Jump to content

சுப.சோமசுந்தரம்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    406
  • Joined

  • Last visited

  • Days Won

    4

சுப.சோமசுந்தரம் last won the day on November 18 2023

சுப.சோமசுந்தரம் had the most liked content!

1 Follower

Profile Information

  • Gender
    Male
  • Location
    Tirunelveli, Tamilnadu, India
  • Interests
    Literature - Classical and Modern, Social and Union Activities

Recent Profile Visitors

7105 profile views

சுப.சோமசுந்தரம்'s Achievements

Proficient

Proficient (10/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • First Post
  • Collaborator

Recent Badges

664

Reputation

  1. மிக அருமை. டி.எம்.கிருஷ்ணா வை சுருக்கமாகவும் முழுமையாகவும் எடுத்துக் காட்டும் பெருமாள் முருகனின் எழுத்து. அதை சரியாக எடுத்தளித்த ரசோதரன் அவர்களுக்கு நன்றி. பெருமாள் முருகனின் இந்த எழுத்திற்கான இணைப்பை நிறைய புலனக் குழுமங்களில் நான் பகிர ஏதுவாக அமைந்தது.
  2. இது தொடர்பில் தங்களின் இடுகையை வாசித்தேன். இணைப்பை அளித்தமைக்கு நன்றி, தோழர் ரசோதரன் ! எழுத்தாளர்கள் சாரு நிவேதிதா, ஜெயமோகன் போன்றோரது கருத்துகளுடன் பெரும்பாலும் எனக்கு ஒத்துப் போவதில்லை. ஒருவரது எழுத்து பற்றி கருத்துக் கொள்ள ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. அந்த வகையில் இவர்கள் Fashionable non-conformists (being different just for the sake of being different) என்பது எனது முதல் கணிப்பாய் அமைந்தது. அதனைப் பெரிய அளவில் நான் மாற்றவில்லையாயினும், சமீப காலங்களில் இவர்களிடம் வேறு ஒரு பரிமாணத்தையும் பார்க்கிறேன். ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனிய பாசிசத்தின் மொழியை வழிமொழியும் அவர்களின் நிலைப்பாடே அது. திரு. டி.எம்.கிருஷ்ணா சேரிக்கே சென்று கர்நாடக இசை சொல்லித் தருவதைக் கொச்சைப்படுத்தும் எழுத்தைப் படித்ததும், "சாரு நிவேதிதா தம் இயல்பு மாறாமல் எழுதுகிறார்" என்று சிரித்துக் கொள்கிறேன். (இப்போதெல்லாம் (எப்போதும் அப்படிதானோ ?) சமூக வலைத்தளங்களில் ஒருவருக்குப் பிடித்த எழுத்தாளாரையோ, நடிகரையோ, இசையமைப்பாளரையோ விமர்சனம் செய்தால், சம்பந்தப்பட்ட நபர் நம் மீது வன்மத்துடன் தனிநபர் தாக்குதலைத் தொடுப்பது வேடிக்கையான ஒன்று. அவர் கும்பிடுகிற சாமியை விமர்சனம் செய்யவே யாருக்கும் உரிமையுண்டு என்பது எனது உறுதியான எண்ணம். குறைந்த பட்சம் அறிவுலகிலாவது இந்திய தண்டனைச் சட்டம் 295 A ஐத் தூக்கிக் கிடாச மாட்டார்களா என ஏங்குகிறேன். நிற்க. இதனால் அறியப்படுவது என்னவென்றால் மேற்கூறிய எழுத்தாளர்களின் ரசிகர்கள் கொதித்தெழுந்தால், நான் சிரித்துக் கடந்து சென்று விடுவேன்.) மென்மேலும் எனக்கு எழுத வாய்ப்பளிக்கும் ரசோதரன் அவர்களுக்கு மீண்டும் நன்றி.
  3. சங்கீத கலாநிதி 'சங்கீத கலாநிதி' விருது பெற்ற திரு.டி.எம்.கிருஷ்ணா அவர்களை வாழ்த்துவோம். அவர் பார்ப்பன சமூகத்தில் தோன்றிய முற்போக்குச் சிந்தனையாளர் என்பது அவருக்கான கூடுதல் தகுதி, சிறப்பு; நமக்கான கூடுதல் மகிழ்ச்சி. தமிழ்நாட்டு மக்கள் தொகையில் சுமார் மூன்று சதவீதம் உள்ள பார்ப்பனர்கள், 'மெட்ராஸ் மியூசிக் அகாடமி' யை நிரப்பிக் கொண்டு திரு. டி.எம்.கிருஷ்ணாவுக்கு எதிராகப் பிற்போக்குத்தனமாகக் கொதிக்கிறார்கள், குதிக்கிறார்கள் என்றால் ஒரு காலத்தில் அவர்கள் என்னவெல்லாம் ஆட்டம் போட்டிருப்பார்கள் என்பதை இன்றைய இளைய தலைமுறையினரின் கற்பனைக்கு விட்டு விடுவோம். சுமார் ஐம்பது வருட காலம் அடங்கி இருந்தவர்கள் இப்போது ஒன்றியத்தில் ஒரு மதவாத, பார்ப்பனிய, பாசிச அரசு அமைந்ததும் பண்ணுகிற அலப்பறைகள் எண்ணிலடங்கா. அவர்கள் மொழியில் சொல்வதாக இருந்தால், "வினாஷ் காலே விபரீத புத்தி". இசைத்துறையில் அவர் அந்த விருதுக்கு முழுத் தகுதியுடையவர் என்பது யாவரும் அறிந்ததே. அவர்களது வாழ்வியலுக்கு எதிரான கருத்தியல் கொண்டவர் என்பதே சுருக்கமாக அவர்களது குற்றச்சாட்டு. 'மகா பெரியவா'ளைப் பாடும் பிற்போக்காளர்கள் மத்தியில் தந்தை பெரியாரைப் பாடும் முற்போக்காளர் திரு. டி.எம்.கிருஷ்ணா என்பதே அவர்களது ஆற்றாமை. அதிலும் சில பிரகஸ்பதிகள் 'மெட்ராஸ் மியூசிக் அகாடமி' யில் தாங்கள் பெற்ற விருதுகளைத் திருப்பிக் கொடுப்பார்களாம்; திரு.டி.எம்.கிருஷ்ணா தலைமையில் நடைபெறும் இசை நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டார்களாம். *உயிரே போச்சு* என்று அவரோ, இசையுலகமோ *தலை*யில் கைவைத்து உட்காரப் போகிறதா, என்ன ? பார்ப்பனராயிருக்கும் திரு. டி.எம்.கிருஷ்ணாவுக்கே இன்று இந்த நிலைமையென்றால், அன்று மற்றவர்கள் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். இவர் பெரியாரைப் போற்றிய பாடல்களில் ஒன்று கீழே காணொளியில் உள்ளது. இவர் போற்றிய பெரியார் பார்ப்பனர்களை மட்டுமா எதிர்கொண்டார் ? பார்ப்பனியத்தைத் தூக்கிப் பிடித்த மகாத்மா காந்தி போன்ற ஆளுமைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மகாத்மாவின் மரியாதைக்கு எந்தக் குந்தகமும் விளைவிக்காமல் அவரை எதிர்த்து நின்றது பெரியாரின் மகாத்மியம். வைக்கம் கோயில் நுழைவுப் போராட்டத்தில் இறுதி வரை உறுதியாக நின்று வென்றெடுத்தவர் தந்தை பெரியார். அதனால்தான் செத்து ஐம்பது வருடங்கள் ஆன பிறகும் அவாளை மிரட்டுகிறார் பெரியார். சரி, இவ்வளவு பேசியாயிற்று. எந்த மகாத்மாவைப் பெரியார் எதிர்த்தார் என்பதையும் பார்ப்போமா ? அதற்கு வர்ணாசிரமத்தில் எவ்வளவு மூழ்கித் திளைத்தவர் காந்தியார் என்பது தெரிய வேண்டுமே ! 