Yarl Forum
யுத்தம் வராது நம் நாடு நமக்குக் கிடைக்காது, கேணல் ஜெயம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: யுத்தம் வராது நம் நாடு நமக்குக் கிடைக்காது, கேணல் ஜெயம் (/showthread.php?tid=706)



யுத்தம் வராது நம் நாடு நமக்குக் கிடைக்காது, கேணல் ஜெயம் - அருவி - 02-25-2006

<b>யுத்தம் வராமல் நம் நாடு நமக்குக் கிடைக்காது என்று சுவிஸில் தற்போது நடைபெற்று வரும் விடுதலை வாசல் நிகழ்வில் கட்டளைத் தளபதி கேணல் ஜெயம் தெரிவித்தார்.</b>


விடுதலையின் வாசலில் நிகழ்வில் கேணல் ஜெயம் ஆற்றிய உரை:

எங்களுடைய விடுதலைப் போராட்டம் இன்று விடுதலையின் வாசலில் வந்து நிற்கின்றது என்பதை எல்லோருடைய நாவும் சொல்லிக் கொண்டிருக்கிறது.

நிச்சயமாக அதை நாங்கள் கண்கூடாக கண்டு கொண்டிருக்கிறோம். இனி வரப்போகும் காலம் அதற்கான பதிலை நிச்சயமாகச் சொல்லும்.

எனவே இந்த மண்ணில் உங்களுடைய உறவுகளின் விடுதலைக்காக உணர்வுகளைக் காட்டி நிற்கும் உங்களுக்கு எங்கள் தமிழ் மக்களின் சார்பில் நன்றி தெரிவிக்கிறோம்.

<img src='http://img142.imageshack.us/img142/8506/296530152979299430212972301429.jpg' border='0' alt='user posted image'>

புதிதாக ஆட்சிப்பீடம் ஏறியுள்ள சிங்கள அரசாங்கத்தின் முகத்திரையை உலகுக்குக் காட்டுவதற்கு உலகின் முக்கிய இடமான ஜெனீவாவுக்கு வந்திருந்தோம்.

எங்கள் மக்களுக்கு எமது தலைவரின் போராளிகளின் மக்களின் செய்தியை கூற வேண்டியவனாக நிற்கிறேன்.

நாங்கள் சண்டைக் களங்களில் சண்டை தொடர்பாகவே கதைத்துப் பழக்கப்பட்டவர்கள். சண்டைக்காக வாருங்கள் என்று மக்களை அழைத்து பழக்கப்பட்டவர்கள்.

உங்கள் முன் பேச அழைத்த போது எந்த விடயத்தைச் சொல்வது என்பது எங்களுக்குச் சங்கடமாக இருக்கிறது.

போராளிகளுடன் கதைக்கிற போது போராளிகளிடம் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு ஏற்ற வகையில் கதைப்போம். அந்த வகையிலே கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

எங்களுடைய விடுதலைப் போராட்டம் தடைகளைத் தாண்டி விடுதலையின் வாசலுக்கு வந்து நிற்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஒவ்வொரு தடை ஏற்பட்ட போதும் குழப்பங்களும் சந்தேகங்களும் அவநம்பிக்கைகளும் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

நம்முடைய நோக்கம், நாம் செல்ல வேண்டிய இடம் தெளிவாக இருந்தால் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை. அது குறித்து சிந்திக்க வேண்டியதிலை என்று தலைவர் சொல்வார்.

இலட்சியத்துக்காக, விடுதலைக்காக எங்களை முழுமையாக நாங்கள் அர்ப்பணித்திருக்கிறோம்.

அதனால் பிரச்சனைகள் தொடர்பாக கவலையில்லாமல் விடுதலைக்காக முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும்.

இன்று தமிழர்கள் முக்கியமான கால கட்டத்தில் நிற்கிறார்கள். இன்று தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்கிற சுதந்திர வேட்கை- வெறி தங்களுடைய தமிழ் மண்ணில் வாழ்வதற்கானது.

<img src='http://img142.imageshack.us/img142/156/29653010297530212975299030216y.jpg' border='0' alt='user posted image'>

எந்த கலக்கமும் இல்லாமல் தயக்கமும் இல்லாமல் நாம் போராட வேண்டும்.

