Yarl Forum
இந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: இந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் (/showthread.php?tid=7105)



இந்தியாவும், இலங்கையி - Mathan - 05-29-2004

இந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும்

இன்று மாலை 6.30 மணியளவில் பாஸ்டன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் (இரண்டாவது மாடி, டி.டி.கே சாலை, சென்னை 18 ) "India and Ethnic Conflict in Sri Lanka" என்ற தலைப்பில் பேராசிரியர் V. சூர்யநாராயணன் பேசுகிறார். இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் "Centre for South & South East Asean Studies" இயக்குநராக இருந்தவர்.

நான் இந்தப் பேச்சுக்குப் போகிறேன். நாளை இதுபற்றி பதிவு செய்கிறேன்.


- Mathan - 05-29-2004

இந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 1

பிரக்ஞ்ய விஸ்வதர்ஷன் தொடர்பேச்சு வரிசையில் 26 ஏப்ரல் 2004 மாலை 6.30 மணிக்கு பேராசிரியர் வி.சூர்யநாராயணன் இந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் என்ற தலைப்பில் பேசினார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியான் (Asean) நாடுகளைப் பற்றிய படிப்புக்கான மையத்தின் இயக்குநராகப் பணியாற்றியவர் திரு. சூர்யநாராயணன்.

கூட்டத்திற்கு சுமார் 20 பேர் வந்திருந்தனர். பனிரெண்டு பேர் கல்லூரி மாணவர்கள் போலவும், நான்கைந்து பேர் வயதான பெரியோர்களாகவும் இருந்தனர். கல்லூரி மாணவர் போன்றோர் இந்தத் தொடர்பேச்சின் மற்ற பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருபவர் போலிருந்தது. (எடுத்துக்காட்டாக அடுத்த வாரத்திற்கானது Stress Management என்னும் தலைப்பில் ஒருவர் பேசப்போகிறார். இதற்கும் இந்த மாணவர் குழாம் அப்படியே வரலாம்.?) இந்தப் பேச்சு பற்றிய முன்னறிவிப்பு 'தி ஹிந்து' பத்திரிகையில் வெளியாகியிருந்தது. நானும் எனது வலைப்பதிவில் தகவல் இட்டிருந்தேன். ஆனால் இதுபோன்ற விஷயங்களைப் பற்றி யார் பேசினாலும், எத்தகைய கருத்தை முன்வைத்தாலும் சென்னைத் தமிழர்களுக்கு இந்த விஷயத்தில் அவ்வளவு நாட்டம் இல்லை என்று தெரிகிறது.

-*-

தொடக்கத்தில் இந்தியா-இலங்கை பற்றிய உறவை அறிந்து கொள்ள, இரண்டு முக்கியமான விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டுமென்று சொன்னார். (1) இந்தியாவைப் பற்றிய இலங்கைப் பெரும்பான்மைச் சிங்களவர்களின் கருத்து (2) இந்தியாவின் மைய அரசில் இலங்கை பற்றிய கொள்கைகளை வரையறுத்தவர்களின் தமிழ்நாடு/இலங்கைத் தமிழர்கள் பற்றிய அறியாமை

<b>இந்தியா பற்றிய இலங்கையினரின் கருத்து</b>

* 1948 பெப்ரவரியில் சுதந்திரம் (புதிய அரசியல் நிர்ணயச் சட்டம்). இந்திய சுதந்திரத்தின் போது நடந்தது போலல்லாமல் சிறிதும் சண்டையின்றி, இரத்தம் சிந்தாமல் சுதந்திரம் பெற்றது சிலோன். அது மட்டுமின்றி முதல் அரசிலிருந்தே தமிழர்களுக்கு அமைச்சரவையிலும் பங்கிருந்தது. ஐவர் ஜென்னிங்ஸ் இலங்கையை 'மாடல் காலனி (Model Colony)' என்று பெருமையாகக் குறிப்பிட்டிருந்தார்.

* தொடக்கத்திலிருந்தே இலங்கை மக்கள் (சிங்களவர்கள்?) இந்தியாவின் மீது காதலும், வெறுப்பும் உள்ளவர்களாக இருந்தனர். (love hate relationship). மதம், கலாச்சாரம், மொழி ஆகிய பலவற்றிலும் இலங்கை இந்தியாவிலிருந்து பலவற்றைப் பெற்றது. ஆனால் இலங்கை மக்கள் இந்தியாவினால் இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளையும் என்று நம்பினர்.

* சுதந்திரத்திற்கு 7-8 வருடங்கள் முன்னரே சிலோனில் இந்தியக் குடியினர் (தோட்டத் தொழிலாளர்கள்) பற்றிய ஒரு பிரச்சினை சம்பந்தமாக இந்திய தேசிய காங்கிரஸ் பட்டாபி சீதாராமையாவை சிலோன் அனுப்பத் தீர்மானித்தது. ஆனால் சிங்களர்கள் சீதாராமையாவை தமிழர் என நினைத்து அவர் வருவதை எதிர்த்தனர். [சீதாராமையா ஒரு தெலுங்கர்.] பின், ஜவஹர்லால் நேரு அவருக்கு பதிலாக இலங்கை சென்றார். அவர் திரும்பி வந்து அப்பொழுதைய காங்கிரஸ் தலைவர் ராஜேந்திர பிரசாதுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:

"என்றாவது ஒருநாள் பிரிடிஷ்காரர்கள் இந்தியாவையும், சிலோனையும் விட்டுவிட்டுத்தான் போக வேண்டும். விடுதலை அடைந்த பின்னர், இந்தியா சிலோனை இலட்சியம் செய்யாமல் தனியாக வாழ முடியும். ஆனால் சிலோனால் இந்தியாவை அண்டாமல் இருக்க முடியாது. ஆனால் சிங்கள இனவாதிகள் (Sinhala Chauvinists) அப்படியொரு நிலையைக் கடுமையாக எதிர்ப்பார்கள்" (தோராயமான மேற்கோள், தவறு இருக்கலாம்....)

<b>இந்தியாவின் இலங்கை பற்றிய கொள்கைகள்</b>

* பலவேறு குழுக்கள் தனித்தனியாக இலங்கை பற்றிய கொள்கைகளை உருவாக்கி வைத்திருந்தன. இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம், RAW, IB, தமிழ்நாடு அரசாங்கத்தின் உளவுத்துறை, இராணுவம், கடற்படை என்று பலர், ஆனால் இவர்களிடையே ஒருமித்த கருத்து ஏதுமே இல்லை.

* மேல்மட்டத்தில் இருந்த பல அதிகாரிகளிடம் தமிழர்கள் பற்றிய புரிதல் இல்லாமல் இருந்தது. ஒரு உதாரணம் கொடுத்தார். ரொமேஷ் பண்டாரி வெளியுறவுச் செயலராகவும், ஜே.என்.திக்ஷித் இலங்கைக்கான இந்தியத் தூதுவராகவும் இருந்த நேரம் அது. அப்பொழுது ரொமேஷ் பண்டாரி ஒரு திட்ட அறிக்கையை உருவாக்கி அதனை திக்ஷித்துக்கு அனுப்பி அதனை இலங்கைத் தமிழ் தலைவர்களிடையே சுற்றறிக்கையாக விடச்சொல்லியிருந்தாராம். பின் ரொமேஷ் பண்டாரி கொழும்பு வந்திறங்கிய பின்னர் திக்ஷித்திடம் 'செல்வநாயகத்திடம் அந்த அறிக்கையைக் கொடுத்து விட்டீர்களா?' என்று வினா எழுப்ப, பதிலாக திக்ஷித் "நீலம் திருச்செல்வத்தை தானே சொல்கிறீர்கள்? செல்வா இறந்து பத்து வருடங்களுக்கு மேலாகிறது" என்று பதிலளித்தாராம். அதற்கு பண்டாரி "செல்வாவோ, திருச்செல்வமோ, இந்தத் தமிழ்ப்பெயர்களே புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது" என்றாராம். ஆக ஆள் யாரென்று கூட அறியாதவர்கள் பலர் இந்தியாவின் இலங்கை பற்றிய கொள்கைகளை உருவாக்குவதில் முன்னால் இருந்தனர்.

