• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  10,813
 • Joined

 • Last visited

 • Days Won

  57

கிருபன் last won the day on March 31

கிருபன் had the most liked content!

Community Reputation

2,213 நட்சத்திரம்

About கிருபன்

 • Rank
  வலைப்போக்கன்

Contact Methods

 • Website URL
  http://
 • ICQ
  0

Profile Information

 • Gender
  Male
 • Location
  முடிவிலி வளையம்
 • Interests
  போஜனம், சயனம்

Recent Profile Visitors

 1. மேலும் பல ஆயிரம் பச்சைகளை பெற்றுக்கொள்ள நண்பர் பெருமாளுக்கு வாழ்த்துக்கள்!
 2. அகரமுதல்வனின் ‘முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு’ -நூல் அறிமுகம் -விமர்சகர் த.ராஜன் December 08, 2017 "கண்ணீர்வலியைஇழிவுபடுத்திவிடும்என்றொருகடவுள்நம்பிக்கைஎனக்குண்டு." - அகரமுதல்வன் ஈழத்தின் தற்கால சூழலையும் அதன் வரலாற்றையும் அறிந்து கொள்ள இலக்கியம்மட்டுமே நம்பத்தகுந்த ஒரே வழியாக இருக்கின்றது.கொடூர சம்பவங்கள், வன்கொடுமைகள், குண்டுகளின் சப்தங்கள், சிதைந்த உடல்கள், இயலாதோரின்ஓலம், வலி என துயர் நிரம்பிய பக்கங்கள் தான் அடங்கியிருக்கும் என்பதைமுன்னமே வாசகர்கள் அறிந்திருப்பதால் ஈழம் சார்ந்த புத்தகங்களை வாசிப்பதில்பெரும் தயக்கம் காட்டுவதைக் காண முடிகிறது.இயலாமையினால் வரும்குற்றவுணர்வு மட்டுமல்லாமல் தற்போதைய 'ஃபேஸ்புக்மனநிலை'யினால் ஏற்படும்அதிருப்தியும் ஒரு வகையில் காரணம்எனலாம்.எல்லாவற்றையும் மேம்போக்காகபோலியாக அணுகும் மனநிலை. ஃபேஸ்புக்கில்கோர சம்பவம் ஒன்றினைக் காணும்மனம் வருந்துகிறது, சிறிது கீழிறங்கினால் காண நேரும் அரசியல் பகடியைக்கண்டு நகைக்கிறது, இன்னும் சற்று இறங்கி சினிமா நாயகன் நாயகியின்படங்களைக் கண்டு உருகுகிறது. இப்படி நொடிக்கு நொடி மாறும் போலியானஃபேஸ்புக் மனம்இயல்பாகிக் போன இக்காலத்தில் இது போன்ற படைப்புகளைவாசிக்க நேர்பவர் குற்றவுணர்ச்சியில் உழல்வது நிதர்சனம். தீவிரமாக வாசிக்கும் பழக்கமுள்ளவர்களும் கூட ஈழப் படைப்புகளைத்தவிர்க்கிறார்கள். அவ்வலியைத் தாங்கிக்கொள்ளும் திராணி இல்லை என்பது ஒருசாராரின் கருத்து. ஈழப்படைப்புகள் சில சமரசங்கள் எதிர்பார்க்கின்றன என்பதுஇன்னொரு புறம். அதாவது இது போன்ற படைப்புகள் கையாளும் விஷயங்கள் மிகவும் முக்கியமானது என்பதற்காகவே சிலவற்றை நாம் கண்டுக்கொள்ளத்தேவையில்லை என்பதாகச்சொல்வது. இந்த இருசாராரின் கருத்திற்கும் காரணமாக இருப்பது அனுதாபத்தை மட்டும் கோரிநிற்கும் படைப்புகள் என்பது என் அனுமானம். இத்தகையஇலக்கியப்படைப்புகள் தொடர்ந்து வெளியாவதே அவை வாசிக்கப்படாமல்இருப்பதற்கான காரணமாக இருக்க முடியும். கதை சுவாரசியமோ நளினங்களோநறுக்குகளோ அவசியமில்லை தான், ஆனால், வெறுமனே உள்ளதை உள்ளபடி(ஒரு செய்தித்தாளில் வெளியாகும் பத்தியின் முடிவில் அடையும் உணர்விற்கும் ஒரு இலக்கிய பிரதிதரும் உணர்விற்கும் பெரியதாக வித்தியாசமிருப்பதில்லை) பதிவு செய்வதைத் தவிர்க்கவேண்டுமென்றே தோன்றுகிறது. ஈழத்தின் வரலாற்றைப் புனைவாக பதிவு செய்வதால் இதைக்கருத்தில் கொள்ளவேண்டுமெனத் தோன்றுகிறது. வருங்காலச் சந்ததிகளுக்குஇப்புனைவுகள் தான் வரலாற்றை அறிய உதவும் மிகப்பெரும் சாட்சி. ஆக, சரியானமொழியில் சரியான உணர்வினை சரியான கதாப்பாத்திரச் சித்தரிப்போடு கதைகள்படைப்பது அவசியமாகின்றது. மண்டோ தனது படைப்புகளில் வன்முறையை, மனிதமற்ற செயல்களைக் கலையாக மாற்றினார். இன்றளவும் மண்டோவாசிக்கப்பட்டுக்கொண்டிருப்பதற்கு இதுவே காரணமாக இருக்க முடியும். அகரமுதல்வனின் கதைகள் வெறுமனே அனுதாபத்தை மட்டும் கோரி நிற்பவைஅல்ல. போர் நிலத்தின் யதார்த்தங்களை, போராளிகளின் மனதினை, அவர்களதுஅரசியல் நிலைப்பாட்டை, போராளிகளின் காதலை, காமத்தை, சாமானியர்களின்வாழ்வியலை அற்புதமான மொழியில் கச்சிதமான வாக்கியங்களில்மிகைஉணர்ச்சியற்ற தொனியில் கதைகளாகப் புனைகிறார். அகரமுதல்வனின் எழுத்துகள் எட்ட நின்று வேடிக்கை பார்ப்பவையாக அல்லாமல்நமது அனுபவமாக மாறுகின்றன. அதற்கு அகரமுதல்வனின் சொற்பிரயோகங்களும்மொழி ஆளுமையும் பிரதான காரணம். அகரமுதல்வனின் உவமைகள் குறிப்பிடத்தகுந்தது. துருத்தாமல், கதையோடு ஓர் அங்கமாக வலுசேர்க்கின்றன. 'தேங்கிய மழை நீரை காலால் தூக்கி மீண்டும் துளியாக்கும் குழந்தைகளின் பாதத்தைப் போல குழலி சிவந்தாள்' – ‘வீடு வாழ்க்கையைப் போல எரிந்து கொண்டிருந்தது’ ‘நீர் வற்றிப் போன ஆற்றின் சரீரம் வெடித்தோடும் ஈரம் பிறழ்ந்த கோடுகளைப் போல மனம் பிறழ்ந்த வெடிப்புகள் எனக்குள் நதிபோல ஓடுகிறது’. தாய் தகப்பனை இழந்த இளம் மகள் குறித்த வரியொன்று வருகின்றது. இவ்விடத்தில் அச்சூழலின் துயரத்தை பத்தி பத்தியாக எழுதி வாசகனைக் கண்ணீர் உகுக்கச் செய்திருக்கமுடியும். அவை நீலிக்கண்ணீராக சொற்ப நிமிடங்களில் வடிந்துவிடக்கூடியது. அவ்விடத்தில் 'பூமியின் மிக இளமையான துயரம் குயிலினியிடம் இருந்தது' எனும் வாக்கியத்தால் மனதின் அடியாழத்தை தொட்டுச்செல்கிறார் அகரமுதல்வன். நாம் வாழும் நிலத்தில் இறப்பதற்கு அஞ்சுவது வாழ்வதற்கு சலிப்பதுபோல' - 'பூமியின் நித்திரைக்கு எமது மரணங்கள் கனவு' - 'இந்த நிலத்தில் மட்டும் தான் மரணித்த உயிருக்கு நிவாரணமாய் பரவசம் திரும்புகிறது. விடுதலையின் பரவசமாய் நாம் அனைவரும் மரணிப்போம்' போன்ற வரிகள் மனதில் இருந்து அகல மறுக்கின்றன. 'மரணத்தின் சுற்றிவளைப்பு' எனும் கதையில் ஒரு பத்தி: 'நித்திலா... வேப்பமரத்தின் குயில் இந்த இரவிலும் கூவிக்கொண்டே இருக்கிறது. அதன் குரலில் பல்லாயிரம் தொண்டைகளின் துயர் கிளைக்கிறது. அந்தக் குயிலைநீ என்று அழைப்பதா? நான் என்று அழைப்பதா? நமது துயரத்தின் கூவல் இதற்குமுன் இப்படிக் கேட்டதா? குயிலின் குரலும் கூவலும் துயரமும் எம்மைஒத்திருந்தாலும் குயில் மானமில்லாதது. அதற்கென சொந்தக் கூடேஇருப்பதில்லை. அது எமது நாட்டை ஆக்கிரமித்து குடியேறும்சிங்களர்களைப்போல காகத்தின் கூட்டில் அல்லவா முட்டையிடும். நாம் எப்போதுபிறர் நாட்டை விரும்பினோம். அந்தக் குயிலாய் நீயோ நானோ நாமோ இருக்கவேமுடியாது.' மிகச்சாதாரண விஷயத்தைக் குறிப்பிட்டு பெரும் அரசியலை பேசிக்செல்கின்றன இது போன்ற வரிகள். சுட்டுக் கொல்லப்படுவர்களின் வரிசையில் முதல் ஆளாகக்கூட தான் இருக்கலாம்என போராளி எண்ணுகிறான். அப்போது எழுதுகிறார்: 'அப்படி வாய்க்கும் ஒரு மரணத்தை நான் மறுக்கேன். அசையாமல் என் நெற்றியைகுறிபார்க்கும் துவக்கின் குழலையே எனது கண்களும் குறி பார்க்கும்.' போராளியின்தீரத்தை பெருமைபோற்றும் வாக்கியங்களாலால் அல்லாமல் எளிமையான ஒற்றைவரியில் அவனது மனத்திட்பத்தையும் வீரத்தையும் சொல்லிச்செல்கிறார். அசையாமல் என் நெற்றியை குறிபார்க்கும் துவக்கின் குழலையே எனது கண்களும்குறி பார்க்கும்! நாட்டுக்கு கௌவரமாய் இரத்தம் சிந்திய எம்மக்களை கேவலமாக தண்ணீருக்காக சண்டையிட பழக்கிவிட்டது இந்த அகதி முகாம் வாழ்க்கை என்று எழுதுகிறார். சமகாலத்தில் போராளிகள் மீதான மற்றவர்களின் பார்வையும், தற்போதைய சூழலில் மக்களின் மனப் போக்கும் இவரது கதைகளில் ஆங்காங்கே பதிவாகின்றன. 'தூயவள் சொன்னது சரியானதுவே. ஏழ்மையில் மூழ்கி தெருவில் அலைந்துதிரிபவர்களாய் காலம் ஆக்கிய போராளிகளை வெளிநாட்டில் இருந்து வருகிறசனங்களில் சிலர் விநோதமாய் பார்த்துக் கடந்து செல்வது கீரனுக்கேநிகழ்ந்ததுதான். அந்தக் காட்சி மிக மோசமானது. நேற்றைக்கு தெய்வங்களாய்வழிபட்ட சிலைகளை இன்றைக்கு கால்களால் தட்டிவிட்டு செல்வதைப்போலானகாட்சி.' நந்திதனுக்காக ரொட்டி சுடுகிறான். நேரமின்மையால் சம்பல் இடிக்கமுடியாதெனஇருப்பதைச் சாப்பிடுகிறார்கள். பார்வையை வெளியில் செலுத்தியபடிஉணவருந்தும்போது நந்திதன் சொல்கிறார், “விதிகளுக்கு இசைந்தவாழ்வு ரசிப்பதற்கு பிரபஞ்சத்தின் அழகுபோதாது.' தனதுவாழ்வினை, வலியினை இயல்பாகபறைசாற்றும் வரி!இன்னொருவரி: 'தன்னை அவள் தனியாகவிட்டு இறந்துபோவாளா? வாழ்வதையே தீர்மானிக்கஇயலாத வாழ்வில் இறப்பது யாரோடுவென தீர்மானம் கொள்வது எவ்வளவுவிசர்த்தனம்.' கீரனுக்கும் தூயவளுக்குமிடையே உடலுறவு நடைபெறுவதாக 'பிரேதங்கள் களைத்து அழுகின்றன' எனும் கதைதொடங்குகின்றது. பாதி கதை கடந்த பின்பே அவர்கள் கைகளை இழந்தவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறார். இதுவேஅகரமுதல்வனின்சிறப்பம்சம். முதலிலே இப்படியொரு வர்ணனையைத் தந்திருந்தது உடலுறவு கொள்வதாக எழுதியிருந்தால் அது வாசகனின் அனுதாபத்தை கோரிநிற்கும் .கண்ணீர் வடித்திருப்போம். அதை அகரமுதல்வனின் கதைகள் எதிர்பார்ப்பதில்லை. சதத் ஹசன் மண்டோவை அகரமுதல்வன் எட்டும் தூரம் வெகு தொலைவில் இல்லை. http://akaramuthalvan.blogspot.co.uk/2017/12/blog-post_8.html?m=1
 3. காத்திருப்பு தமிழ்நதி ஓவியம் : ஜீவா புகைப்படங்கள் ; அனாமிகா வெயில் எரிக்கும் ஜூலை மாதத்தின் பின்மதியப் பொழுதொன்றில், அப்போதுதான் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்து சாப்பிடவென்று குசினிக்குள் அமர்ந்த கோகுலனை, அம்மாவிடமிருந்து பிரித்து ஜீப்பினுள் இராணுவம் எறிந்தபோது அவனுக்கு வயது பதினேழு. உள்ளங்கைக் குழி கொள்ளுமளவு எண்ணெய் வைத்து வாரினாலும் அடங்காத அடர்ந்த தலைமயிரில் ஒருவனும் கால்களில் இருவருமாகப் பிடித்துத் தூக்கிக்கொண்டுபோய் எறிந்தார்கள். அப்போது கோகுலனின் அப்பா வயலுக்குப் போயிருந்தார். கதறியபடி ஜீப்பினருகில் ஓடிச்சென்ற ஞானம்மாவை ஒருவன் ஓங்கி அறைந்தான். உலர்ந்த சருகொன்று கிளையிலிருந்து மண்ணில் வீழ்வதென அவர் ஓசையெழுப்பாது புழுதியில் சரிந்தார். ஜீப்பின் கதவு அவருடைய வாழ்வின்மீது அறைந்து சாத்தப்பட்டது. எழுந்தபோது அவரது கணவர் இடிந்துபோனவராக அருகில் அமர்ந்திருந்தார். வீடு இருண்டு கிடந்தது. ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்தி ஆறாம் ஆண்டு வெளியேறிய ஒளி மறுபடியும் அந்த வீட்டுக்குள் திரும்பிவரவில்லை. அதன்பிறகு ஞானம்மா உறங்கியதேயில்லை என்று ஊருக்குள் ஒரு கதையுண்டு. ஆனால், எப்போதாவது உறங்குகிறார். அதனால் உயிரோடு இருக்கிறார். பெரும்பாலும் கோழித்தூக்கம். அசதியினாலோ கவலை மிகுதியினாலோ அவர் கண்ணயரும்போது முற்றத்தில் ‘அம்மா!’ என்று அவன் அழைப்பது கேட்கும். எழுந்து ஓடுவார். படலையை நெருங்கும்போதே தெரிந்துவிடும் அவன் இல்லை என்பது. ஆண்டுக்கணக்கில் நடந்துகொண்டேயிருப்பவரைப் போல தளர்ந்துபோன உடலைச் சுமந்துகொண்டு திரும்பிவருவார். “அம்மா! பசிக்குது. சாப்பாட்டைத் தாணை” “அம்மா! என்ரை சீப்பைக் கண்டனீங்களா?” “அம்மா! இண்டைக்கு ரியூசன் இருக்கு. நேரஞ் செண்டுதான் வீட்டை வருவன்” கோகுலனின் குரலை அவர்களால் சிறைப்பிடித்துக்கொண்டு போக முடியவில்லை. அது வீடெங்கும், வளவெங்கும் நிறைந்து நின்று அம்மாவைக் கூப்பிட்டது. குரல் ஒலிக்கும் திசைகளில் தலை திரும்பும். கால்கள், குரலுக்குரியவனைத் தழுவுதற்காய் எழுந்தோடும். கோகுலனை இராணுவம் பிடித்துக்கொண்டு போகும்போது ஞானம்மாவுக்கு முப்பத்தேழு வயது. சிரமப்பட்டேனும் ஓட முடிந்தது. ஆண்டுகள் வளர்ந்து, தலை வயதுக்கு மீறி வெளுத்து, தோல் சுருங்கி, கண்களில் பூ விழுந்த பிறகு அவரால் ஓடமுடியாது போயிற்று. இருந்த இருப்பில் தலையை மட்டும் திருப்பி “இந்தா வாறன் அப்பன்” என்றபடி தரையில் கைகளை ஊன்றி எழுந்திருப்பார். இது நெடுநாள் தொடர்ந்தது. கோகுலனின் தகப்பனால் இந்தப் பரிதாபத்தைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. “அவனை விட்டிடுவாங்கள். நீ உன்ரை மனசை விட்டிடாதையப்பா!” அவர் மன்றாடிக் கேட்பார். கண்கள் நிறைந்து பெருக ‘உண்மையாகவா?’ என்பதாக ஞானம்மா பார்ப்பார். அப்படிப் பார்க்கும்போது, ஒரு தாயின் கண்கள் குழந்தையினுடையதாக மாறியிருக்கும். ஆனால், மனைவியின் வேதனையை அவரால் உணரமுடியும். ஊரையும் உறவுகளையும் மீறி இரவோடிரவாக ஞானம்மாவைக் கூட்டிக்கொண்டு விசுவமடுவுக்கு ஓடிப்போனபோதிருந்த காதல் இன்னும் குறையவில்லை. அடைக்கலம் கொடுத்த நண்பனின் வயல் காவற்கொட்டிலில் நிகழ்ந்த கலவியில் கருவான பிள்ளை கோகுலன். மல்லாந்து கிடக்கையில், கிடுகினூடே தெரிந்த நிலவு ஒரு கீற்றாக மாறி தன் வயிற்றினுள் தங்கியதாய் ஒருதடவை ஞானம்மா தன் கணவரிடம் சொன்னார். மூன்று மாதக் குழந்தையான கோகுலனைக் கையிலேந்தி யாழ்ப்பாணத்திற்குத் திரும்பியபோதும் உறவுகள் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. கோகுலனுக்குப் பிறகு வயிற்றில் தங்கியதெல்லாம் அழிந்தன. இவன்தான் மிஞ்சிய ஒற்றைக்குஞ்சு! தாயின் நிறத்தையும் தகப்பனின் உயரத்தையும் கொண்டு பிறந்திருந்தான். சுருள் முடியும் மருட்டுகிற கண்களும் கொண்ட அழகன். கோயில் திருவிழாக்களில் அவனுடைய வயதுக்குத் தோதான பெண்கள் அவனைப் பாராததுபோல பார்ப்பதை அம்மா பெருமையோடு கவனித்திருக்கிறார். அவர்களிலொருத்தியின் புகைப்படத்தை, அவன் பிடித்துச் செல்லப்பட்டு நான்கு மாதங்களுக்குப் பிறகு பாடப் புத்தகங்களைத் தூசி தட்டும்போது ஞானம்மா கண்டெடுத்தார். அவள் நாவல் நிறப் பாவாடையிலும் சிவப்பு நிறத் தாவணியிலும் வெட்கப்பட்டுக்கொண்டு நின்றாள். அந்தப் புகைப்படத்தை எடுத்தவன் கோகுலனாகவே இருக்கவேண்டும். அந்தப் பெண், அபிராமி, முருகன் கோயில் கணக்கப்பிள்ளை சிவசேகரத்தின் இரண்டு மகள்களில் மூத்தவள். கோயிலின் பின்புறம் வயல்வெளிகளுக்கு அப்பால் அவளுடைய வீடிருந்தது. கோயில் தூண்கள் ஏதாவதொன்றில் சாய்ந்தபடி இரகசியமாக கண்ணீர் சிந்துபவளாக மாறிவிட்ட அவளை ஞானம்மா கவனிக்கத் தொடங்கினார். ஞானம்மாவைக் காணுந்தோறும் அந்த அழகிய கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கும். ‘முருகா! இந்தப் பிள்ளையளைச் சேத்து வை’ அம்மா இறைஞ்சினார். ஒருமுறை, அபிராமி தற்செயலாகவோ வேண்டுமென்றோ ஞானம்மாவுக்கருகில் வந்து அமர்ந்தபோது அவளது கைகளைத் தொட்டு “கெதியா வந்திடுவான்” என்றார். பிறகு, கோயிலிலிருந்த எல்லோரும் திரும்பிப் பார்க்கும்படி பெருங்குரலெடுத்துக் குமுறியழுதார். அந்தப் பெண் அதிர்ச்சியோடும் துக்கத்தோடும் மருண்டபடி எழுந்து நின்றது. ஞானம்மா, தரையில் தலை அடிபட மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரைத் தூக்கி சுவரில் சாய்த்து தண்ணீர் தெளித்து வீட்டில் கொண்டுபோய் விட்டார்கள். தன் கணவர் நித்திரையில் செத்துக் கிடந்ததை ஒரு அதிகாலையில் ஞானம்மா கண்டுபிடித்தார். மரணம் அவரை பிரிவின் நெருப்பிலிருந்து விடுவித்திருக்கவேண்டும். அப்படியொரு புன்னகையோடு கிடந்தார். ஞானம்மாவுக்கும் சாவதற்கு விருப்பந்தான். இப்படி அனுதினமும் காத்திருப்பதை விட மரணம் உத்தமமென்றே எண்ணினார். ஆனால், திடீரென்று ஒருநாள் இந்தப் படலையை கோகுலன் தன் வழக்கப்படி ஓசையெழத் தள்ளிக்கொண்டு வந்து “அம்மா” என்று கூப்பிடும்போது தான் இல்லாமற் போனால் அவனுடைய மனம் துயரத்தில் சுருங்கிப்போகுமே… ஐயோ! அந்தக் காட்சியை அவரால் கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை! நோயிலிருந்தும் தீமைகளிலிருந்தும் பொத்திப் பொத்தி வளர்த்த பிள்ளையை ஒரு நொடியில் யாரோ வந்து தன் கைகளிலிருந்து கவர்ந்துகொண்டு செல்லமுடியும் என்பதை அவரால் நம்பவே முடியவில்லை. ஒரு நூலைப் பிரித்தால் சரசரவென பிரிந்துகொண்டேபோகும் துணியைப் போலாகிவிட்டார். சிறைச்சாலைகளின் வழிகளெல்லாம் அவருக்கு இப்போது தெரியும். மேலும், சில சிங்கள வார்த்தைகளையும் கற்றுக்கொண்டுவிட்டார். கோகுலனை அவர் தேடித்திரியாத முகாம்களில்லை; சிறைச்சாலைகளில்லை எனும்படியாக அலைந்தார். இந்த உலகத்தில் அப்படியொருவன் பிறக்கவே இல்லையென்ற முகபாவத்தோடு எல்லோரும் கைவிரித்தார்கள். சிறைச்சாலைகளின் வாயிற்காப்போன்களுக்கு ஞானம்மாவின் முகம் பரிச்சயமாகிவிட்டது. “ஆ… அந்த மனுசி திரும்பவும் வந்திட்டுது” ஒருவன் அலுப்போடு சொல்கிறான். “இல்லாத பிள்ளையைத் தேடித் திரியும் தாய்” மற்றவன் சற்று பரிதாபத்துடன் முணுமுணுக்கிறான். பதிலளிப்பதற்காக சலிப்பு படர்ந்த முகத்தோடு அவன் எழுந்து நிற்கிறான். நொடியில் பதிலைத் தயார்செய்து இயந்திரத்தனமாக ஒப்பிப்பான். விடிவதற்கு முன்னால் எழுந்திருந்து நானூறு கிலோ மீற்றர்களைக் கடந்துசென்று அந்த அசிரத்தையான பதிலைக் கேட்டுவிட்டு நள்ளிரவுக்கு சற்று முன்னதாக வீடு திரும்புகிறார் ஞானம்மா. அகாலத்தில் தெருநாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டால், ‘பாவம் இந்த மனுசி’ என்ற வார்த்தைகளோடு ஊர் புரண்டு படுக்கிறது. ஞானம்மாவின் அவலத்தையும் அலைச்சலையும் காணச் சகிக்காத பக்கத்து வீட்டு கணேசரத்தினம் மாஸ்டர் அவரைக் கூட்டிக்கொண்டு அலைகிறார். அவருக்கு சிங்களம் தெரியும். ஒருதடவை போனபோது, வெலிக்கடைச் சிறைச்சாலையின் அதிகாரியொருவர் கணேசரத்தினத்தைத் தனியாக அழைத்து, கோகுலனை ஆயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூற்றைந்தாம் ஆண்டு ஏப்ரல் மாதம் தாங்கள் விடுதலை செய்துவிட்டதாகக் கூறினார். புகைப்படத்தைப் பார்த்து ‘இவன்தான்’ என்று அந்த அதிகாரி உறுதியாகச் சொன்னார். கணேசரத்தினம் குழம்பிய முகத்தோடு ஞானம்மாவிடம் திரும்பிவந்தார். “என்னவாம்?” அடிவயிறு கலங்கக் கேட்டார். “அவனை எப்பவோ விட்டிட்டாங்களாம்” “எப்பவோ எண்டால்…?” ஞானம்மாவின் முகத்துக்கு அந்தப் பரிகாசப் புன்னகை கொஞ்சமும் பொருந்தவில்லை. “தொண்ணூற்றைஞ்சிலை” ஞானம்மா சிரித்தார். அவருடைய கணவர் குடித்துவிட்டு வந்து குடிக்கவில்லை என்று கள்ளச்சத்தியம் பண்ணும்போது ஒரு சிரிப்புச் சிரிப்பாரே… அந்தச் சிரிப்பு! தொண்ணூற்றைந்தில் யாழ்ப்பாணமே வன்னிக்கு இடம்பெயர்ந்து போனபோது ஞானம்மா போகவில்லை. பெண்களும் ஆண்களும் முதியவர்களும் கர்ப்பிணிகளும் நோயாளிகளும் பூப்பின் உதிர மணம் மாறாத சிறுமிகளும் வளர்ப்புப் பிராணிகளும் வாகனங்களும் மாட்டுவண்டிகளும் சைக்கிள்களுமாய் வீதிகள் நெரிசலில் திணறின. நீரேரிகள் சனவெள்ளத்தால் நிறைந்தன. மழை வேறு அவர்களைத் துரத்தியது. ஆனால், அவையெவற்றாலும் ஞானம்மாவின் வைராக்கியத்தை அசைக்கமுடியவில்லை. அன்று கந்தஷஷ்டி விரத கடைசி நாள். ஞானம்மா கோயிலுக்குப் போய்விட்டு வந்திருந்தார். “அம்மா நீங்கள் வரேல்லையா?” வேரைப் பெயர்த்துக்கொண்டு உயிர்ப்பயத்தோடு வெளியேறி ஓடிய சனங்களில் சிலர் நின்று கேட்கத்தான் செய்தார்கள். கணேசரத்தினம் மாஸ்டரும் அவருடைய மனைவியும் எவ்வளவோ வற்புறுத்தியும் ஞானம்மா அவர்களோடு போக மறுத்துவிட்டார். ஊரே காலியானபிறகும் அவர் தன் மகனுக்காகக் காத்திருந்தார். “வெளிக்கிடேல்லையா?” என்று போராளிகள் வந்து அருட்டியபோதும் அவர் அசையவில்லை. “நான் எங்கையும் போகேல்லையே! பிடிச்சுக்கொண்டு போனவன் விட்டிருந்தா என்ரை மேன் என்னைத் தேடி வராமல் வேறை எங்கை போவான்?” சீறிப் பாய்ந்தார். ‘இந்த மனுசிக்கு விசர்’ கணேசரத்தினம் முணுமுணுத்தார். வன்னிக்கு இடம்பெயர்ந்து சென்றவர்கள் பிறகொருகாலம் திரும்பிவந்தார்கள். ஞானம்மா உயிரோடுதானிருந்தார். அவரைக் காணும் ஊராரின் கண்களில் சிறைப்பிடிக்கப்பட்டவனின் தாய் என்ற வலியை விட்டுச் செல்கிறார். கோயில்களில் தங்கள் பிரார்த்தனைகளோடு அவருக்காக வேண்டிக்கொள்பவர்கள் இன்னும் அற்றுப்போய்விடவில்லை. “சாப்பிட்டுப் போவெனணை” முகாம் முகாமாக மகனைத் தேடித் திரிந்து களைத்து ஊருக்குள் நுழைந்து எங்காவது காலாறி நிற்கும்போது எவராவது ஞானம்மாவைக் கேட்பர். மறுத்துவிடுவார். அனுதாபச் சோற்றை அவர் ஒருநாளும் விரும்பியதில்லை. “கோகுலனை இயக்கப் பெடியளோட சித்தங்கேணியில கண்டனான்” பண்டத்தரிப்பிலிருந்து ஒரு உறவினர் வேகாவெயிலில் களைக்கக் களைக்கச் சைக்கிள் மிதித்துக்கொண்டு வந்து சொன்னார். ஞானம்மா அவரை ஒரு பார்வை பார்த்தார். “முதல்ல தேத்தண்ணியைக் குடியுங்கோ” ஞானம்மாவின் முகத்தில் ஒரு மாறுதலும் இல்லாததைக் கண்ட அவர் வெறுத்துப்போனார். வடமராட்சியில் இயக்கக் கூட்டமொன்றில் கோகுலன் உரையாற்றியதைத் தான் கண்டதாக வேறொருவர் சொன்னார். அவர்களுக்கெல்லாம் ஞானம்மா மீண்டும் மீண்டும் ஒரே பதிலையே கூறினார். “என்ரை பிள்ளை என்னைப் பாக்க வராமல் எங்கையும் போகாது” வேலியோரத்தில் கிளைபரப்பி நிற்கும் தேக்கு மரத்தைக் காட்டிலும் அவரது நம்பிக்கை வைரம் பாய்ந்தது. ஒருநாள் விடிகாலை. விறாந்தையில் குறைநித்திரையில் கிடக்கிறார் ஞானம்மா. படலையையோ வீட்டையோ அவர் பூட்டுவதில்லை. சில பழைய உடுப்புகளையும் கோகுலனின் பாடப்புத்தகங்களையும் காணி உறுதிகளையும் தவிர அங்கு களவுபோக ஏதுமில்லை. தலைமாட்டில் நிழலாட்டம்… ‘கனவு’ புரண்டு படுக்கிறார். விறாந்தைக் கதவை யாரோ மெதுவாகச் சாத்தும் சத்தம். துருப்பிடித்த திறாங்குகள் அதற்கு ஒத்துழைக்கவில்லை. கிறீச்சிடுகின்றன. “ஆரது?” எழுந்தமர்கிறார். சட்டென எழுந்ததால் கிறுதியில் தலை சுற்றுகிறது. என்றாலும் சமாளித்துக்கொண்டு பார்க்கிறார். ஒருவருமில்லை. முற்றத்திற்குப் போகிறார். அங்கும் யாருமில்லை. தெருவிலோடிப் பார்க்கிறார். பசு மாடொன்று தெருவோரத்தில் முளைத்திருந்த புல்லை சாவதானமாகக் கருமிக்கொண்டிருந்ததைத் தவிர்த்து ஒரு சிலமனுமில்லை. ஆனால், வாசலருகில் மோட்டார் சைக்கிள் வந்து போன தடயம். ‘யாராயிருக்கும்? ஒருவேளை… ச்சாய்!’ மீண்டும் நப்பாசையோடு தெருவில் விழிகளை ஓட்டுகிறார். எங்கிருந்தோ தாலாட்டின் ஓசை… “மகனே… என் மகனே!” வயிறு விம்மித் தணிகிறது. அந்த இரண்டறை வீட்டில் ஓரறை கோகுலனுடையது. ஒவ்வொரு நாட்களும் சில மணித்தியாலங்களையாவது அந்த அறைக்குள் செலவழிக்கிறார். அவனுடைய பொருட்களுடன் இருப்பது அவனுடன் இருப்பதைப் போல இல்லைத்தான். ஆனாலும், ஏதோவோர் ஆசுவாசம். கோகுலன் போனபிறகு அந்த றேடியோவை யாரும் தொடுவதில்லை. பாடல்கள் செத்துப்போன வீடாய் அது மாறிவிட்டது. கோகுலனின் தகப்பன் உயிரோடு இருந்த காலத்தில் செய்தி கேட்கக்கூட அதை அவர் போடுவதில்லை. அவனுடைய புத்தகங்களை சேலைத் தலைப்பினால் தூசி தட்டி, இருந்தது போலவே மறுபடியும் அடுக்கிவைக்கிறார் ஞானம்மா. அவனை அவர்கள் பிடித்துச் செல்லும்போது ஹாங்கரில் தொங்கிக்கொண்டிருந்த இரண்டு சேர்ட்களையும் ஆரம்பத்தில் துவைத்துத் துவைத்து கொழுவி வைத்தார். அப்போது அவன் சில நாட்களில் விடுதலை செய்யப்பட்டுவிடுவான் என்று அவருக்கு நம்பிக்கையூட்டப்பட்டிருந்தது. அடிக்கடி துவைத்ததில் அந்த சேர்ட்கள் நைந்துபோகவும் அவற்றை மடித்து அவனுடைய சூட்கேசினுள் வைத்துவிட்டார். அதிலொன்றை, கைது செய்யப்பட்ட அன்று மாலை அவன் ரியூசனுக்கு அணிந்துசெல்வதாக இருந்தான். அவனுடைய றலி சைக்கிள் தாழ்வாரத்தில் சாத்தியபடி நின்று துருப்பிடிக்கத் தொடங்கியது. நல்ல விலைக்கு வாங்கிக்கொள்வதாய் எத்தனையோ பேர் வந்து கேட்டார்கள். ஞானம்மா மறுத்துவிட்டார். நாளடைவில் இரும்புத்துகள்களாக உதிர்ந்து முடிந்தது சைக்கிள். அவனுடைய எந்தவொரு நினைவையும் அவர் கலைக்க விரும்பவில்லை. அவன் விட்டுச் சென்றது போலவே திரும்பிவரும்போதும் அவனுடைய அறையும் பொருட்களும் இருக்கவேண்டும். அவன் ஆச்சரியப்படும்போது, “என்னணை அம்மா” என்றபடி ஒருவிதமாக தலையை பின்னுக்குச் சரித்து செல்லம் வழியச் சிரிப்பான். அந்தச் சிரிப்பைக் காண்பதற்காகத்தான் ஆண்டுகளாக அம்மா காத்துக்கொண்டிருக்கிறார். நீண்ட நாட்களாக அபிராமியையும் கோயிலில் காணவில்லை. அவளுக்கு இருபத்தேழு வயதாகியும் திருமணம் கூடிவரவில்லை என்று கோயிலுக்குள் சில பெண்கள் கூடியிருந்து கதைத்தது ஞானம்மாவின் காதுகளில் விழுந்தது. கேட்டும் கேளாதவர் போல இருந்தார். அபிராமிக்கு இருபத்தெட்டு… இருபத்தொன்பது… முப்பது… என்று வயது கூடிக்கொண்டே போக அந்தப் பெண்களின் வம்பும் வளர்ந்தது. அவளைப் பார்க்க வரும் மாப்பிளைகளிலெல்லாம் ஏதாவதொரு குற்றங் கண்டுபிடித்து மறுதலித்துவிடுகிறாளாம். தான் மட்டுமே அறிந்த இரகசியமொன்று குறுகுறுக்க அம்மா தனக்குள் சிரித்துக்கொண்டார். மூத்தவளுக்குக் கல்யாணம் நடக்காமல் இளையவளுக்கு எப்படிச் செய்வது? சிவசேகரத்தாரின் மனைவி தற்கொலை செய்துகொள்வதற்காக கிணற்றடி வரை ஓடி, யாரும் பிடிக்கப்போகாததால் வழியிலேயே நின்றுவிட்டாராம். இதைச் சொன்னதும் அந்தப் பெண்கள்தான். அவர்கள் ‘தாயைக் கொல்லப் போகிறாள்’ என்று அபிராமியை வசைபாடத் தொடங்கிவிட்டார்கள். உறுத்தலும் நம்பிக்கையும் கலந்தவோர் உணர்வுடன் ஞானம்மா அந்த வசையைக் கேட்டுக்கொண்டிருந்தார். ‘அவனைப் பாத்த கண்ணாலை வேறொருத்தனைப் பாக்கேலுமே! என்ரை பிள்ளை திரும்பி வந்தோடனை சிவசேகரம் வீட்டை போய் அந்தப் பெட்டையைக் கைப்பிடியாய்க் கூட்டியந்திடோணும்’ அவருடைய கற்பனை மீதொரு கல் விழுந்தது. சின்னக் கல் இல்லை; பாறாங்கல். அபிராமிக்கு முருகன் கோயிலில் வெகு விமரிசையாக கல்யாணம் நடந்தது. முப்பத்தொரு வயதுப் பெண்ணுக்குத் தோதாய் முப்பத்தைந்து வயது மாப்பிள்ளை. கனடாக்காரன். சிவசேகரமும், கிணற்றுக்குள் பாயப்போய் இடைநடுவில் நின்றுவிட்ட அவருடைய மனைவியும் வீடு தேடி வந்து திருமண அழைப்பிதழைக் கொடுத்தார்கள்தாம். ஞானம்மா போகவில்லை. மகனின் காதலியை மற்றொருவனின் மனைவியாகப் பார்க்க அவருடைய மனம் ஒப்பவில்லை. அபிராமியையும் அவளது புருசனையும் கடைத்தெருவில் ஒருநாள் கண்டார். பழைய அபிராமி இல்லை அவள். பிஞ்சுத்தோல் முற்றி, கழுத்தெலும்பு வெளித்தள்ளி ஆளே மாறிப்போயிருந்தாள். புருசனோடு பேச்சும் சிரிப்புமாக வந்தவளின் சிரிப்பு சட்டென உறைய குற்றவுணர்வோடு கோகுலனின் அம்மாவைப் பார்த்தாள். பதிலாக, ஒரு வெறும் பார்வையை எறிந்துவிட்டு அவர் வீடு வந்து சேர்ந்தார். ‘அவன் வரமாட்டானெண்டு நீயும் முடிவு செய்திட்டியா?’ பொருமினார். ‘அவளுந்தான் என்ன செய்வாள்?’ பெருமூச்செறிந்தார். கோகுலனை அவர்கள் பிடித்துக்கொண்டுபோகும்போது அபிராமிக்கு பதினாறு வயதிருக்குமா? பதினைந்து நெடிய ஆண்டுகள் அவள் காத்திருந்தாள். அவன் வரவேயில்லை. ‘ஐயோ! என்ரை பிள்ளை இந்த விசயத்தைக் கேள்விப்பட்டால் கவலைப்படுமே!’ அறைக்குள் போய் கோகுலனுடைய புகைப்படத்தை எடுத்து, ஆறுதல் சொல்வதுபோல சேலைத் தலைப்பால் துடைத்தார். திருநெல்வேலி பேபி ஸ்ரூடியோவில் எடுக்கப்பட்ட படம் அது. உடலை இறுக்கும் கட்டம் போட்ட சேர்ட்டும், அகல விரிந்த பெல்பொட்டமுமாக அவன் சிரித்துக்கொண்டு நிற்கிறான். இப்போது தோள்கள் அகன்று, மார்பு விரிந்து, சிறைப்பிடிக்கப்பட்டபோது அரும்பத் தொடங்கியிருந்த மீசையும் தாடியும் அடர்ந்து பெரிய ‘ஆம்பிளை’யாயிருப்பான். இந்தப் புகைப்படத்தில் ஒரு பிரதி எடுத்து, பெருப்பித்து, கனமான அட்டையில் ஒட்டி, அவன் கைதுசெய்யப்பட்ட திகதியை எழுதி, “எனது மகன் கோகுலன் எங்கே?” என்று கணேசரத்தினம் மாஸ்டர்தான் எழுதிக்கொடுத்தார். “எமது பிள்ளைகளை விடுதலை செய்” “கைது செய்தவர்களே காணாமற் போக்கினார்கள்” “அப்பா எப்போது வருவார்?” என்ற வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளுக்கிடையில், ஞானம்மா தனது அட்டையை உயர்த்திப் பிடித்திருக்கிறார். கூட்டங்களிலும் ஊர்வலங்களிலும் கலந்துகொள்ளும் அநேகருக்கு ஞானம்மாவின் முகம் பரிச்சயமானதாகிவிட்டது. ‘அன்ரி’என்று கூப்பிட்டவர்கள் இப்போது ‘ஆச்சி’என்று விளிக்குமளவிற்கு முதிய தோற்றம் கொண்டுவிட்டார். முதுகில் மெல்லிய வளைவு. அன்றொருநாள் ஊர்வலத்தில் தடுமாறி விழப்போனபோது, ஒரு சிறிய பெண்- பதினைந்து வயதிருக்கும் – ஞானம்மாவின் கையைப் பிடித்து ‘கவனம் ஆச்சி’என்றாள். ‘எனக்கொரு பேத்தி இருந்தால்…’ அவருடைய கண்கள் கசிந்தன. காலவரையறையற்ற உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டு மயங்கிக் கிடந்தார். அங்கிருந்தவர்கள் இனிமேல் வரவேண்டாமென்று அன்பு கலந்த கண்டிப்போடு சொல்லிவிட்டார்கள். பதினெட்டு ஆண்டுகளாகத் தன் மகனைத் தேடியலைந்த தாயொருவர் போன மாதந்தான் இறந்துபோனார். ஏக்கமும் அலைச்சலும் அந்தத் தாயைத் தின்றுவிட்டன. ‘அவனை இந்தக் கண்களால் காணும்வரை நான் சாகமாட்டேன்’ வாசற்படியில் போய்க் குந்துகிறார். முற்றத்தில் குவிந்து கிடக்கும் சருகுகள் காற்றில் ஓடிப் பிடித்து விளையாடுகின்றன. பள்ளிக்கூடத்திற்குப் போகும் பிள்ளைகளின் உற்சாகக் குரல்கள். கீச்சுக் கீச்செனக் கத்துகிறது ஒரு குருவி. அதற்குப் பதில் கொடுப்பதென மற்றொரு மெல்லிய கீச்… கீச்… ‘இந்த உலகம் எவ்வளவு சந்தோசமாயிருக்கிறது!’ கோகுலன் நட்டு வளர்த்த பூக்கன்றுகள் முகம்வாடிக் காய்ந்து கடைசியில் செத்தேபோயின. முருங்கையும் மாமரங்களும் தென்னைகளும் மனிதரின் துக்கம் அறிந்தவை. யாரும் பராமரிக்காமலே தம்பாட்டில் பூக்கின்றன. காய்க்கின்றன. உதிர்கின்றன. மாம்பழக் காலத்தில் கிளிக்கூட்டத்தின் அட்டகாசம். பள்ளிக்கூடம் விட்டுப் போகும் பெடியங்கள் மாங்காய் பிடுங்கவென்று வருகிறார்கள். பக்கத்து வீட்டுப் பெண் முருங்கைக்காய் பிடுங்கவென வருகிறாள். “ஏதாவது செய்தி கிடைச்சுதா?” கேட்பாள். சிலசமயம் பதிலளிப்பார். பெரும்பாலும் மௌனம். அவளும் பதிலை எதிர்பார்த்து அந்தக் கேள்வியைக் கேட்பதில்லை. இப்போதெல்லாம் கதைப்பதென்பதே ஞானம்மாவுக்கு அலுப்பான விடயமாகிவிட்டது. ஊரும் அவரை மறந்துதான் போய்விட்டது. எப்போதாவது வருகிற உறவினர்களுங்கூட இப்போது வருவதில்லை. அவரவர் சோலி அவரவர்க்கு. கணவர் இறந்த பிறகு வயலை குத்தகைக்கு விட்டுவிட்டார். நெல் வருகிறது. விற்றதும் எலிகள் கொறித்ததும் போக மிகுதி சோற்றுக்காகிறது. தேங்காய்களைப் பொறுக்கி வீட்டின் பின்புறத்தில் குவித்திருக்கிறார். அவற்றில் பெரும்பாலானவை பாவிக்கப்படாமலே கொப்புறாவாகிவிட்டன. காற்றில் கற்பூரமாய் ஞானம்மாவின் உடல் கரைகிறது. தோல், அடித்தடித்துத் தோய்க்கப்பட்ட பழந்துணிபோல தொங்குகிறது. கன்னங்கள் மகிழ்ச்சியின் புதைகுழிகளென உட்குழிந்துபோயின. சனங்கள் ஊரிலிருந்து இடம்பெயர்ந்து செல்வதும் திரும்புவதுமாய் எத்தனை போர்மூட்டங்கள் வந்து கலைந்துவிட்டன! ஊரில் வாழமுடியாமல் எவ்வளவு பேர் வெளிநாடுகளுக்குப் போய்விட்டார்கள்! எத்தனை மழைக்காலங்கள், கோடைகள் கழிந்துபோயின! ஒவ்வொரு மழைக்காலமும் வீட்டுக் கூரையின் பொத்தல்களை அதிகரித்துக் கடந்து செல்கிறது. வீட்டுக்குள் இருப்பதும் வெளியில் இருப்பதும் ஒன்றுதானென்றாகிவிட்டது. கழிந்த மாரியில் கோகுலனின் புத்தகங்கள் இருந்த இடத்தில் மழைத் தண்ணீர் சிந்தியது. மழை விட்டதும் அடுப்படியில் அமர்ந்து ஒவ்வொரு பக்கமாக காயவைத்தார். வேலிக் கதியால்களிற் பல உக்கிச் சரிந்துவிட்டன. வேலியென்ற பெயரில் ஒப்புக்கு ஒரு மறைப்பு. அவ்வளவுதான். அக்கம்பக்கத்தில் எழுந்துவிட்ட நவீனமான வீடுகளுக்கு மத்தியில், சிதிலங்களோடு, நிற்கமுடியாமல் நிற்குமொரு முதியவளைப் போல நின்றுகொண்டிருக்கிறது அந்த வீடு. ஞானம்மா அதில் காத்திருக்கிறார். ………………… கோகுலன் பிடித்துச் செல்லப்பட்டு இந்த ஆண்டுடன் இருபத்து நான்கு ஆண்டுகள். ஞானம்மாவுக்கு இப்போது அறுபத்தொரு வயது. பின்மதிய நேரம்… விறாந்தைக் கதவடியில் நிழலாடியது. ‘மகனே என் மகனே…’ தள்ளாடியபடி போய்ப் பார்க்கிறார். அவனில்லை. வாசலில் நின்றவனுக்கு அவனை நினைவூட்டும் ஏதோவொரு சாயல். பிச்சைக்காரனில்லை. பார்த்தாலே தெரிகிறது. ஆனால், கலைந்த தலை, கசங்கிய ஆடைகள், வியர்வை நாற்றம், பசியினாலோ களைப்பினாலோ கவலையினாலோ அந்தக் கண்கள் உட்குழிந்திருக்கின்றன. “பெரியப்பா இருக்கிறாரா?” களைத்த குரலில் கேட்கிறான். “ஆர்?” பார்வை மங்கிவிட்ட விழிகளை இடுக்கியபடி ஞானம்மா கேட்கிறார். “வட்டக்கச்சி கனகராணியின்ரை மகன். அற்புதன்” கனகராணி, சுப்பிரமணியத்தாருக்கு மச்சாள் முறை. முன்னொரு காலத்தில் கனகராணிக்கு அவரைக் கலியாணம் செய்துகொடுப்பதற்கு பெரியவர்கள் தீர்மானித்திருந்தார்கள். ஆனால், சுப்பிரமணியத்தின் காதலம்பு இடம் மாறிப் பாய்ந்தது. ஞானம்மாவைக் கூட்டிக்கொண்டு விசுவமடுவுக்கு ஓடிப்போனார். கனகராணிக்கு அதிலொன்றும் மனவருத்தமில்லை. ஒரு வருசத்திலேயே வேறொரு இடத்தில் அவளை மணமுடித்துக் கொடுத்தார்கள். அவள் தன் புருசனோடு சுப்பிரமணியம் வீட்டுக்கு வந்துபோனாள். கடைசியாக வரும்போது கோகுலனுக்கு பதினான்கு வயது. கனகராணியின் மகன் அற்புதனுக்கு ஓரிரு வயதுகள் குறைவாக இருக்கலாம். எண்பத்து மூன்றாமாண்டுக்குப் பிறகு அவர்களோடான தொடர்பறுந்துபோயிற்று. “அவர் செத்துப் போய்ட்டார்” யாருக்கோ நடந்ததைச் சொல்வதுபோன்று எங்கோ பார்த்தபடி ஞானம்மா சொல்கிறார். மரணம் துயரப்பட முடியாத தொலைவுக்குப் போய்விட்டது. இருப்புக்கும் இன்மைக்கும் இடையில் கிடந்து கிழிபடுவதை விட மரணம் உத்தமம். “அவருமா?” ஞானம்மாவுக்கு களைப்பாக இருக்கிறது. நிற்க முடியவில்லை. நிலைக்கதவை ஆதரவுக்குப் பிடித்துக்கொள்கிறார். “முள்ளிவாய்க்கால்ல பதுங்குகுழியிலை குண்டு விழுந்து எங்கடை வீட்டாக்கள் எல்லாரும் செத்துப் போயிட்டினம். அப்பா, அம்மா, தங்கச்சி ஒருத்தருமில்லை. ஒரு வருசமாச்சு. நான் மட்டுந்தான் மிச்சம்” தொண்டை முடிச்சு விம்மியது. அழுகையை மறைக்க தலைகுனிந்து கண்களை மறைத்தான். சாறத்தின் நுனியால் கண்களைத் துடைத்தான். “உள்ளுக்கை வா தம்பி” ஈரக் குரலில் கூப்பிடுகிறார் ஞானம்மா. இழப்பினால் விழைந்த ஒட்டுறவு அது. அவன் வாசலிலேயே நிற்கிறான். “கோகுலன் எங்கை?” “அவனை எப்பவோ ஆமி பிடிச்சுக்கொண்டு போட்டுது. இன்னும் விடேல்லை” பின்மதியங்களுக்கேயுரித்தான மோனத்தை தன் சக்கரங்களால் கலைத்தபடி ஒரு வாகனம் இரைந்துகொண்டு போகிறது. “பெரியப்பா இருந்திருந்தால்….?” அவன் எதையோ சொல்லத் தொடங்கி குரல் தளம்ப நிறுத்துகிறான். “நான் போறன்” படலை வரை போய்விட்டான். ஞானம்மா கூப்பிடுவாரென்று அவனும், அவன் திரும்பிவருவானென்று ஞானம்மாவும் நினைக்கிறார்கள். “நில்லப்பன்” அவர்தான் முந்தினார். ‘அப்பன்’ இந்த வார்த்தையைச் சொல்லி எத்தனை நாளாகிறது! “எங்கை போறாய்?” “தெரியாது… எங்கையாவது” “இஞ்சை என்னோட இரு” “சரி அம்மா” பெரியம்மா முறைதான். ஏன் அம்மாவென்று அழைத்தானென்பது அவனுக்குத் தெரியவில்லை. ஆனால், அப்படி அழைப்பதே அவனுக்குப் பிடித்திருக்கிறது. ஞானம்மாவின் இறுகிய முகத்தில் ஒரு இளக்கம். கதவை விரியத் திறந்து உள்ளே அழைக்கிறார். தாழ்ந்த இறப்பு, அவன் நல்ல உயரம். “தலை இடிச்சிடும் அப்பன்” அவர் இன்னும் சாப்பிட்டிருக்கவில்லை. பரிமாறுகிறார். முருங்கைக்காய்க் குழம்பு, முருங்கையிலை வறை. “அம்மா! நீங்கள் சாப்பிட்டீங்களா?” பசியடங்கியதும் கேட்கிறான். அம்மாவின் செவிகளை ஏதோ ஞாபகம் நிறைத்திருக்கிறது. பதிலளிக்கவில்லை. அவனுடைய கை சாப்பாட்டை அளைகிறது. மீண்டும் கேட்கிறான். “ஓம். நீ சாப்பிடு” என்கிறார். கோகுலனைப் போல தலைமயிர் நல்ல அடர்த்தி. இறுகிய உடல்வாகு. அகன்ற தோள்கள். துருத்தி வெளித்தெரியும் விலாவெலும்புகளுள் பட்டினியின் பல கதைகள். அவனுடைய ஆரோக்கியம் முள்ளிவாய்க்காலிலிருந்து இன்னும் மீளவில்லை. பிறகொருநாளும் அவனுடைய குடும்பத்தைப் பற்றி ஞானம்மா ஒரு கேள்வியைத்தானும் கேட்டதில்லை. எறிகணை வீழ்ந்து பற்றியெரியும் பதுங்குகுழியொன்றின் ஞாபகத்தை அவன் வாழுங்காலம்வரை மறக்கப்போவதில்லை என்பதை அவர் அறிவார். இதென்ன… திடீரென்று அந்த வீட்டில் இரவு எட்டு மணி தாண்டியும் விளக்கு எரிகிறது. வழக்கமில்லாத வழக்கமாய் மீன் குழம்பு வாசனை. அற்புதன் வேலைக்குப் போகிறான். கூலி வேலை. தோட்டத்தையும் அவன்தான் பார்த்துக்கொள்கிறான். கத்தரி, மிளகாய், புகையிலை… சாப்பாட்டுக்குப் பஞ்சமில்லை. அற்புதன் களைத்துச் சோர்ந்து வீடு திரும்பும்போது வாசற்படியில் ஞானம்மா அமர்ந்திருக்கிறார். அவனைக் கண்டதும் அவருடைய முகத்தில் ஒரு வெளிச்சம். அவனுக்கு மட்டுமென்ன? ஞானம்மாவின் சேலைத் தலைப்பை எடுத்து முகத்தைத் துடைத்துக்கொள்கிறான். உள்ளுக்குள் அவனுக்கென்று துவாய் இருக்கிறதுதான். போன மாதம் வாங்கியது. இது வேறு. அம்மாவின் வாசனையை கடைகளில் வாங்கவோ தறியில் நெய்யவோ முடியாது. ஊராருக்கு அனுதாபம் வற்றித்தான் போய்விட்டது. இதர மனிதருக்காகக் கவலைப்படுகிற ஆட்கள் குறைந்துபோயினரா? இல்லை! அவர்களுடைய குற்றவுணர்விலிருந்து விடுபட ஒரு காரணம் கிடைத்துவிட்டது. மகனைக் காணாமற் போகக் கொடுத்த தாயும், தாயை இழந்த மகனும்… எல்லாஞ் சரி! வாழ்க்கை சுற்றிவளைத்து மறுபடியும் நேர்கோட்டிற்கு வந்துவிட்டது. ஆனால், ஒரு பிசிறல்! வாத்தியங்கள் சேர்ந்திசைக்கும்போது ஒரேயொரு வயலின் தனியாக இழையுமே… அதுபோல ஒத்திசையாமல் ஒரு பிசிறல்! அற்புதன் நேரம் பிந்தி எழுந்திருக்கிறவன். அவனுக்கு துளி வெளிச்சமிருந்தாலும் உறக்கம் வராது. சாமியறை, கடவுளர்களாலும் நெல் மூட்டைகளிடையே ஓடித்திரியும் எலிகளாலும் நிறைந்திருக்கிறது. இருளும் குளிரும் நிறைந்த கோகுலனின் அறை வந்த முதல் நாளே அவனை ஈர்த்துவிட்டது. ஆனால், ஞானம்மாவோ கோகுலனின் அறையைப் பூட்டிப் பூட்டி வைக்கிறார். பூட்டிய கதவு அற்புதனை அந்நியன் என நகையாடுகிறது. அதைப் பார்க்குந்தோறும், சொல்லாமல் கொள்ளாமல் மறுபடியும் வட்டக்கச்சிக்கே போய்விட்டாலென்ன என்று அற்புதனுக்குத் தோன்றியதுண்டு. ஆனால், புருசனைச் சாகக்கொடுத்து, பிள்ளையைத் தேடித்திரியும் ஒரு நலிந்த மனுசியை, வறுமை தாண்டவமாடும் சிதிலமடைந்த வீட்டில் தனியே விட்டுவிட்டு எப்படிப் போவது? இரக்கத்திற்கும் தன்மானத்திற்குமிடையில் அவன் தடுமாறுகிறான். ஆனால், இரக்கம் மட்டுந்தானா? அதையும் கடந்த ஏதோவொன்று அவனைத் தடுக்கிறது. கடைசியில், தலைவாசல் மூலையில் வைத்த உடுப்புப் பையை அங்கேயே விட்டுவிட்டான். தாழ்வாரத்தினோரம் சாத்தப்பட்டிருந்த சாக்குக் கட்டிலைத் தூக்கிக் கொண்டுபோய் மாமரத்தடியில் போடுகிறான். அடர்ந்த முது மரம். இரவுகளில், இருட்டையோ நிலவையோ வெறித்தபடி அவன் இறந்த காலத்தில் வாழ்கிறான். அல்லது சாகிறான். “இந்தாப்பன்” அன்று அற்புதன் வேலையால் திரும்பியதும் ஒரு கிண்ணத்தை நீட்டுகிறார் ஞானம்மா. பாயசம். “இண்டைக்கு கோகுலன்ரை பிறந்தநாள்” “உனக்கெப்ப பிறந்தநாள்?” கேட்பாரென்று அற்புதன் எதிர்பார்த்தான். கேட்கவில்லை. பதிலாக, தன்னுடைய