Yarl Forum
பாரதியார் கவிதைகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: பாரதியார் கவிதைகள் (/showthread.php?tid=8269)



பாரதியார் கவிதைகள் - தமிழன் - 07-26-2003

சுதந்திரப் பள்ளு களியாட்டம்


ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று
ஆடுவோமே

பார்ப்பானை ஐயரென்ற காலமும்போச்சே - வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும்போச்சே - பிச்சை
ஏற்ப்பாரைப் பணிகின்ற காலமும்போச்சே - நம்மை
ஏய்ப்போருக் கேவல்செய்யுங் காலமும்போச்சே (ஆடுவோமே)

எங்கும் சுதந்திரம் என்பதேபேச்சு - நாம்
எல்லோருஞ் சமமென்ப துறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத்
தரணிக்கெல் லாமெடுத் தோது வோமே (ஆடுவோமே)

எல்லோரு மொன்றென்னுங்க் காலம்வந்ததே - பொய்யும்
ஏமாற்றுந் தொலைகின்ற காலம்வந்ததே - இனி
நல்லோர் பெரியரென்னும் காலம்வந்ததே - கெட்ட
நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே (ஆடுவோமே)

உழவுக்குந் தொழிலுக்கும் வந்தனைசெய்வோம் - வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனைசெய்வோம்
விழலுக்கு நீர்ப்பாய்ச்சி மாயமாட்டோம் - வெறும்
வீணருக் குழைத்துடலம் ஓயமாட்டோம் (ஆடுவோமே)

நாமிருக்கு நாடுனம தென்பதறிந்தோம் - இது
நமக்கே யுரிமையா மென்பதறிந்தோம் - இந்தப்
பூமியி லெவர்க்குமினி அடிமைசெய்யோம் - பரி
பூரணனுக் கேயடிமை செய்துவாழ்வோம். (ஆடுவோமே)

மகாகவி திரு. சு. பாரதி

நன்றி : MSN தமிழர் குழு
http://groups.msn.com/tamilar


- தமிழன் - 07-28-2003

தமிழ்


யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்கும் காணோம்,
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்வீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளவர்போல், இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை,
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை!
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம்; ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்ற வெண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை யில்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

உள்ளத்தில் உண்மையளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளியுண்டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போற் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்குங் குருடரெலாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.

- திரு. சு. பாரதியார்

நன்றி: MSN தமிழர் குழு
http://groups.msn.com/tamilar


- தமிழன் - 07-28-2003

கொடி


தாயின் மணிக்கொடி பாரீர் - அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன்
உச்சியின் மேல்வந்தே மாதர மென்றே
பாங்கி னெழுதித் திகழும் - செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்!

பட்டுத் துகிலென லாமோ? - அதிற்
பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று
மட்டு மிகுந்தடித் தாலும் - அதை
மதியாதவ் வுறுதிகொள் மாணிக்கப் படலம்

இந்திரன் வச்சிர மோர்பால் - அதில்
எங்கள் துருக்க ரிளம்பிறை யோர்பால்
மந்திர நடுவுறத் தோன்றும் - அதை
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ?

கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர் - எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற் குரியரவ் வீரர் - தங்கள்
நல்லுயி ரீந்துங் கொடியினைக் காப்பார்.

அணியணி யாயவர் நிற்கும் - −ந்த
ஆரியக் காட்சியோ ரானந்த மன்றோ?
பணிகள் பொருந்திய மார்பும் - விறற்
பைந்திரு வோங்கும் வடிவமுங் காணீர் (தாயின்)

செந்தமிழ் நாட்டுப் பொருநர் - கொடுந்
தீக்கண் மறவர்கள், சேரன்றன் வீரர்
சிந்தை துணிந்த தெலுங்கர் - தாயின்
சேவடிக் கேபணி செய்திடு துளுவர், (தாயின்)

கன்னட ரொட்டிய ரோடு - போரிற்
காலனு மஞ்சக் கலக்கு மராட்டர்,
பொன்னகர்த் தேவர்க ளப்ப - நிற்கும்
பொற்புடை யாரிந்து ஸ்தானத்து மல்லர்,

பூதல முற்றிடும் வரையும் - அறப்
பேர்விறல் யாவும் மறப்புறும் வரையும்
மாதர்கள் கற்புள்ள வரையும் - பாரில்
மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர்,

பஞ்ச நதத்துப் பிறந்தோர் - முன்னைப்
பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார்,
துஞ்சும் பொழுதினுந் தாயின் - பதத்
தொண்டு நினைத்திடும் வங்கத்தி னோரும்,

சேர்ந்ததைக் காப்பது காணீர் - அவர்
சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!
தேர்ந்தவர் போற்றும் பரத - நிலத்
தேவி துவஜம் சிறப்புற வாழ்!


- sethu - 08-17-2003

நல்ல ஒரு தளம் எப்படி சேருறது.