Jump to content

மாமனிதர் தர்மரட்ணம் சிவராம் ‘தராக்கி’ அவர்களின் நினைவு நாள்

மோகன்
   (0 reviews)
நாட்காட்டி

Event details

This event begins 04/29/17 and repeats every year forever

மட்டக்களப்பு மண்ணில் பிறந்து ஊடகத்துறையில் சிறந்து விளங்கிய தராக்கி என்றழைக்கப்பட்ட தர்மரட்ணம் சிவராம் சிங்கள அரசின் கைக்கூலிகளால் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஊடக போராளி மாமனிதர் தர்மரட்ணம் சிவராம் ‘தராக்கி’ அவர்களின் ஒன்பதாம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005 ம் ஆண்டு ஏப்ரல் 28 ம் திகதி கடத்தி செல்லப்பட்டு மறுநாள் ஏப்ரல் 29 ம் திகதி சிங்கள அரசின் கைக்கூலிகளால் கொலை செய்யப்பட்டர்.

 

ஊடகத்துறை வரலாற்றில் மிகவும் சவால் நிறைந்த காலகட்டத்தில் துப்பாக்கி முனைகளின் அச்சுருத்தல்களுக்கு மத்தியில் தனது கருத்துக்களின் ஊடாக உண்மைகளை உரக்கச்சொன்ன மிகவும் துணிச்சல் மிக்க ஊடகப் போராளியாக திகழ்ந்த ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் ஆவர்.

 

‘தராக்கி’ மற்றும் ‘எஸ்.ஆர்’ ஆகிய புனைபெயர்களில் சிவராம் பல ஆக்கங்களை எழுதிவந்திருந்தார். ஆங்கில ஊடகத்துறை மூலமே சிவராம் தன்னை ஊடகவியலாளராக அறிமுகப்படுத்தினார். எனினும் பிற்காலத்தில் ஆங்கிலப் பத்திரிகைகளில் ஆக்கங்கள் எழுதுவதை சிவராம் நிறுத்திக்கொண்டார்.

 

இந்த நிலையில், 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி “நான் சரியென்று உறுதியாகக் கண்டதை எழுதுகின்றேன்.அதற்காக எந்த அழிவையும் சந்திக்க தயாராகவே இருக்கின்றேன். ஓடிவிடமாட்டேன்.” என்று வீரகேசரி வார வெளியீட்டில் சிவராம் கட்டுரையொன்றை எழுதியிருந்தார்.

 

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் பத்திரிகையாளர்கள் பலரை கணினி யுகத்திற்குள் கொண்டுவந்த பெருமையும் சிவராமையே சாரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

பத்தி எழுத்தாளராக அரசியல் ஆய்வாளராக படைத்துறை ஆய்வாளராக பல்வேறு பரிமாணங்களை கொண்ட சிவராம் ஆரம்பத்தில் 1980 களில் விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

 

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் (புளொட்) முழுநேர செயற்பாட்டாளராக மாறிய சிவராம் 1990 களின் நடுப்பகுதியில் அதன் அரசியல் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமாகக் கடமையாற்றியவர்.

 

வாழ்க்கை குறிப்பு
***************
சிவராம் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பில் மகேஸ்வரி, புவிராஜகீர்த்தி தர்மரட்ணம் அகியோருக்கு மகனாகப் பிறந்தார். சிவராமின் தந்தையார் கேம்பிறிட்ச் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். அவரின் பாட்டனார் சபாபதிப்பிள்ளை தர்மரத்தினம் (வன்னியனார்) 1938-ஆம் ஆண்டில் மட்டக்களப்பின் இரண்டாவது தெரிவு செய்யப்பட்ட இலங்கை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.

சிவராம் 1989 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் யோகரஞ்சனி என்பவரை வாழ்க்கைத் துணையாக ஆக்கிக்கொண்ட சிவராமிற்கு வைஸ்ணவி, வைதேகி என்ற இரு மகள்களும் சேரலாதன் என்ற மகனும் உள்ளனர்.

