Yarl Forum
மட்டு. அம்பாறையில் "சுனாமி' பீதியால் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: மட்டு. அம்பாறையில் "சுனாமி' பீதியால் (/showthread.php?tid=4737)



மட்டு. அம்பாறையில் "சுனாமி' பீதியால் - eelapirean - 03-18-2005

மட்டு. அம்பாறையில் "சுனாமி' பீதியால்
மக்கள் பதறியடித்துக்கொண்டு ஓட்டம்

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட கரையோரப் பகுதிகளில் நேற்றுக்காலை ஏற்பட்ட சுனாமி பீதி காரணமாக கரையோர மக்கள் மீண்டும் பதறி அடித்துக் கொண்டு ஓடினர். இதனால், குறித்த பகுதிகளில் பெரும் அல்லோல கல்லோலம் ஏற்பட்டது.
கையில் அகப்பட்ட பொருட்களை எடுத்துக் கொண்டும் தாய்மார் தமது கைக்குழந்தைகளை தூக்கிக் கொண்டும் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு ஓடியதால் வீதிகள் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தன.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது:
கிழக்குக் கடல் நேற்று சற்று கொந்தளிப்பாக காணப்பட்டதுடன், கடல் நீர் மட்டமும் உயர்ந்து காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடற்கரைப் பக்கம் சென்றவர்கள் ஓரளவு பெரிய அலை எழுவதைக் கண்டு கடல் பொங்கி வருகிறது என கத்தியுள்ளனர்.
இதனைக் கேள்வியுற்ற கரையோர மக்கள் மீண்டும் சுனாமி வந்து விட்டது என்ற அச்சத்தில் ஓட்டமெடுத்தனர்.
கல்முனைப் பிரதேசத்தில் கடலுக்குச் சென்ற மீன்பிடி தோணி ஒன்றும் இடைநடுவில் கவிழ்ந்துள்ளது. மட்டக்களப்பில் கல்லடி, திருச்செந்தூர், கல்லாறு, அமிர்தகழி போன்ற கரையோர கிராம மக்களே அதிகமாக ஓடிய அதேவேளை, பாடசாலைகளுக்கு தமது பிள்ளைகளை அனுப்பிய பெற்றோர் பாடசாலைகளை நோக்கிப் படையெடுத்தனர். இதேவேளை, பாடசாலைகளும் இழுத்து மூடப்பட்டன.
கல்முனையில் பிரபல கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் பாடசாலை விட்டு வீதியில் இறங்கி பதறி அடித்துக் கொண்டு ஓடியதையும் காண முடிந்தது. எனினும், இந்தப் பரபரப்பான சுழல் சற்று நேரத்தில் வழமைக்குத் திரும்பியது.
பல இடங்களில் பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் சுனாமி குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அது வதந்தி என்றும் அறிவித்தனர். எனினும், மக்கள் இன்னும் சுனாமி பீதியுடனேயே காணப்படுகின்றனர்.