Yarl Forum
தத்தெடுக்கப்போகின்றாயா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: தத்தெடுக்கப்போகின்றாயா? (/showthread.php?tid=5130)



தத்தெடுக்கப்போகின்றாயா? - Mathan - 02-20-2005

தத்தெடுக்கப்போகின்றாயா? அதற்கு.... தாயுள்ளம் அல்லவா வேண்டும்.

எல்லாருக்கும் வணக்கம்! வணக்கம்! எப்பிடி இருக்கிறீயள் எல்லாரும்? நாட்டு நடப்புகளும் ஏதோ நடந்து கொண்டிருக்கு. எனக்கும் கையில ஒரு அலுவல். ஆனா என்ன மாதிரிச் செய்யிறதெண்டு மனசொத்து ஒரு முடிவெடுக்கேலாமக் கிடக்கிது. ஒண்டுமில்லைப்பாருங்கோ! கிட்டியில அப்பாவின்ர திவசம் வருகிது. உவ்வளவு காலமும் செய்து வந்த மாதிரி இந்த வருசமும் செய்ய மனம் ஏதோ ஒத்துவரேல்லை. நாங்களெல்லாரும் செத்த ஆட்களின்ர அஸ்தியைக் கடலிலை கொண்டுபோய்க் கலக்கிறதை காலங்காலமாய் வழக்கமா வைக்சிருக்றம். ஆனால், அப்பிடி கீரிமலைக்குப் போன ஆக்களையுமெல்லே அடிச்சுக்கொண்டு போட்டிது கடல். ஏதோ காலாகாலமா இருந்து வாற வழக்கம்... தொடர்ந்து செய்தா என்ன குறைஞ்சே போகப்போறன் எண்டிட்டு சும்மா ஏதோ செய்வோமெண்டு இருக்கிறன். எங்கட அயல், உறவுகள் தான் என்ன சொல்லுதுகளோ தெரியேல்லை.
உப்படித்தான் அண்டைக்கு யாழ்ப்பாணத்திலை தெரிஞ்ச பக்கத்தாலை ஒரு மனுசன் அதுவும் 26ஆம் திகதி அண்டைக்கொண்டு செத்துப்போச்சு. அது கால, அகால எல்லாத்தையும் தாண்டின இயற்கை மரணம். சாகேக்கிள்ளை 105 வயசு மனுசனுக்கு. ஆரோ ஒரு பேரப்பொடி சொன்னானம். 'அது அப்புவின்ர கடைசி மூச்சுத்தான் சுனாமியா வந்திருக்கெண்டு'. ஏதோ பெரிய விசுவாமித்திர முனிவர்.. அவற்றை மூச்சுக்கு இருப்புக் கொள்ளேல்லை. எட! பெரிய விஞ்ஞான விளக்கம் சொல்லிறார் அவர். விசர்க்கதைக்கும் ஒரு அளவு, காலநேரம் வேணுமெல்லே. எல்லாம் முடிஞ்சாப்பிறகு சிலர் குடுக்கிற விசராட்ட விளங்கங்களை சில பெரிய பெரிய பத்திரிகைகளும் போட்டு நிரம்பி, பக்கங்களை வீணடிக்கினம்.

என்னவோ எனக்கு பெரிசா மனம் சரியில்லாமல் கிடந்திச்சு, அப்பதான் வித்தியாசமா ஒரு ஜடியா வந்திச்சு. என்ர அப்பாவுக்கும் கட்டாயம் அந்த ஜடியா நல்லாப் பிடிக்கும். வீடு,வாசல்களை இழந்து போய் அங்கங்கே எங்கட ஆக்கள் தங்கியிருக்கினமெல்லோ. அவையளுக்கு ஒரு இரண்டு நல்ல படமா என்ற செலவில போட்டுக்காட்டுவம் எண்டது தான் ஜடியா. பொறுங்கோ! பொறுங்கோ! நீங்கள் நினைக்கிற மாதிரி தமிழ்ப்படமில்லை. ஏதாவது நல்ல இங்லிஷ் நகைச்சுவைப்படங்கள், எல்லாருக்கும் விளங்கக்கூடியது. அவையளுக்கும் கொஞ்சம் ஆறுதலா பம்பலா இருக்குமெல்லே! எங்கட நாட்டு நகைச்சுவை நடிகர் ஒராளின்ர குடும்பத்திலையும் சிலரை முல்லைத்தீவிலை அலை கொண்டு போட்டிதென்று கேள்விப்பட்டனான். கிளிநொச்சியிலை அந்த ஆளின்ர நகைச்சுவைக்காட்சி படத்திலை போகேக்கிள்ளை காதும், மனமும் நிரம்பி வழியக் கேட்ட சிரிப்பொலியள்.... இண்டைக்கு... சே! ஆ.... அதை விடுங்கோ! அப்ப ஏதாவது சார்ளி சப்ளின்ர Moderm times அல்லாட்டி The great Dictator, Home alone, Baby's trip (குழந்தையின் சுற்றுலா) எண்டு நல்லதா ஏதாவது தெரிவு செய்வோம் எண்டிட்டு ஏ-9 பக்கம் போனன்.

