Jump to content
  • entries
    21
  • comments
    80
  • views
    95852

கடுகதி பாதையில் உங்கள் வாகனம் தீடீரென பழுதடைந்து விட்டால் என்ன செய்வது?


போக்குவரத்து

1794 views

கடுகதி பாதையில் உங்கள் வாகனம் தீடீரென பழுதடைந்து விட்டால் என்ன செய்வது? (வட அமெரிக்கா)

----------------------------------------

பதற்றம் அடையாதீர்கள்.

----------------------------------------

1. வாகனத்தை வீதி ஓரமாக நகர்த்துங்கள்:

Emergency Signalஐ போடுங்கள். விரைவாகவும், பாதுகாப்பாகவும், அவதானத்துடனும் பழுதடைந்த வாகனத்தை வீதி ஓரமாக நகர்த்துங்கள். இயலுமானவரை நேர்மட்டமான பாதையில் நிறுத்துங்கள். நீங்கள் இடதுபக்கமாக வாகனத்தை நகர்த்தவேண்டி ஏற்பட்டால் மற்றைய வாகனங்கள் உங்கள் வாகனத்துடன் மோதமுடியாதபடி போதியளவு இடம் தெருஓரம் உள்ளதை இயலுமானவரை உறுதிப்படுத்துங்கள்.

2. நீங்கள் நிற்கின்ற இடத்தை குறித்துக்கொள்ளுங்கள்:

உங்கள் வாகனத்திற்கு மிக அண்மையாகவுள்ள பிரதான Exit - வெளியேற்று பாதை எது என்பதை அறிந்துகொள்ளுங்கள். அருகில் கடைகள், விடுதிகள், எரிபொருள் நிரப்பு நிலையம், வீதி குறியீட்டு இலக்கங்கள், வேறு ஏதாவது குறிப்பிட்டு இனம்காட்டக்கூடிய அடையாளங்கள் தென்படின் அவற்றை குறித்துக்கொள்ளுங்கள்.

3. வாகனத்தின் பிரச்சனையை கண்டறியுங்கள்:

அ. ஏதாவது வித்தியாசமான சத்தங்கள் கேட்பின், வழமையில் இல்லாதபடி வித்தியாசமாக வாகனத்தின் ஏதாவது பகுதி தோன்றினால்/ ஏதாவது பகுதியை வித்தியாசமாக நீங்கள் உணர்ந்தால், அத்துடன் புகை, தீ இவை ஏதாவது தோன்றினால், வாகனத்தின் முன்பக்க மூடியின் கீழாக ஏதாவது தோன்றினால் அவற்றை அறிந்துகொள்ளுங்கள்.

ஆ. தவிர்க்க முடியாத சூழ்நிலையில், உதாரணமாக தீ காரணமாக வாகனத்தை விட்டு வெளியேறவேண்டி ஏற்பட்டால் உங்களை நோக்கி வரக்கூடிய வாகனங்கள் பற்றி அதி உயர் எச்சரிக்கையாக இருங்கள். அத்துடன் இருள்/இரவு, மற்றும் காலநிலை - மழை, கடுங்குளிர், சுழல்காற்று, சீரற்ற தரை மட்டங்கள் - பள்ளம், இடுக்கு, குழிகள், வழுக்குதல் இவை பற்றியும் எச்சரிக்கையுடன் செயற்படுங்கள்.

இ. வாகனத்தைவிட்டு வெளியேறும்போது மற்றைய வாகனங்கள் வருகின்ற பக்கமாக வெளியேறாமால் உங்களை நோக்கி வரும் வாகனங்களுக்கு எதிர்ப்புறமாக உள்ள கதவை திறந்து வெளியேறுங்கள்.

ஈ. ஒருபோதும் உங்கள் வாகனத்திற்கு நேரே முன்னாலோ அல்லது பின்னாலோ நிற்காதீர்கள். நீங்கள் மறைப்பதால் அல்லது உங்களை காணாதபடியால் மற்றைய வாகனங்கள் உங்கள் மீது மோதக்கூடும்.

