அபராஜிதன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  1,913
 • Joined

 • Last visited

 • Days Won

  6

அபராஜிதன் last won the day on July 28 2018

அபராஜிதன் had the most liked content!

Community Reputation

424 ஒளி

About அபராஜிதன்

 • Rank
  Advanced Member

Profile Information

 • Gender
  Male

Recent Profile Visitors

12,769 profile views
 1. நன்றிகள் தல..:) பிறந்திருக்கும் இவ்வருடம் மேலும் பல மகிழ்ச்சிகளை கொண்டுவரட்டும் MSC முடிச்சிருக்கீங்க பெரிசா ஒன்றம் செய்யல என்கிறீர்கள் .. என்ன தன்னடக்கம் 2019 இன்னும் பல சிறப்புக்களை கொண்டு வரட்டும்
 2. 2018 முடிந்து விட்டது இன்னமும் , 2018 ல என்னத்தை கிழிச்சம் எண்டு ஒரு மீள் போய் பார்ப்பம் நல்லதும் இல்லா கெட்டதும் இல்லா இரண்டும் கெட்டானாகவே இந்த வருடம் முடிந்திருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த முன்னேற்றம் இல்லாவிடினும் எனது தொழில் சார்ந்து சில முன்னேற்றங்கள் தந்த வருடம் என சொல்லலாம் ஊரில் ஏதாவது விடயங்களை (ஆக குறைந்தது நூலகமாவது ) ஊர் பொடியலுடன் சேர்ந்து செய்வோம் என நினைத்தது.. எதுமே நடைபெறவில்லை..( ஆரை அணுகி எப்பிடி செயற்படுத்துவது என்பது இன்னுமே புரியவில்லை) கலைஞர் கருணாநிதி மற்றும் எழுத்தாளர் பாலகுமாரன்,நடிகை ஸ்ரீதேவி மரணம் தனிப்பட்ட ரீதியில் கவலை தந்தது 2018 பொறுத்தவரை மற்ற ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது ஓரளவு வாசிப்பிற்கு செலவழித்து இருக்கிறேன் 1)ஊழல் உளவு அரசியல்-சவுக்கு சங்கர் 2)மொசாட்- சொக்கன் 3)மயிலிறகு மனசு- தமிழச்சி தங்கபாண்டியன் 4)என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள்- சுமதி ஸ்ரீ 5)அணிலாடும் முன்றில்- நா முத்துக்குமார் 6)வெண்ணிற ஆடை - சரவணன் சந்திரன் 7) வெண் முரசு- செந்நா வேங்கை 😎 வெண்முரசு - திசை தேர் வெள்ளம் 9) வெட்டாட்டம் - ஷான் கருப்புசாமி 10)மீண்டும் துளசி- எண்டமூரி (தெலுங்கு மொழிபெயர்ப்பு) 11) மரப்பல்லி - வா மு கோமு மற்றும் முத்து லக்ஷ்மி இராகவன். வச்சலா,சுமதி , சுரேந்திரநாத் போன்றவர்களின் நாவல்கள் பல 11) அசுரன்( முடிக்கவில்லை 12) நரகம்( inferno தமிழ்) ( முடிக்க வில்லை) 13) உடையார்( 2 ஆவது பாகம் நடுவில்) 14) சிவன் ( முத்தொடர் மொழிபெயர்ப்பு நடுவில்) 2018 ல் நான் பார்த்த படங்கள், சில படங்கள் நல்ல என்று தியெட்டர் போய் மொக்கை வாங்கி இருக்கன் சிலவற்றை தியெட்டரில் பார்த்து இருக்கலாம் என பீல் பண்ணி இருக்கன் தமிழ் 1) 2.0 2)சர்க்கார் 3) 96(like)(like) 4) செக்க சிவந்த வானம் 5) ராட்சசன்(like) 6)ஆண் தேவதை 7)இரும்புத் திரை(like) 😎 பாகுமதி 9)இமைக்கா நொடிகள்(like) 10) இரவுக்கு ஆயிரம் கண்கள்(like) 11)யு turn 12)நோட்டா 13)சாமி -2 14)மாயவன்(like) 15)சீம ராஜா 16)வஞ்சகர் உலகம் 17)கோல மாவு கோகிலா(like) 18)கடைகுட்டி சிங்கம் (like) 19)டிக் டிக் டிக் 20)காலகூத்து 21)தியா 22)நாச்சியார்(like) 23)விஸ்வரூபம்-2 24)நிமிர் 25) தானா சேர்ந்த கூட்டம் மலையாளம் 1)ஹேய் யூட் 2)புதிய நியமம் 3)kasaba தெலுங்கு பரத் எனும் நான் பிரம்மோற்சவம் என் பேரு சூர்யா ஹிந்தி தும் ஹரி சுலு ஜெய் கோ கிச்டிக் Secret superstar English Girl with dragon tatoo Red sparrow Criminal Gifted Searching Inferno Game of throne - series(repeated) Last ship -( 5 seson )series இன்னும் சில் நாட்டு நடப்பில் ரணில் நீக்கபட்டது அதிர்ச்சியாக இருந்தது எங்கே மீண்டும் மஹிந்த வந்து இயல்பு நிலை குழம்பி விடுமோன்னு நினைத்தேன் .. ரணில் வந்தால் என்ன ஆர் இருந்தாலும் தமிழருக்கான தீர்வு கிடைப்பதற்கான சாத்தியங்கள் மிக குறைவே. 2019 ஆவது தனிபட்ட வாழ்விலும் தமிழர்களின் வாழ்விலும் எதாவது மாற்றங்களை கொண்டு வராதா என்னும் எதிர் பார்ப்புடன் நன்றி
 3. எங்க போய் முட்ட..:D, உங்களுக்கும் எனக்கும் என்ன காணி தகராறா? .நான் சந்தோசப்பட இங்கு எதுவும் இல்லை... பகிடிய பகிடியா எடுங்கள்
 4. சுமே ஆன்ரி குத்து வாங்குவதை பார்க்கிறதில அவ்வளவு சந்தோசம் 😄
 5. கூட்டமைப்பின் தோற்றமும் ‘டீல்’ அரசியலும்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கடந்த சில ஆண்டுகளாகத் தென்னிலங்கையோடு ‘டீல்’ அரசியலில் ஈடுபட்டு வருவதாக, கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்தச் குற்றச்சாட்டு தொடர்பில் கூட்டமைப்போ, அதன் தலைமையோ கிஞ்சித்தும் கவனத்தில் கொண்டதில்லை; எதிர்வினை ஆற்றியதுமில்லை. ஆனால், அண்மையில் கூட்டமைப்பின் உருவாக்கமே விடுதலைப் புலிகளுடனான ‘டீலின்’ அடிப்படையிலானது என்று கே.சயந்தன் தெரிவித்த கருத்தொன்று, யாழ். மையவாத அரசியல் அரங்கில், பேசு பொருளாகி இருக்கின்றது. அரசியலில், கூட்டுகளும் கூட்டணிகளும் புரிந்துணர்வு, இணக்கப்பாடு, இலாபம் உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தியே உருவாகி வருகின்றன. அது, இன விடுதலை, உரிமை மீட்பு உள்ளிட்ட அறம் சார் இலக்குகளைக் கொண்டதாகவோ, தேர்தல் வெற்றி போன்ற குறுகிய இலாபங்களைக் கொண்டாதாகவோ கூட அமையலாம். தமிழ்த் தேசிய அரசியலில் உருவான இருபெரும் கூட்டுகளான தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூட, மேற்சொன்ன அடிப்படைகளில் உருவான கூட்டுகளேயாகும். அவை, ஒட்டுமொத்தமாக அறம் சார் இலக்குகளை மாத்திரம் கொண்டு உருவாகிய அமைப்புகள் அல்ல. அவை, குறுகிய இலாப நோக்கங்களைக் கருத்தில் கொண்டும், தோற்றுவிக்கப்பட்ட அமைப்புகளாகும். அல்லது, அதில் பங்கெடுத்த தரப்புகளில் சில, அவற்றின் போக்கில் இணைந்தவையாகும். அப்படியான தருணத்தில், அந்தக் கூட்டுகளின் உருவாக்கத்தில் பங்கெடுத்த ஒவ்வொரு தரப்புக்கும், ஒவ்வொரு தனிநபருக்கும் அவை தொடர்பில் ஒவ்வொரு கதை இருக்கும். அந்தக் கதைகளில் சில புள்ளிகள் வெளியில் உரையாடப்படக் கூடியவையாகவும், இன்னும் சில புள்ளிகள் வெளியில் உரையாட முடியாதவைகளாகவும் இருக்கும். அது, அந்தக் காலத்து அரசியலின் போக்கு, கள யதார்த்தம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அமையலாம். கூட்டமைப்பின் உருவாக்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று, 2015ஆம் ஆண்டு, தொலைக்காட்சி விவாதமொன்றில் இரா. சம்பந்தன் குறிப்பிட்டார். நெறியாளர் அந்தக் கேள்வியை, வெவ்வேறு கோணத்தில் கேட்ட போதும், கூட்டமைப்புக்கும் புலிகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று அவர் அடித்துக் கூறினார். ஒருகட்டத்தில், தொடர்பு இருந்தது பற்றித் தனக்குத் தெரியாது என்றார். ஆனால், இதே சம்பந்தனால், 2009களுக்கு முன்னர், இவ்வாறான கருத்தொன்றைப் பேசியிருக்கவே முடியாது. அந்தக் களமும் காலமும் அவரை அனுமதித்தும் இருக்காது. 