மகன் பிறந்த இனிப்பைக் குடிக்கிறவனைப் பரவசத்தோடு பார்த்துக்கொண்டு நிற்கிறார். “பிறந்திருக்கேக்கை வடிவெண்டா அப்பிடியொரு வடிவு. ஓவியக்குஞ்சு… அக்கம் பக்கத்துப் பொம்பிளையளெல்லாம் தூக்கித் தூக்கிக் கொஞ்சுவாளவை. கண்ணூறு பட்டிடும். பிள்ளை இரவிரவா அழுவான்.” அற்புதன் இந்தப் பாராயணத்தை பல தடவைகள் கேட்டுவிட்டான். அவனுக்குள் எரிச்சல் மண்டியது. மண்வெட்டியை எடுத்துக்கொண்டு தோட்டத்திற்குப் போனான். முற்றத்தில் பூக்கன்றுகளின் ஒய்யாரத் தலையசைப்பு. அவனுடைய கைவண்ணந்தான். மாலையானதும் அதற்குள் குந்தியிருந்துகொண்டு அவற்றுக்குப் ‘பரியாரம்’ பார்க்கிறான். கோகுலன் இருந்தபோதுகூட இப்படி இல்லை எனும்விதமாய் அவை செழித்தாடுகின்றன. ஞானம்மாவுக்கு அதிலெல்லாம் நாட்டமில்லை. ‘மகனே… என் மகனே…’ அவனை எங்கே கண்டுபிடித்தாரென்று தெரியவில்லை. அல்லது ஞானம்மாவை அந்த மனிதன் தேர்ந்தெடுத்தான். உருண்டுதிரண்ட குள்ளமான உருவம். வயது ஐம்பதுக்கு மேலிருக்கும். இளநீல நிற சட்டைப் பையினுள் ரூபாய் நோட்டுக்கள் தெரிந்தன. தனது பெயர் விசாகேஸ்வரன் என்றான். கையிலிருந்த தங்க மோதிரங்களை திருகிவிட்டபடி, பிரதேசங்களைக் கலந்துகட்டியதொரு தமிழில் கதைத்தான். அதன் சாரம் இதுதான்: கோகுலன் இருக்குமிடம் அவனுக்குத் தெரியும். அவனைப் பிடித்து வைத்திருப்பவர்களைச் ‘சரிக்கட்டி’ வெளியில் எடுத்துவிட ஐந்து இலட்சம் ரூபாய் வேண்டும். அந்த விசாகேஸ்வரனை, காணாமற் போனவர்கள் தொடர்பான ஊர்வலங்கள் நடக்குமிடங்களுக்கு ஞானம்மாவை அழைத்துச்சென்று விடும்போது அற்புதன் கண்டிருக்கிறான். அவ்விடத்தையே சுற்றிச் சுற்றி வரும் அவனை புலனாய்வாளர்களில் ஒருவன் என்று அற்புதன் நினைத்திருந்தான். அவனோ, வலியைக் கொடுப்போருக்கும் அனுபவிப்போருக்குமிடையிலான இடைத்தரகன். துயரத்திலிருந்து காசு கறப்பவன். “அதெல்லாம் நாங்கள் பாத்துக்கொள்ளுவம். நீங்கள் போங்கோ” அற்புதன் சத்தம் போட்டு விரட்டிவிட்டான். பிறகொருநாள், அற்புதன் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து ஒரு புகைப்படத்தோடு அவன் திரும்பிவந்தான். கோகுலனுக்கு நாற்பது வயதாகிவிட்டிருந்தால் எப்படியிருக்குமோ அப்படியொரு தோற்றத்தையுடையவன் அவனால் கொணரப்பட்ட புகைப்படத்திலிருந்தான். “அஞ்சு லட்சம் குடுத்தா வெல்ல ஏலும்” “மூண்டு நாள் கழிச்சு வாங்கோ. அற்புதனைக் கேட்டிட்டுச் சொல்லுறன். அவனுக்கு இதிலை விருப்பமில்லை” “அவன் குடுக்கவேண்டாமெண்டுதானே சொல்லுவான்?” விசாகேஸ்வரன் இலேசுப்பட்ட ஆளில்லை. பொடி வைத்துக் கதைக்கிறான். “எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. என்ரை பிள்ளை திரும்பக் கிடைச்சால் காணும்” ஞானம்மா அவனிடம் சொல்கிறார். இரவுகளில் மூக்குறிஞ்சும் சத்தம்… சிலசமயம் இரவைக் கிழித்து வெடித்துக் கிளம்பும் அழுகை. “வயலை விற்போம்” மூன்றாம் நாள் காலையில் உறுதியாகச் சொன்னார். பேருருக்கொண்டு எழுந்தாடும் தாய்மையை எதிர்த்து அற்புதனால் ஒரு வார்த்தையும் கதைக்கமுடியவில்லை. “விக்க வேண்டாம். அடகு வையுங்கோ. காசு வரேக்கை நான் மீட்கிறன்” அந்த வயல் விளைச்சலில் குறை வைத்ததில்லை. அடுத்த வருசம் அதை அற்புதனே எடுத்து பயிர்செய்வதாக இருந்தான். இதற்குள் விசாகேஸ்வரன் குறுக்கிட்டுவிட்டான். “நான் வியாழக்கெழமைகள்ல விரதமிருக்கிறவென். ஒரொரு சிலையா எடுத்து குளிப்பாட்டி பூசை செய்து…” விசாகேஸ்வரன் சொல்வதை ஞானம்மா கண்கள் சுடர்விடக் கேட்டுக்கொண்டிருந்தார். வீரகேசரி பத்திரிகையில் சுற்றப்பட்ட ஐந்து இலட்சம் ரூபாயை அவனிடம் கொடுக்கும்போது அற்புதன் உடனிருந்தான். “தெய்வ நம்பிக்கையுள்ளவை ஏமாற்றமாட்டினம்” என்று, விசாகேஸ்வரன் காசோடு வெளியேறிய பிற்பாடு ஞானம்மா அற்புதனிடம் கூறினார். ‘அந்த வயல் ஒரு சீதேவி. மீட்க முடியாமற் போனால்…’ அற்புதனின் மனம் ஆற்றாமையில் எரிந்தது. அற்புதன் சந்தேகப்பட்டது சரி! ஐந்து இலட்சத்தைச் சுருட்டிக்கொண்டு விசாகேஸ்வரன் மாயமாகிவிட்டான். அவனுடைய அலைபேசி தொடர்பெல்லைக்கு வெளியில் அவன் இருப்பதாகக் கூறியது. பிறகு அவனை யாழ்ப்பாணத்தின் எந்தவொரு ஊர்வலத்திலும் அற்புதன் காணவில்லை. ஆனால், ஆறு மாதங்களோ ஒரு வருசமோ கழித்து மீண்டும் வருவான், மற்றொரு இரையைத் தேடி, மற்றொரு புகைப்படத்தோடு. “அவனை எங்கையாகிலும் கண்டனோ… வெட்டிச் சாய்ப்பன்” அற்புதன் கறுவினான். ‘படிச்சுப் படிச்சுச் சொல்லியும் கேளாமல் ஏமாந்துபோனேனே…’ ஞானம்மா அற்புதனின் முகத்தில் ‘முழிக்க’ முடியாமல் சில நாட்கள் படுத்துப் படுத்துக் கிடந்தார். “உடம்பு சரியில்லை. தலை சுத்துது. வயித்துக்கை என்னவோ செய்யுது” பொய் சொன்னார். ‘காணாமற் போனவர்கள் உயிரோடு இருப்பதற்கு வாய்ப்பில்லை’ என்று, பொங்கல் கூட்டத்தில் கலந்துகொள்ளவென்று யாழ்ப்பாணம் வந்த பிரதமர் ரணில் சொன்னபிறகு ஞானம்மா உண்மையிலேயே நோய்வாய்ப்பட்டுவிட்டார். அவரால் எழுந்து நடமாடக்கூட முடியவில்லை. செய்தியை செய்தியால் அறுக்க நினைத்தான் அற்புதன். “விசயந் தெரியுமா?” அசிரத்தையோடு கண்களைத் திறந்து பார்த்தார். படுக்கையருகில் வைக்கப்பட்ட கஞ்சி ஆறிப்போய்க் கிடந்தது. “ஜனாதிபதி மைத்திரி, ரெண்டாயிரத்தி ஆறாம் ஆண்டு, தன்னைக் கொலை செய்ய வந்தானெண்டு குற்றஞ் சாட்டப்பட்ட ஜெனிபன் எண்ட பெடியனுக்கு பொதுமன்னிப்புக் குடுத்து வெளியில விட்டிட்டாராம்” ஞானம்மா விறுக்கென்று எழுந்து அமர்ந்தார். “மெய்யோ?” “நானேன் பொய் சொல்லுறன்? இந்தப் பேப்பரைப் பாருங்கோ” “இந்த மனுசன் உள்ளதுக்குள்ள பரவாயில்லை. எதுக்கும் எழுதிப் பாப்பம்” உடனடியாக எழுந்து ஜனாதிபதிக்கு கோழிக்கால் கிறுக்கல் எழுத்தில் ஒரு கடிதம் எழுதுகிறார் ஞானம்மா. கணேசரத்தினம் மாஸ்டரை அவருடைய மகள் ஸ்பொன்சரில் கனடாவுக்குக் கூப்பிட்டுவிட்டாள். இல்லாவிட்டால் அவரைக் கொண்டு எழுதுவித்திருப்பார். “மழைக்காலம் வரப்போகுது” செய்தி தந்த உற்சாகத்தில் ஞாபகமூட்டுகிறார். “புதன்கிழமை ஆக்களை வரச்சொல்லியிருக்கிறன்” கடந்த மழைக்காலத்தில் கோகுலனுடைய அறைப் பகுதி கூரையை காற்றும் மழையும் சேதப்படுத்திவிட்டன. இற்றுப் பொடிந்த உத்தரத்துத் தடிகளையும் மாற்றவேண்டியிருந்தது. அந்த வேலைக்காக மட்டும் அவ்வறைக்குள் தன்னை அனுமதித்த ஞானம்மாவில் மெல்லிய கோபம் படர்வதை அற்புதன் உணர்ந்தான். சிறுமைப்படுத்தப்பட்டதான உணர்வு. அங்கிருந்த பொருட்களை விறாந்தைக்கு மாற்றிவிட்டு கூரையைப் பிரிக்க முற்பட்டபோது கறுப்புநிற பொலித்தீன் பொதியொன்று கூரையினுள் செருகப்பட்டிருக்கக் கண்டான். மறைத்து வைக்கப்பட்ட அந்தப் பொதியை மழை தன் வலுத்த நீர்க்கைகளால் வெளித்தள்ளியிருந்தது. வேலையை இடையில் நிறுத்திவிட்டு கூலியாட்களுக்கு தேநீர் கொடுக்கும்படி ஞானம்மாவைப் பணித்தான். பொதியினுள் சில புகைப்படங்கள், துண்டுப்பிரசுரங்கள், சிவப்பு மட்டையிடப்பட்ட சிறிய புத்தகம்… புகைப்படங்களில், ஊருக்குள் இயக்கமென்று அறியப்பட்ட இளைஞர்களோடு கோகுலன் நின்றான். “அவனுக்கு புலியளோட தொடர்பிருந்திருக்கு. துண்டுப் பிரசுரமெல்லாம் வைச்சிருந்திருக்கிறான்” அன்றிரவு சாப்பிடும்போது அம்மாவிடம் சொன்னான். “இயக்கத்திலை இருந்தவங்களெல்லாரையுமா ஆமி பிடிச்சுக்கொண்டு போயிட்டான்?” ஞானம்மாவுக்கு இயக்கம், துப்பாக்கி, விடுதலை, துண்டுப்பிரசுரம் எதைப் பற்றியும் தெரியாது. தன்னிடமிருந்து தனது மகனைப் பிரித்தெடுக்க யாருக்கும் உரிமையில்லை. அவருக்குத் தெரிந்த நியாயம் அவ்வளவுதான். அன்றிரவு அற்புதனுக்கு கடுங் காய்ச்சல் கொதித்துப் பொழிகிறது. நெற்றியில் வைக்கிற கையில் நெருப்பு பற்றிக்கொள்ளுமோ எனும்படி சூடு. ஞானம்மா அவனுக்கு அருகிலேயே அமர்ந்திருக்கிறார். முருகனுக்கு நேர்த்தி வைத்து ஒரு ரூபாய்க் குற்றியொன்றை அவனுடைய மணிக்கட்டில் கட்டிவிடுகிறார். திருநீற்றினை அள்ளி நெற்றியில் அப்புகிறார். காய்ச்சல்காரன் சிரிக்கிறான்… இறந்துபோன தாயை கனவில் காண்கிறானா? ஒரே சிரிப்பு! மஞ்சள் கரைசல் நுரைத்து வழியும் சுவர்கள்… வீட்டினுள் பறந்து திரியும் குட்டிக் குட்டி விமானங்கள்… மிளாறி எரியும் நெருப்பு… அதனுள் நின்றபடி தங்கச்சி கத்துகிறாள்… சிரிப்பு கண்ணீராக மாறியது. நினைவு திரும்பியபோது, நெற்றியில் படிந்திருக்கும் அம்மாவின் கையை இறுகப் பற்றிக்கொள்கிறான் அற்புதன். ‘பிறகு இந்தக் கைகள் அவனையல்லவோ ஆதூரமாகத் தொடும்’ காய்ச்சலிலும் காய்கிறது உள்ளம். ‘கோகுலன் திரும்பி வந்துவிடக்கூடாதெண்டு நான் நினைக்கிறனா? ஐயோ! அது எவ்வளவு பாவம்!’ விழியோரங்களில் கண்ணீர் வழிகிறது. “ஒண்டுமில்லை… சுகமாயிடும் அப்பன்” அற்புதன் குணமாகி வேலைக்குப் போகத் தொடங்கியதும் நச்சரிக்கத் தொடங்கிவிட்டார் ஞானம்மா. “இனியாவது கலியாணம் செய்துகொள்ளப்பன். கடைசிகாலம் நோய்நொடி வந்தால் பாக்க ஒருத்தருமில்லாம நீ தனிச்சுப்போவாய்” அறுபத்தேழு வயதில் எண்பது வயதின் முதுமைக்கோலம் பூண்டுவிட்ட அவர் சொல்கிறார். அற்புதன் சிரிக்கிறான். அவனுக்கும் வயது கொஞ்சமில்லை. ஐம்பதை நெருங்குகிறது. காதோரங்களில் நரைக் கற்றை. அகன்ற தோள்கள் ஒடுங்கத் தொடங்கிவிட்டன. “எனக்கு கலியாணம் வேண்டாம் அம்மா” “காலத்தே பயிர் செய்திருக்கோணும்” அவன் மௌனமாக இருக்கிறான். மனைவியாக வருபவள் அம்மாவைச் சரிவரக் கவனித்துக்கொள்வாளா? பிள்ளைகள் அம்மாவை மனம் நோகப் பண்ணினால்… ………………. மாமரக் கிளைகளினூடே வழியும் நிலவு துக்கத்தைக் கூட்டுகிறது. துக்கத்தின் பேரிரைச்சல் தூக்கத்திலும் ஒலிப்பதுவாய்… அற்புதனால் உறங்கமுடியவில்லை. தவேந்திரனைச் சந்தித்து ஏழெட்டு நாட்களிருக்கும். அன்றிலிருந்து அம்மாவின் கண்களைத் தவிர்த்து விரைந்தோடிக்கொண்டிருக்கிறான். அன்று மாலை, வேலை முடிந்து இவன் வீடு திரும்பிக்கொண்டிருந்தான். வாசகசாலை முடக்கில் திரும்பும்போது, யாரோ பின்னின்று அழைப்பது கேட்டது. நின்றான். கேற்றைப் பிணைத்திருந்த தூண்களிரண்டிலும் நந்தி வைத்துக் கட்டப்பட்ட புராதன வீடு அது. யாழ்ப்பாணத்தின் அநேக வீடுகளைப் போல அந்த வீட்டிலும் வெளிநாட்டுக்கு பிள்ளைகளை அனுப்பிவிட்ட இரண்டு வயோதிபர்கள் வாழ்ந்தார்கள். அவ்விடத்தைக் கடந்துசெல்லும்போது அவர்களது ஊசலாட்டத்தை அவன் கண்டிருக்கிறான். மற்றபடி அங்கிருப்பவர்களை அவனுக்குத் தெரியாது. அங்கிருப்பவர்களை மட்டுமென்ன… அந்த ஊரில் அவனுக்கு அம்மாவைத் தவிர யாரையும் தெரியாது. அழைத்தவருக்கு இவன் வயதுதான் இருக்கும். தெரு விளக்கின் வெளிச்சம் படாவிட்டாலும் பளபளக்கிற முகந்தான். வெளிநாட்டிலிருந்து வந்திருக்க வேண்டும். காக்கி நிற அரைக் காற்சட்டையும், கருநீல நிறத்தில் தொளதொளவென்றொரு சேர்ட்டும் அணிந்திருந்தார். “நீங்கள்தானே கோகுலன் வீட்டிலை இருக்கிறது?” அவருக்கு எப்படித் தெரியுமென்று தெரியவில்லை. அது ஒரு விசயமுமில்லை. சிறிய ஊர்களில் காற்றில் விதைகள் பரவுவதைப் போல கதைகள் பரவிவிடும். “ஓம்…” “அம்மா எப்பிடி இருக்கிறா?” “இருக்கிறா” மாலை நேரத்திற்கேயுரிய காற்று விசயந்தெரியாமல் தலையைத் தடவியது. “பாவம்” அந்த மனிதர் பெருமூச்செறிந்தார். “நீங்கள்?” தயக்கத்தோடு கேட்டான் அற்புதன். “என்ரை பேர் தவேந்திரன். கோகுலனும் நானும் படிக்கிற காலத்திலையே நல்ல சினேகிதம். இயக்கத்துக்கும் ஒண்டாத்தான் போனனாங்கள். பிறகு நான் இயக்கத்துக்குத் துண்டு குடுத்திட்டு கனடாவுக்குப் போயிட்டன். அவன் வீரச்சாவெண்டு கேள்விப்பட்டதும் அம்மான்ரை ஞாபகந்தான் வந்திச்சு. அவன் அவவை நினைச்சுக் கவலைப்படாத நாளில்லை.” ‘வீரச்சாவு!’ திக்கென்றது. “எப்ப?” “சரியா ஆண்டு ஞாபகமில்லை. ரெண்டாயிரத்தொண்டு ஜனவரியிலை எண்டு நினைக்கிறன். கொஞ்சம் இருங்கோ” வீட்டுக்குள் போனார். ‘விநாடிகள் ஏனிப்படி நீள்கின்றன?’ கால்கள் நடுங்கின. கேற்றைப் பிடித்துக்கொண்டு நின்றான் அற்புதன். திரும்பி வந்த அவரது கையில் ஒரு பத்திரிகை இருந்தது. கனடாவிலிருந்து வெளியாகும் பத்திரிகை அது. அவர் பிரித்துக் காட்டிய பக்கத்தில் அற்புதனுடைய கண்கள் நிலைத்தன. வீரவணக்கம். பதினைந்தாவது ஆண்டு நினைவு. கோகுலன் சுப்பிரமணியம்! அன்னை மடியில்: 1969 மண்ணின் மடியில்: 2001. அஞ்சலிக் கவிதையொன்று. அதன் கீழ் மேலதிக தொடர்புகளுக்கு ‘அபிராமி’ என்றிருந்தது. “நான் போன கிழமைதான் இஞ்சை வந்தனான். ஊருக்குள்ளை ஆருக்கும் இந்த விசயந் தெரியாதாம்” “இல்லை. தெரியாது” உதடசைந்தது. குரல் ஒலித்ததாவென அவனும் அறியான். “நீங்களும் சொல்லாதையுங்கோ…” கரிக்குருவியொன்று கீச்சிட்டுக் கத்தியபடி பறந்தது. ‘கெட்ட சகுனம்’ அற்புதன் சஞ்சலப்பட்டான். ‘ஆனால், இனி நடக்க என்னதான் மிச்சமிருக்கிறது?’ “இந்தப் பேப்பரை எனக்குத் தாறீங்களா?” தயங்கியபடி கேட்டான். “ஓ… வேணுமெண்டா வைச்சிருங்கோ” கோகுலன் எப்போது சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டான்? எப்போது இயக்கத்தில் சேர்ந்தான்? அவனுக்காகவே உயிரை உடலில் தேக்கிக் காத்திருக்கும் தாயைத் தேடி ஏன் வரவில்லை? அஞ்சலிக் குறிப்பை அந்தப் பத்திரிகைக்கு அனுப்பிய அபிராமி யார்? தலையணைக்கடியிலிருந்த பத்திரிகையை மீண்டும் எடுத்துப் பார்த்தான் அற்புதன். ‘அம்மாவிடமுள்ள அதே புகைப்படம். அவன்தான்’ அம்மாவிடம் இதைக் காட்டுவதா வேண்டாமா? ஐயோ மனுசி அழுதழுது செத்துப்போகுமே…! இல்லாவிட்டாலுமென்ன… ஓட்டை விளக்கினூடே கசியும் எண்ணெயென சிறுகச் சிறுகக் கசிகிறது அவருடைய உயிர். எண்ணெய் தீர்ந்து தானாய் அணையட்டும். கையை வீசி படக்கென்று அணைக்கவேண்டாம். அம்மா… உன்னையும் நான் இழப்பேனாகில்…. துயரம் அவனை உலுக்கியது. உறவேதுமில்லாத் தனியனாக இந்த உலகில் வாழ்வதென்பது எத்தனை சிரமம்! மாலை சாய்ந்து வீடு திரும்பும்போது யாருமற்ற வெறுமையை எதிர்கொள்வதென்பது மரணத்திற்கு சமானமானதாயிற்றே! அந்தக் கொடுமைக்கு வீதியில் வாழலாமே! ‘அம்மா உன்னுடைய மகனைத் தேடியலையாதே. அவன் இறந்துவிட்டான் என்றொரு வாக்கியத்தால் ஓருயிரைக் கொல்லமுடியுமா? யார் கண்டது? கேட்ட நொடியே வீழ்ந்து இறந்துபோனால்… இல்லை. வேண்டாம்’ அந்தப் பத்திரிகையை தாழ்வாரத்தின் இறப்பினுள் கண்மறைவாக செருகிவைத்தான். அன்றைக்கு விடிகாலை நாலரை மணிக்கே அடுப்பெரிகிறது. குசினி வரிச்சு மட்டைகளினூடே தெரியும் நெருப்பின் தழல்நாக்குகள். “ஜனாதிபதி யாழ்ப்பாணம் வாறாராம்” “அந்தக் கூட்டத்திலை போய் நீங்கள் இடிபடவேண்டாம்” அற்புதன் கடுமையாகவே சொல்கிறான். ஞானம்மா ஒன்றுஞ் சொல்லவில்லை. அந்த மௌனத்தின்; பொருள் மறுப்பு. கூட்டத்தில் வழக்கம்போல முன்னால் நிற்கிறார் ஞானம்மா. “எனது மகன் கோகுலன் எங்கே?” நைந்துபோன அட்டை மறுபடியும் கேட்கிறது. ரணிலாவது காணாமற்போனவர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்றார். ஜனாதிபதியிடம் ஏதொரு பதிலுமில்லை. அவர் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை மூட்டை கட்டிக்கொண்டு கொழும்புக்குப் புறப்பட்டுப்போகிறார். வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அற்புதன் சட்டியை, பானையை திறந்து திறந்து பார்க்கிறான். “சமைக்கேல்லையா?” “இல்லை. ஜனாதிபதியின்ரை கூட்டத்துக்குப் போனனான்” அவனுடைய முகம் விகாரமாக மாறுகிறது. தாழ்வாரத்தை நோக்கி வேகமாகச் சென்றான். திரும்பிவரும்போது அந்தப் பத்திரிகை அவனுடைய கையிலிருக்கிறது. அதை அங்கிருந்த கதிரையில் வீசியெறிகிறான். “பார்… பார்… கோகுலன் எப்பவோ செத்துப்போயிட்டான்.” அற்புதனுக்கே தன் செயலைப் பார்க்க உள்ளுக்குள் அருவருப்பாக இருக்கிறது. ‘சீச்சீ! நானும் ஒரு மனுசனா?’ மறுகுகிறான். ஞானம்மா பத்திரிகையை எடுத்துப் பார்க்கிறார். கோகுலன்தான். கைது செய்யப்பட்டபோதிருந்த அதே வெள்ளந்தி முகம். அரும்பத் தொடங்கிய மீசை… வயிற்றினுள் புகுந்த நிலவின் கீற்று உதிர்ந்துபோயிற்றா? இனி நித்திய அமாவாசை! ‘அம்மா… நான் கேவலமானவன். கேடுகெட்டவன்’ மாமரத்தடியில் குற்றவுணர்வோடு சுருண்டுகிடக்கிறான் அற்புதன். ‘உனக்காகவுந்தான் அம்மா. இல்லாதவனைத் தேடி நீயுந்தான் எத்தனை மைல்கள் நடப்பாய்? எத்தனை ஆண்டுகள் காத்திருப்பாய்?’ ‘ஆனால், அதற்காக மட்டுந்தானா?’ உள்மனதில் ஒரு முள் அசைந்தசைந்து வேதனையைக் கூட்டுகிறது. கோகுலனுடைய படத்தின் முன் குத்துவிளக்கொன்றை ஏற்றிவைத்துவிட்டு அதன்முன் அம்மா படுத்துவிட்டார். “என் மகன் கோகுலன் எங்கே?” என்ற வாசகத்தை உரித்தெடுத்துவிட்டார். பொழுது கருகுகிறது. விறாந்தை இருண்டு கிடக்கிறது. முப்பத்தொரு ஆண்டுகளுக்கு முன்னம் வீட்டினுள் புகுந்த அதே இருள். மேலும் அடர்ந்து… அற்புதன் வெளியில் சுற்றிவிட்டு வந்து மாமரத்தடி சாக்குக்கட்டிலில் அமர்ந்திருக்கிறான். சாப்பிடவில்லை. சாப்பிடுவதற்கு அங்கு என்னதானிருக்கிறது? ஞானம்மா எழ முயற்சிக்கிறார். முதுகுத்தண்டில் கடும் வலி. கைகால்கள் கனத்த பிணம்போல தூக்கமுடியாமல் சோர்ந்து சோர்ந்து விழுகின்றன. உடலும் உயிருமற்றவராய்க் கிடக்கிறார். அற்புதன் இடையிடையே வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போகிறான். அவனுக்குள் பயம் இரைச்சலிடுகிறது. மூச்சு விடுவதன் அடையாளமாக அம்மாவின் வயிறு உயர்ந்து தாழ்கிறது. இரவு… காலை… மதியம்… பொழுது கரைகிறது. மறுநாள் மாலையாகி இருள் சூழத் தொடங்கவும் உடலைப் பெயர்த்துக்கொண்டு எழுந்திருக்கிறார். அற்புதன் வேலைக்குப் போகவில்லை. மாமரத்தடியில் படுத்திருக்கும் அவனது முதுகை படியில் குந்தியிருந்துகொண்டு வெறித்துப் பார்க்கிறார் ஞானம்மா. ஏதோ நினைவு வந்தாற்போல, கதிரையில் கிடந்த அந்தப் பத்திரிகையை மீண்டும் எடுத்துப் பார்க்கிறார். ‘இரண்டாயிரத்தி ஒண்டு… அந்த வருசக் கடைசியிலைதான் அபிராமிக்குக் கலியாணம் நடந்தது. கோகுலன் இல்லையெண்டு தெரிஞ்சதுந்தான் கலியாணங் கட்ட ஒத்துக்கொண்டியா? அட! என்ரை தங்கக் கிளியே!’ கண்களைத் துடைத்துக்கொள்கிறார். பிறகு குசினிக்குள் போகிறார். முப்பத்தொரு ஆண்டுகளில் முதன்முறையாக அவருக்கு அவ்வளவு பசிக்கிறது. பசியென்றால் குடலைக் குடல் தின்னும் பசி! “இந்தத் தேங்காயைக் கொஞ்சம் உரிச்சுத் தா மோனை” குரல் கேட்டு அற்புதன் எழுந்திருக்கிறான். இந்தப் பிரளயம் எவரையும் காவுகொள்ளாமல் கடந்துவிட்டதா? “உங்களைக் கண்டபிறகு இயக்கத்துக்குப் போக மனம் வராதெண்டபடியாலைதான் இங்க வராமல் நேரை இயக்கத்திலை போய்ச் சேர்ந்திருக்கிறான்” ‘சமாதானம் இத்தனை பலவீனமாக இருக்கக்கூடாது’ என்று அதைச் சொன்னபோதே அற்புதனுக்குத் தோன்றியது. “அதில்லை. என்ரை பிள்ளைக்கு எவ்வளவு அடி அடிச்சிருந்தால் அவன் என்னைக்கூடத் தேடி வராமல் இயக்கத்துக்குப் போயிருப்பான்!” ‘ஆ! இப்போதும் நீதான் வென்றாய்!’ குசினிக்குள் புட்டு அவிகிறது. முட்டைப் பொரியல் மணக்கிறது. அற்புதன் தலைவாசலுக்குள் போய் கொடியில் தொங்கும் அம்மாவின் சேலையை எடுத்து நெஞ்சோடு அணைத்துக்கொள்கிறான். தறியில் நெய்யவோ கடைகளில் வாங்கவோ முடியாத அம்மாவின் வாசனை! http://kapaadapuram.com/test5/?p=1897
 4. பாரதம் தந்த பரிசு

