Yarl Forum
அவனுக்கு இது ஒர் கதை.....எமக்கு....! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: அவனுக்கு இது ஒர் கதை.....எமக்கு....! (/showthread.php?tid=7182)



அவனுக்கு இது ஒர் கதை..... - kuruvikal - 04-22-2004

<span style='color:red'>பழுக்காய்த் துறையில் 'வோட்டர் ஜெற்

நீண்டதொரு வயல்வெளி, சேறுகள், கட்டாந்தரையாகி வறண்டு வாய்பிளந்து கிடக்கும் பாலை நிலம், எரியினால் அழிவுண்டு முட்களாக மாறியிருக்கும் புற்கட்டைகள் ஊடே அமைதியை ஆயுதமாக்கி எமது விசேட ஆயுத அணி நகர்ந்து கொண்டிருக்கிறது.ஓ! அது 19 புரட்டாதி 2000. இன்றும் என் நெஞ்சத்துப் பசுமையில் ஆழமாகப் பதிந்த கள வரலாற்றுப் பதிவுகள் பலவற்றில் இதன் பின்னான நிகழ்வும் பதிவும் பதியப் போவதற்கான முதல் நாள்.
அதிரடி நடவடிக்கை ஒன்றிற்காக விசேட வேவுப் பிரிவினரின் துணையுடன் எம் அணி நகரலானது. நேரம் ஒன்பதரை மணியிருக்கும் எதிரியின் முன்னரங்க காப்பரண் வரிசையை அடைய 500-600மீட்டர் இருக்கையில் எம் அணியின் நகர்வு நிறுத்தப்பட்டது. நல்ல நிலா ஒளி. வெட்டை வெளி எங்கும் வெள்ளொளியால் மிதக்க மனதுக்கு இதமாய் இருந்தது. மூக்கில் இருந்து நீர் வடியும் அளவுக்கு புரட்டாதி மாதத்து குளிர் மேனியை சில்லிட வைத்தது. எனினும் இலக்கே குறியான எமக்கு குளிர் து}சாகிப் போனது ஒன்றும் வியப்பில்லை.

நிலவு படும் நேரமாகிவிட்டது. கடிகாரம் அதிகாலை 1:30 மணி என்கிறது. அணிகள் மீண்டும் தம் இரகசிய நகர்வை அவனின் காப்பரண் வரிசை நோக்கி ஆரம்பித்தன. எதிரியின் பட்டொளி வீசும் மின்சார விளக்கு வரிசையில் எங்கோ ஓர் இடத்தில் இருந்த இருள் சூழ்ந்த பகுதியை எம் நகர்வுப் பாதை எனத் தீர்மானித்து நகரலானோம். காப்பரண் வரிசையை நெருங்க நெருங்க எச்சரிக்கை உணர்வு மேலோங்கியது.

சுமார் 15 மீட்டருக்குள் எதிரியை அண்மித்த நிலையில் எம்மை அவதானித்துவிட்ட எதிரி தாக்கத் தொடங்கினான். சரமாரியான துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலுடன் மோட்டார் எறிகணைத் தாக்குதலையும் எதிரி மேற்கொண்டான். நாம் சென்று கொண்டிருக்கும் நடவடிக்கையின் நோக்கம் வேறு என்பதால் அவனோடு முட்டிமோத விரும்பாத நாம் எதிர்த் தாக்குதல் எதையும் மேற்கொள்ளாது காப்புகள் ஏதுமற்ற வெட்டை வெளியூடாக பராவெளிச்சங்களிற்கும் கூவி வரும் எறிகணைகளுக்கும், சீறிப் பாயும் துப்பாக்கிச் சூடுகளுக்கும் என பல தடவை நிலை எடுத்தும், சில தடவை ஓடும் போது நிலை தடுக்கி விழுவதுமாய் சுமக்க முடியா சுமையுடன் பின்வாங்கி ஓடி சில 200 மீட்டர்களுக்கப்பால் அணிகளைச் சரிபார்த்து சேதங்கள், இழப்புகள் எவையுமே இல்லை என்பதன் பின் எம் தங்குமிட முகாம் திரும்பினோம். ஏறத்தாழ இரவு 12 மணி நேரமாக இவ் நடவடிக்கையின் பின் ஓய்வுக்காக தலைசாய்த்தபோது நேரம் மறுநாட்காலை 05:00 மணியாகியிருந்தது.

