Jump to content

கொழுக்கட்டைவாய்கள்


Recommended Posts

கொழுக்கட்டைவாய்கள்

இலங்கையில் தமிழ்க் குடிமக்களுக்கெதிராக அவ்வரசு நடத்தி வரும் இனவழிப்புத் தாக்குதல்களைக் கண்டும் மௌனமாகவே இருக்கின்றன அனைத்துலக நாடுகள், முக்கியமாக இந்தியா. நம் அனைவரது மௌனமும் இலங்கையரசுக்கு நாம் செலுத்தும் சம்மதத் தலையசைப்பு. இலங்கை அரசத் தரப்பிலிருந்து ‘புலிகளின் வேலை’ என்ற சமிக்ஞை மாதிரி ஏதாவது கிடைத்ததுமே காத்திருந்தது போல வரிந்து கட்டிக் கொண்டு செய்தி பரப்பி நடுநிலையோடு பத்திரிகாதர்மம் காக்கும் இந்திய ஆங்கிலப் பத்திரிகைகள் எதுவும், கொலைகள் நடந்து 15 மணி நேரங்களாகி விட்ட நிலையிலும் ஒரு முக்கல் முனகல் கூட இல்லாமல் மடுமுழுங்கிகளாக இருப்பது புதிதில்லை என்றாலும், இன்னுமொரு தடவை இதைப் பதிந்தாக வேண்டி இருக்கிறது. வங்காலையில் இன்று நடந்திருக்கும் கொலைகளை தமிழ்நெட், சைபர்நியூஸ், பி.பி.சியைத் தவிர வேறெந்தப் பத்திரிகையும் சிறு செய்தியாகக் கூட வெளியிடவில்லை. இலங்கை இராணுவத்தினரால் செய்யப் பட்டிருக்கின்றன என்று சாட்சிகளால் நிரூபிக்கப் படும் நிலையிலும் இலங்கை அரசு இதற்காக எந்த இராணுவத்தினனையும் விசாரிக்கப் போவதில்லை. உயிரை நிலைகுலையச் செய்யும் அந்தப் படங்களைப் பார்க்கும் எவருக்கும் இதனை ஆதரிக்கும் அரசானது மனித உரிமையின் மீது வைத்திருக்கும் மரியாதையைப் புரிந்து கொள்ள முடியும். இந்திய அரசு இது நாள் வரையில் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே இருக்கிறோம், கூர்ந்து கவனித்துக் கொண்டே இருக்கிறோம் என்று சொல்லி வருகிறது. இந்தக் கொலைகளையும் கூர்ந்து கவனித்ததா என்று நம் மக்களுக்குத் தெரியப் படுத்த வேண்டும். கவனித்தது என்றால் அதனைக் குறித்து என்ன செய்தது என்பதையும் சொல்ல வேண்டும். நம் அண்டை நாட்டில் நிகழும் கொடூரமான இனவொழிப்பைக் கண்டும் காணாமல் இருப்பது இந்தியாவுக்கு இழுக்கு. இந்தியா உடனடியாக இலங்கையின் மீது பொருளாதார மற்றும் இராணுவத் தடைகளை விதிக்க வேண்டும். மற்ற உலக நாடுகளுக்கும் அழுத்தம் தர வேண்டும். மனிதவுரிமை குறித்த இச் சிக்கலில் தெளிவான நிலைப்பாட்டை இந்தியா விரைந்து எடுக்கத் தவறுமானால் ‘பக்கத்திருப்பவர் துன்பம் தனைப் பார்க்கப் பொறாதவன் புண்ணியமூர்த்தி’ என்று எழுதியவனைத் தேசியகவி என்று சொல்லிக் கொள்ள நமக்கு அருகதையில்லாமல் போகும்.

பி.கு: அரச தீவிரவாதத்தினைக் காணத் துணிவிருப்பவர்கள் தமிழ்நெட் தளத்துக்குச் செல்லலாம்.

http://bhaarathi.net/sundara/?p=272

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.