1921 - 22 காலகட்டத்தில் குஜராத்தி பத்திரிக்கையான நவஜீவனில் காந்தியார் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பட்டவை : "(1) பிறப்பை அடிப்படையாகக் கொண்ட வருணாசிரமப் பிரிவுகளில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. (2) வர்ணம் என்பது பிறப்பதற்கு முன்னாலேயே மனிதனுடைய தொழிலை நிர்ணயிப்பதாகும். (3) வர்ணாசிரம முறையில் எந்த மனிதனுக்கும் அவன் விரும்பும் தொழிலை தேர்ந்தெடுத்துக்கொள்ள சுதந்திரம் கிடையாது. (4) ஆரம்பப் படிப்பைப் பரப்ப ஜாதி ஒரு வசதியான அமைப்பாகும். ஒவ்வொரு ஜாதியும் அதனுடைய வகுப்பாரின் பிள்ளைகளைப் படிக்க வைக்கும் பொறுப்பை எடுத்துக் கொள்ளக் கூடும். ஜாதிக்கு ஒரு அரசியல் அடிப்படையும் உண்டு. ஜாதியானது சில முறைகளால் நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்து அவர்கள் அந்த ஜாதியினருக்குள் உண்டாகும் பூசல்களைத் தீர்த்து வைக்க உதவும். ஜாதியின் உதவியால் ஒவ்வொரு ஜாதியும் ஒரு படையைத் திரட்டுவது சுலபமானதாகும். (5) சமபந்தி போஜனமும் கலப்பு மணமும் சமூகத்தின் ஒற்றுமையைப் பலப்படுத்துவதற்குத் தேவையில்லை என நான் நம்புகிறேன். சமபந்தி போஜனம் நட்பை வளர்க்கிறது என்பது அனுபவத்திற்கு மாறானதாகும். இது உண்மையாக இருக்குமானால் ஐரோப்பாவில் ஒரு சண்டை கூட நிகழ்ந்திருக்காது. மலம் கழிப்பதைப் போலவே உண்பதும் ஒரு மட்டமான செய்கையாகும். மலம் கழித்தவுடன் நமக்கு அமைதி ஏற்படுகிறது. ஆனால் சாப்பிட்டவுடன் நமக்குத் தொந்தரவு ஏற்படுகிறது என்பதே இந்த இரண்டுக்கும் உள்ள ஒரே வேறுபாடு ஆகும். மலம் கழிப்பதை நாம் எப்படி ஒதுங்கித் தனித்து செய்கிறோமோ அதேபோல சாப்பிடுவதும் ஒதுங்கித் தனித்தே நடத்தப்பட வேண்டும். (6) இந்தியாவில் சகோதரர் குழந்தைகள் ஒன்றை ஒன்று திருமணம் செய்து கொள்வதில்லை. அதனால் அவர்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காமலா இருந்து விடுகிறார்கள் ? வைஷ்ணவரிடையே பல தாய்மார்கள் மற்ற குடும்பத்தாருடன் கூடி சாப்பிடுவதோ அல்லது பொதுவான ஒரு தண்ணீர்ப் பானையிலிருந்து தண்ணீர் குடிப்பதோ கூட இல்லாத அந்த அளவுக்கு வைதீக உணர்ச்சி உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதனால் அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பில்லாமலா இருக்கிறார்கள் ? சமபந்தி போஜனத்தையும் கலப்பு மணத்தையும் ஜாதி அனுப்புமதிப்பதில்லை என்பதால் ஜாதி கேடானது என்று சொல்லிவிட முடியாது. (7) கட்டுப்பாட்டிற்கு மற்றொரு பெயர்தான் ஜாதி என்பது. அளவு மீறி அனுபவிப்பதற்கு ஒரு எல்லையை உண்டாக்குவது தான் ஜாதி. வசதிகளை அனுபவிக்கும் முயற்சியில் தனது எல்லையைத் தாண்ட ஜாதி ஒருபோதும் அனுமதிப்பதில்லை. சமபந்தி போஜனம், கலப்பு மணம் ஆகியவற்றிற்கு ஜாதி முறை தடை போடுவதன் முக்கியமான கருத்து இதுதான். (8) ஜாதி முறையை ஒழித்து மேற்கு ஐரோப்பிய சமுதாய முறையை கடைப்பிடிப்பதற்கு ஜாதி முறையின் உயிர் நிலையான பரம்பரை ஜாதித் தொழிலைக் கைவிட்டாக வேண்டும். பரம்பரை ஜாதித் தொழில் என்பது எப்போதும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு கொள்கையாகும். அதை மாற்றுவதன் மூலம் குழப்பம்தான் உண்டாகும். என் வாழ்வில் ஒரு பிராமணனை பிராமணன் என்று அழைக்க முடியாவிட்டால் அந்த பிராமணனால் எனக்கு எந்த விதமான பயனும் இல்லையே ! ஒரு பிராமணன் சூத்திரன் ஆகவும் ஒரு சூத்திரன் பிராமணனாகவும் மாற்றப்பட்டால் அது பெரும் குழப்பமாகத்தானே இருக்கும் ? (9) ஜாதி முறை சமுதாயத்தில் இயற்கையான ஒரு அமைப்பாகும். இந்தியாவில் அதற்கு ஒரு மதப்பூச்சு கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்ற நாடுகள் ஜாதி முறையின் பயனைச் சரியானபடி புரிந்து கொள்ளாத காரணத்தால் அந்த நாடுகள் இந்தியா அடைந்த அளவுக்கு ஜாதியால் பல நன்மைகள் அடைய முடியவில்லை. மேற்கூறியவை என்னுடைய கருத்துக்களாக இருக்கின்றமையால் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்பவர்களை நான் எதிர்க்கிறவனாக இருக்கிறேன்". இவற்றின் அடிப்படையில் "Beware of Gandhi" என்று அண்ணல் அம்பேத்கரே எழுதினார் என்றால், காந்தியாரை எதிர்த்து நின்ற பெரியார் பெரியார்தானே ! பின்னே சும்மாவா டி.எம்.கிருஷ்ணா பெரியாரைப் போற்றினார் ! பின் குறிப்பு : அவாள்லாம் டி.எம்.கிருஷ்ணாவைத் தாக்க, நாம் பதிலுக்கு அவாளைத் தாக்க crossfire ல் காந்தியார் மாட்டிக் கொண்டாரோ ? சரி, விடுங்க தோழர் ! போர்க்களம்னா அப்படிதான் ரணகளம் ஆகும் ! https://www.facebook.com/share/p/ma32NPCiZiRCgGh4/?mibextid=oFDknk