உங்களால் வாகனத்தை வீதி ஓரமாக நகர்த்த முடியாவிட்டால்...

அ. Emergency Signal, ஆபத்து கால வெளிச்சங்களை உடனடியாக போடுவதற்கு மறவாதீர்கள்.

ஆ. பிரயத்தனப்பட்டு தெரு ஓரமாக வாகனத்தை நகர்த்த முற்பட்டு விபத்தில் சிக்கி கொள்ளாதீர்கள்.

இ. உங்களுக்கு வாகனத்தின் பாதுகாப்பு பற்றி குழப்பமாக காணப்பட்டால், அதாவது உங்கள் வாகனத்துடன் பின்னால் வரும் வாகனங்கள் ஏதும் மோதும் எனக்கருதினால் ஒருபோதும் வாகனத்தினுள் இருக்காதீர்கள். மிகவும் அவதானத்துடன், பாதுகாப்பாக வாகனத்தைவிட்டு வெளியேறி தெருவில் இருந்து விலகிச்சென்று பாதுக்காப்பான ஓர் இடத்திற்கு செல்லுங்கள்.

4. மற்றைய வாகனங்களின் பார்வையில் உங்கள் வாகனம் தென்படுவதை உறுதி செய்யுங்கள்:

Emergency Signalஐ போடுவதோடு, உங்களிடம் ஏதாவது துணிகள், கைக்குட்டை, உடற்போர்வை, ஜாக்கெட் போன்றவை இருந்தால் அவற்றை மற்றைய வாகனங்களுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் வாகனத்தின் சாளரத்தில், கதவு கைப்பிடியில் அல்லது Anrtennaஇல் கட்டி/செருகி விடுங்கள்.

5. தேவையேற்படின் அவசர கால சேவை 911ஐ அழையுங்கள் :

வாகனத்தின் பிரயாணிகள் எல்லோரும் தெருவிலிருந்து விலகி பாதுகாப்பான இடத்திற்கு சென்றதும் அவசரகால சேவையை - காவல்துறையை அழையுங்கள். அவர்கள் நீங்கள் என்ன செய்யவேண்டும் என உங்களுக்கு தேவையான மேலதிக அறிவுத்தல்களை வழங்குவார்கள்.

6. வாகனத்தை விட்டு வெளியேறுதல் :

நீங்கள் வானகத்தை விட்டு வெளியேற எண்ணினால்...

அ. சுற்றுப்புறங்கள் பற்றி எச்சரிக்கை அடையுங்கள்.

ஆ. முக்கியமாக இரவில் பாதுகாப்பிற்காக ஒளி விளக்கை/Flashing Light வாகனத்தினுள் கொண்டு செல்லுங்கள்.

இ. எவராது தெருவில் செல்லும் வாகனத்தின் சாரதிகள் தாமாக உதவி செய்வதற்கு முன்வந்தால் அவர்களின் பெயர், தொலைபேசி இலக்கம், வீட்டு முகவரி என்பனவற்றை முதலில் கேட்டுத்தெரிந்து குறித்து வைத்த பின்னரே உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள். அறிமுகம் பெறாது முன்பின் தெரியாமல் உதவியை பெறுவது ஆபத்தானது. நீங்கள் பிரயாணிகளை விட்டு முன்பின் தெரியாதவர்களுடன் உதவியை பெறுவதற்காக எங்காவது சென்றால் (உதாரணமாக அயலில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு செல்லுதல்) உதவி செய்பவரின் விபரத்தை வாகனத்தின் பிரயாணிகளிடம் கொடுத்து, நீங்கள் ஏன் அவருடன் செல்கின்றீர்கள் என்பதற்கான காரணத்தையும் சொல்லிச் செல்லுங்கள்.