2004ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், திருகோணமலை மாவட்டத்தில் தான் ஏன் போட்டியிட வேண்டும் என்று விடுதலைப் புலிகளுடனான சந்திப்பின்போது, 30 நிமிடங்களுக்கும் அதிகமான நேரம் உரையாற்றிய சம்பந்தன், புலிகளுடனான தொடர்பு பற்றித் தனக்குத் தெரியாது என்று, புலிகளின் காலத்துக்குப் பின்னர் கூறியிருக்கிறார். சம்பந்தன் கூறுவது அப்பட்டமான பொய் என்பது தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரியும். அதுபோல, தமிழ் மக்களுக்குக் கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றிய வெளிப்படையான உண்மைகளும் தெரியும். அதை யாரும் எந்தக் காரணத்தாலும் மறுத்தாலும், மறைத்தாலும் அவை எடுபட்டுவிடாது. தமிழ்த் தேசிய அரசியலில், ஜனநாயக விழுமியங்கள் என்பது, எப்போதுமே காலில் போட்டு மிதிக்கப்படும் ஒன்றாகவே இருந்து வந்திருக்கின்றது. அது, சுதந்திரத்துக்கு முந்தையை இலங்கையில் தொடங்கிய சாபக்கேடு. அருணாச்சலம் மகாதேவாவை, துரோகி என்று சொல்லிக் கொண்டு, அரசியல் அரங்கில் சம்மணமிட்டு உட்கார்ந்த ஜீ.ஜீ.பொன்னம்பலத்தை, அதே துரோகி வாதத்தால், தமிழரசுக் கட்சி தோற்கடித்தது வரலாறு. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸில் இருந்து பிரிந்து, தமிழரசுக் கட்சியைத் தந்தை செல்வநாயகம் தோற்றுவிக்கும் போது, அப்போது பலமாக இருந்த காங்கிரஸிடமிருந்து எதிர்கொண்ட தாக்குதல்கள், நெருக்கடிகள் ஜனநாயக விழுமியங்கள் சார்ந்தவை அல்ல. தமிழரசுக் கூட்டங்களில், குடிகாரக் குண்டர்களை இறக்கி ரவுடித்தனம் பண்ணியது முதல், பாம்புகளை எறிந்து மக்களை விரட்டியது வரை, காங்கிரஸ்காரர்களில் ஜனநாயக விழுமியம் பல்லிளித்த வரலாற்றைத் தமிழ் மக்கள் கண்டு வந்திருக்கின்றார்கள். காங்கிரஸின் ரவுடித்தனங்களில் இருந்து தப்பித்துப் பிழைத்து, வெற்றிக் கொடி நாட்டிய தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத்துக்கு முரணான நடவடிக்கைகளை ஏனைய கட்சிகள் மீது பிரயோகித்தது வரலாறு. குறிப்பாக, அ.அமிர்தலிங்கம், தமிழரசு இளைஞர்களைக் கொண்டு, அரசியல் எதிரிகளுக்கு எதிராக நடத்திய ஜனநாயக விழுமியங்களுக்கு அப்பாலான நடவடிக்கைகளே, ஆயுதப் போராட்டத்தின் வளர்ச்சிப் பாதையில், சகோதரப் படுகொலைகளுக்கு விதை போட்டது. ஏனெனில், துரோகி வாதத்தை வைத்துக் கொண்டு, யாரைப் பலி எடுத்தாலும், அது, அறம் சார்ந்த ஒன்றாக, அதைக் கொண்டாட்டமாக ஒப்புவிக்கும், குறு அரசியலை யாழ். மையவாத அரங்கு திறந்தது. அது, அமிர்தலிங்கத்தையும் பலி எடுத்தது. அந்த மனநிலையின் கட்டங்களை, இன்றைக்குச் சமூக ஊடகங்களில், தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராக எழுதப்படும் பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் பலரும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அது தொடர்பில் கேள்வி எழுப்பினால், ஒட்டுமொத்தமாக மூளைச் சலவை செய்யப்பட்ட மனநிலையை வெளிப்படுத்துகிறார்கள். தமிழரசுக் கட்சி உருவாக்கத்துக்கு எதிராக, காங்கிரஸ்காரர்கள் அயோக்கியத்தனங்களைப் புரிந்த போதும், காலம் இருதரப்பையும் ஒன்றாக இயங்கும் சூழலை உருவாக்கியது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் உருவாக்கம், தமிழ்த் தேசிய அரசியலைத் தாங்கிப் பிடிக்கும் போக்கில் மாத்திரம் உருவான ஒன்றல்ல. அவற்றுக்கு, காங்கிரஸ் - தமிழரசு முக்கியஸ்தர்களின் தேர்தல் தோல்விகளும் காரணமாக இருந்திருக்கின்றன. அதுபோலவே, கூட்டமைப்பின் உருவாக்கத்தின் பின்னாலும், பல காரணங்கள் உண்டு. தமிழ்த் தேசிய விடுதலை அரங்கின் ஏக வாரிசுகள் தாங்களே என்கிற நிலையைப் புலிகள் அடைந்துவிட்ட பின்னர், தேர்தல் அரசியல்வாதிகளை அவர்கள் அரங்குக்குள் அனுமதித்ததில்லை. மக்களும் ஊடகங்களும் கூட, அதைப் பெரிதாகக் கண்டு கொண்டதில்லை. ஆனால், அந்த நிலையையும் காலம் மாற்றியது. கூட்டமைப்பின் உருவாக்கம் புலிகளுக்கும் அவசியமான ஒன்றாக இருந்தது. ஜனநாயக முகமொன்று புலிகளுக்குத் தேவை, என்பதை புலிகளின் ஆலோசகர்களாக இயங்கிய பலரும் திரும்பத் திரும்பக் கூறி வந்தனர். அத்தோடு, புலிகளைப் பகைத்துக் கொண்டு, தேர்தல் வெற்றிகளையோ, எதிர்கால இருப்பையோ பலப்படுத்த முடியாது என்பதை, தேர்தல் அரசியலுக்குள் வந்துவிட்ட முன்னாள் ஆயுத இயக்கங்களும் கூட்டணியும் காங்கிரஸும் புரிந்துகொண்டே இணக்கப்பாட்டுக்கு வந்தன. புளொட் அமைப்பை, உள்வாங்குவது தொடர்பில், புலிகள் ஆதரவு தெரிவித்த நிலை காணப்பட்டது. அதற்கான பேச்சுகளும் முன்னெடுக்கப்பட்டன. ஆனாலும், ஆரம்பப் பேச்சுகளிலிருந்தே புளொட் விலகிவிட்டது. இது, வெளிப்படையாகத் தெரியும் செய்தி. ஆனால், இதன்பின்னால், ஒவ்வொரு கட்சிக்குள், புலிகளின் ஒவ்வொரு பிரிவுக்கும்கூட ஒவ்வொரு இலக்கு கூட்டமைப்பை உருவாக்குவது சார்ந்து இருந்தது. அவை, தொடர்பில் ஆயிரத்தெட்டுக் கதைகள் எழுதப்பட வேண்டியிருக்கின்றன. ஒவ்வொரு கதைகளும் ஏதோவொரு புள்ளியில் சந்திக்கலாம். ஆயுதப் போராட்டத்தை நோக்கி, கூட்டணி (தமிழரசுக் கட்சி) தமிழ் இளைஞர்களைத் தள்ளிய போதிலும், அதன்பால் எந்தவித அக்கறையையும் காட்டாதவர் சம்பந்தன். அவர் என்றைக்குமே, ஆயுதப் போராட்ட நிலைக்கு எதிராகவே நின்றார். அவரே, விடுதலைப் புலிகளை ஏக தலைமையாக, ஏக பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளும் கட்டம் ஏன் உருவானது. அதுபோல, யாழ்ப்பாணத்தையே அறியாதவர்கள் எல்லாம், வாகனத்தில் இருந்து இறங்காமலேயே, தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்றது, கூட்டமைப்பு என்கிற அமைப்பு, புலிகளை ஏக பிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொண்டதன் பின்னராக நிகழ்ந்ததுதான். இல்லையென்றால், கூட்டமைப்பு என்கிற கூட்டுமில்லை. அதில் போட்டியிடுவதற்கு ஆட்களும் இருந்திருக்க வாய்ப்பில்லை. விடுதலைப் புலிகளின் முடிவின் பின்னராக கூட்டமைப்பு என்பது, இயங்கு நிலையில் தமிழரசுக் கட்சியே. (2009க்குப் முன்னரான கூட்டமைப்பும், அதன் பின்னராக கூட்டமைப்பும் அதன் தலைமைத்துவம், போக்கு, களம் உள்ளிட்ட அனைத்திலும் மாற்றங்களைக் கொண்ட அமைப்பு.) அதனை, மக்களும் உணர்ந்தே வைத்திருக்கிறார்கள். அதன் போக்கையே, சம்பந்தன் அடிக்கடி பிரதிபலித்தும் வந்திருக்கின்றார். அவர், ஆயுதப் போராட்டத்துக்கு எதிரான மனநிலையோடு எழுந்துவந்த ஒருவர், ஆயுதப் போராட்ட வீழ்ச்சியொன்றின் பின்னராக தன்னுடைய கட்சியைப் பலப்படுத்த நினைக்கிறார். அதன்போக்கில், கடந்த காலத்தில் பேச மறுத்த உண்மைகளை, இப்போது தமிழரசுக்கட்சியினர், பேச விளைகிறார்கள். சயந்தனின் பேச்சும் அதனை நோக்கியதே. -தமிழ்மிரர் பத்திரிகையில் இன்று வெளியான பத்தி. புருஷோத்தமன் தங்கமயில்
 6. முதலில் கூட்டமைப்பின் தலைவர் ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டு.. அவர் இந்தியா வின் ஆளுகைக்கு உட்பட்டு புலிகளை ஏக பிரதிநிதிகளாக ஏற்க மறுத்த பின்னர் தான் சம்பந்தர் தலைவர் ஆக்கபட்டார்.. தமிழ் தேசியகூட்டமைப்பின் உருவாக்கத்தில் புலிகளின் புலனாய்வு துறையின் மறைமுகஅனுமதி/ ஆதரவு இருந்ததாக சிவராமின்? கட்டுரை ஒன்றில் படித்த நினைவு,
