Archived

This topic is now archived and is closed to further replies.

யாழ்அன்பு

அர்த்தமற்ற பேச்சுக்களும் ஒட்டுண்ணி அரசியலும் - சேரமான்

Recommended Posts

இந்தியாவிலும், அமெரிக்காவிலும் இருப்பது போன்று நாடாளுமன்றத்தின் இன்னொரு சபையாக மாநிலங்களவையை (செனற் சபை) அமைப்பதே இதுகாறும் அரசியலமைப்பின் பதின்மூன்றாம் திருத்தத்திற்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்போவதாக தான் கூறிவந்ததன் அர்த்தம் என்று கடந்த வாரம் இந்து நாளேட்டிற்கு வழங்கிய செவ்வியில் வெளிப்படையாகவே சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்தோடு இவ்வாண்டு நடைபெறும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் போன்று அடுத்த ஆண்டு செப்ரம்பர் மாதமளவில் வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படும் என்றும் மகிந்தர் அறிவித்துள்ளார்.

எமது கடந்த பத்தியில் குறிப்பிட்டது போன்று வடக்குக் கிழக்கு மாகாண சபைகளுக்கு உயிரூட்டுவதைத் தவிர இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக வேறு எந்தத் திட்டத்தையும் மகிந்தரோ அன்றி இந்தியாவோ அல்லது மேற்குலகமோ தமது நிகழ்ச்சித் திட்டத்தில் கொண்டிருக்கவில்லை என்பதையே இக்கூற்றுக்கள் புலப்படுத்துகின்றன.

இது ஒருபுறமிருக்க, தமிழீழம் தனது நிறைவேறாத கனவு என்றும், அதனை நிறைவேற்றுவதற்காகவே டெசோ மாநாட்டை தான் கூட்டுவதாகவும் கூறிவந்த கலைஞர் முத்துவேல் கருணாநிதி, இப்பொழுது திடீரென அந்தர் பல்டி அடித்து தமிழீழத்தை அமைப்பதற்கு வழிசமைப்பது டெசோ மாநாட்டின் நோக்கம் அல்ல என்றும், ஈழத்தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே அதன் நோக்கம் என்றும் அறிவித்துள்ளார்.

தமிழீழம் அமைவது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று நியாயம் கற்பித்து தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய மத்திய அரசு நீடித்த பின்புலத்திலும், தமிழீழக் கோரிக்கையை கைவிடுமாறு உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் வலியுறுத்தியதன் விளைவாகவுமே இம்முடிவை கருணாநிதி எடுத்திருப்பது ஐயம்திரிபு இன்றிப் புலனாகின்றது.

அந்தர் பல்டி அடிப்பதையே தனது அரசியல் வரலாறாகக் கொண்டிருக்கும் முத்துவேலரின் புதல்வர் இவ்வாறு நடப்பது புதுமையானது அல்ல. ஆனால் ஈழத்தமிழர்களின் ஏகோபித்த தலைவராக தன்னை அடையாளப்படுத்தி, மாவீரர்களின் குருதியில் திளைத்து, மானச்சாவெய்திய மக்களின் உடல்கள் மீது சவாரிசெய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் இன்று நிகழும் ஒவ்வொரு எதிர்மறை அரசியல் நிகழ்வுகளுக்கும் விளக்கமளித்தே ஆக வேண்டும்.

இந்தியாவின் மீதும், மேற்குலகம் மீதும் நம்பிக்கை கொண்டு தாம் பொறுமை காத்து வருவதோடு, இதன் அடிப்படையிலேயே சிங்கள அரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாகவும், உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு சிங்கள அரசு தீர்வு காணத் தவறினால் பிரிந்துசென்று தனியரசு அமைப்பதற்கு உலகின் உதவியை நாடும் தெரிவை தாங்கள் எடுக்க நேரிடும் என்றும் அண்மையில் திருமலையில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் சம்பந்தர் தெரிவித்ததை அவ்வளவு இலகுவாக ஈழத்தமிழர்கள் எவரும் மறந்துவிடவில்லை.

மே நாளில் வாளேந்திய சிங்கக் கொடியை சம்பந்தர் அசைத்தது ‘இராசதந்திரம்’ என்று இதுகாறும் நியாயம் கற்பித்து வந்த அவரது பரிவாரங்களும் நிச்சயம் இதனை மறந்திருக்க மாட்டார்கள். இராசதந்திரம் என்பது அடிப்படையில் வலிமையை ஆதாரமாகக் கொண்டது. வலிமையைப் பின்புலமாகக் கொண்டிராத எந்தவொரு நாடும் இராசதந்திரத்தில் ஈடுபட முடியாது.

வலிமையற்ற எந்தவொரு நாட்டின் இராசதந்திரியையும் வேறு எவரும் சமதரப்பாக மதிப்பதும் கிடையாது. வலிமையற்ற ஒரு நாட்டின் மீது ஏனைய நாடுகள் அனுதாபம் கொள்ளலாம். இவ்வாறு அனுதாப அலையூடாக ஏற்படுத்தப்படும் உறவுக்கு பெயர் இராசதந்திரம் அன்று. அதனை ஒட்டுண்ணி அரசியல் அல்லது அனுதாப அரசியல் என்றுதான் கூறுவார்கள்.

