• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates     

 1. Past hour
 2. இனிமேல் தேயிலை உங்களுக்கு விற்கமாட்டம் எண்டு வெருட்ட வேணும். அப்பதான் அமெரிக்கா ஐரோப்பா எல்லாம் வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருப்பினம்.
 3. எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் இப்படி சகட்டு மேனிக்கு, ஒரு பொதுத் தளத்தில் குற்றம்சாட்டுவதுக்கு கண்டனங்கள். செய்தியில் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கு இது ஒரு பாதுகாப்பற்ற கடவை என்று. அப்படி இருந்தும் பாதிப்பட்டவரையே குற்றம் சொல்லுவது எந்த வகையில் சரியானதாக இருக்கும்?
 4. Today
 5. அதெப்படி கள்ளவாகனம் ஓட்டுபவர்கள் தான் அப்படி செய்வார்கள் என்று சொல்கிறீர்கள்.
 6. மைத்திரியால் காப்பாற்றப்பட்ட தரப்புகள் புருஜோத்தமன் தங்கமயில் / 2018 நவம்பர் 21 புதன்கிழமை, மு.ப. 01:44 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம், நாட்டை நாளுக்கு நாள், அதள பாதாளத்தை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றது. அரசியல் ஸ்திரத்தன்மை மாத்திரமல்ல, பொருளாதாரம், நிர்வாகம் போன்ற துறைகளிலும் முடக்கம் ஏற்பட்டிருக்கின்றது. வருட இறுதியில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் குழப்பத்தால், அடுத்த வருடத்துக்கான பாதீட்டுத் திட்டம் கேள்விக்குறியாகியுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்கும் வரை, நாடாளுமன்றத்தில் எந்தவொரு சிறிய விடயத்தையும் மைத்திரியால் நிறைவேற்ற முடியாது. அதைப் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுமதிக்கமாட்டார்கள். அப்படியான நிலையில், அடுத்த ஆண்டுக்கான நிதியை எங்கிருந்து, எவ்வாறு பெற்றுக் கொள்வது என்கிற கேள்வி, அரச நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. பாதீட்டுத் திட்டத்தில் அங்கிகரிக்கப்படாமல், நிதி ஒதுக்கீடுகளைத் திறைசேரி எப்படி அனுமதிக்கும்? அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை யார் வழங்குவது என்று, அதைச் சாதாரணமாக இவ்வாறு கேட்கலாம். மைத்திரி நாட்டை, எந்த இடத்தில் நிறுத்தியிருக்கிறார் என்பதற்கு இதுவே போதுமானது. ஆனாலும், மைத்திரியின் தற்போதைய நடவடிக்கைகளால் காப்பாற்றப்பட்ட தரப்புகளும் இருக்கவே செய்கின்றன. அவை குறித்துத்தான் இந்தப் பத்தி பேச விளைகிறது. ராஜபக்‌ஷக்களுக்கு எதிராக, நல்லாட்சிக் கூட்டணி உருவான போது, நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்பை வெளியிட்டார்கள். ஊழல் மோசடிகளுக்கு எதிரான நிலையொன்றின் வழி, துரித அபிவிருத்தி பற்றிய நம்பிக்கை அது. ஆனால், அது 100 நாள் வேலைத்திட்டத்தின் போதே, தடுமாற்றத்தைக் காண்பித்தது. ஆனாலும், பொதுத் தேர்தலின் பின்னராக தேசிய அரசாங்கத்தை அமைத்து, விடயங்களை முன்னேற்றகரமாக மேற்கொள்ள முடியும் என்று, நல்லாட்சிக் கூட்டணிக்குள் இருந்த தரப்புகள் பலவும் நம்பின. குறிப்பாக, நல்லாட்சிக் கூட்டணிக்குள் பங்காளிகளாக இருந்த தமிழ்- முஸ்லிம் கட்சிகள். ஏனெனில், அந்த நம்பிக்கைகளை மக்களிடம் வழங்கியே, என்றைக்கும் பெற்றிராத அளவு வாக்குகளை, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி, ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பெற்றன. ரவூப் ஹக்கீம், முஸ்லிம் காங்கிரஸின் வாங்கு வங்கியைச் சிதைத்துவிடாமல் காப்பாற்றி, ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று, தன்னை நிலைப்படுத்திக் கொண்டார். இன்னொரு பக்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூட, நல்லாட்சி அரசாங்கத்தினூடு தேசிய இனப்பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுவிடலாம் என்கிற நம்பிக்கையைப் பெருமளவு விதைத்து, வாக்கு அறுவடை செய்திருந்தது. குறிப்பாக, அப்போதைய வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிவில் சமூக அமைப்புகள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்டவற்றின் தடைகளைத் தாண்டி, பெருவாரியான வெற்றியைப் பெற்றது. அது கிட்டத்தட்ட ஏக அங்கிகாரம் என்கிற நிலையையும் எட்டியிருந்தது. ஆனால், நல்லாட்சி அரசாங்கத்தால் கடந்த மூன்றரை ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்டிருப்பது ஒரு சில மாற்றங்களே. ஊழல் மோசடிக்கு எதிரான நிலைப்பாட்டில் நின்று, ஆட்சிப்பொறுப்பை ஏற்ற மைத்திரியாலும் ரணிலாலும் தங்களுடைய அமைச்சரவையை முறையாகப் பேண முடியவில்லை. நாட்டின் பொருளாதாரம், நினைத்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருக்கவில்லை. “ராஜபக்‌ஷக்கள் ஏற்படுத்திவிட்டுப்போன பாதிப்புகளைச் சரி செய்வதற்கே, காலம் போதுமானதாக இல்லை” என்று, ரணில் குறைபட்டுக் கொண்டார். அத்தோடு, ரணிலின் கூட்டாளிகளின் நடவடிக்கைகளால், அரசாங்கத்தின் மீதான அழுத்தங்களும் அதிகரிக்கவே செய்தன. ராஜபக்‌ஷக்களின் காலத்தில் அதிகரித்திருந்த குடும்ப ஆதிக்கத்தின் அளவுக்கு இல்லையென்றாலும், அதன் குறைந்த வடிவமொன்று, நல்லாட்சி அரசாங்க காலத்திலும் நீடித்தது. மைத்திரியின் குடும்ப ஆதிக்கம், அரச நிறுவனங்களில் தலை காட்டியது. அத்தோடு, ஐக்கிய தேசியக் கட்சி- சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கு இடையிலான மோதல் நிலை என்பது, அமைச்சரவையை ஒட்டுமொத்தமாக ஸ்தம்பிக்கச் செய்தது. திட்டங்கள் வரையப்படுவதோடு நின்று போயின. அவற்றைச் செயற்படுத்துவது சார்ந்த விடயங்களில், நேரம் வீணடிக்கப்பட்டது. சின்னச் சின்ன எதிர்ப்புகளையெல்லாம் பாரிய எதிர்ப்புகளாக எதிர்கொள்ள ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்துக்கு மேல், தைரியமான ஓர் ஆட்சி நிலையொன்றைப் பேணுவதில் தவறினார்கள். இவ்வாறான, சூழலால் ஆட்சியில் அங்கம் வகித்த தமிழ், முஸ்லிம் கட்சிகளாலும் மக்களிடம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழல் உருவானது. கடந்த பல தசாப்தங்களுக்குப் பின்னர், தொண்டமான்களிடம் இருந்த மலையக மக்களின் பெரும்பான்மை வாக்குகளை, இன்னொரு தரப்புப் பெற்றிருப்பது இதுவே முதல் முறை. பழனி திகாம்பரமும், வேலுச்சாமி இராதாகிருஷ்ணனும் பெருவாரியாக மேல்நோக்கி வந்தார்கள். அவர்களை ஒருங்கிணைத்த தலைவராக, மனோ அங்கிகாரம் பெற்றார். அது அவருக்கு, ஆட்சிக்குள் ஹக்கீமும், ரிஷாட்டும் பெற்ற முக்கியத்துவத்துக்கு ஈடான அந்தஸ்தைப் பெற்றுத்தந்தது. எனினும், எதிர்பார்த்த அளவுக்கு, மலையகக் கிராமங்களின் அபிவிருத்தியிலோ, அவர்களின் சம்பளப் பிரச்சினையிலோ பாரிய வெற்றியைப் பெற முடியவில்லை. அதற்கு, அரசாங்கமும் அவ்வளவுக்கு ஒத்துழைக்கவில்லை. இந்தநிலை, மலையக அமைச்சர்கள் மீது பெரும் அதிருப்தியைத் தோற்றுவித்தது. தெற்காசியத் தேர்தல்களில் வாக்களிப்பு என்பது, இருப்பதில் எது சிறந்தது என்கிற நிலையிலேயே இடம்பெற்று வருகின்றது. அதன் போக்கில்தான், ராஜபக்‌ஷக்களுக்கு எதிராக மைத்திரி வந்ததும், தொண்டமான்களுக்கு எதிராக திகாம்பரமும் இராதாகிருஷ்ணனும் நிலைபெற்றமையுமாகும். ஆனால், மக்களின் எதிர்பார்ப்புகள் வீணடிக்கப்படும் போது, அவை அதிருப்திகளாக மாறும். அதிருப்தியாளர்களை மீட்பது, பெரும் சிக்கலாகும். மனோவின் பிரச்சினை இன்னும் கொஞ்சம் சிக்கலானது. ஏனெனில், மனோ பொறுப்பேற்ற தேசிய கலந்துரையாடல் அமைச்சை வைத்துக் கொண்டு, மக்களுக்கு நேரடியான உதவிகளைச் செய்ய முடியாது. அது, நிர்வாக ரீதியாகப் பழுதுபட்ட இடங்களை, (குறிப்பாக மொழிக்கொள்கை, நல்லிணக்க முனைப்புகள்) சரி செய்யும் அமைச்சாகும். “தொடர்ச்சியாக மனோவுக்கு வாக்களித்து வருகின்றோம். ஆனால், அவர் அமைச்சராக பதவி வகிக்கும் தருணத்திலும் கூட, எங்களுக்கான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவில்லை என்கிற வருத்தம், கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு உண்டு. இன்னொரு பக்கம், அவர் அரசியல் ரீதியாகக் கூட்டமைப்போடு, குறிப்பாக சம்பந்தனோடும் சுமந்திரனோடும் அண்மைய காலங்களில் முரண்பட்டுக் கொண்டமை, தமிழ் மக்கள் மத்தியில் கலவையான உணர்வைத் தோற்றுவித்தது. ஏற்கெனவே கொழும்பிலுள்ள வடக்கு- கிழக்கு தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதம் என்பது குறைவு. அவ்வாறான நிலையில், மனோவின் நடவடிக்கைகள் மீதான விமர்சனம், வாக்களிப்பு வீதத்தைக் குறைக்கும் அளவுக்கே சென்றது. கூட்டமைப்பைப் பொறுத்தளவில், கடந்த மூன்றரை ஆண்டுகள் பெரும் அதிருப்தியைச் சந்தித்த ஆண்டுகளாகவே அமைந்தன. அரசியல் தீர்வு விடயத்தை முன்னிறுத்திவிட்டு, மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்த விடயங்களில் அக்கறையின்றி இருந்தமை, கிராம மட்டங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியது. தீர்வு குறித்த உரையாடல்களில் காணப்பட்ட தளம்பலும், கால நீடிப்பும் எதிர்த்தரப்புகளை நோக்கிய அதிருப்தியாளர்களை ஒன்றிணைத்தது. நல்லாட்சி அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தமிழ், முஸ்லிம் கட்சிகளும் பின்னடைவையே சந்தித்து நின்றன. இவ்வாறான நிலையில், மஹிந்தவைப் பிரதமராக்கிவிட்டு, மைத்திரி, ஆடிக்கொண்டிருக்கும் ஆட்டத்தின் மூலம், தமிழ், முஸ்லிம் மக்கள், மீண்டும் அதிருப்தியின் அளவைக் குறைத்துக் கொண்டு, தங்களின் கூடுகளுக்குத் திரும்புவது சார்ந்து, சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். மைத்திரியின் கோமாளித்தனமாக ஆட்டத்தை, தமிழ்- முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் உறுப்பினர்களும் எதிர்கொண்ட விதம், மக்களுக்கு நம்பிக்கை ஊட்டியிருக்கின்றது. இது, அவர்களுக்கு எதிராக எழுந்த விமர்சனங்களைக் காணாமலாக்கவும் செய்திருக்கின்றது. இன்றைய திகதியில், தேர்தலொன்று வருமாக இருந்தால், கூட்டமைப்பு சந்திக்கவிருந்த பாரிய நெருக்கடியிலிருந்து தப்பித்து, தன்னுடைய நிலையை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ளும் வாய்ப்பு உருவாகி இருக்கின்றது. மலையக மக்களின் வாக்குகளைத் திகாம்பரமும் இராதாகிருஷ்ணனும் பெரும்பான்மையாகப் பெறுவார்கள். கொழும்பில் தோல்வியின் விளிம்பிலிருந்த மனோ, தப்பித்துக் கொள்வார். ஹக்கீமும் ரிஷாட்டும், பழைய நிலையில் தொடர்வார்கள். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மைத்திரியால்-காப்பாற்றப்பட்ட-தரப்புகள்/91-225547
 7. அழிவை நோக்கி நாட்டை இழுத்துச் செல்லும் தலைவர்களின் ‘ஈகோ’ எம்.எஸ்.எம். ஐயூப் இந்தப் பத்தியாளரின் மகள் கல்வி கற்கும் பாடசாலையின் மாணவிகள், நாடாளுமன்றத்தைப் பார்வையிட, அண்மையில் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். நாடாளுமன்றத்தின் பார்வையாளர் கலரியில் அமர்ந்து, சபை நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டு இருந்த சில மாணவிகள், பயணக் களைப்பின் காரணமாகவும் பகல் உணவின் பின்னர் குளிரூட்டப்பட்ட இடத்தில் அமர்ந்து இருந்ததன் காரணத்தாலும், பார்வையாளர் கலரியிலுள்ள ஆசனங்களிலேயே அயர்ந்து தூங்கிவிட்டனர். இதைக் கண்டு, அங்கு வந்த நாடாளுமன்ற அதிகாரிகள், மாணவிகளின் நடத்தையால், சபையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவதாகக் கூறி, அந்த மாணவிகள் அனைவரையும் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறுமாறு பணித்தனர். கடந்த வியாழக்கிழமை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்வையாளர் கலரியில் அன்றி, சபை மத்தியிலேயே, வெளிநாட்டுத் தூதுவர்கள் பார்த்துக் கொண்டு இருக்கையிலேயே, கைகலப்பில் ஈடுபட்டதையும் சபாநாயகரின் தொலைபேசியையும் ஒலிவாங்கியையும் பிடுங்கி எடுத்து, சபாநாயகரின் கதிரையில் தண்ணீரை ஊற்றிதையும், கடந்த வெள்ளிக்கிழமை, மஹிந்த அணியினர் சபையின் கதிரைகளை உடைத்து, பொலிஸார் மீது மிளகாய்த் தூள் கலந்த நீரைத் தெளித்து, புத்தகங்களையும் கதிரைகளையும் அவர்கள் மீது எறிந்து செய்த அட்டகாசத்தைத் தொலைக்- -காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த பத்தியாளரின் மகள், “எமது பாடசாலை மாணவிகள் தூங்கி விழுந்தமை, இந்த அட்டகாசத்தை விடவும் நாடாளுமன்றத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தக் கூடியதா?” எனக் கேட்டாள். அது நியாயமான கேள்வியாக மட்டுமன்றி, தர்க்க ரீதியான கேள்வியாகவும் இருந்தது. பொதுவாக, நாட்டு மக்களுக்கும் இவ்வாறு சிறுவர்களைப் போல், கட்சி பேதமின்றித் தர்க்க ரீதியாக மட்டுமே சிந்திக்க முடியுமாக இருந்தால், அதன் படி தேர்தல்களின் போது, பண்பானவர்களை மட்டுமே தான் தெரிவு செய்வோம் என்று உறுதி கொள்ள முடியுமாக இருந்தால், இந்நாட்டு அரசியல்வாதிகள், மக்களை மதிப்பார்கள். இப்போது போல் மக்களின் அறிவைப் பரிகசிக்க மாட்டார்கள். ஆனால், மக்கள் அவ்வாறு தர்க்க ரீதியாகச் சிந்திப்பதில்லை. தாம் வாக்களித்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய பிரதிநிதி, கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் கைகலப்பில் ஈடுபட்ட விதத்தைக் கண்டு, ‘இனி இவருக்கோ, இவரைப் போன்றவர்களுக்கோ வாக்களிக்க மாட்டேன்’ என்று நினைத்த ஒரு