![]() |
|
நல்ல தமிழ் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழும் நயமும் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=22) +--- Thread: நல்ல தமிழ் (/showthread.php?tid=4348) |
நல்ல தமிழ் - KULAKADDAN - 05-04-2005 எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான் மொழித்திறத்தின் முட்டறுப்பா னாகும் - மொழித்திறத்தின் முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணர்ந்து கட்டறுத்து வீடு பெறும். வணக்கம்! இன்று நல்ல தமிழ்ப்பாவனை பற்றி விவாதங்களும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. சிலர் அதைக் கொச்சைப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு கிண்டல்களையும் கேலிகளையும் செய்கிறார்கள். பலரைப் பொறுத்தவரை இது நடைமுறைச் சாத்தியமேயற்ற விடயம் என்பது போலப் பேசுகிறார்கள். இதுபற்றி எனது சில அவதானிப்புக்களைச் சொல்லுகிறேன். தற்போது நாம் பாவிக்கும் எல்லாச் சொற்களையும் தூயதமிழ்ப்படுத்திப் பாவிப்பது கடினமானதுதான். ஏராளமான பாவனைச் சொற்களுக்கு இன்னும் தமிழ் வடிவம் வரவில்லை. அப்படி வந்தவையும் மக்களிடம் போய்ச்சேரவில்லை. சில சொற்களுக்குத் தமிழ் அறிஞர்களிடமே பிடுங்குப்பாடு. ஆனால், பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் வடிவத்தை நடைமுறைப்படுத்துவதில் எந்தச் சிக்கலும் இருப்பதாகத் தெரியவில்லை. முயன்றால் முடியும் என்பதே என் கணிப்பு. இதற்குக் கடுமையான உழைப்பு வேண்டும். சில தீவிர நடவடிக்கைகள் வேண்டும். (தனிமனித உரிமை, ஜனநாயகம் என்ற கோசங்கள் இங்கே வேலைக்காகாது.) யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் மட்டுமே என் வாழ்க்கை ஓடியதால் அந்த இடங்களின் அவதானிப்புக்களையே என்னால் வெளிப்படுத்த முடியும். வன்னியில் நீங்கள் தமிழில்தான் பெயர்ப்பலகைகள் பார்க்கலாம். வணிக நிலையங்களின் பெயர்கள் கட்டாயம் தமிழிலேயே எழுதப்பட்டிருக்க வேண்டும். அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் வடிவங்களையே பயன்படுத்த வேண்டும். பேக்கரி என்று பெயர்ப்பலகை யாரும் போட முடியாது. அதை வெதுப்பகம் என்ற சொல் மூலமே வெளிப்படுத்த வேண்டும். இதைப்போலவே அங்கே ஜூவலறி, ரெக்ஸ்டைல் என்ற சொற்கள் பயன்படுத்த முடியாது. விளம்பரங்களில் கூட தமிழ்ப்பெயர்களே பயன்படுத்தப்படுகின்றன. மேலும் ரெஸ்டோரண்ட், கூல் பார் போன்றனவும் பயன்பாட்டிலில்லை. வங்கி என்பது கூட அங்கே தமிழீழ வைப்பகம் என்ற பேரில் புலிகளின் நிதித்துறை வங்கியே செயற்படுகிறது. ஏனைய அரச வங்கிகள் வழமைபோல சிலோன் பாங், பீப்பிள் பாங் என்ற ஆங்கிலப் பெயர்களுடனும், இலங்கை வங்கி, மத்திய வங்கி என்ற தமிழ் பெயர்ப்பலகையுடனும் இயங்குகின்றன. இப் பெயர்மாற்றம் என்ன சாதித்தது என்று கேட்டால், நிறையச் சாதித்தது என்றே சொல்வேன். இன்று வன்னியிலிருக்கும் ஒரு சிறுபிள்ளைகூட 'ரெக்ஸ்டைலுக்குப் போறன்' என்றோ 'ஜூவலறிக்குப் போறன்' என்றோ 'பாங்குக்குப் போறன்' என்றோ 'ஷொப்புக்குப் போறன்' என்றோ 'ரெஸ்ரோறண்டுக்குப் போறன்' என்றோ கதைப்பதில்லை. இவை யோசித்து வருவதில்லை. மாறாக இயல்பாக அவர்களின் நாவுகளில் தமிழ்ச் சொல்லே வருகின்றன. வானதி அழகுமாடம், அழகுநிலா நகைமாடம், போன்ற சொற்கள் அப்படியே இயல்பாக வந்து விழுகின்றன. வானொலி உட்பட விளம்பரங்களுக்கும் இதே பெயர்கள் பாவிப்பதால் அப்பிடியே அதே பெயர்களில் மக்களிடத்திற் பாவனையிலுள்ளது. தமிழீழ வானொலி விளம்பரங்கள் மிகப்பெரிய அளவில இவற்றுக்குத் துணை புரிகின்றன. சில சொற்கள் இன்னும் எம்மக்கள் மத்தியில் முற்றாக ஒட்டவில்லை. எடுத்துக்காட்டு பேக்கரி. வெதுப்பகம் எனும் சொல்தான் பெயர்ப்பலகை மற்றும் விளம்பரங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அரைவாசிப்பேருக்கும் மேல் பேக்கரி என்றே அன்றாட வாழ்வில் கதைக்கிறார்கள். ஆனால் சிலர் வெதுப்பகம் என்று கதைப்பதைக் கேட்டிருக்கிறேன். அவர்களது வாயில் அது இயல்பாக வரவில்லையென்றே நினைக்கிறேன். காலப்போக்கில் மாறலாம். அனால் சிறுவர்கள் உட்பட அனைவருக்கும் வெதுப்பகம் என்றால் பேக்கரி, வெதுப்பியென்றால் பாண் (Bread) குளிர் களி என்றால் ஐஸ்கிறீம் என்று தெரிந்து வைத்திருக்கிறாரகள். ஆனால் அவர்கள் மறந்தும் bread என்று சொல்வதில்லை. அங்கே பெயர்ப்பலகை விடயத்திற் சரியான கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால் இப்போது சில சமரசங்கள் செய்யப்படுகிறது. சில தென்னிலங்கை நிறுவனங்களின் விளம்பரங்கள் தனி ஆங்கிலத்தில் பெரிதாக பல்லிளிக்கிறது. வந்து போகும் வெளிநாட்டவருக்காக ஆங்கலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளது. (முந்தி சில கடைப் பெயர்ப்பலகையில் ஆங்கிலத்தை உன்னிப்பாய்ப் பாத்துத்தான் வாசிச்சுப் பிடிக்கலாம். இப்ப எல்லாரும் வாசிக்கக் கூடிய மாதிரி கொஞ்சம் பெரிசா எழுதுகினம். என்ன இருந்தாலும் தமிழ் எழுத்தின்ர அளவவிடக் குறைவா இருக்கும்). பேச்சு வழக்கில் வராத நிறைய தமிழ்ச்சொற்கள் எழுத்துவழக்கிற் பயன்படுத்துகிறார்கள். சிலவற்றைப் பேச்சு வழக்கிற்குக் கொண்டு வர முடியுமா என்று நான் சந்தேகப்பட்டதுண்டு. ஆனால் அச்சந்தேகமும் ஒரு சந்தர்ப்பத்தில ஆட்டம் கண்டது. நாங்கள் 'தேத்தண்ணி' எண்டுதான் தேநீரைச் சொல்லிறனாங்கள். 