Archived

This topic is now archived and is closed to further replies.

தமிழரசு

விடுதலைப் புலிகள் மீண்டும் வந்தனரா? - சுபத்ரா

Recommended Posts

ltte.jpg

முள்ளிவாய்க்காலில் போர் முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகளாகி விட்டன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், முக்கிய தளபதிகளும் கொல்லப்பட்டு, புலிகள் இயக்கத்தின் இராணுவ வல்லாண்மை முற்றாகவே அழிக்கப்பட்டு விட்டதாக, 2009 மே மாதம் அரசாங்கம் பிரகடனம் செய்தது.

ஆனால், இன்று வரை, புலிகளை வைத்து பூச்சாண்டி காட்டும் பழக்கத்தில் இருந்து மட்டும் அரசாங்கத்தினால் விடுபட முடியவில்லை.

எதற்கெடுத்தாலும் புலிகள் என்று குற்றஞ்சாட்டும் கடந்த முப்பதாண்டு காலபழக்க தோஷத்தில் இருந்து புலிகளால் ஏற்பட்ட காய்ச்சலில் இருந்து – அரசாங்கம் இன்னும் மீளவில்லை.

மனிதஉரிமைகள் பற்றிப் பேசினால், உடனடியாக அவர்களுக்குப் புலிகள் நிதி வழங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்படும். அரசுக்கு எதிரான ஏதாவது கருத்தை முன்வைத்தால் புலிகளோடு முடிச்சுப் போட்டு குற்றம்சாட்டப்படும்.

இது தான் போர் முடிந்த – புலிகள் அழிக்கப்பட்ட – மூன்றாண்டுகளில் நடந்து வருகிறது.

புலிகளை தமிழ் மக்கள் மறந்து போக நினைத்தாலும், அரசாங்கம் அதற்கு அனுமதிக்காது என்றளவுக்கு புலிகளை வைத்துப் பிரசாரம் நடத்தப்படுகிறது.

ஜெனீவா தீர்மானத்துக்கும் வெளிநாடுகளில் உள்ள புலிகளே பின்னணியில் இருந்ததாகவும், அவர்கள் சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய பொய்யான தகவல்களின் அடிப்படையில் தான், அமெரிக்கா ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்ததாகவும் அரசாங்கம் கூறியது.

அழிந்துபோன புலிகள் இயக்கம் அமெரிக்காவையே வளைத்துப் போடும் அளவுக்கு வெளிநாடுகளில் செயற்படுகிறது என்று கூறினால் – அது அரசாங்கத்துக்குத் தான் அவமானம் என்பதை அரசில் உள்ளவர்கள் எவரும் கருத்தில் கொள்ளவில்லை.

இந்தியாவில் பயிற்சி பெற்ற 150 விடுதலைப் புலிகள் நாடு திரும்பியுள்ளதாகவும், சீர்குலைவு நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகவும் ஆங்கில, சிங்கள ஊடகங்கள் சிலவற்றில் செய்திகள் கசிய விடப்பட்டன.

இந்தச் செய்திகளின் பின்னணியில் இருந்தது அரச புலனாய்வுச் சேவை தான். இதனை அந்த ஊடகங்களே தமது செய்தியில் ஆதாரம் காட்டியிருந்தன. இந்தச் செய்திகளுக்கு வலுவூட்டும் விதத்தில் திருகோணமலையில் இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து தேடுதல்களை மேற்கொண்டனர். ்

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம், கடந்த மாத நடுப்பகுதியில் குச்சவெளிப் பகுதியில் இடம்பெற்ற ஈ.பி.டி.பி உறுப்பினர் முத்து எனப்படும் ரகுநாதனின் கொலை தான்.

அவரது சடலம் அருகே கிடந்த – ’எல்.ரி.ரி.ஈ’ என்ற ஒரு சிறுகுறிப்புத் தான் மீண்டும் புலிப்பூச்சாண்டி காட்டப்படக் காரணமானது.

கொலை செய்தவர்கள் திசை திருப்புவதற்காக இவ்வாறு செய்திருக்கலாம். இந்தக் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களை புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என்றும், அவர்கள் தமிழ்நாட்டில் பயிற்சிப் பெற்றுத் திரும்பியதாகவும் தகவல் வெளியிடப்பட்டது.

தமிழ்நாட்டில் 3 இரகசிய முகாம்களில் பயிற்சி பெற்ற 150 புலிகள் நாசவேலைகளை மேற்கொள்ள வடக்கு, கிழக்கில் பதுங்கியுள்ளதாகவும், அவர்களே ஈ.பி.டி.பி உறுப்பினரையும் வேறு பலரையும் கொலை செய்திருப்பதாக நம்பப்படுவதாகவும் கதை கட்டப்பட்டது.

கடந்த 5 மாதங்களில் காணாமற்போயுள்ள 30 பேர் பற்றிய தகவல்களைத் தருமாறு ஜெனிவாவில் அரசிடம் கோரப்பட்டிருந்தது. இதுபற்றி அமெரிக்காவும் தனியாக விளக்கம் கோரியுள்ளது.

அதைவிடப் போருக்குப் பின்னர் இடம்பெற்ற ஆட்கடத்தல்கள், கொலைகள் பற்றிய கேள்விகளும் அரசதரப்புக்குச் சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்தநிலையில், ஈ.பி.டி.பி உறுப்பினரை மட்டுமன்றி, வேறு பலரையும் புலிகளே கொலை செய்திருக்கலாம் என்ற செய்தியானது, எல்லாப் பழிகளையும் புலிகள் மீது போட்டுத் தப்பிக் கொள்ளும் தந்திரமாகவும் கருதலாம்.