* 1987இல் IPKF இலங்கையில் இருக்கையில் விடுதலைப் புலிகளை ஆயுதங்களை ஒப்படைக்கச் செய்ய வேண்டிய வேலை IPKFஇடம் வந்தது. அப்பொழுது ராஜீவ் காந்தி தலைமையில் நடந்த ஒரு கூட்டத்தில் கே.சி.பந்த், ஜெனரல் சுந்தர்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர். ராஜீவின் கேள்விக்கு பதிலளிக்கும்போது சுந்தர்ஜி, வெறும் 72 மணிநேரங்களில் யாழ்ப்பாணம் விழுந்து விடும் என்று பகட்டாகப் பதில் சொன்னாராம். (72 மணிநேரம் 72 நாட்களாகி, பின்னர் மாதங்களாகிப் போயின).


- Mathan - 05-29-2004

இந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 2

சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கையின் வெவ்வேறு காலங்களில் இந்தியாவின் பங்கு பற்றி சுருக்கமாக விளக்கினார்.

* தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நிலை: பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவிலிருந்து உலகெங்கும் வேலைக்காரர்களை அழைத்துச் செல்லும்போது அவர்கள் எந்த நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்களோ, அந்த நாட்டில் இருப்பவர்களுக்கான அத்தனை உரிமைகளும் அழைத்துக்கொண்டு வரப்பட்டவர்களுக்கும் கொடுக்கப்படும் என்ற உத்தரவாதத்துடனேதான் அழைத்துச் சென்றனர்.

* சுதந்திரம் அடைந்தவுடன் இலங்கை பாராளுமன்றம் எடுத்த முதல் சில முடிவுகளிலே ஒன்று இலங்கைக் குடியுரிமைச் சட்டம். இதன்படி 19, 20ஆம் நூற்றாண்டுகளில் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்திய வம்சாவளி (தமிழர்கள்) மக்களுக்கு இலங்கைக் குடியுரிமை பெறுவது மிகக்கடினமாக்கப்பட்டது. [தோட்டத் தொழிலாளர் அல்லாத தமிழ் பேசும் இலங்கையினர் அந்தத் தீவின் ஆதிகாலத்தவர் (native to the island)]

* இலங்கைக் குடியுரிமை பெற ஒருவரது பிறப்புச் சான்றிதழ், அவரது தந்தையின் சான்றிதழ், பாட்டனின் சான்றிதழ் தேவைப்பட்டது. அப்பொழுது பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது அப்பொழுதைய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர், பிரதமர் சேனாநாயகாவைப் பார்த்து உங்களால் இந்த சான்றிதழ்களை கொண்டு வர முடியுமா என்று கேட்டதற்கு அவருமே தன்னாலே முடியாது என்றுவிட்டார். [b]<span style='color:#2400ff'>தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்துடன் உருவாக்கப்பட்ட சட்டம் - எனவே எதிர்ப்புகள் இருந்தும் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு பெரும்பான்மை தோட்டத் தொழிலாளர்கள் எந்நாட்டின் குடிமக்களும் இல்லை என்ற நிலை உருவானது. இலங்கைத் தமிழர்களும் இதற்குத் துணைபோயினர். அப்பொழுது பிரதமர் செனாநாயகாவிற்கு சட்டம் இயற்ற துணைபுரிந்தவர் சர். கந்தையா எனப்படும் தமிழர்.

* இந்தியப் பிரதமர் நேரு தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையின் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்கள், அதனால் அவர்களுக்கு இலங்கைக் குடியுரிமைதான் கிடைக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தார். இலங்கைத் தலைவர்கள் அது இந்தியாவின் பிரச்சினை என்ற நிலையில் இருந்தனர். லால் பஹாதூர் சாஸ்திரி இந்தியப் பிரதமரானபோது, இந்தியா அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவு வைத்திருக்கவில்லை என்பதை உணர்ந்து அதை மாற்றும் விதமாக, இலங்கைப் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகவுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டு பல தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்தியக் குடியுரிமையை வழங்கினார்.

* கடந்த வருடம் (2003) ரணில் விக்கிரமசிங்கே அனைத்துத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் இலங்கைக் குடியுரிமை வழங்கும் வரையில் இந்தப் பிரச்சினை தனியாகத் தொடர்ந்து வந்தே இருந்தது.

* இதற்கிடையில் தொடக்கத்தில் சுமுகமான உறவோடு ஆரம்பித்த இலங்கை அரசியலில் நாளடைவில் சிங்களவருக்கும் தமிழருக்கும் இடையில் போட்டி, பொறாமை என்று பிரச்சினை தலைதூக்க ஆரம்பித்தது. பல இனவெறிக் கொலைகளும் நிகழ்ந்தேறின. ஆனால் இந்தியா 1947-1981 வரை இதனை இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்று தலையிடாமலேயே இருந்து வந்தது.

* 1981இல் நடந்த வன்முறையைக் கண்டித்து தமிழ்நாட்டில் மாபெரும் போராட்டம் நடைபெற ஆரம்பித்தது. திமுக பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரச்சினையை பாராளுமன்றத்தில் வெகுவாக எடுத்துப் பேச ஆரம்பித்தனர். அதனால் இந்திய அரசு தலையிடாமல் இருந்ததிலிருந்து தலையிட்டு சிங்கள, தமிழ் தலைவர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தத் துணைபுரியும் இடையீட்டாளராக (mediator) இருக்க முனைந்தது. (மையமாக இருக்கும் அதிகாரத்தை அ-மையப்படுத்துவது, பொருளாதார, சட்டமியற்றும் அதிகாரங்களை தமிழர் பிரதேசங்களுக்கு வழங்குவது போன்ற கொள்கைகளை வலியுறுத்துவது.)

* 1983இல் மாபெரும் இனப்படுகொலை தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது.

* 1983இல் ஜெயவர்தனே இராணுவ உதவி வேண்டி பல நாடுகளுக்கும் ஆட்களை அனுப்பினார். UK, பாகிஸ்தான், அமெரிக்கா என்று பல நாடுகளுக்கு சென்றாலும் இந்தியாவிடம் உதவியெதுவும் கேட்கவில்லை. அப்பொழுது வெளியுறவுத் துறை அமைச்சராயிருந்த நரசிம்ம ராவை இந்திரா காந்தி கொழும்புவுக்கு அனுப்பி ஜெயவர்தனேயிடம் தனது அதிருப்தியை வெளியிட்டார். அப்பொழுதுதான் இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு இடையீட்டுடன், ஆயுத உதவியும் செய்ய முடிவு செய்தது.

* 1983இல் புது தில்லி சென்ற அமிர்தலிங்கம் இந்திரா காந்தியுடன் (ஜி.பார்த்தசாரதி ஆலோசகர்) பேசியபோது ஜெயவர்தனே தமிழர் போராளிகளைத் தாக்கினால் போராளிகளால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமா என்று கேட்ட கேள்விக்கு, அமிர்தலிங்கம் மொத்தமாகவே 300 போராளிகள்தான் இருக்கின்றனர், அவர்களால் தாக்குப் பிடிக்க முடியாது என்றாராம். அதனைத் தொடர்ந்து இந்திய மைய அரசு முடிவில் இலங்கயிலிருந்து பல போராளிக் குழுக்களை இந்தியா கொண்டு வந்து அவர்களுக்கு போர்ப்பயிற்சியும், ஆயுதங்களும் வழங்கப்பட்டன.

* 1987இல் தமிழ்ப்போராளிகளுக்கும் இலங்கைப் படைகளுக்குமான் யுத்தம் பெரிதான வேளை. இலங்கை மீண்டும் இராணுவ உதவி வேண்டி அமெரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான் என்று பல நாடுகளுக்கும் செல்ல ஆரம்பித்தது. வடவிலங்கை உணவுப்பற்றாக்குறையால் தவித்த போது ராஜீவ் காந்தி இராணுவ விமானங்கள் மூலம் யாழ்ப்பாணத்தில் உணவுப்பொருட்களைப் போட வைத்தார். ஜெயவர்தனேயிடம் இந்தியாவின் இராணுவ பலத்தைக் காண்பிக்கும் வகையிலும் இது அமைந்தது. இதைத் தொடர்ந்து இந்திய-இலங்கை ஒப்பந்தமும், அமைதிப்படை (IPKF) இலங்கை செல்வதும் நடந்தது. இலங்கை அரசுக்கும் தமிழ்ப்போராளிகளுக்கும் இடையில் நடக்க வேண்டிய ஒப்பந்தத்திற்கு பதில் இந்தியாவை உள்ளுக்கிழுத்து இந்திய-இலங்கை ஒப்பந்தமாக்கியது ஜெயவர்தனேயின் திறமை. அதன்மூலம் இலங்கைப் போராளிகளை வழிக்குக் கொண்டு வரவேண்டிய வேலை இந்தியர்களிடம் அவர் ஒப்படைத்து விட்டார். அவ்வாறு செய்து விட்டு மீண்ட இலங்கைப் படையினரைக் கொண்டு தெற்கில் ஆயுதமேந்திப் போராடும் ஜனதா விமுக்தி பெரமுனவை அழிக்க ஆரம்பித்தார்.

