Yarl Forum
மார்லன் பிராண்டோ - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: மார்லன் பிராண்டோ (/showthread.php?tid=6789)



மார்லன் பிராண்டோ - AJeevan - 08-17-2004

<img src='http://www.kumudam.com/theeranadhi/010804/pg1-t.jpg' border='0' alt='user posted image'>
<b>மனிதனெனும் வகையில் மார்லன் பிராண்டோ ஒரு தேவன்
நடிகனெனும் வகையில் அவன் ஒரு பிசாசு</b>
_பெர்னார்டோ பெர்ட்டுலூசி

<img src='http://www.kumudam.com/theeranadhi/010804/pg1a.jpg' border='0' alt='user posted image'>
புறவுலகிலிருந்து விலகி நான்கு ஆண்டுகளாகத் தனித்து வாழ்ந்த மார்லன் பிராண்டோ, தன்னிலிருந்து உலகைத் தூரத் தனிமைப்படுத்தி விட்டு, 2004 ஜூலை 4 அன்று தனது எண்பதாவது வயதில் மரணமுற்றிருக்கிறார்.

'நடிப்பை நான் வெறுக்கிறேன்' எனத் தனது இறுதிக் காலத்தில் சொன்னார் மார்லன் பிராண்டோ. 'உலகிலேயே எந்தப் புதிருமற்று சாதாரணமாக நம்மால் புரிந்துகொள்ள முடிவது நடிப்பைத்தான்.

நாம் பிறமனிதரிடம் எதனையேனும் வெளிப்படுத்த நினைக்கும் போதும், மறைக்க நினைக்கும் போதும், ஏமாற்ற நினைக்கும் போதும் உடனடியாகச் செய்வது நடிப்பதைத்தான்' என்றார் 'மார்லன் பிராண்டோ எமக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தவர்' எனத் தமது அஞ்சலியில் தெரிவித்திருக்கிறார் ஜாக் நிக்கல்ஸன்.

ஹாலிவுட் ஸ்டுடியோ அமைப்பின் ஆதிக்கத்திலிருந்தும், வித்தியாசமற்று, வரைமுறைக்குட் பட்டு, காலத்தின் வன்முறைக்கு உட்பட்டு வெளிப்படும் ஹாலிவுட் நடிப்புப் பாணியிருந்தும் தனக்குப் பின் வந்த நடிகர்களுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததாக பிராண்டோவின் பாணியிருந்தது.

அவர் வழி வெளிப்பட்ட நடிகனின் கலக பிம்பம், உலககெங்குமுள்ள திரைப்பட ரசிகர்களால் அங்கீகரிக்கப்பட்டது. உடல் மொழியும் உளவியலும் இணைந்து, பாத்திரத்தின் உள் நுழைந்து அதனது ஆன்மாவைத் தேடிச் செல்லும், பாத்திரமேயாகும் பாணி பிராண்டோவின் பாணி.

ரஷ்ய நாடகாசிரியன் ஸ்டானிஸ் லாவஸ்க்கியின் வழி வந்தடைந்த பாணி. அடிக்கடி மெல்லச் செறுமிக் கொள்வதன் வழியும், யதேச்சையாக உடலின் மீது பரவும் கைகளின் நகப் பிராண்டலின் வழியிலும் பாத்திரத்தின் உளவியலுக்குள் நுழைந்து, அதனைப் பார்வையாளன் முன்பு வாழ்ந்து காட்டியவர் மார்லன் பிராண்டோ.

அவர் இல்லையென்றால், 'டாக்ஸி டிரைவர்' ரோபர்ட் டீ நீரோவும், 'ப்ளு ஓவர் குக் குஸ் நெஸ்ட்' ஜாக் நிக்கல்ஸனும், 'டெவில்ஸ் அட்வகேட்' அல் பாச்சினோவும் இல்லையென்பார்கள்.

