![]() |
|
மலரினும் மெல்லியது காதல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழும் நயமும் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=22) +--- Thread: மலரினும் மெல்லியது காதல் (/showthread.php?tid=7077) |
மலரினும் மெல்லியது கா - Mathan - 06-05-2004 மலரினும் மெல்லியது காதல் காமம் தவறல்ல. பால் கவர்ச்சி என்பது இயற்கையின் செயல் - அற்புதச் செயல். அதன் சக்திதான் எவ்வளவு! 'காதல் முட்டாளை புத்திசாலியாக்குகிறது, புத்திசாலியை முட்டாளாக்குகிறது' என்றார் ஓர் அறிஞர். தினத்தந்தியில் சில கார்ட்டூன்களுக்குக் கீழே எழுதுவார்கள் "இதற்கு வசனம் தேவையில்லை" என்று. இதற்கும் அப்படித்தான். உங்கள் அனுபவமே போதும் புரிந்துகொள்ள. மலரினும் மெல்லிது காமம், சிலர் அதன் செவ்வி தலைப்படு வார் (குறள்: 1289; புணர்ச்சிவிதும்பல்) என்றான் வள்ளுவன். அது மல்யுத்தமல்ல. கஜுராஹோ நிலைகளை எல்லாம் முயற்சி செய்வதல்ல. தெருவில் போவோர் வருவோர் எல்லாம் தன்னைப் பார்த்து மயங்குவதாகக் கற்பித்துக் கொள்ளுவதல்ல. எதெல்லாம் இல்லை என்று சொல்லலாமே அல்லாது, இதுதான் என்று சொல்வது மிகக் கடினம். அதனால்தான் அது 'மலரினும் மெல்லிது'. அதனால்தான் அதன் 'செவ்வி'யை 'சிலர்'தான் அறிவார்கள். எல்லோருக்கும் தெரிந்துவிடாது, வசப்பட்டுவிடாது. செவ்வி என்றால் என்ன? அழகு, காலம், பருவம், தகுதி, ஏற்ற சமயம், காட்சி, புதுமை, வாசனை என்று இத்தனை பொருள்கள் உள்ளன அந்த செவ்வி என்ற வார்த்தைக்கு. சற்றே யோசித்துப் பார்த்தால் காதலுக்கு எல்லாமே பொருந்தும்! இதில் ஏதாவது சரிப்படாவிட்டாலும், அவ்விருவரிடையே நிகழ்வது விலங்குப் புணர்ச்சியாகவும், விலைப் புணர்ச்சியாகவும், வன்புணர்ச்சியாகவும், பொருந்தாப் புணர்ச்சியாகவும் முடிந்துவிடுமே அன்றி இருதரப்பிலும் அனுபவித்து, ஒவ்வொரு மயிர்க்காலிலும் உணர்ந்து, இருவரும் மற்றவரின் முழுத் துய்ப்புக்கு முயன்று, ஈடுகொடுத்து, மற்றவருக்கு ஆட்பட்டு, ஆட்படுத்திய 'செவ்வி' கொண்ட இன்ப நுகர்வாக இருக்காது. செவ்வி என்றால் அழகு. காமத்தின் செவ்வியென்பது காமம் கொண்டவரின் அழகின்பாற்பட்டது. எவ்வளவுதான் மறுத்தாலும், உடல் காமத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது. அப்படியானால் எல்லாப் பெண்களும் ஐஸ்வரியா ராயாகவும் எல்லா ஆண்களும் மாதவனாகவும் இருக்கவேண்டுமா? அதுதான் இல்லை. ஒருவர் மற்றவரிடம் தன்னைக் கவரும் அம்சங்கள் இருப்பதைக் காணவேண்டும். மகாபாரதத்தில் 'யட்சப் பிரச்னம்' கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு பொய்கைக்குச் சென்று குடிநீர் கொண்டு வர பஞ்சபாண்டவர்கள் ஒவ்வொருவராகப் போகின்றனர். தருமரைத் தவிர மற்ற நால்வரும் போய், ஒருவரும் திரும்பவில்லை. இறுதியாக தருமர் போகிறார். ஒரு யட்சன் அந்தப் பொய்கைக்குக் காவல் இருக்கிறான். தண்ணீர் எடுக்க முயலும் தருமரிடம் அவன் சொல்கிறான்: "என் கேள்விகளுக்குச் சரியான பதில் சொன்னால் உன் சகோதரர்களை உயிர்ப்பிக்கிறேன். இல்லாவிட்டால் அவர்களைப் போல