பேச்சுவார்த்தை மூலமாக நம் பிரச்சனை தீருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. உயிரிழப்புகளின்றி இந்தப் பிரச்சனை தீர வேண்டும் என்கிற அற்ப ஆசை பலருக்கும் உண்டு.

ஆனால் எங்கள் எதிரியானவன் தெளிவான நிலையில் இருக்கிறான். கடந்த தேர்தலில் சிங்களவர்கள் தங்களுடைய சரியான தலைவரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

தங்களுடைய தேசம் என்ற உணர்வில் அவர்கள் தங்களது தலைவரைத் தெரிவு செய்திருக்கிறார்கள்.

அந்த சிங்களத் தலைவர் இன்று சர்வதேச சமூகத்தின் முன்பாக இனவாதியாக காட்டிக்கொள்ளமுடியாதிருப்பதால் பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்த அவர் நாடகமாடத்தான் வேண்டும். ஆனால் அவர் இப்படியான நாடகமாட அவர் கூட்டு சேர்ந்துள்ள இனவாதக் கட்சிகள் எத்தனை காலம் அனுமதிக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த இனவாதக் கட்சிகள் எல்லாம் இருக்கவேண்டும். அவர்கள் இருந்தால்தான் எங்கள் தேவையை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

நாம் கடந்துவந்த பாதையை சரியாகப் பாருங்கள். நம் தலைவர் எப்படியாக வழிகாட்டினர் என்று பாருங்கள்.

இன்று கூட தாயகத்தில் யுத்தச் சூழலுக்கு மத்தியில்தான் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

யுத்தத்தை எதிர்கொள்ள ஆயத்தமான நிலையிலேயே போராளிகள் உள்ளனர். ஒவ்வொரு கட்டமாக விடயம் சார்ந்து போராளிகள் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.

இனிவரும் யுத்தத்தை எதிர்கொள்ள எந்தத் தயக்கமும் இல்லாமல் ஆயத்தமாக இருக்கிறோம்.

யுத்தத்தினூடாக எங்கள் விடுதலையை வென்றெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.

விடுதலையை நாம் வென்றெடுக்க வேண்டுமாக இருந்தால் நாம் எந்த மண்ணில் இருந்தாலும் ஒட்டுமொத்த உணர்வுகளும் பங்களிப்புகளும் அதற்கு முக்கியமானதாகும்.

சில நாட்கள் மட்டுமே இங்கு நிற்கின்ற எனக்கு இந்தக் குளிருக்குள் வாழ பிடிக்கவில்லை.

ஆனால் மிக நீண்டகாலமாக மிகக் கடுமையான குளிரில் கூட வாழ்ந்து உங்களையும் வளர்த்துக் கொண்டதோடு இந்த விடுதலைப் போராட்டத்தையும் வளர்ப்பதற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருகிறீர்கள் என்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த நாட்டைப் பார்க்கும் போது எங்களுக்கு ஒரு நாடு இல்லாத ஏக்கம்-வருத்தம் ஏற்படுகிறது.

ஜெயசிக்குறு சமர் எங்கள் மீது திணிக்கப்பட்ட யுத்தம். ஆனால் அந்த யுத்தத்தை எதிர்கொள்ள எமக்கு அப்போது போதிய ஆயுத பலம் இல்லை.

ஆரம்ப யுத்தத்தில் சிறு சிறு ஆயுதங்களை வைத்து ஒரு சில குண்டுகளை பாவித்து தற்காப்பு யுத்தமாக எதிர்கொண்டோம்.

பின்னர் அந்த யுத்தத்தின் போக்கு விளங்கியது. அதை வைத்துக் கொண்டு தீர்க்கதரிசனமான முடிவுகளை எடுத்து போராளிகளை தேவையான இடத்தில் நிறுத்தி சண்டை பிடிக்கும் வழிகாட்டுதல்களை தலைவர் செய்து வந்தார்.

ஆனால் எதிரியானவன் முன்னேறிக் கொண்டே வந்த போது சில மாதக் கணக்கான அந்த சண்டை நீடித்த போது ஆட்பற்றாக்குறை ஏற்பட்டது எமக்கு. ஆயுத தளவாட பற்றாக்குறை இருந்த காரணத்தால் பின்னுக்கு நகர வேண்டியது இருந்தது.

