Yarl Forum
அழிவுகளை பார்வையிடாததை நியாயப்படுத்த முடியாது - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: அழிவுகளை பார்வையிடாததை நியாயப்படுத்த முடியாது (/showthread.php?tid=5088)



அழிவுகளை பார்வையிடாததை நியாயப்படுத்த முடியாது - Vaanampaadi - 02-22-2005

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளின் இலங்கை விஜயம் தமிழ்ப் பகுதிகளில் கடல்கோள் அழிவுகளை பார்வையிடாததை நியாயப்படுத்த முடியாது

-தில்லைக்கூத்தன்-

கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னாள் இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகளான பில் கிளின்ரன், ஜோர்ஜ் புஷ் ஆகியோர் சுனாமியின் தாக்கத்தை அறிவதற்கு பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு விஜயம் செய்தார்கள். இதன் காரணமாக, இலங்கைக்கும் சேத அழிவுகளை நேரில் காண்பதற்கு வருகை தந்தார்கள். இவர்கள் தமிழ்த் தாயகத்தில் ஏற்பட்ட அழிவுகளை பார்வையிடப் போகவில்லை. தமிழ்த் தாயகத்தில் ஏற்பட்ட பாரிய அழிவுகளை பார்வையிடாதது மிகவும் கொடூரமான செயலென்றே தமிழ் மக்கள் கருதுகின்றனர்.

இதனுடைய மர்மத்தை நாங்கள் ஆழமாகச் சிந்திப்பது அவசியமாகின்றது. இலங்கையில் இவர்களுடைய வருகைக்குரிய நோக்கத்தை எண்ணி எந்தெந்த இடங்களைப் பார்வையிட வேண்டுமென்று தீர்மானித்தது இலங்கை அரசாங்கமோ அல்லது அமெரிக்க தூதுவரகமோ என்று எமக்குத் தெரியாது. சுனாமி இனத்துவேசமோ அல்லது இனப்பாகுபாடோ காட்டவில்லை. ஆனால், தமிழ்ப் பிராந்தியத்தில் மன்னார் பிரதேசத்தைத் தவிர்ந்த, ஏனைய பிரதேசங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு விட்டன. இந்தப் பின்னணியில் அமெரிக்கப் பிரமுகர்கள், தம் தாயகத்தை பகிஷ்கரிப்பது மன்னிக்க முடியாத மிகவும் மனிதாபிமானத்துக்கு அப்பாற்பட்ட கொடூரமான செயலென்றே கருதுகின்றார்கள்.

தமிழ்ப் பிரதேசம் இருபத்து நான்கு வருடங்களுக்கு மேலாக சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளினால் அழிக்கப்பட்ட பிரதேசம். இருபத்து நான்கு வருடங்களான யுத்த சூழ்நிலையில் ஆரம்ப காலகட்டத்தில் தமிழர்கள் கல்வியில் முன்னேற்றமடையக் கூடாதென்ற ஒரே காரணத்துக்காக ஆசியாவில் புகழ் பெற்ற யாழ்ப்பாண நூல் நிலையத்தை எரித்து சாம்பலாக்கிய பெருமை சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளுக்குத்தான் உண்டு. அதன் பின்பு கடந்த இருபத்து நான்கு வருட காலங்களாக தமிழ்ப் பிராந்தியம் இலங்கை அரசாங்கத்தின் இன வெறிக்கு முகம் கொடுத்தது. அதன் பின்பு இன்று வரை தமிழர் தாயகம் சிங்கள இனவெறியை எதிர் கொள்கின்றது.

கிழக்கு மாகாணத்தில் நிகழ்ந்த கொலைச் சம்பவங்களுக்கு நிகரில்லை. வடக்கு மாகாணத்தில் மிகவும் பயங்கரமான இனப்படுகொலைகள் ஏற்பட்டன. இதன் விளைவாக இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் தங்கள் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக பிற நாடுகளுக்கு சென்று, அகதி அந்தஸ்துப் பெற்று வாழ்வதை நாம் இன்றும் காணலாம்.