  4. என் மகள் சோம.அழகு 'திண்ணை' இதழில் எழுதிய கட்டுரையை இங்கு பதிவு செய்துள்ளேன். நன்றி தோழர். "அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை" (குறள் 315; அதிகாரம் : இன்னா செய்யாமை) (குறளின் பொருள் : பிற உயிர்களுக்கு ஏற்படும் துன்பத்தைத் தனக்கே ஏற்பட்ட துன்பமாய்ப் பாவிக்காவிட்டால், ஒருவன் பெற்ற அறிவினால் என்ன பயன் ?) மேற்கண்ட குறள் நீங்கள் சொன்ன கருத்துடன் பொருத்தி நோக்கத்தக்கது. 'பிறிதின் நோய்' என்று அஃறிணைகளுக்கு ஏற்படும் துன்பத்தையும் வள்ளுவன் குறித்தது குறளின் சிறப்பு. 'பிறிதின் நோய் தந்நோய்' எனும் தலைப்பில் முன்னர் நமது இந்த 'யாழ்' தளத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். ஆகையால் குறள் உடனே நினைவுக்கு வந்தது. தங்களின் பின்னூட்டத்திலிருந்து சற்று விலகி, ஒரு கருத்தையும் இவ்விடத்தில் கட்டுரைக்கான எனது பின்னூட்டமாகப் பதிவு செய்ய விழைகிறேன். சில நேரங்களில் சில அழிவுகளை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதயாததாய் அமையும் - சாலை அமைக்க மரம் வெட்டுவது போல. இருப்பினும் அவற்றைக் கேள்விக்கு உட்படுத்தாமல் கடந்து செல்வது பேரழிவுகளுக்கு வழி வகுக்கும். அவ்வாறு கேள்விக்கு உட்படுத்துவதாகவும் கட்டுரையைப் பார்க்கிறேன். இக்கண்ணோட்டமும் கட்டுரையில் குறித்த 'கண்ணோட்ட'மும் இணைந்து செல்வன என்று நினைக்கிறேன்.
  5. நீங்கள் எனக்கு உதவியிருக்கிறீர்கள், ஏராளன் ! நன்றி.
  6. ஜெயமோகன் செய்த தவறை நானும் செய்திருக்கிறேன் - ஒரு கருத்தைக் களம் மாறி வெளிப்படுத்துவது; 'மஞ்ஞுமல் பாய்ஸ்' பேச வந்த நான் '96' ஐயும் பேசியது. இதனால் '96' ஐக் கொண்டாடியவர்களுக்கு நான் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். உப்பைத் தின்றுவிட்டால் தண்ணீர் குடிக்கக்கத்தானே வேண்டும் ! 'கற்பு' என்றெல்லாம் நான் பேசவேயில்லை. ஒரு காதல் சரி வரவில்லை என்றால் அதைத் தூக்கிப் போட்டுவிட்டு மறுகாதல் எனும் கருத்துடைய எனக்கு, 'கற்பு' மட்டுமல்லாமல் சென்ற 'காதலே' புனிதம் கிடையாது. அதனால்தான் '96' ன் பழைய காதலைக் கொண்டாடுவதைப் 'புனிதப் படுத்துதல்' என்றேன். சமூகமாய் வாழ சமூக விலங்காகிய மனித இனம் (அமைதியான வாழ்க்கைக்காக) சமரசம் செய்து கொண்ட பிறகு சில வரையறைக்குள்தான் இயங்க முடியும். தெருவில் இறங்கி மற்றவர்களுடன் பிரச்சினையின்றி நடக்க முடிவெடுத்த பிறகு எல்லைக்கோட்டை மதித்துதானே ஆக வேண்டும் ? பழைய காதலைத் தூக்கியெறிய முடியாவிட்டால், வேறு ஒரு மண வாழ்க்கை என்ற சமூகக் கட்டமைப்பில் சென்று நிற்பது நேர்மையில்லையே ! (புதிய வாழ்க்கையில் கணவனும் குழந்தைகளும் அருமையாக அமைந்ததாய் நாயகியே ஓரிடத்தில் சொன்னதாக நினைவு). பழைய காதலருடன் இரவில் ஊர் சுற்றுவதும், விடுதி அறையில் அருகருகில் குளிர் காய்வதும், அவன் சட்டையின் வாசத்தை சுவாசிப்பதும் அந்தக் காதலை (!!!) ரசிப்பது அல்லது புனிதப்படுத்துவது அன்றி வேறென்ன ? அதற்கு மேல் ஒன்றும் நடக்கவில்லையே, அங்குதான் புனிதம் இருக்கிறது என்பீர்களா ? மனித மனங்களில் விகாரங்கள் வெவ்வேறு வகைகளில் தோன்ற வாய்ப்பு உள்ளது. அவற்றை மனிதன் தனக்குள் வைத்து ரசித்துக் கொள்ள வேண்டும்; முடிந்தால் தவிர்க்க வேண்டும். அத்தனையும் காவியமாக முடியாது. நீங்கள் இதற்கு மேல் எவ்வளவு கேட்டாலும் '96' ஐப் பற்றி விவாதிக்க என்னிடம் வேறெதுவும் கிடையாது. Tailpiece : In a lighter vein or even seriously - அது என்ன 94, 95,97,98 இவற்றையெல்லாம் விட்டு 96 ? அது எனது பார்வையில் உள்ள விரசம் (perversion) அன்றி மற்றபடி தற்செயலான தேர்வுதான் என்பீர்களா? சரி, ஏற்றுக் கொள்கிறேன். 'lighter vein' என நான் அறிவிப்புப் பலகை வைத்ததால், இதனைப் பேசு பொருளாக்கும் எண்ணம் கண்டிப்பாக இல்லை. மற்றபடி உங்கள் சாட்டையைச் சுழற்றலாம்.
  7. ஜெயமோகன் குறிப்பிடும் 'குழு மனப்பான்மை (mass mentality)' பற்றிய கருத்தை எந்த ஒரு குழுவின் மீதும் வைக்க, விமர்சிக்க யாருக்கும் உரிமையுண்டு. ஏனெனில் 'குழு மனப்பான்மை' என்பது சமூகத்தில் விரும்பத்தகாத எதார்த்தம். பெரும்பாலான மனிதர்களின் நடத்தையை அவர்கள் சார்ந்த குழுவே தீர்மானிக்கும் (It's termed peer culture) - ஒரு போராட்டத்தில் நாம் எடுக்க வேண்டிய ஆயுதத்தை நம் எதிரி தீர்மானிப்பது போல. ஆனால் 'மஞ்ஞுமல் பாய்ஸ்' திரைப்படத்தைப் பேசுகையில் இத்தலைப்பை ஜெயமோகன் கையிலெடுத்திருக்க வேண்டியதில்லை என்பது என் கருத்து. அதில் வரும் இளைஞர்கள் எந்தவொரு சமூகத்து இளைஞர்களையும் போல் அந்த வயதிற்குரிய சிறுபிள்ளைத்தனத்தனத்துடன் கதையை ஆரம்பிக்கிறார்கள். அவ்வளவே. பெரிய அழிவு நடவடிக்கைகளில் (destructive behaviour) அவர்கள் ஈடுபடுவதாகக் காட்டப்படவில்லை. பொதுவாக மலையாளத்து இளைஞர்களின் அழிவு நடவடிக்கைகள் பற்றி ஜெயமோகன் கருத்து கொண்டிருந்தால், அதனைப் பேச வேறு தளங்கள் உண்டு. அச்சமூகத்தை சுய பரிசோதனைக்கு உட்படுத்தும் நோக்கில் அவர் ஒரு தனிக் கட்டுரையாகவே எழுதலாம். அப்போதும் ஒரு சில குறிப்பிட்ட குழுவைச் சார்ந்தோரால் அவர் வசைபாடப் படலாம். ஒரு எழுத்தாளர் அதனை அறிவுப்பூர்வமாக எதிர்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இப்போதோ பெரும்பாலும் அறிவுசார் சமூகத்தினரின் தூற்றுதலுக்கு உள்ளாகிறாரே ! இந்த எனது பார்வையோடு ஜெயமோகனின் 'மஞ்ஞுமல் பாய்ஸ்' பற்றிய கருத்தைப் புறந்தள்ள எண்ணுகிறேன். இனி அப்படம் தொடர்பாக எனது