இந்தியாவையும், உலகையும் நம்பி இவ்வாறு அனுதாப அலை தேடும் ஒட்டுண்ணி அரசியலிலேயே இன்று சம்பந்தரும் அவரது பரிவாரங்களும் ஈடுபடுவதை நாம் உணரலாம். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றம்பெற்ற நாள் முதல் மே 18 வரை வலிமையை அடிப்படையாகக் கொண்டே தனது அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வந்துள்ளது.

பலமாக இருந்த காலங்களில் சமதரப்பாக நின்று இராசதந்திரத்தைக் கையிலெடுத்து பேச்சுவார்த்தைக் களத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் திறந்தார்களே தவிர, பலவீனமாக இருந்த எந்தவொரு காலத்திலும் எதிரியுடன் பேச்சுவார்த்தைகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபட்டது கிடையாது. திம்புப் பேச்சுவார்த்தைகளில் இந்தியாவிற்கு மதிப்பளித்து ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட பொழுது பலமான நிலையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்தார்கள்.

தமிழீழத் தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை ஆகிய கோட்பாடுகளை சிங்கள அரசின் பேச்சுவார்த்தைக் குழுவின் அப்போதைய தலைவராக விளங்கிய ஹெக்ரர் ஜெயவர்த்தனா நிராகரித்த பொழுது, இந்தியாவின் அழுத்தங்களை மீறி பேச்சுவார்த்தைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும், ஏனைய போராளி இயக்கங்களும், ஏன் அப்பொழுது சம்பந்தர் அங்கம் வகித்த தமிழர் விடுதலைக் கூட்டணியும் புறக்கணித்தமைக்கு வலிமையே ஆதர்சமாக விளங்கியது. இது சம்பந்தருக்கு நன்கு தெரியும்.

இதன் பின்னர் இந்திய - புலிகள் போரின் பொழுது உலகின் நான்காவது வல்லரசாக வர்ணிக்கப்பட்ட இந்தியாவின் ஆயுதப் படைகளுடன் நேருக்கு நேர் மோதியவாறே பிரேமதாசாவுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்கள். ஒரு சிறிய போராளி இயக்கமாக விளங்கினாலும்கூட உலகின் நான்காவது வல்லரசுடன் மோதிய தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினதும், புலிவீரர்களினதும் துணிச்சலை அப்பொழுது தேசத்தின் குரல் பாலா அண்ணையிடன் பிரேமதாசா மெச்சத் தவறவில்லை.

சிங்கள அரசுக்கு சமதரப்பாக நின்றவாறே பிரேமதாசாவிடம் ஆயுத உதவியையும், நிதியுதவியையும் தமிழீழ விடுதலைப் புலிகள் பெற்றார்கள். தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவால் களமிறக்கப்பட்ட இந்தியப் படைகளை விரட்டுவதற்கு அவரது வாரிசான பிரமேதாசாவுடன் கைகோர்த்து, ஆயுத உதவிகளையும், நிதியுதவிகளையும் பெற்று, இறுதியில் இந்தியப் படைகளை தமிழீழ மண்ணை விட்டு வெளியேற்றியதில் அதியுச்ச சாணக்கியத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை கையாண்டது.

ஆனால் அப்பொழுது இந்தியாவின் பக்கம்நின்று ஒட்டிண்ணி அரசியலையே சம்பந்தர் அங்கம் வகித்த தமிழர் விடுதலைக் கூட்டணி கைக்கொண்டது. சந்திரிகா அம்மையாரின் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் கூட வலிமையின் அடிப்படையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பங்கேற்றது. அதில் முழுமையான இராசதந்திரம் பொதிந்திருந்தது.

ஆனால் அக்காலப்பகுதியில் சந்திரிகா அம்மையாருடன் கைகோர்த்து ஒட்டுண்ணி அரசியலையே சம்பந்தர் அவர்கள் கையாண்டார். தமிழீழ விடுதலைப் புலிகளின் இராசதந்திரத்தின் உச்சகட்டமாகவே நோர்வேயின் அனுசரணையுடன் இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகள் அமைந்தன. ஆனையிறவை வீழ்த்தி, யாழ்ப்பாணத்தை பிறைவியூகத்தில் முற்றுகைக்குள் வைத்து, கட்டுநாயக்கா விமான நிலையத்தை துவம்சம்செய்து, சிங்கள தேசத்தின் பொருளாதாரத்தை காலடியில் மண்டியிட வைத்த பின்னரே ரணிலின் அரசாங்கத்திற்கான சமாதானக் கதவுகளை தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் திறந்துவிட்டார்.