* பிரபாகரனின் சுடுமலைப் பேச்சு. பிரபாகரன் இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றாது, சிங்கள அரசை நம்பமுடியாது என்று சொன்னது.

* IPKF புதைகுழியில் மாட்டியது. விடுதலைப்புலிகளிடம் இந்தியப் படைகளிடம் இருந்ததை விட திறமையான தகவல் தொடர்பு சாதனங்கள், ஆயுதங்கள், உளவுத்திறன்.

* பிரேமதாசா புலிகளுடன் (மறைமுக) ஒப்பந்தம் செய்து கொண்டு புலிகள் மூலமாக IPKFஐ விரட்ட நினைத்தது. பிரேமதாசாவின் வேண்டுகோளின்படி வி.பி.சிங் IPKFஐ திரும்ப அழைத்துக் கொண்டது.

* ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளால் கொலை செய்யப் பட்டது. அதற்கு முன்னரே சென்னையில் எதிரிப் போராளிகளை க் கொன்றது.

* ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு இந்திய அரசுகள் இலங்கைப் பிரச்சினையைக் கைகழுவி விடும் கொள்கையை (hands-off policy) மேற்கொண்டனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்தனர். இந்திய நீதிமன்றம் பிரபாகரனை 'proclaimed offender' என்று சொல்வது. இந்திய அரசு பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கையைக் கேட்டுக் கொள்வது.

* இலங்கையில் தொடரும் போர், பின் போர் நிறுத்தம், அமைதிப் பேச்சுவார்த்தை. </span>


- Mathan - 05-29-2004

இந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 3

தமிழகத்தின் தனி திராவிட நாடு கோரிக்கைக்கும், இலங்கையில் தனி ஈழம் கோரிக்கைக்கும் பெருத்த வேறுபாடுகள் உள்ளன.

* பெரியார் இந்திய சுதந்திர தினத்தை துக்க தினம் என்றவர். அன்றுமுதல்தான் தமிழர்களின் அடிமைத்தனம் ஆரம்பமாகிறது என்பது அவர் கருத்து.
* பின்னர் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த திமுக 1967இலிருந்து தமிழகத்தில் ஆட்சியில் இருந்ததோடு மட்டுமின்றி மத்தியிலும் ஆட்சியின் அங்கமாக இருந்தது.
* நாளடைவில் தனிநாடு கோரிக்கை நீர்த்துப்போய்விட்டது. ஒருகாலத்தில் தனிநாடு கேட்டவர்கள் இன்று சென்னை கோட்டையில் இந்திய தேசியக் கொடியை ஏற்றுவதில் தயங்குவதில்லை.
* தேவ கௌடா இந்தியப் பிரதமரானதுதான் இந்திய அரசியலில் மிக முக்கியமான நாள். அன்றுதான் ஹிந்தியே பேசத்தெரியாத ஒருவர் இந்தியாவின் பிரதமரானார்.
* மிகுந்த பதட்டத்தோடும், வன்முறையோடும் தொடங்கிய இந்தியா நாளடைவில் தேசியவாதம் வலுப்படுமாறு மாறியுள்ளது.

* <span style='color:#1b00ff'><b>இலங்கை இதற்கு எதிர்மறை. தொடக்கம் அமைதியுடனும், ஒருவரை ஒருவர் மதிக்குமாறும் இருந்தது போய் இன்று எதிரெதிரே இருந்தவாறு நாட்டைப் பிரிக்கும் கோரிக்கை வந்துள்ளது. Concensus politics -> Competitive politics -> Conflicting -> Conflagration</b>

===

குறுகிய வரலாற்று விளக்கத்திற்குப் பிறகு தற்போதைய நிலையின் இந்தியா என்ன செய்யவேண்டும் என்ற தனது கருத்துகளுக்கு வந்தார்.

* இந்தியா நேரடியாக ஈடுபடவேண்டும்
* ஏற்கனவே இந்தியாவின் 'இந்தியன் ஆயில்' நிறுவனம் இலங்கையில் பெட்ரோல் பொருட்கள் விற்பனை செய்யும் உரிமத்தை பெற்றுள்ளது. பல இந்திய வர்த்தக நிறுவனங்கள் இலங்கையில் கால் பதிக்க ஆரம்பித்து விட்டன.
* இந்தியாவும், இலங்கையும் பாதுகாப்புத்துறையில் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன (? அல்லது ஒப்பந்தத்திற்கான திட்டத்தில் இறங்கியுள்ளன?)
* முன்னர் இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்களைக் கடத்திச் சென்றனர், இப்பொழுது கடல்புலிகள் (Sea Tigers) இதையே செய்கின்றனர்.
* கடல்புலிகளினால் இந்தியாவிற்குக் கெடுதல்தான். இந்தியாவின் எல்லை நிலத்தோடு நின்று போய்விடுவதில்லை. அதையொட்டிய கடலும் ஒரளவிற்கு இந்தியாவினுடையதுதான்.
* ஏற்கனவே கடல்புலிகள் வடக்குக் கடற்கரையைத் தங்கள் கையிருப்பில் வைத்துள்ளனர். இப்பொழுது அமைதிப்பேச்சின்போது அவர்கள் முன்வைத்துள்ள திட்ட வரைவின்படி கிழக்குக் கடற்கரையையும் அவர்களின் கண்காணிப்பிற்கு விட்டுவிடவேண்டும் என்கிறார்கள். இது இந்தியாவிற்கு நல்லதல்ல.
* இந்தியா இலங்கையின் ஒற்றுமை/ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் வராவண்ணம் அங்கு பெடரல் முறை வருமாறு முயல வேண்டும். ஆனால் அதற்கு சிங்களக் கட்சிகளின் (SLFP - UNP) போட்டி அரசியல் இதற்கு இணக்கமாக இல்லை.
* தமிழீழம் உருவாவதை இந்தியா அனுமதிக்கக் கூடாது.
* விடுதலைப்புலிகள் கொடுத்துள்ள இடைக்காலத் தீர்வு என்பதே தனி நாட்டிற்கான முன்னேற்பாடுதான்.</span>


- Mathan - 05-29-2004

இந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 4

இப்பேச்சு மேலோட்டமான பேச்சே தவிர ஆழமான இலங்கைப் பிரச்சினை பற்றிய கலந்துரையாடல் அல்ல. பேச்சினைக் கேட்க வந்தவர்களுக்கு இலங்கைப் பிரச்சினை பற்றிய புரிதல்கள் ஏதும் இருப்பது போலத் தோன்றவில்லை, அல்லது அப்படிப்பட்ட புரிதல்கள் வெகு மேலோட்டமானதே. தொடர்ந்த கேள்வி-பதில்களில் இது வெளிப்படையானது. சற்றே கடினமான கேள்விகளை நான் ஒருவன்தான் கேட்டேன் என்று நினைக்கிறேன்.

சில கேள்விகளும்-பதில்களும்:

நான்: இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளை அடக்கக்கூடிய நிலையில் இல்லை. இந்தியா இலங்கைப் பிரச்சினையில் ஈடுபடவேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், இலங்கை துண்டாடப் படக்கூடாது என்றும் சொல்கிறீர்கள். விடுதலைப் புலிகள் தனியீழக் கோரிக்கையிலிருந்தோ விலகவில்லை. அப்படியானால் இந்தியா இராணுவ ரீதியாக விடுதலைப் புலிகளை எதிர்த்துப் போரிட வேண்டும் என்கிறீர்களா?