சிந்தனையோட்டம் : 'மஞ்ஞுமல் பாய்ஸ்' படத்தை நான் ரசிக்கிறேன்; கொண்டாடுகிறேன். குணா படத்தின் அந்தப் பாடலைச் சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது என் கருத்து. மற்றபடி 'குணா' படம் வந்த போதே அந்தப் பாடல் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று; படம் அப்படியல்ல என்பதே என் கருத்தாக இருந்தது; இன்றும் இருக்கிறது. தமிழ்ச் சமூகம் அப்படத்தையும் அதே பாணியில் தனுஷ் நடித்து வெளிவந்த 'காதல் கொண்டேன்' படத்தையும் பெரிதாகக் கொண்டாடவில்லை என்பது என் போன்றோருக்கான ஆறுதல். ஒரு மனநிலை பிறழ்ந்த மனிதனின் காதலையும் (!!!), அவனால் கடத்தப்பட்ட நாயகியின் Stockholm syndrome ஐயும் எப்படிக் கொண்டாட முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. சில சமயங்களில் இயக்குநர், நடிகர்கள் திறமையால் மக்களின் கண்ணைக் கட்டி சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத கதைகளை ஏற்க வைத்து விடுவார்கள் - திருமணத்திற்குப் பின் பழைய காதலை (அவன் சட்டையை முதற்கொண்டு) நுகர்ந்து பார்க்கும் நெறி தவறிய உணர்வைப் புனிதப்படுத்தும் '96' போல.
  8. காசிக்குப் போனாலும் கருமம் தொலையாதா ? தமிழ்நாட்டையோ ஈழத்தையோ விட்டுச் செல்லும்போது தருமத்தை மட்டும் எடுத்துச் செல்வதுதானே! ஏன் கருமத்தையும் எடுத்துச் செல்கிறார்கள் ? (நல்ல பண்பாடுகளைத் தருமம் என்றும், சடங்குகளைக் கருமம் என்றும் குறித்தேன்; சும்மா ஓசை நயத்திற்காகதான் - rhyming). ஐயரை ஜெர்மனிக்குக் கொண்டு சென்றதே அதிகப்படி. சுவிஸ்ஸில் ஐயர் இல்லாத குறைதீர்க்க ஜெர்மனியிருந்து கொண்டு செல்ல வேண்டுமா ? நம்பிக்கை என்ற பெயரில் பிற்போக்குத்தனங்கள் அவ்விடங்களிலும் இல்லாமல் இல்லை. அனைத்துலகும் தன்னம்பிக்கை இல்லாத மனிதர்களால் நீக்கமற நிறைந்ததுதானே! போகிறவர்கள் வேறு தம் பங்கிற்குப் புதிதாகக் கொண்டு சென்றே ஆக வேண்டுமா ? இதில் மத வேறுபாடெல்லாம் கிடையாது. சமீபத்தில் அமெரிக்காவில் சில காலம் வசிக்கும் எனது மகள் ஒரு திருமண நிகழ்வுக்காகத் தேவலாயம் சென்ற கதையைச் சொன்னாள். ஒரு அமெரிக்கத் தோழியைத் தவிர, சென்றிருந்தோர் அனைவரும் தமிழர் - பாதிரியார் உட்பட. இங்கே சில சமயம் தேவாலயங்களில் நடைபெறும் நாடகத்தனத்துடன் மணநிகழ்வைப் பாதிரியார் அங்கேயும் நடத்தியதை வேடிக்கையாகக் குறிப்பிட்டாள் - அதுவும் அரைகுறை ஆங்கிலத்தில். ஒரு பெண் கணவனுக்கு எத்துணைக் கட்டுப்பட்டவள் என்று பைபிளில் ஏதோ இடத்திலிருந்து எடுத்து இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் அவர் பிரசங்கம் செய்தது பிற்போக்குத்தனமாகவும் வேடிக்கையாகவும் இருந்ததை அவளுக்கே உரிய அங்கத நடையில் எழுதியிருந்தாள். பாதிரியார் சொன்ன வாசகங்களைத்தான் பிராமண ஐயரும் சொல்வார். அது வடமொழியில் என்பதால் நமக்குப் புரிவதில்லை. எல்லா மத நூல்களும் ஏதோ ஒரு வகையில் (நாசூக்காகவாவது) பெண்ணடிமைத்தனத்தைப் போதிப்பவைதாமே ! ரசோதரன் அவர்களின் கதை/கட்டுரை ஏதேதோ சிந்தனைகளைத் தூண்டியதில் பகிர்ந்து விட்டேன். மிக விலகிச் சென்று விடுவேனோ என்ற பயம் ஏற்பட்டதும் நிறுத்தி விட்டேன்.
  9. உயிரை உருக்கிப் பேனாவில் ஊற்றி எழுதப்பட்ட கடிதம். வாசிப்பவரின் கண்ணீரில் கரைந்து போகும் கடிதம்.
  10. பின்வரும் இணைப்பின் காணொளியில் உள்ள தகவலின் உண்மைத்தன்மை யானறியேன். இதுபோன்ற செய்திகள் பலவற்றை யாழ் சொந்தங்கள் எதிர்கொண்டிருக்கலாம். ஈழத்தை வைத்து தமிழ்நாட்டில் ஆடப்படும் சிறிய, பெரிய அரசியல் முழுவதும் எனக்கு இன்னும் புரியவில்லையோ, என்னவோ ! இந்தியச் சிறைக் கொட்டடியில் தமது வாழ்வின் பெரும்பான்மையைக் கழித்து விடுதலையான சாந்தன் சமீபத்தில் மறைந்த இத்தருணத்தில் முகநூலில் வலம் வந்த காணொளி என் கவனத்தை ஈர்த்தது. யாழில் பதிவேற்றியதன் காரணம், இதுபற்றி யாழ் சொந்தங்களிடம் கூடுதல் தகவல் இருக்கலாம் என்ற எண்ணமே : https://www.facebook.com/share/v/uRFMDyavpfJAd1zH/?mibextid=oFDknk
  11. பொருநைக் கரையினிலே - 1 - சுப.சோமசுந்தரம் காவ்யா பதிப்பக நிறுவனர் பேரா.சு.சண்முகசுந்தரம் அவர்கள் தமது புதினங்களான பொருநை, கூவம் இவற்றில் முறையே தமது நெல்லை, சென்னை வாழ்க்கையினைச் சொல்லோவியமாய் வரைந்துள்ளார். இத்தலைப்புகளால் ஈர்க்கப்பட்ட அடியேன், "என் வாழ்க்கையைச் சித்தரிக்கப் பெரிதாக ஏதுமில்லையெனினும், பொருநைக் கரையிலேயே அநேகமாக வாழ்நாள் முழுதும் கழிக்கும், களிக்கும் பேறு பெற்ற நான் இங்கு கற்றதையும் பெற்றதையும் குறைந்தபட்சம் ஒரு கட்டுரையாய் அல்லது கட்டுரைத் தொடராய்ப் பதிவு செய்யலாமே என எண்ணியதன் வெளிப்பாடே இந்த என் எழுத்து. அக்காலத்தில் (ஓரளவு இக்காலத்திலும்) தலைப்பிள்ளை தாயாரின் ஊரில் பிறக்க வேண்டும் என்ற வழக்கத்தின்படி நான் நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணிக் (பொருநை) கரையிலுள்ள அரியநாயகிபுரம் எனும் அழகிய கிராமத்தில் பிறவி எடுக்கும் பேறு பெற்றேன். பிறந்த ஊர் என்பதும் பள்ளிப் பருவத்தில் நீண்ட விடுமுறை நாட்களில் அங்கிருந்த ஆச்சி - தாத்தா வீட்டிற்குச் செல்வேன் என்பதுமே எனக்கும் அந்த கிராமத்துக்குமான தொடர்பு. மற்றபடி எனது தந்தையாரின் ஊரான பாளையங்கோட்டையே நான் வளர்ந்த, வாழ்ந்த