தமிழ் சினிமாவில் 'நாயகன்' வேலுநாயக்கரும் (காட்பாதர்) 'ஆளவந்தான்' (அபோகலிப்ஸ் நவ்) நந்துவும் இல்லையென்பதும் நிஜம். இவை பிராண்டோ எனும் கலை ஆளுமையின் சர்வவியாபகத்துக்குச் சாட்சியமாக நமக்கு முன் இருக்கிறது.

1924 ஏப்ரல் 3 அமெரிக்காவிலுள்ள நெப்ராஸ்காவில் மார்லன் பிராண்டோ பிறந்தார். அவரது தந்தை ஒரு நாடோடி வியாபாரி. தாய், தொழில்முறை நடிகை. இருவருமே மிதமிஞ்சிய குடியில் ஆழ்ந்தவர்கள்.

தனது பதினாலாவது வயதில் படைத் துறைப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தார் பிராண்டோ. ஒழுக்க நடவடிக்கையின் அடிப்படையில் பள்ளியிலிருந்து விலக்கப்பட்டார். நடிகையான தனது அன்னையின் விருப்பப்படி தனது பதினெட்டாவது வயதில் சமூக ஆய்வுக்கான புதிய நடிப்புப் பள்ளியில் சேர்ந்தார்.

ஸ்டானிஸ் லாவஸ்க்கியைக் கற்றார். அமெரிக்க நாடகாசிரியர் டென்னஸி வில்லியம்ஸின் 'எ ஸ்டீரீட் கார் நெய்ம் டு டிஸயர்' எனும் நாடகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யும் மனம் பிறழ்ந்தவனின் பாத்திரத்தினை ஏற்று நடித்தார்.

எலியா காசானின் இயக்கத்தில் இந்த நாடகம் திரைப்படமாகியபோது, அந்தத் திரைப்படத்திலும் நடித்தார். அலட்சியமும் வன்முறையும் அமெரிக்க சமூக மதிப்பீடுகள் குறித்த நிராகரிப்பும் கொண்ட பாத்திரங்களை ஏற்ற பிராண்டோ அமெரிக்க இளைஞர்களின் ஆதர்சமானார்.

1950_ல் 'தி மென்' எனும் படத்தில் நடிக்கத் துவங்கிய பிராண்டோவின் திரைப்பட வாழ்வில் ஐம்பது ஆண்டு காலத்தில் முப்பத்து ஒன்பது திரைப்படங்களிலேயே அவர் நடித்துள்ளார்.

2001_ல் அவரது இறுதிப் படமான 'தி ஸ்கோர்' வெளியானது. 'தி வொன் ஐடு ஜேக்' எனும் திரைப்படத்தினை 1961_ஆம் ஆண்டு இயக்கியிருக்கிறார்.

ஐம்பதுகளில் வெளியான 'தி ஸ்டிரீட் கார் நெய்ம் டு டிஸயர்', 'விவா ஜபாட்டா', 'தி வாட்டர் பிரண்ட்' போன்ற படங்களையடுத்து, எழுபதுகளில் வெளியான 'காட் பாதர்', 'அபோகலிப்ஸ் நவ்', 'தி லாஸ்ட் டாங்கோ இன் பாரிஸ்' போன்ற படங்களே அவருக்கு உலக அளவில் விமர்சகர்களிடமிருந்தும் சினிமாப் பார்வையாளர்களிடமிருந்தும் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தன.

விதிவிலக்காக 1996_ல் வெளியான பிராண்டோவின் 'டான் ஜுவான்' அவரது ரசிகர்களுக்கு மறக்கமுடியாத காதல் படமாக அமைந்தது. இடைப்பட்ட காலங்களில் அவர் நடித்த படங்கள் அவரது திறமையை வீணடித்த படங்கள்.