உங்களுக்குத் தெரியும் தானே, உந்த விசயத்தில் எனக்கு சரியா விளக்கம் குறைவெண்டு. அப்பதான் ஏற்கனவே போய்ப்பழக்கப்பட்ட (முந்தியொருக்கால் நான் செருப்பு, குட்டி படங்கள் விசாரிச்ச கடை தெரியுமெல்லே உங்களுக்கு) அந்தக் கடைக்காரத்தம்பியிட்டை விசாரிப்போம் எண்டு அங்க போனன். ஆ.. அப்பு! வாங்கோ, வாங்கோ! என்ன ஒரு அதிசயமான வரவு. கனநாளுக்குப் பிறகு வந்திருக்கிறீயள். சந்தோசம்: 'தம்பி! என்னை மறக்கேல்லைப் போல? என்ன அப்பு, அண்டைய எப்படி மற்க்க முடியும்! சொல்லுங்கோ, உங்களுக்கு இந்தக் கடையில இல்லாததே! 'அந்தத் தம்பியின்ர வரவேற்பில நானும் குளிர்ந்திட்டன். பக்கத்தில ஒரு இளவட்டத்தம்பி அவசரமா துடிச்சுக்கொண்டு நிண்டிச்சு. 'தம்பி! இவரை முதல்லை கவனியும்! அவசரம் போல கிடக்கு. பாவம்" சரி அப்பு, கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கோ! தம்பி உமக்கென்ன வேணும்? 'ஏய்...! எனக்குப் 'பக்" எண்டிச்சிது. எட பாவம் கெதியா எடுத்துக்கொண்டு போகட்டும் எண்டு விட்டால், இப்பிடி வயசுக்கு மரியாதை இல்லாமல் கடைக்காரனைப் பார்த்து ஏய் எண்டிறான். 'தம்பி! பார்க்க சின்ன வயது, நல்ல பொடியன் மாதிரிக் கிடக்கு. ஏன் உப்பிடி அவரை மரியாதை இல்லாமல் கதைக்கிறீயள்? கொஞ்சம் வாயை அளந்து பேசும்! நான் பொரிஞ்சு தள்ளினன். அந்தப் பொடி மிரண்டு மிரண்டு பாத்திச்சிது. 'ஜயோ அப்பு! அது புதிசா வந்த படத்தின்ர பேர் 'ஏய்...! எனக்கு வெட்கமாய் போச்சிது. பேந்து அந்தத் தம்பியோட கதைச்சு கன விசயத்தை அறிஞ்சு கொண்டன். நான் விசாரிச்ச படங்கள் ஒண்டும் அங்கே இல்லை. 'குழந்தையின் சுற்றுலா" மட்டும் தெரிஞ்ச ஒரு இடத்தில இருக்கிது. சாதாரணமா கிடையாதெண்டாலும் எனக்காக எடுப்பிச்சுத் தாறதாச் சொன்னார். எட நாலு பேர் சிரிச்சுச் சந்தோசமா இருக்கிறதுக்கு ஒரு படைப்பு உதவுமெண்டால் அதை எல்லாரும் எல்லாருக்கும் குடுக்க முன்வரரோனும். நீங்கள் நினைப்பியள். என்னடா ஏரம்பர் ஆங்கில மோகம் பிடிச்சுப்போய் இங்லிஷ் படத்துக்காக அலையிறார் எண்டு. அப்பிடில்லைப் பாருங்கோ. நான் சொன்னதுகள், நான் சொன்ன தேவைக்குத் தரமான ஆரோக்கியமான படங்கள், தெரிஞ்சிதோ! ஆ...! என்னால எல்லா இடத்துக்கும் ரீவி, டெக் எல்லாத்தையும் தூக்கிக்கொண்டு திரிலேயாது. வயது போன என்ரை நாரி விடாது. உங்களுக்கும் இப்பிடிச் செய்யிறது பிடிச்சிருந்தால், அந்ததந்த நலன்புரி நிலையங்களுக்குப் பொறுப்பான ஆக்களோட கதைச்சிட்டு ஒரு பள்ளிக்கூடம் லீவான பின்னேரத்தில் இப்பிடிச்செய்யலாமெல்லோ! தலைவர் போனகிழமை என்னண்டு சொன்னவர்.. 'குழந்தைகளை விரைவாக மகிழ்ச்சிகரமான எதிர்காலத்திற்கு இட்டுச்செல்லக்கூடிய புறச்சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியுள்ளது. விளையாட்டு மைதானங்கள், மகிழ்ச்சிகரமான பாடசாலைச்சூழல் போன்றவற்றை உருவாக்குவதன் மூலம் அவர்கள் அடைந்த அதிர்ச்சி அனுபவத்திலிருந்து அவர்களை விடுவிக்க முடியும்." என்ர குஞ்சுகள் நான் சொன்ன கசற் கிடைக்கேல்லை எண்டிட்டு இந்தியப்படங்களைப் போட நினைச்சுப்போடாதேங்கோ! சுனாமி நிலைவரம் அறிய எண்டிட்டு, குறளோவியம் தந்த கலைஞரின்ர 'சன் ரிவி" ரமில் ரொலைக்காட்சியிலை செய்தி பார்த்தன் பாருங்கோ, 'தாய்லாந்திலுள்ள நடச்சத்திர ஹொட்டல் ஒன்றை சுனாமி தாக்கும் தத்ரூபமான காட்சிகள் இதோ சிறிய விளம்பர இடைவேளைக்குப் பின்னர் காணத்தவறாதீர்கள்! எண்டிச்சினம். என்னடா கறுமம் இது? பொங்கலுக்கு வெளியிடிற புதுப்படம் மாதிரியெல்லே சொல்லினம். என்னவோ போங்கோ!