ஈ. வாகனத்தைவிட்டு வெளியேறும்போது எப்போதும் உங்களை நோக்கி மற்றைய வாகனங்கள் வருகின்ற பக்கமாக அல்லாது எதிர்ப்புறமாக உள்ள கதவு வழியாகவே நீங்கள் வெளியேற வேண்டும்.

7. வாகனத்தினுள்ளேயே தங்குதல் :

அ. நீங்கள் வாகனத்தினுள்ளேயே வெளி உதவி கிடைக்கும் வரை தங்குவதற்கு தீர்மானித்தால் உங்கள் வாகனத்தின் கண்ணாடி, கதவு ஆகியவறை பூட்டிவிடுங்கள்.

ஆ. சாரளத்தின் கண்ணாடியையோ அல்லது கதவையோ அறிமுகம் இல்லாதவர்களுக்கு திறக்காதீர்கள். உங்களுக்கு உதவுவதற்கு அவர்கள் வந்தால், உங்களிடம் தொலைபேசி காணப்படாவிட்டால் அவர்களிடம் 911இற்கு அல்லது அவசரகால வீதி உதவி சேவைக்கு (Emergency Road Service) அழைக்குமாறு கேளுங்கள்.

இ. எவர் மூலமாவது உங்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் உடனடியாக 911ஐ அழையுங்கள். உங்கள் வாகனத்தின் Horn ஐ தொடர்ச்சியாக சத்தமாக போடுங்கள். எச்சரிக்கை ஒலியை எழுப்புவதற்காக வாகனத்தின் சாவியில் உள்ள Panic Button ஐயும் சொடுக்கலாம்.

ஈ. வெப்பத்தை அல்லது குளிரை பெறுவதற்காக வாகனத்தின் இயந்திரத்தை நீங்கள் தொடர்ச்சியாக இயக்காமல் இடையிடையே இயந்திரத்தை நிறுத்துங்கள். வாகனத்தின் இயந்திரம் தொடர்ச்சியாக இயங்கும்போது COவாயு காரணமாக வாகனத்தில் உள்ளவர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்படலாம்.

8. அவசரகால வீதிச்சேவை பிரிவினருடன் / வாகன திருத்தகத்தில் உரையாடுதல் :

அ. உங்கள் அங்கத்துவ அடையாள இலக்கத்தை கொடுங்கள். உதாரணம் - CAA membership no.

ஆ. உங்கள் தொலைபேசி இலக்கம், வாகனம் தற்போதுள்ள இடம் இவற்றை கூறுங்கள்.

இ. வாகனத்தின் பழுது பற்றிய விபரம், பிரச்சனையின் தன்மை என்பனவற்றை சொல்லுங்கள்.

ஈ. வாகனம் இழுத்துச்செல்லவேண்டிய தேவை ஏற்பட்டால், அதிகளவு பிரயாணிகள் காணப்பட்டால், குழந்தைகள், சிசுக்கள் காணப்பட்டால், மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால், வாகனத்திற்கு விசேடமான எரிபொருள் ஏதாவது தேவைப்பட்டால் இவை பற்றிய விபரங்களை தயங்காது கூறுங்கள்.

உ. நீங்கள் 911ஐ அழைப்பின் அதுபற்றியும் அறிவியுங்கள்

9. உங்கள் உரிமைகளும் பொறுப்புக்களும் :

காப்புறுதி நிறுவனம் அல்லது Emergency Road Service மூலம் எப்படியான உதவிகள் கிடைக்கும், பெறப்படவேண்டும் என்பவை உங்கள் பொறுப்பாகும். ஆபத்து காலங்களில் இவை மூலம் எப்படியான உதவிகள் கிடைக்கும், எவ்வாறான சேவைகள் உங்களுக்கு உள்ளக்கப்பட்டுள்ளன என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளுங்கள்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக காலம், சூழ்நிலைக்கு ஏற்றபடி புத்திசாதூர்யமாக / சமயோசிதமாக நடந்துகொள்ளுங்கள். உங்கள் பொது அறிவை, common senseஐ பயன்படுத்துங்கள். உங்களினதும், வாகனத்தில் உள்ள பிரயாணிகளினதும், தெருவை பயன்படுத்தும் ஏனையோரினதும் பாதுக்காப்பே முக்கியமானது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். நீங்கள் எடுக்கின்ற தவறான முடிவுகள் உயிர் ஆபத்தினையும், அழிவையும் ஏற்படுத்தலாம் என்பதை மறவாதீர்கள்.

