![]() |
|
மரிக்கப்போகும் தற்காலக் கணணிகள்.... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24) +--- Thread: மரிக்கப்போகும் தற்காலக் கணணிகள்.... (/showthread.php?tid=7047) |
மரிக்கப்போகும் தற்கா - kuruvikal - 06-15-2004 கணினியின் மரணம் - வெங்கட்ரமணன் இன்று ராய்ட்டர் நிறுவனத்தில் வெளியான செய்தியன்று நம்மிடம் இப்பொழுது பயனில் இருக்கும் கணினிகள் விரைவில் மரித்துப் போகும் என்று சொல்ல வருகிறது. இந்தச் சாவு செய்தியை நம்மிடம் சொல்வது சன் மைக்ரோஸிஸ்டம் நிறுவனம். அதனுடைய புதிய வர்த்தகத் திட்டத்தின் அடிப்படையில் அவர்களிடம் மென்கலன் வாங்குபவர்களுக்கு, கணினி சம்பந்தமான அவர்களுடைய சேவைகளுக்கு ஒப்பந்தம் செய்துகொள்பவர்களுக்கு, கணினி இலவசமாகத் தரப்படும் என்று சொல்கிறார்கள். இதே செய்தியை கொஞ்சம் நாட்களுக்கு முன்னால் மைக்ரோஸாப்ட் நிறுவனத் தலைவர் பில் கேட்ஸ் கூடச் சொன்னார். சமீபகாலத்தில் மைக்ரோஸாப்ட்டும்-சன்னும் மிக நெருக்கமாக உறவாடுகின்றன. (எனக்கென்னமோ இன்னொரு அபாயக் கூட்டணியான ஜார்ஜ் புஷ்-டோனி ப்ளேர் நினைவில் வருகிறார்கள். புஷ் சொல்வதை அப்படியே எதிரொலிப்பவராகத்தானே டோனி ப்ளேர் இருக்கிறார்). நெருக்கத்தைப் பகிரங்கமாக்கிக் காட்டவோ என்னவோ சன் மைக்ரோஸாப்டைத் துல்லியமாக எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. கணினி இலவசமாகக் கிடைக்கும் என்று கேட்ஸ் சொன்னால் "ததாஸ்து" என்கிறது சன். இலவசமாகக் கணினி கிடைத்தால் பெருக வேண்டுமல்லவா? நான் ஏன் சாகும் என்று சொல்கிறேன்?? * * * கடந்த பல வருடங்களாகக் கணினி (குறிப்பாக மேசை, மற்றும் மடிக்கணினிகள்) விலை மிகவும் குறைந்து வருகிறது. இப்பொழுது நான் வசிக்கும் டொராண்டோ நகரில் சிறு கடைகளில் போய் தனித்தனி பாகங்களாக வாங்கி இணைத்தால், ஒரு அற்புதமான கணினியை 300-400 கனேடியன் டாலர்களுக்கு (10,000-13,000 இந்திய ரூபாய்களுக்கு) கோர்த்துக் கொள்ளமுடியும். ஏன், டெல் போன்ற முதன்மை கணினி நிறுவனத்திலேயே 450 கனேடியன் டாலர்களுக்கு நல்ல தரமான கணினி கிடைக்கிறது. நான் முதன் முதல் பெண்டியம் 75 மெஹாஹர்ட்ஸ் கேட்வே கணினியை, 1995ல் வாங்கியபொழுது அதன் விலை கிட்டத்தட்ட 70,000 ரூபாய்கள் கிட்டத்தட்ட பத்து வருடங்களில் திறன் பத்து மடங்கு அதிகரித்த கணினியின் விலை, ஆறு-ஏழு மடங்கு குறைந்துபோய்விட்டது. இப்பொழுது சராசரி கனேடிய இல்லங்களில் 2 கணினிகளாவது இருக்கின்றன (என்னுடைய வீட்டில் நான்கு; என் மேசைக்கணினி, மடிக்கணினி, தமிழ்லினக்ஸ் இணையதளம் வழங்கும் கணினி இதெல்லாம் போக என் குழந்தைகளுக்காக ஒரு கணினியும் உண்டு). கணினியின் விலை வரலாறு காணாத அளவிற்கு வேறெந்த நுகர்வோர் சாதனங்களையும்விடக் குறைந்துகொண்டே இருக்கிறது. இது வரும் நாட்களிலும் தொடரும் என்று நம்பலாம். மறுபுறம், கணினியை இயக்கும் இயக்குதளம் மற்றும் பயன்பாடுகளின் விலை பெருகிக் கொண்டே போகிறது. எனக்குத் தெரிந்தவகையில் விண்டோஸ் 3.11ன் விலை 40 டாலர்களாக இருந்தது, இப்பொழுது விண்டோஸ் எக்ஸ்பியின் விலை 200 டாலர்கள். மைக்ரோஸாப்ட் ஆபீஸின் விலை 