வாக்காளர் இந்த நாட்டில் இருப்பாரா என்பது சந்தேகமே. அதேபோல், கடந்த வெள்ளிக்கிழமை, மஹிந்த அணியினர் நாடாளுமன்றத்தில் நடந்து கொண்ட விதத்தையும் அவர்கள் பொதுச் சொத்துகளை உலகமே பார்த்துக் கொண்டு இருக்கையில் சேதப்படுத்தியதையும் கண்டு, இவர்கள் நாட்டை ஆளத் தகுதியற்றவர்கள் என்று நினைத்து, மனதை மாற்றிக் கொண்ட மஹிந்த அணி ஆதரவாளர் ஒருவரேனும் நாட்டில் இருப்பாரா? இறைவன், மனிதனைப் படைத்தாலும், சுதந்திரமாகச் சிந்தித்து செயற்பட இடமளித்துள்ளான். அவனுக்கு, அந்தச் சுதந்திரத்தை வழங்காது, இறைவனே மனிதனின் செயற்பாடுகள் அனைத்தையும் தாமாக வழி நடத்துவதாக இருந்தால், மனிதன் செய்யும் பாவங்களுக்காக, அவனைத் தண்டிக்க இறைவன் நரகத்தைப் படைக்கத் தேவையில்லை. அந்தச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதால் தான், “நீங்கள், உங்களை மாற்றிக் கொள்ளும் வரை நான், உங்கள் தலைவிதியை மாற்றுவதில்லை” என இறைவன் கூறுகிறான். இலங்கை அரசியலைப் பொறுத்தவரையிலும், இந்நாட்டு மக்கள், தம்மை மாற்றிக் கொள்ளாத வரை, தற்போதுள்ள மக்களின் அரசியல் தலைவிதியும் மாறப் போவதில்லை. இந்நாட்டு மக்கள் மத்தியில், தற்போதுள்ள அடிமை மனப்பான்மை மாறுவதாகத் தெரியவில்லை. அதனால் தான் அரசியல்வாதிகள், கண்கூடாகத் தெரியும் யதார்த்தத்தைக் காணாதவர்களைப் போல் விதண்டாவாதம் பேசிக் கொண்டு, அந்த யதார்த்தத்தை மறுக்கிறார்கள். அதன் மூலம், நாடு பெரும் அழிவை நோக்கிச் செல்வதையும் அவர்கள் காணாதவர்களைப் போல் இருக்கிறார்கள். ஜனாதிபதி, புதிதாக ஒரு பிரதமரை நியமிப்பதாக இருந்தால், அவர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் நம்பிக்கையை வென்றவரெனத் தாம் கருதுபவராக இருக்க வேண்டும் என்பது, அரசமைப்பின் விதியாகும். ஆயினும் குறிப்பிட்ட ஒருவர், பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையை வென்றவர் என, ஜனாதிபதி எந்தவித அடிப்படையும் இல்லாமல் கருத முடியாது. கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகக் கருதுவதற்கு எந்தவித ஆதாரமும் இருக்கவில்லை. அவ்வாறு கருதியிருந்தால் அவர், நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ஒத்திவைக்கத் தேவையில்லை. மஹிந்தவுக்குப் போதிய எண்ணிக்கையில் எம்.பிக்களை விலைக்கு வாங்க முடியாததைக் கண்டு, அதன் பின்னர் கடந்த ஒன்பதாம் திகதி, நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் தேவையில்லை. மஹிந்தவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருந்தால், அதன் பின்னர், மஹிந்த அணியினர் நாடாளுமன்றத்தில் குழப்பங்களை உருவாக்கி, எந்தவொரு வாக்கெடுப்பையும் நடத்த விடாமல் தடுத்திருக்கவும் தேவையில்லை. அதேவேளை, சட்ட விரோதமாகப் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்தவுக்கு எதிராக, இரண்டு முறை 122 எம்.பிக்களின் கையொப்பத்துடன் நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைச் சமர்ப்பித்து, மக்கள் விடுதலை முன்னணி மஹிந்தவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையில்லை என்பதை நிரூபித்துள்ளது. அந்தப் பிரேரணைகள், நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளின் பிரகாரம் முறையாகச் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் முறையாக வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை என்றும், மஹிந்த அணியினர் வாதிடுகின்றனர். நிலையியல் கட்டளைகள் ஒத்திவைக்கப்பட்டே அந்தப் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன. நிலையியல் கட்ளைகளின் படி, நிலையியல் கட்டளைகளை ஒத்திவைக்கவும் முடியும். அவ்வானதொரு மரபு நாடாளுமன்றத்தில் இருக்கின்றது. அவ்வாறு நிலையியல் கட்டளைகள், சபையின் பெரும்பான்மை ஆதரவுடன் ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர், நிலையியல் கட்டளைகளின் படி செயற்பட வேண்டிய அவசியம் இல்லை. குரல் வாக்கெடுப்பின் மூலமே, அந்தப் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன. அதற்கு முன்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பை நடத்த, சபாநாயகர் கரு ஜயசூரிய முயன்றார். மஹிந்த அணியினர் குழப்பம் விளைவித்து, அதைத் தடுத்த காரணத்தாலேயே, சபாநாயகர் குரல் வாக்கெடுப்பை நடத்தினார். பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பை நடத்துவதைத் தாமே தடுத்துவிட்டு, இப்போது, பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்கிறார்கள் மஹிந்த அணியினர். உண்மையிலேயே, அந்தப் பிரேரணைகள் சட்டபூர்வமாக நிறைவேற்றப்பட்டதா, இல்லையா என்று இப்போது வாதிட்டுக் கொண்டு இருப்பதில் அர்த்தமில்லை. அந்தப் பிரேரணைகள் நிறைவேற்றப்படாவிட்டாலும் பிரேணைகளில் 122 கையொப்பங்கள் இருப்பதால், மஹிந்தவுக்குப் பெரும்பான்மைப் பலம் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. அதன் பின்னரும், அரசியல்வாதிகள் வாதிட்டுக் கொண்டு இருப்பதை விளங்கிக் கொள்ள முடியும். ஏனெனில், அரசியல் அதிகாரம் என்பது, அவர்களுக்கு கோடிக் கணக்கில் சம்பாதித்துக் கொள்ளும் ஒரு பொறிமுறை. ஆனால், பொது மக்களுக்கு என்ன கிடைக்கிறது? பெரும்பான்மைப் பலம் பற்றிய பிரச்சினை இவ்வளவு தெளிவாக இருக்கும் போது, பொது மக்கள் ஏன் அதைப் பற்றிக் கண்மூடித்தனமாக வாதிட்டுக் கொண்டு, இந்தப் பிரச்சினையால் நாடு அழிவை நோக்கிச் செல்வதற்குத் துணைபோக வேண்டும்? 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், மைத்திரிபால சிறிசேன, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பெற்றதை விடக் கூடுதலான வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பது, அன்று நள்ளிரவு அளவில் தெளிவாகியது. இந்த நிலையில், தேர்தல் முடிவுகளை அறிவிப்பதைத் தடைசெய்து, தொடர்ந்து ஆட்சியில் இருக்க மஹிந்த முயன்றாரெனவும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு, உடனே சட்டமா அதிபர், பிரதம நீதியரசர். பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதி ஆகியோர், ஜனாதிபதி தங்கியிருந்த அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டதாகவும் பொலிஸ்மா அதிபரும் இராணுவத் தளபதியும் அதை எதிர்த்ததால், அத்திட்டத்தைக் கைவிட்ட மஹிந்த, அலரி மாளிகையை விட்டு வெளியேறியதாகவும் அந்நாள்களிலேயே குற்றஞ்சாட்டப்பட்டது. சட்டப்படி தமக்குப் பதவியில் இருக்க அதிகாரம் இல்லாத நிலையில், தாம் அவ்வாறு பதவியில் தொற்றிக் கொண்டு இருக்க முயலவில்லை எனக் கூறி, அந்தச் சதிக் குற்றச்சாட்டை மஹிந்த மறுத்தார். ஆனால், இப்போது சட்டப்படி தமக்குப் பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், அவர் பிரதமர் பதவியில் தொற்றிக் கொண்டு இருப்பதைப் பார்க்கும் போது, அவ்வாறானதொரு சதித் திட்டம் இடம்பெற்றிருக்கலாம் என்றே சந்தேகிக்கத் தோன்றுகிறது. கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி, ஜனாதிபதியால் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவும் தாமே இன்னமும் பிரதமர் எனக் கூறுகிறார். தம்மைப் பதவியில் இருந்து நீக்க, ஜனாதிபதிக்கு அரசமைப்பின் மூலம் அதிகாரம் வழங்கப்படவில்லை என அவர் வாதிடுகிறார். ஆனால், தம்மைப் பதவியில் இருந்து நீக்கியமையை எதிர்த்து, அவர் நீதிமன்றத்துக்குச் செல்லவில்லை. அதேவேளை அவர், அதற்குப் பின்னர் நாடாளுமன்றம் கூடிய போது, பிரதமரின் ஆசனத்தில் அமர முற்படவும் இல்லை. மஹிந்தவே அந்த ஆசனத்தில் அமர்ந்து இருந்தார். ‘பிரதமர்’ மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாகவே, ஐ.தே.க வாக்களித்தது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் பரீட்சிக்கப்பட முன்னரே, மஹிந்தவைப் பிரதமராக ஏற்றுக் கொள்வதில்லை என்றும் ரணிலைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதற்கு முன்னர் இருந்த நிலையையே, தாம் ஏற்றுக் கொள்வதாகவும் சபாநாயகர் கூறியிருந்தார். அந்த நிலைப்பாடு சரி என, ஏற்றுக் கொள்ள முடியாது. மஹிந்தவுக்குப் பெரும்பான்மை பலம் இல்லை என, அவர் அப்போது எவ்வாறு முடிவு செய்தார்? ஆனால், முதலாவது நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டதன் பின்னர், தாம் எவரையும் பிரதமராக ஏற்றுக் கொள்வதில்லை என, அவர் கூறினார். அதுவே சரியான வாதமாகும். ஏனெனில் ஜனாதிபதிக்கு, பிரதமர் ஒருவரைப் பதவியில் இருந்து நீக்க முடியும் என, 19ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் சிங்களப் பிரதியில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது என்று மைத்திரி தரப்பினர் வாதிடுகின்றனர். அரசமைப்பின் தமிழ், சிங்கள, ஆங்கில் பிரதிகளிடையே வேறுபாடுகள் இருப்பின், சிங்களப் பிரதியே செல்லுபடியாகும். எனவே ரணில் நீக்கப்பட்டமை சட்டபூர்வமாகிறது என்பது அவர்களின் வாதம். அதேவேளை, அதன் பின்னர் மஹிந்தவின் நியமனம் சட்டபூர்வமானதல்ல என்பதை, நம்பிக்கையில்லாப் பிரேரணைகளில் உள்ள கையொப்பங்கள் காட்டுகின்றன. ஏனெனில், பெரும்பான்மை ஆதரவு உள்ள ஒருவரையே ஜனாதிபதி பிரதமராக நியமிக்க வேண்டும் என, அரசமைப்புக் கூறுகிறது. எனவே, தாம் எவரையும் பிரதமராக ஏற்றுக் கொள்வதில்லை என சபாநாயகர் கூறுவது சரியே. இப்போது, தாமே பிரதமர் என, மஹிந்த கூறுகிறார்; ரணிலும் கூறுகிறார். ரணிலைப் பதவி நீக்கம் செய்ததும், மஹிந்தவைப் பிரதமராக நியமித்ததும் சரியே என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகிறார். தாம் எவரையும் பிரதமராக ஏற்றுக் கொள்வதில்லை என, சபாநாயகர் கூறுகிறார். இந்த நால்வரும் தாம் நிற்கும் நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வரத் தயாராக இல்லை. இறங்கி வராமல் பிரச்சினை தீரப் போவதுமில்லை. இது அவர்களுக்கு ஒரு கௌரவப் பிரச்சினையாக மாறியுள்ளது. இந்த ‘ஈகோ’ (தன்முனைப்பு) பிரச்சினைக்குப் புறம்பாக, மஹிந்தவும் ரணிலும் பிரதமர் பதவியில் தொற்றிக் கொண்டு இருக்க, ஏன் முயல்கிறார்கள் என்பதற்கு, மற்றொரு காரணமும் இருக்கிறது. அதாவது, அடுத்த பொதுத் தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தலின் போது, தமது தலைமையிலான காபந்து அரசாங்கம் ஒன்று இருக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். அப்போது, அந்தத் தேர்தலில் அவர்கள் அரச வளங்களைத் தேர்தலுக்காகப் பாவிக்க முயலலாம். பொலிஸாரை வழிநடத்த முடிகிறது. இதன் அனுகூலம், தேர்தல் முடிவு மீதும் தாக்கத்தை ஏற்படுத்த முடிகிறது. நாடாளுமன்றத்தில் எந்தவொரு கட்சிக்கும், அறுதிப் பெரும்பான்மை இல்லாமையே தற்போதைய பிரச்சினை தோன்ற அடிப்படைக் காரணமாகும். எனவே, புதிதாகத் தேர்தலை நடத்தி, புதிய நாடாளுமன்றம் ஒன்றைத் தெரிவு செய்வதே, தற்போதைய பிரச்சினைக்கு இருக்கும் ஒரே தீர்வாகும். ஆனால், அதற்கு நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும். ஏற்கெனவே, கடந்த ஒன்பதாம் திகதி, ஜனாதிபதி மேற்கொண்ட கலைப்பு, சட்ட விரோதமானது என்று, உயர் நீதிமன்றம் எதிர்வரும் டிசெம்பர் ஏழாம் திகதி தீர்ப்பளித்தால், ஒன்றில் தற்போதைய இழுபறி தொடரும்; அல்லது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அழிவை-நோக்கி-நாட்டை-இழுத்துச்-செல்லும்-தலைவர்களின்-ஈகோ/91-225544
