Jump to content

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    11370
  • Joined

  • Days Won

    2

பிழம்பு last won the day on May 7 2015

பிழம்பு had the most liked content!

2 Followers

About பிழம்பு

  • Birthday January 1

Contact Methods

  • Website URL
    http://

Profile Information

  • Gender
    Male
  • Location
    ஈர்பற்ற திசை
  • Interests
    வாழ்தல்

Recent Profile Visitors

11060 profile views

பிழம்பு's Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • Posting Machine Rare
  • Collaborator

Recent Badges

525

Reputation

  1. ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
  2. Simrith / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0 - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  3. 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு புதிய முறைமையொன்றை இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார். இதன் மூலம் பெறப்படும் முறைப்பாடுகள் நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது . ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  4. அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு. (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார். இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார். அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார். மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
  5. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
  6. “கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்” - சீமான் சாடல் “கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்” - சீமான் சாடல் சென்னை: “கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் வந்திருக்கும். அப்படி கூட்டணி வைத்தவர்களுக்கு சின்னங்கள் வந்துள்ளது. நான் கூட்டணி வைக்க மறுத்துவிட்டேன். எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன். இந்த நாட்டில் நல்ல அரசியலை உருவாக்க நினைக்கிறேன். எந்தச் சூழலிலும் என் வாழ்நாளில் எந்த சமரசமும் செய்ய மாட்டேன்.” என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வேறு மாநில கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டது. தொடர்ந்து தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருப்பதை கருத்தில் கொண்டு புதிய சின்னத்தை தேர்வு செய்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பும் பணியை நாம் தமிழர் கட்சி மேற்கொண்டது. அதன்படி, அனுப்பிய சின்னங்களில் நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, இன்று சின்னத்தை அறிமுகப்படுத்தி செய்தியாளர்களைச் சந்தித்தார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். பின்னர் பேசிய அவர், “கடைசி நொடி வரை போராடி பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை. அதனால் தான் மைக் சின்னத்தில் போட்டியிடுவது என்று முடிவெடுத்தோம். இவ்வளவு இடையூறுகளையும் தாங்கிக்கொண்டு நாங்கள் களத்தில் நிற்பது மக்களுக்காகதான். மக்கள் எங்களை கைவிட்டுவிட மாட்டார்கள் என்று நம்புகிறோம். கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் வந்திருக்கும். அப்படி கூட்டணி வைத்தவர்களுக்கு சின்னங்கள் வந்துள்ளது. நான் கூட்டணி வைக்க மறுத்துவிட்டேன். எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன். இந்த நாட்டில் நல்ல அரசியலை உருவாக்க நினைக்கிறேன். அதில் எந்தச் சூழலிலும் என் வாழ்நாளில் எந்த சமரசமும் செய்ய மாட்டேன். சின்னத்தில் மட்டும் விவசாயி அல்ல நான். உண்மையிலேயே விவசாயிதான். எனவே, நாங்கள் நம்பிக்கையோடு பயணிக்கிறோம். கொஞ்சம் தாமதம் தான். சின்னம் முதலிலேயே இருந்திருந்தால் பாதி தொகுதிக்கு சென்றிருப்பேன். இப்போது முதலில் இருந்து தொடங்க வேண்டும். நாளையில் இருந்து பிரச்சாரம் செல்கிறேன்.எங்களை சுயேச்சையாக நிறுத்தி, 40 தொகுதிகளுக்கும் 40 சின்னங்கள் கொடுக்க வேண்டும் என்பது தான் அவர்களின் எண்ணம். ஏழு சதவிகித வாக்குக்கே பயம் என்றால், இந்தத் தேர்தலில் நான் என்ன செய்வேன் என்று யாருக்கு தெரியும்.” என்றார். “கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்” - சீமான் சாடல் | “If I had a partnership I would have got the symbol I asked for” - Seeman - hindutamil.in