சூ.நா: இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளை எதிர்க்கும் நிலையில் இல்லை என்பது உண்மையே. ஐந்துக்கு ஒருவர் இராணுவத்திலிருந்து விலகியோடிக் கொண்டிருக்கிறார் (desertion). விடுதலைப்புலிகளுக்கு ஒப்பான வெறியோடு போரிடக்கூடிய எண்ணம் இலங்கை இராணுவ வீரர்களுக்கு இல்லை. அத்துடன் உளவுத்திறனும் குறைந்த நிலையிலேயே உள்ளது. இலங்கை இராணுவத்துக்கு வரவேண்டிய சில மார்டர்கள் ஆப்பிரிக்க நாடு ஒன்றின் வழியாக இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் விடுதலைப்புலிகள் அந்தக் கப்பலை வழிமறித்து இலங்கை அரசு ஏஜெண்டுகள் போல வேடமணிந்து அந்த இராணுவத் தளவாடங்களைக் கைப்பற்றிவிட்டு லண்டனிலிருந்து கொழும்பு அமெரிக்கத் தூதரகத்திற்கு 'உங்கள் நண்பர்களிடம் சொல்லுங்கள்.... அவர்களுக்கான இராணுவத் தளவாடங்களை நாங்கள் பெற்றுக்கொண்டு விட்டோமென' என்று செய்தியனுப்பினர்.

இந்தியா என்ன செய்ய வேண்டும்?
- இந்தியக் கடற்படை மூலமாக விடுதலைப்புலிகள் கொண்டு வரும் இராணுவத் தளவாடங்களை அறவே தடுத்து நிறுத்த வேண்டும்.
- இலங்கை இராணுவத்திற்கு போதிய பயிற்சிகளும், ஆயுதங்களும் தர வேண்டும்
- தேவைப்பட்டால் நேரிடையாக இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் கடல்புலிகள் மீது குண்டெறிந்து அழிக்க வேண்டும்.
- முக்கிய இலங்கைக் கட்சிகளை ஒன்றாகக் கொண்டு வந்து இணைந்து செயல்பட வைக்க வேண்டும். அதன்மூலம் தமிழர் பகுதிகளுக்குத் தன்னுரிமை (autonomy) வழங்க வகை செய்ய வேண்டும் - ஆனால் இலங்கையின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்காதவாறு.

நான்: ஏன் நாம் 'தேசியவாதம், ஒற்றுமை, ஒருமைப்பாடு' போன்ற பழங்கொள்கைகளுக்குள் உலவிக்கொண்டு இலங்கையின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கக் கூடாது என்று பேச வேண்டும்? செக்கோஸ்லோவாகியா -> செக், ஸ்லோவாகியா என்று பிரியவில்லையா? தனியீழம் கூடாது என்று எதற்காக உறுதியாகச் சொல்கிறீர்கள்?

சூ.நா: நவீன சிந்தனைப்படி ஒருவருக்குப் பல தனித்துவங்கள் இருக்கலாம். நான் ஒரு நாட்டின் குடிமகனாக இருந்துகொண்டே, கலாச்சாரப்படி மற்ற குடிமக்களிடமிருந்து வேறுபட முடியும். எனவே தனி நாடு ஒன்றுதான் வழி என்று நினைக்கக் கூடாது. விடுதலைப்புலிகளின் கருத்து 'அந்நியப்படுத்தப்பட்ட சிறுபான்மையினரால் பெரும்பான்மையினரோடு சேர்ந்து வாழ முடியாது' என்பதே. இது சரியல்ல.

அதே சமயம் தமிழீழம் என்பதும் ஒரு சரியான தீர்வல்ல. கொழும்புவில் யாழ்ப்பாணத்தைக் காட்டிலும் அதிக தமிழர்கள் வசிக்கின்றனர். தமிழீழத்தினால் தோட்டத் தொழிலாளர்களுக்கு என்ன நன்மை? யாழ்ப்பாணத் தமிழர்கள் வெள்ளாள சாதியினைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு தலித் பின்னணியிலிருந்து வந்த தோட்டத் தொழிலாளர்கள் மீது எந்தவொரு அனுசரணையும் கிடையாது. இலங்கையில் கல்வித்துறையில் ஒவ்வொரு வகுப்பு மாணவனும் அவரவரது சமயப் பாடத்தினைப் படிக்க வேண்டும். ஹிந்து தமிழர்கள் பாடத்திற்குப் பெயர் 'சைவ நெறி'. இது பெரும்பான்மை வெள்ளாள மக்களின் மதம் பற்றியது. கிழக்குப் பகுதி, தோட்டத் தொழிலாளர்களது சமயப் பழக்க வழக்கம் வேறு. தோட்டத் தொழிலாளர்கள் தலித் கடவுள்களை வணங்குபவர்கள். இந்தக் குழந்தைகள் பள்ளியில் படிக்கும்போது தங்களின் பழக்கவழக்கத்தை இழிவானது என்று நினைக்குமாறு உள்ளது வெள்ளாள 'சைவ நெறி' பாடங்கள்.

விடுதலைப்புலிகள் தமிழ் முஸ்லிம்கள் மீது அடக்குமுறையை அவிழ்த்துவிட்டு 72 மணிநேரத்திற்குள் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றனர்.

எனவே தமிழீழம் என்று தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இருக்ககூடிய ஒரு நாடாக இருக்குமென்று தோன்றவில்லை. அங்கு சிறுபான்மையினரின் கலாச்சார தனித்துவம் மறுக்கப்படும்.

விடுதலைப்புலிகள் தங்களுக்கெதிரான மாற்றுக் கருத்துள்ளவர்களை ஒழித்து விடுவார்கள்.

வேறொருவர் கேள்வி: இந்தியா பங்களாதேசத்தில் தலையிட்டு பாகிஸ்தானிலிருந்து பங்களாதேசம் பிரிவதற்குக் காரணமாக இருந்ததைப் போல இலங்கையில் தலையிட்டு நாட்டை இரண்டாக்கக் கூடாதா?

சூ.நா: பங்களாதேசத்தில் இந்தியாவின் நிலை வேறு. அங்கு நாம் பாகிஸ்தான் இரண்டாவதை விரும்பினோம். ஆனால் அப்படி இலங்கை இரண்டாவதை நாம் எதிர்க்க வேண்டும்.

கேள்வி: வடக்கில் பாகிஸ்தான் இந்தியாவிற்கு தீராத தலைவலியைக் கொடுத்துக்கொண்டிருப்பதைப் போல தமிழீழம் தெற்கில் இந்தியாவிற்குத் தொல்லையைக் கொடுக்குமா?

சூ.நா: நிச்சயமாக. ஏற்கனவே கடல்புலிகள் இலங்கை மீனவர்களைத் தூண்டி இந்திய மீனவர்களைக் கடத்துவது, அவர்களை விடுவிக்க பணம் வாங்குவது என்றவாறு இருக்கிறார்கள். இந்திய மீனவர்களுக்கு கடல்புலிகளால் தொல்லைதான்.

கேள்வி: பிரபாகரனுக்கு அடுத்த தலைமுறையாக மற்ற தலைவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருக்கின்றனரா?

பதில்: பிரபாகரன் வேறெந்தத் தலைவரையும் தலைதூக்க விடுவதில்லை. ஆசியத் தலைவர்களின் வயதைப் பார்க்கையில் பிரபாகரன் இளமையானவர். விடுதலைப்புலிகள் இயக்கம் மிகவும் கட்டுப்பாடான இயக்கம். Strategic முடிவுகள் அனைத்தையும் எடுப்பது பிரபாகரன் மட்டுமே. ஆனால் முடிவெடுத்தவுடன் அதை எப்படி நடத்துவது என்பது பொட்டு அம்மன் போன்றோரின் கையில் விடப்படும்.

-*-

அதிக நேரம் இல்லாத காரணத்தால் பேச்சும், கேள்வி பதிலும் அத்துடன் முடிவடைந்தது. மேற்சொன்ன கே-ப வுடன் பல அர்த்தமற்ற கேள்விகளும் கேட்கப்பட்டன.


- Mathan - 05-29-2004

இந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 5

என் சில உரத்த கேள்விகள்:

1. ராஜீவ் காந்தி கொலை தவிர்த்து, ஏன் இந்திய அரசு விடுதலைப்புலிகளுக்கு எதிராக இருக்க வேண்டும் என்று சூ.நா சொல்லவில்லை. வேறெங்காவது எழுதியிருக்கிறாரா என்று தேட வேண்டும்.

2. ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டிருந்தாலும் அதற்காக நம்மை வெகு நெருங்கிய நாட்டில், நம் கலாச்சார, மொழி, மதத்தோடு வெகு நெருங்கிய ஒரு இனத்தின் எதிர்காலத்தைப் பற்றிய விஷயத்தில் ராஜீவ் காந்தி கொலையை சற்று மறந்து விட்டு தொலை நோக்கோடு ஏன் இந்திய அரசு ஈடுபட மறுக்கிறது?