ஆ.... உந்த இந்தியாப்படங்களைப் பற்றி கதைக்கேக்கைதான் ஞாபகம் வருகிது. ஒரு எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடிச்ச படம். பேர் மறந்து போனன். இரண்டு எம்.ஜி.ஆர்மாரும் கைக்குழந்தைகளா இருந்த நேரம் கொள்ளைக்காரன் நம்பியாரை எம்.ஜி.ஆரின்ர தகப்பன் கைதுசெய்து ஜெயிலுக்கு அனுப்பிறார். ஆனா நம்பியார் தம்பி வந்து அவரைக் கொலை செய்து போட்டு, அவரை இன்னும் வஞ்சம் தீர்க்கவேணும் எண்டு கெட்ட புத்தியில, தன்ர கையில கிடைச்ச ஒரு எம்.ஜி.ஆரை தானே கொண்டு போய் பொல்லாத கொள்ளைக்காரனா வளர்க்கிறார். பாருங்கோ ஒரேடியடியாச் செத்தால் தன்ர வஞ்சம் தீராதெண்டு, தனக்குப்பிடிக்காத ஆக்களின்ரை குழந்தையை தானே வளர்த்து, அதின்ர வாழ்க்கையை நாசமாக்கிற புத்தி எப்பிடியெல்லாம் போகுதெண்டு! ஆனால் அது படம். நம்பியார் பாவம், குடுத்த காசுக்கு சும்மா வந்து வில்லன் மாதிரி நடிச்சுப்விட்டுப் போனவர். ஆனா நிஜ வாழ்க்கையிலையும் உப்பிடிப்பட்ட ஈனப்புத்தியோட சில ஜென்மங்கள் இருக்கத்தான் செய்யிது! ஆரெண்டு நான் சொல்லமாட்டன்.

