Yarl Forum
வில்லிசை - கலை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: வில்லிசை - கலை (/showthread.php?tid=8293)

Pages: 1 2


வில்லிசை - கலை - இளைஞன் - 07-10-2003

வணக்கம் நண்பர்களே...

எனக்கு ஆழ்ந்த தொடர்பு இல்லாத துறைக்குள் கால் வைக்கிறேன். அத்துறைக்குள்
அல்லது அத்துறையோடு நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் வண்ணமே
இந்தச் சிறிய தொடக்கம்.

புலம்பெயர் வாழ்வில் நம் கலைகள் வளர்க்கப்படுகின்றனவா? அவை எந்த வகையில்
வளர்க்கப்படுகின்றன? அவற்றில் காலத்திற்கேற்ற, சமுதாய வளர்ச்சிக்கேற்ற மாற்றங்கள்
நிகழ்ந்துள்ளனவா? அந்தக் கலைகளிற்கான ஊடகங்களின் பங்களிப்பென்ன? மக்களின்,
மக்களின் "மாண்புமிகுக்களின்" பங்களிப்பென்ன? ஆதரிக்கிறார்களா? அலட்சியப்-
படுத்துகிறார்களா? மொத்தத்தில் புலம்பெயர் தேசங்களில் கலைஞர்களிற்கு உரிய
அங்கீகாரம் கொடுக்கப்படுகிறதா? அவர்கள் சமுதாயத்தால் தனது எதிரொலி என்ற
எண்ணத்தோடு அரவணைக்கப்படுகிறார்களா?
இத்தனை கேள்விகளிற்கும் விடை நான் தரப் போவதில்லை. நீங்களும், கலைஞர்களும்
உங்களோடு சேர்ந்து நானும் விடைகளை ஆராய்வோம்.

சரி...ஏன் நான் இந்த விடயத்துள் இப்பொழுது நுழைந்தேன். காரணம் என்ன? இருக்கிறது.
"தமிழ் தொலைக்காட்சி இணையத்தில்" நாச்சிமார் கோயிலடி இராஜன் அவர்களின்
வில்லிசை நிகழ்ச்சி ஒன்று சில நாட்களுக்கு முன்பு ஒளிபரப்பானது. உங்களைப் பொறுத்த
மட்டில் அந்த வில்லிசை நிகழ்வு எப்படியோ தெரியாது. ஆனால் என்னைப் போன்ற
இளைஞர்களிற்கு நீண்ட காலத்தின் பின்னர் காணக்கிடைத்த அற்புத நிகழ்வு. கடைசியாக
நான் வில்லிசை பார்த்து மகிழ்ந்தது கொழும்பில் பாடசாலையில் படித்த போது. ஆனால்
வில்லிசை என்றால் ஒன்றில் சினிமாப் பாடல்கள், அல்லது வரலாற்று நிகழ்வுகள் அதுவும்
அல்லாவிடில் புராணக் கதைகள் தான் அதிகம் சொல்ப்பட்டிருக்கிறது. இது எனது
அனுபவத்தில் மட்டும்.

இன்றைய தற்போதைய சூழலையும் சமுதாயத்தின் நிலையையும், கலை வடிவில்
மக்களைச் சென்றடையும் வகையில் தரும் கலைஞர்கள் வெகு குறைவே என்பது எனது கருத்து.
ஈழத் தமிழர்களைப் பொஞத்தமட்டில் அது மெல்ல மாறி வருகினும். சில நேரங்களில்
நாம் தனியே நிகழ்காலமாகப் போராட்டத்தை மட்டுமே கருதுகிறோம் என்றும் எண்ணத்
தோன்றுகிறது. தேசம் தேசியம் தன்னாட்சி எல்லாம் அவசியம்தான். ஆனாலும் இவற்றை
எல்லாம் உரித்துடைய மக்கள் புலம்பெயர்ந்து வாழும் வாழ்க்கையும் கவனிக்கப்படவேண்டியதே.
அந்த வகையில் கலையில், இலக்கியத்தில் இவற்றைப் பிரதிபலிப்பவர்கள் சிலர்.