 7. "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" "ஆமாம். அப்பப்போ இஷ்டப்பட்டால், ஏதோ எனக்கு தயவு பண்ணுகிற மாதிரி கிளாசுக்கு வரும். போகும்." "உம். நீரே சொல்கிறீர் பாரும்." என்று சொல்லிவிட்டு இரண்டாள் சேர்ந்து தூக்க வேண்டிய வருகைப் பதிவு ரிஜிஸ்டரையும், இன்னும் இரண்டு மூன்று ஃபைலையும் தூக்கி என் முன் போட்டார். "பாரும். நீரே பாரும். போன ஆறு மாச காலத்திலே எண்ணிப் பன்னிரண்டே நாள் தான் ஸ்கூலுக்கு வந்திருக்கிறாள். வீட்டுக்கும் மாசம் ஒரு கடிதம் எழுதிப் போட்டுக் கொண்டுதான் இருக்கேன். ஒரு பூச்சி, புழு இப்படி எட்டிப் பார்த்து, அந்த கடுதாசிபோட்ட கம்மனாட்டி யாருன்னு கேட்டுச்சா? ஊகூம். சர்தான் போடா நீயுமாச்சு உன் கடுதாசியுமாச்சுன்னு இருக்கா அவள். சரி ஏதாச்சும் மெடிக்கல் சர்டிபிகேட் கேட்டு வாங்கிச்சேர்த்துக்கலாம்னா, வந்தால்ல தேவலாம். நம்ம டி.இ.ஓ மாதிரியில்ல ஸ்கூலுக்கு இஷ்டப்பட்டால் வருகிறாள். வந்தாலும் ஸ்டூடண்ட் மாதிரியா வர்றாள்? சே…சே…சே… என் வாயாலே அத எப்படிச் சொல்றது? ஒரு பிரஞ்சு சைக்கிள்ளே, கன்னுக்குட்டி மேலே உட்கார்ந்து வர்ற மாதிரி பாண்ட் போட்டுக் கொண்டு வர்றாள். பாண்டுங்காணும்… பாண்ட்! என்ன மாதிரி பாண்ட்டுங்கறீர்? அப்படியே 'சிக்'குன்னு பிடிச்சிக்கிட்டு, போட்டோவுக்கு சட்டம் போட்ட மாதிரி, அதது பட்பட்டுன்னு தெறிச்சுடுமோன்னு நமக்கெல்லாம் பீதியை ஏற்படுத்தற மாதிரி டிரஸ் பண்ணிட்டு வர்றாள். சட்டை போடறாளே, மேலே என்னத்துகுங்காணும் இரண்டு பட்டனை அவுத்துவிட்டுட்டு வர்றது? அது மேலே சீயான்பாம்பு மாதிரி ஒரு செயின். காத்தாடி வால் மாதிரி அது அங்கிட்டும் இங்கிட்டும் வளைஞ்சு வளைஞ்சு ஆடறது. கூட இத்தினி பசங்க படிக்கறாங்களேன்னு கொஞ்சமாச்சும் உடம்பிலே வெக்கம் வேணாம்? இந்த இழவெடுத்த ஸ்கூல்லே ஒரு யூனிபார்ம், ஒரு ஒழுங்கு, ஒரு மண்ணாங்கட்டி, ஒரு தெருப்புழுதி ஒன்றும் கிடையாது. எனக்கு தெரியுங்காணும்… நீர் அதையெல்லாம் ரசிச்சிருப்பீர்!" "சார்…" "ஓய் சும்மா இருங்காணும். நாப்பது வருஷம் இதுல குப்பை கொட்டியாச்சு. ஐ நோ ஹ்யூமன் சைக்காலஜி மிஸ்டல் டமிள்! தமிழ்சார், எனக்கு மனத்தத்துவம் தெரியும்பா. உமக்கு என்ன வயசு?" "இருபத்தொன்பது சார்!" "என் சர்வீஸே நாற்பது வருஷம்." "பாண்ட் , சண்டை போடக்கூடாதுன்னு விதி ஒன்னும் நம்ம ஸ்கூல்ல இல்லையே சார்." "அதுக்காக, அவுத்துப் போட்டுட்டும் போகலாம்னு விதி இருக்கா என்ன? வயசு பதினெட்டு ஆகுதுங்காணும் அவளிக்கு! கோட்டடிச்சு கோட்டடிச்சு இப்பத்தான் டெந்த்துக்கு வந்திருக்கிறாள். எங்க காலத்துல பதினெட்டு வயசுல இடுப்பிலே ஒண்ணு, தோள்லே ஒண்ணு இருக்கும். போதாக்குறைக்கு மாங்காயைக் கடிச்சிட்டு இருப்பாளுக. போனவாட்டி, அதான் போன மாசத்திலே ஒரு நாள் போனாப் போவுதுன்னு நம்ம மேலே இரக்கப்பட்டு ஸ்கூலுக்கு வந்தாளே அப்போ, அவள் ஒரு நாள்லே, ஆறு மணி நேரத்துக்குள்ளாறே-ஹார்ட்லி ஸிக்ஸ் அவர்ஸ் சார்- என்ன என்ன பண்ணி இருக்காள் தெரியுமா? யாரோ நாலு தடிக்கழுதைகளோட - நீங்கள்ளாம் ரொம்ப கௌரவமா சொல்லிப்பேளே பிரண்ட்ஸ் அப்படீன்னு - நாலு தடிக்கழுதைங்களோட ஸ்கூல் வாசல்லே சிரிச்சு பேசிட்டு இருந்திருக்காள். நம்ம ஹிஸ்டரி மகாதேவன் இருக்கே… அது ஒரு அசடு. நம்ம ஸ்கூல் வாசல்லே, நம்ம ஸ்டூடண்ட் இப்படி மிஸ்பிஹேவ் பண்ணறாளேன்னு அவ கிட்ட போய் "இப்படி எல்லாம் பண்ணக்கூடாது அற்புத மரி, உள்ள வான்னு கூப்பிட்டு இருக்கான். அவள் என்ன சொன்னாள் தெரியுமா? "சொல்லுங்க சார்" "உங்களுக்கு பொறாமையா இருக்கா சார்ன்னு கேட்டுட்டாள். அந்தப்பசங்க முன்னால வெச்சு மனுஷன் கண்ணாலே ஜலம் விட்டுட்டு என்கிட்டே சொல்லி அழுதார். இந்த ஸ்கூல் காம்பசுக்குள்ளே நடக்கிறதுக்குதான் நீங்க பொறுப்பு. வெளியிலே நடக்கிற விவகாரத்துக்கெல்லாம் நீங்க என்னைக் கட்டுப்படுத்த முடியாது சார்னு மூஞ்சியிலே அடிச்ச மாதிரி சொல்றாள். யாருகிட்டே? இந்த நரசிம்மன்கிட்டே.” எச்.எம்.முக்கு முகம் சிவந்து மூக்கு விடைத்தது. “இந்த அநியாயம் இத்தோடு போகலே. சாயங்காலம், பி.டி. மாஸ்டர்கிட்டே சண்டை போட்டுக்கொண்டாள். அவன் இப்படிப் பண்ணப்படாது, இப்படி வளையணும், இந்த மாதிரி கையை வச்சுக்கணும்னு அவளைத் தொட்டுச் சொல்லிக்கொடுத்திருக்கான். தொட்டவன், எசகுபிசகா எங்கேயோ தொட்டுட்டான் போலிருக்கு. இவ என்ன கேட்டிருக்கா தெரியுமா?” “என்னைத் தொட்டுப் பேசாதீங்கன்னு சொல்லியிருப்பாள்.” “மனுஷ ஜாதின்னா அப்படித்தானே சொல்லியிருக்கணும்? இவள் என்ன சொன்னாள் தெரியுமா?” எச்.எம். தலையைக் கையில் தாங்கிப் பிடித்துக் கொண்டார். அவர் முகம் வேர்த்து விட்டிருந்தது. ”சார்... உங்க பொண்டாட்டியோட நீங்க படுக்கறது இல்லையான்னு கேட்டுவிட்டாள். பாவம்! நம்ம பி.டி. பத்மநாபன் லீவு போட்டு விட்டு போய்விட்டான். முடியாதுப்பா முடியாது. நானும் நாலு பெத்தவன். இந்த ராட்சஸ ஜென்மங்களையெல்லாம் வச்சிக்கிட்டு, இரத்தக் கொதிப்பை வாங்கிக்கிட்டு அல்லாட முடியாதுப்பா. அந்தக் கழுதையைத் தொலைச்சுத் தலைமுழுகிட வேண்டியதுதான்.” “இப்போ போய் டி.சி. கொடுத்துட்டால், அவள் எஸ்.எஸ்.எல்.சி. எழுத முடியாமல் போயிடும் சார். அவள் வாழ்க்கை வீணாகப் போய்விடும்.” ”அந்தக் கழுதைக்கே அதைப் பத்திக் கவலை இல்லை. உமக்கெதுக்கு?” *** நமக்கெதுக்கு என்று என்னால் இருந்து விட முடியாது. அது என் சுபாவமும் இல்லை. அத்தோடு, அந்த மரி என்ற ஆட்டுக்குட்டி, ஒரு சின்னப்பெண். அப்படி என்ன பெரும் பாவங்களைப் பண்ணிவிட்டாள்? அப்படியேதான் இருக்கட்டுமே. அதற்காக அவளைக் கல்லெறிந்து கொல்ல நான் என்ன அப்பழுக்கற்ற யோக்கியன்? நான் சுமதியிடம் சொன்னேன். எச்.எம். மாதிரிதான் அவளும் சொன்னாள். ”உங்களுக்கெதுக்கு இந்த வம்பெல்லாம்? நீங்க சொல்றதைப் பார்த்தால், அது ரொம்ப ராங்கி டைப் மாதிரி தெரியுது. உங்களையும் தூக்கி எறிஞ்சு ஏதாச்சும் பேசிட்டால்??” என்றாள். அவளை சம்மதிக்க வைத்து, அவளையும் அழைத்துக்கொண்டு மரி வீட்டுக்கு ஒரு நாள் சாயங்காலம் போனேன். என் வீட்டுக்கு ரொம்ப தூரத்தில் இல்லை அவள் வீடு. ரயில் நிலையத்துக்கு எதிரே இருந்த வரிசை வீடுகளில், திண்ணை வைத்த, முன்பகுதி ஓடு போட்டு, பின் பகுதி ஒட்டிய பழங்காலத்து வீடு அவளுடையது. விளக்கு வைத்த நேரம். திண்ணை புழுதி படிந்து, பெருக்கி வாரப்படாமல் கிடந்தது. உள்ளே விலை மதிப்புள்ள நாற்காலிகள் சோபாக்கள் இருந்தன. ஆனாலும் எந்த ஒழுங்கும் இன்றிக் கல்யாண வீடு மாதிரி இரைந்து கிடந்தன. “மரி,” என்று நான் குரல் கொடுத்தேன். மூன்று முறை அழைத்தபிறகுதான், “யாரு?” என்று ஒரு குரல் உள்ளிருந்து வந்தது. கலைந்த தலையும், தூங்கி எழுந்த உடைச் சுருக்கங்களோடும், சட்டையும் கைலியுமாக வெளிப்பட்டாள் மரி. என்னைப் பார்த்ததில் ஒரு ஆச்சரியம், வெளிப்படையாக அவள் முகத்தில் தோன்றியது. என் மனைவியைப் பார்த்ததில் அவளுக்கு இரட்டை ஆச்சரியம் இருக்க வேண்டும். “வாங்க சார்.. வாங்க, உட்காருங்க.” என்று எங்கள் இருவரையும் பொதுவாக வரவேற்றுவிட்டு நாற்காலிகளை ஒழுங்குபடுத்தினாள். சோபாவில் நானும் சுமதியும் அமர்ந்தோம். எதிரே இருந்த ஒரு நாற்காலியில் அவள் அமரச் சொன்னதும் அமர்ந்தாள். “தூக்கத்தைக் கலைச்சுட்டேனாம்மா?” என்றேன். ”பரவாயில்லே சார்,” என்று வெட்கத்தோடு தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். முகத்தில் விழுந்த முடியை மேலே தள்ளிவிட்டுக் கொண்டாள். ”நீங்க எப்படி இங்கே..?” “சும்மாத்தான். பீச்சுக்குப் போய்க்கிட்டு இருந்தோம். வழியிலே தானே உங்க வீடு. பார்த்து ரொம்ப நாளாச்சேன்னு நுழைஞ்சிட்டோம். அழையாத விருந்தாளி. உடம்பு சரியில்லையா?” ”தைலம் வாசனை வருதா சார்? லேசாத் தலைவலி. ஏதாச்சும் சாப்பிடறீங்களா சார்?” “எல்லாம் ஆச்சு. வீட்டிலே யாரும் இல்லையா?” “வீடா