decision-making) எடுங்கள்.

[2] இந்த ஒருங்கிணைப்புக் குழு அவ்வப்போது கூடி இடம், பொருள், ஏவல் அறிந்து போராட்ட முடிவுகளை எடுக்கட்டும், தொடரட்டும். பெற்றோர், கல்லூரி நிர்வாகத்தினர், அரசியல், சமூகப் பிரமுகர்கள் யார் வேண்டுமானாலும் வரட்டும், ஆதரவு தரட்டும்; பேசவிடலாம், கருத்துக்களைக் கேட்கலாம். ஆனால் அவர்களை முடிவெடுக்க விடவேண்டாம். போராட்டம் நடக்கிற இடம் உங்கள் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கட்டும். பாதுகாப்பு உணர்வு, ஏற்பாடுகள் மிக முக்கியம். சமூக விரோதிகள் விஷமங்கள் செய்யாமலிருக்க, புழுப் பூச்சிகள் அண்டாமலிருக்க, காவல்துறையினரோடு மோதல் வராமலிருக்க முன்னேற்பாடுகள் அவசியம்.

[3] உடனடியாக உங்கள் மாவட்டத்திலுள்ள ஊர்களில் நடக்கும் கல்லூரி மாணவ, மாணவியர் போராட்டங்களை ஓர் ஒருங்கிணைப்பாளர் தொலைபேசி அல்லது முகநூல் வழியாகவோ, அல்லது நேரில் சந்தித்தோ தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது மிக முக்கியம். அனைவருமாக சேர்ந்து ஒரு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஏற்படுத்துவது மிகவும் இன்றியமையாதது. இன்னொரு ஒருங்கிணைப்பாளர் பிற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுடனும் தொடர்பு ஏற்படுத்திப் பேசிக்கொண்டிருப்பது, தகவல் பரிமாறிக் கொள்வது மிக அவசியம்.

[4] மாணவர்கள் பலம் மிக்கவர்கள். ஆனால் நம்மைப் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடு வேண்டாம். நாமெல்லாம் சே குவாராக்களும் அல்ல, இங்கே நடப்பது கியூபா புரட்சியுமல்ல. அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நேரிடும்போது, முன்னதாகவே கூடிப்பேசி முடிவெடுத்துவிட்டு, கருத்துப் பரிமாற்றக் கலையில் தேர்ச்சி பெற்ற வெளியுறவு ஒருங்கிணைப்பாளர் தலைமையில் பேசலாம். அரசு அதிகாரிகளிடம், காவல் துறை அதிகாரிகளிடம் மரியாதையாக ஆனால் உறுதியாகப் பேசுவதும், நமது இலக்கு இவையெனக் குறிப்பிட்டுச் சொல்வதும், அதற்காக நமக்கு உதவக் கேட்டுக்கொள்வதும் நல்ல அணுகுமுறையாக இருக்கும். அதிகாரிகள் நம்மைப் பார்த்து பயப்படும்படியான, வெறுக்கும்படியான மொழி, உடல்மொழி, கோஷம், அணுகுமுறை, அராஜகம் வேண்டாம்.

[5] அதுபோல ஊடகங்களை பயன்படுத்திக் கொள்வது முக்கியமானது. அவர்கள் கேட்கும் கேள்விகள் நமக்குப் பிடிக்கவில்லையென்றாலும், எரிச்சல் தந்தாலும், அவர்களை இணைத்துக் கொண்டு நடப்பதுதான் நல்லது. ஊடகங்களோடு ஒருவரே பேசுவது சிறப்பு; வீண் குழப்பங்களைத் தவிர்க்கலாம். 

[6] நமது கோரிக்கைகள் என்னென்ன, நமக்கு என்ன வேண்டும் என்பது நமக்குத் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். தமிழ்க் கடலின் அந்தப்பக்கம் இருக்கும் நம் சொந்தங்கள் தங்கள் தாயகமாம் தமிழீழம் அமைத்துக்கொள்ள பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இம்மாத இறுதியில் ஜெனீவாவில் நடத்தப்படும் மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்திற்குப் பதிலாக இந்தியா மாற்றியமைக்கப்பட்டத் தீர்மானம் கொண்டுவர வேண்டும். இனப்படுகொலை செய்த ராஜபக்சே கும்பல் மீது சுதந்திரமான (ஆசிய நாடுகள் தவிர்த்த) சர்வதேச நீதி விசாரணை வேண்டும். இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகம் அகற்றப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் பெரும்பாலும் அனைத்து மாணவர் குழுக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்க்கடலின் இந்தப் பக்கம் உள்ள தமிழர் நிலையைப் பொறுத்தவரை, தமிழக மீனவர் பாதுகாப்பு பிரச்சினை அனைத்து மாணவர்களாலும் ஏற்கப்படுகிறது. 