  வாக்குமூலங்கள் வல்வை ந. அனந்தராஜ், யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். இப்போது வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சில் பணிப்பாளராக இருக்கிறார். யாழ்ப்பாணத்தில் கல்லூரி அதிபராகப் பல பள்ளிக்கூடங்களிலும், கல்வி அதிகாரியாகவும் பணியாற்றியவர். கல்வித்துறைச் செயற்பாட்டாளர். ‘வல்வைப் படுகொலை / India’s Mai Lai: Massacre at Valvettithurai’ நூலை எழுதியவர், அதற்கு முன்பாகவே இலங்கைப் படையினர் வல்வையில் நடத்திய ஊறணிப் படுகொலைகள் பற்றியும் ஆவணப்படுத்தியவர். இந்தியப் படையினர் யாழ்ப்பாணத்திலிருந்தபோது வல்வெட்டித்துறைப் பிரஜைகள் குழு என்னும் சிவில் சமூக நிறுவனத்தை உருவாக்கித் தமிழ் மக்களுக்கும் இந்தியப் படைகளுக்கும் முரண்பாடுகள் எழுகிறபோதெல்லாம் சமாதானத்தை உருவாக்கப் பாடுபட்டவர். இந்தியப் படையினரின் முக்கியமான தளபதிகள் இவரை அறிந்திருந்தார்கள். எனினும் இந்தியப் படையினரால் கைது செய்யப்பட்டு மோசமாகச் சித்திரவதைக்குள்ளானார். அந்த அனுபவத்தை விவரமாகவே எழுதியுள்ளார். இவரது கண் முன்னாலேயெ இவரது மாணவர்கள் பலர் இந்தியப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர் எழுதிய ‘முல்லைத்தீவுச் சமர்’, ‘வல்வைப் புயல்’ ஆகிய நூல்களின் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தபோது எடுத்த படமே மேலுள்ளது. இலங்கையில் இந்திய இராணுவத்தினரின் குரூரத்தைப் பதிவு செய்யும் ஆவணம் இது. காலப் பொருத்தம் கருதி நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளன. அங்கு நின்ற சீக்கியச் சிப்பாய், பெருத்த அட்டகாசத்துடன் கருவிக்கொண்டி ருந்தான். அவன் அப்படிச் சொன்ன அதே கையோடு, அந்தக் கூட்டத்திலிருந்து எழுந்தமானமாக, ஆறுபேரைப் பிடித்து இழுத்துக்கொண்டுபோய்ச் சுடுவதற்கு ஆயத்தப்படுத்தினான். அப்பொழுது தூரத்தே வல்வெட்டித்துறைப் பக்கத்திலிருந்து ஒரு இராணுவ ஜீப் வண்டி வருவதைக் கண்டதும் அவனுடைய கவனம் திசைதிருப்பப்பட்டதால், அங்கிருந்து விலகிச்சென்றான். அந்த ஜீப் வண்டியிலிருந்து சுமார் ஆறு, இராணுவ பொலிசார் இறங்கினார்கள். அதிலிருந்து இறங்கிய ஒருவனுடைய உத்தரவைத் தொடர்ந்து, அங்கு ஏற்கெனவே நின்ற இராணுவத்தினர் ஜங்ஷனை நோக்கி நடக்கத்தொடங்கினார்கள். அப்பொழுதுதான் அங்கிருந்தவர்களுக்குப் போன உயிர் திரும்பிவந்தது. இந்தச் சம்பவம் நடந்துகொண்டிருந்த அதே நேரத்தில், வல்வெட்டித்துறை ஜங்ஷனுக்கும் ஊறணிக்கும் இடையிலுள்ள கொத்தியால், காட்டுவளவு ஆகிய சந்துகளில் பல நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் சல்லடை போட்டுத் தேடிக்கொண்டிருந்தனர். அங்கு ஒரு மரணவீட்டில், துக்கம் கொண்டாடு வதற்காக இருந்த ஆண்கள் அனைவரையும் வயது வேறுபாடின்றி வெளியே இழுத்துவந்து வரிசையாக நிற்கவைத்தார்கள். “நீங்கள் எல்லாரும் எல்.ரீ.ரீ.ஈ உங்கள் எல்லாரை யும் சுட வேணும்...” அங்கு நின்ற சிப்பாய் வெறிபிடித்தவன்போல் கத்தினான். அங்கே மரண வீட்டிலிருந்த பெண்கள் எல்லோரும் வெளியே ஓடிவந்து, மூர்க்கத்தனமாக நின்று கொண்டிருந்த சிப்பாய்களின் காலில் விழுந்து அழுதார்கள். கருங்கல்லை இளக வைக்கலாம், இந்தக் கயவர்களை இளகவைக்கமுடியுமா? அந்த இராணுவத்தினர், தாங்கள் கைது செய்தவர்களை இழுத்துக்கொண்டு ஜங்ஷனை நோக்கி நடந்தார்கள். அவர்களின் பின்னால், அழுது கூக்குரலிட்டுக்கொண்டே ஓடிவந்த பெண்களைச் சப்பாத்துக்காலினாலும் ரைபிள் பிடியினாலும் ஓங்கி அடித்தார்கள். அந்தச் சிப்பாய்களில் ஒருவன், தனது கையிலுள்ள ரைபிளினால் குறிவைத்துக்கொண்டு நின்றதும், அந்தப்பெண்களின் வேகம் தடைப்பட்டது. அவர்களுடன் சுமார் முப்பது பொதுமக்கள்வரை கூட்டிச்செல்லப்பட்டனர். வல்வெட்டித்துறை ஜங்ஷனை அடைந்ததும், அவர்களை நடுச்சந்தியிலுள்ள தார்ரோட்டில் இருக்க வைத்தார்கள். முதல்நாள் சுடப்பட்டவர்களின் சடலங்கள் ஊதிப் பொருமல் அடைந்துபோய் இருந்தன. சில நிமிடங்களில் ஒரு சிப்பாய், அவர்களுக்கு அருகில் வந்து, அங்கிருந்தவர்களில் சிலருடைய மயிரைப் பிடித்துத் தூக்கி இழுத்துக் கொண்டுபோய்ச் சந்தியின் எதிர்ப்புறமாக உள்ள எரிந்த கடை ஒன்றின் முன்னால் நிற்க வைத்தான். அங்கிருந்தவர்களின் முகங்கள் பேயறைந்ததுபோல் இருந்தன; கண்கள் இமைக்க மறுத்தன... என்ன நடக்குமோ என்ற ஏக்கம் எல்லோரையும் கதிகலங்க வைத்துக்கொண்டிருந்தது. எதுவுமே நடந்துவிடக்கூடாது என்று நினைத்துப் பார்ப்பதற்கு முன்னரே, அங்கு நின்ற ஜவான் ஒருவன், அந்த ஆறுபேரையும் ‘படபட’ வென்று சுட்டுத்தள்ளிவிட்டுத் தன்கையில் வைத்திருந்த செலவ் லோடிங் ரைபிளை (SLR)திருப்பிக்கொண்டு அப்பால் சென்று கொண்டிருந்தான். அவர்கள் அந்த ஒரு கணத்திலேயே விழுந்து கால்களைத் தரையுடன் அடித்துத்துடித்துக்கொண்டிருந்தார்கள். ஒருமுறை ஜே.என். தீக்ஷித் இலங்கைக்கான தூது வராக இருந்தபொழுது, யாழ்ப்பாணம் அன்னையர் முன்னணியைச் சேர்ந்த பெண்கள் குழுவொன்று கொழும்புவிலுள்ள இந்தியத் தூதரகத்தில் அவரைச் சந்தித்தபொழுது இடம்பெற்ற சுவையான சம்பாஷணை இந்த இடத்தில் நினைவு கூரப்பட வேண்டும். தூதுக்குழுவில் சென்ற ஒரு பெண், யாழ் நகரில் இந்திய இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட முப்பது இளம்பெண்களின் உறுதிப்படுத்தப்பட்ட பிரமாண வாக்குமூலங்களைத் தூதுவர் தீக்ஷித் அவர்களிடம் கொடுத்து, “மேன்மைக்குரிய தூதுவர் அவர்களே!... இப்படியான செயல்களை உங்கள் படைவீரர்கள் தொடர்ந்தும் செய்யாது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்... அவர்களுடைய இந்த நடவடிக்கைகள் பாரம்பரியமிக்க பாரதத்திற்குத்தான் களங்கத்தை ஏற்படுத்தும்...” அந்தப் பெண், தீக்ஷித்திடம் தனது மன உணர்வுகளை வெளிப்படுத்தி, அவர் என்ன சொல்லப்போகின்றார் என்பதைக் கேட்கும் பாவனையில் நின்றார். “என்ன சொல்கிறீர்?... எங்களுடைய ஜவான்கள் ஒருபோதும், எந்தச் சந்தர்ப்பத்திலும் இவ்வாறான செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.” அவருடைய தன்மானம் அவரைச் சுட்டெரித்திருக்க வேண்டும். தனது ஜவான்கள், தனிமையில் இருந்தால்கூட இவ்வாறான பாவச்செயல்களைச் செய்யமாட்டார்கள் என்று அடித்துப்பேசினார். “ஓ... அப்படியென்றால் உங்களுடைய இந்திய ஜவான்களுக்கு ஆண் உறுப்புக்கூட இல்லாமல் போய்விட்டதோ?” சிரிக்காது, முகத்தில் எந்தவிதமான மாறுதலுமின்றி அந்தப் பெண் சொன்னதும் தூதுவர் முகத்தில் ஈயாடவில்லை. இந்தியப்படையினர் நடத்திய காமவெறியாட்டங்கள்பற்றி ஆதாரங்களுடன் கொடுத்த புகார்களை அலட்சியம் செய்த தீட்சித்தின் மீது ஆத்திரமுற்ற அந்தப் பெண்மணி அவ்வாறு கேட்டாள். 36 வயதான, உடுப்பிட்டி, வீரபத்திரர் கோயிலடியைச் சேர்ந்த இந்திரா என்ற பெண், அன்று தனது வீட்டில் ஆறு வயது மகனுடன் தனித்தே இருந்தாள். அந்தச்சம்பவம் பற்றிக் குறிப்பிடும்பொழுது, “எனது கணவர் யாழ்ப்பாணத்தில் வேலைக்குப் போனவர், ஊரடங்குச் சட்டத்தினால் வீட்டிற்குத் திரும்பவில்லை. நானும் எனது மகனும் வீட்டில் இருந்தபொழுது இந்திய அமைதிப்படையைச் சேர்ந்த நான்கு சீக்கியர்கள் எனது வீட்டிற்குள் வந்து, வீட்டைச் சோதனையிடப் போவதாகக் கூறினார்கள். நான், உடனே வீட்டைவிட்டு வெளியே வந்து முற்றத்தில் நின்றேன். அப்பொழுது ஒரு சிப்பாய் எனது முதுகில் துப்பாக்கியினால் தள்ளிப்பிடித்தபடி அறைக்குள் போகுமாறு கூறித்தள்ளினான். எனது ஆறுவயது மகன் பயத்தினால் வெளியே ஓடிப்போய் அழுதுகொண்டு நிற்க மற்றைய சிப்பாய் அவனைப்பிடித்து இழுத்துவந்து ஒரு மூலையில் உட்காரவைத்தான். இரண்டு சீக்கியர்கள் என்னைப் பிடித்து அறைக்குள் இழுத்தார்கள். ஒருவன், நான் சத்தமிடாதபடி என் வாயை அமுக்கிப்பிடித்தான்; மற்றவன் எனது ஆடைகளைக் கழற்றி மானபங்கப்படுத்தினான். எல்லாம் முடிந்து போகும்பொழுது, அந்த வெறிபிடித்த சிப்பாய், என் அருகில் வந்து இதுபற்றி எவரிடமாவது முறையிட்டால் உங்கள் எல்லோரையும் குடும்பத்துடனேயே சுட்டுத்தள்ளிவிடுவேன் என்று சொல்லிவிட்டு வெளியேறினான்.” கண்ணீரின் மத்தியில் கூறிக்கொண்டிருந்த அந்தப்பெண் குலுங்கிக்குலுங்கி அழுதாள். “நான் மற்றைய பெண்கள் மாதிரி தற்கொலை செய்யவோ மூடி மறைக்கவோ போவதில்லை. அந்த வெறிநாய்கள் இங்கே அமைதிப்படை என்ற பெயரில் வந்துசெய்கிற அட்டூழியங்களை நாளை உலகுக்கு அம்பலப்படுத்தத்தான் போகிறேன்.” சூரியன் மெல்லமெல்ல மேற்கே இறங்கிக் கொண்டிருந்தான்! வல்வெட்டித்துறைச் சந்தியில் தடுத்துவைக்கப் பட்டவர்களும் காயம்பட்டிருந்தவர்களும் அதே இடத்திலேயே நீண்ட நேரமாக வைக்கப்பட்டிருந்தனர். எவ்வித மருத்துவ உதவியுமின்றி, இரத்தம் ஓடிய நிலையில் மணிக்கணக்காக இருந்தவர்களை அந்த இராணுவத்தினரில் ஒருவனாவது ஏனென்றுகூடத் திரும்பிப் பார்க்கவில்லை. இந்தப் படுகொலைகளையடுத்து பருத்தித்துறை மந்திகை வைத்தியசாலையில் சேவை செய்யும் பிரெஞ்சு வைத்தியர்குழு வல்வெட்டித்துறைக்கு வரமுயற்சித்தபொழுது, பொலிகண்டி இராணுவ முகாமைச் சேர்ந்தவர்களால் திருப்பி அனுப்பப் பட்டதால், அவர்களால்கூட அந்தக் காயப்பட்ட அப்பாவி மக்களுக்கு உதவி செய்ய முடியாது போய்விட்டது. சந்தியில் நின்ற காரிலிருந்து சுட்டுக்கொல்லப்பட்ட பிரேம்ராஜ், சலவைத் தொழிலாளியான சிவபாக்கியம் ஆகியோரின் சடலங்களை அங்கிருந்தவர்களின் உதவியுடன் சந்தியிலிருந்து மேற்கே செல்லும் சிறிய சந்தினுள் கொண்டுபோய் வைக்கச் சொன்னார்கள். அதிலிருந்து சிறிது தூரத்தில் தங்கராஜா என்ற வயோதிகரின் சடலம் வெள்ளை வேட்டியினால் மூடப்பட்டிருந்தது. அந்த வீடுகளில் கொழுந்துவிட்டெரிந்த தீயை அணைத்துக்கொண்டிருந்த அனந்தராஜாவைத் தூரத்தே வந்துகொண்டிருந்த சீக்கிய இராணுவத்தினன் ஒருவன் கண்டுவிட்டான். அவனைக்கண்டதும் அவர் ஓட முயற்சிக்கவில்லை. இராணுவத்தினரைக் கண்டால் ஓடுவது ஆபத்து என்பதாலும் ஏற்கெனவே பல இராணுவத்தினரும் அதிகாரிகளும் தெரிந்தவர்களாக இருந்ததாலும் அந்த இடத்தைவிட்டு ஓட முயற்சிக்கவில்லை. அருகில் வந்த அந்தச் சிப்பாய், அவரது கன்னத்தில் பலமாக ஓங்கி ஒரு அறை கொடுத்து நேரே தங்களுடன் வரும்படி கூறினான். அவர்கள், ஏற்கெனவே தங்களுடன் மேலும் எட்டுப் பொதுமக்களையும் கூட்டி வந்துகொண்டிருந்தனர். அவர்களின் பின்னால் சுமார் 22 வயதுள்ள, உடுப்பிட்டி முகாமைச் சேர்ந்த கப்டன் பறிக், கடுகடுத்த முகத்துடன் நடந்துவந்துகொண்டிருந்தான். திரு ந. அனந்தராஜாவுக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமானவன்தான் கப்டன் பறீக். அந்த அறிமுகத்தினால், அவனுக்கு அருகில் சென்று பேச வாய் எடுத்ததும், “ஒன்றும் பேச வேண்டாம்,” என்று அவன் கூறிவிட்டுத் தன்னிடம் இருந்த ரைபிளை அவருக்கு நேரே பிடித்தான். வல்வெட்டித்துறை ஜங்ஷனில் ஏற்கெனவே தடுத்துவைக்கப்பட்ட சுமார் 50 பேரையும் வரிசையாக நிறுத்தி அவர்களிலிருந்து 34 பேரை உடுப்பிட்டியை நோக்கிப் போகுமாறு பணித்துவிட்டு, அங்கு நின்ற இராணுவ வாகனம் ஒன்றில் சிறிது காயம்பட்ட நிலையிலிருந்த அ. மதிவர்ணன், ஆ. பரம்சோதி என்ற இரு மாணவர்களையும் ஏற்றினார்கள். ஏனையவர்களை வீடுகளுக்குப் போக அனுமதித்த இந்தியப்படையினர் மற்றைய 34 பேரையும் வரிசையாக முன்னே நடக்கவிட்டு அவர்களுக்குக் காவலாக இருபக்கங்களிலும் தானியங்கி ரைபிள்களை நீட்டிப்பிடித்தபடி நடந்துகொண்டிருந்தனர். அவர்களின் பின்னால் சென்றுகொண்டிருந்த கேப்டன் பறீக், அனந்தராஜாவைக் கூட்டிக்கொண்டு நடந்தான். உடுப்பிட்டி இராணுவ முகாம் நெருங்கியதும், பொறுப்பதிகாரி கேணல் சர்மாவிடம் கூட்டிச் செல்லாது பின்புறமாக உள்ள சேர் வழியாக அவரையும் மற்றையவர்களையும் கொண்டுசென்றான். ஒரு திறந்த வகுப்பறைக் கட்டடத்தினுள், விடுதலைப்புலிகளுடனான மோதலில் இறந்த இராணுவத்தினரின் சடலங்கள் எரிந்து கொண்டிருந்தன. அங்கே நூற்றுக்கணக்கான ஜவான்கள் நின்றனர். அவர்களில் முன்னர் பொலிகண்டி இராணுவ முகாமில் இருந்த கப்டன் கோபால கிருஷ்ணமேனன், முகத்தில் கோபக்கனல் தெறிக்க நின்றான். அவனின் முகத்தில் பொதுவாகவே, புன்முறுவலைக் காண்பது அரிது... அன்றோ அவனது முகம் இன்னும் கடுகடுப்பாக இருந்தது. அவனுடன், கப்டன் சுக்ளா, கப்டன் சிகாரி, கப்டன் டாக்டர் சௌத்ரி ஆகியோரும் நின்றனர். அங்கு கொண்டுவரப்பட்ட, அந்த அப்பாவிப் பொதுமக்களை ஒவ்வொருவராகப் பிடித்துத் தனது பூட்ஸ் காலால் உதைத்தும் கன்னத்தில் அடித்தும் ஒரு அறைக்குள் அனுப்பிக்கொண்டிருந்தான். அந்த அறையின் வாசலில் குண்டர்கள்போல் ஆறு ஏழு சீக்கியர்கள் உருளைக் கம்புகளினால் அடித்தும் குத்தியும் ஒவ்வொருவராக அனுப்பிக்கொண்டிருந்தார்கள். அந்த அறை முழுவதும் “ஐயோ!... அம்மா!” என்ற அவலக் குரல்கள், அந்தப் பிரதேசத்தையே அதிரவைத்துக்கொண்டிருந்தன. அதற்கு அடுத்த சுவரை அடுத்துள்ள, கூடாரத்தின் கீழிருந்த கேணல் சர்மா எதுவுமே தெரியாதவர்போல், யாருடனோ டெலிபோனில் பேசிக்கொண்டிருந்தார். ஒரு இராணுவ முகாமில் நடைபெறுகின்ற ஒவ்வொரு விஷயமும் அந்த முகாமின் பொறுப்பதிகாரி தெரிந்திருக்கவேண்டும்; அல்லது அவரது உதவி இராணுவ அதிகாரிகள் அவரது கவனத்திற்குக் கொண்டு வரவேண்டும். இவை இரண்டுமே இல்லாவிட்டால் அவர்களை ஒரு கட்டுக்கோப்பான இராணுவம் என்று எப்படி அழைக்க முடியும்? கேணல் சர்மா, தனக்கு எதுவுமே தெரியாது என்று சொல்வது மிகவும் வேடிக்கை! உலகின் நான்காவது பெரிய இராணுவம், இப்படியா செயல்படுகிறது? அங்கிருந்த 34 அப்பாவிகளையும் அந்த அறையினுள் தள்ளிவிட்டு, தமது வழமையான சித்திரவதைப் பரிசோதனைகளை நடத்திக் கொண்டிருந்தனர். அவர்களுடைய சித்திரவதைகள் நவீன, இஸ்ரேல் மொசாட் படையினரையும் மிஞ்சும். சில சித்திரவதைகள் நம்பமுடியாமல்கூட இருக்கலாம். ஆனால் அதிலிருந்து தப்பிவந்தவர்கள் கூறும் கண்ணீர்க் காவியங்களோ ஏராளம். ஆண் உறுப்பில் மின்சாரத்தைச் செலுத்துவது, ஆள் அளவு குழி தோண்டி, அதனுள் நிற்கவைத்துக் கழுத்துவரை மண்ணால் மூடிவிட்டு இரண்டு, மூன்று நாட்கள் வரை நீர் கூட இல்லாது விடுவது, தலைகீழாகத் தொங்கக் கட்டிவிட்டுக் காய்ந்த மிளகாய்ப் புகை பிடிப்பது, கைகளையும் கால்களையும் நைலோன் கயிற்றினால் கட்டிவிட்டு வாயினுள்ளும் மூக்கினுள்ளும் தொடர்ச்சியாகத் தண்ணீரை விடுவது!... நான்கு, ஐந்து பேரை ஒன்றாகப் பிணைத்து அவர்களது கண்களைக் கட்டிவிட்டு ஓடவிடுவது, ஓடி விழுந்தால் அடி போடுவது!... சித்திரவதை செய்வதற்கென்றே தாம் பயிற்றுவிக்கப்பட்டதாக கேப்டன் சுக்ளாவும் கேப்டன் சிகாரியும் சொன்னதைப் பார்த்த அனந்தராஜாவினால் அவர்களது அழுகுரலைக் கேட்டதும் நெஞ்சே வெடிப்பதுபோல் இருந்தது. படம் சொல்லும் சேதி இந்தியப் படை யாழ்ப்பாணம் வந்தபோது அதனை மாலை சூடி வரவேற்றவர்கள் தமிழர்கள். இந்தப் படத்தில் உள்ள பதாகை- Thanks to India’s Humanity- - என்பது யாழ்ப்பாணப் பட்டினத்துள் நுழைய முன்பு வரும் சாவகச்சேரி எனும் இடத்திலிருக்கும் சந்தை அருகேயுள்ள மின்கம்பம் ஒன்றில் தொங்கவிடப்பட்டிருந்தது. ஜூலை இறுதி நாள். இந்தப் படத்தை எடுத்தவர் ஜேர்மன் ஊடகவியலாளர் / ஒளிப்படக் கலைஞர் வால்ட்டர் கெல்லர். 1987 அக்டோபர் மாதம் 29 அன்று இந்தச் சந்தையில் பொதுமக்கள் கூடியிருந்தபோது இந்திய விமானப் படையின் ரஷ்யத் தயாரிப்பான மிக் ஹெலிகொப்டர்கள் தாக்குதலை நடத்தின. 21 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர். சந்தைக்கு அருகே விடுதலைப் புலிகளின் வீடொன்று இருந்தது எனப் ‘புலனாய்வுத் தகவல்கள்’ தெரிவித்தமையால் இந்த வான் தாக்குதலை நாம் நிகழ்த்தினோம் என இந்திய அரசு தெரிவித்தது. அப்போது புலனாய்வுக்குப் பொறுப்பாக இருந்தவர் கேர்ணல் ஹரிகரன். தமிழரென்றும் யாழ்ப்பாணத்தில் உறவினர்கள் தனக்கு இருந்தனர் என்றும் நேர்காணல்களில் தெரிவித்தவர். 27 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டார்கள் என இந்திய அரசின் வெளி ‘உத்தியோகபூர்வமான’ அறிக்கை இந்தத் தாக்குதலைப் பற்றித் தெரிவித்தது. எனினும் இந்தத் தாக்குதலைப் பற்றி அபூர்வமாகச் செய்தி வெளியிட்ட UPI செய்தி நிறுவனம் (1987/10/29/Indian-helicopters-reportedly-kill-20-civilians/4529562482000/)- கொல்கத்தா டெலிகிராஃப் நாளிதழின் சுமிர் லால் என்னும் செய்தியாளரை மேற்கோள் காட்டியது. சுமிர் லால் தாக்குதல் இடம் பெற்ற இடத்தில் இருந்தவர். தப்பிப் பிழைத்தவர். இரண்டு இந்திய வான்படை ஹெலிகொப்டர்கள் ஐந்து மணி நேரம் தாக்குதல் நடத்தின எனவும் தாக்குதலிலிருந்து தப்புவதற்காகத் தான் பதுங்கு குழிக்குள் ஒளித்திருந்ததாகவும் சொல்கிறார். கடைகள் எரிந்தன எனவும் 15 உடல்களை எரிந்த நிலையில் சந்தையிலும் மேலும் ஐந்து உடல்களை மருதுவ மனையிலும் தான் பார்த்ததாக அவர் சொல்கிறார். Le Figaro என்னும் பிரெஞ்சு நாளிதழின் செய்தியாளரும் அந்த இடத்தில் இருந்தார். சோவியத்தயாரிப்பான மிக் -24 ஹெலிகொப்டர்களே தாக்குதல் நிகழ்த்தியதாகவும் தான் பார்த்த உடல்களெல்லாம் முதியோரதும் குழந்தைகளதும் எனத் தெரிவித்தார். மருத்துவ மனையில் அப்போது கடமையாற்றிய வெளிநாட்டு மருத்துவத் தொண்டர்களே குண்டு வீச்சிலும் தாக்குதல்களிலும் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கை, கால் அறுக்கும் சிகிச்சையைச் செய்து வந்தனர்.அவர்களில் ஒருவர் நியூசிலாந்தைச் சேர்ந்த எச்.டி.டிக் ரோசன். சாவகச்சேரித் தாக்குதலில் காயம்பட்டு வந்தவர்கள் அனைவருமே பொதுமக்கள் எனவும் அவர்களில் சிகிச்சை பலனளிக்காமல் மேலும் இரண்டு பேர் உயிரிழந்தனர் எனவும் அவர் தனது வாக்குமூலத்தில் சொல்லியுள்ளார். தாக்குதல் முடிந்து பல மாதங்களின் பின்பும் “இந்தியாவின் மனிதாபிமானத்துக்கு நன்றி / Thanks to India’s Humanity” என்கிற பதாகை மின்கம்பத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. http://www.kalachuvadu.com/archives/issue-215/வாக்குமூலங்கள்
 5. பாரதம் தந்த பரிசு