'தேத்தண்ணி' மிக இயல்பா எங்கட சனத்திட்ட பாவனையில இருக்கிற சொல். ஆனால் தேநீர் எண்ட சொல் இயல்பா பாவனையில இருக்கிறத அறிஞ்சு உண்மையில திகைப்பு ஒருபக்கம், அதோட நல்ல தமிழின்ர சாத்தியம் பற்றின நம்பிக்கை ஒருபக்கம். விடுதலைப்புலிகளின் நிதித்துறைப் பொறுப்பாளர் தமிழேந்தியைப் பற்றி அறிந்திருப்பீர்களோ தெரியாது. 'இறஞ்சித் அப்பா' என்று முன்பு அறியப்பட்டவர். இப்போது அந்தப் பேர் ஏறத்தாள மறைந்து போய் விட்டது. அவர் ஒரு தமிழ் உணர்வாளர். சிலர் அவரை தமிழ் வெறியாளர் என்றும் சொல்வார்கள். எப்போது பாரத்தாலும் தமிழ் தமிழ் என்று தான் அவரது பேச்சு இருக்குமாம். முனைவர் கு.அரசேந்திரனிடம் அவரைப்பற்றிக் கேட்டால் நிறையச் சொல்லக்கூடும். அவருக்குக் கீழே பணிபுரிபவர்களிடமும் அவர் தமிழ் மீதான பற்றை எதிர்பார்ப்பாராம். அவரைப் போலவே அவரது அடுத்த கட்டப் பொறுப்பாளர்களும் இருப்பார்களாம். மதுரன் என்றொருவர், அ.ந.பொற்கோ என்றொருவர். (அ.ந.பொற்கோ ஒரு நாடக எழுத்தாளர் மற்றும் சிறுகதை கவிதைகள் எழுதி நன்கு அறியப்பட்டவர்). அவர்களது வழங்கல் பணிமனையில் வேலைபார்க்கும் ஒரு குடிமகனோடு எனக்குப் பழக்கமுண்டு. அவர்களது பணிமனையில் எல்லாரும் தேநீர் என்ற சொல்லைத்தான் பாவிப்பார்கள். அது கடமை நேரத்தில் அப்பிடி பாவிப்பார்கள் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அந்த நண்பரின் வீட்டுக்கு ஒருமுறை போனபோது, அவரது மனைவி “குளிரா ஏதும் தரட்டோ? இல்லாட்டி தேனீர் குடிக்கப் போறீரோ?”என்று கேட்டா. எனக்கு ஆச்சரியம். தேனீர் என்ற சொல்லை பொதுமக்களிடம் பேச்சு வழக்கில் நான் எதிர்பாரக்கவில்லை. ஆனால் அவவின்ர புருசன் தேனீர் என்று தான் வழமையாகப் பாவிப்பாராம். அவரிடமே கேட்டேன். “பின்ன என்ன தம்பி? மூண்டு வருசமா வழங்கல் பகுதியில வேல செய்யிறன். பகல் முழுக்க அங்கதான் நிக்கிறன். அந்தக் கத தானே வரும்?” (அத்தோடு, "தண்ணி எண்டா குளிரான நீர் எண்டுதான் அரத்தம். என்னெண்டு அத வெந்நீருக்குச் சொல்லிறது?" எண்டு விளக்கம் வேறு கிடைத்தது.) அதன்பின் அங்கு வேலை செய்யும் இன்னும் இரண்டு மூன்று பேரின் வீட்டிலும் பரிசோதித்துப் பார்த்தேன். சந்தேகமில்லை. தேனீர் என்றே பாவிக்கிறார்கள். ஆக எதையும் பழக்கத்தில் கொண்டு வரலாம். இதைவிட அவர்களின் நிர்வாக அலுவலகங்களின் தமிழ்ப்பாவனை ஆட்களை அசத்தும். புதிதாய் அங்கு போகிறவர்களுக்கு வித்தியாசமாகவே இருக்கும். படிவம் நிரப்புதல், சிட்டை போடுதல், கோரல் போடல், என்று தான் அனைத்துக் கடமைகளும் நடக்கும். இன்று அணிநடையை (March-Past) முழுவதும் தமிழ்க்கட்டளைகள் மூலமே நடத்தலாம் என்று சொன்னால் உங்களுக்குச் சிரிப்பு வரலாம். தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் இப்படிச் சொன்னபோது மேதாவிகள் சிலர் சிரிக்கத்தான் செய்தார்கள். ஆனால் இன்று அவர்களே வன்னிக்கு வந்து தமிழ்க்கட்டளைகளுடன் நடக்கும் அணிநடை மரியாதையை ஏற்றுச் செல்கிறார்கள். இன்று வன்னியில் ஆங்கில அணிநடைக் கட்டளை முறைகள் ஏறத்தாள மறந்துபோகும் நிலைக்கு வந்துவிட்டன. புலிகளின் படையணிகளும் அவர்களது துணையணிகளும் (காவல்துறை, துணைப்படை) முழுவதும் தமிழ்ப்படுத்தப்பட்ட அணிநடையினையே செய்கின்றனர். தமிழில் கட்டளையிட்டால் கம்பீரம் வராது என்று சிலர் பசப்பினார்கள். இன்று பார்த்துவிட்டுச் சொல்லட்டும் கம்பீரம் எங்கிருந்து வருகிறதென்று. தமிழீழக் காவல்துறையின் அணிவகுப்பை ஆவணப்படுத்திய பி.பி.சி. அதை சிலாகித்துச் சொன்னது. குறிப்பாக அவர்களின் கம்பீரத்தை. அதுமட்டுமன்று, இயன்றவரை இராணுவக் கட்டளைகளைக்கூட (துப்பாக்கி சுடுதல் நிலையெடுத்தல் போன்ற) தமிழிலேயே கொண்டு வந்துவிட்டார்கள். எல்லைப்படை, துணைப்படை என அவர்களது இராணுவப் பயிற்சிகளுக்கான கட்டளைகள் கூட தமிழிலேயே இருக்கின்றன. ஆக தமிழில் செய்ய முடியாது என்றுவிட்டு ஒதுங்கியிருப்பது முட்டாள்தனம். முதலில் முயற்சிக்க வேண்டும். இன்று தமிழீழக் காவல்துறையை, கனவிற்கூட யாரும் போலீஸ் என்று சொல்வதில்லை. காவல்துறை என்றே சொல்கிறார்கள்; அச்சொல் மூலமே சிந்திக்கிறார்கள். காவல்துறை என்றால் அது தமிழீழக் காவல்துறையையும் பொலீஸ் என்றால் அது சிறிலங்காக் காவல்துறையையும்தான் குறிக்கும். மேலும் பொலிஸ்ரேசன் என்றுகூட கதைப்பதில்லை. கடைக்குத் தமிழில் பெயர்ப்பலகை வையுங்கோ என்று யாழ்ப்பாணத்திற் சொல்லப்பட்டபோது, ஒருவர் சொன்னாராம்: “நீங்கள் கப்டன், மேஜர், லெப்ரினட் கேணல் எண்டதுகள முதலில தமிழில கொண்டு வாங்கோ. பிறகு எங்களிட்ட வந்து தமிழில போட் போடச்சொல்லிக் கேளுங்கோ”எண்டு சொன்னாராம். “அன்புமணியை வேட்டி கட்டச்சொல், சைக்கிள் உதிரிப்பாகங்களைத் தமிழில சொல்லு பாப்பம்” என்று வினவுவது போல்தான் இருக்கிறது அவரது பதில். இதே இராணுவ நிலைகள் விவகாரத்தை அண்மையில் சக்கரவரத்தியும் நையாண்டி செஞ்சிரிக்காரு ஓப்பாய். (சே!... சக்கரவத்தியப் பற்றிக் கதைக்கேக்க அந்தாளிண்ட பாணியும் சேந்தே வருது) இராணுவ நிலைகளையும் தமிழிலேயே மாற்றுவது நல்லதென்பதே என் கருத்தும். பண்டிதர் பரந்தாமனோடு ஒருமுறை கதைத்துக்கொண்டிருந்தபோது இதுசம்பந்தமான கதை வந்தபோது சொன்னார், அப்படி மொழிமாற்றப்பட்ட இராணுவ நிலைகள் உருவாக்கப்பட்டு பரிந்துரைத்ததாகவும், ஏறத்தாள ஏற்கப்பட்டு நடைமுறைக்கு வரும்வேளையில் யாழ். இடப்பெயர்வோடு அதுவும் நின்றுவிட்டதாகவும் பின் அது நடைமுறைக்கு வரவில்லையென்றும் சொன்னார். ஏன் வரவில்லையென்பது