  7. `மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது!' - தேர்தல் ஆணையம் வைகோ-துரை வைகோ மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரிய விண்ணப்பத்தின் மீது இன்று காலை 9 மணிக்குள் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று, `ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், மதிமுக-வுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது’ என மதிமுக வழக்கறிஞர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. Tamil News Live Today: தேர்தல் ஆணையம் ஒதுக்கிய மைக் சின்னத்தை ஏற்றுக்கொண்டது நா.த.க! | Tamil News Live Today live updates dated 27-03-2024 - Vikatan
  8. தந்தைமீது சபதம்; காரில் தொங்கிய பௌன்சர்கள்- புடைசூழ வேட்புமனு தாக்கல்செய்த வீரப்பன் மகள் வித்யா ராணி வீரப்பன் மகள் வித்யா ராணி கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளராகக் களமிறங்கிய வீரப்பன் மகள் வித்யா ராணி இன்றைய தினம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். முன்னதாக, மேட்டூர் மூலக்காட்டில் இருக்கின்ற வீரப்பன் நினைவிடத்துக்குச் சென்று வேட்பு மனுவை வைத்து வீரவணக்கம் செலுத்தினார். அப்போது, ‘‘மொழி காக்க, இனம் காக்க, மண் காக்க, மானம் காக்க... இன்னுயிர் நீத்த மாவீரர்கள் அனைவருக்கும் வீர வணக்கம்’’ என்று கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து உறுதி மொழியும் எடுத்துக்கொண்டார். அதன் பிறகு, வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காக கிருஷ்ணகிரியில் இருக்கின்ற நாம் தமிழர் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இருந்து புடைசூழ புறப்பட்டுச் சென்றார் வித்யா ராணி. வித்யா ராணி இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் அணிவகுத்துச் செல்ல காரின் ‘சன் ரூஃப்’ வழியாக நின்றபடி கையெடுத்து கும்பிட்டபடியே பயணித்தார் வித்யா ராணி. காரின் இருபக்கமும் பௌன்சர்கள் தொங்கிக்கொண்டு வந்தனர். முன்பக்கம் வீரப்பன் பேனர் கட்டப்பட்டிருந்தது. மாமன்னன் அருண்மொழிச் சோழன் வேடம், திருவள்ளுவர் வேடம், அம்பேத்கர் வேடம் அணிந்தபடியும், வழிநெடுக பட்டாசு வெடித்தும், மேளத்தாளம் அடித்தும் நாம் தமிழர் கட்சியினர் அமர்க்களப்படுத்தி வித்யா ராணியை அழைத்து வந்தனர். வேட்பு மனுவை தாக்கல் செய்தபோதும், தனது தந்தை வீரப்பன் மீது சபதம் எடுத்துக்கொண்டார் வித்யா ராணி. தி.மு.க கூட்டணியை பொறுத்தமட்டில், இந்த தொகுதி மீண்டும் காங்கிரஸுக்கே ஒதுக்கப்பட்டிருக்கிறது. சிட்டிங் எம்.பி-யாக இருந்த செல்லகுமாருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ-வும், தொழில் அதிபருமான கோபிநாத் களமிறக்கப்பட்டிருக்கிறார். இன்றைய தினம் எந்த விதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல், தனது குடும்பத்துடன் அமைதியாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டுச் சென்றிருக்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத். அவருடன் தி.மு.க மற்றும் கூட்டணியில் இருக்கின்ற வேறு எந்தக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும் வரவில்லை. ‘கூட்டணிக்குள் அதிருப்தியா..?’ என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியதற்கு, ‘அப்படியெல்லாம் இல்லை. முறைப்படி, கிருஷ்ணகிரி மேற்கு, கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர்கள் இருவரிடமும் தகவல் தெரிவித்துவிட்டுதான் வந்திருக்கிறேன்’ என்றார். வித்யா ராணி அ.தி.மு.க-வில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஜெயபிரகாஷ் களமிறங்கியிருக்கிறார். பா.ம.க-வில் பயணித்து வந்த ஜெயபிரகாஷ் கடந்த 2011-ம் ஆண்டு அந்தக் கட்சியில் இருந்து விலகி, அ.தி.மு.க-வில் சேர்ந்தார். கிரானைட், டிரான்ஸ்போர்ட் தொழில் என வெயிட்டாக இருக்கும் ஜெயபிரகாஷ் களத்திலும் வேகம் காட்டுகிறார். பா.ஜ.க சார்பில் நரசிம்மன் போட்டியிடுகிறார். இன்று அவரும் பா.ம.க, ஓ.பி.எஸ் அணியினருடன் சேர்ந்துபோய் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். தமிழகத்தில் இருக்கின்ற மற்றத் தொகுதிகளைக் காட்டிலும், கிருஷ்ணகிரி தொகுதியில்தான் ஆளும் தரப்புக்கும், எதிர் தரப்பு வேட்பாளர்களுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது நாம் தமிழர் கட்சி. ஒரே காரணம், வீரப்பனின் மகள் களமிறங்கியதுதான். தொகுதியில் வன்னியர் சமூக வாக்குகள் கணிசமாக இருக்கின்றன. வீரப்பன் மகள் என்பதால், அந்தச் சமூக வாக்குகள் ஓரளவு அறுவடையாகும். சமுதாய வாக்குகளை குறிவைத்தும் வித்யா ராணி களத்தில் வேகம் காட்டிக்கொண்டிருக்கிறார். களமும் சூடுபிடித்திருக்கிறது. தந்தைமீது சபதம்; காரில் தொங்கிய பௌன்சர்கள்- புடைசூழ வேட்புமனு தாக்கல்செய்த வீரப்பன் மகள் வித்யா ராணி | krishnagiri parliamentary constituency -ntk candidate veerappan's daughter filed nomination - Vikatan