"விழ..விழ..எழுவது" புலிகளின் மரபல்லவா? ஆம். அதனால் மீண்டும் செப்டம்பர் 20 விடிகாலை எமக்கானதானது. அன்று வேறு ஓர் நகர்வுப் பாதையைத் தேர்ந்தெடுத்து நகரலானோம். எமது முகாமில் இருந்து மாலை 5:30 மணிக்கு பச்சை நிற லான்ரோவர் வாகனத்தில் விசேட ஆயுதங்கள் சகிதம் சென்று எதிரிக்கு அண்மையான கிராமம் ஒன்றைச் சென்றடைந்தோம். அங்கு இரவு 1:30 மணிவரை நிலவு படுவதற்காக ஓய்வெடுத்துக் கொண்டோம். இப்போது விடிகாலைக்குள் எதிரியின் பிரதேசத்துட் சென்று பாதுகாப்பான இடத்தை அடைந்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் எமது நகர்வு எதிரியின் காப்பரண்களை நோக்கி வேகமெடுத்தது.

உள்ளத்தைக் கிலி கொள்ளச் செய்யும் மின்விளக்கு வரிசை, அவற்றின் மத்தியில் எம்மை இனம் காணத் துடிக்கும் தேடல் ஒளிகள், இவற்றை விட எதிரியின் கழுகுக் கண் பார்வை என யாவையுமே எம்மை இரை எனத் தேட நாமோ இவை அனைத்துக்கும் இரையாகி விடக்கூடாது என்ற துடிப்புடன் எம் இலக்கழிக்கும் விருப்புடன் மிகவும் நுட்பமான, ஆபத்தான நகர்வுகளைச் செய்து கொண்டிருந்தோம். "ஊசி முனைத் துவாரமூடாக உலக்கையைச் செலுத்தும் சாதுரியமது.

நேரம் விடிகாலை 3:00 மணியிருக்கும். எல்லோர் முகத்திலும் ஒருவித பிரகாசத்தை அந்த இருள் படர்ந்த வேளையிலும் காண முடிந்தது. அப்போது நாம் அனைவரும் எதிரியின் காப்பரண்களைத் தாண்டி அவனின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவிச் சென்று கொண்டிருந்தோம்.

இடையறா நடையின் களைப்பு, தோளே ஏற்க மறுக்கும் சுமை, கால்கள் பதியமறுக்கும் முட்தரைகள், அரைவரை ஏறும் நீர் நிலைகள் ஊடே உடலே வியர்வையால் தெப்பமாய் மிதக்க எங்களின் பயணம் சொல்லணாத் துன்பங்களின் மேலே எதிரியால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதியினுள்ளே தொடர்ந்தது.

இதயம் லப்..டப்.. என்பதை மற்ந்து இலக்கு...அழி..இலக்கு..அழி..என ஓசைப்படலானது. நீண்ட தொலைதூரம் பயணங்களின் பின் மறுநாள் காலை 11:00 மணியளவில் பாதுகாப்பான மறைவிடம் ஒன்றைச் சென்றடைந்தோம். எதிரியைப் பொறுத்தமட்டில் அது எமக்கான மறைவிடம் ஆனால் அதுவோ எங்களுக்கோர் சொர்க்க பூமி என்பதை அங்கு சென்ற பின்னர்தான் கண்டு கொண்டோம். அவ்விடத்தை அடைந்தபோது அங்கு ஏற்கனவே தங்கி நின்ற கடற்புலிப் போராளிகள் அன்போடு எம்மை அனுசரித்து நன்றாகச் சீனியிட்டு குழைக்கப்பட்ட மாவுருண்டைப் பலகாரமும் தேனீரும் தந்தபோது எம்மீது தொற்றியிருந்த களைப்பும், தாகமும் விடைபெற்றுக் கொண்டன. நீரையே காணாது எங்களின் முகம் மாலைவரை தூக்கத்தில் ஆழ்ந்தது.