 8. மருதோடை: எப்படியிருக்கிறது எல்லை? Editorial / 2018 நவம்பர் 20 செவ்வாய்க்கிழமை, மு.ப. 04:09 Comments - 0 - ஜெரா வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் எல்லையில் இருக்கிறது, மருதோடை - நாவலடி எனும் கிராமம். அதாவது, வடமாகாணத்தின் எல்லைக் கிராமம். அதன் மறுகரையில், அநுராதபுரம் ஆரம்பிக்கிறது. தமிழ், சிங்களம் என்ற இரு இனங்களையும் நிலவியல்பு அடிப்படையில் இயற்கையாகவே பிரித்து வைத்திருக்கும் இந்த எல்லைக்கோட்டை சிதைத்தமையால் உண்டானதே, 2009 வரைக்கும் நீடித்த இனப்போர். இப்போது போர் முடிந்து 10 ஆண்டுகளைத் தொட்டிருக்கிறது இலங்கை. இந்நிலையில், இனப்போருக்குத் தூபமிட்ட எல்லைக் கிராமங்களில் ஒன்றான மருதோடை எப்படியிருக்கிறது? யாரும் இலகுவில் சென்றடைந்துவிட முடியாதளவு பயணப் பாதையையும் தொலைவையும் கொண்டிருப்பதால்தான் என்னவோ, இந்த மாதிரியான கிராமங்களுக்கு, அதிகளவில் ஊடக வெளிச்சம் கிடைப்பதில்லை. நெடுங்கேணிச் சந்தியில் இருந்து ஓட்டோவில் புறப்பட்டால், 1000 ரூபாய்க்குக் குறையாத தொகையும், காலை - மாலை என மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் பஸ்ஸில் பயணித்தால் 90 ரூபாய்க்குக் குறையாத தொகையும் அறவிடப்படுகின்றது. 1983ஆம் ஆண்டுக்குப் பின்னர் புனரமைக்கப்படாத பாழ் வீதியில் வாகனம் செலுத்துவதென்பது அவ்வளவு இலகுவான காரியமல்லவே. எனவே இந்தப் பெருந்தொகை அறவீட்டிலிருக்கும் நியாயத்தையும் ஏற்கவேண்டும். விடுதலைப் புலிகள் காலத்தில் அமைக்கப்பட்ட வீதிகளைத் தான், மக்கள் இன்றும் பயன்படுத்துகின்றனர். அவ்வப்போது மாகாண சபையும் தொண்டு நிறுவனங்களும் வீதிப் புனரமைப்புக்கு நிதி ஒதுக்கீட்டைச் செய்தபோதும், திருத்த வேலைகள் இடைநடுவில் கைவிடப்பட்டிருக்கின்றன. காரணம் கேட்டால், இந்த வீதியைத் திருத்துமளவுக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதவில்லை என, நிர்மாணதாரர்கள் இடைநடுவே விட்டு விலகிவிட்டனர் என்கின்றனர், அவ்வீதியால் பயணிக்கும் மக்கள். மருதோடை! இங்கு எப்போதிலிருந்து தமிழர்கள் வாழ்கின்றனர் என்பதற்கான வரலாற்றுப் பதிவுகள் எவையும் தேடிப்பெறுவதற்கில்லை. ஆலய வரலாறாகப் பாதுகாக்கப்பட்டவையும், போர்களில் அழிந்துவிட்டன. ஆனால், வவுனியா மாவட்டத்தில் மிகத் தொன்மையான காலத்திலிருந்து இந்தக் கிராமத்தில் தமிழர்கள் வாழ்ந்தனர் என்பதும், வன்னிப் பெருநிலப்பரப்பு முழுவதும் பிரபலமான பரிகாரி மரபொன்று இங்கிருந்ததென்பதும், விசாரித்து அறியக்கூடிய வரலாறாக இருக்கின்றது. 1980ஆம் ஆண்டுகளில் இந்தக் கிராமத்துக்கு அருகில் உருவாக்கப்பட்ட டொலர் பாம், ஹென்பாம், சிலோன் தியேட்டர், தனிக்கல்லு முதலான பெரும் பண்ணைகள், பொருளாதார வலுவையும் விவசாயச் செழிப்பையும் மேலோங்கச் செய்திருக்கின்றன. பெரியளவில் மேற்கொள்ளப்பட்ட வயல் விதைப்பும் கால்நடை வளர்ப்பும், இந்தக் கிராமத்தை வளப்படுத்தியிருக்கின்றன. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்து மூன்றாம் (1983) ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட பதவியா என்ற பெரும்பான்மையினத்தவருக்கான குடியேற்றத்தின் விளைவாக, வவுனியா வடக்கின் எல்லைக் கிராமங்கள் தொடக்கம் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்றின் எல்லைக் கிராமங்கள் வரைக்கும் வன்முறைகள் இடம்பெற்றன; படுகொலை இடம்பெற்றன. ஒதியமலை படுகொலைகளை, அவ்வளவு இலகுவில் தமிழர்கள் யாரும் மறந்திருக்கமாட்டார்கள். அந்த மாதிரியான கொலைகளுக்குப் பின்னர், இராணுவத்தினருக்கும் ஆயுதப் போராட்ட இயக்கங்களுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றன. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட போர் நிலைமைகள் காரணமாக, இப்பகுதிகளை விட்டு நிரந்தரமாகவே மக்கள் வெளியேறினர். இரண்டாயிரத்து ஒன்பதாம் (2009) ஆண்டில் போர் முடிவுக்கு வரும் வரைக்கும், இந்தப் பகுதிகள் சூனியப் பிரதேசமாகவே இருந்தன. இரண்டாயிரத்துப் பதினோராம் (2011) ஆண்டிலேயே மக்கள், 25 ஆண்டுகளுக்குப் பின்னர் ஊர் திரும்பினர். மருதோடைக்கும் இதேநிலைதான். இரண்டாயிரத்துப் பதினோராம் (2011) ஆண்டில், இக்கிராமத்தின் பூர்வீகக் குடிகள் மீளக்குடியேறியிருந்தாலும், இடம்பெயர்வதற்கு முன்பிருந்த அத்தனை குடிகளும் மீளத்திரும்பவில்லை. போரில் இறந்தவர்கள், காணாமற்போனவர்கள், இந்தியாவுக்குச் சென்றவர்கள், நாட்டின் ஏனைய மாவட்டங்களில் நிரந்தரமாகக் குடியேறியவர்கள் போக, எஞ்சிய மிகச் சொற்பமான குடும்பங்களே ஊர் திரும்பின. அவ்வாறு ஊர் திரும்பியவர்கள், மருதோடை கிராமத்தின் முன்பகுதிக்குரியவர்களாக இருந்தனர். தங்கள் காணிகளைத் திருத்தி, வீட்டுத்திட்டங்களைப் பெற்று, விவசாயத்தில் செழிப்பும் பெற்றுவிட்டனர். இப்போது பிரச்சினை யாருக்கெனில், இந்தியாவிலிருந்தும் நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்தும் தம் சொந்தக் கிராமத்துக்குத் திரும்பியிருக்கும் பூர்வீகக் குடிகளுக்குத்தான். இவர்கள், மருதோடையின் நாவலடி பகுதியைச் சேர்ந்தவர்கள். கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்குப் பின்னர் ஊர் திரும்பியிருக்கின்றனர். இந்த ஆண்டின் தொடக்கப் பகுதியிலிருந்து இந்தியாவிலிருந்தும், கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும், மருதோடை நாவலடிக்கு மக்கள் மீளத் திரும்பத் தொடங்கினர். இதுவரைக்கும் 37 வரையான குடும்பங்கள், தங்கள் ஊருக்கு வந்திருக்கின்றன. இவ்வாறு வந்திருப்பவர்களில் அநேகம் பேரிடம், தங்கள் காணிகள் தொடர்பான ஆவணங்கள் எவையும் இல்லை. போரிலும், இடப்பெயர்விலும் அனைத்தும் தவறவிடப்பட்டிருக்கின்றன. அத்துடன் இடம்பெயர்ந்து போகும்போது குழந்தையாகச் சென்றவர்கள், இப்போது குடும்பமாகி, அவர்களுக்கு நான்கு குழந்தைகளுடன் வந்துநிற்கின்றனர். அப்படியானவர்களில் ஒருவர்தான், திருமதி வேலாயுதம். இந்தியாவிலிருந்து, மருதோடை திரும்பியிருக்கிறார். “நாங்க, 83ஆம் வருசத்தில திடீர்னு புறப்பட்டோம். எல்லாப் பக்கமும் வெடிச் சத்தம். அம்மா, அப்பாவோட சகோதரங்கள் எல்லாரும் ஓடினோம். நெடுங்கேணி பள்ளிக்கூடம், வவுனியா, மெனிக் பாம், அப்பிடியே மன்னார் வழியா இராமேஸ்வரம் போயிட்டம். அங்க இருந்து 35 வருசத்துக்கு அப்புறமா ஊர் திரும்பியிருக்கோம். அம்மா, அப்பா, ஒரு சகோதரினு எல்லாரும் அங்கயே மோசம் போய்ட்டாங்க. இன்னும் ரெண்டு சகோதரிகள், அங்க முகாம்லயே இருக்காங்க. நான் மட்டும் என் குடும்பத்தோட வந்திருக்கேன்...” என்றார், திருமதி வேலாயுதம். இங்கு உங்கள் ஊர் நிலைமைகள் எப்படியுள்ளன என்ற கேள்விக்காக குறுக்கிட்டோம். அதற்கு அவர், “எதிர்பார்த்து வந்தமாதிரி ஏதுமில்ல. காணியைக் கண்டுபிடிக்கிறதே சிரமமாயிருக்கு. நட்டிருந்த மரம், கிணறு, மலசலகூடம் இதுகள வச்சி அடையாளம் கண்டோம். ஆனால் அதுக்குக் கூட, இப்ப தடைபோட்டிருக்காங்க” என்றார். சடசடவென அடித்து வந்த மழை, பெரிதாகப் பெய்யத் தொடங்கியது. பிரதேச செயலகம் அமைத்துக் கொடுத்திருக்கும் மிகச் சிறியளவிலான கொட்டகைக்குள், நாலா பக்கமும் சாரல் அடிக்கிறது. நிலத்தில் பெருங்குற்றிகளைப் போட்டு அடுப்பு மூட்டியிருக்கிறார்கள். சமையலிலிருந்து, மழை நீரின் குளிரைப் போக்குவது வரைக்குமான அனைத்துக் காரியங்களுக்கும், அந்த அடுப்புப் பயன்படுத்தப்படுகின்றது. மழைக்கு அந்தத் தற்காலிக கொட்டகைக்குள் ஒதுங்கியிருக்கும்போது ரவீ (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கதைக்கத் தொடங்கினார். அவருக்கு வயது 70ஐத் தாண்டுகிறது. அந்தக் கிராமத்தின் மூத்த குடிமகன். “நான் தான் சின்ன வயசிலயே, இந்தக் காட்டை வெட்டிக் காணியாக்கினன். உறுதி கூட தந்திருந்தாங்க. எல்லாமே கைவிட்டுப்போச்சி. இப்ப வந்து காணியத் துப்பரவாக்கினா, வன வள பாதுகாப்புத் திணைக்களம் விடுறாங்க இல்ல. இதெல்லாம் பாதுகாக்கப்பட்ட காடாம். 30 வருசத்துக்கு முதல், நாங்க பூர்வீகமா இருந்து விவசாயம் செய்த காணிகள் இது. பாருங்க, கிணறுகள் கூட இடிஞ்சி போய் அப்படியே இருக்கு. மலசலகூடங்கள் இருக்கு. இதெல்லாம் காட்டுக்குள்ள எப்படி வரும்? நாங்க நட்ட மரங்கள் கூட, காடாகி அப்பிடியே நிற்குது. நாங்கள் இந்தியாவில் இருக்கும்போது வரச்சொன்னாங்க. இங்க வந்ததும், சொந்தக் காணிக்க கூட விடுறாங்க இல்ல. இரவில் பிள்ளைகளோட, நிம்மதியா நித்திரை கொள்ளக்கூட முடியுதில்ல. காடுதானே; ஒரே பாம்பு. இன்றைக்குக் கூட ரெண்டு பாம்பு அடிச்சிட்டம்” என அவர் சொல்லும் சமநேரத்தில் திருமதி வேலாயுதம், “இந்த இலட்சணத்தில, எப்பிடி எங்க சகோதரங்கள இங்க வரச்சொல்லி கூப்பிடுறது?” என்று கேள்வியெழுப்புகிறார். அவரின் நியாயமான கேள்விக்குத் தற்போதைக்கு பதிலில்லைத்தான். அரசாங்கத்திடம் கூட நியாயமான பதிலில்லை. இந்த விடயம் குறித்து கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் கருத்துவெளியிட்ட அப்போதைய கூட்டு எதிரணியின் ஊடகப் பேச்சாளர், “450க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வாசிகள், வவுனியா வடக்கில் மருதோடை எனும் கிராமத்தில் குடியேறியிருக்கின்றனர். இது சட்டவிரோதமான செயல்” எனக் குறிப்பிட்டார். போர் நிலைமைகள் காரணமாக இடம்பெயர்ந்து சென்று, மீளவும் அதே இடத்துக்கு மீளத் திரும்புவது, எவ்வகையில் வெளிநாட்டுக் குடியேறிகளின் குடியேற்றமாக மாறும் என, அவர் கருத்துத் தெரிவிக்கவில்லை. அதே கருத்தோடிருந்த தரப்பினரின் கைக்கு, தற்போது அதிகாரமும் கையளிக்கப்பட்டுவிட்டது. இனி என்ன நடக்குமோ என்ற பயம், அங்கு மீள்குடியேறியிருப்பவர்களிடம் அதிகமாகவே அவதானிக்க முடிந்தது. அடர்ந்த காட்டுக்கு நடுவில் பாதுகாப்பற்ற கொட்டில்கள், சரியான சுகாதார, கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட மீள்குடியேற்ற கட்டுமான வசதிகள் செய்துகொடுக்கப்படாத மீள்குடியேற்றம் என, இக்கிராம மக்களின் அவலம் இன்னமும் நீடிக்கிறது. ஆனால், அயல் கிராமங்களைச் சேர்ந்த மக்கள், புதிதாகக் குடியேறியவர்களுக்குப் பெரும் உதவியாய் இருக்கின்றனர். உணவுப் பொருட்கள், குடிநீர் வசதி, தங்குமிட வசதிகளைச் செய்துகொடுத்திருக்கின்றனர். மக்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் அவ்விடத்துக்கு வந்த பிரதேச சபை உறுப்பினர், ஒருவரும் சில விடயங்களைக் குறிப்பிட்டார். “இந்தக் கிராமத்துக்கு மீள்குடியேற்றம் செய்திருக்கும் மக்களுக்கு பிரதேச செயலகம், பிரதேச சபை, சில தொண்டு நிறுவனங்கள் மிகச் சொற்பமான உதவிகளையே செய்திருக்கு. அவையும் தங்களால இயன்றதைத்தான் செய்யமுடியும்? பக்கத்து ஊர் மக்கள் உணவுப் பொருள், குடிநீர் உதவிகளச் செய்யினம். பலம்பொருந்திய அரச திணைக்களமான வன வளத் திணைக்களம், இந்த மக்கள குடியேறவோ, தங்கட காணிகளத் துப்பரவாக்கவோ வேண்டாம் எனச் சொல்லியிருக்கு. இப்பிடியொரு தடை இருக்கிறபடியால், மற்றைய அரச திணைக்களங்களாலயும் முழுதாக உதவிகள வழங்க முடியாமல் இருக்கு. மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில, எல்லாம் குடியேறின மக்களுக்கு உடனடியாகச் சகல வசதிகளும் செய்து குடுக்க வேணும் என்று முடிவெடுக்கப்பட்டதுதான். ஆனால், இங்க எதுக்கும் வன வளத் திணைக்களம் அனுமதிக்கேல்ல. ஆனா, இதே கிராமத்தின்ர மறுபக்கம் பாருங்கோ, 300க்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள, உண்மையாகவே காடுகளா இருந்த பகுதிய அழிச்சுக் குடியேற்றி இருக்கினம். ஊஞ்சால்கட்டி, கொக்காச்சாங்குளம், முழுக்க முழுக்க தமிழர்களைக் கொண்டிருந்த கிராமம். இப்பவும் தமிழாக்கள் வயல் செய்யினம். அந்தக் கிராமங்கள அடாத்தப் பிடிச்சு, காடுகள அழிச்சு, சிங்கள மக்களக் குடியேற்றியிருக்கினம். இதுவரைக்கும் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியேற்றப்பட்டிருக்கு. அதுவும் காடுகள அழிச்சு நடந்ததுதான். அதுக்கெல்லாம் எந்தத் தடையும் இல்ல. ஆனால் தமிழ்ச் சனம் சொந்த ஊருக்கு திரும்புறதுக்குத்தான் தடை” எனக் கொந்தளித்த பிரதேச சபை உறுப்பினரின் பேச்சில், உண்மையும் உண்டு. அவர் அந்தப் பகுதியையே சேர்ந்தவராக இருந்தபடியால், கிராமம் பறிபோகின்ற கவலையையும், நமக்கு வெளிப்படுத்தினார். இந்த விடயம் பற்றி வன வளப் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரி ஒருவரைத் தொடர்புகொண்டபோது, “இந்தக் காடுகள் பாதுகாக்கப்பட்ட வனமாகப் பிரகடனம் செய்யப்பட்டு, எட்டு வருடங்கள் ஆகின்றன. இரண்டாயிரத்துப் பத்தாம் (2010) ஆண்டு, வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இப்பகுதி, பாதுகாக்கப்பட்ட வனமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எமது கடமை, அரச சட்டங்களைப் பாதுகாப்பது. எனவே அதை மீறி யாரும் செயற்பட அனுமதிக்கமாட்டோம். வர்த்தமானி அறிவித்தல் வந்தபோது, யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இப்போதுதான் எதிர்க்கின்றனர்”என்றார் பொறுப்பாக. இந்தியாவிலிருந்து தம் சொந்த ஊருக்குத் திரும்பியிருக்கும் பூர்வீகக் குடிகளைக் கொண்டிருக்கும் மருதோடை - நாவலடியின் கதை இது. எல்லைக் கிராமத்தின் கதை இது. ஊர் திரும்பியும் நிம்மதியற்ற, பாதுகாப்பற்ற அகதி வாழ்க்கையைத் தொடரும் அந்த மக்களை, தற்போது பெய்துவரும் கனமழையும் வெகுவாக வாட்டுகின்றது. ஆனாலும் அந்த மக்கள், சொந்த நிலத்தை மீட்பதற்காக எல்லாத் துயரங்களையும் தடைகளையும் தாங்கி, அங்கேயே தங்கியிருக்கின்றனர். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மருதோடை-எப்படியிருக்கிறது-எல்லை/91-225505