அந்த பின் நகர்வுகளுக்கு தலைவரும் அனுமதித்தார். "எதிரி அகலக்கால் வைத்துக் கொண்டு வருகிறான். அதுவே நமக்கு சாதகமாக அமையும்" என்றார் தலைவர். "நீங்கள் ஓடிவர வேண்டாம். எதிரியானவனுக்கு இழப்பை ஏற்படுத்திவிட்டு வாருங்கள்" என்றார் தலைவர்.

வவுனியாவிலிருந்து வந்த இராணுவம் கிளிநொச்சியுடன் சேர்ந்துவிட்டால் எமது போராட்டம் என்ன ஆவது என்ற கேள்வி எமக்குள் இருந்தது.

ஆனால் தேவையான இடத்தில் தேவையான தாக்குதல்களைச் செய்ய தலைவர் அனுமதித்தார். பின்வாங்கி வருவதற்கும் அவர் அனுமதித்தார். எங்களது இராணுவ நகர்வு அப்படியாகத்தான் இருந்தது.

அப்போது ஓமந்தையில் இராணுவம் நிலை எடுத்துவிட்டான். அப்பகுதியிலாவது தாக்குதல் நடத்த கட்டளை பிறப்பிக்குமாறு தலைவருடன் கதைத்தோம். அதற்கான வேவுத் தரவுகளை எடுத்துக் கொண்டு தலைவரிடம் கொடுத்தோம். ஆனால் தலைவரோ இப்ப அது தேவையில்லை என்று தரவுகளை மூலையில் போட்டுவிட்டார்.

தொடர்ந்து காலம் நகர்ந்து கொண்டிருந்தது. திடீரென்று எதிரியின் தாக்குதல் உக்கிரமாக இருந்தது. இழப்புகள் பெரிய அளவில் ஏற்பட்டது.

திடீரென்று தலைவர் என்னை அழைத்து முன்னர் நாங்கள் கொடுத்த தரவுகள் அப்படியே இருக்கிறதா என்று பார் என்று உத்தரவிட்டார்.

அப்போதும் தலைவரது திட்டம் என்ன என்று எங்களுக்குத் தெரியாது. சண்டைக்கான திட்டங்களையும் அதற்கான ஒழுங்குகளையும் மேற்கொள்ள ஒவ்வொருவருக்கும் கட்டளையிட்டார்.

அந்தக் கட்டளைக்கமைவாக 1999 ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் நாள் ஒட்டுசுட்டானில் சண்டையைத் தொடங்கினோம்.

அந்த சண்டையைத் தொடங்கும்போது கூட சண்டையை தொடர்வதற்கான திட்டத்தைச் சொல்லவில்லை தலைவர். தொடர்ச்சியான சண்டைக்காக போராளிகளுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அன்று பிற்பகல் ஒட்டுசுட்டான் பிடிபட்டது. தொடர்ந்து சண்டை நடந்தது.

இராணுவத்தின் பிரதான ஆட்டிலறி மையம், கட்டளை மையம் கனகராயன்குளத்தில் இருந்தது.

அப்போது கனகராயன்குளத்துக்கு போராளிகளை அனுப்புகிற ஒழுங்கு செய்யச் சொன்னார். அதற்கு கரும்புலிகள் அணியை அனுப்பி வைத்தோம். தலைவருக்கு மட்டுமே அவர் என்ன செய்யப் போகிறார் என்று தெரியும். வேறு எவருக்கும் தெரியாது. ராஜூ அண்ணாவுக்கு மட்டுமே தலைவரின் அந்தத் திட்டம் தெரியும்.

கனகராயன்குளத் தாக்குதலுக்கான ஒழுங்குகளை ராஜூ அண்ணை செய்து கொண்டிருந்தார். அப்போது தலைவரிடம் சென்று செல்லடிக்க அனுமதி கேட்டார். ஆனால் தலைவர் அனுமதி தரவில்லை. இப்போது ஒன்றும் நீ செல்லடிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

நெடுங்கேணி பிடிபட்டது. அதன் பின்னர் மாங்குளம் பிடிபடும் போது ராஜூ அண்ணையை கூப்பிட்டு கனகராயன்குளம் மீது இப்போது செல்லடி என்று தாக்குதலை நடத்த உத்தரவிட்டார்.

நாங்கள் ஆட்டிலறியைக் கொண்டு தாக்கத் தொடங்கிய உடன் கனகராயன்குளம் கட்டளை மையம் வெடித்துச் சிதறியது.

