![]() |
|
..... சமாதானப் பேச்சை முன்னெடுக்குமாறு அமெரிக்கா கோரிக்கை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: ..... சமாதானப் பேச்சை முன்னெடுக்குமாறு அமெரிக்கா கோரிக்கை (/showthread.php?tid=5069) |
..... சமாதானப் பேச்சை முன்னெடுக்குமாறு அமெரிக்கா கோரிக்கை - Vaanampaadi - 02-23-2005 முடங்கிக் கிடக்கும் சமாதானப் பேச்சை முன்னெடுக்குமாறு அமெரிக்கா கோரிக்கை சர்வதேச சமூகத்தால் தீர்வை திணிக்க முடியாதென்கிறார் அமெரிக்கத் தூதுவர் சமாதானத் தீர்வு தொடர்பாக சர்வதேச சமூகம் எந்தத் தீர்வையும் திணிக்கப் போவதில்லை எனவும் பிரச்சினைக்குரிய இரு தரப்பும் மனம் திறந்து பேசித் தீர்வு காண்பதற்கு ஒத்துழைப்பை மட்டுமே சர்வதேச நாடுகள் வழங்குவதாகவும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜெப்ரி லன்ஸ்ரெட் தெரிவித்திருக்கிறார். இலங்கைப் பிரச்சினையில் எந்தவொரு நாடும் ஆதிக்கம் செலுத்தாது. அரசும் விடுதலைப் புலிகளும் நாட்டு மக்களும் மனம் திறந்து பேசித் தீர்வு காண முன்வர வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார். தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு மூன்று வருடங்கள் நிறைவடைவதையொட்டி கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அமெரிக்கத் தூதுவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் தெரிவித்ததாவது: போர் நிறுத்த உடன்படிக்கைக்கு மூன்று வருடங்களாகின்றன. இதன்மூலம் நாட்டில் ஓரளவு அமைதிச் சூழல் காணப்படுகின்றது. ஆனால், இதுவே நிரந்தரமாக இருப்பதால் எதுவித பயனும் ஏற்படப் போவதில்லை. போர் நிறுத்த உடன்படிக்கையென்பது ஒரு சைக்கிள் வண்டியைப் போலுள்ளது. அதில் நாமெல்லோரும் அமர்ந்த வண்ணமிருக்கின்றோமே தவிர, அதை மிதித்து பயணிக்கும் முயற்சியில் இன்னமும் சரிவர ஈடுபட்டதாகத் தெரியவில்லை. விடுதலைப் புலிகளும் அரசாங்கமும் பேச வேண்டும். அதற்கு மக்கள் ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும். சகலரிடமும் காணப்படும் முரண்பாடுகள் களையப்பட வேண்டும். ஒரு உடன்பாட்டுக்கு வந்தால் நிச்சயமாக சமாதானத் தீர்வு முயற்சி வெற்றியளிக்கவே செய்யும். நோர்வேயோ, ஜப்பானோ அல்லது அமெரிக்காவோ தீர்வு முயற்சியில் எதனையும் திணிக்கப் போவதில்லை. ஆதிக்கத் தன்மையில் செயற்படப் போவதுமில்லை. இது உங்கள் நாடு, உங்கள் பிரச்சினை. நீங்கள் தான் ஒன்றுபட்டுத் தீர்வைக் கண்டு கொள்ளவேண்டும். சர்வதேச சமூகங்கள் ஒத்துழைப்பு, ஆதரவு, பொருளாதார உதவி இவற்றை மட்டுமே வழங்கும், வழங்கவும் முடியும். எனவே, சிவில் அமைப்புகளும் நாட்டு மக்களும் ஒன்றுபட்டு அரசுக்கு ஒத்துழைப்பையும், ஆலோசனைகளையும் வழங்கி விரைவாக சமாதானப் பேச்சுகளை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலையைத் தோற்றுவிக்க வேண்டும். இலங்கைக்கு விரைவில் நிரந்தர சமாதானம் ஏற்பட வேண்டுமென்பதையே அமெரிக்கா எதிர்பார்க்கின்றது. கடல்கோள் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு அமெரிக்கா உதவியும், ஒத்துழைப்பும் வழங்குவதில் சிறிதளவும் தயக்கம் காட்டவில்லை. எமது நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகள் இருவரும் வந்ததன் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்களும் விரைவில் இங்கு சமாதானம் மலர வேண்டுமென எதிர்பார்ப்பதாக தெரிவித்துச் சென்றதையும் இங்கு நினைவூட்ட விரும்புகின்றேன். ஜப்பானியத் தூதுவர் அக்கியோ சூடா பேசுகையில், சமாதானப் பேச்சுகள் விரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். போர் நிறுத்த உடன்படிக்கை நிரந்தரமானதல்ல. அதனை சமாதானத் தீர்வுக்கான தளமாக மட்டுமே நாம் காண்கின்றோம். ஜப்பான் இலங்கைக்கு சகல விதத்திலும் உதவிகளை வழங்கி வருகின்றது. உதவி வழங்கும் நாடுகளின் உதவிகள் விரைவில் கிட்ட வேண்டுமானால் சமாதானப் பேச்சுகள் தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். thinakural |