தமிழ்நாட்டில் இரகசிய முகாம்களில் புலிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதாக தகவல் வெளியானதும் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம், அது அடிப்படையற்ற – முற்றிலும் தவறான – ஆதாரமற்ற செய்தி என்று மறுத்தது.

தமிழ்நாடு காவல்துறை ஆணையாளரும், மத்திய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரமும் இந்த செய்தியை நிராகரித்தனர்.

ஜெனிவா தீர்மானத்தை ஆதரித்த விவகாரத்தினால், இந்தியா தொடர்பாக, கொழும்பு அவ்வளவு திருப்தியான நிலையில் இல்லை.

இத்தகைய நிலையில் இந்தச் செய்தி புதுடெல்லியை அதிர்ச்சி கொள்ள வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தம்மைச் சீண்டிப் பார்க்கும் வேலையாக இருக்கலாம் என்று புதுடெல்லி சந்தேகித்திருந்தாலும் ஆச்சரியமில்லை…

ஜெனிவா தீர்மானத்தை ஆதரித்ததற்காக, இந்தியா மீது கோபமும் இல்லை, குறையும் இல்லை, உறவுகளில் மாற்றமும் இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரீஸ் கூறினாலும், ஜெனிவா தீர்மானத்துக்குப் பின்னர், இருநாடுகளுக்கும் இடையில் வெளித் தெரியாத இடைவெளி ஒன்று இருக்கவே செய்கிறது.

தமிழ்நாட்டின் நெருக்கடியின் பேரில் தான் ஜெனிவா தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்தது என்ற சீற்றத்தின் வெளிப்பாடாக, புலிகளுக்கு அங்கு பயிற்சி அளிக்கப்படுவதாக தகவல் வெளியிடப்பட்டிருக்கலாம்.

இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது. அந்த அமைப்புக்கு அங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றால், அது பாரதூரமான விடயமாகவே பார்க்கப்படும். இது மத்திய அரசுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தும். இதனை நன்றாகக் கணித்தே, இந்தச் செய்தி கசிய விடப்பட்டுள்ளது.

அரச புலனாய்வுத்துறையே இந்த சந்தேகத்தை முதலில் வெளியிட்டது. பின்னர், அவ்வாறு இல்லை இராணுவப் பேச்சாளர் மறுத்தாலும், இந்தத் தகவலை வெளியிட்ட ஊடகங்களுக்கு எந்த மறுப்பையும் அனுப்பவில்லை.

அதைவிட, இந்திய – இலங்கைப் புலனாய்வுத் துறைகளுக்கு இடையில் நெருக்கமான உறவுகள் பேணப்படுகின்ற தகவல்கள் பரிமாறப்படுகின்ற போதும், இப்படி ஒரு செய்தி இந்தியாவுக்கு கொடுக்கப்படவில்லை.

ஊடகங்களில் செய்தி கசிய விடப்பட்டது தான், இந்தப் பிரச்சினைக்கு மூலகாரணம். இந்தியாவை குறிப்பாக, தமிழ்நாட்டை சிக்கலில் மாட்டி வைக்கவே இந்த முயற்சி. அடுத்து, இந்தப் பிரசாரத்தின் பின்னர் மீண்டும் புலிகள் வந்து விட்டதாக தேடுதல்களும் நடத்தப்பட்டன.

ஜெனீவா தீர்மானம் படைக்குறைப்பை வலியுறுத்த, அரசாங்கமோ மீண்டும் தேடுதல்களை நடத்தி இராணுவத் தலையீட்டை நியாயப்படுத்தியது. மீண்டும் புலிகள் வந்து விட்டதாகக் கூறி அரசபடைகள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகள் மக்களைப் பீதி கொள்ள வைக்கும் வகையில் அமைந்தன.

புலிகளின் அடிப்படைக் கட்டுமானங்கள் ஒன்று கூட மிச்சமில்லாமல் துடைத்தழிக்கப்பட்டு விட்ட பின்னர், 150 புலிகள் வந்து குழப்பங்களை ஏற்படுத்த முனைவதாக தகவல் வெளியிடப்பட்டது சாதாரணமானதல்ல.

இது தமிழ்மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு புலிகளைப் பயன்படுத்திக்கொள்ளும் உத்தியில் இருந்து அரசாங்கம் இன்னமும் மாறிவிடவில்லை என்பதற்கான உதாரணம்.

இதனை மனதில் கொண்டு தான் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, அழிந்து போன புலிகளைப் பற்றிப் பேசிப் கொண்டிருக்காமல், வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களைப் பற்றி பேசுங்கள் என்று சினந்து கொண்டார்.

ஆனாலும் அரசாங்கத்துக்குப் புலிகளை வைத்துப் பூச்சாண்டி காட்டியே பழகிப் போய் விட்டது. தம் மீதான நெருக்கடிகள் ஏற்படும் போதெல்லாம் புலிகள் தான் அவர்களுக்கு நினைவில் வருகின்றனர். மாற்று உபாயம் ஒன்று அகப்படும் வரையில் இந்த மாயையில் இருந்து அரசினால் விடுபடவே முடியாது.

http://www.vannionli...-post_8775.html

Share this post


Link to post
Share on other sites