Yarl Forum
கோலிவுட்டும் இயக்குநர் சினிமாவும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: கோலிவுட்டும் இயக்குநர் சினிமாவும் (/showthread.php?tid=7624)



கோலிவுட்டும் இயக்குந - சாமி - 01-05-2004

கோலிவுட்டும் இயக்குநர் சினிமாவும்
பிதாமகன் இயற்கை மற்றும்
மீடியா முன் வைக்கும் சில விஷயங்கள்
-----------------------------------------------------
க்ருஷ்ணா

இரண்டு படங்களுமே தீபாவளி ரீலிஸ¤க்கு தயாராய் இருந்தது. ப்ரீவியூஷோ, பத்திரிகையாளர் காட்சி எல்லாமே தீபாவளி நாளை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டன. ஆனால் ஒரு படம் தீபாவளி அன்று வெளியானது. மற்றொன்று வெளிவர முடியாமல் போனது. அதேசமயம் இரண்டு படத்தின் இயக்குநர்களுமே அந்தந்த அளவில் மீடியாவின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார்கள். படம் வெளியானதும் பாலாவை மீடியா அண்ணாந்து பார்த்து சிலாகித்தது. சற்று தாமதமாக வெளியான மற்றொரு படத்தின் இயக்கம் கவனிக்கத்தக்க ஒன்று என்ற அளவில் பாராட்டப்பட்டது. ஆக இரண்டு படங்களுமே வழக்கமான தமிழ் சினிமா சூழலில் இருந்து ஏதோ ஒன்றில் வித்தியாசப்பட்டிருப்பதை தமிழ் மீடியாக்கள் அடையாளம் கண்டு கொண்டு அதை அடி கோடிட்டு காட்டி உயர்த்திப் பிடிப்பது ஆரோக்யமான விஷயம் தான். அதோடு கூட, மீடியா இரண்டு படங்களிலும் எதையெல்லாம் முக்கியமாக கருதியது, எதையெல்லாம் கண்டு கொள்ளாமல் விட்டது - அந்தந்த மீடியாவின் அளவு கோல் சார்ந்தது - என்பது மிக முக்கியமான விஷயம்.

ஆக இதில் நடத்தப்போகிற உரையாடல், இரண்டு சினிமாக்களின் விமர்சனம் மட்டும் அல்ல. இரண்டு இயக்குநர்களின் சினிமா பார்வை எப்படி என்பது மட்டும் அல்ல, இவர்களின் சமூகப்புரிதல் எது என்பது மட்டும் அல்ல, சினிமா ஆளுமையில் எதையெல்லாம் தொட்டு இருக்கிறார்கள் என்பது பற்றியும் மட்டுமல்ல. மாறாக கோலிவுட்டின் இயக்குநர் அந்தஸ்து என்கிற புள்ளியில் இருந்து இந்த உரையாடல் தொடங்குகிறது. எப்படிப்பார்த்தாலும் இந்த புள்ளி தான் மிக முக்கியமானது. இந்த இடத்தின் அந்தஸ்தை இழந்த இயக்குநர்கள் - ஜாம்பவான்கள் எல்லாம் மறுபடியும் இந்த இடத்தை தொடுவதற்கே சிரமப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில் இருந்து வெளியேறி இதற்கு மாறாக எதுவும் இன்று வரை சாதித்து விடவுமில்லை.

விதிவிலக்குகள் என்று யாரேனும் யாரையேனும் உணர்ந்தால், எப்படி என்பதை தெளிவுபடுத்தவும் - கூடவே நல்ல சினிமா என்பது மனதுக்குள் மட்டும் ஓட்டி பார்த்துக் கொள்வது அல்ல, வியாபாரம் என்பது நவீன யுகத்தின் மற்றும் இயந்திரத்தனமான கண்டுபிடிப்பல்ல என்கிற ஆழ்ந்த புரிதலோடு தெரியப்படுத்தவும்.