தெரியவில்லை. ஆனால் அதைச் சாட்டாக வைத்து, தமிழில் பேர் மாற்று எனும் கோரிக்கையை தட்டிக்கழிப்பது சுத்த அயோக்கியத் தனம். இன்று ஈழநாதத்தில் 'அழகுநிலா நகைமாடம்' என்றும் 'எழில்நிலா அழகுமாடம்' என்றும் வன்னியிலிருக்கும் கடைகளின் விளம்பரங்கள் வருகின்றன. அதே பக்கத்தில் 'சந்திரா ஜூவலறி' என்றும் 'வேல்ட் பான்சி' (world fancy) என்றும் யாழில் இருந்து விளம்பரங்கள் வருகின்றன. இப்படி அதிகாரத்தைப் பாவித்து தமிழை நடைமுறைப்படுத்துவது சரியா தவறா என்ற கேள்விகளுக்கு என்னிடம் இடமில்லை. தனிமனித உரிமை, ஜனநாயகம் என்று கதைப்பவர்களோடு என்னால் வாதிட முடியாது. ஆனால் அப்படி நடைமுறைப்படுத்தும்போது ஏற்படும் சில சிக்கல்கள் உள்ளன. தவிர்க்கப்பட வேண்டியவைகளாக நான் கருதும் சில நடைமுறைகள் உள்ளன. அவற்றை அடுத்த பதிவில் தருகிறேன். [size=18]நன்றி வசந்தன் - KULAKADDAN - 05-04-2005 நல்ல தமிழ் 2 சீன மெய்யியலறிஞர் (தத்துவஞானி) கன்பூசியசிடம் அவருடைய மாணவரொருவர், ''தேச ஆற்றுகையை ஒப்படைத்தால் தாங்கள் செய்யும் முதல் வேலை என்ன?"" என்றார். ''நிச்சயமாக மொழியைச் சீர்திருத்துவதுதான்" என்றார் கன்பூசியசு. அங்குக்குழுமி இருந்தோர் மிக்க வியப்படைந்து, ''மொழிக்கும் ஆற்றுகைக்கும் தொடர்பு என்னவோ? " எனக்கேட்டனர்.' ' மொழி, செம்மை பெறாவிடில் ஒருவர் எதைச்சொல்ல விரும்புகிறாரோ அதைக் கேட்கிறவர் தெளிவுற - ஐயந்திரிபற அறிந்துகொள்ளும் முறையிற் சொல்லமுடியாது. எண்ணப்பட்டது சொல்லப்படவில்லையானால் எது செய்யப்படவேண்டுமோ அது செய்யப்படமாட்டாது; நிறைவேற வேண்டுவது நிறைவேறாது போகும். ஒழுக்கமும் பண்பும் குறையும்; நீதியும் நெறிமுறையுந் திரியும்; மயக்கமும் குழப்பமும் உண்டாகும். எனவே, சொல்லப்படுவதில் ஐயம் எதுவும் இல்லாமல் தெளிவாக இருக்கவேண்டும். ஆகவே, மொழி செம்மையுற வேண்டுவது, எல்லாச் செயலுக்கும் முன் நிற்கிறது" என்றார் கன்பூசியசு. வணக்கம்! தமிழை நடைமுறைப்படுத்துகையில் ஏற்படும் சிக்கல்களைப்பற்றிச் சொல்வதாகச் சொன்னேன். வன்னியில், சரியான ஆராய்ச்சிகளின்றி ஒரு சொல்லை அவர்கள் முன்மொழிகிறார்களோ என்ற ஐயம் உண்டு. உண்மையில் அவர்களுக்கு வெளியுலகத்தோடு இப்போதுதான் தொடர்பு எற்பட்டுள்ளது. தமிழ்நாட்டு அறிஞர்களிடம் கலந்தாலோசிக்காமல் அதிகாரபூர்வமாய் வெளியிடப்பட்ட சில சொற்களைப் பற்றி அறியாமல் இப்படி தாங்கள் உருவாக்கிய அல்லது சரியென தாங்கள் நினைத்த ஒரு சொல்லை நடைமுறைப்படுத்தும் சந்தர்ப்பங்கள் உள்ளதாகப் படுகிறது. எடுத்துக்காட்டாக, 'பாண்' என்று நாம் அழைக்கும் (பலர், இதைப் பாண் என்றே வைத்துக்கொள்வோம். ஏன் புதிதாக ஒரு சொல் உருவாக்குவான் என்று கேட்கிறார்கள்) Bread ஐ 'வெதுப்பி' என்ற பெயரால் அவர்கள் தமிழ்ப்படுத்துகிறார்கள். ஆனால் சிறிதுகாலத்தின்பின், “வெதுப்பி என்பது தவறு, இன்னொன்றை வேக வைப்பதுதான் வெதுப்பி. பாணை வேக வைக்கும் போறணையைத்தான் வெதுப்பி என்று சொல்லலாம். பாணை வெதும்பி என்றுதான் சொல்வது சிறந்தது” என்று ஒரு கருத்து வந்தது. எனக்கும் அக்கருத்து சரிபோலவே தெரிகிறது. ஆனாலும் எந்த மாற்றமுமின்றி வெதுப்பி என்பதே பாவனையிலிருந்து வருகிறது. அதுபோலவே, போக்கு வரவுக் கழகமா அல்லது போக்கு வரத்துக் கழகமா என்ற விவாதத்துக்குபின் இன்று போக்குவரவுக் கழகம் என்ற பேரே நிலைத்து விட்டது. ஆகவே இனிமேல் நடைமுறைப்படுத்தும் சொற்களையாவது உரியபடி ஆராயந்து அங்கீகாரத்தோடு செய்ய வேண்டும். முனைவர் கு. அரசேந்தினோடும் ஏனைய மொழி வல்லுநர்களோடும் தமிழேந்திக்கு இருக்கும் உறவு இவ்விடயம் நிச்சயம் நல்ல ஒரு திசையிலேயே போகவைக்கும் என நம்பலாம். அடுத்து, மக்களுக்கு இப்புதிய பெயர்கள் போய்ச்சேரும் வழிவகைகளை ஊக்குவித்தல். இன்று கொழும்பிலிருந்து வன்னிக்குட் போகும் பயணிகளுக்குத் திடீரென நிறையப் புதுச்சொற்களை எதிர்கொள்ளும் அனுபவம் ஏற்படும். அவர்களின் படிவங்கள் தூயதமிழ்ப் பெயர்களைக்கொண்டே இருக்கும். வரிசம்பந்தப்பட்ட பதிவுகளில் இருக்கும் பெயர்கள் அம்மக்கள் முன்னொருபோதும் கேட்டிராத சொற்கள். அவற்றை நிரப்புகையில் மிகுந்த சிரமத்தினை எதிர்நோக்குவதாகச் சொல்கிறார்கள். பிறகு அங்கிங்கு விசாரித்துத்தான் அவற்றை நிரப்புவதாகச் சொன்னார்கள். ஆனால் முன்னர் கேள்விப்படாத சொல்லாயினும் முக்கால்வாசியாவது அனுமானிக்கக் கூடியதாகவே இருக்கும். அவ்வளவுக்கு தமிழறிவு பின்தங்கியிருந்தால் என்ன செய்ய முடியும்? எனினும் அவர்களுக்கு அவற்றை விளங்கக் கூடியவாறு ஒரு பொதுஇடத்தில் பெரிதாக ஆங்கிலப்பெயர்களை எழுதிவிடலாம். படிவம் நிச்சயம் தமிழில்தான் இருக்க வேண்டும். கொழும்பிலிருக்கும் என் உறவுக்காரப் பெண்ணொருத்தி (11 வயது) முதன்முதல் வவுனியா கடந்து யாழ்ப்பாணம் போய் வந்திருந்தாள். அவளை நான் கொழும்பிற் சந்தித்தபோது சில சொற்களைச் சொல்லி அதன் பொருளைக் கேட்டாள். நானும் சொன்னேன். பிறகுதான் தெரிந்தது, அவள் ஏறத்தாள 20 சொற்களை எழுதி வைத்திருந்தாள். அனைத்தும் யாழ். பயணத்தின்போது அவள் ஓமந்தையில் அறிந்த புதிய தமிழ்ச் சொற்கள். இப்போது அவளுக்கு அந்தச் சொற்களின் அர்த்தம் புரியும். ஆக பயன்படுத்துகிறார்களோ இல்லையோ சில சொற்கள் மக்களைச் சென்றடைகிறது. இதற்காகவே அவர்களைக் கொஞ்சம் சிரமப்பட வைத்தால் என்ன? கஸ்டப்பட்டுப் படிக்கிறதுகள் மனசில நீண்ட நான் நிக்குமெல்லோ? தமிழை நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரம் கையில் வேண்டும். சும்மா அறவழிப்போராட்டம் ஜனநாயக ரீதியான போராட்டம் என்பதிலெல்லாம் இந்தவிடயத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. எம்.