![]() |
|
எதிர்காலவியல் இலக்கியமும் பிறவகை இலக்கியங்களும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழும் நயமும் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=22) +--- Thread: எதிர்காலவியல் இலக்கியமும் பிறவகை இலக்கியங்களும் (/showthread.php?tid=8036) |
எதிர்காலவியல் இலக்கி - சாமி - 10-05-2003 எதிர்காலவியல் இலக்கியங்கள் இலக்கிய இயல்பு இலக்கிய நோக்கம் இலக்கியப் பயன் காலச் சூழலுக்கு ஏற்ப புதிய புதிய பொருண்மைகள் இலக்கியத்துள் இடங்கொள்கின்றன. அவ்வகையில் இன்று எதிர்காலவியல் படைப்பிலக்கியத்துள்ளும் தடம் பதித்துள்ளது. தூது, உலா, பிள்ளைத்தமிழ் என்பன போன்ற உரைநடையிலக்கியத்துள் பொருணிலை அடிப்படையில் காணும் தனிவகையாக 'எதிர்காலவியல் இலக்கியம்' அமைகின்றது. அதன் அறிமுகமாக இக்கட்டுரை அமைகிறது. எதிர்காலவியல் இலக்கியமும் பிறவகை இலக்கியங்களும் படைப்பாளர் தாம் கண்ட, கேட்ட, அறிந்த, நடந்த, நடக்காத, நிகழ்வுகளைக் கொண்டு தம் புலமையால், கற்பனை வளத்தால் புத்தாக்கங்களைத் தருகின்றனர் என்ற நிலையில் எல்லாவகை யிலக்கியங்களும் ஒன்றுபடுகின்றன. கருத்துகளைப் பயன்படுத்த இவர் கையாளும் மொழிநடை குறிப்பிட்டுச் சுட்டப்பட வேண்டியதாகும். அறிவியல், தொழில்நுட்பப் புரட்சியே எதிர்காலவியலுக்கு அடிப்படையாக் கருதப்படுவதால் அறிவியற் சொற்களும், கலைச்சொற்களும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவை பற்றிய அறிவு இருந்தால்தான் இப்படைப்புகளை முழுமையாகச் சுவைக்க முடியும். பொழுதுபோக்குப் புனைகதைகளை எழுதப்படிக்கத் தெரிந்த கதை ஆர்வலர் அனைவரும் படிப்பதுபோன்று இதனைப் படிக்க இயலுமா என்பது ஐயமே. ரோலர் கோஸ்டர், ஸப்ஸானிக் 75, பாலவினைல் (கி.பி.2084; 1-1-3) போன்று பல சொற்கள் இடையிடுவதைச் சான்றாக்கலாம். படைப்பாளர் சுஜாதா, 'விஞ்ஞானக் கதை' என்பது வேறு ஜாதி. இந்தக் கதைகளை உணர்ந்து கொள்ளக் கொஞ்சம் சிந்தனையை நீங்கள் கூர்மைப்படுத்திக் கொள்ளவேண்டும். மற்றொரு காலத்தில் மற்றொரு சூழ்நிலையில் கதைகள் நடைபெற்றாலும் நாம் அடையாளம் கண்டுகொள்ளக்கூடிய உணர்ச்சிகளையும் அவை சொல்லும், மெலிதான சித்தாந்த தத்துவப் பின்னணிகளும் தென்படும் எனத் தன் தேவன் வருகை, சிறுகதைத் தொகுதி முன்னுரையில் மொழிந்திருப்பதும் சுட்டத்தக்கது. மற்றும் சுஜாதா, ஆய்வாளருக்கு அளித்த பதிலில், 'இவ்வகைப் படைப்புகளுக்கு அடிப்படை நிகழ்கால அறிவியல் மற்ற இயல்களில் செய்யும் ஆராய்ச்சிகளின் எதிர்காலச் சாத்தியக் கூறுகளை எண்ணிப் பார்த்து அது எந்தத் திசையில் செல்லலாம் என்று