பாலாவின் பிதாமகனில் இருந்து உரையாடல் தொடங்குகிறது. உண்மையில் இது பாலாவின் பிதாமகன் தானா? என்ற ஒரு கேள்வி எழுப்பப்படுமானால் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து விக்ரம், சூர்யாவின் பிதாமகன் என்று தான் பதில் வரும். பிதாமகனுக்கு முந்தைய விக்ரமின் படம் வெள்ளி விழா கொண்டாடியது. சூர்யாவின் முந்தைய படம் நூறு நாட்களைத் தொட்டது. அது தான் பாலாவின் பிதாமகனை சொன்ன தேதியில் வெளியிட முடிந்ததின் முக்கிய முதல் காரணம்.
இதை தயாரிப்பாளரும், விநியோகஸ்தர்களும் ஏன் பாலாவும் கூட நிச்சயம் மறுக்க மாட்டார்கள். அப்படியானால் அது எப்படி பாலாவின் பிதாமகனானது என்பதில் தான் பாலா இருக்கிறார். விக்ரம், சூர்யா, லைலா, சிம்ரன், கருணாஸ், லொக்கேஸன், மேக்கப், ஒளிப்பதிவு என்று எல்லாவற்றையும் தாண்டி பிதாமகன் பாலாவுக்கு மட்டுமே சாத்தியமானதாய் எதன் அடிப்படையில் மீடியா நம்பியது - சில பார்வையாளர்கள், நல்ல சினிமா விரும்பிகள், சினிமா கனவுகளுடன் இருப்பவர்கள் என்று இந்த பட்டியல் நீளும். இதன் ரகசியம் முற்றிலும் முழுக்க பாலாவுக்கு தெரியும். அது வியாபரம் சார்ந்தது, தனி மனித ஆளுமை மற்றும் ஒரு விஷயத்தின் மாற்று பார்வையின் வெற்றி சூட்சுமம் சார்ந்தது.

நல்ல சினிமா விரும்பிகள் சிம்ரனின் தொப்புள் காட்டாததைத்தான் சிலாகித்துக் கொண்டிருப் பார்கள். பாலாவின் படத்துக்கு சிம்ரன் தேவைப்பட்டதை உணரமாட்டார்கள், அல்லது உணர்ந்தாலும் வியாரத்துக்கு என்ன செய்ய முடியும் என்று அடங்கி விடுவார்கள்.

ஆனால் சிம்ரனின் தொப்புளை நான் காட்டவில்லை என்று பாலா வாயைத்திறந்து பேசாமல் பார்வையாளரை உணர வைத்ததில் தான் பாலாவின் ஆளுமையும் தொழில்நுட்பமும் ஒருங்கிணைகிறது. 'அந்த கதம்ப பாடல் மற்றும் சிம்ரனின் உடை' ஒரு முறை யோசித்துக் கொள்ளுங்கள்.

இங்கு TV கேள்வி மாதிரி ஒரு கேள்வி - சும்மா விளையாட்டுக்குத்தான்.
சிம்ரனின் உடை என்ன?
பேண்ட் சர்ட் - என்பது தான் பதில் என்றால் நாம் தோற்றுப்போவோம். பாலா ஜெயித்து விட்டார். உண்மையில் இந்த சூழலில் பாலா தான் ஜெயித்து விட்டார்.

தொப்புளுக்கு மேல் வரையான வெளிர் நிற சர்ட், தொப்புளை மறைத்து 'இன்' செய்யப்பட்டிருக்கும் கருப்பு நிற பனியன் அப்புறம் பேண்ட். இது தான் சிம்ரனின் உடை வடிவ மைப்பு. நீங்கள் தொப்புள் பிரதேசத்தைப் பார்த்தீர்கள் - தொப்புளை அல்ல.
இதில் மறைந்திருக்கும் சித்து விளையாட்டு தான் சித்தன். ஏன் பிதாமகன் என்கிற மொத்தப்படமும். ஏனென்றால் பாலாவின் 'உருட்டு' அப்படி. இந்த 'உருட்டை' புரிந்து கொண்டால் இயற்கை படத்தில் குறளிவித்தை காட்டும் இடத்தில் 'மருது' ரத்தம் கக்கி விழுந்து அடிக்கும் லூட்டியை புரிந்து கொள்ள முடியும். இல்லையென்றால் பாலாவின் உருட்டில் பணத்தையும் பறி கொடுத்து அதன் மேல் காதலும் கொள்ள வேண்டியது தான்.