வடபிராந்தியத்தில் சிங்கள விமானப் படைக் குண்டு வீச்சுக்குப் பயந்து புனித பீற்றர் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்த அகதிகளைக் கூட, சிங்கள் விமானப் படை குண்டு வீசி அழித்தது. குடாநாட்டில் விளையாடிக் கொண்டிருந்த பள்ளிக் கூட குழந்தைகளைக் கூட சிங்கள விமானப் படை கொன்று குவித்தது. இவற்றையெல்லாம் அவதானித்த ஐ.நா.மனித உரிமைகளைக் காப்பாற்றும் குழு ஐ.நா.சரித்திரத்தில் கேள்விப்படாத வகையில் சிங்கள அரசாங்கத்திற்கு மிகவும் மோசமான கண்டனத்தைத் தெரிவித்து தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.

இலங்கைத் தமிழர்கள் அடைந்த துயரங்களையும் அவலங்களையும் சர்வதேச சமுதாயம் நன்கு அறிந்து விட்டது. அப்படியிருந்தும் இந்த இரு அமெரிக்கப் பிரமுகர்கள் தங்கள் வருகையின் போது தமிழ்த் தாயகத்தை பகிஷ்கரிப்பதற்கு யார் பொறுப்பு என்று அறிவது அவசியமாகின்றது.

இராஜதந்திர சம்பிரதாயங்களின்படி சம்பந்தப்பட்ட அரசாங்கமே அவர்களுக்கு தெரிவு செய்யப்படும் இடங்களை தீர்மானிப்பது. இது இராசதந்திர மரபு. இவற்றையெல்லாம் சிந்திக்கும் பொழுது அவர்கள் தென்னிலங்கைக்கு மட்டும் விஜயம் செய்ய தீர்மானித்தது சிங்கள் அரசாங்கத்தின் செயலென்பதே எமது கருத்து.

சமீப காலமாக சிங்கள் அரசியல் உயர் மட்டம் வட கிழக்கை பாகுபாடுகள் இல்லாமல் சகல உதவிகளையும் செய்கின்றதென்று பிரசாரம் செய்கின்றது. இவ்விதமான பொய்ப் பிரசாரங்களில் ஈடுபட்ட அரசாங்கம் அமெரிக்கப் பிரமுகர்களை வடகிழக்குக்கு அனுப்பினால், அவர்களுக்கு சகல உண்மைகளும் தெரிந்து விடும் என்ற பீதியே இயற்கையாக ஏற்படும். வடகிழக்கில் அமெரிக்க இரு பிரமுகர்களும் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் அமைப்புடன் கலந்து உரையாடல் செய்ய விருப்பமில்லாவிட்டால், அரசாங்க அதிபர்களை சந்தித்து பக்கச் சார்பில்லாத பொது மக்களுடைய கருத்துகளை பெற்றிருக்க முடியும். ஆகவே, சகல விடயங்களையும் அலசிப் பார்த்தால் இந்த அரசாங்கம் தமிழருக்கு எதிராக மிக மோசமான அரசியல் சதியென்றே நாம் கூற வேண்டும். அவர்கள் வடகிழக்கில் சென்று நேரடியாகப் பார்த்தால் 24 வருடங்களுக்கு மேற்பட்ட யுத்தத்தினால் ஏற்பட்ட சேதங்களையும் அழிவுகளையும் நேரில் பார்த்து நிச்சயமாக அவர்கள் நெஞ்சு குமுறும், கண்கள் கலங்கும்.

