Search the Community

Showing results for tags 'மான்டேஜ் மனசு'.More search options

 • Search By Tags

  Type tags separated by commas.
 • Search By Author

Content Type


Forums

 • யாழ் இனிது [வருக வருக]
  • யாழ் அரிச்சுவடி
  • யாழ் முரசம்
  • யாழ் உறவோசை
 • செம்பாலை [செய்திக்களம்]
  • ஊர்ப் புதினம்
  • உலக நடப்பு
  • நிகழ்வும் அகழ்வும்
  • செய்தி திரட்டி
 • படுமலைபாலை [தமிழ்க்களம்]
  • துளித் துளியாய்
  • எங்கள் மண்
  • வாழும் புலம்
  • பொங்கு தமிழ்
  • தமிழும் நயமும்
  • உறவாடும் ஊடகம்
  • மாவீரர் நினைவு
 • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
  • கவிதைப் பூங்காடு
  • கதை கதையாம்
  • வேரும் விழுதும்
  • தென்னங்கீற்று
  • நூற்றோட்டம்
 • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
  • வண்ணத் திரை
  • சிரிப்போம் சிறப்போம்
  • விளையாட்டுத் திடல்
  • இனிய பொழுது
 • கோடிப்பாலை [அறிவியற்களம்]
  • கணினி வளாகம்
  • வலையில் உலகம்
  • தொழில் நுட்பம்
  • அறிவுத் தடாகம்
 • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
  • அரசியல் அலசல்
  • மெய்யெனப் படுவது
  • சமூகச் சாளரம்
  • பேசாப் பொருள்
 • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
  • நாவூற வாயூற
  • நலமோடு நாம் வாழ
  • நிகழ்தல் அறிதல்
  • வாழிய வாழியவே
  • துயர் பகிர்வோம்
  • தேடலும் தெளிவும்
 • யாழ் உறவுகள்
  • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் ஆடுகளம்
  • யாழ் திரைகடலோடி
  • யாழ் தரவிறக்கம்
 • யாழ் களஞ்சியம்
  • புதிய கருத்துக்கள்
  • முன்னைய களம் 1
  • முன்னைய களம் 2
  • பெட்டகம்
 • ஒலிப்பதிவுகள்
 • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
 • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
 • Newsbot - Public club's Topics
 • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
 • தமிழ்நாடு குழுமம்'s கணனி
 • தமிழரசு's நாபயிற்சி
 • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
 • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
 • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
 • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
 • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
 • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
 • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
 • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'
 • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
 • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
 • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
 • தமிழரசு's வரவேற்பு
 • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
 • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
 • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
 • தமிழரசு's படித்ததில் பிடித்தது
 • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
 • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
 • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
 • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
 • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?

Calendars

 • நாட்காட்டி
 • மாவீரர் நினைவு

Blogs

There are no results to display.

There are no results to display.


Found 19 results

 1. மான்டேஜ் மனசு 19: லன்ச் பாக்ஸ் - மதிப்புமிகு மாற்றுக் காதல்! அலுவலகப் பணிகள் முடிந்து வீட்டுக்கு கிளம்பத் தயாராக இருந்த தருணம் அது. குணசேகரன்தான் செல்போனில் அழைத்தார். ''குடும்பஸ்தன் ஆன பிறகு மேன்ஷனையே மறந்திட்டியே டா...'' ''அப்படில்லாம் இல்லை பெருசு... ஒருநாள் கண்டிப்பா வர்றேன்.'' ''இப்படியே எத்தனை நாளைக்குதான் சமாளிப்ப... இன்னைக்கு ஃப்ரீயா..?'' ''ஹ்ம்ம். நீங்க எங்கே இருக்கீங்க?'' அடுத்த அரை மணி நேரத்தில் திருவல்லிக்கேணியில் ஒரு மேன்ஷனில் குணசேகரனை சந்தித்தேன். சம்பளம் போட்ட தினம் என்பதால் குணசேகரன் நண்பர்களுடன் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தார். ''செல்லா நோட்டு மேட்டரால டாஸ்மாக்-ல பெரும் பாதிப்பாமே..? நாம ஏதாவது சப்போர்ட் பண்ணலாமா?" என்று கேட்டார். அதெல்லாம் வேண்டாம் என்று மறுத்துவிட்டதால் க்ரில் சிக்கனுக்கும், பிரியாணிக்கும் எங்கள் ஆதரவைத் தெரிவித்துக்கொண்டோம். சாப்பிட்டு முடிந்த சமயத்தில்தான் விகடனில் வந்த தமயந்தியின் 'தடயம்' சிறுகதை குறித்து பேசத் தொடங்கினோம். ''காதலை இவ்வளவு வலியோடவும், அழகாகவும் சொல்ல முடியாது பெருசு. அந்தக் கதையை படிச்சு முடிச்சதும் எனக்கு அழுகை வந்துடுச்சு. தமயந்தி போன் நம்பர் வாங்கி அவங்க கிட்ட பேசணும்னு தோணிக்கிட்டே இருந்தது. ஆனா, அது ஆர்வக்கோளாறாவோ, அதிகப் பிரசிங்கித்தனமாவோ இருக்குமோன்னு விட்டுட்டேன்.'' ''உனக்கு அந்த ஃபீல் வந்ததுல்ல. அதுவே போதும். பேசணும்னு அவசியம் இல்லை.'' ''நாம என்னவா இருந்தாலும் ஒருத்தரோட அன்புக்குதானே கடைசி வரைக்கும் ஏங்கிக்கிட்டே இருக்கோம். அதை சில சமயங்கள்ல சரியா வெளிப்படுத்திடுறோம். காதலை சொல்லும்போது கூட தயங்கித் தயங்கி அதீத உணர்வுல புரிய வெச்சிடுறோம். ஆனா, பிரியும்போது எந்தக் காரணமும் சொல்லாம நம்ம நிலைமையை புரியவைக்காம விட்டுடுறோம். அது கன்வே ஆகாம கடைசிவரைக்கும் முள்ளாவே உறுத்திக்கிட்டு இருக்கு.'' ''காதலிக்கப்பட்ட இதயம், இன்னொரு இதயத்தோட பிரச்சினையை சொல்லாமயே புரிஞ்சுக்கும். சேராத காதலும் அவன்/ அவள் எங்கே இருந்தாலும் நல்லா இருக்கணும்னு வேண்டிக்கும்.'' ''எல்லா காதலும் இப்படிதான் இருக்குமா?'' ''நிச்சயமா. அது மாற்றுக் காதலா இருந்தா கூட!'' ''எப்படி சொல்ற?'' ''என் வாழ்க்கையே என்னோட செய்தி.'' ''பார்றா. பெருசு... மனசுல என்ன காந்தின்னு நினைப்பா உனக்கு.'' ''இல்லை சிறுசு. நான் சீரியஸா சொல்றேன்.'' ''அக்காகிட்ட சொல்லணும் போல. நீ அடங்கமாட்ட.'' ''நான் வேற அக்காவைப் பத்தி சொல்ல வர்றேன்.'' * அவர் சொன்ன அன்பின் நீட்சியை சொல்வதற்கு முன் அவரைப் பற்றிய சின்ன அறிமுகம். குணசேகரன் கவிதை, சிறுகதை, நாவல் என்று எழுத்துலகில் இடைவிடாது இயங்கிக்கொண்டிருப்பவர். வலிகளை மட்டுமே எழுத்தில் வடித்து கொண்டாடப் பழகியவர். தோற்றத்துக்கும், எழுத்துக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாகத் தெரியாது. ஆனால், மென்மனசுக்காரன். அவனை சாய்க்க கோடரி தேவையில்லை, குண்டூசி போதும். அலட்சியப்படுத்துதலும், புறக்கணித்தலுமே இந்த உலகின் உச்ச பட்ச தண்டனை என்று நினைப்பவன். யாரைப் பார்த்தாலும் மாப்ள, வாடா என்று உரிமையோடு அழைப்பான். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் அன்பு செய்யப் பிறந்தவன். ஃபேஸ்புக் அவன் நட்பின் சாளரங்களை திறந்து வைத்தது. அந்த டெக்னாலஜிக்குள் தன்னை மூழ்கடித்துக்கொண்டான். கண்ணுக்கு முன் இருக்கும் யாரிடமும் பேசாமல், சாப்பிட்டியா என்று கேட்காமல், நலம் விசாரிக்காமல் இருக்கும் குணசேகரன்தான் செல்போனில் மணிக்கணக்கில் பேசுகிறான், முகநூலில் முகம் தெரியாத நபரோடு நள்ளிரவு தாண்டியும் சாட் செய்கிறான் என்று அவதூறுகள் பரப்பப்படுவதுண்டு. அப்படிப்பட்ட குணசேகரனுக்கு 46-வது வயதில் காதல் வந்தது. அது குணசேகரனுக்கே ஆச்சரியத்தைத் தந்தது. குணசேகரனின் முகநூல் தோழி ஒருவர் தொடர்ந்து அவரின் கவிதைகளை வாசித்து வந்தார். ஒருநாள் குணசேகரனின் கவிதை வருத்தவடுக்களையே சுமந்து வந்ததை உணர்ந்து, சாட் செய்தார். குணசேகரனுடன் முகநூலில் நண்பராகி ஓரிரு மாதங்களில் இந்த சாட் கான்வெர்சேஷன் ஏற்பட்டது. * ''வணக்கம். நான் சித்ரா." "நல்லா இருக்கீங்களா?'' ''வணக்கம். நல்லா இருக்கேன்..." "நீங்க...'' ''உங்ககிட்ட ஒண்ணு கேட்கலாமா....'' ''சொல்லுங்க..''. ''எப்பவுமே ஏன் கஷ்டம், அழுகை, வலி, பைத்தியம், மரணம்னு மட்டுமே உங்க கவிதைகள் இருக்கு.'' ''தெரியலை... நிறைய பேர் இதை சொல்லி இருக்காங்க.'' ''அவ்ளோ பிரச்சினைகளை நீங்க சந்திச்சு இருக்கீங்களோன்னு நினைச்சேன். ஆனா, நான் நிறைய முறை கஷ்டப்பட்டபோது என் பிரச்சினைகளுக்காக கலங்கி நிக்கும்போது உங்க கவிதைகள் ஆறுதலா இருந்திருக்கு.'' ''மகிழ்ச்சி...'' ''உண்மையைச் சொல்லுங்க... உங்களோட வலிகளைத்தானே நீங்க வார்த்தைகள் மூலமா கவிதைகயாக்குறீங்க.'' ''இல்லை. அந்த வலிகள் என்னோடது இல்லை. ஆனா, எனக்கு வலிகள் பிடிக்கும். அதனால அப்படி எழுதுறேன்.'' ''உங்ககிட்ட பேசுனதுல ரொம்ப சந்தோஷம். உங்க புத்தகங்கள் எந்த பதிப்பகத்துல கிடைக்கும்? '' ''முகவரி அனுப்புறேன். சென்னையில எல்லா புத்தகக் கடைகள்லயும் கிடைக்கும்.'' ''நான் திருவண்ணாமலை...'' ''வம்சியில கிடைக்க வாய்ப்பிருக்கு...'' ''நன்றி... '' * சில நாட்களுக்குப் பிறகு சித்ரா சாட்டிங்கில்... ''எப்படி இருக்கீங்க....'' ....................... 10 நிமிடங்கள் கழித்து குணசேகரனின் பதில்.. ''நலம்...........'' ''நான் போனவாரம் சென்னை வந்தேன்.'' ''ஓ.....'' ''உங்களைப் பார்க்க முடியலைன்னு ஒரே வருத்தமாப் போச்சு...'' ''என்னை எதுக்குப் பார்க்கணும்?'' ''உங்க புக்ஸ் படிச்சேன். தயாளன், சந்திரன், வில்சன், சத்தியமூர்த்தின்னு நிறைய மனிதர்கள் கதை.'' ''அதுக்குள்ளே படிச்சிட்டீங்களா?'' ''உங்க கதைகள் படிக்கும்போது எனக்கு கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கு. என்னோட கவலைகளை மறக்க அது பயன்படுது.'' ''நல்லது...'' குணசேகரனுக்கு இதற்கு மேல் இந்த உரையாடலைத் தொடர்வது சரியாகப்படவில்லை. லைக் போட்டு உரைக்குத் திரையிட்டான். * அடுத்த நாள்... ''நீங்கதானே அந்த சத்தியமூர்த்தி. உங்க கதையையே எழுதிட்டீங்களா?'' ''இல்லை..'' ''சும்மா சொல்லாதீங்க. விஸ்காம், சினிமா ஆர்வம் எல்லாம் ஒத்துப்போகுதே.'' ''இல்லை..'' ''அப்போ இதுக்கு முன்னே என்ன படிச்சீங்க. எங்கே இருந்தீங்க..'' ''அவசியம் தெரிஞ்சுக்கணுமா?'' ''ஆமாம்.. என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் சொல்லிட்டேன். இப்படி ஒரு எழுத்தாளர் என் ஃப்ரெண்ட்டா இருக்கிறது எனக்குதானே பெருமை. உங்களைப் பத்தி நிறைய தெரிஞ்சுக்க ஆசை. '' படித்தது, பிடித்தது, வேலைக்கு சேர்ந்தது, எழுத வைத்தது என எல்லாம் பகிர்ந்தான். மனைவி, குழந்தைகளைப் பற்றியும் சொன்னான். சித்ராவும் சொல்ல ஆரம்பித்தாள். ''எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. ரெண்டு பசங்க. பொண்ணு இல்லை. என்னை மாதிரி ஒரு பொறப்பு வேணாம்னு கடவுளுக்கே தெரிஞ்சிருக்கு பாருங்களேன். ஆனா, அது நல்லதுக்குதான்.'' ''ஏன் எப்பவும் விரக்தியாவே பேசுறீங்க. உங்களுக்கு என்ன பிரச்சினை?'' ''பிரச்சினை எதுவும் இல்லை. ஆனா, வாழ்க்கையில எந்த பிடிப்பும் இல்லை.'' ''புரியலை'' ''மாமியார் கொடுமை, புருஷனோட பிரச்சினைன்னு எனக்கு எந்த தொந்தரவும் இல்லை. என் தோழி, தங்கச்சி, சித்தின்னு 3 பேர் வாழ்க்கையில நிறைய பாதிப்புகள். அதைக் கண்கூடா பார்த்ததால அதையும் என்னோட பிரச்சினையாவே பார்க்கத் தோணுது. தள்ளி நின்னு பார்க்க முடியலை. அதனால சராசரிப் பெண்ணா என்னால இருக்க முடியலை. நான் நிறைய படிக்கணும், எழுதணும். என் வலிகளை எழுத்துல தீர்க்கணும்னு ஆசை. அதுல மட்டும்தான் என்னால ஆசுவாசம் அடைய முடியும்னு நம்புறேன். ஆனா, இங்கே அதுக்கான வாய்ப்பு இல்லை. புருஷன் நல்லா பார்த்துக்கிட்டாலும் அவர் மேல பெரிய காதல் இல்லை. இதை எப்படி சொல்றதுன்னு தெரியலை.'' ''புரியுது...'' ''என் உணர்வைப் புரிந்துகொண்டதுக்காக நன்றி.'' ......... 10 நாட்கள் கழித்து... ''என்னாச்சு.. ஃபேஸ்புக் பக்கம் ஆளையே காணோம்.'' ''கொஞ்சம் உடம்பு சரியில்லை... அதான்.. லீவ்ல ஊருக்குப் போயிருந்தேன்.'' ''தினம் தினம் உங்க சாட்டிங்காக காத்துக்கிட்டு இருந்தேன். உங்க மெசேஜ் பார்க்காம என்னால் இருக்க முடியலை.'' ''இது சரியா, தப்பான்னு கூட தெரியலை. ஆனா, பிடிச்சிருக்கு...'' ''நான் என்ன சொல்றதுன்னு தெரியலை சித்ரா..'' ''நீங்க எதுவும் சொல்ல வேணாம். என்னை அவாய்ட் பண்ணாம பேசுனா போதும்.'' ''சின்ன விபத்து நடந்துச்சு. தலையில காயம் பட்டதால என்னால ஆபிஸ் வர முடியலை. லீவ் எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போய்ட்டேன்.'' ''இப்போ எப்படி இருக்கு. பரவாயில்லை. இன்னும் கட்டு பிரிக்கலை....'' ''எப்போ பிரிப்பீங்க?'' ''2 நாள்ல...'' ''டேக் கேர்'' ''நன்றி...'' * அடுத்த 2 நாட்களுக்குப் பிறகு சித்ரா சாட்டிங்கில்... ''உங்க போட்டோவை நான் ஃபேஸ்புக்ல பார்த்திருக்கேன். புக்ல சின்ன பாஸ்போர்ட் சைஸ்ல பார்த்திருக்கேன். ஆனா, நீங்க என்னைப் பார்த்ததே இல்லையே. என் முகத்தைக் கூட பார்க்கணும்னு தோணலையா...'' குணசேகரனும் பதில் தருகிறான். ''ஃபேஸ்புக்ல உங்க ஃபோட்டோ இல்லை. அதனால உங்களுக்கு ஃபோட்டோ போடுறது பிடிக்காதுன்னு நினைச்சேன்.'' ''இப்போ இன்பாக்ஸ்ல அனுப்பவா?'' ''உங்க விருப்பம்'' ''அனுப்புறேன்'' ''கிடைச்சதா? எப்படி இருக்கு?'' ''நல்லா இருக்கு...'' ''அது பழசு....''. ''புதுசு இதோ...'' ''என்ன மொட்டை. வேண்டுதலா'' ''ஆமாம். என் குணா நல்லா ஆகணும்னு வேண்டிக்கிட்டு அடிச்ச மொட்டை.'' குணசேகரன் அதிர்ந்து போனான். ''எனக்காகவா ஏன் இப்படி. இதெல்லாம் ரொம்ப அதிகம்னு தோணலையா உங்களுக்கு...'' ''இல்லை. தப்புன்னு தோணலை. அதிகம்னு கூட தோணலை. இதை சொல்லணும்னு தோணுச்சு. மத்தபடி உன் மேல உயிரா இருக்கேன்னு சொல்றதுக்காக நான் இதைப் பண்ணலை. உங்களைப் பிடிச்சிருக்கு. உங்க மேல அன்பு செலுத்துற ஒரு உயிர் இருக்குன்னு தெரிவிச்சுக்குறேன். அவ்ளோதான்....'' ''இந்த அன்பை அப்படியே என்னால திருப்பிக் கொடுக்க முடியாது. '' ''நான் அதை எதிர்பார்க்கலை...'' ''அடுத்த வெள்ளிக்கிழமை கே.கே.நகர் வர்றேன். சந்திக்கலாமா?'' ''பார்க்கலாம்'' ....... அந்த வெள்ளிக்கிழமையில் குணசேகரன் சித்ராவை சந்திக்கவில்லை. சந்திப்பை குணா தவிர்த்ததும் சித்ரா மனமொடிந்துபோனாள். ஃபேஸ்புக்கில் லாக் இன் செய்து விரல்களில் கோபத்தைக் கொட்டினாள். ''நான் ஒண்ணும் உங்க கூட வாழப் போறேன்னு பெட்டி படுக்கையோட வந்துடலை. உங்களைப் பார்க்கணும்னு துடிச்சது உண்மைதான். ஆனா, எந்த காலத்துலயும் அப்படி ஒரு விஷயம் நமக்குள்ள நடக்காது. எந்த மன உளைச்சலும் இல்லாம தெம்பா இருங்க. எப்பவும் உங்க முன்னாடி வந்து நின்னுட மாட்டேன்.'' இப்படி மெசேஜ் செய்துவிட்டு திருவண்ணாமலைக்கு பஸ் ஏறினாள். ........ குணசேகரனால் பதிலளிக்க முடியவில்லை. இரு நாட்கள் கழித்து மன்னிப்பு கேட்டான். இப்போதும் அவர்கள் சாட் செய்துகொண்டிருக்கிறார்கள். ......... குணசேகரன் நடந்ததைச் சொன்னதும் சித்ரா மீது இனம் புரியாத மரியாதை ஏற்பட்டது. இப்படி எத்தனை சித்ராக்கள், குணசேகரன்கள் இருப்பார்கள் என்ற கேள்வியுடன் வீட்டுக்குப் புறப்பட்டேன். குணசேகரன் எனக்கு இர்ஃபான் கானாகவே தெரிந்தார். மாற்றுக் காதலை கண்ணியமாக சொன்ன விதத்தில் 'லன்ச் பாக்ஸ்' மிக முக்கியமான படம். சர்வதேச திரைப்பட விழாக்கள், ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட படம் என பல சிறப்பம்சங்கள் இருந்தாலும், முகம் பார்க்காமல் மனதால் அலைவரிசை பொருந்திப் போன காதலைப் பதிவு செய்த விதம் என்னை வெகுவாக ஈர்த்தது. மும்பையில் அரசு அலுவலகத்தில் அக்கவுண்டட் ஆக பணிபுரிகிறார் சாஜன் ஃபெர்னாண்டஸ் (இர்ஃபான்கான்) இன்னும் சில நாட்களில் பணியிலிருந்து ஓய்வு பெற இருக்கும் சாஜன் மனைவியை இழந்தவர். தனி நபராக இறுக்கத்துடன், அதிகம் பேசாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று கறாராக இருப்பவர். உணவு விடுதியிலிருந்து அலுவலகத்துக்கு டப்பா வாலாக்கள் மூலம் வரும் உணவை சாப்பிடுகிறார். ஒருநாள் மிக சுவையான உணவை சாப்பிடும் சாஜன், உணவு விடுதிக்கே சென்று சமையல் செய்ததைப் பாராட்டுகிறார். ஆனால், அந்த உணவு இலா (நிம்ரத் கவுர்) எனும் 30 வயது இளம் பெண், தன் கணவனுக்காக சமைத்துக் கொடுத்தது. அந்த உணவு டப்பா வாலாக்கள் மூலம் தவறாக சாஜன் கைக்கு சென்று சேர்கிறது. இதை அறியாத இலா, அன்று மாலை டிபன் கேரியர் காலியாக இருப்பதைக் கண்டு, தான் சமையலில் தேர்ச்சி பெற்றுவிட்டதாகக் கருதுகிறாள். கணவன் வீட்டுக்கு வந்ததும் சமையல் எப்படி இருந்தது என்று ஆர்வமாய்க் கேட்கிறாள். காலிஃபிளவர் நன்றாக இருந்தது என்று கணவன் சொன்னதும், தன் சமையலை வேறு ஒருவர் சாப்பிட்டதாகத் தெரிந்துகொள்கிறாள். மேல்வீட்டு ஆன்ட்டியின் ஆலோசனைப்படி, முகம் தெரியாத அந்த நபருக்காக ஒரு கடிதம் எழுதி மறுநாள் டிபன் கேரியருடன் அனுப்புகிறாள். அதில், மிச்சம் வைக்காமல் காலியாக வைத்தமைக்கு நன்றி என்று எழுதியிருப்பதைப் படிக்கும் சாஜன் இன்று உணவில் உப்பு அதிகம் என்று எழுதுகிறார். அப்போது வேலைக்கு புதிதாக சேருகிறார் ஷேக் (நவாஸுதின் சித்திக்) அவருக்கு வேலை கற்றுக்கொடுக்கும் பொறுப்பு சாஜனுக்கு தரப்படுகிறது. சாஜன் பணி ஓய்வுக்குப் பிறகு அவர் இடத்தை ஷேக் நிரப்புவார் என்பது நிர்வாகத்தின் திட்டம். ஆனால், ஷேக் கேட்கும்போதெல்லாம் லன்ச் முடிந்து 4.45-க்கு வா என்று சொல்லும் சாஜன் அவருக்கு வேலை சொல்லித்தராமல், தட்டிக்கழிக்கிறார். ஒரு கட்டத்தில் ஷேக் அனாதை என தன்னிலை விளக்கம் கொடுத்து கலங்க, ஒவ்வொரு வேலையாக சாஜன் தருகிறார். சாஜன் - இலா கடிதப் பரிமாற்றங்கள் தொடர்ந்து நடக்கின்றன. கடிதங்கள் மூலம் சாஜன் கொஞ்சம் கொஞ்சம் மாறுகிறார். ஷேக் அலுவலகத்தில் செய்த கணிதத் தவறுக்கு நான் தான் காரணம் என்று அலுவலகப் பழியை சாஜன் தன் மீது போட்டுக்கொள்கிறார். அந்த அளவுக்கு அன்புக்குரியவராக மாறுகிறார். கடிதங்கள் மூலம் சாஜன் தன் மனைவி குறித்து எழுதுகிறார். அந்தக் கால பாடல், படங்கள் என திரும்பத் திரும்பப் பார்ப்பது எந்த விதத்திலும் சுவாரஸ்யம் இல்லை. ஆனால், அதையே விரும்பிச் செய்யாவிட்டாலும் திரும்பத் திரும்பச் செய்வதாகக் கூறுகிறார். இலா தன் கணவனுக்கு இன்னொரு பெண் மீது காதல் இருப்பதாகவும், சட்டையில் இருக்கும் சென்ட் வாசம் மூலம் கண்டுபிடித்ததாகவும் கடிதம் எழுதுகிறாள். இருவரின் நட்பும் பலமாகிறது. பணம் அதிகம் தேவைப்படாத பூடான் நாட்டுக்கு தன் குழந்தையுடன் செல்ல முடிவெடுத்திருப்பதாக இலா எழுதுகிறாள். நானும் உங்களுடன் வரலாமா என்று சாஜன் கேட்கிறார். ஒருநாள் இருவரும் சந்திப்பது என்று முடிவெடுக்கிறார்கள். ஆனால், அன்றைய நாளில் தான் வயதானவர் என்ற தோற்றம் சாஜனுக்கு ஏற்படுகிறது. அதனால் இலாவை சந்திக்க வேண்டாம் என்று நினைக்கிறார். பேசிக்கொண்டபடி அந்த உணவகத்தில் இலா காத்திருக்கிறாள். சாஜன் அங்கு வந்து ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு இலாவை கவனிக்கிறார். பிறகு, இலாவிடம் பேசாமல், அருகில் செல்லாமல், தன்னை அறிமுகம் செய்துகொள்ளாமல் வீட்டுக்குத் திரும்புகிறார். மறுநாள் இலாவின் டிபன் கேரியர் வழக்கம் போல் வருகிறது. ஆனால், அது காலியாக இருக்கிறது. கோபத்தில் இலா இப்படி செய்திருக்கிறாள் என்பதை உணர்ந்த சாஜன் பதில் கடிதத்தில் உணவகம் வந்ததை எழுதுகிறார். மேலும், தாத்தாவின் வாடை எனக்கு வந்துவிட்டதை உணர்வதாக குறிப்பிடுகிறார். நாசிக் செல்ல முடிவெடுத்து ரயில் ஏறுகிறார். அதிலும் விருப்பமில்லாமல் வீடு திரும்புகிறார். உணவு சரியாக சென்று சேரவில்லை என்று டப்பா வாலாக்களிடம் புகார் கூறுகிறார் இலா. அப்படி நடக்க வாய்ப்பேயில்லை என்று மறுக்கிறார் தொழிலாளி. அவரிடம் தன் டிபன் கேரியர் எந்த அலுவலகத்துக்கு செல்கிறது என்று கேட்டு, முகவரி தேடி பயணிக்கிறார் இலா. அங்கு சாஜன் இல்லை. அவர் பணி ஓய்வு பெற்றுவிட்டதாகவும், நாசிக் சென்றதாகவும் ஷேக் கூறுகிறார். விரைவில் நாசிக் வருவேன் என்று இலா மனதில் நினைத்துக்கொள்கிறார். டப்பா வாலாக்கள் உதவியுடன் இலாவின் இருப்பிடத்தை தேடும் முயற்சியில் ஈடுபடுகிறார் சாஜன். இலாவின் நம்பிக்கையில் காதலின் உன்னதம் உயர்ந்து நிற்கிறது. கடைசியில் இலாவின் நிலை என்ன? அவர் வார்த்தைகளிலேயே தெரிந்துகொள்ளலாம். ''நீங்க நாசிக் போய் சேர்ந்திருப்பீர்கள். காலையில் எழுத்து தேநீர் தயாரித்திருப்பீர்கள். அதற்குப் பிறகு, ஒருவேளை காலை 'வாக்கிங்' சென்றிருப்பீர்கள். நான் இன்று காலையில் எழுந்தேன். என்னுடைய நகைகளை விற்றுவிட்டேன். வளையல்கள், தாலி போன்றவை. நிறைய இல்லை. ஆனால், நம்முடைய ஒரு ரூபாய் பூடானில் ஐந்து ரூபாய்க்கு சமமாம். அதனால் கொஞ்சகாலத்தை ஓட்டிவிடலாம். அதற்குப் பிறகு, பார்த்துகொள்ளலாம். இன்று யஷ்வி ஸ்கூலில் இருந்து வருவதற்குள் எங்களுடைய பொருட்களையெல்லாம் 'பேக்' செய்துவிட்டிருப்பேன். மதியம் வண்டிக்குப் புறப்பட்டுவிடுவோம். ஒருவேளை, இந்தக் கடிதத்தை நான் உங்களுக்கு அனுப்பலாம். உங்களுடைய புதிய தபால்காரர் அதை உங்களிடம் கொண்டுவந்து சேர்க்கவும் செய்யலாம். அல்லது ஒருவேளை இந்தக் கடிதத்தை நான் என்னிடமே வைத்துகொண்டிருக்க வேண்டும். பிறகு, சில ஆண்டுகளுக்குப் பிறகு அதைப் படிக்க வேண்டும். நான் எங்கயோ படித்திருக்கிறேன். சில சமயங்களில் தவறான ரயில்கூட சரியான இடத்துக்குக் கொண்டுபோய் சேர்க்கும் என்று. பார்க்கலாம்'' என்கிறார். தவறான ரயில் கூட சரியான இடத்துக்கு கொண்டு போய் சேர்க்கலாம் என்று ஷேக் சாஜனிடம் சொல்வது, கணவன் இறந்ததும் அவரால் பட்ட கஷ்டம் அதிகம் என அதிருப்தியை வெளிப்படுத்திய இலாவின் தாய், சடலத்துக்கு அருகில் பசிக்கிறது என சொல்வதாக வாழ்க்கையின் போக்குகளை நிதர்சனங்களாக கண் முன் நிறுத்துகிறார் இயக்குநர் ரித்தேஷ் பத்ரா. இரண்டாவது குழந்தை குறித்து யோசிக்கவில்லையா என இலாவிடம் சாஜன் கேட்பது, இலா அடுத்த குழந்தைக்கான ஆவலை கணவனிடன் வெளிப்படுத்துவது, கணவன் அதற்கு அலட்சியமாய் பதில் சொல்வது என உறவின் உண்மை நிலையை சரியாகக் காட்சிப்படுத்தி இருக்கும் விதம் கவனத்துக்குரியது. படத்தில் சாஜன் - இலாவும் சேர்வதில்லை. மனதால் சேர்ந்துவிட்ட அந்த காதலர்கள் நிஜத்தில் சேராதது பெரிய குறையாகவும் தெரியவில்லை. சேர்ந்தால்தான் காதல் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. * குணசேகரன் - சித்ரா சந்திப்பு சமீபத்தில்தான் நிகழ்ந்திருக்கிறது. அன்பு அவர்களுக்குள் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது... "என்னதான் இருந்தாலும் இதை முன்னே நகர்த்துவது காம்ப்ளிகேட்டட் ஆச்சே?" என்று மிகவும் கேஷுவலாக கேட்டதற்கு, குணசேகரன் ரொம்ப சீரியஸான முகத்துடன் சொன்னது: "நானே அறியாமல் என்னிடம் பதுங்கியிருந்த தேடலும் தேவையும்தான் சித்ராவிடம் இணைத்தது. ஆதாய நோக்கத்தை இரு தரப்பிலுமே உதாசினப்படுத்தி, நமக்கும் நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் அன்பையும் அரவணைப்பையும் பரிமாறிக்கொள்ளும் பட்சத்தில் பாதகங்களைத் தவிர்க்க முடியும்." * இலாக்களும் சித்ராக்களும் மாற்றுக் காதலை நாடுவது, மனதளவிலான வெறுமை சார்ந்த உளவியல் காரணமாக இருக்கலாம். ஆனால், இவர்கள் செய்தித்தாள்களின் விற்பனைப் பண்டமாக மாறாமல் இருப்பதற்கு சம்பந்தப்பட்டவர்களின் பரஸ்பர நம்பிக்கையும், தெளிவான சிந்தனையுடன் சூழல்களை அணுகும் போக்கும்தான் துணைபுரிகிறது. அதேபோல் இலாக்கள், சித்ராக்கள், சாஜன்கள், குணசேகரன்களை முழுமையாகப் புரிந்துகொள்ள இலாக்கள், சித்ராக்கள், சாஜன்கள், குணசேகரன்களாலும் அல்லது அவர்களின் மனநிலையில் சிந்திக்க முற்படுபவர்களால் மட்டுமே சாத்தியம்! - மான்டேஜ் மனசு இன்னும் சுழலும். http://tamil.thehindu.com/opinion/blogs/மான்டேஜ்-மனசு-19-லன்ச்-பாக்ஸ்-மதிப்புமிகு-மாற்றுக்-காதல்/article9352905.ece?ref=relatedNews
 2. மான்டேஜ் மனசு 18: மாறாக் காதலின் பொக்கிஷங்கள்! பல ஆண்டுகளுக்குப் பிறகு குமார் செல்போனில் அழைத்தான். ''என்ன பண்ற மாப்ள'' ''அலுவலகத்துல இருக்கேன் டா. என்ன விஷயம்?'' ''நானும் சென்னையிலதான் இருக்கேன். உன் ஆபிஸ் எங்கே?'' ''மவுன்ட் ரோடு'' ''சூப்பர் மாப்ள. நான் தேனாம்பேட்டையிலதான் வீடு எடுத்து தங்கி இருக்கேன். வந்து ஒரு மாசம்தான் ஆச்சு'' ''சூப்பர் டா. சந்திக்கலாமா'' ''நிச்சயமா'' ''சரி சாயந்திரம் பேசுறேன்'' என்று உரையாடலுக்குத் திரையிட்டு பணிகளில் கவனம் செலுத்தினேன். இன்றைய இரவை எப்படிக் கழிக்கலாம் என்ற யோசனையுடன் இருந்தபோதுதான் குமாரே அழைத்தான். சந்தித்தோம். குமாரால் அந்த இரவு ஒளி பெற்றது என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். புத்தகக் குவியல்களுக்கிடையில் இருக்கும் கடிதங்களைக் கண்டெடுத்து 'என்ன மாப்ள... இவ்ளோ கடிதங்கள்' என ஆச்சர்யம் காட்டினேன். குமார் காதல் ஏற்கெனவே ஒரு முறை மேலோட்டமாக சொல்லி இருக்கிறான். ரத்தமும் சதையுமான அந்தக் காதலை மீண்டும் சொல்ல ஆரம்பித்தான். ''என் தங்கச்சி நிஷாவோட தோழி கலா. கல்லூரியில் படிக்கும்போது ஹாஸ்டல் ரூம்மேட்ஸ். கவிதை, அரசியல் ஆர்வம், புத்தக வாசிப்புன்னு என்னைப் பத்தி நிறைய விஷயங்கள் சொல்லச் சொல்ல கலாவுக்கு என்கிட்ட பேசணும்னு ஆர்வம் வந்துச்சு. அப்போ நானும் கல்லூரியில் படிச்சுக்கிட்டு இருந்தேன். ஊருக்குப் பக்கத்துலயே காலேஜ் இருந்ததால வீட்ல இருந்து காலேஜ் போய் படிச்சேன். வயல்வேலையில கவனம் செலுத்திக்கிட்டே சிறு பத்திரிகைகளுக்கு கதை, கவிதை அனுப்புறதை வழக்கமா வெச்சிருந்தேன். அதனாலயே எங்க ஊர் போஸ்ட்மேன் எனக்கு நண்பரானார். தினமும் ஏதாவது ஒரு கடிதமோ, புத்தகமோ, சிற்றிதழோ எனக்கு வந்துகிட்டே இருக்கும். அப்படி ஒருநாள்ல தான் கலாகிட்ட இருந்து கடிதம் வந்தது.'' அந்தக் கடிதம் இதுதான் என்று வாசிக்கக் கொடுத்தான். 20.11.2001 விடுதி அண்ணன் குமாருக்கு வணக்கம். நான் நிஷாவின் தோழி கலா. நலமா இருக்கிறீர்களா? நிஷா உங்களைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறாள். உங்களைப் போல திறமையாக அரசியல் பார்வையோடு வளர ஆசைப்படுகிறேன். எனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள தனித்துவமாக இயங்க விரும்புகிறேன். அதற்காக நீங்கள் எனக்கு வழிகாட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். பதில் கடிதம் எழுதினால் மகிழ்வேன். நன்றி. கலா. இதுபோன்ற பல கடிதங்கள் படிக்கக் கொடுத்தவன் என் சொத்து, என் பொக்கிஷம், இத்தனை வருட வளர்ச்சியில் நான் சம்பாதித்த ஒட்டு மொத்த அன்பு இதுதான் டா என என் கைகளில் ஒப்படைத்தான். நான் அதைப் படிக்கப் படிக்க கலங்கிப்போனேன். இந்தக் காதலை கடிதங்கள் வழியாக உங்களுக்கும் கடத்துகிறேன். 24.12.2001 விடுதி குமார்... நலமே. நலமாயிருப்பீர்கள் என நினைக்கிறேன். கலைக்குழுவுடன் என்னை சேர்த்தமைக்கு நன்றி. அவர்களுடனான நட்பு பலமடைந்துள்ளது. நான் லெனின் மற்றும் மாக்ஸிம் வாழ்க்கை வரலாற்றை படிக்க விரும்புகிறேன். நூல்கள் பற்றி தகவல் தெரிவிக்கவும். உடல்நிலையை பார்த்துக்கொள்ளுங்கள். என்னை ஒருமையில் அழைத்து எழுதியதற்காக மன்னிப்பு கோரியிருந்தீர்கள். அப்படி கூப்பிடுவதையே நானும் விரும்புகிறேன். உங்களுக்கு இல்லாத உரிமையா? சரி. உடன் கடிதம் எழுதுங்கள். காத்திருக்கிறேன். இப்படிக்கு கலா... 08.02.2002 சென்னை தோழமையுள்ள கலாவுக்கு வணக்கம். நலம். நலமாயிருப்பாய் என நம்புகிறேன். சென்னை வந்த நீ ஒரு தொலைபேசியாவது பண்ணியிருக்கலாம். மனசு கஷ்டமாகத்தான் இருந்தது. இருந்தாலும் அமைப்பு முடிவு அல்லது தோழர்களின் வழிநடத்தல் அதுவாயிருந்தால் அதுகுறித்து பேச ஒன்றுமில்லை. கடிதங்களில் பின்குறிப்பு அவசியமற்றது. நீ அனுப்பிய வாழ்த்துமடலில் அது மோசமானதாகவே இருந்தது. என்ன செய்வது யோசித்து யோசித்து ஒரு வாழ்த்து மடல் தேடியிருந்திருப்பாய். வீணாக்கலாமா? நன்றி. குமார். 10.04.2002 விடுதி பிரியமுள்ள குமாருக்கு கலா எழுதிக்கொள்வது... நீண்ட நாட்களுக்குப் பிறகு கடிதம் எழுதுகிறேன் என்ற வருத்தம் வேண்டாம். இப்பொழுதுதான் எனக்கு புராஜக்ட் வேலை முடிந்தது. இன்னும் 15 நாட்களுக்குள் சென்னை வந்துவிடுவேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்களது கடிதம் வந்திருந்தது. மிகவும் சந்தோஷமாக இருந்தது. இப்போதெல்லாம் கடிதப் போக்குவரத்து குறைந்துவிட்டது. இனிமேல் பழையபடி தொடர விரும்புகிறேன். பகிர்ந்துகொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. நான் கற்றுக்கொள்ள வேண்டியவையும் நிறையவே உள்ளன. ஊருக்கு எப்போது வருவீர்கள். பார்த்து இரண்டு மாதங்களாகிவிட்டன. ஆனால், தினமும் நினைக்கத் தோன்றிவிடும். நேரடியாகப் பார்த்து நிறைய பேசவேண்டும் என்று தோன்றுகிறது. நிஷாவுக்கு கடிதம் எழுதினேன். ஆனால், பதில் இல்லை., இனி நேராகப் பார்த்தால் கொலை செய்துவிடலாம் என்று இருக்கிறேன். இதில் உங்களுக்கு ஆட்சேபனை இல்லைதானே. சரி குமார். இனி அடுத்த கடிதத்தில் எழுதுகிறேன். பதில் போடவில்லையென்றால் நிஷாவுக்கு நேர இருக்கும் கதிதான் உங்களுக்கும்... தோழி கலா... 03.07.2002 விடுதி வணக்கம் குமார். கடிதம் போடாமைக்கு முதலில் என்னை மன்னித்துவிடுங்கள். கண்டிப்பாக இனியும் இந்த நிலைமை நீடிக்காது. இக்கடிதம் வந்த இரு நாட்களுக்குள் இன்னொரு கடிதம் வந்துவிடும். எனக்கு அதிக மனக் கஷ்டம் குமார். உங்களிடம் ஒருநாள் முழுதும் பேசினாலொழிய அது தீராது. உங்களது இரண்டு கடிதங்களும் கிடைக்கப்பெற்றன. வாழ்த்துகள் என்ற வாழ்த்துடன் கடிதம் வந்தது. நான் இன்னும் கல்லூரியில் பேராசியராக அமர்த்தப்படவில்லை. தோழர் சுரேகாவிடம் இதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறியிருந்தேன். நான் பணியில் சேர்ந்திருந்தால் உங்களுக்குதான் முதலில் சொல்லியிருப்பேன். இன்று உங்களின் இரண்டாவது கடிதம் வந்தது. உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும்போது கடிதம் வந்தது. பிரம்மையோ என்று கூட யோசிக்கத் தோன்றியது. உண்மையில் உங்கள் கடிதம் மட்டும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது குமார். அது இரண்டு வரியாக இருந்தாலும் கூட. அடுத்த கடிதம் விரைவில் குமார். எதற்கும் அடுத்த கடித,ம் படிக்கும் முன்பு ஒரு ஜலதோஷத்திற்கான மாத்திரையை வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. தோழமையுடன் கலா. 22.07.2002 விடுதி வணக்கம் குமார். நீங்கள் அனுப்பிய புத்தகங்களும் கடிதமும் இன்றுதான் கிடைக்கப்பெற்றது. நீங்கள் இனிமேல் ஊருக்கு வருவதாக இருந்தால் தகவல் தெரிவித்துவிட்டு வாருங்கள். என்னை சந்திக்காமல் இனி ஊரிலிருந்து சென்னை செல்லக்கூடாது. எம்.எஸ்.சி. முடித்தவுடன் வேலைக்கான அனைத்து முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறேன் குமார். இப்போதுதான் வீட்டு வேலைகள் செய்யக் கற்றுக்கொண்டிருக்கிறேன். அதுவும் ஒரு நல்ல ஃபுரொபஷன். எனக்கு எங்கு வேலையில்லாவிட்டாலும் வீட்டு சமையற்கட்டில் வேலை காத்திருக்கிறது. என்னால் உங்களை மாதிரி ஒருவரை உற்சாகப்படுத்தும் அளவுக்கு கடிதம் எழுத முடியவில்லை குமார். உண்மையில் அனைத்து கடிதங்களையும் நல்ல கையெழுத்துடன் சிறந்த வார்த்தைகளுடன் அழகாக எழுதிவிடுகிறீர்கள். என்னால் அப்படி எழுத முடியவில்லை. உங்களைப் போல் விஷயத்தை சரியாக வரையறுத்து எழுதுவது எப்படி என்று எனக்குப் புரியவில்லை. வீட்டில் இருந்துகொண்டு எந்த உருப்படியான வேலையையும் செய்ய முடியவில்லை. கடுமையான வேலைகள் எனக்காகவே உள்ளன. படித்துவிட்டு வேலையில்லாமல் வீட்டில் இருப்பது போன்ற ஒருநேரம் மிகவும் கொடுமையானது. அதுவும் பெண்ணாக இருப்பதால் கொடுமை கொஞ்சம் கூடுதல். அதிகமாக வெளியில் சொல்லமுடிவதில்லை. ஊரில் எல்லோரும் ஒருமாதிரியாகப் பார்க்கிறார்கள். நான் எப்போது இதிலிருந்து விடுபடுவேன் என்று துடித்துக்கொண்டிருக்கிறேன். என்ன குமார். ரொம்ப அறுத்துவிட்டேனா. இனிமேல் இப்படி எழுதாமல் இருக்க முயற்சி செய்கிறேன். உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள். கடிதம் எழுதுங்கள். இப்படிக்கு தோழி கலா. 11.08.2002 விடுதி இனிய தோழன் குமாருக்கு கலா எழுதிக்கொண்டது. முந்தைய கடிதம் என்னால் எத்தனை முறை படிக்கப்பட்டதென்று தெரியவில்லை. முன்பை விட இப்போது கம்யூனிஸத்தில் தெளிவு அதிகமாகி இருக்கிறது. இன்னும் தெளிவடைய விரும்புகிறேன். நிறைய புத்தகங்கள் படிக்கிறேன். துரை. சண்முகத்தின் நரகல் கதை பிடித்திருந்தது. உன் அடிச்சுவட்டில் நானும் நாவல் அருமை. ட்ராப் என்ற அந்தப் புரட்சியாளனை குயென்னைப் போல நானும் மிகவும் நேசித்தேன். கடைசியில் அந்தப் பாத்திரம் இறந்தவுடன் மிகவும் கஷ்டமாகிவிட்டது. நாவல் மிகவும் உயிரோட்டமாக இருந்தது. இப்போதெல்லாம் பிரச்சினைகளை தூரத்தில் நின்று பார்க்க முற்பட்டிருக்கிறேன். அப்படிப் பார்க்கும்போதுதான் என்னுடைய பிரச்சினை சாதாரணமாகத் தெரிகிறது. புரட்சியில் இளைஞர்கள் நூலைப் படித்தேன். அது பற்றி நேரில் பேச நிறைய விஷயங்கள் உள்ளன. நான் இப்போது கம்யூனிஸத்தில் அதிகம் வளர்ந்திருக்கிறேன் என்றால் அதற்குக் காராணம் நீங்கள்தான். என்னை வளர்த்த பெருமை உங்களையே சேரும் குமார். நாம் எப்போது சந்திப்பது? ஏனெனில் சந்தித்துக்கொள்வதின் அவசியம் ஏற்பட்டுள்ளது. இப்படிக்கு கலா 29.09.2002 இரவு 2.30 மணி சென்னை அன்புள்ள கலாவுக்கு... வணக்கம். இரண்டு பேருமே இப்போது நலமாயில்லை என்பது இரண்டு பேருக்குமே தெரிந்த விஷயம். உடம்பை கவனித்துக் கொள்வோம். ஒரு வேளை இந்தக்கடிதம் ஒரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் அல்லது நினைத்துப் பார்க்கத் தூண்டும்படி இருக்கும். அன்பு கலா 28.09.இரவு அன்று உனக்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சுமார் 2.30 மணி நேரம் காத்திருந்துவிட்டுதான் வந்தேன். உடல் சோர்வு, வேலைச்சுமை இவற்றுக்கிடையிலும் என்னை இயல்பாக வைத்திருக்க உதவும் உன் நினைவுகளை வைத்துக்கொண்டு கவிதைகள் மட்டும் எழுதிவிட்டேன். நாம் இருவரும் அநேக கடிதங்கள் இதற்கு முன் எழுதிக்கொண்டோம். இந்த காதல் உணர்வு நிலையோடு எழுதும்போதுன் ஒரு வகையில் சந்தோஷம், பரவசம் வரத்தான் செய்கிறது. முதலில் அதை வென்று யதார்த்தமாக இருக்க முயற்சிப்போம். தூக்கம் வருகிறது. உனக்கெழுதும் கடிதம் முதலில். தூக்கம் பிறகுதான். சில நேரங்களில் வந்துவிடுகிறது வாழ்க்கை குறித்த விசாரணைகள். நாம் என்னவாகப் போகிறோம்? என்பது பற்றி. மகிழ்ச்சியை எப்படி அணுகுவது, படைப்பாற்றலோடு ஏற்படும் முரண்பாடு இரண்டும் வரத்தான் செய்கிறது. அன்புடன் குமார். 06.01.2003 பிரிய தோழன் குமாருக்கு நான் நலமாக இல்லை குமார். நான் என்ன செய்யட்டும்? என்னால் யாரையும் பாதிக்காமல் முடிவெடுக்க முடியவில்லை. சாதாரண பிரச்சினையைப் போட்டு இப்படி குழப்பிக் கொள்கிறேனோ என்ற அச்சம் எழுகிறது. உங்களது பலவீனம் நான் என்று எழுதியிருந்தீர்கள். மிகவும் கஷ்டமாக இருக்கிறது. பலமாக இல்லாமல் இப்படி பலவீனமாக ஆகிவிட்டோமோ என்று. எனக்கு இப்போது எதைப் பார்த்தாலும் பிடிக்கவில்லை. உற்சாகமே இல்லாமல் படுமோசமாக இருக்கிறேன். நான் உங்களை சந்தித்திருக்கக்கூடாது குமார். நீங்களாவது நிம்மதியாக இருந்திருப்பீர்கள். ஆனால், என் முடிவில் எந்தத் தவறும் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால், நான் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக நினைக்க வேண்டாம். ஏனெனில், உங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டு நான் மட்டும் சந்தோஷமாக இருப்பதாக கற்பனை செய்ய வேண்டாம். உங்கள்மேல் நான் கொண்ட பாசமோ, நேசமோ பொய்யில்லை. நான் வளர்க்கப்பட்ட சூழல் அப்படி. என் வீட்டில் பெரிய பிரச்சினை. நான் மட்டும் காதல் திருமணம் செய்துகொண்டேன் என்றால் பெரும் ஆபத்து காத்திருக்கும். நான் என் பக்கம் மட்டுமே சிந்திக்கவில்லை. இரு வீட்டினரின் பக்கமும் சேர்த்தே தான் சொல்கிறேன். இருவருக்கும் இடையேயான மனக்கஷ்டம் நாளடைவில் மறைந்துவிடும் என்றே நினைக்கிறேன். நான் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பேசுவது அல்லது எழுதுவது என்று தெரியவில்லை. நம் இருவருக்கும் இடையேயான உறவு நட்பாக இருப்பதிலேயே என் மனம் நிறைவு கொள்கிறது. தவிர, காதல் அந்த நிறைவைத் தரவில்லை. ஏதோ ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருக்கிறது. நீங்கள் என் நண்பன், ஆசிரியர், குரு என்று நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது, மற்றபடி இந்த நிலையில் எனக்கு வேறு எதுவும் மகிழ்ச்சியைத் தரவில்லை. நான் என் உணர்வுகளையே சரியாகப் புரிந்துகொள்ளாமல் உங்களிடம் பழகியது மிகத் தவறு. அதற்காக நீங்கள் என்ன செய்தாலும் ஏதோ ஒருவகையில் தண்டனை கொடுத்தாலும் சரிதான். நான் வேறு எதையும் மனதில் வைத்துக்கொண்டு எதையும் எழுதவில்லை. உங்களை நிராகரிப்பதற்கு நான் போக்கு காட்டுவதாகவெல்லாம் நீங்கள் நினைத்தால் அது என்னைப் பற்றிய புரிதலில் உள்ள குறைபாடே. ஆனால், நான் இன்னமும் ஒத்துக்கொள்வேன் உண்மையில் நான் உங்கள் மேல் காதல் கொண்டேன் என்பதை. இப்போதைக்கு நாம் அரசியல் ரீதியாக வளர்வோம். நம் உறவு நட்பா? காதலா? என்பதை காலம் தீர்மானிக்கட்டும். நான் ஏன் இவ்வளவு விரிவாக கடிதம் எழுதி விளக்குகிறேன். நீங்கள் என்ன என்னைப் பற்றி புரிந்துகொள்ளாதவரா? எனக்கு மார்க்சிய - லெனினிய அரசியலை அறிமுகம் செய்த முதல் ஆசிரியனே நீங்கள்தானே. உங்களால்தான் என் வாழ்க்கைப் பாதை திசை திரும்பியது. இல்லாவிடில் எங்கோ ஒரு மூலையில் வேலையைப் பார்த்து வெற்று வாழ்க்கை வாழ்ந்திருப்பேன். என் வாழ்வின் மிக முக்கிய நபர் நீங்கள். உங்களை நான் நிராகரிப்பதற்கு எந்த வகையிலும் உரிமை இல்லை. நான் எனக்குள் போட்டுக்கொண்ட கட்டுப்பாட்டை சில நேரங்களின் உங்களின் காதலும், கடிதங்களும் தகர்த்துவிடுகின்றன. என்னை குழந்தையாகவும், தாயாகவும் போற்றிய உங்களது அன்பை, பண்பை என்ன சொல்லி போற்றுவது? உண்மையில் நீங்கள் கிடைத்தது என் பேறு. வாழ்க்கையின் இறுதிவரை அனைத்து இன்ப துன்பங்களிலும் உற்ற தோழியாக இணைந்து செயல்படுவேன். தோழமையுடன் கலா. *** இந்தக் கடிதங்களைப் படித்து முடித்ததும் குமாரிடம் என்னால் இயல்பாகப் பேச முடியவில்லை. இதுவும் கடந்து போகும் என்று வழக்கமான வெற்று அறிவுரையை சொல்லவும் மனமில்லை. பேசாமொழியுடன் வீட்டுக்கு வந்தேன். கலா - குமார் கடிதங்கள் எனக்கு 'பொக்கிஷம்' படத்தை நினைவூட்டியது. சேரன் இயக்கத்தில் இலக்கிய வடிவில் ஓர் இயல்பான சினிமா என்ற அடைமொழியோடு வந்த படம் 'பொக்கிஷம்'. வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர், எஸ்.எம்.எஸ் என்று நவீன வடிவங்களில் காதலித்தும், அன்பைப் பரிமாறிக்கொண்டிருக்கும் காலகட்டம் இது. ஆனால், கடிதத்தின் மூலம் அன்பை வளர்ப்பது, நட்பைத் தொடர்வது சுகானுபவம். திரும்பத் திரும்ப படிப்பதும், விரும்பி விரும்பிப் பார்ப்பதும் கடிதங்களைத்தான் என்பது காலம் நமக்கு உணர்த்தும் வரலாற்று உண்மை. பொக்கிஷத்திலும் அதுதான் நிகழ்கிறது. அம்மா கேட்டதற்காக, வீட்டுப் பத்திரத்தைத் தேடுகிறான் மகன் ஆர்யன் ராஜேஷ். கடைசியில் லெதர் சூட்கேஸில் இருக்கும் பத்திரத்தைக் கண்டெடுக்கும்போது சில கடிதங்கள் இருப்பதையும் பார்க்கிறான். 'போன் பண்ணா அட்டென்ட் பண்ண மாட்டியா' என எகிறும் காதலி பிந்து மாதவியின் அழைப்பை அடுத்தடுத்து புறக்கணித்துவிட்டு கடிதங்களில் மூழ்குகிறான். அவன் படிக்கும் கடிதங்கள் வாயிலாக அப்பா சேரனின் காதலைத் தெரிந்துகொள்கிறான். 1970-ல் கொல்கத்தாவில் மெரைன் இன்ஜினீயராக இருக்கும் லெனின் (சேரன்), மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் தந்தை விஜயகுமாரைப் பார்க்க சென்னை வருகிறார். அப்போது பக்கத்து இருக்கையில் இஸ்லாமிய பெண் ஒருவர் சிகிச்சைக்காக வந்து தங்கியிருக்கிறார். அவருக்கு உதவியாக மகள் நதீரா (பத்மப்ரியா) உடனிருக்கிறாள். தீடீரென வயிற்றுவலியில் அவஸ்தைப்படும் நதீராவின் அம்மாவை பரிசோதிக்க டாக்டரை அழைக்கிறார் சேரன். அதற்குப் பிறகு அவள் அம்மாவின் சிகிச்சைக்கான பணமாக ரூ.2000 கொடுத்து உதவுகிறார். அந்த உதவி நன்றியாக மாறி, கடித வடிவில் நட்பாகத் தொடந்து காதலாக கனிகிறது. விடுமுறை முடிந்து கொல்கத்தா திரும்பும் சேரன், பத்மப்ரியாவுக்காக கம்யூனிசம் ஏன் எதற்கு? என்ற புத்தகத்தை, தன் அப்பா விஜயகுமாரிடம் கொடுத்துவிட்டு, அவளிடம் ஒப்படைக்கும்படி கூறிச் செல்கிறார். பத்மப்ரியா அவள் உறவினர் வீட்டுக்குச் சென்றதால் சேரன் ஊருக்குக் கிளம்பும்போது அங்கு இல்லை. அதற்குப் பிறகு அவள் நினைவாகவே இருக்கும் சேரனுக்கு அப்பாவிடம் இருந்து ஒரு கடிதம் வருகிறது. 'நதீரா நீ சொல்லாமல் போய்விட்டதால் வருத்தப்பட்டாள். எனக்கு மருந்து மாத்திரை கொடுத்து கவனித்தாள். நன்றி சொல்லி கடிதம் அனுப்பு' என்று நதீராவின் முகவரியை எழுத, சேரனுக்கு உற்சாகம் பீறிடுகிறது. கடிதம் எழுதி, பதில் கடிதத்துக்காகக் காத்திருக்கிறார். பத்மப்ரியாவுன் பதில் கடிதமும் வந்து சேர்கிறது. இந்தக் கடிதப் போக்குவரத்து நாளடைவில் அவர்களுக்குள் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருகிறது. பரஸ்பரம் காதலை தெரிவித்துக்கொள்கிறார்கள். பத்மப்ரியா படிக்கும் கல்லூரிக்கு போன் செய்து சேரன் பேசுகிறார். அடுத்த சில நாட்களில் காரைக்கால் வந்து கல்லூரி அருகில் பத்மப்ரியாவை சந்திக்கிறார். ஒரு கட்டத்தில், சேரன் தன் தந்தையிடம் நடந்ததைச் சொல்கிறார். விஜயகுமாரும், சேரனும் பெண் கேட்டு நாகூர் புறப்படுகிறார்கள். பத்மப்ரியாவின் தந்தை, 'கல்லூரி படித்த பிறகு திருமணம் செய்து வைக்கலாம். அதுவரை சேரன் மாதத்துக்கு ஒரு கடிதம் மட்டும் போடட்டும்' என நிபந்தனை விதிக்கிறார். அதன்படி சேரன் கடிதம் போடுகிறார். ஆனால், 3 மாதங்கள் கடந்தும் பதில் கடிதம் வரவில்லை. அப்பா விஜயகுமாரை போய் என்ன நடந்தது என பார்க்கச் சொல்கிறார். விஜயகுமார் படிப்பு வேலை அதிகம் இருப்பதால் கடிதம் எழுதவில்லை என சொல்ல, நிம்மதியாகும் சேரன் தொடந்து கடிதம் எழுதுகிறார். பதிலே வராததால் நேராக சேரன் நாகூர் வந்துவிடுகிறார். அப்போதுதான் யாருக்கும் தெரியாமல் அவர்கள் வீட்டை விற்று காலிசெய்துவிட்டுப் போனது தெரியவருகிறது. அதற்குப் பின் எங்கு தேடியும் பத்மப்ரியாவை சேரனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்பாவின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார். ஒரு மகன் பிறக்கிறான். அந்த மகன்தான் கடிதத்தைப் படித்து, அப்பாவின் காதலைப் புரிந்துகொள்கிறார். சேரன் எழுதி போஸ்ட் செய்யப்படாத கடிதங்களை எடுத்துக்கொண்டு, பத்மப்ரியாவைத் தேடுகிறான். மலேசியாவில் இருக்கிறார் என தெரிந்த பிறகு அங்கு சென்று தன்னை அறிமுகம் செய்துகொண்டு கடிதங்களை அளித்துவிட்டு வருகிறான். அழுகையும் ஆற்றாமையுமாக பத்மப்ரியா திருமண மறுப்பில் உறுதியாக இருந்ததை சொல்கிறார். விரைவில் சந்திப்பேன். இனி பிரிய மாட்டேன் என்று மரணத்தை குறிப்பிடுகிறார். ''ஒரு விஷயத்தை பழகுற வரைக்கும் பிரச்சினை இல்லை. பழகுன அப்புறம் அதை ஒதுக்குறதுதான் கஷ்டம். இதான் மனித இயல்பு'', ''அழகா இருக்குற பொண்ணுங்க மனசை சலனப்படுத்துவாங்க, அறிவா இருக்குற பொண்ணுங்க நம்ம சிந்தனையையும் சேர்த்து சலனப்படுத்துவாங்க'' என யதார்த்தங்களை வசனங்கள் மூலம் சேரன் வெளிப்படுத்தி இருக்கிறார். சேரன் நடிப்பும் தவிப்பும் கதாபாத்திரத்துக்கு ஓரளவே நியாயம் சேர்க்கிறது. செதுக்கி ஒதுக்கிய மீசை, தடித்த கன்னம் என்று முதிந்த முகத்தோடு சேரன் நடித்திருப்பது கூட பரவாயில்லை. அதுவும் காதல் பாடல்களில் துண்டை தோளில் போட்டபடி உலா வருவதை ரசிக்க முடியவில்லை. கடிதம் பத்திரமாக போய் சேர்கிறதா என்பதை சோதித்து அறிய தபால்காரருக்கு ஓயாமல் வணக்கம் வைப்பது, அஞ்சல் அலுவலகத்துக்கே வந்து கடிதம் மூட்டை கட்டி கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்வது, கடிதம் போடும் அஞ்சல்பெட்டி மழையில் நனையாமல் இருக்க குடை பிடிப்பது போன்ற காதலுக்கே உரிய அபத்தங்களை அழகாக செய்யும் போது மட்டும் சேரன் ரசிக்க வைக்கிறார். பத்மப்ரியா தன் கண்களில் மட்டுமே நடிப்பதற்கான வாய்ப்பு. அதை சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார். ஆனால், பத்மப்ரியாவின் வருகையை, இருப்பை, பிம்பத்தை முழுக்க பிரதிபலிக்காமல் மீனாவின் பின்னணிக் குரல் தடுத்துக்கொண்டே இருக்கிறது. 'பொக்கிஷம்' படம் ஆண் பார்வையில் மட்டும் நீண்டு செல்லும் திரைக்கதைதான் அலுப்பை வரவழைக்கிறது. கடிதம் மட்டுமே பிரதான இடத்தைப் பிடித்திருப்பதால் சோர்வு ஏற்படுகிறது. திருமண மறுப்பில் உறுதியாய் இருக்கும் பத்மப்ரியாவின் தனிமையை, வலியை, வாழ்க்கையை ஏன் வாய்ஸ் ஓவரில் சொல்ல வேண்டும்? அவர் பார்வையில் காதலைப் பற்றி சொல்லியிருந்தால் 'பொக்கிஷம்' போற்றுதலுக்குரிய படமாக இருந்திருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது. *** குமார் கலாவிடம் தன் காதலைச் சொன்னது ரஷ்யப் புரட்சி நாளான நவம்பர் 7-ல் தான். ஆனால், கலாவால் குமாரின் காதலை கல்யாணம் வரைக்கும் கொண்டு செல்ல முடியவில்லை. முதல் ஆசிரியன், ஆசான், குரு, அரசியல் பார்வையை விதைத்த உங்களைத் திருமணம் செய்து கொள்ள மனம் மறுக்கிறது. ஏதோ ஒன்று தடுக்கிறது. நட்பாய் தொடர்வோம் என்று கடைசியாய் குமாருக்கு கடிதம் எழுதினாள். அதற்கடுத்த ஒரு போராட்டத்தின் போது சென்னையில் ஒரு மண்டபத்தில் கொத்து கொத்தாக தோழர்களை கைது செய்து அடைத்து வைத்திருந்தனர். அப்போது குமார் தேநீர் அருந்தும்போது காற்றைக் கிழித்து வந்தது அந்த ஒற்றைக் குரல். அதைக் கேட்கும் சக்தியும், தெம்பும் குமாருக்கு இல்லை. ஆனால், அது கலாவின் குரல்தான் என்பதை உணர்ந்த அந்த நொடியே குமார் அந்தப் பக்கமே திரும்பவில்லை. ஒட்டுமொத்த வலிமையை குமார் இழந்துவிட்டிருந்தான். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குமார் தஞ்சை இசை விழாவுக்கு சென்றான். அங்கே கலாவின் அப்பா கையில் ஒரு குழந்தையுடன் நின்றுகொண்டிருந்தார். குமாரைப் பார்த்ததும் பிரகாசமாய், 'எப்படி இருக்கீங்க தம்பி. நம்ம கலா பாப்பா குழந்தைதான்' என்றதும் குமாருக்கு வார்த்தைகள் வரவில்லை. கலாவின் குழந்தை இப்போது 5-ம் வகுப்பு படிக்கிறான். குமார் சமீபத்தில் அன்புக்குரிய தகப்பன் ஆகி இருக்கிறான். மேலே உள்ள கடிதங்களில் குமாரின் கடிதங்கள் மட்டும் எழுதி போஸ்ட் செய்யப்படாதவை. பிரிய நேர்ந்த பிறகும் எந்த சூழலிலும் அவதூறு சொல்லாததே அன்பின் அடையாளம் என்று குமார் சொன்னது மட்டுமே மீண்டும் மீண்டும் எனக்குள் ஒலித்துக்கொண்டிருக்கிறது. - மான்டேஜ் மனசு இன்னும் சுழலும். http://tamil.thehindu.com/opinion/blogs/மான்டேஜ்-மனசு-18-மாறாக்-காதலின்-பொக்கிஷங்கள்/article9251281.ece?ref=relatedNews