சிந்திக்கும் 'எதிர்நீட்டலில்' (extrapolation) உள்ள ஆர்வமும் சவாலும் ஆகும். இந்தக் காரியம் அத்தனை எளிதல்ல' என்று இவ்வகைப் படைப்புகளைப் படைப்பதற்கும் தனித்திறமை தேவை என்பதை வலியுறுத்தியுள்ளார். உயர் அறிவியல் அறிவு மிக இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. இங்கு அறிவியல் கதைகள் அனைத்தும் எதிர்காலவியல் இலக்கியமாகிவிட முடியாது என்ற உண்மையையும் குறித்தல் தேவையாகும். அறிவியல் கதைகள் அண்மை அல்லது வெகுதொலைவில் இருக்கும் எதிர்காலம் பற்றிய சிந்தனையை உள்ளடக்கும் போதுதான் அவை எதிர்காலவியல் இலக்கியமாகின்றன. எதிர்காலத்தையடிப்படையாக்கிப் படைக்கப்படும் எவ்வகையிலக்கியமும் இதன்பாற்படும் என்பதும் நவிலற்பாலது. உலா, மடல், பள்ளு, பிள்ளைத்தமிழ் என்பன போன்று 'இவ்வகைக்குரிய பாடுபொருள் இது மட்டுந்தான்' என்ற வரையறை எதிர்காலவியல் இலக்கியத்திற்கு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எதனையும் பேசலாம்; அந்த எதுவும் அறியலோடும் தொழில்நுட்பங்களோடும் இணைந்துரைக்கப்படவேண்டும் என்பது மட்டும் கண்டிப்பாகிறது. காப்பியம், புராண இலக்கியங்களில் காண்கின்ற மீயியற்கை நிகழ்வுகள் போன்று இங்கும் படைப்பாளர் தம் மிகைக் கற்பனைகளை நடக்கக்கூடிய நிகழ்வுகள் எனப் படைக்கின்றனர். அதில் தேவர்களும் மிகையாற்றல் கொண்ட மானிடரும் வியத்தக சாதனைகளைச் செய்ய எதிர்காலவியல் இலக்கியங்களில் அவை, இயல்பு நிலையிலேயே மானிடரால் நிகழ்த்தப்படுகின்றன. இதற்கு அறிவியலின் பன்முக வளர்ச்சி காரணமாக்கப்படுகிறது. எனவேதான் நிகழக்கூடும் எனும் வாய்ப்புக் கூறினைக் கற்பார் பெறமுடிகிறது. சான்றாகச் சந்திரனில் விண்வெளி ஆய்வுக்கூடத்தில் மானிடர் வாழுதல், பிற கோள்களோடு தொடர்பு கொள்ளுதல், சூரிய ஒளியில் பெற்ற மின்சாரத்தால் இரவைப் பகலாக்குதல் (கி.பி.2081) போன்றவற்றைச் சுட்டலாம். ''அறிவியல் சாதனைகளைச் செய்வதற்கு, (இத்தகு) அறிவியல் கதைகள் ஒரு தூண்டுகோலாக இருப்பதுடன் மனித சமுதாயத்தில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அல்லது ஏற்பட வாய்ப்பளிக்கக்கூடிய மாற்றங்களை ஒரு நிழலாக நமக்குக் காட்டியது (காட்டுவது) மிகவும் பயனுள்ளதாகும்'' என்று எதிர்காலவியலறிஞர் ஆ.யோகமூர்த்தி கூறுவது பிற இலக்கியங்களினின்றும் இது தனித்து நிற்பதற்கான மற்றொரு கருத்தை அறிவித்தலாகும். இதனை அவர் தம் 'சுற்றுச்சூழல் எதிர்காலச் சிந்தனை' எனும் நூலில் மிக விரிவாகப் (பக்.80-87) பல சான்றுகள் கொண்டு நிறுவியுள்ளார். மேனாட்டார் அறிவியல் சிந்தனைகள் இவ்வகையிலக்கியங்களுக்கு அடிப்படையாதலும் உண்டு! எதிர்காலவியல் இலக்கியங்கள் எதிர்காலவியல் அடிப்படையில் தமிழில் தோன்றியுள்ள இலக்கியங்களில் எது முதலாவது எனத் தௌ¤வாகக் குறிக்க இயலவில்லை. அறிந்தவரையில் வல்லிக்கண்ணன், 1942 (செப்) நவசக்தி இதழில் படைத்த 'கி.