ஆரம்பக்கல்வியை புனித மிக்கேல் தேசியப் பாடசாலையில் கற்றார். அதைத் தொடர்ந்து கொழும்பில் அக்குவானாஸ் கல்லூரியில் தொடர்ந்தார். பல்கலைக்கழகத்திற்கு தெரிவான இவர் பேராதனைப் பல்கலைகழகத்தில் அனுமதிபெற்றார். செப்ரெம்பர் 1981இல் பேராதனைப் பல்கலைக் கழகத்திற்குச் சென்ற அவர் ஆங்கிலத்தினையும் ஒரு பாடமாகக் கொண்டு இரண்டு ஆண்டுகள் மட்டுமே அங்கு பயின்ற பின்னர் அரசியல் ஈடுபாட்டினாலும் 1983 இல் இடம்பெற்ற இனக்கலவரங்களினாலும் பல்கலைக்கழகக் கல்வியைக் கைவிட்டார்.

 

மாமனிதர் சிவராமின் இறுதிக் கட்டுரை.
*********************************
சிங்கள அரசின் கைக்கூலிகளால் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் சிவராம் அவர்கள் 24.04.2005 அன்று வெளியான வீரகேசரி வாரஇதழில் ‘எரிக் சொல்ஹெய்மின் வருகைகளும் தமிழ்த் தேசியத்தின் நெருக்கடிகளும்” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் முழுவடிவம். இக் கட்டுரையே அவர் எழுதிய இறுதிக் கட்டுரையாகும்.

எரிக் சொல்ஹெய்மின் வருகைகளும்
தமிழ்த் தேசியத்தின் நெருக்கடிகளும்

- தராக்கி டி.சிவராம் -

நோர்வேயின் சிறப்பு சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் வருகிறார். போகிறார். அவர் வரும்போதும் போகும்போதும் தமிழ் ஊடக ஆரவாரம் ஒன்று கிளம்பும். அது மக்களிடையே ஏதோ நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை மீண்டும் ஏற்படுத்தும். அவர் வந்த வழியே திரும்பிப் போவார். ஊடக ஆரவாரங்கள் அடங்கும். பின்னர் வழமைபோல அது இது என்று எமது வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கும். சொல்ஹெய்ம் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு நல்ல மாற்றம் விரைவில் ஏற்படும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டாக்கக்கூடிய வகையில் அறிக்கை விடுகிறார். அல்லது செய்தியாளர்களுக்குக் கருத்துச் சொல்கிறார்.

இன்னும் சில கிழமைகளில் சுனாமிப் பொதுக்கட்டமைப்பு வந்துவிடும் என அவர் இம்முறை இங்கு வருவதற்கு முன்னர் ஒரு வெளிநாட்டுச் செய்தி நிறுவனத்திற்குச் செவ்வி கொடுத்திருந்தார். அது மட்டுமன்றி புலிகளின் மட்டு-அம்பாறை படைத் தளபதி பானுவைச் சந்தித்த பின்னர் பொதுக்கட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டுமென்று சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் மிக ஆர்வத்துடன் இருப்பதாக அவர் அழுத்திக் கூறினார்.

பொதுக்கட்டமைப்பு கிடைக்கப்போவதில்லை. ஒரு மண்ணாங்கட்டியும் கிடைக்கப் போவதில்லை என்பதுதான் சிறிலங்காவின் அரசியல் நுனிப்புல் மேய்ந்தவர்களுக்குக்கூட மிகமிக அப்பட்டமாகப் புரிந்திடக்கூடிய உண்மையாகும். இதில் யாருக்கும் இம்மியளவும் சந்தேகம் ஏற்பட்டுவிடக் கூடாதென்பதற்காக பொதுக்கட்டமைப்பு வழங்கப்பட்டால் தாம் சந்திரிகாவின் அரசிலிருந்து வெளியேறிவிடுவோம் என ஜே.வி.பி மிகத் தெளிவாக அமெரிக்கப் பிரதிநிதி கிறிஸ்ரினா ரொக்காவிடம் கூறிவிட்டது.

இங்கு நாம் சொல்ஹெய்ம்மைக் கடிந்து கொள்ளமுடியாது. எம்மை இலவு காத்த கிளிகளாக்கும் நோக்குடன்தான் அவர் இங்கு வருகிறார் என்றோää சந்திரிகா அரசு எமது காதில் வழமைபோல் பூச்சுற்றுவதற்கு அவர் மலர் கோத்துக் கொடுக்கிறார் என்றோ நாம் அவரைக் கண்டனம் பண்ண முடியாது. ஏனெனில் அவர் எமது உடன்பாட்டுடனேயே இலங்கையின் இன முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான அனுசரணையாளராக அமர்த்தப்பட்டார். ஏதோ ஒரு தீர்வோ அல்லது அதைநோக்கிய முன்னேற்றமோ வருகிறது என்றுதான் அவர் சொல்வார். சொல்ல முடியும். அவருடைய கதையில் எடுபட்டு பேயராகுவதா இல்லையா என்பது எம்மைப் பொறுத்தது.

