Yarl Forum
போரியல் வரலாற்றில் விடுதலைப் புலிகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: போரியல் வரலாற்றில் விடுதலைப் புலிகள் (/showthread.php?tid=712)



போரியல் வரலாற்றில் விடுதலைப் புலிகள் - வினித் - 02-25-2006

போரியல் வரலாற்றில் விடுதலைப் புலிகள்

தற்போது நிலவிவரும் சமாதான சூழல் அற்றுப்போய் மீண்டும் போர் மூளலாம் என்பதே பலரதும் ஊகமாக இருக்கின்றது. சிலவேளைகளில் இது சரியானதாகவும் இருக்கலாம். ஆனால், மீண்டும் போர் தொடங்கும் பட்சத்தில் அது எவ்வாறானதாக அமையும் என்பது பற்றியும் புலிகளின் தாக்குதல் இலக்குகள், வியூகங்கள், அதன் உக்கிரத்தன்மை என்பன எவ்வாறு அமையப் போகின்றது என்பது பற்றியுமே இன்று பலரும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், புலிகளின் இராணுவ வல்லமையையும் தேசியத் தலைவரின் போரியல் தந்திரோபாயங்களையும், தாக்குதல் உத்திமுறைகளையும் அறிந்து கொள்ளகடந்த காலத்தில் நடைபெற்ற ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிரான போரியல் சரிதங்களை மீண்டும் நினைவுபடுத்திப் பார்ப்பது அவசியமாகின்றது.

அந்த வகையில், தமிழீழ விடுதலைப்போரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமர்களில் சிலவற்றை மீட்டுப் பார்த்தால்,

~1990-09-26 அன்று யாழ். கோட்டை இராணுவ முகாம் புலிகளால் வெற்றிகொள் ளப்பட்டமை,

~1990-11-23 அன்று மாங்குளம் படைமுகாம் தகர்த் தழிக்கப்பட்டமை,

~1991-07-10 அன்று ஆனையிறவுப் படைத்தளம் மீதான ஆகாயக்கடல் வெளிச் சமரை மேற்கொண்டமை,

~1993-09-29 அன்று இராணுவத்தினரின் யாழ். தேவி படை நடவடிக்கையை முறியடித்த புலோப்பளை சமர்,

~1993-11-12அன்று பூநகரி கூட்டுப் படைத்தளம் தவளை நடவடிக்கை மூலம் தகர்த்தழிக்கப்பட்டமை,

~1995-07-14 அன்று யாழ். நகரை ஆக்கிரமிக்க திட்டமிட்டு முன்னேறிப் பாய்ந்த படைகளை புலிப்பாய்ச்சல் நடவடிக்கை மூலம் முறியடித்தமை,

~1996-07-18 அன்று ஓயாத அலைகள் -1 நடவடிக்கை மூலம் முல்லைப் படைத்தளத்தினைத் தாக்கி நிர்மூலமாக்கியமை,

~1997-05-13 அன்று படையினரால் ஆரம்பிக்கப்பட்ட ஜெயசிக்குறு நடவடிக்கையை எதிர்த்து சமரிட்டமை,

~1998-09-27 அன்று கிளிநொச்சிப் படைத்தளத்தை ஓயாத அலைகள்- 02 நடவடிக்கை மூலம் மீட்டெடுத்தமை,

~1999-11-02 இல் ஆரம்பித்த ஓயாத அலைகள் - 03,

~2000-04-02 அன்று ஆனையிறவுப் படைத்தளம் தாக்கி அழிக்கப்பட்டு வெற்றிகொள்ளப்பட்டமை,

~2001-04-25, 26, 27 ஆகிய நாட்களில் இத்தாவில் பகுதியில் தீச்சுவலைப் படை நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமர் என்பன தமிழர் தேசத்தில் ஆக்கிரமித்திருந்த சிங்களப் படைகளை திணறடித்த களங்களில் சில...