50 டாலர்களாக இருந்தது இப்பொழுது 400 டாலர்கள். அதாவது, ஒரு கணினி-விண்டோஸ்-ஆபீஸ் கொண்ட தொகுப்பில் விண்டோஸ்-ஆபீஸின் விலை கிட்டத்தட்ட 20 சதவீதமாக இருந்ததுபோக இப்பொழுது 150% சதவீதமாக அதிகரித்திருக்கிறது. வரும் நாட்களில் இன்னும் இதன் சதவீதப் பங்கு அதிகரிக்கும் என்று நம்பலாம். இந்த நிலையில் இப்பொழுதெல்லாம் கணினி வாங்கவேண்டும் என்று திட்டமிடுபவர்களுக்கு அதன் வன்கலன் விலையைவிட இயக்குதளம்/பயன்பாடுகளின் விலை முக்கியம். (விண்டோஸ் எக்ஸ்பி, ஆபீஸ், அடோபி போட்டோஷாப், நார்ட்டன் ஆண்டிவைரஸ், இப்படி அத்தியாவசியமான ஒவ்வொன்றுக்காக விலையைச் சேர்த்துக் கொண்டோ போனால் இதன் அபத்தம் நிச்சயம் உறைக்கும்). இது எல்லாவற்றுக்கும் மேலாக மென்கலனின் வாழ்நாள் மிகவும் குறைவு. விண்டோஸ் 95, 98, 2000, எம்ஈ, எக்ஸ்பி என்று அடிக்கடி மாறிக்கொண்டே இருப்பதால் அதே கணினியை வைத்துக் கொண்டு இந்த ராஜாக்களுக்குக் கட்டும் கப்பம் மிகவும் அதிகம். * * * இதை மாற்ற லினக்ஸ் மற்றும் தளையறு மென்கலன்கள் பெரிதும் உதவுகின்றன. ஆனால் இந்தக் கட்டுரை அதைப்பற்றியது இல்லை. கணினியின் சாவு குறித்தது. எனவே லினக்ஸை கொஞ்சம் மறந்துபோவோம். * * * இந்த அபத்தம் கட்டாயம் மைக்ரோஸாப்ட் போன்ற மென்கலன் வியாபாரிகளுக்கு உறைக்கத் தொடங்கியிருக்கிறது. அதற்காக அவர்கள் விலையைக் குறைத்துத் தங்கள் இலாபத்தில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்வார்களா? மைக்ரோஸாப்ட்/சன் தங்கள் வியாபார உத்தியை மாற்றத் தொடங்குகிறார்கள். வருங்காலத்தில் மென்கலன் ஒப்பந்தத்தில் கையப்பமிட்டால் கணினியை மைக்ரோஸாப்டோ, சன் நிறுவனமோ இலவசமாக உங்களுக்குத் தருவதாகச் சொல்லத் தொடங்குகிறார்கள். கவனிக்கவும், இது விண்டோஸ் எக்ஸ்பியை "வாங்குவது" இல்லை. விண்டோஸ் எக்ஸ்பி "ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது". அதாவது அடுத்த ஆயிரம் டாலர்கள் கொடுத்தால் மைக்ரோஸாப்ட் நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உங்களுடைய கணினி தேவையைக் கவனித்துக் கொள்ளும். கேட்பதற்கு எளிதாகத்தான் இருக்கிறது. சொல்லப்போனால் நடைமுறையிலும் எளிதாகத்தான் இருக்கும் போலத் தோன்றுகிறது. பின் என்ன சிக்கல்? வாங்கினால் உங்களுக்குச் சொந்தம். அதில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் ஒப்பந்தக் கணினியில் என்னென்ன இயக்கலாம் என்பதைக் கணினி தரும் நிறுவனம் உங்களுக்கு அறிவுறுத்தும். அதாவது, விண்டோஸ் எக்ஸ்பி பிடித்திருக்கிறது, மைக்ரோஸாப்ட் ஆபீஸ் தேவையாக இருக்கிறது என்றால் சரி. அடுத்ததாக அடோபி போட்டோஷாப் வேண்டும் என்றால், மைக்ரோஸாப்ட் ஒப்பந்தத்தை மீற வேண்டிவரும். ஏனென்றால் மைக்ரோஸாப்ட் 'டிஜிட்டல் இமேஜ் ஸ்வீட்" என்றொரு தயாரிப்பை வைத்திருக்கிறது. அதுதான் உங்களுக்கு ஒத்துவரும் என்று முடிவு செய்வார்கள். எனவே, அடோபியின் தயாரிப்பை உங்களால் பயன்படுத்த முடியாது. "ஹாங், அப்படியெல்லாம் இல்லை, நாங்கள் அதையும் அனுமதிப்போம்" என்று பெயரளவில் சொல்வார்கள். ஆனால் அவர்களுடைய ஒப்பந்த விலை உங்களுக்கு