[7] மத்திய, மாநில அரசுகள் போராட்டங்களையும் விரும்புவதில்லை, சமூக-பொருளாதார-அரசியல் ஏற்பாடுகளை மாற்றியமைக்கவும் விரும்புவதில்லை. கையாலாகாத மக்கள் விரோத மன்மோகன் சிங் அரசு மேற்காணும் எந்த கோரிக்கையையும் ஏற்காது. முடிந்தால் ராஜபக்சே குடும்பத்துக்கு இன்னும் அதிகமாக உதவிகள் செய்யும், தமிழர்களை முறியடிக்கும். தேசிய எதிர்க்கட்சியான பா.ஜ.க. முதலைக் கண்ணீர் வடிக்கும். மார்க்சிஸ்ட் தோழர்கள் ஒன்றுபட்ட இலங்கை என்று பிதற்றிக் கொண்டிருப்பர். இவர்கள் யாரையும் நம்ப முடியாது, நம்பக்கூடாது.

தி.மு.க.—அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை யார் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை, அவர்களுக்கு 40 தொகுதிகளிலும் வெற்றி வேண்டும், தில்லியிலே அதிகாரம் வேண்டும், அமைச்சர் பதவி வேண்டும், ஏராளமானப் பணம் வேண்டும்.
தி.மு.க.வைப் பொறுத்தவரை நாமெல்லாம் முட்டாள்கள், நம்மை இன்னும் தொடர்ந்து ஏமாற்றலாம் என்று பகற்கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். இவர்கள் முற்றிலுமாக முறியடிக்கப்படவேண்டும்.

மதிற்மேல் பூனையாய் உட்கார்ந்து கவனமாய் பார்த்துக் கொண்டிருக்கும் அம்மாவின் அரசு சும்மா இருப்பதாக நினைக்கக் கூடாது. பாராளுமன்றத் தேர்தல், அனைத்து தரப்பினரின் வாக்கு, 40 தொகுதிகளில் வெற்றி,– எனும் கணக்குத்தான் கைகளைக் கட்டிப்போட்டிருக்கிறதே தவிர அங்கே ஈழத்தமிழர் பாசமோ, இங்குள்ள தமிழர்மீது அன்போ எதுவும் கிடையாது. பெரிய அடக்குமுறை நேரடியாக வராது; ஆனால் காலுக்குக் கீழே கட்டையை உருவும் வேலை கச்சிதமாக நடக்கும். மாணவர்களுக்கு. சற்றே கால அவகாசம் கிடைக்கலாம். அதை எப்படி அறிவுக்கூர்மையுடன் பயன்படுத்துவது என்று சிந்திப்பது நல்லது.

[8] போராட்டம் நடக்கட்டும். தொலைநோக்குப் பார்வை, அறிவுபூர்வமான அணுகுமுறை அவசியம் வேண்டும். நமது கையில் இருக்கும் ஒரே மிகப் பெரிய ஆயுதம் பாராளுமன்றத் தேர்தல்தான். அதை எப்படி பயன்படுத்துவது என்று சிந்திப்பது மிக முக்கியமானது. இதற்காக எதிர்வரும் ஏப்ரல் 7-ம் தேதி, ஞாயிற்றுக் கிழமை, காலை 9 மணிக்கு இடிந்தகரையில் ஒரு மாபெரும் கலந்தாலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறோம். இது ஒரு புதுக்கட்சி தொடங்கும் முயற்சியோ அல்லது கூட்டணி அமைக்கும் திட்டமோ அல்லது யாரை ஏமாற்றி நாம் எம்.பி. ஆகலாம் எனும் கபட நாடகமோ அல்ல.