"துமிழ் தொலைக்காட்சி இணையம்" ஒளிபரப்பிய அந்த நிகழ்ச்சியில் நாச்சிமார் கோயிலடி
இராஜன் அவர்கள் மிகவும் சிறப்பாக புலம்பெயர் வாழ்வின் சீர்கேட்டையும், அவர்கள் வாழும்
சூழலையும் மையப்படுத்தி வில்லிசை வடிவில் தந்திருந்தார். இசைகளின் இடையே கதைகளைச்
சொல்லும்போது அவருடைய அபிநயங்கள் (கையசைவுகள், கண்ணசைவுகள்) எல்லாம்
கதைக்கு மிகவும் பலம்சேர்ப்பனவாக அமைந்திருந்தன. அவற்றோடு தமிழர்களின் சில பழக்க
வழக்கங்களை நையாண்டி பண்ணுவதும், பின்னர் அதனிடையில் தமிழரின் தனித்தன்மை இழக்கா
வண்ணம் அவர்களின் பெருமையைச் சொல்வதும் வரவேற்கத் தக்கதாய் இருந்தது.
இதுதான் இன்றைய தேவை. எத்தனை காலத்திற்குத்தான் இன்னமும் பழம் பெருமைகளைப்
பேசித் திரியப் போகிறோம். இன்று நாம் என்ன செய்கிறோம்? இவற்றையெல்லாம் கலைஞர்கள்
கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

நாச்சிமார் கோயிலடி இராஜன் அவர்கள் போன்ற கலைஞர்களை, தமிழ் இளைஞர்களிற்கு அதிலும்
குறிப்பாகப் புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களிற்கு அறிமுகப்படுத்தி வைக்கவேண்டும். இந்தக்
கலைஞர்கள் மூலம் இப்படியான கலைகளை இன்னும் எப்படிப் புதிதாக மாற்றியமைக்கலாம்,
புதிய தொழில்நுட்பங்களோடு சேர்த்து மக்களைச் சென்றடையக் கூடிய வழிமுறைகள் என்ன
என்பது பற்றி சிந்திக்கத் தொடங்க வேண்டும். எப்போதுமே ஒரே மாதிரி இருந்தால் கலை வாழாது.
கலையென்பது தன்னுள்ளும் தன்னைச்சுற்றியும் மாற்றத்தை உண்டு பண்ணவேண்டும்.
அதற்கு "நாச்சிமார் கோயிலடி இராஜன்" போன்ற கலைஞர்கள் முன்வரவேண்டும். அவர்களிற்கு நமது
ஊடகங்கள் கைகொடுத்து வரவேற்று அரவணைக்க வேண்டும். இங்கு இன்னொரு விடயத்தையும்
சொல்லிவிடுகிறேன். சில "மாணபுமிகுக்கள்" தமிழர் மத்தியில் இருக்கிறார்கள். சிலர் அல்ல பலர்.
இவர்கள் கலைஞர்களையும் கலையையும் வளர விடுவதில்லை. "தமிழைக் கேலிசெய்கிறார்கள்,
தமிழர்களை நையாண்டி செய்கிறார்கள், சமயத்தைப் பழிக்கிறார்கள், எங்களையும் நையாண்டி
செய்கிறார்கள்" என்று இவர்கள் கத்துவார்கள். உண்மையாணவர்களாய் இருந்து உண்மைகளை
ஏற்றுக் கொள்ள மறுப்பார்கள். இவர்களையெல்லாம் ஒருபுறம் தள்ளி வைத்துவிட்டு எம் தமிழ்க்
கலைஞர்களே வாருங்கள், வேகமாக வாருங்கள், தமிழ் வளர்க்க! தமிழ்க் கலை வளர்க்க!

சரி நண்பர்களே... நீங்களும் "தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தில்" நடந்த வில்லிசை நிகழ்ச்சியைப்
பார்த்தீர்களா? உங்கள் கருத்தென்ன? அந்நிகழ்வு பற்றிய உங்கள் விமர்சனங்களை முன்வையுங்கள்.
புலம்பெயர் வாழ்வும் கலையும் பற்றிய உங்கள் கருத்துக்களையும் முன்வையுங்கள். கலைஞர்களை
அரவணைத்துத் தமிழோடு பயணிப்போம்.

நன்றி


- Paranee - 07-10-2003

வணக்கம் அருமையான ஒரு நிகழ்வு அது. அதைப்பற்றி நான் இங்கு விமர்சிக்க இருந்தேன். நேரம் கிடைக்கவில்லை. அதற்குள் நீங்கள் தொடக்கிவிட்டீர்கள். நல்லது.