ஜி.ஆர். தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தது நல்ல எடுத்துக்காட்டு. தமிழில்தான் பிள்ளைக்குப் பெயர் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் நீ பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் பெற முடியாது என்று சொல்லத்தக்க ஆட்சியதிகாரம் வேண்டும். அதைவிட்டு பலமாக வேருன்றிய மதங்களையும் எதிர்த்துக்கொண்டு மக்கள் திருந்துவார்கள் புரிந்து கொள்வார்கள் என்றெல்லாம் காத்திருக்கக் காலமில்லை. ஐம்பதாயிரம் தமிழ்ப்பெயர்கள் கொண்ட புத்தகத்தை வெளியிட்டார்கள். அதுமட்டுமே போதுமா என்ன? (பெயர் விடயத்தில் மதங்கள் சம்பந்தப்பட்டுள்ளன.) பழகத்தொடங்குகையில் கடினமாக இருப்பதாகத் தெரியும். எதிர்ப்புகள் வரும். அவ்வளவுதான். பின் எல்லாமே இயல்புக்கு வந்துவிடும். அதுவே சரியாகியும்விடும். விவிலியத்தை வைத்தே நாம் இந்த உண்மையை அறியலாம். ஜீசஸ் என்பது இயேசு என்றும், ஜோசப் என்பது சூசை என்றும், மேரி என்பது மரியாள் என்றும், ஜோன் என்பது அருளப்பன் என்றும், போல் என்பது சின்னப்பன் என்றும், அன்ரனி என்பது அந்தோணி என்றும், தோமஸ் என்பது தோமையார் அல்லது தொம்மை என்றும் இன்னுமின்னும் பல சொற்கள் தமிழ்வடிவத்துக்கு ஏற்றாற்போல் விவிலியத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இன்று அவ்வளவு சொற்களையும் கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளவில்லையா? இன்றும் அந்தோணியாரும் தோமையாரும் மரியாளும் சூசையப்பரும் தானே எம்மிடையே பாவனையிலிருக்கும் சொற்கள். பாப்பரசரின் கொழும்பு வருகை வரைக்கும் அவரது பெயர் ஜோன் போல் என்பது எனக்குத் தெரியாது. இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் என்பது மட்டுமே நான் அறிந்து வைத்திருந்த பேர். எப்படி வெளிநாட்டுக்காரர் ஒருவர் தமிழ்ப்பேர் வைத்திருக்கலாம் என்ற அளவுகூட நான் சிந்திக்கவில்லை. கால ஓட்டத்தில் நாம் பழகிவிட்டோம். முற்றிலும் சம்பந்தமேயில்லாத ஒலிவடிவங்களைக்கூட எமக்குச் சொல்லித்தந்தபடி கிரகித்துக்கொள்ளப் பழகிவிட்டோம். ஆக மாற்றம் என்பது சாத்தியமே. எமக்கான சொல்லைப் புகுத்தல், நடைமுறைப்படுத்தல் என்பதும் சாத்தியமே. இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இதற்குமேல், ஏன் தூயதமிழில் பேச வேண்டும்? எழுத வேண்டும்? பெயர் வைக்க வேண்டும்? என்று கேட்பவர்களுக்கு என்னாற் பதில் சொல்ல முடியாது. பதில் தெரியாது என்றே வைத்துக்கொள்ளுங்கள். (பொடிச்சி பெயர்வைத்தல் சம்பந்தமாகத் தன்பதிவில் தன் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளா.) --------------------------------------------------------------- அதிகம் கதைத்துவிட்டேன் போலுள்ளது. இத்தோடு முடிக்கிறேன். அதற்கு முதல் சம்பந்தமில்லாத ஒரு சுவையான சம்பவத்தைக்கூறி முடிக்கிறேன். என் தூரத்து உறவுக் குடும்பமொன்று யாழ் போயிருக்கிறது. ஏறத்தாள 15 வருடங்களாகக் கொழும்பிலேயே வசித்த குடும்பம் முதன்முதல் யாழ்ப்பாணம் போயினம். அந்த மனுசிக்கு வயது 50 வரும். போற நேரத்தில ஓமந்தைச் சோதனைச் சாவடியில வரிசம்பந்தமான விடயங்கள் கையாளுற இடத்தில (இதை ஆயப்பகுதி எண்டு புலிகள் சொல்லுவின) இவ படிவம் நிரப்பிறா. அது தமிழில கேள்வியளிருக்கிற படிவம். ஆனா இவ ஆங்கிலத்திலதான் நிரப்பிறா. அதப் பாத்த ஒருத்தர் இவவிட்ட தமிழிலயே நிரப்பச் சொல்லிக் கேட்டிருக்கிறார். இவ ஏலாது எண்டிருக்கிறா. " தமிழ் வாசிச்சு விளங்கிறியள். ஏன் தமிழில நிரப்ப ஏலாது?" எண்டு கேக்க, அவ சொன்னாவாம்: "ஐசே! எனக்கு தமிழ் வாசிக்கத் தெரியும். ஆனா எழுத வராது. அதுதான் இங்கிலீசில எழுதிறன்" எண்டிருக்கிறா.அவரும் சரியெண்டு போட்டு அங்கிலப் படிவமொண்டக் குடுத்து இதில நிரப்புங்கோ எண்டு சொல்ல, இவவும் அந்தப் படிவத்திலயே நிரப்பிக் குடுத்திட்டு வந்திட்டா. வந்தவ சும்மா வந்திருக்கலாம். இஞ்சால வந்து நிண்ட மச்சாள்க்காரியிட்ட, “அவங்கள் என்ன தமிழில எழுதட்டாம் எண்டு நிக்கினம். நான் ஏலாதெண்டிட்டன்.” “பிறகென்னண்டு வந்தனியள். தமிழில எழுதிப்போட்டோ?” “ச்சா… நானேன் எழுதப்போறன். நான் எழுதத்தெரியாதெண்டே நிண்டன். பிறகு அவங்களா இங்கிலீஸ் போமொண்டு தந்து இங்கிலீசிலயே எழுதுங்கோ எண்டு விட்டுட்டாங்கள். சேட்ட தானே அவைக்கு?” எண்டு பெரிய வீறாப்பாச் சொல்லிக்கொண்டு இஞ்சால வந்து வாகனத்தில ஏற வெளிக்கிட, திரும்ப ஒரு பெடியன் வந்து அவவக் கூப்பிட்டுக்கொண்டு போயிருக்கிறான். போய் ஒரு 20 நிமிசம் கழிச்சு மனுசி வந்திருக்கு. என்ன நடந்து திருப்பி அவவக்கூட்டிக்கொண்டு போனாங்களோ தெரியாது. ஆனா அங்க இவவ தமிழிலயே படிவத்த நிரப்பித் தரச்சொல்லிப் போட்டாங்கள். அப்பிடியில்லயெண்டா நீங்கள் உங்கால போகேலாது எண்டு காட்டமாச் சொல்லிப்போட்டாங்கள். பத்து நிமிசம் இருந்து பாத்தவ பிறகு சரியெண்டு தமிழிலயே நிரப்பிக் குடுத்திட்டு வந்திட்டா. எனக்கும் உது விளங்காத புதிராத்தான் இருக்கு. அவ கதைச்சத ஆரோ கேட்டிருக்க வேணும். யாழ்ப்பாணத்திலயிருந்து அவ வன்னியால திரும்பி வரேல. நேரா விமானத்தில கொழும்பு வந்திட்டா. இப்ப அவ வாற போற ஆக்களுக்கு ஒரு விசயத்தச் சொல்லிக்கொண்டிருக்கிறா. “நீங்கள் புலியளிட்ட