இப்படியாக தலைவர் தனக்குள் சில தீர்க்கதரிசனமான உணர்வுகளுடன் திட்டங்களை வைத்திருக்கிறார். ஓயாத அலைகள் மூன்றின் தொடக்கம் அப்படித்தான் இருந்தது.

தலைவரின் எண்ணத்துக்குள் தமிழீழத்தை எப்படி அடைவது என்ற திட்டம் இருக்கிறது. அது நடைமுறைப்படுத்தும் போதுதான் அவர் கூறுவார்.

ஆகையால் அவரது தேவைகளைப் பூர்த்தி செய்பவர்களாக நாம் இருக்க வேண்டும்.

அடுத்த யுத்தம் வரக்கூடாது என்றுதான் நினைக்கிறார்கள். ஆனால் யுத்தம் வராமல் நம் நாடு நமக்குக் கிடைக்காது.

இப்போது சமாதான காலம்தானே... சண்டை வந்த பிறகு பார்க்கலாம் என்று நினைத்தால் அது வரலாற்றுத் தவறு.

கடந்த காலங்களில் நாம் எவ்வளவு தவறுகள் செய்திருக்கிறோமே அதைப் பாடமாக எடுத்து அந்தத் தவறுகளை செய்யாமல் இருப்போம்.

நாம் யாழ். நகரை மீட்கும் வாசலில் நின்றிருந்தோம். எங்களால் தொடர்ந்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற முடியவில்லை. ஆளணி, ஆயுத தளவாடத் தேவை குறிப்பாக ஆட்டிலறி செல்களின் பற்றாக்குறைதான் எம்மை யாழ். நகருக்குள் நுழைய விடமால் செய்துவிட்டது.

எங்களுடைய யுத்த வளர்ச்சி எங்களுக்கு நிறைய பாடங்களை கற்றுத் தந்திருக்கிறது.

கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு ஓடிய ஒரு காலம் இருக்கிறது. இன்று அந்தத் துப்பாக்கியை வைத்துக் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்கிற தெளிவு அனைவரிடத்திலும் உண்டு.

நீண்டகாலத்துக்குள் நிறைய விடயங்களை அனுப வரீதியாக கற்றுக்கொண்டிருக்கிறோம்.

இந்திய இராணுவத்துடன் யுத்தம் செய்ய தொடங்கிய போது பல பேருக்கு கேள்வி இருந்தது. எங்களுக்கும் இருந்தது. ஆமி வருகிறான் என்றால் நிறைய தூரம் ஓடி பாதுகாக்கும் நிலைதான் இருந்தது.

ஆனால் எமது படிப்படியான வளர்ச்சியில் இந்திய இராணுவத்தின் பலம் மற்றும் பலவீனத்தை கற்றுக் கொண்டு தேடி தேடிச் சென்று அழிக்கிற காலம் ஏற்பட்டது.

பேச்சுவார்த்தையூடாக இந்திய இராணுவம் பின்வாங்கியது. அந்தப் பேச்சுவார்த்தையை இந்திய இராணுவம் பயன்படுத்தியிருக்காவிட்டால் பெரிய விலையை கொடுத்திருக்க வேண்டும்.

அதனால்தான் இன்றும் அவர்கள் நம் போராட்டத்தில் தலையிட யோசிக்கிறார்கள்.

ஓயாத அலைகள் மூன்றின் போது எல்லைப் படையாக மக்கள் பயிற்சி எடுத்தனர். நாங்கள் அந்த மக்களுக்கு வழிகாட்டினோம். குடும்பத்தைக் கூட பார்க்காமல் நெருக்கடியான யுத்த களத்தில் நின்று தங்களை அர்ப்பணித்திருக்கிறார்க்ள்.

255 எல்லைப் படை வீரர்கள் அந்தக் களத்தில் தங்களை அர்ப்பணித்து மண்ணைப் பாதுகாத்தனர்.

அந்த எழுச்சி இன்றும் அந்த மண்ணில் நேரடியாக காணக் கூடியதாக் இருந்தது.

அண்மையை நிழல் யுத்தத்தில் மக்கள் எழுச்சியைப் பார்த்த சர்வதேச சமூகம் பல விடயங்களை இப்போது ஆய்வுக்குட்படுத்திக் கொண்டிருக்கிறது.