தமிழ்த்தொகை;காட்சி பார்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்காதபோதும் கோடைகால நிகழ்ச்சிகள் என்று இலவச ஒளிபரப்பை காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதிலும் மகிழ்வான விடயம் என்னவென்றால் உங்களைப்போல நானும் பலவருடங்களின் பின் ஒரு வில்லிசைநிகழ்வை கண்ணுற்றேன். இறுதியாக எத்தனையாவது வருடம் என்று தெரியாது. திரு.சின்னமணி வில்லிசைக்குழுவினரின் நிகழ்வு ஓன்று தாயகத்தில் கண்ணுற்றேன். எனக்கு வில்லுப்பாட்டு என்றால் விருப்பம்.இ அவர்களின் அபிநயங்கள் நகைச்சுவைகள் எல்லாம் கவரக்கூடியவைகள். அந்தவைகயில் பல வருடங்களின் பின் ஒரு தரமான நிகழ்வு ஓன்றை எனக்கு காண சந்தர்ப்பம் அளித்த தமிழ் ஓளி தொலைக்காட்சிக்கு நன்றிகள்.

அருமையான நிகழ்வு என்பதைவிட பயனுள்ள ஒன்றாகவே தோன்றுகின்றது. இன்றைய நடப்பினை இலகுதமிழில் பாமரரும்புரியக்கூடிய முறையில் திரு.ராஜன் அவர்கள் எடுத்தியம்பியிருந்தார். அருமை. அவருடைய அந்த நிகழ்வமைப்பு மிகவும்நேர்த்தியான முறையில் அமைந்திருந்தது. எங்கெங்கே தொய்வு ஏற்படுமோ அங்கெல்லாம் இறுக்கிப்பிடித்து நகைச்சுவைகளை திணித்து கருவினை சிதையாமல் நிகழ்த்தியிருந்தார். முதன்முதலில் அவருடைய நிகழ்வை கண்டிருந்தாலும் அதைப்போல ஓரு நிகழ்வை இதுவரை காணவில்லை என்ற சந்தோசம் இருந்தது.
இன்னும் அவரது கலைப்பணி தொடரவேண்டும். அவர் இதைப்போல இன்னும் பல பல நிகழ்வுகள் நிகழ்த்தவேண்டும். அதை எமது ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து ஒளி ஒலிபரப்பு செய்யவேண்டும்.

நல்லதொரு கருத்தாடல்விடயம் ஆரம்பித்துவைத்த இளைஞனிற்கு நன்றிகள்


- kuruvikal - 07-10-2003

எங்களுக்கு அந்த வில்லிசையைக் காணக்கிடைக்கவில்லை. எனினும் உங்கள் விமர்சனங்களில் இருந்து பார்க்கும் போது நாச்சிமார் கோவிலடி ராஜனின் வில்லிசை தரம் குன்றாத பெருமையை என்றும் தக்கவைத்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. அவரால் யதார்த்த பூர்வமானதும் அதேவேளை சமூகச் சீர்திருத்தங்களை வலியுறுத்துவதாகவும் அமையத்தக்க வில்லிசைகளே மிகவும் ஜனரஞ்சகமாக அமைக்கப் படுவதாக தாயக்கத்தில் வாழும் போது பலர் சொல்லிக் கேட்டிருக்கிறோம்.... நாங்கள் வளரும் காலத்தில் அவருடைய வில்லிசைகள் எமக்குக் கிடையாமல் போனது துரதிஷ்டமே..எனினும் மீண்டும் புலத்தில் அவருடைய படைப்புக்கள் மிளிரத் தொடங்கியுள்ளமை நிச்சயம் கலா ரசிகர்களை மகிழ்விக்கும் என்பது மட்டுமன்றி நல்ல பல சமூக சிந்தனைகளையும் பரப்பி நிக்கும் என்பது திண்ணமே....இப்படியான அருமை பெருமை மிக்க கலைஞர்களின் படைப்புக்கள் என்றும் வாழ்த்தி வரவேற்றுப் பயன் பெறுவோமாக!