பிராண்டோ தனது முப்பத்து மூன்றாவது வயதில் திருமணம் செய்துகொண்டார். மூன்றுமுறை திருமணம் செய்து கொண்ட அவர், மரணமடையும்போது தனிநபராகவே மரணமுற்றார். அவ்வேளை அவர் திருமண பந்தத்தில் இல்லை. ஒன்பது குழந்தைகளும் பல வளர்ப்புக் குழந்தைகளும் அவரது வாரிசுகளாக இருக்கிறார்கள்.

அவரது ஒரு மகன், தனது ஒன்றுவிட்ட சகோதரியின் காதலனை கொன்றதற்காகக் சிறையிலடைக்கப்பட்டிருக்கிறான். காதலனைப் பறிகொடுத்தத் துயரில் பிராண்டோவின் மகள் பிற்பாடு தற்கொலை செய்துகொண்டாள்.

மார்லன் பிராண்டோ எனும் ஆளுமையை முற்றிலும் நிலைகுலைந்து போகச் செய்தன நடந்த சம்பவங்கள்.

வழக்கு மன்றத்தில் சாட்சியமாக பிராண்டோ தோன்றியபோது,
"நான் எனது குழந்தைகளை நன்றாகவே வளர்த்தேன். அவர்களுக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்தேன்" என்று மட்டுமே சொன்னார்.

உடைந்துபோன மனிதனாக அவர் ஆனார். இதன் பின் வெளியுலகிலிருந்து தன்னை முற்றிலும் துண்டித்துக் கொண்டார்.

கடந்த நான்கு ஆண்டுகளாகத் தனது லாஸ் ஏஞ்ஜல்ஸ் வீட்டின் உயர்ந்த, மூடிய கதவுகளின் பின்னும், தாகித் தி எனும் பூர்வகுடி இந்தியப் பிரதேசத்தில் அமைந்த தனித்த வீட்டிலுமே தனது இறுதிக் காலங்களைக் கழித்தார் 'அம்மா எனக்குச் சொன்ன பாடல்' எனும் தனது சுயசரிதையை 1996_ஆம் ஆண்டு பிராண்டோ எழுதி வெளியிட்டார்.

அவரது உடல் ஜூலை மாதம் ஏழாம் திகதி குடும்ப நிகழ்வாக ரகசியமாக அடக்கம் செய்யப்பட்டது. அதிகமும் புறநிகழ்வாக இல்லாமல் இது போலவே நடந்த இன்னொரு அமெரிக்க சினிமா ஆளுமையின் உடல் அடக்கம் இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக்கினுடையது.

பிராண்டோவைப் போலவே வெளியுலகத் தொடர்புகளிலிருந்து விலகி, உயர்ந்த மதில் கொண்ட மாளிகையில் வாழ்ந்தவர் குப்ரிக். ஒரு வகையில் மிக வெளிப்படையாகத் தமது படைப்புகளை ஆரவார உலகின் முன் வைத்த இக்கலைஞர்கள் இருவரும்_தமது வாழ்வை உலகை விலக்கிவைத்த வகையில் முடித்துக் கொண்டது,

நடிப்புக்கும் நிஜத்துக்கும் இருந்த பொய்யான உறவை ஆத்மார்த்தமாக உணர்ந்து கொண்டதனால்தானோ என்பது விடை காணவியலாத கேள்வியாகவே இருக்கிறது.



பிராண்டோ நடித்த 'தி லாஸ்ட் டாங்கோ இன் பாரிஸ்' படம், திரைப்படம் குறித்த நமது அனைத்து எண்ணங்களையும் மாற்றியமைத்த படம்.

இனி இதுபோல் இன்னொரு படம் வருவதற்கான சாத்தியமேயில்லை என 'நியூயார்க்கர்' சஞ்சிகை விமர்சகரான பாவ்லின் கேயிலினால் வியந்து சொல்லப்பட்டது.