 3. மான்டேஜ் மனசு 17: மௌன ராகம் - காதலின் பேசாமொழி! அலுவலகத்தில் வழக்கமான பணி நிமித்தங்களுக்கிடையே நண்பர் சராவுடன் பேசிக்கொண்டிருந்ததில் சினிமா பற்றிய பேச்சு வளர்ந்தது. டாபிக்கல் சுவாரஸ்யங்கள் இருந்தாலும் மிஷ்கின், செல்வராகவன், மணிரத்னம் பற்றிப் பேசாமல் சினிமா பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பதில்லை. 'மௌன ராகம்' வெளியாகி 30 வருடங்கள் ஆனதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். தனக்குப் பிடித்த டாபிக் பற்றிப் பேசும்போது நீங்கள் சராவை உற்று கவனிக்கும் தேவை இருக்காது. ரொம்ப சாதாரணமாக ஒரு வித அலாதி ஆர்வத்துடன், எக்ஸைட்மென்ட்டுடன் சரா பேசுவது பிடித்தமானதாக இருக்கும். சமயங்களில் அவர் சுட்டிக்காட்டும் படங்கள் மீது இனம் புரியாத ஈர்ப்பும், வேறு பார்வையும் கூட ஏற்படும். அப்படித்தான் அன்று 'மௌன ராகம்' பற்றிப் பேச ஆரம்பித்தார். '''மௌன ராகம்' படத்தை எப்போ முதல்முறையா பார்த்த?'' ''சரியா நினைவில்லை. சன் மூவிஸ் சேனல்ல பார்த்திருக்கேன். 'தளபதி', 'மௌன ராகம்' ரெண்டு படங்களையும் அதிகம் பார்த்திருக்கேன். அப்போ நான் நாலாவது படிச்சிருந்திருப்பேன்னு நினைக்கிறேன்.'' ''நீங்க?'' என்று கேட்டதுதான் தாமதம். அருவி மாதிரி கொட்ட ஆரம்பித்துவிட்டார். ''நான் 'மெளன ராகம்‬' படத்தை 13 வயசுல டிடியில் ரெண்டு மூணு தடவை கார்த்திக் போர்ஷன் முடியற வரைக்கும் பார்த்தேன். அதுக்கு மேல என்னால நகர முடியல. ஆனால், அந்தப் படம் எப்ப போட்டாலும் கார்த்திக் சாகற வரைக்கும் பார்ப்பேன். அதுவே எனக்கு நல்ல நிறைவைக் கொடுத்துச்சு. அதே படத்தை 17 வயசுல முழுசா பார்த்தேன். அப்பவும் என்னை கார்த்திக் கேரக்டர்தான் ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிச்சு.'' ''இன்ட்ரஸ்டிங். மிஸ்டர் சந்திரமௌலின்னு துள்ளலும் உற்சாகமா கூப்பிடுற அந்த குரலை அப்புறம் கார்த்திக் படங்கள்ல பார்க்க முடியலை. நூலகத்தில் இருக்கும் ரேவதியிடம் காதலை சொல்ல வரும் கார்த்திக் சீரியஸ் ரியாக்ஷன் கொடுத்துட்டு, மைக் போட்டு கலாட்டா முறையில் காதல் சொல்வது எனக்குப் பிடிச்சது. ஆனா, மைக் போட்டு லவ் சொன்ன கார்த்திக்கு அந்த பேரு இல்லை. சும்மா மைக் பிடிச்சு பாடுற மாதிரி பாவனை காட்டினவரை மைக் மோகன்னு சொல்லிட்டோம்ல.'' '' அட. இப்படியும் யோசிக்கலாம்ல. என் 26 வயசுல 'மௌன ராகம்' பார்த்த போது கார்த்திக் மேல இருந்த கிரேஸ் குறைஞ்சுது. மோகன் கேரக்டர் முழுசா பிடிச்சது. எவ்ளோ அழகா எல்லாத்தையும் டீல் பண்றான்னு தோணுச்சு. 30 வயசுல பார்த்த போது ரேவதி கேரக்டரோட ஆசைகள், தவிப்புகள், சிக்கல்கள் மேல கவனம் போச்சு. அவளை எவ்ளோ அழகா டீல் பண்ணி, தன் மீது காதல் கொள்ள வைக்கிறது அந்த மோகன் கேரக்டர்னு தோணுச்சு. அப்பவும் மோகனோட கேரக்டர்தான் என்னை ரொம்ப ஆட்கொண்டுச்சு.'' ''இப்பவும் அப்படி தோணுதா?'' ''இப்பவும் புது படம் மாதிரியே பார்க்க முடிஞ்சுது. ஆனால், இப்ப அந்த மோகன் கேரக்டர் மேல செம கோபம் வந்துச்சு. ரேவதி கேரக்டர் எவ்ளோ இறங்கி வந்த அப்புறமும் மோகன் குத்திக்காட்டுறது சாடிஸம். இப்படித்தான் நான் அந்த சினிமாவை ஒவ்வொரு கால காட்டத்துலயும் ஒவ்வொரு விதமா ரசிச்சு பார்த்திருக்கேன். செம்ம படம். ஒரு தடவை கூட அலுப்பு ஏற்படல.'' ''இனியும் தொடர்ந்து 'மௌன ராகம்' பார்ப்பீங்கதானே?'' ''ஆமாம். 'மெளன ராகம்' படத்தை 40, 50, 60 வயசுலகூட நான் பார்க்க வாய்ப்பிருந்தால் பார்ப்பேன். அப்ப அந்தப் படம் நிச்சயம் அலுப்பு ஏற்படுத்தாம வேறு விதமான அனுபவத்தைத் தரும்னு நம்புறேன்.'' '' 'மெளன ராகம்' படத்துல நான் சொன்னது இதைத்தான்னு மணி சார் கோனார் நோட்ஸ் போட்டிருந்தா வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு அனுபவங்கள் கிடைச்சிருக்காது. ஆனா, நிஜத்துல அப்படி யாராச்சும் இருக்காங்களா?'' ''என் அத்தை இருக்காங்க. காதல் எல்லாம் இல்லை. ஆனா, புது இடத்துல அறிமுகம் இல்லாத ஆணோட குடும்பம் நடத்துறது சாதாரண அனுபவம் இல்லை.'' ''நிச்சயமா.'' சராவுடன் பேசியதிலிருந்து ஆண்டாள் அத்தை மட்டுமே நினைவில் இருந்தார். பக்தி இலக்கியத்தில் வரும் ஆண்டாள் கண்ணுக்குத் தெரியாத கடவுள் கண்ணனுக்காக சகலத்தையும் கொடுக்கத் துணிகிறாள். காதல் உள்ளத்தைப் பறிகொடுக்கிறாள். என் மாமாவின் மனைவி ஆண்டாள் அதிலிருந்து அப்படியே முரண்பட்டவர். சிவராஜ் மாமா, தன் மனைவி ஆண்டாளைப் பற்றி அதிகம் சிலாகித்துப் பேசியிருக்கிறார். ஆண்டாள் அத்தைக்கு அவர் அப்பாவின் முகமே தெரியாது. அத்தை குழந்தையாய் இருக்கும்போதே அவர் அப்பா இரண்டாவது திருமணம் செய்துகொண்டு ஓடிப் போய்விட்டார். அத்தையை வளர்த்து ஆளாக்கியதெல்லாம் அவர் அம்மாதான். 'அப்பா வளர்க்காத பொண்ணை தப்பா பேசிடக்கூடாது'னு அவர் அம்மா பார்த்து பார்த்து வளர்த்தார். தைரியமான பெண்ணாக வளர்ந்தாலும் அத்தையின் குறும்புத்தனமும், சேட்டையும் எப்போதும் கலகலப்பாக்கும். ஆனால், அத்தையும் சில தீர்க்கமான முடிவுகள் திகைப்பை வரவழைக்கும். ''திடீரென்று ஒருநாள் அப்பா தன் கண்முன் வந்து நின்றாலும் கூட எனக்கு எந்த பாசமும் இருக்காது. அவர் என் அம்மாவுக்கு புருஷனா இருக்கலாம். எனக்கு அப்பா கிடையாது. என் வாய்ல இருந்து அப்பாங்கிற வார்த்தை வராது. எப்பவும் அவரைக் கூப்பிடமாட்டேன். 20 வயசுல திடீர்னு எப்படி என்னால ஒருத்தரை அப்பான்னு ஏத்துக்க முடியும்?'' என்பார். அத்தையின் அம்மாதான் கண் கலங்கியபடி, ''என் புருஷன் திரும்பி வந்தா போதும்'' என எல்லா கடவுளையும் வேண்டிக்கொண்டிருப்பாள். ஆண்டாள் அத்தையின் சிந்தனையில் தெளிவு இருக்கும். ''முன்ன பின்ன தெரியாத ஒருத்தனை கைகாட்டி, அவன் தான் உன் புருஷன்னு சொல்வாங்க. அவனை நம்பி என் 50 வருஷ வாழ்க்கையை ஒப்படைக்கணுமா? அதெப்படி சாத்தியமாகும்'' என்று முற்போக்கு முகத்துடன் கேள்வி கேட்டவர் ஆண்டாள் அத்தை. பேச்சு, கவிதை என்று கல்லூரி காலங்களில் ஆண்டாள் அத்தை வெளுத்து வாங்கியிருக்கிறார். அவரின் கவிதைகளை அரும்பு, பெண்ணே நீ, மல்லிகை மகள் உள்பட பல இதழ்களில் பிரசுரம் ஆகியுள்ளன. அத்தைக்கு சிவராஜ் மாமாவுடன் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் துளியும் விருப்பம் இல்லை. ''அதெப்படி அறிமுகமே இல்லாத ஒருத்தர் கூட போன்னு சொல்றீங்க. நானும் போகணுமா? இவ்ளோ நாள் தெரிஞ்சவங்க வீட்டுக்குக் கூட போகக்கூடாதுன்னு கண்டிப்பா வளர்த்தீங்க. இப்போ தெரியாத இடத்துக்கு, திரும்பி வரணும்னு நினைச்சா கூட வர முடியாத அளவுக்கு தூரமா அனுப்பிறீங்க. அம்மா அப்பாவே காசும் கொடுத்து பொண்ணை வியாபாரம் பண்றாங்க. அதுக்கு கல்யாணம்னு நாகரிகமா பேர் வைக்குறீங்க. ஆனா, அதுக்கு பேர் வேற. அந்த சடங்கு சம்பிரதாயத்துக்கெல்லாம் நான் சம்மதிக்கமாட்டேன்'' என்றார். ஆண்டாள் அத்தை எதிர்காலம் குறித்த எல்லா கனவுகளோடும் வலம் வந்தவர். அத்தை டிகிரி முடித்ததுமே சந்தர்ப்பவசத்தால் திருமணம் செய்துகொள்ளும் சூழல் ஏற்பட்டதால் இப்படி வார்த்தைகளை உதிர்த்தார். அதையும் மீறி பெங்களூரில் வங்கியில் பணிபுரிந்து வந்த சிவராஜ் மாமா, பக்கத்து ஊரில் பெண் பார்க்கும் படலத்தில் அத்தையைப் பார்த்து பிடித்திருக்கிறது என்று சொன்னார். அத்தையின் தாத்தா ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர். தனக்குப் பிறகு தன் மகள் மாதிரி பேத்தியும் தனியாய் ஆகிவிடக்கூடாது என்பதற்காக சிவராஜுக்கு கட்டிக் கொடுக்க சம்மதித்தார். ஆண்டாள் அத்தைக்கு இஷ்டமே இல்லை. அவர் தாத்தாவின் உடல்நிலையும், அம்மாவின் அழுகையும் திருமணத்துக்கு சம்மதம் சொல்ல வைத்தன. ஒரு பொம்மையைப் போல மணமேடையில் உட்கார்ந்திருந்தார். இப்போதும் திருமணத்தில் எடுத்த அந்த ஒரு போட்டோவைப் பார்த்தாலும் செயற்கையாக அத்தை நின்றிருப்பது தெரியும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு மூலையில் இருக்கும் ஆண்டாள் அத்தை பெங்களூருக்கு கணவனுடன் சென்றார். மாமியார், கணவன் என இரண்டு பேர் மட்டுமே இருக்கும் வீட்டில் மருமகளாக, மனைவியாக எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற ஆலோசனைகள் ஆண்டாள் அத்தைக்கு அளவுக்கு அதிகமாகவே வழங்கப்பட்டன. ''கல்யாணத்துக்கு முன்னாடி உங்ககிட்ட பழகவே இல்லை. இந்த இடம் புதுசு. நீங்க, உங்க அம்மா புதுசு. நான் கொஞ்சம் பழகணும். அதுக்கு கொஞ்சம் நாள் ஆகும்'' என்று கணவனிடம் சொன்னார். சிவராஜ் மாமாவும் நிறைய விட்டுக்கொடுத்தார். காலம் கைகூடும் என்று காத்திருந்தார். பேசித் தீர்க்க முடியாதது எதுவும் இல்லை என்பதில் அழுத்தமான நம்பிக்கை இருவருக்கும் இருந்தது. நிறைய பேசினார்கள். புரிந்துகொண்டார்கள். பிடிக்கலை. வேணாம். என்னை ஏன் கல்யாணம் பண்ணீங்க என்று ஆரம்பத்தில் பேசிய ஆண்டாள் அத்தை அதற்குப் பிறகு அன்பின் வடிவமாய் மாறிப் போனாள். பைக் விபத்தில் காயப்பட்ட சிவராஜ் மாமாவை அத்தை அனுசரணையாக பார்த்தக்கொண்டார். அதற்குப் பிறகு மெல்ல அரும்பியது காதல். அவர்கள் காதலின் அடையாளமாய் இப்போது ஸ்வேதா இன்ஜினீயரிங் படிக்கிறாள். கணேஷுக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆனது. 'மௌன ராகம்' ரேவதியை நினைக்கும்போது ஆண்டாள் அத்தைதான் மனதுக்குள் வந்து போகிறார். 'மௌன ராகம்' மணி சாரின் முக்கியமான படம். பெற்றோருக்காக அறிமுகமில்லாத ஆணை திருமணம் செய்துகொள்ளும் பெண், காதலனை மறக்க முடியாமல் கணவனுடன் வாழப் பிடிக்காமல் விவாகரத்து கேட்கிறாள். ஒரு வருடம் சேர்ந்து வாழ வேண்டும் என்ற சட்ட நெறிமுறை அறிவுறுத்துகிறது. அந்த காலகட்டத்தில் இருவரும் காதலில் விழுந்து மனமொத்த தம்பதிகள் ஆகிறார்கள். மருத்துவமனையில் இருந்து வரும் மோகனை ரேவதி பணிவிடைகளால் கவனிக்கிறார். சாப்பாடு ஊட்ட முயற்சிக்கும் ரேவதியைத் தடுக்கிறார். 'நான் தொட்டா கருகிடமாட்டீங்க' என சொல்லும் ரேவதியிடம், 'எனக்கு ஒண்ணும் இல்லை. உனக்குதான் கம்பளிப்பூச்சி ஊர்ற மாதிரி இருக்கும்' என்கிறார். போதிய ஓய்வில்லாமல் அலுவலகம் கிளம்பும் கணவனைப் பார்த்து, 'ரெஸ்ட் எடுங்க. தொட்டுத் தாலி கட்டுன பொண்டாட்டி நான். என் பேச்சை கேட்க மாட்டீங்களா' என்கிறார். 'என்னைப் பொறுத்தவரை அது வெறும் மஞ்சள் பூசின ஒரு கயிறு' என்று முன்பு ரேவதி சொன்ன அதே வார்த்தையை ரிப்பீட் அடிக்கிறார். ரேவதியின் அப்பா - அம்மா வருகையிலும் மோகன் பெரிய ஈடுபாடு காட்டவில்லை. விவாகரத்து மனுவா? கொலுசா? என்ற இரண்டு சாய்ஸில் கொலுசைத் தேர்ந்தெடுத்ததை ரேவதி மோகனுக்கு காட்ட விரும்புகிறார். மோகன் எரிந்துவிழுகிறார். அவரின் உச்சகட்ட கோபத்தால் அவசர அவசரமாக மெட்ராஸுக்கு டிக்கெட் எடுக்க நேரிடுகிறது. 'நான் வெட்கத்தை விட்டு ஒத்துக்குறேன். நான் உங்களை விரும்புறேன்' என்று சொல்லும் ரேவதி பயணம் செய்யும் ட்ரெயின் கிளம்பியபோது மோகன் அடிபட்டு, காயத்துடன் ரயில் ஏறி, ரேவதியை உடன் அழைத்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்படுகிறார். ரேவதியின் மனநிலையை, கதாபாத்திரத்தின் வடிவமைப்பை வசனங்களே உணர்த்திவிடுகின்றன. ''பொண்ணு பார்க்கிறது சந்தையில மாட்டைப் பார்க்கிற மாதிரி இருக்கு. எனக்குப் பிடிக்கலை'', ''எனக்கு கல்யாணம் பண்ணப் பார்க்கறீங்களா? இல்லை விக்கப் பார்க்கறீங்களா வரதட்சணை வேண்டாம்னு சொன்னா உடனே பொட்டலம் கட்டி வித்துடுவீங்க''. முதலிரவுக்கு தயாராகச் சொல்லும் அம்மாவிடம், ''எனக்கு இது வேண்டாம் மா. பிடிக்கலை. இதே ரெண்டு நாள் முன்னாடி இப்படி என்னை அனுப்பி இருப்பியா?'' என்று கேட்கிறார். ''இதெல்லாம் செங்கல் சிமென்ட்டால கட்டுனது. இதை வீடா மாத்த வேண்டியது உன்கையிலதான் இருக்கு.'' ''எனக்கு செங்கல், சிமென்ட்டே போதும்'' என்று வெறுப்பை உமிழ்கிறாள். கார்த்திக்குடன் பேசும்போதும், ''என்னைப் பார்க்க வர்றது, ரோட்ல பார்த்து அழகா இருக்கேன்னு சொல்றது, வீட்டுக்கு வந்து பிடிச்சுருக்கு, கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்றதெல்லாம் பிடிக்காது'' என்கிறார். இதன் மறு உருவாக்கம் தான் அலைபாயுதேவில் வரும் "சக்தி நான் உன்ன விரும்பலை. நீ அழகா இருக்கேன்னு நினைக்கலை. ஆனா இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமா இருக்கு'' வசனம். ஏன் மோகன் சாடிஸ்டா இருக்கார்? என்ற கேள்வி விடாமல் துரத்துகிறதா? இந்த இடத்தில் நுட்பமாக சில சங்கதிகள் உள்ளன. மோகன் நடத்தையை ஆரம்பத்தில் இருந்தே கவனிக்க வேண்டும். கல்யாணம் பிடிக்கலை என்று சொன்ன ரேவதியிடம், மோகன் சொல்வது என்ன? ''குழந்தை ஏன் அழுதுகிட்டே பொறக்குது தெரியுமா. இந்த உலகத்துக்கு வர விருப்பம் இல்லைன்னு அழலை. வந்த இடம், மொழி, சூழல் எல்லாம் புதுசா இருக்குன்னு அழுது. கிட்டத்தட்ட அதே மாதிரிதான் உன் நிலைமையும். புது இடம், புரியாத மொழி, அறிமுகமில்லாத புருஷன். அந்த கஷ்டம் எனக்கு புரியுது. அது தானா மறையுற வரைக்கும் நான் காத்திருக்க தயாரா இருக்கேன்'' என்று பொறுமையாக அணுகுகிறார். என் இதயம் என்னிடம் இல்லை என்று ஃபிளாஷ்பேக்கில் கார்த்திக் உடனான காதலைச் சொன்ன பிறகும் கூட, ''உன் கடந்த காலத்தைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை. எதிர்காலத்தைப் பகிர்ந்துக்க ஆசைப்பட்டேன். இன்னும் ஆசைப்படறேன்'' என்று நிதானத்தை கடைபிடிக்கிறார். ''உங்க ரெண்டு பேருக்குள்ள அப்படி என்ன வேறுபாடு'' என்று கேட்கும் வழக்கறிஞரிடம், ''வேறுபாடு எதுவும் இல்லை. பெருசா எந்த ஈடுபாடும் இல்லை'' என இயல்பாக சொல்கிறார். விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்துவிட்டு வீட்டுக்கு வரும்போது நண்பர்களின் விருந்தில் ரேவதி பங்கேற்காத போதும் எதுவும் சொல்லவில்லை. ''என் மேல உங்களுக்கு கோபம், வருத்தமே இல்லையா'' என்று ரேவதி கேட்கும் கேள்விக்கு ''குட் நைட்'' என்று ஒற்றை வார்த்தையில் பக்குவப்பட்டு பதில் அளிக்கிறார். ''உனக்கு எல்லா சுதந்திரமும் இந்த வீட்ல இருக்கு. எந்த விதத்துலயும் உன் வாழ்க்கையில குறுக்கிட மாட்டேன். இந்த ஒரு வருஷம் உன் விருப்பம் போல இருக்கலாம்'' என்றி ரேவதியிடம் சொல்லும் போது புரிதலில் ஆளுமை செலுத்துகிறார். ''உன் அப்பா, அம்மா கிட்ட அன்பா, மரியாதையா நடந்துக்க ஆசைதான். ஆனா, ஒரு வருஷம் கழிச்சு நீ உன் வீட்டுக்குப் போகும்போது விவாகரத்துக்கு காரணம் நீமட்டும்தான்னு நினைப்பாங்க. இப்போ அப்படி ஒரு புருஷனோட வாழ்றதை விட தனியா வந்ததே நல்லதுன்னு உன்னை வரவேற்பாங்க'' என்ற மோகனின் பதில் காலம் கடந்தும் யோசிக்கக்கூடியதாக உள்ளது. ''கணக்கு எல்லாம் போட்டு விட்டு ரேவதி நீங்க சொல்ல எதாவது இருக்கின்றதா?'' என்று கேட்க, ''நாலு மணிக்கு டிரெயின் இரண்டுமணிக்கு வந்து அழைச்சிகிட்டு போறேன்'' என்கிறார். ஏன் மோகனின் நடவடிக்கைகள் இப்படி இருக்கின்றன? ''நான் போட்ட காபி சாப்பிடமாட்டீங்களா'' என ரேவதி கேட்கும்போது, ''ஒரு வருஷத்துக்கு அப்புறம் யார் காபி போட்டுத் தருவா? அந்த சுகம் பழகிடுச்சுன்னா பின்னாடி நான் தானே கஷ்டப்படணும்'' என்கிறார். கொலுசை காட்ட விரும்பும் ரேவதியிடம் எரிச்சல் அடைகிறார் மோகன். அதில் சங்கட்டப்படும் ரேவதி நிம்மதிக்காக நடு ரோட்டில் நடக்க, சில வாலிபர்கள் அவரைத் துரத்துகின்றனர். அந்த நேரத்தில் மோகன் வந்து நிலைமையை உணர்ந்து ரேவதியை வீட்டுக்கு அழைத்து வருகிறார். ரேவதியின் கையில் ஏற்பட்ட காயத்துக்கு பேண்டேஜ் போடுகிறார். காலை எழுந்ததும் ரேவதிக்கு குங்குமம் வைத்துவிடுகிறார். அப்படி என்றால் அந்த எரிச்சல் உண்மையானது இல்லை. அப்போது பார்த்து மெட்ராஸ் செல்ல டிக்கெட் கிடைக்கிறது. ''நான் என்ன பண்றது?'' (''போகாதேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்களேன். சத்தியமா இந்த ஜென்மத்துக்கு உங்களை விட்டுப் போகமாட்டேன்'' என ரேவதி மனதில் மருகுகிறார்.) (''போக விரும்பலைன்னு ஒரு வார்த்தைமட்டும் சொல்லேன். சத்தியமா நான் உன்னை போக விடமாட்டேன்'' என மோகனும் நினைக்கிறார்.) ''நான் போகட்டுமா? வேண்டாமா?'' ''உன் இஷ்டம். நீ என்ன நினைக்குறியோ அதை செய்.'' ''நான் நீங்க நினைக்குறதைப் பத்தி கேட்குறேன்.'' ''இது உன் வாழ்க்கை உன் முடிவு. எனக்கும் உன் முடிவுக்கும் சம்பந்தம் இல்லை'' என்கிறார் மோகன். பிரிவுக்குத் தன்னையோ அல்லது ரேவதியையோ தயார்படுத்துவதற்காக அதை மோகன் சொல்லவில்லை. எதுவாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட ரேவதியே தெளிவாக டிக்ளேர் செய்துவிட வேண்டும் என்பதை மோகன் கதாபாத்திரம் விரும்புவதையே இதிலிருந்து உணர முடிகிறது. 'ஓ மேகம் வந்ததே' சிறந்த மழைப்பாடலாக இப்போதும் சொல்லப்படுகிறது. 'நிலாவே வா', 'மன்றம் வந்த தென்றலுக்கு', 'பனி விழும் இரவு' பாடல்களும், 'சின்னச் சின்ன வண்ணக்குயில்' பாடலும் எவர் க்ரீன் ஹிட். பாடலிலும், காட்சிக்குத் தகுந்த பின்னணி இசையைக் கொடுத்து மௌனத்தை உலவ விட்ட விதத்திலும் இளையராஜா இசை ராஜா. பி.சி.ஶ்ரீராமின் ஒளிப்பதிவும் படத்தை இன்னொரு தளத்துக்கு கொண்டு சென்றன. 'மௌனராகம்' படத்துல வர்ற 'பனி விழும் இரவு' பாடலில் ஃபுளூட் வாசிக்கிற மாதிரி சின்ன துண்டுக் காட்சியில் சின்ன வயது பிரபுதேவா வந்து போகிறார். ''கல்யாணம் பண்ணாமயே சேர்ந்து வாழுறாங்க. நீ என்னடான்னு கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரே வீட்ல பிரிஞ்சு இருக்கே'' என வி.கே.ராமசாமி பேசுகிறார். லிவிங் டூ கெதர் வாழ்க்கை பற்றி அப்போதே பேசியிருக்கின்றனர். மகேந்திரனின் 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' படம்தான் மணிரத்னத்தின் 'மௌனராகம்' என்று சொல்வோர் உண்டு. உண்மையில் அது இல்லை. 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' படத்தில் சுஹாசினி சுட்டிப் பெண். மோகனைக் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் சுஹாசினியை மோகன் சந்தேகப்பட, காதலில் விரிசல் விழுகிறது. பிரதாப் போத்தனை மணக்கும் சுஹாசினி கணவனுடன் இணக்கமாக வாழ முடியாமல் காதல் நினைவால் தவிக்கிறார். காதலனே நேரில் வந்து குழப்பம் தீர்க்க, கணவனுடன் மகிழ்ச்சியாய் வாழ்கிறார். இதையொட்டிப் பார்க்கும்போது 'மௌனராகம்' கதையும் அதுதானே என தோன்றும். ஆனால், காலத்தின் சூழலில் நடந்தது வேறு. 'மௌன ராகம்' படத்தின் அசல் திரைக்கதையை மணிரத்னம் எழுதும்போது கார்த்திக் கதாபாத்திரம் சேர்க்கப்படவில்லை. உற்சாகத்துடனும், துடுக்குத்தனத்துடனும் உலா வரும் பெண்ணை முகம் தெரியாத முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவனுக்கு திருமணம் செய்து கொடுத்து, பாஷை தெரியாத புது இடத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள். அவளுக்கு ஏற்படும் மன சிக்கல்கள், அவஸ்தைகள், தடுமாற்றங்கள் என்ன? அதிலிருந்து எப்படி அவள் மீண்டு வருகிறாள் என்பதை உளவியலுடன் சொல்லும் படமாகத்தான் திரைக்கதையை மணிரத்னம் அமைத்திருந்தார். ஆனால், இதுமட்டுமே எல்லா பக்கங்களிலும் உள்ள பார்வையாளர்களை சென்றடைய போதுமானதாக இருக்காது என்பதை உணர்ந்து கார்த்திக் கதாபாத்திரம் நுழைக்கப்பட்டதாம். அதுவும் மணிரத்னத்தின் முதல்படமான 'பல்லவி அனுபல்லவி' படத்தில் அனில் கபூரின் போர்ஷனை அப்படியே கார்த்திக்கை வைத்து எடுத்து சாமர்த்தியமாக கதையில் நுழைத்துவிட்டதால் படமும் பேசப்பட்டது என சொல்லப்படுகிறது. அப்படி இருக்கையில் இது 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' படத்தின் தழுவலாக இல்லை. சந்தர்ப்பவசத்தால் ஒரு போர்ஷனை சேர்க்கப் போய், அந்தக் கதையே தலைகீழாக மாறிவிட்டது. கார்த்திக் கதாபாத்திரம் சேர்க்கப்பட்டதில் நெருடலோ, உறுத்தலோ தெரியவில்லை என்பது ஒருபக்கம் இருக்கட்டும். அந்த கதாபாத்திரத்தை கத்தரித்து இருந்தால் அறிமுகமில்லாத ஒருவனைக் கணவனாகக் கொண்ட பெண்ணின் மன சிக்கல்களை விவரிக்கும் முக்கியமான படமாகவே இருந்திருக்கும். ஆனால், கார்த்திக் பாத்திரத்தால் காதலனை மறக்க முடியாமல் கணவனுடன் வாழப் பிடிக்காமல் இருக்கும் ஒரு பெண்ணின் கதையாக மாறிவிடுகிறது. 'மௌன ராகம்' படத்தின் தழுவல்தான் 'ராஜா ராணி' என்று சொல்லப்படுவதேன்? துணிச்சல் பெண் நயன்தாராவும், பயந்த சுபாவம் உடைய ஜெய்யும் காதலிக்கின்றனர். ரிஜிஸ்டர் ஆபிஸில் கல்யாணம் செய்துகொள்ள முடிவெடுக்கின்றனர். இதனிடையே ஜெய் இறந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதற்குப் பிறகு அப்பா சத்யராஜுக்காக, நயன்தாரா ஆர்யாவை திருமணம் செய்துகொள்கிறார். ஆனாலும், காதலை மறக்க முடியாமல் இருக்கும் நயன்தாரா இறுதியில் ஆர்யாவுடன் அன்பில் நனைகிறார். ரிஜிஸ்டர் ஆபிஸ், அவசரக் கல்யாணம், நாயகன் இறப்பு போன்ற அம்சங்களால் 'ராஜா ராணி', மௌனராகத்தின் தழுவலாகப் பார்க்கப்பட்டது. 'தாண்டவம்' கதை கூட இப்படித்தான். முன் பின் அறிமுகமில்லாத, துணை என்ன வேலை செய்கிறார் என்றே தெரியாத இருவர் திருமண பந்தத்தில் நுழைகின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள காதல் துளிர் விடுகிறது. அதற்குப் பிறகு நடப்பது என்ன என்பது 'தாண்டவம்' கதை. கார்த்திக் கதாபாத்திரம் இல்லாத 'மௌனராகம்' மட்டும் வெளியாகியிருந்தால் அது மக்களால் கொண்டாடப்பட்டிருந்தால், மணிரத்னம் சமூக அக்கறை போன்ற சாயம் கொண்ட படைப்புகளைக் கொடுக்காமல், அசலான காத்திரமான தீவிரத்தன்மையுடைய பல படங்களைக் கொடுத்திருக்க முடியும் என்று தோன்றுகிறது. ஏனெனில், எமோஷனை கலாபூர்வமாகவும், காட்சிரீதியாகவும் சரியாக அணுகுவது மணிரத்னத்துக்கு கைவந்த கலை. - மான்டேஜ் மனசு இன்னும் சுழலும்... http://tamil.thehindu.com/opinion/மான்டேஜ்-மனசு-17-மௌன-ராகம்-காதலின்-பேசாமொழி/article9193207.ece?ref=relatedNews
 4. மான்டேஜ் மனசு 16: மாரிகளின் தீராக் காதலால் வாடா 'பூ'வுலகு ''முன்னாடி மாசத்துக்கு ஒரு முறையாவது வீட்டுக்கு வருவே. இப்போ ரெண்டு மாசம் ஆனாலும் எட்டிக் கூடப் பார்க்க மாட்டேங்குறியே ராசா.'' ''சீக்கிரம் வர்றேன் பாட்டிம்மா''. ''ஊர்ல மாரியம்மன் திருவிழா. ஒரு எட்டு வந்துட்டுப் போகலாம்ல.'' ''சரிம்மா. அவசியம் வர்றேன்.'' பாட்டியிடம் போனில் பேசியதில் இருந்து எனக்கு ஊருக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. திருவிழா என்பதால் ரொம்ப நாளாய் பார்க்க முடியாத நண்பர்களையும் பார்த்துவிடலாம் என்ற நினைப்பில் ஊருக்குச் சென்றேன். தெருக்கூத்து நடந்து கொண்டிருந்தது. என் நண்பர்கள் நால்வருடன் சேர்ந்து இடம் பிடித்து அமர்ந்தோம். ''நாட்டுக்கு சேவை செய்ய நாகரிக கோமாளி வந்தேனய்யா'' என்று கட்டியங்காரன் காமெடி பண்ணிக்கொண்டிருந்தான். அவன் செய்யும் சேட்டைகளைப் பார்த்து குழந்தைகள் உட்பட பெரியவர்களும் சத்தம் போட்டு சிரித்துக் கொண்டிருந்தனர். அங்கே வேணி அக்காவைப் பார்த்தது அதிசயமாக இருந்தது எனக்கு. காதல் கைகூடாமல் போன வேணி அக்காவை பக்கத்து ஊரில்தான் மணமுடித்துக் கொடுத்தார்கள். எப்போதும் வந்த சுவடே தெரியாமல் பிறந்தகம் வந்து செல்லும் வேணி அக்கா மூன்று வருடங்களுக்குப் பிறகு ஊர்த் திருவிழாவுக்கு வந்தது பெரிய ஆச்சர்யம். வேணி அக்காவைப் பற்றி சொல்லிவிடுகிறேனே! வேணி அக்கா என்னை விட 4 வயது மூத்தவள். பெரிய திறமைசாலி. ஓவியம், பாட்டு, நடனம் என பின்னி எடுப்பாள். எந்த உதவி கேட்டாலும் செய்வாள். என்னை மாதிரி பொடிசுகளுக்கு ஆங்கிலம் கைவரப் பெற வேண்டுமென்ற நல்ல நோக்கத்தில் இலவசமாக டியூஷன் எடுத்தாள். ஏழு, எட்டாம் வகுப்புகளில் ஓவியம் வரையத் தெரியாமல் முழித்துக்கொண்டிருக்கும்போது வேணி அக்காதான் உதவினாள். தாமரையில் ஆரம்பித்து தலைவர்கள் படம் வரை வரைந்து கொடுத்தாள். அதற்கு உபகாரமாக எதையும் நான் செய்ததுமில்லை. அக்கா கேட்டதுமில்லை. தமிழோ, ஆங்கிலமோ எதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்தால் அக்காவிடம் குட்டு நிச்சயம். டியூஷன் படிக்கும்போது மட்டும் செல்லமாய் கண்டிக்கும் அக்கா அதற்குப் பிறகு ஆளே மாறிவிடுவாள். மழைக் காலத்தில் கப்பல் செய்வது, தை மாதத்தில் ஊஞ்சல் கட்டி ஆடுவது என சகல சேட்டைகளும் நடக்கும். 'குலை குலையா முந்திரிக்கா நரியும் நரியும் சுத்தி வா கொள்ளையடிப்பவன் எங்கிருக்கான் கூட்டத்துல இருக்கான் கண்டுபிடி' என்ற பாடல் இருப்பதே வேணி அக்காவால்தான் எனக்கு தெரியும். வேணி அக்கா டீச்சர் ட்ரெய்னிங் படித்தாள். அக்காவின் உறவுப் பையன் சோழவேந்தன். எங்களுக்கு அண்ணன். கிரிக்கெட், கபடி என்று விளையாட்டுகளில் புகுந்துவிளையாடும் சோழன் மீது வேணி அக்காவுக்கு காதல். சோழன் வேணி அக்காவைக் காதலித்தாரா இல்லையா என்பது இதுவரையில் தெரியாது. ஆனால், சின்ன வயதில் இருந்தே சோழனுக்கென்று எதையும் பார்த்து பார்த்து செய்வாள். ஐஸ் பால் விளையாடும்போது கூட சோழனைக் காட்டிக் கொடுத்ததில்லை. அவனுக்குப் பிடித்த பால் ஐஸ், இஞ்சி மிட்டாய் என வாங்கிக் கொடுப்பாள். வீட்டில் எள்ளு கொழுக்கட்டை செய்தால் அத்தனையையும் சோழனுக்குக் கொடுத்து அவள் பசியாறுவாள். அப்படிப்பட்டவள் காதலை சோழன் புரிந்துகொண்டானா இல்லையா என தெரியவில்லை. பிளஸ் 2 படித்த பிறகு ஓவியக் கல்லூரியில் படித்தான். அப்போதே சோழன் - வேணிக்கான அன்பின் தொடர்பு விடுபட்டது. படித்து முடித்தவுடன், வீட்டில் கஞ்சி காய்ச்சக்கூட ஆளில்லை என்று சோழனின் அப்பா பிடிவாதமாய் அவனுக்கு கல்யாணம் செய்துவிட்டார். அம்மா இல்லாத குறையில் கண்டுக்காம விட்டுடக்கூடாது என்பதற்காகவே இப்படிச் செய்ததாக சோழன் அப்பா மாரியப்பன் திருப்திப்பட்டுக்கொண்டார். ஆனால், இந்த அவசர கல்யாண ஏற்பாட்டில் அதிகம் பாதிக்கப்பட்டது வேணிதான். முன்பொரு தருணத்தில் சோழனுக்கு வேணிதான் என்று ஊரும் உறவுகளும் சொன்னதை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட வேணி, சோழனை தன் கணவனாக நினைத்து வளர்ந்தாள். அப்படியே வாழ்ந்தாள். கடைசியில் சோழன் இன்னொருவளைக் கைப்பிடிக்க நேர்ந்தது. வேணிதான் மொத்தமாய் நொறுங்கிப் போனாள். சில மாதங்களில் வேணி பக்கத்து ஊருக்கு வாக்கப்பட்டுப் போனாள். டீச்சர் ட்ரெய்னிங் முடித்தவள் பாதி நேரம் நர்சரி பள்ளியிலும், மீதி நேரம் நெசவு வேலைக்காக நூல் இழைக்கும் மெஷினிலுமே நாட்களை நகர்த்தினாள். வேணி அக்கா கல்யாணமான பிறகும் சோழனை மறக்கவில்லை. மறக்கவும் நினைக்கவில்லை. 3 வருடங்கள் திருவிழாவுக்கே வராதவள் இந்த முறை மட்டும் வந்திருக்கிறாளே ஏன் என்று பார்த்தால், கூத்தில் சோழன் துரியோதனனாக தோள்கள் திமிர நிலமே அதிர கம்பீரமாக ஆடிக்கொண்டிருந்தான். அவன் வருகையை எல்லோரும் மிரட்சியுடன் பார்க்க, வேணி மட்டும் அதை இமை மூடாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள். சோழன் எப்போது தெருக்கூத்து கலைஞராக மாறினார் என்பது தெரியாமல், ஊர் நண்பர்களிடம் விசாரித்தேன். திருமணங்களுக்கு புகைப்படம் எடுப்பது, ஆல்பம் போடுவது, ஓவியம் வரைவது, மன திருப்திக்காக தெருக்கூத்து ஆடுவது என்று விரும்பியபடி சோழன் அண்ணன் வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்டதாக முன்கதைச் சுருக்கம் சொன்னார்கள். கலை மீதான சோழனின் காதலைப் பற்றிச் சொன்னவர்கள், ஊருக்கு வந்தாதான் இதெல்லாம் தெரியும். வருஷத்துக்கு ரெண்டு முறை வந்தா இப்படிதான் என்று என்னையும் கொஞ்சம் அர்ச்சனை செய்தார்கள். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னொருவருடன் திருமணம் ஆன பிறகும், சோழன் மீதான காதல் இம்மியும் குறையாமல் வேணி அக்காவால் எப்படி இருக்க முடிகிறது? என்று ஆச்சர்யம் என்னை விட்டு அகலவில்லை. சோழன் ஆடி முடிந்ததும் கீற்றுக்கொட்டகையில் வேஷம் கலைக்கும் நேரத்தில் அங்கு நின்று கொண்டிருந்தேன். வேணி அக்காதான் சில வாண்டுகளோடு அங்கு வந்தாள். என்னைப் பார்த்தவள் நல்லா இருக்கியா தம்பி என்று கேட்டுவிட்டு, சோழனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். சோழன் முன்பக்கமாக பார்த்தபடி அணிகலன்களை கழட்டும் முயற்சியில் இருந்ததால் வேணியை கவனிக்கவில்லை. சேலைத்தலைப்பை கைகளால் பிடித்தபடி, தயங்கிக்கொண்டிருந்தவள் மெதுவாக திரும்பிச் சென்றாள். அவள் கொண்டுவந்த காகிதம் மட்டும் கீழே விழுந்தது. அதைக் கவனித்து எடுத்துப் பார்த்தால் கடிதம். அன்புள்ள சோழனுக்கு... உன் வேணி பாசமுடன் வரையும் மடல். நான் இங்கு நலம். அதுபோல் உன் நலனையும், வனிதா, தென்றல் நலனையும் அறிய ஆவல். நான் உனக்கு எழுதும் முதல் கடிதம் இது. அதனால்தான் நலம் விசாரிச்சேன். நீ எப்போது இந்தக் கடிதத்தைப் படித்தாலும் நான் உன்னை நலம் விசாரிக்குற மாதிரியும், எல்லா காலத்துக்கு ஏற்றவாறு, யாருக்கும் உறுத்தாமலும் இருக்கணும். நான் உன்னைக் காதலிக்க ஆரம்பிச்சு பத்து வருஷங்கள் ஆகுது. உனக்கு கல்யாணம் ஆனபோதோ, எனக்கு கல்யாணம் ஆனபோதோ கூட நான் உனக்கு கடிதம் எழுதலை. ஆனா, இந்த காலகட்டத்துல உனக்கும் எனக்கும் இடையில அழுகை, சோகம், கஷ்டம், குழப்பம், மகிழ்ச்சி, திருப்தி நிறைய கடந்து வந்திருப்போம். உனக்காகதான் கஷ்டப்பட்டு தமிழ்ல எழுதுறேன். இதுக்கு மேல கொஞ்சம் நார்மலா எழுதுறேன். தப்பு இருந்தா மன்னிச்சிக்கோ! - என நீண்ட அந்தக் கடிதத்தை என்னால் படிக்க முடியவில்லை. வேணி அக்காவே வந்து அந்தக் கடிதத்தை வாங்கிச் சென்றாள். இந்த 10 வருடங்களில் சோழனை நினைக்காமல் வேணி அக்காவால் இருந்திருக்க முடியுமா? வேணி அக்காவின் காதலையும், 'பூ' மாரியின் காதலையும் என்னால் பிரித்துப் பார்க்க முடியவில்லை. 2008-ல் சசி இயக்கத்தில் பார்வதி, ஸ்ரீகாந்த், ராமு நடிப்பில் வெளியான படம் 'பூ'. சினிமாவில் எல்லாவற்றுக்கும் ஒரு காலமும், அதிர்ஷ்டமும், சென்டிமென்டும் இருப்பதாகச் சொல்வார்கள். அப்படிப் பார்த்தால் இப்போதைய காலகட்டத்தில் 'பூ' படம் வெளியாகி இருந்தால் அதற்கான வரவேற்பு மிகப் பெரிய அளவில் இருந்திருக்கும். ஆனாலும், தமிழ் சினிமாவில் ஒரு பெண்ணின் காதலை கண்ணியமாக, நேர்மையாக, எந்த விகல்பமும், பூச்சும் இல்லாமல் உண்மையாகப் பதிவு செய்த படம் 'பூ'. மளிகைக் கடை வைத்திருக்கும் கணவனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் மாரி (பார்வதி). தன் பிறந்தகத்தின் கோயில் கொடைக்கு செல்வதற்காக கடையில் வேலையாக இருக்கும் கணவன் இனிகோ பிரபாகரிடம் அனுமதி கேட்கிறாள். அந்த சமயத்தில் எடை பார்க்கும் ஒரு கல் மாரியின் காலைப் பதம் பார்க்கிறது. இனிகோ பதறியபடி 'வலிக்கலையா?' என்று கேட்கிறார். 'இல்லை. ஊருக்கு போய் வரவா' என்று மீண்டும் ஆசையாக கேட்கிறாள். 'ரெண்டு பேரும் ஒண்ணா போகலாம்'. 'நான் இப்பவே போறேன். நீ மறக்காம சாயங்காலம் வா'. 'சரி. புறப்படு'. மளிகைக் கடையில் சில பொருட்களை தன் பையில் திணித்துவிட்டு, கடும் வெயிலில் செருப்பு கூட அணியாமல் பேருந்துக்காகக் காத்திருக்கிறாள். பேருந்தில் ஏறி அமர்ந்து வீடு வந்து சேர்கிறாள். மாரியின் அம்மா எங்கே மாப்பிள்ளை என்று கேட்கிறார். 'அவர் அப்புறம் வருவார். தங்கராசு மச்சான் வந்திருக்காம்ல. அதான் பார்க்க சீக்கிரம் வந்துவிட்டேன்' என்கிறாள். எதுவும் சொல்ல முடியாமல் அம்மா, சாப்பிட்டாவது வந்தியா என கேட்க, மதிய சாப்பாட்டை சாப்பிடுகிறாள் மாரி. பொட்டல் பூமியில் இருக்கும் ரெட்டைப் பனமரத்துக்குப் பக்கத்தில் மாரி அமர ஃபிளாஷ்பேக் விரிகிறது. தங்கராசு (ஸ்ரீகாந்த்) - மாரி (பார்வதி) அன்பின் ஆழத்தை காட்சிகள் விவரிக்கின்றன. வகுப்பறையில் வாத்தியார், 'படிச்சு என்ன ஆகப் போறீங்க' என்று கேட்கிறார். பையன்களில் சிலர் சர்பத் கடை வைக்கப் போறேன். டக்கர் டிரைவர் ஆகப் போறேன் என்று சொல்கிறார்கள். பெண்கள் என்ன ஆகப் போகிறோம் என்று சொல்லத் தெரியாமல் அமைதி காக்கிறார்கள். என்ன ஆகப் போறோம்னு கூட தெரியாம இந்த பொட்டப் பசங்க இருக்காங்களே என்று வருத்தமும், விசனமுமாகப் பேசுகிறார் வாத்தியார். அப்போது மாரி எழுந்து தங்கராசுக்கு பொண்டாட்டியாகப் போறேன் என்று பெருமை பொங்கக் கூறுகிறாள். வாத்தியார் வேறு வகுப்பில் படிக்கும் தங்கராசுவை அழைத்துவரச் சொல்கிறார். ஆனால், தங்கராசு வாத்தியார் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாமல் அழுகிறான். பொம்பளைப்புள்ள தைரியமா சொல்லுது. ஏன் அழற என்று வாத்தியார் கேட்கிறார். அப்போது மாரியின் மனசும், வெள்ளந்தித்தனமும் நம்மை ஈர்க்கிறது. இரவில் பாயில் உறங்கும்போதே சிறுநீர் கழித்ததை ஊர் முழுக்க உரக்க சொல்வேன் என்று கங்கணம் கட்டும் அண்ணனைப் பார்த்து எல்லா பாடத்துலயும் முட்டை என எதிர் பேச்சு பேசும் மாரி, தங்கராசுவிடம் சொல்ல முற்படும்போது மட்டும் அழுது வடிந்து அண்ணன் காலில் விழுகிறாள். பெரிய பனைமரம் தங்கராசு. சின்ன பனைமரம் நான் என பெருமிதப்படுகிறாள். தங்கராசுவுடன் சேர்ந்து கள்ளிப்பழம் பறித்து சாப்பிடுகிறாள். வளர்ந்த பிறகும் தங்கராசு மீதான காதலை வளர்த்தே வருகிறாள் மாரி. தங்கராசு இன்ஜினீயரிங் படிக்க சென்னை செல்கிறான். மாரி வெடி ஆபிஸில் சரம் கோர்க்கிறாள். 'காட்டு வேலைக்குப் போனா கறுத்துப் போய்டுவேன். அப்புறம் என் மச்சான் தங்கராசுக்கு கட்டிக்க மாட்டேன்னு சொல்லிடக்கூடாது. அதான் வெடி ஆபிஸில் வேலை பார்க்கிறேன்' என்று தோழியிடம் சொல்கிறாள் மாரி. காதலை சொல்லத் துடிக்கும் மாரியின் அடுத்தடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிகின்றன. தங்கராசுவின் போன் நம்பரை மனதிற்குள் எழுதி வைத்த மாரி, போன் செய்ய தோழி சீனி (இன்பநிலா) உடன் செல்கிறார். ஆனால், மற்றொருவர் போனில் பேசும்போது சொல்லும் எண்களும், தங்கராசுவின் எண்களும் குழப்பி அடிக்க, ஏகப்பட்ட தவறான அழைப்புகள் சங்கடத்தை வரவழைக்கின்றன. கருப்பசாமியை வணங்கும் மாரி, ஆண்டாள் - கிருஷ்ணன் காதல் கதை கேட்டு ஆண்டாளை வணங்குகிறாள். காதலுக்காக சாமியை மாற்றிக்கொள்கிறாள். தங்கராசு தங்கையின் திருமணத்துக்காக ஊருக்கு வரும்போது கேழ்வரகு தோசை சுட்டு, அந்த சூட்டில் அழுத்த முத்தம் பதித்து சாப்பிடத் தருகிறாள். கள்ளிப்பழம் சுவைக்கு இந்த ஆப்பிள் ஈடாகாது என்று சொன்ன தங்கராசுவுக்காக, நள்ளிரவில் குடுகுடுப்பைக்காரன், சோளக்காட்டு பொம்மை என பல பயங்களைக் கடந்து கள்ளிப்பழம் பறித்து தங்கராசுவிடம் கொடுக்க வீட்டுக்கு செல்கிறாள். அதற்குள் தங்கராசு படிப்பதற்காக சென்னைக்கு புறப்பட, வெறும் காலால் ஓடியும் கள்ளிப்பழம் கொடுக்க முடியாமல் கலங்குகிறாள். 'நீ அழகா இருக்கே மாரி' என்று சொல்லும் தோழியிடம், 'என் தங்கராசுக்காக நான் எது செய்தாலும் அழகுதான்' என்று விளக்கம் தருகிறாள். கடிதம் மூலம் காதல் சொல்ல முயற்சிக்கும்போது தங்கராசுவுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் முடிவாகிறது. அப்போது மாரியின் அண்ணனும், அம்மாவும் கல்யாணத்துக்கு வரமுடியாது என்று முறுக்கிக்கொண்டு நிற்கிறார்கள். மாரியின் அம்மா தன் அண்ணன் ராமுவை சபிக்கிறாள். அந்தத் தருணத்திலும் கருப்பசாமியிடன் தங்கராசு நலம் பெற வேண்டி பிரார்த்திக்கிறாள். அண்ணனும், அம்மாவும் தங்கராசு திருமணத்துக்குப் போகமாட்டேன் என்று முரண்டு பிடிக்கும்போது, தற்கொலைக்கு முயற்சிக்கிறாள். 