பொதுக்கட்டமைப்பு ஏற்படுத்துமாறு பல வெளிநாடுகள் சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. புலிகளின் தடையை நீடித்து வரும் அமெரிக்காகூட இதையே வலியுறுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி பொதுக்கட்டமைப்பு சரிவராவிடின் புலிகளுக்கு நேரடியாகவே உதவி வழங்குவதற்கான ஏற்பாடொன்று உண்டாக்கப்படல் வேண்டுமென சில நாடுகள் கருதத் தலைப்பட்டுள்ளன. இதைத் தடுப்பதற்கு சிறிலங்கா அரசிற்கு நேரடியான எந்த வழியும் தற்போது இல்லை. எனவே இக்கட்டமைப்பு உண்டாக வேண்டும் என்பதில் தானும் அக்கறையாக இருக்கிறேன் என சிறிலங்கா அரசு அறிக்கை விடுகிறது. அக்கறையாக இருக்கிறோம் ஆனால் சில விடயங்களைப் பேசி முடிவெடுக்க வேண்டியிருக்கிறது எனக் கூறிக்கொண்டிருந்தால் காலம் எப்படியாவது உருண்டோடி விடும். அந்த ஓட்டத்தில் உதவி வழங்கும் நாடுகளும் புலிகளும் தமிழ் மக்களும் பொதுக்கட்டமைப்பு என்ற விடயத்தை வழமைபோல மறந்துவிடுவார்கள் என சிறிலங்கா அரசு கணக்குப் போடுகிறது. சொல்ஹெய்மினுடைய வருகைகளும் கூற்றுக்களும் இந்தக் கணக்கிற்கு மிகவும் வலுச்சேர்க்கின்றன. வடக்குக் கிழக்கின் உடனடி மனிதாபிமானத் தேவைகளை நிறைவேற்றுவதற்கென ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டது ( Sihrn) உங்களுக்கு ஓரளவு ஞாபகம் இருக்கும் அதையும் அதன் பின்வந்த சில ஒழுங்குகளையும் சிறிலங்கா அரசு இப்படித்தான் பம்மாத்திற்று. அப்போதும் சொல்ஹெய்ம் வந்து போனார். இரு தரப்பும் ஏதோவொரு உடன்பாட்டை அண்மித்துக் கொண்டிருப்பதாக அறிக்கை விட்டார். அவருடைய ஒவ்வொரு வருகையையும் விழுந்தடித்துக்கொண்டு எமது ஊடகங்கள் ஆரவாரப்படுத்தின. (இதில் தமிழ்நெற்றும் விதிவிலக்கல்ல) நடந்ததோ ஒன்றுமில்லை. மாறாக தமிழ் பேசும் மக்களை பேய்க்காட்டிக்கொண்டு அவர்களை ஒற்றையாட்சி அமைப்பிற்குள் வாழப்பழக்குவதற்கு சொல்ஹெய்மின் வருகைகளும் அதையொட்டி எழும் எதிர்பார்ப்புக்களும் அரிய வாய்ப்பாக அமைந்தன அமைகின்றன.

ஏலவே கூறியதுபோல இதில் நாம் நேர்வேயையோ அதன் சிறப்பு தூதுவரையோ குற்றஞ்சாட்டவும் முடியாது. குறை கூறவும் முடியாது. அவர்கள் அப்படித்தான் செய்வார்கள். இதில் அவதானமாக இருக்கவேண்டும் என்ற கேள்வி உடனே தோன்றும். முதலாவது சொல்ஹெய்மின் வருகையைச் சுற்றி உண்டாகும் ஊடக ஆரவாரத்தில் மக்கள் அறிந்திருக்க வேண்டிய சில அடிப்படை உண்மைகள் அடிபட்டுப் போகின்றன.