கவனிக்க. இங்கு சித்து விளையாட்டு என்பது தரக்குறைவான அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. அது வாழ்வியல் சார்ந்த ஒரு கலை. அதை புரிந்து கொண்டு பார்க்கும் போது தான் 'உருட்டின்' நேர்த்தி புரியும். நேர்த்தியான உருட்டு என்பதாலயே உருட்டின் நோக்கமும் பயனும் நேர்மையானது என்றாகிவிடாது. மீடியாவும் நல்ல சினிமா விரும்பிகளும் இந்த உருட்டில் தான் வீழ்ந்தார்கள். ஒரு ஹீரோவை அழுக்காய் காண்பித்தாலே போதும் அது வெகுஜன ரசனையில் இருந்து விலகிய ஒன்றாக மீடியா அர்த்தப்படுத்திக் கொள்ளும். அப் போதைய ட்ரண்டுக்கு அல்லது தனது தேவைக்கு ஏற்றபடி புகழ்ந்தும் அல்லது கேலியாகவும் சித்தரிக்கத் தொடங்கிவிடும். ஏனென்றால் மீடியாவுக்கு எப்பொழுதுமே ஒரு எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் தேவையாக இருக்கிறது. விநியோகஸ்தர்களைவிட சினிமாவை நம்பி தொழில் நடத்திக் கொண்டிருப்பது நமது மீடியாக்கள் தான்.

ஆனால் அழுக்காய் நடித்த ஹீரோவுக்குத்தான் தெரியும் இந்தப் படத்தின் ஹீரோயிச சாத்தியப்பாடுகள் என்னென்ன என்பதும், சாமி மற்றும் சித்தனுக்கான ஒற்றுமை வேற்றுமைகள் என்னென்ன என்பதும். சாமியில் தர்மத்தின் வாழ்வுதனை கவ்விய பெருமாள் பிச்சையை தன்னந்தனி ஆளாய் யாருமற்ற இடத்தில் விக்ரம் சுட்டுக் கொன்றார். இந்த படத்தில் அது போன்ற ஒருவனின் தொண்டை குழியை கவ்விப்பிடித்து கடித்து துப்பியிருக்கிறார். மற்றபடி விக்ரமின் வார்த்தைகளில் சொல்வதென்றால் இரண்டுக்கு மான உழைப்பு ஒன்றுதான்.

இந்தப் புரிதலில் இருந்து பிதாமகனின் கதைக்குள் சென்றால் கடைசியில் மிஞ்சுவது இதை அது கவ்வியதும் அதை இது கவ்வியதையும் தாண்டி வேறிருக்காது. ஆனால் அப்படி ஒன்றை ஒன்று மாற்றி கவ்விக் கொள்வதற்கான அடிப்படை முரண் தளம் கூட பிதாமகனில் கிடையாது. எல்லாமுமே நடிப்பின் மூலமும் அழுத்தமான காட்சி அமைப்பின் மூலமும் மட்டுமே ஒன்றுக்கொன்று உறவுடையதாக சித்தரிக்க முற்படுகிறது. அடிப்படையில் இந்த படத்தின் திரைக்கதை ஒரு உயிரற்ற சடலம் போல் அப்படியே கிடக்கிறது. அதை தூக்கி நிறுத்துவதற்கு, படத்தின் இறுதிக்காட்சியில் சித்தன் வில்லனோடு போடும் சண்டையை பாலா திரைக்கதையோடு போட்டிருக்கிறார். இது அதிகப்படியான கருத்து என்று யாரேனும் கருதினால் இப் படத்தின் திரைக்கதை நேர்த்தி பற்றி எழுதி அனுப்பவும்