'நீங்கள் கல்யாணத்துக்குப் போகலைன்னா தற்கொலை செய்துப்பேன்' என பிடிவாதம் காட்டுகிறாள். 'தங்கராசு கல்யாணம் முன்னாடி நீ பண்ணிக்கிறியா' என்று கேட்கும் அண்ணனிடம் 'பண்ணிக்கிறேன்' என்று சம்மதம் சொல்கிறாள். ஏற்கெனவே விற்ற ஆட்டைப் பார்த்து 'அடி கருப்பு குட்டீசு வாடி' என கொஞ்சுகிறாள். 'வித்துப்புட்டல்ல. அப்புறம் என்ன கொஞ்சல்' என கேட்கும் மேய்ப்பனிடம், 'அதுக்காக பழகுனதை எல்லாம் மறந்துடணுமா?' என்று கேட்கிறாள். படத்தின் மைய சரடு, ஜீவன் அந்தக் காட்சிதான். 'இன்னும் தங்கராசுவை மறக்கலையா' என கேட்கும் தோழியிடம் 'நான் எதுக்கு மறக்கணும்?' என்கிறார். தங்கராசுவின் வீட்டுக்கு வருபவள் காரைப் பார்த்தும், டிவி, ஃபிரிட்ஜ், சமையல் பாத்திரங்கள் பார்த்து திகைத்துப் போகிறாள். தங்கராசு மனைவியிடம் நெளிஞ்சு குழைஞ்சு 'ரொம்ப அழகா இருக்கீங்க. மாசமா இருக்கியளா' என்று கேட்கிறார். 'அது ஒண்ணுக்குதான் கேடு' என்று பொரியும் தங்கராசுவின் மனைவியைப் பார்த்து, நிலைகுலையும் மாரியின் காபி டம்ளர் எகிறுகிறது. அதைக் கழுவப் போகும்போது தங்கராசு தன் மனைவியிடம் பேசுகிறான். மனைவி வெடிக்கிறாள். சத்தம் போடாதே என கெஞ்சுகிறான். 'ஏன் நான் சத்தம் போடக்கூடாது. என்னை கன்ட்ரோல் பண்ற வேலையெல்லாம் வேண்டாம்' என்கிறாள். அவமானத்தால் கூனி குறுகும் தங்கராசுவைப் பார்க்கக் கூடாது என்பதற்காக மாரி தன் சேலைத்தலைப்பை மறைந்து ஒடுங்கி உட்கார்கிறாள். அதற்குப் பிறகு அழுகையும் ஆற்றாமுமையாக ஓடி வரும் மாரியைப் பார்த்து தங்கராசுவின் அப்பா ராமு காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். 'உனக்கு ஒரு கனவு இருந்தது. எனக்கு ஒரு கனவு இருந்தது. அவனுக்கும் ஒரு கனவு இருந்தது. ஆனா அவளுக்கும் ஒரு கனவு இருக்கும்னு தெரியாமப்போச்சு. ஆனா இப்போ நாங்க நிம்மதியா இல்லை' என்கிறார். அங்கிருந்து ஓட்டமாக விரைந்த மாரி பொட்டல்காட்டில் தனியாய் அமர்ந்து மௌனமாய் அழுகிறாள். அந்த சமயத்தில் மாரியின் கணவர் இனிகோ வருகிறார். 'இங்கே என்ன உட்கார்ந்திருக்கே? கடையில் 48 தேங்கா வித்திடுச்சு. ஒரு மூட்டை வெல்லம் காலியாய்டுச்சு. நல்ல வியாபாரம்' என்கிறார். அப்போது பெருங்குரலெடுத்து அழுகிறாள் மாரி. அதற்கான அர்த்தத்தை மாரியின் கணவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படி எத்தனை மாரிகள் நம் அக்காக்களாக, தங்கைகளாக, தோழிகளாக அழுது கொண்டிருக்கிறார்கள் என தெரியவில்லை. முற்போக்காகவும், பெண்ணின் எதிர்பாராத அன்பின் அடர்த்தியை சொன்ன விதத்திலும் சசி மனதைக் கவர்கிறார். ச.தமிழ்ச்செல்வனின் வெயிலோடு போய் சிறுகதையை எந்த சிதைவும் இல்லாமல் படமாக்கிய விதம் அற்புதம். எஸ்.எஸ்.குமரனின் இசையில் சூச்சூ மாரி பாடல்கள் பள்ளிக்கூட பால்ய நாட்களின் கதகதப்பை உணர்த்துகின்றன. முத்தையாவின் கேமரா கரிசல் மண்ணை நமக்குள் கடத்துகிறது. ஃபோர்மேன் பாத்திரத்தை வில்லனாக சித்தரிக்கும் வாய்ப்புகள் இருந்தும் அதை தவிர்த்த விதம் மென்மையானது. 'வணக்கம் ஐயா. நான் உங்ககிட்ட படிச்ச தங்கராசு' என்று சொல்லும்போது 'மாரியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டியா?' என்று வாத்தியார் கேட்கிறார். தங்கராசுவின் கல்லூரித் தோழி மாரி காதலிப்பதை தங்கராசுவிடம் சொல்கிறாள். இப்படி ஊருக்குள் இருக்கும் அத்தனை பேருக்கும் மாரியின் காதல் தெரியும்போது, தங்கராசு மட்டும் அதை எப்படி உணராமல் போனார்? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. அந்த காதலை உணர்ந்த பிறகு தன்னை உயிராய் நினைக்கும் மாரி, தன்னை மட்டுமே நம்பி இருக்கும் அப்பா என யார் பக்கம் நிற்பது என தெரியாமல் தவிக்கும் ஶ்ரீகாந்த் நடிப்பு கச்சிதம். ஸ்ரீகாந்த் கொஞ்சம் பெரிய கெஸ்ட்ரோல் பண்ணியிருக்கிறார். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் படம் ஆரம்பித்து 37 நிமிடங்களுக்குப் பிறகே ஸ்ரீகாந்த் என்ட்ரி ஆகிறார். ஆங்கிலம் பேச முடியாமல் தயங்கி நிற்பது, ஆசை, கனவுகளை சுமந்தபடி ஆயில் மில் உரிமையாளர் மகளை திருமணம் செய்ய மறுப்பது பின் அதே பெண்ணை மணம் முடித்து நிம்மதியில்லாமல் தவிப்பது வரை கதாபாத்திரத்துக்கான பங்களிப்பை நிறைவாக வழங்குகிறார். இப்படி ஒரு நாயகியை மையப்படுத்திய கனமான படத்தில் நடித்ததற்காகவே அவரைப் பாராட்டலாம். 'என்னை எல்லோரும் பேனாக்காரர்னுதான் கூப்பிடுவாங்க' என்று சொல்லும் ராமுவை வண்டிக்காரன் என்று எழுதிக்கொடுத்த முதலாளியிடம் வேலையிலிருந்து விலகுகிறார். மரியாதை இல்லாத இடத்தில் அவரைப் பார்க்க முடியாது. 'உழைப்புக்குதான்யா கூலி. உதவிக்கு எதுக்குய்யா கூலி?' என்று கேட்கும் ராமு, மகனுக்கு சம்பந்தம் பேசி முடிப்பதன் மூலம் தன் குடும்பம் உயரும் என நினைக்கும் ஆயிரமாயிரம் தகப்பன்களின் சுமைகளை கண் முன் நிறுத்துகிறார். மாரி அண்ணன் பொன்னுகாளையாக வரும் ஆர்ட் டைரக்டர் வீரசமர் நேர்த்தியான பாத்திர வார்ப்பு. மச்சான் தங்கராசு வீட்டுக்குள் இருப்பது தெரிந்ததும், 'நான் கலர் வாங்கியாரேன் மாரி' என எஸ் ஆகும் விதமும், தங்கையை விட்டு, மகனுக்கு வேறு இடத்தில் சம்பந்தம் பேசிய தாய்மாமனிடம் எகிறும்போதும் பாசக்கார அண்ணாய் மனதில் பதிகிறார். டீக்கடைக்கு வருபவர்களையெல்லாம் ஹலோ என அழைத்துப் பேசும் கந்தசாமி கதையின் திருப்பத்துக்கு உதவுகிறார். இந்தப் படத்தின் உயிர்நாடி மாரிதான். 'உன் தங்கராசு உன்னை நேர்ல பார்க்க வரலை. லெட்டர் போடல. நாம அஜித், விஜய்க்கு ஆசைப்படலாம். ஆனா, நமக்கு அவங்ககூடவா கல்யாணம் நடக்கும்' என தோழி சீனி கேட்கும்போது எந்திரிச்சு போய்டு என எச்சரிக்கும் மாரி, கல்லை எடுத்து ஓங்கி அடிக்க சீனியின் மண்டை பிளக்கிறது. அதற்குப் பிறகு பேசாமலேயே திரியும் சீனியை பேச வைக்கும் விதம் அழகு. 'என் தங்கராசு மாதிரியே அதே பிரியம் உன் மேலயும் இருக்கு' என்கிறார். பாட்டியிடம் 'என் புருஷன் தங்கராசுக்கு கள்ளிப்பழம் கொண்டுவந்திருக்கேன்' என்கிறார். பெட்டிக்கடைக்காரர் 'என்னம்மா வேணும்' என கேட்க, 'தங்கராசு வேணும்' என்கிறார். தனியறையில் உடை மாற்றும் போது தோழி சீனியை கூட வெளியில் அனுப்பிவிடுகிறார். ஃபோர்மேன் எட்டிப்பார்த்ததாக கூறும்போது 'என் உடம்பை தங்கராசு தவிர வேற யாரும் பார்க்கக்கூடாதுன்னுதான் உன்னையே அனுப்பிச்சேன் சீனி' என மருகுகிறார். கோபத்தில் ஃபோர்மேனை அடித்து வெளுக்கும்போது அவர் கண்ணாடி அணியாவிட்டால் பார்வை தெரியாது என்ற தகவல் தெரிந்ததும் நிம்மதி அடைகிறார். 'நான் செத்துப்போய்ட்டேன்னா தங்கராசு மனசு என்னாலதான் மாரி செத்தாள்னு முள்ளுமாதிரி உறுத்திக்கிட்டே இருக்கும். அவரை கஷ்டப்படுத்தக்கூடாது. நல்லா இருக்கணும். என் தங்கராசு அப்படி இப்படி இருந்தானா, கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வாக்கு கொடுத்து ஏமாத்தினானா எதுவும் இல்லை. நான் சோகப்பட்டா அவன் சுகப்படாம போயிடுமோன்னு பயமா இருக்கு' என்ற மாரியின் மனம் பரிசுத்தமானது. கதாபாத்திரத்துக்கான அத்தனை நுட்பங்களையும் நடிப்பில் கொண்டு வந்த பார்வதியை பாராட்ட வார்த்தைகள் இல்லை. 'என்னால மட்டும்தான் தங்கராசுவை நல்லா பார்த்துக்க முடியும்' என்ற மாரியின் எதிர்பார்ப்பில்லாத காதல் எதற்கும் நிகரில்லாமல் உயர்ந்து நிற்கிறது. 'தங்கராசு உனக்கு இல்லைனு ஆனபிறகும் அதே பாசத்தோடு உன்னால எப்படி இருக்க முடியுது?' மாரியின் தோழி கேட்கும் இந்த கேள்விக்கான விடையை காட்சிகளாக்கியிருப்பதுதான் 'பூ'-வின் ஆழம். ஆதாரம் எல்லாம். மாரியின் காதல் வெகுளித்தனம் நிரம்பியது. அரை வேக்காட்டுதனமானது அல்ல. ஆண்களின் புஜபல பராக்கிரமங்களையும், பல காதல்களையும் பட்டியலிட்டு சொன்ன காலகட்டத்தில் பெண்ணை மையப்படுத்தி, அவள் காதலின் மகோன்னதத்தை கவுரப்படுத்திய படம் 'பூ'. - மான்டேஜ் மனசு இன்னும் சுழலும்... http://tamil.thehindu.com/opinion/மான்டேஜ்-மனசு-16-மாரிகளின்-தீராக்-காதலால்-வாடா-பூவுலகு/article9158543.ece?ref=relatedNews
 5. மான்டேஜ் மனசு 15 - நீரில் மூழ்கி காதலில் மீண்ட பறவை! ஒரு மந்தமான மதியப்பொழுதில் ஸ்பென்சர் பிளாசா சரவண பவனில் சாப்பிடப் போகும்போதுதான் யதேச்சையாக சந்துருவை சந்தித்தேன். சினிமா டீமுடன் பேசிக்கொண்டிருந்தவன் என்னைப் பார்த்து கையசைத்தான். ஒரு ஹாய், 2 நிமிட நலம் விசாரிப்புக்குப் பிறகு வருத்தம் படர பேசினான். ''காலேஜ் முடிச்ச 3 வருஷத்துல உருப்படியா எதுவும் பண்ணலை மச்சி. ஃபீல்டுக்கு வராதது இன்னும் பயமா இருக்குடா. அதான் சின்ன கம்பெனி படமா இருந்தாலும் பரவாயில்லைன்னு ஒரு புராஜெக்டுக்கு ஓ.கே. சொன்னேன். 'சீன் சொல்லுங்க பாஸ்'னு சொல்றாங்க. எழுதி கொடுக்கிறேன். ஆனா, பேட்டா மட்டும்தான் தர்றாங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு. நீ எங்கேயாவது சேர்த்து விடுடா. ப்ளீஸ்.'' ''நிச்சயமா டா. எந்த மாதிரி இயக்குநர்கிட்ட சேரணும்னு ஆசைப்படற.'' ''சுசீந்திரன், சீனு ராமசாமி மாதிரி படம் பண்ண ஆசை. அவங்க கிட்ட சேர்த்துவிடுடா.'' ''சுசீந்திரன் சார் கிட்ட நிறையபேர் அசிஸ்டன்ட்டா இருப்பாங்கடா. காத்திருக்க சொல்வாங்க. சீனு சார் கிட்ட வேணா பேசிப் பார்க்கலாம்.'' ''சீனு ராமசாமி சார் கிட்ட வேலைக்கு சேர்ந்தா அது மகிழ்ச்சியாவும், மனநிறைவாவும் இருக்குடா.'' ''ஏன் மச்சான்?'' '' 'நீர்ப்பறவை' பார்க்கும்போது என் அண்ணன் வாழ்க்கை அப்படியே இருக்கும்டா என்றான். பெர்சனலா எமோஷனலை கன்வே பண்ண படம்ங்கிறதால அவர்கிட்ட சேர்ந்தா ரொம்ப நல்லா இருக்கும்.'' ''சரிடா. அப்புறம் பேசலாம்'' என்று அப்போதைக்கு விடை பெற்றோம். அவன் சொன்ன அண்ணனின் அருள் கதை நெஞ்சுக்கு நெருக்கமானது. கந்தசாமி - மணிமேகலை தம்பதியினரின் தலைமகன் அருள். இவன் பிறக்க ஏழு வருடங்கள் பெரியபாளையத்தம்மனுக்கு தவம் கிடந்தனர். அருள் பிறந்த பிறகும் 30 ஆண்டுகளுக்குப் பிறகும் அவன் பெற்றோர் அங்க பிரதட்சணம், அபிஷேகம், அன்னதானம் செய்கின்றனர். இப்படி கடவுள் அருளால் பிறந்த குழந்தை என நம்பப்பட்டதால் அருள் என்றே பெயர் வைத்தனர். ஆனால், அந்தக் கடவுளின் குழந்தை 7-வது வரை படித்ததே பெரிய விஷயம் என பள்ளிக்கூடம் விரட்டியது. அருளின் 7-ம் வகுப்பு கணக்கு வாத்தியார் ரொம்ப கண்டிப்பானவர். கணக்கு ஃபார்முலா தெரியாவிட்டால் கைவிரல்களை நேராக நீட்டச் சொல்லி விரல் முட்டியில் ஸ்கேலால் அடிப்பார். அந்த வலியைத் தாங்க முடியாத அருள் மோசமான வார்த்தையால் வாத்தியாரை திட்டிவிட்டான். பள்ளிக்கூடம் அவனுக்கு ரவுடி பட்டம் கொடுத்தது. வாத்தியார் அருளின் அப்பாவை வரவழைக்கச் சொல்ல, அவரும் இனியொரு முறை இப்படி நடக்காது என்று கெஞ்சினார். மத்த பையன்களும் பயம் இல்லாம இவனை மாதிரி ஆகிடுவாங்க என்று தலைமை ஆசிரியர் மறுத்துவிட்டார். அருள் வீட்டுக்கு வந்துவிட்டான். அதற்குப் பிறகு 10 வருடங்களில் அருள் செய்யாத வேலை இல்லை. பண்ணாத தொழில் இல்லை. முட்டி மோதி கொஞ்சம் மேல வர ஆரம்பித்த பிறகு கையில் காசு சேர்ந்தது. அந்த போதை அவனுக்கு பிடித்திருந்தது. அந்த மிதப்பிலேயே திரிந்தவன் சீக்கிரமே குடிக்கு அடிமையானான். குடியின் ஆதிக்கம் அதிகரிக்க வேலை அவனை விட்டுப் போனது. அருள் கொஞ்சம் கொஞ்சமாக சரிவை சந்தித்தான். மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கலாம் என்று வேலைக்கு சேர்ந்தான். குடி, தூக்கம், வேலைக்கு செல்வதில் தாமதம் என வரையறை இல்லாத வடிவமைப்பால், கட்டுப்பாடில்லாத சூழலால் வேலையையும் பறிகொடுத்தான். அந்தத் தருணத்திலும் அருள் குடியை விடவில்லை. 'தலைப்புள்ளையா பொறந்தவன் வீட்டு பாரத்தை சுமப்பான்னு பார்த்தா இப்படி தறுதலையா ஆகிட்டானே' என்று அவன் அப்பா வருத்தப்படாத நாளில்லை. எப்படி இருந்த அருள் இப்படி ஆகிட்டான் என பார்ப்பவர்கள் பரிதாபத்தை மட்டுமே பரிசாகக் கொடுத்தார்கள். அதனாலேயே அருள் தான் செய்யும் அனைத்து தவறுகளும் சரிசெய்யப்பட்டுவிடும் என்று தப்புக்கணக்கு போட்டு சுகவாசியானான். ஊர்த் திருவிழாவில் சரக்கடித்துவிட்டு சலம்பிக்கொண்டிருந்த அருள் மிகப் பெரிய பட்டாசு சத்தத்தில் அலறினான். அப்போது முதன்முறையாக அவனுக்கு வலிப்பு வந்தது. அந்த அலறல் அவனுக்கு மிகப்பெரிய பயத்தையும், பதற்றத்தையும் கொடுத்தது. சீக்காளி புள்ளையை சூதணமா பார்த்துக்கணும் என்று அத்தை, மாமா, சித்தப்பா என சொந்த பந்தங்கள் விழுந்து விழுந்து கவனித்தன. அவர்கள் அத்தனை பேரிடமும் அருள் பணம் சம்பாதித்தான். 'என் வலிக்கு மாத்திரை போட்டா சரியாகிடுமாம். ஒரு மாத்திரை ரூ.250. அப்பாவால செலவு பண்ண முடியலை மாமா' என்று அநியாயத்துக்குப் பொய்களை கட்டவிழ்த்தான். 'பையனுக்கு கஷ்டம் தெரியுது. இனி அப்படி இருக்கமாட்டான்' என்று நினைத்த அவன் மாமா பாக்கெட்டில் பணத்தை திணித்துச் சென்றார். அன்றைய இரவே அவனுக்கு ஆல்கஹால் இரவானது. சாம்பார் வடையே பிடிக்காதவன் இரவில் ரசவடைக்குப் பழகினான். ஊரில் இருக்கும் அத்தனை பேரிடமும் அவசரம் என்று சொல்லியே கடன் வாங்கி மது அருந்தினான். யாரும் அவனுக்கு காசு கொடுக்காதபோது உறவினர்களிடம் சாக்குபோக்கு சொல்லி பணத்தைக் கைப்பற்றினான். 'அப்பாவுக்கு பிரஷர் அதிகமாய்டுச்சு சித்தி. உடனே ஹாஸ்பிடல் அழைச்சிட்டுப் போகணும். கைமாத்தா காசு கொடுங்க. 2 நாள்ல திருப்பித் தந்துடுறேன்' என சாமர்த்தியமாகப் பேசி காசு வாங்கிவிடுவான். அந்த காசை அப்படியே ஸ்வாகா செய்துவிட்டு போதையில் தடுமாறி வந்து வீட்டில் விழுவான். பக்கத்தில் சரக்கடித்து கிடப்பவர்களிடம் சத்தாய்த்து வம்பளக்கும் போது அருளுக்கு விழுந்த அடிகளும், காயங்களும் அதிகம். இவ்வளவுக்குப் பிறகும் அவன் அசால்ட்டாக நெஞ்சு நிமிர்த்தி சும்மாவே வம்பு வளர்ப்பான். வீட்டில் இருந்தால் ரிமோட் கன்ட்ரோல் அருள் கையில் மட்டுமே இருக்கும். அது வெறுமனே டி.வி. சம்பந்தப்பட்டதல்ல. ஒட்டுமொத்த அதிகாரமும் இந்த வீட்டில் எனக்கே உள்ளது என்று செயல்களில் சேட்டையாகக் காட்டுவான். கை, கால், பல், தோள்பட்டை என தையல்களும் ஆப்ரேஷன் வடுக்களுமே அருளின் அங்கங்களை ஆக்கிரமித்தன. இதற்கு மேல் பொறுமை இல்லை என்ற முடிவில் அருளை குடிநோய் சிகிச்சை மையத்துக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தனர். ஆனால், அருள் மீண்டு வந்ததற்கு அழுத்தமான காரணம் கமலாதான். அவனுக்குள் இருந்த குழந்தைமையைக் கண்டுணர்ந்தவளும் அவள்தான். மது, போதையில் இருந்து மீள, ஏதாவது, அமானுஷ்யம் நிகழ வேண்டும் என்பதில்லை. அன்பு ஊற்றெடுக்கும் முகமும், அந்த சக்தியை கொடுக்கும் நபரும் பக்கத்தில் இருந்தால் எந்த பழக்கத்திலிருந்தும் விடுபடமுடியும். அன்பு, நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டால், போதையின் கோரப் பிடியில் இருந்து விடுபடலாம் என்பதற்கு அருள் - கமலா காதல் நிகழ்கால சாட்சி. கமலாதான் அருளை மொத்தமாக மாற்றினாள். தம்பி, தங்கைகளின் கோடை விடுமுறைக்கு அத்தை வீட்டுக்கு அழைத்து செல்லும் பொறுப்பு அருளுக்கு விடப்பட்டது. திருவண்ணாமலையில் இருக்கும் அத்தை வீட்டுக்கு தம்பி, தங்கைகளை வேண்டா வெறுப்போடு அழைத்துப் போனான். அப்போதுதான் அத்தை மகள் கமலாவைப் பார்த்தான். அவனுக்குள் ஏற்படும் ரசாயன மாற்றத்த்தை ரசிக்கத் தொடங்கினான். அத்தான் என்ற கமலாவின் அழைப்பில் கிறங்கிப் போனான். இதயத்தில் மின்னல் தெறித்தது. அடுத்தடுத்த நாட்களில் மனம் கமலாவை சந்திக்க ஏங்கியது. கால்கள் தானாக திருவண்ணாமலையை நோக்கி பறந்தது. தூக்கத்தை தொலைத்த ராத்திரிகள், உணவை தவிர்த்த பொழுதுகள் என காலம் கடத்தியவன் ஒவ்வொரு பவுர்ணமி இரவிலும் திருவண்ணாமலை தீபத்துக்கு கிரிவலம் வந்தான். அப்போதெல்லாம் அத்தை வீட்டுக்கு அட்டனென்ஸ் போட்டான். கமலாவிடம் காதலைப் பரிமாறினான். சில மாதங்களில் அவளும் சம்மதம் சொன்னாள். அதற்குப் பிறகு அருளின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. சுத்தபத்தமாய் இருக்க முயற்சித்தான். கமலா முகம் சுளிக்கக் கூடாது என்பதற்காகவே குடிநோய் சிகிச்சை மையத்துக்கு சென்றான். தடி ஊன்றியவர்கள், சக்கர நாற்காலியில் அமர்ந்தவர்கள், நடக்கத் தள்ளாடுபவர்கள், காயம்பட்டவர்கள், கைகால் வீக்கமடைந்தவர்கள், கடித்து குதறப்பட்ட தழும்புடையவர்கள், விரல்களில் நகங்கள் கழன்றவர்கள் என பலவிதங்களில் சீரழிந்தவர்களை அந்த மையத்தில் பார்த்ததும் அருளுக்கு வாழ்க்கையின் எல்லா கோணங்களும் பிடிபட்டது. ஆறு மாத சிகிச்சைக்குப் பிறகு முழுமையாக மாறி இருந்தான். அருளின் அப்பா கண்கலங்கியபடி குன்றத்தூர் முருகனுக்கு அங்க பிரதட்சணம் செய்து, மொட்டை அடித்தார். இப்போது அருள் முற்றிலுமாய் மாறியிருக்கிறான். குடிப்பழக்கத்துக்கு அடிமையானவன், வீட்டில் செய்யும் அலப்பறை, ஊரில் அவமானப்படுதல், காதலில் விழுதல், உறவினர்களிடம் கெஞ்சி குடிப்பதற்காக காசு வாங்குதல், சிகிச்சை எடுத்துக்கொண்டு குடிப் பழக்கத்தை கைவிடுதல் என அருளின் மொத்த வாழ்க்கையும் 'நீர்ப்பறவை' படத்தை நினைவுபடுத்தின. சீனு ராமசாமி இயக்கத்தில் விஷ்ணு, சுனைனா, நந்திதா தாஸ், சரண்யா பொன்வண்ணன், ராமு, சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த கடல் சார்ந்த வாழ்வியல் படம் 'நீர்ப்பறவை'. தென்மேற்குப் பருவக்காற்றில் வறண்ட நிலத்தை உலவ விட்ட சீனு ராமசாமி நீர்ப்பறவையில் கடலை உலவவிட்டு ரசிக்க வைக்கிறார். நந்திதா தாஸ் மீனவரின் மனைவி. எப்போதே காணாமல் போன கணவனுக்காக தினம் தினம் கடற்கரையில் காத்துக்கொண்டிருக்கிறார். கணவன் வந்தபாடில்லை. ஒரே மகன் வீட்டை விற்க அம்மாவின் சம்மதம் கேட்கிறான். அம்மாவின் எதிர்ப்பு அவனுக்கு கோபத்தை வரவழைக்கிறது. நடுஜாமத்தில் தூங்கிக்கொண்டிருந்த அம்மாவைக் காணவில்லை என பார்க்கும்போது வீட்டின் பின்புறம் அம்மா மெழுகுவர்த்தி ஏற்றி ஜெபம் செய்கிறாள். அவர் பாடுவது கல்லறைப் பாடல் என மனைவி சொன்னதும் அதிர்ச்சி ஆகிறார். அம்மா நந்திதா தாஸ் காலையில் கடற்கரை சென்றதும் மகன் அந்த இடத்தைத் தோண்டிப் பார்க்க, சடலம் எலும்புக்கூடாக இருக்கிறது. மகன் கொடுத்த புகாரின் பேரில், போலீஸ் நந்திதாவை கைது செய்கிறது. விசாரணையில் நந்திதா பார்வையில் ஃபிளாஷ்பேக் விரிகிறது. ''வாழ்க்கையைப் படிச்சவர் அருளப்பசாமி. அப்போ குடிக்கு அடிமையா இருந்தவரை லூர்துசாமி மாமாவும், மேரி அத்தையும் உசுருக்கு உசுரா பார்த்துக்கிட்டாங்க'' என்று கதை சொல்கிறார். குடியே வாழ்க்கை என நாட்களை நகர்த்தியவர் அருளப்பசாமி (விஷ்ணு). சுனைனா விஷ்ணு தலையில் கைவைத்ததும் மாறிப் போகிறார். குடிநோய் சிகிச்சை மையத்தின் மூலம் குடியிலிருந்து மீள்கிறார். விஷ்ணு - சுனைனா திருமணம் நடந்து ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. ஒரு வருடம் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். ஒரு நாள் அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விஷ்ணு வீட்டுக்குத் திரும்பவேயில்லை. அருளப்பசாமி (விஷ்ணு) பிறந்த கதை தெரியுமா? என்று எஸ்தர் (நந்திதா) இன்னொரு ஃபிளாஷ்பேக் சொல்கிறார். ''நடுக்கடலில் பெற்றோர் குண்டடி பட்டு இறக்க, அனாதை சிறுவனாய் அழுது கொண்டிருந்தார். என் மாமா லூர்துசாமி கண்டெடுத்து வீட்டுக்கு அழைத்து வருகிறார். என் மாமியார் கடல் மாதா கொடுத்த பிள்ளை என பாசத்துடன் அருளப்ப சாமி என பெயர் வைத்து வளர்க்கிறார். குழந்தைப் பருவத்தில் நடுக்கடலில் கண்டெடுக்கப்பட்டாரோ, அங்கேயே அந்தக் கடலிலே குண்டடி பட்டு இறந்து கிடந்தார். அவர் இறந்ததற்கு நான் தான் காரணம். நான் மட்டும் அவரை போக சொல்லாவிட்டால் உயிரோடு இருந்திருப்பார்'' என்று உருக்கத்துடன் கூறுகிறார் நந்திதா. வழக்கை விசாரித்து, இறுதியில் நந்திதா தாஸின் அறியாமையை மன்னித்து கோர்ட் விடுதலை செய்கிறது. மகன் மன்னிப்பு கேட்கிறான். 'உன் அப்பா இல்லாத வீடு எனக்கு வேணாம். நீயே எடுத்துக்கிட்டு பொழைச்சிக்கோ மகனே' என சொல்லிவிட்டு, மீண்டும் நந்திதா கடற்கரைக்கு செல்கிறார். 'அவர் உடம்பு கரைக்கு வந்திடுச்சு. உயிர் என்னைத தேடிதானே வரணும். அதான் கடற்கரைக்கு போறேன்' என்று சொல்லும் விளக்கம் காதலின் அதி உன்னதம். 'ஏன் உன் கணவர் இறந்ததை அரசாங்கத்துக்கு தெரிவிக்கவில்லை' என்ற நீதிமன்றத்தின் கேள்விக்கு, 'என் கணவரோட சேர்ந்து இத்தனை மீனவர்கள் செத்திருக்காங்க. என்ன செஞ்சீங்க?' என்று நந்திதா தாஸ் கொடுக்கும் பதிலடி நம்மை ஒட்டுமொத்தமாய் உலுக்கி எடுக்கிறது. அதற்கான பதில் நம்மிடம் இல்லை என்பதும், அரசாங்கம் வாய் மூடி மௌனியாக இருப்பதன் நிதர்சனத்தையும் உணர்த்துகிறது. 'சுட்டது அவுக, கொன்னது நான்' என சொல்லும் நந்திதா பாமரப் பெண். ஆனால், அந்த பாத்திரத்தின் கம்பீரம் உயர்ந்து நிற்கிறது. விஷ்ணு கடலோர மீனவன், குடித்து சலம்பும் இளைஞன் என கதாபாத்திரத்திற்கான பங்களிப்பை கச்சிதமாக வழங்கி இருந்தார். விஷ்ணு நடிப்பில் அடுத்தகட்டத்துக்கு சென்ற படம் நீர்ப்பறவை என்று தைரியமாக சொல்லலாம். விஷ்ணுவின் தலையில் கைவைத்து ஜெபம் பண்ணும் சுனைனா, 'சாத்தானே அப்பாலே போ' என விரட்டும்போதும், காதலில் கசிந்துருகும் போதும் கவனம் ஈர்த்தார். சுனைனாவின் வயதான கதாபாத்திரத்துக்கு இயக்குநர் நந்திதா தாஸை நடிக்க வைத்திருந்தார். சரக்கடிக்கும் மகனைத் திட்டாமல், அடிக்காமல் 'கொஞ்சமா குடிக்கணும்டா. ஊருக்குள்ள யாருதான் குடிக்கல.. உன்னைய மாதிரியா நாள் முழுக்க இதே வேலையா. குடிச்சா வல்லு வதக்குன்னு திங்கணும்டா. அப்போதான் உடம்புல கறி வைக்கும், கண்டதையும் வாங்கி குடிக்காத அருளு. நல்ல சரக்கா வாங்கி குடி. குடிச்சிட்டு கண்ட இடத்துல விழுந்து கிடக்காதே. அசிங்கம்டா' என்கிறார் சரண்யா பொன்வண்ணன். எப்படிப்பட்ட அம்மா வாய்த்திருக்கிறார் என்று இப்போது நினைத்துப் பார்த்தாலும் பாசத்தில் கண்ணு வேர்க்கும். 'அளவா குடிடா' என சொல்லும் சரண்யா பொன்வண்ணன், 'ஒரேயடியா திருத்திடாதீங்க. கொஞ்சம் கொஞ்சமா திருத்துங்க' என மறுவாழ்வு மைய உதவியாளரிடம் மதுவுக்கு காசு கொடுக்க முயல்கிறார். 'மாதா கோயில்ல பொம்பள பேசக் கூடாதா' என்ற சரண்யாவின் கேள்விக்கு பார்வையாளர்களிடத்தில் கைதட்டலாக பதில் வருகிறது. இயல்புமீறா தன்மையுடன் கிராமத்து அம்மாவை கண் முன் நிறுத்தும் சரண்யாவின் நடிப்பில் அத்தனை நேர்த்தி. குடிக்க காசு கேட்டதற்காக விஷ்ணுவை அடித்த சமுத்திரக்கனியிடம் எகிறும் ராமு, அதற்குப் பிறகு படகு செய்ய உதவி கேட்பது, புதிய படகில் லூர்துசாமி பெயரைப் பார்த்து பரிவோடு தடவிப் பார்ப்பது, குடியிலிருந்து மீட்ட டாக்டருக்கு பெரிய மீனைக் கொண்டுவந்து கண்ணீர் தளும்ப, காணிக்கையாக கொடுத்துவிட்டு கும்பிடுவது கண்ணீர்க் கவிதை. ஒரு படத்தில் கதைக்கு சம்பந்தமான எல்லா விஷயங்களையும் பேசிவிட வேண்டும் என்று முயற்சிப்பதன் பலன் தான், வசனங்களாக வைப்பது. கடல் சார்ந்த மக்களின் பிரச்சினைகளை ஒட்டுமொத்த சினிமாவில் ஏதேனும் ஒரு இடத்திலாவது பேசிவிட வேண்டும் என்ற சீனு ராமசாமியின் வேட்கையை ஜெயமோகன் - சீனு ராமசாமி வசனங்களால் பார்க்க முடிகிறது ''கடலுக்கு நடுவுல காம்பவுண்ட் சுவரா கட்டி வெச்சிருக்காங்க. எல்லைக்கோடுன்னு எதை வெச்சு தெரிஞ்சுக்குறது. வெறும் தக்கையை போட்டு வெச்சு எல்லைக்கோடுங்கிறான். அது காத்தடிச்சு ஒரு கிலோமீட்டர் அங்கிட்டும் இங்கிட்டும் போயிடுது. இந்த பிரச்சினை எப்படிதான் தீரும்னு தெரியலை'' என்ற வசனம் தான் அந்த வேட்கையின் உச்சம். ''இந்த நாட்ல வேற எந்த தொழில் செய்றவனையும் வேற எந்த நாட்டுக்காரனாவது சுட்டா சும்மா விடுவானா? மறுபடியும் ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை சுட்டு இருக்காங்க. நம்மகிட்ட ஒத்துமை இல்லையா. முப்பது தொகுதி மீனவனுக்கு இருந்தா நம்ம சத்தமும் வெளியே கேட்கும். அதுவரைக்கும் உன் சத்தமும் என் சத்தமும் இந்த அலை சத்தம் மாதிரி வெறும் மண்ணைதான் முட்டும். பாகிஸ்தான் ஆகாத நாடுதான். எல்லை தாண்டி ஆடு மேய்ச்சவனை புடிச்சு உள்ளதானே வெச்சாங்க'' என படகு செய்யும் தச்சுத் தொழிலாளி இஸ்லாமியர் உதுமான்கனி பாத்திரத்தில் சமுத்திரக்கனி கேட்கும் கேள்வி நியாயமானது. ''நீங்க பெருங்கூட்டம் சேர்த்தா போராட்டம்., நாங்க சின்னதா கூட்டமா சேர்த்தா தீவிரவாதம்னு முத்திரை குத்துவீங்க'' என்ற கேள்வியில் இஸ்லாமியர்கள் குறித்த பொதுப் புத்தியை இயக்குநர் தகர்த்து எறிந்திருக்கிறார். பத்திரிகைகள் கூட இந்திய மீனவர்கள் என்று சொல்லாமல் தமிழக மீனவர்கள் என்று பிரிக்கிறார்கள் என சமுத்திரக்கனியை விட்டு அரசியல் பேசி இருக்கும் சீனு ராமசாமியின் புத்திசாலித்தனம் படம் முழுவதும் உறுத்தாமல் இருந்ததும் ஆச்சர்யம். வைரமுத்துவின் பாடல்களில் பைபிள் வரிகள் பளிச்சிட்டதால் ரகுநந்தனின் இசைக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. இலங்கை கடற்படையின் துப்பாக்கிச்சூட்டால் ஏற்படும் மீனவனின் மரணம் என்ற செய்தி நமக்கு பழக்கப்பட்டுப் போயிருக்கலாம். ஒரு மீனவன் சுட்டுக்கொல்லப்பட்டான் என்ற செய்திக்குள் இவ்வளவு உணர்வுபூர்வமான ஒரு வாழ்க்கை இருப்பதை இயக்குனர் சீனுராமசாமி நமக்கு உணர்த்துகிறார். இலங்கை கடற்படையால் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு தமிழக அரசோ, மத்திய அரசோ எந்த தீர்வையும் வழங்க முன்வராத நிலையில், அது குறித்த கேள்வியை எழுப்பிய விதத்தில் 'நீர்ப்பறவை' உயரே பறக்கிறது. நிற்க! அருள் இப்போது சினிமாவில் கலை இயக்குநர் துறையில் உதவியாளராக இருக்கிறான். கமலா - அருள் தம்பதி ஆண் குழந்தைக்கு பெற்றோர் ஆகி இருக்கிறார்கள். அந்த அதிரூபனின் வருகை அவர்களுக்கு புதியதொரு நம்பிக்கையைக் கொண்டு வந்திருக்கிறது. குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கும் அவர்களுக்கு நாமும் வாழ்த்து சொல்வோம் வாருங்கள். - மான்டேஜ் மனசு இன்னும் சுழலும்... http://tamil.thehindu.com/opinion/மான்டேஜ்-மனசு-15-நீரில்-மூழ்கி-காதலில்-மீண்ட-பறவை/article9127955.ece?ref=relatedNews
 6. மான்டேஜ் மனசு 14: ரெட்டை வால் காதல்! ஒரு சனிக்கிழமை மாலைப் பொழுதில் பழைய அலுவலக நண்பர்களை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். நாயக பிம்பங்களைத் தாண்டி சமூக வலைதளங்களில் கௌதம் மேனன், செல்வராகவன் பிறந்த நாளுக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்தது பற்றி பேச்சு திரும்பியது. 'விண்ணைத் தாண்டி வருவாயா' படம் வெளியாகி ஆறு வருடங்கள் ஆனதை குறிப்பிட்டு சுரேஷ் சிலாகித்துக் கொண்டிருந்தான். சுரேஷ் சாதாரணமான, சின்ன விஷயத்தைக் கூட வெகு அழகாக சொல்லி கவனிக்க வைப்பான். எதிரில் இருப்பவர்கள் நிதானமாக இல்லையென்றால் தன் பக்கம் வாக்கு சேகரித்து விடுவான். அவன் மார்கெட்டிங் உத்தி உடன் இருப்பவர்களை சுண்டி இழுக்கும். சுரேஷ் பேசியதை விட, அன்று பிரேம் பேசியதுதான் அதிர்ச்சி. ''கௌதம் மேனன்தான் காதல் படம் எடுக்க தகுதியானவர். அவரோட ரசனைக்குப் பக்கத்துல யாரும் வர முடியாது. ஸ்டைல், மேக்கிங், அழகியல் கௌதம் மேனனின் மிகப் பெரிய பிளஸ். இந்த மாதிரி படம் எடுக்காம, செல்வராகவன்லாம் எதுக்கு இப்படி படம் எடுக்கிறாப்ல'' என்று போகிற போக்கில் காலி செய்தான் பிரேம். செல்வாவைப் பற்றி பேசும் போது எதிர்க்காமல் இருக்க முடியுமா? ''செல்வா காட்டுற காதல்ல நீ எந்த மேஜிக்கையும் பார்க்க முடியாது. ஃபேன்டஸி இருக்காது. யதார்த்தமா இருக்கும். இன்னும் சொல்லணும்னா நமக்கு என்ன நடந்தது, என்ன நடக்குதுன்னு சொல்ற படத்தைதான் செல்வா எடுக்கிறார். நீ பார்க்கிற கௌதம் மேனன் படம் உனக்கு அந்நியமானது. மேட்டிமைத்தனத்தோட நகல் அது. உனக்கு ஜெராக்ஸ்தான் வேணும்னா கொண்டாடு. தப்பில்லை.'' இதை சொன்னது... ஆம், நானேதான். ''பாஸ்... காதல்னா மகிழணும். உற்சாகமா இருக்கணும். துள்ளிக் குதிக்கணும். அழுதுகிட்டு கிடைக்கலைங்கிற கவலையில தாடி வளர்த்துக்கிட்டு பைத்தியமா திரியக்கூடாது. ஆனா, உங்க செல்வா அதைத்தானே சொல்றார். நமக்கு நெகடிவ் விஷயமே வேணாம் பாஸ்!'' பிரேம் இதைச் சொன்னதும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. மூச்சுக்கு முப்பது முறை எதைப் பற்றி கருத்து கேட்டாலும் எதிர்மறையாக பேசும் பிரேம், 'ஆன்லைனில் மொபைல் வாங்குவது என்றாலும் ஏமாத்திடுப்புடுவாய்ங்க' என்று வாய் வலிக்க சொல்லும் பிரேம், புதுசா ஆரம்பிக்கும் எந்த விஷயத்துக்கும் வாழ்த்துகள் சொல்லாமல் 'ஆபத்து பாஸ். எச்சரிக்கையா இருங்க' என்று சொல்லும் பிரேம், காதல் என்றால் பாசிட்டிவ் மட்டுமே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறானே... இது என்ன மாதிரியான டிசைன்! இந்த இடைவெளியில் சுரேஷ், பிரேம் பக்கம் சாய ஆரம்பித்தான். ''பாஸ் என்னதான் இருந்தாலும் ஜெஸ்ஸியை மறக்க முடியுமா?'' என்று சினிமாத்தனமாக பேச ஆரம்பித்தான். அவன் சிவகார்த்திகேயன் ரசிகன் என்பதை உங்களுக்கு சொல்லியே ஆக வேண்டும். சிவாவின் ரசிகன் என்பதில் என்று குறிப்பிட்டு சொல்வதற்கு காரணம் இருக்கிறது. 'இறுதிச்சுற்று' படம் வந்தபோது கூட 'மான்கராத்தே'தான் பெஸ்ட் என்று அலப்பறை கூட்டியவன் சுரேஷ் என்றால் அவனைப் பற்றி நீங்களே ஒரு அனுமானத்துக்கு வந்திருப்பீர்கள் என்று கருதுகிறேன். ''ஜெஸ்ஸி கேரக்டரைப் பார்க்க நீ அதுல உன் காதலியைப் பார்க்க முடியுமா? ஒரு படத்தை நல்லா இருக்குன்னு சொல்ல முடியும். ரசிக்க முடியும். சந்தோஷப் பட முடியும். ஆனா, அந்த படத்துக்குள்ள உன் வாழ்க்கையைப் பார்த்திருக்கியா? நீ விரும்புறதும், எதிர்பார்க்குறதும் ஒரே விஷயமா இருக்கலாம். ஆனா, அதுதான் உனக்கும், உன்னை சுற்றி இருக்குறவங்களுக்கும் நடக்குதா? வழக்கமான எம்பிஏ மூளையை கழட்டி வெச்சிட்டு உணர்வுரீதியா பேசு சுரேஷ்.'' ''இல்லை பாஸ். செல்வா படம் பார்த்தா எனக்கும் அந்த ஃபீல் வருது. கஷ்டமா இருக்கு. அழாம இருக்க முடியலை. என் வலியை நான் யாருக்கு அழுது காட்ட விரும்பலை. ஏன் என் வலியை நான் எல்லாருக்கும் சொல்லணும். அதான் சிரிச்சுக்கிட்டே இருக்கணும்னு விரும்புறேன்." ''அப்போ நிஜமாவே எந்த சந்தர்ப்பத்துலயும் உன்னால சிரிச்சுக்கிட்டே இருக்க முடியுதா? அதற்கான சாத்தியங்கள் இருக்கா?'' ''அப்படி சிரிக்க முடியாத சமயங்கள்ல நான் ஜாலியா இருக்குற மாதிரி நடிக்கிறேன். இப்போ நடிக்க ஆரம்பிச்சா அப்புறம் அதுவே பழகிடும். சரிதானே!'' எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. வெளியில் ஜாலியான ஆள் என்ற பிம்பத்தைக் கட்டமைக்கும் சுரேஷ் இப்படி நடந்துகொள்கிறான். அவனுக்குள் எவ்வளவு வலி இருந்தால் இந்த பிம்பத்தை வலிந்து திணித்துக்கொண்டிருப்பான். அவன் சொன்ன மேலோட்டமான ஒரு பதில் எங்களை உலுக்கிவிட்டது. இந்த உரையாடலை இன்னும் நீட்டிக்கச் செய்தால் ஆரோக்கியமாக இருக்காது என்பதை உணர்ந்த சிவாதான் 'த்ரிஷா இல்லனா திவ்யா' என்றான். ''அது எப்படி பாஸ் உடனே அடுத்த காதலுக்கு தயாராக முடியும்?'' 'நீங்க போன தலைமுறை பாஸ். இந்த தலைமுறையில் இதெல்லாம் சகஜம்' என்று சொல்லிவிடுவார்களே என்று உள்ளூர சின்ன பயம் இருந்தது எனக்கு. இந்த நீண்ட உரையாடலை அனுபவப் பகிர்வாகவே தருகிறேன். * முந்தைய தலைமுறையில் ஒரு காதல் சேராமல் போனால், தோல்வியில் முடிந்தால், ஒரு தலைக் காதலாக இருந்தால் அந்த பாதிப்பில் இருந்து வெளியே வர நீண்ட நாட்கள் ஆகும். ஆனால், இன்றைய தலைமுறை அந்த பாதிப்புகளை மனதில் ஏற்றிக்கொள்ளாமல் சர்வ சாதாரணமாக கடக்கிறார்கள். தாடியும் திரியும் இளைஞர்கள் எண்ணிக்கை இப்போதும் அதிகம் என்றாலும், அதன் பின்னணியில் இருப்பது ட்ரெண்ட் தானே தவிர சோகம் அல்ல. இன்றைய தலைமுறையின் மன முதிர்ச்சிக்கு 'மயக்கம் என்ன' படம் சிறந்த உதாரணம். சுந்தரின் காதலி ரிச்சா கங்கோபாத்யாயாவை தனுஷ் விரும்புகிறார். நண்பனின் காதலியை விரும்புவதால் தனுஷ் குற்ற உணர்ச்சி அடைவதோடு நிற்கவில்லை. அதற்கடுத்து காதலிக்கிறார். திருமணமும் செய்து கொள்கிறார். 'புதுப்பேட்டை' படத்தில் நண்பனின் தங்கையை திருமண கோலத்தில் பார்க்கிறார் தனுஷ். தாலி எடுத்து கொடுக்க வேண்டிய தனுஷ், சோனியா அகர்வாலின் கழுத்தில் கட்டிவிடுறார். அங்கேயும் எந்த உறுத்தலும் தனுஷுக்கு இல்லை. அதே சமயத்தில், இளைஞர்கள் இப்படி பயணிப்பது ஆபத்து என்று எண்ணம் வருகிறதா? அதற்கும் செல்வராகவன் இன்னொரு காட்சியில் பதில் சொல்கிறார். தனுஷின் இன்னொரு நண்பன் ரிச்சாவை ''நல்லா பார்த்துக்குவேன். என் கூட வந்திடு'' என்று சொல்கிறார். அப்போது ரிச்சா பேசுவது தான் இன்றைய தலைமுறையின் மனமுதிர்ச்சிக்கான உதாரணம். ''தப்பு உன் மேல இல்லை. உன் முன்னாடி நான் அழுதிருக்கக் கூடாது. தாராளமா எங்க வீட்டுக்கு வரலாம். எனக்குப் பிரச்சினையே இல்லை. இந்த மாதிரி ஒரு விஷயம் நடந்ததுன்னு ரெண்டு பேருமே மறந்துடலாம். சீக்கிரம் கல்யாணம் பண்ணு. அதான் உன்னை இப்படியெல்லாம் பேச வைக்குது. உன் பொண்டாட்டிய நீதான் தேடிக்கணும். இன்னொருத்தர் பொண்டாட்டி மேல ஆசைப்படக்கூடாது'' என்று சொல்வார். அடுத்தடுத்த சந்தர்ப்பங்களில் எந்த நெருடலும் இல்லாமல் அந்த நண்பனை ரிச்சா இயல்பாய் சந்திப்பதும், பேசுவதும் ஆரோக்கியமான அணுகுமுறை. செல்வா இன்றைய தலைமுறையையும், காதலையும் எவ்வளவு அழகாய் காட்சிப்படுத்தி இருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் கௌதம் மேனன் சினிமாவில் வரும் கதைகளும் சிலருக்கு நடந்திருக்கும். செல்வராகவன் சினிமாவில் வரும் கதைகளும் சிலருக்கு நடந்திருக்கும். ஆனால், நாம் எந்த வகை கதாபாத்திரமாக இருக்கிறோம்? எந்த கதை நமக்கானது? என்பதுதான் இங்கே முக்கியம். இதைத் தாண்டியும், ஒரு சிலர் இன்றைய காதலின் அப்டேட் வெர்ஷன் வேறுவிதமாக புரிந்துகொள்கிறார்கள். சுருக்கமாக சொல்லப் போனால் 'தீராத விளையாட்டுப் பிள்ளை' படத்தின் தியரி தான். ஆனால், ஒரு பெண் ஒரே சமயத்தில் இருவரைக் காதலித்தால் நாம் கொடுக்கும் பட்டப்பெயர்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இல்லை என்கிறீர்களா? 'தீராத விளையாட்டுப் பிள்ளை', 'இனிமே இப்படித்தான்' படங்களை நீங்கள் எந்த உறுத்தலும், நெருடலும் இல்லாமல் பார்த்திருக்கிறீர்கள்தானே. அந்தப் படங்களை பார்க்கும்போது விஷால் மீதோ, சந்தானத்தின் மீதோ உங்களுக்கு கோபம் வந்திருக்கிறதா? இல்லை பரிதாபம் வந்திருக்கிறதா? இந்த இரண்டுமே இல்லாமல் எந்த சங்கடத்தையும் உணராமல் உங்களால் இயல்பாக படம் பார்க்க முடிந்ததா? இயல்பாக படம் பார்க்க முடிந்தது என்றே வைத்துக்கொள்வோம். 'எங்கேயும் எப்போதும்' படத்தில் ஒரு காட்சி வரும். பேருந்தில் பயணிக்கும் ஒரு பெண் செல்போனில் தன் காதலனுடன் பேசிக் கொண்டிருப்பார். இன்னொரு அழைப்பு வரும்போது, 'ஹேய். கட் பண்ணு. கட் பண்ணு. அப்பா லைன்ல வர்றார். கட் பண்ணு'' என சொல்லிவிட்டு அடுத்த அழைப்பில், 'சொல்லுடா. அப்பாகிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்' என பேசுவார். ஒரே சமயத்தில் இருவருடன் பேசுவதற்கே நீங்களோ, உங்கள் நண்பர்களோ, பக்கத்து இருக்கையில் இருந்தவரோ திட்டித் தீர்த்திருப்பீர்கள்தானே. இங்கே ஒரு பையன் ஒரே தருணத்தில் இருவரை ஈஸியாக காதலிக்க முடிகிறது. பெண்கள் அப்படி செய்ய முடியுமா? அப்படி செய்கிற பட்சத்தில் நீங்கள் அவர்களை ஏற்றுக்கொள்வீர்களா? சரி. இதை விடுங்கள். உங்கள் காதலி / மனைவியின் பழைய காதல் தெரிந்த பிறகு எந்த கேள்வியும் எழுப்பாமல் இருக்க முடியுமா? அல்லது அந்த காதலன் பற்றி உங்கள் பிரியத்துக்குரியவர் சொல்லும்போது இயல்பாக கடக்க முடியுமா? இந்த விவாதத்துக்குள் போவதற்கு முன் சிவாவின் நண்பன் ராகவ் கதையை சொல்லிவிடுகிறேன். ஒரே சமயத்தில் இரண்டு பேரை எந்த உறுத்தலும் இல்லாமல் காதலிக்க முடியும் என்பதற்கு நிகழ்கால உதாரணம் ராகவ். ராகவ் விஸ்காம் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தான். ரம்யா முதலாமாண்டு கணிதம் படித்துவந்தாள். பக்கத்து வீட்டிலேயே வசிப்பதால் கிட்டத்தட்ட சின்ன வயதில் இருந்தே இருவரும் ஒன்றாக வளர்ந்தவர்கள்தான். ஆனால், கல்லூரிப் பருவத்தில் ரம்யாவை ராகவ் அதிகம் கவனிக்கத் தொடங்கினான். கணக்கில் தடுமாறும் ரம்யாவுக்கு உதவினான். அவன் செய்த சின்ன சின்ன குறும்புகளையும் ரம்யா ரசிக்கவே செய்தாள். ரம்யாவின் சாந்தமான தன்மையும், அமைதி தவழும் செயல்களும், முகக் களையும் ராகவை இயல்பாக ஈர்த்தன. கணக்கு சொல்லித் தரும் லாவகத்துடன் காதலையும் கற்றுக்கொடுத்தான். ரம்யாவும் காதலித்தாள். பக்கத்து வீடுதான் என்பதால் ராகவ் நண்பர்களுடன் அரட்டைக் கச்சேரி முடித்து வந்த பிறகு, அவள் எந்த நிலையில் இருந்தாலும் அட்டனென்ஸ் போட்டுவிடுவாள். சுமாராக படிப்பவள், ராகவுக்காக நல்ல மார்க் எடுக்க ஆரம்பித்தாள். ராகவ் எடுத்துத் தந்த ஆரஞ்சு நிற சுடிதாரை அலுக்காமல் அணிவாள். இப்படியே இருந்த ராகவ் - ரம்யா காதலில் தீட்சிதா நுழைந்தாள். தீட்சிதாவின் தோற்றமும், நுனி நாக்கு ஆங்கிலமும், சென்ட் வாசமும், குரலும் ராகவை என்னவோ செய்தன. தீட்சிதாவின் பக்கத்து வீடுதான் ராகவின் நண்பன் ஜெகதீஷ் வீடு. ஜெகதீஷை பார்ப்பதாகச் சொல்லி சொல்லியே தீட்சிதாவை நோட்டம் விட்டான். தீட்சிதாவும் ஒரு கட்டத்தில் ராகவை கவனிக்க ஆரம்பித்தாள். அவள் கை குலுக்கி பிறந்தநாள் வாழ்த்து சொன்னாலே ஷாக் அடித்ததாய் சொல்வான். வழக்கமாக பசங்கதானே பெண்களுக்கு அதிகம் செலவு செய்வார்கள். இங்கே ராகவ் விஷயத்தில் தலைகீழ் விகிதம். ராகவ் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு ஐஸ்கிரீம், பீட்ஸா, சாக்லேட் என்று இஷ்டத்துக்கும் வாங்கிக் கொடுத்தாள். ஃபேஸ்புக் அக்கவுண்டில் பாஸ்வேர்டில் தீட்சிதாவின் பெயரையும் சில எழுத்துகளுடன் சேர்த்து வைத்து உருகினான். ரம்யாவுக்கு ராகவ் விலகிப் போவது போல தெரியவில்லை. அங்கேயும் அச்சரம் பிசகாமல் மெயின்டெய்ன் செய்தான். தீட்சிதா ராகவ் வீட்டுப் பக்கமே புது வீடு வாங்கி குடிவந்தார்கள். அப்போது ஆரம்பித்தது பிரச்சினை. இரண்டு காதலும் தெரியவர, ராகவை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வசை பாடி வணக்கம் போட்டனர். தீட்சிதா அவளுக்கு கை வரப் பெற்ற ஆங்கிலத்தில் அதிகமாய் திட்டித் தீர்த்தாள். ஸ்டேட்டஸ், குடும்பம் என்று ஒன்றுவிடாமல் கேவலப்படுத்தியபோதும் ராகவ் கலங்கவில்லை. ரம்யாதான் அதிகம் கவலைப்பட்டாள். 'என்கிட்ட பேசுற மாதிரியே தானா தீட்சிதா கிட்டயும் பழகியிருப்ப? அப்போ என்கிட்ட பேசுனதையே அவகிட்டயும் சொல்லும்போது உனக்கு கூச்சமா இல்லையா? ஒரே சமயத்துல ரெண்டு பேரை எப்படி உண்மையா காதலிக்க முடியும்? ஒண்ணு நான் இல்லைன்னா அவ. யார் வேணும்னு நீ முடிவு பண்ணியிருக்கலாம். இல்லை அடுத்த காதல் வந்த பிறகு என்னை விட்டு விலகியிருக்கலாம். எப்படி ரெண்டு பேரை மெயின்டெய்ன் பண்ண நினைச்ச? இதை நினைச்சாலே இத்தனை நாள் அன்பும் பொய்னு தோணுது. ஆனா, உண்மையான அன்பை ஏமாத்துறது எவ்ளோ பெரிய துரோகம்? நீ நேர்மையா இல்லை. இப்படி ஒரு காதல் நமக்குள்ள இருந்ததுக்காக நான் வெட்கப்படுறேன். உன்னை காயப்படுத்த விரும்பலை. ஆனா, உன் மேல கோபம், வருத்தம், வெறுப்பு எல்லாமே இருக்கு. ஆனா, என் உண்மையான காதலுக்கு எந்த அர்த்தமும் இல்லாமப் போச்சு...' என வெதும்பினாள். ரம்யா காதலின் கசப்பில் கணிதத்தை டிஸ்கன்டினியூ செய்துவிட்டு நர்ஸிங் படிக்கப் போய்விட்டாள். தீட்சித் எம்பிபிஎஸ் படித்துவிட்டு மெல்போர்னில் எம்எஸ் படிக்கிறாள். ராகவ் நெல்லையில் ஒரு லோக்கல் சேனலில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்கிறான். நிகழ்ச்சித் தொகுப்பாளர், இரு காதலிகள், சிக்கிக் கொண்டு தவிப்பது என எல்லாமே எனக்கு 'ரெட்டைவால் குருவி' படத்தை நினைவுபடுத்தின. பாலுமகேந்திரா இயக்கத்தில் மோகன், அர்ச்சனா, ராதிகா நடிப்பில் வெளியான படம் 'ரெட்டைவால் குருவி'. தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணிபுரிகிறார் மோகன். இவர் மனைவி அர்ச்சனா வங்கியில் பணிபுரிகிறார். வேலை நிமித்தம் காரணமாக வேலூருக்கு மாற்றல் ஆகிறார் அர்ச்சனா. இந்த இடைவெளியில் மெல்லிசைப் பாடகி ராதிகாவுக்கும், அவரைப் பேட்டி எடுக்கும் மோகனுக்கும் காதல் முகிழ்க்கிறது. திருமணம் ஆனதை சொல்லாமல் மறைக்கும் மோகன் ராதிகாவையும் திருமணம் செய்துகொள்கிறார். இரண்டு வீடுகளிலும் மாறி மாறி வந்து போவதும், அலுவலகத்தில் இருந்து சமாளிப்பதுமாக நாட்களை நகர்த்துகிறார். ராதிகாவும், அர்ச்சனாவும் ஒரே சமயத்தில் கர்ப்பிணி ஆகிறார்கள். இருவரும் ஒரே மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்படுவதால் மோகனின் குட்டு வெளிப்படுகிறது. கடைசியில் அவரால் அவரது குழந்தைகளைக் கூட முழுசாய் கொஞ்ச முடியாதபடி இருவரும் விரட்டி அடிக்கிறார்கள். ஒரு நாள் மாறுவேடத்தில் சென்று தன் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்கும் மோகனைப் பார்த்து அர்ச்சனா திருடன் என கத்துகிறார். அதற்குப் பிறகு மோகனைப் பார்த்து கலங்கி, அப்பா டா என சொல்லி குழந்தையின் அழுகையைப் போக்குகிறார். ராதிகா வீட்டுக்கு போகும் மோகன் அர்ச்சனா வீட்டுக்கு போவதை மறைக்கிறார். அர்ச்சனா வீட்டில் இருக்கும்போது ராதிகா வீட்டுக்கு ஏன் போகப்போகிறேன்? பொய்யாய் சமாளிக்கிறார். இப்படியே அந்த சமாளித்தல் படலம் நீள்கிறது. இந்தப் படத்தின் ஆரம்பத்தில் சுதந்திரத்தை வாங்கிப்புட்டோம் என்று ஒரு பாடல் வரும். அதில் இரண்டாவது வரியாக வெள்ளையனை துரத்திப்புட்டோம். அவன் கூட வெட்கத்தையும் விரட்டிப்புட்டோம் வரிகளுக்கு நாவசைத்து ஆடும் பெண்ணை கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் அவர் மௌனிகாதான் என்று கண்டுகொள்வீர்கள். ரெஸ்டாரன்டில் ராதிகா நாளைக்கு ப்ளூ டிரெஸ் போட்டுக்கலாம்னு இருக்கேன் என தோழியிடம் சொல்வார். அவர் யாரென்று பார்த்தால் ஹீரா. பாலுமகேந்திரா தன் பிற்கால படங்களின் கதாநாயகிகளை இதில் சின்ன பிரேமில் அறிமுகப்படுத்தி இருக்கிறார். டைட்டில் கார்டில் பார்த்தால் உதவி இயக்கத்தில் அறிவுமதியின் பெயர் பளிச்சிடுகிறது. அர்ச்சனாவின் நடிப்பு இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அர்ச்சனாவின் குரலில் இருக்கும் குழைவில் கூட காதல் வெளிப்படும். ஒட்டிக்கிறதுக்கு மட்டும் வருவே. விஷயம் முடிஞ்சதும் தொட விடமாட்டியே என்பார். ராதிகாவோ மூக்கும் முழியுமா என்பதற்கு பதில் முழியும் முழியுமா என்று மோகனை ரசிப்பார். செக்ஸ் கல்வி பற்றி தைரியமாக கருத்து சொல்வார். இன்னும் சொல்லப்போனால் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் என்ற வார்த்தையை சினிமாவில் பயன்படுத்தியது இந்தப் படத்தில்தான். குழந்தைகள் தின விழாவில் பேட்டி எடுக்கும் மோகனிடம், சிந்தாதிரிப்பேட்டை சீனிவாசன் என்று கெத்தாக அறிமுகம் செய்யும் டீன் ஏஜ் இளைஞன் எதிர்காலத்தில் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஆகப் போவதாக கூறுவான். இப்படி 'ரெட்டைவால் குருவி' படத்தைப் பற்றிப் பேச நிறைய இருக்கிறது. ஆண் பார்வையில் இருவரைக் காதலிக்கும் 'ரெட்டை வால் குருவி', 'ஆட்டோகிராப்' என பல படங்கள் இருக்கின்றன. ஆனால், ஒரு பெண் காதலித்தால் ஏற்றுக்கொள்வோமா? சினிமாவில் மட்டும்தான் இப்படியா? இலக்கியத்தில் இருக்கிறதா என்றால் நிறைய உதாரணங்கள் இருக்கின்றன என்றே சொல்ல முடியும். கவிதா சொர்ணவல்லி 'கதவின் வெளியே மற்றொரு காதல்' என்ற சிறுகதையை எழுதி இருக்கிறார். 'எல்லோருக்கும் இரண்டாவது காதல் எந்த நிமிடமும் நிகழும். ஏன் நான்காவது காதல் கூட வரும், வந்தே தீரும். வாழ்க்கை முழுக்க காதல் துரத்திக்கிட்டே இருக்கும்' என்கிறார் கவிதா சொர்ணவல்லி. வெறுப்பில் பிரிவில் இன்னொரு காதல் முளைக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு காதலில் இருந்துகொண்டே இன்னொரு நபரையும் காதலிக்க முடியும் என்பதுதான் கதைக்கரு. இரு தோழிகள். ஒருவர் தன் இரண்டு காதலையும் சொல்கிறார். அதை சகித்துக்கொண்டு கேட்கும் தோழியும் இறுதியில் ஒரே சமயத்தில் இருவரை காதலிக்கிறார். இதுவா பெண்ணியம்? பெண் சுதந்திரம் என்பது என்ன தெரியுமா? என்றெல்லாம் கேள்வி கேட்டு கொடி பிடிப்பவரா நீங்கள்? அந்த கதையில் ஃபெமினிசம் இருக்காது. ஆனால், எமோஷனல் இருக்கும். முடிந்தால் படித்துப் பாருங்கள். கணவன் / மனைவிக்கு ஏற்கெனவே இருந்த காதலை ஏற்றுக்கொண்ட நீங்கள், ஒரு பெண்ணின் கடந்த கால / நிகழ் கால காதலையும் உணரமுடியும்தானே! * - மான்டேஜ் மனசு இன்னும் சுழலும்... http://tamil.thehindu.com/opinion/blogs/மான்டேஜ்-மனசு-14-ரெட்டை-வால்-காதல்/article8324041.ece