'தி லாஸ்ட் டாங்கோ இன் பாரிஸ்' இயக்குநர் பெர்ட்டுலூசி ஒரு மார்க்சியராவார். காதலைத் தேடிய, வலி கொண்ட ஒரு மத்திய வயது ஆணும், ஒரு இளம் பெண்ணும், முற்றிலும் அன்னியர்களாகி உடலுறவில் திளைப்பதும், அந்த உடலுறவு தரும் நெருக்கத்தில் தாம் அருகருகில் வருவதையுணர்ந்து, ஆண் பெண்ணைத் தேடிச் செல்பவனாக ஆக, பெண் அவனை விட்டுவிலகி ஓடி, இறுதியில் ஆணின் மரணத்துடன் முடியும் கதை 'தி லாஸ்ட் டாங்கோ இன் பாரிஸ்'. கட்டற்ற காதலையும் வாழ்வையும் அதனது உளவியல் உடல் பதட்டத்தையும் திரைக்கதையில் அகப்படுத்த முடியும் என்பதற்குச் சான்றாக, இப்படம் இருக்கிறது.

இந்தத் திரைப்படத்தின் மூலம் இயக்குநர் பெர்ட்டுலூசி தன்னை பாலியல் பலாத்காரத்துக்கும் உளவியல் பலாத்காரத்துக்கும் உட்படுத்திவிட்டார் எனப் பின்னாளில் சொன்னார் பிராண்டோ.

இப்படம் முடிந்து பன்னிரண்டு ஆண்டுகள் வரை தன்னிடம் பேசுவதையே விட்டுவிட்டார் எனவும் தானே முன் வந்து பிராண்டோவுடன் பேச முயற்சித்தேன் எனவும், பெர்ட்டுலூசி குறிப்பிடுகிறார்.

ஒரு வகையில் பற்பல காதலியரைக் கொண்டிருந்த, மனைவியரை விவாகரத்துச் செய்த பிராண்டோவின் சொந்த வாழ்வாக, இப்படம் அமைந்திருக்கிறது எனவும், இப்பாத்திரத்திற்காக அவர் தன்னையே மறுபடி மறுபடி தோலுரித்துக் கொண்டார் என்றும் சொல்கிற ஐரோப்பிய விமர்சகர்கள் உண்டு.

மனைவியினால் துரோகத்திற்கு ஆட்பட்ட மனிதன்; மனைவியின் காரணமற்ற தற்கொலைக்குப் பிறகு, அவளது உடலின் முன்பு அமர்ந்தபடி தனிமையில் அரற்றும் மனிதன்; குளியலறைத் தொட்டியின் அருகில் நின்றபடி, சுவற்றில் அணைத்தபடி, வெற்றுத் தரையில் புரண்டபடி எனக் குற்றமற்று உடலுறவில் ஈடுபடும் மனிதன்; இருவரது அடையாளமும் தேவையில்லை என ஒப்புக் கொண்டுவிட்டு, பிற்பாடு இளம் பெண்ணைத் தேடித் தேடி அலைந்து திரியும் மத்திய வயது மனிதன் என, உலக சினிமா நடிகர் எவருக்குமே கிடைத்திராத ஒரு உக்கிரமான பாத்திரத்தில் இப் படத்தில் வாழ்ந்திருக்கிறார் பிராண்டோ.

'ஓர் ஆண் தனது வாழ்வின் சம்பாத்யத்திற்கு என்ன செய்கிறான் என்பது பிரச்சினையில்லை' என்பார் 'காட் பாதர்' டான் கோர் லியோன் பிராண்டோ. 'காட் பாதர்' திரைப்படம் மூன்று பாகங்களில் வெளியானது. அந்தத் திரைப்படங்கள் பிராண்டோவை அடியற்றி, ராபர்ட் டுவெல், ராபர் டி நீரோ, அல் பாச்சினோ, ஆன்டி கர்ஸியா போன்ற திறனும் புகழும் பெற்ற நடிகர்களை உருவாக்கியது.