நம்மைப் போல தமிழின விடிவு பற்றி, தமிழரின் வருங்காலம் பற்றி சிந்திக்கும் நண்பர்களோடு வாருங்கள். தமிழகமெங்கும் உள்ள ‘மக்கள் அரசியல்’ நடத்தும் சிறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், சேவை நிறுவனங்கள், மக்கள் மன்றங்கள், நண்பர் குழுக்கள் என யாராக இருந்தாலும் வரலாம். 144 தடை உத்தரவு நம்மைக் கட்டுப்படுத்துவது இல்லை. வரும்போது ஒரு மின்னஞ்சல் (koodankulam@yahoo.com) அல்லது ஒரு குறுஞ்செய்தி (9865683735) அனுப்புங்கள்; நாங்கள் வழி சொல்கிறோம். எளிய உணவுக்கு ஏற்பாடு செய்கிறோம். பயணச் செலவை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்.

வாருங்கள். வருவதற்கு முன்னால் உங்கள் கருத்துக்களை அறியத்தந்தால் (koodankulam@yahoo.com) நமது நேரத்தை கச்சிதமாக உபயோகிக்கலாம். சேர்ந்து உட்கார்ந்து சிந்திப்போம், பேசுவோம், செயல் திட்டம் வகுப்போம். இடிந்தகரை விடிந்தகரை ஆகும்! வீழ்ந்து கிடக்கும் தமிழினம் வீரியத்தோடு எழுந்து நிற்கும்!

சுப. உதயகுமாரன்
ஒருங்கிணைப்பாளர்
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

இடிந்தகரை
மார்ச் 14, 2013

 

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

இடிந்தகரைக் கடிதம்-1

இடிந்தகரை
மார்ச் 16, 2013


அன்பார்ந்த தமிழக மாணவ, மாணவியர்க்கு:

வணக்கம். தமிழகம் முழுக்க தமிழின விடுதலை உணர்வும், உரிமை வேட்கையும் கொண்ட நம் மாணவ, மாணவியர் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேரணி என்று பல்வேறுப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருப்பது மனதுக்கு மிகுந்த ஆறுதல் அளிக்கிறது. அடிமைப்பட்டுப்போன இனம் கண் விழிக்கிறதே, காலூன்றி எழுகிறதே என்று மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஒரு மாபெரும் வரலாற்றுக் கடமையை நமது மாணவ மாணவியர் செய்துகொண்டிருக்கிறீர்கள். பொறுமையோடு, பொறுப்புணர்வோடு, அற்புதமாகப் பணியாற்றுகிறீர்கள். தமிழகம் முழுவதுமுள்ள பல்வேறு கல்லூரி மாணவர்களிடம் நான் பேசிவருகிறேன். அழகான தமிழில், அருமையானக் கருத்துக்களை, ஆணித்தரமாக எடுத்து வைக்கும் விதம், அர்ப்பணிப்பு, அரசியல் தெளிவு, அபாரமான துணிவு – உண்மையிலேயே ஒரு மிகப்பெரிய நம்பிக்கை துளிர் விடுகிறது மனதில்.

சாதி, மதம் எனும் ஆயுதங்கள் கொண்டு தாக்க வருவோரிடமும், அரசியல் பித்தலாட்டங்கள் நடத்தி உங்களை உபயோகிக்க வருவோரிடமும் கவனமாக இருங்கள். “கல்வி கெட்டுப் போகுமே, எதிர்காலம் இருண்டு போகுமே” என்று அங்கலாய்ப்பவர்களிடம் சொல்லுங்கள். எந்தக் கல்லூரியும், எந்தப் பேராசிரியரும் கற்றுத்தராத அறிவினை, கலைகளை, திறமைகளை இந்தப் போராட்டக்களம் கற்றுத்தருகிறது என்பதை. பேச்சுக்கலை, கேட்கும் திறன், அலசி ஆராயும் பக்குவம், கருத்துப் பரிமாற்றம் நடத்தும் முதிர்ச்சி, கூடிப்பேசி முடிவெடுக்கும் ஆக்கம், ஆளுமைத் திறன் என ஏராளமான விடயங்களை நீங்கள் படித்து அடுத்தத் தலைமுறை தலைவர்களாக உருமாறிக் கொண்டிருக்கிறீர்கள்.