சார் இது....? வீடுன்னா அப்பா, அம்மா இருக்கணும். அப்பா எப்பவோ போயிட்டார். போயிட்டாருன்னா செத்துப் போயிடலே. எங்களை விட்டு விட்டு போயிட்டார். அம்மா என்னைச் சுத்தமாக விட்டுடலை. அப்பப்போ நாங்க சந்திக்கிறோம். சமயத்திலே இரண்டு நாளுக்கு ஒரு முறை நாங்க பார்த்துக்கொண்டால் அது அதிகம். அதனால்தான் இது வீடான்னேன். எனக்கு ஏதோ லாட்ஜிலே தங்கற மாதிரி தோணுது.” எனக்குச் சங்கடமாய் இருந்தது. இரவுகளில், நசுங்கிய அலுமினியப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பிச்சைக்கு வருகிற குழந்தையைப் பார்ப்பது போல இருந்தது. ”சாப்பாடெல்லாம் எப்படியம்மா?” “பெரும்பாலும் பசி எடுக்கறப்போ, எங்க தோணுதோ அங்கே சாப்பிடுவேன். ஓட்டல்லேதான். அம்மா வீட்டிலே தங்கியிருந்தா ஏதாவது செய்வாங்க. அம்மா சமையலைக் காட்டிலும் ஓட்டலே தேவலை. நல்லாயிருக்காதுன்னு சொல்லலை. அம்மான்னு நினைச்சு சாப்பிட முடியலே. பொண்ணுன்னு நினைச்சு அவங்களும் பண்ணலை.” சுமதி என்னை முந்திக்கொண்டு கேட்டாள். ”உன் அம்மாதானே அவங்க?” “ஆமாங்க. இப்போ வேறு ஒருத்தரோட அவங்க இருக்காங்க. அவரை எனக்குப் பிடிக்கலை. என்னையும் அவருக்குப் பிடிக்கலை. சரி அவங்க வாழ்க்கையை அவங்க வாழறாங்க. என் வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டு தீர்க்கிறேன்.” ஓர் இறுக்கமான மௌனம் எங்கள் மேல் கவிந்தது. நான், சாவி கொடுக்காமல் எப்போதோ நின்று போயிருந்த கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். “மரி... ஸ்கூலுக்கு வந்தால், ஒரு மாறுதலாக இருக்குமில்லே?” “நான் யாருக்காக சார் படிக்கணும்?” “உனக்காக,” “ப்ச்!” என்றாள் அவள். இதற்கு மேல் எதுவும் பேசக்கூடாது என்று எனக்குத் தோன்றியது. ”பீச்சுக்குப் போகலாம். வாயேன்.” ”வரட்டுமா சார்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள். “வா.” “இதோ வந்துவிட்டேன் சார்,” என்று துள்ளிக் கொண்டு எழுந்தாள். உள்ளே ஓடினாள். நான் சுமதியைப் பார்த்தேன். “பாவங்க,” என்றாள் சுமதி. “யாருதான் பாவம் இல்லே? இந்தப் பெண்ணை விட்டுவிட்டு எங்கேயோ இருக்கிற அந்த அம்மா பாவம் இல்லையா? இத்தோட அப்பா பாவம் இல்லையா. எல்லோருமே ஒருவிதத்திலே பாவம்தான்.” என்றேன் நான். அப்போதுதான் பூத்த ஒரு பூ மாதிரி, மழையில் நனைந்த சாலை ஓரத்து மரம் மாதிரி, ஓடைக் கூழாங்கல் மாதிரி, வெளிப்பட்டாள் மரி. பேண்ட்தான் போட்டிருந்தாள். சட்டையை டக் பண்ணியிருந்தாள். அழகாகவே இருந்தது அந்த உடை. உடம்புக்குச் சௌகரியமானதும், பொருத்தமானதும்தானே உடை. “ஸ்மார்ட்!” என்றேன். “தேங்க்யூ சார்,” என்றாள், பரவசமான சிரிப்பில். நான் நடுவிலும், இரண்டு புறமும் இருவருமாக, நாங்கள் நடந்தே கொஞ்ச தூரத்தில் இருந்த கடற்கரையை அடைந்தோம். கடற்கரை சந்தோஷமாக இருந்தது. ஓடிப் பிடித்துக் கல் குதிரைகளின் மேல் உட்கார்ந்து விளையாடும் குழந்தைகள். குழந்தைகள் விளையாட்டைப் பார்த்து ரசிக்கும் பெற்றோர்கள். உலகத்துக்கு ஜீவன் சேர்க்கும் யுவர்களும் யுவதிகளும். கடலைகள், கடல் மணலில் சுகமாக வறுபட்டன. குழந்தைகள் வாழ்வில் புதிய வர்ணங்களைச் சேர்த்துப் பலூன்கள் பறந்தன. ஸ்டூல் போட்டுப் பட்டாணி சுண்டல் விற்கும் ஐயரிடம் வாங்கிச் சாப்பிட்டோம். “கார வடை வாங்கிக் கொடுங்க சார்,” என்றாள் மரி, கொடுத்தேன். தின்றாள். ”மத்தியானம் சாப்பிடல்லே சார். சோம்பேறித்தனமாக இருந்துச்சு. தூங்கிட்டேன்.” “ராத்திரி எங்களோடுதான் நீ சாப்பிடறே,” என்றாள் சுமதி. “இருக்கட்டுங்க்கா.” ”என்ன இருக்கட்டும். நீ வர்றே.” வரும்போது, சுமதியின் விரல்களில் தன் விரல்களைக் கோத்துக்கொண்டு, சற்றுப்பின் தங்கி மரி பேசிக் கொண்டு வந்தாள். நான் சற்று முன் நடந்தேன். சாம்பாரும் கத்தரிக்காய் கறியும்தான். மத்தியானம் வறுத்த நெத்திலிக் கருவாடு இருந்தது. “தூள்க்கா.... தூள்! இந்தச் சாம்பாரும் நெத்திலிக் கருவாடும் பயங்கரமான காம்பினேஷங்க்கா,” என்றாள் மரி. ***** மரி இப்போதெல்லாம் காலையும் மாலையும் தவறாமல் எங்கள் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தாள். காலை இட்டிலி எங்கள் வீட்டில்தான். வருஷம் 365 நாட்களும் எங்கள் வீட்டில் இட்டிலி அல்லது தோசைதான். “ஆட்டுக்கல்லை ஒளித்து வைத்து விட்டால், சுமதிக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும். மரி,” என்பேன். மரி விழுந்து புரண்டு சிரிப்பாள். சாயங்காலங்களில் எங்கள் வீட்டில்தான் அவள் வாழ்க்கை கழிந்தது. பேண்ட் போட்ட அந்தப்பெண், சிரமப்பட்டுச் சம்மணம் போட்டு உட்கார்ந்து சுமதிக்கு வெங்காயம் நறுக்கித் தருவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும். “ஏம்மா... சைக்கிள்ளே ஊரைச் சுற்றுகிற பெண் நீ. இங்கே இவளுக்கு வெங்காயம் நறுக்கித் தர்றியோ?” என்றேன். “இதுதான் சார் த்ரில்லிங்கா இருக்கு. கண்ணிலே நீர் சுரக்கச் சுரக்க வெங்காயம் நறுக்கிறது பயங்கரமான எக்ஸ்பீரியன்ஸ்.” என்றாள். ஐயோ இந்தப் பயங்கரமே! “சார், ஒண்ணு சொல்லட்டுமா?” “ஊகூம். ரெண்டு மூணு சொல்லு.” “சீரியஸாகக் கேட்கிறேன், சார். நான் இங்கே வந்து போறதிலே உங்களுக்குத் தொந்தரவு இல்லையே சார்?” “சத்தியமாகக் கிடையாது.” கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு அவள் சொன்னாள். “ஏன் சார் - கெட்டுப் போனவள்னு எல்லோரும் சொல்கிற என்னை எதுக்கு உங்க வீட்டிலே சேர்த்து, சோறும் போடறீங்க?” சிரிப்புத்தான் வந்தது. “பைத்தியமே! உலகத்திலே யார் தான் கெட்டுப் போனவங்க? யாராலுமே கெட முடியாது, தெரியுமா? மனசுக்குள்ளே நீ கெட்டுப் போனவள்னு நினைக்கிறியாக்கும்? அதை விட்டுடு. நீயும் கெட்டவள் இல்லை, உங்க அம்மாவும், அப்பாவும் யாருமே கெட்டவங்க இல்லே.” அவள் சொனாள்: “எங்க அம்மாவைப் பழி தீர்க்கணும்னுதான் அப்படியெல்லாம் நடந்துக்கறேன் சார்.” “எனக்கும் தெரியும்.” என்றேன். பத்து நாள் இருக்குமோ? இருக்கும். ஒரு நாள் மரி என்னிடம் கேட்டாள். ”சார்.. நான் ஸ்கூலுக்கு வர்றதே இல்லைன்னு நீங்க ஏன் கேட்கவில்லை?” நான் அவள் முகத்தைப் பார்த்தேன். இரண்டு மணிகள் உருண்டு விழத்தயாராய் இருந்தன. அவள் கண்களில். “என்னை நீங்க கேட்டிருக்கணும் சார். ஏண்டி ஸ்கூலுக்கு வரலைன்னு என்னை அறைஞ்சு கேட்கணும் சார். அப்படி யாரும் என்னைக் கேட்க இல்லேங்கறதுனாலதானே நான் இப்படி விட்டேத்தியா இருக்கேன்? என் மேல் இப்படி யாரும் அன்பு செலுத்தினது இல்லே சார். அன்பு செலுத்தறவங்களுக்குத்தானே அதட்டிக் கேக்கவும் அதிகாரம் இருக்கு?” “உனக்கே அது தோணனும்னுதானே நான் காத்திருக்கேன். அதனாலே என்ன? ஒன்றும் முழுகிப் போய்விடவில்லை. இன்னைக்குப்புதுசா ஆரம்பிப்போம். இன்னைக்குத்தான் டென்த் கிளாஸ்லே நீ சேர்ந்தன்னு வச்சுக்க. நாளையிலேர்ந்து நாம் ஸ்கூலுக்குப் போறோம்.” என்றேன். மரி, முகத்தை மூடிக் கொண்டு விசும்பி விசும்பி அழுதாள். ****** Fb