இந்தத் தாக்குதல்கள் அனைத்திலும் விடுதலைப்புலிகள் எவ்வாறு வெற்றி கண்டார்கள் என்பதையும் தாக்குதல் வியூகங்கள் எப்படிப்பட்டவை, அவர்களின் இராணுவ தந்திரோபாயங்கள் எவ்வாறானவை என்பன பற்றி உலகப் பிரசித்திபெற்ற இராணுவ ஆய்வாளர்கள் கூட இதுவரை ஆய்வு செய்து முடிவுக்கு வரமுடியாத நிலையில் உள்ளனர்.
1990 ஆம் ஆண்டு மாங்குளம் இராணுவ முகாமைத் தாக்கியழித்ததன் ஊடாக புலிகள் கெரில்லாப் போராளிகள் மட்டுமல்ல மரபுவழி இராணுவமாகவும் மாறிவருகிறார்கள் என்பதை உலகம் அறிந்து கொண்டது. பின்னர் 1991 ஆனையிறவு கூட்டுப்படைத்தளம் மீது புலிகள் நடத்திய ஆகாயக் கடல் வெளிச்சமரின் பின் இலங்கையின் இரண்டு இராணுவங்கள் இருக்கின்றன என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.

தொடர்ந்து தமிழீழ வரலாற்றில் பாரிய திருப்புமுனைகளை ஏற்படுத்திய களங்களாகிய ஜெயசிக்குறு சமர்க்களமும் புலிகள் தொடர்ச்சியாக மேற்கொண்ட ஓயாத அலைகள் நடவடிக்கைகளும் ஆனையிறவுப் படைத்தள தகர்ப்பும் பலம்வாய்ந்த இராணுவங்களையும் எதிர்க்கும் சக்தி பெற்றவர்கள் புலிகள் என்பதை உலகம் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாக்கியது.

இவ்வாறு கெரில்லாத்தாக்குதல் தொடக்கம் மரபு வழிச்சமர் வரை எந்தவொரு களங்களும் புலிகளின் வெற்றிக்கு எவ்வாறு சாதகமாக அமைகின்றது என்பது உலகை வியக்க வைக்கின்ற விடயமே.

புலிகள் ஒவ்வொரு களத்திலும் ஒரேவகையான போர் தந்திரோபாயத்தையும் போர் உத்திகளையும் கையாள்வதில்லை என்பது மட்டும் இராணுவ ஆய்வாளர்களால் உணரப்பட்டுள்ளது.

எவ்வளவு பெருந்தொகையான படைகளைக் குவித்திருந்தாலும் அவர்களைக்குறித்த நேரத்தில் சின்னாபின்னமாக்கும் போர் உத்திமுறை புலிகளிடம் மேலோங்கிக் காணப்படுகின்றமை அவர்களின் வெற்றியின் பொதுவான பின்னணியாக அமைகின்றன.

பொதுவாக மரபு வழிப்போர் நடவடிக்கைகளில் ஆளணிகளிலும் ஆயுத தளபாடங்களிலும் எண்ணிக்கை கூடிய படைத்தரப்பானது சமரில் வெல்லுவது வழமையானது. இந்த இராணுவ தத்துவத்தையே கடந்தகால சந்திரிகா அரசாங்கமானது வடபகுதியில் பரீட்சித்துப் பார்த்தது. பெரும் எண்ணிக்கையில் துருப்புக்களை நகர்த்தி மரபு வழிப்போர்களை வெல்ல முடியும் என்பது சாத்தியமானதொன்றுதான் இதற்கு உதாரணமாக ஐரோப்பாவில் நெப்போலியனின் படையெடுப்புக்களையும் அமெரிக்க உள்நாட்டுப்போரில் வடபிராந்திய இராணுவத்தினர் வெற்றிபெற்றதையும் கொள்ள முடியும். இது உலக இராணுவ அறிவியல் தத்துவமாக இருப்பினும் விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை அதன் தலைவர் உலக இராணுவ போரியல் வரலாறுகளை நன்கு அறிந்திருந்தும் அவற்றை மட்டும் பின்பற்றி களங்களை வழிநடத்துவதில்லை. களநிலைமைகளுக்கேற்ப படை நடத்துகின்ற வல்லமை அவரிடம் மேலோங்கிக் காணப்படுகின்றது.

பொதுவாக ஆளணி எண்ணிக் கையில் மிகுந்த இராணுவத்தினரை செறிவாக ஒரு இலக்கை நோக்கி நகரச்செய்து போரில் வெற்றி கொள்வது என்ற மூலோபாயத்தை பல முன்னணி நாடுகள் கையாண்டு வருகின்றன.