திரைக்கதையில் தோற்ற எந்த படமும் ஒரு சினிமாவாக முழுமையான வெற்றியை அடைந்ததில்லை. இந்த ஒட்டு மொத்தப் படத்தினையும் ஏன் எதற்கு என்று கேள்விக்குட்படுத்தினால் ஒரு சாராசரி தமிழ் சினிமாவின் அத்தனை அலட்சியமும் இந்த படத்தில் அப்படி அப்படியே இருக்கும். சின்னதம்பி பிரபு கேலிக்குள்ளாக்கப்பட்டது போல் சித்தனைப் பார்த்து எந்த மீடியாவாவது கேள்வி எழுப்பியதா என்று தெரியவில்லை. ஆனால் படம் வெளியான இரண்டாம் நாள் ஒரு சராசரி பார்வையாளன் இந்தக் கேள்வியை முன் வைத்தான். இந்தக் கேள்வி தவறானதா? அல்லது புத்திசாலித்தனமானதா? இரண்டும் இல்லை. சில இயல்பு மீறிய செயல்களை சினிமா என்கிற அளவில் பார்வையாளன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறான். சில அற்புதமான கணங்களுடன் தற்காலிகமாக உறவு ஏற்படுத்திக் கொள்வதின் வெளிப்பாடு அது. ஆனால் அதே சமயம் அழுக்கான அவலமான கணங்களில் மிகுந்த இயல்புத் தன்மையோடே பார்வையாளன் உறவு கொள்ள விரும்புகிறான். இந்த உணர்வு இந்தப் படத்தில் பொய்த்துப் போனதின் வெளிப்பாடு தான், திரும்பத் திரும்ப ஒரே படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களை இப்படம் இழந்தற்கான காரணமாக இருக்க முடியும். அவர்களது அபிமான நட்சத்திரங்கள் இது மாதிரியான படங்களில் உயிரைக் கொடுத்து நடித்திருந்தாலும் பார்வையாளன் அந்த நட்சத்திரத்தின் அடுத்தப்படத்திற்கு ஆயத்தமாகி விடுவான்.

அடுத்தது இந்த படம் விளிம்புநிலை மனிதர்களை முக்கிய பாத்திரமாக்கி இருப்பதாக ஒரு தோற்றம் கொடுப்பது. இது இன்னும் சோகம். நந்தாவில் கருணாஸ் செய்த பாத்திரத்தின் நீட்சிதான் பிதாமகனின் சக்தி பாத்திரம். சில ஹீரோயிஸ அம்சங்களுடன் உயர்வு பெற்றிருக்கிறது. உண்மையில் இந்தப் படத்தின் மிகப் பெரிய சிறப்பு அம்சம் சக்தி பாத்திரம். பாலா விரும்பியதை சூர்யாவிடம் பெற்றிருகிறார். அதே சமயம் அந்த பாத்திரத்துக்கான காதலை வளர்த்தெடுப்பதில் உள்ள சிரமத்தை லைலாவின் கார்டூனிக் பிகேவியர் வெளிப்பாட்டின் மூலம் பாலா தாண்டி வருகிறார். தனது திரைக்கதையின் பலத்தில் அல்ல. கஞ்சாவிற்கும் பெண். இந்த பாத்திர இயல்பு கெடவே இல்லை. க்ளைமாக்ஸ் அழுத்தத்திற்காக பாலாவுக்கு தேவைப்பட்டபோது, அந்த பாத்திரமும் துடப்பக்கட்டையை தூக்கிக் கொண்டு பத்திரகாளி வேஷம் கொள்கிறது - நாயை அடிப்பது போல் - உண்மையில் இது ஒரு தேவர் ·பிலிம்ஸ் கதை தான் போலும். காட்டில் இருந்து தப்பி ஊருக்குள் வந்த ஒரு நாய். ஒரு வேளை சோறு போட்டவரின் மேல் விசுவாசம் கொள்கிறது. தனது பயிற்சியாளரின் மீது மிகுந்த நட்பு கொள்கிறது. தனது பயிற்சியாளர் கொலை செய்யப்பட்டவுடன் அழக் கூட முடியாமல் நின்றபடி துடப்பக்கட்டையால் அடிவாங்குகிறது. இறுதியாக தனது பயிற்சியாளரின் கொலைக்குப்பழி வாங்கவும், தனது நட்பின் ஆழத்தை நிருபிக்கவும் அந்த வயதான வில்லனை கடித்து குதறிவிட்டு காட்டிற்கே திரும்புகிறது.