 7. மான்டேஜ் மனசு 13 - தொட்டு தொட்டு போகும் 'காதல்' கணேசகுமாரனின் 'மிஷன் காம்பவுண்ட்' நூல் வெளியீட்டு விழா டிஸ்கவரி புக் பேலஸில் நடந்தது. வலி, அழுகை, வன்முறை, மரணம், தற்கொலை, கொலை என்ற சொல்லாட்சிகளுடனும், உள்ளடக்கத்துடனும் சிறுகதைகள் எழுதும் கணேசகுமாரன், காதலர் தினத்தில் தொகுப்பை வெளியிட்டது நகை முரண்தான். ஆனால், கணேசகுமாரன் அன்பைதான் வெவ்வேறு வடிவங்களில் கதாபாத்திரங்களின் வழியாக சொல்கிறார் என்பதை மறுக்க முடியாது. கணேசகுமாரனுக்கு வாழ்த்துகளை சொல்லிவிட்டு அரங்கத்தில் இருந்து நகர்ந்தேன். விழாவில் சாரு சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாமல் பேசியதோடு, சில காதல் கதைகளையும் சொன்னார். அப்போதுதான் கணேஷின் எண்ணம் எனக்குள் வர ஆரம்பித்தது. பிப்ரவரி 15 கணேஷின் திருமண நாள். காதல் மனைவி ஆர்த்தியுடனும், ஒரு வயது செல்ல மகளுடனும் இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அவனுக்கு வாழ்த்துகளை சொல்ல செல்பேசியை உயிர்ப்பித்தேன். ''இயக்குநருடன் டிஸ்கஷனில் இருக்கிறேன்'' என்று மெசேஜ் தட்டினான். ''ஓ.கே. மச்சி. கன்டினியூ'' என்று ரிப்ளை செய்தேன். இந்த முறை கணேஷ் துணை இயக்குநராக பணி உயர்வு பெற்றுவிட வேண்டும். அதுதான் இந்த ஆண்டின் ஆகச் சிறந்த பரிசாக அவனுக்கு இருக்கும் என்று நினைத்தபடி வீட்டுக்கு விரைந்தேன். கணேஷ் லைனில் வந்தான். ''சொல்லு மச்சி..'' ''திருமண நாள் வாழ்த்துகள் டா... சீக்கிரமே உன் கனவு நனவாகணும். நம்ம பசங்க எல்லாரும் சேர்ந்து உன் படத்தைப் பார்க்கணும்.'' ''நன்றி மச்சி. அடுத்த மீட்டிங்ல ஒன் லைன் ஒண்ணு சொல்றேன் டா. எப்படி இருக்குன்னு சொல்லு.'' ''ஓ.கே. மச்சி... தங்கச்சி, மருமக எப்படி இருக்காங்க?'' ''நல்லா இருக்காங்க டா.'' ''இப்போ எந்த பிரச்சினையும் இல்லையே.'' ''இன்னும் ஆர்த்தியோட சொந்தக்காரங்க சிலர் அதே கோபத்தோட தேடுறாங்க டா. ஊர்ப்பக்கம் கூட இன்னும் போகலை.'' ''போகப்போக சரியாகிடும் மச்சி. கவலைப்படாதே'' என்று உரையாடலுக்கு திரையிட்டேன். 'காதல்' படம் பார்க்கும் போது கணேஷ் நினைவுக்கு வருகிறானா? கணேஷை நினைக்கும் போது 'காதல்' படம் நினைவுக்கு வருகிறதா? என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு கணேஷ் ஆக்கிரமிப்பு இருக்கிறது. 'காதல்' படத்தின் கதை அப்படியே கணேஷுக்கு பொருந்தும். சந்தியாவின் சித்தப்பா கேரக்டர் மாதிரி ஆர்த்தியின் தாய்மாமன் ஒருவர் கணேஷிடம் பேசிப் பேசியே டார்ச்சர் செய்தார். ''நீ எங்க வீட்டுப் பொண்ணை லவ் பண்றதுல எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்ல.. நானே மத்தவங்களை மீறி உங்களுக்கு கல்யாணம் பண்ணி வெச்சுப்புடுவேன்.. ஆனா, நீ வேற ஜாதிக்காரப்பய.. . நாளைக்கே உங்க ரெண்டு பேருக்கும் யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணி வெச்சுடலாம். என் சாதிக்கார பய எவனாவது ஒருத்தன் உன்னை வெட்டிட்டான்னு வை.. என்ன பண்ண முடியும் தம்பி..?'' இப்படிதான் கணேஷை நாசூக்காக மிரட்டிப் பார்த்தார். ஆனால், கணேஷ் 'காதல்' பட நாயகன் பரத் மாதிரி அவ்வளவு விவரம் தெரியாதவரல்ல. விவரமான ஆளு. உங்களுக்குத் திருமணம் என்றால் உங்களுக்கு எப்போது தெரியவரும்? சுமார் மூன்று மாதங்கள், குறைந்தது ஒரு மாதம்..... கணேஷுக்கு திருமணம் என்பது ஒரு மணிநேரம் முன்கூட்டிதான் அவனுக்கே தெரியும். எப்படி என்கிறீர்களா? கணேஷ் - ஆர்த்தி கதையைப் படியுங்கள். கணேஷும், ஆர்த்தியும் ஏழாம் வகுப்பில் இருந்து ஒரே பள்ளியில் படித்தவர்கள். கணேஷின் சேட்டைகளும், குறும்புத்தனமும், வசீகர சிரிப்பும், எந்த கேள்விக்கும் பதில் சொல்லும் புத்திசாலித்தனமும் எல்லா கண்களுக்கும் பிடித்தமானதாக இருந்தது. ஆர்த்தியின் கண்களுக்கும் அப்படித்தான் கணேஷைப் பிடித்தது. அதுவே அவர்களுக்குள் நட்பு மலர காரணமாக இருந்தது. ஆர்த்தியின் பாட சந்தேகங்களை அசால்ட்டாக டீல் பண்ணிய கணேஷ், அவள் நல்ல மதிப்பெண்கள் எடுக்க காரணமாக இருந்தான். அந்த ஆரோக்கியமான நட்பை நண்பர்கள் வரவேற்றனர். பிளஸ் 2 முடித்தபிறகு கணேஷ் அரசு பாலிடெக்னிக்கில் படிக்க சிதம்பரம் சென்று ஹாஸ்டலில் சேர்ந்துவிட்டான். ஆர்த்தி தஞ்சாவூரிலேயே கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தாள். இடையில் ஒரு வருடம் இருவருக்குமிடையே சுத்தமாக எந்த தொடர்புமே இல்லை. நாளடைவில் ஒரு வெறுமையை உணர்ந்தான் கணேஷ். இழந்துபோன அந்த நட்பு மீண்டும் தேவைப்பட்டது. ஆர்த்தியைப் பற்றி விசாரித்ததில் அவளுடைய கல்லூரியின் பெயர் மட்டும் கிடைத்தது. அதை மனதில் பதிந்துகொண்டு ஒருமுறை தஞ்சாவூர் வந்தபோது அவளுடைய கல்லூரி வாசலில்போய் நின்றான். மதியம் கல்லூரி முடிந்து எல்லா மாணவர்ளும் வெளியில் வர ஆரம்பித்தனர். ஒவ்வொரு முகத்தில் ஆர்த்தியைத் தேட ஆரம்பித்தான். அவளைப் பார்க்கப்போகிறோம் என்ற சந்தோஷம் ஒருபுறமும் பார்த்தால் என்ன செய்வது என்ற பதட்டமும் கணேஷுக்கு அதிகரித்தது. கால்கள் நடுங்க ஆரம்பித்தன. நாக்கு வறண்டுகொண்டிருந்தது. பதினைந்து நிமிடத்தில் மொத்த மாணவர்களும் வெளியேறினார்கள். அவளை மட்டும் காணவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பினான். அந்த ஒரு வருட இடைவெளியும், ஆர்த்தி இல்லாத இழப்பும் அவனுக்குள் காதலாக பரிமாணம் அடைந்ததை கணேஷ் உணர்ந்தது அந்த தேடல் படலத்தில் தான். பின்பு ஒரு நாள், வேறு ஒரு தோழி மூலம் ஆர்த்தி வீட்டு செல் நம்பர் வாங்கினான். ஒரு காயின் போன் பூத்தில் நின்றுகொண்டு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவள் வீட்டு எண்ணுக்கு அழைத்தான். நல்லவேளை ஆர்த்திதான் போனை எடுத்தாள். அவளது குரலில் அவ்வளவு உற்சாகம். இடையில் இருவரும் ஏன் ஒருவரையொருவர் தொடர்புகொள்ள முடியவில்லை என்பதற்கான காரணங்களையும் சம்பவங்களையும் பரஸ்பரம் தெரிவித்துக்கொண்டனர். மறுநாள் அவர்கள் படித்த பழைய பள்ளிக்கூடத்தில் ஒரு புளியமர நிழலில் இருவரும் சந்தித்தனர். கணேஷைப் பார்த்ததும் ஆர்த்தி கண் கலங்கினாள். ஆர்த்தி தன்னைக் காதலிப்பதை கணேஷ் உணர்ந்த தருணம் அதுதான். அவளை சமாதானம் செய்து, ‘இனிமே உன்னைவிட்டு எங்கேயும் போகமாட்டேன்’ என ஆறுதல் சொல்லி அங்கிருந்து கிளம்பினான். கணேஷ் அவன் வீட்டில் நச்சரித்து ஒரு பழைய செல்போனை செகண்ட் ஹேண்டில் வாங்கினான். இன்ஜினீயரிங் சேர்ந்தான். ஆர்த்தி நர்ஸிங் படித்தாள். கணேஷ் சென்னையில் வேலைக்கு சேர்ந்தான். ஆர்த்தி ஒரு மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்தாள். இப்படியே நாட்கள் ஓடி சரியாக அவர்கள் காதலிக்கத்தொடங்கி ஒன்பதாவது வருடம் காதல் விஷயம் அவளுடைய வீட்டுக்குத் தெரிந்துவிட்டது. முதலில் அவளை திட்டினார்கள். கண்டித்தார்கள். ஆனால் இருவரும் ஒன்று சேர்ந்தே ஆகவேண்டும் என பிடிவாதமாக இருந்தனர். இந்நிலையில் திடீரென்று அவளுடைய மாமா ஒருவரிடமிருந்து கணேஷுக்கு போன் வந்தது. ''என்ன தம்பி.. நம்ம ஆர்த்தியை லவ் பண்றீயாம்..? இப்பதான் வீட்ல சொன்னாங்க.. உன்னைப் பத்தி விசாரிச்சேன்.. நீ அந்த வாத்தியார் வீட்டு பையன்தானே..? ஏம்பா.. நீ லவ் பண்றதுல எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்ல.. நானே மத்தவங்களை மீறி உங்களுக்கு கல்யாணம் பண்ணி வெச்சுப்புடுவேன்.. ஆனா, நீயோ வேற ஜாதிக்காரப்பய.. அது எங்காளுங்களுக்கு செட் ஆகாது. நாளைக்கே உங்க ரெண்டு பேருக்கும் யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணி வெச்சு, மெட்ராஸுக்கு அனுப்பி வெச்சுடலாம்.. ஆனா, எங்க ஏரியாவுல எங்க சாதிக்காரய்ங்க 600 குடும்பம் இருக்கு.. அதுல எவனாவது ஒருத்தன் அங்க கெளம்பிவந்து உன்னை வெட்டிட்டான்னு வை.. என்ன பண்ண முடியும் தம்பி..? இல்ல.. ஒரு பேச்சுக்கு வெச்சுக்குவோம். இங்க வேற உங்க அம்மா, அப்பா வேற இருக்காங்க.. பார்த்துக்க தம்பி'' என சொல்லி போனை வைத்தார். அவர் தன்னை பாலிஷாக மிரட்டுகிறார் என ஆரம்பத்திலேயே கணேஷுக்கு புரிந்தது. என்ன செய்வது என தெரியாமல் கணேஷ் உட்கார்ந்து யோசித்துக்கொண்டிருக்கும்போது சிறிதுநேரத்தில் அம்மாவிடமிருந்து போன் வந்தது. போனை எடுத்தால் அம்மா அழுதபடி, ''என்னடா இது.. ஒருத்தரு வீட்டுக்கு வந்துருக்குறாரு… அவங்க வீட்டு பொண்ணை நீ லவ் பண்றியாம்.. கல்யாணம் பண்ணி வெக்கிறேன்.. ஆனா வெட்டுனாலும் வெட்டுவாங்கன்னு ஏதோ ஏதோ பேசுறாருடா.. நான்.. அது நீ இல்ல, வீடு மாறி வந்திருப்பீங்கனு சொன்னா, நம்பமாட்டேங்குறாருடா.. என்ன இதெல்லாம்..?'' என கேட்டார். கணேஷ் வேறு வழியில்லாமல் ''அவர் சொல்றது உண்மைதாம்மா'' என்றான் மனதைத் திடப்படுத்திக்கொண்டு. அதைக் கேட்டு அம்மா அழுதுதீர்த்தார். அவன் சமாதானப்படுத்த முயற்சி செய்யும்போது ஆர்த்தியின் மாமா போனை வாங்கி, ''தம்பி.. சும்மா வீட்டுக்கு வந்தேன்.. வேற ஒண்ணுமில்ல'' என சொல்லிவிட்டு போனை வைத்தார். அன்று மாலை ஆர்த்தியின் செல்போனுக்கு தொடர்புகொண்டால் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. அவள் வேலை பார்க்கும் ஹாஸ்பிட்டல் நம்பருக்கு அழைத்தால் அவள் வேலைக்கு வரவில்லை என்ற தகவல் வந்தது. வேறு ஒரு எண்ணில் ஆர்த்தியிடமிருந்து கணேஷுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது அதில் தான் வீட்டில் ஹவுஸ் அரெஸ்ட் செய்துவைத்திருப்பதாகவும் அடித்து துன்புறுத்துவதாகவும் துரிதமாக கல்யாண வேலைகள் நடந்துவருவதாகவும் சொன்னாள். கணேஷ் தன் பெற்றோரை சமாதானம் செய்து சம்மதம் வாங்கினான். கணேஷ் தன் பெற்றோரை அழைத்துக்கொண்டு மகளிர் காவல் நிலையத்துக்கு போனான். புகார் செய்தான். உடனே ஆர்த்தியையும் அவளுடைய பெற்றோரையும் ஸ்டேஷனுக்கு வரவைத்தார்கள். கணேஷ், ஆர்த்தியை தனித்தனியே விசாரித்தார்கள். விசாரணைக்குப் பின், ''அவங்க ரெண்டு பேரும் மேஜர்.. கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்றாங்க.. நீங்க என்ன சொல்றீங்க..?'' என இருவரின் பெற்றோர்களிடம் கேட்டனர். கணேஷ் வீட்டில் சம்மதம் தெரிவித்தனர். ஆர்த்தியின் அப்பா, 'எங்களுக்கு ஒரு மாசம் டைம் கொடுங்க.. நாங்களே எங்க சொந்தத்துல சொல்லி, நல்லபடியா கல்யாணம் பண்ணிவெக்கிறோம்' என கேட்டார். போலீஸார் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி ஆர்த்தியை அவர்களுடன் திரும்ப அனுப்பிவைத்தனர். ஆர்த்தியும் கணேஷும் சந்தோஷத்தில் மிதந்தனர். கணேஷ் சென்னை திரும்பினான். ஆனால். அதன்பிறகு நடந்ததுதான் அதிர்ச்சி. அவளை திரும்பவும் பழையபடியே வீட்டுக்குள் முடக்கிவைத்தனர். ஒரு மாதத்துக்குள் எப்படியாவது அவளை மனம் மாற்றம் செய்துவிடலாம் என பல்வேறு வழிகளில் முயற்சி செய்தனர். ஆனால் ஆர்த்தி கொஞ்சம்கூட மசியவில்லை. மாதம் ஒன்றாகிவிட்டது ஆனால் எந்த தகவலுமே இல்லை. போன் செய்தால் கட் செய்தார்கள். அன்று பிப்-14 அன்று காதலர் தினம், ஊரே காதல் கொண்டாட்டத்தில் இருந்தது. அன்று இரவே கணேஷ் சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு பஸ் பிடித்தான். வீட்டுக்குக்கூட போகாமல் நேராக நண்பர்கள் சிலரை அழைத்துக்கொண்டு மகளிர் காவல் நிலையத்துக்கு போனான். புகார் செய்தான். ஆர்த்தி வீட்டுக்கு போன் செய்தார்கள் முன்பு மாதிரியே அனைவரையும் வரவைத்தார்கள். அவர்களிடம் இன்ஸ்பெக்டர், ''உங்களுக்கு கொடுத்த டைம் முடிஞ்சுபோச்சு.. சொன்ன மாதிரி நீங்க நடந்துக்கலை.. பொண்ணு ஸ்டிராங்கா இருக்கா.. ஸோ.. இனிமே அந்த பையன் சொல்றபடிதான் நாங்க கேட்கணும்..'' என்றார். ''என்னப்பா செய்யப்போற..?'' - கணேஷைப் பார்த்து கேட்டார் இன்ஸ்பெக்டர் ''இல்ல மேடம்.. ஏதாவது வுமன்ஸ் ஹாஸ்டல்ல தங்க வெச்சி பார்த்துக்கிறோம்.. அப்புறமா நாள் பார்த்து கல்யாணம் பண்ணிக்கிறேன்'' என்றான் கணேஷ். ''அதெப்படிப்பா.. ஒரு வயசுப்பொண்ண சும்மா அனுப்பிவைக்கமுடியும்.. நீ உன் கூட கூட்டிட்டுபோகணும்னா கல்யாணம் பண்ணிதான் கூட்டிட்டு போகமுடியும்.. அதுக்கு உனக்கு சம்மதமா..?'' ''சம்மதம் மேடம்'' விறுவிறுவென அடுத்த ஒரு மணி நேரத்தில் ஒரு கல்யாணத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் நண்பர்கள் கொண்டுவந்தனர். இதற்கிடையில் ஆர்த்தியின் பெற்றோர்கள், 'எங்களுக்கும் அவளுக்கும் இனி எந்த சம்பந்தமுமில்லை' என எழுதிக்கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர். கணேஷ் தன் பெற்றோரிடம் போனில் பேசி நிலவரத்தை சொல்லி வரவைத்தான். அவர்களும் வந்து சேர்ந்தனர். எல்லாம் தயாரானது. பிப்-15 அன்று காவல் துறை முன்னிலையில் அருகில் உள்ள ஒரு அம்மன் கோயிலில் திருமணம் நடந்தது. அன்றே இருவரும் ஒரு உறவினர் துணையுடன் சென்னைக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் எங்கு இருக்கிறோம் என்பதே யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொண்டனர். அவர்களது திருமண வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக போய்க்கொண்டிருந்தது. அதன்பிறகு சில மாதங்கள் கழித்து ஆர்த்தியின் மாமாவிடமிருந்து போன் வந்தது. பாசமாக பேசினார். அவர்களது வீட்டு குழந்தைகள் 'ஆர்த்தி அக்கா எங்கே' என கேட்டு அழுவதாகவும் தஞ்சாவூருக்கு வரும்போது அவசியம் அவருடைய வீட்டுக்கு வரவேண்டும் என்றும் கூறினார். ஆர்த்தி அதில் மனம் கரைந்தாள். ஆனால் கணேஷுக்கு ஒரு சின்ன சந்தேகம் இருந்துகொண்டேயிருந்தது. தஞ்சாவூர் போனபோது அவருக்கு போன் செய்து ஆர்த்தி விஷயத்தை சொன்னாள். அன்று மாலை ஏழு மணி அளவில் அவர் மட்டும் ஒரு கார் எடுத்துக்கொண்டு வந்து கணேஷ், ஆர்த்தியை வண்டியில் ஏறச்சொன்னார். ஆர்த்தி சந்தோஷத்துடன் புறப்பட்டாள். கணேஷ் சந்தேகத்துடன் போனான். வண்டியில் கருவேலங்காடு வழியாக போகப்போக கணேஷ் மனதுக்குள் என்னென்னமோ எண்ணம் வர ஆரம்பித்தது. இருப்பினும் ஒரு கை பார்த்துவிடலாம் என மனதை தைரியப்படுத்திக்கொண்டான். வண்டி நேராக ஒரு வீட்டு முன்பு போய் நின்றது. அது அவரது வீடுதான். அந்த வீட்டு குழந்தைகள் ஓடிவந்து ஆர்த்தியை சூழ்ந்துகொண்டர். அந்த வீட்டு ஆட்கள் ஒவ்வொருவரும் வினோத்தை தள்ளி நின்று பார்த்து ஏதோ பேசி சிரித்துக்கொண்டனர். கணேஷ் இரண்டாவது முறையாக வெட்கப்பட்டான். அதுவும் அந்த ஆர்த்தியின் மாமா கேரக்டர், டாடா சுமோ, கார் பயணம் என எல்லாம் 'காதல்' படத்தை நினைவுபடுத்தின. 'காதல்' படம் பாலாஜி சக்திவேலுக்கு மிகப் பெரிய அடையாளத்தைத் தேடித் தந்தது. ஷங்கர் தயாரிப்பில் பரத், சந்தியா நடிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கி ஹிட்டான படம் 'காதல்'. சந்தியாவும், தண்டபாணியும் இப்படத்தில் அறிமுகங்கள். ஆனால், புதுமுகம் என்று நினைக்காத அளவுக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியிருப்பார்கள். விஜய் மில்டனின் ஒளிப்பதிவில் மதுரை நிலப்பரப்பை நமக்குள் கடத்தி இருப்பார். நா. முத்துக்குமாரின் வளையாமல் நதிகள் இல்லை. வலிக்காமல் வாழ்க்கை இல்லை என்ற வரிகள் உட்பட அனைத்துப் பாடல்களும் ரிப்பீட் ரகத்தில் ரசிகர்கள் கேட்டுக் கொண்டே இருந்தனர். அறிமுக இசையமைப்பாளர் ஜோஷ்வா ஶ்ரீதரின் இசையும் படத்துடன் பொருந்திப் போனதை சொல்லியே ஆக வேண்டும். கதை ரொம்ப சிம்பிள். பைக் மெக்கானிக் பரத் குடிசைப் பகுதியில் வாழும் இளைஞன். ஒயின்ஷாப் நடத்தி வரும் தண்டபாணியின் மகள் சந்தியாவுக்கு பரத் மீது ஈர்ப்பும், காதலும் வருகிறது. நாளடைவில் பரத்தும் சந்தியாவைக் காதலிக்கிறார். இருவரின் சாதியும் காதலுக்குத் தடையாக இருக்கும் என்று கருதி சென்னை சென்று நண்பர் மூலம் தெரு முனையில் திருமணம் செய்துகொள்கிறார்கள். சந்தியாவின் சித்தப்பா இருவரையும் தேடி சென்னை வருகிறார். பரத் - சந்தியா இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கிறார். வீட்டில் இருப்பவர்களிடம் நிதானமாக எடுத்துச் சொல்லி புரியவைப்பதாகவும், சேர்த்துக்கொள்ள உதவுவதாகவும் உறுதி தருகிறார். இதை நம்பி சென்னையில் இருந்து மதுரைக்கு பரத்தும், சந்தியாவும் காரில் வருகின்றனர். வீடு நெருங்கும் போது பரத்தை சாதிய பேச்சால் அவமானப்படுத்துகிறார். அதற்குப் பிறகு பரத்தை அடித்து உதைத்து மனநலம் பாதிக்கப்படும் அளவுக்கு புத்தி பேதலிக்கச் செய்துவிடுகின்றனர். நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன் என்று மண்டியிட்டு கலங்கும் சந்தியா பரத் எங்கே இருந்தாலும் உயிரோடு இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தாலியைக் கழட்டி எறிகிறார். புத்தி பேதலிட்த பரத் அந்த தாலியை கையில் எடுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்கிறார். சில ஆண்டுகள் கழித்து சந்தியாவுக்கு அவர் சாதியைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடக்கிறது. சந்தியா குழந்தையை கையில் சுமந்த படி. தன் கணவனுடன் பைக்கில் வரும்போது நடுரோட்டில் பிச்சை எடுக்கும் பரத்தை சில ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கும் சந்தியா பிச்சைக்காரன் மாதிரி இருக்கும் பரத்தை கூர்ந்து கவனிக்கிறார் அவர் நெஞ்சில் தன் பெயர் பச்சை குத்தி இருப்பதைப் பார்த்து மயக்கமடைகிறார் . சந்தியாவின் கணவர் சிவகுமார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கிறார். இரவில் விழிப்பு வந்த சந்தியா பரத்தை தேடி அலைகிறார். பரத்தின் கோலத்தைப் பார்த்து ''நீ நல்லா இருக்கணும்னுதானே தாலியை பிச்சு எறிஞ்சேன். இப்படி நடக்கும்னு தெரியாம போச்சே! நாம காதலிச்சது தப்பா! என்னாலதானே இப்படி ஆன? நான் பாவி ஆகிட்டேன். இனிமே உன்னை விட மாட்டேன்'' என்று கலங்குகிறார். குழந்தையின் அழுகுரல் கேட்டு திரும்ப அங்கு சந்தியாவின் கணவர் சிவகுமார், குழந்தையுடன் நிற்க, சந்தியா பரிதவிக்கிறார். சந்தியாவின் கணவர் பரத்துக்கு சிகிச்சை அளித்து பரமாரிக்கும் முடிவுடன் ஒரு கையில் சந்தியா, குழந்தையை தாங்கியபடி, இன்னொரு கையில் பரத்தை கை பிடித்து அழைத்துச் செல்கிறார். மனித நேயம் மிக்க இந்த கணவரை ரயில் பயணத்தில் சந்தித்ததாகவும், மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிப்பதாகவும் சொன்ன உண்மைக் கதையை உங்களுக்கு கண்ணீருடன் சமர்ப்பிக்கிறேன் என்று பாலாஜி சக்திவேல் பெயர் திரையில் ஒளிரும். இடைச்செருகலாக ஒன்றை சொல்ல வேண்டும். பரத் நண்பர் சுகுமார் தங்கியிருக்கும் மேன்ஷனில் பரத்தும், சந்தியாவும் தங்குவார்கள். அங்கே குளியலறையில் ஸ்டிக்கர் பொட்டு பார்த்து ஒரு பொண்ணு இங்கே தங்கியிருக்கு என மேன்ஷனுக்கே தம்பட்டம் அடிக்கும் கேரக்டரில் நடித்திருப்பது நம்ம சூரிதான். ‘காதல்’ படத்தைப் பார்த்தவர்கள் போட்டி போட்டு என்ன படம்... என்று சிலாகித்துப் பாராட்டினார்கள். எந்த சாதிக்கார பெண்ணுடன் சேரக் கூடாது என்று நினைத்தார்களோ, அதே சாதியைச் சார்ந்த ஒருவர் தான் பரத்தை பராமரிக்கிறார். பொதுவாக ஆதிக்க சாதிப் பெண்ணை ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒருவர் காதலிப்பார். அது ஆதிக்க சாதியினருக்கு தெரியவரும்போது ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் மிரட்டப்படுவார். கொல்லப்படுவார். அல்லது சம்பந்தப்பட்டவர்கள் ஊரை விட்டு ஓடிவிடுவார்கள். அல்லது ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் குடும்பமே அழியும். அல்லது அவன் சுற்றமும் சேர்ந்தே அழியும். 'காதல்' படத்திலும் அந்த சிக்கல் இருக்கிறது. பரத்தும் - சந்தியாவும் இணையவே இல்லை. இயக்குநர் கூட மேன்ஷன் அறையில் உடை மாற்றும் சூழலில் வரும் கிறுகிறுன்னு பாடலில் தள்ளித் தள்ளியே டூயட் பாட வைத்திருப்பார். ஆனால், காதலனுக்கு தான் காதலித்த பெண்ணின் கணவன் அடைக்கலம் தருவது உண்மை சம்பவம் என்ற மையப்புள்ளியை வைத்து படமாக்கி இருப்பதால் 'காதல்' பட கிளைமாக்ஸ் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 'காதல்' தனித்துவமானதுதான். 'பருத்தி வீரன்', 'சுப்பிரமணியபுரம்', 'பாரதி கண்ணம்மா' ஆகிய படங்களில் கதாநாயகி ஆதிக்க சாதியைச் சார்ந்தவராகவும், கதாநாயகன் ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்தவராகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்த மூன்று படங்களிலும் நாயகன் - நாயகி இணையவே இல்லை என்பதையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். இந்த மூன்று படங்களிலும் நாயக பிம்பம் ஹீரோயிஸமாக இருக்கும். 'காதல்' படம் அப்படியல்ல. என்னை கை விட்டுடமாட்டியே ஐஸூ என்று நாயகியிடம் எப்போதும் பயந்தபடியும், பதறியபடியும் பரத் கேட்டுக்கொண்டே இருப்பார். வீர வசனம் பேசும் நாயக பிம்பம் இல்லை. ஆதிக்க சாதியினருக்கான பிரச்சார படமா? அவர்களை முன்னிறுத்தி எடுக்கப்பட்டதா? என்ற கேள்வியும் எழுகிறது. ஒயின்ஷாப் முதலாளியான தண்டபாணியின் தோரணை, உடல் மொழி, மிரட்டல் பேச்சு, மகள் வயதுக்கு வந்தவுடன் ஊருக்கே கறிவிருந்து வைப்பது, தொங்கட்டானுடன் பாசத்தை பங்கு போடும் அம்சவள்ளிப் பாட்டி கடைசியில் ’அந்த பொண்ணை வெட்டிப் போடுங்கடா' என டெரர் காட்டுவது, 'காதலுக்கு மரியாதை' படத்தை டிவியில் பார்த்து கலங்கும் தண்டபாணியின் இரு மனைவிகளும் 'அந்தப் பையன் தான் இதுக்கெல்லாம் காரணம். நம்ம பொண்ணு மனசைக் கெடுத்த அவனைக் கொல்லுங்க' என சுய சாதியை உயர்த்திப் பிடிக்க நினைப்பது, சந்தியாவின் சித்தப்பா பொண்ணு ஓடிப் போன சோகம் என நாடகமாடி உளவியல் ரீதியாக விஷயங்களைக் கறப்பது என எல்லாம் ஆதிக்க சாதியின் தன்மைகளை புட்டு புட்டு வைக்கிறது. தென் மாவட்டங்களில் அப்பட்டமாக நடக்கும் கதையைத் தான் பாலாஜி சக்திவேல் காட்சிப்படுத்தி இருக்கிறார் . அதே சமயம், எந்த அரசியலுக்குள்ளும் சிக்கக்கூடாது என்பதற்காகவே உண்மை சம்பவத்தை படமாக எடுத்ததாக பாலாஜி சக்திவேல் சொல்கிறார். 2004-ல் காதல் படம் வெளியானதால் இது கௌரவக் கொலைகளை பேசும் படம் என்ற விமர்சனம் அப்போது அதிகம் எழவில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகே தமிழ் சினிமாவில் கௌரவக் கொலைகள் குறித்த பதிவுகள் பேசப்பட்டன. 'சுந்தர பாண்டியன்' கூட கௌவரக் கொலைகள் குறித்த அறிமுகத்தை பெருமையாக பதிவு செய்யும் படம்தான். ஆரம்பத்திலேயே அப்படியான காட்சிகளை வாய்ஸ் ஓவரில் சொல்வார்கள். படம் வெற்றிகரமாக ஓடிய பிறகு இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன் தவறை உணர்ந்து திருத்திக்கொள்வதாக ஒரு பேட்டியில் சொன்னார். சமீபத்தில் பொன் ராம் இந்த கௌரவக் கொலைகள் விஷயத்தை வித்தியாசமாக டீல் பண்ணுகிறார் என்று நண்பர் சுகுணா திவாகரின் முகநூல் ஸ்டேட்டஸ் படித்தது மாற்றி யோசிக்க வைத்தது. கௌரவக் கொலைகளை பகடி பண்ணுவது பொன் ராம்தான். சத்யராஜ் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் கௌரவக் கொலை செய்துவிட்டதாக பீதியைக் கிளப்பி, அதையே காமெடியாக்கி இருப்பார்கள். 'ரஜினி முருகன்' படத்தில் மாற்று சாதிப் பெண்ணைக் காதலித்ததற்காக கௌரவக் கொலை செய்துவிடுவார்கள் என்று பயந்து, தன் சாதிப்பெண்ணை இரண்டாம் திருமணம் செய்துகொண்டதாக ராஜ்கிரணை பொன் ராம் பேச வைத்திருக்கிறார் என்று நண்பர் சுகுணா திவாகர் எழுதி இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால், 'காதல்' படத்தில் டெரர் காட்டிய தண்டபாணிதான் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் என் மீசை துடிக்குதுலே என்று சத்யராஜை சீண்டுவார். அவரின் கதாபாத்திரத்தை இப்படி நய்யாண்டி செய்திருப்பதே குறியீடாக இருக்குமோ என்று யோசிக்க வைக்கிறது. * பப்பி லவ் தான் காதலின் கதைக்களம். அதை எப்படி உன்னத காதலாக பாலாஜி சக்திவேல் படைத்தார் என்ற கேள்வி எழலாம். அதற்கு கணேஷின் காதலே ஒற்றை உதாரணம். சின்ன வயதில் அரும்பிய சினேகமான புன்னகையில் ஆரம்பித்த நட்பு இன்று காதலாகி கசிந்துருகி கணேஷ் 14 ஆண்டுகளைக் காதலால் கடந்திருக்கிறான். ''நீ என் முதல் குழந்தை. இரண்டாம் தாய். கடைசி தோழி'' என்று காதல் வசனம் எந்த படத்திலாவது பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தால் கைதட்டுங்கள். அது கணேஷின் வசனமாகவும் இருக்கக்கூடும். பிப்ரவரி மாதம் கணேஷுக்கு ரொம்பவே ஸ்பெஷல். திருமணம் நடந்தது மட்டும் காரணமல்ல, அவன் மகள் பிறந்ததும் பிப்ரவரியில்தான். * - மான்டேஜ் மனசு இன்னும் சுழலும்... http://tamil.thehindu.com/opinion/blogs/மான்டேஜ்-மனசு-13-தொட்டு-தொட்டு-போகும்-காதல்/article8248403.ece?ref=relatedNews
 8. மான்டேஜ் மனசு 12: காதல் கடத்தும் அழகிய தீ! ஃபேஸ்புக்கை திறந்தால் இன்று மணிகண்டன் பிறந்த நாள் என்ற அறிவிப்பு ஒளிர்ந்தது. அப்புறம் வாழ்த்தலாம் என்று நினைத்து மறந்துபோகும் மோசமான வியாதி எனக்கும் இருப்பதால் உடனே செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்தினேன். இரவு விருந்துக்கு கண்டிப்பாக வந்துவிடவேண்டும் என்று சொல்லிவிட்டான். தம்பி பேச்சுக்கு மறு பேச்சா? கிளம்பத் தயாரானேன். அண்ணா சாலையில் இருந்து மேற்கு சைதாப்பேட்டை செல்ல எப்படியும் அரை மணிநேரம் ஆகுமே. அதுவும் 18k பஸ் தயவு பண்ணி தரிசனம் கொடுத்தால்தான் உண்டு. இந்த இடைவெளியில் உங்களுக்கு மணி - சரண்யாவை அறிமுகப்படுத்திவிடுகிறேன். தமிழ் சினிமாவின் லட்சத்து 99 ஆயிரத்து 90-வது விதிப்படி மணிகண்டனும், சரண்யாவும் ஒரே கல்லூரிதான். மணி பயோ - கெமிஸ்ட்ரி இரண்டாமாண்டு படிக்கும்போது என்.எஸ்.எஸ். கேம்ப்பில் முதல் முறையாக எலக்ட்ரானிக்ஸ் படிக்கும் சரண்யாவைப் பார்த்தான். அங்கு மணி இயக்கிய முதல் குறும்படம் 'உயிரின் வலி' திரையிடப்பட்டது. சரண்யாவுக்கு குறும்படம் பிடித்துப்போக மணியிடம் நான்கு வார்த்தைகள் பேசினாள். அவ்வளவுதான்! அவளிடம் அதிகம் பேசவேண்டும் என்று தோன்ற, நண்பர்கள் மூலமாக மொபைல் நம்பரை வாங்கினான் மணி. கொஞ்சம் கொஞ்சமாகப் பேச ஆரம்பித்து நண்பர்களானார்கள். சரண்யாவுக்கு தன்மீது காதல் சாத்தியமா என்பதைத் தெரிந்துகொள்ள 'லவ் மேரேஜ் பெஸ்ட்டா? அரேஞ்ச் மேரேஜ் பெஸ்ட்டா?' என்ற வாதத்தை, தினமும் பேசுவதற்காகவே உருவாக்கினான். சில மாதங்கள் நீடித்த இந்தப் பட்டிமன்றத்தில் இறுதியில் ஜெயித்தது காதல்தான்! ஆம். காதல் திருமணமே சிறந்தது என சரண்யா திருவாய் மலர்ந்தாள். 'நீ யாரையாவது லவ் பண்றியா?' என்ற வார்த்தையை அவளே மணியிடம் கேட்டாள். 'ஆமாம்...' என்று பதில் சொல்லியதோடு, யார் என்பதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை அவளிடமே கொடுத்துவிட்ட புத்திசாலி மணி. கண்டுபிடிப்பதில் சிரமம் தொடர்ந்தால் தினம் ஒரு க்ளூ என்பது இதில் ஒரு கோரிக்கை. ஒருவழியாக, 'மணி தன்னைதான் காதலிக்கிறான்' என்பதை சரண்யா தெரிந்துகொள்ள ஏழு மாதங்கள் ஆனது. மூன்றாம் ஆண்டு இறுதியில் காதலைச் சொன்னான். சந்தோஷமாக சம்மதித்தாள். 'சினிமாதான் என்னுடைய கனவு, சினிமாதான் என் லட்சியம்' என்று சரண்யாவிடம் சொன்னான். அவள் மணியைக் காதலிக்கக் காரணமே இதுதான் என்பது தெரிந்ததும் மணியே ஆச்சர்யப்பட்டான். படிப்பு முடிந்து, சரண்யா மேல்படிப்புக்காக சேலம் சென்றுவிட, மணி வேலை கிடைக்காமல் அவதிப்பட்டான். எக்காரணத்தைக் கொண்டும் வீட்டில் காசு வாங்கக்கூடாது என்று வைராக்கியமாக இருந்த மணிக்கு சரண்யாவின் 'எக்ஸாம் பீஸ்' பல தடவை கை கொடுக்கும். கடைசியாக தியேட்டரில் சென்று பார்த்த சினிமா எது என்று கேட்டால், அவளுடைய பதில் 'சந்திரமுகி!'. ஆனால், மணி பேசும் சினிமாக்களை ஆர்வமாகக் கேட்பாள். டைரக்டர் ஆகணும்னா, நிறைய படிக்கணும் என அட்வைஸ் செய்ததோடு, மாதம் ஒருமுறை ஊருக்கு வரும்போது முன்னே மணியும், பின்னே சரண்யாவும்... அல்லது முன்னே சரண்யாவும் பின்னே மணியுமாய் பரமக்குடியை வலம் வந்து, ஒரு புத்தக்கடைக்குள் நுழைந்துகொள்வார்கள். மணியின் வாசிப்புப் பழக்கத்தை அதிகரித்தவள் சரண்யாதான். சென்னைக்கு வந்து ஆறு மாதங்களாகியும் வேலை கிடைக்காத விரக்தியில் கடலையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த மணி சரண்யாவுக்கு அலைபேசினான். கையில் காசு இல்லை என்றும் ஊருக்கே வந்துவிடப் போவதாகவும் கலங்கினான். சரண்யா வார்த்தைகளில் மட்டும் அந்த அக்கறையை, ஆறுதலை விதைக்கவில்லை. செயலில் காட்ட நினைத்தாள். இத்தனைக்கும் சென்னை சரண்யாவுக்கு பழக்கமில்லை. ஆனால், தலைநகரம் தன்னம்பிக்கையும், வாய்ப்புகளையும் கொடுக்கும் என்று அந்த தேசத்தில் தேடலை ஆரம்பித்தாள். தோழியின் தோழிக்கு சித்தப்பா ஒருவர் மயிலாப்பூரில் இருந்ததை அறிந்து 2000 ரூபாய் பணம் கொடுக்க ஏற்பாடு செய்தாள். அடுத்த நாள் காலை அந்த சித்தப்பா சைதாப்பேட்டைக்கு வந்து மணியை சந்தித்தார். மேன்ஷனில் அவனை தங்க வைத்து செலவுக்கு கையில் கொஞ்சம் பணத்தை திணித்துவிட்டுச் சென்றார். 'சினிமா கோட்பாடு'னு, உலக சினிமா புத்தகங்கள் மூன்று தொகுதி, என குறிப்பிட்ட சில புத்தகங்களைப் படிச்சா டைரக்டர் ஆகிடலாம்!' என யாரோ அவளுக்குச் சொல்ல... விலையை விசாரிக்கச் சொல்லி மணியிடம் வற்புறுத்தினாள். ஆயிரத்துக்கும் அதிகம் விலை என்றதும் கொஞ்சமும் யோசிக்காமல், 'என் மோதிரத்தை வித்துடுறியா மணி? அம்மாகிட்ட தொலைஞ்சு போச்சுனு பொய் சொல்லிடுறேன்'னு சொன்னவள் சரண்யா. பத்திரிகை அறிமுகம் கிடைத்து, அதன்மூலம் எளிதாக சினிமாவுக்குள் புகுந்துவிடலாம்... என அண்ணன் ஒருவர் சொன்ன பாதையைத் தேர்ந்தெடுத்து, ஒரு பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்தான் மணி. சென்னைக்குச் செல்ல குறைந்தபட்சம் மூவாயிரம் தேவை என்ற சூழல். சின்ன வயதில் இருந்தே சேர்த்துவைத்த உண்டியலை மொத்தமாக உடைத்து, கைக்குட்டையில் சுற்றிக்கொடுத்தாள். சினிமா வாழ்க்கை பயத்தையும், அவ நம்பிக்கையையும், குழப்பத்தையும் கொடுக்கும்போதெல்லாம் மணி கொஞ்சம் பிதற்றுவான். அப்போதெல்லாம் புத்தகங்களாலும், டிவிடிகளாலும் சரண்யா பதில் சொல்வாள். கேட்டால், 'எனக்குக் கிடைச்ச முதல் பெஸ்ட் ஃபிரெண்ட் நீதான்டா! உன் ஆசை ஜெயிக்கணும்' என்றாள். மணிக்கும் சரண்யாவுக்கும் ஒரே வயது. வீட்டில் திருமண ஏற்பாடுகளுக்குப் பேச்சுகொடுத்துவிடுவார்கள் என்ற பயத்திலேயே மேல்படிப்புக்காக சேலம் சென்றாள். அவளுக்கு எம்.எஸ்.சி படிப்பதில் பெரிதும் விருப்பம் இல்லை என்றாலும், மணி திருமண பயத்திலிருந்து இரண்டு வருடங்கள் நிம்மதியாக இருப்பான் என்பதால் படித்தாள். ஆசைப்பட்டது போலவே சினிமா பத்திரிகை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தான். அவள் படித்துக்கொண்டிருந்தாள். சரண்யா வீட்டில் அவளை நச்சரிப்பதற்குள் நல்ல வேலைக்குச் சேர்ந்துவிடவேண்டும் ப்ளஸ் தன்னுடைய பாதையும் மாறிவிடக்கூடாது என்று மணி உழைத்ததில், நல்ல பலன் கிடைத்தது. முதல் முறையாக மணியின் 'நிழல்' குறும்படத்தை யூடியூபில் பார்த்த முதல் ரசிகை அவள்தான்! 'சிக்குபுக்கு' படத்தின் இயக்குநர் பெயர் கே.மணிகண்டன். அந்தப் பேப்பரை எப்படியோ மடித்துப் பாதுகாத்து, கே-க்குப் பக்கத்தில் மணியினுடைய இன்னொரு இனிஷியலை எழுதி... கே.ஜி.மணிகண்டன்... சூப்பர்ல? என சிலாகிப்பாள். 'எந்தக் கதையை யோசிக்கணும்னாலும் தனுஷ்கோடி போனா போதும்!'னு என்றோ மணி சொன்னதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு, அடிக்கடி கவனத்தை தனுஷ்கோடி பக்கம் திருப்புவாள். 'ஃபிரெண்டுகிட்ட பேசுறேன்!' என்று சொல்லி, மணியிடம் அவள் பேசும் இரண்டு, மூன்று மணிநேர உரையாடல்கள் அவள் அம்மாவுக்குத் தெரியவர... வீட்டில் வந்து அவனைப் பேசச்சொன்னார்கள். 'சினிமாதான் என்னுடைய கனவுனு சொல்லிடாத!' என்று தடுத்தவள், எப்படிப் பேச வேண்டும்? என்ன பேசவேண்டும்? என்பதை மணிக்கு ஒருநாள் முழுக்க பாடமாகவே எடுத்தாள்... மணி வேலை பார்த்த பத்திரிகை அவர்களுடைய தாத்தாவுக்கு ரொம்பப் பிடிக்குமாம். இந்த ஒரு தகுதியைவைத்தே... தாரளாமகப் பொண்ணு கொடுக்கலாம் என்று சிம்பிளாக சீன் வைத்தார்கள். சரண்யா தற்போது சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறாள். இப்போது மணியால் நிறைய படங்கள் பார்க்க முடிவதில்லை. ஆனால், சரண்யா மணிக்கு நேரெதிராக மாறிவிட்டாள். தினம் ஒரு சினிமா பார்த்து, அந்தக் கதையை அவனுக்கு விவரிக்கிறாள். 'ஆக்சுவலா, இந்த சீனை இப்படி எடுத்திருக்கவே கூடாது' என விமர்சனம் வைக்கிறாள். மொக்கையான ஒரு படத்தைத் திணித்து, 'இந்தப் படத்தைப் பார்த்துடு. அப்போதான், எப்படியெல்லாம் சினிமா எடுக்கக்கூடாதுனு கத்துக்கமுடியும்!' என்கிறாள். சினிமா குறித்து நிறைய பேசும் சரண்யாவின் எப்போதும் அணை போட நினைக்கமாட்டான் மணி. சரண்யாவின் சினிமா உரையாடல் நீர்வீழ்ச்சியைப் போல ஒழுங்கோடு இருக்கும். அந்த ஃப்ளோ வேறு சில சிந்தனைகளை ஊற்றெடுக்க வைக்கும் என்பது மணியின் நம்பிக்கை. அப்படித்தான் அன்றும் பேச ஆரம்பித்தனர். '' 'பிசாசு' செம படம் டா. குடிகாரனைத் திருத்துது. தப்பு செய்தவனை தண்டிக்குது. ஆனா, சாவுறதுக்கு காரணமா இருந்த ஹீரோவை எதுவுமே பண்றதில்ல... அவன் அம்மாவை காப்பாத்தி, அவன் சாகக்கூடாதுன்னு தடுக்குது'' ''அட... ஆமாம்ல...'' மணிக்கு சின்ன ஸ்பார்க் அடித்தது. எதையோ கண்டுபிடித்துவிட்டதைப் போல வெற்றித் தொனியில் பேசினான். ''இந்த கார் விபத்தை எங்கேயாவது பார்த்த ஞாபகம் இருக்கா...'' ''இல்லையே மணி'' ''சரி. இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவினால் தொட்டிலைக் கட்டி வைத்தேன் பாட்டு ஞாபகம் இருக்கா?'' ''இருக்கு. நீதிக்கு தலைவணங்கு. எம்ஜிஆர், லதா, நம்பியார் நடிச்ச படம்.'' ''கரெக்ட். ப.நீலகண்டன் டைரக்ஷன்ல வெளிவந்த படம். கதை என்ன?'' ''எம்ஜிஆர் பணக்கார வீட்டுப் பிள்ளை. ரொம்ப ஃப்ரீக்கியா இருப்பார். எதையும் பெருசா எடுத்துக்காம ஜாலியா இருப்பார். அசால்ட்டா பயங்கர வேகத்துல கார் ஓட்டுவார். ஒரு நாள் எம்ஜிஆருக்கும், நம்பியாருக்கும் கார் பந்தயம் நடக்குது. அதுல ஆடுகள் செத்தாலும் பரவாயில்லைன்னு நம்பியார் வேகமா கார் ஓட்டுறார். எம்ஜிஆர் தான் யாருக்கும் எந்த தீங்கும் செய்யாதவாராச்சே. அவர் ஆடு, மாடுகளுக்கு எல்லாம் வழி விட்டு கார் ஓட்டி வழக்கம்போல ஜெயிக்கிறார். ஜெயிச்ச உடனே ரெண்டு மனுஷங்களை கவனிக்காம வண்டி ஓட்டினியேன்னு நம்பியாரை அடிக்கிறார்.'' ''நிறுத்து.'' ''என்னாச்சு?'' ''இந்த கார் தான் பிசாசுவோட முக்கிய களம். எம்ஜிஆர் படத்துல யார் ஓட்டின காரால விபத்து நடந்ததுன்னு சொல்லலை. ஆனா, எம்ஜிஆர் தான் ஓட்டினதா சொல்றாங்க. தப்புக்கு பிராயச்சித்தமா பாதிக்கப்பட்ட குடும்பத்துக்காக உழைக்க நினைக்கிறார் எம்ஜிஆர். இதான் பிசாசுவோட கதையும். கொஞ்சம் கலைச்சுப் போட்டு இருக்காங்க.'' ''என்ன மாமா, இப்படி பின்ற? இதை நான் யோசிக்கவே இல்லையே!'' ''இன்னும் இருக்கு கேளு. அப்புறம் எம்ஜிஆர் லதா வீட்லயே சமையல்காரனா ஆகுறது. அப்புறம் அப்பா பெருமைப்படுற மாதிரி நடந்துகிட்டது. அப்புறம் காதலியைக் கரம் பிடிக்குறது படம். இந்த லைன் தான் பிற்காலத்துல ரஜினி நடிப்பில் 'தம்பிக்கு எந்த ஊரு படமா' மறுஆக்கம் ஆகியிருக்கு.'' ''ம்...'' ''இன்னும் சொல்லவா? கார் பந்தயத்துல நம்பியாரே தப்பு பண்ணி இருக்கலாம். ஆனா, நண்பனுக்காக பழியை ஏத்துக்குறதும் ஹீரோயிஸம்தானே. அதான் சசிகுமார் நடிச்ச 'சுந்தரபாண்டியன்''' ''அப்புறம் 'தென்மேற்குப் பருவக்காற்று'ம், 'குட்டிப்புலி'யும் பார்த்திருக்கியா?'' ''பார்த்திருக்கேன்.'' ''ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?'' ''நீயே சொல்லிடேன். '' ''பையன் வாழ்க்கைக்காக தன் உயிரையே கொடுக்குற அம்மாவோட தியாகம்தான் கதை. ரெண்டுலயும் அம்மா சரண்யா பொன்வண்ணன் தான். ''ஆமாம்..'' '''ஆசை', 'வாலி' ரெண்டும் ஒரே படம்தான். மச்சினி மேல ஆசைப்படற அக்கா கணவனோட கதை 'ஆசை'. தம்பி மனைவி மேல ஆசைப்படற அண்ணன் கதை 'வாலி'. 'ஆசை' படத்துல இரட்டை வேடங்கள் இல்லை. 'வாலி'யில இரட்டை வேடங்கள். ரெண்டுமே அஜித் நடிச்ச ஹிட் படங்கள். இது இப்படியும் நடந்திருக்கலாம். இல்லை தற்செயலா கூட நடந்திருக்கலாம். ''சரிதான் மாமா. எனக்கு ஒரே ஆசைதான். பாலாஜி சக்திவேலுக்கு அவர் மனைவி கலாநிதி தான் எல்லாமேன்னு படிச்சிருக்கேன். அவர் கஷ்டப்பட்ட காலத்துல துணையா இருந்து பேராசியர் வேலையில கிடைக்குற சம்பளத்தை வெச்சு குடும்பப் பொறுப்பை கவனிச்சுக்கிட்டாங்க. அதனால்தான் அவரால 'காதல்', 'வழக்கு எண்' மாதிரி தரமான படங்களைக் கொடுத்து, தேசிய விருது பெற்ற இயக்குநரா ஜெயிக்க முடிஞ்சது. உனக்கும் எல்லாம் கிடைக்கணும் மாமா. அதை நான் பக்கத்துல இருந்து பார்க்கணும்'' என்றாள். மணி நெக்குருகிப் போனான். இன்னும் சினிமாவுக்கே போகலையே.. என மணிக்கு வருத்தம் இருந்தது. ''கல்யாணம் பண்ணிக்கிட்டாதான், நீ சினிமாவுக்குள்ள ஈஸியாகப் போகமுடியும். தாலி கட்டுறவரைக்கும் வேலையில இரு. அப்புறம் சினிமாவுக்குப் போயிடு!'' என்பது, சரண்யாவின் பதில். 'எனக்கு நல்ல ஃபிரெண்ட், காதலன், கணவன்... மூணுமே நீதான்!' என அடிக்கடி சரண்யா மணியிடம் சொல்வாள். அவளுக்கு என்ன பிடிக்கும்? என்னவாக ஆசைப்படுகிறாய்? என ஒருமுறை கேட்டான். 'ரோட்டுல திரியிற வயசானவங்களைப் பார்த்துக்க ஒரு இடம் கட்டணும். அனாதைக் குழந்தைங்களுக்கு ஒரு ஸ்கூல் கட்டி, அதுக்கு நான் டீச்சரா இருக்கணும்!' என்று சொல்லியிருக்கிறாள். அதை நிச்சயம் நிறைவேற்ற வேண்டும் என்பது மணியின் ஆசை. சரண்யா 'சிக்குபுக்கு' படத்தின் பேப்பரில் கே.