அரசியல், அறிவியல், சமூகம், விசுவாசம், குடும்ப உறவுகள், வாழ்வின் நிச்சயமின்மை, அமெரிக்க வியாபார நிறுவனங்கள் எனப் பல விசயங்களைப் பேசியதாக 'காட் பாதர்' குறித்த மூன்று படங்களும் அமைந்தன. மாபியாவின் வாழ்வுக்கும் மீறலுக்கும் கொலைகளுக்கும் கூட ஒழுக்கங்கள் நியதிகள் இருந்தன.

குடும்ப உறவும் ஆண் மேலான்மையும், பலமுள்ளவனை அடிபணிந்து பலமற்றவன் ஒப்புக்கொள்வதும் என அவர்களது கட்டுக்கோப்பான வாழ்வின் வன்முறையையும், அதனுள் இயங்கும் அன்பும் காதலும் கொண்ட உறவுகளையும் 'காட்பாதர்' சொல்லியது. 'காட்பாதர்' படத்தின் முதலாவது பாகத்திலேயே மாபியா 'டானா'க இருந்த மார்லன் பிராண்டோ சுடப்பட்டு, கொஞ்சம் நாட்கள் பிழைத்திருந்து மரணமடைகிறார்.

நாவலாசிரியர் கான்ராட் ருக்ஸ் தனது 'ஹார்ட்ஸ் ஆஃப் டார்கனெஸ்' நூலில் முன் வைத்த காங்கோ அனுபவத்தை வியட்நாமில் பொருத்திப் பார்த்ததாக அமைந்த திரைப்படம், 'அபோகலிப்ஸ் நவ். 'காட்பாதர்' படத்தை இயக்கிய கொப்போலோதான் இப்படத்தையும் இயக்கினார்.

அமெரிக்காவினால் வியட்நாமுக்கு அனுப்பப்பட்ட கலோனல் குர்ட்ஸ் எனும் படையதிகாரி வியட்நாமில் ஒரு தனித்த பிரதேசத்தை தன் வசப்படுத்தி தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை அமைத்துக்கொண்டு, கொலை வெறி கொண்ட ஒரு உன்மத்தனின் மனநிலையுடன் வாழ்கிறான்.

வன்முறைச் சுழல், கொலைச்சுழல் போன்றன தப்ப முடியாது, அதிகார வேட்கையினால் கடுமையான சந்தோசத்தை மனிதனுக்கு வழங்கிவிடும் என்பதை இந்தப்படம் பார்வையாளனுக்குரிய செய்தியாக முன் வைக்கிறது. கொல்லப்பட்ட குழந்தைகளின் கைகளை தனியே வெட்டி வரிசையாக வைத்துப் பார்க்கப் பழகினால் கொலை செய்வதிலுள்ள குற்றமனம் இல்லாது போய்விடும் எனச் சொல்கிற மனம் படைத்தவனாக, தீவு மனிதனாக 'அபோகலிப்ஸ் நவ்' படத்தில் பிராண்டோ தோன்றியிருக்கிறார். கொழுத்த கழுத்தும் முழுக்க மழித்த மொட்டையும், மொட்டைத் தலையைச் சுற்றித் தொட்டு நழுவும் கையும் என மங்கலான வெளிச்சத்தில், சில கணங்களே அவரது மாயத்தன்மை பெற்ற முகம் வெளிப்பட்டு இருளில் மறைவதாக இந்தப் படத்தின் பிராண்டோ சம்பந்தமான காட்சிகள் அமைந்திருக்கும். இந்தத் திரைப்படம் வெட்டப்படாத பகுதிகளோடு, இன்னும் கொஞ்சம் பிராண்டோவின் உக்கிரமான பிம்பத்துடன் 2000_த்தில் வெளியானபோது, அதற்காகவே இப்படத்தின் டிஜிட்டல் வீடியோப் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன.