எனவேதான் சிறிலங்காவின் ஆட்சியாளர்களும் இராணுவ உயர் அதிகாரிகளும் இந்தத் தத்துவத்தை கருத்திற்கொண்டு தமது படை எண்ணிக்கையினை பெருக்கிக் கொண்டு புலிகளை வெல்ல முடியும் என அடிக்கடி கனவு காண்கின்றனர். இதன் தொடர்ச்சியாகத்தான் சந்திரிகா அரசின் நப்பாசையும் அமைந்திருந்தது. ஆனால் அமெரிக்க இராணுவ கட்டளையை மற்றும் அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரியின் இராணுவ வரலாற்று ஆசிரியருமாக பணிபுரியும் பேராசிரியர் ஆஸர்ஜோன்ஸ் படைவீரர்களின் வெற்றி, தந்திரோபாயம் பற்றி இவ்வாறு கூறுகின்றமை நோக்கத்தக்கது.

அதாவது சமர்க்களங்களில் படையணிகளின் ஆட்தொகையானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகிறது. இரண்டு சமபலமான இராணுவங்கள் சமர்களில் ஈடுபடும் போது வீரமானது, போரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் காரணியாகும்.

பதினாறாம் நூற்றாண்டு காலப்பகுதியில் ஆள் எண்ணிக்கையை விட வீரமே போரின் முடிவுகளை தீர்மானிக்கும் காரணியாக இருந்திருக்கிறது. இதேபோன்று போர்முனைகளில் படையணிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் இடையூறுகளையும் தீர்த்து வைத்து சமரில் வெற்றி பெற படையை நிர்வகிக்கும் தளபதிகள் தேவையான தீர்மானங்களை எடுப்பதுவும் மிக முக்கியமானதாகும்.

எனினும் சிறிலங்காப் படைகளைப் பொறுத்தவரை எந்தளவு பெருந்தொகையான துருப்புக்களை நடவடிக்கையில் ஈடுபடுத்தியபோதும் புலிகளை வெல்லமுடியாது போனது.

மாறாக குறைந்தளவு போராளிகளை மட்டும் நடவடிக்கையில் ஈடுபடுத்தி தேசியத் தலைவரால் எவ்வாறு இப்பெருந்தொகை படைகளை வெற்றிகொள்ள முடிந்தது என்பதை நோக்கினால்; போராளிகளினதும் தளபதிகளினதும் வீரமும் மனஉறுதியும் தலைவரின் படைநகர்த்தும் தந்திரோபாயமுமே காரணம் என விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதிகளில் ஒருவரான கேணல். தீபன் ஓயாத அலைகள் இரண்டு நடவடிக்கையில் வெற்றியின் பின்னணி பற்றி கூறும்போது குறிப்பிட்டமை இங்கு நோக்கத்தக்கது.

களத்தில் போரிடும் இராணுவம் வெற்றியை நாடி நிற்பது இயல்பான விடயம். இதற்கு சிறிலங்கா இராணுவம் விதிவிலக்கல்ல. சிறிலங்கா இராணுவம் போரில் வெற்றி நிச்சயம் என்ற அதன் அரசியல் எஜமானத்தின் நம்பிக்கைக்கும் ஆசைக்கும் ஏற்ப வழிநடத்தப்பட்டு வருகின்றது. போரில் இறுதியான இராணுவ வெற்றியைத்தவிர வேறு ஏதாவது விளைவுகள் ஏற்படுமா என்பது பற்றி அரச தரப்பு அரசியல்வாதிகளோ, எதிர்க்கட்சி அரசியல்வாதிகளோ சிறிதளவும் சந்தேகம் கொள்வதில்லை. இவர்கள் தமது உறுதியான நம்பிக்கையை மக்கள் மத்தியில் வேரூன்றச் செய்வதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

போரின் இறுதி வெற்றிக்கு நாள் குறித்து வழங்கப்பட்ட வாக்குறுதிகள் பொய்த்துப்போன பின்பும் இந்த நம்பிக்கை தொடர்ந்து நீடித்துவரும். இவ்வாக்குறுதிகள்; யாவும் இவற்றை அள்ளிவழங்கி வந்தவர்களின் அனுபவமின்மையையே காட்டின. வாக்குறுதிகள் பொய்த்துப்போவது ஒருபுறமிருக்க நிபந்தனையற்ற சரணாகதிக்குப் படைகளை கொண்டுவந்துவிடுவதும் உண்டு.

தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆக்கிரமிப்புப்படைகளுக்கு எதிரான நடவடிக்கைகளானது ஒரு களைப்படைய வைக்கும் யுத்தமாகும். சிறிலங்காவின் படைத்துறை உயர்பீடம் ஓய்வுபெறுதல், இறப்பு, பதவி மாற்றம் போன்றவற்றால் அடிக்கடி மாற்றத்திற்குள்ளாகி வருகின்றது. ஆனால், புலிகள் இயக்கமோ அதன் ஆரம்பத்திலிருந்து இதுவரை தனியொருவராலேயே தலைமை தாங்கி நடத்தப்பட்டு வருகின்றது. இதனால், சிங்களத் தளபதிகளின் போர் அறிவைவிட விடுதலைப் புலிகளின் போர் அறிவுமிகவும் உயர்ந்ததாகவே இருக்க வேண்டும் என்பது மறுக்கமுடியாதது. தமது போர் தந்திரோபாயங்கள், போரிடும் ஆற்றல் அனைத்துக்கும் மேலாக வெற்றி தமக்கே என்ற மனஉறுதி ஆகியவற்றை தன்னகத்தே கொண்டிருந்தபோதும் அவர் தம்மைப்பற்றியோ போரின் வெற்றிகள் பற்றியோ பெருமிதமாகப் பேசிக்கொள்வதில்லை.

ஒரு நாட்டுக்கு எதிராக போரை மேற்கொண்டு வரும் எவரும் எதிர்ப்பாளர் ஒருவரால் உயிரிழப்பையும், உடல், உடமைச் சேதங்களையும் தாங்கிக்கொள்ள முடியும் என்பதை மரபு ரீதியான இராணுவ வல்லுநர்களால் கூட நினைத்துப் பார்க்க முடியாது.

படைப்பிரிவுகளில் உள்ள அணிகளை பெருக்க முடியாது விட்டாலும் நடவடிக்கைகளின் போது ஏற்படும் ஆளணி இழப்புக்களையாவது ஈடு செய்வதற்கு ஆட்களை திரட்டுவது கூட எவ்வளவு கடினமான காரியம் என்பதைத்தான் சிறிலங்காப் படை அதிகாரிகள் தமது சொந்த அனுபவம் மூலம் அறிந்துள்ளார்கள். படையிலிருந்து தப்பியோடியோரை மீண்டும் படையில் சேருமாறும் அவர்கள் கௌரவமான முறையில் தண்டனைகள் ஏதுமின்றி படையில் முன்பு பணியாற்றிய அதே பதவியிலேயே தொடர்ந்தும் அமர்த்தப்படுவார்கள் என்றும் சனாதிபதி சந்திரிகா அவர்களே மன்றாடிக் கேட்டுக் கொண்டதும் நல்ல உதாரணமாகும்.

எனவே, தமது எதிரிகளும் இந்த நிலையைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே அவர் நினைத்திருக்கின்றார். ஒவ்வொரு சமரிலும் ஏற்படும்; இழப்புக்களால் புலிகள் நிரந்தரமாகவே பலவீனப்பட்டு வருகின்றனர் என்றே அவர்கள் நம்பியிருக்கின்றனர். புலிகள் இயக்கம் தமது இழப்புக்களை எவ்வாறு ஈடுசெய்கின்றது என்பதையும் அதற்கு மேலாக தனது ஆளணியின் எண்ணிக்கையை தொடர்ந்தும் எவ்வாறு அதிகரித்து வருகின்றது என்பதையும் இவர்களால் புரிந்து கொள்ளவே முடியாது. ஒரு தேசியவாத இயக்கத்தின் உள்ளக ஆற்றலானது நாட்டின் மரபு ரீதியான படைத்துறை வல்லுநர்களுக்கு தெரியாதது மட்டுமல்ல, புரிந்துகொள்ள முடியாததும் கூட.

ஒரு அரசாங்கம் ஒரு தேசியவாத இயக்கத்துடன் எவ்வளவுகாலம் போரை நீடிக்கின்றதோ அந்தளவிற்கு அரசாங்கத்திற்கு எதிராகப்போரிடும் தேசியவாதிகளின் பலம் அதிகரிக்கின்றது. ஆனால், அரசுகளில் உள்ளவர்களின் நம்பிக்கையோ இந்த உண்மைக்கு மாறாகவே உள்ளது. இந்தத் தவறு போர் நடைபெறும் அரங்குகளில் மீண்டும் மீண்டும் சிறிலங்கா அரசாங்;கத்திற்கு புலிகளால் தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டு வந்திருக்கின்றது.