  9. யாழ்ப்பாணம் 14 மணி நேரம் முன் சாவ. கடலேரி வற்றியதால் தொழில் இழந்த மீனவர்கள் (ஆதவன்) சாவகச்சேரி கடலேரி வற்றியுள்ளதால் அந்தப் பகுதில் கடற்றொழிலில் ஈடுபடும் நூற்றுக்கணக்கானோர் தொழில்களை இழந்துள்ளனர். கடலேரி வற்றி பல இடங்களில் மணல் திட்டுக்கள் காணப்படுகின்றமையால் படகுகள் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று கடற்றொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். (ஏ) சாவ. கடலேரி வற்றியதால் தொழில் இழந்த மீனவர்கள் (newuthayan.com)
  10. வெளிநாடுகளின் நலன்களால் கவரப்பட்ட சில இலங்கை தலைவர்கள் தேசத்தின் இறைமையை அடகுவைக்கின்றனர்- கனடாவில் அனுரகுமார 25 MAR, 2024 | 02:44 PM இலங்கை வலுவான வெளிவிவகாரகொள்கையை பின்பற்றவேண்டியதன் அவசியத்தை ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க வலியுறுத்தியுள்ளார் கனடாவின் வான்கூவரில் இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர்இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் வெளிநாட்;டு உறவுகள் பயனுள்ள வெளிநாட்டு ஈடுபாட்டிற்கு தேவையான வலுவான தன்மையைகொண்டிருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு நலன்களால் கவரப்பட்ட சில இலங்கை தலைவர்கள் தேசத்தின் இறைமையை அடகுவைக்கின்றனர் என ஜேவிபியின் தலைவர் தெரிவித்துள்ளார். தேசத்தின் நீண்டகால நலன்களிற்கு பதில் நிதிசார்ந்த நன்மைகளை அடிப்படையாக வைத்து தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் வெளிவிவகார கொள்கை நாட்டின் நலனிற்கு முக்கியத்துவம் வழங்குவதாக காணப்படவேண்டும் எனதெரிவித்துள்ள அனுரகுமார நாடு உலகஅதிகார போட்டியின் இடைநடுவில் சிக்குண்டுள்ளது வெளிநாட்டு சக்திகளின் அதிகார மோதல்களமாக இலங்கை மாறுவதை தடுப்பதற்கான வெளிவிவகார கொள்கை அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளின் நலன்களால் கவரப்பட்ட சில இலங்கை தலைவர்கள் தேசத்தின் இறைமையை அடகுவைக்கின்றனர்- கனடாவில் அனுரகுமார | Virakesari.lk
  11. குற்றவியல் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களின் ஊடாக பாலியல் செயற்பாட்டில் ஈடுபடக்கூடிய பெண் பிள்ளைகளின் வயதை 14 வருடங்களாக குறைக்க மற்றும் ஆண் குற்றவாளிகளின் வயது 22க்கு குறைவாக இருந்தால் தண்டனையை தளர்த்த வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளமை பற்றி விசேட கவனம் செலுத்துவதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இது தொடர்பான உரையாடல் பின்வருமாறு. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச – 2024 பெப்ரவரி 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட தண்டனைச் சட்டத்தின் 363 மற்றும் 364 ஆவது சரத்தின் 19 ஆம் அத்தியாயத்தின் திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். இந்த மசோதாவின் மூலம், பாலியல் செயற்பாட்டிற்காக வயது குறைந்த சிறுமிகளின் வயதை 16 இலிருந்து 14 ஆகக் குறைப்பது, 22 வயதுக்குட்பட்ட ஆண் குற்றவாளிகளுக்கான தண்டனையைக் குறைப்பது, அது போல தண்டனைச் சட்டத்தின் பிரிவு 363 ஆண் மற்றும் பெண் பலாத்காரத்தை ஒன்றாக வைப்பதற்குப் பதிலாக , பெண் பலாத்காரத்திற்கான தனிச்சட்டங்களும் மற்றும் ஆண்களுக்கு தனித்தனி சட்டங்கள், தனித் திருத்தங்கள் மூலம் ஆண்களுக்கு இருக்க வேண்டிய சட்டங்களும் முன்வைக்க மிகவும் முக்கியமான விஷயங்களாக ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரின் கவனத்திற்கு நான் கொண்டு வருகிறேன். மேலும், குற்றவியல் சட்டத்தின் 363 மற்றும் 364 பிரிவுகளை திரும்பப் பெறுமாறு அரசை கேட்டுக் கொள்கிறேன். குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவரது விளக்கத்தை நீதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். இது எதிர்க்கட்சிகளின் கருத்தா என்று எனக்குத் தெரியவில்லை. ஜே.வி.பி விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க முயற்சிப்பதால், அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று தெரியவில்லை. இது ஒரு சிக்கலான பிரச்சினை. இது கலந்தரையாட வேண்டிய விஷயம். எனவே, அதைச் செய்வதில் இரண்டு கதைகள் இல்லை. Tamilmirror Online || பாலியல் உறவில் ஈடுபடும் வயது குறைப்பு