 9. நவதாராளவாதத்துக்கு எதிரான இறையாண்மையைப் பரப்புதல் Editorial / 2018 நவம்பர் 20 செவ்வாய்க்கிழமை, மு.ப. 05:22 Comments - 0 - அகிலன் கதிர்காமர் மூன்று வாரங்கள் நீடித்த பரிகாசமான அரசாங்கமும் நாடாளுமன்றத்துக்குள் காணப்பட்ட மூர்க்கத்தனமான செயற்பாடுகளும், பாரதூரமான அரசியல் நெருக்கடிக்குள் நாட்டைத் தள்ளியுள்ளன. நாடாளுமன்ற ஜனநாயகம், அரசமைப்புச் சட்டபூர்வத்தன்மை ஆகியன தொடர்பான கேள்விகளிலேயே, ஊடகங்களின் கவனமும் பொதுமக்களின் கலந்துரையாடலும் கவனஞ்செலுத்துகின்ற போதிலும், இந்த நெருக்கடியின் அடிப்படையான காரணங்களாக, பல தசாப்தங்களாகத் தொடர்ந்த நவதாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகள் மூலமாக உருவாக்கப்பட்ட ஸ்திரமற்ற நிலைமையும் உடைமையழிப்பும் காணப்படுகின்றன. கடந்த சில வாரங்களில், ராஜபக்‌ஷவுக்குச் சார்பான கொள்கை வகுப்பாளர்கள், நவதாராளவாதத்தைப் பற்றிய திரிபுபடுத்தப்பட்ட புரிதலை வெளிப்படுத்தி, தங்களது தேசியவாதப் பிரசாரத்தை முன்னெடுத்தனர். பொருளாதாரப் பேரழிவு, ராஜபக்‌ஷவின் நியமனத்தைத் தேவைக்குரியதாக மாற்றியது என அவர்கள் வாதிடுகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட நவதாராளவாதத் தாக்குதல்கள், இலங்கையின் இறையாண்மையைப் பலவீனப்படுத்தியுள்ளன என அவர்கள் கூறுகின்றனர். அவர்களின் கருத்தின்படி, இலங்கையின் சொத்துகளின் விற்பனையை நிறுத்துவதன் மூலமும் நாட்டின் இறையாண்மையைக் காப்பதன் மூலமும் தான், பொருளாதார நெருக்கடி தீர்க்கப்பட முடியுமென்கின்றனர். ஜனநாயகத்துக்கு எதிரான ராஜபக்‌ஷவின் அரசியலை ஒரு பக்கமாக விடுத்து, நவதாராளவாதம் பற்றிய அவர்களின் பிழையான புரிதலை, இப்பத்தி கேள்விக்குட்படுத்துகிறது. ராஜபக்‌ஷ குழுவினரின் இறையாண்மை பற்றிய கலந்துரையாடல், வெளிநாட்டு வெறுப்புடனான தேசியவாதத்தை வெளிப்படுத்துவதோடு, நவதாராளவாத முதலாளித்துவம் காரணமாகச் சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் மிகப்பாரியளவு உடைமையழிப்பைப் பற்றித் தெரிவிப்பதில்லை. எனவே, இக்கலந்துரையாடல் ஆபத்தானது. முரண்பாடுகள் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி, சர்வதேச நிதியியல் மய்யத்தையும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களையும் ஊக்குவிப்பதில் ஆக்ரோஷமாகக் காணப்பட்டமை என்பது உண்மையானது. ஆனால், நிதிமயமாக்கம், வர்த்தகத் தாராளமயமாக்கல், சர்வதேசத்தால் நிதியளிக்கப்பட்ட பாரிய உட்கட்டமைப்பு/ நகர அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் ஆகியன, ராஜபக்‌ஷவின் பொருளாதார நிகழ்ச்சித் திட்டத்தின் மத்திய அம்சங்களாக இருந்தன என்பதில், நாம் தெளிவாக இருக்க வேண்டும். இப்படி இருந்தாலும், ராஜபக்‌ஷவின் துறைமுக நகரம், ஷங்ரி-லா, ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் உள்ளிட்ட ஏனைய வேலைத்திட்டங்கள் உள்ளடங்கலான பொருளாதாரக் கொள்கைகள் தவிர்க்கப்படும் அதே நேரத்தில், ஹம்பாந்தோட்டைத் துறைமுகம், கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் ஆகியன குத்தகைக்கு வழங்கப்பட்டமை, சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஆகியன, ராஜபக்‌ஷ தரப்பினரால் “நவதாராளவாதம்” என வர்ணிக்கப்படுகின்றன. அதைவிட முக்கியமாக, நவதாராளவாதத்தின் அவ்வளவு குறுகிய வர்ணனையென்பது போதுமானதன்று. ஏனெனில், மக்களின் வாழ்வைப் பாதிக்கின்ற பொருளாதாரச் செயன்முறைகளையும் இயங்கியலையும் பற்றி இது கவனஞ்செலுத்தவில்லை. அரச சொத்துகளும் தேசிய செயற்றிட்டங்களும் வெளிநாட்டு அமைப்புகளுக்கு வழங்கப்படுகின்றன என்பது பற்றி முக்கியத்துவம் வழங்கும் அவர்களது நவதாராளவாதத்தின் வடிவம், பொருளாதார தேசியவாத அரசியலுக்கு ஒப்பானதாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பொருளாதாரச் செயற்பாட்டில், வெளிநாடு அல்லது தேசிய முதலுக்கு ஆதாயமடைகிறார்களா என்பதைப் பற்றிக் கவனஞ்செலுத்தும் அவர்கள், குறித்த முதல் பற்றியும், சுரண்டலும் உடமையளிப்பும் பற்றியுமான விமர்சனங்களை வழங்க மறுக்கிறார்கள். நிதி மூலதனம் மார்க்ஸிஸ புவியியலாளர் டேவிட் ஹார்வி உள்ளிட்ட ஏனையோரால் வெளிப்படுத்தப்பட்டதைப் போன்று, நவதாராளவாதம் என்பது, நிதி மூலதனத்தின் வர்க்கச் செயற்பாடொன்றாகும். முதலாளித்துவ உற்பத்திச் செயன்முறையில், தொழிலாளர்கள் சுரண்டப்படுவதற்கு மேலதிகமாக, நவதாராளவாத யுகத்தில் நிதி மூலதனமானது, மக்களின் செல்வத்திலிருந்தும் சொத்துகளிலிருந்தும் உரிமைத் தகுதிகளிலிருந்தும் அவர்களைப் பறிக்கிறது. இதற்கு மேலதிகமாக, காணிகளையும் வளங்களையும் மக்களிடத்திலிருந்து பறிப்பதற்கு உட்பட, இச்செயற்பாடுகளுக்குத் தேவையான போது பலம் பயன்படுத்தப்படுகிறது. மேலதிகமாக, நவதாராளவாதப் பூகோளமயமாக்கலின் கீழ், ஒவ்வொரு நாட்டினதும் நிதி, வங்கியியல் துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, பூகோள நிதியியல் திட்டமொன்று உருவாக்கப்படுவதால், பூகோள, தேசிய நிதி மூலதனத்துக்கு இடையிலான வித்தியாசம் தொடராது. இதில், பூகோள நிதியியல் நிறுவனங்களும் அவற்றின் உள்ளூர்ப் பங்காளர்களும் உட்பட, நிதி மூலதனமே அடைவுகளைப் பெற, உழைக்கும் மக்கள் தோல்வியடைகின்றனர். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்து எட்டாம் (1978) ஆண்டு கொண்டுவரப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கைகளைத் தொடர்ந்து, நிதியியல் நிறுவனங்களும் சில வங்கிகளும் கூட தகர்ந்துபோவதால் தூண்டப்படும் நெருக்கடிகள், அவ்வப்போது ஏற்பட்ட வண்ணம், இலங்கையின் நிதித்துறை விரிவடைந்து வருகிறது. கடந்த ஒரு தசாப்தகாலமாக, நிதியியல் துறையின் வளர்ச்சி, கணிசமானளவு துரிதமாகியுள்ளது. குறிப்பாக, போர் முடிவடைந்த பின்னர், பூகோள மூலதனத்தின் உள்வருகை ஆகியவற்றின் பின்னர், இந்நிலைமை உருவாகியுள்ளது. இலங்கையிலுள்ள பல நிதியியல் நிறுவனங்கள், உள்ளூர் நிதியாளர்களால் உருவாக்கப்பட்டு, உரிமைப்படுத்தப்பட்டுள்ள போதிலும், பெரிய வங்கிகள், அரசால் உரிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிதியியல் நிறுவனங்களும் வங்கிகளும், பூகோள நிதியியல் கட்டமைப்பொன்றுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, பூகோள நிதியாளர்களிடமிருந்து முதலீடுகளும் கடன்களும் பெறும் வகையில் காணப்படுகின்றன. அவ்வாறான நிதி மூலதனமே, குத்தகைக்கு வழங்குதல், நுண் நிதி, அடைவு வைத்தல் வணிகங்கள் ஆகியவற்றின் பிரதான விரிவுபடுத்தலின் பின்னணியில் உள்ளதோடு, அதிகரிக்கும் கடன் நிலைமைக்கு மத்தியில், உழைக்கும் மக்களின் உடைமையழிப்பில், இவையே அதிகளவு பொறுப்பானவையாக உள்ளன. எங்களது ஞாபகத்திறன், குறைந்தளவிலேயே உள்ளது போலுள்ளது. நிதி மூலதனம் பெருகுவதற்கான வழியேற்பாடுகளை வழங்குவதில், ராஜபக்‌ஷ அரசாங்கம் முன்னின்றது. கொழும்பு பங்குச் சந்தையைப் பெருப்பிப்பதற்காக ஊழியர் சேமலாப நிதியைத் திசைதிருப்பியமை, காப்புறுதித் துறையின் விரிவாக்கம், போரின் பின்னர் பாரிய சர்வதேசக் கடன்களை அரச வங்கிகள் பெறுவதற்கான அழுத்தம் போன்ற, மூலதனச் சந்தைகளின் ஊக்குவிப்பு நடவடிக்கைகள், தேசிய பொருளாதாரத்தை மிகப்பாரிய அளவில் நிதிமயமாக்குதல் நோக்கிச் செலுத்தியமையோடு, பூகோள நிதி மூலதனத்தோடு நாட்டை ஒருங்கிணைக்க வைத்தது. உள்வந்த பெருமளவிலான பூகோள மூலதனங்கள், தொடர்மாடி வீடுகள் உள்ளிட்ட மனை விற்பனைத் துறையில் முதலிடப்பட்டன. கொழும்பின் நகரமயமாக்கல், அழகுபடுத்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் கொள்கைகளால், இவை ஆதரவளிக்கப்பட்டன. பங்குச் சந்தையின் வளர்ச்சி, மனை விற்பனைத் துறையின் விரிவாக்கல் ஆகியன, ஊகத்தின் அடிப்படையிலும் நிதி மூலதனத்துக்கான பெருமளவு இலாபத்தை ஈட்டிக் கொடுப்பதன் அடிப்படையிலும் காணப்பட்டன. ஆனால், மீள மீள முன்வைக்கப்பட்ட ஊக அடிப்படையிலான வளர்ச்சிகள் உடைந்து, சமூக நலன்புரித் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டுக் குறைப்பும் அரச சேவைகள் தனியார்மயப்படுத்தப்படுவதையும் நியாயப்படுத்தப் பயன்படுத்தப்பட்டதால், உழைக்கும் வர்க்க மக்கள், உடைமையழிக்கப்பட்டனர். நவதாராளவாதச் சொத்துக் குவிப்பு என்பது, இலவசக் கல்வி, இலவச சுகாதாரம் போன்ற, பொதுமக்களின் உரித்துகளை இலக்குவைக்கிறது. கல்வியின் தனியார்மயப்படுத்தலும் வர்த்தமயப்படுத்தலும், தனியார் சுகாதார, சுகாதாரக் காப்புறுதி சேவைகளின் ஊக்குவிப்பும், இலாபமீட்டும் வணிகங்களுக்கான புதிய வழிகளாக மாறியுள்ளன. இந்தப் பின்னணியில், குறிப்பாகக் கடந்த தசாப்தகாலத்தில், நாட்டில் ஏற்றத்தாழ்வு அதிகரித்த வண்ணமிருக்கிறது. வருமானமும் செல்வமும் ஆகியவற்றில் காணப்படும் வித்தியாசம், ஏற்றுக்கொள்ளப்படத்தக்க சமூக நலன்புரிக்கான அணுக்கம் ஆகியவற்றில், இந்த ஏற்றத்தாழ்வு அதிகரிக்கிறது. மறுபக்கமாக, நிதி, கட்டுமானத் தொழிற்றுறைகளின் மூலமாக, சிறிய செல்வந்த வர்க்கமொன்று உருவாகி, தங்களுடைய மிகப்பெரிய மாளிகைகளையும் சொகுசு வாகனங்களையும் காண்பிக்கின்றன. பொருளாதாரத் தேசியவாதம் உண்மையில் பார்த்தால், போருக்குப் பின்னரான ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளோடு ஒப்பிட்டால், 2015ஆம் ஆண்டுக்குப் பின்னரான சிறிசேன - விக்கிரமசிங்க அரசாங்கத்தின் நவதாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகளோடு வித்தியாசத்தைக் கொண்டிருக்கவில்லை. இதன் காரணமாகத் தான், பொருளாதாரத்தின் நவதாராளவாதப் பாதைக்கான ராஜபக்‌ஷவுக்கு ஆதரவானவர்களின் விமர்சனங்கள், பலவீனமாக உள்ளன. இறையாண்மைக்குப் பாதிப்பு என்ற வகையான, தேசியவாத வாதங்களைப் பிடித்துக்கொண்டிருக்க, அவர்களுக்குக் கட்டாயமேற்பட்டுள்ளது. முரண்நகையாக, இறையாண்மைப் பிணைமுறிகளை விற்கும் முன்னெடுப்புகளை, ராஜபக்‌ஷ அரசாங்கம் தான் ஒரு தசாப்தத்துக்கு முன்னர் ஆரம்பித்தது என்பதை, அவ்வாறான ஆதரவாளர்கள் கருத்திற்கொள்வதில்லை. அடுத்த சில ஆண்டுகளில், பில்லியன் கணக்கான ஐக்கிய அமெரிக்க டொலர்கள், இறையாண்மைப் பிணைமுறிகளுக்காக மீளச்செலுத்தப்பட வேண்டியுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியம், பூகோள நிதி மூலதனத்தால் ஆதரவளிக்கப்படும் ஏனைய தரப்படுத்தல் முகவராண்மைகளுக்கு, மேலதிக நவதாராளவாத சீர்திருத்தங்களை உந்துவதற்கு, இக்கடன்கள் வாய்ப்பை வழங்குகின்றன. இறையாண்மையைப் பற்றிய தேசியவாத வாதங்கள், வர்த்தகத்திலும் முதலீட்டிலும் கைச்சாத்திடப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்கள், இலங்கையின் சொத்துகளும் செல்வங்களும் எவ்வாறு விற்கப்படுகின்றன ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஆனால், உள்ளூர் நிதியாளர்களால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் காரணமாகச் சுரண்டலும் உடைமையழிப்பும் இடம்பெறுவதைப் பற்றியோ அல்லது உள்ளூர், வெளிநாட்டு மூலதனங்கள் இணைதல் பற்றியோ, அவர்களிடம் பதிலில்லை. மேலதிகமாக, மூன்று வாரங்களாக நீடித்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் பொருளாதாரக் கருத்துகள், வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பது என்ற மட்டத்திலேயே காணப்பட்டது. இக்கருத்துகள், ராஜபக்‌ஷவின் கொள்கை பரப்பாளர்களால் தவிர்க்கப்பட்டிருந்தன. இந்த முரண்பாடுகள் ஒருபக்கமாகவிருக்க, ராஜபக்‌ஷவுக்கான ஆதரவான இந்த விமர்சனங்களின் உண்மையான கருத்து, நவதாராளவாதம் பற்றியோ அல்லது மக்களின் இறையாண்மை பற்றியோ இல்லை. ஏனெனில், உண்மையான எந்தவொரு விமர்சனமும், மக்களின் சுரண்டலும் உடைமையழிப்பும் பற்றிக் கவனஞ்செலுத்தியிருக்கும். எனவே இவ்விமர்சனங்கள், தேசம், தேசிய இறையாண்மை ஆகியன பற்றிய அவர்களின் கருத்துருவாக்கம் பற்றியதே. இவ்விரு விடயங்களும், ராஜபக்‌ஷ அரசாங்கத்துக்கான தேசியவாத ஆதரவை உயர்த்துவதற்கான முயற்சியாகும். அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கான இந்தத் தேசியவாதப் பிரசாரம், வெளிப்புறத் தலையீடு என்ற வெளிநாட்டவர்களுக்கு எதிரான அச்சத்தை அடிப்படையாகக் கொண்டதோடு, அவ்வாறான வெளிப்புற அழுத்தங்களை எதிர்த்து நிற்கக்கூடிய தேசியவாத நடவடிக்கைக்குப் பொருத்தமான பலமான தலைவராக, மஹிந்த ராஜபக்‌ஷ காண்பிக்கப்படுகிறார். ஏகாதிபத்தியத் தலையீட்டுக்கு எதிரான சில இடதுசாரிகளும், இவ்வாறான பிரசாரத்தில் வீழ்ந்துபோனார்கள். ஏனென்றால், வெளிப்புறச் சக்திகளுக்கான தமது எதிர்ப்பு, ஜனநாயகம், சமத்துவம், பொருளாதார நீதி ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் காணப்பட வேண்டுமென்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். கவலைக்குரிய விதமாக அவர்கள், ஜனநாயகம், மக்களின் பொருளாதார வாழ்வுகள் ஆகியவற்றுக்கு எதிராக, தேசிய இறையாண்மை என்ற பெயரில் தாக்குதல்களை மேற்கொள்ளும் அதிகாரவய தேசியவாதியின் கீழ் வீழ்ந்துவிட்டார்கள். சிங்கள - பௌத்த தேசியவாதமாக இருந்தாலும், தமிழ்த் தேசியவாதமாக இருந்தாலும், தேசியவாதமென்பது, தேர்தல் பிரசாரங்களுக்கான வலிமையான சக்தியாகும். இனச் சமூகங்களைப் பிளவுபடுத்தி, தேர்தல் ஆதரவை வலுப்படுத்த அது பயனுள்ளது என்பது, காலங்காலமாக நிரூபிக்கப்பட்டதாகும். ஆனால் அந்தச் செயன்முறையில், அச்சத்தையும் எதிர்ப்புக் கொள்கைகள் மீதான வன்முறையையும் ஏவுகிறது. அவ்வாறான தேசியவாதப் பிரசாரங்களால் தூண்டப்படும் வெளிநாட்டு வெறுப்பு, “உள்ளுக்குள் காணப்படும் எதிரிகள்” மீதான பழிவாங்கலாக அமையும். அவ்வாறானவற்றில், நாட்டுக்குள் காணப்படும் ஒன்று அல்லது வேறு சிறுபான்மைச் சமூகம் மீதான தாக்குதல்கள் அல்லது கடந்த 5 ஆண்டுகளில் முஸ்லிம் சமூகம் மீதான தாக்குதல்கள் ஆகியன உள்ளடங்குகின்றன. காத்திரமான பொருளாதார மாற்றுத் திட்டமொன்று இல்லாத நிலையில், ராஜபக்‌ஷவின் பொருளாதாரம் நிலைபெறுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுமாயின், இறையாண்மை பற்றிய தேசியவாதப் பிரசாரங்கள், பிரிவினை பற்றிய அச்சமூட்டலுடன் இணைந்து, கடந்த தசாப்தத்தில் நாங்கள் பார்த்த நவதாராளவாதக் கொள்கைகளாகவே அமையும். சமூகங்களைத் துருவப்படுத்தலும் அதிகாரவய அதிகாரத்தை நிலைநிறுத்தலும், நவதாராளவாதப் பொருளாதாரமொன்று உறுதியடைவதற்கான நிலைமைகளை ஏற்படுத்துமென்பதூடு, அதில், எதிர்ப்பை நசுக்குதல், மக்களைச் சுரண்டுதல், உடைமையழித்தல் ஆகியனவும் தொடரும் ஆபத்துக் காணப்படுகிறது. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நவதாராளவாதத்துக்கு-எதிரான-இறையாண்மையைப்-பரப்புதல்/91-225506
 10. மிக்க நன்றி கதையின் இறுதி வரிகள் எழுதும்போது எனக்கும் அடிவயிற்றில் வலிப்பதுபோலதான் இருந்தது ..,.