- sOliyAn - 07-10-2003

கடந்த சனி பிற்பகல் 5 மணிக்கு முகூர்த்தநேரம் எனும் கதை வில்லிசைக்கப்பட்டது.. ஞாயிறு பகல் 12.00 மணிக்கு மறுஒலிபரப்பானது. தொடர்ந்து பல கதைகள் வாராந்தம் மேற்குறிப்பிட்ட நேரத்தில் ஒலிபரப்பாக உள்ளதாக அறிய முடிகிறது. யாழிணையத்தின் அங்கத்தவர்களான சந்திரவதனா செல்வகுமாரன், சாந்தி ரமேஸ் வவுனியன், இராஜன் முருகவேல் உட்பட வேறும் பல புகலிட எழுத்தாளர்களின் கதைகள் வில்லிசையாக வரவுள்ளதாகவும் அறிய முடிகிறது. Idea


- Mullai - 07-10-2003

எனக்குப் பார்க்கக் கிட்டவில்லை.
வாரம் ஒரு கதை வில்லிசையானால் அது தொடர்கதையன்றோ.
வில்லிசை வேந்தருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். தொடருங்கள்.


- sOliyAn - 07-14-2003

கடந்த ஞாயிறு 13.07.2003 அன்று சாந்தி ரமேஸ் வவுனியனின் 'காசுமரம்" சிறுகதை வில்லிசைக்கப்பட்டது. வாழ்த்துக்கள்.


- sOliyAn - 07-14-2003

Quote:கடந்த சனி பிற்பகல் 5 மணிக்கு முகூர்த்தநேரம் எனும் கதை வில்லிசைக்கப்பட்டது.. ஞாயிறு பகல் 12.00 மணிக்கு மறுஒலிபரப்பானது. தொடர்ந்து பல கதைகள் வாராந்தம் மேற்குறிப்பிட்ட நேரத்தில் ஒலிபரப்பாக உள்ளதாக அறிய முடிகிறது
தவறுக்கு மன்னிக்கவும்.. ஞாயிறு 17.00 மணிக்கும் திங்கள் நண்பகல் 12 மணிக்கு மறுஒலிபரப்பையும் கேட்கலாம்.. இது ஐரோப்பிய நேரமாகும்.


- Paranee - 07-15-2003

தகவலிற்கு நன்றிகள்
நேற்று அந்த நிகழ்வை காணமுடிந்தது. அது முடிவடையும் நேரத்தில்தான் எனக்கு நேரம் கிடைத்து. அருமையாக இருந்தது. மீண்டும் ஒருமுறை திரு.ராஜன் அவர்களிற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும். இன்னும் அவரது நிகழ்வுகள் புலம்பெயர் ஊடககங்களில் மட்டுமல்லாது தாயக ஊடகங்களிலும் இடம்பெறவேண்டும்.
நேற்று அவர் நடாத்திய நிகழ்வின் கதை மிகவும் ஒரு முக்கியமானதாகவே இருக்கின்றது. இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றமுறையில் அவர் அதனை தெரிவுசெய்திருக்கின்றார். அந்த மூலக்கதையின் உடைமையாளர் சாந்திரமேஸ் வவுனியனிற்கும் வாழ்த்துக்கள்

நட்புடன்
பரணீதரன்


- Alai - 07-15-2003

நாச்சிமார் கோவிலடி இராஜனின் பணி தொடர வாழ்த்துக்கள்.


- Alai - 07-15-2003

Karavai Paranee Wrote:தகவலிற்கு நன்றிகள்
நேற்று அந்த நிகழ்வை காணமுடிந்தது. நட்புடன்
பரணீதரன்

பரணி

அங்கு பார்க்க முடிகிறதா?
எந்த வழியில்...?


- TMR - 07-15-2003

திரு இராஐன் அவர்களையும் வில்லுப்பாட்டையும்
Zurich Albisguetli மண்டபத்தில் நேரடியாக பார்த்து மகிழ்ந்தோம் (கறுப்பு ஐீலை நிகழ்வில்)


- Paranee - 07-15-2003

அதுதானே இரண்டு வாரமாக இலவச ஒளிபரப்பு போட்டு வைத்துள்ளார்கள். என்னிடம் இணைப்பு இல்லை. எனது நண்பனின் ருமில் பார்த்தேன்.