தூக்கம் கலைந்து களைப்பு தீர்ந்தபோது அப்பகுதி கல்லாறு என அறிந்து கொண்டோம். நாவற் பழங்களால் நிரம்பி வழியும் மரங்களை இருமருங்கே கொண்டு அந்த வனப்பு மிகு ஆற்றினூடே எமது இருநாட் பொழுதுகள் சங்கமித்தன.

கடற்புலிப் போராளிகள் கூட்டாகச் சேர்ந்து ஆற்று நீரின் துணையோடு சமைத்துப் பரிமாறிய ஆறுவேளை உணவின் பின் நாம் வந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் பணிக்காய் செப்டம்பர் 23, 2003 அன்று ஆயத்தமானோம். எம் திட்டத்தை நிறைவேற்ற எதிரிக் கடற்படையின் கொலைவெறி "வோட்டர் ஜெட்"களை சீட்டி அவற்றை எம் கொலை வலயத்திற்குள் வரவழைத்து தாக்கியழிக்கும் நோக்குடன் கடல் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிங்கள மீன்பிடிப்படகுகள் சிலவற்றை ஏற்கனவே எம் திட்டத்திற்கேற்ப ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த இருவேறு கடற்புலிகளின் குழுக்கள் விடிகாலை 4:30 மணியளவில் மடக்கிப்பிடித்து அவற்றுள் 05ஐ தொழிலாளர்களை வேறு சக தொழிற்படகுகளில் ஏற்றிவிட்டு நாம் விரித்த கொலை வலையத்தின் கரைப்பகுதியை வந்தடைந்தனர். இவ் அட்டகாசத்தை எதிரி அறிய வேண்டும் என்பதற்காக படகுகள் சிலவற்றை ஏனைய தொழிலாளர்களுடன் விட்டதுடன் துப்பாக்கி வேட்டுக்களையும் தம் படகில் நின்றவாறே மேற்கொண்டிருந்தனர் கடற்புலிகள்.

இது நடந்தது மன்னாரிற்கும் புத்தறத்துக்கும் இடையிலான கற்பிட்டி கடற்பரப்பில். தமிழர் தாயகப் பகுதியாக இருந்தும் எதிரியால் பல காலமாக அவனின் ஆக்கிரமிப்பிற்குள் உள்ள தரை, கடலாதிக்கப் பகுதி என்பதால் அப்பகுதியிலேயே நடந்த இந்த சிங்கள மீனவர்களின் படகுப் பறிப்பானது எதிரியை சீண்டியிருக்க வேண்டும். நிச்சயம் எதிரி எம்மைத் தேடி வருவான் என நம்பியிருந்தோம். இதற்காகவே முழு நாள் இரவினைக் கண்விழித்துச் செலவழித்து எமது விசேட ஆயுதம் ஒன்றுக்காய் நிலையமைத்து மறுநாள் நண்பகல் கழிந்து மாலை 2:00 மணிவரை மேவி எழும் அலைகள் ஊடே கொலை வெறியர் படகுகளை எம் இரையெனத் தேடினோம். கிடைக்கவில்லை. காத்திருந்த எமக்கு கவலைதான். எனினும் இதில் பொறுத்திருந்தே சாதிக்க வேண்டுமென்பதால் மீண்டும் சில நாட்கள் மௌனம் காத்தோம்.