இப்பொழுது வெட்டியான் என்கிற விளிம்பு நிலை மனிதனுக்கு வருவோம். சமூகத்தின் மிக முக்கியமான அங்கம். சுடுகாட்டில் பிறந்து வெட்டியானாக மாறியவர்கள் அல்ல. குடும்பம் குழந்தை என்று எல்லாரும் போல மனித வாழ்கை வாழ்பவர்கள் தான். சித்தனை வளர்த்தவருக்கு வேண்டுமானால் குடும்பம் இல்லாதிருந்திருக்கலாம். ஆனால் தனி நபராக ஒரு கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவம் பார்க்க முடிந்த வாழ்வியல் பக்குவம் கொண்டவர். அப்படி ஒருவர் ஒரு நாயைக் கூட தோழமையோடு தான் வளர்த்திருப் பார். ஒரு மனிதனை நாயாக அல்ல.

தமிழ் சினிமாவில் டாக்டர் கேரக்டர் என்கிற வழக்கமான அளவில் தான் விக்ரமின் வெட்டியான் கேரக்டர். அதனால் தான் அவர் தனது கதாபாத்திர மேனரிஷங்களுக்கு டிஸ்கவரி சேனலை நாட வேண்டி வந்தது. ஒரு நாளேனும் ஒரு சுடுகாட்டில் ஒரு வெட்டியானோடு, அவன் குடும்பக் கதைகளைக் கேட்டுக் கொண்டு, அவன் தொழிலையும் கவனித்திருப்பார் என்றால் பிதாமகனின் தலையெழுத்து மாறியிருக்கும். பாலாவிற்கு இந்த விஷயம் தெரியாது என்றால் அது நகைப்பிற்குரியது. எல்லாவற்றிற்கும் மேலாக கோலிவுட்டின் கூட்டல் கழித்தல் வாய்பாட்டின் அடிப்படையில் படம் இருக்க வேண்டும் ஆனால் அது கோடம்பாக்கம் படமாக அறியப்படக் கூடாது. இந்த புள்ளியில் மையம் கொண்டது தான் பிதாமகன். இதைத்தாண்டி இதில் ஏதேனும் தத்துவ விச்சாரம், உளவியல் கூறு என்று நம்பினார்கள் என்றால் - பாலாவின் உருட்டு அப்படி. எல்லா செயலுக்கும் ஒரு அரசியல் உண்டு. பிதாமகனும் அப்படித்தான். ஆனால் இந்தப் படத்தின் அரசியல் சற்று வித்தியாசமானது. சமூகம், கொள்கை, தத்துவம், ஆண், பெண் என்று எல்லாம் தாண்டி இந்த படத்தில் இருக்கும் அரசியல், வெறும் கோலிவுட்டில் பாலாவின் இருப்பு சார்ந்த அரசியல் மட்டுமே. அது தான் முன் பாதி சித்தன் நான், பின் பாதி சித்தன் நீங்கள் என்று பாலாவை பேட்டி கொடுக்க வைக்கிறது.

இயற்கை படத்தின் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் வேறு மாதிரி சொல்கிறார். இந்த படத்தின் கதாபாத்திரங்கள் மாதிரி எனக்கு மகன்களோ மகளோ இருந்தால் அது என்னால் விரும்பப்படக்கூடிய ஒன்று. அவர்களோடு என்னால் ஆரோக்கியமான உறவு கொள்ள முடியும். அப்படிபட்டவர்கள் தான் என்றும் என் கதாபாத்திரமாக இருப்பார்கள்.

அதே சமயம் ஜனாவின் படமும் கோலிவுட் கணக்கில் ஹீரோவாக அறியப்பட்ட ஒருவரைத் தான் நம்பி ஆரம்பிக்கப்பட்டது. என்ன செய்வது படம் வெளியிடும் நேரத்தில் ஷாம் கோலிவுட் கணக்கில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தார். அதற்கான பலனை இயற்கை எதிர் கொண்டது.

