Yarl Forum
ஜெயலலிதா கூறிய கதை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: ஜெயலலிதா கூறிய கதை (/showthread.php?tid=956)



ஜெயலலிதா கூறிய கதை - Shankarlaal - 02-09-2006

அரசு ஊழியர்கள் மாநாட்டில்
ஜெயலலிதா கூறிய கதை


சென்னையில் நடந்த அரசு ஊழியர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசும்போது ஒரு கதையை கூறினார்.

அவர் பேசியதாவது:-

நல்லாட்சியின் அடையாளம்

அரசின் திட்டமிட்ட பயன்கள், ஏழை எளிய மக்களை சென்றடைவதை உறுதிப்படுத்திட, அந்த அரசின் சேவை செயலாக்க ஏற்பாடு மேம்படுத்தப்பட வேண்டும் என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு கோட்பாடு ஆகும். ஒரு புறம், அரசு அலுவலர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, அதன் வாயிலாக அவர்கள் மக்களுக்கு மேலும் சிறப்பாக சேவை ஆற்ற ஊக்கம் அளித்திட வேண்டும் என்னும் நிலை; மறுபுறம், ஏழை எளிய மக்களுக்கு போதிய பயன்கள் உரிய நேரத்தில் சென்றடைவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்னும் நிலை.

இந்த இரண்டு நிலைகளுக்கும், இடைப்பட்ட நுட்பமான சம நிலையைக் கண்டறிந்து பராமரித்து வருவதே ஒரு நல்லாட்சியின் அடையாளம் ஆகும். நிதி நெருக்கடிக் காலங்களிலும், திறம் வாய்ந்த அரசால் இந்தச் சம நிலையைப் பராமரிக்க முடியும். ஆனால், முற்றிலும் சீரழிந்த நிதி நிலையில் இந்த சமன்பாட்டைப் பராமரிக்க மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட அசாதாரணத் துணிவு அவசியம் ஆகும். இத்தகைய அசாதாரணத் துணிவு, தளராத தன்னம்பிக்கை, தொலைநோக்குப் பார்வை, புதுமைச் சிந்தனை மற்றும் நிர்வாகத் திறமை ஆகியவற்றின் காரணமாக, நிதிச் சீரழிவில் இருந்து தமிழகத்தை மீட்டதோடு மட்டுமல்லாமல்; நிதி நிலையை ஆரோக்கியமான நிலைக்கு உயர்த்தி உள்ளோம். இந்த நிலையை உருவாக்கிட நாம் அனைவருமே சில எதிர்பார்ப்புகளை, கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டி இருந்தது. இதனை உணர்வதில் முதலில் சில சிறு பிரச்சினைகள் இருந்தன. இதனை எண்ணும் போது எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

கரடி கதை

அது ஒரு மழைக் காலம். எங்கும் மழை. ஆறுகளில் புது வெள்ளம் பொங்கிப் பெருகி வந்து கொண்டிருந்தது. காட்டை ஒட்டியிருந்த ஓர் ஊரின் ஆற்றங்கரை ஓரத்தில் நான்கு நண்பர்கள் இந்தப் பெரு வெள்ளத்தில் எவ்வாறு அக்கரைக்குச் செல்வது என்ற சிந்தனையோடு நின்று கொண்டிருந்தார்கள். அப்போது, நட்ட நடு ஆற்றில், கருமையான நிறத்தில், மூட்டை போல ஒன்று மிதந்து வந்து கொண்டிருந்ததைக் கண்டார்கள்.

அதில் ஒருவன், ``அதோ அங்கே மிதந்து வருவது என்னவென்று பாரப்பா'' என்று சொன்னான்.

அடுத்தவன், ``அது ஒரு கம்பளி போல் தெரிகிறதே'' என்றான்.