3. இந்திய அரசாங்கத்தை எதிர்க்கும் நாகாலாந்து இயக்கம் (National Socialist Council of Nagaland), காஷ்மீர் போராளிகள், அவர்களுக்கு ஆதரவான ஹூரியத் அமைப்பு ஆகியவற்றுடன் அமைதியை விரும்பி பேச்சுவார்த்தை செய்யும் இந்திய அரசு ஏன் விடுதலைப்புலிகளுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசுவதில்லை? இலங்கை அரசு கூட விடுதலைப்புலிகளை ஏற்றுக்கொண்டு விட்டது. அதாவது விடுதலைப்புலிகளோடு நேரடிப் பேச்சுவார்த்தை இன்றி எந்தப் பலனும் இருக்காது என்று அவர்களே தெரிந்து கொண்ட பின்னரும் ஏன் இந்திய அரசு இதனை ஏற்க மறுக்கிறது?

4. இந்தியாவின் இலங்கை பற்றிய கொள்கைகளை இன்று உருவாக்குவது யார்?

5. தமிழீழம் என்ற அமைப்பு உருவானாலும், இந்த நாடும் இந்தியாவினை பெருமளவு வர்த்தகத் துறையில் நம்பித்தானே இருக்க வேண்டும்? இது 'நான் பெரிய ஆள்' என்னும் நினைப்பில் சொல்வதல்ல. ஒரு நாட்டிற்குத் தேவையான உணவு முதற்கொண்டு, எரி-எண்ணெய், அடிப்படைக் கட்டுமான வசதி ஆகிய அனைத்திற்கும் இதுபோன்ற வளங்கள் இல்லாத சிறிய நாடு அதைக் கொடுக்கக் கூடிய பெரிய அண்டை நாட்டுடன் சுமுகமான உறவுடன்தானே இருக்க வேண்டும்? ஏன் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள நாடு இந்தியாவிற்கு எதிரியாக இருக்கும் என்று சில/பல இந்திய அறிஞர்கள் நினைக்கிறார்கள்?

6. தனி ஈழம் ஏற்பட்டால் அதனால் அடுத்து தனித் தமிழ்நாடு என்ற கோரிக்கை சில தமிழ்த் தீவிரவாத அமைப்புகளால் முன்வைக்கப்படும் என்ற பயமா? இப்பொழுதைய நிலைமை அப்படி இருப்பதாகத் தெரியவில்லையே? இந்தியா போன்ற ஒரு பெரிய சந்தையின் அங்கமாக இருப்பதுதான் தமிழகத்தின் பலம், தமிழ் மக்களின் வாழ்வுயர வழி என்றுதானே இன்று திமுக கூட தனித்தமிழ்நாடு போன்ற சிந்தனைகளை ஏறக்கட்டி வைத்துவிட்டது?

7. தமிழீழம் உருவானால் இலங்கையில் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்கள் நிலை என்னவாகும்? தோட்டத் தொழிலாளர்கள் நிலை என்ன? வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள சிங்கள, முஸ்லிம்கள் நிலை என்ன?

8. அமைதிப் பேச்சுவார்த்தை மேற்கொண்டு முன்னேற தடைகற்கள் என்னென்ன? இந்தியா எந்த வகையில் இந்தத் தடைகளை நீக்க உதவ முடியும்? பெடரல் அமைப்பிலான இடைக்காலத் தீர்வு ஒன்றில் எம்மாதிரியான அரசு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் அமையும்? அவ்விடங்களில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான கருத்துடையவர்களின் நிலை என்னவாகும்?

9. தமிழீழம் அல்லாது ஒருமித்த (புதிய) அரசியல் நிர்ணயச் சட்டத்தின் கீழ் பெடரல் முறைப்படியான ஒரு ஆட்சி முறை இலங்கையில் சாத்தியமா? அதற்கும் சிங்களத் தீவிரவாதக் கருத்துடையவர்களிடமிருந்து எந்தவகை எதிர்ப்பு இருக்கும்? பெரும்பான்மைச் சிங்களவர்களின் கருத்து என்ன?

10. இலங்கையில் அமைதி திரும்ப, முக்கியமாக இலங்கைத் தமிழரது துயர் குறைய/நீங்க இந்திய அரசின், இந்திய மக்களின் உதவி நிச்சயம் தேவை என்று விடுதலைப் புலிகள் நினைக்கிறார்களா? அல்லது தேவையில்லை என்று நினைக்கிறார்களா? அப்படித் தேவை என்று நினைத்தால் அதற்கு வசதியாக இந்திய அரசியல்வாதிகள், கட்சித் தலைவர்கள், அறிஞர்கள், ஊடகங்கள் ஆகியோரின் இலங்கைப் பிரச்சினை பற்றிய நிலைப்பாட்டினை மாற்ற விடுதலைப்புலிகள் என்ன முயற்சி எடுத்து வருகின்றனர்? விடுதலைப்புலிகளால் இந்தியாவில் சட்டம் ஒழுங்கிற்கு இடையூறு இருக்கும் என்று நிலவிவரும் கருத்தை மாற்ற விடுதலைப்புலிகள் என்ன முயற்சி எடுக்கின்றனர்?

11. இன்றைய நிலையில் தமிழகத்திலேயே தமிழர்களுக்கு இலங்கைப் பிரச்சினை பற்றி ஒன்றும் தெரிவதில்லை. ஈடுபாடில்லாமைதான் (apathy) நிலவிவருகிறது. விடுதலைப்புலிகள் அமைப்பு தடைபட்டிருக்கும் வரையில் விடுதலைப்புலிகள் அமைப்பை முன்னிறுத்திப் பேசுவதும் பிரபாகரனின் படங்களுக்கு மாலை போட்டு, தெருவில் போஸ்டர் விற்பதும் ஜெயலலிதா போன்ற விடுதலைப்புலிகள் எதிர்ப்பாளர்களின் கோபத்துக்கு ஆளாகி நீதிமன்றங்களுக்குச் செல்ல நேரிடும். இந்நிலையில் விடுதலைப்புலிகள் எதிர்ப்புக் கருத்துகள் மட்டுமே தமிழகத்தில் பரவ வாய்ப்பு உள்ளது. ஒரு ஆரோக்கியமான விவாதம் நடைபெற வழியில்லாத நிலைமை உள்ளது. அமெரிக்காவில் கூட பாலஸ்தீனிய அமைப்புகள் பற்றி கருத்தரங்குகள் நடத்தி அதில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்று கருதப்படும் சிலரின் நிலைப்பாடுகளைப் பற்றிப் புகழ்ந்து பேச முடியும். ஆனால் இந்தியாவில் அண்டை நாட்டின் இனப்பிரச்சினையில் முக்கியமான அங்கமாக இருக்கும் ஒரு குழுவின் தலைவரைப் பற்றியோ, அவரது கருத்துகளைப் பற்றியோ, அகடமிக் கருத்தரங்கத்தில் கூடப் பேச முடியாத நிலைமை உள்ளது.

இதை மாற்ற தமிழக, இந்திய அறிஞர்கள், சிவில் சொஸைட்டி அமைப்புகள் முயற்சி செய்ய வேண்டியது அவசரமாகிறது.

இன்னமும் பல கேள்விகள் எழுகின்றன. இவற்றைப் பற்றி நேரம் கிடைக்கும்போது தொடர்கிறேன்.


- Mathan - 05-29-2004

இவை அனைத்தும் பத்திரியின் வலைப்பூவில் இருந்து எடுக்கப்பட்டவை. நன்றி பத்ரி. இதில் நிறைய விமர்சனத்திற்குரிய கருத்துக்கள் இருக்கின்றன. உங்கள் விமர்சனங்களை எழுதுங்கள்


- Eelavan - 05-29-2004

இதற்கு நான் பதில் சொல்வதைவிட இந்தியரான இலங்கை விடயத்தில் தீவிரமான கண்ணோட்டத்தை உடைய தங்கமணி என்பவர் இதே சூரியநாராயணனை பற்றி எழுதியிருந்தது முதலில்
எனது கருத்துகள் பின்னர்

மலையகத்தில் சிங்கள இராணுவ துப்பாக்கிச் சூடுக்கு தமிழர்கள் பலியான விபரத்தை இந்து பத்திரிக்கையும் எக்ஸ்பிரஸும் வெளியிட்டு இந்திய வம்சாவளியினருக்கு எதிராக செயல் படும் அரசை விமர்சிப்பார்கள் என்று நானும் இருந்து பார்த்தேன். ஒரு செய்தியாகக் கூட இல்லை. சரி தமிழக மீனவர்களின் நலன் காக்க அன்று அத்தனை குரல் கொடுத்த மனித நேயர் சூரியநாராயணன் இதை இன்று ஞாயிற்றுக் கிழமை அனுபந்ததில் விரிவாக எழுதி மலையகத் தமிழர்களைப் பாதுகாப்பார் என்று நம்பியிருந்தேன். அதுவும் இல்லை. சரி இந்தியத் தூதர் சென் ஏதாவது சொல்லிவைப்பாரா என்றால் அதுவும் தெரியவில்லை.