தத்தெடுக்கப் போகின்றாயா?? அதற்குத்தாயுள்ளம் அல்லவா வேண்டும்! பித்துப்பிடித்த பேயுனக்கு எங்கள் பிஞ்சொன்றைத் தருவோமோ! நாகர்கோவிலில் நீ எடுத்துக்கிழித்த லட்சணம் இன்னும் அகலவில்லை நெஞ்சை விட்டு பற்றி எரிகிறதடி பாவியுன் அறிக்கைகளைக் கேட்க! குரல்வளையை நசித்துக்கொண்டு 'குயிற்ரெக்ஸ்" பூசப்போகின்றாயா எங்களுக்கு? உயிரிழந்து போன எம் உறவுகளின் உடல்களைக் காட்டி உலகநாடுகளின் முன் பிச்சையெடுத்துப் பிழைப்பவளே! இப்போது உயிரோடும் உனக்கு வேணுமோடி? உன் புத்தி வேறெப்படிப் போகும்! பிஞ்சுடல்களை வைத்துப் பிழைப்பதிலே உலகளாவிய ரீதியிலே உனக்குத்தானே இரண்டாம் இடம்! தெற்கின் கரைகளிலே உல்லாசிகளிடம் சோரம் போகும் எம் சிங்களச் சோதரங்களிடம் உன் நல்லெண்ணத்தைக் காட்டு! ஒட்டுமொத்தமாய் நம்மை ஒழித்துக்கட்ட நினைப்பவளே உன் நல்லுறவுக்கான சமிக்கையின் நயவஞ்சகம் நாம் அறிந்ததுதான்! நாம் கடந்து வந்த தடங்களெல்லாம் பின்னிப்பிணைந்திருப்பவள் நீதானே! தேவனின் மடியிலும், பள்ளிக்கூட நிழலிலும் பலியெடுத்தெம்மைத் தொலைத்ததும் ஜெயசுக்குறுவில முடக்கி அட்டகாசித்ததும் எரிகிறதடி எங்கள் வயறு! நொந்து போயிருக்கும் எம்மவர் நெஞ்சத்தீ பருக்கொண்டொரு நாள் பறந்து வரும் அன்றும் கண்ணோடு உடலெங்கும் புண்ணாகிப் புழுக்கும்! எம்மனம் அப்போது சுளிக்கும்!!