இந்த உண்மைகள் மறைந்துபோவது நுட்பமாகச் செயற்படும் சிங்கள மேலாண்மையாளர்களுக்கு மிக வாய்பாகிவிடுகிறது. ஏன்? பொதுக்கட்டமைப்பு விடயத்தை எடுத்துக்கொள்வோம். வாழ்விட அழிவுகள் இடப்பெயர்வு அகதிகள் என்பவற்றை பற்றியதே இந்தப் பொதுக்கட்டமைப்பாகும். இந்த மூன்றையும் எப்படி எதிர்கொள்வது எப்படி இவற்றிற்குத் தீர்வு காண்பது என்பது பற்றியதாகவே புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையில் நடைபெற்ற ஆறுசுற்றுப் பேச்சுக்களும் அமைந்திருந்தன. நடந்ததென்ன? ஒன்றுமேயில்லை. வாழ்விட அழிவுகளைச் சரிசெய்வது என்றாலோ இடம்பெயர்ந்த மக்களைக் குடியமர்த்துவது என்றாலோ தேவைப்படுவது முதலில் நிலம். பின்னர் பணம். இவையிரண்டுமே சிறிலங்கா அரசின் அசைக்கமுடியாத கட்டுப்பாட்டில் உள்ளன. நிலத்தையும் நிதியையும் இவையிரண்டையும் உரிய முறையில் பயன்படுத்துவதற்குத் தேவையான நிறைவேற்று அதிகாரத்தையும் (executive power) எந்தவொரு கட்டமைப்பிற்கும் பகிர்ந்தளிப்பதை சிறிலங்காவின் அரசியல் யாப்பு தடைசெய்கிறது. இதனாலேயே போரில் அழிந்துபோன எமது வாழ்விடங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கும் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்கும் எந்தவொரு வலுவானதொரு கட்டமைப்பை உருவாக்குவதில் புலிகளும் ரணில் அரசும் தோல்வி கண்டனர். இவ்வாறான ஒரு கட்டமைப்பு சிறிலங்கா சட்டத்திற்கு முரணானதாக இருக்கும் என அப்போது சிங்களச் சட்டவல்லுனர்கள் சுட்டிக்காட்டினர். அதுமட்டுமின்றி அப்படியொரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டால் அதை சிறிலங்காவின் உயர் நீதிமன்றம் செல்லுபடியற்றதாக்க வேண்டுமென சில சிங்கள மேலாண்மையாளர்கள் வழக்குத் தாக்கல் செய்யப்போவதாகவும் அச்சுறுத்தினர். இவையெல்லாம் ரணில் அரசுக்கு நல்ல சாட்டாகிவிட்டன. சுனாமிப் பொதுக்கட்டமைப்பு என்பதும் வாழ்விட அழிவுகள் இடப்பெயர்வு அகதிகள் என்பவை பற்றியதே. எனவே அதை ஏற்படுத்துவதில் மேற்கூறிய அடிப்படை முட்டுக்கட்டைகள் உண்டாகுவதை எவ்வகையிலும் தடுக்க முடியாது. சுனாமிப் பொதுக்கட்டமைப்பு என்பது வெறுமனே வெளிநாட்டு உதவிப் பணத்தைப் பெறுவது மட்டுமல்ல. அது அடிப்படையில் நிலம் பற்றியதாகும். மக்கள் குடியமரும் இடங்களுக்கு மின்சாரம் நீர் போன்ற அடிப்படை வசதிகளைச் செய்துகொடுப்பது பற்றியதாகும். இவற்றைவிட மேலாக மேற்படி அலுவல்களைச் செய்வதற்கான அதிகாரம் பற்றியதாகும் இந்த சுனாமிப் பொதுக்கட்டமைப்பு விடயமாகும். சிறிலங்காவின் அரசியல் யாப்பு முற்றாகத் தூக்கியெறியப்படாமல் ஒரு வலுவுள்ள சுனாமிப் பொதுக்கட்டமைப்பு எப்படி சாத்தியம் என்பது கேள்விக்குறி. இதனாலேயே சிறிலங்கா அரசு சுனாமிப் பொதுக்கட்டமைப்பு விடயத்திலும் மிக நுட்பமாகப் பம்மாத்து விடத் தொடங்கிவிட்டது. இந்தப் பேய்க்காட்டலுக்கு சொல்ஹெய்மின் வருகைகளும் அறிக்கைகளும் வலுச்சேர்க்கின்றன என்பதுதான் இங்கு மீண்டும் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