கூட்டத்தில் கூடிநின்று கூவிப்பிதற்றலன்றி
நாட்டத்திற் கொள்ளாரடி!- கிளியே
நாளில் மறப்பாரடி!

நன்றி தங்கமணி பக்கம் பக்கமாக நாம் சொல்லவேண்டியவற்றை நான்கே வரியில் சொல்லியதற்கு

http://ntmani.blogspot.com/2004_05_01_ntma...ni_archive.html


- Eelavan - 05-29-2004

இதே சூரியநாராயனனினதும் இந்து பத்திரிகைகளினதும் முகமூடிகளை அன்றன்றே கிழித்து வருகிறார் ஒருவர்
இங்கே போய் பார்த்துவிட்டு வந்து இந்தக்கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை வையுங்கள்

http://ntmani.blogspot.com/2004_05_01_ntma...ni_archive.html


- Eelavan - 05-29-2004

Quote:அதே சமயம் தமிழீழம் என்பதும் ஒரு சரியான தீர்வல்ல. கொழும்புவில் யாழ்ப்பாணத்தைக் காட்டிலும் அதிக தமிழர்கள் வசிக்கின்றனர். தமிழீழத்தினால் தோட்டத் தொழிலாளர்களுக்கு என்ன நன்மை? யாழ்ப்பாணத் தமிழர்கள் வெள்ளாள சாதியினைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு தலித் பின்னணியிலிருந்து வந்த தோட்டத் தொழிலாளர்கள் மீது எந்தவொரு அனுசரணையும் கிடையாது. இலங்கையில் கல்வித்துறையில் ஒவ்வொரு வகுப்பு மாணவனும் அவரவரது சமயப் பாடத்தினைப் படிக்க வேண்டும். ஹிந்து தமிழர்கள் பாடத்திற்குப் பெயர் 'சைவ நெறி'. இது பெரும்பான்மை வெள்ளாள மக்களின் மதம் பற்றியது. கிழக்குப் பகுதி, தோட்டத் தொழிலாளர்களது சமயப் பழக்க வழக்கம் வேறு. தோட்டத் தொழிலாளர்கள் தலித் கடவுள்களை வணங்குபவர்கள். இந்தக் குழந்தைகள் பள்ளியில் படிக்கும்போது தங்களின் பழக்கவழக்கத்தை இழிவானது என்று நினைக்குமாறு உள்ளது வெள்ளாள 'சைவ நெறி' பாடங்கள்.

இதையே கொஞ்ச நாட்களுக்கு முன்னர் புலிகளில் பெரும்பான்மையானவர்கள் குறைந்த சாதியான மீன்பிடிகாரர்,பெரும்பான்மையான புலித்தலைவர்கள் கிறிஸ்தவர்கள் அதனால்தான் இந்துக்களை எதிர்க்கிறார்கள் என்ற அரைலூசுத்தனாமான தத்துவ முத்துகளை உதிர்த்தவர் இந்த சூரியநாராயணன் அந்தப் பேட்டி பற்றிய விபரங்கள் பின்னர் தருகிறேன்

ஒரு வகையில் பார்த்தால் இந்துவின் புலி எதிர்ப்பானது "சொந்தத் தாயே புலிக்கு ஆதரவாக இருந்தால் அவளையே வேசி என்று கூசாமற் சொல்லக் கூடியது இந்து" என்று வலைப்பூக்களில் ஒருவர் சொல்லியிருந்தது சரியாகத் தான் உள்ளது போலுள்ளது


- Mathan - 05-30-2004

இந்தியா சமாதானத்தைக் குழப்புமா? - நிலாந்தன்

Saturday, 29 May 2004

பி.பி.சி தமிழோசையை தொடர்ச்சியாகக்கோட்டுவரும் எவரும் ஒரு விசயத்தை அவதானித்திருப்பார்கள். அதில் இலங்கைத்தமிழர்கள் தொடர்பாக இந்தியாவின் அணுபுகுமுறையில் ஏதும் மாற்றங்களுக்கு இடமுண்டா என்று கேட்கப்படும் போதெல்லாம் டில்லியிலிருந்து கதைக்கும் பேராசிரியர் சகாதேவன் உட்பட எல்லா ஆய்வாளர்களும் முன்னாள் ராஜதந்திரிகளும் மீடியாக்காரர்களும் ஒரு விசயத்தை வாய்ப்பாடு போல திரும்பத்திரும்பச் சொல்லக்கோட்கலாம். அது என்னவெனில் இந்தியா ஒரு பெரியநாடு அதன் வெளியுறவுக்கொள்கைகளை அடிக்கடி மாற்றமுடியாது என்பதே.

இப்படிச் சொல்லும்போதெல்லாம் அவர்கள் மூன்று விசயங்களை வற்புறுத்திக்கூற முயல்வதாகத் தோன்றும். முதலாவது, விடுதலைப்புலிகள் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டில் பெரிய பெரிய மாற்றங்கள் எதற்கும் இடமில்லை என்ற விசயம். மற்றது, இந்தியா இலங்கைத்தீவின் சமாதான முயற்சிகளில் தலையிடாது என்ற விசயம். மூன்றாவது, இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை ஒரு மாறாத அடித்தளத்தின் மீது கட்டி யொழுப்பப்பட்டிருக்கிறது என்பது.

இன்று இப்பத்தி இந்த மூன்றாவது விசயத்தின் மீதே தனது கவனத்தைக் குவிக்கிறது. கடந்த வாரம் இந்தியா புலிகளின் மீதான தடையை மேலும் இரண்டாடுகளுக்கு நீடித்திருக்கும் ஒரு பின்னணியில் இந்த விசயம் மேலும் முக்கியத்துவம் உடையதாகிறது.

சரி, அது என்ன இந்தியாவின் மாறாவெளியுறவுக் கொள்கை? அல்லது இந்திய வெளியுறவுக்கொள்கையின் இதயமாய் இருக்கும் மாறாதஅந்த அடிப்படைஅம்சம் எது?

இதுதான்? இந்தியா பெரியநாடு. இந்தப்பிராந்தியத்திலேயே நிலத்தாலும் பலத்தாலும் அது ஒரு பெரியநாடு. எனவே இந்தப்பிராந்தியத்தில் எது நடாந்தாலும் அது இந்தியாவின் கையை மீறிப்போக முடியாது. அதாவது இந்தப்பிராந்தியம் இந்தியாவினுடையது. இதில் எதுவும் இந்தியாவின் மேலாண்மைக்கு உட்பட்டதாகவே இருக்கமுடியும்.

இந்தியாவின் மாறா வெளியுறவுக் கொள்கை என்று இந்திய ஆய்வாளர்களும் விமசகர்களும் ராஜதந்திரிகளும் ஊடக வியலாளர்களும் கூறுவது இதைத்தான். இந்தியாவின் ஆட்சியாளராக வரும் எவரும் இந்த புவிசார் அரசியல் யாதார்த்தத்திற்குத்தான் தலைமை தாங்க முடியும். இதை மீறிப்போவதென்றால் அந்த தலைவர் தீர்க்க தரிசனமிக்க மிகத்துணிச்சலான ஒரு பெருந்தலைவராக இருக்கவேண்டும். ஆனால் இநடதளவு பெரிய இந்திய நாடு கடந்த தேர்தலில் ஒரு இத்தாலியப் பெண்ணையே தனது தலைவியாக தெரிந்தெடுத்திருநடத அளவுக்கு தலைமைப்பஞ்சம் நிலவும் ஒரு சூழலில் ஒரு பெருந்தலைவனை உடனடியாக எதிர்பார்ப்பது கடினம்தான்.