உதாரணமாக, சில வருடங்களுக்கு முன்பு உயர் அதிகாரியான றிச்சாட் ஆர்மிறேஜ் குடாநாட்டுக்கு விஜயம் செய்யும் பொழுது சாவகச்சேரியில் சிங்களப் படையினரால் ஏற்பட்ட அழிவுகளைக் கண்டு கண் கலங்கிவிட்டார். தன்னுடைய உணர்வுகளை பகிரங்கமாக வெளிப்படுத்தியது போற்றப்பட வேண்டிய விடயம். ஆகவே, வருகை தந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள் அவர்களுக்கு வடகிழக்கிற்குப் போக விருப்பமிருந்தாலும், சிங்கள அரசாங்கத்தின் வேண்டுகோளை புறக்கணிக்க முடியாத தர்மசங்கடமான நிலை ஏற்பட்டிருக்கலாமென்பதே எமது கருத்து. ஆனால் வருகை தந்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகள் அமெரிக்கத் தூதுவர் மூலம் வடகிழக்கிற்குப் போக வேண்டுமென்று சிங்கள அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்காதது ஒரு பாரிய தவறென்பதே எமது கருத்து. சுருங்கக் கூறின், தமிழ்ப் பிரதேசத்தில் இருபத்து நான்கு வருட காலமாக நடந்த யுத்தத்தில் ஏற்பட்ட விளைவுகளையும் அழிவுகளையும் மக்களின் அவல வாழ்க்கையையும் அதற்கு மேலாக சுனாமியின் தாக்கத்தையும் அறிவதற்கு பகிரங்கமாக ஆர்வம் காட்டாத அமெரிக்கப் பிரமுகர்களை தமிழினம் மன்னிக்க மாட்டாது.

எமது கருத்தின்படி சிங்கள அரசு செய்த அரசியல் சதி வலையில் அமெரிக்கப் பிரமுகர்கள் கடுமையாகச் சிக்கி விட்டனர். இந்த சதிக்கு வெளிவிவகார அமைச்சுக்கும் பங்கு இருக்கின்றதா என்ற கேள்வியும் உதயமாகின்றது. இந்த அமெரிக்கப் பிரமுகர்கள் இலங்கையில் எந்தெந்த இடங்களைப் பார்வையிட வேண்டுமென்று தீர்மானிப்பது இலங்கை அரசாங்கம்தான் என்றும் தங்களால் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகத் தீர்மானங்களை எடுக்க முடியாதென்றும் பகிரங்கமாகச் சொல்வது அவர்களுடைய தார்மீகக் கடமை. வெந்தபுண்ணில் வேல் பாச்சினது போல்தான் இலங்கை அரசினுடைய செயற்பாடுகள் அமைந்துவிட்டன.

இந்தச் சதியில் அமெரிக்கப் பிரமுகர்கள் பகடைக்காய்களாக மாறிவிட்டனர். நிச்சயமாக தமிழ் மக்கள் சிங்கள அரசாங்கத்தினுடைய சதிக்கு எதிராக தங்களுடைய மனக்குமுறல்களை வெளிப்படுத்தி அதன் விளைவுகளை வெகு விரைவில் எதிர்கொள் அதிக வாய்ப்புக்கள் உண்டு.

அமெரிக்காவிலுள்ள தமிழ் அமைப்புகள் இந்த விடயத்தில் தங்களுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி அமெரிக்க செனற் சபையிலும், அமெரிக்க காங்கிரஸிலும் அமெரிக்க பிரமுகர்கள் செய்த பாரிய தவறுகள் பற்றி கண்டனங்கள் செய்வதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பது அவர்களின் தலையாய கடமை.

இதேபோல், ஐரோப்பிய நாடுகளில் தமிழ் அமைப்புகள் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள் செய்த பாரிய தவறுபற்றி அந்தந்த நாடுகளிலுள்ள அமெரிக்க தூதுவர்களிடம் ஒரு மகஜரை கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. சுருங்கக் கூறின், அமெரிக்க பிரமுகர்கள் செய்த தவறை தமிழர் அமைப்புக்கள் நன்கு பகிரங்கப்படுத்தி அவர்களுக்கு எதிராக அநேக மகஜர்களை கொடுப்பது அவசியமாகின்றது.

சிங்கள அரசாங்கம், ஐ.நா. செயலாளர் நாயகம் தமிழ் பிரதேசத்துக்குச் செல்ல முடியாத சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டது. அதேபோல், அமெரிக்கப் பிரமுகர்களுடைய செயல்பாடுகளும் அமைந்துவிட்டன. இந்தச் சதித்திட்டங்கள் தொடருமானால் இரண்டு முக்கிய விளைவுகள் ஏற்படும்.

