Jump to content
  • entries
    21
  • comments
    80
  • views
    95859

வீதி பரீட்சை பற்றிய சில உதவி குறிப்புக்கள்


போக்குவரத்து

5832 views

வாகனம் ஓடுவதற்கான சாரதி அனுமதி பத்திரம் பெறும் போது வீதி பரீட்சையில் சித்தி பெறுவது பலருக்கு மிகுந்த சிரமமாகவும், மன அழுத்தத்தை ஏற்படுத்தும் விசயமாகவும் காணப்படுகின்றது. பலர் நான்கு, ஐந்து, எட்டு தடவைகளுக்கு மேல் பரீட்சையில் தோற்றியும் சித்தி பெற முடியாது சிரமப்படுகின்றனர்.

இது சம்மந்தமாக சில உதவி குறிப்புக்களை இங்கு தருகின்றோம்.

1-வீதி பரீட்சையில் ஒரு போதும் அதிர்ஸ்டத்தின் அடிப்படையில் அல்லது முறைகேடுகள் செய்து சித்தி பெற நினைக்காதீர்கள். வாகனம் ஓடுவது என்பது உங்கள் அனுபவம்,ஆற்றல், திறமை, கவனம் என பல விடயங்களில் தங்கி உள்ளது. முறையாக ஓடத்தெரியாமல் சாரதி அனுமதி பத்திரம் பெறுவது எதிர் காலத்தில் நீங்கள் வீதி விபத்துக்களில் சிக்கி பல ஆபத்துக்களை எதிர்கொள்வதற்கு வழி வகுக்கலாம். ஆகவே, முறையாக பயின்று, நன்றாக பயிற்சி செய்து உங்கள் அனுபவம், திறமை, ஆற்றல், கவனம் இவற்றின் அடிப்படையில் வீதி பரீட்சையில் சித்தி பெற முயற்சி செய்யுங்கள்.

2-எவ்வளவிற்கு எவ்வளவு நீங்கள் அதிகளவு பயிற்சி செய்கின்றீர்களோ அவ்வளவிற்கு நீங்கள் உங்கள் அனுபவத்தை பெருக்கி கொள்ள முடியும். வீதி பரீட்சைக்கு செல்ல முன்னர் இயலுமான அளவு பயிற்சியை, கிரமமாக (frequently) பெறுங்கள்.

வேகம்: தெருவிற்கு நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் செல்லுங்கள். பாடசாலை உள்ள இடத்தில் மேலதிக கவனம் தேவை. ஹைவேயில் நுழையும் போது அளவுக்கு அதிகமாக வேகத்தை கூட்டாதீர்கள்.

இடைவெளி: முன்னால் செல்லும் வாகனத்திற்கும், உங்கள் வாகனத்திற்கும் இடையில் போதியளவு இடைவெளி விடுங்கள். உள்ளூர் வீதிகளில் இரண்டு செக்கன்கள் இடைவெளி, ஹைவேயில் மூன்று செக்கன்கள் இடைவெளி ஆகக் குறைந்தது இருக்க வேண்டும். மோசமான காலநிலை நிலவும் போது மேலதிக இடைவெளி விட வேண்டும்.

முழுமையான நிறுத்தம்: சந்திகளில் வாகனத்தை நிறுத்தும் போது வெள்ளை கோட்டிற்கு பின்னால் நிறுத்தம் செய்ய வேண்டும். வெள்ளை கோட்டின் மீது ஏறக்கூடாது. நிறுத்தம் முழுமையானதாக வர வேண்டும். சில்லு சிறுதளவு கூட உருள கூடாது என்பது முக்கியம். stop, stop all-way ஆகியவற்றில் அண்ணளவாக மூன்று செக்கன்கள் முழுமையான நிறுத்தம் எதிர்பார்க்கப்படுகின்றது.

முழுமையான நோட்டம் விடுதல்/scanning: சந்திகளை அடையும் போது சந்தியை முழுமையாக நோட்டம் இடுவது முக்கியம். இடது பக்கம், வலது பக்கம், நேரே, மீண்டும் இடது பக்கம் நோட்டம் இடுங்கள். பாதுகாப்பாக சந்தியை கடக்க முடியும் என்று கண்டறியும் போது கடவுங்கள். சிக்னல் இல்லாத சந்திகளில் பாதசாரிகளுக்கே முன்னுரிமை உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். பாதசாரிகள் எவராது நீங்கள் செல்லும் பாதையின் குறுக்காக கடக்க முயற்சித்தால் அல்லது கடந்தால் நீங்கள் அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

உங்கள் தோளின் மேலாக திரும்பி பார்த்தல் (shoulder check): சந்தியில் நீங்கள் திரும்பும் போதும், ஒழுங்கை மாற்றம் செய்யும் போதும் கண்ணாடியை பார்த்தல், சிக்னல் போடுதல், உங்கள் தோளிற்கு மேலாக திரும்பி பார்த்தல் ஆகிய மூன்று விடயங்களையும் கட்டாயம் செய்ய வேண்டும். நீங்கள் செல்லும் அதே பாதையில் வரக்கூடிய சைக்கிளில் செல்பவர்கள், பாதசாரிகள், ஏனைய வீதி பாவனை செய்பவர்களை கண்டறிய இதை செய்ய வேண்டும். வலது பக்கமாக திரும்பும் போது மேலதிக அவதானம் தேவை.