 8. நினைவுகள்: பிரபஞ்சகவி என்னும் மனிதாபிமானி ====================================== ====== எட்டாண்டுக் காலம் பாண்டிச்சேரி என அழைக்கப்பட்ட புதுச்சேரியில் வாழ்ந்த நான் பிரபஞ்சனின் கதை வெளிகளை நேரில் பார்த்திருக்கிறேன். அங்குலம் மாறாமல் தெருக்களையும், வண்ணங்கள் மாறாமல் கட்டடங்களையும், வாசம் மாறாமல் சூழலையும் எழுதுவதன் மூலம் தனது கதைகளின் பாத்திரங்களை புதுச்சேரிக்காரர்களாகக் காட்டியிருக்கிறார். புதுச்சேரிப் பல்கலைக்கழக சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளியின் கௌரவ விரிவுரையாளராக இரண்டு பருவங்கள் பணியாற்றினார். வாரத்திற்கு இரண்டு நாள் வருவார். வருபவர் மாணவிகளோடும் மாணவர்களோடும் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டே இருப்பார். மொழிபெயர்ப்பில் தமிழில் கிடைத்த பெரும்பாலான நாடகங்களை வாசித்தவர். ஆண்டன் செகாவின் செர்ரிப்பழத்தோட்டம் நாடகத்தைப் பாடம் நடத்தியபோது நானும் ஓரத்தில் மாணவனாக அமர்ந்து கேட்டிருக்கிறேன். மாணவர்களைத் தள்ளி நிறுத்தாத உரையாடல் அவருடையது. ஒரு கதை உண்டாக்கும் நம்பகத்தன்மையே அதன் வாசகத் தளத்தை விரிவுபடுத்துகிறது. ஒரு சிறுகதையோ நாவலோ வாசகர்களைத் தன் பக்கம் இழுக்கவும், அவர்களுக்கு நெருக்கமானதாகத் தோன்றுவதற்கும் புனைவெழுத்தின் மூன்று அடிப்படைகளில் ஏதாவது ஒன்று அவனது சொந்த வாழ்க்கையோடு தொடர்புடையதாக இருந்தால் போதும். அந்தப் புனைவெழுத்தை - கதையை- வாசகர்கள் நடந்திருக்கக் கூடிய கதையாக அல்லது நடக்கக் கூடிய கதையாக நம்பி வாசிப்பர். காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்றில் எதாவது ஒன்று தொடர்பு பட்டதாக இருந்தால் போதும். நம்பகத்தன்மை உண்டாகி விடும். பிரபஞ்சனின் கதைகள் உண்டாக்கும் நம்பகத்தன்மை என்பது அவர் வெளிகளை- இடங்களைச் சித்திரிக்கும் எழுத்துமுறையில் இருக்கிறது என்பது எனது கணிப்பு. குறிப்பான இடங்களில் கதை நிகழ்வதாக எழுதுவது மூலம் அக்கதையின் காலத்தையும், இடம் பெற்றுள்ள பாத்திரங்களையும் நம்பத் தக்கவர்களாக மாற்றி விடுவார்.வட்டாரம் சார்ந்த கதைகள் என்ற வகைபாடுகளின் பின்னணியில் அந்தந்தப் பிரதேசத்தின் வட்டாரமொழிப் பிரயோகம் இருக்கிறது என்றாலும், இடங்களைச் சித்திரித்துக் காட்டும் படைப்பாளியின் திறமையினால் தான் நம்பகத்தன்மை கூடுகிறது. மனிதாபிமான வெளிப்பாடு நவீனத்துவக் கதைகளின் முதன்மையான கூறாகக் கருதப்பட்ட காலத்தின் பிரதிகளாக அவரது சிறுகதைகள் ஒவ்வொன்றும் வெளிப்பட்டன. சிறுகதைகள் அளவிற்கு நாவல்களில் முழுமையை உருவாக்கவில்லையென்றாலும் புதுச்சேரி வரலாற்றை உள்வாங்கிக் கொண்டு எழுதிய வரலாற்றுப் புதினங்கள் தமிழ் வரலாற்றுப்புதினங்களில் திசை விலகல்களை ஏற்படுத்தியவை. அவர் எழுதிய இரண்டு நாடகங்களும் எனக்கு நெருக்கமானவை. புனைகதைகளிலிருந்து விலகியவை. குறியீடுகளைப் பொதிந்து வைத்து எழுதிய முட்டையில் ஒரு நடிகனாக இருந்திருக்கிறேன். ராமாயணக் கிளைக் கதையான அகல்யாவைத் திரும்பவும் எழுத வைத்து இயக்கி வெற்றிகரமான மேடையேற்றமாகத் தந்திருக்கிறேன். முதலில் அவர் எழுதிய பிரதியில் சூர்ப்பனகை இல்லை. எனக்காகச் சூர்ப்பனகையையும் இணைத்து எழுதித்தந்தார். அதற்காக அவரோடு தொடர்ந்து விவாதங்கள் நடத்தியதுண்டு. அவரது எழுத்துகள் குறித்தும் எழுதியதுமுண்டு. ராமசாமி .அ ################### பிரபஞ்சன் -பிரும்மம் அய்யா பிரபஞ்சனின் இழப்புச் செய்தி துயரத்தை தருகிறது.அவரைச் சந்திக்கும் தருணங்களில் எல்லாம் சிறிய தலையசைப்புடன் கூடிய புன்னகையை எனக்கு தந்துபோவார்.அவருடன் ஆண்டாளைப் பற்றியும் நாயன்மார்களைப் பற்றியும் உரையாடிய கே.கே நகர் பொழுதொன்று ஞாபக்கிளையில் அசைகிறது.சிகரெட் பிடிப்பதில் அவருக்கென இருந்த கம்பீரமும் மிடுக்கான உடல் மொழியும் வசீகரமான மழைச்சாரல் மாதிரி எனக்குள் இப்போதும் அடித்துக்கொண்டிருக்கிறது. அவருடனான சந்திப்புக்கள் எனக்கு மறக்கமுடியாதவை.என்னுடைய முதல் சிறுகதை நூல் வெளியீட்டு விழாவிற்கு தலைமை தாங்கி சிறப்புரை வழங்கினார்.தொடர்ச்சியாக நீங்கள் எழுதவேண்டும் உண்மை எதுவென்று உலகுக்கு உணர்த்தும் வரை எழுதுங்கள் என்று சொன்ன அவரின் குரல் எனக்குள் ஒலித்துக்கொண்டிருக்கிறது.அவருக்கு சென்னையில் எடுக்கப்பட்ட பிரபஞ்சன் நிகழ்வில் ஒரு அமர்வை தொகுத்தும் வழங்கும் வாய்ப்பு எனக்கு கிட்டிற்று.நான் எப்போதும் பிரபஞ்சனை அய்யா என்று தான் அழைப்பேன்.அவர் எல்லோரையும் அழைப்பதை போல சார் என்று என்னை விளிப்பார்.அய்யா உங்களை இழந்திருக்கும் இந்நாளில் உங்கள் பிரும்மம் கதையை முறிந்து விழுந்த முருங்கை மரத்தின் வலியோடு வாசித்துக்கொண்டிருக்கிறேன்.அந்தக் கதையின் இறுதி வரியில் நீங்கள் இப்படி எழுதியுள்ளீர்கள். "ஒரு நாள் காலை காப்பிக்கு மாடியை விட்டுக் கீழிறங்கி, வழக்கப்படி டம்ளரோடு முருங்கையின் அருகில் போய் நின்றேன். எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது. துண்டாகி நின்றிருந்த மரத்திலிருந்து, ஒரு இடத்தில் சின்னதாய்க் கிளைத்து இருந்தது. உயிர்தான்". அன்பின் அய்யா தமிழ் இலக்கியத்தின் உயிர்களில் நீங்களும் ஒருவர்.அது எப்போதும் மறையாது. -அகரமுதல்வன் 21.12.2018
 9. வடக்கு அபிவிருத்தி அமைச்சு ரணில் வசம் இருப்பதால் அதன் நிழல் அமைச்சர் சுமந்திரன் தான் என ஒரு சிலர் சொல்கிறார்கள்
 10. இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி யின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம் விசாகப்பட்டினத்தில். இங்கு தான் என் தோழர் பிரபஞ்சன் அவர்களின் மரணச் செய்தி கிடைத்தது. படைப்புலகின் ஒரு மேன்மையான பகுதி, தன் கண்களை மூடிக்கொண்டதைப் போன்ற உணர்வு தான் எனக்கு ஏற்படுகிறது. படைப்பாளிகளை அவர் வாழும் காலத்தில் அவர்களைப் புரிந்து கொள்ளவில்லை. இறந்த பின்னரும் புரிந்து கொள்ளவில்லை. பாரதியை, புதுமைப் பித்தனைப் போல காலம் செல்ல செல்லத்தான் மேன்மை களைப் புரிந்து கொள்கிறார்கள். பிரபஞ்சன் அவர்களை புரிந்து கொள்ள தமிழ் மக்களுக்கு இன்னமும் கொஞ்ச காலம் தேவைப்படும். தோழர் பிரபஞ்சன் அவராலேயே என் தாய் மடி என்று அழைக்கப்பட்ட தாமரை அவருக்கு அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது. தாய் உடல் நலம் இல்லாமல் இருந்த போதும் உடனிருந்து அனைத்து உதவிகளையும் செய்த பெருமைகுரிய தம்பி பி.என். எஸ் பாண்டியயனுக்கு என் ஆறுதல் C. மகேந்திரன் fb
 11. ***************மானசீகன்***************** பிரபஞ்சனை சிறிய வயதிலேயே கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தப் பெயரே என்னை வசீகரித்திருக்கிறது . அந்தப் பெயரை அவர் வைக்கவில்லை என்றால் நான் வைத்திருப்பேன். எழுத்தாளர்கள் சினிமா நடிகர்களைப் போல ஸ்டைலாக இருக்க முடியும் என்பதை நிரூபித்தவர் அவர்தான். ஜெயகாந்தனின் சபையைப் போல் பிரபஞ்சனின் மேன்ஷன் ரூமும் இலக்கியவாதிகளின் ஜங்ஷன்தான் . ஆனால் இரண்டும் வேறு வேறு. அது குருகுலம் என்றால் இது சீட்டுக்கச்சேரி . நண்பர்களை வரச் சொல்லி விட்டு அறையைப் பூட்டி விட்டுப் போன பிரபஞ்சன் குறித்து யாரோ எழுதியிருந்தார்கள் . ( பவா என்று நினைக்கிறேன் ) எழுத்தாளராக இருந்து கொண்டு கல்வித்துறையிலும் இருக்கிற எனக்கு ஏன் அவரால் அங்கு நீடித்திருக்க இயலவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது . வணிக இதழ்களுக்காகவும் , வாழ்தலின் நிர்பந்தத்திற்காகவும் நிறைய எழுதியவர். அதனாலேயே அவரை மதிப்பிடுவது சிரமம். வரலாறும், புனைவும் அவருக்கான களம். அடித்து ஆட வேண்டிய ஒரு பேட்ஸ்மேனை சூழல் பெரும்பகுதி பை ரன்னராகவே ஆக்கி விட்டது. வானம் வசப்படும் நூலும் சில சிறுகதைளும் அவர் பெயரை நீண்ட காலம் சொல்லும். தமிழ் எழுத்தாளர்களிலேயே தலைசிறந்த கதைசொல்லி அவர்தான். குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்து கடைசியில் அழச் செய்து விடுகிற வித்தையால் சபையில் விஸ்வரூபம் எடுத்து விடுவார் . ஆண்டன் செகா கதையை பிரபஞ்சன் சொல்லிக் கொண்டிருக்கும் போது ஆண்டன் செகாவே வந்தாலும் சத்தமில்லாமல் முதல் வரிசையில் அமர வேண்டியதுதான் ; வேறு வழி இல்லை .