பி.2001'ஐ முதலாவதாகக் கொள்ளலாம். தொடர்ந்து சுஜாதா பல சிறுகதைகளும் (தேவன் வருகை, கம்ப்யூட்டரே கதை சொல்லு) புதினங்களும் (என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ, வாசனை, மஞ்சள் ரத்தம்) படைத்து வளர்த்து வருகிறார். கஸ்தூரி ரங்கன் தினமணிக்கதிரில் எழுதிய 'கி.பி.2081' தொடர்கதையும் இதன் பாற்படுவதே. அவ்வப்போது வார இதழில் ஆர்னிகா நாசர் இவ்வகைச் சிறுகதை படைத்து தனக்கென ஓரிடத்தைத் தக்க வைத்துள்ளார். (பில்லியனில் ஒருவன், ஆனந்த விகடன் 20.11.94) மற்றும் கிருஷ்ணா டாவின்ஸ்கி.....என மிகச் சிலரே இதில் ஈடுபாடு காட்டியுள்ளனர். (''நான் படித்த நாவல்களின் பாதிப்பு சொர்க்கத் தீவில் இல்லவே இல்லை என்று சூடம் அணைத்துச் சத்தியம் பண்ணுவதற்கு நான் தயாராக இல்லை. நிச்சயம் இருக்கிறது. ஹக்ஸ்லியின் போக்கனாவ்ஸ்கி முறையைப் பற்றி ஒரு அத்தியாயத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். லெவின் ஒரு வயது எல்லைக்குப்பின் மக்கள் கொல்லப்படுவதைத் தன் புத்தகத்தில் சொல்லியிருக்கிறார். சுஜாதா; சொர்க்கத்தீவு; முன்னுரை ப.7.) இவ்வகையிலக்கியம் தமிழில் மேலும் சிறப்புறுவதற்கு, நல்ல வாய்ப்பிருப்பதை ஆனந்த விகடனில் வெளிவந்த சிம்புவின் சிரிப்புத் துணுக்குகள் காட்டுகின்றன. அடுத்த நூற்றாண்டில் விமானப் பயணிகள் எண்ணிக்கை உயரும் என்ற செய்தியை எதிர்காலக் கணிப்பில் இவர் வான் வெளியில் விமானங்களின் எண்ணிக்கைப் பெருக்கால் பறவைகள் பறக்க முடியாது திணறுவதாக 'நான் பறந்து ஒருவாரமாகப் போகுது! ஒரே நெருக்கடி.... இனிமே நடந்துதான் போகணும்னு நினைக்கிறேன்' எனும் துணுக்கில் காட்டிச் சிரிக்க வைக்கிறார். பிக்பாக்கெட் கேஸ்தான்! பர்சை எடுத்துட்டு.... மறதியில் பஸ்ஸ§ன்னு நினைச்சுக் குதிச்சுட்டான் என்பதும் மற்றொரு சான்றாகும். பொதுவாக எதிர்காலவியல் இலக்கியம் உரைநடையைக் கையாள்வதே அதன் இயல்புநோக்கில் எளிதாகிறது. எனினும் கவிதையில் ஆங்காங்கே ஒரு சில தோன்றி நம்மை மகிழ்விக்கின்றன. இவற்றால் வடிவ வரையறையும் இவ்விலக்கியத்திற்கு இல்லை என்பதும் புலனாகிறது. பாரத சமுதாயத்தின் ஒருமையை விழைந்த பாரதி, சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம். ........................... காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் (பாரத தேசம்) எனப் பாடி, பிற கவிஞரையும் எதிர்கால நலன் எண்ணிப் பாட வழிகாட்டுகிறார். இங்கு உடுமலை நாராயண கவி எழுதி, என்.