Yarl Forum
சே குவேரா - வாழ்க்கைக் குறிப்பு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: சே குவேரா - வாழ்க்கைக் குறிப்பு (/showthread.php?tid=4094)

Pages: 1 2


சே குவேரா - வாழ்க்கைக் குறிப்பு - kirubans - 06-12-2005

மேஜர் எர்னஸ்டோ சே குவேராவின் வாழ்க்கைக் குறிப்பை இங்கு தருகின்றேன். அமரந்தா தமிழாக்கிய "பொலிவிய நாட்குறிப்பு" எனும் நூலில் இருந்து இவை பெறப்பட்டன.


- kirubans - 06-12-2005

1928 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி ஆர்ஜென்ரீனாவிலுள்ள ரொஸாரியோவில் சே குவேரா பிறந்தார்.

இளவயதிலேயே அவருக்கு ஆஸ்த்துமா வந்துவிட்டது.

1946 - 1953 வரை ப்யூனஸ் அயர்ஸின் தேசியப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ மாணவனாக இருந்தார்.

சிறு வயதிலேயே தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வதை விட துப்பாக்கிகொண்டுதான் தெருவில் இறங்க வேண்டும் என்று கூறியவர்.

அத்துடன் துப்பாக்கி சுடாமல் புரட்சி செய்ய முடியாது என்றும் கூறியவர்.


- இளைஞன் - 06-12-2005

சே குவேராவின் சிறப்பில் ஒன்று: அவருக்கு ஆஸ்த்துமா நோய் இருந்தும் பல்வேறுபட்ட சூழ்நிலைகளுக்குள்ளும் வாழப் பழகிக்கொண்டவர்(பழக்கப்படுத்திக் கொண்டவர்).

கிருபன் நல்ல முயற்சி. தொடருங்கள்.


- stalin - 06-12-2005

உலக தேசிய இனவிடுதலை போரட்ட முன்னோடிகளின் கதாநாயகன் என்பது மட்டும் தெரியும். கொரில்லா வெல்பயார் என்ற யுத்த முறையை முதன் முறையாக செய்துகாட்டியவரும் என்பது பற்றி கேட்டதாக ஞாபகம் மற்றும் படி பரந்தளவில் தெரியாது ஆதாலால் அறியஆவல் ந்லலதொரு முயற்ச்சி----------------ஸ்ராலின்


- kirubans - 06-12-2005

பெரு நாட்டுக்கான பயணத்தின்போது சே ஆர்ஜென்ரீன விவசாய இந்தியக் கூலிகளின் வாழ்க்கையையும், தன்னுடைய நாடு எப்படிப்பட்டது என்பதையும் தெரிந்து கொண்டார்.

ஏழைகளை வறுமையிலிருந்தும், நோயிலிருந்தும், நிலவுடமையாளரின், முதலாளிகளின், அந்நியநாட்டு ஏகச் சந்தையாளர்களின் ஒடுக்குமுறையிலிருந்தும் எப்படிக் காப்பாற்றுவது என்று யோசித்தார்.

1952 இல் இரண்டாவது முறையாக மோட்டார் சைக்கிளின் மூலம் பயணம் செய்தி சிலியில் குஷ்டரோகிகளின் குடியிருப்பில் வேலை செய்தார்.

1953 இல் கட்டாய ராணுவ சேவையிலிருந்து தப்பிக்க பனிக்கட்டியாகக் குளிர்ந்த நீரில் குளித்து ஆஸ்த்மா வருத்தத்தை அதிகமாக்கிக்கொண்டார்.

அதே வருடம் சமுதாயத்தில் விரவியுள்ள கொடுமைகளை வேரோடு களைய சமுதாயப் புரட்சிதான் சரியான வழி என்று சொல்லி, அந்தப் புரட்சியை உருவாக்க ப்யூனஸ் அயர்ஸிலிருந்து புறப்பட்டார். "அமெரிக்காவின் போர்வீரன் ஒருவனைப் பிரிகின்றீர்கள்" என்று சொல்லிச் சென்றார்.