சுpல வாரங்களுக்கு முன்பு முன்னைய வாஜ்பாய் அரசு சீனாவுடன் ஒரு உடன்படிக்கைக்கு ஒத்துக்கொண்டது. அதன்படி சீன சிக்கிம் நாட்டின் மீதான இந்தியாவின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ளும்.

எப்படி இருக்கிறது உலகம்? இருபெரிய நாடுகள் இரு சிறிய இனங்களின் தலைவிதியை தங்களுக்கிடையில் பங்கிடும் ஒரு நிலை.

இதுதான் இலங்கைத்தீவின் கதியும். இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் தன்னுடைய ஆதிக்க வலையத்தள் தன்னை மீறி நிகழும் எந்தவொரு அசைவையும் இந்தியா சகித்துக்கொள்ளத்தயாரில்லை. ஒரு மூத்த பத்திரிகையாளர் முன்பொருமுறை சொன்னார்? ?இந்தியா இலங்கைத்தீவை தனது ஆசைநாயகி என்று நினைக்கிறது. இந்த ஆசை நாயகியை வேறுயார் நெருங்கி வந்தாலும் அதை இந்தியா சகித்துக்கொள்ளாது.? என்று.

இலங்கைத்தீவின் சமாதான முயற்சிகள் ஒரு எல்லைக்கப்பால் தன்னை மீறிச்செல்வதை இந்தியா பெறுத்துக் கொள்ளாது என்பதை அது கடந்த வருடம் யப்பான் இந்த சமாதான முயற்சிகளில் நுழைந்த போதே சிறிது எரிச்சலோடு வெளிக்காட்டியது.

ஆனாலும் மேற்கு நாடுகளின் ஈடுபாட்டை அது ஒரு கட்டம் வரையிலும் சகித்துக் கொள்ளக் கூடும் என்று அனுமானிக்கத்தக்க விதத்திலேயே கடந்த இரண்டாண்டு காலசமாதான முயற்சிகளில் இந்தியாவின் அசைவுகள் காணப்படுகின்றன. இப்படி மேற்கு நாடுகளின் சமாதான முயற்சிகளில் ஒரு எல்லை வரை அனுசரித்துப் போக வேண்டிய ஒரு யதார்த்தம் ஏன் இந்தியாவுக்கு ஏற்பட்டது?

இந்த கேள்விக்கு விடைகாண்பதென்றால் இப்பொழுது இந்தியாவின் பிரதமராயுள்ள மன்மோகன்சிங்கிடம் இருந்தே தொடங்க வேண்டும். முன்பு நரசிம்மராவின் அமைச்சரவையில் மன்மோகன்சிங் நிதியமைச்சராக இருந்த காலத்தில் தான் இந்தியாவை மேற்கு நாடுகளுக்கு முழு அளவில் திறந்துவிடத் தொடங்கினார். அதாவது திறந்த சந்தைப் பொருளாதாரத்துக்குள் இந்தியா நுழைந்தது. அதிலிருந்து தொடங்கி துரிதமாக வளர்ந்து இன்று உலகின் ஆறாவது பெரிய வளர்ந்து வரும் பொருளாதாரமாக உருவாகியிருக்கின்றது. அதோடு, உலகின் கணனி மென்பொருள் வியாபாரத்தில் முப்பது வீதம் இந்தியாவிடம் தான்உள்ளது.

இப்படி இந்தியாவை மேற்குலகிற்கு திறந்து விட்டதன் மூலம் நரசிம்மராவ் - மன்மோகன்சிங் அரசு தொடக்கி வைத்த மாற்றங்களின் விளைவாக இன்று இந்தியா பொருளாதாரத்தில் அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளுக்கு மிக நெருக்கமான நண்பனாக காணப்படுகிறது. அதாவது உவகளாவிய ஒரு பொதுப்பொருளாதாரா போக்கினுள் .இந்தியா எர்பொதோ கரையத் தொடங்கிவிட்டது.

இதில் இந்திய கொள்கை வகுப்பாளர்களும் ஆய்வாளர்களும் ஊடகவியலாளரும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள கூச்சப்படும் ஒரு விசயம் இருக்கிறது. அதாவது கெடுபிடிப்போரின் முடிவோடு உலகில் ஏகப்பெரு வல்லரசாக அமெரிக்கா உருவாகிவிட்டது. அந்த யதார்த்தத்தை இந்தியா சந்தடியின்றி ஏற்றுக்கொண்டுவிட்டது. பூகோள அளவில் இந்தியா அமெரிக்காவின் பேரரசுத்தனத்தை சகித்துக்கொள்ளத்தயார் அதற்கேற்ப தனது பொருளாதாரம், தொழிலநுட்பம் போன்ற சில பல துறைகளில் தன்னை சுதாகரித்துக்கொள்ளவும்தயார்.

இது எதைக்காட்டுகிறது? இந்தியா தனது வெளியுறவுக்கொள்கையை புதிய பூகோள யதார்த்தம் ஒன்றிற்கு ஏற்ப சுதாரித்துக்கொண்டு வருகிறது என்பதை;தானே?

ஆனால் இதெல்லாம் பூகோள அளவில் தான் பிரந்திய மட்டத்திலோயெனின், இந்தியா தனது மேலான்மையை மேலும் தக்க வைத்துக்கொள்ள விரும்புகிறது. அது பூகோளயதார்த்தத்துடன் தன்னை சுதாகரித்துக்கொண்டது என்பதே தன்னை பிராந்திய மட்டத்தில் புதிய நிலைமைகளுக்கு ஏற்ப மேலும் பலப்படுத்திக் கொள்வதற்கான விட்டுக்கொடுத்தல் தான்.

ஒரு புறம் இந்தியா தன்னை மேற்கு நாடுகளில் நிறுவனங்களுக்கு திறந்து வைத்திருக்கிறது. இன்னொருபுறம் தனது சிறிய அயல் நாடுகளில் அது தனது சந்தையை விஸ்தரித்து வருகிறது. இந்தியாவின் இந்த வர்த்தக விரிவாக்க வலயத்திற்குள் இலங்கைத்தீவு எப்பொழுதோ வந்துவிட்டது. உதாரணத்திற்கு, ஒருகாலம் எமதுதெருக்களில் யப்பான் வகனங்களே அதிகம் ஓடித்திரிந்தன ஆனால் இப்பொழுது கண்ணைப்பறிக்கும் நிறங்களில் கீரோக்கொண்டாக்கள், ரி.வி.எஸ்கள் மினிங்கிக்கொண்டு திரிகின்றன. மருந்துப்பொருற்களைப் பொருத்தவரை மற்றெல்லா நாட்டு மருந்துகளை விடவும் இந்திய உற்பத்திகள் மலிவானவைகளாய் காணப்படுகின்றன.

எனவே பொருளாதார வார்த்தைகளில் சொன்னால், தனது வர்த்தகவிரிவாக்கத்தின் பிரகாரமும் மேற்குலகுடனான தனது சதாகரிப்புக்கொள்கைகளின் படியும் இந்தியா மேற்கு நாடுகள் கொண்டு வந்திருக்கும் சமாதான முயற்சிகளை ஒரு எல்லைவரை சகித்துக்கொள்ளத்தயார்போல தெரிகிநது.

ஆனால் எதுவரை சகித்துக்கொள்வார்கள் என்பது இந்தியா தனது வெளியுறவுக்கொள்கையை பூகோள பொருளதாரயதார்த்தத்திற்கு ஏற்ப எவ்வளவு விகிதத்திற்கு சுதாகரித்துக்கௌ;கிறது என்பதில் தான் தங்கியிருக்கிறது. அதாவது பூகோளஅளவில் அமெரிக்கா மோண்மையை ஏற்றுக்கொள்ளும் விதமாக பிரந்திய அளவில் இந்தியா தனது மேலாண்மையை எவ்வளவு விகிதத்திற்கு விட்டுக்கொடுக்க தயாராக இருக்கிறதோ அவ்வளவு விகதத்திற்குத்தான் அது இலங்கைத்தீவின் மேற்கு நாடுகள் செய்து வரும் சமாதானத்தை சகித்துக்கொள்ளும்.

மாறாக, இந்தியமத்திய அரசாங்கத்தின் அங்கம் வகிக்கும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான சக்திகளின் பலத்தாள் தீர்மானிக்கப்படும் ஒரு விவகாரமல்ல இது.