இதில் இருக்கும் ஒரு பேராபத்தைப் பலரும் கவனிக்கத் தவறுகின்றனர். 1976 இலேயே நாம் தனித் தமிழ் ஈழமே எமது சிக்கலுக்கு ஒரே தீர்வு என்ற நிலைக்குத் தள்ளப்படுவதற்கு அன்று எமக்கிருந்த காரணங்களைவிட இன்று 29 ஆண்டுகள் கழித்து மிக வலுவான காரணங்கள் காணப்படுகின்றன. ஆனால் அப்போதிருந்த அரசியல் ஒருமைப்பாடு வெகுசன எழுச்சி முனைப்பு என்பன இன்று மழுங்கிக் காணப்படுகின்றன. அது மட்டுமன்றி அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலத்தில் எமது மக்களிடையே இருந்த அரசியல் முனைப்பும் எழுச்சியும்கூட மழுங்கிக் காணப்படுகின்றன. அது மட்டுமன்றி அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலத்தில் எமது மக்களிடையே இருந்த அரசியல் முனைப்பும் எழுச்சியும்கூட மழுங்கிப் போவதை நாம் காண்கிறோம். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. காலத்திற்குக் காலம் ஏதோ ஒரு தீர்வு வரப்போகிறது என ஏற்படுத்தப்படும் எதிர்பார்ப்புகளும் இதில் ஒன்று என்பதுதான் உண்மை. நாங்கள் பேயராக்கப்படுகிறோம் என்ற தன்மான உணர்வு மமக்களிடையே கூர்மையடைந்தமையாலேயே எமது போராட்டம் எழுச்சியடைந்தது. அந்த அரசியல் எழுச்சியும் முனைப்புமே எமது போராட்டம் தடம்புரளாமல் இருக்க உதவின. இவை மழுங்கிப் போகுமாயின் நாம் சலுகைகளுக்காகச் சோரம் போகின்ற கேவலமானதொரு கூட்டாகி விடுவோம். எந்த ஒரு அரசும் அரசியல் ஒருமைப்பாடும் அறிவுமுள்ள ஒரு சமூகத்தை ஏமாற்றும்போது அந்த அரசுக்கும் அந்த மக்களுக்கும் முரண்பாடுகள் கூர்மையடைவது தவிர்க்க முடியாதது. இவ்வாறான முரண்பாடுகள் ஒருகட்டத்தை அடையும்போது அவை தமக்கெதிரான போராட்டங்களாக வெடிக்காமல் இருக்க அரசுகள் பலவழிகளைக் கையாள்கின்றன. அவற்றில் ஒன்று மாய எதிர்பார்ப்புகளை உண்டாக்குவதாகும்.

கருணா குழுவின் சாட்டில் சிறிலங்கா படைகள் கிழக்கில் கெடுபிடிகளை அதிகரித்து வருகின்றன. பொருளாதார வளர்ச்சியும் வேலைவாய்ப்புகளுமின்றி வடக்கு-கிழக்கில் எமது மக்கள் இன்னமும் வாழ்கின்றனர். போர் அழிவுகள் இன்னமும் மாறாது உள்ளன. யாழ்ப்பாணத்தில் தமது காணிகளையும் வீடுகளையும் ஊர்களையும் சிறிலங்கா படைகளிடம் பறிகொடுத்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னமும் நாதியற்றுக் கிடக்கின்றனர். தமிழ்மொழி புறக்கணிப்பு இன்னமும் தொடர்கிறது. இப்படியே பல இன்னல்களைக் கூறிச் செல்லலாம்.

இவற்றையெல்லாம் விட சுனாமியும் பேரழிவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இன்றுவரை எதற்கும் தீர்வில்லை. ஆனால் இவையெல்லாம் எமது மக்களிடையே எந்தவிதமான அரசியல் கோபத்தையும் உண்டாக்கவில்லை. இந்த இன்னல்கள் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு எதிராக அவர்கள் அணிதிரளவில்லை. திரட்டப்படுவதிலும் அதிகம் நாட்டம் காட்டுவதில்லை. யாழ்ப்பாணத்திலோ மன்னாரிலோ வவுனியாவிலோ மட்டக்களப்பிலோ அரசியல் பேரணிகளுக்கு வருகின்ற மக்களின் தொகை வீழ்ச்சியடைந்துள்ளது என்பது மறைக்க முடியாத உண்மை. அவர்களிடம் விடுதலை உணர்வு இருக்கின்றது. ஆனால் அது அரசியல் ரீதியாக அணிதிரளும் அளவுக்கு எழுச்சியுள்ளதாக இல்லை.