பொதுவாக ‘சேவைக்குமுன் சுயம்’ (self before service) என்பதுதான் நமது கல்லூரிக் கல்வியின் அணுகுமுறை. ஆனால் இப்போது நீங்கள் கடைபிடிப்பது ‘சேவை வழி சுயம்’ (self through service). முதல் வழியில் கல்லூரிப் பேராசிரியர்கள் உங்களைத் தயாரிக்கிறார்கள்; இரண்டாவது வழியில் நீங்களே உங்களைத் தயாரிக்கிறீர்கள். லஞ்சம், ஊழல், சுயநலம், திறமையின்மை, முதுமை, கயமை என அழுகி நாறிக் கொண்டிருக்கும் இன்றையத் தலைவர்கள் மாற்றப்பட்டாகவேண்டும். குழந்தைக்கு அடிக்கடி டயாப்பர் (diaper) மாற்றுவது போல, ஒரு நாட்டுக்கும் அவ்வப்போது தலைமையை மாற்றியாக வேண்டும். மாற்றாமல் அப்படியே விட்டுவிட்டால், இரண்டுமே நாறிப் போகும், இரண்டுக்குமே நோய் வந்து விடும்.

தமிழினம் இன்று நோய்வாய்ப்பட்டிருக்கிறது. தமிழ்க்கடலுக்கு அந்தப் பக்கம் தமிழீழ மக்கள் சிங்களப் பேரினவாத வைரசால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். அது ஒன்றரை லட்சம் மக்களைக் கொன்று குவித்து, ஏராளமான குடும்பங்களை நிர்மூலமாக்கி, எண்ணற்ற தனி மனிதர்களை நாசமாக்கி நசுக்கி அழித்து, வளர்ச்சியைத் தடுத்து, அமைதியைக் கெடுத்து ஒரு கோர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. அந்த வைரசோடு சேர்ந்து வாழ முடியாது. தமிழ்க்கடலுக்கு அந்தப்பக்கம் தமிழீழம் மலர்ந்தேயாக வேண்டும்.

தமிழ்க் கடலுக்கு இந்தப் பக்கமோ, “உடன் பிறந்தே கொல்லும் வியாதி” நம்மைப் பிடித்தாட்டுகிறது. பகட்டாக ‘டாக்டர்’ என்று வருகிறவர்களெல்லாம் மோசமான மன நோயாளிகளாக இருக்கிறார்கள். தலைவர் என்று தம்மை முன்னிறுத்துபவர்கள் பெரும்பாலானோர் தகைமையற்ற கயவர்களாக, தரகர்களாக இருக்கின்றனர். நிறைய அரசியல்வாதிகள் அட்டகாசமாக நடிக்கிறார்கள், நிறைய நடிகர்கள் அப்பட்டமாக அரசியல் செய்கிறார்கள். இரண்டு கூட்டத்துக்குமேத் தேவை தமிழனின், தமிழச்சியின் பணம் மட்டும்தான்.

தமிழ்க் கடலுக்கு அந்தப்பக்கம் தமிழ் இளைஞர்கள் போராடி, ஒரு தற்காலிக பின்னடைவை சந்தித்து நிற்கிறார்கள். தந்தை செல்வா, பெரியவர் பொன்னம்பலம் போன்றோர் நடத்திய அறவழிப் போராட்டங்கள் அடித்து நொறுக்கப்பட்டபோது, நீதி தொடர்ந்து மறுக்கப்பட்டபோது மென்முறை வன்முறையிடம் தோற்றது. இளைஞர்கள் போராட்டத்தைப் போராக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்களிடமிருந்துப் பெற்ற உண்மையை, திமிரை, பொதுநலத்தை நமக்கே உரித்தான மென்முறைச் சிறப்புக்களுடன் சேர்த்து அவர்களுக்குக் கைகொடுக்க விழைந்து நிற்கிறோம் தமிழ்க் கடலின் இந்தப் பக்கம்.