- sOliyAn - 07-15-2003

என்ன றஜி.. என்னைப் பார்க்கவில்லையா? அறிமுகப்படுத்தியிருக்கலாம்.. :mrgreen:


- TMR - 07-15-2003

அண்ணா நான் albisguetli இல தான் வேலை செய்றனான் உங்களை கண்டனான் ஆணால் நீங்கள் குலம் அண்ணாவேடை மற்றும் தமிழ் அக்காவோடை கதைச்சுக்கொண்டு நின்றீர்கள் அதானால் இடைஞ்சல் தரவிரும்பவில்லை
பரவாய் இல்லை அடுத்தமுறை கட்டாயம் !!!
உங்களை சந்திக்க முயற்ச்சி செய்வேன்

மேலும் மிகவும் அருமையான நிகழ்ச்சி !!!
நேரில் பார்த்ததை மறக்க முடியாது
Albisguetli மண்டபமே நிறைந்து இருந்தது பார்த்தீங்கள் தானே
(அந்த மண்டபம் நிறைந்தால்1500 பேர் )

அடுத்து எங்கு நிகழ்ச்சி என்று அறியத்தருவீர்களா

மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள்
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

[scroll:ce66293d54]வாழ்த்துக்கள் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> வாழ்த்துக்கள்[/scroll:ce66293d54]


- Guest - 07-16-2003

வணக்கம்
கருத்து எழுத சற்;று பிந்திவிட்டது.
கடந்த சனி ரிரிஎன்னில் எதேச்சையாக வில்லிசை பார்த்தேன்..நானும் ஏதோ கண்ணகி கதையாக்கும் என்று காதைத்தீட்டினால் வந்தது காசுமரம் பற்றிய கதை..

நாங்கள்; குறும்படம் அது இது என விவாதிக்கும்போது அதை வில்லிசையில் ஏற்றி புதுமை செய்துவிட்டார் திரு ராஜன் அவர்கள்.

இன்னும் பலரின் கதைகள் வில்லிசையாகும் என்பது ஒரு நற்செய்தி...

மக்கள் மத்தியில் மேடையில் செய்வதை ஒளிபரப்பினால் இன்னமும் சிறப்பாகவிருக்கும்

ரிரிஎன்னும் தனது பலத்தை காட்டவேண்டிய சந்தர்ப்பம் வருகிறது.

ஆவணியில் சண் hPவி உதயா hPவிஎன்பன ஐரோப்பாவில் களமிறங்குகின்றன என பட்சி சொல்கிறது.


விமர்சனம் - காசுமரம் - இளைஞன் - 07-16-2003

வணக்கம் நண்பர்களே...

தமிழ்த் தொலைகஇகாட்சி இணையத்தில் ஞாயிறன்று 17:00 மணிக்கும், திங்களன்று 12:00 மணிக்கு மறு ஓளிபரப்பாகவும்
நிகழ்ந்த நாச்சிமார் கோவிலடி இராஜுன் வில்லிசைக் குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சி பற்றிய சீறு விமர்சினம் இது.
காசுமரம் என்னும் ஒரு சிறுகதையை மையமாக வைத்து அமைக்கப்பட்ட வில்லிசை நிகழ்வு அது. புலம்பெயர்ந்து வாழும்
ஈழத்தமிழ் சமூகத்தின் வாழ்க்கையையும், அதில் பணத்தின் ஆதிக்கமும் பற்றிய ஒரு அற்புதமான சிறுகதையை வில்லிசைக்கு
ஏற்றபடி தொகுத்தமைத்து, இனிமையான மெட்டோடு கவிமொழியில் மொழிந்து, தமிழ் சிந்திப்பதற்கு வழிசமைத்திருந்தார்கள்.