நீயும் உயிர்விட வேண்டியதுதான்" என்கிறான். தருமரும் "சரி, கேள்" என்கிறார். யட்சன் கேட்ட கேள்விகளுள் ஒன்று "உலகிலேயே மிக அழகானவள் யார்?" என்பது. அதற்கு தருமனின் விடை "காதலனின் கண்களில் காதலி" என்பது. மெய்தான், எத்தனை உலக அழகிகள் இருந்தால் என்ன, தன் காதலியின் (மணமானவர்கள் மனைவி என்று படிக்கவும்) அழகுக்கு முன்னே அவர்கள் எம்மாத்திரம்! இருவரும் மற்றவரின் ஏதோவொன்றை வியந்து, விரும்பி, மயங்கித் தன்வயமிழக்காவிட்டால் அக்காதல் ஆழமற்றதாகிவிடும். இன்பம் துய்த்த மறுகணமே கொல்லும் 'கறுப்பு விதவை' (Black widow) என்னும் சிலந்தியின் செயலைப் போன்ற, தன்னலத்தையே அடிப்படையாகக் கொண்டதாகிவிடும். தகுதி என்ற சொல் மிக முக்கியமானது. சாதாரணமாகப் பொருளாதாரம், ஜாதி, அந்தஸ்து, உத்தியோகம், திறமை, செல்வாக்கு என்றெல்லாம் பொருள் கொண்டுவிடுவர். இவை உயர உயர அவர்கள் இன்னொரு பாலாருக்கு அதிகக் கவர்ச்சியாகத் தோன்றுவர். உதாரணமாக ஒரு சிறந்த ஓவியனை, சிறந்த நாட்டியத் தாரகையை விதப்பான (admiring) காமக்கண்ணோடு பார்ப்பவர் பலர் இருப்பார். ஆனால் அத்தகைய காமம் நீடிப்பதில்லை. இத்தகைய தகுதிகளை உடையவர்களும் தம்மால் யாரையும் எளிதில் அடைய முடியும் என்று கணக்குப் போடுவர். இது சில இடங்களில் பலித்தாலும், பல இடங்களில் பொய்க்கும். எனவே தமிழ்ச் சான்றோர் கருத்துப்படி ஒரு பெண்ணைக் காமத்தோடு தீண்டத் தகுதி உடையவன் அவளை மணந்தவன் ஒருவனே. இந்த வரையறை ஆண்களுக்கும் பொருந்தும் என்று கொண்டுவந்தவன் மகாகவி பாரதி, கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அ·து பொதுவில் வைப்போம் (பெண்கள் விடுதலைக் கும்மி) என்று கூறியதன் மூலம். இப்போது பரவலாக ஒருவரை ஒருவர் அலுவலகத்திலும் இதர சூழ்நிலைகளிலும் தீண்டுதல் சகஜமாகிவிட்டது. இதைத் தவறு என்று சொல்லும் கட்டுப்பெட்டி அல்ல நான். ஆனால் காமத்தின் செவ்வி துய்க்கக் கணவன் - மனைவி உறவு என்னும் தகுதி இல்லையென்றால் அது இறுதியில் நன்மையில் முடியாது. தகாத உறவுகளுக்கான பெரிய விலையை மனிதகுலம் செலுத்தத் தொடங்கிவிட்டது என்று சொல்வதோடு நின்று, மிச்சத்தை உங்கள் உய்த்துணர்வுக்கு விடுகிறேன். செவ்வி என்பதற்கு பருவம், காலம், ஏற்ற சமயம் என்ற பொருள்களும் உள்ளன. இவற்றைப் புரிந்துகொள்வது கடினமல்ல என்பதால் நான் இங்கு விவரிக்கவில்லை. காட்சி என்றும் ஒரு பொருள் உள்ளது. இதை வெறும் கண்ணால் பார்ப்பது என்பதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. 'தரிசனம்' என்று கொள்ளவேண்டும். இந்தக் காதல் தன்னுள்ளே தோற்றுவிக்கும் காட்சி என்ன, தன் வாழ்வை இது எப்படி அடியோடு புரட்டிப் போட்டுவிடும், அதன் உச்சத்தில் தான் முன்பு எப்போதும் உணராத உயரத்தைத் தொடுவோம் -- இவைதான் தரிசனம். இந்தக் கேள்விகளில் கிடைக்கும் விடை எதுவேனும் மனிதனை விலங்கு நிலைக்கு இறக்குவதானால் அவன் காமத்தின் செவ்வி தலைப்பட்ட சிலருள் இல்லை. செவ்வி என்றால் புதுமை. அவசரமாக ஓடிப்போய் ஒவ்வொரு முறையும் புதிதாய் ஒவ்வொருவரோடு உடலுறவு கொள்வது (one night stand) என்பதாக எண்ணிவிட வேண்டாம். நாம் யாரைக் காதலிக்கிறோமோ அவரே ஒவ்வொரு நாளும் புதியவராக, புதுப்புதுச்சுவை தருகிறவராக இருக்கிறாரா? இது அந்த ஆணிடமோ, பெண்ணிடமோ இருக்கும் உள்ளார்ந்த குணமாக அல்லாது, நமது அன்பு மிகுதியாலே அவரிடம் 'காணும்' புதுமையாகக் கூட இருக்கலாம். 