கற்பிட்டியின் ஒரு புறத்தே கடலுக்குள் நீண்டு நிற்கிறது குதிரை ஒன்றின் தலை. இது ஓர் நிலப்பகுதி. து}ரத்தே நின்று பார்க்க குதிரையின் தலைபோல் காட்சி தரும் வனப்பு மிகு மலை. குதிரை மலை என்பது இதனால் அது பெற்ற சிறப்புக் காரணப் பெயர். இது வரை கல்லாற்றின் முகத்துவாரம் அருகே எதிரிக்காய் காத்திருந்த நாம் குதிரை மலையின் பழுக்காய்த்துறை சென்று எதிரியுடன் சமரிடுவதாய் திட்டமிட்டோம்.

செப்டம்பர் 29,2000 அன்று கல்லாற்றிருந்து 3 மணிநேர தொடர் நடையில் சென்று ஒரு குழு நிலையமைப்பில் ஈடுபட இன்னோர் குழு விசேட தாக்குதல் ஆயுதங்கள் சகிதம் இரவோடிரவாக எதிரியின் கடல்ரோந்துப் படகுகளின் ராடர் கண்களில் மண்ணைத் து}வி விட்டு இரவு 11:00 மணிக்கு இயந்திரப் படகு இரண்டில் இரகசியமாக எம்மிடம் வந்து சேர்ந்தனர். அன்றைய இருட்பொழுது ஆயத நிலை அமைப்பு, தாக்குதலிற்கான முன்னாயத்த வேலைகள் என்பவற்றோடு கரைந்துபோக மறுநாட்காலை புலர்ந்தபோது நித்திரையின்மை, வேலைக் களைப்பு என்பவற்றால் எல்லோர் கண்களும் சிவந்திருந்த போதும் கடல்மீது எதிரி இலக்கினைத் தேடி கூர்மையாகவே இருந்தன.

இது தான் செப்டம்பர் 30,2000 எமக்கான வெற்றித் திருநாள். நிலைகளில் எதிரி கலத்தினைத் தாக்கியழிப்பதற்காய் கடல்மேல் விழி வைத்து எமதணி வீரர்கள் காத்திருக்க எதிரி ரோந்தில் ஈடுபட்டவாறு "வோட்டர் ஜெற்"றில் விரைந்து கொண்டிருந்தான். வழமைபோன்றே சிங்கள மீன்பிடிப்படகுகள் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. தமிழ் மீனவர்கள் சுதந்திரமாக, நிம்மதியாக தொழில் செய்து வாழ வேண்டிய கடற்பரப்பில் கடற்படையின் துணையோடு 20க்கும் மேற்பட்ட சிங்கள றோளர்கள். இவற்றை கடற்கரை மணல்மேடு ஒன்றில் நின்றுகொண்டு அவதானித்த கடற்புலிப் போராளிகள் இருவரை ஆயுதங்களுடன் கண்டுகொண்ட றோளர்களில் ஒன்று தான் தொழிலில் ஈடுபட்ட பகுதியை விட்டு விலகிச் சென்று ரோந்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வோட்டர் ஜெற்றிற்கு தகவல் கொடுக்க எதிரி அப்பகுதி நோக்கி தன் வேகத்தை மும்மடங்காக்கி விரைந்து வந்து 50 கலிபர் தாக்குதரை மணல்மேட்டு கரையோரம் நோக்கி மேற்கொண்டான்.