அதைச் சொல்லாமல் சொல்லும். உதாரணமாக டிஜிட்டல் மீடியா ஸ்வீட் இல்லாத (கணினி, இயக்குதளம், ஆபீஸ்) பொதிக்கு ஆயிரம் டாலர்கள் விலை என்றால், மீடியா ஸ்வீட்டும் சேர்த்தால் ஆயிரத்து நூறு டாலர்கள் என்று இருக்கும். தனியாக போட்டோஷாப்பின் விலை அறுநூறு டாலர்கள் என்று இருக்கும்பொழுது, நீங்கள் தானாக மீடியா ஸ்வீட்டிடம் சிறைப்படுவீர்கள். இப்படி ஆக்டோபஸின் கால்களாக சன்னோ, மைக்ரோஸாப்ட்டோ உங்களை நெருக்கும். இதெல்லாம் ஒன்றும் புதியதில்லை. ஏற்கனவே மைக்ரோஸாப்ட் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. இப்பொழுது கணினி வாங்கும்பொழுது இயக்குதளம், ஆபீஸ் பொதி, உலாவி, மின்னஞ்சல் நிரலி என்று எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாகத் தலையில் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆபீஸ் வாங்கினால் அவுட்லுக் மின்னஞ்சல் நிரலி கூடவே வரும். அக்ஸஸ் இல்லாத ஆபீஸ் பொதியை விட அக்ஸஸ் சேர்த்தது கொஞ்சம்தான் விலை அதிகம், எனவே தேவை இருக்கிறதோ இல்லையோ, அக்ஸ்ஸ் சேர்த்த பொதியாகவே வாங்கிப் போட்டுக்கொள்ளலாம். நாளைக்குப் பயன்படக்கூடும். இது நாள்வரை கணினி தயாரிப்பாளர்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு மைக்ரோஸாப்ட் வாங்கும்பொழுதே நுகர்வோர்கள் தலையில் கட்டிவந்தார்கள். பலத்த போட்டியிருக்கும் கணினி உற்பத்தித் துறையில் இப்பொழுது அதன் சாத்தியங்கள் குறைந்து வருகின்றன. லினக்ஸ் போன்ற இயக்குதளங்கள் சராசரி வீட்டுப் பயனுக்குத் தயாராகிவரும் நிலையில் நாளை டெல், ஹெச்பி போன்ற தயாரிப்பாளர்கள் "வின்டோஸ் வேண்டாம், நாங்கள் லினக்ஸ் போட்டு கணினியை விற்கிறோம்" என்று ஒரு உந்தலில் சொன்னால், இன்னும் இரண்டு தயாரிப்பாளர்கள் அதற்குப் போட்டியா லினக்ஸ் பொதிக்கப்பட்ட கணினியை விற்கத்தொடங்கினால் மைக்ரோஸாப்ட் கட்டாயம் ஆடிப்போகும். அதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. (இந்தியாவில் லினக்ஸ் கணினிகளை ஹெச்பி விற்கிறது). இதற்கு மாற்றாக சாட்சிக்காரன் காலில் விழுவதற்குச் சண்டைக்காரன் காலில் விழலாம் என்று மைக்ரோஸாப்ட்/சன் முடிவெடுக்கின்றன. ஆதாயத்தில் ஒரு பகுதியைக் குறைத்துக் கொண்டு கணினியை இலவசமாகக் கொடுத்தால் சந்தையைத் தக்கவைத்துக் கொள்ளமுடியும். இதுதான் அவர்களின் வியாபார உத்தி. இலவசமாகக் கிடைப்பது எதுவுமே சிக்கலில்லாமல் இருக்காது. இரண்டு வருடம் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு கணினியை வாங்கினால் அதில் இருப்பவை எல்லாம் அவர்களுடைய விண்டோஸ்ம், ஆபீசும் இல்லாமல் இரண்டு வருடம் கழித்து பயன்படாது. அந்த நிலையில் நீங்கள் புதிதாக ஒப்பந்தம் போட்டுக்கொண்டு புதிய கணினியைப் பெற்றுக் கொள்வீர்கள். இப்படி வாழ்நாள் முழுவது உங்கள் குடுமி அவர்கள் கையில். * * * இப்படி வருகின்ற கணினிகள் நமக்கு இன்றைக்குத் தெரிந்த கணினிகளாக இராது. அவற்றில் வேண்டிய நிரலியைப் போட்டுக்கொண்டு வேண்டியபடி இயக்க உங்களால் முடியாது. அதில் பாட்டுக் கேட்கலாமா, டிவிடி போட்டுப் படம் பார்க்கலாமா என்று அவர்கள்தான் முடிவு செய்வார்கள். இன்றைக்குக் கணினியில் இருக்கும் பெரிய கவர்ச்சியே அது பயனருக்கு ஏற்றபடி எப்படிப்பட்ட சாதனமாகவும் உருவெடுக்கும் திறமைதான். உதாரணமாக என்னுடைய வீட்டில் வழங்கியாக இருந்து கொண்டு தமிழ்லினக்ஸ்.