Yarl Forum
வார்த்தைச் சித்தனே! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: வார்த்தைச் சித்தனே! (/showthread.php?tid=4314)



வார்த்தைச் சித்தனே! - hari - 05-09-2005

<b>வார்த்தைச் சித்தனே!</b>

<img src='http://www.dinakaran.com/health/vip/2002/jan/valampuri.jpg' border='0' alt='user posted image'>



வார்த்தைச் சித்தனே!

வளம் புரிந்த ஞானமுடன்
வலம்புரிந்த வலம்புரியே!

உவரிப் பெருந்துறை கண்டெடுத்த
ஒப்பற்ற தமிழ்த் தோணியே!

நெய்தல் நிலம் பெற்றெடுத்த
நிமிர்ந்த தமிழ் நன்னடைத் திமிங்கலமே!

உலகெங்கும் தமிழ்விருந்து தந்தவண்ணம்
உலாவந்த பலாச் சுளையே!

"கற்றனைத்(து) ஊறும் அறிவு" எனும் குறளுக்குக்
கட்டியம் கட்டிய "பட்டங் கட்டி"யே!

உன்னை இழந்துவிட்டோம் எனும் செய்தி,
ஈட்டியைக் காட்டிலும் குரூரமானது என்பது
இப்போதுதான் தெரிகிறது..

நீ இறப்பெய்தி விட்டாய் என்ற துயரத்தில்
யாம் சிந்தும் கண்ணீர்த் துளிகளை விட,
தமிழன்னை வடிக்கும் கண்ணீர்த் துளிகளே
எண்ணிக்கையில் அதிகம் என்பதும்
இப்போதுதான் தெரிகிறது..

இறப்பெய்தியது நீமட்டும்தான்: ஆனால்
இழப்பெய்தி நிற்பது தமிழ்கூறு நல்லுலகன்றோ?..

எப்படியப்பா உன் இழப்பை யாம் தாங்குவது?
எவரையப்பா இனி உனக்கிணையாய்க் காண்குவது?

உன் அருந்தமிழ் நறுந்தேனை
அருகிருந்தே அருந்திய அருந்தருணங்கள் எல்லாம்
அத்தனை எளிதில் மறந்துவிடுமா, என்ன?

ஒவ்வோர் அதிகாலைப் போழ்திலும் - எம்மை
உறக்கம் கலைத்து உட்கார வைத்து,
"இந்தநாள் இனியநாள்!" என்று
வேத மந்திரம் ஓதிய வித்தகனல்லவா நீ?

பொதிகைமலைத் தென்றலின் எதுகையையும் மோனையையும்
பொதிந்து பொதிந்து வழங்கிவந்த புத்தகமல்லவா நீ?

எத்துறையைச் சார்ந்தவனும் உன்னை
ஏறெடுத்துப் பார்க்கும் வண்ணம்
ஏடெடுத்துப் பார்த்தவனல்லவா நீ?

"எழுத்தச்சன்" ஏந்திய எழுத்தாணியை ஏந்தி
மலையாள மண்ணில் மரியாதையோடு பவனிவந்த
மறத்தமிழ் வேழமல்லவா நீ?

"என்னுடைய கவிதைகள் சொல்ல இயலாததை
வலம்புரியின் உரைநடை சொல்லிவிடுகிறது.." என்று
கவிவேந்தன் கண்ணதாசனே சொக்கிப் பேசும் அளவுக்குச்
சுண்டியிழுத்துக் கொண்ட தமிழ்த் தூண்டிலல்லவா நீ?

ஈழத் தமிழ் உடன்பிறப்புக்களின் ஈடேற்றத்திற்காய்
இடையறாது முழங்கிய இந்திய முரசல்லவா நீ?

உனது உவமான உவமேய ஊற்றுக்களில்
அமிழ்தம் பொங்கிய நாட்கள் உண்டு:
அமிலம் பொங்கிய நாட்களும் உண்டு.
எனினும் தமிழ்நலம் வாய்ந்தபடி அல்லவா அவை பாய்ந்தன?..

எப்படியப்பா உன்னை மறக்க முடியும்?
எப்படியப்பா எமை நாங்கள் தேற்ற முடியும்?
சொல், சித்தனே! சொல்!

உன்னை இழந்ததால் விளைந்த சோக வடுக்கள்
உடனடியாக ஆறிடக் கூடியன அல்லவே!
அந்த உணர்வன்றோ எங்களை மேலும் மேலும் வடுப்படுத்துகிறது..

வடுமேல் வடுக்கொண்ட எமது இடுக்கண் தீர,
வருடிக்கொடுக்கும் மயிலிறகுகளாய்..
உனது வார்த்தைகள் மட்டும்
எம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கும்!...

வார்த்தைச் சித்தனே! வலம்புரிச் சங்கே!
உன் உள்ளிருந்த நண்டுதான் உயிரிழந்தது..
ஆனால், உன்மீது உரசிச் சென்ற தமிழ்க்காற்றின்
ஓங்கார நாதம் ஒருபோதும் உயிரிழக்காது!..

இது, ஒட்டுமொத்தத் தமிழ்க்குலத்தின்
உள்ளம் எழுதுகின்ற உறுதிமொழி!..

தொ.சூசைமிக்கேல் ( tsmina2000@yahoo.com )


- Malalai - 05-09-2005

நன்றி தந்தையே... Cry Cry Cry


- sWEEtmICHe - 05-10-2005

Quote:வார்த்தைச் சித்தனே! வலம்புரிச் சங்கே!
உன் உள்ளிருந்த நண்டுதான் உயிரிழந்தது..
ஆனால், உன்மீது உரசிச் சென்ற தமிழ்க்காற்றின்
ஓங்கார நாதம் ஒருபோதும் உயிரிழக்காது!..
மிக அருமையான வார்த்தைச் சித்தனே! வரிகள்
வாழ்த்துக்கள்!! :wink:

அன்புடன் சுவிற்மிச்சி