அங்கேயும், இங்கேயும் ஏராளமான எதிரிகளும், துரோகிகளும் நம்மை எதிர்த்து நிற்கிறார்கள். அங்கே ராஜபக்ஷேயும், அவனது இராணுவமும், புத்த பிக்குகளும் மட்டும்தான். இங்கே எத்தனையோ பேர்! கதர் முசோலினிகளும், காவி ஹிட்லர்களும் தில்லியிலே நம்மை எதிர்க்கிறார்கள்; அவர்களின் தமிழக ஏஜெண்டுகள் அதை அப்படியே சிரமேற்கொண்டு நம்மை சிதைக்க வருகிறார்கள். “ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட்கள்” என்று சி‌பி‌ஐ (CPI) தோழர்களோடுகூட கைகோர்க்க முடியாத கையாலாகாத மார்க்சிஸ்ட்களும், எஸ்.எஃப்.ஐ (SFI) அடிப்பொடிகளும் “ஒருங்கிணைந்த இலங்கை” என்று வாய் கிழியப் பேசுகிறார்கள். இரண்டு பஞ்சாப்கள் இருக்கலாமாம், இரண்டு வங்காளங்கள் இருக்கலாமாம்; ஆனால் இரண்டு தமிழகங்கள் இருக்கக் கூடாதாம்.

தமிழினத்தின் மீது தன்னை தலைவராகத் திணித்துக் கொண்ட ஒருவர், நாளொரு நாடகமும், பொழுதொருப் புளுகுமாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். நாமெல்லாம் இன்னும் ஏமாந்துகொண்டிருப்பதாக மனப்பால் வேறு குடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு பக்கவாத்தியங்கள் வாசிக்க ஒரு சுயநலவாதக் கூட்டம் படையெடுத்து நிற்கிறது. தமிழகத்தின் மீட்பராகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் இன்னொருவரோ தனது ஆட்சிதான் மீட்சி, நீங்களெல்லாம் வெறும் சாட்சி என்று காட்சி அளித்துக் கொண்டிருக்கிறார். மொத்தத்தில் தமிழ்க் கடலின் இரண்டு பக்கமும் ஒரு முழுப் புரட்சி நடந்தாக வேண்டும். அதை நடத்தும் நம்பிக்கை நட்சத்திரங்களாகத் தோன்றியிருக்கிறீர்கள் நீங்கள்.

தமிழ்க் கடலுக்கு அங்கே இனப்படுகொலை செய்த ராஜபக்சே, அவன் குடும்பத்தினர், சிங்கள இராணுவம், புத்த பிக்குகள், அவர்களின் பன்னாட்டுத் தோழர்கள் அனைவரும் சர்வதேச நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்படவேண்டும். பாஸ்னிய (Bosnia) முஸ்‌லீம்களை இனச்சுத்தம் (ethnic cleansing) என்ற பெயரில் 1995-ஆம் ஆண்டு கொன்றுகுவித்த செர்பியாவின் (Serbia) அதிபர் ஸ்லோபோடான் மிலோசவிச் (Slobodan Milosevic) இனப்படுகொலைக் குற்றத்துக்காக விசாரிக்கப்பட்டு, விசாரணை நடந்துகொண்டிருந்தபோதே 2006-ஆம் ஆண்டு சிறையில் இறந்தான். 

ருவாண்டா (Rwanda) நாட்டின் டுட்சி (Tutsi) இன மக்களை 1994-ஆம் ஆண்டு கொன்றொழித்த ஜான் பால் அகயேசு (Jean Paul Akayesu) எனும் கொடூர ஹுட்டு (Hutu) இன அரசியல்வாதி 1998-ஆம் ஆண்டு இனப்படுகொலைக் குற்றத்துக்காக விசாரிக்கப்பட்டு தற்போது மாலி நாட்டில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறான். ராஜபக்சே கூட்டத்தைக் கூண்டுக்கு அனுப்புவோம். சேனநாயக்க காலம் முதல் ஜெயவர்தனே காலம் வரை நீறுபூத்த நெருப்பாக இருந்து, பின்னர் சந்திரிகா காலம் வரை கொளுந்துவிட்டு எரிந்த தமிழீழக் கனவை ராஜபக்சே காட்டுத்தீயாகப் பரப்பிவிட்டான். உயிர் துறந்த மாவீரரும், மக்களும் தமிழீழத்துக்கான அடித்தளத்தை அமைத்துவிட்டார்; அதன்மீது நாம் கட்டியெழுப்பியாகவேண்டும்.