முதலில் பொலிவியாவிற்கும், பின்பு கெளதமாலாவிற்கும் சென்றார். அங்குதான் அவரது முதல் மனைவி ஹில்டா கடியா என்ற பெரூவிய புரட்சியாளரைச் சந்திகிறார்.

அங்கிருந்தபோது சே மார்க்ஸிய இலக்கியம் படித்துக்கொண்டே இருந்தார்.


- shiyam - 06-12-2005

சேயின் சில படங்கள்<img src='http://img267.echo.cx/img267/5679/sanstitre9sa.png' border='0' alt='user posted image'><img src='http://img267.echo.cx/img267/7721/sanstitre12zx.png' border='0' alt='user posted image'>


- kirubans - 06-12-2005

1954 இல் அமெரிக்க உளவுத்துறை ஹொண்டுராஸிலிருந்து கெளதமாலாவிற்கு ஊடுருவியபோது, ஆட்சியிலிருந்த அரசை ஆதரித்து சே ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார். நிலைமை மோசமாக ஆர்ஜென்ரீனிய தூதரகத்தில் தஞ்சம் அடைந்து, ஒத்த சிந்தனை உள்ள பலரை சந்தித்தார். அங்கிருந்தவர்கள் ஜனநாயகவாதிகள், கம்யூனிஸ்ட்டுக்கள் என்று பிரிந்தபோது அவர் கம்யூனிஸ்ட்டுக்கள் பக்கம் இருந்தார்.

ஆர்ஜென்ரீனாவுக்குப் போக தூதரகமூடாக வசதி இருந்தும் சே மெக்ஸிக்கோ நோக்கிப் புறப்பட்டார். அங்கு போர்ட்டோ ரிக்காவைச் சேர்ந்த அகதிகளைச் சந்திக்கின்றார்.

1955 இல் பிடல் காஸ்ரோ நியூயார்க்கிலிருந்து மெக்ஸிக்கோ சிற்றிக்குத் திரும்புகின்றார்.

முதல் சந்திப்பிலேயே சே சர்வதேச அரசியலும், பிடல் தன் திட்டங்கள், அரசியல் நடவடிக்கைகள் பற்றியும் பேசினார்கள்.

"புரட்சி பற்றி என்னைவிட முதிர்ந்த அறிவு சேவுக்கு இருந்தது. கொள்கை, கோட்பாடு, ஆகியவற்றில் அவருடைய அறிவு அதிகம். என்னைவிட முதிர்ந்த புரட்சியாளராக அவர் இருந்தார்" என்று பிடல் இச்சந்த்திப்பைப் பற்றிப் பின்பு கூறியிருந்தார்.

சே எதிர்பார்த்த தருணம் வந்துவிட்டது. அவர் செல்ல விரும்பிய பாதை - ஆயுதப் போராட்டத்தின் மூலம் சமுதாய மாற்றத்தை சாதிப்பது - அவருக்கு பிடல் மூலம் வசப்பட்டுவிட்டது.


- kirubans - 06-13-2005

மெக்ஸிக்கோ சிற்றியில் "கொரில்லாவுக்கு நூற்று ஐம்பது கேள்விகள்" என்ற புத்தகத்தை எழுதிய கேணல் ஆல்பர்ல்டோ பேயோ என்பவர் பிடலின் குழுவிற்கு கொரில்லாப் பயிற்சி முறை கற்றுத்தருகின்றார்.
1956 இல் காஸ்ரோவின் படையில் இருந்ததற்காக சே சிறை செல்கிறார்.
அதே ஆண்டு பிடல் காஸ்ரோவின் புரட்சிகரப் படையின் உறுப்பினராக சே கியூபா நோக்கிப் புறப்படுகின்றார். இந்தப் பயணம் பற்றி குறிப்பிடும்போது "எனக்கு ஒரு மோசமான துப்பாக்கியை நான் கேட்டு வாங்கிக் கொண்டேன். காரணம், கடற்பயணத்தில் ஆஸ்த்மாவினால் அலைக்கழிந்து போயிருந்த நான், என் பொருட்டு ஒரு நல்ல துப்பாக்கி வீணாக்கப்படுவதில் ஒரு அர்த்தமுமில்லை என்று உணர்ந்திருந்தேன்" என்கிறார் சே.