சரியான கவனமா இருக்கோணும். அவங்கள் மரங்களிலயெல்லாம் ஒட்டுக்கேக்கிற கருவியள் வச்சிருக்கிறாங்கள்.” [size=18] நன்றி வசந்தன் - KULAKADDAN - 05-05-2005 நல்ல தமிழ் -3 இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. தமிழ் எழுதும் முறை. தமிழில் வடமொழிச்சொற்கள் கலந்து எழுதுவது பற்றி அவ்வப்போது விவாதங்கள் நடந்துள்ளன. வடமொழிச்சொற்களையோ எழுத்துக்களையோ கலந்து எழுதக் கூடாது என்று பிடிவாதமாக வாதிப்பவர்கள் பழமைவாதிகள், மொழிவெறியர்கள் என்றெல்லாம் திட்டப்படுவதுண்டு. இங்கே மிக ஆழமாக அப்பிரச்சினையை ஆராய்வது நோக்கமன்று. அப்பிடிச் செய்ய எனக்கு அறிவும் போதாது. ஆனால் எனக்குப்பட்ட சிலவற்றை, என் ஆதங்கங்கள் சிலவற்றைச் சொல்வதே நோக்கம். இயன்றவரை வேற்றுமொழிச் சொற்களைக் கலந்து எழுதுவதையோ பேசுவதையோ தவிர்க்க வேண்டும். அதுவும் எழுதும்போது இயன்றவரை கவனமெடுக்கலாம். 'இயன்றவரை' என்பதற்கு என்ன விளக்கம் என்று கேட்கலாம். எமக்குத் தெரிந்திருந்தும் வீம்பாகச் சில இடங்களில் தவறுவிடுகிறோம். அவற்றைத் தவிர்த்தாலே இப்போதைக்குப் போதும். செய்திகளிலும் விளம்பரங்களிலும் அறிவித்தல்களிலும் கட்டுரைகளிலும் இயன்றவரை நல்ல தமிழைப் பாவிக்கலாம். இன்று அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்ச்சொற்கள் இருக்கத்தக்கதாக வேற்றுமொழிச்சொற்கள் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கிறோம். ஒரு பத்தியில் கணணி என்று வந்து மறு பத்தியிலேயே கொம்பியூட்டர் என்று வருகிறது. இவற்றைத் தவிர்க்கலாம். இன்றும் கூட திரைப்பட எழுத்தோட்டத்தில் கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஸன் என்று போடுகிறார்கள். இந்த டைரக்ஸன் என்பதை இயக்கம் என்று போட முடியாதா? (சில இடங்களில் இதை நெறியாழ்கை என்கிறார்கள்). இதைவிட முக்கியமான விடயம், வடமொழி எழுத்துக்கள். வடமொழியெழுத்துக்களின் உச்சரிப்பை எல்லாச் சந்தர்ப்பத்திலும் எம்மால் தமிழெழுத்துக்களில் இருந்து பெற முடியாது என்பது உண்மை. (முற்றிலும் வடமொழியெழுத்தைத் தவிர்க்க வேண்டுமென்று இப்போதுநான் சொல்லவில்லை. ஆனால் அக்கோரிக்கைக்கு நான் எதிரானவனல்லன்) ஆனால் தமிழெழுத்துக்களை வைத்தே பெறக்கூடிய ஒலிகளுக்குக் கிரந்தத்தைப் பாவிப்பதை என்னவென்று சொல்வது? இதைத் அறிந்தே செய்கிறார்களா என்பது தான் என் கேள்வி. ‘வஸந்’ என்று எழுதி உச்சரிப்பதற்கும் ‘வசந்’ என்று எழுதி உச்சரிப்பதற்குமிடையில் ஏதாவது வேறுபாடு உண்டா? மெய்யொன்றைத் தொடர்ந்து வராத சந்தர்ப்பத்தில் மொழியின் இடையில் வரும் ‘ச’கர வரிசையெல்லாம் கிரந்த ‘ஸ’ ஒலிவடிவத்தையே பெறும். இந்த இடத்திற் கிரந்தத்தைப் பாவிப்பதை என்னவென்பது? மன்மதன் பட எழுத்தோட்டத்திலும் விளம்பரங்களிலும் இயக்குநரின் (டைரக்டர்) பெயர் ‘முருஹன்’ என்று வரும். இந்த ‘ஹ’ போடுவது ஏன்? முருகன் என்று ஏழுதி உச்சரிப்பதில் என்ன தவறு வந்துவிடப்போகிறது. முருகன் என்ற தமிழ்ப் பெயரையே கிரந்தம் கலந்து ஆனால் அதே உச்சரிப்பிற் பலுக்குகிறார்கள். இவர்களை என்ன செய்ய? இப்படி இன்னும் நிறைய இருக்கிறது. மகா நதியும் மஹா நதியும் ஒரே உச்சரிப்புத்தான். ஆனால் கிரந்தத்தில் எழுதினால்தான் அவர்களுக்குப் புரியும். நான் கூற வருவது என்னவென்றால் வலைப்பதியும் நாமாவது இப்படியான தவறுகளைத் திருத்திக் கொள்வோம். ------------------------------------------------------------ இன்னொரு விடயம். பாவனையிலிருக்கும் பிறமொழிச் சொற்களுக்குச் சரியான தமிழ்ச்சொற்கள் அவ்வப்போது தென்படுகின்றன. இவையனைத்தும் ஓரிடத்தில் தொகுக்கப்பட வேண்டும் என்பது என் விருப்பம். ஒரு சந்தர்ப்பத்தில் 'ரெம்பிளேட்' என்பதற்கு இராம.கி. ஐயா மற்றும் காசி ஆகியோர் ஏதோ சட்டகம் என்று ஒரு சொல்லைத் தீர்மானித்ததைக் கண்டேன். போகிற போக்கில் பாரத்துவிட்டுப் போய்விட்டேன். பிறிதொருநாள் எனக்கு அச்சொல் தேவைப்பட்டபோது அதை எங்குப் பார்த்தேன் என்பதை மறந்துவிட்டேன். தேடிச் சலித்துக் கைவிட்டுவிட்டேன். இப்போது இராம.கி. சில சொற்களை அதன் வேர்ச்சொல் விளக்கங்களுடன் தந்துள்ளார். இவற்றையும் ஏற்கெனவே இருக்கும் சொற்களையும் ஒரு குறிப்பிட்ட பக்கத்திற் சேமித்து வைத்தால் எல்லோருக்கும் இலகுவாக இருக்கும். கூடவே அதன் விளக்கங்களையும் சேர்த்து வைத்தல் நன்று. அதற்கென சிறப்பாக ஒரு வடிவமைப்பை அப்பக்கம் கொண்டிருத்தல் நலம். [இப்போது என் 'நல்ல தமிழ் 1' பதிவிலும் ஈருருளியின்(சைக்கிளை இப்பிடித்தான் வன்னியிற் சொல்கிறார்கள். துவிதமும் சக்கரமும் தமிழன்றாம்) பாகங்கள் சிலவற்றின் தமிழ் வடிவங்களைத் தந்துள்ளார்.] சில வலைப்பக்கங்களில் விவாதங்கள் நடக்கும். ஆனால் ஒரு முடிபும் (இந்த இடத்தில் 'முடிவு' என்று வருவது தவறு என்று அறிகிறேன். தீர்மானம் எனும் பொருளில் வரும்போது 'முடிபு' என்றுதான் எழுதவேண்டுமென்றும் 'முடிவு' என்பது end எனும் பொருளில்தான் வரும் என்றும் அறிகிறேன். மொழிவல்லுநர்கள் தெளிவுபடுத்தவும்.) இன்றி முடிந்துவிடும். ஜீவாவின் பக்கத்தில் குறுந்தகடு, குறுவட்டு, இறுவட்டு, என்றும் அதை எரித்தல் பொசுக்குதல் தீத்தல் என்று பலவிதமான விவாதங்கள் நடந்து கடைசியில் ஒன்றுமில்லாமல முடிந்துவிட்டது. இவற்றையும் ஒரு பொதுக்களத்தில் விவாதத்துக்கு எடுத்து விவாதித்தல் நன்று. குறிப்பிட்ட