தமிழ்க் கடலுக்கு இங்கே தமிழர்கள் என்ற இன உணர்வை ஏற்படுத்தியாக வேண்டும். சாதாரணத் தமிழ் மக்களின் வாழ்வுரிமைகள், வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்பட்டாக வேண்டும். வளர்ச்சி என்ற பெயரில் நம் மண்ணும், மலையும், நீரும், கடலும், காடும், காற்றும் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்தியாக வேண்டும். எங்கள் தலைமுறை 40 ஆண்டுகள் மின்சாரம் பெறுவதற்காக, உங்கள் குழந்தைகள் ஊனமுற்றவர்களாக, உடல்நலமில்லாதவர்களாகப் பிறக்கட்டும் என நினைக்கும் பேடித்தனத்தை கேள்விக்குள்ளாக்கியேத் தீரவேண்டும். கிட்டத்தட்ட 600 தமிழ் மீனவர்கள் சிங்களப் படையால் கொல்லப்பட்டப் பிறகும் சென்னை தில்லிக்கு கடிதம் எழுதுவது, தில்லி சொல்லி வைத்தாற்போல சும்மா இருப்பது எனும் நாடகத்தை முடித்தாக வேண்டும்.

சுயநலவாதிகள், பிழைப்புவாதிகள், சந்தர்ப்பவாதிகளை இனங்கண்டு புறந்தள்ள வேண்டும். லஞ்சம், ஊழல், திறமையின்மை முற்றிலும் அகற்றப்பட்டாக வேண்டும். பொதுவாழ்வுக்கு வருவோர் உண்மையும் தூய்மையும் ஒழுக்கமும் உடையோராய் இருக்க வேண்டும்; இல்லையேல் வேரோடு, வேரடி மண்ணோடுக் களையப்பட வேண்டும். அறவழியில், அறிவு வழியில் தொடருங்கள், தோழர்களே! அனைத்து உதவிகளும் செய்ய நம் மக்கள் அணியமாய் இருக்கிறார்கள். சீப்பை ஒளித்து வைப்பதால், திருமணங்கள் நின்று விடுவதில்லை. கல்லூரிகளை, விடுதிகளை மூடிவிடுவதால் புரட்சிகள் அழிந்து விடுவதில்லை.

தமிழகமெங்கும் தவமிருக்கும் உங்களை நானோ, நண்பர்கள் புஷ்பராயனோ, மை.பா. நன்மாறனோ, முகிலனோ, மில்டனோ, கெபிஸ்டனோ, எங்களை இயக்கும் சகோதரிகளோ வந்து சந்திக்க இயலாமைக்கு உளமாற வருந்துகிறோம். இடிந்தகரை ஊரைவிட்டு வெளியே வந்தால் கைது செய்யக் காத்திருக்கிறது தமிழகக் காவல்துறை. நேற்று (மார்ச் 15) எங்கள் போராட்டக்குழுவிலுள்ள கூடங்குளத்தைச் சார்ந்த தோழர் கணேசன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

எங்கள் உடல்கள் இங்கேயிருந்தாலும், உயிர்களும், உணர்வுகளும் உங்களைச் சுற்றியே வட்டமிட்டவண்ணம் இருக்கின்றன. சிறைப்பட்டிருக்கும் நாங்கள் முக்கியமல்ல; நமது இனம் விடுதலை அடைந்தாக வேண்டும். இனவிடுதலை என்பது இன்னொருவரிடம் யாசித்துப் பெறுவதல்ல; நாமே எடுத்துக் கொள்வது. புது வாழ்வு என்பது இன்னொருவர் நமக்குப் பிச்சைப் போடுவதல்ல; நாமே அமைத்துக் கொள்வது. வாருங்கள் தோழர்களே, வழி நடத்துங்கள்!

அன்புடன்,

சுப. உதயகுமாரன்
ஒருங்கிணைப்பாளர்
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

என்ன வேண்டும் நமக்கு மாணவத் தோழர்களே?
(விவாதத்துக்கான ஒரு வரைவு)

தமிழகமெங்கும் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிற நமது தம்பியரிடம் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். தங்களை மாநில அளவில் ஒருங்கிணைக்கும் பணிகளில் அவர்கள் ஈடுபட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அந்த முக்கியமான பணி ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கும்போது, நமக்கு என்னதான் வேண்டும் என்பது குறித்த ஒரு தெளிவானப் பார்வையும், தீர்க்கமான நிலையும், ஒத்தக் கருத்தும் மிக மிக அவசியம். நமது கோரிக்கைகள் என்னென்ன, நமக்கு என்ன வேண்டும் என்பது நமக்குத் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும்.