க்ரான்மாவில் புறப்பட்ட 82 பேரில் இறுதி இலக்காகிய சியரா மேஸ்ட்ராவை அடைந்தது 16 போர்தான்.

1956க்கும் 1959க்கும் இடப்பட்ட காலத்தில் இருமுறை சண்டையில் காயமடைகின்றார் சே.

மே 57 இல் உவேரா யுத்தம் சேவின் தலைமையில் நடந்தது. அவ்வெற்றியின் பின் சே நான்காவது பிரிவின் மேஜராக நியமிக்கப்படுகின்றார் (உண்மையில் இரு பிரிவுகள்தான் இருந்தன, நான்கு என்று கூறியது எதிரியைக் குழப்பவே).

1958 டிசம்பரில் சாந்தா க்ள்ராவுக்கான யுத்தம். 1959 ஜனவரி ஒன்றில் நகரத்தை விடுவித்த சே, தனது வெற்றிப் படையணியுடன் கபான கோட்டையை ஆக்கிரமிக்க ஹவானாவுக்குள் நுழைகின்றார். ஜனவரியிலேயே கியூபப்புரட்சி வெற்றிபெறுகின்றது.

பெப்ரவரியில் சேவுக்கு கியூபக் குடிமகன் அந்தஸ்த்து வழங்கப்படுகின்றது.

ஜூன் இல் இரண்டாவது மனைவி அலீடா மார்ச் என்ற பெண் சேவின் இரண்டாவது மனைவியாகின்றார். முதல் மனைவி ஹில்டாவுடன் விவாகரத்துப் பெற்று, மகள் ஹில்டிடாவை கியூபாவுக்குள் அழைத்துக்கொள்கின்றார். ஹில்டா பெரூ திரும்பி தனது புரட்சிப் பணியைத் தொடர்கின்றார்.

சே எகிப்து, இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, ஜப்பான், மொராக்கோ, யூகோஸ்லாவியா, ஸ்பெயின் ஆகிய நாடுகளூப் பயணம் செய்கின்றார்.

அக்டோபரில் அவர் தொழில் துறைத் தலைவராகவும், நவம்பரில் தேசிய வங்கி இயக்குநராகவும் நியமிக்கப்படுகின்றார்.


- kirubans - 06-13-2005

பே ஆஃப் பிக்ஸ் படையெடுப்பு அமெரிக்க ஜனாதிபது கென்னடியின் வீழ்ச்சிக்கான படையெடுப்பு. அப்போது பினார் டெல் ரியோவில் ராணுவ கமாண்டராக சே இருந்தார். தவறுதலாக அவரது துப்பாக்கி கீழே விழுந்து வெடித்ததில் காலில் காயமுற்றார். இச் சம்பவத்தை காஸ்ரோவுக்கும், சேவுக்கும் மோதல் வந்ததால், சே தற்கொலைக்கு முயன்றதாக அமெரிக்கா வத்ந்தியைப் பரப்பியது.

டிசம்பரில் ஐ.நாவில் பேசும்போது " ஒரு அநுபவமிக்க விவசாயி தந்து பயிரின் குறைகளை நீக்கி உற்பத்தியை தரமானதாக்குவதுபோல, புரட்சி மக்களைத் தூய்மைப்படுத்துகின்றது" என்றார்.

மெல்ல மெல்ல சே குவேரா ஒரு புரட்சியாளர் மட்டுமல்ல, ஆழ்ந்த அரசியல், பொருளாதார, சமுகவியல் வல்லுநர் என்பது வெளிப்படலாயிற்று. எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு மனிதாபிமானி, ஒரு மருத்துவர்.