ஊர். அதுவும் பொருநையின் கரையில் அமைந்த ஊர் என்பது எனக்கான பெரும்பேறு. தந்தையார் நெல்லை மாவட்டத்தில் அரசுப்பணியில் இருந்ததால், எனது சிறார் பருவத்தில் அவர்கள் வேலை பார்த்த கிராமத்தில் ஒரு பள்ளியில் சேர்த்தார்கள். செய்தி அறிந்த என் ஆச்சி (இந்த ஆச்சி என் அப்பாவின் தாயார்) உடனே அங்கு வந்து, "எங்கெங்கெல்லாமோ இருந்து நம்ம ஊரைத் தேடி வந்து பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள். நீ என்ன இந்தப் பட்டிக்காட்டில் (!!) பிள்ளையைச் சேர்த்து இருக்கிறாய் ?" என்று என் அப்பாவைக் கடிந்து, என்னைப் பாளையங்கோட்டையில் படிக்க வைக்கத் தூக்கி வந்து விட்டாள். திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியதும் மேற்கொண்டு அன்று பேருந்து எதுவும் ஓடாது என்றதும் (அப்போதுதான் பிரதமர் நேரு இறந்த செய்தி வெளிவந்திருந்தது), என்னைத் தூக்கிக்கொண்டு சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாளை வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தாள். வரும்போது பாலத்தில் நின்றபடி எனக்குத் தாமிரபரணியைக் காண்பித்தாள். என் வாழ்க்கையில் விவரம் தெரிந்து நான் முதன் முதலில் பொருநையைக் கண்ணுற்ற தருணம் அது. நாங்கள் நின்ற அந்தப் பாலம் வரலாற்றுப் புகழ்பெற்ற சுலோச்சன முதலியார் பாலம் என்பதெல்லாம் பின்னர் என் ஆச்சி கதையாகக் கூறியது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஓரளவு இறுதியில் கட்டப்பட்டது இந்தப் பாலம். அதற்கு முன் பொருநையாற்றின் கிழக்கில் உள்ள பாளையங்கோட்டைக்கும் மேற்கில் உள்ள திருநெல்வேலிக்கும் இடையே போக்குவரத்து, பரிசல் மூலமாகவே நடைபெற்று வந்துள்ளது. பரிசலில் இடம் கிடைக்க அவற்றை இயக்குவோருக்குக் கையூட்டு தரவேண்டிய சூழல் நிலவியபோது, பரிசல் குழாமில் அடிக்கடி தகராறுகளும் வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்று வந்துள்ளன. எனவே மாவட்ட ஆட்சியரின் பல பரிந்துரைகளுக்குப் பின் அங்கு ஒரு பாலம் அமைக்க ஆங்கில அரசால் ஒத்துக் கொள்ளப்பட்டது. எனினும் அதற்குரிய திட்டச் செலவான ஐம்பதாயிரம் ரூபாயை அதன் பயனாளிகளான மக்களிடமே நன்கொடையாகப் பெறத் திட்டமிடப்பட்டது. தங்களுக்குப் பெரிதும் பயனில்லாத திட்டங்களுக்கு ஆங்கிலேய அரசு (அன்றைய கம்பெனி அரசு) வரி வருவாயில் இருந்து செலவு செய்வதில்லை. அக்காலத்தில் செல்வந்தரும் நல்லுள்ளம் படைத்தவருமான திரு. சுலோச்சன முதலியார், அவருக்குக் கௌரவப் பதவியாக அளிக்கப்பட்டிருந்த சிரஸ்தார் பொறுப்பில் இருந்தார். மக்களிடம் நன்கொடை பெற்றுப் பாலம் கட்டும் பொறுப்பை அவரிடமே அளித்தது கம்பெனி அரசு. செல்வந்தரான அவர் பிறரிடம் நன்கொடை கேட்பதில் ஏற்பட்ட தயக்கத்தின் காரணமாகத் தமது சொந்தச் செலவிலேயே பாலம் கட்டித் தரத் தீர்மானித்தார். சில சொத்துக்களை விற்றது போக எஞ்சிய தொகைக்குத் தமது துணைவியாரின் இசைவுடன் அவர்தம் நகைகளையும் விற்றுக் கட்டினார். லண்டனில் தேம்ஸ் நதியின் மீது உள்ள 'வெஸ்ட் மினிஸ்டர்' பாலத்தின் மாதிரியில் கட்டப்பட்டது இப்பாலம். பின்னர் இயல்பாக சுலோச்சன முதலியார் பெயராலேயே இப்பாலம் வழங்கலாயிற்று. இப்பாலத்தையொட்டிய ஆற்றுப்பகுதியில் நான் கண்டவையும் கேட்டவையும் படித்தவையும் சில எப்போதும் நெஞ்சில் நிழலாடுகின்றன. பாலத்திலிருந்து பார்த்தால் தெரிகிறதே தைப்பூச மண்டபம் ! 1908 ல் 'திருநெல்வேலி எழுச்சி' எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க, மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்திற்குச் சில நாட்கள் முன்பு வங்காளப் புரட்சியாளர் விபின் சந்திரபாலின் விடுதலையைக் கொண்டாடும் வகையில் வ.உ.சிதம்பரனாரும் சுப்பிரமணிய சிவாவும் ஆங்கில ஆட்சியரின் தடையை மீறி இதே தைப்பூச மண்டபத்தில் வீர எழுச்சியுரை நிகழ்த்தினர் என்பது தோழர் இரா.வேங்கடாசலபதியின் 'திருநெல்வேலி எழுச்சி'யில் வாசித்து அறிந்தது. நெல்லை சந்திப்பில் அப்போது செயல்பட்ட ம.தி.தா. இந்துக் கல்லூரி வளாகத்தில் ஆரம்பித்த ஊர்வலம் தபால் நிலையம், நகராட்சி வளாகம் போன்றவற்றைத் தீக்கிரையாக்கிய திருநெல்வேலி எழுச்சியும், அதைத்தொடர்ந்து ஆங்கிலேயரின் அடக்கு முறையும் வாசித்து அறிந்தவை. நெல்லைக்காரனாக என்னைத் தலைநிமிரச் செய்பவை. 1970 களின் ஆரம்பத்தில் தூய சவேரியார் கல்லூரிப் பேராசிரியர் சீனிவாசன் அவர்கள் காவல்துறையினரால் அநியாயமாகத் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட பெருங் கொந்தளிப்பில் மாணவர் லூர்துநாதன் காவல்துறையின் தடியடிக்குப் பலியானது சுலோச்சன முதலியார் பாலத்திற்குக் கீழேதான். லூர்துநாதனை ஆற்றில் இருந்து மக்கள் தூக்கிய காட்சியை ஒரு பள்ளி மாணவனாக நான் பார்த்தது நேற்று நடந்தது போல் தோன்றுகிறது. 1999 ல் கூலி உயர்வு உட்பட நியாயமான காரணங்களுக்காகப் போராடிய மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் காவல்துறையால் ஓட ஓட விரட்டப்பட்டதும், உயிரைக் காத்துக் கொள்ள ஆற்றில் இறங்கியவர்களையும் விடாமல் அடித்ததில் பெண்கள், கைக்குழந்தை உட்பட பதினேழு பேர் உயிர்நீத்ததும் பொருநைக் கரைக்கு ஏற்பட்ட நீங்காத கறை. முதலாளிகளுக்குச் சேவகம் செய்வதில் ஜனநாயக (!) அரசுகள் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல போலும் ! தினமும் பாலத்தைக் கடந்து அலுவலகம் செல்லுகையில் இரத்தவாடை அடிக்கிறதே, அது என் போன்றோர்க்கு ஏற்பட்ட மனநல பாதிப்போ ! 