எதற்காகக் காத்திருந்தோமோ அதுவே வந்துவிட்ட பூரிப்பு எமக்கு. எனினும் எம் பூரிப்புக்கு அர்த்தம் இல்லை என்பதை மறு கணப் பொழுதுகளில் எதிரி எம் கொலை வலையத்திற்குள் வராது சென்றுவிட்ட பொழுது அறிந்து கொண்டோம். மீண்டும் ஏமாற்றங்கள் தொடர இலக்குக்கான காத்திருப்பும் தொடரலானது. இதனால் சற்று சினம் கொண்ட எம் தாக்குதல் நடவடிக்கைக்குப் பொறுப்பான ராகுலன் அண்ணன் எம் நிலையருகே வந்து கடற்புலிப் போராளியான சோலைக்குமரனைப் பார்த்து தன் வழமையான தொனியில் "..சோலை.. அதில நிக்கிறவையில இரண்டைக் கரைக்குக் கொண்டுவா.. அப்பத்தான் ஆக்கள் எங்களிட்ட வருவினம்.." என தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த றோளர்களைக் காட்டிச் சொன்னார். ராகுலன் அண்ணன் சொல்லி முடிக்க அதனைக் கட்டளையாக ஏற்றுக் கொண்ட போராளிகள் "அரக்கடி அம்மா..அரக்கு..அரக்கு..றோளரைப் பிடித்து அரக்கு...அரக்கு..." என அம்மாப்பாடி கடலில் இறக்கப்பட்டது. கடற்கரை கண்டல் பற்றைகளோடு உருமறைக்கப்பட்டிருந்த "புளுஸ்ரார்" படகு. மறுகணமே அதன் இயந்திரம் இயக்கப்பட வேகமெடுத்து அலைமீது தாவிப் பாய்ந்து றோளர்களை நோக்கிச் சீறிச் சென்றது.

சோலைதான் அதன் படகோட்டி. குமார், காந்தன் இவர்கள் இருவரும்தான் றோளர்களை மடக்க வேண்டியவர்கள். 10 நிமிடத்தில் பல றோளர்கள் தொழில் ஈடுபட்டிருக்க சோலையின் படகு றோளர் ஒன்றின் இருகே வட்டமிட குமார் றோளர் மீது பாய்ந்து தாவி சிங்கள மீனவர்களை எதுவும் செய்யக் கூடாதென எச்சரிக்கின்றான். பின்னர்தானே றோளரை கணிசமான வேகத்தில் நாம் நிலையமைத்திருந்த கரை நோக்கிச் செலுத்தினான். இதே போன்று இன்னுமோர் றோளரையும் வட்டமடித்த சோலையின் படகிலிருந்து தாவிப் பாய்ந்த காந்தன் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து கரைநோக்கி செலுத்தலானான். இப்போது வெண்ணுரை எழுப்பியவாறு சோலையின் படகு முன்னே பாய்ந்து வர இரண்டு றோளர்களும் பின்னே அணிவகுத்தன.

திரைப்படம் ஒன்றிற் பார்த்த கடற்கொள்ளைச் சம்பவம் போன்றிருந்தது. ஆனால் இது பகைவனைச் சீண்டி எம் வலைக்குள் விழ வைப்பதற்கான ஓர் நாடகமே.

"காந்தன் ஒன்றில தொழிலாளிகள் எல்லோரையும் ஏற்றி அனுப்புங்கோ" றோளருடன் கரையை அடைந்த காந்தனுக்கு ராகுலன் அண்ணன் கட்டளை இட சொற்ப நேரத்தில் அது நிறைவேற்றப்படுகிறது.

ஏறத்தாழ 10 நிமிடங்கள் கூட கழிந்திராத நிலையில் விடயமறிந்த எதிரியின் வோட்டர் ஜெற்கள் றோளர்களைத் தேடி எமது கடற்கரை நிலை நோக்கிப் பாய்ந்து வந்தன. இதற்கிடையே தொழிலாளிகள் யாவரும் றோளர் ஒன்றில் ஏற்றப்பட்டு அனுப்பப்பட்டிருந்தனர். இடையில் இவர்களை வழிமறித்த எதிரி முழு விடயத்தையும் கேட்டறிந்து கொண்டதுடன் நாம் நிலையெடுத்திருந்த கரைப்பகுதி நோக்கி 50 கலிபர் தாக்குதலை இரண்டு வோட்டர் றெ;ரிலிருந்தும் மேற்கொள்ளலானான். எனினும் எம் நிலையிலிருந்து 800 மீட்டருக்கு அப்பால் நின்றே தாக்குதலை நடத்தினான். இதனை " ...அண்ணை இன்னும் அவன் எங்களின் எல்லைக்குள் வரைல 800 மீட்டரில நின்கின்றான்"என்று தூரங்கணிக்கும் சாதனத்துடன் இருந்த போராளியின் குரல் உணர்த்தியது.