மருத்துவம் என்ற சேவை பணக்காரர்களின் இரத்தக்கொதிப்பிற்கு நிவாரணம் தேடுவதாக இல்லாமல், ஏழைகளை வியாதியிலிருந்து விடுவிற்பதற்குப் பயன்பட வேண்டும் என்பதில் ஆரம்பம் முதலே அவர் குறியாக இருந்தார். மருத்துவம் என்பதை அவர் இப்படி விபரிக்கின்றார். " ஒருநாள் மருத்துவம் தன்னை வியாதி வராமல் தடுப்பதை விளக்கும் அறிவியலாக மாற்றிக் கொள்ளவேண்டும். அதனுடைய மருத்துவக் கடமைகளை மக்களே செய்யுமாறு அவர்கள் வழிநடத்திச் செல்லப்படவேண்டும். நாம் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் புதிய சமுதாயத்தின் மக்களின் சக்திக்கு மேற்பட்ட அறுவை சிகிச்சை அல்லது அதைப்போன்ற வேறு அவசரத் தேவைகளின்போது மட்டும் மருத்துவம் தலையிடவேண்டும்."


- kirubans - 06-13-2005

பெண்களைப்பற்றிய அவரது கண்ணோட்டம் கவனிக்கத்தக்கது. சே குவேரா சொல்லுகின்றார்: "பெண்கள் விடுதலை அடையவேண்டுமென்றால் அவர்கள் முழுச்சுதந்திரம் பெறவேண்டும். அவர்களின் உள்ளே ஒரு சுதந்திரம் மலரவேண்டும். அவர்களை சில நடவடிக்கைகளில் ஈடுபட விடாமல் தடுப்பது, உடல்ரீதியான காரணத்தால் மட்டுமல்ல. இன்னும் மாறாமல் இருக்கும் பழைய மரபின் மீதமும்தான்" என்கிறார்.

மூன்று கண்டங்களின் கூட்டு மாநாட்டில் அவர் ஆற்றிய உரையில் சாவைப் பற்றிய அவரது கண்ணோட்டத்தை விளக்குகின்றது. "நமது ஒவ்வொரு செயலும் ஏகாதிபத்தியதிற்கு எதிரான போர்முரசு. மனிதகுலத்தின் மாபெரும் எதிரியான அமெரிக்காவிற்கு எதிரான மக்கள் ஒற்றுமையின் போர்ப்பரணி. எங்காவது இறப்பு நம்மை எதிர்பாராமல் எதிர்கொண்டால் நமது போர்க்குரல் அதெற்கென செவிசாய்க்கும். ஏதாவது ஒரு காதை அடையும் பட்சத்தில், நமது ஆயுதங்களை எடுத்துப் போராட வேறு ஒரு கரம் நீளும் பட்சத்தில், இயந்திரத் துப்பாக்கியின் படபடக்கும் உறுமலின் பின்னணியில் கல்லறை கீதங்களை இசையோடு பாட மற்றவர்கள் தயாராக இருக்கும் பட்சத்தில், போரின் வெற்றியின் புதிய போர்க் கூச்சல்கள் முழங்கப்படும் பட்சத்தில் - நாம் அதை வரவேற்கின்றோம்."


- kirubans - 06-13-2005

வாசிப்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அத்தியாவசியமானது என்பதை அவர் வாழ்ந்த காலம் முழுவது வலியுறுத்தி வந்திருக்கின்றார். கொரில்லாவாக செயல்பட்டு வாழ்ந்த காலங்களில், இவர் தோளில் சுமக்கும் பை மற்றவர்களுடையதைவிட அதிக கனமுள்ளதாகவே இருந்திருக்கின்றது.

சே குவேரா என்ற கட்டுறுதியான புரட்சிவீரனின் மனத்திண்மைக்கு அடிப்படை நேர்மையான எண்ணங்களின் மீது அவர் கொண்ட அசைக்கமுடியாத நம்பிக்கைதான். புரட்சிக்காகவும், உழைக்கும் மக்களை முதலாளித்துவ, ஏகாதிபத்திய ஒடுக்குமுறையிலிருந்தும், வறுமையிலிருந்தும், பிற தீமைகளிருந்தும் விடுவிற்பதற்காகவும் தன்னை அர்ப்பணம் செய்துகொண்ட தன்னலமற்றவர். முழுமுற்றான புரட்சிவாது சே குவேரா. அவரது முதன்மை அக்கறை, சந்தோஷம், உயர்ந்த இலட்சியம் - எல்லாமே புரட்சிக்கான முற்றான அர்ப்பணிப்புத்தான்.