மூன்றாமவன், ``கம்பளியே தானப்பா'' என்று கூற,

மிகவும் தைரியசாலியான நான்காவது ஆள், ``அதை எடுத்து பிழிந்து, காய வைத்துக் கொண்டால் இந்த மழைக் காலத்திற்கு இரவில் இதமாக போர்த்திப் படுக்கலாம்'' என்று கூறியபடி அந்த வெள்ளத்தில் பாய்ந்தான்.

கம்பளியை கொண்டுவா

ஆற்றில் பாய்ந்தவன் விரைந்து நீந்திச் சென்றான். நட்டாற்று வெள்ளத்தில் மிதந்தபடி வந்த கம்பளியைத் தாவிப் பிடித்தான். தாவிப் பிடித்த சிறிது நேரத்தில், அந்தக் கம்பளியுடன் சேர்ந்து, நட்டாற்றில் அவனும் வெள்ளத்தின் போக்கிலே போக ஆரம்பித்தான்.

கரையில் நின்றிருந்த மூன்று பேரும், ``கம்பளியை இழுத்துக் கொண்டு கரைக்கு வா'' என்று கத்தினார்கள். ஆனால், அவனால் அந்தக் கம்பளியை விட்டு வர முடியவில்லை.

``நண்பா, அந்த கம்பளியை விட்டு விடு! நீ மட்டுமாவது கரைக்கு வந்து சேர்'' என்று கத்தினார்கள்.

அதற்கு, அந்தக் கம்பளியைப் பிடித்தவன் சொன்னான், ``நண்பர்களே! நான் எப்போதோ, கம்பளியை விட்டு விட்டேன். அந்தக் கம்பளி தான் என்னை விட மாட்டேன் என்கிறது'' என்றான்.

கரடி யார்?

உண்மையில், ஆற்று நீரில் மிதந்து வந்த அந்த கருப்பு மூட்டை கம்பளி அல்ல. அது ஒரு நிஜமான கரடி. அந்தக் கரடி, கன மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தது. ஏதாவது பற்று கிடைக்காதா, எப்படியாவது கரை சேர முடியாதா, யாராவது காப்பாற்ற மாட்டார்களா என்று எண்ணியபடியே போய்க் கொண்டிருந்தது அந்த கரடி. இப்படி நான்கு பேர் அந்த ஆற்றங்கரை ஓரத்தில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்ததும், அவர்களை ஏமாற்றுவதற்காக தன்னுடைய உடலை சுருட்டி கம்பளி போல தோற்றம் காட்டியது. அதை உண்மை என்று நம்பி, அவர்கள் வருவார்கள், அவர்களைப் பிடித்துக் கொள்ளலாம் என்பது தான் அந்தக் கரடியின் எண்ணம்.

அதன் எண்ணப்படியே, தன்னுடைய பொய்த் தோற்றத்தில் ஏமாந்து ஒருவன் மாட்டிக் கொண்டதும்; அவனைக் கெட்டியாக பிடித்துக் கொண்டு, அவனையும் சேர்த்து ஆற்று வெள்ளத்தில் அமுக்கப் பார்த்தது. ஆனால், நம்முடைய ஆள் அவ்வளவு ஏமாளி கிடையாது. ``என் கைகளைத் தானே பிடித்துக் கொண்டாய்'' என்று கேட்டு, தன் கால்களைப் பயன்படுத்தி, அந்த கரடியிடம் இருந்து தப்பித்துக் கரைக்கு வந்து சேர்ந்து விட்டான். உடலைக் காக்க உதவும் என்று எதிர்பார்க்கப்பட்ட கம்பளி, உண்மையில் உயிரைப் பறிக்கக் காத்திருந்த ஒரு கரடி என்ற விவரம் தாமதமாகத் தான் அவர்களுக்குத் தெரிய வந்தது. இந்தக் கதையில், கரடி யார் என்பதையும், அப்பாவி நண்பர்கள் யார் என்பதையும், உங்கள் ïகத்திற்கே விட்டு விடுகிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

தினதந்தி இணையத்திலிருந்து பெறபட்டது