வில்லிசைபற்றி எனக்கொன்றும் பெரிதாகத் தெரியாதுதான். ஆனாலும் சாதாரண பார்வையாளன் என்னும் வகையில்
என்னைப் பாதித்தவற்றை எழுதுகிறேன். அந்நிகழ்வில் நடுநாயகமாக வீற்றிருந்தார் வில்லிசைப் புலவர் திரு இராஜன்
அவர்கள். அவரைச் சுற்றி மொத்தம் ஐந்து(?) கலைஞர்கள். அவர்களில் ஒருவர் திரு இராஜன் அவர்களின் மகன் என்று
எண்ணுகிறேன். ஒளிப்பதிவுக் கருவியும் அடிக்கடி அவரைச் சுற்றி வருவதாலோ என்னவோ அவ் வில்லிசை நிகழ்வில்
திரு இராஜன் அவர்களைத் தவிர மற்றவர் எவரும் எம்மைப் பாதிக்கவில்லை. அதுதவிர மற்றவர்கள் ஏதோ சோர்ந்துபோய்
இருந்தார்கள். சிலவேளைகளில் வில்லிசைக் கதைகேட்டு அந்த இடத்திலேயே நித்திரை கொண்டுவிடுவார்கள் போலவும்
இருந்தது. இடையிடையே அவர்களும் ஏதோ சொன்னார்கள்தான். ஆனாலும் அந்நிகழ்வுக்கு அவை வலுச்சேர்ப்பனவாக
இல்லை. சூழ இருந்தவர்களில் முக்கியமானவர்கள், திரு இரான் அவர்களிற்கு இடது மற்றும் வலது புறங்களில் இருந்த
இருவருந்தான். அவர்களின் பார்வை நிலத்தைத்தான் அதிகம் பார்த்தன. அதனாலோ என்னவோ கதை சொல்பவருக்கும்
கேட்பவர்களிற்கும் (அருகே இருந்த இருவர்) இடையிலே பெரிய இடைவெளி தோன்றிற்று. வில்லிசைக்கப்பட்ட கதையிற்கு
ஏற்ப அவர்களின் முகபாவங்களில் மாற்றங்கள் இல்லை (திரு இராஜனைத் தவிர). ஒரு கதை சொல்லும்போது அதைக்
கேட்டுக்கொண்டிருக்கும் சிறுபிள்ளை எப்படி வியப்படையுமோ, அதற்கு எப்படியான கேள்விகள் எழுமோ அதுபோன்று
இருந்திருந்தால் நிகழ்வு இன்னமும் நன்றாக இருந்திருக்கும். மொத்தத்தில் வில்லிசைப் புலவரைத் தவிர மற்றவர்களில்
உற்சாகத்தைக் காணமுடியவில்லை. இது பார்வையாளர்களையும் சோர்வடையச் செய்யலாம்.

நகைச்சுவைத்தன்மை குறைவாக இருக்கிறது. இடையிடையே பார்வையாளர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கலாம்.
அருகிலிருப்பவர்கள் சிறுபிள்ளைத்தனமாகக் கேள்வி கேட்பதுவும், கதைசொல்பவர் அதற்கு பதில்சொல்வதுவும் இருந்திருந்தால்
இன்னமும் தூள் கிளப்பியிருக்கும். உதாரணத்திற்கு "அன்பே சிவம்" திரைப்படத்தில் (என்ன சினிமாவிற்குப் போகிறேன் என்று
யோசிக்காதீர்கள். நல்லது எங்கிருந்தாலும் எடுத்துக் கொள்வதில் தவறில்லைத்தானே?) ஒரு தெருக்கூத்து வருகிறது. அதில்
இடம்பெற்ற அம்சங்கள் பெரியவர்களை மட்டுமல்ல இளைஞர்களையும் கவரக் கூடியவை. எனவே வில்லிசை தனியே
பெரியவர்களிற்கு மட்டுந்தானா? இளைஞர்களிற்கு இல்லையா?