எரிக் சொல்ஹெய்ம் வருகிறார். அவரைப் புலிகள் சந்திக்கிறார்கள். சிரித்துக்கொண்டே கைகுலுக்குகிறார்கள். எல்லாம் சுமூகமாகப் போகிறது என்பதுபோல் மகிழ்ச்சியாகப் பேசுகிறார்கள். இப்படியான செய்தி விம்பங்களை பொதுமக்கள் திரும்பத் திரும்பக் காணும்போது அவர்களை அறியாமல் உளவியல் தாக்கம் ஒன்று ஏற்படுவது இயல்பு.

விரைவில் எமக்கு தீர்வு கிடைக்கப்போகிறது என்ற உளப்பாங்கை இந்த விம்பங்கள் மக்களிடம் உண்டாக்குகின்றன. அதை மேலும் வலுப்படுத்தும் வகையில் சொல்ஹெய்மின் கூற்றுக்களும் அமைந்துவிடுகின்றன. இவையெல்லாம் நமது மக்களிடையே எழக்கூடிய அரசியல் சு10ட்சுமங்களைத் தணிக்கின்றன. “ஏதோவொரு தீர்வு அண்மித்துவிட்டது. எனவே நாம் எமதுபாட்டில் இருப்போம்” என்ற அரசியல் மலட்டுத்தனம் அவர்களிடையே பரவுகிறது.

புதிய மக்கள் படை (New Peoples Army-NPA ) என்பது எண்பதுகளில் உலகின் மிகப்பெரிய கெரில்லா இயக்கங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. பிலிப்பைன்ஸ் நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அது போராடி வந்தது. கடந்த பல ஆண்டுகளாக npa நோர்வேயின் அனுசரணையோடு பிலிப்பைன்ஸ் அரசுடன் அமைதிப் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகிறது. (அமெரிக்காவின் பின்னணியிலேயே நோர்வே அங்கும் அனுசரணையாளராக அமர்த்தப்பட்டது) NPA ஐ ஒரு பயங்கரவாத இயக்கமாக ஏலவே அமெரிக்கா தடைசெய்திருந்தது. அமைதிப் பேச்சுக்களில் குறிப்பிட்ட காலம் ஈடுபட்டு வந்தால் தன்மீதான தடையை அமெரிக்கா நீக்கும் எனவும்ää தனக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்குமெனவும் npa எதிர்பார்த்திருந்தது. ஆனால் npaய இன் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்த பிலிப்பைன்சின் கிராமப்புற ஏழை மக்களிடம் காணப்பட்ட அரசியல் முனைப்பும் எழுச்சியும் பேச்சுக்கள் நடந்த காலத்தில் படிப்படியாக வீழ்ச்சியடையலாயின. இன்று npய வலுவிழந்த ஒரு அமைப்பாக காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறது.

NPA ஐ புலிகளோடு ஒப்பிட முடியாதென சிலர் கூறலாம். படைபலத்தில் புலிகள் NPA ஐ விட பலநூறு மடங்கு வலுவுள்ளவர்களாக இருப்பது உண்மையாயினும் மக்களின் அரசியல் முனைப்பு வீழ்ச்சியடைவது பற்றிய யதார்த்தத்தை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும்.

எமது போராட்ட எழுச்சி மக்களிடையே மழுங்கடிக்கப்படாமல் இருக்கவேண்டுமாயின் நாம் சில வேலைகளை செய்தல் நல்லது. முதலாவது நமது கையில் திட்டவட்டமாக எதுவும் கிடைக்கும்வரை நாம் அதுபற்றிய ஊடக ஆரவாரத்தை சற்றேனும் குறைக்கவேண்டும். பிழையான எதிர்பார்ப்புக்களை மக்களிடம் ஏற்படுத்தும் செய்தி விம்பங்களை கூடியளவு தவிர்க்கவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக சிறிலங்கா அரசு எமக்கு எதையுமே தரப்போவதில்லை என்ற உண்மையை மக்களிடம் மீண்டும் மீண்டும் சொல்லவேண்டும். அதிலும் குறிப்பாக சொல்ஹெய்ம் வந்துசெல்லும் ஒவ்வொரு முறையும் அதை நாம் உரத்துக் கூறவேண்டும்.


User Feedback

Recommended Comments

There are no comments to display.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.