  12. 22 MAR, 2024 | 07:05 AM மட்டக்களப்பில் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளரான சிறிபாலு வியாழக்கிழமை (21) செங்கலடி பதுளை வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கி பலியாகியுள்ளார். செங்கலடி, கொம்மாதுறை பகுதியைச் சேர்ந்த சிவில் செயற்பாட்டாளரான தம்பிநாயகம் சிறிபாலு வயது (54) எனும் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி - பதுளை வீதியில் புலையவெளி என்ற இடத்தில் இடம்பெற்ற வாகன விபத்திலேயே இவர் பலியாகியுள்ளார் . இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்காக நடைபெற்ற போராட்டங்கள் முதல் கொண்டு பல சிவில் சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டவர் என்பதோடு மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களிலும் பணியாற்றி வருகிறார். கரடியனாறு பகுதியில் இருந்து பதுளை வீதி வழியாக செங்கலடி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனமொன்றுடன் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோதிய போது ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர் சடலத்தை பார்வையிட்டு விசாரணை நடாத்தியதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மட்டக்களப்பின் இடம்பெற்ற வீதி விபத்தில் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளர் பலி! | Virakesari.lk
  13. 22 MAR, 2024 | 07:16 AM கனடாவுக்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க விஜயம் மேற்கொண்டுள்ளார். கனடாவின் டொரன்டோ மற்றும் வான்கூவர் ஆகிய இரு பிரதான நகரங்களில் நாளை 23 சனிக்கிழமை மற்றும் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிமைகளில் நடாத்தப்படவிருக்கும் இலங்கையர்களுடனான சந்திப்புக்களில் பங்கேற்பதற்காக அநுரகுமார திஸாநாயக்க கனடா சென்றுள்ளார். கனடாவுக்கு சென்றுள்ள அநுர குமார திசாநாயக்கவுக்கு டொரன்டோ விமான நிலையத்தில் கனடாவாழ் இலங்கையர்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு ! | Virakesari.lk
  14. யாழ்ப்பாணத்துக்கு புதிய அமைப்பாளரை தெரிவு செய்யவில்லை - ஜனாதிபதி ரணில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ஐக்கிய தேசிய கட்சியின் புதிய அமைப்பாளர் ஒருவரை இன்னும் உத்தியோகப்பூர்வமாக தெரிவு செய்யவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐ.தே.க நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த மறுசீரமைப்புகள் தொடர்பில் இதுவரையில் உத்தியோகப்பூர்வமாக தீர்மானங்கள் எடுக்கப்பட வில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தனது யாழ்ப்பாண விஜயத்தில் அங்கஜன் ராமநாதன் கூட இருப்பார் என்றும், உத்தியோகப்பூர்வ நியமனங்கள் வழங்குவதற்கு முன்னர் எதிர்ப்புகள் காணப்படுமாயின் அவை கருத்தில் கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு புதிய அமைப்பாளரை தெரிவு செய்யவில்லை - ஜனாதிபதி ரணில் | Virakesari.lk
  15. 22 MAR, 2024 | 12:36 PM வவுனியா, தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் சிறுமியின் 36 வயதுடைய தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சிறுமி, தான் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக வியாழக்கிழமை (21) பாடசாலைக்குச் சென்று தனது ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். அதன் பின்னர், இவ்விடயம் தொடர்பாக பாடசாலை நிர்வாகத்தால் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதன் பிறகு, விரைந்து செயற்பட்ட பொலிஸார் சிறுமியை விசாரணை செய்ததில், தாய் வீட்டில் இல்லாதபோதே சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது. அதனையடுத்து, பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். அத்தோடு, சிறுமி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய சிறுவர், பெண்கள் பிரிவு பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருவதோடு, கைதான சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தனர். 14 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தந்தை கைது : வவுனியாவில் சம்பவம் | Virakesari.lk
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.