 11. அப்போ இதுவரை தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் சந்தோசமாகவும் இருக்கிறார்கள்?
 12. கள்ள வாகன ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் எடுத்தவர்கள் எல்லாம் இப்படித்தான் அடிபடுவினம். வகன, சாலைப்போக்குவரத்து ஒழுங்குவிதிகளைக் கடைப்பிடிக்காமை அந்தப்பக்கம் இந்தப்பக்கம் திரும்பிப்பாக்காமை வாகனத்திலுள்ள ஒலிபெருக்கியை அதி உச்ச சத்தத்தில் வைத்து இந்துமகளீர் பாடசாலைப்பிள்ளைகளுக்கு கெத்துக்காட்டியிருப்பார் மோதுப்பட்டுப்போனார் . லைற்றா தண்ணியும் அடிச்சிருப்பார்போலக்கிடக்கு.
 13. 141. அடைப்பு முதலில் அது ஒரு தோற்றப்பிழை என்று வினய்க்குத் தோன்றியது. உடனே அவமானமாகவும் குற்ற உணர்வு கூடியும் சட்டென்று ஒரு துக்கம் திரண்டெழுந்து நெஞ்சை மிதித்தது. அவன் கிருஷ்ணனை நினைத்துத் தவமிருந்தான். கிருஷ்ணனைத் தவிர வேறெதையுமே அந்நேரம் அவன் நினைக்கவில்லை. தன்னியல்பான பக்தி கூடாத மனத்தை ஒருமுகப்படுத்தவும் தன்னை அற்பமாக்கிக் கிடத்தவும் நாமஜபம் உதவும் என்று வினோத் சொல்லியிருந்தது சரிதான் என்று அவன் தனது முயற்சியைத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே உணர்ந்திருந்தான். திரும்பத் திரும்ப உச்சரித்துக்கொண்டே இருந்தபோது கிருஷ்ணன் இனிக்கத் தொடங்கியிருந்தான். அவனது குழலின் ஓசையே நீல நிறமாகிப் பரவி வெளியெங்கும் நிறைந்திருந்ததாக அவனுக்குத் தோன்றியது. அதில் நீந்தித் திளைக்க சுகமாக இருந்தது. நோக்கத்தைக்கூடக் களைந்துவிட்டுக் கிருஷ்ணனில் கரைந்துவிடலாம் என்று அவனுக்கு ஒரு கட்டத்தில் தோன்றியது. ஒரு பிணத்தைப் போல அவன் மணல் வெளியில் விழுந்து கிடந்தான். சிந்தை ஒன்றைத் தவிர வேறெதுவும் இயங்கா நிலையை எய்திவிட்டிருந்தான். உடலெங்கும் ஏறிக் கடித்த சிற்றெறும்புகளும் அவனது சடையை ஒரு வலையென எண்ணி உள்நுழைந்து வெளியேறிய சிலந்திகளும் காற்றில் திரண்டெழுந்து முகமெங்கும் பரவிய மணல் துகள்களும் அவனுக்கு ஒரு பொருட்டாக இல்லை. அந்தக் குரல் வராதிருந்தால் அவன் நாளெல்லாம் ஜபத்தைத் தொடர்ந்திருப்பான். போதை கலைந்து நிதானம் ஏறும்வரை அது நீண்டு நிறைந்திருக்கும். லட்சம் என்பதெல்லாம் என்ன? தொடங்குவதற்கு ஓர் இலக்கு. அவ்வளவுதான். உள்ளே மூழ்கிய பின்பு எண்ணிக்கைகளுக்கு அர்த்தமில்லை. ராய்ப்பூரில் அவனது நண்பன் ஒருவன், ஒரு சமயம் நாற்பது நாள் தவம் என்று அறிவித்துவிட்டு உட்கார்ந்தான். எண்ணி இருபது நிமிடங்களில் அவனது தவம் முடிந்துவிட்டது. பெரும் பரவசக் கூச்சலோடு எழுந்து நின்று கூத்தாட ஆரம்பித்தான். என்ன விஷயம் என்று வினய் கேட்டதற்கு, ‘என் தவத்துக்குப் பலன் கிட்டிவிட்டது. எனக்கு இந்திர தரிசனம் சித்தித்துவிட்டது’ என்று சொன்னான். தனக்கு அம்மாதிரியான அதிர்ஷ்டங்களுக்கு வாய்ப்பில்லை என்று வினய்க்கு எப்போதும் தோன்றும். முட்டி மோதி உதிரம் உலர்ந்து நாடி நரம்புகள் தளரும் நேரத்தில்தான் பிழைத்துப் போ என்று சில பத்து காசுப் பிட்சைகள் விழும். ஆவிகளை அடையாளம் காணவும் அவற்றை இழுத்து நிறுத்திப் பேசவும் வசியப்படுத்தி வைத்துக்கொள்ளவும் அவன் பயின்றதும் தேர்ச்சியடைந்ததும் அவ்வாறு நிகழ்ந்ததுதான். வினய் அப்போது கேரளத்தில் இருந்தான். முகம்மது குட்டியையெல்லாம் மறந்து பன்னெடுங்காலமாகியிருந்தது அப்போது. எங்கெங்கோ அலைந்து திரிந்துவிட்டு இறுதியில் ஒரு மலையாள நண்பனின் ஆலோசனையின் பேரில் எர்ணாகுளத்துக்கு வந்து தங்கியிருந்தான். தாந்திரிக விற்பன்னரான நம்பூதிரி ஒருவரிடம் சில காலம் தங்கிப் பயில அவனுக்கு அனுமதி கிடைத்திருந்தது. அது அந்த நண்பன் ஏற்பாடு செய்தது. குறிப்பிட்ட சில ஆவிகளை அடக்கியாள அவனுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. ஆனால் அவன் விரும்பியது வேறு. உலகெங்கும் சுற்றித் திரிந்துகொண்டிருக்கும் எந்த ஒரு ஆவியையும் நினைத்த கணத்தில் தன் புறம் ஈர்க்கவும் தனது பணியில் ஈடுபடுத்தவும் முடியுமா என்று அவன் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தான். அது முடியக்கூடிய ஒன்றுதான் என்று கல்கத்தாவில் அவனுக்கு அறிமுகமான வயது முதிர்ந்த ஆவியுலக ஆய்வாளர் ஒருவர் சொன்னார். எப்படி முடியும், என்ன செய்ய வேண்டும் என்று வினய் கேட்டபோது அவர்தான் அந்தக் கேரள இளைஞனை அவனுக்கு அறிமுகப்படுத்தியது. ‘இவன் பெயர் குட்டப்பன். எர்ணாகுளத்தைச் சேர்ந்தவன். இவனது சித்தப்பாவால் உனக்கு அந்தக் கலையை போதிக்க முடியும்’ என்று அவர் சொன்னார். வினய் குட்டப்பனுக்கு வணக்கம் சொன்னான். தன் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டான். தன்னைப் போன்ற தேடலில் உள்ள இன்னொருவனைக் கண்டதும் குட்டப்பனுக்கும் மகிழ்ச்சி உண்டானது. அவன் சில வசிய மருந்துகளைச் செய்யும் விதத்தைக் கற்பதற்காகக் கல்கத்தாவுக்கு அப்போது வந்திருந்தான். அவன்தான் வினய்க்குத் தன் சித்தப்பா என்ன செய்கிறார் என்பதைப் பற்றிச் சொன்னான். ‘இருபத்தி ஏழு நட்சத்திரங்களுள் பதிமூன்று நட்சத்திரங்கள் சிறிது சிக்கல் வாய்ந்தவை. அவை தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள் என்று அழைக்கப்படும். அந்தப் பதிமூன்று நட்சத்திரங்களில் இறந்தவர்களை மட்டும்தான் நாம் நமது காரியங்களுக்குப் பயன்படுத்த முடியும்’ என்று அவன் சொன்னான். ‘அப்படியா?’ ‘ஆம். உதாரணமாக அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதியில் இறந்தவர்கள் என்ன முட்டி மோதினாலும் ஆறு மாதங்களுக்கு எமனுலகம் போக முடியாது. அந்த ஆறு மாத அடைப்பு அவர்களுக்கு இருந்தே தீரும்’. ‘ஓ!’ ‘ரோகிணியில் இறந்தால் நான்கு மாத அடைப்பு. உத்திரத்தில் உயிர் போனால் மூன்று மாத அடைப்பு. மிருகசீரிஷம், புனர்பூசம், உத்திராடம் இதிலெல்லாம் இறந்தால் இரண்டு மாத அடைப்பு நிச்சயம். என் சித்தப்பா இன்னும்கூட நிறைய சொல்லுவார். பிரச்னை என்னவென்றால் ஒருவர் இறந்தால் உடனே நாம் திதியைத்தான் கவனிப்போம். நட்சத்திரத்தைப் பார்க்க மாட்டோம். ஆனால் நட்சத்திரத்தை கவனித்தால்தான் நமக்கு லாபம்’ என்று குட்டப்பன் சொன்னான். ‘ஆனால் குறுகிய காலம்தான் அந்த ஆத்மாக்களைப் பயன்படுத்த முடியும் அல்லவா?’ ‘அதில் சந்தேகமில்லை. ஆனால் ஆயிரம் பல்லாயிரம் ஆவிகளைக் கட்டிவைக்க முடியும் என்று என் சித்தப்பா சொல்லுவார். குறிப்பாகப் பூரட்டாதி, உத்திரட்டாதியில் இறந்தவர்கள் சுமார் இருபதாயிரம் பேர் என் சித்தப்பாவுக்கு சேவகம் செய்கிறார்கள்’. இருபதாயிரம் பேர் வேலை செய்யும் ஒரு தொழிற்சாலையை வினய் கற்பனையில் விரித்துப் பார்த்தான். சிரிப்பு வந்தது. இது ஒரு சாகசம் அல்லவா! எத்தனை பேருக்கு சாத்தியமாகும்! ‘உன் சித்தப்பாவை நான் சந்திக்க வேண்டும்’ என்று வினய் சொன்னான். குட்டப்பன் வந்த காரியத்தை முடித்துக்கொண்டு ஊர் திரும்பும்போது, வினய்யை உடன் அழைத்துச் சென்றான். ஆனால் அவனது சித்தப்பா வினய்யை ஏற்றுக்கொள்ள மிகவும் தயக்கம் காட்டினார். அவனுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தவற்றைக் குறித்து மிகவும் கவனமாக விசாரித்து அறிந்தார். அவன் கட்டை விரலுக்குள் அடைத்து வைத்திருந்த இடாகினியை வெளியே விடச்சொல்லி சிறிது நேரம் அதனோடு பேசிப் பார்த்தார். ‘இது ஒன்றுதானா?’ என்று கேட்டார். ‘இல்லை. எனக்கு வேறு இரண்டு ஆவிகளின் சகாயம் உண்டு’. ‘என்ன செய்யும் அவை?’ ‘தரிசன லாபங்கள் ஒன்றன் மூலம் கிட்டும். இன்னொன்றைக் கொண்டு காணாமல் போன பொருள்களை மீட்டெடுப்பேன்’. ‘அவ்வளவுதானா?’ அவன் சிறிது யோசித்துவிட்டு, ‘ஆமாம். அவ்வளவுதான்’ என்று சொன்னான். குட்டப்பனின் சித்தப்பாதான் முதல் முறையாக வினய்க்கு ஒரு விஷயத்தைச் சொன்னது. ஆறு மாத காலத்துக்கு மேல் ஆவியாக அலைந்துகொண்டிருப்பவற்றோடு சிநேகிதம் கூடாது. அந்தப் பழக்கம் வாழ்வை நசியச் செய்துவிடும். தனிஷ்டா பஞ்சமி காலம் முடிந்து எமனுலகம் கிளம்பும்போதே விடை கொடுத்துவிட வேண்டும். இன்னொரு முறை அதைத் திரும்பிக்கூடப் பார்க்கக் கூடாது. ‘அப்படியா?’ நீ உன்னுடைய இரண்டு சினேகிதங்களையும் தொலைத்துவிட்டு வந்து சேர்ந்தால், உனக்குக் கற்றுத் தருவதைக் குறித்து யோசிக்கலாம்’ என்று அவர் சொன்னார். வினய்க்கு இது மிகுந்த குழப்பம் அளித்தது. ஆனால் இடாகினியைப் பற்றி அவர் ஒன்றும் சொல்லவில்லை என்பது சற்று நிம்மதியாக இருந்தது. மறுநாள் ஒரு சிறிய சடங்குக்குப் பிறகு அவன் தன்னோடு தொடர்பில் இருந்த இரண்டு ஆவிகளையும் விடுவித்து அனுப்பிவைத்தான். குளித்துவிட்டு வழியில் தென்பட்ட ஒரு பகவதி கோயிலுக்குச் சென்று கும்பிட்ட பின்பு குட்டப்பனின் சித்தப்பாவைச் சென்று சந்தித்தான். ‘உட்கார்’ என்று சொன்னார். அவன் உட்கார்ந்தான். ‘உன் கட்டை விரலின் மீதுள்ள கட்டை அகற்று’. ‘எதற்கு?’ என்று வினய் கேட்டான். ‘நீ எனக்குத் தரப்போகிற குரு தட்சிணை அதுதான்’ என்று அவர் சொன்னார். வினய் எழுந்துவிட்டான். ‘ஏன் எழுந்துவிட்டாய்?’ என்று அவர் கேட்டார். ‘இல்லை. நான் வாழ்வெங்கும் நிறைய இழந்தவன். மிச்சம் இருப்பது இது ஒன்றுதான். இதையும் குரு தட்சணையாகத் தர நான் விரும்பவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று சொல்லிவிட்டு அவன் கிளம்பும்போது, அவர் என்ன நினைத்தாரோ ‘சரி வந்து உட்கார்’ என்று சொன்னார். வினய்க்கு நம்பிக்கை வரவில்லை. ‘உன் இடாகினி எனக்கு வேண்டாம். ஒருவாரம் உனக்கு நான் சில பாடங்கள் சொல்லித் தருவேன். கற்று முடித்த பின்பு உன் இடாகினியைக் கொண்டு எனக்கு நீ ஒரு சகாயம் செய்து தர வேண்டும்’ என்று அவர் சொன்னார். அந்த ஒரு வாரத்தில் அவனுக்கு இரண்டு பாடங்கள் கிடைத்தன. எல்லா ஆவிகளையும் அவை உடலை விட்டுப் பிரியும்போதே கண்டறியும் ஆற்றல் சித்தித்தது. இரண்டாவது, தனிஷ்டா பஞ்சமி ஆவிகளைப் பிரித்தறியக் கற்றுக்கொண்டான். ‘இன்னும் ஒன்று சொல்லித்தருவேன். எந்த ஆவியையும் உன் பணிக்குப் பயன்படுத்தும் வித்தை. ஆனால் அதற்குமுன் நீ எனக்கு ஒன்று செய்ய வேண்டும்’ என்று அவர் சொன்னார். ‘சொல்லுங்கள்’. அவர் சொன்னார். அவன் தனது இடாகினியின் உதவியுடன் அதைச் செய்து கொடுத்தான். குற்ற உணர்வில் அடுத்த நாற்பது தினங்கள் உண்ணாமல் விரதம் இருந்து உடல் நலிந்து படுத்தான். மீண்டு எழ மேலும் மூன்று மாதங்களாயின. (தொடரும்) http://www.dinamani.com/junction/yathi/2018/oct/01/141-அடைப்பு-3010480.html