ஜி. மணிகண்டன் என திருத்தி எழுதியது எனக்கு 'அழகிய தீயே' படத்தை நினைவூட்டியது. ராதாமோகன் இயக்கிய முதல் படம் 'அழகிய தீயே'. பிரசன்னாவும், சிறப்புத் தோற்றத்தில் நடித்த பிரகாஷ்ராஜூம் நடிப்பில் பின்னி இருப்பார்கள். நவ்யா தமிழில் அறிமுகமான முதல் படம் இது. விழிகளின் அருகினில் வானம் என்ற பாடலில் 'மனம் விரும்புதே உன்னை' படத்தின் போஸ்டரைக் காட்டுவார்கள். அதில் சிவசந்திரன் என்று பெயர் இருக்கும். நவ்யா சிவ என்பதை மட்டும் தன் கைகளால் மறைத்துவிட்டு சந்திரன் என்பதை பிரசன்னாவுக்கு தெரியும்படி காட்டுவார். அதைப் பார்த்து பிரசன்னா சின்னதாக புன்னகையை சிந்துவார். (படத்தில் பிரசன்னாவின் பெயர் சந்திரன்.) இதுவேதான் மணி - சரண்யா காதலிலும் நடந்தது. நவ்யாவின் படிப்புக்கு ஃபீஸ் கட்ட சென்டிமென்ட் சைக்கிளை விற்பார் பிரசன்னா. இங்கே மணிக்காக சென்டிமென்ட் உண்டியலை உடைக்கிறார் சரண்யா. உதவி இயக்குநரின் வறுமையையும், வெறுமையையும் சொன்ன 'அழகிய தீயே' படத்தையும், குறும்பட இயக்குநராகவும், அதே சமயத்தில் பத்திரிகை நிறுவனத்தில் வேலை பார்க்கும் மணியையும் என்னால் பிரித்துப் பார்க்க முடியவில்லை. கேரக்டர் உட்பட பிரசன்னாவும், மணியும் வேறு வேறு நபர்கள் அல்ல. 'அழகிய தீயே' அந்த விதத்தில் சிலிர்ப்பான நாஸ்டாலஜியை உருவாக்கிவிட்டது. 'அழகிய தீயே' கதை இதுதான். எல்லா வசதிகள் இருந்தும் அப்பா, அண்ணனின் அடிதடி, வெட்டுக்குத்து பிடிக்காமல் சுயமாக தான் உழைத்து சம்பாதிக்க வேண்டும். சுதந்திரமாக தன் கனவுகளை நிறைவேற்ற வேண்டும். தன் வாழ்க்கைத் துணையை தனக்கு ஏற்றார் போல தேர்ந்தெடுக்க வேண்டும் என நினைக்கிறார் நவ்யா. அப்பா பிரமிட் நடராஜன் லண்டனில் இருக்கும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் பிரகாஷ்ராஜை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துகிறார். மாட்டேன் என்று சொன்ன நவ்யாவுக்கு அடியும், கண்ணீருமே பரிசாக கிடைக்கிறது. தோழியின் அண்ணன் ரமேஷிடம் உதவி கேட்கிறார் நவ்யா. ரமேஷ் உதவி இயக்குநராக இருக்கும் பிரசன்னாவை அறிமுகப்படுத்துகிறார். பிரசன்னா, குமரவேல், பாலா, ஜெயவர்மா என்று நான்கு பேரும் வாடகை வீட்டில் குடியிருக்கிறார்கள். ஜெயவர்மா பாடி பில்டர். நடிகனாக ஆசைப்படுகிறார். குமரவேல் 'காதலிக்க நேரமில்லை' படத்துக்குப் பிறகு நல்ல காமெடிப் படம் வரவில்லை. அந்த காமெடிப் படத்தை தன்னால் மட்டுமே கொடுக்க முடியும் என்று நம்புகிறார். பாலா பார்க்கிற பெண்களை எல்லாம் காதலிக்கும் இன்னொரு உதவி இயக்குநர். பிரசன்னா நவ்யாவுக்கு உதவுவதாக உறுதி கொடுக்கிறார். தானும், நவ்யாவும் காதலிப்பதாக பிரகாஷ்ராஜிடம் பொய் சொல்கிறார். ஆரம்பத்தில் கோபப்படும் பிரகாஷ்ராஜ் இருவரும் காதலிப்பதாக நினைக்கிறார். நவ்யாவை வேண்டாம் என்று சொல்லி தன் திருமணத்தை நிறுத்திவிடுகிறார். பிரச்சினை முடியவில்லை. நவ்யாவுக்கு இன்னொரு மாப்பிள்ளை பார்க்கிறார் பிரமிட் நடராஜன். நிலைமையின் தீவிரம் உணர்ந்து பிரகாஷ்ராஜ் பிரசன்னா, நவ்யாவை காரில் அழைத்துச் செல்கிறார். அந்த கார் ரிஜிஸ்டர் ஆபிஸில் வந்து நிற்கிறது. திருமணம் நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக சொன்ன பொய் இப்படி திருமணப் பதிவு வரை கொண்டுவந்து விட்டதே என்று பிரசன்னா பிரகாஷ்ராஜிடம் உண்மையை சொல்ல நினைக்கிறார். ஆனால், நவ்யா கையெழுத்து போடச் சொல்கிறார். நவ்யாவுக்கும், பிரசன்னாவுக்கும் பதிவுத் திருமணம் நடக்கிறது. பிரகாஷ்ராஜ் தன் வீட்டை திருமணப் பரிசாக கொடுத்துவிட்டு லண்டன் சென்றுவிடுகிறார். எலியும் பூனையுமாக சண்டைபோடும் பிரசன்னாவும், நவ்யாவும் ஒரு கட்டத்தில் நண்பர்கள் ஆகிறார்கள். நவ்யா மேல் பிரசன்னாவுக்கு காதல் பூக்கிறது. அதை சொல்ல தயங்குகிறார். நண்பன் பாடிபில்டர் ஜெயவர்மா, பிரசன்னாவுக்கு தைரியம் கொடுக்கிறார். ஆனால், நவ்யாவிடம் பிரசன்னா காதலை சொல்லவில்லை. ஜெயவர்மா விபத்தில் இறந்துவிடுகிறார். அதற்குப் பிறகே, பிரசன்னா தயாரிப்பாளரிடம் கதை சொல்லி அட்வான்ஸ் வாங்குகிறார். ஜெயவர்மா இப்போது இல்லையே என ஃபீல் பண்ணுகிறார். நவ்யாவுக்கு பெங்களூரில் வேலை கிடைக்கிறது. அவர் பெங்களூர் செல்ல தயாராகிறார்.. நவ்யா பிரசன்னாவிடம் இருந்து விடை பெற்று ஆட்டோ ஏறிச் செல்கிறார். அடுத்த நிமிடமே ஓடிவருகிறார். சாவியை எடுத்துட்டுப் போய்ட்டேன் என்று சொல்லி, பிரசன்னா கையில் கொடுக்கிறார். அப்போது பிரசன்னாவின் விழிகளில் கண்ணீர் எட்டிப் பார்க்கிறது. நவ்யாவும் பிரசன்னாவும் மாறி மாறிப் பார்க்கிறார்கள். பிரசன்னாவுக்கு முன்பு வந்த அந்த பூம் நவ்யாவுக்கு வருகிறது. இருவரும் இணைகிறார்கள். பிரசன்னா, பிரகாஷ்ராஜ், எம்.எஸ். பாஸ்கரின் கதாபாத்திர வடிவமைப்பு படத்தில் கன கச்சிதம். சினிமாவை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனை தெய்வமாக வணங்குபவர் பிரசன்னா. 'சினிமாவுல கூட ஒருத்தரை ஒருத்தர் ரத்தம் வர்ற மாதிரி அடிக்கிறது எனக்குப் பிடிக்காது' என்று சொல்லும் பிரசன்னாவின் வார்த்தைகளில் இருந்தே அவரின் மென்மையான கதாபாத்திரத்தை புரிந்துகொள்ளலாம். ஹவுஸ் ஓனர் எம்.எஸ். பாஸ்கர் போலீஸாக நடிக்க யுனிஃபார்மில் வருவது காமெடி அத்தியாயம். ''உன் நம்பிக்கையை வெச்சு ஒரு டம்ளர் டீ வாங்க முடியுமா?'' ''உன்னை மாதிரி பிச்சைக்காரன் கிட்ட நான் தோத்துப் போகணுமா?'' ''என் எதிரியா இருக்க உனக்கு தகுதி இருக்கா?'' என பிரசன்னாவிடம் வெடிக்கும் பிரகாஷ்ராஜ் பின்பு 'நீ என் தம்பி டா' என உருகுவது ரசனை. விஜியின் வசனங்கள் படத்துக்கு கூடுதல் படம் என்பதை சொல்லியே ஆக வேண்டும். ''அண்ணாச்சி மண்டை வேர்க்கும்போது என் கண்ணு வேர்க்குது.'' 2004ல் வந்த இந்த வசனம் 2014ல் வெளியான 'ராஜா ராணி'யில் 'நான் ஒண்ணும் அழல. கண்ணு வேர்க்குது 'என பரிமாணம் (?!) அடைகிறது. சைக்கிள் விற்ற பிரசன்னா ''ஒரு பாக்கியலட்சுமி இல்லன்னா இன்னொரு ஜோதிலட்சுமி'' என்று நவ்யாவிடம் சொல்வார். இதுவே 'தலைநகரம்' படத்தில் த்ரிஷா இல்லனா திவ்யா என்று மாறி இருக்கலாம். "ஒருத்தனோட கனவை குறை சொல்லுற உரிமை யாருக்கும் கிடையாது" , "நம்மை சுத்தி நாலு நல்லவங்க இருந்தா போதும் அதை விட பெரிய ஆசிர்வாதம் எதுவும் கிடையாது" "கறந்த பால், அதிகாலை பனித்துளி , குழந்தையின் சிரிப்பை போல காதலும் புனிதமானது" போன்ற வசனங்களில் விஜி உணர்வுகளைக் கடத்தி இருக்கிறார். தமிழ் சினிமாவின் அச்சு பிச்சு காதலை சட்டயர் பண்ணும் வசனங்களும் படத்தில் உண்டு. ''கண்ணைப் பார்த்தவன், கொலுசைப் பார்த்தவன், 12 B பஸ்ல பார்த்தவன், மவுண்ட் ரோட்ல நிர்வாணமா ஓடுறவன் லாம் காதலிக்கிறான்.'' "ஏன் காதலை அவ கிட்ட சொல்ல மாட்டேன்ற. சினிமால காதலை சொல்லாத முரளி கூட இப்ப வர்ற படங்கள்ல தன் காதலை சொல்லிடறார்." ''வித்தியாசமா படமெடுத்தா உன்னை மாதிரி 4 பேர் திருட்டு விசிடில தான் படம் பார்க்கிறாங்க.'' ''சினிமாவுல வில்லன் பொண்ணு ஹீரோயினாதானே இருக்கும். இது வில்லியாவே இருக்கு.'' ''பீரியட் ஃபிலிம். 3 நாள்தான் ஷுட்டிங்.'' * ''ஹீரோவுக்கு கதை சொல்ல போனியே என்னாச்சு?'' ''அவங்க அக்கா பையனுக்கு அஞ்சாங்கிளாஸ் பரீட்சை முடியலையாம்.'' ''அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?'' ''அந்த பையன் தான் கதையை ஓகே பண்ணனுமாம்.'' ''உலகத்துலயே தமிழ்நாட்ல மட்டும் தான் டா ஜெராக்ஸ் காப்பிக்கு கூட கை தட்டுவான்.'' இப்படி வசனங்களிலேயே சினிமா கிழித்து தொங்கவிட்டு காயப் போட்டு இருப்பார்கள். ஆனால், அது எந்த நெருடலையும் ஏற்படுத்தாமல் சாமர்த்தியமாக பயன்படுத்தப்பட்டிருக்கும். * நிற்க! மணிக்கு தெய்வபக்தி அவ்வளவாய் கிடையாது. ஆனால், சரண்யாவின் ஆசைக்காக அவ்வப்போது கோயிலுக்குப் போவதுண்டு. அவர்கள் பெரும்பாலும் பேசிக்கொண்ட கடவுள் பிள்ளையாரைப் பற்றித்தான். அவர்கள் திருமணம் வருகிற விநாயகர் சதுர்த்தி அன்று நடைபெற உள்ளது. அடுத்த மாதத்திலேயே மணிக்கு ஒரு பைக் வாங்கித் தர சரண்யா முடிவெடுத்திருக்கிறாள். மணி பஸ்ஸிலும், ஷேர் ஆட்டோவிலும் அலையக் கூடாதென்று மாதம் மாதம் சீட்டு கட்டுகிறாள். அந்த சீட்டு பணம் மணி பைக்கில் சென்று கெத்தாக சினிமாவில் சேர வேண்டும் என்பதுதான். இப்போது அழகியல் குறும்படத்தை பெரிய அளவில் திரையிட முடிவெடுத்திருக்கிறான் மணி. அண்ணாசாலையில் உள்ள ஓர் அலுவலகத்தில் கள்ளம் கபடம் இல்லாமல் 5 அடியில் புன்னகையை சிந்தியபடி ஒருவனைப் பார்த்தால் யாரென்று ரொம்ப யோசிக்காதீர்கள். அவன் மணிதான். அவனிடம் அட்வான்ஸ் வாழ்த்துகள் சொல்லிவிடுங்கள். ஆனால், பைக் விஷயம் நமக்குள் மட்டும் ரகசியமாக இருக்கட்டும். * மான்டேஜ் மனசு இன்னும் சுழலும்... http://tamil.thehindu.com/opinion/blogs/மான்டேஜ்-மனசு-12-காதல்-கடத்தும்-அழகிய-தீ/article8140591.ece?ref=relatedNews
 9. ஆனந்தியும் அவனும் 'தனி'த்துவ காதலும்! என் மௌனத்தைப் புரிந்துகொள்கிறாய் என் அமைதியையும் மகிழ்ச்சியையும் ரசிக்கிறாய் என் அழுகையைச் செவிமடுக்கிறாய் என் விம்மலைக் கூர்ந்து கவனிக்கிறாய் என் பதற்றத்தை உணர்ந்து கொள்கிறாய் நிராகரிக்கப்பட்டு வலியில் துடிப்பதை உணர்ந்து பதறுகிறாய் ஒவ்வொரு முறையும் நேசித்தவர்களால் நேசிக்கப்பட்டவர்களால் கைவிடப்படுகையில் எனக்காக கண்ணீர் சிந்துகிறாய். எல்லாமும் நிகழ்ந்தேறுகிறது வெகுதூரத்தில் இருந்தபடியே. நிச்சயமாகச் சொல்கிறேன் என் வார்த்தைகளை உன்னால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். நான் பரிபூரணமாக நம்புகிறேன் என் ஆன்மாவை உன்னால் மட்டுமே முத்தமிட முடியும். - மனுஷி மழை ஓய்ந்த மாலை நேரம். அலுவலக வேலை முடிந்து அறைக்குக் கிளம்பத் தயாராகும் தருணத்தில் தற்செயலாக நண்பனின் பதவி உயர்வு ஸ்டேட்டஸை முகநூலில் பார்த்து மகிழ்ந்தேன். செல்பேசியில் அழைத்து வாழ்த்து சொன்னேன். அவனைப் பார்த்தே சில ஆண்டுகள் ஆனதை பேசும்போதுதான் உணர முடிந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகே இருவருக்கும் அலைவரிசை ஒத்துப்போனதும் சரளமாக பேசத் தொடங்கினோம். பொறுப்பான பதவி, 50 ஆயிரம் சம்பளம், இத்தனை வருட உழைப்புக்குப் பிறகு கிடைத்த நியாயமான அங்கீகாரம் என்று நண்பன் உற்சாகத்துடன் பேசிக்கொண்டிருந்தான். ஆனந்தியைப் பற்றி கேட்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பம் அந்த நேரத்தில் வந்து தொலைத்தது. தவறாக எதுவும் எடுத்துக்கொள்ளமாட்டான் என்ற எண்ணத்தை நானாக வரவழைத்துக்கொண்டு கேட்டேவிட்டேன். சின்ன மௌனத்துக்குப் பிறகு அவனே தொடர்ந்தான். ''மிரட்டுற மழையில சென்னையே மூழ்குதுன்னு டிவியில பார்த்ததும் போன் பண்ணிப் பேசுனா. ரெண்டு நாளா போன் பண்ணிக்கிட்டே இருந்தாளாம். நெட்வொர்க் பிரச்சினை இருந்ததால எந்த அழைப்பும் போகலைன்னு சொன்னா. அப்புறம் நலம் விசாரிச்சுட்டு வெச்சிட்டா.'' ''ஏன் மச்சான். அதுக்குப் பிறகு நீ எதுவும் கேட்கலையா.'' ''இல்லை.'' ''அதான் ஏன்?'' ''என்னோட டீச்சர் வேலைக்கு இன்னொரு கல்யாணம் செட்டாகாதுன்னு ஏற்கெனவே சொல்லிட்டா மச்சி'' ''அது தெரிஞ்சுதானே லவ் பண்ணா.'' ''முடியும், முடியாது ரெண்டு பதில்தான் டா இருக்கு. உணர்வுபூர்வமான விஷயங்கள்ல லாஜிக் பார்க்க கூடாது. விவாதமும் பண்ண முடியாது டா.'' ''சரி மச்சான். வேலையை நல்லா பாரு'' என்று சம்பிரதாயமாகப் பேசி வைத்துவிட்டேன். பேசி முடித்த பிறகும் அவன் குறித்த நினைவுகள் கரையைத் தொடும் அலை போல மீண்டும் மீண்டும் வந்து போனது. சூழலும் சூழல் நிமித்தமுமாக திருமணத்துக்குப் பின் மலரும் புது பந்தம் குறித்த பல கேள்விகளையும் பதில்களையும் சொல்லும் இந்த அத்தியாயம் என்று நம்புகிறேன். முதலில் அவனை அறிமுகப்படுத்திவிடுகிறேன். அவனை நான் ஒரு கல்லூரிப் பேச்சுப் போட்டியில்தான் சந்தித்தேன். தமிழிலக்கியம் படிக்கும் மாணவனாக அறிமுகமானான். போட்டிகளில் எப்போதும் வெற்றி அவனுக்குதான் அதிகம் கிடைக்கும். புத்தகமோ, கோப்பையோ, பணமோ எல்லா பரிசுகளும் என்னை எடுத்துக்கோ எடுத்துக்கோ என அவனிடம் கெஞ்சிக் கொண்டிருக்கும். அவம் அதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் எளிமையாகப் பழகுவான். அவன் கள்ளம் கபடமில்லாத சிரிப்பே எங்களை நண்பர்களாக்கியது. என்னை விட வயதில் மூத்தவன்தான். ஆனாலும், மச்சான், மாமா என்று அழைத்தால் போதும். அலாதி பிரியத்துடன் அன்பைக் கொட்டுவான். பேராசிரியராகப் போக வேண்டியவன் எதிர்பாராத விதமாக யு டர்ன் அடித்து பத்திரிகைத் துறையில் சேர்ந்துவிட்டான். என்னாச்சு என கேட்டால், எழுத்தின் மீதான காதலும் சமூகம் மீதான பிரக்ஞையுமே இந்த மடைமாற்றத்துக்குக் காரணம் என்று விளக்கம் சொல்லி கண் சிமிட்டினான். எத்தனையோ பேரின் இதயங்களைக் கொள்ளை கொண்ட அவன் பேச்சாற்றல் அவன் மனைவியிடம் எடுபடவே இல்லை என்பதுதான் ஆகப் பெரிய சோகம். நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் மனைவிக்கும், அவனுக்குமான புரிதல் மிகப் பெரிய பள்ளத்தாக்காக விரிந்து கிடந்தது. யாரையும் புண்படுத்தக்கூடாது, அதட்டிப் பேசக்கூடாது, இருக்குறதை பகிர்ந்துக்கணும், இல்லாதவங்களுக்கு உதவணும், இலவச நூலகம் அமைக்கணும், உச்சபட்சமாக இலவச கல்லூரிக் கல்வி தரும் அளவுக்கு உயரணும் என்று தன் மனைவியிடம் எதிர்கால திட்டங்களை அடுக்கினான். ஆரம்பத்தில் எந்த மறுப்பும் சொல்லாத அவன் மனைவி தேவி அதற்குப் பிறகு விமர்சனம் செய்ய ஆரம்பித்ததில் தொடங்கியது பிரச்சினை. ''தனக்கு மிஞ்சின பிறகுதான் தானமும் தருமமும். முதல்ல நாம பெருசா வளர்வோம். நிறைய சம்பாதிப்போம்'' என்றாள். ''நம்ம மனசு சீக்கிரம் எதுலயும் திருப்தி அடையாது. காசு சேர்க்க ஆரம்பிச்சிட்டா இன்னும் இன்னும் சேர்க்கணும்னு ராட்சத பூதம் மாதிரி கேட்டுக்கிட்டே இருக்கும். நல்ல விஷயத்தை இப்போ தள்ளிப்போட்டா எப்பவும் பண்ண முடியாது'' என்றான். அப்போது ஆரம்பித்த சின்ன சின்ன சங்கடங்களும், பிரச்சினைகளும் பிரிவுக்கே வழிவகுக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவே இல்லை. நானும், நண்பர்களும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் நண்பனின் மனைவி பிறந்தகம் சென்றுவிட்டாள். நாங்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் தேவி கேட்கவேயில்லை. ''உங்க ஃப்ரண்ட் எப்படின்னு உங்களுக்குத் தெரியாதா? அவர் பிராக்டிகலாவே இல்லை. ஏதோ பழைய காலத்து மனுஷன் மாதிரி சிந்திக்குறார். பேசுறார். என்னோட ஆட்டிடியூட் வேற. இது சரியாகும்னு தோணலை. ஆறு மாசத்துல கணக்கே இல்லாம சண்டை போட்டிருக்கோம். அவர் கூட சண்டை போட்ட பிறகு அவரை நினைச்சா பாவமா இருக்கும். ஆனா, நான் நினைச்ச வாழ்க்கை எனக்குக் கிடைக்கலையே. அவர் மாற வேணாம். நானும் மாறத் தயாரா இல்லை. பிரிவுதான் சரியானது'' என்று சொல்லிவிட்டாள். நண்பனின் மாமனாரை சந்தித்துப் பேசலாம் என நினைத்தோம். அவர் முகத்தைப் பார்க்கும் சக்தி எங்களுக்கில்லை. தேவியின் அப்பா தான் நண்பனுக்கு தன் பெண்ணை கொடுக்க மனமுவந்து முன்வந்தார். காரணம், ஊரில் நடந்த திருவிழாவில் நண்பன் ஒரு பட்டிமன்றத்தை ஏற்பாடு செய்திருந்தான். அதில் அவன் தான் நடுவர். எங்கள் குழுதான் பேசியது. அவன் பேச்சைக் கேட்டு சிலாகித்தார். டி.ராஜேந்தர் மாதிரி வரணும்ப்பா என்று வாழ்த்தினார். அப்போதுதான் தெரிந்தது அவர் டி.ஆரின் பரம ரசிகன் என்று. ஞாயிற்றுக்கிழமை ஆனால், சன்டிவி அரட்டை அரங்கத்தைப் பார்க்காமல் எந்த வேலையையும் செய்ய மாட்டாராம். பேச்சாளர் என்பதாலேயே எந்த ஸ்டேடஸும் பார்க்காமல் பெண் கொடுத்தார். ஆனால், இப்படி முடியும் என்று எந்த தகப்பன் தான் எதிர்பார்த்திருக்க முடியும்? மனைவிக்காக பொறுத்துப் பார்த்தவன் பக்கத்து ஊருக்கு குடிபெயர்ந்தான். அம்மாவும், அப்பாவும் சொந்த ஊரிலேயே இருப்பதாக சொல்லிவிட்டதால் அவர்களை கட்டாயப்படுத்தாமல் தனியாக வந்தான். பத்திரிகைத் துறையில் சில சிக்கல்களை கடந்து கொஞ்சம் அவனுக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டான். அப்போதுதான் பக்கத்து வீட்டுக்கு ஓர் ஆசிரியை குடிவந்தார். ஆசிரியை ஆனந்தி வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் தான் ஆகியிருந்தது. ஆசிரியர் தின விழா வந்தது. எல்லா மாணவர்களையும் பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிக்கு தயார்படுத்த வேண்டிய பொறுப்பு ஆனந்திக்கு. வேலைக்கு சேர்ந்த முதல் மாதத்திலேயே பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாதே? அதுவும் பேச்சுப்போட்டி போன்ற என்றால் ஆனந்திக்கு ரொம்ப தூரம். ஆனாலும், மாணவர்களை தயார்படுத்தி பரிசு வாங்க வைப்பதன் மூலம் தன்னை நிரூபித்துவிடலாம் என்ற எண்ணம். என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தவள் ஹவுஸ் ஓனர் ஆலோசனைப்படி பக்கத்து வீட்டு பத்திரிகையாளனின் கதவைத் தட்டினாள். அவன் உதவினான். மாணவர்கள் பேச எழுதிக் கொடுத்தான். மாணவர்கள் நன்றாகப் பேசியதாகவும், ஆனந்தியின் உழைப்பு பாராட்டுக்குரியது என்றும் பள்ளிக்கூடத்தில் பேசிக்கொண்டார்கள். ஆனந்தி அவனுக்கு நன்றி சொன்னாள். எதேச்சையாக வேலை முடித்து திரும்ப வரும்போதோ, உணவருந்தி விட்டு வரும்போதோ ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டால் சினேகமாய் சிரிக்க ஆரம்பித்தார்கள். நாளடைவில் சிரிப்பு பேச்சாக, உரையாடலாக, விவாதமாக பரிமாணம் அடைந்தது. குழந்தைகள் தின விழாவுக்கு மாணவர்களை ஆனந்தியே தயார்படுத்தினாள். ஆனால், இந்த முறை சிக்கல் சிறப்பு விருந்தினர் வழியாக எட்டிப்பார்த்தது. உடல் நலக் குறைவால் சிறப்பு விருந்தினர் வர இயலவில்லை என்று கையை விரித்துவிட்டார். ஒரு மணி நேரத்தில் அவசர விருந்தினர் தேவை. ஆனந்திக்குதான் அந்த பொறுப்பு என்பதால் கையைப் பிசைந்துகொண்டு இருந்தாள். அவன் முகம் நினைவுக்கு வரவே, ஹவுஸ் ஓனரிடம் அவன் செல் நம்பர் வாங்கி பேசினாள். அவன் சிறப்பு விருந்தினராக பள்ளிக்கூடத்தை அலங்கரித்தான். குழந்தைகள் அந்த நாளை அழகாக்கினர். சிக்கலான சமயங்களில் ஆனந்தியின் புத்திசாலித்தனத்தைப் பார்த்து தலைமை ஆசிரியர் பாராட்டினார். சக ஆசிரியர்கள் ஆனந்தியை மெச்சிப் பேசினர். குழந்தைகள் ஆனந்தியைக் கொண்டாட ஆரம்பித்தனர். ஆனந்திக்கும் அவனுக்குமான காதல் மெல்ல அரும்பியது. ஒரு மாலை வேளையில் காபி ஷாப்பில் தன் காதலைச் சொன்னான். ஆனந்தி அழுது வெடித்தாள். திருமணம் ஆகிவிட்டது. கணவர் ராணுவத்தில் பணிபுரிகிறார். அவருக்கு நான் வேலை செய்வது பிடிக்கவில்லை. வேலையை விட்டுவிடச் சொன்னார். நான் முடியாது என்று மறுத்துவிட்டேன். சின்ன சின்ன சண்டைகள், தொடர் சந்தேகங்கள் நீண்டன. என்னால் அவருடன் இருக்க முடியவில்லை. பிரிந்து அம்மா வீட்டுக்கு வந்துவிட்டேன். இரண்டு வருட வலியை சில நிமிடங்களில் சொல்லி முடித்தாள். கண்கள் கலங்கியிருந்தன. அவன் எதுவும் பேசாமல் வீட்டுக்கு வந்துவிட்டான். ஒரு வாரம் கழிந்தது. அடுத்த சந்திப்பில் அவனைப் பற்றி ஆனந்தி கேட்டாள். தனிமையும், வெறுமையும் மட்டுமே என் நண்பர்கள் என்று சொன்னான். கடந்த கால வாழ்க்கையை விவரித்தான். ''நிஜமாத்தான் சொல்றீங்களா?'' என கேட்டாள். 'கற்றது தமிழ்' ஆனந்தி போல கேட்பது அவ்வளவு சுலபமில்லை. ஆனால், இந்த ஆனந்தியின் கேள்வியில் அப்படி ஒரு மனைவி அவனுக்கு இருந்துவிடக்கூடாது என்ற சின்ன எதிர்பார்ப்பு இருந்தது. அதனாலேயே அப்படிக் கேட்டாள். அவன் திருமணம் குறித்துப் பேசினான். ''வேண்டாம்.'' ''உன் கணவன் திருந்தி வர வேண்டும் என காத்திருக்கிறாயா?'' ''இல்லை. அது முடிந்து போனதா, இனி தொடருமா என்று நிச்சயமாக சொல்ல முடியவில்லை. ஆனால், அதை நான் யோசிக்கவில்லை.'' ''வேறென்ன தடை?'' சொல்லத் தயங்கினாள். ''தயக்கம் இல்லாம பேசு.'' ''நீங்க பத்திரிகையாளர். உங்க வட்டத்துல இன்னொரு காதல், இன்னொரு திருமணம் எல்லாம் சகஜம். அதை யாரும் தப்பா பேசமாட்டாங்க. உங்களைச் சுற்றி இருக்குறவங்களும் எந்த கேள்வியும் கேட்காம ஏத்துக்குவாங்க. நான் பாடம் சொல்லித்தர்ற டீச்சர். சின்னதா கீறல் விழுந்தாலும் பெருசு பண்ண்டுவாங்க. ரோல்மாடலாக இருக்க வேண்டிய நீயே இப்படி செய்யலாமான்னு கேட்பாங்க. எனக்காக இல்லாவிட்டாலும், அந்த தப்பான பேச்சுகளைக் கேட்காம இருக்க நான் இப்படிதான் இருக்கணும். மீறினா காயங்களும், வலிகளும் மட்டுமே மிஞ்சும். அதை தாங்கிக்கிற சக்தியும், பலமும் எனக்கில்ல.'' வேலையை விட்டுடு என்று சொல்லத் துடித்தான். ஆனால், சொல்லவில்லை. அவள் முன்னாள் கணவனுக்கும், இவனுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் என்று நினைத்து சொல்லாமல்விட்டான். கொஞ்சம் விம்மல், நிறைய கண்ணீரோடு பிரிந்தார்கள். ஆனந்தியிடம் எதுவும் சொல்லாமல் டெல்லிக்கு செல்ல தயாரானான். அவன் கிளம்ப இரண்டு நாட்கள் இருந்த இடைவெளியில்தான் நீர் இரவில் இதைப் பகிர்ந்துகொண்டான். அவனை என்ன சொல்லியும் என்னால் தேற்ற முடியவில்லை. டெல்லியில் இரண்டாண்டுகள் வேலை செய்துவிட்டு மீண்டும் சென்னைக்கு வந்தான். வந்து ஆறு மாதங்களில் பதவி உயர்வு. இந்த சூழலில்தான் அந்த முகநூல் ஸ்டேட்டஸ். அவனும் ஆனந்தியும் இணையவே மாட்டார்களா? என்ற கேள்வி மட்டும் என்னை துரத்திக்கொண்டே இருக்கிறது. இந்த இடைவெளியில் தோழி உமாஷக்தி கொடுத்த டிவிடியில் 'இன் தி மூட் ஃபார் லவ்' படம் பார்த்தேன். மிக தாமதமாக படம் பார்த்ததற்காக வருத்தப்பட்ட அதே நேரத்தில் ஆனந்தியும், அவனும் என் மனசுக்குள் வந்துபோனார்கள். வாங் கார் வா இயக்கத்தில் வெளியான சீனப் படம் 'இன் தி மூட் ஃபார் லவ்'. திருமணமான ஆணுக்கும், திருமணமான பெண்ணுக்கும் இன்னொருவர் மீது வரும் காதல்தான் கதைக்களம். ஆனால், அதில் எந்த சங்கடமும், ஆபாசமும் இல்லாமல் உன்னதமாகக் காட்சிப்படுத்திய விதத்தில் வாங் கார் வா முக்கியத்துவம் பெறுகிறார். இருவரும் கட்டிப்பிடிப்பதோ, முத்தம் கொடுப்பதோ கூட இல்லாமல் தூய்மையான உணர்வுகளின் பிரதிபலிப்பாக காதல் படத்தைப் பார்க்க விரும்பினால் நீங்கள் 'இன் தி மூட் ஃபார் லவ்' படம் பார்க்கலாம். 1962-ம் ஆண்டு. ஹாங்காங்கில் உள்ளூர் செய்தித்தாளில் முதன்மை ஆசிரியராகப் பணிபுரிகிறார் சௌ. எக்ஸ்போர்ட் கம்பெனியில் செயலாளராகப் பணிபுரிகிறார் சான். இருவரும் ஒரே நாளில் புதிய வாடகை வீட்டுக்கு குடிபெயர்கிறார்கள். ஒரே சமயத்தில் இருவரும் புதிய வீட்டுக்கு பொருட்களை எடுத்துவருவதால், எந்தப் பொருள் யாருடையது? என்பதில் பணியாளர்களுக்கு குழப்பம் வருகிறது. மாறி மாறி 'இது என் பொருள் இல்லை'. 'இது உங்க பொருள்' என மாற்றிக்கொள்கிறார்கள். இரவு நேரத்தில் சாப்பிட நூடுல்ஸ் வாங்க செல்கிறார் சான். சௌவும் அந்த வழியைக் கடக்கிறார். ஒரு நாள் இருவரும் ஒரே சமயத்தில் வீட்டுக் கதவை திறக்கும்போது சினேகமாக புன்னகைத்துக் கொள்கிறார்கள். சௌ சானின் கணவன் பற்றி விசாரிக்கிறார். ''ஜப்பான் கம்பெனிக்கு வேலை செய்யும் விற்பனைப் பிரதிநிதி. என் கணவர் அடிக்கடி வெளியூர் பயணத்திலேயே இருப்பார்'' என சான் சொல்கிறார். ''என் மனைவிக்கும், எனக்குமான வேலை நேரம் வேறு வேறு. அவர் பின்னிரவில்தன் வருவார்'' என்று சௌ சொல்கிறார். ஒரு நாள் ஒரே உணவு விடுதியில் சௌவும், சானும் சந்தித்துக் கொள்கிறார்கள். ''இந்த ஹேண்ட்பேக் நல்லா இருக்கு. என் மனைவிக்கு வாங்கித்தரலாம்னு இருக்கேன். எங்க கிடைக்கும்?'' ''மனைவி மேல அவ்ளோ பிரியமா?'' ''இல்லை. ரெண்டு நாள்ல அவங்களுக்கு பிறந்த நாள் வருது.'' ''என் கணவர் வெளிநாட்ல இருந்து வாங்கிட்டு வந்தார். இங்கே எங்க கிடைக்கும்னு தெரியலை.'' ''சும்மாதான் கேட்டேன்.'' ''இந்த டை உங்களுக்கு நல்லா இருக்கு''. ''என் மனைவி வெளிநாடு போனப்போ வாங்கிட்டு வந்தா.'' ''இந்த மாதிரி ஒரு டை என் கணவர்கிட்டயும் இருக்கு.'' ''உங்ககிட்ட இருக்குற மாதிரி ஒரு பேக் என் மனைவி கிட்டயும் இருக்கு''. ''தெரியும்.'' சௌவின் மனைவியும், சானின் கணவனும் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதை மிக நாகரீகமாக இதை விட வேறெப்படி சொல்ல முடியும்? அதற்குப் பிறகு சௌவும், சானும் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்கள். ''உங்களுக்கு நிஜமாவே கல்யாணம் ஆயிடுச்சா''. ''இல்லை.'' ''உண்மையை சொல்லுங்க.'' ''ஆமாம்.'' ஆனால், சௌ இல்லை என்று சொல்ல வேண்டும். அது பொய்யாக இருக்க வேண்டும் என்று சான் ஆசைப்படுகிறாள். தனிமையைப் போக்க தற்காப்புக் கலை குறித்த தொடர் எழுத உள்ளதாகவும், அதற்கு உதவ வேண்டும் என்றும் சானிடம் சொல்கிறார் சௌ. சானும் சம்மதிக்கிறாள். தொடருக்கான வேலைகள் நடக்கின்றன. வதந்திகள் தவிர்க்க வேறு இடத்துலயே தங்கலாம் என்கிறார் சௌ. நான் வரவேணாம்னா அப்படியே எழுதுங்க என்கிறாள் சான். சௌவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போகிறது. அதை அறிந்துகொண்டு சௌ தங்கியிருக்கும் ஹோட்டல் அறையில் சந்திக்கிறாள். ''நீங்க வருவீங்கன்னு எதிர்பார்க்கல'' என்கிறார் சௌ. ''அவங்க எப்படியாவது இருந்துட்டுப் போகட்டும். நாம அப்படி இருக்க வேணாம்'' என்கிறாள் சான். சில நாட்கள் இரவு நேரமாவதால் சான் தாமதமாக வருவதை வீட்டு உரிமையாளரான வயதான பெண்மணி இனி இப்படி லேட்டா வராதேம்மா. உன் கணவரை வெளியூருக்கு அனுப்பாதே. சேர்ந்து வாழ்றதுதான் வாழ்க்கை என்கிறார். கலங்கிய கண்களுடன் வீட்டுக்கு வரும் சான் அடுத்த நாள் இனி ஹோட்டலில் சந்திக்க வரமாட்டேன் என்கிறாள். இரவு மழையில் தெரு முனையில் வழக்கமான இடத்தில் சௌவும், சானும் சந்திக்கிறார்கள். ''வேலைக்காக சிங்கப்பூர் போறேன்.'' ''இப்போ எதுக்கு அங்கே போகணும்?'' ''நம்மை தப்பா பேசுறாங்களே'' ''அவங்க பேசினா அது உண்மை ஆகிடுமா? அது போய்னு நமக்கு தெரியுமே?'' ''நான் கட்டுப்பாடானவன் தான். ஆனா, உன் கணவர் திரும்ப வரக்கூடாதுன்னு நினைக்கிறேன் நான் எவ்ளோ பெரிய மோசம்?'' ''நீங்க இவ்ளோ சீக்கிரம் காதல்ல விழுவீங்கன்னு எதிர்பார்க்கல.'' ''எங்கே எப்படி ஆரம்பிச்சதுன்னு எனக்கே தெரியலை. எப்படியும் உங்க கணவரை விட்டு நீங்க வரபோறதில்லை. அவரை நல்லா கவனிச்சுக்குங்க. நான் சிங்கப்பூர் கிளம்புறேன்.'' சான் சௌ தோளில் சாய்ந்து குலுங்கி அழுகிறாள். சௌ சானுக்காக ஹோட்டல் அறையில் காத்திருக்கிறான். சான் அந்த அறைக்கு குறிப்பிட்ட நேரத்தில் வர முடியவில்லை. சௌ தனியாக செல்கிறான். சௌ சிங்கப்பூரில் சானின் நினைவுகளோடு இருக்கிறான். ஒரு நாள் அலுவலக தொலைபேசி ஒலிக்கிறது. சௌ பேசுகிறான். சான் சௌவின் குரல் கேட்டுவிட்டு பேசாமலேயே ரிசீவரை வைத்து விடுகிறாள். சௌ தன் அறைக்கு யாரோ வந்து போனதை உணர்கிறான். ஆஷ்டிரேவில் உள்ள சிகரெட்டில் லிப்ஸ்டிக் கறை கண்டு சான் வந்து போனதை கண்டுகொள்கிறான். மூன்று வருடங்களுக்குப் பிறகு வீட்டைக் காலி செய்துவிட்டுப் போன சான் எதேச்சையாக தான் தங்கியிருந்த பழைய வீட்டுக்கு வருகிறாள். சௌ இருந்த வீட்டை கவனிக்கிறாள். அங்கு வேறு ஒருவர் இருப்பதால் கலங்குகிறாள். வீட்டு உரிமையாளரான வயதான பெண்மணி அந்த வீட்டை விற்றுவிட்டு வெளிநாடு போகப்போவதாக சொல்கிறார். விற்கப் போவதாகச் சொன்னதும் சான் தான் அந்த வீட்டை வாங்கிக்கொள்வதாக விருப்பம் தெரிவிக்கிறாள். அந்த வீடு சானுக்கு சொந்தமாகிறது. சௌவும் பழைய வாடகை வீட்டுக்கு வருகிறான். தான் தங்கியிருந்த வீட்டில் இன்னொருவர் இருப்பதைப் பார்த்து தன்னிடம் இருக்கும் பரிசுப்பொருளைத் தருகிறார். பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்? என அவன் கண்கள் தேடுகின்றன. குழந்தையுடன் ஒரு அம்மா இருக்கிறார் என்றதும் பார்க்காமலேயே சென்று விடுகிறார். அங்கே இருப்பது சான் தான் என்பது சௌவுக்குத் தெரியாது. பழைய புத்த மடாலயத்துக்கு சென்று தன் காதல் ரகசியத்தை துளை இருக்கும் சுவரில் சொல்லிவிட்டு அதை புற்களால் மூடிவிட்டு வருகிறான். சௌ, சானை மறக்க முடியாமல் இல்லை. மறக்க விரும்பவில்லை. சௌ கதாபாத்திரத்தில் டோனி லீங், சான் கதாபாத்திரத்தில் மேகி சங் நடித்துள்ளனர். மெல்லிய ஆழமான உணர்வுகளை பிரதிபலித்த விதத்தில் மிக முக்கிய பங்கு இருவருக்குமே உண்டு. சௌ, சான் அடிக்கடி சந்திக்கும் அந்த மாடிப் படிக்கட்டுகள், ஒளி மங்கிய தெரு, தெரு முனையில் இருக்கும் சுவர், ஒரே மாதிரி ஒலிக்கும் வயலின் இசை இவை யாவும் இருவரின் தனிமையையும், வெறுமையையும் பேசுகின்றன. அதுவும் அந்த வயலின் இசை தனிமையின் கழிவிரக்கத்தை உரக்கச் சொல்கிறது. இந்தப் படத்துக்கு முடிவு தெரிந்துவிட்டது. ஆனந்திக்கும், அவனுக்கும் முடிவு தெரியவில்லை. ஆனந்தி இப்போது ஆங்கிலம் சொல்லிக்கொடுக்கும் பட்டதாரி ஆசிரியை. அவன் பத்திரிகையின் துணை ஆசிரியர். இன்று வரை இருவருக்கும் தனிமைதான் துணையாக இருக்கிறது. * மான்டேஜ் மனசு இன்னும் சுழலும்... http://tamil.thehindu.com/opinion/மான்டேஜ்-மனசு-11-ஆனந்தியும்-அவனும்-தனித்துவ-காதலும்/article8042053.ece?ref=relatedNews
 10. சுற்றிச் சுழலும் ரொமான்ஸ்கள்! சுத்தேசி ரொமான்ஸ் படத்தில் சுஷாந்த் சிங், பரினீத்தி சோப்ரா தற்கொலைக்கு முயல மாட்டேன் ஒருபோதும் - நான். அது கோழைகளின் பேராயுதம். நான் ஓட்டிச்செல்லும் இருசக்கர வாகனத்தின் மீது எதிர்வாகனம் எதுவும் வந்து மோதி எனை கொல்லட்டும். * என் பேருந்துப்பயணத்தில்... அதிவேக ஓட்டுநரின் அலட்சியத்தால் அந்த பாலம் பிளந்து பேருந்து சுக்குநூறாகி சிதைந்து அழியட்டும் என்னையும் பலியாக்கி. * நீண்டதூர ரயில் பயணத்தில் நியாயமான கோரிக்கையின்பால் ஒரு புரட்சியாளனின் வெடிகுண்டுவீச்சில் தடம்புரண்டு கவிழ்ந்துவிழும் விபத்தில் பலரோடு சேர்ந்து நிகழட்டும் என் சாவும். * எதேச்சையான விபத்துச்சாவுகளில் செத்துப்போகிற மனமும் வாய்ப்பும் வேண்டி நிற்கிற நான் ஒருபோதும் தற்கொலைக்கு முயலமாட்டேன். தற்கொலையென்பது கோழைகளின் பேராயுதம். பாரதிவாசனின் முகநூல் பக்கத்தில் இக்கவிதையை படித்தபோது மனசு பதறியது. இந்த நேரத்தில் பகவதியை ஏன் நினைத்துக்கொண்டேன் என்பதை இப்போதுகூட என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. பகவதி - என் நண்பர்களில் அதிமுக்கியமானவன். என் ஆளுமையை எனக்கே அடையாளப்படுத்தியவன். நிறைய வருத்தங்களோடும், வடுக்களோடும் காதலைக் கடந்துவந்தவன். இரண்டு காதல்கள் அவனை புரட்டிப் போட்டன. சமயங்களில் இரண்டாவது காதல் குறித்து நானே பகவதியை பகடி செய்திருக்கிறேன். ''காதல் ஒரு ஃபீலிங். அது ஒரு தடவை வந்துடுச்சுன்னா மறுபடியும் மறுபடியும் அதை மாத்திக்கிட்டு இருக்கமுடியாதுனு விஜய்ணா 'பூவே உனக்காக' படத்துல சொன்னாருல்ல... கேட்கமாட்டியா நீ.'' ''அதே விஜய்ணா அடுத்து என்ன சொன்னாரு தெரியுமா?'' ''நீயே சொல்லு?'' ''காதல் சில பேருக்கு செடி மாதிரி. ஒண்ணு போச்சுன்னா இன்னொண்ணு. சிலபேருக்கு அது பூ மாதிரி, ஒரு தடவை பூத்து உதிர்ந்ததுன்னா மறுபடி எடுத்து ஒட்டவைக்கமுடியாது.'' ''அதனால..'' ''விஜய்ணாவுக்கு வேணும்னா காதல் பூ மாதிரி இருக்கலாம். ஆனா, எனக்கு செடி மாதிரி. ஒண்ணு போச்சுன்னா இன்னொண்ணு'' ''புரியலையே...'' ''உனக்கு இன்னொரு முறை நான் விளக்கி சொல்லணுமா? சரி. சுருக்கமா சொல்லவா..'' ''சொல்லித் தொலை.'' ''நான் தல ரசிகன்ங்கிறதை இந்த இடத்துல உனக்கு ஞாபகப்படுத்த விரும்புறேன்...'' விளையாட்டாக சொல்லிவிட்டு ஓடினான். 'பூவே உனக்காக' படத்தில் காதலை நெகிழ்ந்து சொன்ன விக்ரமன் அடுத்தடுத்து வந்த 'உன்னை நினைத்து', 'சூர்ய வம்சம்' படங்களில் இன்னொரு காதலுக்கு இடம் கொடுக்கிறார். இரண்டாவது காதலுக்கு வழிவிடுகிறார். பகவதியின் காதலும் அப்படிப்பட்டதுதான். ஆனால், அதிலும் ஒரு ட்விஸ்ட். காதலியின் உதட்டுச் சிவப்பில் கம்யூனிஸ்ட் கொடியின் நிறத்தைப் பார்த்தார் ரஷ்ய எழுத்தாளர் மாயகோவ்ஸ்கி என்று எங்கேயோ படித்ததாக ஞாபகம். ஆனால், பகவதி ஒரு புரட்சிப் போராட்டத்தில் தன் காதலியை சந்தித்தான். நெல்லையில் பிரபலமான கல்லூரியில் பகவதி விஷூவல் கம்யூனிகேஷன் ஸ்டூடன்ட். கல்லூரியின் அடிப்படை வசதிகளுக்காக ஒரு முறை போராட்டம் நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது. பகவதி தலைமையில் மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். அடிப்படை வசதிகள் இல்லாதது, கட்டணக் குறைப்பு செய்ய வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன் வைப்பது என போஸ்டர் ஒட்டியும், நோட்டீஸ் கொடுத்தும், தொடர் முழக்கமிட்டும் போராட்டத்தை ஆரம்பித்தனர். நிர்வாகம் எதற்கும் அடிபணியவில்லை. மாணவர்கள் உச்ச கட்டமாக உண்ணாவிரதம் இருக்க முடிவுசெய்தனர். கல்லூரி வளாகத்தில் 6 பேர் உண்ணாவிரதம் இருப்பது என முடிவானது. மாணவர்களின் இந்தப் போராட்டத்துக்கு மாணவிகள் யாருமே குரல் கொடுக்க முன்வரவில்லை. பகவதி எத்தனையோ பேரை அழைத்துப் பார்த்தும் ஏமாற்றமே மிஞ்சியது. கடைசி நம்பிக்கையும் பொய்த்துப்போன அந்த தருணத்தில்தான் பத்மினி வந்தாள். முதல் பெண்ணாக வந்து உண்ணாவிரதப் பந்தலில் அமர்ந்தாள். பத்மினியை எங்கேயோ பார்த்த ஞாபகம் வந்தது பகவதிக்கு. தன் ஞாபகக் கிடங்கில் இருக்கிறாளா? என்று அவசர அவசரமாகத் தேடிப் பார்த்தான். சில நிமிடங்களிலேயே அவளை நினைவுகளால் மீட்டெடுத்தான். கல்லூரியில் பெரியார் கட்டுரைப் போட்டி நடந்தது. போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு எழுத தேவைப்படும் தாள்களை கொடுக்கும் பொறுப்பு பத்மினிக்கு வழங்கப்பட்டிருந்தது. போட்டி ஆரம்பித்த 20 நிமிடங்களிலேயே இன்னொரு தாள் வேண்டும் என்று கேட்டான் பகவதி. ஒரு சந்தேகத்துடனேயே பத்மினி தாளைக் கொடுத்தாள். அடிக்கடி போனைப் பார்த்தபடியே எழுதிய பகவதியைக் கண்டு பத்மினி முறைத்தாள். பேராசிரியையிடம் பிட்டு அடிப்பதாக சொன்னாள். பேராசிரியை பகவதியைக் கண்டதும், ''என்னப்பா பிட்டா அடிக்கிற? அப்படி பண்ற ஆள் இல்லையே'' என்றார். ''மேம். நாளைக்கு ஒரு கருத்தரங்கம் வெச்சிருக்கோம். அதுக்கு மற்ற கல்லூரிகளை ஒருங்கிணைக்குற பொறுப்பு எனக்கு. அது சம்பந்தமான மெசேஜ் அதிகம் வர்றதால செல்போன் பார்த்தேன்.'' தப்பா போட்டுக் கொடுத்துட்டோமோ என்ற மிரட்சியுடன் பத்மினி நைஸாக நழுவினாள். பார்த்தியா என் கெத்த என்று சின்னதாய் சிர்த்தபடி பகவதி சென்றான். அந்த பத்மினியா இது? என்று நொடிக்கொருமுறை பத்மினியை நோக்கினான். அவளும் நோக்கினாள். அடுத்தடுத்த போராட்டங்களில் பத்மினி ஆஜாரானாள். இலங்கை பிரச்சினை குறித்து கல்லூரி மாணவர்கள் போராடத் தொடங்கி இருந்த சமயம் அது. நெல்லையில் முதல் பெண்ணாக கல்லூரிக்கு வெளியே வந்து உண்ணாவிரதம் இருந்தாள் பத்மினி. டி.சி கொடுத்திடுவோம். வீட்ல சொல்லிடுவோம். என்று பேச்சுவார்த்தையில் மென்மையாக ஆரம்பித்த கண்டனங்கள் மிரட்டலாக உருவெடுத்த போதும் பத்மினி மாணவர்களுடன் போராடினாள். ''நீ இவ்ளோ தீவிரமா போராட என்ன காரணம்? பத்மினி'' என்று பகவதி கேட்டான். ''தாத்தா, பாட்டி பிறந்து வளர்ந்தது யாழ்ப்பாணத்துலதான். அப்புறம் எப்படியோ தமிழ்நாடு வந்துட்டாங்க. ஆனா, என் பூர்விகத்தை மறக்க முடியுமா?'' என்று தன் வரலாறை ஒற்றை வரியில் சொல்லி முடித்தாள். பத்மினியும், பகவதியும் சினேகம் வளர்த்தார்கள். போன் நம்பர்கள் பரிமாற்றம் செய்யப்பட்டது. தினமும் 750 மெசேஜ், நள்ளிரவு செல்போன் பேச்சு என வழக்கமான காதலர்களின் கொஞ்சல் மொழிக்கு தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். கமல், நயன்தாரா என்று ரசனையைப் பகிர்ந்தனர். ஐ ஹேட் ஆன் ய க்ரஷ் வித் யூ என்று பத்மினி மெசேஜ் தட்டினாள். பகவதியின் ரிப்ளைக்காக காத்துக் கிடந்தாள். தாமதமாகும் ஒவ்வொரு நொடியையும் கடக்க முடியாமல் திணறினாள். இதுக்கு மேல காத்திருக்க முடியாதென்று போன் செய்தாள். ''மெசேஜ் வந்ததா பகவதி?'' ''வந்துச்சு பத்மினி.'' ''ஒண்ணுமே சொல்லலை?'' ''எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை.'' ''எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லு.'' ''தப்பா நினைக்க மாட்டியே.'' ''மாட்டேன்.'' ''க்ரஷ்னா என்ன? நான் டிக்‌ஷ்னரியில தேடிக்கிட்டு இருக்கேன்.'' ''நிஜமா தெரியாதா? விளையாடுறியா?'' ''தெரியாது.'' ''கிண்டல் பண்றியா.'' ''அந்த அளவுக்கு இங்கிலீஷ்லாம் எனக்கு வராது.'' பதற்றம் விலகி, இதழ் விரித்து ஐ லவ் யூ சொன்னாள். பகவதியும் காதலைச் சொன்னான். அதற்கடுத்த 5 நிமிடங்கள் மௌனம் ஆட்கொண்டது. ''ஒண்ணுமே பேசலையே பத்மினி.'' ''இவ்ளோ நேரம் மௌனத்தால பேசிக்கிட்டு இருந்தோமே.'' ஆமாம்ல என்பதுபோல தலையசைத்தான். பெயர் பத்மினி என்று இருந்தாலும் அவள் கிறித்தவப் பெண். அதனால் என்ன? இருட்டு கடை அல்வா கடைக்கு அருகில் உள்ள நெல்லையப்பர் கோயிலுக்கு அழைத்துச் சென்று அவள் நெற்றியில் குங்குமம் இட்டான். ''மறக்க முடியாத நாள் இது. இந்த நாளை எனக்காக ஏற்படுத்திக் கொடுத்ததுக்கு நன்றி'' என்று அழுத்தமாய் முத்தம் பதித்தாள். பத்மினி பகவதிக்கு பீட்ஸாவை அறிமுகப்படுத்தினாள். சூப்பர் மார்க்கெட்டில் காய்கறி வாங்குவது எப்படி? என கற்றுக்கொடுத்தாள். படம் பார்க்க தியேட்டருக்கு சென்றார்கள். படம் முடிந்ததும் நடந்த அந்த உரையாடல் பெரிய ஆச்சர்யம். ''உனக்கு ரொமான்ஸ் பண்ணத் தெரியாதா பகவதி?'' ''ஏன்?'' ''படம் பார்க்கும்போது என் கையைக் கூட தொடலையே.'' ''அதுவா?'' ''சமாளிக்காதேடா...'' ''விடு..''. ''இல்லை... பத்மினி... முரட்டுப்பையனாவே வளர்ந்துட்டேனா... அதெல்லாம் தெரியாது. அட்ஜஸ்ட் பண்ணிக்கோ...'' ''இதான்டா எனக்கு பிடிச்சிருக்கு. இதுக்காகவே உன்னை காதலிக்கலாம்.'' கல்லூரி படிப்புக்குப் பிறகும் இந்தக் காதல் தொடர்ந்தது. பத்மினியின் மாமா பையன் ஒரு பேருந்து நிறுத்தத்தில் பகவதியுடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து விட்டார். போட்டுக்கொடுப்பதுதானே பார்த்ததற்கான அடையாளம். அச்சரம் பிசகாமல் ஓதினார் அந்த நபர். பத்மினிக்கு அவசரமாக கல்யாண ஏற்பாடுகள் நடந்தன. போட்டுக்கொடுத்த அந்த ஆசாமிதான் மாப்பிள்ளை. திருமணத்துக்குப் பிறகு துபாய் செல்வதாக திட்டம். பத்மினி பதறினாள். அம்மாவிடம் மன்றாடினாள். அப்பா இல்லாத பொண்ணு. தப்பா வளர்த்துட்டேன்னு சொல்லாத அளவுக்கு பார்த்துக்கோன்னு எமோஷனலாய் சொன்னார். பத்மினியின் இரு தங்கைகளும் கண்ணீர் வடித்தார்கள். நீ அம்மா சொல்பேச்சை கேட்கலைன்னா அம்மா எதாச்சும் பண்ணிப்பாங்க என்று கல்யாண சம்மதத்துக்காய் பாசத்தை நெய்யூற்றி வளர்த்தார்கள். சூழ்நிலைக் கைதியான பத்மினி குடும்பமே முக்கியம் என்று முடிவெடுத்தாள். என்னை விட்டுடு. மறந்திடு. என்றாள். தன் அப்பாவின் மறைவுக்குப் பிறகு பகவதி அதிகம் துடித்ததும், அழுததும் பத்மினியின் பிரிவுக்குதான். ''என்னை விட்டுப் போகாதே பத்மினி.'' ''எந்த கேள்வியும் கேட்காம உடனே கல்யாணம் பண்ணிக்கோ.'' ''ஒரு வருஷம் மட்டும் வெயிட் பண்ணு. ஐஏஎஸ் பாஸ் பண்ணிடுவேன். அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம்.'' ''செட்டாகாது பகவதி. இதை இத்தோட விட்டுடலாம்.'' பத்மினி தீர்க்கமாக இருந்தாள். பேச்சை குறைத்தாள். மெசேஜ் பண்ணுவதை நிறுத்தினாள். பகவதி கொஞ்சம் கொஞ்சமாக தன்னை இழந்துகொண்டிருந்தான். மதுவுக்கு அடிமையானான். விரக்தியில் புலம்பினான். நண்பர்கள் உடன் இருந்தனர். அவனை அவனுக்கே பிடிக்காமல் போனது. ஐஏஎஸ் கனவையெல்லாம் உதறிவிட்டு பொருளாதார நிலையை சரி செய்ய வேலை தேடினான். சென்னையில் வேலை கிடைத்தது. ஆர்வமாய் செய்தான். ஆனால், பத்மினியை மட்டும் மறக்கவே இல்லை. அந்த தருணத்தில் ஹேமா வந்தாள். சாட்டிங் செய்தாள். ''ஹாய் பகவதி. நல்லா இருக்கீங்களா?'' ''யாரு?'' ''உங்க காலேஜ் தான்.'' ''ஞாபகம் இல்லையே.'' ''என் பேரு ஹேமா. பத்மினியோட ஜூனியர்.'' ''என்ன இப்போ?'' ''உங்க காதல் எனக்கு தெரியும்.'' ''ஹ்ம்ம்ம்.'' ''உங்க ரெண்டு பேரையும் நினைச்சா பெருமையா இருக்கும்.'' ''விஷயத்தை சொல்லு.'' ''சும்மா தான் ...'' இப்படி ஆரம்பித்த ஹேமாவை போகப் போக பகவதிக்குப் பிடித்திருந்தது. அதுவும் ஹேமா பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் பத்மினி இருப்பாள். பத்மினியைப் பேசாமல் ஹேமா இருந்ததே இல்லை. எந்த விஷயத்திலும் பத்மினிதான் டாபிக். அதனாலேயே ஹேமாவிடம் பேசினான். ''என்னை கல்யாணம் பண்ணிக்குறீங்களா?'' சட்டென்று கேட்டாள். ''டைம் கொடும்மா'' என்றான். அதையே சம்மதமாக எடுத்துக்கொண்டாள். ''எப்போ பார்த்தாலும் ஃபேஸ்புக்லயே இருக்கே? யார் கூட பேசிக்கிட்டு இருந்த? இன்னொருத்தி கேட்குதா உனக்கு? அப்போ யார்கூட கடைசியா பேசுனன்னு ஸ்க்ரீன் ஷாட் அனுப்பி வை. வாட்ஸ் ஆப் ல என்ன அது புரொஃபைல் பிக்சர். உடனே மாத்து'' ஹேமாவை சமாளிக்கத் தெரியாமல் பகவதி திணறினான். இந்த இடைவெளியில்தான் நான் சுத்தேசி ரொமான்ஸ் படம் பார்த்திருந்தேன். மேலோட்டமாக பார்த்தால் கிட்டத்தட்ட இதே கதைதான். மணீஷ் ஷர்மா இயக்கத்தில் சுஷாந்த் சிங், பரினீத்தி சோப்ரா, வாணி கபூர் நடிப்பில் 2013-ல் வெளியான படம். அந்த ஆண்டில் டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. சுஷாந்த் சிங் ஜெய்ப்பூரில் வசிக்கும் டூரிஸ்ட் கைடு. வெட்டிங் பிளானர் ரிஷி கபூரிடம் வேலை செய்கிறார். சுஷாந்துக்கு விடிந்தால் திருமணம். ரிஷிகபூர் ஏற்பாடு செய்யும் பேருந்தில் கூட்டத்தோடு பயணிக்கிறார். அதில் பரினீத்தி சோப்ராவும் ஒருவர். நிச்சயிக்கப்பட்ட திருமணம் தனக்கு ஒத்துவருமா? என்ற சந்தேகத்தோடு இருக்கும் சுஷாந்த் சிங் பரினீத்தி சோப்ராவிடம் பேச்சு கொடுக்கிறார். பரினீத்தியின் வெளிப்படையான பேச்சும், சுதந்திரத்தன்மையும் சுஷாந்துக்குப் பிடித்துவிடுகிறது. தம் அடிக்கும் பரினீத்தி சோப்ரா இருக்கை மாறும்போது சுஷாந்த் அவர் கன்னத்தில் பட்டென்று முத்தம் கொடுக்கிறார். பரினீத்தி இங்கிலீஷ் முத்தத்துக்கே இசைகிறார். மறுநாள் காலை திருமணம் நடக்கும் சூழலில் பாத்ரூம் போகணும் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகிறார் சுஷாந்த். திருமணம் நின்று போகிறது. பரினீத்தியை சந்தித்து நீதான் நான் தப்பித்து வரக் காரணம் என்கிறார். இருவரும் சேர்ந்து லிவிங் டூ கெதர் வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள். நாளை திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுக்கும் நேரத்தில் பரினீத்தி எஸ்கேப் ஆகிறார். வருத்தத்தில் ரிஷிகபூரிடம் வருகிறார். அங்கு கல்யாணம் செய்யப் போன சமயத்தில் கழட்டி விட்டு வந்த அந்த மணப்பெண் வாணிகபூரை சந்திக்கிறார். ஆரம்பத்தில் வாணிகபூர் கண்டுகொள்ளாமல் வசை பாடுகிறார். பிறகு நண்பராக பழகுகிறார். அவரிடம் காதலை சொல்ல முயற்சிக்கிறார். ஒரு திருமண விழாவுக்கு வாணிகபூரும், சுஷாந்த் சிங்கும் செல்கிறார்கள். எதிர்பாராவிதமாக பரினீத்தி சோப்ரா அங்கே வருகிறார். கல்யாண வீட்டில் மணமகள் அம்மா ஒரு முக்கிய விருந்தினரை அழைத்துவர சுஷாந்த் சிங்கையும், பரினீத்தி சோப்ராவையும் அனுப்புகிறார். ஒரே காரில் இருவரும் பயணிக்கிறார்கள். அதற்குப் பிறகு வாணிகபூரும், பரினீத்தி சோப்ராவும் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை சாப்பிடுவதை சுஷாந்த் திடுக்கிட்டுப் பார்க்கிறான். சுஷாந்த் பாத்ரூம் செல்கிறான். பரினீத்தியும் பாத்ரூம் சென்று வர இருவரும் சந்தித்துக் கொள்வதை வாணிகபூர் பார்த்து விடுகிறார். இனியும் சுஷாந்த் வாழ்க்கையில் இருக்க வேண்டாம் என வாணிகபூர் விலகி செல்கிறார். பரினீத்தியும், சுஷாந்தும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள். ஆனால், இந்த முறை இருவருமே எஸ்கேப் ஆக திட்டமிடுகிறார்கள். காரணம், அவர்களுக்கு லிவிங் டூ கெதர் வாழ்க்கையே பிடித்திருக்கிறது. வழக்கம்போல் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்கிறார்கள். 'கை போச்சே' படத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புட்டுக்கு இது இரண்டாவது படம். ஜாலியான, குழப்பமான பேர்வழியாகவும், ரொமான்ஸில் பின்னி எடுக்கும் இளைஞர் கதாபாத்திரத்துக்கும் சுஷாந்த் சரியான தேர்வு. பரினீத்தி சோப்ராவின் தைரியமும், துணிச்சலும், தம் அடிக்கும் ஸ்டைலும் ரசிக்க வைத்தது. எந்த பிரச்சினை என்றாலும் கூல்டிரிங்ஸ் குடித்து கூலாவது, சிரிப்போடு பிரச்சினையை எதிர்கொள்வது என்று வாணிகபூர் அறிமுகப்படத்திலேயே அசத்தி இருப்பார். பகவதி வாழ்வில் இதுவேதான் கொஞ்சம் மாறி நடந்தது. ஒரு கட்டத்தில் ஹேமாவே இவன் தனக்கு செட்டாகமாட்டான் என்று பிரிந்து சென்றாள். எதிர்பாராவிதமாக மீண்டும் பத்மினி வந்தாள். "மாமா பையன் சொத்துக்கு ஆசைப்பட்டுதாண்டா என்னை கல்யாணம் பண்ணிக்க பார்த்தான். வீட்ல தெரிஞ்சதும் அப்பவே கல்யாணத்தை வேணாம்னு நிறுத்திட்டாங்க. அப்படி நடந்த உடனே எல்லோரும் உன் விருப்பப்படியே இரும்மான்னு அழுதுகிட்டே சொன்னாங்க. ஆனா, நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். மறுபடியும் உன்னை பார்க்க போறேன். பேசப்போறேன்ங்கிற சந்தோஷம்தான். உனக்கு போன் பண்ணேன். நீதான் வேண்டா வெறுப்பா பேசின. நீ அப்படி பேசினன்னு நான் விட்டுப் போக விரும்பலை. நீயே போன்னு சொன்னாலும் போகாம உன் கூடவே இருக்குறதுதான் நம்ம காதலுக்கு அழகுன்னு இப்போ புரிஞ்சுகிட்டேன்.'' கண்களில் நீர் திரண்டது பகவதிக்கு... ''இப்பவாச்சும் என்னை கல்யாணம் பண்ணிக்கோயேன்.'' ''நான் உனக்குதான்டா. வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் இனி உன்னோடுதான்.'' ஹேமாவைப் பற்றியும் சொன்னான். ''இனிமே என்னைத் தவிர யாரையாவது நினைச்ச அவ்ளோதான்.'' பத்மினி எம்பிஏ முடித்துவிட்டாள். பகவதி சென்னையில் பிரபலமான பத்திரிகை நிறுவனத்தில் நிருபராக இருக்கிறான். இருவரும் கல்யாணத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். மான்டேஜ் மனசு இன்னும் சுழலும்... http://tamil.thehindu.com/opinion/blogs/மான்டேஜ்-மனசு-10-சுற்றிச்-சுழலும்-ரொமான்ஸ்கள்/article7747010.ece?ref=relatedNews