நாள் முழுக்க ஒரே அலைச்சல். இண்டைக்கு வேளைக்கு நித்திரைக்குப் போகோணும் எண்டிட்டு, வேளைக்கே சாப்பிட்டுப் போய் கண் அயர்ந்தன். என்ன சோக்கான தூக்கம்! பொறுங்கோ! பொறுங்கோ! உதென்ன உங்கை நடக்கிது? ஆரோ ஒரு பொம்பிளைப்பிள்ளை கண் கூசிற மாதிரி ஆடுது. சுத்தி வர ஏழெட்டு தெரியாத அந்நியமான மூச்சையள். ஏதோ பழைய கால அரேபிய கொடியிடை நடனம் மாதிரி. அவா ஆடிறா...இவங்கள் சாய்வா படுத்திருந்தவடி காசுக்கட்டுகளை எடுத்து அவாவை நோக்கி எறியிறாங்கள். ஜயா! ஜயோ.. என்னடா கண்ராவி. போர்த்திக்கொண்டிருந்த பொம்பிளை ஒவ்வொண்டா அழிவிழ்ந்து அவிழ்ந்து எறியிது. அவங்களும் காசை வீசிறாங்கள். என்ர கடவுளே! நாசமாய்ப்போன உலகம். எக்கேடு கெட்டுசுப்போச்சிது! உதுக்கு மேலை என்ர கண்ணுக்கு முன்னால உப்பிடி ஒரு அநியாயம் நடக்க விடப்பிடாது எண்டிட்டு கிட்ட ஓடிப்போனன். 'என்ன இருந்தாலும் இந்த அளவுக்கு கழற்றி வீசிறியள். ஏன்? என்ன பிரச்சினை? சொல்லும்! 'எனக்கு காசுக்கஷ்டம். அது தான் இப்பிடிப் பிழைக்கிறன்' 'ஜயோ! முன்னாலையே எனக்கொரு சொல்லு சொல்லியிருக்கலாம் தானே. விழுந்து கிடக்கிற துணியளை எடுத்து உடுத்துக்கொண்டு என்ர வீட்டை வாரும். நீர் ஆர், எந்த ஊர் எண்டு ஒண்டும் எனக்குத் தெரியாது. ஆனா உமக்கு ஏற்பட்ட கஷ்ரம் உலகத்தில ஒரு மொப்பிளைக்கும் ஏற்படக்கூடாது. சாகும் வரைக்கும் நான் வேளாவேளைக்கு சாப்பாடும், தங்க இடமும் தந்து என்ர குடும்பத்திலே ஒருத்தியா காப்பாத்திறன்" 'ஜயோ அப்பு! எனக்கு சாப்பாட்டுக்கு கஷ்ரம் ஒண்டும் இல்லை. புதுசு புதுசா நல்ல நல்ல மொடல் உடுப்புகள் வந்திருக்கு. அதுகள் வாங்கத்தான் பணம் இல்லை" அட கடவுளே! மொடல் உடுப்பு வாங்கிறதுக்காக எவனாவது மானம் காக்கிற உடுப்பைக் கழற்றிப்போடுவானே! என்னவோ நான் அவையின்ர ஷோவைக் குழுப்பிப்போட்டன் போல கிடக்கு. அந்தப் பொம்பிளை 'யாரங்கே, பிடித்துச்செல்லுங்கள் இவனை! எண்டு கையைத்தட்டி ஓடர் குடுத்தா. இருப்புப்பிடி பிடிச்சு, சரசரவெண்டு நிலத்தில அரைய அரைய இழுத்துக்கொண்டு போனாங்கள். 'என்னை விடுங்கோ! என்னை விடுங்கோ! உன்னைப்போய் பாவம் பார்த்தேனே! என்னை விடு!! பலம் கொண்ட அளவுக்குக் கத்தினன். நினைவு வந்து முழிச்சுப்பார்த்தா எல்லாம் கனவு. 'யாரை பாவம் பார்த்னீயள்? உப்பிடிக் கத்திற அளவுக்கு ஆர் உங்களை பிடிச்சிழத்தது?? வீட்டில் சந்தேக சுனாமி அடிக்கத்தொடங்கியது. கட்டையில போற வயசில இப்பிடி ஒரு கஷ்ரம் எனக்குத் தேவையா?? ஆனாலும் அந்த முகத்தை எங்கையோ பார்த்த மாதிரிக் கிடந்திச்சிது. நித்திரை குழப்பிட்டிது. கூடவே நிம்மதியும் தான். பக்கத்திலை கிடந்த பத்திரிகையை எடுத்துப்புரட்டினன். 5 ஆண்டுகளுக்கு தேர்தல் இல்லை" படத்துடன் செய்தி போட்டிருந்திச்சு. எட... எட... ஓகோ... எண்டானம்! இப்ப தானே விளங்கியது! சரி பிள்ளையள் நான் படுக்கப்போறன், வாறகிழமை சந்திப்போம்!

ஈழநாதம்.


தத்து எடுப்பது - eelapirean - 02-20-2005

தத்து எடுப்பது சரி மட்டகளப்பில் ஒரு பிள்ளைக்கு 9 பேர் உரிமை கோரினார்கள். உண்மையான தாயைக் கண்டு மற்ற 8 பேரும் மாயமாகிவிட்டனர்.அந்த 8 பேரையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை கொடுக்க வேண்டும்.


- Mathan - 02-21-2005

குழந்தைக்கு உரிமை கோரிய மற்றவர்கள் என்ன நோக்கத்தில் அவ்வாறு கேட்டார்கள் என்பதை கண்டறிய வேண்டும். சிலர் சுனாமியில் குழந்தையை தொலைத்தவர்களாக இருந்து இருந்து இதனை தமது குழந்தை என்று நினைத்திருக்கலாம், அவவாறு இல்லைமால் தெரிந்துகொண்டே உரிமை கோரி இருந்தால் நிச்சயமாக அதனை விசாரித்து தண்டனை கொடுக்க வேண்டும் அதனால் உண்மையான பெற்றோர்கள் எவ்வளவு மனம் வருந்தி இருப்பார்கள்.