1992 லும் தற்போது 2024 லும் பாலத்தை மூழ்கடித்துப் பொருநை ஆடிய கோரத்தாண்டவமும் மக்களுக்கு ஏற்பட்ட பெருஞ்சேதமும் என்றென்றும் நெஞ்சைப் பதற வைப்பவை. சுலோச்சன முதலியார் பாலத்தைக் காட்டிய ஆச்சி அதனைக் கடந்து சிறியதொரு பாலத்தின் கீழே ஓடுகிற ஒரு ஓடையைக் காட்டினாள். அதன் பெயர் 'பிள்ளையைப் போட்டுப் பலாப்பழம் எடுத்த ஓடை' என்றாள். பிற்காலத்தில் சுருக்கமாக 'பலாப்பழ ஓடை' என்றாகி தற்போது யாருக்கும் பெயரே தெரியாத ஓடையாகி விட்டது. ஒன்பதாம் நூற்றாண்டின் நடுவில் நிகழ்ந்ததாக ஒரு கதை சொன்னாள். அந்த ஓடையில் மிதந்து வந்த ஒரு பெரிய பலாப்பழத்தை எடுக்க ஆசைப்பட்ட தாய் ஒருத்தி தனது குழந்தையைக் கரையில் விட்டு விட்டுப் பலாப்பழத்தை விரட்டிச் சென்றிருக்கிறாள். குழந்தை மெதுவாகத் தவழ்ந்து ஆற்றில் மூழ்கி விட்டது. எனவே அந்த ஓடைப்பாலத்திற்கு அப்பெயர். இப்படி எத்தனையோ கதைகள் ஊரைச் சேர்ந்த பலர் சொல்வதால் அவற்றில் சில ஓரளவு உண்மையாய் இருக்க வேண்டும். எது எப்படியோ சில செவிவழிக் கதைகள் சுவாரஸ்யமானவை. பழைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் புகழ்பெற்ற தாமிர சபையான நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோயில், சித்திர சபையான குற்றாலநாதர் - குழல்வாய்மொழி அம்மை திருக்கோயில், நவ திருப்பதி, நவகைலாய திருத்தலங்கள், குற்றாலம் மற்றும் பாபநாச நீர்வீழ்ச்சிகள், திருநெல்வேலி அல்வா, பத்தமடைப் பாய் என நெல்லையின் சிறப்புகள் எண்ணிலடங்கா. ஐவகை நிலங்களையும் தன்னகத்தே கொண்டது நான் சிறுவனாய்ப் பார்த்த பழைய திருநெல்வேலி மாவட்டம். இவையெல்லாம் பெரும்பாலும் அனைவரும் அறிந்தமையின், வெகுசனம் அறியாத சிலவற்றைத் தொட்டுச் செல்வது இங்கு பொருந்தி அமைவது. நானே கண்டுணர்ந்த எனது எண்ணவோட்டத்தைப் பகிர்ந்து அளித்தல் அதுவேயாம். இன்றைய பாளையங்கோட்டை நகரின் நடுப்பகுதிக்கு மேற்கே 'மேலக்கோட்டை வாசல்' உள்ளது. அதன் மேல் தளத்தில் 'மேடைப் போலீஸ் ஸ்டேஷன்' இருந்தது. இப்போது காவல்துறை சார்ந்த தகவல் கட்டுப்பாட்டு நிலையம் உள்ளது. கிழக்கே 'கீழக்கோட்டை வாசல்' உள்ளது. அதில் தற்போது தமிழ்நாடு அரசு அருங்காட்சியகம் இருக்கிறது. கோட்டையின் வடபக்க மதிற்சுவர் இன்றைய வடக்குக் கடைவீதி வழியாகச் சென்றது; தென்புறத்து மதிற்சுவர் சவேரியார் கல்லூரியின் முன்புறம் தற்போது செல்லும் முக்கிய சாலையின் மீது அமைந்திருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையப்பகுதி வரை பாளையங்கோட்டை ஒரு கோட்டை நகரமாக இருந்துள்ளது. அது ஒரு கற்கோட்டை. பதினெட்டாம் நூற்றாண்டிலேயே சிதிலமடையும் நிலையில் இருந்த கோட்டையின் மதிற் சுவர்கள் மக்களின் பாதுகாப்பு கருதி ஒரு சட்ட வரைவின் மூலமாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயரால் தகர்க்கப்பட்டது. கோட்டையின் கிழக்கு, மேற்கு வாசல்கள் உறுதியானவையாக வீரர்கள் தங்கும் வசதியுடன் இருந்தன. அவை மட்டும் இடிபடாமல் மேற்கூறியவாறு இன்றும் பயன்பாட்டில் உள்ளன. நான் சிறுவனாக இருக்கும்போது அக்கோட்டை பற்றி என் ஆச்சி உட்பட சுற்றாரும் உற்றாரும் சொன்ன தவறான பாடம், அது வீரபாண்டிய கட்டபொம்மனால் கட்டப்பட்டது - அதாவது, பாளையக்காரர்களின் கோட்டை - என்பது. அதற்கேற்றாற் போல் சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கோட்டை இருந்த இடத்தின் தென்மேற்கு மூலையில் (பாளை பேருந்து நிலையம் அருகில்) கட்டபொம்மன் சிலை நிறுவப்பட்டிருந்தது. இக்கோட்டை நகரத்துக்கு 'பாளையங்கோட்டை' என்பது ஒரு தவறான பெயர் (misnomer) என்பதை என் குருநாதர் பேரா. தொ.பரமசிவன் அவர்களிடமே தெரிந்து கொண்டேன். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் திருநெல்வேலி ஆட்சியராயிருந்த ஜாக்ஸன் துரை பாஞ்சாலங்குறிச்சி பகுதியில் ஆட்சி புரிந்த வீரபாண்டிய கட்டபொம்மனை, வரி கட்டாமல் தவறியமைக்காக பாளையங்கோட்டை (அப்போது ஸ்ரீ வல்லப மங்கலத்தின் ஒரு பகுதி) கிழக்கு வாசலில் அக்காலத்தில் அமைந்திருந்த கச்சேரியில் (நீதிமன்றத்தில்) ஆஜராகுமாறு பணித்திருந்தார். அதன்படியும், தமது அமைச்சர் தானாபதிப் பிள்ளையின் ஆலோசனையின்படியும் கட்டபொம்மன் ஆஜரானார். மக்களால் பரவலாகப் பேசப்பட்ட இந்நிகழ்வு இவ்வூருக்கும் பாளையக்காரர்களுக்கும் உள்ள ஒரு தொடர்பு (ஆஜரான கட்டபொம்மனை ஜாக்ஸன் சந்திக்காமல் குற்றாலத்திற்கும் ராமநாதபுரத்திற்கும் பாளையக்காரர் படையினை அலைய விட்டதும், ராமநாதபுரத்தில் ஆங்கிலேய கம்பெனி படையினரோடு மோதல் ஏற்பட்டதும் தனிக்கதை). மற்றுமொரு தொடர்பு உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பியான ஊமைத்துரை, முதல் பாளையக்காரர் போரில் கம்பெனிப் படையினரால் பிடிக்கப்பட்டு பாளையங்கோட்டையின் (அன்றைய ஸ்ரீ வல்லபமங்கலம்) கிழக்குக்கோட்டை வாசலின் கீழ்த் தளத்தில் சிறை வைக்கப்பட்டார். பின்னர் 1801 ல் அச்சிறையில் இருந்து தப்பினார் (சிறிது காலத்திற்குப் பின்னர் வேறு பாளையக்காரர்களாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டு, ஆங்கிலேயரிடம் மீண்டும் சிறைப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார் என்பதுவும் தனிக்கதை). இவ்விரண்டு நிகழ்வுகளும் மக்களால் பரவலாகப் பேசப்பட்டன. இக்கதைகளை மக்களிடம் பிற்காலத்தில் வாய்மொழியாகத் திரட்டிய ஒரு ஆங்கிலேய வரலாற்று ஆய்வாளர் (அவரது பெயர் தொ.