 11. மான்டேஜ் மனசு 9 - காதலுக்கு மரியாதை செய்தவர்கள்! ''எல்லோரோட காதலையும் எழுதுற உனக்கு என் காதல் ஞாபகத்துக்கு வரலையாண்ணே!'' உரிமையுடன் கேட்டான் ஜான். ''அப்படி எல்லாம் இல்லை ஜான்.'' ''என் காதல் எப்படிப்பட்டதுன்னு தெரிஞ்சும் எழுதாம இருக்கீங்க. உன்னதமான காதலுக்கு நீங்க தர்ற மரியாதை இதுதானா? இது நியாயமா? ஒன்பது கிரகத்திலும் உச்சம் பெற்ற ஒருவன் காதலை நீங்கள் கண்டுகொள்ளாமல் போனால், ஆதாம் உங்க கண்ணைக் குத்திடுவார். பார்க்குறீங்களா? பார்க்குறீங்களா?'' என்று சொல்லிச் சிரித்தான். ''இந்த முறை உன் கதை தான்டா'' என்றேன். ''அப்படி வாங்க வழிக்கு'' என்று குதூகலமாய் பேசினான். ஜான் - ஜெனி காதல் நிச்சயம் மகத்தானது. எப்படி என்கிறீர்களா? காதல் என்றால் ஜென்னி. ஜென்னி என்றால் காதல் என்று சொன்னார் காரல் மார்க்ஸ். ஜானைக் கேட்டால் காதல் என்றால் ஜெனி. ஜெனி என்றால் காதல் என சொல்வான். ''என்ன ஒருத்தி காதலிக்கணும் நான் அவள பைத்தியமா காதலிக்கணும் எனக்கு ரெண்டுமே நடந்திடுச்சு..! '' - ஜான் அடிக்கடி சொல்வது இதைத்தான்... ஜான் பிளஸ் 2 படிப்புக்கு குட் பை சொல்ல சில மாதங்களே இருந்தன. சினிமா பார்த்தே கனவுக்குப் பழகியிருந்த ஜானுக்கு ஒரு ஃபேன்டஸி கனவு வந்தது. ஒரு பிளேட்டை தண்ணீர் ஊற்றி கழுவுகிறான் ஜான். அப்போது பிளேட்டில் இருந்து வரும் வெளிச்சம் அறையெங்கும் பரவுகிறது. அந்த வெளிச்சத்தில் இருந்து ஒரு தேவதை வருகிறாள். ஜானுடன் விளையாடுகிறாள். பேசுகிறாள். சிரிக்கிறாள். 'நான் எப்பவும் உன்கூடவே இருப்பேன். உன்னை விட்டு போகவே மாட்டேன்' என்று சத்தியம் செய்யாத குறையாக சொல்கிறாள். ஆனால், கொஞ்ச நேரத்திலேயே காணாமல் போய்விடுகிறாள். மீண்டும் பிளேட் கழுவுகிறான். ஆனால், வெளிச்சமும் வரவில்லை, அந்த தேவதையும் வரவில்லை. மீண்டும் முயற்சி செய்யும்போது அந்த பிளேட் உடைந்து கிடக்கிறது. இது ஜான் கண்ட கனவு. விழியனிடம் இருந்தோ அல்லது விழியன் கதைகள் மூலமோ இதை ஜான் சுட்டு சொல்கிறான் என்று சந்தேகம் வருகிறதா? நம்புங்கள். இது நடந்தது 2010ம் ஆண்டில். கனவில் கண்ட அந்த முகத்தை நேரில் பார்க்க மாட்டோமா என்று ஜான் தேடினான். சில மாதங்களில் கனவில் அந்த தேவதை முக சாயலில் ஒருத்தியைப் பார்த்தான். இந்த நேரத்தில் 'நினைத்தேன் வந்தாய்' படமோ, ரம்பா கதாபாத்திரமோ உங்கள் ஞாபகத்துக்கு வந்தால் தயவுசெய்து டைவர்ட் பண்ணுங்க. இது வேற லெவல் காதல். ஜான் கனவில் வந்த தேவதையின் முக சாயலில் ஜெனி இருந்தாள். ஜானின் சித்தி மகள் செலினுடன் படிக்கும் ஜெனியைப் பார்த்ததும் ஜானுக்கு ரொம்பவே பிடித்துப் போனது. சர்ச்சுக்குப் போகவில்லையென்றால் மறுநாள் தயவு தாட்சண்யம் பார்க்காமல் ஜானுக்கு அடிவிழும். அதற்கெல்லாம் அசராத ஜான், ஜெனி சர்ச்சுக்கு வருவது தெரிந்த பிறகு முதல் ஆளாய் போய்விடுவான். ஆனால், ஜெனி மேல் இருக்கும் பிரியத்தை, அன்பை ஜான் சொல்லவே இல்லை. ஜெனியின் சிரிப்பில் கரைந்துபோனான். சர்ச்சில் பார்ப்பான். ரசிப்பான். ஆனால், பேசக்கூட மாட்டான். பிளஸ் 2 முடிந்ததும் பி.எஸ்.சி. ஐடி சேர்ந்தான். மதுரையில் இருந்த ஜெனி திண்டுக்கல் படிக்கப் போயிருந்தாள். ஆனால், ஜானுக்கு இது தெரியவில்லை. காலப்போக்கில் ஜெனியைத் தேடாமல் இருந்தாலும், மனசுக்குள் பூத்த பூவை உதிராமல் பார்த்துக்கொண்டான். ஒரு நாள் யதேச்சையாக செலினுடன் பேசிக்கொண்டிருந்தான். காதல் பற்றிய டாபிக் வந்தது. ''நானும் காதலிச்சிருக்கேன் செலின்.'' ''நிஜமாவாடா. யாருண்ணா?'' ''உன் கிளாஸ்மேட் தான்.'' ''என் கிளாஸ்மேட்டா? அனிதா? டயானா? ப்ரீத்தி? ''இல்லை. ஜெனி.'' ''ஜெனியா? நம்ம தூரத்து சொந்தம் தான்டா. உன்னை அவளுக்கு தெரியும். இப்பவும் என் கூடதானே படிக்கிறா.'' ''என்ன சொல்ற?'' ''ஆமாம். பி.காம் தான் படிக்கிறா. திண்டுக்கல் படிக்கப் போனா. செட்டாகலைன்னு மதுரைக்கே வந்துட்டா.'' ''சூப்பர்... தங்கச்சி. எனக்கு ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணு. ஜெனி பக்கத்துல இருக்கும்போது கால் பண்ணு. நான் வந்துடறேன். பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்ணு'' என்றான். ம்ம்.. தலையாட்டிய செலின் சொன்னபடி செய்தாள். ஆனால், ஜான் காலேஜ் பஸ் ஸ்டாப் வருவதற்குள் ஜெனி வீட்டுக்குப் பறந்துவிட்டாள். அடுத்த வாரமே, செலின் ஜானுக்குப் போன் செய்தாள். ''முக்கியமான ஆள் உனக்கு. இப்போ போன்ல பேசு'' என்று ஜானிடம் சொன்னாள். ''நல்லா இருக்கீங்களா? சாப்டீங்களா?'' ஜெனி ஜானிடம் கேட்ட முதல் வார்த்தைகள் இவை. ''இப்போதைக்கு நேர்ல சொல்ல முடியாது. போன்ல சொல்றேன். ஐ லவ் யூ.'' ''முதல்ல எனக்கு நீங்க என்ன முறை வேணும்?னு தெரியணுமே.'' ''அவ்ளோதானே. தெரிஞ்சுக்கிட்டு வந்து உன் முன்னாடி நிக்கிறேன்.'' மாமா முறைதான் என்று விவரம் அறிந்து சொன்னான். அவளும் காதலைச் சொன்னாள். இரவு அரட்டைப் பேச்சுகள், எஸ்எம்எஸ்கள் என்று நீண்டன. ஒரு மாதம் கழித்து பெரியார் பேருந்து நிலையத்தில் சந்திக்கலாம் என்று சொன்னாள். திடீரென்று சொன்னதால் மொக்கையான டிரஸ்ஸா இருக்கே என்று நொந்துகொண்டே சென்றான். பீங்கானில் ஒரு வாத்து ஜாடியைத் தந்து அசத்தினாள். ''திடீர்னு கூப்பிட்டதால கிஃப்ட் எதும் தர முடியலை ஜெனி.'' ''கிஃப்ட்டா முக்கியம். உன்னைப் பார்த்துட்டேன்ல. அது போதும். நீதான் டா என் கிஃப்ட்.'' ஜான் ஜெனியின் பேச்சில் உறைந்தான். கரைந்தான். மிதந்தான். நெகிழ்ந்தான். மகிழ்ந்தான். ஜெனிக்கு விஜய் பிடிக்கும். ஜானிக்கு தனுஷ்தான் பிடிக்கும். ஜெனி தேவிஶ்ரீபிரசாத் இசை என்றால் கேட்டுக்கொண்டே இருப்பாள். ஜானிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் ஃபேவரிட். மெருன் கலர் என்றால் ஜெனிக்கு அவ்வளவு இஷ்டம். ஜானிக்கு ஸ்கை ப்ளூ தான் பிடிக்கும். ஆனால், காதல் அலைவரிசை இவர்களை இணைத்தது. ''ஜான்... என்னை ஏன் லவ் பண்ற? நான் மோசமான கேரக்டர். எனக்கே என்னைப் பிடிக்காது. நான் ஒரு வேஸ்ட்.'' ''இப்படில்லாம் சொல்லக்கூடாது. உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.'' ஜெனி, அரிசியில் இருவர் பெயரின் ஆங்கில முதல் எழுத்தை சேர்த்து ஜேஜே என்று பெயர் எழுதிக்கொண்டாள். ஆனால், சந்தர்ப்ப சூழலால் அதைக் கொடுக்க முடியாமல் வருத்தப்பட்டாள். அதை ஜானிடமும் சொன்னாள். ஜெனி கொடுக்க முடியாததை ஜான் தரவேண்டும் என்று முடிவெடுத்தான். திருவிழா சமயம் ஜேஜே என்று பெயர் எழுதியஅரிசியை ஜெனியிடம் நீட்டினான். தான் கொடுக்க நினைத்ததை, ஜான் கொடுத்துவிட்டான் என்ற பரவசத்தில் மிதந்தாள் ஜெனி. பல சமயம் இருவரும் தியேட்டர் சென்றார்கள். எங்கேயும் எப்போதும், நண்பன், காதலில் சொதப்புவது எப்படி? பீட்ஸா, அட்டகத்தி படம் பார்த்தார்கள். ஒரு முறை இந்திப் படம் பார்க்க ஜெனியை அழைத்துப்போனான் ஜான். எந்த படம் என்றே கேட்காமல் ஜெனியும் தியேட்டர் வந்துவிட்டாள். ''அப்புறம் ஜெனி. இந்திப் படம்லாம் பார்க்க ஆரம்பிச்சிட்ட போல. இந்தி தெரியுமா'' என கேட்டான். ''இந்திப் படமா?'' என்று அலறினாள். சமாதானப்படுத்தினான். இப்படித்தான் தலாஷ் படம் பார்த்தார்கள். ''இப்படியே போனா நாம மாட்டிக்குவோம் ஜான். அடிக்கடி போன் பேசுறது...மெசேஜ் பண்றது தான் கஷ்டமா இருக்கு.'' ''அவ்ளோதானே. பயப்படாதே. எப்போ முடியுமோ அப்போ மட்டும் பேசு.'' புதுப்புது நம்பரில் இருந்து ஜானிடம் பேசினாள். ''ஒவ்வொரு முறையும் புது நம்பர்ல இருந்து கால் வரும்போதெல்லாம், நீயா இருப்பியோன்னு தான் தோணும்... ஜெனி!'' என்பான் உற்சாக மிகுதியோடு. அம்மாவிடம் காதலிப்பதைச் சொன்ன ஜான் ஒரு நாள் வீட்டுக்கு அழைத்துப்போனான். ''நீ வந்துதாம்மா இவனை மாத்தணும். நல்லா சாப்பிட சொல்லணும்'' ஜானின் அப்பா சொன்னார். அம்மா விழுந்து விழுந்து கவனித்தார். ஜெனி காதலிப்பது அவள் வீட்டுக்கு தெரிந்தது. கர்த்தர் மேல சத்தியமா, பைபிள் மேல சத்தியமா, அப்பா அம்மா சத்தியமா தவறான வழியில போகமாட்டேன் என்று சத்திய செய்யச் சொன்னார்கள். ஜெனி சத்தியம் செய்தாள். ஜானிடம் தன்னை மறந்துவிடச் சொன்னாள். பெற்றோருக்காக காதலைத் தியாகம் செய்ய முன்வந்தாள் ஜெனி. அந்த தியாகம் மூலம் காதலுக்கு மரியாதை செய்ய நினைத்தாள். எனக்கு 'காதலுக்கு மரியாதை' படம் நினைவுக்கு வந்தது. பாசில் இயக்கத்தில் விஜய், ஷாலினி, ஶ்ரீவித்யா, சிவகுமார், ராதாரவி,. தலைவாசல் விஜய், சார்லி, தாமு ஆகியோர் நடிப்பில் வெளியான படம். விஜய்ணாவின் தி பெஸ்ட் படம். விஜய்யும், ஷாலினியும் போட்டி போட்டு நடித்த படம் என்று இன்றும் சிலாகிப்பதுண்டு. இளையராஜா இசை, பாசிலின் யதார்த்தமான திரைக்கதை என்று காதல் படங்களில் 'காதலுக்கு மரியாதை' படத்துக்கு தனி மரியாதை உண்டு. ஒரு புக் ஷாப்பில் விஜய்யும், ஷாலினியும் சந்திப்பார்கள். ஷாலினி விஜய்யை இடித்துவிட்டு செல்வார். இமை மூடாமல் ஷாலினியையே விஜய் பார்ப்பார். ஷாலினியும் விழிகள் அகலாமல் விஜய்யை பார்ப்பார். லவ் அண்ட் லவ் ஒன்லி புத்தகத்தை இருவருமே எடுப்பார்கள். விஜய் அந்த புத்தகத்தை ஷாலினிக்கு கொடுத்துவிடுவார். அதற்குப் பிறகு ஷாலினியைப் பின் தொடர்வார். விஜய், சார்லி, தாமு ஆகிய மூவரும் ஷாலினியைப் பின் தொடரும்போது ஷாலினியின் அண்ணன் தலைவாசல் விஜய்யிடம் சிக்குவார்கள். போலீஸ் ஸ்டேஷனில் அடிவாங்கி, வீட்டுக்கு அருகிலேயே இன்னொரு அண்ணனிடம் அடிவாங்கி, காயத்துக்கு மருந்து போட டாக்டரிடம் செல்வார்கள். அவரும் ஷாலினியின் அண்ணன் என்பதால் காயங்களை பரிசாகத் தருவார். அதற்குப் பிறகும் வீடுதேடி வந்து காதல் கடிதம் கொடுப்பார் விஜய். ஷாலினியின் சின்ன அண்ணன் விஷயம் தெரிந்து, காலேஜூக்கு சென்று அடியாட்களுடன் விஜய்யைத் தாக்குவார். அதற்குப் பிறகு விஜய்யை காதலிப்பதாக சொல்வார் ஷாலினி. வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதும், வீட்டை விட்டு செல்கிறார்கள். சார்லியின் வளர்ப்புத் தந்தை மணிவண்ணனிடம் அடைக்கலம் ஆகிறார்கள். மணிவண்ணன் திருமணம் செய்துவைக்க முடிவெடுக்கிறார். ஆனால், வீட்டுக்கு செல்வதாக இருவரும் முடிவெடுக்கிறார்கள். அதை மணிவண்ணன், சார்லி, தாமு அண்ட் கோவிடம் புரியவைக்கிறார்கள். இருவர் வீட்டிலும் ஏற்றுக்கொள்கிறார்கள். பிறகு அவர்களே சேர்த்து வைக்கிறார்கள். ''என்ன செய்வீங்களோ? ஏது செய்வீங்களோ தெரியாது. அவ ஒரு ராத்திரி கூட அவன் கூட தங்க கூடாது. எப்படியாவது அவளைக் கொண்டு வந்து சேர்க்கணும். அவ ஒரு ராத்திரி அவன் கூட தங்கிட்டான்னா இனிமே எப்பவும் இந்த வாசப்படிய மிதிக்கக்கூடாது.'' என்றும், இன்னொரு சந்தர்ப்பத்தில், ''இந்த வீட்ல அடியெடுத்து வைக்கக்கூடாது. அப்படி வேணும்னா இழுத்துட்டு வந்து மாட்டுத் தொழுவத்துல கட்டிப்போடுங்க'' என்று சொல்லும் ஷாலினியின் அம்மா உங்க மருமகளை எடுத்துக்குங்க. அவ ஜீவாவை அவ கிட்டயே கொடுத்திடுங்க என்று கண்ணீர் உதிர்ப்பார். விஜய்யும் ஷாலினியும் இணைவார்கள். ஜான், ஜெனிக்கு தொடர்ந்து மெசேஜ் அனுப்புகிறான். அந்த மெசேஜ் அவன் காதலுக்கு புத்துயிர் அளித்திருக்கிறது. அந்த சாம்பிள் மெசேஜ்: *அடி, திட்டு, உதாசினப்படுத்து அதோட சேத்து காதலிக்கவும் செய்... ஜெனி! *போதும் போதுங்கற அளவுக்கு காதலிச்சிருக்கேன், ஆனாலும் போதாது... ஜெனி! *ஜெனி, தூரத்தில் இருக்கும்; நெருக்கமானவள்! *என்னால மறுபடிகாதலிக்க முடியும், ஆனா அவளும் ஜெனியா இருக்கணும்! *முதல் நாள் அந்த பதினொன்னாவது எஸ்.எம்.எஸ் ஞாபகம் இருக்கா ஜெனி? அந்த 'ஐம் வித் யூ ஃபார் எவர்!' அனுப்பிச்சதே நீதானடி! *உன்கிட்ட சொல்லவேண்டியது! ஆனா, உன்னத் தவிர எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன் ஜெனி, *நமக்குள்ள, நமக்குன்னு மட்டும் ஒரு காதல் இருந்துச்சு! இப்பவும் இருக்குல்ல? அத அப்பிடியே பத்தரப்படுத்தி வெச்சிரு ஜெனி! ப்ளீஸ்..., *இப்போ ஃபோன் பண்ணி ஒரு இடியட் சொல்லு ஜெனி, உடனே உன் கிட்ட வந்திடுறேன்! *நான் இறந்தா கூட கண்ணீர் "அஞ்சலி" போஸ்டர் ஒட்டாதீங்க, கண்ணீர் "ஜெனி" போஸ்டர் ஒட்டுங்க! ஜெனியின் சத்தியத்தை ஜானின் மெசேஜ்கள் கரைத்துவிட்டன. ஜானின் அம்மா சர்ச்சில் ஜெனியிடம் பேசி ஜானைத் திருமணம் செய்துகொள்ள சம்மதம் வாங்கிவிட்டார். ஜானின் அப்பா ஜெனி பெற்றோரிடம் சம்மதம் வாங்கப் போகிறார். காதலுக்கு மரியாதை கிளைமாக்ஸ் நிஜ வாழ்விலும் நடக்க நாமும் வாழ்த்துவோம். மான்டேஜ் மனசு இன்னும் சுழலும்... http://tamil.thehindu.com/opinion/blogs/மான்டேஜ்-மனசு-9-காதலுக்கு-மரியாதை-செய்தவர்கள்/article7611940.ece?ref=relatedNews
 12. மான்டேஜ் மனசு 8 - விண்ணைத் தாண்டி வருபவர்கள்! ரொம்ப நாட்களுக்குப் பிறகு கௌதமை சந்தித்தேன். நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு வழக்கம் போல சினிமா பற்றி பேச்சு திரும்பியது. கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய 'இன்டர்ஸ்டெல்லர்' பற்றி சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தான். டைம் மெஷின், டைம் டிராவல் பற்றி நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். தமிழில் சயின்ஸ் ஃபிக்‌ஷன் என்று பெருமைப்படும் 'இன்று நேற்று நாளை' படத்தையும் பேச்சுவாக்கில் தொட்டுச் சென்றான். ''ஃபேன்டஸி படமா இருந்தாலும் அளவா, கச்சிதமா, எந்த எல்லையும் மீறாம இருந்தது ரொம்ப நல்ல அனுபவம்'' என்றான். என் மனசு 'இன் டைம்' படத்தையே சுற்றிச் சுற்றி வந்தது. 2011-ல் வெளியான அமெரிக்கன் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் 'இன் டைம்'. 'இன் டைம்' திரைப்படம் காட்டும் உலகம் வித்தியாசமானது. அங்கு எல்லோரும் 25 வயது வரை இயல்பாக வளர முடியும். 25 வயது முடிந்த பிறகு ஒரு வருடம் மட்டுமே ஆயுள் தரப்படும். அதற்குப் பிறகு வாழ விரும்புவர்கள் தன்னுடைய வாழ்நாளை உழைத்து சம்பாதிக்கலாம். பிறரிடம் இருந்து கடன் வாங்கலாம். கொஞ்சம் குறுக்குப்புத்தியோடு அடித்துப் பிழைப்பவர்கள் பிறரிடம் திருடலாம். இது எதுவுமே செய்யாவிட்டால் அவர்கள் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் செத்துவிடுவார்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நம் சமூகத்தில் பணத்தை கடன் வாங்குகிறார்கள். திருடுகிறார்கள். வங்கியில் சேமிக்கிறார்கள். அந்த உலகத்தில் வாழ்பவர்கள் பணத்துக்குப் பதிலாக நேரத்தை சம்பாதிக்கிறார்கள். நேரத்தைக் கடனாக கொடுத்து காபி குடிக்கிறார்கள். கார் வாங்குகிறார்கள். எல்லாவற்றுக்கும் நேரம்தான் முதலீடு. அதிக நேரம் வைத்திருப்பவர்தான் பணக்காரர். அவர்தான் ஹீரோ. அப்படி ஹீரோவுக்கு ஒருத்தர் 100 வருஷம் கொடுத்து செத்துப்போய்டறார். அப்புறம் என்ன நடக்குதுங்கிறதுதான் த்ரில். கெளதமுடன் உரையாடல் தொடர்ந்தது. ''இன் டைம் பார்த்திருக்கியாடா?'' ''பார்க்கலைடா. ஏன்?'' ''செம படம்டா. ஒருத்தன் நெனைச்சா இன்னொருத்தனுக்கு எவ்ளோ நாள் வேணும்னாலும் வாழ டைம் கொடுக்கலாம். அதே சமயம் அதைப் பிடுங்குறதுக்கும் ஒரு கூட்டம் இருக்கும்.'' ''இப்போ எதுக்கு இவ்ளோ டீட்டெயில்?'' ''இதை நம்ம தமிழ் இலக்கியத்துல ஒரு வரியில சொல்லிட்டாங்க'' ''என்னடா சொல்ற?'' '' 'யான் வாழு நாளும் பண்ணன் வாழிய.' புறநானூற்றுப் பாடல். என்னுடைய வாழ்நாளை எல்லாம் எடுத்துக்கொண்டு பண்ணன் வாழட்டும்னு அரசன் கிள்ளிவளவன் நில ஊர்கள் தலைவன் பண்ணனை வாழ்த்துறாரே... அதனோட அடுத்த டைமன்ஷன் தான் இந்தப் படம். அதை இப்ப கலைச்சு போட்டாலும் வேற ஒரு கான்செப்ட் கிடைக்கும். ''ம்ம்ம்... ஆனா, எனக்கு ஒரு யோசனை....'' ''தாராளமா சொல்லு.'' ''பெரும்பாலும் பசங்களோ, பொண்ணுங்களோ காதல்ல தோத்துப் போய்டறாங்க... அவங்களுக்கு அது காலம் முழுக்க அழியாத வடுவா, தொட்டால் நோகும் தழும்பா மாறிடுது. அவங்களுக்கு அந்த தப்பை சரி செய்ய இன்னொரு வாய்ப்பு கிடைச்சா எப்படி இருக்கும்? வாழ்க்கை ஒரு முறைதான். ஆனா, வாய்ப்பு ஒரு முறைதான்னு இருக்குறதை இரண்டு முறைன்னு மாத்தினா... தப்பு செஞ்சவங்க சரிசெய்துக்குவாங்க. பிரிஞ்சவங்க சேர்ந்துடுவாங்க. இதுவும் ஒரு ஃபேன்டஸி கான்செப்ட் தானே. இதையே கூட அட்லீஸ்ட் குறும்படமா பண்ண யோசிக்கலாம்.'' ''இது செட்டாகுமா?'' ''யோசிப்போம். முடியும்னு முயற்சிப்போம். ஐடியாவுக்கா பஞ்சம். செட்டாகலைன்னா பரவாயில்லை. பிராசஸ் பண்ணவரைக்கும் நமக்கு திருப்தி இருக்குமே.'' ''சூப்பர் டா. இதுல ஏதோ உன் அனுபவம் இருக்கா கௌதம்?'' ''எப்படி சொல்ற?'' ''இவ்ளோ அளவுக்கு விட்டுக்கொடுக்காம பேசுறன்னா... அதுக்கான நதிமூலம், ரிஷிமூலம் உன்கிட்ட இருந்துதானே ஆரம்பிச்சிருக்கும்.'' ஆமாம் என்று தலையசக்கும் அந்த நொடியில் வெட்கம் கலந்த புன்னகை கௌதமை ஆட்கொண்டிருந்தது. ''நான் செய்த தப்பும், சரி செய்ய வேண்டிய வாய்ப்பும்... ப்ரீத்திதான்.'' கௌதம் பேச ஆரம்பித்தான். ''கொஞ்சம் டீட்டெயிலா சொல்லு மச்சி.'' ''உனக்கு சொல்லி புரிய வைக்குறதை விட படிக்குற இவங்க கிட்டயே நேரடியா சொல்லிடறேன்...'' ''பார்த்தியா! எனக்கு புரியாதுன்னு நீயே முடிவு பண்ணிட்டே...'' ''அதில்லை மச்சி. நீ குறுக்கே குறுக்கே பேசி நிறைய கேள்வி கேட்ப. நானா சொன்னா ஒரு ஃபுளோவுல போய்ட்டே இருப்பேன். அதான். தப்பா நினைச்சுக்காதே. சரியா?'' ''அப்போ நான்?'' ''உன்னை விட நான் நல்லாவே சொல்வேன். இப்போதைக்கு கிளம்பு'' என்று என்னை விரட்டிவிட்டான். இதோ இப்போது உங்கள் முன் கௌதமே பேசுகிறான். ஹாய்! நான் கௌதம். சிவில் இன்ஜினீயரிங் படிச்சிருக்கேன். ராமநாதபுரத்துக்காரன். என் எதிர்வீட்டு தேவதை ப்ரீத்தி. என் அப்பாவும், ப்ரீத்தி அப்பாவும் ஃப்ரெண்ட்ஸ். அதனால என் வீட்டுக்கு அவளும், அவ வீட்டுக்கு நானும் சாதாரணமா போய் வருவோம். சின்ன வயசுல இருந்தே எனக்கு அவளை தெரியும். அப்போலாம் ப்ரீத்தி பத்தி எனக்கு பெருசா எதுவும் தோணலை. அம்மா தான் ப்ரீத்தியைப் பத்தி புகழ்ந்து பேசிக்கிட்டே இருப்பாங்க. எங்க வீட்ல அண்ணன், நான்னு ரெண்டு பேருமே பசங்க. அம்மாவுக்கு பொண்ணுன்னா அவ்ளோ பிடிக்கும். 'பொண்ணுங்கதான்டா வீட்டுக்கு அழகு. அவங்க அலங்காரமும், கொலுசு சத்தமும் வீட்டையே நிறைக்கும்'னு சொல்வாங்க. இன்னும் வெளிப்படையா சொல்லணும்னா நான் ப்ரீத்தியை லவ் பண்ண காரணமே என் அம்மாதான். 'ப்ரீத்தி எவ்ளோ அழகு பாருடா. அவ சிரிப்பும், நடக்குற ஸ்டைலும் எப்படி இருக்கு?'ன்னு என்னை சைட் அடிக்க என் அம்மாதான் தூண்டினாங்கன்னு கூட சொல்லலாம். 'நானே கண்ணு வெச்சுடறேன்'னு ப்ரீத்திக்கு சுத்தி போடும்போதெல்லாம் இமைக்காமல் அப்படியே ப்ரீத்தியைப் பார்த்து உறைந்துபோய் நின்னிருக்கேன். காலேஜ் சேர்ந்த்தும் ப்ரீத்தி இன்னும் அழகா தெரிஞ்சா. ஒரு நாள்... பிங்க் கலர் லேடி பேர்ட் சைக்கிளைத் துடைத்தபடி ஷர்ட்டும், லெக்கின்ஸும் அணிந்த் ப்ரீத்தியை நான் தற்செயலா பார்த்தபோது அப்படியே க்ளீன் போல்ட். என்னாச்சுன்னு எனக்கே தெரியல. அவள் அருகிருப்பு எனக்குள் இன்ப அவஸ்தையைக் கொடுத்தது. லூஸூப் பெண்ணே லூஸுப் பெண்ணே பாடல் அப்போ பேய் ஹிட். அவளை பார்க்கும்போதெல்லாம் அந்தப் பாடலை ஒலிக்க விட்டு செல்போனை அதிரச் செய்தேன். என்னாச்சு இவனுக்குன்னு கலவரமாய் பார்த்துக்கிட்டே என் நிலவரம் புரியாமல் கடந்து போனா. ஒரு கட்டத்தில் அவள் அம்மாவிடமே நான் இப்படில்லாம் பண்றேன்னு சொல்லிட்டா. 'கௌதம் நல்ல பையன். உன்னை டீஸ் பண்ணமாட்டான்'னு அத்தை எனக்கு கான்டக்ட் சர்டிஃபிகேட் கொடுத்துட்டாங்கன்னா அதை விட என்ன சந்தோஷம் இருக்க முடியும்? அத்தைன்னு ப்ரீத்தி அம்மாவைதான் சொல்றேன். அப்புறம் 'செஸ் கற்றுக்கொடு கௌதம்'னு என் முன்னாடி வந்து நின்னா. நட்ட நடு ஹாலில் செஸ் போர்டு வைத்தபடி அரட்டையும் சிரிப்புமாய் விளையாடினோம். அவளும் மாவட்ட, மாநில அளவில் பரிசுகளைக் குவிச்சா. இதுக்கு கௌதம் தான் காரணம்னு அவ வீட்ல சொல்லி சந்தோஷப்பட்டாங்க. நான் இன்ஜினீயரிங் படிச்சு வேலைக்குப் போகும்போது ஏற்பட்ட பரவசத்தைக் காட்டிலும். அவளுக்கு அந்த வயதில் கோச் ஆன பரவசம்தான் அதிகம். நாளுக்கு நாள் எங்கள் சிநேகம் வளர்ந்தது. இந்த தருணத்தில்தான் நான் நொய்டாவில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் வந்தது. அப்போ வரை இது டபுள் சைட் காதலா மாறும்னு சத்தியமா நம்பல நான். ''நீ போறப்ப சொல்லிக்காம போய்டு. கடைசி நேரத்துல நீ போறதை என்னால பார்க்க முடியாது''னு ப்ரீத்தி சொல்லிட்டா. நானும் சொல்லிக்காம நொய்டா வந்துவிட்டேன். இரண்டு நாள் பயணக் களைப்பில் அசந்து தூங்கி மறுநாள் காலை அம்மாவிடம் பேசினேன். அம்மாதான் பேசிக்கொண்டே ப்ரீத்தி வீட்டுக்கு போனாங்க. ப்ரீத்தி அப்பா பேசினார். 'என்ன கௌதம். ப்ரீத்திகிட்ட சொல்லிக்காம போய்ட்ட? ரெண்டு நாளா அழுதழுது காய்ச்சலே வந்துடுச்சு. இந்தா பேசு' என்றார். அவர் அப்படி பேசியதும் கேரக்டர் ஆர்டிஸ்ட் நரேன் முகம் அனிச்சையாய் மனசுக்குள் வந்துபோனது. ஏன் என்று தெரியவில்லை. அவள் பேசினாள். 'என் கிட்ட சொல்லாம, என்னை விட்டு பிரிஞ்சு போய்ட்டல்ல'... சிணுங்கினாள். சமாதானம் செய்தேன். வீட்டில் இருந்து கொடுத்தனுப்பிய காசில் அவசரத்துக்கு ஒரு சிம் கார்டு வாங்கினேன். அவள் அக்கா மொபைலில் இருந்து அழைத்தாள். விடிய விடிய பேசினோம். 'நான் ஏன் உனக்கு அவ்வளவு முக்கியம்?' நடுநிசியில் இப்படி ஒரு கேள்வி கேட்டேன். இரவுகள் எப்போதும் சுகமானவை. அதில் பொய், பூச்சு, வெறும் ஜம்பம் செய்யாமல் உள்ளதை சொல்லிவிடுவோம். போக்கு காட்டுவது, அலைய வைப்பது, சீன் போடுவது எதுவும் இரவுகளில் நடப்பதில்லை. அவள் 'உன்னை பிடிக்கும்' என்றாள். 'ஐ ---- யூ' என்று மெசேஜ் தட்டினாள். நான் அந்த இடத்தை லவ் யூ என்று நிரப்பி ரிப்ளை தட்டினேன். அவளும் லவ் யூ சொன்னாள். தமிழ்ப் புத்தாண்டு சமயம் வீட்டுக்கு வந்தேன். புதிதாய் ஒரு மொபைல் வாங்கி அவள் கையில் திணித்தேன். பத்து நாட்கள் நெருக்கமும், கிறக்குமாய் பார்வையால் காதலித்தோம். தினமும் தலையணைக்குள் மொபைல் புதைத்து தூங்குபவள் அன்றைக்கு அலட்சியமாய் இருந்துவிட்டாள். அவள் அம்மா பார்த்துவிட்டார். யாருக்கும் தெரியாமல் ப்ரீத்தி மொபைல் பயன்படுத்துவது தெரிந்துவிட்டது. அதைக் கையில் எடுப்பதற்குள் சுதாரித்து எழுந்த ப்ரீத்தி மெசேஜை டெலீட் செய்தாள். அவள் அப்பாவுக்கு விஷயம் தெரிந்தது. மொபைல் கால் ரிஜிஸ்டர் பார்த்தார். செல்லம் என்று இருந்த நம்பருக்கு கால் செய்தார். இது எதுவும் தெரியாமல் நான் காலையிலேயே குட் மார்னிங் செல்லம் என்று சொல்லி வாசலை நோக்கி ஓடிவந்தேன். மாடியில் இருந்த ப்ரீத்தியின் அப்பா நான்தான் அவளின் செல்லம் என்பதைக் கண்டுகொண்டார். கான்டாக்ட் சர்டிஃபிகேட் கொடுத்த அவள் அம்மா இப்போது என்னை இலக்கணமே இல்லாமல் திட்ட ஆரம்பித்தார். இரு வீட்டுக்கும் பஞ்சாயத்து நடந்தது. நான் கண்டுகொள்ளாமல் சத்தமில்லாமல் ப்ரீத்தியைப் பார்த்து பேசினேன். ப்ரீத்தியின் அம்மா தான் ஒரு டீச்சர் என்பதை அவளுக்கு பிரம்படி கொடுத்துதான் நிரூபிக்க வேண்டுமா? என்று நொந்துகொண்டேன். கட்டிலுக்கடியில் இரண்டு பிரம்புகள் உடைந்து கிடந்தன. 'ரொம்ப அடிச்சுட்டாங்களாடா' என்றேன். 'இல்லை' என்று எனக்காக சொல்வான்னு எதிர்பார்த்தேன். 'முடியலைடா' என அழுதுவிட்டாள். அதற்குப் பிறகு ப்ரீத்தியை மாமா வீட்டுக்கு அனுப்பினார்கள். நான் விடுமுறை முடிந்து நொய்டா சென்றேன். அடுத்த ஆறு மாதத்தில் ஊருக்கு வந்தேன். வீட்டை காலி செய்துவிட்டுப் போய்விட்டார்கள். ஒருவழியாக 10 நாட்கள் அலைந்தேன். ஆறாம் வகுப்பு படிக்கும் அன்புக்கரசியை அனுப்பி அட்ரஸ் கண்டுபிடிக்கச் செய்தேன். தூது அனுப்பினேன். ஆனால், அவள் அங்கு இல்லை. தூரமாய் இருக்க வேண்டும் என்று மாமா வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். மாமா வீட்டைக் கண்டுபிடித்து நேரில் போய் நின்றேன். ''இது செட்டாகாது கௌதம். நாம விட்டுடலாம்.'' ''ஏன்?'' ''என் அப்பா, அம்மாவுக்கு உன்னை பார்க்கமாட்டேன், உன் கூட பேசமாட்டேன்னு சத்தியம் பண்ணியிருக்கேன்.'' ''உன்னைவிட்டு எங்கேயும் போகமாட்டேன்னு சொன்னியே... நான் நொய்டாவுல இருக்கும்போது இப்பவே என்னையே கூட்டிட்டு போய்டு சொன்ன?'' ''நான் சொன்ன நேரத்துல நீ வரலை.'' ''இப்போ வந்துட்டேனே?'' ''வேணாம் கௌதம். இப்போ அது சரியாபடல.. என் அப்பா, அம்மா சம்மதிக்க மாட்டாங்க. அவங்களுக்கு எந்த அவமானத்தையும் தேடிக் கொடுக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணியிருக்கேன்.'' ''நாம பழகினது?'' ''கெட்ட கனவா நெனைச்சு மறந்துடுறேன்.'' ''ப்ரீத்தி.'' ''ஸாரி கௌதம்...'' இதுதான் எங்கள் கடைசி உரையாடல். ப்ரீத்தி ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்? அவள் எப்படி இருப்பாள்? இதற்கு நீங்கள் 'விண்ணைத் தாண்டி வருவாயா' பார்க்க வேண்டும். ஜெஸ்ஸி தான் ப்ரீத்தி. ஜெஸ்ஸியாக நடித்திருக்கும் த்ரிஷா சிம்புவின் வீட்டு மாடியில் இருப்பார்... என் தேவதை எதிர்வீடு. என் பொணத்தை பார்த்துட்டு நீ வேணா கார்த்திக்கை கல்யாணம் பண்ணிக்கோ என்று ஜெஸ்ஸியின் அப்பா சொல்வார். ப்ரீத்தியின் அப்பாவும் கிட்டத்தட்ட அதே மாதிரிதான் சொன்னார். என் ஜெஸ்ஸியும் அப்படிதான். என்னை மறந்துவிடுவதாக பெற்றோரிடம் சொல்லியிருக்கிறாள். அப்படி என்ன காரணம்? எதுவும் இல்லைதான். ஆனால், அவள் பிரச்சினையில் இருக்கும்போது என்னால் ஓடிவர முடியவில்லை. அதுதான்... பெண்களால் எப்படி இப்படி பெத்தவங்களுக்காக எல்லாத்தையும் தூக்கி எறிய முடிகிறது? என்று யோசித்திருக்கிறேன். திரும்பத் திரும்ப, அப்பாவுக்குப் பிடிக்கலை என்று காரணம் சொல்லும் ப்ரீத்தி ஏன் சிக்கலான மனநிலையுடன் குழப்பமாக செயல்படுகிறாள்? ஜெஸ்ஸிக்கு நடந்தது என் ப்ரீத்திக்கு நடந்துவிடக்கூடாது. இதுதான் என் வேண்டுதலும்... பிரார்த்தனையும்... மனமுருகிப் பேசிய கௌதமுக்கு ஆதரவாய் தோள் தட்டினேன். கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'விண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படம் பிரிந்துபோன, சேர்ந்து வாழ்கிற எல்லா காதலர்களுக்குள்ளும் பல எண்ண அலைகளை எழுப்பியதை மறுக்க முடியாது. கார்த்தியாக சிம்புவும், ஜெஸ்ஸியாக த்ரிஷாவும் இப்போதும் நம் மனதுக்கு நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள். அது கௌதம் மேனன் செய்த மேஜிக். இன்ஜினீயரிங் படித்துவிட்டு சினிமா இயக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இருக்கிறார் சிம்பு. மாடியில் வசிக்கும் ஜெஸ்ஸியைப் பார்க்கிறார். வீட்டு ஓனர் மகள்தான் ஜெஸ்ஸி என்று தெரிகிறது. காதலில் விழுகிறார். ஃபாலோ செய்கிறார். ஆலப்புழா வரைக்கும் சென்று தேடுதல் படலம் நடத்துகிறார். ரயிலில் முத்தம் கொடுக்கிறார். த்ரிஷாவும் காதலில் விழுந்ததை ஒப்புக் கொள்கிறார். இருவர் வீட்டுக்கும் தெரிய வருகிறது. பிரச்சினை வெடிக்கிறது. அவசர அவசரமாக த்ரிஷாவுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் சிம்புவிடம் அழுதபடி த்ரிஷா பேசுகிறார். இப்போது வருவது சரியா இருக்காது என்று சிம்பு சொல்கிறார். பிரச்சினையின் தீவிரம் உணர்ந்து சிம்பு த்ரிஷாவைத் தேடி வருகிறார். அப்போது த்ரிஷா - சிம்பு பேசும் கான்வர்சேஷன் இங்கு ஏராளமான காதலர்களுக்கு நடந்திருக்கும். ''ஏன் வந்தே கார்த்திக்?'' ''என்னது இந்த எஸ்எம்எஸ்?'' ''நீ அங்கே இருக்குறதாலதான் அந்த எஸ்எம்எஸ் அனுப்பிச்சேன். நீ திடீர்னு வரமுடியாதுன்னு நினைச்சேன்.'' ''நான் வந்துட்டேன்ல சொல்லு, எங்கே போகணும். என்ன பிரச்சினைன்னு சொல்லேன்.'' ''நான் தான் உன் பிரச்சினை கார்த்திக். நான் வர்றேன்னு தப்பான டைம்ல சொல்லிட்டேன்ல. உன்னால ஒண்ணும் பண்ண முடியலைல்ல. ஒரு பத்து நிமிஷமாவது என்ன பண்றது? முடியுமான்னு யோசிச்சிருப்பல்ல? அது இருக்கக்கூடாது கார்த்திக். என்னால உனக்கு எந்த கஷ்டமும் இருக்ககூடாது இது எப்பவுமே இப்படிதான் இருக்கும்னு தெரியுது எனக்கு. இது மாறாது. அன்னைக்கு வரணும்னுதான் தோணுச்சு. ஆனா, அந்த ஒரு நொடி போய்டுச்சு கார்த்திக். தட் மொமண்ட் இஸ் கான். இன்னைக்கு இதை விட்டுடலாம்னு தோணுது. இல்லை நிச்சயமா சொல்றேன். இது முடிஞ்சு போச்சு கார்த்திக்." நான் முன்னாடியே உன்கிட்ட சொன்னேன். ஆனா நீ சீரியஸாவே எடுத்துக்கலை. ஐ டெட் ஃபாலின் லவ் வித் யூ. ஆனா வேண்டாம்னு சொன்னேன்ல… நீ என் பின்னாடி சுத்தலைன்னா நான் என் பாட்டுக்கு சும்மா உக்காந்திருப்பேன். அப்பா சொல்ற பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு எங்கேயாவது போயிருப்பேன். நீ ஏன் பிடிச்சுருக்குன்னு சொன்ன? ஏன் என்னை விரட்டி விரட்டி லவ் பண்ண கார்த்திக்? இது பீஸ்ஃபுல்லா இல்லை. வேணாம் கார்த்திக். மறந்திடு. நானும் மறந்திடுறேன்.'' ''ஜெஸ்ஸி... பைத்தியமா உனக்கு? என்னாச்சுன்னு இந்த முடிவு? ஒண்ணுமே நடக்கலையே?'' ''நீ எனக்காக வெயிட் பண்ணாதே. அவங்க என்னை வெறுக்குறதை விட நீ என்னை வெறுக்குறது பெட்டர்னு நினைக்குறேன். விட்டுடு கார்த்தி. என்னை விட்டுடு ப்ளீஸ். சத்தியமா சொல்றேன் என்னை விட்டுடு கார்த்திக்.'' ''உன்னை விடவே முடியாது ஜெஸ்ஸி.'' ''நான் இப்படிதான், எனக்கு என்ன வேணும்னு எனக்கே தெரியாது. இந்த வலி எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.'' சிம்பு - த்ரிஷா பிரிவுக்குப் பிறகு... அமெரிக்காவில் படம் இயக்கும் சிம்பு யதேச்ச்சையாக த்ரிஷாவைப் பார்க்கிறார். பார்க் காட்சியில் சிம்பு - த்ரிஷா பேசுவது அவ்வளவு அழகு. ''உன் லைஃப்ல இன்னொரு பொண்ணு இருக்கால்ல... அவளைப் பத்தி சொல்லு கார்த்திக்...'' ''அவ நல்ல ஹைட் ஜெஸ்ஸி... கர்லி ஹேர். ஃபுல்லா இல்ல. கொஞ்சம் இங்க இருந்து மட்டும்.. ஒரு மாதிரி சிரிப்பா இருக்கும், அவ நடக்கும்போது.. நல்ல வாய்ஸ் அவளுக்கு. கெட்ட வார்த்தை பேசினா அவளுக்கு புடிக்காது.. சேரிதான் நிறைய கட்டுவா.. அதுவே ஒரு வித்தியாசம்தான்.. ஸ்லிம். சிம்பிள். மேக்கப்லாம் போடமாட்டா... வெரி பியூட்டிஃபுல். பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கும்... என்ன அவளுக்கு ரொம்ப புடிக்கும்.. ம்..பைக்ல என்கூட நிறைய சுத்தி இருக்கா.. (இதுவரைக்கும் சிம்புவை மட்டுமே க்ளோஸ் அப்பில் காட்டுவார்கள்.) படம் பாக்க அவளுக்கு புடிக்காது...( சிம்பு சொல்லும் போது த்ரிஷாவை க்ளோஸ் அப்-ல காட்டுவாங்க.) நான் கிஸ் பண்ணியிருக்கேன் அவளை.. நிறைய பேசுவா.. ஒரு மலையாள வாசம் அப்படியே வீசும் அவ பேச்சில.. அதுக்கே காலி நான்.. வெறுமனே கட்டிபுடிச்சிட்டு மூணு மணிநேரம் உட்கார்ந்திருக்கேன்.. அவ கால தொட்டிருக்கேன்... அவ பேரு... ஜெஸ்ஸி...ஜெஸ்ஸி.. அவதான் இருக்கா இன்னும் என் வாழ்க்கையில.. உன்கிட்ட இருந்து போனதுக்கப்புறம் அவதான் எல்லாம்.. ஃபர்ஸ்ட் லவ் ஜெஸ்ஸி அவ்ளோ ஈஸியா போகாது.. ஆனா அவளுக்கு நான் இல்ல.. அவளுக்கு அவ அப்பானா ரொம்ப புடிக்கும்.. தப்பா சொல்லல.. நல்ல விஷயம்தான்.. எவ்ளோ பேர் அந்தமாதிரி இந்த காலத்தில இருக்கான்... அவர் என்ன ஒத்துக்கமாட்டர்னு தெரிஞ்சே என்ன வேணாம்னு சொல்லிட்டு போய்ட்டா.. கல்யாணம் பண்ணிகிட்டானு நினைக்கிறேன்.. அப்படி இருந்தாலும் என்ன வேணாம்னு சொல்லிட்டு போய்ட்டா..'' இந்த காட்சி இப்போதும் பிரிந்த காதலர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும். ஃபீலிங்கில் பியானோ வாசிக்க வைத்துவிட்டேனா? 'உன்னை எனக்கு பிடிச்சிருக்கு. நான் உன்னை லவ் பண்றேன். ஆனா, நீ எனக்கு வேண்டாம்’ என்று சொல்லும் எத்தனை ஜெஸ்ஸிகள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள்? அப்பா, அம்மா தன்னை வெறுப்பதை விட காதலன் தன்னை வெறுத்தால் பரவாயில்லை என்று நினைத்து வெறுக்க வேண்டும் என்பதற்காகவே அலட்சியம் செய்யும் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள்? சம கால காதல் பதிவை அப்படியே அச்சு அசலாய் பதிவு செய்த விதத்தில் கௌதம் மேனன் முக்கியப் பங்கு வகிக்கிறார். ஜீவனுள்ள காதல் காட்சிகளில் மனதை லயிக்கச் செய்கிறார். ஆனால், 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் ஆகப் பெரிய சிக்கல் கிளைமாக்ஸ்தான். மூணு விதமான கிளைமாக்ஸ் பாதி ரசிகர்களுக்குப் புரியாமலே போய்விட்டது. அதற்காகவே இரண்டாம் முறையாக படம் பார்த்து புரிந்துகொண்டவர்களும் இருக்கிறார்கள். இந்தியில் பிளாப் ஆனதற்கு சொல்லப்படும் மிக முக்கிய காரணம் கிளைமாக்ஸ் தான் என சொல்லப்படுகிறது. கேரளா வீடு, தென்னை மரங்கள், போட் ஹவுஸ், பாடல் காட்சிகள், லொக்கேஷன்கள் என மனோஜ் பரமஹம்சாவின் கேமரா எல்லா அழகையும் அள்ளி வந்திருக்கும். மன்னிப்பாயா பாடல் உருக வைத்தது. ரஹ்மான் இசை மூலம் ரசிகர்களுக்கு காதலைக் கடத்தினார். சிம்பு, த்ரிஷா ஏற்கெனவே அலை படத்தில் நடித்திருந்தனர். ஆனால், இந்தப் படத்தில் ஹிட் ஜோடி ஆனார்கள். விரல் வித்தைக்காரர் சிம்பு இவ்வளவு அடக்கமாக அழகாக கிளாஸிக் நடிப்பை எந்த படத்திலும் கொடுத்ததில்லை. காட்டன் சேலையில் படுபாந்தமாக த்ரிஷாவைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். சிரிப்பும், தவிப்புமாக த்ரிஷா நடிப்பில் ஸ்கோர் செய்த படம். விடிவி கணேஷுக்கு அப்ளாஸ் அள்ளிய படம். சிம்புவின் தங்கையாக நடித்த தீப்தி 'துப்பாக்கி'யில் விஜய்க்கு தங்கையாக நடித்தார். பிறகு ஹீரோயினாக சின்ன சின்ன படங்களில் தெறமை காட்டியிருக்கிறார். சிம்பு - த்ரிஷா - கௌதம் மேனன் கெரியரில் மிக முக்கியமான படம் 'விண்ணைத் தாண்டி வருவாயா.' ஆனால், நம்ம கௌதம் இப்போது உற்சாகமாக இருக்கிறான். காரணம், சமீபத்தில் ஓர் அதிசயம் நடந்தது. திருமண வைபவ நிகழ்வில் கௌதமின் அம்மாவிடம் ப்ரீத்தி பேசியிருக்கிறாள். கௌதம் நம்பர் கேட்டிருக்கிறாள். கௌதம் அம்மாவுக்கு அவன் நம்பர் தெரியவில்லை. இதை அறிந்த கௌதம் ஃபேஸ்புக்கில் நம்பரை மெசேஜ் அனுப்பினான். அடுத்த நிமிடமே கால் செய்தாள். காதலர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். கௌதம் ஃபேன்டஸி கான்செப்ட்டில் சொன்ன அந்த செகண்ட் சான்ஸ் கிடைத்தே விட்டது. இந்த காதலர்கள் இனிதாய் இல்லறத்தில் நுழைய நான் முதல் ஆளாய் வாழ்த்து சொல்லிவிட்டேன். நீங்கள்? மான்டேஜ் மனசு இன்னும் சுழலும்... http://tamil.thehindu.com/opinion/blogs/மான்டேஜ்-மனசு-8-விண்ணைத்-தாண்டி-வருபவர்கள்/article7561360.ece?ref=relatedNews