ஆக்கம் : போக்குவரத்து

http://www.cardriving.ca

உசாத்துணை : caasco.com

  • Like 5

4 Comments


Recommended Comments

நல்ல தகவல்கள்..

ஒருமுறை 401 விரைவுச்சாலையில் கடவுப் பாதையில் (Passing Lane) ஒரு வாகனத்தை முந்தும்போது ஒரு சில்லில் காற்றுக் குறையத் தொடங்கிவிட்டது. நல்ல வேளையாக அந்த வாகனத்தை முந்தி மூன்று பாதைகள் கடந்து வலப்புற ஓரத்தில் நிறுத்த முடிந்தது..

பிறகு இழுவை நிறுவனத்தைத் தொடர்புகொண்டுவிட்டு அவர்கள் வருகைக்காகக் காத்திருந்தபோது, ஒரு காவல்துறை வாகனம் வந்தது. அந்த அதிகாரி எல்லாம் சரியா என்று கேட்டுவிட்டு, இருபது நிமிடங்களுக்குள் சேவை கிடைக்காவிட்டால் தான் அழைப்பை ஏற்படுத்தி வேறு சேவை வழங்குவதாகத் தெரிவித்தார்.

பிறகு இழுவை வாகனம் வந்தது. குளிர்காலம் ஆதலால், என்னை அந்த வாகனத்தினுள் அமருமாறு சாரதி கேட்டுக்கொண்டார். வாகனத்தின் பின் சில்லுதான் காற்றுப் போயிருந்தது. அதற்Kஉ உபரிச் சில்லுகள் (Dollies) அவர் உபயோகித்திருக்க வேண்டும்.. ஆனால் மறந்துவிட்டார்..

இழுத்துக்கொண்டு செல்லும்போது புகை நாற்றம் வரவே, இறங்கிப் பார்த்தால், சில்லு, வளையம் எல்லாமே வீணாகிப் போயிருந்தது. பிறகு CAA மூலம் இழப்பினை மீளப் பெற்றுக்கொண்டேன்.

  • Like 1
Link to comment

உங்கள் அனுபவப்பகிர்வுக்கு நன்றி இசைக்கலைஞன்.

நாம் எமது பக்கத்தில் பிழைகள் ஏற்படாதபடி இயலுமானவரை சகல பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும்.

எமது சக்தியையும் மீறி ஆபத்துக்கள் ஏற்படும்போது ஒன்றும் செய்யமுடியாது என்பதும் உண்மை.

Link to comment

பிழைகள் அல்லது தவறுகள் தவிர்க்க முடியாதவைகள்தான். ஆனாலும், அனுபவங்களை எதிர்கால நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த கருத்திலெடுப்பது அவசியம்.

  • Like 1
Link to comment
  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி போக்குவரத்து.

சுரங்கப் (குகை) பாதையில்... உங்கள் வாகனம் மட்டுமல்ல... மற்றையை வாகனம் தீப்பிடித்தாலும்... உடனடியாக அவ்விடத்தை விட்டு... காற்றோட்டமான.. வெளி இடங்களுக்குப் போக வேண்டும். அங்கு நிற்கும் வாகனங்களில் ஏதாவது ஒன்று... எரிபொருள், நச்சுவாயு போன்றவற்றை நிரப்பிய படி நிற்கலாம். அத்துடன் தீயினால்... ஏற்படும் புகையால்... மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

  • Like 1
Link to comment
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.