Yarl Forum
The Hindu - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: The Hindu (/showthread.php?tid=7840)



The Hindu - yarl - 11-08-2003

thatstamil.com

ஜெ. தோல்வி அடைவார்: என்.ராம் ஆவேசம்

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா தனது செயல்களில் நிச்சயம் தோல்வி அடைவார். அவரது சவாலை சந்திக்க இந்து நாளிதழ் தயாராக இருக்கிறது என்று இந்து நாளிதழின் தலைமை ஆசிரியர் என்.ராம் மிகவும் ஆவேசமாக கூறியுள்ளார்.


இந்து பத்திரிக்கை அலுவலகத்திற்குள் புகுந்து போலீஸார் தேடுதல்வேட்டை நடத்தி விட்டுச் சென்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த என்.ராம், இது என்ன விளையாட்டு? எதற்காக காவல்துறை அதிகாரிகள் அத்துமீறி அலுவலகத்திற்குள் நுழைந்தார்கள்? யார் அவர்களை ஏவி விட்டது?

ஒருவரைக் கைது செய்ய வேண்டும் என்றால் என்ன வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெளிவாகவே கூறியுள்ளது. அது கூடவா காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரியாது?

இங்கே கையை வீசிக் கொண்டு சில அதிகாரிகள் வந்தனர். கைது செய்ய வந்ததாகக் கூறினர். வாரண்ட் எங்கே என எனது நிருபர்கள் கேட்டபோது, வியர்த்து விறுவிறுத்துப் போய் பேயடித்த முகத்துடன் திரும்பி ஓடினார்கள்.

தலைமை நிருபர் ஜெயந்த்தின் வீட்டுக்குச் சென்று அவரது மனைவியை மிரட்டியுள்ளனர். பெட்ரூம் எங்கே உள்ளது, அதைத் திறந்து காட்டுங்கள் என்று அவரிடம் அநாகரிகமாக பேசியுள்ளனர். ஜெயலலிதா ஆட்சியில் போலீஸ் அநாகரீகம் உச்சத்தை அடைந்துவிட்டது.

இந்த தவறான செயலுக்குக் காரணமானவர்கள் கண்டிப்பாக அதற்கான விலையைக் கொடுத்தே ஆக வேண்டும். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் புகார் செய்யவுள்ளோம். இதை சட்டரீதியில் இந்து சந்திக்கும். யாருக்கும் எதற்காகவும் பயப்பட மாட்டோம்.

அரசிடம் எந்தவித முறையீட்டையும் செய்யப் போவதில்லை. நீதிமன்றத்தை அணுகுவோம். அதேபோல முன் ஜாமீன் கேட்கவும் போவதில்லை. அவர்கள் கைது செய்யட்டும், என்னதான் செய்யப் போகிறார்கள் என்பதையும் பார்ப்போம். இந்த விளையாட்டுக்கு நானும் தயார் என்றார்


- சாமி - 11-15-2003

எஸ்.பழனிவேலு, ஆழ்வார்பேட்டை, சென்னையிலிருந்து எழுதுகிறார்: ஹிந்து நாளிதழின் செய்தியாளர்கள் ஐந்து பேரை உரிமை மீறல் பிரச்னையில் 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டது தமிழக அரசு. இது, ஜனநாயக விரோத எதேச்சதிகார போக்கு என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், இவற்றை முன்னின்று எதிர்த்து குரல் கொடுக்கும் தி.மு.க., மற்றும் பல அரசியல் கட்சிகளின் லட்சணத்தையும், பத்திரிகையாளர்களின் அணுகுமுறையும் நாம் கவனிக்க வேண்டும்!

எம்.ஜி.ஆர்., மறைவிற்கு பிறகு ஆட்சிக்கு வந்த தி.மு.க., தனது ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா ஒருமுறை பாண்டிச்சேரியில் இருந்து சென்னை திரும்பிய பொழுது ஒரு வாகன விபத்தில் சிக்கியதையும், அந்த வாகன விபத்து தமிழக சரித்திரத்தில் இல்லாத அளவில் விரைவாக தீர்த்து வைத்ததையும் எவராலும் மறந்திருக்க முடியாது.