குற்றாலத்திலும் , கும்பகோணத்திலும் நடைபெற்ற இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளில் அவரை நேரில் சந்தித்திருக்கிறேன். ' நீ நல்லா பேசறடா . எழுது. உனக்கு அதுவும் வரும் ' என்று தலையில் கை வைத்து ஆதிர்வதித்திருக்கிறார் . தமிழ் எழுத்தாளர்கள் பெண்களைப் பற்றி பேசியிருக்கிறார்கள் . ஆனால் பெண்களின் பிரச்சினைகளை பேசியவர் அவர்தான். அவருடைய நாவலொன்றில் கணவன் சங்கீத வித்வான். மனைவி சங்கீதத்தில் ஞானசூன்யம் . வழக்கம் போல் சங்கீதம் தெரிந்த வேறொரு சின்னப் பெண்ணிடம் காதல் வந்து விடும். அவள் கேட்கும் போதெல்லாம் ' கலை ' 'மேதமை ' ' ஒத்த ரசனை ' என்று பிதற்றுவார். கடைசியில் மனைவி கேட்பாள் ' எனக்கு சங்கீதத்திலே அனா ஆவன்னா தெரியாத மாதிரி உங்களுக்கு சமையல்ல எதுவும் தெரியாது. அதுக்காக வட்டமா தோசை சுட தெரிஞ்ச யாரோ ஒருத்தனோட போயிட்டு வந்து ' ரசனை ' அது இதுன்னா நீங்க ஏத்துப்பீங்களா ? ' . இந்த நாவலைப் படித்து விட்டு சிந்து பைரவி பார்த்தால் அந்த அனுபவம் வேறொன்றாகி விடும். இதுதான் பிரபஞ்சனுக்கான இடம். அவருடைய பல கதைகளில் தேர்தல் அரசியலால் சீரழிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சித்திரமும் , லௌகீகத்தின் நெருக்கடியால் நுண் உணர்வுகளைத் தொலைத்து விட்ட ஆணின் குற்ற உணர்வும் மீண்டும் மீண்டும் நம்மைப் பின்தொடர்வதை உணர்ந்திருக்கிறேன். அவருடைய பல கதைகளில் கதை நாயகியின் பெயர் சுமதி ( முன்னாள் காதலி என்றே ஊகிக்கிறேன் ) மென்மையும் , அன்பும் நிறைந்த அந்தப் பெண்ணின் மீதான காதலே பிரபஞ்சனின் உந்துசக்தியாய் இருந்திருக்க முடியும். அந்த உணர்வு தந்த நம்பிக்கைதான் லௌகீகத்தின் சகல தளங்களையும் கலைத்துப் போட்டு விட்டு கூலிங் கிளாஸோடு ஸ்டைலாக நடக்க வைத்திருக்கிறது. பாக்கெட்டில் பைசா இல்லாத ஒருவனை சகலருக்குமான ஹீரோவாக உணர வைத்திருக்கிறது. பிரபஞ்சனை விட அவரை இயக்கிய அந்த உணர்வே எனக்கு முக்கியமாகப் படுகிறது. சுமதியம்மா எங்கே இருக்கிறீர்கள்? உங்கள் கண்ணீரையோ , வெறித்த பார்வையையோ நான் பார்க்க வேண்டும். ஏனென்றால் எங்கள் பிரபஞ்சன் அங்குதான் இருக்கிறார். Mohammed Rafeek R fb
 12. இழப்பதற்கும் அடைவதற்கும் ஏதுமற்ற கலைஞன் பிரபஞ்சன் நேற்றிரவு முழுக்க விடாமல் மழைபெய்து கொண்டேயிருந்தது. தூக்கம் வராத அந்த மழை இரவில் நினைவுகள், எழுத்தாளர் பிரபஞ்சனையே நிலை கொள்ளாமல் சுழன்று கொண்டிருந்தது. அவருக்கு சென்னை பீட்டர்ஸ் காலனியில் ஒதுக்கப்பட்ட வீடொன்று உண்டு. மூன்றாவது மாடி. இப்படியான மழைநாளில் முழுவீடும் ஒழுகும். தன் வாழ்நாளெல்லாம் தேடித்தேடி சேகரித்த பல அரிய புத்தகங்கள் மழையில் நனையும். ஒழுகாத இடம் தேடி, படுக்கவும் இடமின்றி, ஒரு தமிழ் எழுத்தாளனின் பல ஆண்டு கால அலைச்சல் யாராலும் கண்டு கொள்ளப்படாமலேயே போகிறது. போகட்டும். இதனாலெல்லாம் துவண்டுபோகாத படைப்புமனம் வாய்க்கப் பெற்ற படைப்பாளியாகத்தான் நான் பிரபஞ்சனைப் பார்க்கிறேன் இருபதாண்டுகளுக்கு முன் பாண்டிச்சேரியில் எழுத்தாளர் கி.ரா.வுக்காக நடத்தப்பட்ட ஒரு விழாவில் பட்டுவேட்டி, பட்டுச்சட்டை, கையில் புகையும் ஒரு முழு சிகெரெட்டோடு நான் முதன் முதலில் பிரபஞ்சனைப் பார்த்தேன். கொண்டாட்டங்களுக்காகப் பிறந்த கலைஞன் என நான் அவரை எனக்குள் பதித்துக் கொண்டேன். ஆனால் பெரும் துக்கங்களை உள்ளடக்கிக் கொண்டு அப்படி வாழ ஆசைப்படும் எழுத்தாளன் என்பது அவரை ஆழ்ந்து படிப்பவர்களும், அவரின் நட்புக் கண்ணியில் ஏதோ ஒரு துளியில் ஒட்டிக் கொள்பவர்களுக்கும்கூடப் புரியும். ஆறேழு மாதங்களுக்கு முன் அவர் ஒரு இலக்கிய நிகழ்வுக்காக கனடா சென்றிருந்தபோது அவர் மனைவி இறந்துவிட்டார். பதறி அடித்து பாண்டிச்சேரிக்குப் போனால், அதே தூய்மையான வெள்ளை வேட்டியும், வெள்ளைச் சட்டையுமாக எங்களை எதிர்கொள்கிறார். அப்பிரிவின் துயரை அவர் அன்று ஆற்றிக் கொண்ட விதம் வேறெந்த மரணத்திலும் நான் காணாதது. அதீத துக்கமும், சந்தோஷமும் மனப்பிறழ்வைச் சமீபிக்குமோ என பயத்தில் உறைந்த தருணமது. ப.செயப்பிரகாசம், அ.மார்க்ஸ் என்று தமிழின் முக்கிய ஆளுமைகள் பலர் அம்மரணத்திற்கு வந்து கொண்டே இருக்கிறார்கள். பிரபஞ்சன் ஒரு நண்பரின் கைப்பிடித்து சொல்கிறார். “ராணிக்கு ஒரு நல்ல கணவன் வாய்த்திருந்தால் அவள் நன்றாக வாழ்ந்திருப்பாள். அவள் வாழ்நாளெல்லாம் இக்குடும்பத்தைக் காத்துக் கொள்ள ஓடிக் கொண்டேயிருந்தாள். நான் ஒரு போதும் அவளுக்கு ஒரு நல்ல கணவனாக இருந்ததில்லை......” என்னால் என் அழுகையை அடக்க முடியவில்லை. இப்பூமி பரப்பெங்கும் உண்மையான கலைஞர்களின் குரல்கள், லௌகீக வாழ்வின்முன் இப்படித்தான் உள்ளடங்கிப் போய்விடுகிறது. மூன்றாந்தர மனிதர்களின் வெற்றிப் பெருமிதத்திற்கு முன் ஒரு படைப்பாளி ஒடுங்கிப் போவது இந்தப் புள்ளியில்தான். ஆனால் பிரபஞ்சன் தன் உன்னதமான உயரிய படைப்பின் மூலம் இத்தாக்குதலைத் தன் காலில் போட்டு நசுக்குகிறார். லௌகீக வாழ்வின் தோல்வியை, மானுட வாழ்விற்கான தன் ஆகச் சிறந்த படைப்புகளின்மூலம் இட்டு நிரப்பி விஸ்வரூபமெடுக்கிறார். எழுத்துக்கும் பொருளுக்குமான இச்சூதாட்டத்தில் ஒரு உண்மையான கலைஞன் பொருளின் பக்கம் சாய்வது மாதிரி ஒரு மாயத்தோற்றம் தெரியும். ஆனால் அவன் மிகுந்த பசியோடு தன் படைப்பின் பக்கத்திலேயே உட்கார்ந்திருப்பான். ஒரு பிரபல வாரப்பத்திரிகையில் ஒரு தொடர்கதை எழுத ஒப்புக்கொண்டு ஏழெட்டு வாரங்கள் எழுதி முடிக்கிறார். அச்சு இயந்திரத்தின் அகோரப்பசிக்கு இவரால் தீனி போட முடியவில்லை. அது அவரையே கேட்கிறது. படைப்புக்கும், அச்சேற்றத்திற்குமான இடைவெளியை ஒரு எழுத்தாளன் நிதானமாகத்தான் கடக்க வேண்டியுள்ளது. இட்டு நிரப்புவது அல்ல எழுத்து. இந்தப் பெரும் மனப்போராட்டத்துடனேயே, அவர் அக்கதையின் நாயகி சுமதியை அண்ணாசாலையில் நிறுத்திவைத்துவிட்டு திருவண்ணாமலைக்கு பஸ் ஏறி வந்துவிட்டார். எத்தனையோ அற்புதமான இரவுகளைப்போல அவர்தன் கதாநாயகியை அம்போவென விட்டுவிட்டு வந்து எங்களோடு கொண்டாடிய அந்த இரவும் மறக்க முடியாதது. சலிப்படையாத உரையாடல் அவருடையது. சங்க இலக்கிய வாசிப்பும், கற்றுத் தேர்ந்த அம்மரபைத் தொடர்ந்து மீறுவதும், நவீன வாசிப்பைத் தன் மூச்சுக் காற்றைப்போல தனக்குள்ளேயே வைத்திருப்பதும் அவரை ஒரு காட்டாற்று வெள்ளமாகவே வைத்திருக்கிறது. திருவண்ணாமலையில் அரசு ஊழியர்கள் தங்களுக்கென்று ஒரு இலக்கிய வட்டம் தேவையெனக் கருதினார்கள். குற்ற உணர்வுகள் மேலோங்கி வரும்போதெல்லாம் மனிதர்கள் அன்னதானமிடுவார்கள், கிரிவலம் போவார்கள், தேவாலயங்களில் முட்டி தேய்ப்பார்கள், இப்படி இலக்கியக் கழகங்களும் ஆரம்பிப்பார்கள். அப்படித்தான் அன்று அரசு ஊழியர் இலக்கிய