Yarl Forum
கலி முற்றிவிட்டது! - காஞ்சனா - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: கலி முற்றிவிட்டது! - காஞ்சனா (/showthread.php?tid=7290)



கலி முற்றிவிட்டது! - கா - kaattu - 03-25-2004

நாகஸ்வர இசை முழங்கிக் கொண்டிருந்தது.

அந்தப் பெரிய கூடத்தின் மூலையில் உட்கார்ந்திருந்த கோமதிப் பாட்டிக்கு நெஞ்சுகொள்ளாத மகிழ்ச்சி. கழுத்தில் மாலையுடன் நின்றுகொண்டிருந்த பேத்தி மைதிலியைப் பார்க்கப் பார்க்க அவளது மனம் பூரித்துப் போனது.

தாய், தந்தையைவிட பாட்டிதான் மைதிலிக்கு அதிக நெருக்கம். தன் கல்யாணம் நெருங்கி வருகிற சமயத்தில் பாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அதிர்ந்துபோனாள். ‘‘பாட்டி, இன்னும் என் கல்யாணத்துக்கு அஞ்சு நாள் இருக்கு. அதுக்குள்ளே நீ குணமாகி வீட்டுக்கு வந்துடணும். அப்படி வரலேன்னா நான் என் கல்யாணத்தையே நிறுத்திடுவேன்!’’

கண்களில் நீர் பொங்கக் கூறிய பேத்தியைப் பாட்டி சமாதானப் படுத்தினாள்... ‘‘பைத்தியம்போலப் பேசாதே! நான் கட்டாயம் உன் கல்யாணத்துக்கு வருவேன். ஆமாம், அந்த பாஸ்கர் உன்னைவிட ரொம்ப உசரமோ?’’

‘‘அவர் அமிதாப்பச்சனும் இல்லை. நானும் குள்ளவாத்து இல்லை’’ என்றாள் மைதிலி, சற்றே கோபத்துடன்.

இப்போது மைதிலியின் அருகில் நின்றுகொண்டிருந்த பாஸ்கர் அவளுக்கு வெகு பொருத்தமான ஜோடியாகத் தெரிந்தான்.

இருந்த இடத்திலிருந்தே அவர்களை வாழ்த்திய கோமதிப் பாட்டியை, தொடர்ந்து அவசர அவசரமாக நடந்த சம்பவங்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தின.

சத்திரத்தில், கல்யாணத்துக்கு வந்திருந்தவர்கள் ஒவ்வொருவராக கல்யாணத் தம்பதியை நெருங்க, மைதிலியும் பாஸ்கரும் அவர்கள் அனைவரின் கையிலும் மாறி மாறி ஒரு கவர் அல்லது பார்சல் அல்லது பாத்திரத்தைத் தர, வந்தவர்கள் அதை வாங்கிக்கொண்டு வேகமாகச் சென்று நாற்காலிகளில் உட்கார்ந்துகொண்டனர். ‘இதென்ன கூத்து!’ என்று கன்னத்தில் கையை வைத்துக்கொண்டாள் கோமதிப் பாட்டி.

சற்று நேரத்தில் நலங்கு தொடங்கியது. பாட்டி உற்சாகமானாள். ஆனால், நலங்கின் போக்கே வேடிக்கையாயிருந்தது. தேங்காயை எடுத்து மைதிலியின் கையில் திணித்தான் பாஸ்கர். சுற்றியிருந்தவர்கள் சவால் விடும் தோரணையில் உற்சாகப்படுத்த, இப்போது மைதிலியின் முறை. அவள் தேங்காயை எடுத்து பாஸ்கரின் கையில் திணித்தாள்.

‘இதென்ன! தேங்காயை எதிராளி கையிலிருந்து பிடுங்குவதற்குப் பதிலாக, இவர்களே வலியத் திணிக்கிறார்களே!’ என்று வியப்படைந்த பாட்டியை, அடுத்து நடந்தது அதிர்ச்சியின் எல்லைக்கே அழைத்துச் சென்றது.

பாஸ்கர், மைதிலியின் கழுத்திலிருந்த தாலியைக் கழற்றிக் கொண்டிருந்தான்!

‘ஐயோ, இதென்ன அநியாயம்! கலி இந்த அளவுக்கா முத்திப் போச்சு!’ என்று கத்தியபடி பாட்டி மயக்கம் போட்டு விழ, சத்தம் கேட்டு ஓடிவந்தார்கள் பாலு வும் லலிதாவும் மைதிலியும்.

Ô‘என்ன ஆச்சு அத்தைக்கு? கல்யாணத்துக்குதான் வரமுடியலே, பாவம்! அதனாலே டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்ததும், Ôமைதிலியோட கல்யாண விடியோ காஸெட்டைப் பாருங்கம்மாÕனு போட்டுட்டுப் போனேன். திடீர்னு ஏன் கத்தினாங்க, ஏன் மயக்கமானாங்கன்னு தெரியலியே’’ என்று பதறினாள் லலிதா.

பாலு தன் அம்மாவின் முகத்தில் நீரைத் தெளிக்க, பாட்டியை லேசாக உலுக்கியபடி பதற்றத்துடன் தலைநிமிர்ந்த மைதிலி, அப்போதுதான் அதைக் கவனித்தாள் & விடியோவில் கல்யாண காஸெட் ரிவர்ஸில் ஓடிக் கொண்டிருந்தது!

- காஞ்சனா -


- Mathan - 03-25-2004

இந்த நலங்கு சடங்கு இலங்கையிலும் சில திருமணங்களின் பின் நடைபெறுவதாக அறிந்தேன். அது உண்மையா? யாருக்காவது தெரியுமா?