 14. எம்மா -தேவகாந்தன்- அதுவொரு மென்மையும் நுட்பமும் சார்ந்த விஷயமாக அவளுக்குப் பட்டது. இருந்தும் அதை வகைப்படுத்தி இதுதானெ புள்ளிவைக்க அவளால் கூடவில்லை. அங்கேயே நடந்திருந்ததும், வெவ்வேறுஇடங்களில் நடந்ததாய்க் கேட்டிருந்ததுமான அதுபோன்றசம்பவங்கள்கூட எம்மாவுக்கும் சண்முகநாதனுக்குமிடையே உள்ளோடியிருந்த மனவுணர்வைப் புரிந்துகொள்ளபோதுமானவையல்ல என்பதாய் அவளுக்குத் தெரிந்தது. பழகியவர்களும் புரிந்திட முடியாதளவு அதில் புதிர்கள் நிறைந்து கிடந்தன. அந்தத் தொழிற்சாலையில் வேலைபார்க்கும் ஆறு வருஷ அனுபவத்தில் ஒரு ஆணினதும் பெண்ணினதுமான நெருக்கத்தில் எழுந்த கதைகள் வெறும் வதந்திகளாய்க் கரைந்தழிந்ததை அவள் நிறையக் கண்டிருந்தாள். இருந்தும் அவர்கள் விஷயத்தில்ஏதோவொன்று இருக்கவே செய்கிறதென்று மனத்துள் குடைந்துகொண்டிருந்த எண்ணத்தை அவளால் துடைக்க முடியவில்லை. கடந்த சில மாதங்களாகவெனினும் எம்மாவோடு நெருக்கமானபழக்கமுண்டு லட்சுமிக்கு. வீடுகள் அண்மையில் இருந்ததில், வாகன வசதியற்றவர்களுக்கு அந்தச் சமீபத்தின் வெளிகூட சிரமத்தில் கடக்கவேண்டியதாயிருந்தும், வார இறுதி நாட்களில் ரிம் ஹோர்டனிலோ, வோல் மார்ட்டிலோ அல்லது அணித்தாயிருந்த பிறைஸ் சொப்பரிலோ அவர்கள்சந்தித்துக்கொள்வதுண்டு. பிள்ளைகளின் பிறந்தநாள்களிலும், நத்தார் புதுவருஷம் உயிர்த்த ஞாயிறுபோன்ற விசேஷதினங்களிலும் வீடுகளிலே கூடிக்கொள்ளவும் செய்தார்கள். இன்னும் அந்நியமாயிருந்த ஆங்கிலத்திலான உரையாடல் மூலம்தங்கள் குடும்பங்களைப்பற்றி, நாட்டைப் பிரிந்துவந்தகாரணங்கள்பற்றி, இறுதியாக கனடா வந்து சேரும்வரை பட்டஅவலங்கள்பற்றியெல்லாம் அவர்கள் பேசியிருக்கிறார்கள். இலங்கையில் இருந்ததுபோன்ற இனக்கொடுமையை ஆர்மீனியா நெடுங்காலத்துக்கு அனுபவித்திருந்தது. அதிலிருந்து தப்பிப்பிழைத்து ஒரு குழந்தையோடு கனடா வந்து சேர்வதொன்றும்எம்மாவுக்கு இலகுவான காரியமாய் இருக்கவில்லை.இலங்கையிலிருந்து இருபத்திரண்டு வயதில் தன்னந்தனியனாய் இந்தியாவென்றும் சிங்கப்பூரென்றும் தாய்லாந்தென்றும் அலைந்துழன்று லட்சுமி கனடா வந்துசேர்ந்த கஷ்டங்களை பெரும்பாலும் அது நிகர்திருந்தது. கணவனால் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் காரணங்கள் துரத்த எம்மா நாட்டைவிட்டு வெளியேறியிருக்க, லட்சுமிக்கு கனடாவந்த பிறகு நடந்த திருமணத்திற்கு பிரிவு விதியாகியிருந்தது. வேறு பெண்ணோடுள்ள தன் கணவனின் தொடர்பு உறுதிப்பட்டநாளில் குடும்பத்தில் வெடித்துப் பெருகிய கலகம் பொலிஸ்வரைசென்று அன்று இரவே லட்சுமியின் கணவனை வீட்டைவிட்டுவெளியேற்ற அவள் தனியனாகியிருந்தாள். பிரிவு பின்னால் சட்டரீதியாகவும் உறுதியாயிற்று. ஏறக்குறைய ஒரேவிதமான தனித்தாயர் வாழ்க்கைஇருவருக்கும். ஒரேவிதமான கஷ்ரங்களின் எதிர்ப்படுகைகள். இவையே கூடி வேலைசெய்யும் அவ்விருவருக்குமிடையில் மிகுந்த அந்நியோன்யத்தை ஏற்படுத்தியிருந்தன. இருந்தும் சண்முகநாதன்மேல் கிளர்ந்திருக்கக்கூடிய விருப்பம் ஈர்ப்புவென எதுபற்றியும் எம்மா அவளுடன் என்றும் பிரஸ்தாபித்ததில்லை. அதுமாதிரியான இணக்கங்களை அனுமதித்துவிடாத ஒரு தொழிற்சாலையின் நடைமுறை விதிகளினால் மறைக்கப்பட்ட அவ்வுணர்வுகள் தெறிக்கும் கணங்களில் உருக்கொள்ளும் அனுமானங்களும், உள்ளே அசைந்து திரியும் வதந்திகளும் விசை கொள்கிறபோது லட்சுமியே எம்மாவிடம் கேட்டிருக்கிறாள். சிரிப்புக்கான விஷயம்போல் பாவித்து எம்மா அதற்கு 'ஒன்றுமேயில்லை, குழம்பாதே'யென பதிலளிக்கவும் செய்திருக்கிறாள். ஆனால் லட்சுமிக்கு இப்போது மறுபடி சந்தேகம் வந்திருக்கிறது, எம்மா அந்த வதந்திகளுக்கும், உருத் தோற்றங்களுக்கும் பின்னாலுள்ள உறவின் உண்மையை தன் சிரிப்பால் போர்த்து மறைத்துவிட்டிருந்ததாக. முதல்நாள் வெள்ளிக்கிழமை தொழிற்சாலையில் யாரும் எதிர்பாராதவிதமாக நடந்த அச்சம்பவம் குறித்து லட்சுமியின்நிலைப்பாடு அவளுடைய சிநேகிகளுடையதைவிட, குறிப்பாக மணியக்கா மற்றும் வர்த்தினியினதைவிட, வேறாகவே இருந்தது. ஏதோ தமக்குள்ளான ஒப்பந்தத்தை எம்மா மீறினாள்போல வெடித்துச் சினந்து சண்முகநாதன் எம்மாவைத் தூற்றியதற்காக அவள் அவனைக் கோபிப்பாளே தவிர, எம்மாவை அல்ல. எம்மாமீதான அவளது கோபமெல்லாம், அவ்வளவு கொதிநிலை அடையும்படியான உண்மையொன்று அதில் இருந்திருந்தும், தன்னிடத்தில் அதை முற்றுமாய் மறைத்திருந்தாளே என்பதில்தான். வேலை முடிந்து வீடு திரும்பியவளுக்கு செய்ய நிறைய வேலைகளிருந்த கவனத்தைமீறி அன்றைய வேலைத்தல சம்பவத்தைச் சுற்றியே மனது அலைந்துகொண்டிருந்தது. சண்முகநாதன்மீது அவளுக்கு நல்ல அபிப்பிராயம் உண்டு. தொழிற்சாலையில் பத்து வருஷங்களாக வேலை செய்யும் அனுபவத்தை, ஒரு முன்னுரிமையாக எடுத்துக்கொள்ளும் மற்ற ஆண்கள் போலன்றி, அதிகமாக பெண்களே வேலைசெய்யும் அத் தொழிற்சாலையில் அவன் கண்ணியமாக நடந்துகொண்டான். நெருங்கி வேலைசெய்ய நேரும் இருபாலார் உடல்களிலும் அவ்வாறான தொழிற்கூடங்களில் ஒரு சபல அலையின் வீச்சுக்கு எப்போதும் குறைவிருப்பதில்லை. அதன் அதிர்வலைகள் எப்போதாவதெனினும் தம்மிருப்பை வெளிப்படுத்தவே செய்கின்றன. இறுக்கமான நெருக்கமொன்று அவர்களுக்குள் இருக்கிறதோவென்ற சந்தேகம் பலருக்கும் ஏற்கனவே இருந்திருந்தது. அவர்கள் அதில் நிச்சயம்கொண்டு சிரிக்கும்படியாகவே அன்றைய சம்பவம் நடந்திருந்தது. ஆனால் லட்சுமியோ திகைத்து நின்றிருந்தாள். அந்த விஷயம் அவளுக்கு லேசானதில்லை. சின்ன விஷயங்களுக்குக்கூட வெடித்தெழும் இயல்புகொண்டவள் எம்மா. அங்கே வேலைசெய்ய வந்த அத்தனை சிறிய காலத்துள் அவள் பலபேரோடு வாக்குவாதப்பட்டு கதைபேச்சுக்களை அறுத்திருக்கிறாள். அது அன்றுவரையிலும்கூட சிலரோடு தொடர்ந்துகொண்டிருக்கிறது. கனடா வந்த ஆறு ஆண்டுகளில் செய்த பத்து வேலைகளில் ஒன்பதன் இழப்பு, முன்பின் யோசியாது அநீதியான எதையும் தூக்கியெறிந்து அவள் வெடித்ததின் காரணமாகவே சம்பவித்தது. அதில் பாதிக்குமேல் மற்றவர்களுக்கானதாகவே அவை இருந்தன. ஆனால் அன்று அந்தளவு கடூரமான வார்த்தைகள் தன்மேல் எறியப்பட்டபொழுதில் வெப்ப வலயத்தில் ஒரு மெழுகுச் சிலையின் உருகுநிலைக்கு முன்னான ஸ்திதியில் தகதகத்துக்கொண்டு தன் ஆளுமை சிதைய மௌனமாய் எம்மா நின்றிருந்தாளே, ஏன்? அவனும் அவ்வாறான வெடிப்பைக் காட்டுமளவு உள்ளுள்ளாகவேனும் ஒரு பாத்தியதையை சுவீகரித்தவனாய்த்தான் தென்பட்டிருந்தான். அவனது வெடிப்பும் அவளது மௌனம்போலவே கதைகளைப் பின்புலத்தில் கொண்டிருந்ததின் சாட்சியமென லட்சுமி எண்ணினாள். புதிர்கள் விளைந்துகொண்டிருந்தவளின் மனத்தில் இன்னொரு முகம் தோன்றியது. அடித்த அந்தப் புயலில் மேற்பார்வையாளருக்கு என்ன பங்கிருக்கிறது? அவள் அதை நினைத்தே ஆகவேண்டும். ஏனெனில் அவன் எம்மாவின் வேலைகளில் அதிகமாகவும் குற்றமே கண்டுகொண்டிருந்தவன். அவளது வேலை நிரந்தரத்தை அதனால் கேள்விக்கு உள்ளாக்கிக்கொண்டு இருந்தவன். இதற்குப் பின்னாலுள்ள இவன் கதை என்ன? இந்த மூவர் கதைகளின் மோதலா வேலைத்தலத்தில் அன்றடித்த புயல்? அன்றைய வெள்ளிக்கிழமை வழக்கமாக வேலைசெய்வதில் இல்லாமல் தூரத்து மெஷின் ஒன்றிலே வேலைசெய்யும் கட்டாயம் எம்மாவுக்கு நேர்ந்துவிட்டது. போகும்போது லட்சுமியைப் பார்த்து 'கஷ்ரம்! கஷ்ரம்' என்பதுபோல் தலையிலே தட்டி அலுத்துக்கொண்டுதான் அவளும் போயிருந்தாள். சனி ஞாயிறு விடுமுறை கொண்ட அத் தொழிற்சாலையில் கிழமை நாளின் இறுதி நாளான வெள்ளிக்கிழமையின் கடைசி ஒரு மணி நேரத்தை மெஷின்களையும் வேலைத்தலத்தையும் துடைத்து துப்பரவுசெய்வதற்காக ஒதுக்கியிருந்தார்கள். அன்று துப்புரவுப் பணிக்காக இரண்டு மணியளவில் மெஷின்கள் நிறுத்தப்பட்ட நிமிஷத்திலிருந்து எம்மா எங்கும் பார்வையில் தட்டுப்படவில்லை. அவ்வாறான துப்புரவுப்பணியிலிருந்தான ஒதுக்கம் அவ்வப்போது மேற்பார்வையாளரின் அனுசரணையாளர்களுக்கு கிடைப்பதுதான். தன்னுடைய மெஷினிலிருந்து எம்மா சென்றதில், அவளால் அதைத் தவிர்த்திருக்க முடியாதெனத் தெரிந்திருந்தபோதும், வெகுநேரமாய் கடுகடுத்துக்கொண்டிருந்த சண்முகநாதன், மெஷின்கள் நிறுத்தப்பட்டு வெகுநேரமாகியும் எம்மா காணப்படாததில், அவள் எங்கேயென்று ஒருமுறை லட்சுமியை வந்து விசாரித்துப் போனான். 'காணேல்லை. ஒஃபீசுக்கு போயிருப்பாவோ தெரியா' என பதிலளித்திருந்தாள் அவள். நேரமாகவாக அவன் தன்னிலை இழந்திருந்ததின் அடையாளமாக கூடவும், பக்கத்திலும் வேலைசெய்தவர்களோடெல்லாம் சண்முகநாதன் சினந்துகொண்டிருந்தான். 'சண்ணோட வேலைசெய்யிறது வலு சுகம்' என்று சொல்லிக்கொண்டிருந்த வர்த்தினிமேலேயே பலதடவைகள் வெடித்துப் பாய்ந்துவிட்டான். ஒருபோது அவள் அழுகையை அடக்கமுடியாமல் குலுங்கினாள். மூன்று மணிக்கு சிறிதுநேரம் முன்பாகத்தான் எம்மா மறுபடி அங்கே காணப்பட்டாள். எம்மா கிட்ட வர, சண்முகநாதனின் பெருந்தொனி கூடத்தையே அதிர வைப்பதுபோல் வெடித்தெழுந்தது. வீடு செல்ல புறப்பட்டுக்கொண்டிருந்த அத்தனைபேருமே திடுக்கிட்டுத் திரும்பினார்கள். அப்போது வேலைநேரம் முடிவதற்கு ஐந்து நிமிஷங்கள் முன்பான சமிக்ஞை மணி அலறியது. உறைவுநிலை கலைந்தவர்கள் மெல்ல வாசலைநோக்கி நகரத் தொடங்கினர். வேலை முடிந்து செல்லும் நேரத்தில் பெண்கள் கூட்டத்தில் நின்று எப்போதும் கலகலத்துக்கொண்டிருக்கும் எம்மா, மின்னல் தாக்கிக் கருகிய மரம்போல இறுதி மணியொலிப்பைக் காத்தபடி உள்வாசலில் தனியே நின்றிருந்தாள். அன்று பஸ் எடுக்க லட்சுமியோடும் அவள் கூடச் செல்லவில்லை. வீடு செல்ல அதிக நேரமெடுக்கும் மாறுதிசையில் வந்த பஸ் எடுத்துக்கொண்டு அவளுக்கு முன்னாலேயே போய்விட்டாள். அவளோடு உரையாடாமல் சில விஷயங்களில் தன்னால் எவ்வளவு யோசித்தாலும் தெளிவுபெற்றுவிட முடியாதென்பது லட்சுமிக்குத் தெரிந்தது. அது வெளிப்பார்வைக்குத் தெரிந்துவிடாத பல நுட்பங்களை உடையதாயிருந்தது. அவள் எம்மாவுக்கு போனெடுத்து மறுநாள் தாங்கள் அவசியம் சந்திக்கவேண்டுமென்றாள். ஆறு மணியளவில் சந்திக்க சம்மதித்தாள் எம்மா. மறுநாள் மாலை ஆறு மணியளவில் ரிம்ஹோர்டனில் இருவரும்சந்தித்தனர். முதல்நாள் நடந்த சம்பவத்துக்கு எம்மா அன்றைக்கும்அழுதாளா? அவ்வளவுக்கு அவளது முகம் நீண்டநேரம் அழுதஅதைப்பு கொண்டிருந்தது. பாவம்தான்! அவ்வளவு மோசமானவார்த்தைகளைத் தாங்கிவிடுவது ஒரு வெள்ளைத் தோலிக்குக்கூடவலி நிறைந்ததாகவே இருந்திருக்குமென எண்ணினாலும், அவளைத் தேற்றுவதைப் பின்போட்டுவிட்டு தன் சந்தேகங்களைத் தீர்க்க முனைந்தாள் லட்சுமி. “நான் கேட்கப்போகிற கேள்விக்கு வழக்கம்போல இன்று சிரித்துக்கொண்டு பதில்சொல்ல உன்னால் முடியாமலிருக்குமென்று எனக்குத் தெரியும். முன்பு ஒன்றோ இரண்டோ முறை கேட்ட அதே கேள்விதான் இது. நீயும் பதில்சொல்லியிருக்கிறாய்தான். இல்லை இல்லையென்று நீ ஆயிரம் தரம் சொல்லியிருந்தாலும் இன்றைக்கு அந்தப் பதிலில் எனக்கு சந்தேகம் வந்திருக்கிறது. அதனால் எங்கள் நட்பை நீ கனம் பண்ணுகிறவளாய் இருந்தால் என் கேள்விக்கு உண்மையான பதிலைச் சொல்லு. நான் என்ன சொல்கிறேன் என்பதை நீ சரியாக விளங்கிக்கொண்டாயா, எம்மா?” "ம்… கேள்.” "சண்மீது.. அதுதான் சான்… உனக்கு விருப்பமேதாவது இருக்கிறதா?” எம்மா கோப்பியைக் குடித்தபடி சிறிதுநேரம் அவளையேபார்த்துக்கொண்டு இருந்தாள். எதிரே இருப்பவள் அவளது நெருங்கிய தோழி. அதே கேள்வியை அவ்வளவு அழுத்தமில்லாமல் முன்பு அவள் கேட்டபோது சிரித்து மழுப்பி அவளை சமாளித்ததுபோல் அன்றைக்கு முடிந்துவிடாதென்பதை எம்மாவால் உணர முடிந்தது. பலரினதும் ஊகங்களை ருசுப்பிப்பதும், பலருக்கு ஊகங்களை உருவாக்குவதுமான சம்பவமே முதல்நாள் நடந்திருக்கிறது. லட்சுமிக்கும் எந்தளவிலோ அது ருசுவாகியிருக்கிறது. அவளது பார்வை, இறுகிய முகபாவங்கள் எல்லாம் அதையே உறுதிசெய்துகொண்டு இருக்கின்றன. 