  நினைவு அகழல் சேரன் *அவர்களின் அகத்தில் நிலம் இருந்தது. அகழ்ந்தனர். -போல் செலான். 1987ஜூலை மாதத்தின் இறுதி நாட்கள். இந்தியப் படை யினர் பெருங்கவச வாகனங்களில் பல்லாயிரக்கணக்காக வடக்கு நோக்கி வந்துகொண்டிருந்தபோது யாழ்ப் பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி நான் சென்றேன். என்னைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றவர்கள் Saturday Review வார இதழின் ஆசிரியர் காமினி நவரத்னவும் இன்னொரு நெருங்கிய நண்பரும் (அவருடைய பெயரை இப்போதைக்குத் தவிர்த்துவிடுகிறேன்.) காமினி நவரத்ன இலங்கையின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவர்; 1983 ஜூலைப் படுகொலைகளின்போது தடைசெய்யப்பட்டிருந்த சற்றர்டே றிவியூ இதழ் மறுபடியும் ஒழுங்காக வெளிவரக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர். பத்திரிகையின் ஆசிரியப் பொறுப்பை ஏற்கப் பலரும் தயங்கிய வேளை துணிவுடன் அதனை ஏற்றுக்கொண்டவர். பத்திரிகைத் துறையில் எனது வழிகாட்டி; சிங்களவர். கொழும்புவில் மகரகமவிலிருந்த காமினியின் வீட்டில் ஓரிரு நாட்கள் தங்கியிருந்தபோது இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்கு எதிரான தீவிரமான போராட்டம் வெடித்தது. ஜே.வி.பியும் அதனோடு இணைந்த பலரும் மகரகம சந்தியில் இலங்கை அரசுக்குச் சொந்தமான பல வாகனங்களுக்குத் தீ வைத்தபோது நானும் காமினியின் மைத்துனரும் மகரகம சந்தியிலிருந்து காமினியின் வீட்டுக்குச் செல்லும் சிறு தெருவில் ஓட்டோவுக்காகக் காத்திருந்தோம். நான்கு பிக்குமார் அந்த அழிப்பில் முன்னணி வகித்தார்கள். கடைகள் சிலவும் கொளுத்தப்பட்டன. மகரகம பாதுகாப்பில்லை என உணர்ந்த காரணத்தால் குமாரி ஜயவர்த்தனவின் ஏற்பாட்டில் ஹெந்தல எனும் இடத்தில் அமைந்திருந்த அவரது கடலோர வீட்டிற்குச் சென்று தங்கியிருந்தேன். அந்த நாட்களில்தான் யாழ்ப்பாணத்தில் நான் பணிபுரிந்து வந்த சற்றர்டே றிவியூ அலுவலகத்துக்கு இந்தியப் படையின் உயரதிகாரிகள் சிலர் ‘நல்லெண்ண விஜயம்’ மேற்கொண்டிருந்தார்கள். ஆசிரியர் காமினி நவரத்னவும் நானும் அங்கிருக்கவில்லை என்பதால் நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான கனக ராஜநாயகத்தை அவர்கள் சந்தித்தார்கள். அவர் துணிச்சலானவர். அவரை ‘ஆடு’ என்றுதான் ஏ.ஜே. அழைப்பார். அந்தச் சந்திப்பு நல்ல அறிகுறி அல்ல என்பது நமது நிறுவனத்தினருக்கு அப்போதே தெரிந்துவிட்டது. எமது அச்சகம், அலுவலகம், எம்மிடம் இருந்த கோப்புகள் எல்லாவற்றையும் அவர்கள் பார்வையிட்டார்கள். எமது கருத்தியல் என்ன என்று கேட்டார்கள். ‘சேரன் ருத்ரமூர்த்தியைக் கட்டாயம் பார்க்க வேண்டும். அழைத்து வர முடியுமா?’ என்று பணிப்பாளரைக் கேட்டார்கள். நல்ல காலம். அப்போது நான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிவிட்டேன். பத்திரிகை ஆசிரியர் குழுவில் பலருக்கும் அதன் நிர்வாகத்தைக் கவனித்து வந்த விஸ்வலிங்கத்துக்கும் பல காலமாக நல்லுறவு இருக்கவில்லை. எனவே பத்திரிகை தொடர்பான முக்கியமான தீர்மானங்கள் எடுப்பதில் எப்போதும் முரண்பாடுகளும் குழப்பங்களும் ஏற்படும். ஆகஸ்ட் இரண்டாம் வாரம் நான் இலங்கையை விட்டு வெளியேறி நெதர்லாந்துக்குச் சென்றேன். ஓரிரு மாதங்களில் மறுபடியும் போர் ஆரம்பமாகிவிடும் என்பதையும் ஊகித்திருந்தேன். இப்படி ஊகிப்பதற்கு நுண்ணறிவு எதுவும் அன்று தேவைப்பட்டிருக்கவில்லை. ஆகஸ்ட் 22, 1987இல் நயினாதீவிலும் முல்லைத்தீவிலும் தமிழ் மக்கள்மீது இலங்கைப் படையால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பூநகரியில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் எங்கள் பத்திரிகை, செய்தி வெளியிட்டது. ‘Accord Runs into Snags?’ என்று தலைப்பிட்டு ஏ.ஜே. எழுதியிருந்தார். ஆகஸ்ட் 18, 1987 அன்று ஜே.ஆர். ஜயவர்த்தன மீதும் அவரது அமைச்சரவை மீதும் நடத்தப்பட்ட கைக்குண்டு வீச்சில் மாவட்ட அமைச்சர் கீர்த்தி அபேவிக்கிரம கொல்லப்பட்டார். பிரேமதாச, லலித் அதுலத்முதலி ஆகியோர் காயமடைந்தனர். ஒப்பந்தத்தை எதிர்த்த தென்னிலங்கைக் கட்சிகளின் ஆதரவாளர்கள், உறுப்பினர்களுள் சிலரே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நெருக்கமாக இருந்த என் நண்பர்கள் சிலர், “சண்டையைத் தவிர வேற வழி இல்லை. ஆனால் எப்ப மூளும் என்றுதான் சொல்ல முடியாமல் இருக்கிறது,” என்று சொன்னார்கள். பிற்பாடு திலீபன் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தமை, இடைக்கால நிர்வாக அமைப்பை வடக்குக் கிழக்கில் ஏற்படுத்துவதற்கு ஜே.ஆர். அரசு ஏற்படுத்திய நெருக்கடிகள், குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட பிற உறுப்பினர்கள் கடலில் கைது செய்யப்பட்டதால் ஏற்பட்ட சிக்கலும் அவர்கள் தற்கொலை செய்தமையும், ஒப்பந்தம் தொடர்பாக விடுதலைப் புலிகளின் அவநம்பிக்கை, இந்திய உளவுச் சேவை மற்றைய இயக்கங்களுக்கு ஆயுதங்களும் பயிற்சியும் வழங்க ஆரம்பித்தமை, ஜே.என். தீக்ஷித்தின் அகங்காரம் மிக்க செயற்பாடுகள் எனப் பல்வேறு காரணங்களால் இந்தியப்படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே அக்டோபர் 11, 1987 போர் மூண்டது. சற்றர்டே றிவியூ வெளிவருவது சாத்தியமில்லை என்பது ஏற்கெனவே தெரிந்திருந்தாலும் ஒக்டோபர் 17 அன்று வரை பத்திரிகை வெளியாகியது. இந்தியப் படையினரால் நடத்தப்பட்ட கொக்குவில், தலையாழிப் படுகொலைகள், பிரம்படிப் படுகொலைகள் போன்றவற்றை விவரமாக வெளியிட முடிந்திருந்தாலும் ஈழமுரசு, முரசொலி ஆகிய நாளிதழ்களையும் விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சி ‘நிதர்சன’த்தின் ஒளிபரப்புக் கோபுரத்தையும் வெடிவைத்துத் தகர்த்ததுபோல சற்றர்டே றிவியூ தகர்க்கப்படவில்லை. எல்லாவற்றையும் மூடிவிட்டுச் சென்றுவிட வேண்டும் அல்லது வெடிவைப்போம் என்ற எச்சரிக்கை மட்டுமே விடப்பட்டது. போர் உக்கிரமாக நிகழ்ந்தபோதும் இந்தியப் படையினர் நிகழ்த்திய படுகொலைகள் பற்றிய தகவல்களும் விவரங்களும் கொழும்பு ஊடகங்களில் வரவில்லை அல்லது அவற்றுக்கு முற்றாகத் தெரிந்திருக்கவில்லை. அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் தங்கிநின்று சற்றர்டே றிவியூக்கு எழுதிக்கொண்டிருந்த டி.பி.எஸ். ஜெயராஜ் கொழும்புவுக்குத் தப்பிச் சென்று அங்கே விவரமாகக் கட்டுரைகளை வெளியிட ஆரம்பித்தபோதுதான் இந்தியப்படையின் படுகொலைகளும் தாக்குதல்களும் பற்றிய விவரங்கள் பரவலாகத் தெரிய ஆரம்பித்தன. அக்டோபர் 21, அன்று யாழ் மருத்துவமனைப் படுகொலைகள் நிகழ்ந்த பிற்பாடு கொழும்புவிலிருந்து காமினி நவரத்தின New Saturday Review என்று ஒரு பத்திரிகையை வெளியிடத் தொடங்கினார். அது போட்டோகாப்பி (xerox) வடிவத்திலேயே முதலில் வெளியிடப்பட்டது. அதன் முதலாவது இதழிலேயே படுகொலைகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டன. New Saturday Reviewஇதழ்களைக் காமினி நவரத்தின உடனுக்குடன் நெதர்லாந்திலிருந்த எனக்கு அனுப்பிவைப்பார். அங்கே அவ்விதழ்களின் இன்னொரு பதிப்பை நானும் அங்கு படித்துக்கொண்டிருந்த சித்திரலேகா மௌனகுருவும் வெளியிட்டு ஐரோப்பாவிலுள்ள செய்தி நிறுவனங்களுக்கும் மனித உரிமை அமைப்புகளுக்கும் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் அனுப்பிவந்தோம். இந்த வெளியீட்டைச் செய்ய எம்முடன் பணிபுரிந்தவர்கள் பேரா. றேச்சல் கூரியன், பேரா. அம்ரிதா சாச்சி, யான் பிரெண்ஸ்மா ஆகியோர். இவர்கள் அனைவரும் நெதர்லாந்தில் நான் கல்விகற்ற Institute of Social Studies என்ற பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தவர்கள். அங்குதான் நானும் சித்திரலேகாவும் சுனிலா அபேசேகராவும் படித்துக்கொண்டிருந்தோம். றேச்சல் கூரியன் என்னுடைய ஆய்வு நெறியாளராக இருந்தவர். இலங்கை மலையக மக்களின் குடியுரிமைச் சிக்கல்கள், கூலி உழைப்பின் நெருக்கடிகள் பற்றிய பல ஆய்வுகளைச் செய்தவர். இந்து ராம், கலாநிதி நீலன் திருச்செல்வம் போன்ற ஆளுமைகள் றேச்சல் கூரியனின் நண்பர்கள். நெதர்லாந்து வந்தால் அவர்கள் றேச்சல் கூரியனின் வீட்டில் தங்குவது வழமை. எங்களுடைய இலக்கிய, அரசியல் ஒன்றுகூடல்கள் பலவும் அவரது வீட்டிலேயே நடைபெறுவது வழக்கம். இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நா. சண்முகதாசன், Saturday Review / TRRO நிறுவனர் கந்தசாமி ஆகியோர் நெதர்லாந்து வந்திருந்தபோதும் றேச்சல் கூரியன் வீட்டிலேயே ஒன்றுகூடல்கள் நிகழ்த்தியிருந்தோம். 1987 நவம்பர் மாதம் முதல் வாரம் என்று நினைவு. இந்து ராம் நெதர்லாந்து வருகிறார் என்று றேச்சல் கூரியன் சொன்னார். இலங்கை இந்திய ஒப்பந்தத்தினதும் இந்தியப் படைகளதும் தீவிரமான ஆதரவாளராக அவர் இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தது. எனினும் இந்தியப் படைகளின் படுகொலைகள், அண்மைக்கால நிகழ்வுகள் பற்றி அவருடன் கலந்துரையாடலாம் என றேச்சல் கூரியன் கருதினார். இரவுநேரச் சிறு ஒன்றுகூடலுக்கு ஏற்பாடு செய்தார் அவர். New Saturday Reviewவின் இரண்டு இதழ்களை அப்போது வெளியிட்டிருந்தோம். யாழ். மருத்துவமனைப் படுகொலைகள், பிரம்படிப் படுகொலைகள், யாழ். பல்கலைக்கழக வளாகத்திலும் நூலகத்திலும் இந்தியப் படையினர் பலர் மலங்கழித்து மாசாக்கிய அவலம் பற்றிய விரிவான செய்திகள் அவற்றில் வெளிவந்திருந்தன. இந்து ராமுடனான உரையாடல் தொடக்கத்தில் இணக்கமாக இருந்தாலும் இந்தியப் படையினரின் படுகொலைகளைப் பற்றிப் பேசியபோது கடினமாக மாறிவிட்டது. ‘ஒரு கையைப் பின்புறமாகக் கட்டிக்கொண்டுதான் அவர்கள் போர் புரிகிறார்கள்; மிகப் பண்பட்ட படையினர் அவர்கள். நீங்கள் சொல்கிற மாதிரி எத்தகைய படுகொலைகளையும் அவர்கள் புரிந்திருக்கமாட்டார்கள்,’ என்று உணர்ச்சிவசப்பட்டார்New Saturday Review இதழ்களை அப்போது அவருக்குக் கொடுத்தேன். அவருக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. ‘இவையெல்லாம் புலிகளின் பொய்ப் பிரச்சாரம். இவற்றையெல்லாம் நீங்கள் ஏன் காவிக்கொண்டு திரிகிறீர்கள்?’ என்று மிகவும் காட்டமாக எங்களைக் கேட்டார். ‘இல்லை. இது காமினி நவரத்தின வெளியிடுவது. அவர் உங்களது நண்பர்தானே. அவரும் புலியா? இதனை நானும் றேச்சலும் இங்கே இருக்கிற மற்றை நண்பர்களும்தான் இங்கே வெளியிடுகிறோம்,’ என்று அவருக்குச் சொல்லும்போதே அவர் கோபத்துடன் எழுந்து தன்னுடைய அறைக்குப் போய்விட்டார். இந்தியப் படையினர் எத்தகைய அநியாயமும் புரியாதவர்கள், அவர்கள் இலங்கை வரும்போது ஒருகையைப் பின்புறம் வைத்துக்கொண்டு மறுகையில் காந்தியின் ‘சத்தியசோதனை’ நூலை ஏந்திக்கொண்டுதான் வந்தார்கள் என்று தீவிரமாக நம்புகிறவர்கள் இப்போதும் பலர் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியம் தருவதல்ல. யாழ். பல்கலைக்கழக நூலகத்தில் ஏராளமான இந்தியப் படையினர் மலங்கழித்தமை பற்றிப் பெயர் குறிப்பிடாமல் ஏ.ஜே. கனகரத்தினா New Saturday Reviewவில் எழுதியிருந்த கட்டுரை இந்திய, இந்தியப் படை ஆர்வலர்கள் பலரது கோபத்தைக் கிளப்பியிருந்தது. அந்தக் கட்டுரையில் நோபல் பரிசுபெற்ற எழுத்தாளரான வி.எஸ். நைப்பால் எழுதிய ‘An area of Darkness’ (1964) என்ற இந்தியப் பயண நூலில் இருந்து ஏ.ஜே. மேற்கோள் காட்டியிருந்தார். நைப்பால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். ட்ரினாட் (Trinidad)டில் பிறந்து வாழ்ந்தவர். அவர் முதல் தடவையாக இந்தியாவுக்குச் சென்ற அனுபவப் பண்பாட்டு அதிர்ச்சி பற்றியதே அந்த நூல். இந்தியா எங்கிலும் பொது இடங்களில் மக்கள் மலம் கழிப்பது சாதாரணமாக இருந்தமையைக் கண்ணுற்ற நைப்பால், இந்தியாவைப் போகுமிடமெங்கும் சுரணையற்று மலங்கழிக்கும் ஒரு மிகப்பெரிய கூட்டமாக உருவகப்படுத்தி இருந்தார். அதற்காக நிறைய விமர்சனங்களையும் எதிர்கொண்டார். ‘இந்தியர்கள் எல்லா இடங்களிலும் மலம் கழிக்கிறார்கள்; பெரும்பாலும் ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் மலம் கழிக்கிறார்கள்; கடற்கரையில் மலம் கழிக்கிறார்கள்; ஆற்றங்கரைகளில் மலம் கழிக்கிறார்கள்; தெருக்களில் மலம் கழிக்கிறார்கள்; அவர்களுக்கு ஒளிவுமறைவு தேவையே இல்லை,’ என்று நைப்பால் குற்றம்சாட்டியிருந்தார். இத்தகைய பின்னணியில் யாழ். பல்கலைக்கழக வளாகத்திலும் பல்கலைக்கழக நூலகத்திலும் இந்தியப் படையினர் மலங் கழித்ததில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்பதே கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. புலிகளுக்கும் இந்தியப்படைகளுக்கும் யாழ்ப்பாணத்தில் உக்கிரமான சண்டை நிகழ்ந்த வேளை காயப்பட்ட பொதுமக்களை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றவர்களையும் இந்தியப் படையினர் பல சந்தர்ப்பங்களில் கொன்றனர். காயமுற்றவர்களையும் கொல்வதென்பது இந்தியப் படையினரின் நடைமுறையாக இருந்தது. இந்தியப் படையினரின் எறிகணைத் தாக்குதல்களின்போது கோவில்களில் தஞ்சமடைந்திருந்த மக்களையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. எனது அம்மம்மாவின் சகோதரி மகளான ராணி அக்காவும் அவர் குடும்பமும் சண்டிலிப்பாயில் இருந்தனர். எறிகணை வீச்சு மோசமாக இருந்ததால் அவர்களும் கோவிலில் தஞ்சம் அடைந்திருந்தனர். மோசமாகக் காயப்பட்டிருந்த ஒரு வயோதிபரை ஒருவரும் கவனிக்காத நிலையில் ராணி அக்காவின் கணவர் மருத்துவமனைக்குக் காரில் அழைத்துச் சென்றார். இடையில் இந்தியப் படையினர் காரை மறித்து, காரோடு அனைவரையும் எரித்தார்கள். 1989 மே மாதம் நெதர்லாந்திலிருந்து யாழ்ப்பாணம் திரும்பினேன். சுன்னாகம் ரயில் நிலையத்திலிருந்து அளவெட்டிக்கு நானும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலாச்சாரக் குழுவில் ஒன்றாகப் பணியாற்றிய ஞானசேகரனும் வந்தோம். அளவெட்டி தலைகீழாக மாறியிருந்தது. எங்களுடைய வீட்டிலிருந்து சற்றுத் தொலைவில் மூன்று இந்தியப் படை முகாம்கள் இருந்தன. அவர்களுடைய காவலரண்களையும் முகாம்களையும் கடக்காமல் எங்குமே போகமுடியாமல் இருந்தது. நான் ஊர் சேர்ந்த மறுநாள் இந்தியப் படையினர் வீட்டைச் சுற்றி வளைத்துவிட்டனர். ஊரில் புதிதாக யார் வந்தாலும் அவர்களுக்கு எப்படியோ விவரம் தெரிந்துவிடுகிறது என்பதைப் பின்னர் தெரிந்துகொண்டேன். ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் நாட்டில் இல்லாமல் இருந்தேன் என்பதை எனது கடவுச்சீட்டைப் பார்த்து உறுதிசெய்த பிற்பாடு அவர்கள் திரும்பிச் சென்றனர். யாழ்ப்பாணத்தில் எனக்கு வேலை எதுவும் இருக்கவில்லை. சற்றர்டே றிவியூ வெளியீட்டாளர்களான நியூ ஈரா நிறுவனத்தினர் திசை என்னும் வார இதழை அப்போது வெளியிட்டு வந்தார்கள். மு. பொன்னம்பலம் ஆசிரியராக இருந்தார். அ. யேசுராசா முக்கிய பொறுப்பில் இருந்தார். இருவாரத்துக்கொருமுறை ‘ஏகாந்தன்’ என்ற பெயரில் ‘அங்கிங்கெனாதபடி’ என்று ஒரு பத்தி எழுத ஆரம்பித்தேன். எனினும் அரசியல் கட்டுரைகள் எதுவும் எழுத முடியவில்லை. கலை, பண்பாடு சார்ந்தே எழுத முடிந்தது. நிலைமை அவ்வளவு மோசமாக இருந்தது. அளவெட்டியிலிருந்து யாழ் நகர் வரும் போதெல்லாம் பல இந்தியப் படை முகாம்களில் சைக்கிளை விட்டு இறங்கி நடந்து போக வேண்டும். இது ஆரம்பத்தில் எனக்குத் தெரியாதபடியால் தெல்லிப்பழையில் மகாஜனக் கல்லூரியின் சிற்பி என அழைக்கப் படும் அதிபர் தெ.