 13. மான்டேஜ் மனசு 7 - அழகல்ல காதல்... காதலே அழகு! வஸந்த் இயக்கும் படங்கள் மனசுக்கு நெருக்கமானவை. ஒவ்வொரு படமும் செதுக்கி வைத்த சிற்பம் போல இருக்கும். மிக மென்மையாக கடந்துபோகும் அந்த கதாபாத்திரங்கள் ஏதோ ஒரு காலகட்டத்தில் நம் நிஜ வாழ்வில் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி சந்திக்கும் நபர்கள் சிலாகிக்கும் உறவாக மனதில் பதியமிடும். பொதுவாக வஸந்த்தின் படங்களில் பெண் கதாபாத்திரத்துக்கு தனித்துவம் இருக்கும். ஹீரோ - ஹீரோயின் கதாபாத்திர வடிவமைப்பு, லாஜிக் மீறல் பற்றிப் பேசப்படும் இந்த தருணத்தில் வஸந்த் பட ஹீரோயின்கள் அதை அநாயசமாக கடந்து போவார்கள். 'ஆசை' சுவலட்சுமி, 'ரிதம்' மீனா, 'சத்தம் போடாதே' பத்மப்ரியா என்று அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகும். இது வஸந்த்தால் மட்டும் எப்படி முடிகிறது? என்று யோசித்துப் பார்த்ததண்டு. அந்த கதாபாத்திரத்தை வடிவமைக்க எப்படி மெனக்கெட்டிருப்பார்? என்று மண்டையைப் பிய்த்துக்கொண்டதுண்டு. வஸந்த் ஒரு கதாபாத்திரத்துக்கு முதலில் ஆட்டிடியூட் என்ற ஒன்றை உருவாக்கிவிடுகிறார். அதுவே கதாபாத்திரத்துக்கான தேவையை பூர்த்தி செய்துவிடுகிறது. இதை ரொம்ப ரொம்ப லேட்டாக உணர்ந்தவன் நான். இதைப் புரிந்துகொள்வதற்காகவே வஸந்த் படங்ககளை நான் திரும்பத் திரும்பப் பார்ப்பதுண்டு. 'ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே!' படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கும்போதுதான் இது தமிழோட கதை மாதிரியே இருக்கே என்று ஆச்சர்யப்பட்டேன். யார் அந்த தமிழ் என்றுதானே கேட்கிறீர்கள்? தமிழ் - யாழினி காதல் சொல்லித் தீராது. சொல்லில் தீராது. டைம் மிஷினில் ஏறி 2009-க்குள் பயணிக்கலாமா? தமிழ் அப்போது கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தான். யாழினி முதலாமாண்டுக்கு முன்னேறி இருந்தாள். கல்லூரி ஆரம்பித்த முதல் நாளில் குதூகலமும், உற்சாகமுமாக பேருந்து நிலையம் நோக்கி விரைந்தான் தமிழ். அங்கு குவிந்திருந்த பெருங்கூட்டத்தில் தன்னையும் இணைத்துக்கொண்டான். அன்றைய காலைப் பொழுதை சுடிதார் அணிந்தவர்கள் அழகாக்கிக் கொண்டிருந்தனர். அதில் ஒற்றைப் பெண் மட்டும் தமிழை திரும்பத் திரும்பப் பார்க்க வைத்தாள். அமைதி தவழும் முகம், திருத்தமான உடை, அலட்டல் இல்லாத இயல்பான புன்னகை இழைந்தோடும் பார்வையால் தமிழை மெஸ்மரிசம் செய்தாள். திரும்பிப் பார்த்தவள் விரும்பிப் பார்க்க வேண்டும் என்று தமிழ் நினைத்தான். ஒரே பேருந்தில் முண்டியடித்து ஏறிய கூட்டத்தில் யாழினிக்கு இருக்கை கிடைத்தது. யாழினியின் பின் இருக்கையில் தமிழ் அமர்ந்தான். ஒருவருக்குப் பின் ஒருவர் தற்செயலாய் அமர்ந்தனர். அதற்குப் பிறகு, தற்செயல் என்று சொல்லமுடியாதபடி இரண்டு மூன்று மாதங்களாக தமிழ் யாழினிக்குப் பின் இருக்கையிலேயே அமர்ந்தான். தமிழ், யாழினியை கண்களால் அளவெடுக்கவில்லை. அழகாய் இருக்கிறாளா என்று மனசுக்குள் கேட்டுப்பார்க்கவில்லை. நல்லா சிரிக்கிறா... நல்லா டிரஸ் பண்றா என்று எதிலும் மயங்கவில்லை. அவள் முகத்தில் இருக்கும் அமைதி, பார்வையில் தெளிவு இருப்பதை கண்டுகொண்டான். இவள்தான் என் தேவதை. என் வளர்ச்சிக்கான உந்து சக்தி என்பதை உணர்ந்தான். அதற்கடுத்த இரண்டு மாதங்கள் யாழினியைக் காணவில்லை. அதற்காக தமிழ் தவிக்கவில்லை. ஆனால், எங்கே போய் விட்டாள் என கவலைப்பட்டான். ஒரு நாள் சைக்கிளில் யாழினி செல்வதைப் பார்த்து பின் தொடர்ந்து வீட்டைக் கண்டுபிடித்துவிட்டான். சில நாட்களுக்குப் பிறகு, ஒரு நிச்சயதார்த்த விழாவுக்கு சென்று வந்தவன் யாழினி வீட்டை நெருங்கினான். அப்போது யாழினி தன் தோழியிடம் தமிழைக் காட்டி ஏதோ சொல்லி சிரித்துக்கொண்டிருந்தாள். இதை எதேச்சையாகப் பார்த்த தமிழுக்கு பயங்கர கோபம். சைக்கிளை நிறுத்திவிட்டு, ஒரு ரூபாய் காய்ன் பாக்ஸுக்கு உயிர் கொடுத்தான். ''என்ன நினைக்குற உன் மனசுல... கை காட்டி கலாய்க்குறியா... இந்தா இங்கே என் விசிட்டிங் கார்டை வைக்குறேன். எனக்கு போன் பண்ணு'' என சொல்லிவிட்டு, பாக்கெட்டில் இருக்கும் செல்போனை எடுத்துப் பார்த்துவிட்டு சிரித்தபடி நகர்ந்தான். கொஞ்ச நேரம் கழித்து அந்த விசிட்டிங் கார்டை எடுத்திருப்பாளா? இல்லையா? என்ற எண்ணம் தொடர்ந்து அலைக்கழித்தது. மீண்டும் யாழினி வீட்டுப்பக்கம் என்ட்ரி ஆனான். அந்த விசிட்டிங் கார்டு அங்கேயே அடம் பிடித்துக்கொண்டிருந்தது. மீண்டும் ஒரு ரூபாய் காய்ன் பாக்ஸைத் தட்டினான். ''இப்போ நீ இதை எடுக்கலை? அவ்ளோதான்'' என்று பொய்க் கோபத்துடன் சத்தமாக சொல்லிவிட்டுப் போனான். இரண்டு நாட்களுக்குப் பிறகு ஹாய் என்று தமிழுக்கு ஒரு மெசேஜ் வந்தது. ''சொல்லு. ஏன் இவ்ளோ லேட்?'' ''நான் தான்னு எப்படி கண்டுபிடிச்சீங்க?'' ''நான் உனக்கு மட்டும்தான் நம்பர் கொடுத்தேன். ஊருக்கெல்லாமா கொடுத்தேன்?'' உரையாடல் இப்படியே தொடர்ந்தது. யாழினியிடம் பேச ஆரம்பித்த பிறகே தமிழுக்கு போட்டோகிராபி மீது ஆர்வம் வந்தது. கேமரா கண்களால் விதவிதமாய் புகைப்படங்கள் எடுத்தான். ஸ்ட்ரீட் போட்டோகிராபியில் தமிழை அடிச்சிக்க ஆளில்லை என்பது போல தனித்திறமையை வளர்த்துக் கொண்டான். புகைப்படக்கலை அவனுக்குள் இருக்கும் ரசனையை வெளிக்கொண்டு வந்தது. பார்த்தவர்கள் பாராட்டத் தொடங்கி இருந்தனர். அக்டோபர் 26. தமிழ் பிறந்த நாள். யாழினியின் வரவை அதிகம் எதிர்நோக்கியிருந்தான். ஆனால், யாழினி தங்கை மட்டுமே வந்திருந்தாள். அந்த பிறந்த நாளை தமிழால் பெரிதாக சிறப்பாகக் கொண்டாட முடியவில்லை. ''மிஸ் யூ'' என்று மெசேஜ் தட்டினான். ரிப்ளை வந்தது. செல்பேசியில் அழைத்தான். '''நீ இல்லாத இந்த பிறந்த நாள் ஏதோ மாதிரி இருக்கு. 21 வருஷமா என் அப்பா அம்மோவோட பிறந்த நாள் கொண்டாடி இருக்கேன். அப்போ எனக்கு ஒண்ணும் தெரியலை. நீ வந்த பிறகு நீ இல்லாம, பிறந்த நாளை என்னால சந்தோஷமா கொண்டாட முடியலை. ஒரு நிமிஷம் கூட உன்னை விட்டுப் பிரியக்கூடாதுன்னு நினைக்கிறேன். என் வாழ்க்கை முழுக்க நீ வேணும் யாழினி.'' யாழினி தமிழ் பேசுவதை கலங்கிய கண்களோடு கேட்டுக் கொண்டிருந்தாள். சட்டென்று காதலைச் சொன்ன தமிழுக்கு உடனடியாக பதில் சொல்லவில்லை. ஆனால், சில நாட்களிலேயே காதலைச் சொன்னாள். ஊரார் காதலை ஊட்டி வளர்த்தால் தன் காதல் தானாய் வளரும் என்று நினைத்தான். நண்பர்களின் தம்பி - தங்கைகளின் பள்ளிப் பருவத்துக் காதல்களுக்கு ஆலோசனை கூறி சுமூகமாய் மூடுவிழா நடத்தினான். உண்மையான காதலுக்கு கூடவே நின்று திருமணம் செய்து வைத்தான். ஒரு தலைக் காதலாக இருந்தாலும், அதைக் கொண்டாடச் சொன்னான். சுற்றத்தையும் நட்பையும் அன்பால் அலங்கரித்தான். இப்போது தமிழ் - யாழினி காதலுக்கு ஐந்து வயது. யாழினி வீட்டில் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை ஆரம்பித்துவிட்டார்கள். அடுக்கடுக்கான போட்டோக்களைக் காட்டிவிட்டு பிடிச்சிருக்கா? என்று கேட்டபோது, அதிராமல், அழாமல் தமிழைக் காதலிக்கிறேன் என்று உறுதியாக சொன்னாள். தமிழை அவர்கள் முன் நிறுத்தினாள். ''பையன் அழகா இருக்கான்னு காதலிக்காதே. அழகு கொஞ்ச நாள்ல போய்டும்'' யாழினியின் அத்தை சொன்னாள். ''நீங்க பார்க்கிற பையன் எப்படிப் பார்த்துப்பான்னு உங்களால சொல்ல முடியுமா? எது நடந்தாலும் என் வாழ்க்கைக்கு உங்களால உத்தரவாதம் கொடுக்க முடியுமா?'' யாழினியின் கேள்விகளுக்கு அத்தை பதில் பேச முடியாமல் வாயடைத்துப் போனாள். தொடர்ந்து யாழினி பேசினாள். ''தமிழ் என்னை நல்லா பார்த்துப்பான். அவனை விட யாரும் என்னை நல்லா கவனிச்சுக்க முடியாது. அவன் தான் என்னோட சரிபாதி. அவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா எப்பவும் உங்க முன்னாடி வந்து மூக்கை சிந்திட்டு இருக்க மாட்டேன்'' தீர்க்கமாக சொன்னாள். சாதி தடை என்று சொன்னதைக் கூட யாழினி காதில் வாங்கிக்கொள்ளவில்லை. அப்பா இல்லாத பொண்ணுன்னு செல்லம் கொடுத்தா இப்படி பேசுறியே என அத்தை சொன்னதையோ யாழினி சட்டை செய்யவில்லை. அதிர்ச்சி விலகாமல் பேசிய அம்மாவிடம், தமிழைப் பற்றி பொறுமையாக எடுத்துச் சொன்னாள். ஒரு வழியாக சம்மதம் வாங்கிவிட்டாள். வஸந்த்தின் 'ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே!' படத்தில் ஷாம் போட்டோகிராஃபர். ஷாம் தன் பிறந்த நாளில்தான் சினேகாவிடம் காதலைச் சொல்வார். ஆனால், சினேகா உன் மேல காதல் வரலை. ஆனால், உன்னைப் பிடிக்கும் என்று சொல்லிவிடுவார். இறுதியில், சினேகாவை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையிடம், ஷாமை காதலிப்பதாகச் சொல்வார். அவர் அப்பா மோகன் ராம் அதிர்ச்சியோடு கேட்கும்போது விளக்கம் கூறுவாள். இந்த சீக்வன்ஸ் அப்படியே தமிழ் - யாழினிக்கு நடந்திருக்கிறது. கமர்ஷியல் ரீதியில் பெரிதாய் போகாத படம் என்றாலும், யதார்த்தம் சார்ந்து எடுக்கப்பட்ட விதத்தில் 'ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே!' படம் தவிர்க்க முடியாதது. ஒரு தலைக் காதல், காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக ஆசிட் ஊற்றுதல், கொலை செய்தல், கடத்துதல் என்று காதலில் இப்போதும் துன்பியல் சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஒரு பெண் காதலிக்கவில்லை என்றால், வெறுத்துவிடாதீர்கள். பழி வாங்க புறப்படாதீர்கள். உங்கள் காதல் உண்மை. அப்படி இருக்கையில், ஒரு தலை காதலாக இருந்தாலும் எப்படி அந்த பெண்ணை வெறுக்க முடியும்? பழிவாங்க முடியும்? அந்த காதலி நலமுடன் வாழ மனப்பூர்வமாக உதவி செய்யுங்கள் என்பதுதான் நாயகன் ஷாம் வழியாக வஸந்த் சொல்வது. காதல் தோல்வி என்றால் அழிப்பதோ, தன்னை அழித்துக்கொள்வதோ சரியான முடிவில்லை என்று வஸந்த் அழுத்தமாகச் சொன்ன படம் 'ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே!' படத்தில் ராஜீவ் கிருஷ்ணா கதாபாத்திரம் முக்கியமானது. காதல் தோல்வியில் இருக்கும் ராஜீவ் எந்நேரமும் மதுவிலேயே மயங்கிக் கிடப்பார். தன் காதலிக்குத் திருமணம் என்றதும் கலங்கிப்போவார். நான் இருக்க வேண்டிய இடத்துல இன்னொருவனா? என அழுகையும் ஆற்றாமையுமாக பொங்குவார். ''அவங்க லவ் பண்ணது இல்லைன்னு சொல்லிட்டா நாம விரும்பினது இல்லைன்னு ஆயிடுமா? மனசுக்குப் பிடிச்ச பொண்ணுக்கு ஹெல்ப் பண்றதை ஏன் நிறுத்தணும்? நீங்க அவங்களை லவ் பண்ணீங்க. ஆனா, அந்த பொண்ணு உங்களை லவ் பண்ணலியே. அதுக்காக வெறுக்கக்கூடாது. வெம்பக்கூடாது. அவங்க நோ சொன்னதுக்காக நீங்க வெறுத்துட முடியுமா? உங்க லவ் பொய் ஆகிடாது? நீங்க என்ன பண்ணணும் தெரியுமா? உங்க லவ்வருக்கு ரொம்ப பிடிச்ச பிரசன்டை வாங்கிட்டுப் போய் கல்யாணத்துல கலந்துகிட்டு வருங்காலத்துல எந்த உதவியாவது தேவைப்பட்டா கேளுங்கன்னு முழு மனசோட ஆல் தி பெஸ்ட் னு சொல்லிட்டு வரணும். இதான் ஒரு தோத்துப்போன காதலனுக்கு அழகு'' என்று ஷாம் சொல்வார். ஜெயாரே ஷாமை ஒரு தலையாகக் காதலிக்கிறார். ஷாம் காதலிக்கவில்லை என்று தெரிந்ததும், பழிவாங்க அவர் வேலை செய்யும் விளம்பரக் கம்பெனிக்கே வருகிறார். இல்லாததும் பொல்லாததுமாக ஷாம் பற்றி சொல்லி டோஸ் வாங்க வைக்கிறார். இதற்கு ஷாமின் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும்? ''அரை டிரவுசர் போட்ட பசங்க டீச்சர் டீச்சர் இவன் என்னைக் கிள்ளிட்டான்னு சொல்ற மாதிரி கிட்டிஷா பண்றீங்க'' என்று ஜெயாரேவிடம் சொல்லிவிட்டு வேலை பார்க்க ஆரம்பிப்பார். ஜெயாரேவால் வேலை பறிபோனபோதும் கூட ஷாம் நிதானம் தவறவில்லை. ''உண்மையான காதல்னா என்னன்னு தெரியுமா உனக்கு? நிஜமா என்னை லவ் பண்ணியிருந்தா நான் நல்லா இருக்கணும்னுதான் நெனைச்சிருப்ப. என் லைஃபை கெடுக்குறதையே உன்னோட லட்சியமா வெச்சுக்காதே... அது உன்னையே அழிச்சிடலாம். தியானம் பண்ணு'' என்று அறிவுரை சொல்லிவிட்டு வருவார். ஷாமின் ஆட்டிடியூட் எப்படிப்பட்டது? உச்சமாக இன்னும் ஓர் உதாரணம்... ஷாம் காதலை ரிஜெக்ட் செய்ததற்காக சினேகாவை அவன் நண்பர்கள் வறுத்தெடுப்பார்கள். ஆனால், சரக்கடித்த போதும் சலம்பாமல், கண்ணியமாகப் பேசுவான். ''என்னடா கத்துவான்னு பார்த்தா புத்தன் மாதிரி பேசுறான்...'' ''அதுவே காதலனோட அவ வந்தா என்ன செய்வ?''னு விவேக் கேட்கிறார். ''அவளுக்கு என் மேல அந்த ஃபீலிங் வரலைன்னு சொன்னா. அவ லைஃபை கெடுக்கணுமா? இல்லை ஆசிட் ஊத்தணுமா? இல்லை அவளையே நினைச்சு தாடி வளர்த்துக்கிட்டு என் லைஃபை அழிச்சிக்க சொல்றியா... இதுல நான் எதையும் பண்ணமாட்டேன். நம்மோடது ஒன் சைட் லவ். என் லவ்வுக்கு அவ நோ சொல்லிட்டா. அதனால என் லவ் பொய் ஆகிடுமா? எனக்கு அவ மேல சத்தியமா கோபம் இல்லைடா. அவ மேல இருக்குறது லவ்...லவ்...லவ்...தான். நான் அவளை விரும்பினேன். விரும்புறேன். விரும்பப் போறேன். அவ யாரை வேணா காதலிக்கட்டும். யாரை வேணா கல்யாணம் பண்ணிக்கட்டும். எனக்குப் பிடிச்சது மாறாது. அம்பாசமுத்திரத்துல இருக்குறவனும் நான் தான். மெட்ராஸ்ல இருக்குறவனும் அதே ஆள்தான். குடிச்சாலும், குடிக்கலைன்னாலும் அதே ஆள்தான். அவ என்னை லவ் பண்ணாலும், பண்ணலைன்னாலும் நான் மாறமாட்டேன்'' என ஷாம் சொல்வார். ''காதலிக்கவில்லைன்னு சொன்ன உடனே விரும்பினவங்களை எக்ஸ்பிரஸ் வேகத்துல எப்படி வெறுக்க முடியும்? நீ என்னை விரும்பினாதான் நான் உன்னை விரும்புவேன்னு சொல்றது வியாபாரம். உனக்கு என்னை பிடிச்சிருக்கோ இல்லையோ எனக்கு உன்னை பிடிச்சது மாறாதுன்னு சொல்றதுதான் உண்மையான காதல். அதைத்தான் நான் ஃபாலோ பண்றேன்'' என்று சினேகாவிடம் சொல்லும் ஷாமின் கண்ணியடத்தை நாமும் கடைபிடிக்கலாமே? ஆட்டிட்யூட் என்பது நீங்கள் உங்களை எப்படி எடுத்துச் செல்கிறீர்கள், நீங்கள் மற்றவர்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள், நீங்கள் உலகத்தை உங்களுடன் எப்படி அவ்வப்போது ஒப்பிட்டுக்கொள்கிறீர்கள் என்பதுதான். இந்த மனப்பாங்கையும், அணுகுமுறையும் வளர்த்துக்கொண்டால் போதும் என்பதை உணர்த்திய விதத்தில் 'ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே!' மிக முக்கியமான படம். ஒரு நல்ல செய்தி... போட்டோகிராபர் தமிழ் இப்போது வேலை தேடிக்கொண்டிருக்கிறான். வேலை கிடைத்த அடுத்த மாதமே நிச்சயதார்த்தம். ஆறு மாதத்தில் கல்யாணம். இதுதான் யாழினி குடும்பத்தினர் விதித்திருக்கும் நிபந்தனை. இதோ கையில் ஃபைலோடு வேலை தேடிப் புறப்பட்டுவிட்டான் தமிழ். சென்னை அண்ணா சாலை பேருந்து நிறுத்தத்தில் பயோ டேட்டா, கேமராவுடன், க்ரீட்டிங் கார்டு வைத்திருக்கும் 27 வயது இளைஞனை பார்த்தீர்கள் என்றால் தயங்காமல் ஆல் தி பெஸ்ட் சொல்லுங்கள். அவன் தமிழ் தான். க்ரீட்டிங் கார்டு எதற்கு? என்கிறீர்களா? இன்று யாழினி பிறந்த நாள். கடையில் ஏதோ ஒரு க்ரீட்டிங் கார்டு கொடுப்பதில் தமிழுக்கு உடன்பாடில்லை. அவனே அளவாக க்ரீட்டிங் கார்டு தயாரித்துவிட்டான். அதுவும் ஒன்று இரண்டல்ல. 16. ஒரு பெரிய க்ரீட்டிங் கார்டில் மற்ற 15 க்ரீட்டிங் கார்டும் அடங்கும் அளவுக்கு அளவாக அழகாக செய்திருக்கிறான். 16 க்ரிட்டீங் கார்டிலும் தமிழ், யாழினியைக் கிளிக்கிய படங்கள்தான். கூடவே, யாழினியின் தோழிகளிடம் இருந்து அவளுக்கே தெரியாமல் பெற்ற வாழ்த்துகள். இந்த சர்ப்ரைஸ் வாழ்த்தால் ஒற்றை கணத்தில் யாழினியின் கண்களில் பரவசத்தைப் பார்க்க வேண்டும் என்பதே தனக்குக் கிடைக்கும் வரம் என்கிறான் தமிழ். தமிழுக்கு ஒரு ஆல் தி பெஸ்ட்டும், யாழினிக்கு ஒரு வாழ்த்தும் சொல்லிவிடுங்களேன்... தீராக் காதலர்களை வாழ்த்தினால் இன்னும் மகிழ்வேன் நான்..! மான்டேஜ் மனசு இன்னும் சுழலும்... http://tamil.thehindu.com/opinion/blogs/மான்டேஜ்-மனசு-7-அழகல்ல-காதல்-காதலே-அழகு/article7502993.ece?ref=relatedNews
 14. அனிதாக்களின் காலனிகள்! நட்பு காதலாக மலரலாமா? பார்த்த உடனே வரும் காதலைக் காட்டிலும், பழகிப் பார்த்து வரும் காதல் நிலைக்கும்தானே என்பது பேசிப் பேசி தீர்த்தாலும், இன்றும் விவாதத்துக்கு உரியதாகவே இருக்கிறது. என்னைக் கேட்டால், தோழி காதலியாவது ஆகச் சிறந்த வரம் என்றுதான் சொல்வேன். ராஜா - ஜெனி காதல் அப்படிப்பட்டதுதான். மிகச் சிறந்த காதலர்களாக, தம்பதிகளாக அவர்கள் வாழ்வதை ரசித்துக்கொண்டே இருக்கலாம். எந்த மிகைத்தன்மையும் இல்லாமல் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள். அவர்கள் வாழ்வதைப் பார்க்கும்போது நமக்கும் காதலிக்கத் தோன்றும். 'எப்போ பார்த்தாலும் அடுத்தவன் காதலைப் பத்தியே சொல்றியேப்பா. உன் காதலைச் சொல்லு' என்று உங்களில் சிலர் கேட்பது எனக்கும் கேட்கிறது. நான் ரெடி. ஆரம்பிச்சிடலாமா? டீச்சர் ட்ரெய்னிங் முடித்த கையோடு ஒரு கல்விப் பத்திரிகையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தருணம் அது. இரண்டு நாள் விடுப்பில் ஊருக்கு வந்தேன். நண்பன் நேசமணி சோளிங்கர் அழைத்தான். ஏன்? எதற்கு? என்று எந்த கேள்வியும் கேட்காமல் பைக்கின் பின்னால் அமர்ந்துகொண்டு வழக்கம்போல் பேசிக்கொண்டே வந்தேன். கொஞ்ச தூரம் போனதும் ஒரு வீட்டின் முன்பு நிறுத்தினான். யார் வீடு என்று புரியாமல் கேட்டேன். ''சொல்றேன் வாடா.'' ''உன் சொந்தக்காரங்க வீட்டுக்கு நான் வந்தா சங்கடமா இருக்கும். வேணாம்டா.'' ''என் ஃப்ரெண்ட் வீடுதான் வாடா.'' பைக்கில் இறங்கி வீட்டுக்குள் வந்த பிறகுதான் தெரிந்தது அவனுடன் படித்த ஒரு பெண்ணின் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறான் என்று. அப்போதுதான் அவளைப் பார்த்தேன். அன்றலர்ந்த மலராய் டெய்லரிங் மிஷினில் துணி தைத்தபடி இருந்தாள். அவள் அம்மா 'வாங்கப்பா' என்று வரவேற்றார். அவள் அம்மாதான் முதலில் பேசினார். ''நீ என்னப்பா படிச்சே?'' ''திரூர்ல டீச்சர் ட்ரெய்னிங் படிச்சேன்க்கா...'' ''நீயுமா... என் பொண்ணும், மணியும் பெங்களூரு போய் படிச்சாங்க. எப்போ வேலை வரும்னே தெரியலை. பக்கத்துல இருக்குற மெட்ரிகுலேஷன் ஸ்கூலுக்குதான் இப்போ வேலைக்கு போய்க்கிட்டு இருக்கா. ரெண்டு லட்சம் செலவு பண்ணி படிக்க வெச்சதுக்கு மாசம் ரெண்டாயிரம் சம்பளம் வாங்குறா. என்ன பண்றது?'' என அங்கலாய்த்துக்கொண்டார். இந்த உரையாடல் எதிலும் கவனம் செலுத்தாமல் இருந்தாள் அவள். ''அம்மு. உன்கிட்ட பேசதானே வந்திருக்கான். உன் பாட்டுக்கு அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?'' மீண்டும் திரும்பி என்னிடம் பேசினார். ''மணி என் புள்ளை மாதிரிப்பா. அவன் கொடுக்கிற தைரியம்தான் இப்போ மனசுக்கு திருப்தியா இருக்கு. எப்படியாவது இவளுக்கு ஒரு வேலை கிடைச்சிட்டா என் பாரம் குறைஞ்சிடும்'' எல்லா கதைகளையும் ஒன்று விடாமல் சொல்ல ஆரம்பித்துவிட்டார். மணிக்கு பெரிதாய் சாதித்ததைப் போல முகத்தை வைத்துக்கொண்டான். ''அம்மா... போதும் மொக்கை போட்டது. போய் காஃபி கொண்டு வா'' என்று அவள் துரத்தி புலம்பல் எபிசோடில் இருந்து காப்பாற்றினாள். அதற்குப் பிறகு அளவாகப் பேசினாள். அழகாக சிரித்தாள். வேலை, படிப்பு என்று எல்லாம் விசாரித்தாள். அதோடு நான் சென்னை வந்துவிட்டேன். பெரம்பூரை அடுத்த அகரம் அமிர்தம்மாள் காலனி என் புகலிடம் ஆனது. அவளும் இங்கிலீஷ் சொல்லித்தரும் டீச்சராக வேலை செய்து கொண்டிருந்தாள். ஒரு காலை நேரத்துப் பொழுதில் என் செல்போன் சிணுங்கியது. அவள்தான் பேசினாள். ''ஹலோ நான் அம்மு பேசுறேன்.'' ''பேசுங்க.'' ''அது வந்து'' ''அய்யோ சும்மா விளையாட்டுக்கு அப்படி சொன்னேன். கலாய்க்கலை. சொல்லுங்க.'' ''என் டீச்சரோட அண்ணன் பொண்ணுக்கு நாளைக்கு பேச்சுப்போட்டி. என்னை பிரிப்பேர் பண்ண சொல்லிட்டாங்க. மணிகிட்ட கேட்டேன். உங்க நம்பர் கொடுத்து பேசச் சொன்னான்.'' ''என்னைக்கு போட்டி? என்ன தலைப்பு?'' ''நாளைக்கு போட்டி. தமிழகத்தில் இன்றைய கல்வி நிலை.'' ''அதெல்லாம் சரி. ஆனா, நாளைக்கு போட்டி வெச்சுக்கிட்டு இப்போ கேட்டா எப்படி? நான் எழுதி கொரியர்ல அனுப்பிச்சாலும் நாளைக்கு உங்க கைக்கு வருமான்னு தெரியலையே?'' ''ப்ளீஸ். என்ன பண்ணலாம்? என்னை ரொம்ப நம்புறாங்க. ஏதாவது பண்ணுங்களேன்.'' ''ஒண்ணு பண்ணலாம். நான் வேணும்னா உங்க நம்பருக்கு எஸ்எம்எஸ் பண்றேன். தங்கிலீஷ்லதான் அனுப்புவேன். அதை சேர்த்து கோர்வையா எழுதிப்பீங்களா?'' ''ஓ யெஸ். தாராளமா!'' 88 மெசேஜ் அனுப்பினேன். ஸ்பெஷலாய் வணக்கம் சொல்ல ஒரு கவிதை அனுப்பினேன். மறுநாள் மாலை போன் செய்தாள். ''நன்றி'' ''என்னாச்சு?'' ''செகண்ட் பிரைஸ்.'' ''சூப்பர். வாழ்த்துகள்.'' ''உங்களுக்குதான் நன்றி சொல்லணும். அதை நீங்க எழுதிக் கொடுத்து ஒரு முறை பேசிக் காட்டியிருந்தா கண்டிப்பா முதல் பரிசு வாங்கியிருப்பா. பிளஸ் ஒன் படிக்குற பொண்ணு. ஆனா, அவ வாங்கின முதல் பரிசு இதான்.'' ''சூப்பர்.'' ''மணிக்கு இப்படி ஒரு ஃப்ரெண்டா? ''என்று ஆச்சர்யம் அகலாமல் கேட்டாள். அப்போது ஆரம்பித்த மெசேஜ் சாட் மிகப்பெரிய நெருக்கத்தை வரவழைத்துவிட்டது. சன் மியூசிக்கில் அவளுக்குப் பிடித்த பாடல்கள் வந்தால் c sun music என்று மெசேஜ் தட்டுவாள். நானும் ரிப்ளை பண்ணுவேன். ஒரு கட்டத்தில் நான் காதலைச் சொன்னேன். ''ஃப்ரெண்ட்தான் நீ. காதலனா உன்னை பார்க்க முடியாது'' என்று கறாராக சொல்லிவிட்டாள். ''சரி. ஃப்ரெண்டாகவே நீ பழகு என்று அவளிடம் சொல்லிவிட்டேன்.'' ஆனால், அவள் நிச்சயம் காதலைச் சொல்வாள் என்ற நம்பிக்கை இருந்தது. நான் வேலை செய்யும் பத்திரிகையின் ஒரு பிரதியை அவளுக்கு அனுப்பினேன். என் கவிதைகள் படித்துவிட்டுப் பாராட்டினாள். அவளுக்காக கவிதை சொல்ல ஆரம்பித்தேன். படித்த கவிதைகள், பாதித்த கவிதைகள் எல்லாம் அவளுக்காக உருமாற்றம் செய்யப்பட்டு காதல் கவிதைகள் ஆயின. ஒரு கட்டத்தில் எழுதிய கவிதையா, படித்த கவிதையா என்று தெரியாத அளவுக்கு மாறிப் போனேன். * அழகான பரிசொன்றை அன்பளிப்பாய் தர ஆசை... உன்னை விட அழகாய் இன்னொன்றுக்கு என்ன செய்வது? என்று பிறந்த நாள் கவிதையாக வாழ்த்தட்டையில் எழுதித் தந்தேன். * பத்து நிமிடம் லேட்டாக போன் பேசினாலும் கோபித்துக்கொள்வாள். அதற்கும் கவிதை சொல்லி சமாதானம் செய்தேன். பத்து நிமிடம் தாமதமாய் வந்து பேசுவதற்கே கரித்துக்கொட்டுகிறாய் நீ... 23 வருடங்கள் தாமதமாய் வந்த உன்னை எதுவுமே சொல்லாமல் ஏற்றுக்கொள்கிறது என் காதல்... * உடல் தானம் செய்யவே ஆசைப்படுகிறேன் அன்பே! இடம் மாறி இருக்கும் இதயத்தை என்ன செய்ய? * உயிரோடு இருப்பதல்ல வாழ்க்கை. உயிர்ப்போடு அதுவும் உன்னோடு இருப்பதே வாழ்க்கை... இப்படி அனுப்பும் அத்தனை கவிதைகளையும் அவ்வளவு ரசிப்பாள். * ''உன்னைபோல என்னை யாரும் நேசிக்க முடியாது என சொல்வாள். ஆனால், நீ என் ஃப்ரெண்ட் தான்''. சத்தியம் செய்யாத குறையாக பேசினாள். * அவள் அம்மா பிறந்த நாள்தான் மறக்க முடியாதது. சரியாக இரவு 12 மணிக்கு வாழ்த்துவோம். என்னதான் இருந்தாலும் வருங்கால மாமியாராச்சே என்று இமை மூடாமல் விழித்திருந்தேன். ஆனால், போனை எடுக்கவே இல்லை. 163 முறை முயற்சித்துப் பார்த்ததுதான் மிச்சம். காலையில் போனைப் பார்த்துவிட்டுப் பேசினாள். கடுப்பாகப் பேசினேன். ''உலகத்துலயே லவ் பண்ற பொண்ணோட அம்மாவுக்கு விஷ் பண்ண 163 மிஸ்டு கால் கொடுத்தவன் நீதான்டா'' என சிரித்தாள். நானும் அந்த சிரிப்பில் கரைந்துபோனேன். முருகன் கோயில், தக்கான்குளம், தீபாவளி பர்ச்சேஸ், பாஸ்போர்ட் புகைப்படங்கள் பரிமாற்றம், ஏடிஎம் சந்திப்புகள் என நீண்டன. தினமும் 500 மெசேஜ் அனுப்புவது அவ்வளவு சுலபமாய் தெரிந்தது. நள்ளிரவு 12 மணி பனியிலும் வாசலில் போர்வை போர்த்தியபடி மென்குரலில் என்னிடம் பேசினாள். 'சத்தம் போடாதே' படம் பார்த்துவிட்டு பத்மப்ரியாவைப் பற்றி அள்ளி விட்டேன். அவள் பொறாமையில் பொங்கினாள். ஒட்டுமொத்த பொஸஸிவ்னெஸையும் ஒன்றாகக் காட்டினாள். ஃப்ரெண்ட் ஃப்ரெண்ட் என்று மூச்சுக்கு மூச்சு சொன்னாலும் அவளுக்குள் இருக்கும் என்னை நான் கண்டுகொண்டேன். ஹமாம் சோப்புக்காரி எனக்காக டெட்டாலுக்கு மாறினாள். மார்க் ஷீட்டில் இஷ்டத்துக்கும் மார்க் அள்ளிப்போட்டு குழந்தைகளின் மனதை அள்ளினாள். ஆம்லெட்டை கருக வைப்பது, பாலில் சர்க்கரை போடாதது என்று தன்னை மறந்து அம்மாவிடம் திட்டு வாங்கினாள். ஒவ்வொரு முறை பத்திரிகை அனுப்பும்போதும் என் மேல் உனக்கு காதலா? எழுத்தின் மீது காதலா? என்று கேட்டு, செல்ல விவாதம் செய்தாள். உன் கையெழுத்தில் வந்த பிறகு என் விலாசம் கூட அழகாய் மாறிப் போனது என கவிதை தட்டினாள். என் கவிதைகளை ஒரு நோட்டில் வரிசையாய் எழுதி வைத்தாள். இப்படியே இரண்டாண்டுகள் கழிந்தன. அவளுக்கு அரசாங்க வேலை கிடைத்தது. நான்காயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் இருபத்து மூன்று வயது இளைஞன் என்ன ஆவேன்? ஓடினேன். பதறினேன். ''நம் காதல் செட்டாகாது. சாதி மாறி கல்யாணம் பண்ண என் அம்மா ஒத்துக்க மாட்டாங்க'' என்றாள். என் வேகமும், தீவிரமும் அவளை பயம் கொள்ள வைத்திருக்க வேண்டும். விடாப்பிடியாகக் கேட்டேன். ''ரெண்டு பேர் உயிர் போய் தான் நாம ஒண்ணு சேரணுமா?'' என்று தடாலடியாகக் கேட்டாள். மௌனம் காத்தேன். ''என் ஃப்ரெண்டா இருந்தா கடைசிவரைக்கும் என் கூட பேசவாவது முடியும். இல்லைன்னா அதுவும் முடியாது'' என்றாள். ''எனக்கு ஆயிரம் பேர் ஃப்ரெண்டா இருக்கலாம். நீ மட்டும் காதலியாவே இரு'' என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். செல்வராகவனின் 7 ஜி ரெயின்போ காலனி பார்க்கும்போதெல்லாம் எனக்கு அகரம் அமிர்தம்மாள் காலனியில் தங்கியிருந்த ஞாபகம் வரும். அவளுடன் பேச ஆரம்பித்தது, பழகியது எல்லாம் தான். அந்த வகையில் 7ஜி என்னால் மறக்க முடியாத படம். ரெயின்போ காலனியில் இருக்கும் கதிர் அங்கு புதிதாக குடிவரும் அனிதாவை காதலிக்கிறான். அனிதா காதலை மறுக்கிறாள். கதிரை யாரும் அவ்வளவு நல்லதனமாக பார்ப்பதே இல்லை. அனிதா அவனை அலட்சியம் செய்கிறாள். அவமானப்படுத்துகிறாள். ஒரு கட்டத்தில் நண்பனாக ஏற்றுக்கொள்கிறாள். மெல்ல மெல்ல காதல் வளர்கிறது. வீட்டில் தெரியவர, பிரச்னை வெடிக்கிறது. அனிதா கதிருடன் ஓடிப்போகிறாள். ஓர் இரவைப் பகிர்ந்துகொள்கிறார்கள். மறு நாள் ஒரு விபத்தில் அனிதா அகால மரணமடைய, கதிர் கதி கலங்கிப் போகிறான். மனநிலை பிறழ்ந்த கதிர் அனிதாவின் நினைவுகளோடே வாழ்கிறான். கதிராக அறிமுகம் ஆகியிருந்த ரவிகிருஷ்ணா கதாபாத்திரத்துக்கு ஏற்ற பொருத்தமான தேர்வு. அழுகை, சோகம், அவமானம் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு முகபாவத்தில் ஸ்கோர் செய்திருப்பார். அனிதாவாக சோனியா அகர்வால். சொல்லவே தேவையில்லை. படத்தின் ஜீவனே சோனியாதான். பொதுவாக செல்வாவின் பெரும்பாலான படங்களில் நாயகிக்கான முக்கியத்துவம் பெரிதும் இருக்கும். இதிலும் அப்படித்தான். எனக்கு ஒண்ணும் தெரியாது. நல்லா சாப்பிடுவேன். தூங்குவேன். எவனையாவது போட்டு அடிப்பேன் என்கிறார் ரவிகிருஷ்ணா. உனக்கு ஏதாவது ஒரு திறமை இருக்கும் என்று துருவித் துருவி கேட்கிறார் சோனியா அகர்வால். கடைசியாக, சுமன் ஷெட்டி மூலம் ரவிகிருஷ்ணாவுக்கு பைக்கை பிரிச்சு மேயத் தெரியும் என்று தெரிந்தபிறகு மெக்கானிக் வேலைக்கு தயார்படுத்துகிறாள். அதுவும் அந்த மெக்கானிக் தொழிற்சாலை டாய்லெட்டில் ''ஐ லவ் யூ கதிர். என்னை வெச்சு எப்படி காப்பாத்துவ. ஐ லவ் யூ கதிர்'' என்று சொல்லி பைக் பொருட்களை அசெம்பிள் செய்ய வைப்பாள். அந்த ஒற்றை சம்பவம் ரவிகிருஷ்ணாவை அப்படியே புரட்டிப் போடுகிறது. காலையில் பால் பாக்கெட் வாங்கவில்லை என்று கத்தும் அப்பா, நீ பிடிக்குறது சிகரெட் இல்லைடா. உன் அப்பனோட ரத்தம் என்று கறுவும் அப்பா, சமயம் கிடைக்கும்போதெல்லாம் கரித்துக்கொட்டும் அப்பா விஜயன் வேலை கிடைத்ததாக ரவிகிருஷ்ணா சொல்லும்போது அப்போ படிக்கலையா? என்று கேட்கிறார். எப்ப நான் சொல்லி கேட்டிருக்க. இப்போ மட்டும் என்ன புதுசா? என்று அப்பா விஜயன் வீண் ஜம்பம் செய்வார். ஆனால், இரவில் அவன் தூங்கிட்டான என்று உறுதிப்படுத்திக்கொண்ட பிறகு மனைவியிடம் பேசுவார். ''அவனுக்குள்ளயும் ஏதோ ஒண்ணு இருந்திருக்கு பாரேன். ஹீரோ ஹோண்டா கம்பெனியில் மெக்கானிக் வேலைன்னா சும்மாவா? என் பையனுக்கு ஹீரோ ஹோண்டாவுல வேலை கிடைச்சிருக்கு, நானாவது தூங்குறதாவது?'' தன் மனைவியிடம் சொல்வார். காசுக்காகத் தான் நம்ம அப்பா நம்மளை மதிக்கிறாருன்னு அவன் நெனைச்சிடக் கூடாது பாரு" விஜயன் பேசும் காட்சியில் கதாநாயகனுடன் சேர்ந்து நமது விழிகளிலும் பொங்குகிறது கண்ணீர். மறுநாள் காலையில் விஜயனே பால் பாக்கெட் வாங்கி வருவார். இன்னொரு காட்சி இன்னும் சிறப்பானது. ரெயின்போ காலனியே விழாக்கோலம் பூண்டிருக்கும். கதிரை பாடச் சொன்னால் ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா என்று படுமொக்கையாய் பாடுவார். காலனியே கொல்லென சிரிக்கும். இன்னொரு கட்டத்தில், சோனியா நிச்சயதார்த்தம் உறுதி ஆகும்போது கிண்டல், கேலிக்கு ஆளாகும்போது கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை பாடல் பாடி அசத்துவார். சினிமாவில் பொதுவாக ஒரு மேடையோ அல்லது பாடச் சொன்னாலோ திறமையை நிரூபிக்கிறேன் பேர் வழி என்று பாடி அசத்துவார்கள். இது எதிர்பார்த்தபடி அச்சரம் பிசகாமல் நிகழும். இதயம் முரளியில் இருந்து யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், செல்வா அதை மாற்றிக்காட்டினார். எதிர்பாராத தருணத்தில் நாயக பிம்பத்தை செதுக்கினார். இப்படி 7ஜி படத்தை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். கலாசார ரீதியில் சில அதிர்ச்சிகளை ஏற்படுத்தக் கூடிய காட்சிகள் இருப்பதாக சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம். ஆனால், கதைப்போக்கில் அந்த குற்றச்சாட்டு காணாமல் போய் விடுகிறது என்பதுதான் உண்மை. சொல்ல மறந்துவிட்டேன். ஒரு நிமிஷம் ப்ளீஸ். காலங்கள் மாறின... காட்சிகள் மாறின... பிளஸ் ஒன் படிக்கும்போது பேச்சுப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற அந்த பெண் இப்போது டி.சி.எஸ்ஸில் வேலை செய்கிறாள். இதோ சென்ற வாரம் தான் என் குழந்தை இசையின் முதல் பிறந்த நாளைக் கொண்டாடி இருக்கிறேன் நான். அவள் எப்படி இருக்கிறாள் என்று மட்டும் தெரிந்துகொள்ள வேண்டாமே... ப்ளீஸ்... http://tamil.thehindu.com/opinion/blogs/மான்டேஜ்-மனசு-6-அனிதாக்களின்-காலனிகள்/article7429923.ece?ref=relatedNews
 15. மான்டேஜ் மனசு 5 காதல் கொண்டவர்களின் கதை! மனசுக்கு சுகமில்லாதபோது செல்வராகவன் படங்களைப் பார்ப்பது என் வழக்கம். அப்படி ஒரு மழை நாளில்தான் 'காதல் கொண்டேன்' படம் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் பிளஸ் 2 முடித்த தருணத்தில் காதல் கொண்டேன் ரிலீஸாகி இருந்தது. படம் பார்த்துவிட்டு வந்த என் அண்ணன் ஈஸ்வரன் 'படம் பிரமாதம்' என்று சொல்லிக்கொண்டிருந்தான். அவ்வளவு சீக்கிரம் எந்தப் படத்தையும் ஓஹோ என சொல்லமாட்டான். வகுப்பறையில் தூங்கிக் கொண்டிருக்கும் தனுஷை எழுப்பும் புரொபசர் , ''அந்த கணக்கை சால்வ் பண்ணு'' என திட்டி தீர்ப்பார். எந்த அலட்டலும் இல்லாமல் கணக்கு போட்டுவிட்டு கடைசி பெஞ்ச்சில் தூங்குவான் தனுஷ் என சிலாகித்துக்கொண்டிருந்த சமயத்தில், 'காதல் கொண்டேன்' பார்த்தே ஆவது என திட்டமிட்டேன். முதல் முறை படம் பார்த்தபோது வாவ் என ஆச்சர்யப்பட்டேன். மீண்டும் மீண்டும் பார்க்கும்போதுதான் இன்னும் இன்னும் பிடித்தது. கல்லூரி முடித்த பின் 'காதல் கொண்டேன்' பார்க்கும்போது எனக்கு மலர் - ஆனந்த் ஞாபகம் வந்துபோனதை தவிர்க்க முடியவில்லை. ஆனந்தும், மலரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். படிப்பு, பேச்சு, கவிதை என எல்லாவற்றிலும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் போட்டி போடுவார்கள். பல சமயங்களில் ஆனந்த் வெற்றிவாகை சூடுவார். அப்போதெல்லாம் மலர் கோபித்துக்கொண்டு சென்று விடுவார். ''இந்தா மலர். உனக்குதான் இந்த கோப்பை. நடுவர் ஏதோ தப்பா சொல்லிட்டாங்க. நீ கவலைப்படாதே. இந்தா நீயே வெச்சுக்கோ'' என்று ஆனந்த், மலரின் கைகளில் கோப்பையை திணிப்பார். ''போடா டக்கால்டி. நீ விட்டுக்கொடுத்து நான் இந்த பரிசை வாங்க வேணாம்'' என்று மலர் சென்று விடுவார். ஒரு நாய்க்குட்டியைப் போல மலரின் பின்னால் ஆனந்த் சென்றுகொண்டிருப்பான். ஒருவழியாக இருவரும் சமாதானமாகி பேசிவிடுவார்கள். ஆனால், எல்லாம் அடுத்த போட்டி நடக்கும் வரை தான். கம்பன் கழகம், தமிழ் வளர்ச்சி கழகம், கல்லூரிப் பட்டிமன்றங்கள் எல்லாவற்றிலும் மலர் - ஆனந்த் ஜோடிக்கு வெற்றிகள் அதிகம். சின்ன சின்ன ரசிகர் பட்டாளமும் உண்டு. இந்த ஜோடியைப் பார்த்து ஆச்சர்யப்படாதவர்கள் இல்லை. மலர் ஆனந்த்தை நண்பனாகப் பார்த்தாள். ஆனந்த் வீட்டுக்கு செல்வாள். அவன் தங்கைகளோடு பழகுவாள். ஆனால், ஆனந்த் மலரை காதலியாகப் பார்த்தான். கடைசிவரை அந்த காதலை சொல்ல முடியாமல் போனது. காதலை சொல்ல வரும்போது மலர் திருமண அழைப்பிதழை நீட்டினாள். ஆனந்தால் எதுவும் சொல்லமுடியவில்லை. நண்பர்கள், ஆனந்தின் தங்கைகள் எல்லாம் அரசல் புரசலாக ஆனந்த் - மலர் காதலைப் பேசி வந்தார்கள். ஆனால், அதைக் குறித்து ஆனந்த் வாய் திறக்கவே இல்லை. ஒரு கட்டத்தில் கேள்விப்பட்ட மலர், ''ஆனந்த். நீ என் நல்ல நண்பன். உன் கூட சண்டை போடலாம். ஜாலியா வம்பு பண்ணலாம். ஆனா, காதல், கல்யாணம்னு இருக்க முடியாது. ஒரு நிமிஷம் கூட அப்படி யோசிச்சதில்லை. தப்பா எடுத்துக்காதே. நீ என் நண்பன் மட்டும்தான்'' என சொல்லிவிட்டுப் போய்விட்டாள். ஆனந்தால் இதை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. என் காதல் இதுதான் என்றோ, மனபூர்வமாக உன்னை விரும்புகிறேன் என்றோ மலரிடம் சொல்ல எந்த பகிரங்க பிரயத்தனமும் செய்யவில்லை. கண்ணீரில் கரைந்துபோனான் ஆனந்த். மலர் வீட்டில் பார்த்த ஆணைத் திருமணம் செய்துகொண்டு சென்னையில் செட்டில் ஆனாள். அதற்குப்பிறகு ஆனந்த் வாழ்க்கை திசை மாறிப்போனது. தமிழ், இலக்கியம் எந்த பக்கமும் கவனம் செலுத்தவில்லை. 'காதல் கொண்டேன்' தனுஷைப் பார்க்க பார்க்க எனக்கு ஆனந்த் ஞாபகம் வந்தது. சோனியா அகர்வால் நன்றாக தேர்வு எழுதவில்லை என்பதற்காக விடைத்தாள்கள் இருக்கும் அறையையே எரித்துவிடுகிறார் தனுஷ். ஆனந்த் அப்படிப்பட்டவன் அல்ல. ஆனால், கல்லூரி படிக்கும்போது தான் படிக்கும் பாடத்துக்கே கேள்வித்தாள் தயாரிப்பான். அதை தானே திருத்துவான். மலர் மதிப்பெண் குறைவாக வந்தால்அழுது வடிவாள். அதைத் தாங்க முடியாது என்பதற்காக மலருக்கே மதிப்பெண்களை அள்ளிப் போடுவான். ''நான் சொன்னேன்ல. உன்னை விட அதிக மார்க் வாங்கி நான் ஜெயிச்சுட்டேன்ல. எங்கடா ட்ரீட்'' என்று மலர் கேட்டதும், தயங்காமல் கேட்டதை வாங்கிக் கொடுப்பான். இப்படி சில விஷயங்கள் இயல்பாக 'காதல் கொண்டேன் 'படத்தை நினைவூட்டின. ஆனால், 'காதல் கொண்டேன் 'எப்போதும் கொண்டாடப்பட வேண்டிய படம் என்பது என் தனிப்பட்ட எண்ணம். தனுஷுக்கு இது இரண்டாவது படம். 20 வயதில் இப்படிப்பட்ட கேரக்டரா? என்று இப்போதும் ஆச்சர்யம் மட்டுமே அகலாமல் இருக்கிறது. வினோத் கேரக்டரில் தனுஷ் தனித்துத் தெரிகிறார். திவ்யாவாக நடித்த சோனியா அகர்வாலுக்கும், ஆதியாக நடித்த சுதீப்புக்கும் அறிமுகப்படம். செல்வராகவன் மீது தனிப்பட்ட மரியாதை ஏற்பட இந்தப் படம் மிக முக்கிய காரணம். பாலியல், கற்பு, பாலியல் கல்வி குறித்து மிக நீண்ட விவாதங்கள் எழுந்த சமயம் அது. கற்பு குறித்து குஷ்பு பேசியதும் சர்ச்சையைக் கிளப்பிய தருணம். ஆனால், ஓரமா போய் சண்டை போடுங்கப்பா என்று சொல்லிவிட்டு, எதை பேசத் துணிகிறோமோ அதை படத்தில் தன் காட்சிமொழியில் உணர்த்தியவர் செல்வராகவன். 'துள்ளுவதோ இளமை' படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதிய செல்வராகவன் இயக்கத்தில் அதிகாரபூர்வமாக வெளிவந்த முதல் படம் 'காதல் கொண்டேன்'. அனாதை ஆசிரமத்தில் வளரும் தனுஷ் இன்ஜினீயரிங் படிக்க நகரத்துக்கு வருகிறான். தனுஷைப் பார்த்து எல்லாரும் தெறித்து ஓடுகிறார்கள். கல்லூரியில் யாரும் பக்கத்து இருக்கையில் அமராமல் பதறி விலகுகிறார்கள். தாழ்வு மனப்பான்மையில் இருக்கும் தனுஷுக்கு சோனியா அகர்வால் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தித் தருகிறாள். அவன் இருப்பை உணர்த்துகிறாள். தனுஷுக்கு சோனியா மீது காதல் மலர்கிறது. தனுஷின் அடையாளம் மாறுகிறது. செமினாரில் பேப்பர் பிரசன்டேஷனில் பின்னி எடுக்கிறான் தனுஷ். தனுஷ் சோனியாவிடம் காதலை சொல்லத் துடிக்கிறான். அப்போது, தான் ஆதியைக் காதலிப்பதாக தனுஷிடம் சோனியா கூறுகிறாள். அதுவும் தனுஷ் மூலமாக ஆதி இதை தெரிந்துகொள்கிறான். ஒரு கட்டத்தில், ஆதிக்கும், சோனியாவுக்கும் காதல் கடிதங்களை கொடுக்கும் கொரியர் பாயாக மாறுகிறான். சோனியாவின் காதல் அப்பா ஶ்ரீகாந்துக்குத் தெரிய, ஆதி வீட்டை எச்சரிக்கிறார். ஆதிக்கு உதவுவதாக சொல்லி, சோனியாவை யாருமில்லா இடத்துக்கு அழைத்துச் சென்று விடுகிறான் தனுஷ். தனுஷ் - சோனியாவைத் தேடி ஆதி வருகிறான். தனுஷ் ஏற்கெனவே இரு கொலைகளைச் செய்த குற்றவாளி என்பது தெரிய வருகிறது. ஆதி - தனுஷ் மோதலில் சோனியா சிக்கிக் கொள்கிறாள், அவளைக் காப்பாற்றும் முயற்சியில் மரத்தின் கீழ் ஆதியும் தனுஷும் விழுகிறார்கள். இருவரையும் தன் இரு கைகளில் தாங்கிப் பிடிக்கிறாள் சோனியா. ''அவன் சாகணும். அவனை விட்டுடு'' என்று சொல்கிறான் ஆதி. அழுகையுடன் விடமால் இருக்கிறாள் சோனியா. வலி கலந்த புன்னகையுடன் கையை விடுவித்துக்கொண்டு கீழே விழுந்து உயிர் பிரிகிறான் தனுஷ். தனுஷ் உலகம் எப்படிப்பட்டது? அனாதை ஆசிரமத்தில் படித்து வளரும் தனுஷ் அங்கிருக்கும் சிறுவர்களை குளிப்பாட்டுகிறான். சோறு போடுகிறான். இன்னும் கொஞ்சம் என்று கேட்டும் குழந்தைக்கு எந்த மறுப்பும் இல்லாமல் தருகிறான். அழும் குழந்தைக்கு வாஞ்சையோடு பால் புட்டி தருகிறான். லாரியில் வரும் பழைய துணிகளில் ஒரு பேன்ட்டுக்காக சண்டை போடுகிறான். ஆட்டோக்காரனிடம் அடிவாங்கி, கல்லூரிக்குள் நுழைகிறான். புரொபசர் எகத்தாளமாக, ''நீ ஸ்டூடண்டா? கோட்டாவில் சீட்டு கிடைச்சா, இங்கே வந்துட்டு தாலி அறுக்குறாங்க'' என்று அலுத்துக்கொள்கிறார். இரவில் சர்வர் வேலை பார்த்துவிட்டு அசந்து வகுப்பறையில் தூங்கும் தனுஷை பாடம் நடத்தும் புரொபசர் எழுப்புகிறார். ''என்ன பண்ணிகிட்டு இருக்கே? ஃபிரீ சீட்டு, ஃபிரீ சாப்பாடு கொடுத்துடுவாங்க. என்ன இழவுக்கு இங்கே வந்த. வெட்கமா இல்லை. இந்த கணக்கு தெரியுமா? உனக்கு தெரியாதுன்னு தெரியும். எதுக்குமே நீ லாயக்கு இல்லை. அங்கே போய் ஒரு தொடப்பைகட்டை மாதிரியாவது நில்லு'' என்பார். ஆறு புத்தகங்கள், இரண்டு நாள் பிரப்பேர் செய்து வந்த கணக்கு என பில்டப் கொடுப்பார். 2 நிமிடங்களில் அந்த கணக்கை செய்துமுடிப்பார் தனுஷ். கோட்டாவில் வந்தால் கோட்டுவா விடத்தான் லாயக்கு என்பது பொதுப்புத்தியா? அந்த புத்தியை நெற்றிப்பொட்டில் அறைந்ததைப் போல சொல்லும் படம். சோனியா வீட்டுக்கு குரூப் ஸ்டடிக்கு வரும் தனுஷ் கதவைத் தாழிடும்போது புரியாமல் சின்ன கலவரத்துடன் பார்க்கிறாள் சோனியா. மெத்தையில் ஓடி ஆடி விளையாடி குளிர்பானங்கள், ஸ்நாக்ஸ் என ரவுண்டு கட்டி பாத்ரூம் போய் களைத்துப் படுத்து உறங்கும் தனுஷுக்கு என்ன தேவை? மறுநாள் காலையில் அதை தனுஷே சொல்கிறார். ''உனக்கு ஏதாவது பிரச்னையா?'' என்று சோனியா கேட்கிறாள். ''இல்லயே நான் சந்தோஷமா இருக்கேன். நீதான் என் கூடவே இருக்கியே'' என்று சொல்கிறான். சட்டை இல்லாமல் சோனியா அருகில் தூங்கும் தனுஷை மடியில் கிடத்தி தலை வருடுகிறாள் சோனியா. அப்போதே கண்ணீரில் கெட்டது கரைந்து போய்விட்டது. ''எனக்கு இது போதும்டா. உன் கூட இருக்கணும். அவ்ளோதாம் புரிஞ்சுகிட்டா போதும். கூடவே இருந்தால் போது, நாய்க்குட்டி போல இருக்கேன். ஒரு மூலையில இருந்துக்கிறேன். கேட்டதெல்லாம் கொண்டு வர்றேன். ''நீ ஆதியை லவ் பண்றதா நினைக்குற? அதெல்லாம் இல்லடா. உன்னை ஹாஸ்பிடல்ல சேர்த்தது நன்றிக்கடன். அதுக்கு தேங்க்ஸ் சொல்லிடு. அதைப் போய் லவ் பண்றதா நினைக்குற மக்கு. நமக்குள்ள இருக்குறதுதான் லவ். எனக்கு ஒண்ணுன்னா துடிச்சுப் போற பாரு. அதான் லவ்'' என்பான். சோனியா, ''நீ என் ஃப்ரெண்ட் டா. லைஃப் புல்லா உன் கூட இருக்க முடியாது. உனக்குப் புரியாது'' என்கிறாள். ஆனால், அதே சோனியா இன்ஸ்பெக்டர் டேனியல் பாலாஜியிடம் பேசும்போது, '' என் வினோத் அப்படி கொலை பண்ணி இருக்கமாட்டான் சார். சின்ன வயசுலயே பல கொடுமைகளை அனுபவிச்சுட்டான் சார். அவன் அப்பாவி. இதோ ஆதி பண்ணான்னு சொல்லுங்க நான் நம்புறேன்'' என்கிறாள். இதில் எது காதல்? என்பதை நீங்களே புரிந்துகொள்ளுங்கள். மீண்டும் ஆனந்தும், மலரும் மனதுக்குள் வந்து போனார்கள். மலர் இல்லாத வாழ்வை நினைத்துப் பார்க்கக் கூட விரும்பாத ஆனந்த் இதுவரை திருமணம் செய்துகொள்ளவே இல்லை. மலருக்கும் மகிழ்ச்சி கிட்டவில்லை. திருமணத்தில் கசப்பு படர, விவாகரத்து செய்துவிட்டு மகனே வாழ்க்கை என நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார். http://tamil.thehindu.com/opinion/blogs/மான்டேஜ்-மனசு-5-காதல்-கொண்டவர்களின்-கதை/article7392183.ece?ref=relatedNews