ப என்னிடம் சொல்லி நான் மறந்தது. தொ.ப இப்போது இல்லை. வாய்ப்பை ஏற்படுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆவணக் காப்பகத்தில் பெயரைத் தேட வேண்டும்) மக்கள் பேசிய மொழியிலிருந்து அரைகுறையாகப் புரிந்து, அக்கோட்டை பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர்கள் கட்டியது எனப் பதிவு செய்துவிட்டார். அவர் ஒரு அரைகுறை வரலாற்று ஆய்வாளர் என்பதற்குச் சான்று - ஊர் மக்கள் ஏதோ ஒரு மலபாரி மொழி பேசினர் என்று அவர் குறிப்பது; தொன்மையான தமிழ் மொழி பற்றி ஏதும் அறியாதவர் என்பது. உடனே அப்போது இருந்த அரைவேக்காட்டு மாவட்ட அதிகார வர்க்கம் ஊருக்கு 'பாளையங்கோட்டை' எனப் பெயரிட்டிருக்க வாய்ப்புள்ளது. மற்றபடி அக்கோட்டை ஒன்பதாம் நூற்றாண்டில் வீரநாராயண பராந்தக பாண்டியனால் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பது கோட்டைக்கு நடுவே அம்மன்னனால் கட்டப்பட்ட கோபாலசுவாமி கோயிலில் கிடைத்த கல்வெட்டுகளின் தரவுகள் அடிப்படையில் அனுமான விதியாகக் (rule of inference) கொள்ளலாம் என்று பண்பாட்டு அறிஞர் தொ.பரமசிவன் அவர்களிடம் கேட்டிருக்கிறேன். அக்கோயிலின் பெருமாள் அம்மன்னன் பெயராலேயே 'வீரநாராயணர்' (வீரநாராயணர் அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி) என்று முதலில் அழைக்கப்பட்டு, இப்போதிருந்து சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு 'வேதநாராயணர்' (வேத நாராயணர் அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி) எனப் பெயர் மாற்றம் பெற்ற தகவல் அக்கல்வெட்டுகளில் கிடைக்கும் செய்தி. வேதாகமத்தினருக்கு 'வீரநாராயணர்' சரி வரவில்லை போலும். மேலும் வீரநாராயண பராந்தகனின் தந்தை பராந்தக நெடுஞ்சடையன் ஸ்ரீமாறன் ஸ்ரீ வல்லபன் ஆவார்; தனது தந்தையார் பெயரைக் கொண்டே அவ்வூருக்கு 'ஸ்ரீ வல்லப மங்கலம்' எனும் பெயர் சூட்டினான். பின்னர் அது 'பாளையங்கோட்டை' ஆன கதை முன்னம் நாம் பார்த்தது. மேற்கூறிய ராஜகோபாலசுவாமி கோயிலுக்குக் கிழக்கே சற்று தூரத்தில் அமைந்த சிவன் கோயில் (திரிபுராந்தீஸ்வரர் ஆலயம்) சேர மன்னன் உதயமார்த்தாண்ட வர்மன் ஆட்சிக் காலத்தில் (கிபி 16 ஆம் நூற்றாண்டில்) கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இக்கோயிலிலும் பதினொரு கல்வெட்டுகள் கிடைக்கப் பெறுகின்றன. கோட்டை மற்றும் இவ்விரண்டு கோயில்கள் பற்றி மேலும் செய்திகளைப் பெற பேரா. தொ.பரமசிவன், பேரா. ச.நவநீதகிருஷ்ணன் எழுதிய "பாளையங்கோட்டை - ஒரு மூதூரின் வரலாறு" என்னும் நூலில் காணலாம். கோட்டையின் மேற்கு வாசலுக்கு அருகில் உள்ள ராமசாமி கோயில் பற்றிய குறிப்பும் அந்நூலில் உள்ளது. இவை தவிர நாட்டார் தெய்வங்களாக சிறிய அம்மன் கோயில்கள் பல உள்ளமை கோட்டை நகரத்தின் மற்றொரு வரலாற்றுச் சிறப்பு. இந்த அம்மன்கள் போர்க்காலத்தின் தாய்த் தெய்வங்கள் ஆகும் (War Deities). கோயில்கள் தோன்றிய வரிசைப்படி இந்த அம்மன்கள் சகோதரிகளாக மக்களால் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். மூத்த அம்மனான ஆயிரத்தம்மன் ஆயிரம் படை வீரர்களைக் கொண்ட பாசறைத் தெய்வமாக இருந்திருக்க வேண்டும். பதினெட்டாம் நூற்றாண்டில் போருக்குச் செல்லுமுன் இக்கோயிலில் வீரன் ஒருவனை நரபலி கொடுக்கும் வழக்கமும், பின்னர் அது எருமைப் பலியாகி, தற்காலத்தில் போர்க்கால விழாவான தசராவில் ஆடு பலியாக உருமாறி உள்ளது என்பது மக்களிடம் உள்ள செவிவழிச் செய்தி. பொருநையாற்றின் கரையில் வண்ணார்பேட்டையில் அமைந்துள்ளது பேராற்றுச்செல்வி அம்மன் கோயில். போருக்குச் செல்லும்போது கோட்டையின் வடக்கு வாசல் வழியாகவே படை கிளம்பி செல்வது வழக்கம். எனவே அவ்வாசலருகில் அமைந்திருக்கும் அம்மனான 'வடக்கு வாசல் செல்வி' இப்போது 'வடக்குவாச் செல்வி'. இப்படியே பல. இப்போது வருடந்தோறும் பாளையில் தசரா எனக் கொண்டாடப்படும் போர்க்கால விழா சுற்று வட்டாரத்தில் மிகப் பிரபலம். சுமார் பதினைந்து அம்மன்கள் சப்பர பவானியாக வருவது மக்களுக்குக் கண்கொள்ளாக் காட்சி. பதினெட்டாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் பாளையங்கோட்டை சிறிது காலம் ஆற்காட்டு நவாபின் தளபதியாய் இருந்த யூசுப் கானின் கட்டுப்பாட்டில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அப்போது இப்பகுதியில் தோன்றிய இஸ்லாமியர்களின் சந்தனக்கூடு ஊர்வலத்திற்கு எதிர்வினையாகவே, யூசுப் கான் ஆங்கிலேயரால் கொல்லப்பட்ட பிறகு, அம்மன் கோயில்களின் சப்பர பவனியோடு தசரா விழா கொண்டாடும் வழக்கம் பாளையில் தோன்றியிருக்கலாம் என்ற தொ.