வடிவத்தை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் விருப்பம். ஆனால் விவாதத்துக்கு வருதல் முக்கியம். இப்போது தமிழ்மணத்தின் வளர்ச்சி பிரமிப்பூட்டுகிறது. அதன் வாசகவட்டமும் எழுத்துவட்டமும் நாளுக்குநாட் பெருகிவருகின்றன. ஒரு நேரத்தில் சமூகத்திற் குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொள்ளுமளவுக்கு இது வளரலாம். அந்நேரத்தில் நிச்சயமாக எம்மிடையேயான கூட்டுமுயற்சிகள் நிறைந்த பலனைத்தரும். மொழிந்தவர் வசந்தன் - Eelavan - 05-06-2005 என்ன நண்பர்களே இந்தப் பதிவுக்கு பதிலெதையும் காணவில்லை ஏதாவது விவாதம் வரும் கற்றுத் தெளியலாம் என்று மூன்று நாட்களாய்க் காத்திருக்கிறேன் - Mathan - 05-06-2005 உங்கள் பதிலை எழுதி ஆரம்பித்து வையுங்களேன் ஈழவன் - KULAKADDAN - 05-06-2005 தமிழுக்கு அமுதென்று பெயர் சந்திரமுகி அலை ஓய்ந்தபின்னர் தற்போது நல்ல தமிழ் தமிழை வளர்க்கும் கோசம் கொஞ்சம் பதிவுகளில் எழுந்துள்ளது. சரி இது பற்றி நானும் ஏதாவது எழுதிப் பார்ப்போம் என்ற போது ஒரு நகைச்சுவை நினைவிற்கு வந்தது. அதை புளொக்கு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். இப்போதெல்லாம் திரைப்படங்களுக்குத் சுத்த தமிழில் பெயர் வையுங்கள் என்றும். பிள்ளைகளுக்கு வடமொழி கலக்காமல் நல்ல தமிழில் பெயர் வையுங்கள் என்றும் பரவலாக ஊடகங்கள் கனடாவில் வேண்டுகோள் விடுத்து வருகின்றார்கள். ஈழத்தில் இந்தத் தமிழ் மொழிப் பற்று எப்போதோ பெடியளால் தொடங்கி விட்டது என்று அறிந்து கொண்டேன். பெடியளின் இந்த அதீத தமிழ் மொழிப்பற்றால் நகரத்தில் இருக்கும் வியாபாரத் தளங்களுக்கு சுத்த தமிழில் பெயரிடப்படல் வேண்டும் என்ற சட்டத்தின் பெயரில் பல வியாபரத்தலங்களின் பெயர் பலகையை சுத்த தமிழில் மாற்றும் படி அறிக்கை விடப்பட்டது. வியாபாரிகள் உடனேயே தமது வியாபாரத் தளங்களின் பெயர்பலகையை தமிழாக்கிக் கொண்டார்கள். உதாரணத்திற்கு – மஞ்சுளா பாஷன் - மஞ்சுளா நாகரீகம் சிட்டி பேக்கறி – நகர வெதுப்பம் அம்பிகா யுவெர்லேஸ் - அம்பிகா நகைமாடம் இப்படியான மாற்றங்கள் பெடியளுக்கு மனத்திருப்தியை அழித்தாலும் ஒரு வியாபாரி தனது பெயர்பலகையை கழற்றி வைத்து விட்டு வெறும் கடையில் இருந்து வேலை செய்தது அவர்களுக்கு கோபத்தைக் கொடுத்தது. "பெயர் பலகை இல்லாமல் நீர் என்ன தொழில் செய்கின்றீர் என்று யாருக்குத் தெரியும்? தமிழில் பெயரை உடனே மாற்றி பலகையைத் தொங்கவிடும்" என்று கூறி விட்டுப் போய் விட்டார்கள். ஒரு கிழமையாயிற்று பெயர்பலகை மாட்டப்படவில்லை. வியாபாரி விசாரணக்கு உட்படுத்தப் பட்டார். தன்னால் பெயர்மாற்றம் செய்ய முடியவில்லை. தாங்கள் உதவ முடியுமா? என்று வியாபாரி அவர்களைக் கேட்க பெடியங்கள் கோபத்துடன் சம்மதித்தார்கள். அடுத்த நாட் காலை வியாபாரி தனது தளத்திற்கு வந்த போது இப்படி ஒரு பெயர்பலகை தனது வியாபார தளத்தின் முன்னால் தொங்குவதைக் கண்டார். - அருளப்பர் சின்னப்பர் ஓட்டுவது ஒட்டகம் - இதன் ஆங்கில வடிவம் தங்கள் கற்பனைக்கு நன்றி கறுப்பி - KULAKADDAN - 05-06-2005 மொழியும்,புதியசொற்களின் தேவையும். மொழியும்,புதியசொற்களின் தேவையும். தமிழ் ஒரு மொழி. அதன் வளர்ச்சி-அழிவு யாவும் அதன் பயன்பாட்டை நுகரும் மக்களின் பொருளாதாரப் பலத்துடன் சம்பந்தப்பட்டது.பொருள் வளர்ச்சியுடன்தாம் மொழிதோன்றி வளர்கிறதேயொழிய வெறும் மனவிருப்புகளின் படியல்ல. உற்பத்திச் சக்திகளை அன்நிய மொழிகள்தாம் கட்டுப்படுத்தும்போது உற்பத்தியுறுவுகளின் பயன்பாட்டு மொழியான தமிழ் எவ்வளவு காலத்துக்குத் தாக்குப்பிடிக்கும்.எந்த மொழியும் தனித்தூய்மையாக வளரமுடியாது.வளர்ச்சியடைந்த ஐரோப்பிய மொழிகள் யாவும் வேற்று மொழிச்சொற்களை உள்வாங்கி வளர்ந்;துள்ளன.மருத்துவம் பயிலும் மாணவருக்குப் புரியும் இலத்தீனது சொற்கள் எவ்வளவு ஜேர்மன்,ஆங்கிலம்,பிரஞ்சிலும் கொட்டிக்கிடக்கிறதென. தமிழின் கட்டுமரத்தை ஐரோப்பிய மொழிகள் அப்படியே'கற்றுமறாம்'என்றே அழைக்கின்றார்கள். மொழிமாற்றும்-ஒலிமாற்றும் ஒருமொழிக்கு அவசியமானது.இதைமறுக்கும் மொழி மெல்லச் சாகும். பஸ்,கார்,இரயில்,சயிக்கிள்,பேனை,கொப்பி,பென்சில்,ரேசர்,கட்டர், கொம்பாஸ்,ரயர்,ரேடியோ,டெலிபோன் இவையாவும் ஒலிமாற்றாகும்.இவை தமிழ் கிடையாது, எனவே தமிழில்தான் மாற்றி எழுதுவோமெனும் அறிவு மூடத்தனமானது.இவையும் ஒலிமாற்றுத் தமிழ்.அன்நிய வார்த்தைகள் பிரிவுக்குள் அடங்கும்.நம்மிடம்தாம் அப்படியொரு அகராதியே கிடையாதே. வார்த்தைகளுள் தூய்மை காண்பது இருக்கட்டும்,முதலில் தமிழுக்கொரு சிறந்த முறையிலான-எல்லோரும் கற்கும் வகையிலான இலக்கண நூலை உருவாக்குங்கள்.அப்போது தமிழின் விருத்திக்கு வித்திட்டதாக இருக்கும்.தொல்காப்பியத்தை வைத்துச் சவாரிசெய்வது விருத்தியுறும் மொழிக்கு உதவாது. ஆங்கிலம்,ஜேர்மன்,பிரஞ்சு மொழிகளில் இருக்கும் இலக்கண நூல்கள்போன்ற அறிவார்ந்த இலக்கணக் கட்டுக் கோப்பை உருவாக்கி முன்வைக்கும் தேவையே மிக,மிக அவசியம் தமிழுக்கு.மீளவும் சொல்வோம்: ஒரு மொழியின் வாழ்வு சொல்லாக்கத்துடன்- ஒலிமாற்றுடன்தாம் வளர்வுறும்.தனித்த கெட்டிப்பட்ட சொல்லுருவாக்கம் -உதாரணம்:துவிச்சக்கரவண்டி,பேரூந்து,புகையிரதம் போன்று பின் தங்கிவிடும். மக்களால் பரவலாகப் பேசப்படும் தொழில்நுட்பப் பெயர்களான 'ஒலிமாற்றுச் சொற்களைக்' களைவது மொழியை அழிப்பதற்குச் சமன்.மொழியின் உயிர் வாழ்வானது ஒழுங்கமைந்த அரசினதும்,பொருளாதாரப் பலத்தினதும் காத்திரமான உறுதியினாலேதாம் தீர்மானிக்கப்படுகிறது.