 16. 'பிரேம' அத்தியாயங்கள் ஓய்வதில்லை! அகிலன் செல்போனில் அழைத்தான். ஹலோ என்றதும், ஒரு குட் நியூஸ் என்று குழந்தைக்கே உரிய குதூகலத்தோடு சொன்னான். ''எதிர்பார்த்த மாதிரி வேலை கிடைச்சிடுச்சா அகிலா?'' ''இல்லை அண்ணாத்த. வீட்ல ஓகே சொல்லிட்டாங்க. எனக்கும், திவ்யாவுக்கும் ஒரு வருஷத்துல கல்யாணம்.'' ''சூப்பர் டா. அஞ்சு வருஷம் போராடி ஜெயிச்சுட்டே.'' ''திவ்யா ஹேப்பி அண்ணாத்த. 'சீக்கிரம் வேலை தேடு. ஆறு மாசத்துல நிச்சயதார்த்தம் பண்ணிக்கலாம்'னு சொல்றா. ரெண்டு மூணு இடத்துல வேலைக்கு சொல்லியிருக்கேன். எப்படியும் இந்த மாசமே சேர்ந்திடுவேன்.'' ''சந்தோஷமா இருக்குடா. ட்ரீட் கிடையாதா?'' ''ஊருக்கு வாங்க. பார்த்துக்கலாம்'' என்று போனை கட் செய்தான். அவன் முகம் முழுக்க புன்னகை பரவியிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். * 'பிரேமம்' மலையாள சினிமா பார்த்துவிட்டு அறைக்கு வந்து மான்டேஜ் மனசை அலைபாய விட்டபோது, சட்டென நினைவுக்கு வந்த அகிலன் உடனான சமீபத்திய செல்போன் உரையாடல் அனுபவம்தான் இந்த அத்தியாயத்தின் ஆரம்பப் பகுதி. 'பிரேமம்' படம் பார்த்துக்கொண்டிருந்தபோதே எனக்கு அகிலன் முகம் தான் மனதுக்குள் வந்துபோனது. அகிலன் கதைதான் 'பிரேமம்' என்றில்லை. ஆனால், கிட்டத்தட்ட அதுதான். 'ஆட்டோகிராப்' மாதிரி தமிழ் சினிமா பாணியில் உருவான மலையாள சினிமா 'பிரேமம்.' அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் நிவின் பௌலி, அனுபமா பரமேஷ்வரன், சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடித்துள்ளனர். பிளஸ் 2 படிக்கும் மேரிக்காக வயது வித்தியாசமே இல்லாமல் நிறைய பேர் வரிசை கட்டி நின்று காத்திருகிறார்கள். அலுவா நதிக்காரை மேரியால் அழகாகிறது. சைக்கிள், பைக் என்று எல்லா விதத்திலும் ஒரு கூட்டமே மேரியை விரட்டுகிறது. நிவின் பௌலி மலையாளத்தில் தப்பு தப்பாய் ஒரு காதல் கடிதம் எழுதி மேரிக்கு கொடுக்க நினைக்கிறார். மேரியின் அப்பாவுக்கு பயந்தே மற்ற ஆண்கள் சிதறி ஓடுகிறார்கள். ஒரு கட்டத்தில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, காதலைச் சொல்லப் போகும் நிவின் பௌலியிடம் தன் காதலனை அறிமுகப்படுத்துகிறார் மேரி. அழுகை, சோகத்துடன் அந்த காதல் தோல்வியைக் கடக்கிறார் நிவின் பௌலி. கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போது நிவின் பௌலி ஜூனியர்களை ரேகிங் செய்கிறார். அப்படி ஒரு பெண்ணை மடக்கி. என்ன கோர்ஸ் என்று கேட்க, ''நான் மலர். கெஸ்ட் லெக்சரர்'' என்கிறார். ''பிரின்சிபாலிடம் போட்டுக் கொடுக்காதீங்க'' என்கிறார் நிவின். கிளாஸ் எடுக்கும் மலரை சைட் அடிக்கிறார். மலருக்கும் நிவின் பௌலியைப் பிடித்துப் போகிறது. மல்லிகைப்பூ வாங்கித் தரச் சொல்கிறார் மலர். நிவின் வாங்கித்தரும் மல்லிகையுடன் கோயிலுக்கு செல்கிறாள். நிவின் அண்ட் கோவுக்கு டான்ஸ் சொல்லித் தருகிறார். கல்ச்சுரலில் நிவின் டீம் அசத்தி அப்ளாஸ் வாங்குகிறார்கள். எதிர்பாராதவிதமாக, மலருக்கு விபத்து நிகழ்கிறது. நடந்த எல்லாவற்றையும் மலர் மறந்துவிடுகிறார். மலருக்கும், அவரது கஸினுக்கும் கல்யாணம் நடக்கிறது. மலரை மறக்க முடியாமல் நிவின் பௌலி தவிக்கிறார். அதற்குப் பிறகு காஃபி அண்ட் கேக் கஃபே முதலாளியாகிறார் நிவின் பௌலி. பிறந்த நாள் கேக் வாங்க வருகிறார் ஒரு பெண். இரண்டாவது சந்திப்பில் ''என்னை அடையாளம் தெரிகிறதா'' என்கிறார். ''இல்லை'' என்கிறார் நிவின் பௌலி. ''நான் செலின்'' என்றதும் சின்ன சங்கடத்துடன் சிரிக்கிறார் நிவின் பௌலி. மேரியின் தங்கையாக சிறுமியாக இருந்தவர் கல்லூரி படித்து முடித்து 22 வயது பெண்ணாக வளர்ந்து நிற்கிறார். அடுத்த சந்திப்பில், ''கல்யாணம் செய்துகொள்ளலாமா? ''என்று நிவின் கேட்கிறார். ''எனக்கு இந்த வாரம் நிச்சயதார்த்தம்'' என்கிறார் செலின். கோபத்தில் அந்த இடத்தை விட்டு போகிறார் நிவின். அந்த நிச்சயதார்த்தம் நின்றுபோகிறது. நிவின் பௌலிக்கும், செலினுக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு மலர் வருகிறார். பழைய நினைவுகள் அவருக்கு திரும்ப வந்துவிடுகின்றன. ஆனால், அதை நிவினுக்கு தெரியப்படுத்தவில்லை. கலங்கிய கண்களுடன் மலரை எதிர்கொள்கிறார் நிவின். நிவின் - செலின் திருமணம் இனிதே நடக்கிறது. மலையாள சினிமாவில் மிகப்பெரிய ஹிட் சினிமா 'பிரேமம்'. வசூல் ரீதியில் சக்கை போடு போடுகிறது. மலையாளத்திலும் பெரிய பட்ஜெட் படங்கள் வரும் என்ற நம்பிக்கையை 'பிரேமம்' விதைத்திருக்கிறது. மலையாள அழகுடன் கூடிய இயற்கை, இசை, காட்சிகள், காதல் தருணங்கள் , கதாபாத்திர வடிவமைப்புகள் இனிமையான அனுபவத்தைத் தருகின்றன. கன்னத்தில் பருக்களுடன் மலர் டீச்சராக வரும் சாய் பல்லவியும், தேன்கூட்டு முடி மேரியாக வரும் அனுபமா பரமேஷ்வரியும் மனதில் நிறைகிறார்கள். நிவின் பௌலியின் ரியாக்‌ஷன்களுக்கு அப்ளாஸ் அள்ளுகிறது. * அகிலனின் மூன்று அத்தியாயங்களை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். பள்ளிப் பருவம் முடியும் தருவாயில் ஹேமாவை காதலித்தான். அகிலன் வீட்டு வழியாகதான் ஹேமா டியூஷன் செல்வாள். அந்த வயதில் எதையும் பேசவோ, சொல்லவோ தோணவில்லை இருவருக்கும். ஆனால், ஹேமாவையே அவன் சுற்றிச் சுற்றி வந்தான். இந்தி டியூஷன் செல்லும் ஹேமாவுக்கு பின்னாலேயே அகிலன் செல்வான். டியூஷன் முடிந்து வீட்டுக்கு வரும்போதும் அதே போல பின்தொடர்வான். ஒருவரை ஒருவர் பார்ப்பார்கள். சிரித்துக்கொள்வார்கள். அவ்வளவுதான். அந்த வயதில் அகிலன் காதலிக்கிறான் என்றதும், நண்பர்கள் அகிலனை கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். ஹேமாவைப் பார்த்ததும் அகிலன் பெயர் சொல்லி கலாய்க்க ஆரம்பித்தார்கள். ஒரு நாள் ஹேமா தன் தங்கையோடு பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்தாள். அகிலன் நண்பர்களோடு தெருமுனையில் பேசிக்கொண்டிருந்தான். ஹேமா உடன் வருவது யார்? என்று அகிலனைக் கேட்டு நண்பர்கள் நச்சரித்தனர். ''அவ தங்கச்சி டா'' என்றான் அப்பாவியாய். ''மச்சினிச்சின்னு சொல்லு'' என்றதும் ஆமாம் என்று தலையாட்டினான். உடனே, மச்சினிச்சி வர்ற நேரம் மண்மணக்குது பாடலைப் பாடி கலாய்க்க, ஹேமா செருப்பைக் காட்டுவிட்டு கோபத்துடன் சென்றுவிட்டாள். மறுநாள் அகிலன் அதேபோல செருப்பைக் காட்ட, ஹேமா அழுதாள். அதோடு அந்தக் காதலுக்கு மூடு விழா நடந்துவிட்டது. அதற்காக அகிலன் ரொம்பவே வருத்தப்பட்டிருக்கிறான். * மூன்று வருடங்கள் கழித்து அகிலனுக்கு அடுத்த காதல் முளைத்தது. அவன் அப்பாவின் வழி உறவில் ஒரு பெண்மணி வீட்டுக்கு வந்திருந்தார். அகிலன் அம்மா ''இவன் தான் என் பையன்'' என்று அறிமுகப்படுத்தினாள். பார்வையால் அங்குலம் அங்குலமாய் அளவெடுத்த அந்த பெண்மணி சில நிமிடங்களில், ''என்ன மருமகனே'' என்று அழைத்ததும் அகிலனுக்கு இருப்புகொள்ளவில்லை. அதிர்ச்சியோடும் ஆச்சர்யத்தோடும் தயங்கியபடியே ''சொல்லுங்க அத்தை'' என்றான். ''என்ன படிக்கிற?'' ''காலேஜ் ஃபர்ஸ்ட் இயர்.'' ''என் பொண்ணு கீதா உன்னை மாதிரியே கலையா இருப்பா. புத்திசாலி'' என்று கீதா புராணம் பாடிக்கொண்டிருந்தார். அத்தை எதற்கு தேவையில்லாமல் கீதா பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாள் என்று அகிலனுக்குப் புரிந்துவிட்டது. அப்போ மருமகன் ஆகிட்டமாதிரிதான் என்று நினைத்துக்கொண்டான். அடுத்த மாசம் சேகர் வீட்டு கிரஹப்பிரவேசம். நாங்க குடும்பத்தோட வர்றோம். நீங்களும் மருமகனோட வந்திடுங்க என்று அகிலனின் அப்பாவிடம் சொல்லிவிட்டு போனார். மருமகன் என்று அழைத்தது, மகள் பற்றி ஹிஸ்டரி வரலாறு சொன்னது, அடுத்த மாசம் சந்திக்கலாம் என்று சொன்னது எல்லாம் அகிலனை ஏதோ செய்தது. கீதா எப்படி இருப்பாள்? என்று கற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டான். அந்த கிரஹப்பிரவேச நாளுக்காக அகிலன் காத்துக்கொண்டிருந்தான். அந்த நாளும் வந்தது. ஆர்வக்கோளாறில் விடியற்காலை மூணு மணிக்கே சைக்கிளில் கிளம்பி சேகர் மாமா வீட்டுக்கு புறப்பட்டான். சேகர் மாமா வீட்டைச் சார்ந்தவர்கள் விளக்கு எடுத்து கோயிலுக்கு வந்துகொண்டிருந்தனர். கூட்டமாய் இருக்கும் பெண்களில் யார் அந்த கீதா என்று அகிலனின் பார்வையில் துழாவினான். விடியற்காலை நான்கு மணி இருட்டிலும், சின்னதாய் தெற்றுப்பல் தெரிய, பட்டுப்பாவாடை சட்டையில் ஜொலித்த அந்தப் பெண் தான் கீதா என்பதை தெரிந்துகொண்டதும், வீட்டுக்கு வந்துவிட்டான். மாப்பிள்ளை கணக்காய் டிரஸ் செய்துகொண்டு பெற்றோருடன் சேகர் மாமா வீட்டுக்குச் சென்றான். சாப்பிட்ட பிறகு, மாடியில் உட்கார்ந்துகொண்டு கீதாவையே கவனித்துக்கொண்டிருந்தான். வீட்டுக்குள் நுழைந்த கீதா சட்டென்று மாடிக்கு வந்தாள். அதை அகிலன் எதிர்பார்க்கவேயில்லை. ''எப்படி இருக்கீங்க அத்தான்'' என்றாள் கீதா. அகிலனுக்கு சந்தோஷத்தில் தூக்கிவாரிப்போட்டது. நம்மை விட வேகமா இருக்காளே என்று நினைத்தவனாய் பேச ஆரம்பித்தான். ''என்னை எப்படி தெரியும்?'' ''அம்மா சொன்னாங்க. உங்களைப் பார்க்கணும்னுதான் இங்கே வந்தேன். உங்களை அத்தான்னு கூப்பிடவா? மாமான்னு கூப்பிடவா?'' ''நீ எப்படி கூப்பிட்டாலும் பிடிக்கும்'' போன் நம்பர் பரிமாற்றம் நிகழ்ந்தது. திருவள்ளூரில் இருக்கும் அகிலன் திருவாரூரில் இருக்கும் கீதாவுக்காக உருக ஆரம்பித்தான். கீதா பின்னர் சேகர் மாமா வீட்டுக்கு வந்தாள். அகிலனை தினம் தினம் பார்க்கலாம் என்பதற்காகவே இரண்டு மாதங்கள் அங்கேயே தங்கி கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்க ஆரம்பித்தாள். ஒரு நாள் அகிலன் தன் வீட்டுக்கு கீதாவை அழைத்துச் சென்றான். வீட்டைச் சுற்றிப் பார்த்த கீதா, உடனே போகலாம். போகலாம். வேலை இருக்கு என்று அவசரப்படுத்தினான். அந்த வீடு, வசதி பார்த்ததும் கீதாவின் முகம் சுருங்கிப்போனது. கீதாவின் மனநிலையை அகிலன் அறியாதவன் அல்ல. ''என்னாச்சு கீதா'' ''உங்களுக்கும் எனக்கும் செட்டாகாது'' ''ஏன்?'' ''ஸ்டேட்டஸ். பணம்.'' ''அதான் முக்கியமா? நான் சம்பாதிக்கமாட்டானா?'' கீதா அமைதியாக இருந்தாள். ''என்னைப் பிடிச்சிருக்கா இல்லையா?'' ''விருப்பம் இருக்கு. ஆனா, என்னால முழுசா சம்மதம் சொல்ல முடியலை.'' ''இவ்ளோ நாள் பழகினதுக்கு என்ன அர்த்தம்?'' ''பிடிச்சிருக்கு. அது வயசுக்கோளாறு. அதை வெச்சுகிட்டு மட்டும் வாழ முடியாது.'' ''கடைசியா என்ன சொல்ற?'' ''நமக்கு செட்டாகாது. ஒத்துப்போகாததை ஏன் தொடரணும்?'' அத்தோடு அகிலன் - கீதா காதல் முடிவுக்கு வந்தது. * மூன்று வருடங்கள் கழித்து திவ்யாவை சந்தித்தான் அகிலன். அகிலனும், திவ்யாவும் காதலிக்க ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்தக் காதல் தான் இப்போது கல்யாணத்தில் முடியப்போகிறது. சொல்லவரும் செய்தி இதுவல்ல. கீதா இப்போது டாக்டர். அவள் தங்கை சௌந்தர்யா ஃபேஸ்புக்கில் அகிலனுக்கு ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட் கொடுத்திருந்தாள். அக்செப்ட் செய்த உடனே ''ஹலோ அத்தான்'' என்று பேச ஆரம்பித்தாள். அக்காவுக்கு கல்யாணம். அடுத்து எனக்குதான். நீங்க என்ன பண்றீங்க? என்று சாட் செய்கிறாள். பதில் ஏதும் சொல்லாமல், இந்த விளையாட்டை ரசித்தபடியே திவ்யாவிடம் நடந்தை சொல்லி மகிழ்கிறான் அகிலன். சௌந்தர்யா என்ன ஆகப் போகிறாள்? அகிலன் என்ன செய்யப் போகிறான்? பொறுத்திருந்து பார்க்கலாம். 'பிரேமம்' நிவின், அகிலன் அனுபவங்களைக் கடந்த, அல்லது அந்த அனுபவங்களை நட்பு - உறவுகள் மூலம் உணர்ந்த உங்களைப் போல நானும் வெயிட்டிங். மான்டேஜ் மனசு இன்னும் சுழலும். http://tamil.thehindu.com/opinion/blogs/மான்டேஜ்-மனசு-4-பிரேம-அத்தியாயங்கள்-ஓய்வதில்லை/article7350494.ece?ref=relatedNews
 17. ஆள் மாற்றிடும் 'அட்டகத்தி' வியூகம்! நானும் புருஷோத்தும் பெரம்பூரை அடுத்த அகரம் அமிர்தம்மாள் காலனியில் அறை எடுத்து தங்கியிருந்தோம். புருஷோத் அருகில் உள்ள ஒரு ஹார்டுவேர் கம்பெனியிலும், நான் ஒரு பத்திரிகையிலும் வேலை செய்ய நாட்கள் நகர்ந்தன. வாழ்க்கையில் எந்த சுவாரஸ்யமுமே இல்லை என்று அடிக்கடி புருஷோத் சொல்லிக்கொண்டே இருப்பான். அந்த மாதிரி நீண்...ட பிரசங்கம் நடத்திய ஒரு மாலைப்பொழுதில் வந்த ஃபோன் கால் புருஷோத்தை புரட்டிப்போடும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ''ஹலோ... கார்த்தி இருக்காரா?'' என்றது எதிர்முனையில் ஒரு பெண்ணின் குரல். ''நான் அவர் தம்பி பேசுறேன். அண்ணன் ரெடியாகிறார். நீங்க?'' ''நான் காயத்ரி.. திண்டுக்கல்... என் அண்ணாவும் உங்க அண்ணாகூட தான் ஆர்மியில வேலை செய்றார். அண்ணா கிளம்பிட்டார். உங்க அண்ணாவை சென்ட்ரல் வந்து பிக்கப் பண்ணிக்க சொன்னார்.'' ''ஓ.கே. சொல்லிடறேன்.'' இந்த உரையாடலுக்குப் பிறகு முகம் முழுக்க புன்னகையுடன் இருந்தான் புருஷோத். அதைத் தொடர்ந்த செல்போன் அழைப்புகளால் பின்னாளில் காதலாகி கசிந்துருகினான். இரவு எட்டு மணிக்கு அறைக்கு வரும் புருஷோத் ஒன்பது மணிக்கு பேச ஆரம்பிப்பான். காலை ஆறு மணிக்குதான் போனை வைப்பான். வேலை செய்யும் நேரத்தை விட செல்போனில் பேசும் நேரம் அதிகமாகிவிட்டது அவனுக்கு. இ-மெயிலில் புகைப்படங்கள் அனுப்புவது, முத்தம் தந்தே செல்போனை ஈரமாக்குவது, மெசேஜ் மூலம் கொஞ்சுவது என்று மூன்றே மாதத்தில் முற்றிலுமாக மாறிப்போனான். திருமணம் குறித்த சிந்தனைகள் எல்லாம் பெருக்கெடுத்து ஓட ஓரம்பித்த தருணத்தில் குழந்தைகள் விளையாட்டு பொம்மைகளை உடைப்பதைப் போல, அவள் காதலை உடைத்துவிட்டுப் போய்விட்டாள். எனக்கு நிறைய பெண் தோழிகள் இருக்காங்க என்று புருஷோத் இஷ்டத்துக்கும் அள்ளிவிட்டான். தன்னை 'அட்ட'ன்னு பொண்ணு நெனைச்சிடக்கூடாது. கெத்தா நினைக்கணும் என்பதற்காகவே அந்த பில்டப். அதையே காரணமாகக் கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் செல்போன் தொடர்பை துண்டித்துக்கொண்டாள் காயத்ரி. அதற்காக புருஷோத் வருத்தப்பட்டிருக்கிறான். ஆனால், கலங்கவோ கண்ணீர்விடவோ இல்லை. காரணம் கேட்டால், தன் நடத்தைகளுக்கு ஷாலினியை துணைக்கு அழைத்துக்கொள்வான். ''ஷாலினி என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா?'' ''யார்றா.. அஜித் மனைவியா?'' ''இல்லை. டிவியில வருவாங்களே டாக்டர் ஷாலினி.'' மனநல மருத்துவர் ஷாலினி ஏதாவது ஒரு சேனலில் உட்கார்ந்துகொண்டு காதல் பற்றியும், ஆண் பெண் பற்றியும் பேசிக்கொண்டிருந்த காலகட்டம் அது. ''என்ன சொன்னாங்க?'' ''ஒரு பையன், பொண்ணை முதன் முதலா பார்க்கும்போது தெரிஞ்சோ தெரியாமலோ கழுத்துக்கு கீழே பார்க்கிறான். அதே மாதிரி பொண்ணு பையனைப் பார்க்கும்போது அவனோட தோள்களைப் பார்க்கிறா? இது ஏன்?'' ''நீயே சொல்லுடா.'' ''தான் குழந்தையை சுமக்குற அளவுக்கு தெம்பு இருக்கான்னு பையன் யோசிப்பான். தன் குடும்பத்தை காப்பாத்துற அளவுக்கு வலிமை இருக்கான்னு பொண்ணு யோசிப்பா.'' ''அதுக்கும், நீ சொல்றதுக்கும் என்னடா சம்பந்தம்?'' ''ஒரு பொண்ணு போய்டுச்சேன்னு அப்டியே விழுந்திடமாட்டேன். அடுத்து முயற்சி பண்ணுவேன். இதெல்லாம் தப்பே இல்லை. 'ஒரு மனுஷன் அவன் வாழ்க்கையில ஒரே பொண்ணை காதலிச்சா நல்ல விஷயம். ஆனா, ஒன்றுக்கும் மேற்பட்ட காதல் சாத்தியம். ஏழு பேரை கூட உண்மையா காதலிக்க முடியும்'னு ஷாலினி சொல்றாங்க.'' ''அடுத்த காதலுக்கு ரெடியாகிட்ட போல?'' ''நான் ரெண்டுதான் பண்ணியிருக்கேன். அப்படி பார்த்தா இன்னும் அஞ்சு காதல் பாக்கி இருக்கு'' அவன் எந்த நேரத்தில் இப்படி சொன்னான் என்று தெரியவில்லை. காயத்ரி அவன் வாழ்வில் இல்லையென்ற பிறகு விமலா வந்தாள். புருஷோத் அண்ணன் கார்த்திக்கு நிச்சயதார்த்தம் நடந்த தருணம் அது. கல்யாண வீட்டில் அழகான பெண்கள் இல்லாமலா? அந்த கூட்டத்தில் ஒரே ஒரு பெண் மட்டும் அங்குமிங்கும் ஓடியாடி வேலை செய்துகொண்டிருந்தாள். புருஷோத் வந்ததில் இருந்து அந்த பெண்ணையே கவனித்துக்கொண்டிருந்தான். குழந்தைகளைக் கொஞ்சுவது, வருபவர்களை உபசரிப்பது என பம்பரமாய் சுழன்ற அப்பெண் அண்ணிக்கு சொந்தம் என்று தெரிந்துகொண்டதும், சகஜமாக கலாய்க்க ஆரம்பித்தான். ஒரு வார்த்தை கூட அந்தப் பெண்ணிடம் பேசவேயில்லை. அடுத்த நாள் அந்தப் பெண்ணே புருஷோத்திடம் செல்போனில் பேசினாள். ''ஹலோ. நான் விமலா பேசுறேன்.'' ''பேசுங்க.'' ''எதுக்கு என்னை கலாய்ச்சிட்டே இருந்தீங்க?'' ''இதுக்குதான். இப்படி பேசணும்னுதான் பண்ணேன்'' என்றான். விமலா, புருஷோத்துக்கு தேவதையாகிப் போனாள். ஒரு முறை பெரம்பூரில் இருந்து அரக்கோணம் செல்லும்போது எதேச்சையாக இருவரும் சந்தித்துக்கொண்டார்கள். இவர்கள் ரொமான்ஸ் தாங்க முடியாமல் பொறாமையில் பொங்கி, நான் அடுத்த பெட்டிக்கு மாறியது தனிக் கதை. ஒரு கட்டத்தில், விமலா வீட்டுக்கும், புருஷோத் அண்ணி வீட்டுக்கும் ஏதோ பங்காளிப் பிரச்னை. இரு குடும்பங்களுக்கும் பேச்சுவார்த்தை இல்லாமல் போக, அந்த கோபத்தை புருஷோத் மீது கொட்டிவிட்டாள் விமலா. அர்த்தமே இல்லாத காரணத்துக்காக புருஷோத்தின் அந்தக் காதலும் புஸ் ஆனது. அதற்குப் பிறகு வனிதா வந்தாள். அதற்கடுத்து கோசலா வந்தாள். ஒன் சைட், டூ சைட் எதுவும் பிரச்சினை இல்லை. பிடிச்சா கல்யாணம் பண்ணிப்போம். இல்லைன்னா பிரிஞ்சிடுவோம் என்று தெளிவாய் இருந்தான். இத்தனை காதலை சந்தித்ததற்காக புருஷோத் பெருமைப்பட்டானே தவிர, வருத்தப்படவில்லை. அந்த தெளிவு எப்படி கிடைத்தது? என்றபோதுதான் ஆச்சர்யமாக இருந்தது. 'அட்டகத்தி' படம் பார்த்த போது புருஷோத்தை தவிர்க்கவே முடியவில்லை. ஒவ்வொரு காட்சியிலும் புருஷோத்தே திரையில் ஆக்ரமித்துக் கொண்டிருந்தான். காதல் புனிதமானது. தெய்வீகமானது. காதலில் தோற்றவர்கள் வாழத் தகுதியற்றவர்கள் என்றெல்லாம் கூட தமிழ் சினிமா பல்வேறு பிம்பங்களைக் கட்டமைத்திருக்கிறது. 'தேவதாஸ்' படத்தில் ஆரம்பித்து இப்போது வரைக்கும் காதல் தான் பிரதானமாக இருக்கிறது. காதல் பூவைப் போல. ஒரு முறை உதிர்ந்துட்டா மறுபடி ஒட்டவைக்க முடியாது என்று விக்ரமன் ஃபீலிங்க்ஸில் பியானோ வாசிக்கும் அளவுக்கு 'பூவே உனக்காக' படத்தில் வசனம் எழுதி இருக்கிறார். இப்படிப்பட்ட வழித் தோன்றல்களில் 'அட்டகத்தி' தனித்துத் தெரிந்தது. காதல் ஒரு உணர்வுதான். ஆனால், அதற்காக அழுது புலம்பி வாழ்வை இழக்க வேண்டாம் என்பதை அழுத்தமாக அதேசமயம் கலகலப்பாக சொன்ன விதத்தில் இயக்குநர் ரஞ்சித் கவனம் ஈர்த்தார். 'அட்டகத்தி' ஹீரோ தினேஷ் பார்க்கிற பெண்களுக்கெல்லாம் ரூட் விடுகிறார். பின்னால் சுற்றுகிறார். உண்மையாய் இருக்கிறார். ஆனால், அந்த காதல் கைகூடவில்லை என்பதற்காக உடைந்துபோய்விடவில்லை. உடனே அடுத்த காதலுக்கு தாவிச் செல்கிறார். ''ஒன் சைட் லவ் ஃபெயிலியர், காதல் தோல்வியில் தற்கொலை பண்ணிக்குறது எல்லாம் முட்டாள்தனம்டா'' என்று நண்பர்களிடம் சொல்கிறார் தினேஷ். காதலில் மூக்குடைபட்டதும், 'இப்போ என்னால எப்படி மச்சி போண்டா சாப்பிட முடியும்?' என போண்டாவைத் துப்பி ஃபீலிங்ஸ் காட்டிவிட்டு வீட்டுக்குச் செல்கிறார். ஆனால், நண்பர்களை அனுப்பிவிட்டு மீண்டும் கடைக்கு வந்து தனியாக போண்டாவை வாங்கி வாய்க்குள் தள்ளுகிறார். பக்கத்துவீட்டுப் பெண் ஐஸ்வர்யா பார்க்கிறாள் என்பதற்காக கராத்தே மாஸ்டரை பின்னி எடுப்பது, அதற்குப் பிறகு அதே மாஸ்டரிடம் அடிவாங்கி, ''வேணும்னே பழிவாங்கிட்டான்டா... மூச்சுவிட முடியலடா'' என கலங்குவது, 'அந்தப் பொண்ணு வருதுடா' என்று நண்பர்கள் சொன்னதும், உடனே கண்ணீர் துடைத்து கெத்து காட்ட தயாராவது என எல்லா பிரயத்தனங்களையும் அசால்ட்டாக செய்திருப்பார். பஸ்ஸில் எக்ஸ்போர்ட் வேலைக்கு செல்லும் இரு பெண்களையும் சைட் அடிப்பது, அதில் யாரைத் தேர்ந்தெடுப்பது என குழம்புவது, பக்கத்தில் இருந்தவன் அடிவாங்கியதும் என்னா அடி என பதறுவதுமாக தினேஷ் செம ஸ்கோர் செய்தார். நந்திதா தன்னைக் காதலிக்கவில்லை. தீனா என்கிற இன்னொரு நபரைத்தான் காதலித்தாள் என்று தெரிந்தபிறகு மழையில் நனைந்தபடி ''எனக்கு மட்டும் ஏன் இப்படில்லாம் நடக்குது?'' என பஸ் நிறுத்தத்தில் அழுது புலம்புகிறார். அந்த அழுகையும் சில நிமிடங்களே நீடிக்கிறது. அதற்குப் பிறகு சைக்கிளில் மோதி விழுந்த பெண்ணின் விழியில் நுழைந்து இதயம் திருடுவது என்று படம் முழுக்க காதலில் விழுபவராகவே இருக்கிறார். கடைசியில், சைக்கிளில் விழுந்த பெண்ணை காதல் கல்யாணம் செய்துகொண்டு ஒரு குழந்தைக்கு அப்பாவாகிறார். புருஷோத்தின் வாழ்க்கையும் கிட்டத்தட்ட இதுபோலதானே. சொல்ல மறந்துவிட்டேன். புருஷோத் இப்போது ஏடிஎம் கஸ்டமர் சர்வீஸ் இன்ஜனீயராக இருக்கிறான். பெரம்பூர் - கோயம்பேடு ஏடிஎம் சென்டர்களில் புருஷோத்தை பார்த்தால் கை குலுக்கி கங்கிராட்ஸ் சொல்லுங்கள். புருஷோத் -கோசலா தம்பதியினர் புரமோஷன் ஆகியிருக்கிறார்கள். இன்னும் ஏழு மாதங்களில் ஜூனியர் புருஷோத்தை பார்க்கலாம். மான்டேஜ் மனசு இன்னும் சுழலும்... http://tamil.thehindu.com/opinion/blogs/மான்டேஜ்-மனசு-3-ஆள்-மாற்றிடும்-அட்டகத்தி-வியூகம்/article7322245.ece?ref=relatedNews
 18. மான்டேஜ் மனசு 2 - இன்றும் நெஞ்சில் அழியாத கோலங்கள்! நாங்கள் மொத்தம் ஆறு பேர். கல்லூரி முடித்த தருணம் அது. தீபாவளியை முன்னிட்டு திரைப்படம் பார்க்கலாம் என்று திட்டம். கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் அஜித் நடித்த 'வரலாறு' வெளியாகியிருந்தது. கே.எஸ்.ரவிகுமார் பிறந்து வளர்ந்ததெல்லாம் எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள வங்கனூர் கிராமத்தில்தான். பத்து வயது வரைக்கும் அங்கேதான் பாட்டி வீட்டில் ரவிகுமார் வளர்ந்ததாக சொல்வார்கள். அதனாலேயே ரவிகுமார் நம்ம ஏரியா ஆள் என்ற பாசம் எங்கள் பக்கத்து கிராமங்கள் முழுக்க ஒட்டிக்கிடந்தது. அஜித் நடித்த படம் என்றால் இன்னும் சொல்லவா வேண்டும்? நான், மணி, உதயன், புருஷோத், சந்துரு, பாபு என்று ஆறு பேரும் ராணிப்பேட்டை ராஜேஸ்வரி தியேட்டருக்கு 'வரலாறு' படம் பார்க்க பேருந்தில் பயணித்தோம். சினிமா குறித்து பேச ஆரம்பித்த எங்கள் பேச்சு, எப்படி காதல் தலைப்புக்குள் வந்தது என்றே தெரியவில்லை. யாரும் எதிர்பார்த்திராத அந்தக் கணத்தில் புருஷோத் தான் அந்த வார்த்தையை உதிர்த்தான். ''எனக்கு ப்ரியா மேல ஒரு இது இருந்துச்சுடா'' என்றான். ''என்னடா சொல்ற? நீயா!'' என்று நம்பமுடியாத ஆச்சர்யத்தோடு கோரஸாகக் கேட்டோம். ''ஆமாம்'' என்றான். டவுசருக்கு குட் பை சொல்லிவிட்டு பேன்ட்டுக்கு வெல்கம் சொன்ன அந்த ஒன்பதாம் வகுப்பில்தான் ப்ரியாவின் மறுவருகை நிகழ்ந்தது. பக்கத்து ஊர் ஸ்கூலில் படித்தவள் புதிதாக எங்கள் வகுப்பில் வந்து சேர்ந்தாள். புது ஆசிரியர்கள், புதிய சூழல் என்று கொஞ்சம் திணறிய அவளுக்கு உதவ ஏராளமான நட்புக்கரங்கள் நீண்டன. நோட்ஸ் கொடுப்பதும், புரியாத கணக்கை புரிய வைப்பதுமாக அவள் சொல்லும் ஒற்றை நன்றிக்காக ஒரு கும்பலே காத்துக் கிடந்தது. அப்போதுகூட புருஷோத், ப்ரியாவிடம் பெரிதாய் ஒன்றும் பேசிவிடவில்லை. நெருக்கமாகப் பழகியதுமில்லை. அப்புறம் எப்படி இவனுக்கு காதல் முளைத்தது? உதயன் கூட சின்ன சின்ன சேட்டைகள் செய்திருக்கிறான். மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால், பெண்கள் அமரும் பகுதியில் 2 பெஞ்ச் மட்டும் ஆண்களுக்காக ஒதுக்கப்பட்டு இருந்தது. உயரம் குறைவான உதயனும், இன்னும் சில பேரும் மட்டும் 2-வது பெஞ்சில் அமர்ந்தனர். அதற்கடுத்த பெஞ்ச்சில்தான் ப்ரியா இருந்தாள். அப்போதெல்லாம் உதயன் செய்யும் ஹீரோயிஸம் ஒன்றே ஒன்றுதான். ஆசிரியர் பாடம் நடத்தாமல் வெட்டியாய் பொழுது கழியும்போது ஏதாவது சேட்டைகள் செய்வான் உதயன். உச்சபட்சமாக ஒரு நாள் எல்லா பெண்களையும் சிரிக்க வைத்துவிட்டான். பேசுகிறவர்கள் பெயரை போர்டில் எழுதிக்கொண்டிருந்தான் வகுப்புத் தலைவன். உதயன் பெண்கள் அணியிடம் பேச்சு கொடுத்தான். முதலாவதாக அவன் பெயர் எழுதப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த உதயன் உடனே பேன்ட்டை கழட்ட ஆரம்பித்தான். பயப்படாதீர்கள்... உள்ளே டவுசர் போட்டிருந்தான். உதயன் இப்படி பேன்ட்டுக்குள் டிரவுசர் போட்டு வந்திருப்பான் என்றோ, பெண்கள் மத்தியில் அதிரடியாய் இறங்குவான் என்றோ எதிர்பார்க்கவில்லை. ஆனால், அந்த நேரத்தில் எல்லோரும் கொல்லென்று சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த சிரிப்பு ஒர்க் அவுட் ஆனதால் உதயன் இதையே வழக்கமாக்கிக் கொண்டான். இப்படி இருந்த உதயனுக்கே புருஷோத் காதல் அரும்பியதாகச் சொன்னது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருந்தது. உதயன் தான் காதலில் விழுவான் என்று எல்லோரும் எதிர்பார்த்த தருணத்தில் புருஷொத் தனக்கு காதல் பூத்த தருணத்தை சொல்ல ஆரம்பித்தான். இத்தனைக்கும் ப்ரியா 5-ம் வகுப்பு வரை எங்களுடன்தான் படித்தாள். ஆறாம் வகுப்பு படிக்க பக்கத்து ஊர் சென்றவள் 9-ம் வகுப்பு படிக்க மீண்டும் வந்தாள். புதிதாக ஒரு பெண் வந்ததும் புருஷோத் தனக்கு ஏற்பட்ட குறுகுறுப்பையும், உணர்வுகளையும் எங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தான். அந்த வயதில் காதல் கதை கேட்பதை விட வேறு என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப் போகிறது? புருஷோத் ஒவ்வொரு சம்பவமாய் சொல்லிக்கொண்டே போனதும், எனக்கு 'அழியாத கோலங்கள்' பட்டாபி ஞாபகம் வந்தது. தமிழில் இப்படி ஓர் உலக சினிமா எப்படி சாத்தியம் ஆனது என்று இன்றளவும் யோசிக்க வைக்கும் திரைப்படம் 'அழியாத கோலங்கள்'. பரபரப்பான நகரத்தில் அலுவல் நிமித்தமாக காரில் பயணிக்கிறார் கமல்ஹாசன். லிஃப்டில் ஏறி தன் இருக்கையை அமர்ந்ததும், அங்கு வரும் உதவியாளரிடம் மெயில் குறித்து ஆங்கிலத்தில் எழுதச் சொல்கிறார். ஒரு போன் கால் வருகிறது. அதற்குப் பிறகு அந்த உதவியாளர் வந்திருக்கும் பெர்சனல் கடிதங்களை கமலிடம் கொடுக்கிறார். எல்லா கடிதங்களின் அனுப்புநர் முகவரியைப் பார்க்கும் கமலுக்கு, ஒரு கடிதம் மட்டும் புன்னகையை வரவழைக்கிறது. ''10 நிமிடங்களுக்கு நோ போன் கால்ஸ். வந்தாலும் கொடுக்காதீங்க'' என்ற கட்டளையிட்டு, கடிதத்தைப் பிரித்துப் படிக்கிறார் கமல். ''டேய் ராஸ்கல். நான் பட்டாபி எழுதுறேன்டா... எப்படிடா இருக்கே? ஊர் பக்கமே வர்றதில்லை. வருஷத்துக்கு ஒரு முறை வருவ. இப்போ அதுவும் இல்லை... நான் ஏன் இந்த லெட்டரை எழுதுறேன்னா... இந்து டீச்சர் இல்ல... நம்ம இந்து டீச்சர். அவங்க முந்தாநாள் காலமாயிட்டாங்கடா'' என்று எழுதியிருக்கும் கடிதத்தைப் படித்ததும் கமலின் நினைவுகள் பின்னோக்கி நகர்கின்றன. அந்த கிராமம், அந்த ஜனங்க எதையும் மறக்கலை நான் என்று வாய்ஸ் ஓவரில். ஒரு கிராமம் நம் கண் முன் விரிகிறது. ரகு, கௌரி, பட்டாபி எனும் மூன்று நண்பர்களை நீங்கள் எந்த கிராமத்திலும் சந்தித்திருக்கலாம். வயல்வெளி, ஆறு, ரயில்வேகேட், சிமெண்ட் பெஞ்ச் என்று சுற்றித் திரியும் இந்த மூன்று பேர் வாழ்க்கை அவ்வளவு அழகானது. இந்து டீச்சரின் வருகையை இந்த சிறுவர்கள் கொண்டாடும் தருணம் அலாதியானது. ஊரில் ஆட்டம்போட்டு காசு பார்க்கும் ஒரு பெண் போஸ்ட் மாஸ்டர் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் காதல் ரசவாதத்தில் ஈடுபடுகிறார். பழைய கோயில் மண்டபத்தில் அந்தப் பெண்ணுக்கும், வெண்ணிற ஆடை மூர்த்திக்கும் நடக்கும் ரசவாதத்தை மூவரும் பார்க்கின்றனர். ஆனால், இதில் எந்த ஆபாசமும் இல்லாமல் க்ளோஸப் காட்சிகள் மூலம் உணர்வுகளை படம் பிடித்திருப்பார் இயக்குநர். அந்த காட்சியைப் பார்த்த அதே வேகத்தில் அந்த பெண் வீட்டுக்குச் சென்று ரகு, கௌரி (சின்ன வயது கமல்), பட்டாபி ஆகிய மூவரும் அதே மாதிரி இருக்க வேண்டும் என்று ஆசையோடு கேட்கத் துணிவார்கள். கேட்க முடியாமல், திணறி, அக்கா... தண்ணி கிடைக்குமா என்று கேட்டு, குடித்துவிட்டு வருவார்கள். 'அழியாத கோலங்கள்' படத்தில் இந்து டீச்சர் முக்கியமான படலம். இந்து டீச்சராக ஷோபாவின் நடிப்பு அத்தனை இயல்பாய் இருந்தது. ''என் பேரு இந்து. உங்க பேர்லாம் சொல்லுங்கம்மா'' என தயக்கமும், வெட்கமும், படபடப்புமாய் சொல்லும்போது அந்த வகுப்பறை இன்னும் அழகாகத் தெரிந்தது. பக்கத்து வகுப்பறையில் பாடம் நடத்தும் சத்தமும் பின்னணியில் ஒலித்துக்கொண்டிருக்கும். இந்து டீச்சர் அந்த கிராமத்துக்கு வந்த புது தேவதையாகவே மூவரும் பார்க்கிறார்கள். மளிகை சாமான் பொருட்களை இந்து டீச்சர் தவறுதலாக கீழே போட்டு விட, அதை எடுத்து வீடு வரை கொண்டு சேர்க்கும் கௌரி, டீச்சரின் அன்புக்குப் பாத்திரமாகிறான். பரணில் இருக்கும் பொருளை எடுக்க, ஏணியில் ஏறும்போது தவறி விழப் பார்க்கும் கௌரியின், தொடைப் பகுதியை இந்து டீச்சர் அழுத்திப் பிடித்து, பார்த்தும்மா எனும் சொல்லும்போது அந்தப் பால்ய வயதில் அவன் பாலுணர்வை எந்த விகல்பமும் இல்லாமல் அழுத்தமாகப் பதிவு செய்திருப்பார் இயக்குநர் பாலு மகேந்திரா. பிரதாப் போத்தன் படத்தைக் காட்டி, ''எப்படி இருக்காரும்மா? அவர் தான் என் வருங்காலக் கணவர்'' என்று இந்து டீச்சர், கௌரியிடம் சொல்கிறார். அவரை கௌரி பிடிக்காமல் பார்க்கிறான். தன் கனவைக் கலைக்க வந்த வில்லனாகவே பார்க்கிறான். பிரதாப் போத்தன் சிகரெட் பிடிப்பதைப் பார்த்து ரசித்து சிரிக்கிறார் இந்து டீச்சர். சிகரெட் பிடித்தால் ஆம்பளையாகிடலாம் போல என்று மூவரும் சிகரெட் பிடிக்க ஆரம்பிக்கிறார்கள். இப்படிக் கழியும் விடலைப் பருவத்தில் பட்டாபிக்கு அத்தை மகள் வருகை அவன் வாழ்வை வசந்தமாக்குக்கிறது. ''பட்டணத்துல கடைசியா என்ன பிக்சர் பார்த்த?'' என்று அத்தை மகள் மரகதத்திடம் கேட்கிறான் பட்டாபி. ''இருவர் உள்ளம்'' என்கிறாள் மரகதம். ''என்னது இருவர் உள்ளம் பார்த்தியா. சரோஜாதேவி எப்படி இருக்கா. '' என்கிறான் பட்டாபி. ''ம்ம்ம் அவசியம் தெரிஞ்சுக்கணுமோ?'' ''என் ஃபேவரைட் தெரியுமா?'' ''அந்த அம்மா நடை பிடிக்கலை'' என்கிறாள் மரகதம். அந்த இடத்தில் பட்டாபியிடம் பாலுமகேந்திராவின் தொனியை நீங்கள் பார்க்கலாம். பிரதாப் போத்தனுக்கு இது அறிமுகப் படம். இதில் பாலு மகேந்திராதான் பிரதாப்புக்கு டப்பிங் பேசியிருப்பார். இரவுப் பொழுதில் மரகதம் தூங்கிக்கொண்டிருக்கையில், பட்டாபி அவள் கெண்டைக் காலைத் தடவி, நெற்றியில் ஆரம்பித்து உதட்டில் விரல்கள் பட்டு கழுத்தில் இறங்க இருமல் சத்தம் அந்த நிலையைக் குலைக்கும். சம்மர் ஆஃப் 42 என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல் கிழுவல் என்றெல்லாம் உலக சினிமா போராளிகள் சொன்னாலும், தமிழ் சினிமாவில் பதின்ம வயதினரின் பாலுணர்வுகளை இவ்வளவு அழகாக, நேர்த்தியாக, வரம்பு மீறாமல் நம் மண்ணுக்கே உரிய தன்மைகளுடன் பதிவு செய்தவர் எவரையேனும் சுட்டிக் காட்ட முடியுமா? ரகு ஆற்றில் குளிக்கப்போய் நீச்சல் தெரியாமல் தண்ணீருக்குள் மரணமடைகிறான். அவன் மரணத்தோடு கௌரி, பட்டாபியின் மகிழ்ச்சி காணாமல் போகிறது. ரகுவின் மரணத்தை தாங்க முடியாத இந்து டீச்சர் கௌரியைக் கட்டிப்பிடித்துக் கதறுகிறார். இதெல்லாம் நெஞ்சில் இட்ட அழியாத கோலம் என்று லெட்டரை படித்து முடித்த கமல் சொல்கிறார். நடிகை ஷோபா இதில் துணை இயக்குநராகவும் பணி செய்திருக்கிறார். சொந்தக் குரலில் பேசி இருந்தால் ஷோபாவுக்கு நிச்சயம் விருது கிடைத்திருக்கும். அத்தை மகள் குறித்த பதிவுகள் பாலு மகேந்திராவின் சொந்த வாழ்க்கை என்று சொல்வதும் உண்டு மட்டக்களப்பில் பிறந்த பெஞ்சமின் எந்த சமரசமும் இல்லாமல் இந்தப் படத்தை எடுக்கத் துணிந்தார். ஆனால், இரு பாடல்கள் வைத்தது உறுத்தல் என்று அவரே ஒப்புக்கொண்டார். இப்படி சமரசங்கள் செய்துகொண்டதைக் கூட மிக நேர்மையாக சொல்ல முடிவதால்தான் அவரை வாத்தியார் என்று தமிழ் சினிமா சொல்கிறது. பாலு மகேந்திரா என்று சினிமா உலகம் அழைக்கிறது. அந்த பட்டாபியாய் இருந்த புருஷோத்? அதற்குப் பிறகு அவன் அட்டகத்தி நாயகனாய் மாறிப்போனதுதான் எங்களுக்கு அடுத்த ஆச்சர்யம். மான்டேஜ் மனசு இன்னும் சுழலும்... http://tamil.thehindu.com/opinion/blogs/மான்டேஜ்-மனசு-2-இன்றும்-நெஞ்சில்-அழியாத-கோலங்கள்/article7294988.ece?ref=relatedNews
 19. மான்டேஜ் மனசு 1 - அலைபாய்ந்தவன் உணர்ந்த காதல்! | நிஜம் - நிழல் - புனைவு அடங்கிய புதிய ஆன்லைன் தொடர் | ஆறு வருடங்கள் கழித்து அவளிடமிருந்து இப்படி போன் கால் வருமென்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ''ஹலோ'' குரல் கேட்ட சில நொடிகளிலேயே அவள்தான் என்பதை உணர முடிந்தது. ஆனால், நம்ப முடியாதவனாய் சிறிது நேர மவுனத்துக்குப் பின் ஹலோ என்றேன். பரஸ்பரம் நல விசாரிப்புகளுக்குப் பிறகு, எதையோ சொல்ல வந்தவள் தயங்கித் தயங்கி நின்றாள். அந்த ஒரு நிமிடத்துக்குள் நான் அவளை... முதன்முதலாகப் பார்த்த 22 வயசுப் பையனாகவே மாறியிருந்தேன். நெருடல் உடைத்து சரளமாகப் பேசினேன். ''மணி கிட்டே பேசினேன்'' என்றாள். ''ம்'' ''என்ன சொன்னான்னு கேட்க மாட்டியா...'' ''அடுத்து அதானே சொல்லப்போற...'' ''என்னால அவனை மறக்க முடியலைடா... கஷ்டமா இருக்கு... இந்த ஆறு வருஷத்துல அவனை நினைக்காத நாளில்லை''ன்னு சொன்னேன். ''அவன் என்ன சொன்னான்?'' ''நான் சொன்னதெல்லாம் கேட்டுக்கிட்டான். பதிலே சொல்லலை.'' ''நீ விட்டிருக்க மாட்டியே?'' '' 'ஏன்டா பேசாம இருக்க'ன்னு கேட்டேன். ‘ரெண்டு வருஷத்துல எத்தனை முறை நேர்ல பார்த்திருப்பீங்க'ன்னு கேட்டான். 'ஏழெட்டு முறை'ன்னு சொன்னேன். 'நேர்ல எவ்ளோ நேரம் பேசி இருக்கீங்க'ன்னு கேட்டான். 'அஞ்சு அல்லது பத்து நிமிஷம்'னு சொன்னேன். 'இதை மறக்க முடியாமயா ஆறு வருஷம் கஷ்டப்படற? அப்போ ஏதோ மெசேஜ் பண்ணீங்க. போன்ல பேசினீங்க. ஈர்ப்பு, இனக்கவர்ச்சி மாதிரி லஸ்ட்னு நினைச்சேன்'னு சொல்லிட்டான். ''ஒரு நிமிஷம்... மணியா லஸ்ட்னு சொன்னான்''. ''ஏன்?'' ''அந்த வார்த்தையை அவன் சொன்னானா?'' ''இல்லை. அந்த வார்த்தை அவனுக்குத் தெரியாது. ஆனா, அந்த அர்த்தத்துலதான் பேசினான். ஏன் கேக்குற?'' ''சும்மா தான்.. நீ சொல்லு...'' ''எனக்கு கஷ்டமாயிடுச்சு. அவன் எந்த உதவியும் பண்ணலை. பண்ணத்தேவையும் இல்லை. ஆனா, ஏன் அவன் நம்ம காதலை கொச்சைப்படுத்தணும்?'' ''அவனுக்கு அவ்ளோதானே தெரியும். விடு.'' ''அவன் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டவன் தானே.'' ''அது சரி. இப்போ ஏன் அவன்கிட்ட இதெல்லாம் பேசின?'' ''நீ எழுதின எல்லா கவிதைகளையும் ஒரு நோட்ல எழுதி வெச்சேன். அம்மா அதை பத்திரப்படுத்தி வெச்சு இருக்குறதை பார்த்துட்டு, 'இருக்குற பிரச்சினையில இது வேறவா. வேணாம். எரிச்சிடு'ன்னு சொல்லிட்டாங்க. மனசே இல்லாம் அதை எரிச்சிட்டேன். எரிச்ச உடனே அழுகையா வந்தது. மனசுக்கு ஆறுதலா இருக்குமே. உன்னைப் பத்தி விசாரிக்கலாமேன்னு அவனுக்கு போன் பண்ணேன். அப்போதான் இப்படி மனவளர்ச்சி இல்லாதவன் மாதிரி பேசிட்டான்.'' அதற்குப் பிறகு நடந்த உரையாடலில் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை. மணி 'லஸ்ட்' என்ற அர்த்த தொனியில் பேசியதாக சொன்னதுதான் மீண்டும் மீண்டும் மனசுக்குள் வந்துபோனது. அவன் அப்படிச் சொல்லி இருப்பதை சகித்துக்கொள்ளவே முடியவில்லை. அவன் ஏன் இப்படி பேசினான் என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். மனம் எதிலும் லயிக்காமல் போக முகநூல் பக்கம் பார்வையைத் திருப்பினேன். அப்போதுதான் 'ஹன்டர்ர்ர்' (Hunterrr) இந்திப் படம் குறித்த நறுக் சுருக் விமர்சனங்கள் கண்ணில்பட்டன. லஸ்ட், லவ் பற்றிய படம் என்று கேள்விப்பட்டதும், எந்தத் தெளிவும் இல்லாமலேயே ஹன்டர்ர்ர் படம் பார்ப்பதென முடிவு செய்தேன். இரண்டு நாட்களுக்குப் பிறகு நண்பரிடம் டிவிடி வாங்கி படம் பார்த்தேன். படம் பார்த்ததும் மணி மீது அநியாயத்துக்கு கோபம் வந்தது. அவன் என் நண்பன் என்று சொல்வதற்காக இந்த நிமிடம் வரையில் வெட்கப்படுகிறேன். ரொம்ப எமோஷனல் ஆகிறேனா? ஹன்டர்ர்ர் படம் பார்த்தபிறகு இப்படி நம்மை நினைத்துவிட்டானே என்ற ஆதங்கப்பட வைத்துவிட்டான். ஓவர் சுயபுராணம் ஆகிவிட்டதுதானே... பொறுத்தருளுங்கள். சின்ன ரெக்யூஸ்ட்... என்னைக் குறித்த ஆராய்ச்சியை விட்டு விட்டு ஹன்டர்ர்ர் படம் குறித்து சில விஷயங்களை தெரிந்துகொள்வதற்கான மனநிலையைத் தயார்படுத்திக்கொள்ளுங்களேன் ப்ளீஸ்.... மனம் கொஞ்சம் ஆசுவாசம் அடையவில்லை என்றால் கொஞ்சம் தண்ணீர் குடிக்க முயற்சி செய்யலாம். என்ன... மொக்கை ஐடியாவா இருக்கா? சரி... ரொம்ப திட்டாதீங்க... நேரா கதைக்கே போய்டலாம். படத்தின் ஹீரோ மந்தாருக்கு சின்ன வயதில் இருந்தே பாலுணர்வு குறித்தும், சிலிர்ப்புப் படங்கள் குறித்தும் அலாதிப் ப்ரியம் உண்டு. டீன் ஏஜ் வயதில் தியேட்டரில் சிலிர்ப்புப் படம் பார்த்துவிட்டு போலீஸிடம் மாட்டிக்கொள்கிறான். 18 வயதாகிவிட்டது என்று புரூடா விட்டும் எந்த புண்ணியமுமில்லை. கடைசியில் அரை மொட்டையுடன் சலூன் கடையைத் தேடி ஓடுகிறான். எக்ஸ்கியூஸ்மீ... ஒரு நிமிஷம்... சின்ன கிளாரிஃபிகேஷன்... படத்தோட கதைக்குள்ள உங்க கவனம் வந்துடுச்சுதானே... நல்லது... படிங்க... மந்தார் (குல்ஷான் தேவய்யா) ஸ்கூல் படிக்கும்போது அழகான பெண்ணை கரெக்ட் செய்ய வேண்டும் என்று நினைக்கிறான். ஆனால், அந்த அழகான பெண்ணை விட்டுவிட்டு அருகில் இருக்கும் இன்னொரு பெண்ணுக்கு ஹாய் சொல்லி அறிமுகம் ஆகிறான். தனக்கு பெஸ்ட்டாகத் தெரியும் இருவரில் இரண்டாம் நபரைத் தேர்ந்தெடுப்பதே அவனது வழக்கம். (என்னமா ஒரு ஐடியா பாருய்யா.... டைரக்டர் ஹர்ஷவர்தன் குல்கர்னி ரூம் போட்டு யோசிச்சா கூட இப்படி தோணி இருக்காதே..) கல்லூரி படிக்கும்போதும் இதே ஐடியாவைப் பின்பற்றுகிறார். அந்த ஐடியா அழகாக வொர்க் அவுட் ஆகிறது. ஒரு பெண்ணை தன்வசப்படுத்துகிறான். தன்னுடைய அறைக்கு அழைத்து வருகிறான். இந்த விவகாரம் ஹாஸ்டல் வார்டனுக்குத் தெரிந்துவிடுகிறது. ஹாஸ்டலில் இருந்து விரட்டப்படுபவன், குடியிருப்புகள் பகுதியில் தனியாக வாடகை வீட்டில் தங்குகிறான். அங்கு ஓர் ஆன்ட்டியுடன் மாற்றுக் காதல். அதில் இருந்து 'துரத்தப்பட்ட' பிறகு மற்றொரு மாற்றுக் காதல். தன் பக்கத்து வீட்டு சவிதா ஆன்ட்டியிடம் மியாவ் சொல்லியே இரவைக் கழிக்கிறான். இப்படி வேறு விதமான இச்சைக்காக பெண் பித்தனாக அலையும் மந்தார், ஷோபா என்.டி எனும் விருந்தாளியை அழைத்துவர விமான நிலையம் செல்கிறான். ஷோபா என்.டி என்பதை ஷோபா ஆன்ட்டி என்று தவறாக புரிந்துகொள்கிறான். யார் அவர் என்பதை மந்தாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. பயணிகள் காத்திருக்கும் அறையில் புத்தகம் படித்துக்கொண்டிருக்கும் பெண்ணையே நோட்டம் விடுகிறான். மெல்லப் போய் பேச்சு கொடுத்து, ஹோட்டலில் அறை எடுத்து தங்க வைக்கும் அளவுக்கு நம்ப வைக்கிறான். களைப்பில் இருக்கும் அப்பெண்ணின் பின்பக்கக் கழுத்தைப் பிடித்து மசாஜ் செய்ய முயற்சிக்கிறான். அவர்தான் ஷோபா என்.டி என்று தெரிந்தபிறகு வீட்டில் போட்டுக் கொடுத்துவிடுவாரோ என்ற பீதியில் ஓட்டம் பிடிக்கிறான். இப்படியே இருக்கும் நாயகன் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் திருப்தி உடன் (ராதிகே ஆப்தே) மட்டும் நேர்மையுடன் பழக ஆரம்பிக்கிறான். வேறொருவருடன் இருந்த லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப் காரணமாக கர்ப்பமாகிறார் திருப்தி. அதைக் கலைக்கச் சொல்கிறார் அவர் பாய்ஃப்ரெண்ட். இதனால் இருவரும் பிரிகிறார்கள். திருப்தி கர்ப்பத்தைக் கலைக்கிறாள். திருப்தி தனக்கு நடந்ததை மந்தாரிடம் கண் கலங்கியபடி சொல்கிறாள். இதனிடையே, ஓர் இழப்பால் வாடுகிறான் மந்தார். அப்போது அரவணைக்கும் திருப்தியிடம், அவன் காதலைக் கண்டுணர்கிறான். க்ளைமாக்ஸ் நெருங்கும்போதுதான் அவன் 'ஐ லவ் யூ' என்ற வார்த்தையை திருப்தியிடம் உதிர்க்கிறான். படம் நெடுக பெண்வாசத்துக்கு அடிமையாக இருக்கும் மந்தார் ஒரே முறை உளப்பூர்வமாக 'ஐ லவ் யூ' சொல்வது ஆச்சர்யம்தானே. அப்போது அவன் திருப்திக்கு கொடுக்கும் முத்தத்தில் விரசத்தையோ, ஆபாசத்தையோ பார்க்க முடியவில்லை. தூய்மையும், கள்ளம் கபடம் இல்லாத அன்பின் திருப்தியை மட்டுமே பார்க்க முடிகிறது. காதலில் இருந்து காமம் என்ற வழக்கமான பாணியை உடைத்தெறிந்து, காமத்தில் இருந்து காதல் என்கிற புள்ளியை அடையும் தருணம் மனிதர்களுக்கு ஏற்படுவதுண்டு என்பதை இயக்குநர் ஹர்ஷவர்தன் வெகு அற்புதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார். லஸ்ட் என்ற இடத்தில் இருப்பவனும் லவ் என்ற இடத்தை அடைவான். அதுதான் காதல் நிகழ்த்தும் அற்புதம் என்று சொல்கிறது படம். இந்தப் படம் ஒரு ப்ளாக் ஹியூமர் மாதிரி தோன்றினாலும் ப்ளூ ஹியூமர் என்ற புது ஜானரை அறிமுகப்படுத்துகிறதோ என்ற சந்தேகமும் எழலாம். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படத்தை சுதந்திரமாக எடுக்க முடியுமா என்பது பெரிய கேள்விக்குறி. மந்தாரின் நண்பன் ராணுவத்தில் இறந்துவிடுகிறார். அதற்குப் பிறகு அவரது மகன், மந்தார் வீட்டுக்கு வருகிறார். அப்பாவைப் போலவே மகனும் கழிவறையில் சிறுநீர் கழிக்காமல் வெளியில் கழிப்பதைப் பார்த்து மந்தார் நினைவலையில் மிதந்து கலங்குகிறார். அவனது அப்பழுக்கற்ற மனதை இங்கேதான் புரிந்துகொள்ள வேண்டும். மந்தாராக குல்ஷான் தேவய்யா நடிப்பில் பின்னி இருக்கிறார். அழகான இரண்டு பெண்களில் இரண்டாம் நபரைத் தேர்ந்தெடுப்பது, பிரச்சினை என்றதும் ஓட்டம் பிடிப்பது என்று சின்ன சின்ன ரியாக்‌ஷன்களிலும் ஸ்கோர் செய்கிறார். சொல்ல மறந்துவிட்டேனே? அப்படி என்றால் என்னை மந்தாராக நினைக்கிறானா மணி? ''அவளுடன் பேசாத நாள். நான் வாழாத நாள்'' என்று மழை நேரத்து மாலையில் அவனிடம் என் காதலைப் பற்றி சிலாகித்து இருக்கிறேன். ஓர் ஆல்கஹால் இரவில் சலம்பும்போதும் காதலின் மகோன்னதம் குறித்து கடும் மொக்கைகள் போட்டு அவனுக்கு கலாய்ப்புப் படலம் நடத்தி இருக்கிறேன். என் மென்சோகத்தில் இளையராஜாவாக இருக்க வேண்டிய மணி, ஏன் அனிருத்தாக மாறினான்? (இந்த சமயத்தில் உங்களுக்கு அனிருத் குறித்து வேறு ஏதேனும் சம்பவங்கள் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.) லஸ்ட்டுக்கும் லவ்வுக்கும் வித்தியாசம் தெரியாதா அவனுக்கு? அழியாத கோலங்கள், அட்டகத்தி பார்க்காதவனா அவன்? பள்ளி நாட்களில் புதிதாக வந்த பயாலஜி டீச்சர் பாடம் நடத்தும்போது போரடிக்கிறது என்று காகிதத்தில் ராக்கெட் விட்டவன் மணி. மறுகணமே ஒட்டுமொத்த வகுப்பறையும் சிரிப்பறையாக மாறும் அளவுக்கு கால் வலிக்க வலிக்க முட்டி போட்டவன். பயாலஜி டீச்சரிடம் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் செய்ய நினைத்தவன் மணி என்பது அனிச்சையாய் இப்போது ஏன் எனக்கு நினைவில் வர வேண்டும்? அந்த நேரத்தில் அவளிடம் இருந்து ஒரு எஸ்எம்எஸ் வந்தது. லைஃப் ஃபீல் பண்ண இல்லை. ஃபில் பண்ண. மிஸ் பண்ற மாதிரி தெரிஞ்சா உடனே மிஸ்ஸஸ் ஆக்கிடுவேன்னு சொன்னியே... என்று அனுப்பி இருந்தாள். இல்லாத இறைவனை சபிக்கத் தொடங்கியிருந்தேன் நான்... | மான்டேஜ் மனசு இன்னும் சுழலும் | http://tamil.thehindu.com/opinion/blogs/மான்டேஜ்-மனசு-1-அலைபாய்ந்தவன்-உணர்ந்த-காதல்/article7255925.ece?ref=relatedNews