எஸ்.கிருஷ்ணன் பாடி மிகவும் புகழ்பெற்ற பாடலென்றும் சுட்டத்தக்கது. விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி மேனாட்டானை விருந்துக் கழைச்சிக் காட்டப்போறேன்டி தஞ்சாவூர் ஏட்டை மிதிச்சு தலைகீழாப் பாடம்படிச்சு பொஞ்சாமி புருஷன் இல்லாம புள்ளையும் குட்டியும் பிறக்கறாப்பல (விஞ்) அஞ்ஞானத்தை அழிக்கப் போறேன்டி அணுசக்தியாலே ஆயுளு விருத்திப் பண்ணப் போறேன்டி ...................... புஞ்சை நிலத்துப் பருத்திச் செடியில புடவை ரவிக்கை வேட்டி காய்க்க பஞ்சைக் கிழவர் தன்னை வாலப்பருவ மாக்கி நாட்டைக் காக்க கைத்திறமையைக் காட்டப் போறேன்டி .......................... பள்ளிக் கூடத்துக்குப் போகாம பிள்ளைகள் பாடம் படிக்க வேணும்........'' எனும் அப்பாடல் கவிஞரின் திறம்பட்ட எதிர்காலச் சிந்தனைகளை புலப்படுத்துகிறது. நகைச்சுவைக்காக எழுதப்பட்ட பாடலாயினும் இதனுள் எதிர்காலவியல் இலக்கிய இயல்பு நன்கு கால் கொண்டிருப்பது பாராட்டத்தக்கது. இன்று பெருஞ் செல்வாக்குடன் திகழும் புதுக்கவிதை வடிவிலும் சில கவிதைகளை இவ்விலக்கியப் பொருண்மையதாக இனம் காண முடிகிறது. சான்றிற்கு மு.மேத்தாவின் நாளை உலக வீதிகளில் / ஊர்வலம் போகும் / ஆயுதங்கள் வீடுகளுக்குள் ஒளிந்தபடி / எட்டிப்பார்க்கும்/ மனிதன்......... (என்னுடைய போதிமரங்கள், ப.28) எனும் கவிதையையும் துறவியின், காற்றில் உடையும் பலூன்கள் எண்பது கோடி / இந்தியர்கள் / என்னமாய் ஏளனப் படுகிறார்கள் / ஐநூறு நாடாளுமன்ற உறுப்பினர்களால்/ அழுக்குத் துணிகளாய் / அரசியல் சட்டங்கள் எப்போது நாம் / வெளுக்கப் போகிறோம்? ................ கையடக்கப்பதிப்பாய் / மாற்றி / இந்தியாவைக் கவர்ந்து செல / கட்சிகளுக்குள்ளே / கடும் மோதல்! ................ இது / இப்படியே நீடித்தால் / எதிர்கால இந்தியன் வாக்குச் சாவடிக்குப் / போக மாட்டான் ஆயுதசாலையைத்தான் / தேடுவான் (ஞாபகப் பூக்கள், பக்.64-66). எனும் கவிதையையும் சுட்டலாம். எதிர்காலவியல் இலக்கிய இயல்பு இன்றைய உலக நடைமுறையிலிருந்து முழுமையாக வேறுபட்ட சூழல்களையும், பழக்கவழக்கங்களையும் கொண்ட சமூகத்தைக் காட்டுவது (ஒன்பதாவது பெண்); எவையேனும் சில கூறுகள் மட்டும் மாறியுள்ளதாகச் சுட்டுவது (சூரியன்) எனும் இருநிலைகளையும் காணமுடிகிறது. அதாவது முற்றிலும் புதிய மனிதர், புதிய வாழ்வியல் என்பது