இந்தப் படங்களிலிருந்து முற்றிலும் மாறான ஒரு முதியமனிதனின் குதூகலமும் நேசமும் கொண்ட காதல் வாழ்வைச் சித்தரிக்கும் படம் 'டான் ஜூவான்'. ஜானி டெப் நவீன காஸினோவாக நடிக்க, கண்ட பெண்களின் மீதெல்லாம் காமுறும் அந்த இளைஞனின் காதலுக்கும் காமத்துக்கும் உளவியல் அடிப்படைகளைத் தரும் உளப் பகுப்பாய்வனாக பிராண்டோ நடித்தார்.

இப்படத்தில் தனது நூற்று முப்பத்து மூன்று கிலோவிலான பருத்த உடலுடன் மனைவியுடன் அவர் புரியும் காதல் காட்சி நம்மை பரவசத்தின் விளிம்புக்கு இட்டுச் செல்லும் தன்மை படைத்ததாகும். கடைவாயில் பஞ்சுப் பொதியை அடக்கியபடி, அடிக்கடி மெல்லத் தொண்டையைச் செறுமியபடி, உதடு பிரியாமல் தமது செல்ல மகன்களை கைவிரல் ஜாடையில் அழைத்தபடியிருக்கும் 'காட் பாதர்' டான் போல் லியோன், தன்னைவிடவும் பல பத்தாண்டுகள் வயது குறைந்த.. தான் உடலுறவு கொண்ட பெண்ணின் மீது உன்மத்தம் பிடித்த மத்திய வயது மனிதனாக பாரிசின் தெருக்களில் அலைந்து திரிந்து, டாங்கோ நடனச் சாலையில் குடித்துக் கிடந்து, அவளால் உதாசீனப்படுத்தப்படுத்தப்படும் 'லாஸ்ட் டாங்கோ இன் பாரிஸின்' நாயகன், வியட்நாமில் அமெரிக்க நரவேட்டையில் மூழ்கி கொலையே கலையாகி, வாழ்வின் நியதியாகி, மனிதர்கள், எருதுகள், குழந்தைகள் என அனைவரையும் வெட்டிச் சாய்த்தும் குத்திக் கிழித்தும் பிளந்தும் சந்தோசமுறும் 'அபோகலிப்ஸ் நவ்' தளபதி கலோனல் குர்ட்ஸ் என மார்லண் பிராண்டோ எனும் கலைஞனது நடிப்பாற்றலை அனுபவித்தவர்களுக்கு நிச்சயம் அவரது மரணச் செய்தி மனம் துணுக்குறச் செய்து உணர்ச்சி வாசத்தில் ஒரு கனம் கண்ணீரை வரவழைத்தே தீரும்.



மார்லன் பிராண்டோ, கலைஞன் எனும் வகையிலும் சமூக அரசியல் ஜீவி எனும் வகையிலும் கலகக்காரனாகவே வாழ்ந்தார். தனது சொந்தப்படக் கம்பெனியின் இயக்குனரான ஸ்டான்லி குப்ரிக்கை படத்திலிருந்த விலக்கினார்.

ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் தயாரித்த பல படங்களின் படப்பிடிப்பு அரங்கில் இயக்குனர் சொல்வதைக் கேட்காமல் தவிர்ப்பதற்காகத் தனது காதுகளில் பஞ்சை அடைத்துக் கொண்டு அமர்ந்திருந்திருக்கிறார். அவரது படங்கள் குறித்து அவர் பேச விரும்பியதில்லை.

தம்மைத் தாமே புகழ்ந்து கொள்ளும் நடிகர்களை அவர் வெறுத்தார். கொப்போலா, பெர்ட்டுலாசி, பொன்டகாரவோ, எலியா காசான் போன்றவர்களின் படங்கள் தவிர, அவர் பிற படங்களில் நடிப்பதில் Êஆர்வம் காட்டவில்லை. "நடிப்பை விட்டொழிப்பதுதான் முதிர்ச்சியுற்ற மனிதன் செய்ய வேண்டிய காரியம்" என அவர் அடிக்கடி சொன்னார். 'வெறுமனே நடிக்காதே, மாறாக இயல்பாக இருக்கப் பழகு' என்பதுதான் அவரது நடிப்பு குறித்த ஆத்மார்த்தமான புரிதலாக இருந்தது.