அடுத்து, வில்லிசை நிகழ்விற்காக அமைக்கப்பட்டிருந்த மேடை அதன் சுற்றுப்புறம்பற்றிச் சுருக்கமாய்ப் பார்ப்போம்.
என்ன இவன், வில்லிசை பற்றிச் சொல்லவந்துவிட்டு மேடை, சுற்றுப்புறம் என்று உளறுகிறான் என்று எண்ணாதீர்கள்.
மக்களிடம் கருத்தைத் தாங்கிச் செல்லும் ஒவ்வொரு கலைநிகழ்விற்கும் அதன் சுற்றுப்புறச் சூழல் எப்படி அமைந்திருக்கிறது
என்பது மிக அவசியம். சரி... மேடையைப் பொறுத்தவரை அது சரியாகத்தான் இருந்தது. ஆனாலும் மேடையின் பின்புறச்
சூழல்தான் கண்ணை சோர்ந்திடச் செய்தது. பின்புறச் சூழலின் நிறம் கறுப்பு மற்றும் சாம்பல் நிறங்களில் அமைக்கப்பட்டிருந்தது.
பொதுவாகவே கர்நாடக சங்கீதம், பரதாநாட்டியம் போன்ற கலைநிகழ்வுகளில் அதிகம் சாம்பல், கறுப்பு என்னும் சோர்வடையச்
செய்யும் நிறங்கள்தான் பயன்படுத்தப்படுகிறது. அதுவும் பின்பறத்தில் வேறு எந்த உருவமைப்பகளோ இல்லை. ஒவ்வொரு
கதைக்கும் ஏற்றவாறு பின்புறத்தில் காட்சி அமைத்தால் நன்றாக இருக்கும். உதாரணத்திற்கு காசுமரம் வில்லிசை நிகழ்விற்கு
பின்புறத்தில் காசுமரத்தைப் போன்ற உருவம் அமைத்திருந்தால் வெகுவாகப் பார்வையாளர்களைக் கவர்ந்து, வில்லிசை நிகழ்வைத்
தொடர்ந்து பார்க்க ஆர்வத்தைத் தூண்டியிருக்கும். இன்றுதானே கணணி இருக்கிறது. இன்னமும் சிறப்பாகவே செய்யலாம்.
இனிவரும் காலங்களில் பின்புற நிறங்களையோ காட்சிகளையோ தேர்ந்தெடுப்பதிலும் கொஞ்சம் கவனம் செலுத்துதல் நன்று.

மக்களைச் சென்றடைவதற்கு தேவையான நுட்பங்களில் சிறு சிறு குறைகள் இருந்தாலும், வில்லிசை நிகழ்வும் அதில் இடம்
பெற்ற கவித்துவமும், திரு இராஜன் அவர்களின் தனித்துவம்!!!

ஏதோ என் மனசில் பட்டது!
பயனெனில் கொள்க!

நன்றி


- sOliyAn - 07-16-2003

அத்துடன் இன்னொரு குறை.. படத்தொகுப்பில் சில சலனங்கள்.. ஒலியமைப்பும் அவ்வளவு தெளிவாக இல்லை. ஆனால் ஒரு விடயம்.. குறிப்பிட்ட நேரத்துக்குள் நிகழ்ச்சி அமையும்போது.. நகைச்சுவைகளுக்கு அங்கே இடம் இல்லாமல் போய்விடுகிறது என நினைக்கிறேன்.. நகைச்சுவைக்கு இடம் கொடுத்தால்.. இசைக்கு இடமில்லாமல் போகும் அபாயம் உள்ளது.. வில்லிசையின் சுவையே இசைதானே.. அதாவது கிராமிய இசை.. Idea


- Guest - 07-16-2003

நான் சொல்லவந்ததை இளைஞன் சுட்டி சொல்லியிருக்கிறார்..அவர் இளைஞன் அப்படி சொல்லமுடியும்....

சில கலைஞர்களுக்கு மக்கள் முன்னால் இருந்தால்தான் உற்சாகமாக செய்வார்கள்...அதனிலும வில்லுப்பாட்டுக்கு நிச்சயம் பார்வையாளர்கள் முன்னிருத்தல் வேண்டும் இல்லாவிட்டால் பக்கப்பாட்டு சோர்தல் இயற்கையே...


- sethu - 08-12-2003

வில்லிசைகலை ஏன் உருவாகியது


பேதலிப்பு - இளைஞன் - 08-20-2003

வணக்கம் நண்பர்களே...

தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தில் ஒவ்வொரு கிழமைகளும் தவறாமல் ஒளிபரப்பாகும் "நாச்சிமார் கோயிலடி" இராஜன்
குழுவினரின் வில்லிசை நிகழ்வு பற்றி மீண்டும் தொடர்கிறேன். ஞாயிற்றுக்கிழமைகளில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாவதால்
என்னால் உடனடியாகப் பார்க்க முடிவதில்லை. இருந்தாலும் முதல் நிகழ்ச்சியைப் பார்த்து இங்கே என் கருத்தினை எழுதியிருந்தேன்.
அதன் அடிப்படையில் நான் கண்டு களித்த இரண்டாவது நிகழ்ச்சி பற்றிய கருத்து இதோ. நம்மவர் பலரின் கதைகளை
அடித்தளமாகக் கொண்டு வில்லிசை அமைத்து வழங்குகிறார் "நாச்சிமார் கோயிலடி" இராஜன்.