இதைவிட்டு தன்னார்வச் செயற்திட்டம் ஒருபோதும் மொழியினது இருப்பை உறுதி செய்யமுடியாது. நன்றி ஸ்ரீரங்கன் - KULAKADDAN - 05-06-2005 தனித்தமிழும் மயிர்த்தமிழும். இப்போது தனித்தமிழ் பற்றிய பேச்செழுந்துள்ளது. இது ஒரு தேவையற்ற விவாதம். அதெப்படி தனித்தமிழிற் பேசுவது? தனித்தமிழ் பற்றிக் கதைப்பவர்களும் அதற்காக முயற்சிப்பவர்களும் வடிகட்டின பழமைவாதிகள். முற்போக்காகச் சிந்திக்கத் தெரியாதவர்கள். தாமும் முன்னேற மாட்டார்கள். தன் இனத்தையும் முன்னேற விடமாட்டார்கள். புதுச்சொற்கள் உருவாக்குகிறார்களாம். மண்ணாங்கட்டி. எவனுக்குத் தேவ தமிழ்க் கலைச்சொல். ஏனையா உங்களுக்கு இந்தத் தேவையில்லாத வேலை? டி.வி. என்று தமிழகத்தமிழிலோ, ரீ.வி. என்று ஈழத்தமிழிலோ எழுதவும் சொல்லவும் இலகுவான சொல்லிருக்கும்போது தொலைக்காட்சியென்று ஒரு சொல் தேவையா? ‘புளொக்’ என்று மூன்று எழுத்தில் அழகான சொல்லிருக்க என்ன திமிருக்கு ‘வலைப்பதிவு’ என்று நீட்டி முழக்க வேணும்? அப்பிடி எழுத என்ன வேலையில்லாதவர்களா நாங்கள்? ‘ட்ரெயின்’ என்ற சொல்லுக்கு தொடரூந்தாம். சிரிப்புத்தான் வருகிறது இந்த வேலையற்ற வீணர்களை நினைக்க. இங்கிலீஷில் (இங்லீஷ் என்ற அருமையான சொல்லிருக்க ஆங்கிலம் என்று அதை மாற்றி வைத்திருக்கிறார்கள். பரதேசிகள்.) இருக்கும் ரெலிபோன், ரீவி, கொம்பியூட்டர், பஸ், என்று நாங்கள் நாளாந்தம் ‘யூஸ்’ பண்ணும் நிறைய ‘திங்ஸ்’ எல்லாம் தமிழாகவே மாறிவிட்டது. இதைக் கமலஹாசன் கூடச் சொல்லிவிட்டார். ஆக அவற்றை அப்படியே ‘யூஸ்’ பண்ணிறது ‘பெட்டர்’. முதலில் ‘தமிழ்’ என்ற சொல்லே எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை. Tamil என்று இங்கிலிஷில் எழுதுவதை ‘ரமில்’ அல்லது ‘டமில்’ என்றுதானே எழுதவேணும்? இதென்ன ‘தமிழ்’? எங்கிருந்து இந்தச்சொல்லைப் பெற்றார்கள். இவர்கள் இங்கிலீஷையும் கொல்கிறார்கள். 'ரமில்' என்று எழுதுவதுதான் சரி. ஆனா ‘மெனி பீப்பிள்’ தமிழ் என்று ‘யூஸ்’ பண்ணுறதால நானும் அப்பிடியே ‘யூஸ்’ பண்ணுறன். ‘ரைகேஸுக்கு’ தேவையில்லாத வேலை. 'பீப்பிள் யூஸ்’ பண்ணிக்கொண்டிருக்கிற வேற ‘பாஷை’ சொல்லுகள தமிழில கொண்டு வாறது சுத்த அயோக்கியத்தனம். அது ஒரு இனத்த இன்னும் பின்னுக்குத்தள்ளும். அவயளுக்கு ஒழுங்காச் சண்டை பிடிக்கவே தெரியாது. அதுக்கயேன் தமிழில பெயர்பலகை வையெண்டு சொல்லுவான். தமிழைச் சாட்டி இன்னும் தமிழர்களை மூடர்களாக வைத்திருப்பதுதான் அவர்களின் குறிக்கோள். ‘முற்போக்குள்ள’ எந்தத் தோழனும் தோழியும் இதுகள ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ‘பஸ்’ என்ற அழகான சொல்லை ஏன் 'பேரூந்து' என்று மாற்ற வேண்டும். கொம்பியூட்டர் கண்டுபிடிச்சது வெள்ளக்காரன். அவனின்ர பேர விட்டுட்டு ‘கணிணி’ என்று ஒரு புதுப்பேர கொண்டருகினம். அதுமட்டுமில்லை. இடங்களின் பெயர்களையே மாற்றி வைத்துவிட்டார்கள் பாவிகள். ஜப்னா (Jaffna) என்ற அழகான சொல்லை யாழ்ப்பாணம் என்று வாயில் நுழையாதபடி நீட்டி வைத்திருக்கிறார்கள். இவர்களின் ஆட்டத்தைப் பார்க்கும்போது எரிச்சல்தான் வருகிறது. உலகத்தில் படிப்பதற்கு எவ்வளவு இருக்கு. இப்பவும் தமிழ் தமிழ் என்று மாய்ந்து கொண்டிருந்தா எண்டைக்கு முன்னேறுறது. இனியும் வேலையத்து ஆரேன் இப்பிடி எழுதாதையுங்கோ. உங்கட அருமையான நேரத்த இப்பிடிக் கிறுக்கித் தள்ளுறதில சிலவழிக்காதையுங்கோ. மனுசனுக்கு முகத்தில வளருரு மயிர வழிக்கவே நேரமில்லாமக் கிடக்கு. இதுகளப்பற்றிக் கதைக்கிற ஆக்களுக்கே மாட்டுவண்டில் ‘பாட்ஸுகள’ தமிழில சொல்லத் தெரியாது. இதுக்க எங்களுக்குப் போதிக்க வந்திட்டினம். வாற விசருக்கு “தனித்தமிழும் மயிர்த்தமிழும்”. திட்டினது போதுமோ. போதாதெண்டாச் சொல்லுங்கோ. எனக்கு இருக்கவே இருக்கு ‘ஜெயக்காந்த பாஷை’. 'அர்ஜண்டா' எழுதினது. கனக்க பிழையள் இருக்கலாம். நன்றி வசந்தன் - KULAKADDAN - 05-06-2005 கள உறவுகளே இவையனைத்தும் வலைப்பதிவில் நடந்த பதிவுகளும் அதற்கு எதிர் வினையாக பதியப்பட்டவையும். இவைபற்றி உங்கள் கருத்துக்கள் என்ன? - Eelavan - 05-06-2005 இல்லை மதன் வலைப்பதிவில் நடக்கும் விவாதங்களுக்கு அங்குதான் பதிலளிக்கவேண்டும் இங்கே ஏதாவது நடந்தால் கள உறவுகள் கருத்தையும் கேட்கலாமென்று நினைத்தேன்.யாருக்கும் அவ்வளவு ஆர்வமில்லைப் போல் தெரிகிறது. - Mathan - 05-06-2005 சரி எனது கருத்தை சொல்கின்றேன். தனிதமிழை உபயோகிப்பது நல்லது தான். ஆனால் அதை சட்டம் போட்டு எவ்வளவு தூரம் நடை முறை படுத்த முடியும்? புலிகள் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் செய்யலாம். புலத்தை தாயக சட்டங்கள் கட்டுப்படுத்தாதே? குறிப்பிடத்தக்க அளவு புலத்தில் உள்ள நிலையில் அவர்களின் தனி தமிழை உபயோகிப்பது என்பது அவர்களை அறிவூட்டுவது மூலமே சாத்தியமாகும். - Eelavan - 05-06-2005 இங்கே ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன் தனித்தமிழ் பற்றியோ தமிழ் மொழிப் பிரயோகம் பற்றியோ பேசுபவர்கள் குறிப்பிடுவது இயன்ற அளவில் பிரயோகம் என்பதே அதனைக் கடைப்பிடிப்பதில் புலத்தில் கூட சிக்கல் ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை. புலத்தில் கடைகளின் பெயரை தனித்தமிழில் வைக்கும்படி கேட்பது அநியாயம்.ஆனால் பெயரை வைக்கும்படி கேட்கலாம்.