எல்லா ஊர்களிலும், அனைத்துக் கல்லூரிகளிலும் ஒரேவிதமான கோரிக்கைகளை முன்வைப்பது நமது போராட்டத்துக்கு மேலும் வலுவூட்டும். அதே போல எளிதில் அடைய முடிகிற, சாத்தியமான கோரிக்கைகளிலிருந்துத் தொடங்கி படிப்படியாக மேனோக்கிப் போவது அறிவுடைமை. ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ என்று பேசுவது, கோருவது, செயல்படுவது நமது போராட்டத்தை திசை திருப்பி, வீண் பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிடும். எடுத்துக்காட்டாக, ஒருசிலர் “தமிழீழம் கொடு, அல்லது தமிழகத்தை விடு” என்று கோரிக்கை வைக்கிறார்கள்; வேறு சிலர் “தனித் தமிழீழம், அல்லது தனித் தமிழ் நாடு” என்று மிரட்டுகிறார்கள். கையிலிருக்கும் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு பதிலாக, அதை உருமாற்றி, உசுப்பேற்றி, மேலும் சிக்கலாக்கிவிட வேண்டாம்.

போராட்டக்களத்தில் நிற்கும்போது நம் பேச்சு, செயல், சிந்தை, குணநலன், இயல்பு அனைத்திலும் நாம் கவனம் செலுத்தியாக வேண்டும். எட்டு கோடித் தமிழர்கள் வாழும் நாடான இந்தியா நமது உணர்வுகளைப் புறந்தள்ளி, நமது எதிரிகளோடு, துரோகிகளோடு சேர்ந்து நம்மை அவமதிக்கக்கூடாது, புண்படுத்தக்கூடாது, அன்னியப்படுத்தக்கூடாது என்று எச்சரிப்போம். இன்றைய ஈழப் பிரச்சினை இப்படியான அன்னியப்படுத்தலில் ஆரம்பமானதுதான் என்று சுட்டிக்காட்டுவோம். 

அடுத்தபடியாக, சில முக்கிய முடிவுகள் எடுத்தாக வேண்டும் நாம்:
[1] சிறிலங்கா எனும் சிங்களப் பெயரை முழுக்கப் புறக்கணிக்க வேண்டும். இலங்கை அல்லது ஈழத்தீவு என்ற பெயரை பயன்படுத்துவோம். தமிழர் வாழும் பகுதியை "தமிழீழம்" என்றேக் குறிப்பிடுவோம்.
[2] பாக் நீரிணைப்பு, மன்னார் வளைகுடா உள்ளடக்கிய கடல் பகுதிகளை "தமிழ்க் கடல்" என்றழைப்போம்.
[3] தமிழ் நாடு மற்றும் தமிழீழம் உள்ளிட்ட தமிழர் வாழும் மண்ணை "அகண்டத் தமிழகம்" எனக்கொண்டு, ஈழத் தமிழரையும் இங்குள்ளத் தமிழரையும் ஒன்றிணைக்க, தமிழ் இலக்கியம், கலாச்சாரத்தை வளர்த்தெடுக்க இயன்ற வழிகளிலெல்லாம் உழைப்போம்.
[4] தமிழர்நலன் காக்க தமிழ்க் கடலின் இரு கரைகளிலும் இயன்ற நடவடிக்கைகளில் இப்போதே, இங்கேயே இறங்கிடுவோம்.