அந்தவகையில் சுதன்ராஜ் அவர்களின் "பேதலிப்பு" கதை தான் இந்த நிகழ்வின் கரு. பேதலிப்பு சாத்திரங்களை, அவற்றின்
பெயராலான மூடங்களையும் மையமாக வைத்து அமைக்கப்பெற்ற கதை. மூடத்தனங்களையெல்லாம் வியாபாரம் ஆக்கி,
உறவுகளைக் கூட உரசிப் பார்க்க முனைந்துள்ள சாத்திரத்தை சாடியிருக்கும் கதை.

இந்தக் கதையினை அழகுற வில்லிசைப் பாவாக்கி சிறந்த கலைஞர்களை தன்னைச் சூழ அமர்த்தி ஒரு விருந்தும், அதனூடே
தமிழர் சிந்தனைக்கு மருந்தும் அளித்திருக்கிறார் "நாச்சிமார் கோயிலடி" இராஜன் அவர்கள். ஏற்கனவே குறிப்பிட்டது போல்
அவரது கையசைவுகளும், முகபாவங்களும், குரலின் மாற்றங்களும் கதைக்கு ஏற்றாற்போல், சொல்லவருகின்ற கருத்தை
வலுப்படுத்துவதாகவும் அமைவது பாராட்டுதற்குரியது.

ஒவ்வொரு முறையும் சிறந்த கதைகளை, அதாவது புலம்பெயர் சமூகத்திக் சீர்கேடுகளையும் சீர்ப்படுத்தல்களையும் மையமாகக்
கொண்ட கதைகளை தனது வில்லிசை நிகழ்வின் தளமாக எடுத்துக்கொள்வது வரவேற்கத்தக்கது. இன்னமும் எத்தனை காலத்துக்குத்தான்
புராணங்களும், பழம்பெருமைகளும் பேசுவது. தற்காலமும் எதிர்காலமும், அதில்வாழ்கின்ற மற்றும் வாழப்போகும் சந்ததியும் தானே
தற்போது நமக்கு அவசியம்.

எனவே இந்த வில்லிசை நிகழ்வுகளை தமிழ்த் தொலைக்காட்சி இணையம் நமக்களிப்பதையிட்டு பெருமைப்படுகிறேன். மீண்டும்
மீண்டும் சொல்கிறேன் நம் கலைஞர்களுக்கு ஆதரவளியுங்கள். நம்மை முன்னேற்றுங்கள். கலைஞர்களே இளைஞர்களின் பார்வையை
உங்கள் பக்கம் திருப்புங்கள். அப்பொழுதுதான் உங்கள் கலைகள் என்றென்றும் நிலைக்கும்.

"நாச்சிமார் கோயிலடி" இராஜன் குழுவினர் இணையம் (internet) சார்ந்த ஒரு கதைக்களத்தை மையமாகக் கொண்டு ஒரு
வில்லிசை நிகழ்வும் செய்திருந்தார்களாம். அதனை என்னால் காணமுடியவில்லை. இருந்தாலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள்
இளஞ் சந்ததியை வழிநடத்த உதவும். இப்படித்தான் வாழ் என்று சொல்வதைக் காட்டிலும், இன்னென்ன முரண்பாடுகள்,
பிரச்சினைகள் இருக்கின்றன, தீமைகள் இருக்கின்றன, நல்லன இருக்கின்றன என்று விளக்குங்கள். தமக்கு சரியான பாதையை
பயனுள்ள பாதையை இளைஞர்கள் கட்டாயமாகத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த வகையில் புதிய தொழில்நுட்பம் சார்ந்து அதன் சாதக
பாதகங்களைக் களமாகக் கொண்டு அமைத்த வில்லிசை நிகழ்வுகள் போல் மேலும் வரவேண்டுமென நாம் எதிர்பார்க்கின்றோம்.
எமது கலைஞர்களை நாம் ஆதரிப்போம், அவர்கள் எம்மை அணுகினால் - எம்மை அரவணைத்தால் - எம்மோடு உறவாடினால்
எம் பிரச்சினைகள் பற்றிப் பேசினால்!!!