ஆனால் கோலிவுட் கணக்கு சூத்திரங்களினால் இந்தப் படம் தாமதமாக வெளியான போதும் படம் பார்த்த எந்த ஒரு பார்வையாளனும், சினிமா வட்டாரமும், நல்ல சினிமா விரும்பிகளும் ஒதுக்குகிற படமாக இருக்கவில்லை. அந்தந்த அளவில் ஒரு திருப்தியை இந்தப் படம் கொடுத்தது. ஆனால் முழுமையானதாக என்றால் நிச்சயமாக இல்லை. இயற்கை படத்தின் மிகப்பெரிய குறையே பற்றாகுறை தான். இந்தப் பற்றாக்குறை ஜனா படத்தை உருக்கொண்டதில் இல்லை. சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தொடங்குகிறது. ஒரு இயக்குநருக்கான விடாப்பிடியான ஆளுமை, பொருளாதாரம், நடிகர்கள் ஒத்துழைப்பு என்று இந்தப் பற்றாகுறை பட்டியல் நீளும். இந்த பற்றாக்குறையை உணரும் போது தான் பாலாவின் சினிமா ஆளுமை எதற்கும் அடங்காமல் பீறிட்டுக் கொண்டு வெளிப்பட்டிருப்பது புரியும். அது தான் இயற்கை படம் ஒரு சராசரி பார்வையாளனை திருப்திப் படுத்திய போதும், எல்லா தரப்பினரையும், எங்கேயோ உச்சத்திற்கு போயிருக்க வேண்டிய படம் என்னமோ குறைகிறது என்று முணுமுணுக்க வைப்பது. உண்மையில் அப்படி ஒரு சாத்தியம் இந்த ஸ்கிரிப்டில் இருக்கிறதா என்றால் நிச்சயமாக இருக்கிறது. ஆனால் முடிக்கப்பட்ட படத்தில் அந்த முழுமை இல்லை. ஆனால் முடிக்கப்பட்ட படம் தான் நிஜம்.

விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையைத் தான் இந்த படமும் பேசுகிறது. ஆனால் ஒரு முக்கோண காதல் கதையின் ஊடாக. பல நாட்டு மனிதர்கள் வந்து போனாலும் யாரும் இதில் செல்வந்தர்களும் இல்லை. பொறுக்கிகளும் இல்லை. அப்படி அப்படியே வாழ்ந்து கரை தாண்டி போகிறவர்கள். கோலிவுட் கணக்கில் ஹீரோவை நம்பி எடுக்கப்பட்ட படம் தான் என்றாலும் இந்த படத்தில் ஹீரோக்கள் விரவிக்கிடக்கிறார்கள். பாரில் பீர் பாட்டில் பொறுக்கும் முதியவர், ஒரு பெண் பாலியல் தொழிலாளி என்று பட்டியலிட முடியும். ஹீரோயிஸம் என்பது ஒரு காட்சியில் அல்லது படத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு விஷயமன்றி வேறொன்றுமில்லை.

இந்த படம் முழுக்க காதலை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வழக்கமான காதல் காட்சிகளற்ற சூழ்நிலையில் தான் எல்லாம் நடக்கிறது. கடலும் கப்பலும் துறைமுகமும், அதைச்சார்ந்த கடலோர வாழ்விடமும் வேறு கோணத்தில் முன் வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு காதல் கதைப்பின்னணியில் கோலிவுட்டின் எல்லா சூத்திரங்களுக்கும் கட்டுப்பட்டு பார்வையாளனுக்கு வேறு ஒரு அனுபவத்தை கொடுக்க முற்படுவதற்கு அடிப்படையில் சமூகப்புரிதலும், வியாபார புரிதலும், சினிமா புரிதலும் மிகுந்த ஆழமாக ஒரு இயக்குநருகுத் தேவைப்படுகிறது. அந்த புரிதல் இந்தப் படத்தில் கேள்விக்குள்ளாக்கப்படவில்லை. ஆனால் இந்த ஒட்டு மொத்தப் படத்தில் ஏற்படும் பார்வையாளர் கவனச்சிதறல் எந்த அடிப்படையில் நிகழ்கிறது என்பதை ஜனா கவனத்தில் கொள்ளத்தான் வேண்டும். இந்த கவனச்சிதறலுக்கான காரணம் முக்கிய கதாபாத்திரங்களைத் தாண்டி நிறைய இந்த படம் பேசுகிறது, ஹீரோவை எல்லா இடத்திலும் ஹீரோவாக நடத்தவில்லை என்று யாரேனும் சொல்வார்கள் என்றால் அது கோலிவுட் சினிமா தியரி. இந்த ஸ்கிரிப்ட்டின் முழு வீச்சை கோலிவுட் சினிமா தியரிக்குள் அடக்கி விடமுடியாது. இது அடங்காது. அப்படி அடக்க முற்பட்டபோதெல்லாம் அல்லது இது போதும் என்று எடுத்த முடிவின் போதெல்லாம் இந்த பார்வையாளர் கவனச்சிதறல் தவிர்க்க முடியாததாகிறது. ஒட்டு மொத்தப் படத்தின் பற்றாக்குறையில் இது மிக முக்கியமான அங்கம். ஆனால் பார்க்கிற பார்வையாளனுக்கு இந்த படம் முழுக்க மெல்லிய இலையாக ஒடும் இயல்பான மனிதத்துவம் இந்த குறைகளை இட்டு நிரப்பி விடுகிறதோ என்று தோன்றுகிறது.