பேச்சுவார்த்தையூடாக நமது விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்கு பல திட்டங்கள் போடப்பட்டிருந்தன. அவற்றை எங்களுடைய தலைவர் அரசியல் காய் நகர்த்தல் ஊடாக சாமாளித்துள்ளார். அதை வியப்பாக சர்வதேசம் பார்க்கிறது.

நீண்டகாலமாக சிங்கள இராணுவத்தின் பிடிக்குள் வாழ்ந்த மக்களுக்கு ஒரு தேவை ஏற்பட்டு எழுச்சி ஏற்பட்ட போது அந்த இராணுவத்துக்கு எதிராக மிக ஆக்ரோசமாக போராடினார்கள். அதைக் கண்டு உலகம் திகைத்து போனது.

ஆகையால்தான் தமிழ் மக்களின் தாயகப் பற்று, விடுதலை உணர்வு, புலம்பெயர் தமிழர்களின் பலம், தமிழர் தலைமைப்பீடத்தின் இராணுவ ஆற்றல் ஆகியவற்றை சர்வதேச சமூகம் இன்று ஆய்வு செய்து கொண்டிருக்கிறது.

நாம் பலமானவர்களாக இருந்தால்தான் எப்போதும் நம்மைத் திரும்பிப் பார்ப்பார்கள் என்று தலைவர் கூறுவார்.

நாம் மிக மிக பலமானவர்களாக் இந்த உலகம் முன் நின்றால் எங்கள் மீதான் பல குற்றச் சாட்டுகளும் மறைந்து போகும்.

அத்தகைய பலத்தை உருவாக்குவதற்கான வளம் உங்களிடமிருக்கிறது. அதை உணர்ந்து நீங்கள் செயற்பட வேண்டு என்பதே எங்கள் எதிர்பார்ப்பு.

எங்கள் தாய் மண்ணில் எங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் போராளிகள் ஒவ்வொருவரும் விழிப்புடன், தலைவர் என்ன செய்ய சொல்வாரோ அதைச் செய்ய தயார் நிலையில் உள்ளனர்.

மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், வவுனியா மற்றும் மணலாறாக இருந்தாலும் எந்த சண்டைக் களமாக இருந்தாலும் அடுத்த கட்டளைக்காக எதிர்பார்த்து முன் நடவடிக்கையிலேயே ஈடுபட்டு வருகின்றனர்.

ஆகவே நீங்கள் ஒவ்வொருவருடைய கடமை என்ன என்பதை உணர்ந்து நமது அடுத்த கட்ட வளர்ச்சிக்குச் செயற்பாட்டுக்கு உங்களுடைய பங்களிப்பை உணர்ந்து செயற்பட வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் கருணாவின் உதவியை வைத்துக் கொண்டு எங்கள் கையை ஓங்க விடாமல் செய்துவிடலாம் என்ற எதிர்பார்ப்பு இராணுவத்துக்கு உள்ளது.

ஒவ்வொரு சண்டையையும் இப்படித்தான் செய்யப் போகிறோம் என்று சொல்லிவிட்டு சண்டை பிடிப்பவர் அல்ல எங்கள் தலைவர்.

எந்த சந்தர்ப்பம் வருகிறதோ அந்தச் சம்பவங்களின் போதுதான் எதைச் செய்ய வேண்டும் என்று தலைவர் தீர்மானிப்பார். அதுதான் தலைவரது வெற்றியின் ரகசியம்.

தலைவருக்கு மேடைப் பேச்சில் விருப்பமில்லாதது போல் எங்களுக்கும் மேடையில் பேசக் கூடிய தன்மை இல்லை.

தொடக்கம் தொட்டே சண்டை, போராட்டத்தினூடே வளர்ந்தவர்கள். நாங்கள் செயற்பாடு ரீதியாக மக்களுக்குச் செய்து காட்டி இருக்கிறோம்.

ஆகவே, நமக்கு நம் நாடு தேவை. நாம் அந்த நாட்டை அடையும் வாசலில் இருக்கிறோம்.

அந்த வாசலைத் திறந்து நாட்டை மீட்டெடுக்கும் முழு ஆதரவையும் அதற்கான பொருளாதார வளத்தையும் நீங்கள் ஒவ்வொருவரும் கொடுக்க வேண்டும் என்றார் கேணல் ஜெயம்.


தகவல் புதினத்தில் இருந்து