இந்தக் காரணத்திற்காகத்தான், "நிஜத்தில் நான் நடிக்க விரும்பவில்லை. காசுக்காகவே படங்களில் நடித்தேனா" என அவர் அடிக்கடி வலியுறுத்திச் சொல்லிக் கொண்டிருந்தார்.



இளமைக் காலத்திலிருந்தே தாராளவாத இடதுசாரி அரசியலில் ஆர்வம் கொண்டவராக அவர் இருந்தார். 1959 _ ஆம் ஆண்டு ஹென்றி போண்டா, மர்லின் மன்றோ, ஆர்தர் மில்லர் போன்றவர்களுடன் இணைந்து அணு ஆயுதத்துக்கு எதிரான போராட்டங்களில் பங்கு கொண்டார்.

1963_ஆம் ஆண்டு மாரட்டின் லூதர் கிங் உரை நிகழ்த்திய ஆகஸ்ட் மக்கள் உரிமைப் பேரணியில் பங்கேற்றார். 1964, மே லண்டனின் தென் ஆப்ரிக்கத் தூதரகத்தின் முன்பு நடைபெற்ற நிறவாதத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அரசியல் கைதிகளை விடுவிக்கும் இயக்கத்தில் பங்கேற்றார். தமது படங்களை நிறவெறிப் பார்வையாளர்கள் முன்பு காண்பிக்கக் கூடாது என, திரைப்படக் கதாசிரியர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் போன்றவர்கள் கையெழுத்து இயக்கம் நடத்துமாறு கோரி முன்னணியில் நின்று செயல்பட்டார். இப்படி அனேகம் இருக்கின்றன. 'காட் பாதர்' படத்திற்காக இரண்டாம் முறையாக ஆஸ்கார் விருது பெற்ற பிராண்டோ, இம்முறை பூர்வகுடி தென்அமெரிக்க மக்களுக்கு எதிரான அமெரிக்க அரசின் அடக்குமுறையை எதிர்த்து ஆஸ்கார் விருதை நிராகரித்தார்.



அந்தப் பரிசளிப்பு விழாவுக்கு, தனது சார்பாக ஒரு தென்அமெரிக்கப் பெண்ணை அனுப்பி தனது பதினைந்து பக்க அறிக்கையை வாசிக்குமாறு ஏற்பாடு செய்தார். ஒன்றிரண்டு வாசகங்கள் வாசிக்கப்பட்ட நிலையில் அப்பெண் மேடையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

எலியா காசானின் இயக்கத்தில் மூன்று படங்களில் நடித்த பிராண்டோ, அவரது 'தி வாட்டர் பிரண்ட்' படத்தில் நடித்தது குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கவில்லை. அமெரிக்காவில் வாழ்ந்த வெளிநாட்டைச் சேர்ந்த மார்க்சியர்களான பெர்ட்டோல்ட் பிரெக்ட் போன்றவர்கள் மீதும், சார்லி சாப்ளின் போன்றவர்கள் மீதும், அமெரிக்காவில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் செயல்பட்ட அப்ரகாம், போலன்ஸ்க்கி, வால்ட்டர் பெர்ன்ஸ்டீன் போன்ற திரைப்பட இயக்குனர்கள் மீதும் சென்ட்டர் மெக்கார்த்தி தேசபக்த விரோதச் சட்டம் கொண்டுவந்தபோது, தனது நண்பர்களைக் காட்டிக் கொடுத்து, அமெரிக்க அரசுக்கு உளவு சொல்லித் துரோகமிழைத்ததோடு, தனது அமெரிக்க தேசபக்தியைக் காட்டிக் கொண்டார் காசான். எலியா காசானின் துரோகத்தை நியாயப்படுத்துவதாகவும், காசானின் இரட்டை மனநிலையை வெளியிடுவதாகவும் இருந்த அந்தப் படத்தின் கதாநாயகரின் பாத்திரத்தை ஏற்று நடித்த பிராண்டோ, எலியா காசானின் எண்ணம் அப்போது தனக்குத் தெரிந்திருக்கவில்லை எனப் பின்னாளில் தெரிவித்தார்.

