Yarl Forum
மகிந்த மீது கடும் தாக்குதல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: மகிந்த மீது கடும் தாக்குதல் (/showthread.php?tid=850)



மகிந்த மீது கடும் தாக்குதல் - வினித் - 02-15-2006

மகிந்தவுக்கு ஒற்றையாட்சிதான் நிலைப்பாடு எனில் புலிகளுக்கு தனியரசுதான் நிலைப்பாடு: விடுதலைப் புலிகள் எச்சரிக்கை!

[புதன்கிழமை, 15 பெப்ரவரி 2006, 15:59 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]

தமிழருக்குத் தாயக நிலம் இல்லை, ஒற்றையாட்சிக்குள்தான் இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரசு அரசியல் நிலைப்பாடெடுத்தால், தமிழரின் தனியரசுக் கோரிக்கையை நடைமுறைப்படுத்தத் தீவிரமாக முயற்சிப்பதைத் தவிர வேற்று மாற்று வழிகள் இல்லாதுபோகும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனர்.


தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை இன்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஈழத் தமிழரின் அடிப்படை அரசியல் அபிலாசைகளை நிராகரித்து, சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு வழங்கியுள்ள செவ்வி (13.02.06) தமிழ்மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அந்த நேர்காணலின்போது, தமிழரின் தாயகக் கோட்பாட்டை அடியோடு நிராகரித்த சிறிலங்கா அரச தலைவர் அவர்கள், ஒற்றையாட்சிக்குள்தான் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு தேடப்படும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழரின் அரசியல் உரிமைகளைக் கொச்சைப்படுத்தும் விதமாக வெளிவந்துள்ள சிறிலங்கா அரச தலைவர் அவர்களின் கருத்தை புலிகள் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

இலங்கைத் தீவின் வடக்கு - கிழக்குப் பகுதிகள் தமிழரின் தாயகபூமி என்பது திடீரென முளைத்த அரசியல் கோட்பாடு அன்று. பல்லாயிரம் வருடங்களாகத் தமிழரின் வாழிடமாக - தாயகமாக அது இருந்து வருகின்றது. இலங்கை மீதான ஐரோப்பியரின் படையெடுப்பின் போதும் கூடத் தமிழரின் தாயகநிலம் தெளிவான வரையறைகளுடன் இருந்தது.

தமிழரின் தாயகநிலத்தை திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் அபகரிக்கச் சிங்கள அரசுகள் தொடர்ச்சியாக மேற்கொண்ட சூழ்ச்சிகர நடவடிக்கைகளைத் தமிழர் தரப்பு எப்போதும் எதிர்த்தே வந்துள்ளது.

தமிழரின் படைப்பல வளர்ச்சிதான் சிங்கள அரசின் நில அபகரிப்புக்குத் தடைபோட்டுள்ளது என்ற களயதார்த்தமும் அனைவரும் அறிந்த உண்மையாகும்.

தமிழரின் இனப்பிரச்சினையை அமைதிவழியில் தீர்க்கமுனையும் ஒர் அரசியல் தீர்வுத்திட்டத்தின் அடிப்படை விடயங்களாக, தாயகம் - தேசியம் - தன்னாட்சி என்பவையே உள்ளன என்பது புலிகள் இயக்கத்தின் நீண்டகால அரசியல் நிலைப்பாடாகும்.

இந்த அடிப்படை விடயங்களை ஜெயவர்த்தனா அரசு நிராகரித்ததால்தான் திம்புப் பேச்சுவார்த்தையே தோல்வியில் முடிந்தது.

தமிழரின் தாயகக் கோட்பாட்டை நிராகரிப்பதில் வெற்றிபெற்றுவிட்டால் அவர்களின் தேசிய இனம் மற்றும் தன்னாட்சி உரிமை என்ற கோட்பாடுகளும் செயலிழந்து - செத்துப்போய்விடும் என்றே சிங்கள ஆட்சியாளர்கள் கனவு காண்கின்றார்கள்.

சிங்களப் பாராளுமன்றம் - சிங்கள அரசியல் அமைப்பு - சிங்கள நீதித்துறை - சிங்கள நிர்வாகத்துறை - சிங்களப் படைக்கட்டுமானம் என்று இலங்கைத்தீவில் சிங்களவர் ஆட்சியே அதாவது ஒற்றையாட்சி முறையே அமுலிலிருந்து வருகின்றது.

சிங்கள - பௌத்த மேலாதிக்க சித்தாந்தத்தைக்கொண்ட இந்த ஒற்றையாட்சி அமைப்புக்குள்தான் தமிழினம் கொடூரமான இன அழிப்பை எதிர்கொண்டபடி வாழ்கின்றது.

ஒற்றையாட்சி அமைப்பில் அதிகாரப் பரவலாக்கல் மூலம் தமிழரின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு என்ற சிங்கள ஆட்சியாளர்களின் கருத்து ஐம்பது வருடங்களுக்கு முன்னரே காலாவதியாகிவிட்டது.

சமஸ்டி அடிப்படையில் தீர்வுகோரிய தமிழினம் அது மறுக்கப்பட்டதாலேயே தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்தது. தமிழர் சமஸ்டி கேட்டு ஐம்பது வருடங்கள் கடந்துவிட்டன. தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து முப்பத்து வருடங்களுக்கு மேலாகிவிட்டன.

இப்போது சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அவர்கள் அரைநூற்றாண்டு காலம் பின்னே சென்று - உழுத்துப்போன ஒற்றையாட்சித் தத்துவத்தைக் கையிலெடுத்த் தமது தாயகத்தின் பெரும் பகுதியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்து நடைமுறை அரசொன்றை நடாத்திவரும் புலிகள் இயக்கத்தின் முன்னே வைக்க விரும்புகின்றார்.

தமிழ் - சிங்கள இனப்பிரச்சினையின் ஆழமான முரண்பாடுகளைச் சரியாக அறிந்துகொள்ளாது, சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அவர்கள் அவசரப்பட்டு அறிக்கைகள் வெளியிடுவது தற்போதைய பேச்சு முயற்சியைப் பாதிக்கும் செயலாகவே இருக்கும்.

தமிழருக்குத் தாயகநிலம் இல்லை, ஒற்றையாட்சிக்குள்தான் இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்று மகிந்த அரசு அரசியல் நிலைப்பாடெடுத்தால், தமிழரின் தனியரசுக் கோரிக்கையை நடைமுறைப்படுத்தத் தீவிரமாக முயற்சிப்பதைத் தவிர புலிகள் இயக்கத்திற்கு மாற்றுவழிகள் இல்லாது போகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி:புதினம்


- Sujeenthan - 02-15-2006

இவற்ற ஒற்றை ஆட்சிக்கு தானோ நாங்கள் இவ்வளவு காலமும் போராடினது. இவர் சொல்லுறத பார்த்தால் இலங்கையில எதற்காக சண்டை நடக்குது என்று கூட தெரியாது போல கிடக்குது.