ஒரு நாட்டுக்கு எதிராக போரில் ஈடுபடும் தேசியவாதிகள் எவரும் எதிர்ப்பாளர்களால் பூண்டோடு அழிக்கப்பட்டதாக வரலாறு இல்லை. அப்போர்கள் முடிவுக்கு வந்தாலும் அதை நடத்துவபவர்கள் அழிந்துவிடுவதும் இல்லை. மாறாக, அவர்கள் ஆயுதங்களையும் நிலப்பிரதேசங்களையும் வைத்திருப்பதோடு, சமாதானத்திட்டத்தில் அரசுக்கு சமமான பங்களிகளாக இருப்பார்கள். மேலே குறிப்பிட்டப்பட்ட நாடுகளில் எல்லாம் நடந்தது இதுதான். இஸ்ரேல்- பி.எல்.ஓ.விற்கு இடையிலான காம்டேவிட் வாஷிங்டன் உடன்படிக்கையும் பொஸ்னிய ஹேக்சிக்கோவினால் முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட டெய்ரன் உடன்படிக்கையிலும் உலகின் மிகப் பலம் வாய்ந்த மத்தியஸ்தரான அமெரிக்காவே தலையிட்டுள்ளமையும் இங்கு குறிப்பிட முடியும்.

இதைவிட ஹிட்லரின் ரஷ்யப்படையெடுப்பு தோல்வியடைந்தமைக்கு பல்வேறு காரணங்கள் இருந்தபோதும் பிரதான விநியோகப்பாதையில் தடங்கல் ஏற்பட்டதே முக்கிய காரணம் என பிரபல இஸ்ரேலிய வரலாற்றாசிரியர் பீற்றர் வோன் ஹிரிவெல்ட் தனது பார்ப்பறோசா என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளைப் பொறுத்தவரை இவ்வாறான நடவடிக்கையினை வெற்றிகரமாக கையாண்டதும் இதுவரை நடந்த போரில் அவர்கள் வெற்றி கண்டமைக்கு ஒருவகைக் காரணம் எனலாம் இதற்கு தகுந்த உதாரணமாக ஓயாத அலைகள் இரண்டு நடவடிக்கை கிளிநொச்சியில் கரடிப்போக்குப் பகுதியிலும் பரந்தன் பகுதியிலும் தமது அணிகளை நகர்த்தி கிளிநொச்சிப்படைகளுக்கும் ஆனையிறவுப்படைகளுக்குமிடையிலான தொடர்பை துண்டித்த பின் கிளிநொச்சி தளத்தை தாக்கியழித்தமையை குறிப்பிடமுடியும்.

இவை அனைத்தையும் விட இன்று உலகிலேயே கெரில்லா அணித் தலைவர்களில் தலைசிறந்தவராகவும்,
விடுதலைப் புலிகளின் தலைவர் திகழ்கின்றமையானது அவர்களின் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு பலம் சேர்க்கும் மிக முக்கியமானதொரு காரணியாக அமைகிறது.

எனவே எதிரியானவன் எந்த வகையான போரியல் தந்திரோபாயங்களை கையாண்டாலும் அவற்றை மிக இலகுவாக வெற்றி கொள்ளக்கூடிய பதில் தந்திரோபாயங்களையும் திட்டங்களையும் வகுக்கும் தமிழீழ தேசியத்தலைவரின் படை நகர்த்தல் தாக்குதல் திட்டங்கள் என்பனவற்றிக்கு எந்தவொரு படைகளும் முன்னிற்க முடியாது. அத்தோடு, எந்தவொரு இராணுவ வல்லுநரோ சதாராணமானவர்களோ எதிர்பாhக்கின்ற வகையில் தலைவரின் போர்முனைத் தெரிவுகளோ, போர்க்கள நடவடிக்கைகளோ அமைவதில்லை என்பதையும்; கடந்த கால வரலாறுப் படிகள் எடுத்தியம்புகின்றன.

எனவே, மீண்டுமொருமுறை போர் மூளுமானால் அது எவ்வாறு அமையும் என்பது பற்றியும், அமையப்போகும் களம் எது என்பது பற்றியும் எவரோனும் இலக்கைத் தெரிவுசெய்ய முற்படுவார்களோயானால் நிச்சயமாக அது முட்டாள்தன தெரிவாகவே அமையும். மாறாக இவ்விடயத்தில் அரசு தரப்பு முந்திக்கொள்ளும் நிலை ஏற்படின் அதற்கு தலைவர் வழங்கும் பதிலை எதிர்கொள்ள அவர்களால் முடியுமா? என்ற நிலையும் கேள்விக்குறியே!


நன்றி: ஈழநாதம்



http://www.tamilnaatham.com/