"பிரண்டோ ஒரு பந்தயக் குதிரை போன்றவர். அவரோடு வேலை செய்வது கடினம். ஆனால் அவர் ஒரு அசாதாரணமான நடிகர். ஒரு மேதை. அவர் பிரச்சினைகள் செய்தபோதும் நாம் என்ன கேட்கிறோமோ அதை அவர் நமக்கு வழங்குவார் என்பது மட்டும் நிச்சயம்" என்கிறார் பொண்டகாரவோ.



புகழ்மிக்க இத்தாலிய நடிகையான சோபியா லொரய்ன் சொல்கிறபடி, சொந்த வாழ்வில் பற்பல துயர்களை எதிர்கொண்ட பிராண்டோ, பிற்காலத்தில் தன்னைக் கவனித்துக்கொள்ளவே மறந்துவிட்டார்.

கட்டான உடல் கொண்ட இளைஞனான பிராண்டோ, எழுபதுகளில் மிகுந்த சதைகொண்ட மாமிச மலை போன்ற உடல்வாகு கொண்டவரானார். இறக்கும் தருவாயில் நூற்றி முப்பத்து நான்கு கிலோ பருமன் கொண்டவராக பிராண்டோ இருந்தார். ஆனால் 'டான் ஜவான்' படத்தில் உடலைக் கடந்து செல்லும் காதலனாக அவர் தோன்றவே செய்தார்.

அமர கலைஞன் மார்லன் பிராண்டோ குறித்த தனது அஞ்சலியில் அவுஸ்திரேலிய மார்க்சிய சினிமா விமர்சகர் டேவ் வீச் இவ்வாறு குறிப்பிடுகிறார் : 'குறிப்பிட்ட மனித இயல்பினுள்ளும் ஆளுமையினுள்ளும் அரை மயக்க நிலையில் ஆழ்ந்து செல்லும் ஒரு வகைத் திறனே நடிப்பு என்பதாகும்.

ஒரு மகத்தான நடிகர் இத்தகைய பாத்திரங்களினுள் பயணம் செய்கையில் ஓரளவு உலகைக் குறித்து அறிவதும் உணர்தலும் முக்கியம். மனித குலத்தின் விரிந்துபட்ட அக்கறையின் பொருட்டு, ஒரு நடிகன் கண்டடைந்ததை அவன் பரந்துபட்ட மனித குலத்துடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

பிராண்டோவினுடைய ஆளுமையின் ஒருமை என்பது, இறுதிப் பகுப்பாய்வில் அவர் எவ்வாறாக சமூத்தின் மீது அதிருப்தி கொண்டிருந்தார் என்பதிலிருந்து அறியப்படுவதல்ல, மாறாக கோடிக்கணக்கான மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலவிய சமூக அமைப்பினை எதிர்த்து, எவ்வாறு அவர் போராடினார் என்பதே எமக்கு முக்கியமானதாகும். இவ்வாறான பிராண்டோவின் கலகப் பண்புதான் அவருக்குப் பின் வந்தோருக்கு அவர் விட்டுச் சென்ற பங்களிப்பு என நாம் சொல்லலாம்'.

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->யமுனா ராஜேந்திரன், சினிமா விமர்சகர், மொழி பெயர்ப்பாளர், கவிஞர் என்று பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர். லண்டனில் வசித்து வருகிறார்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

- தீராநதி