து. ஜயரத்தினம் வீட்டில் அமைக்கப்பட்டிருந்த படைமுகாமில் இருந்த படையினர் எனது தலைக்கு மேலால் சுட்டார்கள். அன்றிலிருந்து, “சைக்கிள் சிற்; யூ வோக்” (Cycle sit; You walk!) என்ற அவர்கள் கட்டளை எனக்குத் தாரக மந்திரமாகிவிட்டது. அந்த முகாமிலிருந்தவர்களும் அளவெட்டியிலிருந்த முகாம்களில் இருந்தவர்களும் பாடசாலைக்கு மாணவர்கள் செல்லும் நேரம் வரிசையாகத் தெருவால் நடந்துபோவார்கள். வேலிகளில் இருக்கும் பூவரசு, கிளுவை மரங்களில் கிளைகளை ஒடித்து அவற்றால் சைக்கிளில் செல்லும் பாடசாலை மாணவிகளுக்கு அடிப்பதை அவர்கள் வழமையாகக் கொண்டிருந்தார்கள். சிலர் தெருவின் குறுக்கே நின்று மாணவிகளின் மார்பகங்களையும் பிடிப்பார்கள். இவற்றையெல்லாம் வெறுப்போடும் கோபத்தோடும் பார்த்துக்கொண்டுதான் நான் செல்ல வேண்டியிருந்தது. அளவெட்டியில் எமது பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கடைக்கு அருகாமையிலிருந்த இந்தியப் படை முகாம் சித்திரவதை முகாமாகவே பெரும்பாலும் இயங்கியது. எங்கள் ஊரில் இந்தியப் படையால் பிடிக்கப்பட்டு அங்கு கொண்டுசெல்லப்பட்டவர்களின் தாய், தந்தையர் சிலரோடு நான் மொழிபெயர்ப்பாளனாக அங்கு செல்லவேண்டியிருந்தது. அங்கிருந்த ஓர் அதிகாரிக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தது. வதைக்கூடத்துக்குப் பொறுப்பாக ஒரு தமிழர் இருந்தாலும் அவர் பேசுவதற்கோ உதவுவதற்கோ வரவில்லை. இக்காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் சிறுசிறு குழுக்களாக எல்லா இடங்களிலும் திரிந்தார்கள். இரவுகளில் திடீரென யாராவது வீட்டுக்குச் சென்று அன்றிரவு அங்கே தங்குவார்கள். அதிகாலையில் சென்றுவிடுவார்கள். இந்தத் தகவல் இந்தியப்படைக்குத் தெரிந்துவிட்டால் வீட்டுக்காரர்களைச் சுடுவார்கள்; இப்படியாகக் கொல்லப்பட்டவர்கள் ஏராளம் பேர். எனது பாடசாலை நண்பன் நிர்மலன், கொல்லப்பட்டதும் இப்படித்தான். அவனுடைய சாவீட்டுக்குக்கூட என்னால் போக முடியவில்லை. இந்தியப் படையோடோ அல்லது அவர்களுடன் இணைந்து இயங்கிய தமிழ் இயக்கங்களோடோ தொடர்பு வைத்திருந்தவர்கள், பழக நேர்ந்தவர்களை விடுதலைப்புலிகள் சுட்டுக் கொன்றுவிடுவார்கள். இந்தியப் படையுடன் இணைந்திருந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணித் தலைவர்களில் ஒருவரைச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தபோது ஏன் மாறிமாறி இத்தகைய படுகொலைகளில் ஈடுபடுகிறீர்கள் எனக் கேட்டேன். “நாங்கள் இருப்பதற்காகக் கொல்கிறோம். புலிகள் கொல்வதற்காக இருக்கிறார்கள் - அதுதான் வித்தியாசம்” என்றார். (அவர் சொன்னது ஆங்கிலத்தில்: We kill in order to exist; They exist in order to kill!) யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த நாடக அரங்கக் கல்லூரியைச் சேர்ந்தவர்களும் நடிகர்கள் - நெறியாளர்களுமான வீ.எம். குகராஜாவும் ஜெயகுமாரும் இக்காலப் பகுதியிலேயே இந்தியப் படைகளால் கொல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் இணைந்து நாடக அரங்கக் கல்லூரிக்காக அரங்கம் என்ற இதழை நடத்திவந்தனர். தெரு நாடகங்கள் நிகழ்த்துவதிலும் மிக்க ஈடுபாட்டோடு பணியாற்றியவர்கள். எனது நீண்ட நாள் நண்பர்கள். அவர்களுடைய சா வீடு முடிந்த ஒரு சில நாட்களிலேயே ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான இறைகுமாரனின் தாயாரும் இந்தியப் படைகளால் எங்கள் ஊரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இறைகுமாரனும் அவருடைய நெருங்கிய நண்பர் உமைகுமாரனும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE) அமைப்பினரால் 1982இல் சுட்டுக்கொல்லப் பட்டனர். இது பற்றியும் தமிழ்ப் போராளிகளது உட்கொலைகள், சகோதரப் படுகொலைகள் பற்றியது மான என்னுடைய கவிதை ‘யுத்த காண்டம்’ என்ற தலைப் பில் வெளியாகியிருக்கிறது (பார்க்க: ‘நீ இப்பொழுது இறங்கும் ஆறு’, சேரன் கவிதைகள் ஒரு நூறு. ‘காலச்சுவடு பதிப்பகம்’, 2000). இந்தியப் படையாலும் விடுதலைப்புலிகளாலும் மற்றைய தமிழ் இயக்கங்களாலும் இந்தக் காலத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோரின் பெயர்களும் முகங்களும் வாழ்வும் எமக்கு முழுமையாகத் தெரியாது. இந்தத் தகவல்களையும் கதைகளையும் சொல்லவும் தரவுமே இன்றும் பலர் அஞ்சுகின்றனர். தம்மால் முடிந்த அளவுக்கு விவரங்களை மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யாழ்ப்பாணம்) தமது அறிக்கைகளில் பதிவு செய்திருக்கிறார்கள். அவை இணையத்தில் கிடைக்கின்றன. 1989 நடுப்பகுதியில் எனது தங்கையின் திருமணப் பேச்சு வார்த்தைகள் தொடர்பில் மட்டக்களப்பு செல்ல நேர்ந்தது. அப்போதுதான் ‘தமிழ்த் தேசிய இராணுவத்துக் கான’ கட்டாய ஆட்சேர்ப்பில் இந்தியப்படையுடன் சேர்ந்தியங்கிய இயக்கங்கள் இறங்கியிருந்தன. வாகனங்களை இடைமறித்து இளைஞர்களையும் மாணவர்களையும் கடத்திச்செல்வது, வீடுகளுக்குள் புகுந்து கடத்திச்செல்வது என மிகத் தீவிரமாக ‘ஆள்பிடி’ நடந்த நேரம் அது. மட்டக்களப்பு செல்லும் வழியில் வவுனியாவில் என்னையும் கட்டாயமாக வாகனத்திலிருந்து இறக்கிப் ‘பயிற்சி’ முகாமுக்கு இழுத்துச் சென்றார்கள். என்னுடைய எந்த நியாயத்தையும் அவர்கள் கேட்பதாயில்லை. என்னுடைய தலைமயிரையும் குறுகத் தறித்துவிட்டார்கள்! முகாமுக்குப் பொறுப்பாக இருந்தவர்கள் ஒருவரையும் என்னால் அடையாளம் காணமுடியவில்லை. அவர்கள் பிடித்துவைத்திருந்தவர்களில் நான்தான் வயது சற்றுக் கூடியவனாக இருந்தேன். இரவு எங்களை வேறு ஓர் இடத்துக்கு மாற்றுவதாக இருந்தது. எங்களை அழைத்துச் செல்ல வாகனங்கள் வந்த வேளையில் தற்செயலாக எங்களோடு பல்கலைக்கழகத்தில் படித்த நண்பன் கணேசமூர்த்தியைக் கண்டேன். அவன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவன். கலைத்துறைப் பட்டதாரி. ‘மாயமான்’ என்ற எமது வீதி நாடகத்தை 1985இல் பல இடங்களில் நிகழ்த்த உதவியவன். நான் பிடிபட்டிருந்த முகாம் அவர்களுடைய இயக்கத்தினது அல்ல. எனினும் என்னை மீட்டு மட்டக்களப்புவரை தனது வாகனத்தில் கொண்டுவந்து சேர்த்தான். பின்னர் சில வாரங்களில் அவனையும் அவனோடு இருந்த வேறு சிலரையும் மட்டக்களப்பில் விடுதலைப்புலிகள் கொன்றுவிட்டார்கள் என்ற சேதி என்னை வந்தடைந்தது. நினைவில் அழியாத இப்படியான நிகழ்வுகள் தந்த அதிர்ச்சி, துயரம், கையறு நிலை, கோபம், ஆற்றாமை எல்லாவற்றினதும் பிரதிபலிப்பாகவும் சாரமாகவும் இந்தியப் படைகளின் காலத்தில் நான் எழுதிய கவிதைகளின் தொகுதிதான், ‘எலும்புக்கூடுகளின் ஊர்வலம்.’ அப்போது இதனை யாழ்ப்பாணத்திலும் வெளியிடமுடியவில்லை; கொழும்புவிலும் வெளியிட முடியவில்லை. இந்தியாவிலும் வெளியிட முடியவில்லை. நண்பரும் கவிஞரும் திசை ஆசிரியருமான மு.பொ. கவிதைகள் ஒரு சிலவற்றையேனும் திசை இதழில் வெளியிடத் தயங்கினார். கருத்துச் சுதந்திரத்தின் நிலை அப்படி! எனினும் எனது நீண்டகால நண்பர் வேலு (ஜெயமுருகன்) எப்படியாவது இந்தத் தொகுதியை வெளியிட்டுவிடுவோம் எனத் தீர்மானித்தார். அவர் ஒரு கலை ஆர்வலர். வேலு, ஈரோஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஈழ மாணவர் பேரவையின் வடமராட்சிப் பொறுப்பாளராக இருந்தவர். ஓவிய நண்பரொருவர் பொருத்தமான அட்டைப்படம் ஒன்றையும் வரைந்து தந்திருந்தார். கவிதைகள், அட்டைப்படம், எனது முன்னுரை எல்லாவற்றையும் சேர்த்து நூலின் மாதிரி வடிவமைப்புடன் அச்சகத்துக்கு எடுத்துச்செல்லும் வழியில் இந்தியப் படைகளுடன் ஒத்தாசையாக வேலை செய்துவந்த ஈழ மக்கள் விடுதலை முன்னணியினர் (EPRLF) வேலுவைக் ‘கைது’ செய்தார்கள். யாழ்ப்பாணத்தில், ‘எலும்புக்கூடுகளின் ஊர்வல’த்தின் முடிவு அப்படியாயிற்று. வேலுவை யாழ்ப்பாணம் அசோகா ஹோட்டல் முகாமுக்குக் கொண்டுசென்றனர். எனினும் ஈரோஸ் தலைவர் பாலகுமாரன் தலையீட்டால் வேலு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். ‘எலும்புக்கூடுகளின் ஊர்வலம்’ பிற்பாடு, ‘தேடகம்’ நண்பர்களால் 1990இல் கனடாவில்தான் வெளியிடப்பட்டது. 1989 பிற்பகுதியில் அப்போது நாட்டின் அதிபராக இருந்த பிரேமதாச, புலிகளுடன் இணக்கத்துக்கு வந்து இந்தியப் படையினரை வெளியேறச் சொன்னார். 1990 மார்ச் மாத முடிவுக்குள் இந்தியப் படையினர் வெளியேறிவிடுவதாக உடன்பாடு எட்டப்பட்டது. பிற்பாடு நான் கொழும்பு வந்து சேர்ந்தேன். அப்போதுதான் புதிய சற்றர்டே றிவியூ என்பதைத் திருப்பியும் கொண்டுவருவோம் என காமினி நவரத்ன சொன்னார். சில நண்பர்கள் நிதியுதவி செய்தனர். பத்திரிகை வெளிவர ஆரம்பித்தது. மார்ச் மாதம் 1990இல் இந்தியப்படைகள் வெளியேறியபோது அவர்களுக்குப் ‘பிரியாவிடை’ கொடுக்க நானும் நண்பர் குகமூர்த்தியும் ஜேர்மன் ஊடகவியலாளர் வால்டர் கெல்லரும் திருகோணமலை சென்றோம். துறைமுகத்துக்குள் போக அவர்கள் எங்களை அனுமதிக்கவில்லை. வரிசையாக உள்ளே சென்றுகொண்டிருந்த இந்தியப் படையினரிடம், ‘நேரே காஷ்மீருக்குத்தான் போகிறீர்களா?’ என்று வால்டர் கெல்லர் புன்சிரிப்புடன் கேட்டார். நல்ல காலம். எங்களைக் கடந்துசென்ற இந்தியப் படைக் குழுவுக்கு இந்தியைவிட வேறு மொழி தெரிந்திருக்கவில்லை என்பதால் தப்பித்தோம். இன்னும் இரண்டு மாதங்களில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் போர் மூண்டுவிடும் என்பது தெரிந்திருக்கவில்லை. எனினும் இலங்கைச் சூழலில் சமாதானம் ஆயுள் குறைவானது என்பது எப்போதும் போலவே அப்போதும் எனக்குத் தெரிந்திருந்தது. இது இப்போதும் உண்மைதான். இந்தக் கட்டுரையின் சுருக்கமான வடிவம் கனடா தாய்வீடு ஜூலை மாத இதழில் வெளியானது. http://www.kalachuvadu.com/archives/issue-215/நினைவு-அகழல்
 6. பாரதம் தந்த பரிசு சேரன் ஈழத்தில் இந்தியப்படை, இந்திய சமாதானம் காக்கும் படை (Indian Peace Keeping Force-IPKF) என்ற பெயரில் வந்திறங்கியதும் இலங்கை - இந்திய ஒப்பந்தம் என்ற ஆவணத்தில் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியும் இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் கையெழுத்திட்டதும் முப்பதாண்டுகளுக்கு முன்பு. 1987 ஜூலையிலிருந்து 1990 மார்ச் வரை ஒரு லட்சம் இந்தியப் படையினர் ஈழத்தின் வடகிழக்கில் தமிழ்மக்களும் முஸ்லிம்மக்களும் வாழ்கிற பகுதிகளில் முகாமிட்டிருந்தார்கள். அந்தக் காலப் பகுதியில் நடந்த அவலங்கள், படுகொலைகள், பாலியல் வன்புணர்வுகள், வதைகள் பற்றிய வாய்மொழிக் கதைகளும் வாக்குமூலங்களும் இருந்தாலும் எழுத்துப் பதிவுகளும் ஆவணங்களும் மிக அதிகமாக இல்லை. தகவல்கள், செய்தி அறிக்கைகள், இலக்கியப் பதிவுகள் பல உள்ளன. எனினும் இவை ஒழுங்காகத் தொகுக்கப்பட்டு இன்னும் ஆவணப்படுத்தப்படவில்லை. இணையத்தில் தேடுபவர்களுக்குக் கிடைக்கக் கூடிய விவரங்கள் ஆச்சரியம் தரும் வகையில் சொற்பமே. இந்தியப் படையினர் ஈழத்திலிருந்த காலத்தை அப்படியே மறைத்துவிடுகிற முயற்சி எடுக்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகமும் எழுகிறது. இந்தியாவில் வெளியாகும் ஆங்கில நாளேடுகளில் அக்கால கட்டத்துப் பதிவுகளைத் தேடிப் பார்ப்பவர்களுக்கு அவையெல்லாம் பெருமளவுக்கு இந்திய அரசினதும் படையினரதும் தகவல்களையும் எண்ணங்களையும் திருப்பித்திருப்பித் தருவதாகவே இருப்பது தெரியவரும். இந்தச் சிறப்புப் பகுதி, மாபெரும் வரலாற்றுத் துயரத்தின் ஒரு சில கண்ணீர்த்துளிகளை மட்டுமே நினைவெழுத லூடாகவும் கவிதைகளூடாகவும் காட்டுகிறது. மறக்க நினைக்கும் அவலங்கள் மறுபடிமறுபடி மேலெழுவது அஞரின் (Trauma) விளைவு. இந்தக் காலகட்டத்தை மறந்தும் விடுதலைப் போராட்டத் தைக் கைவிட்டும் ஈழத்தில் வாழும் தமிழர்கள் வேறு முன்னேற்றப் பாதைகளுக்குச் சென்றுவிட்டார்கள். புலம்பெயர்ந்த, நாடு கடந்த, தாயகம் கடந்த தமிழர்கள் தான், இன்னும் நெருப்பைக் காவிக்கொண்டு, நொறுங்கிய இதயங்களோடு வெறுப்பையும் இந்திய எதிர்ப்பையும் ஈழக்கனவையும் வளர்க்கிறார்கள் என்ற கருத்து நிலையே இலங்கை அரசினதும் இந்திய அரசினதும் கொள்கை வகுப்பாளர்கள், ஆலோசகர்கள், கல்விப்புலத்தைச் சேர்ந்த பலரினதும் கருத்தாக உள்ளது. வரலாற்று அறிஞர் ரோமிலாதாப்பர்கூட இத்தகைய ஒரு கருத்தைத்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு கொழும்புவில் சொல்லியிருந்தார். புலம்பெயர்ந்தோரையும் நாடுகடந்த நிலையில் வாழ்வோரையும் (Diasporic and Transnational communities) அவர்களது அரசியல், அனுபவங்கள், உறவுகள் என்பவற்றை ஒற்றைப்படையாகப் பார்க்கிற இந்தப் பார்வை இப்போது பொருந்தாது. தொலைவு பொறுப்பின்மையையும் தரலாம், பொறுப்பையும் தரலாம் என்கிற நுட்பமான பார்வை நமக்கு அவசியம். தென்னாபிரிக்காவில்ஆபிரிக்க தேசிய காங்கிரசுக்கும் இனவெறி அரசுக்கும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்த வேளை, “கடந்த காலத்தை மறப்போம்; வன்முறையை மறப்போம்” என்ற கோட்பாடு முன்வைக்கப்பட்டது. கடந்த காலத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா? தீர்வும் முடிவும் நிறைவும் இல்லாவிட்டால் கடந்த காலம் திருப்பித்திருப்பி எழுதப்படும் அல்லவா? ஈழத்தில் இந்தியப் படைக்காலம் பற்றி இரண்டு வகையான வெளியீடுகள் வந்துள்ளன. ஒன்று, இந்தியப் படையின் உயர் தளபதிகளாகப் பணியாற்றியவர்கள், இராஜதந்திரிகளின் அனுபவங்களும் ஆய்வுகளும். மற்றது, தமிழில் வெளியான ஆவணங்கள், வாக்குமூலங்கள், இலக்கியப் பதிவுகள், நூல்கள். தமிழில் இருப்பவை பல இப்போது நூலகம் நிறுவனத்தின் வலைத்தளத்தில் எண்ணிம வடிவில் கிடைக்கின்றன (www.noolaham.org) இந்தியப் படைக் கால கட்டத்தைப் பற்றி மேலும் அறிய விரும்புபவர்களும் அந்த வரலாற்றுத் துயரத்தின் வேர்களையும் ஊற்றுக்களையும் கண்டறிய முனைவோரும் பின்வருவனவற்றைத் தேடலாம்: இது முழுமையான பட்டியல் அல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 1. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான நாளிதழ்கள். 2. சரிநிகர் இதழ்கள் (1990-2001) 3. தூண்டில் இதழ்கள். ஜேர்மனி. 5. திசை, வார வெளியீடு. யாழ்ப்பாணம். 6. 1989 காலகட்டத்துக் கொழும்புப் பத்திரிகைகள். 7. ‘சிங்கத்தின் நகங்களும் அசோகச்சக்கரமும்’ (ஈழம் - காலச்சுவடு பதிவுகள்: 1988-2008) 8. அனுபவப்பதிவுகளாக, ‘வில்லுக்குளத்துப் பறவைகள்’, ‘அம்மாளைக்கும்பிடுறானுகள்’ ஆகிய நூல்கள். ஆய்வுகளும் தகவல்களுமாக, ‘முறிந்த பனை’, ‘வல்வைப்படுகொலை.’ ஆங்கிலத்தில் வெளியானவற்றில் பின்வருவன தேவையானவை. 1. Saturday Review, Sri Lanka, இதனுடைய கடைசி இதழ் ஒக்டோபர் 17, 1987 வெளியானது. 2. Amnesty International அறிக்கைகளும் செய்திகளும். 3. New Saturday Review, Colombo. 1987-1988; 1990-1991. 4. ‘University Teachers for Human Rights’ (Jaffna) ÜP‚¬èèœ: http://www.uthr.org/Reports/Report3/chapter 8.htm 5. Tamil Times. London. UK. 6. ‘Memorial for IPKF – Innocent People Killing Force.’ இலங்கையில் மிக உயர் பதவியில் இருந்து இளைப்பாறியவர் கலாநிதி சோமசேகரம். அவருடைய நினைவுக் குறிப்புகள். 7. ‘In the Name of Peace: IPKF Massacres of Tamils in Sri Lanka.’ ‘Northeast Secretariat on Human Rights’ (NESoHR) திரட்டிய ஆவணங்களின் நூல் வடிவம் தில்லித் தமிழ் மாணவர் சங்கத்தால் வெளியிடப்பட்டது. இது இந்தியப் படையினர் புரிந்த படுகொலைகளில் பன்னிரண்டை ஆவணப்படுத்தி உள்ளது. இந்தியப் படைத் தளபதிகள், அதிகாரிகள் எழுதியுள்ள நூல்களும் அவசியமானவை. இவை இந்தியப்படைத் தரப்பின் வாதங்களையும் கருத்துக்களையும் முன்வைக்கின்றன. இந்த நூல்களில் இந்தியப் படையினர் புரிந்த அநியாயங்கள், படுகொலைகள் பற்றிப் பேசப்படவில்லை. “தவிர்க்க முடியாத பக்க விளைவு,” என்றும், “புலிகளையும் பொதுமக்களையும் வேறுபடுத்தி அறிய முடியாததால் பொதுமக்களையும் கொலைசெய்ய வேண்டியிருந்தது,” என்றும் “போர்ச் சூழலில் மக்கள் கொலைகள் தவிர்க்க முடியாதவை,” என்றும் காலங்காலமாகப் படைத்தரப்புகளும் அரசுகளும் சொல்கிற போலி நியாயங்கள் தரப்படுகின்றன. கூடவே சில நூல்களில் இந்திய அரசு, படைத் தரப்பின் குழப்ப நிலை, ஈழக்கள நிலவரம் பற்றி உரிய, போதுமான புலனாய்வுத் தகவல்கள் இல்லாமை போன்ற விமர்சனங் களும் இடம்பெறுகின்றன. அதிகாரிகள், படைத் தளபதிகள், அரசியல்வாதிகளுக்கிடையே ஏற்பட்ட பிணக்குகளும் அகங்கார, ஆளுமைப் பிரச்சினைகளும்கூட இந்த நூல்களில் பேசப்படுகின்றன. 8. ‘Intervention in Sri Lanka . The IPKF Experience Retold’ by Maj. Gen. Harikirat Singh. 2007. ஹரிகிரத் சிங்தான்இந்தியப்படைகளின்கட்டளைத் தளபதியாக இருந்தவர். 