'சரி, அந்தரங்கத்தைத் திறக்கிற நேரம் வந்துவிட்ட'தென எம்மா முடிவுபண்ணினாள். பின் ஆமென்று சுணக்கமாகத் தலையசைத்தாள். "வெளிப்படையாகவே அவனிடம் இதைச் சொல்லியிருக்கிறாயா?” சிரிக்க வராதென்று தெரிந்தும் எம்மா ஒரு முயற்சி மேற்கொண்டாள். வராதுபோக தலைகுனிந்தபடி கோப்பிக் கப்பை கையில் பிடித்து தணிந்துவரும் அதன் சூட்டை உணருவதுபோல் உருட்டியபடி இருந்தாள். பின் பதிலை தலையசைத்தாள். இல்லை! "ஏன்? அவன் உன்னை விரும்புவது விரும்பாதது உனக்குத் தெரிந்திருக்கவில்லையா?" "தெரிந்துதான் இருந்தது. ஆனாலும் சொல்லவில்லை" என்று தொடங்கி தன் மனத்தை ஒரு நிறை பனிப் பொழிவின் கனதியோடு சொல்லிமுடித்தாள். ஒரு பிரசங்கதையே அவள் செய்ததுபோல் இருந்தது. இடையிட்ட லட்சுமியின் கேள்விகளுக்கும் வேகமறாது பதிலளித்தாள். ஒரு கட்டத்தில் உறவுகளின் விசித்திர சேர்மானங்களைச் சொல்லியதோடு எல்லாம் கொட்டப்பட்டுவிட்ட வெறுமையுடன் அவள் தணிந்தாள். லட்சுமியால் நம்பமுடியவில்லை. ஒருவர்மீது ஒருவர்கொள்ளக்கூடிய அதிக விருப்பம், அதீத விருப்பம் ஆகியனவற்றின்இருப்பையே அவள் அப்போதுதான் அறிகிறாள். அவற்றின் அர்தமும்அவளுக்கு அன்றேதான் தெரியவந்திருக்கிறது. லட்சுமியின்மனமெங்கும் அதிர்வலைகள் பரந்தன. அந்த உரையாடல் இவ்வாறு இருந்தது: 'சான் என்னை விரும்பியது எனக்குத் தெரியும், லக்சோ. வேலைசெய்ய வந்த ஒன்றிரண்டு நாட்களிலேயே அதை நான் தெரிந்துகொண்டேன். எனக்கும் ஒரு விருப்பம் அவனது அணுகுதல்களில், ஆதரவான கதைகளில் இருந்ததென்பதை இனி நான் மறைக்கப்போவதில்லை. ஒரு வாரத்துக்குள்ளாக அந்த ஈர்ப்பு என்னில் தீவிரமாகியும் போனது. நம்பமாட்டாய், நான் கனவுகள் காணவே தொடங்கிவிட்டேன். கனடாவுக்கு நான் ஓடிவந்ததே அவனுக்காகத்தான்போல நான் உள்ளமெல்லாம் சிலிர்த்திருந்தேன். இருந்தும் என் விருப்பத்தை வாய் திறந்துஎன்றைக்கும் நான் அவனிடத்தில் தெரியப்படுத்தியதில்லை.' 'ஏன்?' 'ஏனென்றால், தன் விருப்பத்தை அவன் என்னிடத்தில்சொல்லாதிருந்தான். அவனே அதை என்னிடத்தில் முதலில்சொல்லவேண்டுமென்று நான் எதிர்பார்த்தேன்.' 'அதிலென்ன வித்தியாசமிருக்கிறது?' 'அவன் கல்யாணமாகாதவன். நான் கல்யாணமாகி ஒரு குழந்தையோடு இருக்கிறவள். சட்டப்படியான இணைவு என்ற எல்லையை நோக்கி நகராமல் ஒரு ஈர்ப்பு… ஒரு விருப்பம்… ரகசியமான சில ஸ்பரிசங்களோடுமட்டும் அடங்கிக்கொண்டு என்னால் இருந்துவிட முடியாது.' 'இப்போதெல்லாம் அதிகமாகவும் சேர்ந்து வாழ்தல்தானே நடைமுறை… உங்கள் விருப்பம் அந்த எல்லைக்குக்கூட செல்லாதென எப்படித் தீர்மானித்தாய்?’ 'என்னால் முடிந்திருந்தது, லக்சோ. ஒருசில வாரங்களிற்கு உள்ளாகவே முடிந்திருந்தது. அவனது கண்களிலும், உடம்பிலும் திமிர்த்த வேட்கையில் அதை நான் கண்டேன்.அவனது அதீதமான விருப்பம், லக்சோ. என்னை அப்படியே விழுங்கிவிடுகிற… கபளீகரம் செய்துவிடுகிற… விருப்பமாய் அது இருந்தது. அது எதார்த்தத்தில் ஆழமாக ஆதாரம் கொள்ளாதது. இவ்வாறாக தொழிற்சாலைகளில் ஓய்வுநேர பொழுதுபோக்குப்போல சில அன்புகள் தலையெடுக்கும். அந்த அளவிகந்ததும் உடனடிச் சுகம் தேடுவதுமான விருப்பங்களை, ஒருவரையொருவர் முழுமையாகத் தெரிந்து உருவாகும் அளவான விருப்பங்களிலிருந்து வேறுபிரித்துக் காண ஒரு நம்பிக்கையான, நிலைத்திருக்கக்கூடிய வாழ்க்கையை எதிர்பார்க்கும் எவருக்கும் தெரிந்திருக்கவேண்டும்.' சொல்வதில் அவளது சிரமங்கள் வெளித்தெறித்து காட்ட முயன்றன. அதில் அவள் கரிசனம் கொஞ்சமும் கொள்ளவில்லை. வார்த்தைகள் தடுமாறியபடி விழுந்துகொண்டிருந்தன. 'அளவானவிருப்பத்துக்கும் அதீதமான விருப்பத்திற்கும் இடையேயுள்ளவித்தியாசத்தை காதலுக்கும் காமத்துக்கும் இடையேயான வித்தியாசமாகத்தான் நான் காண்கிறேன். அவனுக்கு எனதுமுடிந்துபோன திருமண வாழ்க்கை, இப்போது நான்வாழ்ந்துகொண்டிருக்கிற வாழ்க்கைத் தரம், எனக்கு குழந்தைஇருக்கிற விஷயம், அதற்கு எட்டு வயதாகிறது… பள்ளி செல்கிறது… மூன்றாவது பாரம் படிக்கிறது… என்பதுபற்றிக்கூட ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. தெரிந்துகொள்கிற முனைப்பும் அவன் என்றும் காட்டியதில்லை. இது எதுவுமே தெரிந்திராதஒருவனின் என்மீதான விருப்பம் எதுவாக இருக்குமென்று நீநினைக்கிறாய்? அந்த நிலையில் நான் உன்னைக்காதலிக்கிறேனென்று ஓடிப்போய் என்னால் சொல்லிவிடமுடியுமா, சொல்லு?’ வாசிப்புப் பழக்கம்கூட அவளிடம் பெரிதாக இருக்கவில்லை. அவள் அறிந்துகொண்ட அரசியலும் வெளியுலகும் சார்ந்த விஷயங்கள் அவளால் காட்சியூடகங்கள் மூலம் தெரிந்துகொள்ளப்பட்டவையே. இருந்தும் என்னமாதிரி மூடுண்டு கிடந்த ஒரு உணர்வின் வெளியை வெளிச்சமிட்டுக் காட்டிவிட்டாள்! லட்சுமிக்கு அந்தத் திகைப்பிலிருந்து மீள வெகுநேரம் பிடித்தது. அவளது பார்வையில் தவறிய அம்சம் அது. ஆயினும் அவளால்விளங்கமுடியாத பகுதி இன்னும் அதில் இருந்தது. “அப்படியானால் தன்னை விரும்புவதாக அவன் எண்ணும்படி தொடர்ந்தும் நீபழகியிருக்கத் தேவையில்லையே?” அவள் தன்னைப்பற்றி நிறையவே யோசித்திருக்கிறாள் என்பது தெரிந்தது எம்மாவுக்கு. “நீண்டநாளாய் வேலை செய்கிறவனும், திறமான வேலைகாரனுமான அவனோடு வேலைசெய்ய எனக்கு விருப்பமில்லையென நான் கூறிவிட முடியுமா, ம்? மேலும், அவன்மீதான விருப்பம் இன்னும் என்னுள் இருந்துகொண்டிருக்கிறதை எனக்கே நான் மறைத்துவிடுவது எப்படி? அவனது உள் அறிந்த பின்னாலும் அவனிலிருந்து என்னால்முழுவதுமாய் ஒதுங்க முடியாதிருந்தது.” "சரி. அவ்வாறு இருக்கிறபோது சுப்பர்வைசருடன் ஏன்அந்தமாதிரிப் பழகினாய்?” "எந்தமாதிரி…?” "நெருக்கமாக நின்று… சிரித்து…” "அது ஒரு விஷயமா, லக்சோ? ஒரே இடத்தில் வேலைசெய்கிறவர்கள் கதைப்பது, சிரிப்பது, கதைக்காமலிருப்பது, முகத்தைச் சிடுசிடுவென வைத்திருப்பதெல்லாம் எவ்வாறுஒருவரின் விருப்பமோ விருப்பமின்மையோ ஆகமுடியும்? அவன் தொட்டுத் தொட்டுத்தான் என்னோடு பேசுவான், சிலவேளை நான்கூட அவனோடு அப்படித்தான் பேசியிருக்கிறேன். இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை, லக்சோ. ஆனாலும் அந்தச் சாதாரணமான செயற்பாடுகளை ஒரு திட்டமான நாடகமாகவேநான் புரிந்தேன். அப்படிச் செய்திருக்கக்கூடாதென்று இப்போது தெரிகிறது. ஆனாலும் வேறு வழியில்லை. அதுவொரு நிர்ப்பந்தம்.” "யாருடைய நிர்ப்பந்தம்?” "யாரினதுமில்லை. வாழ்க்கையின் நிர்ப்பந்தம். எவருக்கும் ஒரு வேலை அவசியமெனச் சொல்லிக்கொண்டிருக்கிறஇங்குள்ள வாழ்க்கையின் நிர்ப்பந்தமே அது. அந்தவகையில் நான்இப்போது பார்க்கிற வேலை எனக்கு மிகமுக்கியமானது, லக்சோ.சம்பளம் ஒழுங்காகக் கிடைக்காத பல கம்பெனிகளிலே நான்வேலைசெய்து களைத்திருக்கிறேன். வெள்ளிக்கிழமைகளில்சம்பளத்தைப் பெற ஏஜன்ரின் அலுவலகம் போய் ஒன்றரை இரண்டுமணத்தியாலங்களென கால்கடுக்க காத்து நின்றிருக்கிறேன். அந்த வாரச் சம்பளம் கிடைக்காமல் அடுத்த வெள்ளிவரைசெலவுக்கு வழியில்லாமல் சிரமப்பட்டிருக்கிறேன். நானே சில வேலைகளை ரோஷத்தில் தூக்கியெறிந்துவிட்டு மேலே வேலை தேடியலைந்து சலிப்பேறியிருக்கிறேன். உனக்கு இந்தமாதிரிஅனுபவங்கள் ஏற்பட்டிருக்கிறதா, லக்சோ? அவ்வாறு நான்நொந்துபோயிருக்கிற நேரத்தில்தான் இந்த வேலை எனக்குக்கிடைத்தது. சானுக்கு விருப்பமில்லையென்று சுப்பர்வைசருடன், அவனது நோக்கம் தெரிந்திருந்தாலும், கதைக்காமலும் முரண்டிக்கொண்டும் இந்த வேலையை என்னால் தக்கவைக்கமுடிந்திருக்குமென்று நான் நினைக்கவில்லை. ஆறு மாதங்களாகியும் கிடைக்காத வேலை நிரந்தரம் வரப்போகும் இந்தக் கோடை விடுமுறையோடு கிடைக்கவிருக்கிற சமயத்தில்அப்படியொரு முறுகல் நிலை ஏற்படுவதை யாரும் விரும்பமாட்டார்கள். நான் விரும்பவில்லை. மூன்று மாதங்களுக்கு முன்னரே கிடைத்திருக்கவேண்டிய வேலைநிரந்தரம் விலகிப்போனதற்கு நான் அவனது அணுகுமுறைக்குக் காட்டிய எதிர்ப்பே காரணமென்பது யாருக்குத் தெரியும்? அதனால்தான் சான் விரும்பமாட்டானென்று தெரிந்திருந்தும் சுப்பர்வைசருடன் அந்தமாதிரி நடந்துகொண்டேன். நிரந்தரமான ஒரு வேலை… திட்டமான ஒரு சம்பளம்… இவற்றின்மீதுதான் இங்கே ஒரு வாழ்க்கை எவருக்கும் உழன்றுகொண்டிருக்கிறது, மறந்துவிடாதே.” லட்சுமியால் அவளை இப்போது ஓரளவு புரிய முடியும்போலஇருந்தது. ஆனாலும் இன்னும் ஒரு புதிர் அங்கே இருக்கிறது. “சரி, அப்படியே இருக்கட்டும். ஆனால் தொடர்ந்தும் ஏன் சுப்பர்வைசர்கோபம் கொள்கிற அளவுக்கு சானுடன் பழகவேண்டும்?உள்ளுக்குள்ளே விருப்பமிருந்தது என்றுமட்டும் சொல்லிவிடாதே." எம்மா லட்சுமியைப் பார்த்தபடி சிறிதுநேரம் இருந்தாள். பிறகு, "ம்…" என்று தன்னைச் சுதாரித்தாள். "சொன்னால் நம்பமாட்டாய். அதன் உண்மை என்னவென்றால் அந்த இருவரின் அபிமானமும் எனக்கு அவசியமாயிருந்தது." இப்போது லட்சுமியில் சிறிது கோபமேறத் துவங்கியது. ஒருவரது சுயாதீனத்தில் இந்தவகை மிக அருவருப்பானது. அவளால் ஒப்புக்கொண்டுவிட முடியாதது. அதை எம்மா உணர்ந்திருந்தாளா? அவள் கேட்டாள்: "இருவரையும் விரும்புவதாகக் காட்டிய உன் நாடகம் உண்மையில் தரக்குறைவானதாகவும், சான் அந்தமாதிரி உன்னைத் திட்டித் தீர்ப்பதற்குக் காரணமானதாகவும் இருந்ததை நீ எதுவுமாக நினைக்கவில்லையா, எம்மா? உன் குணநலம் நேற்று மிகவும் கேவலமாக நிந்தைப்படுத்தப்பட்டது என்பதையாவது நீ உணர்கிறாயா?” எம்மா யோசித்தாள். சிறிது கோப்பியை உறிஞ்சினாள். பிறகு பலஹீனமாகச் சிரித்தாள். ஒருவர் கொண்டிருக்கக்கூடிய மொத்தஅவலத்தினதும் பருண்மையாக அது தோன்றியது லட்சுமிக்கு. பின் தனது மௌனமுடைத்து சொன்னாள்: “நான் அவன்மீது செலுத்திய விருப்பத்தின் பரிசாக அதைக் கொள்வதைத் தவிர வேறு நான் என்ன செய்யமுடியும்? ஒருவிதமான தேவையின் அணுக்கமொன்று ஆரம்பத்தில் என்னிடத்தில் இருந்திருந்தாலும், அவனை நான் தெரிந்துகொண்ட கணத்திலிருந்து எல்லை கடவாததும், எல்லை கடக்க விடாததுமான ஒரு அவதானத்தில் நின்றுதான் பழகிக்கொண்டிருந்தேன். காயாகவோ பழமாகவோ முடியாத ஒரு பூவின் மலர்வாக அந்த அபிலாசை இப்போதும் அவன்மீது இருக்கிறதுதான். அது என் கனவென்று வைத்துக்கொள்ளேன். மனிதர்கள் கனவு காணக்கூடாதா, என்ன? ஆனால் அந்த என் மனவுணர்வை வெளிக்காட்டும்படி, அவனுக்குப் பிடித்த கேக் வகைகளாக வீட்டிலே செய்துவந்து கொடுக்காமல் இருந்திருக்கலாம்தான். இவ்வளவு காலமாக எந்த ஆண்சுகமும்இல்லாமல் வாழ்ந்துவிட்ட எனக்கு அது பெரிய காரியமாகவும்இருந்திருக்காது. ஒருவேளை அவனைக் கண்டு திமிறத் துவங்கிய என் ஆசைகள் அடங்க மறுத்து இருந்துவிட்டனவோ என்னவோ? மனம்கூட சொல்கிறபடி கேட்காத புதிர் கொண்டது, லக்சோ. எவரது மனதும்தான். அது மென்மையானதோ கடினமானதோ, நுட்பமாகவே இருக்கிறது. எப்படியோ, அது என்னுடையபிழையென்பதை நான் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். அது எனக்கு முன்பே தெரிந்திருந்ததுதான். ம்…! தெரிந்தும்தான் அதைச் செய்தேன்." திடுக்கிட்டாள் லட்சுமி. "தெரிந்துகொண்டுமா செய்தாய்? என்னால் உன்னைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை, எம்மா." "அது கஷ்டம்தான், லக்சோ. மனத்துக்குள் எவ்வளவு விகாசம் கொண்டிருந்தாலும் பாதி வாழ்க்கையைத்தான் நாமெல்லோரும் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். அதில் பாதியையேனும் சொல்ல எனக்கு மொழி இல்லாமல் இருக்கிறது. எஞ்சியதை எப்படியோ சொல்லித் தொலைக்கிறேன், சிரமப்பட்டென்றாலும் புரிந்துகொள், தோழி. உண்மையில் ஒரு தேவை… ஒரேயொரு தேவைதான்… தொடர்ந்தும் என்னை அவ்வாறு இயங்க வைத்தது." "நிர்ப்பந்தம், அவசியமென்று சொல்லிச் சொல்லி எல்லாவற்றிற்கும் பணிந்து போய்விட்டாய். இப்போது ஒரு தேவைக்குப் பணிந்துபோனதாய்ச் சொல்லப்போகிறாயா?" "இப்போது பார், லக்சோ, சுப்பர்வைசருடன் நான் சரஸமாகப்பழகத் துணிந்தேனென்றால், அதற்கு என்னிடமிருந்த ஒரே பலம்சான் அங்கே இருக்கிறானென்பதுதான். அவன் ஒருவகையில்எனக்கொரு பாதுகாப்பாக அங்கே இருந்தான். நிர்ப்பந்தங்களால் எவரும் என்னை அணுகமுடியாத நெருப்பு வளையமாக இருந்தான். தொட்டும் பட்டும் சிரித்தும் பேசுவதை நான் இளகிவிட்டேனெனகொண்டுவிட்டாலும் சுப்பர்வைசர் நெருங்கமுடியாதபடி எல்லைக் காவலனாக அவன்தான் இருந்தான். உனக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் அதுதான் உண்மை. சானின் பலமும் உக்கிரமும்தான் இப்போதும் என்னை அங்கே காவல்செய்துகொண்டு இருக்கின்றன.” நீண்டநேரமாயிற்று லட்சுமியின் உறைவு தெளிய. 