- kirubans - 06-13-2005

கியூபப் புரட்சியின் வெற்றியினைத் தொடர்ந்து, ஏகாதிபத்தியத்தின் சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆட்பட்டுத் துயரங்களை அனுபவிக்கும் மற்றைய லத்தீன் அமெரிக்க நாடுகளை விடுவிக்கவேண்டிய கடைமையின் அழைப்பை ஏற்று 1965 இன் இறுதியில் பொலிவியா சென்றடைந்தார்.

1966 அக்டோபரில் முறப்படி கொரில்லாப்படை இயக்கத்தைத் தொடங்கி வைக்கின்றார். 1967 அக்டோபரில் ஹிகெரா - டெல் - யூரோ யுத்ததில் காயப்படுத்தப்பட்டு கைது செய்யப்படுகின்றார். தனிமைப்படுத்தப்படுகின்றார்.

1967 அக்டோபர் 9 அன்று காலையில் மரியோ தெரான் என்ற இரண்டாம் லெப்டினென்ட் சே குவேராவை மிக அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்கிறார்.

சே குவேராவின் இறப்பில் மூன்றாம் உலக நாடுகள் தம் நம்பிக்கை நட்சத்திரத்தினை இழந்தன. ஈடில்லாத கொரில்லாப் போர்முறையின் ஆசானை இழந்தன. ஆனால் அவரது இறப்பு எதையும் நிறுத்திவிடவில்லை. அவரே சொன்னதுபோல், புரட்சியின் முன் தனி மனித உயிர் என்பது ஒரு பொருட்டல்ல. அவரது இறப்பு ஏகாதிபத்தியத்துக்கு பல்லாயிரக்கணக்கான புதிய எதிரிகளை உருவாக்கியதோடு, இந்நாடுகளில் வர்க்கப் போராட்டத்தை மேலும் வலுவடையச் செய்தது.


- vasisutha - 06-13-2005

நன்றி கிருபன். தொடர்ந்து தாருங்கள்.


- kirubans - 06-14-2005

சே குவேராவின் மரணம் பற்றிய விசாரணை தெரிவித்த உண்மைகள்.

வாஷிங்டனில் ஸ்பானிய மொழி நன்கு தெரிந்த வில்லியம் கே. ஸ்கேயர் என்பவரின் தலைமையில் சே குவேராவை ஒழித்துக்கட்ட ஒரு சிறப்பு நடவடிக்கைக் குழு ஏற்படுத்தப்பட்டது. பொலிவியாவிலுள்ள எஸ் பரென்ஸா கரும்புத்தோட்டத்தில் 3 இராணுவக்கம்பனிகளுக்கு "கொரில்லா எதிர்ப்புப் பயிற்சி" 1967 ஏப்ரல் கடைசியில் ஆரம்பித்தது. சே குவேராவைக் கொல்வது பற்றி முக்கிய உத்திகளை சொல்லிக் கொடுத்தவர்கள் சி.ஐ.ஏ உளவாளிகள்.


- kirubans - 06-14-2005

சே குவேரா மறைந்துவிட்டாரா? அவர் கனவு கண்ட கண்டம் கழுவிய புரட்சியின் ஜோதி அணைந்துவிட்டதா? இல்லை. காஸ்ரோவின் வார்த்தைப்படி, "வருங்காலத்தில் ஒரு பாட்டாளி வர்க்க சர்வதேசிய வாதியின் உதாரணம் பற்றிப் பேசும்போது, பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதியின் முன்மாதிரியாக யாரையேனும் குறிப்பிட வேண்டி வரும்போது, மற்றெல்லோரையும் விஞ்சி அங்கே முதன்மையாக இருப்பார்."


- kirubans - 06-14-2005

இறந்துபோனபின் சே குவேராவின் உடலுக்கு எந்த மரியாதையும் கிடைத்துவிடக்கூடாது - அந்த உடல் என்னவாயிற்று என்றே வெளி உலகுக்கு தெரியக்கூடாது, அவர் இறந்த பள்ளிக் கட்டடம் அழிக்கப்படவேண்டும் என்பது அவரைக் கொன்றவர்களின் திட்டமாக இருந்ததால், சேயின் உயிர் பிரிந்தவுடன், அவரது உடலைக் கொலைகாரர்கள் வந்திறங்கிய ஹெலிகாப்டரிலேயே எடுத்துச் சென்றனர்.