சீரான திருப்பம்: திருப்பத்தை மேற்கொள்ளும் போது முழுமையாக உங்கள் ஒழுங்கையினுள் வாகனத்தை வைத்து இருங்கள். உங்கள் வாகனத்தை ஒழுங்கையில் முறையான இடத்தில் பேணுங்கள். ஆகவும் அகலமான திருப்பத்தையோ அல்லது மிகவும் ஒடுக்கமான திருப்பமாகவோ செய்யாதீர்கள். திருப்பம் செய்யும் போது வேக கட்டுப்பாடு அவசியம். மிகவும் வேகமாக திருப்பத்தை செய்ய கூடாது. திருப்பம் செய்யும் போது பாதசாரிகளை கவனிக்க வேண்டும்.

பயிற்சி ஒன்றின் மூலம் மட்டுமே வாகனம் ஓட்டுவதில் தேர்ச்சி பெற முடியும். அது ஓரிரு நாளில் ஒரு இரவினுள் சாத்தியப்படும் விசயம் இல்லை. வெவ்வேறு காலநிலைகள், வெவ்வேறு வீதி நிலமைகள் ஆகிய சந்தர்ப்பங்களில் பயிற்சி பெறுங்கள்.

வீதி பரீட்சை: இதில் மூன்று பகுதிகள் உள்ளன.

1-பயணத்தின் முன்னாக சரி பார்த்தல்: வாகனத்தின் சிக்னல்களை போட்டு காட்டுதல், வாகனத்தின் விளக்கை போட்டு காட்டுதல், நிறுத்தம் செய்யும் பிரேக்கை (parking brake) சரி பார்த்தல். உங்கள் வாகனம் பாதுகாப்பாக ஓடப்பட முடியும் என உங்களை பரீட்சிப்பவரினால் உறுதி செய்யப்பட்ட பின்னரே தொடர்ந்து பரீட்சையை செய்ய முடியும்.

2-பரீட்சிப்பவர் கூறும் உத்தரவுகளுக்கு அமைய நீங்கள் வாகனத்தை ஓடிக்காட்ட வேண்டும். வெவ்வேறு விதமான வீதிகள், வெவ்வேறு விதமான சந்திகள், வெவ்வேறு விதமான சிக்னல்கள், சைகைகள் உள்ள வீதிகள், வெவ்வேறு விதமான வேக கட்டுப்பாடு உள்ள வீதிகள் இவற்றின் ஊடாக பரீட்சிப்பவர் உங்களை செல்லுமாறு கூறுவார்.

பரீட்சிப்பவர் ஒரு போதும் உங்களுக்கு சட்டவிரோதமான உத்தரவுகளை தர மாட்டார். பரீட்சிப்பவர் ஒரு போதும் உங்களை பேக்காட்டி பரீட்சையில் சித்தி பெற முடியாதவாறு செய்ய மாட்டார். அவர் ஒரு சந்தியில் வலது அல்லது இடது பக்கம் திரும்ப வேண்டும் என்றால் முன்கூட்டியே உங்களுக்கு உத்தரவு தருவார். அவர் ஏதும் கூறாவிட்டால் நீங்கள் வீதியின் வழியே அது போகும் பாதையிலேயே ஓடுங்கள்.

3-பின்னூட்டம் பெறுதல்: பரீட்சையின் முடிவில் பரீட்சிப்பவர் நீங்கள் வாகனம் ஓடும் போது எடுக்கப்பட்ட பல்வேறு குறிப்புக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வார். நீங்கள் பரீட்சையில் தோல்வி அடைந்தால் அதற்கான காரணத்தையும் தெளிவாக குறிப்பிட்டு சொல்வார்.

குறிப்பு: கனடா அல்லாத வேறு நாடுகளில் உள்ளவர்கள் வலது, இடது ஆகிய பக்கங்களை உங்கள் நாட்டு வீதி அமைப்பு முறையுக்கு ஏற்ப இங்கு புரிந்து கொள்ளுங்கள்.

ஆக்கம்: போக்குவரத்து

http://CarDriving.Ca

மேலதிக உதவி குறிப்புக்கள் கீழே பின்னர் தரப்படும்.

0 Comments


Recommended Comments

There are no comments to display.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.