'வாழ்க்கை எவ்வளவு மகத்துவமானதென எவரும்பரவசப்பட்டுக்கொள்ளட்டும். ஆனால் அது பயங்கரங்களையும் கூடவே கொண்டிருக்கிறது. அதை மிக அவதானமாக வாழ்ந்துகழிக்கவேண்டிய நிலைமைதான் எல்லோருக்கும் இருக்கிறது.எனக்கோ எம்மாவுக்கோ எம்போன்ற வேறு பெண்களுக்கோ அது இன்னும் சிக்கலானது. மேலும் சிக்கலானது ஒரு தனித்தாய்க்கு. அவள் ஒருவகையில் வேரில் பழுத்த பழம்போல நினைக்கப்பட்டு விடுகிறாள். உறவுக்கு ஏங்கும் உணர்ச்சிகளின் சாத்தியம் அவளை எவரின் இலக்காகவும் ஆக்கிவிடுகின்றது.' ஒரு புரிதலின் அமைதி லட்சுமியில் விழுந்தது. "என்ன, லக்சோ, பேச்சைக் காணவில்லை?" “ம்… உன்னுடைய அந்தத் தேவைதான்மூலப்பிரச்னையாய் எல்லாக் குழப்பங்களையும் உள்ளடக்கிக்கொண்டு இருந்திருக்கிறது. நேற்றைய ரஸாபாசம் அதன் ஒரு விளைவுதானே? ஒரு அவசியத்திலானதாக உன் நடத்தையை ஏற்கமுடியுமாயினும், நானே அவ்வாறு என்றைக்கும் ஒழுகிவிடமாட்டேன் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது” என்றாள் லட்சுமி. சிறிதுநேரம் கோப்பியைக் குடித்தபடி எம்மா இருந்தாள். வெளியே சென்றுவர அந்தரம்பட்டவள்போல் தோன்றினாள்.கோப்பியின் பின் அவளுக்கு சிகரெட் புகைக்கவேண்டியதாலாய் அது இருக்கலாம். ஆனாலும் இன்னும் அமர்ந்திருந்தபடியேசொன்னாள்: “நீ சொல்வது சரிதான். பெரும்பாலான இந்தியப் பெண்களால் அவ்வாறெல்லாம் நடந்துவிட முடியாது. ஏற்றுக்கொள்வதே பலருக்கு கஷ்ரமாக இருக்கும். ஆனாலும் இதைஎம்மாவாகிய என்னுடைய தேவை என்பதாக இல்லாமல், ஒருபெண்ணுடையதாக உன்னால் பார்க்கமுடிந்தால் நீ இன்னும் தெளிவடைந்துவிடுவாய். அவ்வாறு நான் செய்யாது விட்டிருந்தால்அந்த இரண்டு பேரில் யாராவது ஒருவனால் வெறும் பெண்ணுடலாய் நான் பாவிக்கப்பட்டிருக்கும் அபாயமும்நேர்ந்திருக்கலாம். சிலவேளை இரண்டுபேராலுமே. வாழ்வின் தேவையை நிறைவேற்றச் செல்கையில் ஒரு பெண்ணாய் என்தப்புகைக்கான வழி எனக்கு இதுவாக இருந்துவிட்டது. அவ்வளவுதான். தனித்தாயாய் வாழும் ஒரு பெண்ணைநோக்கிய இந்தவகை அபாயங்களை எது செய்து சமாளித்தால்தான் என்ன, ம்?” இனி அதுபற்றிப் பேச எதுவுமில்லைப்போல் இருவரிடையிலும் ஒரு நிறைவின் மௌனம் விழுந்தது. 000 நன்றி: தீராநதி, அக். 2018 http://devakanthan.blogspot.com/2018/11/blog-post.html?m=1
 15. ஜனாதிபதி தேர்தல் நடந்தால் மீண்டும் பொது வேட்பாளர் பொதுத் தேர்தலுடன் ஜனாதிபதி தேர்தலையும் நடத்த முடியுமா என்பது தொடர்பாக தற்போது ஆராயப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மைத்திரி தரப்பினர் இது தொடர்பாக ஆராய்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல தீர்மானிப்பராக இருந்தால் அந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக போட்டியிடுவார் என தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமாக இருந்தால் ஐக்கிய தேசிய கட்சியினால் இம்முறையும் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3) http://www.samakalam.com/செய்திகள்/ஜனாதிபதி-தேர்தல்-நடந்தால/
 16. ஆப்கான் தற்கொலை குண்டுதாக்குதலில் 40 பேர் பலி ஆப்கான் தலைநகர் காபுலில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 40ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காபுலின் உரனஸ் அரங்கில் இடம்பெற்றுக்கொண்டிருந்த மதஅறிஞர்களின் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலிலேயே பாரிய உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 40ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 60 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதல் இடம்பெற்றவேளை அரங்கில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் காணப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்களிற்கு மத்தியில் தற்கொலை குண்டுதாரி தன்னை வெடிக்கவைத்தார் என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/44867
 17. மகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை- இராஜதந்திர வட்டாரம் இலங்கையின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு அமெரிக்க பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முன்வரலாம் என இலங்கையிலுள்ள முக்கிய வெளிநாட்டு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை பிடிவாதமான பாதையில் செல்ல தீர்மானித்தால், இந்த சதிமுயற்சியில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக விசா தடை விதிக்கப்படலாம் என தெரிவித்துள்ள இராஜதந்திர வட்டாரங்கள் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகளும் இடம்பெறலாம் எனவும் குறிப்பிட்டுள்ளன http://www.virakesari.lk/article/44869
 18. பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம்- மங்களசமரவீர இலங்கை முன்னொருபோதும் சந்திக்காத பாரிய பொருளாதார குழப்பத்தை எதிர்கொள்ளும் நிலையிலுள்ளது என மங்களசமரவீர கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அறிக்கையொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 26 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பொறுப்பற்ற நடவடிக்கைகள் இலங்கை உடனடியாக செலுத்தவேண்டிய கடனை கூட செலுத்த முடியாத ஆபத்தை எதிர்கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2014 ஜனவரியில் ராஜபக்ச பெற்ற கடனிற்காக 2019 ஜனவரியில் நாங்கள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக செலுத்தவேண்டும் என தெரிவித்துள்ள மங்கள சமரவீர கடன்களை மீளச்செலுத்தும் விடயமும் பாராளுமன்றத்தின் கீழ் வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார். 26 ஒக்டோபரில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சர்வதேச சந்தையில் இலங்கையின் நம்பகதன்மையை மாற்ற முடியாத அளவிற்கு பாதித்துள்ளன எனவும் மங்களசமரவீர தெரிவித்துள்ளார். நாங்கள் பொருளாதாரரீதியில் வீழ்ச்சியை காணும் நிலையை நோக்கி தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றோம், கிரேக்கம் எதிர்கொண்ட நிலையை நோக்கி நாங்கள் செல்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தேவையற்ற துரதிஸ்டவசமான நெருக்கடியிலிருந்து நாட்டை காப்பாற்றுவதற்கான ஒரேயொருவழி ஜனாதிபதி ஒக்டோபர் 26 ம் திகதிக்கு முன்னர் அரசாங்கத்தை அங்கீகரிப்பதே எனவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/44868
 19. தமிழ் மக்களிற்கு ஆபத்தான சூழ்நிலை உருவாகலாம்- இராஜதந்திரிகளிடம் கூட்டமைப்பு இலங்கையில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடி தொடர்ந்தால் மோசமான விளைவுகள் ஏற்படலாம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் தெரிவித்துள்ளனர் ; தமிழ் தேசிய கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வெளிநாட்டு இராஜதந்திரிகளிற்கும் இடையில் இன்று கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளனர். நாட்டில் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்ந்தால் பாராதூரமான விளைவுகள் உருவாகலாம் இது இலங்கையின் நலனிற்கு உகந்த விடயமல்ல என வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் தெரிவித்தோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். உருவாககூடிய குழப்பநிலை சட்டமொழுங்கின்மை காரணமாக சிறுபான்மையினத்தவர்களே பாதிக்கப்படலாம் குறிப்பாக தமிழ் மக்கள் பாதிக்கப்படலாம் என எடுத்துரைத்தோம் எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/44866
 20. ஈழப்பிரியன்

  Vegan (சைவம்)

  இதுவரை வீகன் என்று இருந்த ஒருவரைத் தான் சந்தித்திருக்கிறேன்.அவர் சொன்னதை வைத்து சிறிது நம்பிக்கை பிறந்துள்ளது.எனக்கும் தொடங்குவது பிரச்சனை இல்லை தொடருமா? முடியுமா ?என்பதே பிரச்சனை. ஒரு நேரமாவது சோறு சாப்பிட வேண்டும் போல இருக்கும்.அத்தோடு கூடவும் சாப்பிட்டு பழகிப் போய்விட்டது.நீங்கள் சொன்னது போல இப்போ கொஞ்சம் குறையவே சாப்பிடுகிறேன்.இன்னொரு கெட்ட பழக்கம் ஏதோ போட்டிக்கு சாப்பிடுவது போல கோப்பை காலியாக்குவது.சாப்பிடும் போது நினைத்துக் கொண்டு தொடங்குவேன்.இடையில் மறந்துவிடுவேன்.சீனாக்காரன் மாதிரி தடியால சாப்பிடுங்கோ என்று மனைவி சொல்லுவா. உங்கள் கருத்துக்கு நன்றி.
 21. அமெரிக்கா மற்றைய நாடுகள் மீது பலவந்தமாய் மூக்கை நுழைக்கலாம்...சீனா செய்தால் தப்பு
 22. அது நாய்க்கறி இல்லையாம்...உண்மையில் ஆடுதானாம்...பொலிசுக்கு லஞ்சம் கொடுக்காததால் ஆடு நாயாகி விட்டதாம்🤔
 23. ரதி

  Vegan (சைவம்)

  நான் பார்த்த சில பேர் கொஞ்ச நாள் வீகன் இருப்பினம்...பிறகு மச்சம் சாப்பிடுவினம்...கொஞ்ச நாளில் திரும்ப வீகனுக்கு மாறனும் என்டுவினம்...ஆனால் மாறினதை நான் காணேல்ல😄...உடம்பை குறைக்க தாங்கள் வீகன் என்று சொல்லி, தொடங்கி உடம்பை குறைத்தவுடன் கை விட்டு விடுவினம் நானும் வீகனுக்கு எதிர்ப்பு....எதையும் அளவோடு சாப்பிட்டால் பிரச்சினை இல்லை..நான் மாமிச உணவு என்று சாப்பிடுவது கோழியும்,கடல் உணவுகளும் எப்பாவது இருந்திட்டு ஆட்டு இறைச்சசி சாப்பிடுவது ...ஈழப்பிரியன் அண்ணா நீங்கள் மச்சம் சாப்பிட்டால் அளவோடு சாப்பிடுங்கள்...அத்தோடு நிறைய மரக்கறிகளையும் சாப்பிடுங்கள்
 1. Load more activity