Yarl Forum
கொழும்பில் ஒரு சிவராத்திரி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: கொழும்பில் ஒரு சிவராத்திரி (/showthread.php?tid=4811)



கொழும்பில் ஒரு சிவராத்திரி - Mathan - 03-11-2005

<b>சில ஆண்டுகளுக்கு முன்பு தாயகம் சென்றிருந்தபோது கொழும்பில் தான் பட்ட அனுபவங்களை ஒரு பதிவாக தந்துள்ளார்,</b>

ஒரு சிவராத்திரி

ஆணடுகள் சில கழித்து தாயகம் சென்ற போது

கொழும்பு றோட்டில்
கொஞ்சத் தூரந்தான் போயிருப்பேன்

"வீட்டை போன உடனை
பொலிஸ்ரிப்போர்ட் எடுக்கப் போகோணும்."
மாமாதான் சொன்னார்

வீட்டுக்குப் போனவுடன்
குளித்துச் சாப்பிட்டு
40ரூபா ஓட்டோவுக்குக் கொடுத்து
கண்ணாடிகளோ கதவுகளோ இல்லாத
அதன் வேகத்தில்
தலை கலைந்து உடல் குலுங்கி
உண்டதெல்லாம் வெளிவரும் உணர்வுடன்
பொலிஸ்ஸ்ரேசன் போனால்
"லேற்றாகி விட்டது.
சில்வா போய் விட்டார். "
சிங்களத்தில் ஒருவன்
சிரிக்காமல் தடுத்தான்
நரசிம்மராவிடம் பயிற்சி பெற்றானோ...!

சிங்களத்தில் மாமா
சிரித்துக் கதைத்து
என் யேர்மனியப் பாஸ்போர்ட் காட்ட
மெல்ல அவன் முகமிளகி
துப்பாக்கியை விலத்தி
உள்ளே போக வழி விட்டான்

தென்னைகள் குடையாக விரிந்திருக்க
குரோட்டன்கள் அழகாய் பரந்திருக்க
கூரிய கண்கள் பல
என்னையே உற்று நோக்க
தூக்கிய துப்பாக்கிகள் மட்டும்
என் கண்களுக்குத் தெரிய
படபடக்கும் நெஞ்சுடன் படியேறி
பல் இளித்து
பத்திரங்களை நிரப்பி
பவ்வியமாய் சிங்களப் பெண்களிடம் கொடுத்து
வெளி வருகையில்

"இண்டைக்கு வவுனியாக்குப் போகேலாது
நாளைக்குத்தான் பொலிஸ்ரிப்போர்ட் கிடைக்கும்"
மாமாதான் சொன்னார்.

ஆளுடன் ஆளுரச
அவசர நடைபோடும் வெள்ளவத்தை றோட்டில்
இரண்டு இடத்தில் செக்கிங்
பாஸ்போர்ட் காட்டி
Flight time சொல்லி
வீடு திரும்புகையில்
யேர்மனியிலும் இல்லாமல்
வவுனியாவிலும் இல்லாமல்
வீணான நாளை எண்ணி
மனசுக்குள் சலிப்பு

இரவும் வந்தது...

யேர்மனிக்கும் வவுனியாவுக்குமாய்
மனசு அலைய
தூக்கம் என்பது தூர விலகி நிற்க
கட்டிலில் புரள்கையில்
"டொக்.. டொக்.. டொக்.. "

ஜன்னலினூடு இராணுவத்தலைகள்..!

நெஞ்சுக்குள் பந்து உருள
"ஆமி.. ஆமி.." என்று
மாமி கிசுகிசுக்க
இரவின் நிசப்தம்
இராணுவத்தால் குலைக்கப்பட்டு
வேண்டாமலே ஒரு சிவராத்திரி
வீடு தேடி வந்திருந்தது

மீண்டும்
பாஸ்போர்ட் காட்டி
Flight time சொல்லி...
சோதனை என்ற பெயரில்
வீடு குடையப் படுகையில்
குளிர்ந்த நிலவிலே
இரவுடையுடன் நிறுத்தப்பட்டு
அப்பாடா....
கூச வைத்தன இராணுவக் கண்கள்
மனம் குலுங்கி அழுதது
என் தேசப்பெண்களை எண்ணி...

நன்றி - சந்திரவதனா


- Thaya Jibbrahn - 03-11-2005

நன்றி மதன். சந்திரவதனா எமது தேசம் பற்றிய பங்களிப்புகளுடனான பார்வையுடையவர். ஆக்கம் மனம் கனக்க செய்ததில் அதன் பங்கை என்னிடமிருந்து பெற்றுக்கொண்டது.
எங்கள் தேசத்தில்
பல ராத்திரிகள்
ராணுவ ராத்திரிகளான பின்னே
சிவனுக்கென
தனிராத்திரி இங்கேது????


- hari - 03-11-2005

நன்றிகள்!