ஒன்று; பழமையும் புதுமையும் கலந்தது மற்றொன்று. முன்னதை அதிவேக மாற்றம் என்றும் பின்னதை மிதவேக மாற்றம் என்றும் குறிப்பிடலாம். இவ்வகை யிலக்கியங்கள் நவிலும் எதிர்காலம் அண்மையில் எதிர்கொள் விருப்ப தொன்றாக (காலயந்திரம்) அல்லது பல நூற்றாண்டுகள் கடந்த தொன்றாக (காலமானவர்) அமையக் காணலாம். இவை தாம் எந்தக் காலத்தைக் கற்பனை செய்கின்றன என்பதை நேரடியாக உணர்த்துகின்றன (நகர்வலம்) அல்லது மிகப் பிற்காலத்திய கதை என்பதை மறைமுகமாக எளிதாகக் கதைப்போக்கில் உணரும் வண்ணம் (அடிமை) காட்டுகின்றன. இவ்வுலகில் தம் வாழ்வில் தாம் காண அல்லது பெற விரும்புவனவற்றை - எதிர்காலத்திலாவது பெறக்கூடும் அல்லது பெற வேண்டுமென எண்ணுவனவற்றையும் இவை கருவாகக் கொள்கின்றன (யயாதி). சுற்றுப்புறம், சூழல், பழக்கவழக்கம் என அனைத்துக் கூறுகளிலும் புதுமையாக்கம் பொலிவுறுவதைக் காட்டிடினும் அடிப்படைத் தேவைகள் இன, சமய வேறுபாடின்றி அனைவருக்கும் தடையின்றி நிறைவு செய்யப்படினும் தனிமனித நிறைவின்மை அமைவது - நிறைவில் நிறைவின்மை கொள்வது பொதுவான ஒன்றாக உணர முடிகிறது (ஒன்பதாவது பெண்). எனவே சமுதாய வெளிப்புற வாழ்வில் வளர்ச்சி, தனிமனித அகநிலை வாழ்வில் வீழ்ச்சி எனும் முரண் இதன் இயல்பாகிறது. மானிட உழைப்பு குறைந்து, இயந்திரமயமாதல் காரணமாகத் தனிமனித உணர்வுகளும், உரிமைகளும் பாதிப்புக்குள்ளாவதும் வெளிப்படையாக உணர்த்தப்படுகிறது (அடிமை). இன்று உலக நாடுகள் சிறப்பான அக்கறை காட்டும் அனைவருக்கும் கல்வி; ஆண் பெண் சமநிலை; வாழ்க்கைத் தர உணர்வு; பொருளாதாரச் சமத்துவம்; மக்கட் தொகை; உலக நாடுகளிடையே அமைதி என்பனவற்றிற்குப் படைப்பாளர் தம் நோக்கில் தரும் தீர்வுகளாகவும் இவ்வகையிலக்கியங்கள் அமைகின்றன. ஆயின் அவையும் முற்றமுழுக்க நிறைவுடையனவல்ல; அவற்றால் புதிய குறைபாடுகள் தோன்றுவதையும் அவற்றிற்குத் தீர்வுகாண வேண்டியுள்ளதையும் (ரூல் நம்பர் 17) நேரடியாக அல்லது மறைமுகமாக உணர்த்துவதைக் காணலாம். எனவே ஒருவகை முரணிலையை இவ்வகையிலக்கியத்தின் பொதுக்கூறாக எண்ணத் தோன்றுகிறது. இன்பக் கனவுலகின் எதிர்நிலையாக அமையும் துன்பக்கனவுலகுக் (Dystopia) கற்பிதத்துடன் ஒருங்கு எண்ணும் வகையிலும் சில அமைதல் (வாசல், ரூல் நம்பர் 17) சுட்டற்பாலது. கதை நிகழ்களன் பரந்து விரிந்து அண்டத்திற்கு அப்பாலும் வேற்றுக் கோள்களுடன் தொடர்புகொண்டு அமைதல் பரவலாகக் காணப்படுகிறது (நகர்வலம்). காண்டப் பிரிவினை யகன்று உலகம் ஒரு குடைக்கீழ் ஒருங்கிணைந்து செயல்படுவதாகக் காட்டலும் பொதுவானதாக அமைகிறது (தமிழாசிரியர்). இதனால் மனித சமுதாயம் ஒன்றே