1. தமிழர்களுடைய இறுதி அபிலாஷைகள் வெகுவிரைவில் கிடைத்து விடும்.

2. சிங்கள அரசு சர்வதேச அரங்கில் இராஜதந்திர ரீதியாக அநேக தோல்விகளை எதிர்கொள்ள ஏற்படும்.

அதன் விளைவாக, சிங்கள அரசுக்கு பொருளாதார உதவிகள் கிடைக்காமல் போகக் கூடும். அதற்குப் பதிலாக தமிழ் பிரதேசம் தனது இறுதி அபிலாஷைகளை அடைய வெகு விரைவில் சந்தர்ப்பம் ஏற்படும் தறுவாயில், இராஜதந்திர உதவிகளும் வெளிநாட்டு உதவிகளும் பெற அதிகவாய்ப்புக்கள் உண்டு. சுருங்கச் சொல்வதென்றால் வினைவிதைப்பவர்கள் வினையைத் தான் அறுவடை செய்வார்கள். அதுபோல் தினைவிதைத்தால் தினையைத்தான் அறுவடை செய்வார்கள் என்ற உண்மையை சிங்கள அரசாங்கமும் கதிர்காமரும் இன்னமும் அறிந்திருக்கவில்லை. இந்த அமெரிக்கப் பிரமுகர்களுடைய பகிஷ்கரிப்பு தமிழ் மக்களை ஓர் அணியில் நின்று தங்கள் அபிலாஷைகளை சகல துறைகளிலும் வெற்றிபெற சகல முயற்சிகளையும் செய்ய வேண்டும். இது இன்றைய காலத்தின் தேவை.

தெற்கிலங்கை யுத்தத்தினால் பாதிக்கப்படவில்லை. ஒரு சிங்கள வீடுகூட தாக்கப்படவில்லை. ஒரு சிங்களப் பள்ளிக்கூடம் அழிக்கப்படவில்லை. ஆனால் கடல்கோளினால் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழ் பிரதேசம் 24 வருட யுத்தத்தினாலும், அதற்கு மேலாக வெள்ளத்தினாலும், கடல்கோளினாலும் பாதிக்கப்பட்டது சகலருக்கும் தெரிந்த விடயம். இந்த வகையில் என்ன காரணங்களுக்காக தமிழ் பிரதேசங்களை தாங்கள் பகிஷ்கரித்தார்கள் என்ற காரணங்களை விளக்கி தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாமல் சர்வதேச சமூகத்துக்கும் நன்கு விளக்கம் கொடுப்பது அவர்களுடைய தார்மீகக் கடமை. இந்த விடயங்களை வெளிநாட்டு தமிழ் அமைப்புக்கள் சகல நாடுகளிலும் பகிரங்கப்படுத்துதல் காலத்தின் தேவை.

இராஜதந்திரத்தில் அமெரிக்கா முன்னேற்றமடையவில்லை என்பதற்கு இதுவோர் எடுத்துக்காட்டு. ரோக்கியோவில் நடந்த நிதி வழங்கும் நாடுகளுடைய மகாநாட்டை விடுதலைப் புலிகள் பகிஷ்கரித்தது. இதற்கு அமெரிக்கா பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில், இந்த மகாநாட்டிற்கு முன்னோடியாக விடுதலைப் புலிகளை அழைக்காமல் அமெரிக்கா தன்னாட்டில் ஒரு மகாநாட்டை நடத்தியது. முதிர்ச்சியடைந்த தீர்வு ஏற்படுவதற்கு விடுதலைப் புலிகளுடைய ஒத்துழைப்பும் ஒத்தாசையும் தேவை என்பதை மறந்து அமெரிக்கா விடுதலைப் புலிகளை அழைக்காமல் ஒரு மகா நாட்டை நடாத்தியது இது ஒரு பாரிய தவறு.