ப வின் ஊகத்தைக் கேட்டிருக்கிறேன். பழைய கோட்டையில் மேலவாசலில் இருந்து வட திசையில் சென்ற மதிலை ஒட்டிய தெரு சிறிது காலம் முன்பு வரை பாடைத் தெரு என வழங்கியது. ஊரில் இறந்தோரைத் தூக்கிச் செல்லும் பாடைகள் மற்ற தெருக்களுக்கு ஊடே செல்லாமல் ஊரின் மேற்குக் கோடியில் இருந்த அத்தெருவின் வழியே சென்று தாமிரபரணியின் வெள்ளக்கோயில் பகுதியைச் சென்றடையும். எனவே அது பாடைத் தெரு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் மதிற்சுவர் இடிக்கப்பட்ட பின் அங்கே ஒரு ராணுவ உணவகம் (military canteen) அமைந்திருந்தது. அது பஞ்சாபி மொழியில் 'லங்கர் கானா' என அழைக்கப்பட்டது. சீக்கிய குருத்வாராக்களில் சமையல் செய்யும் இடத்திற்குப் பெயர் லங்கர் கானா. பாடைத் தெருவில் வீடுகள் வர ஆரம்பித்த பின் தெருவின் பெயரை 'லங்கர் கானா தெரு' என மாற்றிவிட்டனர். அங்கு வாழ்ந்த மக்களுக்கு 'பாடை' ஏதோ மனதை உறுத்தியிருக்கலாம். அத்தெருவிற்குக் கிழக்கே அதற்கு இணையாகச் செல்வது பெருமாள் மேல ரத வீதியாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவில் கோட்டை ஆங்கிலக் கம்பெனிப் படை மற்றும் யூசுப் கானின் தலைமையில் ஆற்காட்டு நவாபின் படை கோட்டையைத் தாக்கிய போது இறந்த வீரர்களின் உடல்கள் விழுந்த இடத்தில் சுடலை, கருப்பசாமி முதலிய நாட்டார் தெய்வங்களைத் தோற்றுவித்தனர். மேல ரத வீதியின் மேற்குப் புறத்தில் வீடு கட்டும் போது அத்தெய்வங்களின் பூடங்களை வீடுகளின் பின்புறம் வைத்துக் கட்டினர். வருடத்தில் ஒருமுறை அத்தெய்வங்களுக்குப் படையல் வைக்கும்போது கருப்பசாமிக்கு தோசை மாவில் கருப்பட்டி கலந்து, சுட்டு கருப்பட்டி தோசை படைக்கும் வழக்கம் இருந்தது. அதன் விவரம் மூத்தோரிடம் கர்ண பரம்பரையாக வந்திருக்க வாய்ப்பு இருந்தமையாலும், நான் அந்தத் தெருக்காரன் என்பதாலும் அவ்விவரம் சேகரிக்க பேரா. தொ.ப என்னைப் பணித்தார். கருப்பசாமிக்கும் கருப்பட்டிக்கும் பொதுவில் 'கருப்பு' எனும் வேடிக்கை விளக்கம் தவிர என்னால் வேறு விவரம் சேகரிக்க இயலவில்லை (!). கோட்டையைப் பாதுகாத்த படை பெரும்பாலும் மதுரையிலிருந்து வந்திருந்ததால், இறந்த வீரன் சார்ந்த இடத்தை வைத்து அவன் கருப்பசாமி ஆகியிருப்பான் என்பதும் அவன் வாழ்ந்த இடத்தில் கருப்பசாமிக்கான படையலில் அந்த வழக்கம் இருந்திருக்கலாம் என்பதும் ஒரு ஊகம். இப்படி பல வழக்கங்களும் கதைகளும் ! கருப்பட்டி தோசை கூட பண்பாட்டு அசைவின் ஒரு குறியீடோ ! இவ்வாறு நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுக்கான சிறந்த களமாக பாளையங்கோட்டை திகழ்வதும் இவ்வூருக்கான ஒரு சிறப்பு. ஒவ்வொரு சாதி, சமய, இனக்குழுவின் பங்களிப்பும் உண்டு. உதாரணமாக, விசயநகர ஆட்சிக் காலத்திலும் பின்னர் திருமலை நாயக்கர் காலத்திலும் மதுரைக்குப் புலம்பெயர்ந்து தமிழ்நாட்டில் பரவிய சௌராட்டிரர்களின் பங்களிப்பினைப் பாளை சிவன் கோயில் சுற்று வட்டாரத்தில் காணலாம் - நெல்லை நகரில் தற்காலத்தில் நெல்லையப்பர் கோயில் சமீபத்தில் மார்வாடி ஜைன சமூகத்தினரைப் போல. நமது பாளையங்கோட்டைச் சித்திரம் இதுகாறும் பெரும்பாலும் கோயில்களையும் சாமிகளையும் சுற்றி அமைந்தது இயல்பான ஒன்றே ! நாத்திகராயிருப்பினும் பேரா. தொ.பரமசிவன் மக்களை வாசிக்க அவர்களின் கோயில்களையும் சமய நம்பிக்கைகளையும் அவை சார்ந்த பழக்க வழக்கங்களையும் வாசிக்க வேண்டுமென்பார். அவரிடம் பாடம் படித்த மாணவன் வேறு எப்படி எழுத முடியும் ? சரி, கோவில்கள், கோட்டை கொத்தளங்கள் மட்டும் இன்றைய பாளையங்கோட்டை ஆகுமா ? கோட்டை இடிந்து போயிற்றே ! அதன் எச்சங்களான மேல, கீழக்கோட்டை வாசல்கள் வரலாற்றுச் சின்னங்கள் ஆகிவிட்டனவே ! பாளையங்கோட்டைக்காரனாகிய நான் 'நான்' ஆக ஆனது 'தென்னகத்து ஆக்ஸ்போர்டு' என்று பெருமையுடன் நிற்கும் பாளையங்கோட்டையில் ஆயிற்றே ! அந்த முகத்தை இவ்வூருக்குத் தந்த கிறித்தவ மிஷனரிகளின் வரலாற்றைக் கூறினால்தானே இவ்வூரின் வரலாறு ஓரளவு முழுமை பெறும் ? பொருநைக்கு அக்கரையில் அமைந்த நெல்லை நகரத்தையும் சிறிதளவு தொட்டுக் காட்டினால்தானே கட்டுரைத் தலைப்பிற்கும், நான் அநேகமாகத் தினந்தோறும் அந்நகரைக் கடந்து சென்றதற்கும் நியாயம் கற்பிப்பதாகும் ? இவற்றை அடுத்த தொடராகப் பார்ப்போமா ?
  12. யாழ் களச் சொந்தங்களுக்கு வணக்கம். நான் எழுதும் கட்டுரைகள் அனைத்தும் என் சுய ஆக்கங்களாய் இருப்பினும், பெரும்பாலும் 'சமூகச் சாளரம்', 'தமிழும் நயமும்' பகுதிகளில் பதிவிடுகிறேன். சமீப காலமாக ஒளிப்படம் இணைந்த சில கட்டுரைகளை முகநூலில் பதிந்து பின்னர் யாழில் அவற்றின் இணைப்பை 'சமூகவலை உலகம்' பகுதியில் பதிகிறேன். ஒன்றிரண்டு கட்டுரைகளை 'யாழ் அகவை - சுய ஆக்கங்கள்' பகுதிக்கு நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மாற்றித் தந்தார்கள். நேராக 'சுய ஆக்கங்கள்' பகுதியில் பதிய வழி உள்ளதா என்பதை யாழ் உறவுகளில் யாராவது தெரிவிக்கக் கேட்டுக் கொள்கிறேன். மற்றபடி மாற்றித் தரக் கோருதலையும் முறையாக எந்த இடத்தில் எழுதலாம் எனக் கூறவும்.
  13. தங்களின் வாழ்த்துக்கும் ஊக்கமளிக்கும் ஆர்வத்திற்கும் நன்றி, திரு. இணையவன் ! இப்போதைக்கு காவ்யா பதிப்பகம், Commonfolks, Dinamalar books, நெல்லை பாரதி புத்தகாலயம் மற்றும் சில புத்தக நிலையங்களில் மட்டுமே கிடைக்கும். Amazon அல்லது Kindle ல் ஏற்றும் எண்ணம் உள்ளது. அந்த அளவு நான் அறியப்பட்டால், உங்களுக்குத் தெரியப்படுத்துவேன். மீண்டும் நன்றி, ஐயா !
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.