ஒன்றுதான், அதனுள் பிரிவினைகள் இல்லை என்ற ஒருமையுணர்வு மலர்வதாகக் காட்டப்படுகிறது. எனவேதான், 'அறிவியல் சார்ந்த பொதுவுடைமை' (Scientific Communism) என்ற கருத்தும் எதிர்காலவியல் பற்றி வழங்கப்படுகிறது. இன்றைய மனிதனின் நிலையிலிருந்து மாறுபட்டு நாளைய மனிதன் பெறப்போகும் வாழ்க்கை வசதி குறித்த வியப்பும், ஒருவகை அடிமைநிலை குறித்த இரக்கமும், இன்றைய தவறுகள் நாளைய சமூகத்தை எங்ஙனமெல்லாம் சீர்குலைக்கக்கூடும் எனும் எச்சரிக்கை கலந்த அச்சமும் (ஒன்பதாவது பெண்) இவ்வகைப் படைப்புகளில் எதிரொலிக்கின்றன. கதையிலக்கிய உத்திகள் இங்கும் மேற்கொளப்படினும், உவமை, உருவகம், தற்குறிப்பேற்றம் போன்ற இலக்கிய அணிகளை விட கணினி, மின்னணுக் கருவிகள், தானியங்கிகள் போன்ற தொழில் நுட்பக் கருவிகளும் அவற்றின் செயற்பாடுகளுமே கதைக்களனில், போக்கில் ஆட்சி செலுத்துகின்றன. (சுஜாதாவின் 'தேவன் வருகை' சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகளை அடைப்புக் குறியுள் இருக்கும் பெயர்கள் சுட்டும்.) எதிர்காலவியல் இலக்கிய நோக்கம் புதிய புதிய இலக்கிய உத்திகளைக் கொணர விரும்பும் படைப்பாளரின் புதுமை விளைவே இதன் தோற்றத்திற்கும் அடிப்படை. படைப்பாளர் காண விரும்பும் சமுதாயச் சீர்திருத்தத்திற்கும், கனவு வெளிப்பாட்டிற்கும் இவ்வகை நற்களனாகிறது. எதிர்காலவியல் இலக்கியப் பயன் தமிழிலக்கிய வரலாற்றில், வளர்ச்சியில் புதியதொரு இலக்கிய வகை வரவேற்கத்தக்க நிலையில் அமைந்துள்ளது. பொழுதுபோக்கிற்காகச் சிறுகதை, புதினம் எனப் படிக்கும் எளியோர்க்கும், பிறர்க்கும் அறிவியல் வளர்ச்சியை, பயனை எளிய முறையில் விளக்கிச் செல்லும் ஊடகமாக இவ்விலக்கிய வகை பெரும் பயனுடைத்தாகிறது. வெகுவிரைவில் வரவிருக்கும் இருபத்தோராம் நூற்றாண்டை, அறிவியல் யுகமாக எதிர்காலவியலாளர் கருதுவதால் அதற்கேற்ப இன்றைய மக்கட் சமூகத்தைத் தயார் செய்யும் நிலையிலும் இவை பங்கேற்கின்றன எனலாம். நிகழ்கால இட, இனக் கலவரங்கள், அணு ஆயுதப் போர், வறுமை போன்ற சிக்கல்களால் தம் வழித்தோன்றல்கள் பெறப்போகும் அவலம் குறித்த அச்சம், எச்சரிக்கை என்பன தற்காலத்தவர்க்குத் தம் தவறுகளைத் திருத்திக் கொள்வதற்குரிய வாய்ப்பாகவும் பயன்படக்கூடும். இன்று தளர்நடை இட்டுக் கொண்டிருக்கும் 'எதிர்காலவியல் இலக்கியம்' மேலும் வளம் பெறுவதற்குரிய சூழல், தென்படுகிறது. இவ்வகைக் கதை எழுத்தாளர் எண்ணிக்கையும் பெருக இடமுண்டு. - முனைவர் ச.சிவகாமி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தரமணி, சென்னை-113. நன்றி: அம்பலம் |