ஆர்க் தளத்தை இயக்கும் கணினி ஒரு சாதாரண அலுவலகப் பயனுக்காக வாங்கப்பட்டது. பின்னர் அதை ஆய்வகத்தில் வேறுசில இயந்திரங்களைக் கட்டுப்படுத்த ஏற்றவகையில் மாற்றியமைத்தேன். அதற்கும் வேறு கணினி கிடைத்தவுடன் அலுவலகத்தில் தூக்கிப் போட்டுவிட்டார்கள். நான் அதில் இன்னும் கொஞ்ச நினைவுச் சில்லுகள், இன்னொரு கடினவட்டு இரண்டையும் இணைத்து லினக்ஸ் நிறுவி அதை முழுச் சேவைவழங்கிக் கணினியாக மாற்றியமைத்தேன். நாளை சன் மைக்ரோஸிஸ்டம் தரும் இலவசக்கணினியில் இதெல்லாம் சாத்தியமாக இருக்காது, அதன் வீடியோ அட்டை என்னவென்று உங்களுக்குத் தெரியாது, அதில் கடின வட்டை அதிகரிக்க முடியாது (அந்தக் கடினவட்டு சன் நிறுவனத்திற்காகப் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டதாக இருக்கும், அவர்களிடம் மாத்திரம்தான் கிடைக்கும். பழுது ஏற்பட்டால் எக்கச்சக்க விலைகொடுத்து அவர்களிடம் பாகங்கள் வாங்க வேண்டும்). மொத்தத்தில் நாம் அறிந்த கணினியாக அது இருக்காது. நம் செல்லக் கணினி செத்துப்போகும். * * * கிட்டத்தட்ட செல்பேசிகள் அப்படித்தானே இருக்கின்றன? இரண்டு வருட ஒப்பந்தம் போட்டுக் கொண்டால் இலவச போன். ஆனால் அதை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யமுடியாது (அதில் ஒரு நல்ல அகராதியைப் பொதித்துக் கொள்வது இயல்பில் சாத்தியமே, ஆனால் அதன் மூடிய வடிவம் அதற்கு இடம் தராது). ஒரு காலத்தில் இல்லத்தில் இருக்கும் தொலைபேசிகள்கூட அப்படித்தான். இந்தியத் தொலைபேசித் துறையில் வந்து கருப்பு நிறத்தில் விரலைவிட்டுச் சுற்றும் பெட்டியைத்தான் தருவார்கள். அதன் பின்னால் இருக்கும் இணைப்பு வயர்கள் நேரடியாகக் கம்பத்தில் இணைக்கப்பட்டிருக்கும். காலம் காலமாக உங்களைக் கம்பத்தில் கட்டிப் போட்டுக் கொண்டிருந்தார்கள். பின்னர் அதன் அபத்தம் உறைக்க, நுகர்வோர்கள் பொறுமை இழந்தவுடன், இல்லங்களில் ஒரு RJ45 துளையைப் போட்டுவிட்டு அத்துடன் தொலைபேசிக்காரர்கள் நிறுத்திக் கொள்ளத் தொடங்கினார்கள். அந்தத் துளையில் அதி அற்புத பனாசோனிக் தொலைபேசியோ, பழைய சுழல் எண்கள் கொண்ட டப்பாவையோ இணைப்பது உங்கள் தெரிவு. மைக்ரோஸாப்ட்டும் சன்னும் உங்களைக் கற்காலத்திற்கு அழைத்துச் செல்ல ஆயத்தமாக இருக்கிறார்கள். சென்று வாருங்கள். வெங்கட்ரமணன் - ஒரு நாடோடியின் வடதுருவ வலைக்குறிப்புகள் தகவல் சூரியன் டொட் கொம்...! - vasisutha - 06-21-2004 Quote:கணினி இலவசமாகக் கிடைக்கும் என்று கேட்ஸ் சொன்னால் "ததாஸ்து" என்கிறது சன். குருவியிடம் என்னவென்று கேட்கவும் பயமா இருக்கு. இருந்தாலும் கேட்கிறன் .தாதாஸ்து என்றால் என்ன? - kuruvikal - 06-22-2004 உதெல்லாம் சிலாங் சின்ன பிள்ளையளுக்கு சொல்லி விளங்காது...குடுகுடு கிழங்களுக்குத்தான் விளங்கும்...நீங்க கண்டுக்காதேங்க.... மேல படியுங்க... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|