இங்கு தான் இராசதந்திரத்தின் அர்த்தபரிமாணத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை வெளியிட்டது: படைவலுச் சமநிலையே அரசியல் தீர்வுக்கு அடிப்படையானது என்பதை ஐயம்திரிபு இன்றி வெளிப்படுத்தியது.

போர்நிறுத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பாக 2006ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மகிந்தரின் அரசாங்கத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பொழுது தம்மால் ஆயுதக் குழுக்களை நிராயுதபாணிகளாக்குவது சாத்தியமில்லை என்று சிங்கள தூதுக்குழுவின் தலைவர் நிமால் சிறீபால டீ சில்வா கூறிய பொழுது, ‘உங்களால் முடியாவிட்டால் ஒதுங்கியிருந்து வேடிக்கை பாருங்கள்: ஆயுதக் குழுக்களை நாங்கள் நிராயுதபாணிகளாக்குவோம்` என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கிய தேசத்தின் குரல் பாலா அண்ணை சீற்றத்துடன் பதிலளித்தார். பாலா அண்ணையின் இந்தப் பேச்சில் தலைவர் பிரபாகரனின் இராசதந்திரம் பொதிந்திருந்தது.

இன்று ஈழத்தமிழர்களின் ஏகோபித்த தலைவராக தன்னை முன்னிலைப்படுத்த முற்படும் சம்பந்தரிடம் இதில் ஒருதுளிகூட இல்லை: அவரது பரிவாரங்களிடமும் இராசதந்திரத்தின் அம்சத்தைக் காண முடியாது. `இராசதந்திரம் செய்கிறோம், பொறுமை காக்கின்றோம்` என்றெல்லாம் சம்பந்தரும் அவரது பரிவாரங்களும் கூறுவது, ‘அடுத்த தைப்பொங்கலில் தமிழீழம் காண்போம்’ என்று சம்பந்தரின் முன்னோடியாக விளங்கும் அமிர்தலிங்கம் எழுப்பிய வெற்று முழக்கத்திற்கு ஒப்பானது.

இலங்கை நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையை அமைப்பதையும், வடக்குக் கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதையும் தனது நிகழ்ச்சித் திட்டமாக மகிந்தர் கொண்டிருக்கும் பொழுது, பொறுமை காப்பதாகக் கூறிக் கொண்டு பேச்சுவார்த்தை நாடகத்தில் சம்பந்தர் நடிப்பது ஈழத்தமிழர்களின் தலையில் மிளகாய் அரைக்கும் செய்கையே அன்றி வேறேதுமல்ல. இவ்வாறு சம்பந்தரின் நாடகத்தில் இலவு காத்த கிளியாகி ஏமாறுவதற்கு ஈழத்தமிழர்கள் ஏமாந்த சோணகிரிகளும் அல்ல.

தனது ஆயுட்காலத்தில் ஈழத்தமிழினத்திற்கு விடிவை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற வேட்கை உண்மையில் சம்பந்தருக்கு இருந்தால், உடனடியாக மக்களை அணிதிரட்டி தமிழீழ தேசிய விடுதலைக்கான போராட்டத்தை அறவழியில் முன்னெடுக்க வேண்டும். 1956ஆம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டத்திற்கு எதிராக ஈழத்தமிழர்கள் கிளர்ந்தெழுந்து அறவழியில் போராடியதற்கு ஒப்பான எழுச்சியை ஏற்படுத்தும் வலிமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உண்டு. இதற்கு புலம்பெயர் ஈழத்தமிழ் சமூகமும், தாய்த்தமிழகமும் உறுதுணை நிற்கும்.

ஆயுதப் போராட்டத்தை நிராகரித்த மேற்குலகமும், பாரத தேசமும் அறவழியில் ஈழத்தமிழினம் எழுச்சி கொண்டு அரசியல் சுதந்திரம் வேண்டித் தனியரசை நிறுவுவதற்காகப் போராடுவதை எதிர்க்க முடியாது. தந்தை செல்வாவின் வாரிசாக தன்னை அடையாளப்படுத்துவதிலும், ‘உலகின் விருப்பிற்கு கட்டுப்பட்டு அறவழியில் அரசியல் செய்கின்றோம்` என்று சம்பந்தர் கூறுவதிலும் அப்பொழுது நிச்சயம் அர்த்தமும், நியாயமும் இருக்கும்.

அதை விடுத்து, ‘இராசதந்திரம் செய்கிறோம், பொறுமை காக்கிறோம்’ என்றுக் கூறி காலத்தை இழுத்தடித்து ஈழத்தமிழினத்தை புதைகுழியில் தள்ள சம்பந்தர் முற்பட்டால், அமிர்தலிங்கம், கருணாநிதி போன்றோரின் வரிசையிலேயே அவரையும் வரலாறு பதிவு செய்யும்.

நன்றி : ஈழமுரசு

Share this post


Link to post
Share on other sites

இதெல்லாம் இவராலயும் இவர அடிவருடிகளாலயும் நடக்கிற காரியமா ? எல்லாம் போலி .

Share this post


Link to post
Share on other sites