இன்னும் துல்லியமாக சொல்ல வேண்டுமென்றால் தேவைக்கேற்ற நடிப்பு முதல் பாதியில் சுத்தமாக இல்லை. முக்கிய பாத்திரங்கள் தனது நடிப்பு பாணி எது என்றே உணராமலேயே வந்து போவதை இயல்பான நடிப்பாக அர்த்தபடுத்திக் கொள்ள முடியாது. ஒரு சினிமாவில் ஒருவர் இயல்பாக நடித்து தான் ஆக வேண்டும். இயல்பான ஷாம் ஒருக்காலமும் இயல்பான மருதுவாக முடியாது. தேவைப்படுகிற க்ளோஷப், ரியாக்ஷன், பார்வையாளனுக்கான இடைவெளி என்று ஒரு முழுமையான சினிமா என்பதற்கான தூரம் அதிகம். ஆனாலும் இதுவும் ஓடிக் கொண்டிருக்கிற படம் தான். வெறும் அபிமான நட்சத்திரத்தின் படம் என்கிற அளவு கோல் அற்று படம் உருவாக்கப்பட்ட விதத்திற்காக ஓடிக் கொண்டிருக்கிற படம். இதுவும் கோலிவுட்டின் இயக்குநர் சினிமாவாக அறியப்பட்ட படம் தான்.

இது ஜனாவின் முதல் படம். பிதாமகன் பாலாவின் மூன்றாவது படம் இரண்டையும் ஒன்றாக எடுத்துக் கொண்டதின் காரணம், உள்ளடக்கம், சினிமாவாக உருக்கொள்வது, வியாபாரச் சூழலில் படமும் இயக்குநரும் தன்னை நிறுத்திக் கொள்வது, அப்படி நிறுத்திக் கொள்வதற்கான பிரயத்தனங்களில் ஒரு படத்தின் பலத்தையும், பலவீனத்தையும் பற்றிய ஒரு சிறிய உரையாடல் தான் இது. இதில் முரண்பட்ட கருத்து இருந்தால் எழுதவும். அது தான் நல்ல சினிமா விரும்பிகளின் ஆக்க பூர்வமான செயலாக இருக்க முடியும்.

இரண்டு இயக்குநர்களுமே தங்களது அடுத்தப் படத்திற்காக ஆயத்தமாகி இருப்பார்கள். கோலிவுட்டின் இயக்குநர் சினிமாவிற்கான தூரம் தொடக்கூடிய தூரம் தான் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனாலும் தியேட்டருக்குள் வரும் முதல் வார கூட்டத்தில் சிக்கிக் கொண்டு அந்த கூட்டத்தோடு கூடவே இயக்குநர் சினிமாவை நெருங்குவதற்கான பிரயத்தனங்களில் இந்த படங்கள் ஒரு படிக்கட்டு தான் என்பதும், முழுமையானதல்ல என்பதும் கூட அவர்களுக்குத் தெரியும். ஆனால் மீடியாவிற்கு, சினிமாவைப் பொறுத்தவரை இந்த வளர்சிதை மாற்றம் எதுவும் கிடையாது. அவை சினிமாவிற்கான விளம்பர நிறுவனங்களைப் போல் செயல்படத் தொடங்கி விட்டன என்பது தான் தற்போதைய உண்மை.

நன்றி: ஆறாம்திணை