தமிழர் அனைவரும் ஒன்றாய் வேண்டுவது என்ன?
[1] இலங்கையில் நடத்தப்பட்டது வெறும் மனித உரிமை மீறலோ, போர்க்குற்றமோ அல்ல; அது சிங்களப் பேரினவாத அரசால், இராணுவத்தால், மதவெறியர்களால் திட்டமிட்டு, முறைப்படுத்தப்பட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலை. இந்த மனித குலத்துக்கு எதிரானக் குற்றம் உரிய முறையில் அங்கீகரிக்கப்பட்டு, சுதந்திரமான முறையில் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும்.
[2] இந்த இனப்படுகொலையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோப் பங்கெடுத்தோர் அனைவரும் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். ஈழத்தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

[iI] (தமிழ்க் கடலுக்கு அந்தப் பக்கம்) தமிழீழத்தில் என்ன வேண்டும்?
[1] ஈழத்தமிழர்கள் தெளிவான ஒரு தேசிய இனமென்பதால், தொன்றுதொட்டே அவர்கள் இலங்கை அரசால் பாரபட்சமாக நடத்தப்பட்டு, தற்போது கொன்றொழிக்கப் படுவதால், அவர்கள் தங்கள் தாயகமாம் தமிழீழம் அமைத்துக்கொள்ள வழிவகுக்க வேண்டும்.
[2] தமிழீழ அரசின் நோக்கு, போக்கு, செயல்பாடுகளை அம்மக்களே சனநாயக முறையில் தீர்மானித்துக் கொள்வார்கள்.

[iII] (தமிழ்க் கடலுக்கு இந்தப் பக்கம்) தமிழகத்தில் என்ன வேண்டும்?
[1] இம்மாத இறுதியில் ஜெனீவாவில் நடத்தப்படும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்திற்குப் பதிலாக எட்டு கோடித் தமிழர்களின் தாயகமான இந்தியா இலங்கை அரசுக்கு எதிரான ஒரு மாற்றியமைக்கப்பட்ட, தீர்க்கமான தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும்.
[2] இலங்கைத் தூதரகம் சென்னையிலிருந்து உடனடியாக அகற்றப்பட வேண்டும்.
[3] சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்களை இனப்படுகொலை செய்த கொடூரன், குற்றவாளி ராஜபக்சே, அவனது தம்பியர், குடும்பத்தார் தமிழகத்துக்குள், இந்தியாவுக்குள் எந்தப் பகுதிக்கும் இனிமேல் வரக்கூடாது.
[4] சிங்களப் படைக்கு இந்தியாவின் எந்தப் பகுதியிலும் எந்தவிதமானப் பயிற்சியும் எப்போதும் அளிக்கக்கூடாது.
[5] இலங்கை அரசின் மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்.
[6] இலங்கையோடான தூதரக உறவை இந்தியா தரமிறக்கிக்கொள்ள அல்லது தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
[7] இலங்கையிடமிருந்து கச்சத் தீவைத் திரும்பப் பெற வேண்டும்.
[8] சிங்களப் பேரினவாத அரசு தமிழக மீனவர்களைச் சுட்டுக்கொல்வதும், சிறைப்பிடிப்பதும் தொடர்ந்து நடந்து வருவதால், தமிழக மீனவர்கள் தங்களுக்கென “தமிழக மீனவர் பாதுகாப்புப் படை” ஒன்றை அரசு ஆயுதங்களுடன் அமைத்துக் கொள்ள வேண்டும்.
[9] தமிழ்க் கடலின் இரு மருங்கிலும் அணுமின் நிலையங்களோ, அனல்மின் நிலையங்களோ, பன்னாட்டு நிறுவனங்களின் உண்டுறை விடுதிகளோ, உல்லாச விடுதிகளோ, இவை போன்ற மாசுபடுத்தும், வாழ்வாதாரங்களை அழிக்கும், உணவு-ஊட்டச்சத்துப் பாதுகாப்பை நசுக்கும் திட்டங்களையோ கொண்டுவரக் கூடாது. கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்களை உடனடியாக மூட வேண்டும்.
[10] இந்தியா மற்றும் தமிழகத்திலுள்ள தேசிய, மாநில அரசியல் கட்சிகளும், தலைவர்களும் தாங்கள் தமிழ் மக்களின் பக்கமா அல்லது இலங்கை அரசின் பக்கமா; தங்களுக்கு தமிழ் மக்களின் நலன் முக்கியமா அல்லது இலங்கை அரசின் நலன் முக்கியமா என்பதை தெள்ளத்தெளிவாக அறியத்தர வேண்டும். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் அறிக்கைகளில் இது குறிப்பிடப்பட்டாக வேண்டும்.

சுப. உதயகுமாரன்
இடிந்தகரை
மார்ச் 17, 2003

 

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.