இதற்கிடையில் மிகவும் வேகமான செயற்பாட்டினால் எமது விசேட ஆயுத நிலை தாக்குதலை வெற்றிகரமாக மேற்கொள்ளக்கூடியவாறான ஓர் நிலைக்கு மாற்றப்பட்டுக் கொண்டது.

சில நாள் இடைவெளிக்குள்ளே நடந்த இரண்டாவது படகுப் பறிப்பினால் இதன் பின் உள்ள விபரீதத்தை எதிரி எண்ணியிருக்க வேண்டும். இதனால் எதிரி கூடிய அளவு கரையை அண்மிக்காது விட எம்மில் ஏமாற்றமே குடிகொண்டது. எனினும் இது நீடிக்கவில்லை. கற்பிட்டியிலிருந்து இன்னும் இரு "வோட்டர் ஜெற்" கள் இரட்டிப்பு மின்னல் வேகத்தில் அரக்கத் தனத்தோடு அலைகிழித்து சீறி வருவதை அவதானித்த தூரங்கணிக்கும் கருவியுடன் நின்ற போராளி எமது விசேட ஆயுத அணிப் பொறுப்பாளரான நாவண்ணன் அண்ணனைப் பார்த்து "... வேறையும் இரண்டு கற்பிட்டியிலிருந்து வருகுது.." எனக் கூற "இவையளிற்கு நிலைமை தெரியாது. இவையள் தான் எங்களிட்ட மாட்டுப்படுவினம்..""என்றார் நாவண்ணன்.

இப்போது நான்கு வோட்டர் ஜெற்களும் கடலில் நின்று சன்னதமாடின. கரைநோக்கி ஏதோ எம்மைக் கண்டுவிட்டது போன்று தொடர் 50 கலிபர் தாக்குதலை மேற்கொண்டு ஆர்ப்பரித்தன. சீறிவந்த இரண்டு ஜெற்களில் ஒன்று 50 கலிபரால் பொழிந்து முடிக்கவும் மற்றையது எம் கொலை வலையத்திற்குள் வந்து சேர "அடியடா மாங்குயில்... 600 மீட்டரில் விட்டு அடி.."என்ற கட்டளைகள் மின்னல் தெரிய முழக்கம் எழ வோட்டர் ஜெற்றின் கெவின் பகுதி வாய்பிளந்தது. தொடர்ந்து மணியத்தின் உதவியோடு மாங்குயில் குறிபார்த்துச் சுட்ட வேறு மூன்று எறிகணைகளும் ஜெற்றினைப் பதம் பார்க்க ஜெற் தன் இயக்கத்தை இழந்தது. ஜெற்றில் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படைச் சிப்பாய்களில் இருவர் கடலில் பயாந்து நீந்த நால்வர் ஜெற்றின் கெவினோடு அழிந்து போயினர்.

இப்போது தொலைத் தொடர்பு சாதனத்தில் நாவண்ணன் அண்ணன் "..றோமியோ..றோமியோ.. எப்படி? நாம் சொன்ன மாதிரிச் செய்திட்டம்"... என வெற்றிச் செய்தியை தாக்குதல் நடவடிக்கைக்குப் பொறுப்பான ராகுலன் அண்ணனிற்கு அறிவித்தார். குண்டடிபட்டு செயலிழந்து போன வோட்டர் ஜெற் காற்றின் போக்கால் நாம் நிலையெடுத்திருந்த கரை நோக்கி ஒற்றிக் கொண்டிருக்க ஏனைய பகைக்கலங்கைள் சற்றுமே எதிர்பாராத இத் துணிகரத் தாக்குதலால் திகிலடைந்து ஆக்ரோசமான தாக்குதலை எம் மீது மேற்கொண்ட வண்ணமிருந்தன.