ஏனெனில், இராமனில்லாமல் இராமாயண நாடகம் அரங்கேற்ற முடியாது. ஏனெனில், இலங்கையில் சமாதானத் தீர்வை ஏற்படுத்துவதற்கு விடுதலைப் புலிகளின் பங்கு மிகவும் அவசியமாகிறது. அமெரிக்கா தன்னுடைய நாட்டில் விடுதலைப் புலிகளை தடை செய்திருப்பதன் காரணமாக அவர்களை அங்கே அழைக்க முடியாதென்றால் அந்த மகாநாட்டை தடைசெய்யப்படாத ஐரோப்பிய நாட்டில் வைத்திருந்தால் பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட்டிருக்கம்.

அமெரிக்க இராஜதந்திரம் முதிர்ச்சி அடையாதென்பதற்கு இதுவோர் உதாரணம். இதே பிழையைத்தான் இலங்கைக்கு வருகைதந்த முன்னாள் ஜனாதிபதிகள் விட்டிருக்கின்றார்கள்.

அந்த நேரம், வேறு ஒரு நாட்டில் மகாநாட்டை வைத்திருந்தால் சகல தரப்பினருக்கும் முதிர்ச்சியடைந்த தீர்வு ஏற்பட்டிருக்கும். ஆனால் அமெரிக்க இராஜதந்திரிகள் தங்களுடைய இராணுவ பலத்தையே நம்பியிருக்கிறார்கள். இந்தத் துறையில் அமெரிக்கா தோல்விகளையே எதிர்கொள்கின்றது. உதாரணமாக, வியட்நாமிய யுத்தத்தில் கோடிக்கணக்கான அமெரிக்க டொலர்களையும் இழந்து ஐம்பதினாயிரத்துக்கு மேற்பட்ட அமெரிக்க உயிர்களையும் இழந்து வியட்நாமில் கற்ற பாடத்தை இன்றும் உணரவில்லை. ஏனெனில், இன்று ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இராணுவ ரீதியில் பின்னடைவைத்தான் எதிர்கொள்கிறது.

ஈராக்குடைய எண்ணெய் வழங்கலைக் கைப்பற்ற சென்ற அமெரிக்கா இன்று இராணுவ ரீதியாக அநேக பின்னடைவுகளை எதிர்கொள்கின்றது. இராஜதந்திர ரீதியில் அமெரிக்கா அநேக தோல்விகளைத்தான் சந்தித்து விட்டது. அதேபோலதான் அமெரிக்கப் பிரமுகர்கள் தமிழ் பிரதேசத்தை புறக்கணித்தது சர்வதேச அரங்கில் பாரிய இராஜதந்திர தோல்வியை அமெரிக்கா எதிர்கொள்கிறது. அவர்கள் தமிழ் தாயகத்தை பகிஷ்கரித்ததை எந்தவித கோணத்திலிருந்து பார்த்தாலும் அவர்களுடைய நிலைப்பாட்டை நியாயப்படுத்த முடியாது.

thinakural


- Vaanampaadi - 02-22-2005

<img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2005/February/22/pit-2.jpg' border='0' alt='user posted image'>
மாத்தறைப் பகுதிக்கு நேற்று விஜயம் செய்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளான புஷ் மற்றும் பில் கிளின்டன் ஆகியோர் கடல் கோள் அனர்த்தத்தினால் இடிந்து காணப்படும் கட்டிடம் ஒன்றைப் பார்வையிடுவதையும் பாதிப்புக்குள்ளான பெண்ணொருவருடன் உ ரையாடுவதையும் காண்கிறீர்கள்

<img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2005/February/22/pit-3.jpg' border='0' alt='user posted image'>
ஜேர்மனியின் பொருளாதார அபிவிருத்தி விவகார அமைச்சர் ஹெய்மேரி விஸ் ஸோரெக் கியோலை நேற்று திங்கட்கிழமை காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் ஜோசப் பரராஜசிங்கம், இரா.சம்பந்தன், பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் ட்ரான்ஸ் ஏசியா ஹோட்டலில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதையும், பின்னர் எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜேர்மன் அஐமச்சர் சந்தித்து உரையாடுவதையும் இங்கு காணலாம்

thinakural