வட்டத் துவக்கவிழா காந்தி சிலை மூலையில் பொது மேடையில் துவங்கியது. சில அரசு ஊழிய நண்பர்களோடு நானும் போய், நெய்வேலியில் ஒரு இலக்கியக்கூட்டம் முடித்து பிரபஞ்சனை காரில் அழைத்து வந்தோம். வழியெங்கும் இலக்கியம், கலை, படைப்பாளிகள் என சொற்களின் விளையாட்டுகளினூடே ஊர் வந்து சேர்ந்தோம். அதுவரை அவர் அந்த இலக்கிய அமைப்பு பற்றி ஒரு வார்த்தை கேட்கவில்லை. அடுத்தநாள் மாலை அந்த இலக்கிய வட்டத்தைத் துவக்கி வைத்து உரையாற்றினார். அவர் துவங்கின நிமிடமே கூட்டத்திலிருந்த எல்லா அரசு ஊழியர்களின் முகங்களும் வெளிறிப் போனது. யாருக்காகவோ வெட்டப்படுகிறது என நினைத்த குழிகளில் அவர்களே ஒவ்வொருவராக இறக்கிவிடப்பட்டுக் கொண்டிருந்தார்கள். நிதானிப்பதற்குக்கூட அவகாசம் தராமல் அவர்களைத் தன் பேச்சால் நடுத்தெருவில் நிர்மூலமாக்கிக் கொண்டிருந்தார். என் அப்பா பெயர் என்ன? அவர் என்றைக்குச் செத்தார் என்பதற்கு நான் இவர்களுக்கு நூறு ரூபாய் தரவேண்டி உள்ளது என்பதில் துவங்கி, ஒவ்வொரு அரசு அலுவலகங்களும் எப்படி லஞ்சத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது என்பதை விலாவாரியாக விளக்கி ஒவ்வொரு அலுவலருக்கான ரேட் என்ன? அதை அவர்கள் எங்ஙனம் பெறுவார்கள் என்பதுவரை அவர்களை வைத்துக் கொண்டே பேசித் தீர்த்தார். கூட்டம் முடிந்து நீடித்த மௌனம், ஒரு அகால மரணத்தை எதிர்கொள்வது மாதிரியிருந்தது எனக்கு. அதுதான் அரசு ஊழியர்களின் இலக்கிய வட்ட துவக்க விழாவும் நிறைவு விழாவும். இப்படியாக அரசு ஊழியர்கள் ஆற்ற இருந்த ஒரு பெரிய இலக்கியப் பணியை முடிவுக்குக் கொண்டுவந்தார். ஒரு படைப்பாளியின் உன்னதத் தருணமிது. இதைக் கடப்பதற்கு மிகப் பெரிய ஆன்ம பலம் தேவை. பிரபஞ்சன் பல நேரங்களில் இதைச் சுலபமாகக் கடந்து விடுகிறார். எனக்கு சுந்தரராமசாமியைப் பார்க்கும் போதும், படிக்கும்போதும், இவரை மாதிரியான ஒரு பொருளாதாரச் சூழல் பிரபஞ்சனுக்கு வாய்த்திருந்தால், இன்னும்கூட வீரிய விதைகள் இவரிடமிருந்து இத்தமிழ் மண்ணில் விழுந்திருக்கும் எனத்தோன்றும். ஒரே மனிதன் ஒட்டுமொத்த மானுடப் பசிக்கான துயரத்தைப் பாடிக்கொண்டே தன் சொந்தப் பசிக்காகவும் ரொட்டிகளைத் தேட வேண்டியிருந்தது. அதுதான் பிரபஞ்சனுக்கு நேர்ந்தது. ஆனால் தன் ஒட்டுமொத்த படைப்புகளில் அவர் மனிதகுலத்தை ஒரு அடி முன்னே நகர்த்தவும், சக மனிதர்கள் மீது அன்பு செலுத்தவும், ஆண், பெண் உறவு நட்பின்மேல் கட்டப்பட்டுள்ள மிக உன்னதமான, வார்த்தைப்படுத்த முடியாத ஓர் உணர்வு. தினம் தினம் அதை ஸ்தூலமாக்கியும், உதறித் தள்ளியும் மனிதக் கால்களில் மிதிபட்டு அது நம் கண்ணெதிரே உடைபடுவதையும் பிரபஞ்சனின் கதைகளின்றி வேறெதுவும் எனக்குச் சொல்லித் தந்துவிடவில்லை. அவர்தான் ‘ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்’ என்ற தன் கதை மூலம், மனிதர்களின் பொருளற்ற கணங்களில், வறுமைபிடுங்கும் தருணங்களில் அவன் அருவருக்கத்தக்க வெறொரு ஜந்துவாக மாறினாலும் கூட சாதாரண காலங்களில் மனதில் அத்தனை ஈரத்தோடு வாழும் ஓர் உன்னதப் பிறவிதான் என எனக்கு மனிதனின் மேன்மையைச் சொன்னவர். இந்நிலப்பரப்பெங்கும், அன்பைத்தேடி, விரசமற்ற விரல் ஸ்பரிசம் பற்றி, தோழமைத் தோள்களில் சாய்ந்து கொள்ள வேண்டி உள்ளும், புறமும் சதா அலைந்து கொண்டிருக்கும் பெண் மனதின் ஒரு சின்ன வெளிப்பாடுதான் ‘மரி என்கிற ஆட்டுக்குட்டி’. புதரிலும் காட்டுமுள்ளிலும் சிக்கி, சிதறுண்டு கடைசியில் ஒரு மேய்ப்பனின் மடியில் ஆறுதலோடு படுத்துறங்கும் அந்த ஆட்டுகுட்டியைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மரி ஞாபகத்துக்கு வருகிறாள். கடைசிப் பேருந்தையும் தவற விட்டுவிட்டு வெளிச்சம் படாத ஏதோ ஒரு நகர பேருந்து நிலையத்தின் இருட்டில் தன்னை மறைத்துக் கொள்ள முயற்சிக்கும் மரியே! ஒரு படைப்பாளி தன் அன்பின் கரங்களை அகல விரித்து உனக்காகக் காத்திருக்கிறான் எனச் சொல்ல தோன்றும், அவரின் ஆண், பெண் நட்பை உறவைச் சொல்லும் கதைகள். எத்தனையோ முறை எங்கள் வீட்டில், நிலத்தில், பள்ளி மைதானத்தில், விடுதி அறையில், பஸ் பயணத்தில், கார் பின்னிருக்கையில் அவருடன் பேசித் தீர்த்த வார்த்தைகள் செலவழியாதவை. தினம் தினம் தன்னையே புதுப்பித்துக் கொள்பவை. பின்விளைவுகள் எதுபற்றியும் அவர் கவலைப் பட்டதில்லை. அதன் பொருட்டு தான் இழப்பதற்கு தன்னிடம் எதுவுமில்லை பவா என்று சொல்லிச் செல்வார். இழக்கப் போவது எதுமில்லை என்பது போலவே அவர் எதிர்பார்ப்புகளும் மிக எளிமையானவைதான். தன் குடும்பச் சிதைவை “மகாநதி” என்கிற உயிருள்ள ஒரு நாவல் மூலம் தன் வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டார். கள்ளுக்கடைகள் இழந்து, சாக்னா ஸ்டால்கள் இழந்து, வீடு இழந்து, அந்த ஆலமரம் வேரோடு சரியும்போதும் அதன் கம்பீரம் குலையாமல், தன் வேரில் கோடாரியோடு மல்லுக்கட்டுபவன்மீதும் விழும் ஆலமர நிழல் மாதிரியானது பிரபஞ்சனின் வாழ்வும் படைப்பும். பவா செல்லதுரை பிரபஞ்சனை நினவுகூர எனக்கு என்றும் மறக்கவியலாத காரணம் என ஒன்று உண்டு. அவர் புதுச்சேரியிலிருந்து எழுபதுகளில் நடத்திய ‘வண்ணங்கள்’ இதழில்தான் எனது 8-10 வரிக் கவிதை ஒன்று வெளியானது. அதுவே அச்சிதழில் வெளியான எனது முதல் எழுத்து. ‘அசுரவித்துக்கள்’ என அதன் தலைப்புகூட இன்னும் பசுமையாக ஞாபகம் இருக்கிறது. பிரபஞ்சன் இதழுடன் வாழ்த்துப் போஸ்ட் கார்டு எழுதியனுப்பியிருந்தார். சோடனைகள் இல்லாத எளிய மனிதர். தோற்றம், எழுத்து என இரண்டிலும் காந்தி போல எமது தந்தையர் போல என்றும் எம்முடன் உடன் வருபவர். அந்தச் சொல்லின் எல்லாப் பொருளுடனும் பிரபஞ்சன் ஒரு செவ்வியல் மனிதர்.. யமுனா ராஜேந்திரன் fb #பிரபஞ்சன் பிரபஞ்சன் ஒத்துக்கொண்டபடி நிகழ்ச்சிக்கு வந்துவிட்டாரென்றால் சந்தோசம், வராவிட்டால் வருத்தப்பட வேண்டியதில்லை. ஏனென்றால் நிகழ்ச்சி ஏதும் இல்லாமல் திடுமென வந்து நின்று தோழமையால் நம்மை நிரப்பிவிடுவார். ஹோட்டல் கெளரிசங்கரில் தங்கியபடி ஒசூரில் இதமான தட்பவெப்பநிலையை அனுபவிப்பத்தபடி நண்பர்களோடு நேரம் பொழுதின்றி அளவளாவுவார். இங்குள்ள கால்நடைப்பண்ணை அவருக்கு மிகவும் பிடித்த இடம். நிகழ்ச்சி ஒன்றுக்காக அதிகாலையில் ஒசூரில் வந்திறங்குகிறார் பிரபஞ்சன். கால்களில் வெவ்வேறு செருப்பு. வரவேற்கப் போயிருந்த நாங்கள் ஒன்றும் சொல்லாமல் அவரைப் பார்த்தோம். ஓவியர் ஹுசைன் ஒருபக்க செருப்பையே இரண்டு காலிலும் போடுவாராமே, அதுமாதிரி வேண்டுமென்றே இவர் இப்படி போடுகிறாரோ என்கிற குழப்பம். "பஸ்சிலிருந்து எனக்கு முன்பாக இறங்கிய ஆளுக்கு என்ன அவசரமோ என் செருப்பில் ஒன்றை மாற்றிப்போட்டுக்கொண்டு போய்விட்டார்" என்றார். 10 மணிவாக்கில் நண்பர் சாதிக்கின் கிங்ஸ் கடைக்குப் போய் வேறு செருப்பு வாங்கினோம். பழைய செருப்பை கடைக்கு வெளியே விட்டுவிட்டு வரும்போது சொல்கிறார்: ஒருவேளை புது செருப்பு வாங்க அந்த மனுசனும் இதே கடைக்கு வந்தால் தன்னோட செருப்பை கண்டுகொள்ளட்டுமே. ஆதவன் தீட்சன்யா fb யார் வேண்டுமானாலும் அஞ்சலி எழுதிக் கொள்ளுங்கள். ஆனால் பிரபஞ்சன் 55 ல் சொன்னாரே- இரு வேளை தினம் சாப்ட கிடைச்சிருந்தா இன்னும் நல்ல கதைகளை எழுதிருப்பேன் என்று. அதை எழுத மறக்காதீங்க தமயந்தி fb
 13. அபராஜிதன்