1987 செப்டெம்பர் மாதம் பிரபாகரனைச் சுட்டுக் கொல்லுமாறு ஜே.என். தீக்ஷித் உத்தரவிட்டதாகவும் அதனைச் செய்ய மறுத்ததால் இலங்கையை விட்டுத் தான் 1988 ஜனவரி மாதம் வெளியேற்றப்பட்டதாகவும் இந்த நூலில் எழுதுகிறார் ஏ.ஜீ. நூரானி. இந்தியத் தளபதி சுந்தர்ஜியையும் தீக்ஷித்தையும், : அகங்காரமும் ஆடம்பரமும் மிக்கவர்கள்’ என்று தனதுகட்டுரையொன்றில் விமர்சிக்கிறார். ஹரிகிரத் சிங்கின் வெளியேற்றத்துக்கு அவர்கள் இருவருமே பொறுப்பு என்கிறார். 9. ‘Assignment Jaffna’ by Lt. Gen. S.C. Sardeshpande. (Lancer Publishers, 1991) யாழ்ப்பாணத்துக்குப் பொறுப்பாக இருந்த படைத் தளபதியின் நினைவுகள். ஒப்பரேஷன் பவான் (Operation ‘Pawan’) என்ற படை நடவடிக்கைக்குப் பொறுப்பாக இருந்தவர். இந்த நடவடிக்கை யாழ் பல்கலைக்கழக விளையாட்டுத் திடலில் இந்தியக் கொமாண்டோக்களை இறக்க முயற்சி செய்த நடவடிக்கை. இந்தத் தாக்குதலைப் புலிகள் முறியடித்தார்கள். 39 இந்தியக் கொமாண்டோப் படையினர் கொல்லப்பட்டனர். இந்த நூலில் நாகாலாந்து, மிஸோராம் ஆகிய இடங்களில் இந்தியப்படையினரின் நடவடிக்கைகளையும் யாழ்ப்பாண நடவடிக்கைகளையும் ஒப்பிடுகிறார். 10. ‘The IPKF in Sri Lanka by Lt. Gen. Depinder Singh (Trishul Publications, Noida, 1991) இந்திய உளவு சேவையான RAW பற்றிய காட்டமான விமர்சனங்களை இந்த நூலில் காணலாம். 11. ‘India’s Vietnam’ by Col. John Taylor (rediff.com) இணையத்தில் கிடைக்கிறது. 12. ‘Assignment Colombo’, J.N. Dixit.1988. நெருக்கடி மிக்க காலத்தில் இலங்கையில் இந்தியத்தூதராகப் பணியாற்றிய ஜே.என். தீக்ஷித்தின் நூல். மிக முக்கியமான அனுபவங்களைப் பதிவு செய்கிறார். அக்காலத்தில் சில ஆண்டுகள் இந்தியாவின் வெளியுறவுத்துறைச் செயலாளராகப் பணியாற்றிய ரொமேஷ் பண்டாரியுடனான அனுபவம் ஒன்றை தீக்ஷித் பின்வருமாறு விவரிக்கிறார்: தமிழ்க் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையே பேச்சு வார்த்தைகள் எமது அனுசரணையுடன் நிகழ்ந்த வேளை தில்லி திரும்புமுன் கொழும்பு விமான நிலையத்தில் வைத்து என்னிடம் இரு முக்கியமான ஆவணத்தை பண்டாரி தந்தார். “இதனைத் தமிழ்த் தலைவர் செல்வநாயகத்திடம் சேர்ப்பித்து விடுங்கள் என்று சொன்னார். ஆச்சரியத்துடன் செல்வநாயகம் எப்போதோ செத்துப்போய் விட்டாரே,” என்று நான் சொன்னேன். “சரி, அப்போ அமிர்தலிங்கத்திடம் கொடுத்துவிடுங்கள். இந்தத் தென்னிந்தியப் பெயர்கள் எல்லாமே எனக்கு எப்போதும் குழப்பமாக இருக்கிறது,” என்றார் பண்டாரி. 13. ‘Sri Lanka Misadventure: India’s Military Peace-keeping Campaign, 1987-1990’ by Gautam Das, and MrinalK.Gupta Ray இந்திய அரசையும் படையையும் விமர்சனரீதியாக அணுகுகிற நூல். 14. ‘Operation ‘Pawan’ by Kuldip Singh Ludra. 1999. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற இந்திய ராணுவம் மேற்கொண்ட படையெடுப்பை விவரிக்கிறது. India’s My Lai: Massacre at Valvettithurai: வல்வைப் படுகொலை நூலின் விரிவாக்கிய ஆங்கிலப் பதிப்பு. பல வாக்கு மூலங்களும் சத்தியக்கடதாசிகளும் (Affidavits) இணைப்பில் தரப்பட்டுள்ளன. Indo-LTTE war: http://www.sangam.org/2007/11/Indo_LTTE_War_Anthology.php?uid=2643-?iframe=true&width=100% & height=100% போர் தொடர்பான ஊடகச் செய்திகள் அனைத்தையும் தொகுத்து தனது முற்குறிப்புகளுடன் பல பாகங்களாக நியூயோர்க் இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார் பேராசிரியர் சச்சிசிறீகாந்தா. India Today இந்தியப் படையினரின் யுத்தங்கள் தொடர் பான தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் விடுதலைப் புலிகளுக் கும் இந்தியப்படைகளுக்கும் இடையான போர் பற்றிய பல பாகங்கள் உள்ளன. Guns and Glory என்ற இத் தொடர் யூட்யூபில் கிடைக்கிறது. இந்தியப் படையினரின் ‘சாகசங்க’ளையும் ‘சாதனை’களையும் சொல்லும் பாணியிலேயே இவை உள்ளன. இந்த நூல்களுக்கும் ஆவணங்களுக்கும் கொள்கை வகுப்புக் கோப்புகளுக்கும் அப்பால், கண்ணீரும் தசையுமான நமது நினைவுகளை முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீள எடுத்துப் பார்க்கிறபோது இந்தக் காயங்களின் வலி எப்போதுமே ஆறாதது என்பது துலக்கமாகத் தெரிகிறது. இந்தச் சிறப்புப் பகுதியைத் தொகுக்க எனக்கு உதவிய நண்பன் மஜேந்திரன் ரவீந்திரனுக்கும் தமது பெயரை வெளியிட விரும்பாத வேறிரு நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. பாரதம் தந்த பரிசு- எனும் தலைப்பு எனது தமிழாசிரியர் செ. கதிரேசர் பிள்ளையின் புகழ்பெற்ற புராண நாடகங்களின் திரட்டு நூல் ஒன்றின் தலைப்பாகும். அவருக்கும் அவரது தலைமுறைக்கும் பாரதமும் காந்தியும் சுபாஷ் சந்திர போசும் நெஞ்சுள் நிறைந்தவை. இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு ஈழத்தின் வடக்கிலும் கிழக்கிலும் நிதி சேர்த்து வழங்கியது அவரது தலைமுறை. அந்த வரலாற்றின் அடியே தெரியாதவர்கள் கையில் இப்போது இருக்கும் பாரதம் வேறு. இந்தப் பாரதம் நமக்குத் தந்த பரிசு பற்றியதே இந்தச் சிறப்புப் பகுதி. இது எமது ‘ஆறாவடு’வின் ஒரு சிறிய சஞ்சலப் படம். அழிய மறுக்கும் குருதிக் கோடு. http://www.kalachuvadu.com/archives/issue-215/பாரதம்-தந்த-பரிசு
 7. நிகழ் ஒவ்வொரு நாளும் இரவு கவிகையில் ‘அவர்கள்’ வருவர். ஒழுங்கை முகப்பில் நாய்கள்குரைக்கையில் ‘அவர்கள்’ வரவைத் தெரிந்து கொள்வோம் விளக்கை அணைத்து வாசலைப் பார்த்து மௌனமாயிருப்போம் வேலியோரத்தில் நிற்பதும் நடப்பதுமாய் அவர்களின் பவனி தொடரும் புரியாத மொழியில் பேசிய போதும் அவர்கள் கேட்பது நமக்குப் புரியும்: பெண் நகை புலி. ஒலியடங்கிய சற்று நேரத்தில் எங்காவது வீரிட்ட அழுகையோ வேட்டொலியோ கேட்டபடி தூங்கிப் போவோம் விடியும் வரையும் நிம்மதி மறந்து உறங்குவதே போல் வாழவும் தெரிந்துவைத்திருக்கிறோம். - எஸ்.கே. விக்னேஸ்வரன் 1987 - ‘அமைதி’ பின்னரும் நான் வந்தேன் நீ வந்திருக்கவில்லை காத்திருந்தேன் அன்றைக்கு நீ வரவேயில்லை, அப்புறம் சுவாலை விட்டெரிகிற தீயொடு தென் திசை நாட்கள் பெயர்ந்தன, காலம் தாழ்த்தி தெருவோரம் நாய் முகரக்கிடந்த உன் மரணம் செவிப்பட்டது நண்ப, துக்கமாய் சரிக்கும் உன் முகம் நினைவில் வர தொண்டை கட்டிப் போயிற்று.. எல்லாவற்றின் பொருட்டாயும் நெடுமூச்சே ‘விதி’ என்றாகிவிட்ட சுதந்திரத்துடன் மறுபடி மறுபடி திசையற்றுப் போனோம். & பா. அகிலன் தேவரின் தூதர்களின் கதை 01. மகா சமுத்திரங்களையும் விரிகுடாக்களையும் அவர்கள் கடந்து வந்தபோது தனது கன்னிகளைக் காப்பான இடங்களில் பதுக்கிக்கொண்டது கடல் நிற மீன்களும் நீர்வாழிகளும் புலம் வேறாய்ப் பெயர்ந்தன தொடக்க வித்து ஊன்றப்பெற்று உயிர்பெருக்கிய கடல் ஆழம் தன்னை ஒரு மீனவனுக்குச் சொன்னது பிறகு அவனது நாவு திரையிட்டுக்கொண்டது. 02. காட்டு மருங்கே அவர்கள் முகாமிட்டபோது- தன்னை இருளவைத்துக்கொண்டது காடு. எல்லைகளின் செடிகள் முட்களின் கூர் ஏந்தின காற்றைத் துளையவிட்டு சத்தங்களைத் திகிலவிட்ட வனம் உயிரிகளை அடரினுள் அழைத்துக்கொண்டது அவர்களைத்தொட்டும் தன்னை மூடிக்கொண்டது காடு 03. எங்கள் மண்ணோ தன்னைக் கல்லென இயல்பில் மாற்றிக்கொண்டது பிறகு அது நீரை உறிஞ்சுவதில்லை வேர்களை விடுவதில்லை விதைகளை அனுமதிப்பதில்லை அவர்களின் சிறுநீர் பாறைகளில் பெருகி ஓடிற்று ஈ நெருங்காது காய்ந்தன கழிவுகள். 04. அவர்களின் நாற்றத்தைக் காற்று சுழற்றியெறிந்தது அவர்களின் திசைகளைத் திணறவைத்தது புழுதியை வாரியெறிந்தது எச்சரித்து ஊளையிட்டது அவர்களைத் திரும்பச் சொல்லிக் கேட்டது. 05. அவர்கள் கேள்வியற்றிருந்தனர் பார்வையற்று இருந்தனர் பேசும் திறனற்று இருந்தனர் இருட்டு அவர்களில் குடிகொண்டிருந்தது. இருளில் இருக்க விதிக்கப்பட்டார்கள் 06. தேவரின் தூதர்களுக்காக நாங்கள் தெருவில் கூடினோம் மாலை சூடினோம் குரவை இட்டோம் போசனங்களுக்கு அழைப்புவிடுத்தோம்... இறுதியில் ஆயுதங்களைப் பாரம்கொடுத்தோம். 07. (1) பிறகு அவர்கள்- எங்கள் தெருக்களில் சண்டையை மூட்டிவிட்டனர் சாவைக் கூட்டி வந்தனர் போரை இட்டுவந்தனர் பிணங்களைக் கொண்டுவந்தனர் பிணங்களாய்த் திரும்பிவந்தனர் அங்கிருந்த பெண்களைக் கொண்டுபோயினர். வாழ்வையும் 07. (2) எண்ணிக்கையில் அரையாயும் உருவத்தில் குறையாயும் அவர்கள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டபோது எல்லாம் ஒரு கனவைப்போல இருந்தது. சமாதானம் சொல்லி வந்தவர்கள் சண்டையில் தோற்றுத் திரும்பிக்கொண்டிருந்தார்கள். 08. முறுக்கு மீசை முடைநாற்றத்தோடு பிறக்கவிருந்த சந்ததியை வன்புணரப்பட்ட எங்கள் பெண்கள் கலைத்துக்கொண்டார்கள் 09. நாங்களோ எங்களது போரைத் தொடர்ந்தோம்... amrashmy http://www.kalachuvadu.com/archives/issue-215/நிகழ்
 8. அடுத்த யாழ். மாவட்ட மாநகர முதல்வராக வித்தியாதரன்? 12/08/2017 inioru admin உள்ளூராட்சித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் இன்னொரு புறம் யாழ். மாநகரசபை முதல்வருக்கான தெரிவும் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில், யாழ். மாநகர சபையின் முதல்வராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரே தெரிவுசெய்யப்படவேண்டும்.அதனை அவர்கள் மற்றயகட்சிகளுக்கு விட்டுக்கொடுக்கத் தயாரில்லை. யாழ். மாநகரசபை முதல்வர் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈபிஆர்எல்எவ், ஈபிடிபி, முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சி உட்பட பல கட்சிகள் போட்டியிடவுள்ளன. ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளிருந்து, ஆறுபேர் மாநகர முதல்வர் கதிரைக்குப் போட்டியிடுகின்றனர். இவர்களுள், யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலசுந்தரப் பிள்ளையும் ஒருவர். இவர் ஆரம்பத்தில் தேர்தலில் போட்டியிட மறுத்தாலும், இறுதியில் சம்மதித்துள்ளார். அடுத்ததாக, ராஜதேவன், இவர் முன்னாள் மாநகரசபை முதல்வர். வெளிநாட்டில் வசிக்கும் இவர் தேர்தலில் போட்டியிடப்போவதாக சிறிலங்காவுக்கு வருகை தந்துள்ளார். அத்துடன், வடமாகாணசபை உறுப்பினர் ஜெயசேகரனும் மாநகரசபையின் முதல்வராக வருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், ஜெயசேகரனை நியமிப்பதற்கு தமிழரசுக் கட்சியில் சிலர் விரும்பவில்லை. அடுத்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் மற்றும் ஆர்னோல்ட் ஆகிய இருவரில் சொலமன் சிறில் அரசியலில் பிரகாசிக்காதவராகையால், அவர் அனைவராலும் நிராகரிக்கப்பட்ட நிலையில், ஆர்னோல்டால் அதிக வாக்கினைப் பெறமுடியும். ஆர்னோல்ட் அதிக வாக்குகளைப் பெற்றாலும், அவர் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் அதிகாரியாகப் பணி புரிகின்றார். இதனால் இவரை முதல்வராக நியமிப்பதற்கு கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இறுதியாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் மச்சானான வித்தியாதரனை நியமிப்பதற்கு கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கு சரவணபவன் கடுமை எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவரைச் சமாதானப்படுத்தி வித்தியாதரனை அடுத்த மாநகர முதல்வராக நியமிப்பதற்கு இரா.சம்பந்தன் முயற்சி எடுத்துள்ளார். இன்னும் இரண்டொரு நாட்களுக்குள் வித்தியாதரன் யாழ். மாநகர முதல்வர் வேட்பாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. http://inioru.com/அடுத்த-யாழ்-மாவட்ட-மாநகர/
 9. கிளிநொச்சியில் அடையாள அழிப்பை மேற்கொள்வதற்கு துணைபோகும் சிறிதரன்! 12/08/2017 inioru admin தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கென உருவாக்கப்பட்ட காந்தரூபன் அறிவுச்சோலை எஸ்.கே. அறிவுச்சோலையாக பெயர் மாற்றம்செய்யப்பட்டு அடையாள அழிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அடையாள அழிப்பானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் அனுசரணையுடன் நடந்தேறியுள்ளது. 1993ஆம் ஆண்டு, தனது பெற்றோரைச் சிறுவயதில் இழந்த மேஜர் காந்தரூபனின் வேண்டுகோளுக்கமைய, பெற்றோரை இழந்த சிறுவர்களின் கல்விக்காக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்டது காந்தரூபன் அறிவுச்சோலை. 2009 ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் திருவையாறு 2ஆம் பகுதியில் விடுதலைப் புலிகளின் கணினிப் பிரிவு இயங்கிவந்த 14 ஏக்கர் காணியில் இச்சிறுவர் இல்லத்தை அமைப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனை எஸ்.கே. என அழைக்கப்படும் சுவிஸ் வர்த்தகரான கதிர்காமநாதன் அணுகியுள்ளார். குறித்த 14 ஏக்கர் காணிகளும் பொதுமக்களுக்குச் சொந்தமானவை என்பதுடன், சிறுவர் இல்லம் அமைப்பதற்காக விடுதலைப் புலிகளினால் அக்காணிகளின் சொந்தக்காரர்களுக்கு பணம் கொடுத்துப் பெறப்பட்டது. அதன் பின்னர் குறித்த நிலப்பரப்பில் சிங்களப் பொறியியலாளர்கiளால் சிறுவர் இல்லங்களுக்கான கட்டடங்கள் அமைக்கப்பட்டது. இருப்பினும் அதில் குறித்த சிறுவர் இல்லம் இயங்கவில்லையென்பதுடன், விடுதலைப்புலிகளின் கணினிப்பிரிவு இயங்கி வந்தமையும் குறிப்பிடத்தக்கது. யுத்தம் நிறைவடைந்தபின், இக்காணிகள் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அக்காணிகளைப் பெறுவதற்கு காணி உரிமையாளர்களால் கரைச்சிப் பிரதேச சபையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த 14 ஏக்கர் நிலப்பரப்பும் கரைச்சிப் பிரதேச சபையினால் கதிர்காமநாதனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு பிரதேச சபையினால் தனியொருவருக்கு 14 ஏக்கர் காணியை வழங்கமுடியாது. இதற்காக, அக்கிராமத்தில் சிறிதரனின் ஆதரவாளர்கள் சிலரின் பெயரை இணைத்து, தமது கிராமத்துக்கு சிறுவர் இல்லம் அமைப்பதற்கான அனுமதியை வழங்குமாறு கோரி கரைச்சிப் பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கு கதிர்காமநாதனூடாக அனுப்பிவைக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது. இந்நிலையில், காணி உரிமையாளர்களில் இருவர் சிறிதரனிடம் முறையிட்டபோது, உங்களது காணிகளைப் பெற்றுத் தருவதாக இருந்தால், முன்னாள் போராளிகளுக்கு உதவுவதற்கு தலா இரண்டு இலட்சம் ரூபா வழங்கவேண்டுமெனவும், இல்லாவிட்டால் உங்கள் காணியைப் பெற்றுத் தரமுடியாது எனவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து உரிமையாளர்களான கணபதிப்பிள்ளை சண்முகசுந்தரம் மற்றும் திருநாவுக்கரசு பொன்னம்பலம் ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். யுத்தம் நிறைவடைந்த பின்னர், செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச்சோலைப் பிள்ளைகள் வவுனியாவில் இயங்கும் சிவன் ஆலயத்தினரால் பராமரிக்கப்பட்டு வந்தனர். பின்னர் செஞ்சோலை சிறுவர் இல்லம் கிளிநொச்சியில், கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனால் இயக்கப்பட்டு வருகின்றது. இதைவிட, கிளிநொச்சியில், கருணா நிலையம், மகாதேவா சிறுவர் இல்லம், காந்தி நிலையம் போன்ற சிறுவர் இல்லங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், கிளிநொச்சியில் சிறுவர் இல்லம் ஒன்று அமைப்பதற்கு அவசியமேதுமில்லை. அத்துடன், அரச சட்டத்தின்படி கண்டபடி சிறுவர் இல்லங்கள் அமைக்கமுடியாது. இந்நிலையிலேயே, சிறிதரன் அவர்கள் அரசாங்கத்திலுள்ள சில அதிகாரிகளுக்கூடாக, காந்தரூபன் அறிவுச்சோலை பதிவெண்ணில் எஸ்கே. அறிவுச்சோலைக்கான அனுமதியைப் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், மக்களுக்கு தன்னையொரு விடுதலைப் புலிகளின் விசுவாசியெனக் காட்டுவதற்காக மாவீரர் தினம், முள்ளிவாய்க்கால் நினைவு தினம் என்பவற்றைக் கொண்டாடிக்கொண்டு மறுபக்கம், இவ்வாறு அடையாள அழிப்புகள் செய்துவருகின்றமை கண்கூடு. http://inioru.com/கிளிநொச்சியில்-அடையாள-அழ/
 10. வெண்முரசு – ஒரு பார்வை