மறுமுனையில் எம் விசேட ஆயுதத்திற்கு ஆதரவாக பகைக்கலம் மீது 50 கலிபரால் குறிபார்த்த சூடுகளை வழங்கிக் கொண்டிருந்தான் கடற்புலிப் போராளி ஊக்கவீரன். இவனின் துல்லியமான தாக்குதலால் தாண்டவம் ஆடிய ஜெற்றில் ஒன்று பலத்த சேதம் அடைந்து பின்வாங்கியது.

கள நிலைமை இவ்வாறிருக்க கரையொற்றிவிட்ட ஜெற்றில் ஓடிச் சென்று பாய்ந்தேறிய அனுபவம் மிக்க இரு கடற்புலிப் போராளிகள் இதில் பொருத்தப்பட்டிருந்த இரண்டு 50 கலிபர் துப்பாக்கிகள், ஏகே எல்எம்ஜி -01 உட்பட, சிறு ரக துப்பாக்கிகள், கையெறிகுண்டுகள், வெடிபொருட்கள் உட்பட இதர இராணுவத் தளபாடங்களைக் கைப்பற்றிக் கொண்டு வோட்டர் ஜெற்றிற்கு தீயிட்டு விட்டு கரை சேர்ந்தனர். எதிரியோ எறிகுண்டுத் தாக்குதலையும் சரமாரியான துப்பாக்கிச் சூடுகளையும் மழையெனப் பொழிந்த வண்ணமிருந்தான்.

திட்டமிட்டபடியே காத்திருந்து பகைவனைக் கவர்ந்திழுந்து எம் கொலை வலைக்குள் வீழ்த்தி வெற்றிகரமாக முடிக்கவென சபதமிட்டிருந்த போராளிகள் அனைவரும் வெற்றிப் பெருமிதத்தால் திழைத்திருந்தோம். சண்டையின் ஒரு கட்டத்தில் ஜெற்றில் இருந்து பாய்ந்து நீந்திக் கொண்டிருந்த சிப்பாய்கள் மீது 40 மிமீ டொங்கான் தாக்குதலை மேற்கொண்ட வண்ணம் நாவண்ணன் அண்ணன் "டேய்..பொக்குள் வெடித்துச் சாவுங்கோடா.."என கத்திக் கத்தி தன்னிடமிருந்த ஆயதத்தால் எறிகுண்டுகளைச் சுட்டது எமக்கெல்லாம் வேடிக்கையாகவும் அவர் பகை மீது கொண்ட வெறுப்பையும் கோடிட்டுக் காட்டியது.

இவ்வாறாக வெற்றியை எமதாக்கிக் கொண்ட நாம் மதியம் 1:30 மணியளவில் இழப்புக்கள் ஏதுமின்றி கைப்பற்றப்பட்ட ஆயுத தளபாடங்களுடன் பின்வாங்கி காட்டிற்குள் மறைந்து எமது பாதுகாப்பான இரகசிய மறைவிடம் ஒன்றை நோக்கி கால் நடையாகவே விரையலானோம். முதல் நாள் உண்ட உணவு, பருகிய நீர் என்பவற்றோடு காட்டு மிருகங்களின் பாதை வழியே நகர்ந்து கொண்டிருந்தோம். எம் நாக்கு நீரைக் கேட்கிறது ஆனால் தண்ணீர் கலன்கள் வெறுமையைத் தான் கொடுத்தன. வயிறு பசி என்ற பொழுதெல்லாம் மனது வெற்றியின் கனதியை உணவாகக் கொடுக்க கால்கடுக்க இடர்பாடு கொண்ட பாதைவழி நகர்ந்து இரவு 7:00 மணிக்கு பூக்குளத்து மறைவிடத்தை அடைய அங்கே வாசம் கிளம்பிய திருக்கை மீன் குழம்பும், சுடுசோறும் உணவாக இருந்தபோது யாவற்றையும் மறந்து உணவோடு சங்கமித்தோம்.</span>

செந்தமிழ்

நன்றி சூரியன்.com..!