  சீதக்காதி - சினிமா விமர்சனம்

  சீதக்காதி / விமர்சனம் ‘சுண்டைக்காயை நசுக்குற மாதிரி சுலபம்னு நினைச்சியா நடிப்பை? அது ஒரு தவம்யா...’ என்று சொல்வதற்காகவே ஒரு படம். ‘நடிகன்டா...’ என்று தலைமேல் வைத்துக் கொண்டாடப்படும் இந்தகால சிவாஜியை இழுத்து வந்து படத்தில் கோர்த்து விட்டிருக்கிறார்கள். வேறு யார்? நம்ம விஜய் சேதுபதிதான். விளம்பரத்திற்கு பயன்பட்ட அளவுக்கு திரைக்கு பயன்பட்டிருக்கிறாரா? கெட்ட சொப்பனமாக முடிந்து போகிறது முதல் அரை மணி நேரம்! சீதக்காதியின் மிச்ச நிமிஷங்கள்...? வயிறு வலிக்க சிரிக்க நினைக்கும் அத்தனை பேருக்குமான ராஜ விருந்து! ஐயா ஆதிமூலம் ‘சத்யவான் சாவித்ரி’ காலத்திலிருந்தே நாடகங்களில் நடித்து வருகிறார். காலம் தேயத் தேய நாடகம் பார்க்க வருகிற கூட்டமும் தேய்கிறது. நடித்துக் கொண்டிருக்கும்போதே மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்றுவிடும் ஐயா, அதற்கப்புறமும் வாழ்கிறார். எப்படி? என்பதுதான் இந்தப்படத்தின் சுவாரஸ்யமும், கொஞ்சூண்டு அசுவாரஸ்யமும்! ஏற்கனவே அரைச்ச மாவுக்கெல்லாம் பூரி உப்பாது என்பதை புரிந்து கொண்டு, புதுசாக ‘ட்ரை’ பண்ணியிருக்கும் பாலாஜி தரணிதரனுக்கு மனம் திறந்த பாராட்டுகள். விஜய் சேதுபதியின் 25 வது படம். அடுத்தடுத்து நாடகக் காட்சிகள் மாறிக் கொண்டேயிருக்கின்றன. விதவிதமான கெட்டப்புகளில் வந்து பேசியே கொல்கிறார் சேது. நமக்கென்னவோ நவராத்திரி சிவாஜி நினைவுக்கு வந்து ‘ஐயா, நீங்க இல்லாம போயிட்டீங்களே?’ என்று கவலை சூழ்கிறது. சரக்கென நிமிஷத்தில் காட்சிப்படுத்த வேண்டிய விஷயங்களை நீட்......டிக்கொண்டே போகிறார் இயக்குனர். பக்கத்து சீட் ‘கொர்....’ பலவீனமாக்குகிறது தியேட்டரை. அதற்கப்புறம் என்னவோ உருமிமேளம் கேட்டு சாமி வந்தமாதிரி சிரிக்கிறது தியேட்டர். கொர் சப்தம் அடங்கி கைதட்டல் எழ எழ, ஐயா ஆதிமூலம் அரூபம் ஆகி நிகழ்கால நடிகர்கள் நிரூபணம் ஆகிறார்கள். தப்பித்தது சீதிக்காதி. (ஒரு படத்தின் ஹீரோவே அந்தப்படத்தின் மைனஸ் என்பது எவ்வளவு பெரிய அநீதி?) முதல் பாராட்டு மவுலிக்கு. தான் எவ்வளவு பெரிய கலைஞன் என்பதை அந்த கண்களிலேயே நிரூபிக்கிறார். வந்தது ஐயாதான் என்பதை புரிந்து கொள்கிற அந்த கண்கள், அதை நமக்கும் டயலாக் இல்லாமலே உணர்த்துகின்றன. மவுலி சார். நீங்க நீங்கதான்! ராஜ்குமாருக்குள் இப்படி தியேட்டரையே தெறிக்க விடுகிற ஒரு நடிகன் இருப்பான் என்று நினைத்தே பார்த்ததில்லை. ஒரே டயலாக். கிட்டத்தட்ட பத்து நிமிஷம்... விதவிதமான எக்ஸ்பிரஷன்களால் கதற விடுகிறார் தியேட்டரை. முதல் பாதி சிரிப்புக்கு நான் கியாரண்டி என்று இவர் சொன்னால், ‘செகன்ட் ஹாஃப் எனக்கு தம்பி’ என்று என்ட்ரி கொடுக்கிறார் சுனில். (நடிகர் வைபவ்வின் அண்ணனாம்ல?) ‘ஐயா ஆன்மா இறங்கிருச்சுன்னா, அதுல யார் நடிச்சா என்ன?’ என்று எகத்தாள கேள்வியோடு ஹீரோவாகும் இந்த புரட்யூசர், நடிப்பை கொலை பண்ணுகிற அந்த நிமிஷங்கள் அதகளம். ஒரு அமானுஷ்யமான நிகழ்வு, அதற்கப்புறம் எப்படியெல்லாம் டிராவல் செய்யும்? கற்பனையை அதன் எல்லை வரைக்கும் தட்டிவிட்டிருக்கிறார் பாலாஜி தரணிதரன். டி.வி விவாதம், புரட்யூசர் கவுன்சிலில் பஞ்சாயத்து, மக்களின் எதிர்பார்ப்பு என்று தாண்டி தாண்டி வந்து கோர்ட் வரை வந்து நிற்கிறது கதையும் அதன் சுவாரஸ்யமும். மாண்பமை நீதிபதியாக வருகிறார் இயக்குனர் மகேந்திரன். ஏதோ இந்தப்படத்தில் நடித்தால் அது முன்னோர்களுக்கு வைத்த ‘காக்கா பிரசாதம்’ என்று நினைத்து இவரைப் போன்ற பெரிய பெரிய ஆளுமைகள் நடித்திருக்கிறார்கள். இன்னொருவர் பாரதிராஜா. சில நிமிஷங்கள் வந்தாலும் ஆளுமை ஆளுமைதான். அருமை! இயக்குனர் டீகே ஒரு சில காட்சிகள் வருகிறார். நல்ல முகவெட்டு. தொடர்ந்து நடிக்கலாம். பக்ஸ் என்கிற பகவதி பெருமாள், ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா போன்ற சிறப்பான நடிகர்களும் வந்து போகிறார்கள். சரஸ்காந்தின் ஒளிப்பதிவு பழைய காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்து ஒரு வித்யாசமான முடிச்சை போட்டிருக்கிறது. கோவிந்த் வசந்தாவின் இசை பலமும் இல்லை. பலவீனமும் இல்லை. விஜய்சேதுபதி என்ற பொன்னால் குழைக்கப்பட்ட மண் பானை. இந்த வெறும் பானையில் வெள்ளமாய் நிரம்பியிருக்கிறது பாலாஜி தரணிதரனின் நகைச்சுவை உணர்வு. சீதக்காதி... சிரிப்பு ஜாலி! -ஆர்.எஸ்.அந்தணன் newtamilcinema.in #seethakathiReview #VijaySethupathi #Archana #DirectorMahendran #Rajkumar #SangaradhossSwamigal #TamilDrama #VijaySethupathi25 #BalajiDharanidharan
 14. கனா / விமர்சனம் ‘நகச்சுத்தி’க் காரனின் மோதிர விரலுக்குள் நறுக்கென ஒரு எலுமிச்சம் பழத்தை சொருகியிருக்கிறார் அறிமுக இயக்குனர் அருண்ராஜா காமராஜ். இந்த கனா எழுப்புகிற வினா ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்ல வேண்டியவர்கள் யாரோ... அவர்களுக்குத் தெரியும், இது வெறும் படமல்ல.... அதையும் தாண்டிய கத்திக் குத்து என்று! கிரிக்கெட் வெறியரான சத்யராஜின் மகள்தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தியா தோற்றுவிட்டதே என்று கண்ணீர் விடும் அப்பாவுக்காக அதே இந்தியன் டீமில் விளையாடி ‘கப்’ வென்று அப்பா முகத்தில் சிரிப்பை காண வேண்டும் என்று நினைக்கிற மகள் தன் லட்சியத்தை நிறைவேற்றினாளா? இரண்டே வரி கதைதான். ஆனால் இதற்குள் இருக்கும் போராட்டத்தை சுளீர் சுளீரென சொல்லிக் கொண்டேயிருக்கிறார் அருண்ராஜா. விவசாயத்தையும் விளையாட்டையும் ஒரு புள்ளியில் இணைக்கும் அந்த தருணம், இந்தியாவின் நிகழ்கால அரசியல் தலைகுனிய வேண்டிய தருணம்! ஒரு பெண் தன்னை சுற்றியிருக்கிற வேலிகளை உடைத்துக் கொண்டு முளைப்பது சாதாரண விஷயமல்ல என்பதை உணர்வும் மூச்சுமாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். சாவித்ரி, பானுமதிகளை தமிழ்சினிமா இழந்துவிட வில்லை என்பதை நிரூபித்திருக்கிற ஐஸ்வர்யாவுக்கே இப்படத்தின் பெரும்பாலான பெருமைகள் போய் சேர வேண்டும். அப்படியொரு பர்பாமென்ஸ். உழைப்பு. ஒரு நிஜமான கிரிக்கெட் வீராங்கனையாகவே உருமாறியிருக்கிறார். எங்கும் எதிலும் டூப் இல்லை. இந்த வெறித்தனமான உழைப்பு... வேறெந்த நடிகைகளுக்கும் சாத்தியமில்லாததும் கூட! ‘பாஸு பெயிலுங்கறதெல்லாம் சம்பாதிக்க நினைக்கிறவங்களுக்குதான். சாதிக்க நினைக்கிறவங்களுக்கு இல்ல’ -பெற்ற மகளின் மேல் மொத்த நம்பிக்கையும் இறக்கி வைக்கிற அப்பாவாக சத்யராஜ். விவசாயக் கடனுக்காக வீட்டையே ‘ஜப்தி’ கொடுத்துவிட்டு மகள் இந்தியாவுக்காக விளையாடுவதை ரசிக்க உட்காருகிறாரே... அங்கு பொங்குகிறது தியேட்டர். இந்தப்படத்தின் கடைசி அரை மணித் துளிகளை ஆளுக்கு கொஞ்சமாய் பங்கு போட்டுக் கொண்டு அசர விடுகிறார்கள் அப்பனும் மகளும்! கிரிக்கெட் கோச்சராக சிவகார்த்திகேயன். இந்த படத்தை தயாரித்து ஒரு சில காட்சிகளில் நடிக்கவும் செய்திருக்கிறார். இரண்டுக்கும் சேர்ந்த கைதட்டல்கள் நிச்சயம். “ஜெயிக்கிறேன்னு சொன்னா இந்த உலகம் கேட்காது. ஆனா ஜெயிச்சவன் சொன்னா கேட்கும்!” அழுத்தம் திருத்தமாக பேசும் சிவாகார்த்திகேயன், வெற்றி என்பது உடல் பலம் மட்டுமல்ல, உள்ளத்தின் பலமும் கூட என்று உணர்த்துகிறார். சத்யராஜின் மனைவியாக நடித்திருக்கும் என்னுயிர் தோழன் ரமாவுக்கு அழுத்தம் திருத்தமான ரோல். வயசுக்கு வந்த மகள் ஆம்பள பசங்க கூட கிரிக்கெட் விளையாடுகிறாளே என்கிற ஆத்திரத்தை விளக்குமாறு கொண்டு விளாசி விளாசி புரிய வைக்கிறார். ஒரு கட்டத்தில் மகளின் லட்சியத்தை அவரே புரிந்து கொள்கிற காட்சி சிலிர்ப்பு. நண்பன் சத்யராஜ் வாழ்க்கையே வெறுத்து ஒரு விபரீத முடிவை எடுக்கப் போகிறார் என்பதை புரிந்து கொண்டு, அதை சமயோஜிதமாக தடுக்கிற இளவரசு கேரக்டரில்தான் எவ்வளவு பக்குவம்! கரணம் தப்பினால் டாகுமென்ட்ரி என்கிற அபாயத்தை தன் கலகலப்பால் கரையேற்றுகிறார்கள் தர்ஷன், முனிஸ்காந்த், பாக்யராஜ், சவரிமுத்து போன்ற நடிகர்கள். குறிப்பாக சின்ன வயசு ஐஸ்வர்யா ராஜேஷாக ஒரு யூனிபார்ம் சிறுமி நடித்திருக்கிறாள். என்னவொரு பர்பாமென்ஸ்! நினன் தாமஸ் இசை அற்புதம். அதுவும் அந்த ‘வாயாடி பெத்த புள்ள’ பாடல் சூப்பர் ஹிட் சுகம்! வேல்டு கப் கிரிக்கெட் போட்டியை கண்முன் கொண்டு வந்த ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணனுக்கு பாராட்டுகள். ‘விளையாட்டை சீரியஸ்சா எடுத்துக்கிற இந்தியா, விவசாயத்தை விளையாட்டா கூட எடுத்துக்க மாட்டேங்குது!’ இப்படி படம் நெடுக சுளுக்கெடுக்கும் வசனங்களை தனி தொகுப்பாகவே வெளியிடலாம்! வருட இறுதியில் அருளப்பட்டிருக்கும் மாபெரும் பிரசாதம் கனா! வழங்கிய உள்ளங்களுக்கு வணக்கமும் வந்தனமும்! -ஆர்.எஸ்.அந்தணன் newtamilcinema.com https://m.youtube.com/watch?feature=share&v=50tghA6L8Tg https://m.youtube.com/watch?feature=share&v=50tghA6L8Tg