  வெண்முரசு நாவல் – சொல்வளர்காடு – ஒரு பார்வை வெ.சுரேஷ் மஹாபாரதத்தில், குருக்ஷேத்திரப் போர்ப்பகுதியைத் தவிர்த்துவிட்டால், மிகப் பெரிய பகுதி வனபர்வம்தான். சொல்லப்போனால், நிகழ்வுகள் ஒரு தலை தெறிக்கும் வேகத்தில் சென்று முடியும் சபாபர்வத்தின் இறுதி பகுதிகளுக்கும், பின்னர் தொடங்கவிருக்கும் போர்ப்பகுதிகளுக்கும் இடையில், வன பர்வம் சற்றே தொய்வு ஏற்படுத்தும் ஒன்று. அளவில் சிறியதான, விராட பர்வம்கூட கீசக வதம், இறுதியில் வரும் அர்ச்சுனன்- கௌரவ படைகளின் இடையேயான யுத்தம் என்று சுவாரஸ்யங்களைக் கொண்ட பகுதி. ஆனால், 12 ஆண்டு கால வனவாசம் அப்படி அல்ல. அதனால்தானோ என்னவோ அதில் ஏகப்பட்டக் கதைகள் இணைக்கப்பட்டுள்ளன. வெண்முரசு நூலாசிரியர் ஜெயமோகன் சொல்வது போல, பாரத தேசத்தின் பல்வேறு கதைகளையும் அதில் கொண்டு வந்து விடும் ஒரு நோக்கம் தெரிகிறது. ராமாயணம் முழுமையாகச் சொல்லப்படுகிறது. சத்தியவான் சாவித்திரி கதை, நள தமயந்தி கதை ஆகியவை அதில் மிக முக்கியமானவை. பின் அர்ஜுனன், பீமன் ஆகியோரின் நீண்ட இரு பயணங்கள், இடையே ஜயத்ரதன், சித்ராங்கதன், ஆகியோருடன் போர்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். அப்படியும் பாரதத்தின் தொய்வான பகுதி இதுவே என்றுதான் தோன்றும். மகாபாரதத்தை மறு உருவாக்கம் செய்யும் ஒவ்வொருவருக்கும் இந்த வனபர்வம் மிகுந்த சவால் அளிக்கக்கூடியது. அதில் எதை விடுத்து எதைச் சொல்வது? இந்தக் குழப்பம் தனக்கும் இருந்தது என்று ஜெயமோகன் தன் சொல்வளர்க்காடு முன்னுரையில் எழுதியிருக்கிறார். அதனால், வனபர்வத்தின் நிகழ்வுகளில் மிக முக்கியமானவற்றை மட்டும் தொகுத்து தனது வெண்முரசு தொடரில் மூன்று நூல்களாக எழுதி முடித்துவிட்டார். சொல்வளர்க்காடு, கிராதம், மாமலர், மூன்றுமே வனத்தில் பாண்டவர்கள் தங்கியிருந்த காலம் பற்றியது என்பதைவிட, அவர்கள் பயணம் செய்தது பற்றிய நூல்கள் என்பதே சரியான விவரிப்பாகும். இவற்றில் சொல்வளர்க்காட்டில் திரௌபதியும், பாண்டவர்களும் ஒவ்வொரு வனமாக பயணம் செய்தாலும் அதில் உள்முகப் பயணம் அமையப் பெறுபவர் யுதிஷ்டிரர்தான். தருமன், அந்தப் பயணத்தின் மூலம் தர்மர் ஆகிறார் என்பதே சொல்வளர்க்காடு நாவலின் மையம். பாண்டவர்களுக்கு பெரும் அவமானத்தில் முடியும் சபாபர்வத்தின் பின் வாசகன் மனதில் எழும் கேள்வி ஒன்றுண்டு. இந்த அவமதிப்பை, கீழ்மையை, அதையும் தாண்டி, பாண்டவர்களுக்குள்ளும், திரௌபதிக்கும் அவர்களுக்கும் இடையேயும் உருவாகும் மன வேற்றுமையை அவர்கள் எப்படி கடந்து சென்றிருப்பார்கள் என்பதும்,, ஒவ்வொருவருக்கும் இடையேயான உறவு எப்படிப்பட்டதாக மாறியிருக்கும் என்பதே கேள்வி. அதற்கு மூல நூலில் பெரிய விளக்கமில்லை.அவ்வப்போது பீமனும், திரௌபதியும் வெளிப்படுத்தும் சீற்றங்களைத் தவிர கிட்டத்தட்ட எதுவுமே நடக்காதது போலவே அவர்கள் தங்கள் வீழ்ச்சியைக் கடந்து செல்கின்றனர். ஆனால் சொல்வளர்க்காடு நாவலின் ஒரு முக்கியமான அம்சம், திரௌபதி தர்மனிடம் கொள்ளும் விலக்கமும், அதை எதிர்கொள்ள முடியாத அவரது தவிப்பும், பின் அதைக் கடக்க தன்னை தயார்ப்படுத்திக் கொள்ளுதலும் ஆகும். அதே போல, பாண்டவ சகோதரர்களுக்குள் நடைபெறும் உரையாடல்களைக் கொண்டு, குறிப்பாக பீமன் அர்ஜுனன் ஆகியோரிடையே நடக்கும் உரையாடல்களைக் கொண்டு, அவர்களுக்குள் இருக்கும் அன்பும், நெருக்கமும், மிக அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பீமனின் கசந்த, கூரிய நகைச்சுவை, அதனை சமன்படுத்தும், கசப்பு கலவாத எளிய அன்பை வெளிப்படுத்தும் அர்ஜுனனின் நகைச்சுவை, மற்றும், சகதேவனின் முழுமையான சமநிலை வாய்ந்த ஞானச் சொற்கள் என்று சகோதரர்களுக்கு இடையேயான உரையாடல்கள் நிகழும் பகுதிகள் ஆழமான அர்த்தம் பொதிந்தவையாய், தனி அழகு கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு வனமாக பாண்டவர்கள் பயணிப்பதை ஒவ்வொரு வனத்திலும் ஒரு உபநிஷதத் தத்துவச் சிந்தனை அறிமுகமாவதாக இணைத்து ஒரு தத்துவப் பயணமாகவும் செல்கிறது நாவல். உபநிஷத்துக்கள் பிறந்து, பெரிதும் விவாதிக்கப்பட்ட காலகட்டமாக உருவகித்து இது புனையப்பட்டுள்ளது என்று சொல்லவேண்டும். உபநிஷத்துக்கள் மட்டுமின்றி, அருக நெறி, பௌத்த நெறிகளும் இதில் விவாதப் பொருள் ஆகியிருக்கின்றன. எவ்வளவோ தத்துவங்களைக் கேட்டு தன் மனதிலிருக்கும் குற்ற உணர்வைப் போக்கிக் கொள்ள தர்மன் முனைந்தாலும் எதுவும் அவரை சமாதானப்படுத்துவதில்லை. ஏனெனில், தனது தவறு மன்னிக்க முடியாத ஒன்று என்று அவருக்குத் தெரிந்தே இருக்கிறது என்பது மிக அருமையாக வெளிப்பட்டிருக்கிறது. பாண்டவர்களின் வனவாசத்தின்போது கிருஷ்ணன் அட்சய பாத்திரத்தை திரௌபதிக்கு அளிக்கும் கதைகள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. மாறாக, அவர் பாண்டவர்களை வனத்தில் சந்திக்கும் சந்தர்ப்பம், கிருஷ்ணன் அஸ்தினபுரியில், சூதாட்டம் நடக்கும் வேளையில் ஏன் பாண்டவர்களுக்கு உதவ முன்வரவில்லை என்பதை விளக்குவதற்கு பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கிறது. கிருஷ்ணனின் யாதவ குலத்தில் பிளவு உருவாகி விட்டதாகவும், அது பலராமரையும் கிருஷ்ணரையும் பிரிவுக்கு உள்ளாக்கியிருப்பதாகவும் கதை கட்டமைக்கப்பட்டுள்ளது. பாரத போரின் போது, பலராமர் நடுநிலை வகித்து தீர்த்த யாத்திரைக்குப் புறப்பட்டு விடுவதையும், யாதவர்களின் பெரும்பகுதியினர் கிருஷ்ணருடன் இல்லாமல் எதிர்த்தரப்பில் போர் புரிவதையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், கிருஷ்ணன் தன் சகோதரனையும் சமூகத்தையும் மட்டுமல்ல, தன் காலத்தையும் கடந்த பார்வையைக் கண்டடையும் பயணம் ஒன்றை மேற்கொள்வதை நோக்கியே வெண்முரசின் இந்தப் பகுதியில் கதை பின்னப்பட்டுள்ளது புலப்படுகிறது. இது புரிந்து கொள்ளக்கூடியதுதான். இந்தப் பகுதியில்தான் மீண்டும் தனது நோக்கத்தை, தனது வேதாந்தத்தை, உபநிஷத்துக்களை அடிப்படையாக வைத்து தான் உருவாக்க நினைக்கும் சமூகம் குறித்து பேசுகிறார் கிருஷ்ணர். இதுவரை இருந்த வேத நெறிகளை விலக்கி, அல்லது இணைத்து, ஒரு புது ஞான நெறியை கிருஷ்ணர் உருவாக்கும் போக்கினை சொல்வளர்க்காடு படம் பிடித்துக் காட்டுகிறது. அது சாந்தீபனி முனிவரின் சமன்வய கொள்கை எனும் பெயரில் விவாதிக்கப்படுகிறது. ஜெயமோகனைத் தொடர்ந்து வாசிக்கும் ஒருவருக்கு இதில் சொல்லப்படுவது அவரது செல்லக் கோட்பாடான முரணியக்கம் எனும் தத்துவமே என்பதைப் புரிந்து கொள்வது கடினமல்ல. “ஒன்றின் எதிர்நிலையும் அந்நிலை அளவே உண்மையானது என்று சாந்தீபனி கல்விநிலை சொன்னது’ என்ற வாசகத்தின் மூலம் இது தெளிவாகிறது. இதில் தருமன் கண்டு உரையாடும் சாந்தீபனி முனிவரின் வாய்மொழியாக கிருஷ்ணன் சங்காசுரனை வென்று பாஞ்சஜன்யத்தை கைப்பற்றுவதும், குருதட்சிணையாக கடல் கொண்டதாக நம்பப்பட்ட தன் ஆசிரியரின் மகனை (இந்த முனிவர்தான் அவர்) மீட்டளிப்பதும் வழக்கமான கதையிலிருந்து விலகி மிக வித்தியாசமான ஒரு கோணத்தில் சொல்லப்படுகிறது. இதற்கெல்லாம் அடிப்படையாக, வாழ்வு என்பது ஒரு லீலையா, அல்லது மாயையா, எனும் விவாதத்தில் அவன் தன் ஆசிரியரிடம் முரண்படுவதும், அதன் பயனாய், அவரிடம் தீச்சொல் பெற்று, ,அதுவே அவன் கண்டடையும் புதிய நெறிக்கு அடிப்படையாக அமைவதும் மிகச் சிறந்த உரையாடல்களின் மூலம் சொல்லப்பட்டுள்ளது. நாவலின் ஒரு முக்கிய அம்சம் இது என்றால், திரௌபதியின் கடும் கோபத்தையும், தனக்கு கௌரவர் சபையில் நேர்ந்தது குறித்த கழிவிரக்கத்தையும், எதிர்கொள்ளும் கிருஷ்ணன் அவளிடம் சொல்லும் பதில் விவாதிக்கத்தக்க, முக்கியமான பார்வையாகும். இதுவரையில், திரௌபதி சபையில அவமானப்படுத்தப்பட்டதை ஒரு அபலைக்கு நேர்ந்த மிகத் துயரமான சம்பவமாகவே படித்து, கேட்டு, பார்த்துப் பழக்கப்பட்டவர்களுக்கு இங்கு கிருஷ்ணன் அளிக்கும் விளக்கங்கள் அதிர்ச்சியையே ஏற்படுத்தும். அரசி என்று களமாட வந்ததற்குப்பின் பாஞ்சாலிக்கு நேர்ந்த அவமானங்கள் ஒரு எளிய பெண்ணுக்கு நேர்ந்தவை அல்லவென்றும் அரசியல் தோற்ற அரசிக்கு நேர்ந்ததென்றும் சொல்லி, அந்த நிகழ்வுகளுக்கு அவளையே பொறுப்பாக்குகிறான் கிருஷ்ணன். பாரதத்தை ஆளும் சக்ரவர்த்தியாக விரும்பியவர் தருமன் அல்லவென்றும் திரௌபதிதான் என்றும் கிருஷ்ணர் இங்கு சொல்வதற்கேற்ப முதலிலிருந்தே திரௌபதியின் பாத்திரம் கட்டமைக்கப்பட்டிருப்பது இங்கு பொருந்தி வருகிறது. பாரதத்தை அணுகிய நவீன இலக்கியகர்த்தாக்கள், சிந்தனையாளர்கள், அனைவரிடமிருந்தும் இந்நூலின் ஆசிரியர் விலகி நிற்கும் புள்ளி என்று இந்த இடத்தைச் சொல்லலாம்.நான் படித்தவற்றுள், பாரதி, ஐராவதி கார்வே, பி.கே பாலகிருஷ்ணன், எம்.டி. வாசுதேவன் நாயர், பைரப்பா, ஆகிய யாரும் இப்படியோர் திரௌபதியை உருவாக்கவில்லை. பாரதத்தின் மைய அச்சு துரியனின் மண்ணாசை என்பதைத் தாண்டி,, இங்கு திரௌபதியின் மண்ணாளும் ஆசை, பாரதத்தின் சக்கரவர்த்தினியாக முடிசூடும் பெருவிழைவு, என மாற்றுவது வெண்முரசின் முக்கியமான அம்சங்களில் தலையாயது. இது விவாதத்துக்குரியது என்பதிலும் சந்தேகமில்லை. கிருஷ்ணனுக்கும் திரௌபதிக்கும் இடையே நடக்கும் விவாதம், இந்நாவலின் இரு சிறந்த உச்சகட்டங்களில் ஒன்று. இரண்டாவது, நிச்சயமாக வனவாசத்தின் இறுதியில் (வெண்முரசு தொடரைப் பொறுத்தவரையில், இந்த நாவலின் இறுதியில்) வரும் யக்ஷப் பிரச்னம். உண்மையில் இந்த நாவலின் 57 மற்றும் 58ம் அத்தியாயங்கள் நவீன தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த பகுதிகள் என்று எதிர்காலம் கொண்டாடும் சிறப்பு வாய்ந்தவை. பாரதத்தில் தருமனைத் தவிர இதர பாண்டவர்கள் வீழ்ந்துபட்ட விஷச் சுனையருகே யக்ஷன் ஒருவனால் தருமனை நோக்கிக் கேட்கப்படுபவையாக வரும் கேள்விகளை இங்கு தருமனின் உள்ளத்தின் ஆழத்திலிருந்து, அவனது மூதாதையரும், ஆசிரியர்களும், சுற்றமுமே, அக்கேள்விகளின் தன்மைக்கேற்றவாறு எழுப்புவது போல அமைத்திருப்பது ஜெயமோகனின் அபாரமான கற்பனைக்கும் மேதைமைக்கும் சான்றாகும். இந்தப் பகுதிகளை நான் அவை வெளிவந்தது முதல் கணக்கற்ற முறை படித்து மகிழ்ந்திருக்கிறேன். பொதுவாகவே, வெண்முரசில் முதல் நாவலிலிருந்தே மேற்கோள் காட்டத்தக்க வகையில் மின்னும் வரிகள் வந்து கொண்டேயிருக்குமென்றாலும், சொல்வளர்க்காடு நாவல், தத்துவங்களுக்கு அதிகம் இடம் கொடுக்கும் ஒன்று என்பதால், அம்மாதிரியான வரிகள், புதிய அரிய, உச்சத்தைத் தொடுகின்றன. நான் ரசித்த சில வரிகளை தருகிறேன். பீமனின் விருகோதரன் எனும் பெயருக்கு ஒரு அற்புதமான ஒரு விளக்கம் அளிக்கப்படுகிறது- மேலே உள்ளவற்றைப் போல சொல்லிக் கொண்டே போகலாம். இவை அளிக்கும் வாசிப்பின்பத்துக்காகவே சொல்வளர்க்காடு நாவல் படித்து ரசிக்கத்தக்கது. தவிர, சாந்தீபனி ஆசிரமத்திலிருந்து வெளியேறும் கிருஷ்ணன், தன் ஆசிரியரின் இறந்த மகனை மீட்டுக் கொண்டு வரும் கதை, மாய மந்திர நிகழ்வுகள் நீக்கப்பட்டு, யதார்த்த தளத்தில் புனையப்பட்டிருக்கும் விதமும் சிறப்பானது. இவ்வளவு சிறப்புகளுக்கிடையே ஒரு சில நெருடல்களும் இருப்பதைச் சுட்டத்தான் வேண்டியிருக்கிறது. முதலாவது, மகாபாரதத்தின் சிக்கல்களுக்கும் பின் வரும் யுத்தத்திற்கும் பாஞ்சாலியின் தன்முனைப்பையே முதன்மைக் காரணமாக்குவது. இது காலகாலமாக பாரதத்தை அறிந்தவர்களுக்கு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கலாம். வெண்முரசு தொடரைப் பொறுத்தவரையில், இதற்கான பின்னணி துவக்கத்திலிருந்தும், குறிப்பாக வெய்யோன் நாவலில், பாஞ்சாலி இந்திரப்பிரஸ்தம் அமைக்க இடம் தேடும் தருணத்திலும் தரப்பட்டிருக்கிறது.(கூடவே, நாவலின் துவக்கத்திலிருந்தே குந்தி தேவியின் பாத்திரம் சற்றே குறுகிய மனமும் காழ்ப்பும் கொண்டதாகவே காட்டப்பட்டிருப்பதும், திருதிராஷ்ட்ரன் எப்போதும் பேரறத்தான் என்றே குறிப்பிடப்படுகிறது). இந்தக் கோணம் ஆண்களின் ஆணவமும் அதிகார ஆசையும் பின்னால் தள்ளப்பட்டு பெண்களின் தன்முனைப்பும், விழைவுகளுமே ஒரு பேரழிவுக்கு முழுமையான காரணம் என்பது போல புரிந்து கொள்ளப்பட இடம் தருகிறது. இரண்டாவது நெருடல் , நாவலின் கட்டுமானத்திலும் சம்பவங்களின் முன்னுக்குப் பின்னுமான முரண்சித்தரிப்பிலும் உள்ளது. இந்நாவலில் கிருஷ்ணன் கம்சனைக் கொல்ல, தன்னை அக்ரூரர் சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்திலிருந்து அழைத்துப் போவதாகச் சொல்கிறான். ஆனால், வெண்முரசு தொடரின் நீலம் நாவலில், இந்தச் சம்பவம், கோகுலத்தில் நடப்பதாகவே (ஒரு அற்புதமான அத்தியாயம் அது) எழுதப்பட்டுள்ளது. பின் மீண்டும், இப்போது வரும் ‘எழுதழல்’ நாவலின் 74 வது அத்தியாயத்தில், அக்ரூரர் இப்படிச் சொல்கிறார்- “நிமித்திகர் குறிதேர்ந்து கோகுலத்திற்குச் சென்று இளைய யாதவரையும் மூத்தவரையும் இங்கு இட்டு வந்தவன் நான்.” இது தொடரின் ஒருமையைச் சீர்குலைப்பதாகவே அமைகிறது. இந்த நெருடல்கள் இருப்பினும்,, அண்மைக்கால நாவல்களில் அபூர்வமான வாசிப்பின்பத்தை வழங்கியதோடு, பல வகைகளில் சிந்தனையைத் தூண்டுவதாக உள்ள வகையிலும், இந்தியாவின் தொன்மையான தத்துவங்கள் மேல் பெரும் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் அமைந்த ஒரு படைப்பு என்பதிலும் வெண்முரசு தொடரிலேயே, முதற்கனல், நீலம் ஆகியவற்றோடு முதல்வரிசையில் நிற்கக்கூடிய படைப்பு இது என்பதில் சந்தகமேயில்லை. பாரதத்தில் யக்ஷப் பிரச்னத்தோடு பாண்டவ வனவாசம் முடிந்து விடுகிறது, ஆனால், வெண்முரசு தொடரில், இன்னும் இரு நாவல்களிலும் பாண்டவ வனவாசம் தொடர்கிறது. அவை குறித்து இன்னொரு சமயத்தில் பார்க்கலாம். http://solvanam.com/?p=50954
 11. இன்றைய நாளில் பிறந்த தினத்தைக் கொண்டாடும் சுகன் எனும் சண்டமாருதன், சகாறா அக்கா, ரகுநாதன் மற்றும் முத்து ஆகியோருக்கு மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎂🎂🎂
 12. அவுஸுக்குப் போன தமிழர்களில் அகதிகளாகப் போனவர்கள் கூடிப்போனார்கள் போலிருக்கே. அதுதான் integrate பண்ணாமல் தனித்தீவாக இருக்க விரும்புகின்றார்களோ? விசாவிலும், படிக்கவும் என்று போனவர்கள் இப்படியான தமிழ்ச் சாப்பாட்டுக் கடைகளுக்கு போவதும், கறி மணத்தோடு வேலையிடங்களுக்கும் வெளியிடங்களுக்கும் போவது நாகரிக் குறைச்சல் என்று நினைப்பதில்லையா!
 13. தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
 14. சகோதரியின் மறைவால் துயருற்றிருக்கும் கவிஞர் ஜெயபாலனுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
 15. பார்வையில் வரவில்லை. எல்லாவற்றையும் வாசிக்க எங்கே இப்போது நேரம் இருக்கின்றது 😒