அவர் இறப்பை உறுதி செய்வதற்க்காக கைகள் மணிக்கட்டுவரை வெட்டப்பட்டு, பாதுகாக்கப்பட்டன. சே குவேராவைப் போன்ற வரலாறு முன்னெப்போதும் கண்டிராத மாவீரன் கொல்லப்பட்டுவிட்டான் என்பதை உறுதிசெய்ய வேண்டிய நிர்ப்பந்தம் அந்தக் கொலைகாரர்களுக்கு இருந்தது.


- kirubans - 06-14-2005

அக்டோபர் 10, 1967 இல் அவர் உடல் வல்லே கிராண்ட் மருத்துவமனையிலிருந்து மாயமாய் மறைந்துவிட்டது. அவர் கொல்லப்பட்ட பள்ளிக்கட்டடம் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் புதியதொரு கட்டடம் எழும்பியது.

டாக்டர் ஆர்கிடாஸ், சேயின் பாதுகாக்கப்பட்ட கைகளை 1970 இல் கியூபாவிற்குக் கொடுத்தார். 1970 இல் இயக்கத்தின் தோற்றத்தைக் கொண்டாட கூடியிருந்த பத்து லட்சம் மக்கள் முன் காஸ்ரோ பேசும்போது " இது சே குவேராவின் சதை. அவரில் மீதமிருப்பது இது மட்டுமே. அவரது உடலை நம்மால் கண்டுபிடிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் முறையாகப் பாதுகாக்கப்பட்ட இந்தக் கைகளை என்ன செய்வதென்று மக்கள் தீர்மானத்திற்கு விடுகின்றோம்" என்றார். " அவற்றைப் பாதுகாக்கவேண்டும்" என்று மக்கள் ஒருமனதாகத் தீர்மானித்தனர்.


- kirubans - 06-14-2005

சே குவேராவை புதைக்கும் பணியை மேற்கொண்ட அதிகாரி 1996 இல் உடல் புதைகப்பட்ட இடத்தைப் பற்றிய தகவலை வெளியிட்டவுடன், காஸ்ரோவின் அரசு வல்லே கிராண்ட் இல் தோண்டும் பணியைத் தொடங்கியது. 1997 இல் அவரது உலும்புக்கூடு தோண்டி எடுக்கப்பட்டது. அவரது உடல்தான் என்பதை உறுதிசெய்ய கைகள் வெட்டப்பட்ட அடையாளமே போதுமானதாக இருந்தது.

அவரது எலும்புகள் அடங்கிய பெட்டியைப் பெற்றுக்கொண்டபோது, "மீண்டும் மாவீரனாக அவர் திரும்பி வந்திருக்கின்றார்" என்று அவர் மகள் கூறினார். அவர் இறந்து முப்பது வருடங்கள் போனபின்பும், மாறாத சோகத்துடன் அவரது எலும்புகள் கியூப மக்களால் பெற்றுக்கொள்ளப்பட்டுப் பின்பு புதைக்கப்பட்டன.


- kirubans - 06-14-2005

சே குவேராவின் வாழ்க்கைக் குறிப்பு அவர் பற்றிய ஒரு அறிமுகம் மட்டுமே. ஆர்வம் காட்டிய அனைவருக்கும் நன்றிகள்.


- இளைஞன் - 06-14-2005

நன்றி கிருபன். நீங்கள் இங்கு தந்த சுருக்கமான அறிமுகம் சே குவேரா பற்றி மேலும் அறிய பலரைத் தூண்டும் என்று நம்புகிறேன்.

சே குவேராவை கொல்வதற்கு சதிசெய்தவர்களில் சிலரும், பங்கெடுத்தவர்கள் சிலரும் பின்னர் மர்மமான முறையில் இறந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இதுபற்றி மேலதிகமாகத் தெரியுமா கிருபன்?