அப்பொழுது, ஜெயலலிதா வந்த காரை மோதிய லாரியில் தி.மு.க., கொடி வரையப்பட்டு இருந்ததை படம் பிடித்து வெளியிட்ட ஒரே காரணத்திற்காக, தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வெளியீட்டாளர் லட்சுமிபதி மீதும் ஒரு வெள்ளிக்கிழமை மாலை வழக்குப் பதிவு செய்து அப்பொழுது தான் சனி, ஞாயிறு ஜாமீன் பெற முடியாமல் சிறையில் தள்ள முடியும் என்பதால், அன்றே கைது செய்ய, பகீரத பிரயத்தனம் செய்த தி.மு.க., தலைவர் தான் இன்று பத்திரிகை சுதந்திரத்திற்காக பாகாய் உருகுகிறார்.

இதே ஹிந்து பத்திரிகை மற்றும் தினமலர் இதழ் மீது ஜாதி வாரி துவேஷத்தையும், "பெட்டி வாங்கி விட்டனர்' என்றும், அவதுõறுகளை கூசாமல் அள்ளி விட்டவருமான தி.மு.க., தலைவர் இன்று எதிர்ப்பு அணியில் முதலாவதாக இருக்கிறார்.

இவருடைய மகனின் துõண்டுதலினால் மதுரை தினமலர் எத்தனை முறை தாக்கப்பட்டது. அப்பொழுதெல்லாம் இவருடைய பத்திரிகை சுதந்திரம் என்பது எங்கு சென்றிருந்தது?

தனது ஆட்சிக் காலத்தின் சாதனை ஊழலான போபர்ஸ் பற்றி புலனாய்வு செய்து தொடர்ந்து செய்தி வெளி வருவதை தடுக்க ஒரு தணிக்கையை கொண்டு வருவது பற்றி சட்டமியற்ற முயன்ற ராஜிவ்காந்தியின் காங்கிரசார் இன்று பதறிப் போய் ஓடோடி வருகின்றனர்.

தனது கட்சியை இனிமேலும் தொடர்ந்து விமர்சித்தால், தமிழ்நாட்டில் அப்பத்திரிகை வெளிவர முடியாமல் செய்து, அதனை நடுரோட்டில் கொளுத்துவோம் என பகிரங்க மிரட்டல் விடுத்த பா.ம.க., இன்று பத்திரிகைக்காக குரல் கொடுக்கிறது.

இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து ஜெயலலிதாவின் உருவ பொம்மையை ஒரு முக்கிய சாலையின் மையத்தில் வைத்து டில்லி பத்திரிகையாளர்கள் எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அந்த நிகழ்ச்சியை "டிவி'யில் பார்த்த போது, கண்ணுக்கு எட்டிய துõரம் வரையில் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்திருந்தது.

ஐயா பத்திரிகையாளர்களே... உங்கள் பத்திரிகையில் ஒரு வரி செய்தியில் தெரிவிக்க முடியாததையா இந்த ஆர்ப்பாட்டம் உங்கள் கோபத்தை மக்களிடம் தெரிவிக்கும்?

இன்று முதலை கண்ணீர் வடிக்கும் அரசியல் வியாதிகளை மன்னிக்கவும் அரசியல்வாதிகளை புறந்தள்ளுங்கள்; அவர்களுடைய ஆதரவை வெளிப்படையாக நிராகரியுங்கள். இன்று உங்களின் பிரச்னையில் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள உங்களிடம் இருப்பவர்கள், நாளை எதிரணியில் நின்று உங்களை துõற்றவும் தயங்க மாட்டார்கள். உங்கள் கருத்தை உங்கள் பணியின் மூலம் வெளிப்படுத்துங்கள். உங்கள் எழுத்து லட்சோப லட்சம் மக்களின் குரலாக தானாக மாறுவதைக் காண்பீர்கள்.

நன்றி: தினமலர்