இவற்றைப் பற்றிய அறிவை ஊட்டுவதென்பது வசந்தனின் கட்டுரை போன்ற கட்டுரைகளால்தான் முடியும் விவாதிக்க விவாதிக்க நிறைய விடயங்கள் நடைமுறைச் சிக்கல்கள் வெளிவரும் ஏதாவதொரு தீர்வும் கிடைக்கும். இல்லை கறுப்பி போன்று விதண்டாவாதம் பேசுபவர்களுக்கு வசந்தன் மாதிரி பதில் கொடுப்பதும் அவசியம் என்று தோன்றுகின்றது - KULAKADDAN - 05-06-2005 இவர்களது பதிவை வெட்டி ஒட்டியிருந்தேன் . என் சொந்த கருத்துகள் நல்ல தமிழில் பேசுவது எழுதுவது தமிழ் கலைச்சொல்லாக்கம் பற்றி வசந்தனின் பேசப்பபட்டது. அதைக்குறித்து கறுப்பியும் சிறி ரங்கனும் பதிவிட்டிருந்தனர். தமிழில் பேசும் போதும் எழுதும் போதும் இயலுமாகவரை தனித்தமிழை பாவிப்பது சிறப்பானது. தமிழில் எழுதுவதற்கும் பேசுவதற்கும் கதைப்பதற்கும் கருத்துக்கு பொருத்தமான தமிழ் சொற்கள் இருக்கும் போது வேறு சொற்களை பயன்படுத்தி கதைப்பதும் எழுதுவதும் தேவையற்றதுதானே. ஏன் நாம் வலிந்து பிற சொற்களை தமிழல்லாத சொற்களை புகுத்தவேண்டும். தமிழில் இல்லாத சொற்களுக்கு கலைச்சொல் ஆக்கும் போது கூடிய கவனம் தேவை என்பது எனது கருத்து. தற்போது தமிழில் கலைச்சொற்கள் இருக்கும் சொற்களுக்கு சமாந்தரமாக ஆங்கிலத்தை தமிழாக்கிய சொற்களும் பாவனையில் இருந்து வருகிறன உதாரணமாக சில பஸ்- பேரூந்து இரயில் -புகையிரதம் தொடரூந்து சைக்கிள் -துவிச்சக்கர வண்டி அல்லது ஈரூருளி இவை போல நாளாந்த பாவனையில் உள்ள சொற்களுக்கு தமிழாக்கம் அதன் கருத்தோடு ஒட்டி அக்குறிப்பிட்ட போருளை விளக்க பொருத்தமாக இருந்தால் சிறப்பானதே. அதை விளக்க பொருத்தமான தமிழ் அடிச்சொல் இல்லாத போது தமிழாக்கம் செய்வதில் கவனம் தேவை. பாண் எனும் சொல் ஆங்கில ; இருந்து தமிழுக்கு வந்ததோ அல்லது வேறு எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை ஆனால் அது வெதுப்பி தமிழாக்கப்பட்டவிதம் மனதில் ஒட்டா தன்மையாய் இருக்கிறது. நாளடைவில் சரியாகுமோ தெரியவில்லை. இதே போல விஞ்ஞானம் சார் கலைச்சொற்கள் பல இலங்கையில் தாய் மொழி கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட போது உருவாக்கப்பட்டன. உதாரணமாக பௌதீகவியவில் சில சொற்கள் ஆவியாதல் மறை வெப்பம் Latent heat of vaporization தன் வெப்பக்கொள்ளளவு Specific heat capacity உயிரியலில் கலம் Cell இழை மணி Mitocondria அக முதலுருசிறுவலை Endoplasmic reticulam செங்குழியம் அல்லது செங்குருதி சிறு துணிக்கை Red blood cells வெண்குழியம் White blood cells தொடுப்பிழையம் Connective tissue இவற்றில் Mitocondria -இழைமணி என பெயரிட்டார்கள் என புரியாவிட்டாலும் அதை தமிழிலும் ஆங்கிலத்திலும் படித்து பழகிவிடதால் புரிகிறது. Conective tissue தொடுப்பிழையம் என மொழி பெயர்த்தது காரணத்துடன் பொருந்துகிறது. Connection/connect தொடுப்பு அதை புரியும் இழையம்(Tissue). பழக்கத்தில் வரும் பொது புரிந்து கொள்ள முடியும். ஆனால் சில சொற்கள் இன்னும் தமிழாக்க படவில்லை அல்லது அதற்குரிய தமிழ் எனக்கு தெரியாதோ தெரியவில்லை உதாரணமாக சில பக்ற்றீரியா Bacteria குளேரின் Chlorine போன்ற இரசாயன மூலகங்களுக்கான சொற்கள். இப்படியான விடயங்களுக்கு புதிய கலைச்சொல்லாக்குவதிலும் அதை தமிழ் ஒலிவடிவத்துள் அடங்ககூடிய வரிவடிவத்தை கொடுத்து பயன்படுத்துவதே நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. ஏற்கனவே உள்ள உதாரணம் ஐதரசன் Hydrogen தமிழில் பேசவேண்டும் தமிழில் எழுதவேண்டும் தமிழில் இன்னும் பல விஞ்ஞான நூல்கள் மொழிபெயர்கப்படவில்லை அவை செம்மையாக நடைபெறவேண்டும். அதே நேரம் நமது சமூகம் உலக்துடன் ஒன்றி போகவும் வேண்டும். தமிழோடு வேறு மொழி குறிப்பாக ஆங்கிலத்திலும் சளரமாக பேச எழுதவும் எம்மக்களுக்கு தெரிந்திருக்கவேண்டும் எனபது என்கருத்து. இது ஆங்கில மோகம் என்பதல்ல ஆனால் இது நடைமுறைக்கு மிக அத்தியாவசியம். தற்போது நான் இருக்கும் சூழலில் சீனர்கள் வியட்நாமியார்கள் என பலருடனும் பழகும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. அவர்களது நாடுகளில் அனைத்தும் பல்கலை கழக கல்வி உட்பட அவர்களது சொந்த மொழியிலேயே ஜப்பனைப் போல. அவர்கள் இங்கு வந்த பின் எழும் சிக்கல் அவர்களால் சரளமாக ஆங்கிலம் பேச முடியாதுள்ளதுடன் அவர்கள் துறை சார் சொற்களுக்கு சமனான ஆங்கில சொல் எது எனபதை சில நேரம் தெரியாது அவர்கள் கையிலிருக்கும் மொழிமாற்றியில் தட்டி புரிநது கொள்ள வேணடடியுள்ளது. உதாரணமா பக்ற்றீயா வை தமது சொந்த மொழியில் உள்ள கலைசொல் முலம் மட்டும் கற்றுவிட்டு இங்கு ஆங்கிலத்தில் Bacteria எனும் போது அது புரியாது முழிக்கவேண்டியுள்ளார்கள். இவ்வாறான நிலையில்லாது தமிழ்ப்படுத்த வேண்டியதை தமிழ்படுத்தி அப்படியே உள்வாங்கவேண்டியதை உள்வாங்குவதன் முலமே மொழி வளரமுடியும். உதாரணத்திற்கு ஆங்கிலமும் தமிழில் இருந்து சொற்களை உள்வாங்கியுள்ளது உதாரணம் கட்டுமரம் கூலி கறி போன்றவை. சொந்த மொழியை தமது நாட்டில் பாவிக்கும் அதே வேளை பிற நாடுகளிலும் சிக்கலில்லாது செல்வதற்கு ஆங்கில அறிவு உதவும். இதை புலத்திலிருக்கும் அனைவரும் நன்கு உணர்வீர்கள். எனது கருத்து நன்கு ஆராய்ந்து புதிய சொற்களை உருவாக்ககூடியவற்றுக்கு புதியசொற்களும் அவ்வாறு முடியாத அல்லது அதை மொழிமாற்றம் செய்வதால் அதிக சிக்கல் வரும் எனும் போது அதை தமிழ் ஒலிவடிவத்துக்கு ஏற்றவாறு மொழிமாற்றுவதும் பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன் |