இ;ந்தப்பிராந்தியத்தில் இந்தியா ஒரு பெரியநாடு என்பதிலிருந்தே இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை தொடங்குகிறது. இந்தியா நிலத்தாலும் பலத்தாலும் பெரியநாடாயிருக்கும்வரை இந்தவெளியுறவுக் கொள்கையில் அடிப்படை மாற்றம்ஏதும் நிகழவாய்ப்பில்லை.

ஒரு புறம் இந்தியா அமெரிக்காவின் உலகலாவிய மேலாண்மையை ஏற்றுக்கொண்டு தன்னை சுதாகரித்து வரும் அதேசமயம் தனது தனித்துவத்தையும் பிராந்திய மட்டத்தில் தனது மேலாண்மையையும் பேணமுயல்கிறது. இன்னொருபுறம் தனது அயலில் வாழும் சிறிய இனங்கள் தமது தனித்துவத்தை இழந்து தனது மேலாண்மைக்கு அடங்கிவாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.

இப்பொழுதுள்ள இந்திய சனாதிபதி அப்துல்கலாம் ஒருமுறை சொன்னார்? இந்தியா ஒரு பெரிய நாடு ஆனால் அதன் மக்கள் பெரியசிந்தனைகளோடு இல்லை என்ற தொனிப்பட.

உண்மைதான். பெரியவர்கள் பெரியவர்களைப்போல நடந்துகொள்ளும் வரை சிறியவர்கள் பெரியவர்களை மதிக்கும் நிலையும் காணப்படும். பெரியவர்கள் பெரிய மனதுபண்ணி சிறியவர்களை மதித்து நடக்கும் போது சிறியவர்களும் பெரியவர்களை கணமடபண்ணும் நிலை உருவாகிறது.

இந்தியா ஒரு பெரிய நாடு என்பதிலிருந்து அதன் வெளியுறவுக்கொள்கை தொடங்குகிறது. அதே சமயம் அப்துல்கலாம் சொன்னது போல பெரிய நாட்டிற்கு இருக்கவேண்டிய பெரியபெரிய சிந்னைகளிலிருந்து அதைத்தொடங்கினால், அமெரிக்கா மயப்பட்டுவரும் இவ்வுலகில் தனது இந்தியத்தன்மையைப் பேணியபடி தன்னை சுதாகரித்துக் கொண்டு வரும் இந்தியா இந்தப்பிராந்தியத்தில் சிறிய இனங்கள் தமது தனித்துவத்தை பேணியபடி இந்தியாவை மதித்து நடக்கும் ஒரு உன்னதமான பிராந்திய ஒழுங்குக்கு போக முடியுமல்லவா.

நிலாந்தன்/Eelanatham


- Mathan - 05-30-2004

புதிய இந்திய வெளியுறவு அமைச்சரின் இலங்கை பிரைச்சனை குறித்த பழைய கருத்துக்கள் சில .....

திரு கருணாநிதி தனது தவறுகளில் உழன்று கொண்டிருக்கிறார். அவருக்கு தமிழர்களையும், தமிழர் வரலாற்றையும் பற்றி அதிகம் தெரிந்திருக்கலாம். ஆனால் அவரது ஐரோப்பிய வரலாறு பற்றிய அறிவு மிகவும் வழுவானது. அறிவுடைய எவரும் இலங்கையையும் செக்கோஸ்லோவாக்கியாவையும் ஒன்றென ஒப்பிட்டுப் பேச மாட்டார்கள். தமிழக முதல்வர் அயலுறவுக் கொள்கை விவகாரங்களைப் பற்றி கண்டதையும் பேசக்கூடாது என்று பிரதமர் வாஜ்பாயி அவரிடம் சொல்ல வேண்டும். மாநில முதல்வர்கள் அயலுறவுக் கொள்கை பற்றி அறிக்கைகள் விடுத்தலைப் போன்ற பிரம்மாண்டமான கேடு வேறெதுவும் இருக்க முடியாது. - ஏசியன் ஏஜ், 9 ஜூன் 2000

-------------------------------------------------

இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்க்க, இலங்கை அரசு ஏதேனும் உதவி - இராணுவ உதவியும் சேர்த்து - கோரினால், இந்தியா அதனை உடனடியாக நிராகரித்து விடாமல், கவனமாக ஆலோசிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவரும் செயற்குழு உறுப்பினருமான நட்வர் சிங் கேட்டுக்கொண்டார்.

இராணுவத் தலையீடோ, கப்பற்படைத் தலையீடோ அல்லது இராஜதந்திர உதவியோ - இலங்கை எதைக் கேட்டாலும் அதைத் தர இந்தியா தயாராயிருக்க வேண்டும் என்று நட்வர் சிங் நிருபர்களிடையே பேசுகையில் தெரிவித்தார். நட்வர் சிங் காங்கிரஸ் கட்சியின் வெளியுறவுக் கொள்கைக்கான குழுவை நடத்துபவர் ஆவார்.

[பாஜக தலைமையிலான தே.ஜ.கூ] அரசின் இலங்கை பற்றிய கொள்கைகள் புரிந்துகொள்ள முடியாததாகவும், நீர்த்துப்போனதாகவும் உள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார். இதற்குக் காரணம் அரசின் செயல்பாடு திமுக, மதிமுக ஆகிய கட்சிகளின் விருப்பங்களுக்கேற்ப ஆடிக்கொண்டிருப்பதே என்றார்.

1987 ஆம் வருடத்தைய இந்திய-இலங்கை ஒப்பந்தத்தால்தான் [ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசால் கையொப்பமிடப்பட்டது], இலங்கை பிரியாமல் காக்கப்பட்டது என்றும், இரு நாடுகளுமே இதுவரை இந்த ஒப்பந்தத்தை தூக்கி எறியவில்லை என்றும் அவர் கூறினார்.

செக்கோஸ்லோவாக்கியா போல இலங்கையையும் இரண்டாக, அமைதியாகப் பிரிக்கலாம் என்ற [தமிழக] முதல்வர் கருணாநிதியின் ஆலோசனையை அவர் கடுமையாக எதிர்த்தார். மேலும் கருணாநிதியின் பேச்சுக்கள், மாநில முதல்வர்கள் அயலுறவுக் கொள்கையில் கை வைக்கக்கூடாது என்ற பல காலமாக இருந்து வரும் எழுதப்படா விதிக்கு எதிராக உள்ளது என்றும் குறை கூறினார். இலங்கையின் நிலைமை செக்கோஸ்லோவாக்கியாவைப் போலில்லை என்றும் இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பு குடியாட்சி முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசை எதிர்க்கிறது என்றும் அவர் கருத்து தெரிவித்தார். - Indian Express, 16 July 2000



-------------------------------------------------



இலங்கைக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையேயான பேச்சுக்களை கவனமாகப் பார்த்துக் கொண்டு வருகிறேன். இதன் மூலம் ஒரு நிலையான முடிவு கிடைக்கும் என்றே தோன்றுகிறது. பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கும் பேரா. பெய்ரிஸ், பாலசிங்கம் இருவரையும் நான் நன்கு அறிவேன். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை முக்கியமான பிரச்சினையாக இருப்பது திரு. வே.பிரபாகரன் தான். 11 செப்டம்பர் 2001 க்குப் பின்னர் விடுதலைப் புலிகளுக்குக் கிடைத்து வந்த பணமும் ஆயுதத் தளவாடங்களும் வற்றிப்போய் விட்டன. இதனால்தான் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கே உடன்பட்டுள்ளனர். எது நடந்தாலும் பிரபாகரனை இந்தியாவிற்குக் கொண்டுவருவதே இந்தியாவின் தலையாயக் கடமையாகும். இப்பொழுது நடக்கும் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும் என்று நம்புவோம். வெகு நாட்களாக இலங்கை கஷ்டத்தில் துவண்டுள்ளது. இலங்கைத் தமிழர்களின் நியாயமான உரிமைகளை கண்டுகொள்ளாமலும் இருக்க முடியாது. இந்தியா இலங்கையில் நடப்பதை கண்டும், காணாமலும் இருக்க முடியாது. ராஜீவ் காந்திதான் இலங்கையின் ஒருமைப்பாட்டிற்குக் கெடுதல் வராமல், ஈழம் என்னும் தனிநாடு கோரிக்கைக்கு எதிராக வலுவாக இருந்தார் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். - Frontline, Nov 23-Dec 2, 2002

நன்றி - பத்ரி