'செட்னா' என்று புதுக்கோளைக் கண்டறிந்திருக்கின்றனர். பத்தாவது கோள் என்று சொல்கின்றனர். சரி, இவர்கள் கண்டுபிடிக்கும் வரை அந்தக் கோள் இல்லாமலா போயிருந்தது? இல்லையே! ஆனால் தெரிந்துகொண்டவுடன் 'அட, இவ்வளவு நாளா அது இருந்திருக்குது, நமக்குத் தெரியாமல் போயிடுச்சே' என்று தோன்றுவதில்லையா! அதுபோலத்தான் காதலியின் முயக்கமும். ஒவ்வொருமுறையும் அவளுடைய புதிய பரிமாணத்தை, சுவையைக் கண்டதும் நாம் நம்முடைய அறியாமையைத் தான் வைதுகொள்ள வேண்டியதாயிருக்கிறது. அதைத்தான் வள்ளுவர் கூறினார்: அறிதொறும் அறியாமை கண்டற்றால் காமம் செறிதொறும் சேயிழை மாட்டு (குறள்: 110; புணர்ச்சி மகிழ்தல்) [ஒன்றைப் புதிதாகக் கற்கின்ற ஒவ்வொரு முறையும் நம்முடைய அறிவுக்குறைவு வெளிப்படுவதுபோல, அழகிய நகைகளை அணிந்த இவளிடம் ஒவ்வொரு கூடலிலும் புதிதாய் ஒன்றைக் காண்பதும் நிகழ்கிறது]. ஆக, காமசுகம் என்பதில் செவ்வி என்பதற்கு இணையான அழகு, காட்சி, புதுமை ஆகியவை எவ்வளவு முக்கியம் என்பதையும், அது எப்படிச் சிலருக்கே வாய்க்கும் என்பதையும் கொஞ்சம் நுணுகிப் பார்த்தோம். மீண்டும் ஆரம்பத்தில் பார்த்த குறள் சொன்னபடி 'மலரினும் மெல்லி'தாகிய காமத்தின் 'செவ்வி தலைப்படும்' சிலரில் நீங்களும் ஒருவரா? யோசித்து விடை கூறுங்கள். அவசரமில்லை நன்றி - மதுரபாரதி / இ சங்கமம் - Chandravathanaa - 06-07-2004 கட்டுரையை அறியத் தந்ததற்கும் மறந்திருந்த தளத்தை நினைவு படுத்தியதற்கும் நன்றி. http://seithikal.blogspot.com/2004/04/blog-post.html - kuruvikal - 06-07-2004 மலரிலும் மெல்லியதோ மொத்தமோ ஆரறிவார்...ஏதோ தப்புத் தண்டாச் செய்யாமல் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தால் எயிட்ஸ் வராது என்பது மட்டும் ஒரு வகையில் மனிதருக்கு நிம்மதி....அதுக்கு உப்படிப் பிரச்சாரங்கள் அவசியம்....! :wink: அதுசரி அலுவலகத்துக்குப் போறது வேலை செய்யவோ இல்ல தொட்டு விளையாடவோ....ஏதோ போதனையோட நிக்காம கடைப்பிடித்தால் எல்லோருக்கும் நிம்மதி...எயிட்ஸில் இருந்து....! :wink: புது மொழி.... எயிட்ஸ் இன்றேல் காமம் என்ன காதல் என்ன எல்லாம் இன்னும் தறிகெட்டுப் போயிருக்கும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 06-07-2004 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Eelavan - 06-07-2004 இதே தலைப்பில் புத்தகம் ஒன்று பார்த்திருக்கிறேன் சிங்கையைச் சேர்ந்த ஒருவர் எழுதியது எழுதியவர் பெயர் மறந்துவிட்டேன்.குறளிலிருந்தும் சங்ககாலப் பாடல்களிலிருந்தும் நிறைய எடுத்துக்காட்டல்களுடன் நன்றாக எழுதப்பட்ட புத்தகம் |